வெண்முரசு வாசகியாக நான் மிகுந்த துயருடன் இதை எழுதுகிறேன். கல்லூரிகளிலும் பல பொது மேடைகளிலும் மகாபாரதக் கதையை எல்லோரும் எடுப்பார் பிள்ளையைப் போலக் கையாளுகிறார்கள். எப்படி இத்தனை தப்பும் தவறுமாக மகாபாரதம் இவர்களுக்கெல்லாம் வந்து சேர்கிறது என்பதை நினைத்து வருந்துவதா, அல்லது தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதே தெரியாமல், பலரும் கூடி இருக்கும், அதுவும் மாணவர்கள் இருக்கும் அரங்கில் அவற்றை இவர்கள் சொல்லி (முழங்கி), அது மேலும் பலருக்கு ஒரு கிருமியைப் போலச் சென்று தொற்றிக்கொள்ளுமே என்பதை நினைத்து வருந்துவதா என்று தெரியவில்லை..
சமீபத்தில் ஒரு பெரிய அரங்கில், மிகப் பெரிய கூட்டத்திலும் இப்படித்தான் ஒருவர் பேசினார். 60 வயதைக் கடந்தவர், பெரும் பேச்சாளர்; அனைவராலும் அன்றும் அவரது சிம்மக்குரல் உ ரைகளுக்காகப் பெரிதும் பாராட்டப்பட்டவர். ’’ஏகலைவன் எனும் ஏழைப் பங்காளி’’ என்று ஒரு உரையாற்றினார்.
‘’பாவம், ஏகலைவன் பரம ஏழை; ஏழைகளுக்கெல்லாம் வில்வித்தை கற்றுக்கொடுக்கமுடியாது என்று துரோணர் சொல்லி, அவன் மறைந்திருந்து கற்று, ஏழு மரங்களை ஒரே அம்பில் வீழ்த்தினான். கட்டைவிரலை வெட்டிவிட்டார் குரு , பாரதப்போரில் துரோணர் வீழ்ந்தபோது அந்த ஏழைப்பங்காளன் குருவின் மீது விழுந்துபுரண்டு ’’ அய்யோ நீங்க மட்டும் என் கட்டைவிரலை வெட்டாம இருந்திருந்தா நான் அர்ஜுனனை இந்த நிமிஷம் கொன்னிருப்பேனே’’என்று கதறியதை எல்லாம் கதை கதையாகச் சொன்னார். அத்தோடு முடியவில்லை அர்ஜுனனுக்கு கண்ணன் தேரோட்டியது வரைக்குமே கதை நீண்டது.
அவர் பேசுவதை என்னால் பொறுமையாகக் கேட்கவே முடியவில்லை என்பதை விடவும் பலரும் அவர் பேசுவதைப் போனில் பதிவுசெய்துகொண்டிருந்ததுதான் இன்னும் வேதனையாக இருந்தது. சரி தலைப்பையாவது நியாயம் செய்வாரா என்று காத்திருந்தேன் ஆனால் கட்டக்கடைசியில் தான் தெரிந்தது ஏழை என்பதும் ஏழைப்பங்காளன் என்பதும் அவர் ஒன்று என்று புரிந்துகொண்டிருக்கிறார் என்பது.
இந்தியாவின் மாபெரும் இதிகாசமான இதை இனி எத்தனைகாலம் தலைமுறைகளாகத் தவறாகவே அறிந்துகொண்டு, தவறாகவே மேடைகளில் பேசிக்கொண்டிருப்பார்கள் என்று வேதனையாக இருக்கிறது. வெறும் 100 ரூபாய்க்கு சிறார்களுக்கான ஒரு சின்னப் புத்தகம் வாங்கினால் கூட அடிப்படை என்னவென்று புரிந்துவிடுமே. கேலியும் கிண்டலும் மூன்றாந்தர நகைச்சுவைகளுமாக சமூக ஊடகங்களில் மலிந்து கிடக்கும் பட்டிமன்ற நகைச்சுவைப் பேச்சாளர்களின் உரைகளில் அவர்கள் அடித்துவிடும் தகவல்களை குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு படிப்பார்கள் போல.
எத்தனை அநியாயம் தானும் எதுவும் வாசித்து அறிந்துகொள்ளாமல், எது உண்மை என்றும் அறிந்துகொள்ளாமல், தான் பேசுவது தவறு என்றும் தெரிந்துகொள்ளாமல், அசட்டுத் துணிச்சலுடன் மேடைகளில் இப்படி முழங்குவதும், அதை அடுத்த தலைமுறை கேட்டுக்கொண்டு இருப்பதும்?.
