ஜெ வின் அமெரிக்கப் பயணத்தின் தொடர் நிகழ்வுகளைப் புகைப்படங்கள் வழியாகக் கவனித்துக்கொண்டிருக்கிறேன். பொதுவாகவே வெளிநாட்டிலிருந்து பகிரப்படும் புகைப்படங்களில் நான் அதிகம் கவனிப்பது கல்விச்சூழலையும் இயற்கைக்காட்சிகளையும்தான். ஜெ George Mason பல்கலைக்கழகத்தில் ராமாயண வகுப்பெடுப்பதைப் பார்த்தேன். போர்டில் அவர் எழுதிக்கொண்டிருந்தார். இரண்டு பெரிய வெள்ளைப் பலகைகள் அருகருகே சுவரில் பொருத்தப்பட்டிருந்ததுதான் என்னை மிகவும் கவர்ந்தது.

20 வருடங்களைக் கடந்த இந்த ஆசிரியப்பணியில் நிறைவேறாத பல விருப்பங்களில், இப்படிப் பெரிய, அகலமும் நீளமுமான பலகையில் வகுப்பெடுக்க வேண்டும் என்பதும் ஒன்று. சரண் ஜெர்மனியில் அவனது பல்கலைக்கழக வகுப்புகளின் இத்தகைய பெரிய பலகைகளைப் புகைப்படத்தில் காண்பித்திருக்கிறான். இன்னும் சில நாடுகளில் மேலும் கீழுமாக நகரும் பலகைகளைக்கூடப் பார்த்திருக்கிறேன்.

தமிழகக் கல்லூரிகளில் கட்டிடங்கள் கட்டப்படுகையிலேயே எழுதும் பலகைக்கென மிகச் சிறிய இடம்தான் ஒதுக்கப்படுகிறது. வீடு கட்டும்போது எத்தனை பெரிய ஹால், படுக்கையறை எல்லாம் கட்டுகிறார்கள்! ஒரு செல்வந்தர் வீட்டில் குளியலறையே பிரம்மாண்டமாக, இரண்டு பகுதிகளுடன், ஃபேன் எல்லாம் வைத்துக் கட்டியிருந்தார்கள். ஆனால் அங்கும் சிறிய சமையலறைதான் இருந்தது. எத்தனை பெரிய வீடானாலும், அத்தனை பேருக்கும் உணவு தயாரிக்கும் சமையலறை மிகச் சிறியதாகத்தான் இருக்கிறது. வீட்டுப் பெண்கள் வியர்த்து வழிந்து அங்கேதான் நாள் முழுவதும் சமைக்கிறார்கள். அப்படித்தான் கல்விக்கூடங்களின் மைய நிகழ்வான கற்றல் என்னும் நிகழ்வும், அதன் முக்கியத்துவம் தெரியாமல் அமைக்கப்பட்டிருக்கும் சிறிய பலகைகளில்தான் நடைபெறுகிறது.

தமிழகப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பெரும்பாலான பல்கலைக்கழகங்களிலும் வகுப்பறைகளில் எழுதும் பலகையின் அளவுக்குப் போதுமான கவனம் கொடுக்கப்படுவதே இல்லை. ஆசிரியரின் தேவைக்கு எந்த முக்கியத்துவமும் கவனமும் கொடுக்கப்படாமல்தான் இங்கே வகுப்பறைகள் கட்டப்படுகின்றன. PPT ஸ்லைடுகள் போட்டாலும் தனித்தனித் துண்டுகளாகத்தான் கற்பித்தல் நடக்கிறது.

