1607-ம் ஆண்டு, இங்கிலாந்தின் வர்ஜீனியா கம்பெனி, வட அமெரிக்காவில் இங்கிலாந்தின் முதல் நிலையான குடியேற்றமான ஜேம்ஸ்டவுனை நிறுவியது. மன்னர் முதலாம் ஜேம்ஸின் பெயரால் அழைக்கப்பட்ட இக்குடியேற்றம், தொடக்கத்தில் பல சிரமங்களைச் சந்தித்தாலும், புகையிலை சாகுபடி வணிக ரீதியாக வெற்றி பெற்றதும் பொருளாதார அடித்தளத்தைப் பெற்றது.

1612-ம் ஆண்டளவில், இங்கிலாந்திலிருந்து வந்த ஜான் ரோல்ஃப், வர்ஜீனியாவில் வணிக நோக்கத்துக்கு ஏற்ற புகையிலை வகையைப் பயிரிடத் தொடங்கினார். 1614-ல் அதன் முதல் சரக்கு இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டது. ஐரோப்பியத் தேவையால் சாகுபடி விரிவடைந்து, புகையிலை முக்கியப் பணப்பயிரானது. பெரிய தோட்டங்களுக்குத் தொழிலாளர்கள் தேவைப்பட்டதால், இங்கிலாந்திலிருந்து பலர் குறிப்பிட்ட காலம் உழைப்பதற்கு ஒப்புக்கொண்டு, பயணச் செலவுக்குப் பதிலாக ஒப்பந்தக் கூலிகளாக வர்ஜீனியாவுக்கு வந்தனர். 1624-ல் வர்ஜீனியா கம்பெனியின் சாசனம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வர்ஜீனியா மன்னரின் நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள அரச காலனியானது.

1670-களில், வர்ஜீனிய ஆளுநராக இருந்த சர் வில்லியம் பெர்க்லி மன்னரின் பிரதிநிதியாகச் செயல்பட்டார். அவர் அப்பகுதிப் பழங்குடியினருடன் இணைந்து விலங்குரோம வணிகத்திலும் ஈடுபட்டிருந்தார். இதற்கிடையில், காடுகளையொட்டிய எல்லைப்புறங்களில் முன்பு ஒப்பந்தக் கூலிகளாக வந்து விடுதலை பெற்ற ஏழை ஆங்கிலேயர்கள் புகையிலை பயிரிட்டு வாழ்ந்தனர். அந்த நிலங்களின் பூர்வீக உரிமையாளர்களான அமெரிக்கப் பழங்குடியினரும் அங்கே வாழ்ந்தனர். சில குழுக்கள் ஆங்கிலேயர்களுடன் நட்புறவு கொண்டிருந்தன; வேறு சில குழுக்களுடன் மோதல்கள் நிலவின.

1674-ல் இங்கிலாந்திலிருந்து வந்த படித்த, துடிப்பான, செல்வந்த இளைஞரான நதானியேல் பேக்கன், எல்லைப்புறத்தில் ஏராளமான நிலங்களை வாங்கியிருந்தார். விரைவில் அவர் அங்கிருந்த குடியேறிகளின் தலைவராக உருவெடுத்தார்.

1675-ல் எல்லைப்புறத்தில் ஒரு சிறிய தகராறு பெரும் மோதலாக மாறியது. வணிகக் கடன் தொடர்பான பிரச்சினையில் ஒரு பழங்குடிக் குழு குடியேறி ஒருவரின் பண்ணையைத் தாக்கியது. பதிலுக்கு ஆங்கிலேயக் குடியேறிகள் பழங்குடியினரைக் கொன்றனர். இதையடுத்து பழிவாங்கும் தாக்குதல்கள் தொடர்ந்தன; பல குடியேறிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் பேக்கனின் தோட்ட மேலாளரும் ஒருவர்.