என்னை வேறு இப்போதெல்லாம் கூட்டங்களில் முன்வரிசையில், “சீனியர்” என்று உட்கார வைத்துவிடுவதால், முகத்தில் உணர்ச்சியைக் காட்டாமல் மணிக்கணக்காக அமர்ந்திருப்பது கடும் மன அழுத்தத்தைக் கொடுக்கிறது. நன்றி உரை சொல்லி முடிக்க முடிக்கவே நான் அந்த அரங்கில் இருந்து தீப்பிடித்ததுபோல ஓட்டமாக ஓடி வெளியெ தப்பித்து வந்தேன். பேச்சாளரோடு உள்ளே பலரும் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தார்கள்.
இப்படி மகாபாரதம், ஆண்டாள், விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், பகவத்கீதை, அப்துல் கலாம் என்று சகட்டுமேனிக்கு பலரும் மேடைகளில் அடித்துவிடுகிறார்கள். இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று என்னால் கடந்துபோகவும் முடியவில்லை. சொந்த வாழ்க்கையில் பெரிய அடி அல்லது இடிவிழுந்ததுபோல் கலக்கமாக இருக்கிறது.
இதைக்கடிதமாக ஜெ வுக்கு எழுதி அவர் அளித்த பதில் :அன்புள்ள லோகமாதேவி,
உ. வே. சாமிநாதையர் அவர்கள் தன் சுவடிகளைத் தேடி அலைந்த காலகட்டங்களைப் பற்றியும், தனது வாழ்க்கை அனுபவங்களைப் பற்றியும் எழுதிய ‘நான் கண்டதும் கேட்டதும்’ என்னும் தொடர், ஆனந்த விகடன் இதழில் 1936 ஆம் ஆண்டில் தொடராக வெளிவந்தது. அதில் ஒரு அனுபவம். இது பள்ளிப் பாடத்திலும் இடம்பெற்றிருந்தது.
உ. வே. சாமிநாதையாரின் ஆசிரியரான மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள், மூத்த மாணவவரான மாணவன் சபரிநாத பிள்ளையை ஒரு வேலை விஷயமாக மாயவரம் வேதநாயகம் பிள்ளையிடம் அனுப்பினார். அவர் இரவு நீண்ட நேரம் கழித்து திரும்பி வந்தார். அங்கே என்ன நடந்தது என்று விளக்கினார்.
*
நான் இரண்டு மணிக்கு வந்ததே பெரும் பிரயாசையாகி விட்டது. முனிசீப் வீட்டிற்கு வருகையில் இரவு 9 மணியாகிவிட்டது. அவர்களோடு பேச வேண்டிய காரியத்தைப் பேசிவிட்டுத் திரும்பும் போது இரவு மணி பதினொன்று. எங்கும் மையிருட்டாய் இருந்தது.
அங்கிருந்து புறப்பட்டுச் சிறிது தூரம் வந்தேன், பெரிய மைதானத்துக்கு அருகில் வந்த போது திடீரென்று காலில் ஏதோ தட்டியது. கட்டையாக இருக்கலாமென்று எண்ணி நான் சிறிது ஒதுங்கி வர ஆரம்பித்தேன். அந்த இடத்திலும் என் காலில் ஒன்று இடித்தது. இருட்டு மிகுதியாய் இருந்ததால் எனக்குப் பயம் ஏற்பட்டது. மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு அந்த இடத்தை ஊன்றிக் கவனித்தேன்.
என்ன ஆச்சரியம்! அங்கே வழி நெடுக அநேக ஜனங்கள் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் சிறிதேனும் சத்தம் செய்யவில்லை. மெல்லக் குனிந்து ஒருவரைத் தடவித் தொட்டுப் பார்த்து வழிவிட வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். அதற்குள், மற்றொருவர் எழுந்து என் காதில், ‘முட்டாளே, பேசாதே! பாரதக்கதை நடக்குது’ என்று சொல்லிவிட்டு என் கையைப் பிடித்து இழுத்துக் கீழே உட்கார வைத்துவிட்டார்.
நாம் நினைத்தபடி அவ்வளவு அபாயம் இல்லை என்று எனக்கு ஆறுதல் உண்டாயிற்று. பெருமூச்சு விட்டேன். எங்கே பாரதம் நடக்கிறது என்று கவனித்தேன்.
ஏதோ பாட்டுப் போன்ற ஒரு தொனி காதில் விழுந்தது. அதனொடு இடையிடையே ஆமாமா! என்ற சத்தமும், உடுக்கையொலியும் பம்பையின் முழக்கமும் ஒன்றன்பின் ஒன்றாய்க் கேட்டன. என்ன கூறப்படுகின்றன என்று காதை நிமிர்த்திக் கொண்டு கேட்டேன்.