யான் அறக்கட்டளை போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இலவச வகுப்புகளைப் பல நகரங்களில் நடத்துகிறார்கள். ஜக்கார்பாளையத்தில் அந்த வகுப்புகளில் இருக்கும் மாபெரும் ஸ்மார்ட் போர்டுகளைப் பார்த்தபோது, இந்த வேலையை ராஜி வைத்துவிட்டு அங்கே போய்ச் சேர்ந்துகொள்ளலாமா என்றுகூட நினைத்தேன். அப்படி ஸ்மார்ட் போர்டுகளையோ, மேலும் கீழுமாக நகரும் இயந்திரங்களின் உதவி தேவைப்படும் விலைகூடிய வசதிகளையோ நான் எதிர்பார்க்கவில்லை. அருகருகே சுவரில் பதிக்கப்பட்டிருக்கும் இரு பெரிய பலகைகள், நீங்கள் எழுதிக்கொண்டிருப்பதுபோல் இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும்!

இதற்குப் பெரிய செலவெல்லாம்கூட ஆகாது. ஒரு மாணவரின் ஓராண்டுக் கட்டணத்திலேயே அதைச் செய்துவிட முடியும். எல்லா வகுப்புகளிலும் அமைக்கப்பட்டிருக்கும் மின்விசிறிகளுக்காக ஆகும் செலவுகூட, இப்படி இரு பலகைகளை அடுத்தடுத்து அமைக்கத் தேவைப்படாது. ஆனால் அதைக்குறித்து யாரும் நினைப்பதே இல்லை. கற்றல், கற்பித்தல் ஆகிய இரண்டுக்குமே தமிழகத்தின் எந்தக் கல்விக்கூடத்திலும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.

ஒரு சிறிய பலகையில் அழித்தழித்து எழுதிக் கற்பிப்பதைவிட, அருகருகே இருக்கும் இப்படியான பலகைகளில் முழுமையாகத் தொடக்கம், வளர்ச்சி, முடிவு எனக் கற்பிக்கையில், முன்பு எழுதியது அழியாமல் அப்படியே இருக்கையில், ஒரு வகுப்பின் தொடக்கம் முதல் முடிவு வரை அதன் முழு வடிவமும் மாணவர் கண்முன் தெரியும். அப்போது மாணவர்களுக்கு ஆசிரியர் கற்பிக்கும் கருத்துகளுக்கு இடையே இருக்கும் தொடர்பு நன்றாகப் புரியும் என்பதைக் குறித்த அறிதல் இங்கு எங்குமே இல்லை.

அப்படிக் கற்பிக்கையில், ஆசிரியர் எழுதிக்கொண்டிருக்கையிலேயே அவர் கற்பிக்கவிருக்கும் கருத்து மெல்ல மெல்லத் துலங்கிவருவதை மாணவர்கள் புரிந்துகொள்ள முடியும். இதனால் ஆசிரியருக்கு நிறைவு மட்டுமல்ல, மாணவர்களுக்கும் அந்தப் பாடம் நிச்சயமாக நன்றாகப் புரியும்.

நான் நீங்கள் எழுதிக்கொண்டிருந்த அந்தப் பலகைகளில் ஒரு பக்கத்தில் ஒரு தாவரத்தின் வழங்குபெயர், அறிவியல் பெயர், பெயரின் பொருள், அதன் பரவல் தொடங்கி அனைத்துத் தாவரவியல் தகவல்களையும் எழுதி, அடுத்த பலகையில் அந்தத் தாவரம் தொடர்பான பல சித்திரங்கள், மலர்ச்சூத்திரம், மலர்ச்சித்திரம் வரை மானசீகமாகப் பல நிறங்களில் வரைந்து பார்த்துக்கொண்டேன்.

ஒரு பலகையில் தொடங்கி, அடுத்த பலகையிலும் தொடர்ந்து ஒரு பாடத்தை முழுமையாக முன்னால் விரித்துக் காட்டும் என் நிறைவேறாத கனவை இப்படிக் கற்பனையில்தான் என்னால் நிகழ்த்திப் பார்த்துக்கொள்ள முடியும். இந்தப் புகைப்படம், அப்படி ஒரே ஒரு பாடமாவது நடத்த முடியவில்லையே என்னும் குறையைப் பெரும் சங்கடமாக எனக்குள் உருவாக்கிவிட்டது.