இதற்கிடையில், புகையிலை விலை வீழ்ச்சி, அதிக வரிகள், வறட்சி, புயல் ஆகியவற்றால் ஏற்கெனவே ஜேம்ஸ்டவுனில் சிறு கிளர்ச்சிகள் ஏற்பட்டிருந்தன. இந்தச் சூழலில், அனைத்துப் பழங்குடியினருக்கும் எதிராகப் போர் தொடுக்க பேக்கன் ஆளுநரிடம் அனுமதி கேட்டார். பெர்க்லி மறுத்ததால், பேக்கன் தானே படை திரட்டி ஜேம்ஸ்டவுனைத் தாக்கி எரித்தார். ஆளுநர் தப்பியோடினார்; பேக்கன் வயிற்றுப்போக்கால் இறந்ததைத் தொடர்ந்து கிளர்ச்சி ஓய்ந்தது.

எரிந்த நகரில் மீண்டும் ஒழுங்கை நிலைநாட்ட, இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ் 1,000 வீரர்களைக் கொண்ட படையைக் கப்பலில் அனுப்பினார். அப்படை 1677-ல் வர்ஜீனியாவை வந்தடைந்தது.

எரிந்த ஜேம்ஸ்டவுனில் உணவுப் பற்றாக்குறை நிலவியது. வசந்தகாலத்தில் சுற்றியிருந்த காடுகள் புதுத்தளிர்களால் பசுமையாகக் காட்சியளித்தன. அங்கு முளைத்திருந்த ஒரு செடியின் இலைகளைப் பறித்த வீரர்களின் சிறு குழு, அவற்றை வேகவைத்து boiled salad ஆக உண்டது. ஆனால், அதன் விளைவு விபரீதமானது. அடுத்த பதினொரு நாட்களுக்கும் அவர்கள் அனைவரும் கடுமையான மனக்குழப்பத்துக்கும் பித்துநிலைக்கும் ஆளானார்கள்.

ஒருவன் காற்றில் ஒரு இறகைத் தொடர்ந்து ஊதிக்கொண்டிருந்தான்.

இன்னொருவன் காற்றில் வைக்கோல் குச்சிகளை ஆவேசமாக எறிந்துகொண்டிருந்தான். மூன்றாமவன் நிர்வாணமாக ஒரு மூலையில் குரங்குபோல் உட்கார்ந்து, மற்றவர்களைப் பார்த்துப் பழிப்புக் காட்டினான்.

நான்காமவன் தோழர்களைப் பாசத்துடன் முத்தமிட்டுத் தடவிக்கொடுத்து, அடுத்த கணமே அவர்களை அடிக்கத்துவங்கினான்..

அவர்கள் தமக்குத் தாமே தீங்கு செய்துகொள்ளாமல் இருக்க மற்றவர்களால் அடைத்து வைக்கப்பட்டனர். பதினொரு நாட்களுக்குப் பிறகு தெளிந்த அவர்களுக்கு நடந்தது எதுவும் நினைவில் இல்லை.

சம்பவம் நடந்து சுமார் 28 ஆண்டுகள் கழித்து இந்த நிகழ்வை வரலாற்றாய்வாளர் ராபர்ட் பெவர்லி (Robert Beverley Jr.) 1705-ல்  தான் எழுதிய The History and Present State of Virginia என்ற நூலில் “ஒரு மிக இனிய நகைச்சுவை நாடகம்” என்று எழுதினார். பெவர்லி அந்தச்செடியை “James-Town Weed” என்று குறிப்பிட்டு அந்தச் செடி “பெருவின் முள்ளாப்பிள்” (Thorny Apple of Peru) போன்றது என்றும் சொன்னார். அதிலிருந்தே “Jimson weed” என்ற சுருக்கப் பெயர் பிற்காலத்தில் வந்தது. 

முட்கள் கொண்டது என்னும் அந்த விவரிப்பினால் அது Datura stramonium என்னும் அறிவியல் பெயர் கொண்ட முள் ஊமத்தைச் செடி என்று கருதப்படுகிறது. அது நமது வெள்ளூமத்தையான Datura metel-ன் மிக நெருங்கிய உறவினர். இரண்டும் சொலனேசியைச் சேர்ந்தவை. இரண்டிலும் ஒரே மாதிரியான வேதிச்சேர்மங்கள் உள்ளன.

