லோகமாதேவியின் பதிவுகள்

Author: அதழ் (Page 18 of 26)

தாவரங்கள் காத்திருக்கின்றன

கோவிட் தொற்று காலத்தில் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நேரடியாக நடைபெறவில்லை. ஆன்லைன்  என்பதை அப்போதுதான் அறியத் துவங்கி இருந்த மாணவர்கள் தட்டுத்தடுமாறி கல்லூரியில் சேர முயன்று மிகுந்த சிரமங்களுக்கிடையில் கல்லூரிக்கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தி கிடைத்த படிப்பில் சேர்ந்தார்கள்

கடந்த இருவருடங்ளுமே மிக குறைந்த அளவில்தான் தாவரவியல் துறைக்கும் பிற அடிப்படை அறிவியல் துறைகளான இயற்பியல் வேதியியல் ஆகியவற்றிற்கும். மாணவர்கள் சேர்ந்திருந்தார்கள்.

பள்ளி இறுதியிலும் நேரடி வகுப்புகள் நடந்திராதலால் இங்கு வந்து சேர்ந்த மாணவர்களுக்கு எந்த அடிப்படை கல்வியறிவும்  ஒழுக்கம் குறித்த உணர்வும் இல்லையென்பது வருந்தத்தக்க விஷயம் என்றால் அதை காட்டிலும் அதிர்ச்சியளித்தது ஆன்லைன் தேர்வுகளில் காப்பி அடித்து பழக்கம் ஆகிவிட்டிருக்கும் அவர்களுக்கு முறையான தேர்வெழுதும் பயிற்சிகளை அளிப்பதில் இருந்த சிக்கல்கள் தான். பெற்றோர்களுக்கும் அப்படி  அவரவர் குழந்தைகள் காப்பியடித்து  தேர்வெழுதியது பெரும்பாலும் தெரிந்திருந்தும் எவரும் கண்டித்திருக்கவில்லை என்பதால் ஆசிரியர்கள் அவர்களை திருத்தி சரியான வழிக்கு கொண்டு வர  திணறிக் கொண்டிருக்கிறோம்.

இந்த வருட மாணவர் சேர்க்கை வழக்கம் போல நேரடியாக கடந்த ஒருவாரமாக நடந்தது. கோவிட் காலத்துக்கு பிறகு பட்டிதொட்டிகளிலெல்லாம் கம்ப்யூட்டர் என்னும் சொல் புழங்கி அனைவருக்கும் பரிச்சயமாகி விட்டிருக்கிறது மேலும் கணிப்பொறித் துறையில் எப்படியும் அறுபதாயிரத்துக்கு குறையாமல் சம்பளம் வரும் என்பதும் மட்டும் தெரிந்திருக்கிறது

சங்கரன் கையேடு

எனவே அடிப்படை அறிவியல் துறைகளில்  சேர்ந்து பயில மாணவர்கள்  தயாராகவே இல்லை பெற்றோர்களுக்கும் அப்படியான  துறைகள் இருப்பதும் அவற்றின்  முக்கியத்துவமும் தெரியவில்லை. 90 சதவீதம் கணினி அறிவியல் படிப்பைத்தான் நாடுகிறார்கள் அவர்களின் குழந்தைகள் பள்ளி இறுதியில் கணினி அறிவியல் படித்திருக்கவில்லையெனினும் எப்படியும் அந்த படிப்பில் கல்லூரியில் சேர முயற்சிக்கிறார்கள். கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் வேண்டும் என்று அடம் பிடித்த நான் ஒரு மாணவனின் தந்தையிடம் அவர் மகன் பள்ளிப்படிப்பில் கணினி அறிவியல் படித்திருக்காததால் இப்போது அதில் கல்லூரி படிப்பை தொடர முடியாது என்று அரை மணி நேரம் செலவழித்து விளக்கினேன். அவர் பதிலுக்கு ‘’பணம் எத்தனை செலவானாலும் பரவாயில்லை, எப்படியும் கம்ப்யூட்டர் சயின்ஸில் ஒரு சீட் வேணுங்க’’ என்றார்.