‘பீமசேன மவராசா, மவராசா, மவராசா!’ என்றார் முதல்வர். ‘ஆமாமா!’ என்றார் பின்பாட்டுக்காரர். ‘மரத்தேப்பூ’, ‘மரத்தேப்பூ’ என்று உற்சாகத்தோடு கைகளைக் கீழும் மேலும் அசைத்துக்கொண்டு கர்ச்சனை செய்தார் பிரசங்கியார். பின்பாட்டுக்காரர் ‘ஆமாமா’ என்று மூன்று முறை முழங்கினார். அப்பால் உடுக்கையின் ஓசையும் பம்பையின் முழக்கமும் எழுந்தன. இப்படிச் சில நிமிஷம் முழங்கியபின் உடுக்கைக்காரர்,
‘டிங்கினானே, டிங்கினானே, டிங்கினானே’ என்று சொல்லி ஆலாபனம் செய்யத் தொடங்கிவிட்டார். ஜனங்கள் எல்லாரும் சந்தோஷ ஆரவாரம் செய்தனர்.
அவ்வளவு பெரிய கூட்டத்தில் நான் மட்டும் அந்த ஆனந்தத்தை அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை. மேடையில் நடந்த கதை ‘பாரதம்’ என்பதை பீமசேன மவராசா என்ற சத்தத்தால் அறிந்தேன். அதற்கு மேல் நான் கேட்ட முழக்கங்களின் பொருள் எனக்கு விளங்கவில்லை.
வரும்பொழுது ஒருவரோடு ஒருவர் பேசி வருகையில் பிரசங்கியார் சொன்ன வாக்கியம் ஒரு யானையை அடிப்பதற்குப் பீமசேனன் மரத்தைப் பிடுங்கினான் என்பதென்று தெரிய வந்தது.
இந்த ‘டிங்கினானே’ வரலாற்றைப் பிள்ளையவர்கள் அங்கே வருபவர்களுக்கெல்லாம் சவேரிநாத பிள்ளையைக் கொண்டு சொல்லிக் காட்டி வந்தார்கள்.
*
இன்று தமிழ் மேடையில் நிகழ்ந்து வரும் உரைகள் பெரும்பாலானவை அதே ‘டிங்கினானே மரபின்’ தொடர்ச்சியாக அமைபவைதான். எவர் மிகச் சிறந்த டிங்கினானேவை அளிக்கிறாரோ அவர்தான் மிகச் சிறந்த பேச்சாளராக அறியப்படுகிறார். எவர் சிறந்த உரையை ஆற்றுவார் என்பதன் அடிப்படையில் இன்று ஒருவர் மதிப்பிடப்படுவதில்லை. எவர் அனைவருக்கும் புரியும்படியாகவும், அதிகமான பேரை மகிழ்விக்கும்படியாகவும் பேசுகிறாரோ, அவர்தான் சிறந்த பேச்சாளர் என கருதப்படுகிறார்.
தமிழ் மக்களில் மிகப் பெரும்பாலானவர்களுக்கு எதையும் வாசிக்கும் பழக்கம் கிடையாது. எதைப் பற்றியும் தொடக்க அறிவு கிடையாது. எதையும் தொடர்ச்சியாகக் கவனிக்கும் திறனும் கிடையாது. அத்தகைய ஒரு மக்கள் மந்தையை மகிழ்விக்க வேண்டும் என்றால் உண்மையில் கொஞ்சம் வாசிப்பும், அடிப்படை அறிவும் கொண்டவர்கூட டிங்கினானே போட ஆரம்பித்துவிடுகிறார்.
இதற்குக் காரணம் நம் மரபுதான். உலகப் பண்பாடுகளை எழுத்து சார்ந்தவை, செவி சார்ந்தவை என்று இரண்டாகப் பிரிக்கிறார்கள். கிரேக்கப் பண்பாடும், அதன் தொடர்ச்சியான ஐரோப்பியப் பண்பாடும் முதன்மையாகவே எழுத்து சார்ந்தவை. நம் பண்பாடு செவிவழி மரபு கொண்டது.
தமிழில் நாம் நூல்களைச் சுவடிகளில் எழுதிப் பேணினோமே ஒழிய, கற்றது முழுக்க செவி வழியாகத்தான். ஓர் ஊரில் ஒருவர் அல்லது இருவர் மட்டும்தான் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். எஞ்சியோர் அவரிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்டனர். கதைகளையும், அறவுரைகளையும் சொல்லிக் கேட்பதற்கான வெவ்வேறு வகை அரங்குகள் இங்கே இருந்தன. அறிஞர்கள், அறநெறிகளை விரித்துரைப்பவர்கள், சான்றோர்கள் தொடர்ந்த மக்களிடம் நூல்களையும், மரபுகளையும், நெறிகளையும் கற்பித்திருக்கிறார்கள்.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் இங்கு நவீனக் கல்வி கொண்டுவரப்பட்டது. அது முழுக்க முழுக்க அவர்களின் மரபைச் சேர்ந்த எழுத்துக் கல்விதான். அந்த எழுத்துக் கல்வியை செவிவழி மரபு கொண்ட நம்மால் எதிர்கொள்ள முடியவில்லை. அதை செவிக்கல்வியாக, அதாவது மனப்பாடக் கல்வியாக மட்டுமே நாம் ஏற்றுக்கொண்டோம். நம்மால் நூல்வாசிப்புக்குள் செல்ல முடியவில்லை. அந்தரங்க வாசிப்பு, அல்லது நேரடி வாசிப்பு இங்கே மிக அரிதான சிலர் தவிர பிறருக்கு பழகவில்லை. இன்றும் நூல்களை வாசிப்பது இங்கு பரவலாகவே இல்லை.