ஆனால் அது இனிய நாடகமல்ல, நச்சு மயக்கம்.

கத்தரி, உருளைக்கிழங்கு, தக்காளி, மிளகாய், புகையிலை ஆகியவையும் ஊமத்தையின் உறவினர்கள்தான். அதே குடும்பத்தில் பெல்லடோனா, ஹென்பேன், மாண்ட்ரேக் போன்ற “கிளர்ச்சித் தாவரங்களும்” இருக்கின்றன. .

இந்தியாவில் பரவலாகக் காணப்படுவது Datura metel. உலகின் பிற பகுதிகளில் Datura stramonium, Datura innoxia ஆகியவை முக்கியமானவை. இவற்றின் அடையாளங்கள்:

•        புனல் வடிவ வெண்மையான அல்லது ஊதா நிறமுடைய பெரிய மலர்கள். அவை மாலையில் மலர்ந்து, இரவில் மணம் வீசி, அந்துப்பூச்சிகளை ஈர்க்கின்றன.

•        முட்கள் நிறைந்த உருண்டையான காய், அதனால்தான் “thorn apple” என்ற பெயர். உள்ளே ஏராளமான கரும்பழுப்பு விதைகள்.

•        தனித்துவமான, கடும் நெடிகொண்ட இலைகள்.

“Datura” என்ற பேரினப் பெயர் சமஸ்கிருத/இந்திச் சொல்லான dhattūra என்பதிலிருந்து வந்தது. “metel” என்ற சிற்றினப் பெயர் அரபு மொழித் தொடர்புடையது. “ஊமத்தை” என்ற தமிழ்ப் பெயருக்கு உன்மத்தம் உண்டாக்கும் என்ற பொருளுண்டு.  

ஊமத்தையின் இலை, மலர், காய் மற்றும் குறிப்பாக விதை என இதன் அனைத்துப் பாகங்களிலும் மனித நரம்பு மண்டலத்தைப் பெரிதும் பாதிக்கக்கூடிய ட்ரோப்பேன் அல்கலாய்டுகள் (Tropane alkaloids) நிறைந்துள்ளன. இதில் முக்கியமாக ஹையோசயமின் (Hyoscyamine), அட்ரோபின் (Atropine) மற்றும் ஸ்கோபோலமின் (Scopolamine / Hyoscine) ஆகிய வீரியமிக்க வேதிப்பொருட்கள் அடங்கியுள்ளன. இவை மனித நரம்பு மண்டலத்தில் நரம்புச் செய்திகளைக் கடத்தும் அசிட்டைல்கோலின் (Acetylcholine) என்ற வேதிப்பொருளின் இயல்பான செயல்பாட்டைத் தடுத்து முடக்குகின்றன. இதன் காரணமாகவே, ஊமத்தையின் வேதியியல் பாதிப்பு மருத்துவத் துறையில் “ஆன்டிகோலினெர்ஜிக் நச்சு” (Anticholinergic poison) என்று வரையறுக்கப்படுகிறது.

 இதன் விளைவுகளாக:

வாய் வறட்சி, கண்மணி விரிவு, பார்வை மங்கல், முகம் சிவத்தல், உடல் வெப்பம் உயர்தல், இதயத் துடிப்பு அதிகரித்தல், குழப்பம், பிதற்றல், உண்மையைப் போலவே தோன்றும் மாயக்காட்சிகள்,தெளிந்த பிறகு நினைவின்மை- ஆகியவை சொல்லப்படுகின்றன.

இங்கே ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. காளான்கள் அல்லது LSD போன்ற “சைக்கடெலிக்” பொருட்கள் தரும்  உணர்வுத் திரிபூட்டி, மாயத்தோற்றம் ஏற்படுத்தும், உணர்வுநிலை மாற்றும் அனுபவமும், ஊமத்தை தரும் அனுபவமும் ஒன்றல்ல. 

