2026, செப்டம்பர் மாத கவிதைகள் இதழை வாசித்தேன். வழக்கம் போல கவிதைகளும் கவிதைகள் குறித்த விமர்சனங்களும் இருந்தன.  கூடவே மிக வித்தியாசமாக, கவிதைகள் குறித்த வேணு வேட்ராயனின்  நீண்ட நேர்காணலும் இருந்தது. கவிதை குறித்து என்ன நேர்காணல் செய்யமுடியும்?அதுவும் நீண்ட நேர்காணல் என்றுதான் வாசிக்கத் தொடங்கினேன். உண்மையில் இத்தனை செறிவான, தீவிரமான கவிதை குறித்த உரையாடலை இதுவரை நான் எங்கும் வாசித்ததில்லை. நண்பரும் கவிஞரும் மருத்துவருமான வேணுவை நான் அறிவேன் என்றாலும்  இந்த நேர்காணல் காட்டிய வேணு  எனக்கு மிக மிகப்  புதியவர்.

இந்த நீண்ட நேர்காணலில் அவர் கவிதையை வரையறுக்கிறாரா என்றால்  இல்லை முதல் கேள்வியிலேயே கவிதையை வரையறுக்க மடியாது என்றுதான் உரையாடலையே துவங்குகிறார். மிக தத்துவார்த்தாமான மிக மிகத் தீவிரமான மிகவும் உண்மையான ஒரு நேர்காணல் இது. கவிதைக்கான பொதுவான அணுகுமுறையை, கவிதைக்கு தேவையான தனித்தன்மையை, கவிதை முகிழ்க்கும் ஒரு மந்திரகணத்தையெல்லாம் வேணுவின் பார்வையில் அறிந்துகொள்ள இந்த நேர்காணல் மிக உதவியாக இருந்தது.  

மிக அருமையாகக் கட்டமைக்கப்பட்ட நேர்காணல் இது. எந்தவிதத்திலோ இந்த நேர்காணல் மற்றவற்றை விட மிக நேர்த்தியாக, அந்த ஆளுமையின் முழுப்பரிமாணத்தையும் மிக அழகாக வெளிப்படுத்துகிறது என்று எனக்குத் தோன்றுகிறது.

ஒரு நேர்காணலின் அடுத்த பகுதிக்காக காத்திருப்பதெல்லாம்  எனக்கு இதுதன் முதல் முறை, அத்தனை சுவாரஸ்யமாக கவிதையே எழுதாத  என்னைப் போன்றவர்களுக்கும்  அறிந்துகொள்ள, சிந்திக்கவென ஏராளமாக விஷயங்கள் கொண்டதாக இது அமைந்திருந்தது. வேணு சொல்லி இருந்த கவிதை எழுதியபின்னர் இருக்கும் அந்த aftermath மிகவும் யோசிக்க வைத்தது.

கவிதைகள் இதழ் குழுவினருக்கு என் அன்பு.