இன்று தமிழ்நாட்டில் பெரும்பாலும் அனைவருமே எழுத்தறிவு கொண்டவர்கள். ஆனால் எழுத்துக்கல்வி உருவாகி இருநூறாண்டுகள் கடந்தும்கூட முந்நூறு வார்த்தைகளுக்கு மேல் தொடர்ந்து வாசிக்கும் திறமை கொண்டவர்கள் நம்மில் ஒரு சதவீதம்பேர்கூட இல்லை.
பாரதக்கதைகளையும் அதையொட்டி பிறவற்றையும் எடுத்துச் சொல்வதென்பது தொன்மையான நம் மரபு. நாயக்கர் ஆட்சிக்காலத்தில் அதற்காக கிராமங்கள் தோறும் பாரத மண்டபங்கள் உருவாக்கப்பட்டன. மக்கள் ஆசிரியர்- மாணவர் மரபினூடாக நேரடியாகக் கேட்டுக் கற்று வந்தனர். அப்படிக் கற்பிக்கும் புலவர்களுக்குக் கிராமங்களில் மானியங்கள் இருந்தன. ஆங்கில ஆட்சிக்காலத்தில் உருவான பெரும் பஞ்சங்களால் அந்த முறை ஆதரவில்லாமலாகி அழிந்தது. நவீனக் கல்விமுறையும் அதை அழித்தது. அந்த வெறுமைக் காலகட்டத்தையே டிங்கினானே கதை சுட்டிக்காட்டுகிறது.
ஆகவே நமக்குச் செவிப் பண்பாடும் இல்லாமலாயிற்று; எழுத்துப் பண்பாடும் கைவரவில்லை. அதன் விளைவாக ஒரு அறிவுத் தேக்கநிலை இங்கே உள்ளது. அந்த தேக்கநிலையில் இருந்துதான் இன்றைய நவீன டிங்கினானேக்கள் உருவாகி வந்து மேடைகளை ஆக்கிரமித்துள்ளனர். இவர்களுக்கும் வாசிப்பு கிடையாது. புதியன எதுவுமே தெரியாது. மேடைகளில் அந்த அரங்கை மகிழ்விக்கும்பொருட்டு கோமாளிவேடம் அணிவார்கள். வாய்க்குவந்ததை உளறுவார்கள். எந்த எல்லைக்கும் செல்வார்கள். அறியாமை மிக்கவர்களிடம் அறியாமையே செல்லுபடியாகும் என்பதே இதன் அடிப்படை விதி.
நான் பலமுறை சொல்லிவருவதுபோல, வெவ்வேறு தொழில்சார்ந்த பயிற்சிகள்தான் நவீனக் கல்விமுறையால் நமக்கு அளிக்கப்பட்டுள்ளன. இன்னமும்கூட கல்வி என்பது நிகழவில்லை. கல்வி என்பது நூல்களை வாசிப்பதற்கான பயிற்சி மட்டும்தான்; வேறெதுவுமே கல்வியல்ல. தன் துறைசார்ந்த நூல்களை தொடர்ந்து படிப்பவர் மட்டுமே அந்த துறையிலாவது கல்வி கொண்டவர். எந்த நூலையும் வாசிக்காத ஒருவர் கல்வியற்றவரே. அத்தகைய கல்வியற்ற ஒரு பெருங்கூட்டத்தின் முன்னர் உரையாற்றுபவர் வேறெப்படி இருக்கமுடியும்?
நமது பண்பாட்டிலிருந்து எதிர்காலத்தில் கல்விகொண்டஒரு தலைமுறை உருவாகி வரும் என்று நாம் எதிர்பார்க்கலாம். அதுவரைக்கும் இந்த நிலைதான் நீடிக்கும். அதற்கு எதிராகப் போராடுவதே வாசிப்பையும் எழுத்தையும் முன்னெடுத்துச் செல்லும் ஒவ்வொருவரின் கடமையாக இருக்கும்.
ஜெ
Leave a Reply
You must be logged in to post a comment.