ஊமத்தை உண்டாக்கும் மாயக்காட்சிகள் இனிமையானவை அல்ல. அவை அச்சமூட்டும் மயக்கம் (delirium). ஒருவர் இல்லாத பொருட்களைப் பார்ப்பார், இல்லாதவர்களிடம் பேசுவார், ஆனால் அவை எல்லாம் உண்மை என்றே நம்புவார். இத்தாவரத்தின் நச்சுத்தன்மை செடிக்குச் செடி, பாகத்துக்குப் பாகம், பருவத்துக்குப் பருவம் மாறுபடுகிறது. அதனால் எவ்வளவு உண்டால் ஆபத்து என்று முன்கூட்டிச் சொல்லவே முடியாது. இன்றும் இந்தியாவில் இளைஞர்கள் சிலர் “போதை” தேடி ஊமத்தை விதைகளை உண்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுவதும், சில சமயம் உயிரிழப்பதும் நிகழ்கிறது. 

சமீபத்தில்   கர்நாடக உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்துகள் நிர்வாகத் துறை, ஊமத்தைக் காய்களும் விதைகளும் உணவுப் பொருட்களாக இணைய தளங்களில் விற்கப்பட்டதைத் தொடர்ந்து Amazon, Swiggy Instamart, BigBasket ஆகியவற்றின் உணவு உரிமங்களை இடைநிறுத்தியது. புகாரைத் தொடர்ந்து விசாரணை நடந்தது  முடிவில் ஊமத்தை தொடர்பான எல்லாப் பட்டியல்களையும் விளம்பரங்களையும் உடனடியாக நீக்கவும், மனித உணவாக அதை விற்கவோ விநியோகிக்கவோ கூடாது என்றும் துறை உத்தரவிட்டது.

பழங்கால இந்தியப் பாரம்பரிய மருத்துவ மரபுகளான ஆயுர்வேதத்திலும் சித்த மருத்துவத்திலும் பல சிகிச்சைகளில் ஊமத்தை இடம்பெற்றுள்ளது. சித்த மரபில் ஊமத்தையின்  நச்சுப் பொருட்களைப் சுத்தி செய்து குறைந்த அளவில், மருத்துவர் கண்காணிப்பில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது வெளிப் பூச்சாகவும் புகைப்பிடிப்பாகவும் ஆஸ்துமா, வலி போன்றவற்றுக்குப் பாரம்பரிய மற்றும் நாட்டு மருதுவத்திலும் ஊமத்தை இலைகள் பயன்படுத்தப்பட்டணா. 

பிரிட்டிஷ் இந்தியாவில்  D. stramonium இலைகளிலிருந்து ஆஸ்துமா சிகரெட்டுகள் தயாரிக்கப்பட்டு ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் விற்கப்பட்டன.

இன்று, இதே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஸ்கோபொலமின், பயணத்தின்போது ஏற்படும் கடல்நோய் உள்ளிட்ட இயக்க நோய்களைத் தடுப்பதற்கான தோலில் ஒட்டும் மருந்துத் திட்டுகளிலும், அறுவைசிகிச்சைக்கு முந்தைய சில மருத்துவச் சிகிச்சைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

அட்ரோபின் கண் மருத்துவத்திலும், சில நச்சு முறிவுச் சிகிச்சைகளிலும் பயன்படுகிறது.  

பிரிட்டிஷ் இந்தியாவின்  பதிவுகளில், முக்கியமாக 19-ம் நூற்றாண்டில், கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியிலும் பின்னர் 1858-க்குப் பிறகு பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆட்சியிலும் எழுதப்பட்ட பதிவுகளில், சத்திரங்களிலும் யாத்திரைப் பாதைகளிலும் பயணிகளிடம் நட்பாகப் பழகி, உணவிலோ பானத்திலோ ஊமத்தையைக் கலந்து மயக்கி, உடைமைகளைப் பறித்த ஊமத்தைக் கொள்ளையர்களை “தத்தூரியா”  என்று ஆங்கில நிர்வாகிகளும் மருத்துவர்களும் குறிப்பிட்டனர்.பயணிகள் நீண்ட தூரம் நடந்தும் வண்டிகளிலும் சென்ற காலம் அது. சாலையோரச் சத்திரங்களும் யாத்திரைப் பாதைகளும் கொள்ளையர்களுக்குச் சாதகமாக இருந்தன. அதனால் அங்கே இந்தக் குற்றங்கள் பதிவாகின.

நாஹுவாட்டில் (Nahuatl) மொழி பேசிய மெக்சிகோவின் ஆஸ்டெக் மக்கள் ஊமத்தையை “தலை குனிதல்” என்ற பொருள்படும் “டோலோவாட்ஸின்” (toloatzin) என்று அழைத்தனர்.  ஊமத்தையை  உண்டவர் தலை சாய்வதைக் குறிப்பதாக இதற்கு  விளக்கங்கள் உண்டு. 

 இதிலிருந்தே ஸ்பானிய-மெக்சிகோ வழக்கில் “டோலோவாச்சே” (toloache) என்ற சொல் வந்தது. இன்றும் மெக்சிகோவின் நாட்டார் வழக்கில் டோலோவாச்சே காதல் மயக்க மருந்தென்று நம்பப்படுகிறது. தன்னை விரும்பாதவரை வசியப்படுத்த அது பயன்படுவதாகக் கதைகள் உண்டு. ஆனால் இதில் காதலைத் தூண்டும் எந்த ஆற்றலும் இல்லை, இது நச்சு மயக்கம் மட்டுமே என்பதுதான் உண்மை. அந்த நம்பிக்கையால் பலர் நஞ்சுக்கு ஆளாகியுள்ளனர். 

கலிபோர்னியாவின் சுமாஷ் (Chumash) பழங்குடியினர் இளைஞர்களின் பருவ அடைவுச் சடங்குகளில்  ஊமத்தைச்செடியின் வேரிலிருந்து தயாரிக்கப்பட்ட”டோலோவாச்சே” என்ற பானத்தைப் பயன்படுத்தினார்கள்.  ஆனால் அவர்கள் இதன் ஆபத்தை நன்கு அறிந்திருந்தனர். அது பழங்குடியினத் தலைவர்களின் கண்காணிப்பில் மட்டுமே நடந்தது, அப்படியும் உயிரிழப்புகள் உண்டாகின. அமெரிக்காவின் வேறு சில பழங்குடி மரபுகளிலும் ஊமத்தை சடங்குகள் பதிவாகியுள்ளன. 

ஊமத்தையின் தாயகம் புதிய உலகமா (அமெரிக்கா), பழைய உலகமா (ஆசியா) என்பது தாவரவியல் வரலாற்றில் இன்றும்  விவதிக்கப் படுகிறது. சமஸ்கிருத, ஆயுர்வேத நூல்களில் இதற்கான பழைய குறிப்புகள் இருப்பதாகச் சிலரும். கொலம்பஸுக்குப் பிறகு நடந்த “கொலம்பியப் பரிமாற்றத்தில்” தான் இது உலகெங்கும் பரவியது என்று மற்றவர்களும் கூறுகின்றனர். சாலையோரம், தரிசு நிலம், குப்பைமேடு போன்ற மாற்றமடைந்த நிலங்களில் தானாக வளரும் களைச்செடியான இது வெப்ப மண்டலம் முழுவதும் பரவியுள்ளது.

ஊமத்தை (Datura metel) சுமார் ஒன்று முதல் ஒன்றரை மீட்டர் உயரம் வளரும், கிளைத்த, நிமிர்ந்த மூலிகைச் செடி. பச்சை அல்லது ஊதா நிறமுடைய தண்டு உருளை வடிவமானது, ஆணிவேர்த் தொகுதி. 

தனி இலைகள், மாற்றிலை அடுக்கில் அமைந்தவை. ஆனால் இலைக்கோணத்தில் உள்ள பக்கக்கிளை தண்டுடன் ஒட்டி வளர்வதால் (concaulescence) அவை ஜோடி இலைகளைப் போலத் தோன்றும். ஜோடியின் இரு இலைகளும் வெவ்வேறு கிளைகளுக்கு உரியவை என்பதால் அளவில் சமமற்றவை. 

முட்டை வடிவமுடைய இலையின் அடிப்பகுதி சமச்சீரற்றது, ஒரே செடியிலேயே இலை விளிம்பு முழுமையாகவோ அலை அலையாகவோ சற்றுப் பற்களுடனோ இருக்கும். இலைகளை நசுக்கினால் கடுமையான, கெடு மணம் வீசும். ஆரச்சமச்சீருடைய வெண்மை, ஊதா அல்லது மஞ்சள்நிறங்களில், இருபால் பெரிய  மலர்கள்  புனல் வடிவில் தனியாக, இலைக்கோணத்திலோ கிளைப்பிரிவிலோ தோன்றுகின்றன. காய் உருவாகும்போது புல்லியின் மேற்பகுதி உதிர்ந்து, அடிப்பகுதி மட்டும் ஒரு வளையம் போல் காயின் கீழ் நிலைத்திருக்கும்.  ஐந்து மகரந்தத்தாள்கள் அல்லிக்குழலில் ஒட்டியவை, அல்லிக்குழலுக்குள்ளேயே அடங்கியிருக்கும். 

மலர்கள் மாலையில் மலர்ந்து இரவில் மணம் வீசி, அந்துப்பூச்சிகளால் மகரந்தச்சேர்க்கை அடைகின்றன. உருண்டையான, தொங்கும் வெடிகனி, மேற்பரப்பில் மழுங்கிய புடைப்புகள் உடையது, ஒழுங்கற்ற முறையில் வெடிக்கும். (D. stramonium-ல் காய் நிமிர்ந்து, கூர்மையான முட்களுடன் இருக்கும்.) உள்ளே ஏராளமான சிறுநீரக வடிவ, தட்டையான, மேற்பரப்பில் குழிவுள்ள, பழுப்பு நிற விதைகள் உள்ளன. 

இந்தியப் பண்பாட்டில் ஊமத்தை சிவபெருமானுடன் நெருங்கிய தொடர்புடையது. சிவன் ஊமத்தம்பூவும் எருக்கம்பூவும் கொன்றையும் சூடியவராகப் பக்தி இலக்கியங்களில் வர்ணிக்கப்படுகிறார். கோவில்களில் சிவனுக்கு ஊமத்தம்பூ படைக்கும் வழக்கம் இன்றும் இந்தியாவில் பல இடங்களில் உள்ளது. வடஇந்தியாவில், குறிப்பாக வாரணாசி போன்ற சிவத்தலங்களில், ஊமத்தங்காய்களும் மலர்களும் சிவலிங்கத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது.  சிவனுக்கு பித்தன் என்றும் உன்மத்த சேகரன் என்றும் பெயர்கள் உண்டு. 

தேவாரத்தில்

“வன்னியும் மத்தமும் மதியும் நல் மாலையும்

பொன்னியன்ற சடைமுடி மேல் புனைந்தான் இடமாம்!’’  

என்னும் பதிகம் மத்தம் எனக்குறிப்பிடுவது ஊமத்தையைத்தான்.

நாட்டார் வழக்கில், ஊமத்தை மாந்திரீகத்துடனும், பேய், பிசாசு, வசியம் போன்ற நம்பிக்கைகளுடனும் இணைத்துப் பேசப்படுகிறது. இவை அறிவியல் சான்றுகள் அல்ல. ஆனால் பண்பாட்டு ஆவணங்களாக மதிப்புடையவை.

பெரும்பாலான போதை தரும் தாவரங்கள் மனதை மயக்கி இன்பம் தருகின்றன; ஆனால் நினைவையும் தன்னுணர்வையுமே பறித்து, பிரமையின் இருட்டுக்குள் தள்ளுகிற ஊமத்தை அவற்றின் வரிசையிலிருந்து சற்று விலகித்தனித்து நிற்கிறது,