தாவரவியல் படிப்பின் முக்கியத்துவத்தை கடந்த  வாரத்தில் பலநூறு பெருக்கு நெஞ்சடைக்க, தொண்ட வரள விளக்கினேன் ஆனால் யாருக்கும் புரியவில்லை வேண்டா வெறுப்பாகவும், மிககுறைந்த மதிப்பெண்  பெற்று வேறெங்கும் இடம் கிடைக்காதவர்களுமாக வெகு  சிலரே இத்துறையில் சேர்ந்திருக்கிறார்கள். இதில்தான் சேர்ந்து படிக்க வேண்டும் என்று இரண்டே இரண்டு மாணவிகள் மட்டும்தான் வந்தார்கள்.

எமிலியின் ஒவியம்

என் மாணவிகள் பலர்  கோவையை சுற்றி இருக்கும் நகரங்களில் காஃபி வாரியத்திலும், இந்திய தாவரவியல் அளவாய்வு  அமைப்பு,  வனமரபியல்  மற்றும் கரும்பு ஆராய்ச்சி நிறுவனங்களில் நல்ல வேலைகளிலும், காட்டிலாகா அதிகாரிகளாகவும், நல்ல ஆராய்ச்சியாளர்களாகவும், பேராசிரியர்களாகவும் இருக்கிறார்கள். இனி அப்படியான அமைப்புக்களில் எதிர்காலங்களில் பணியாற்ற எத்தனை பேர் தகுதி கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது கேள்விக்குறிதான்,

கல்லூரிகளில் அடிப்படை அறிவியல் துறைகளின் எதிர்காலம் நிச்சயமற்றுப் போய்க்கொண்டிருக்கிறது. பள்ளிக்கல்வியின் போதே அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு அத்துறைகளின் மேதைகளை பற்றி, முக்கியத்துவத்தை பற்றியெல்லாம் கற்றுத்தரவேண்டும். அப்போதுதான் அப்படியான துறைகளில் மாணவர்களுக்கு ஆர்வம் உண்டாகும். இப்போதைய பெற்றோர்களும் மருத்துவம், பொறியியல் அடுத்தாக கணினி அறிவியல் இவற்றைத் தவிர தங்கள் குழந்தைகளுக்கு  வேறெதிலும் எதிர்காலம் இல்லையென்று கண்மூடித்தனமாக நம்புகிறார்கள். இவற்றையெல்லாம் குறித்து கவலைப் பட வேண்டியவர்கள் ஆசிரியர்கள் மட்டுமல்ல.

J S Gamble 1847-1925 ல் உருவாக்கிய  flora of madras presidency யின்  அனைத்து தொகுப்புகளும் மிக அரிய பொக்கிஷங்கள். கல்லூரியிலும் பல்கலைக்கழகத்திலும் நான் அவற்றை பலமுறை உதவிக்கென எடுத்து வாசித்திருக்கிறேன். அவற்றின் உதவிகொண்டு பல நூறு தாவரங்களை அடையாளம் கண்டிருக்கிறேன், அதைப்போலவே  1817-1911 ல்  Hooker உருவாக்கிய  Flora of British India தொகுப்புக்கள்,  பிலிப், ஃபைசன் 1915 ல்  உருவாக்கிய  பழனி கொடைக்கானல் மற்றும் ஊட்டி மலைப்பகுதிகளில் 6,500 அடி க்கு மேலான உயரத்திலிருக்கும் தாவரங்களை குறித்த அரிய நூலாகிய  flora of Nilgiri and pulny hill tops,   போன்ற நூல்களிலிருந்து பயனடைந்தவர்களே இப்போது இத்துறையில் பணியாற்றும் என்போன்ற ஆயிரக்கணக்கானோர். ஃபைசனின் இந்த நூலத்தொகுப்பு  1975க்குள் 15 பதிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

பிலிப் ஃபைசனின் நூல்

தமிழ் விக்கியில் இவர்களை குறித்த  பதிவுகள் இருப்பது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது.ஒரு பதிவை வாசிக்க துவங்கி ஒன்றிலிருந்து அதன் தொடர்புடைய மற்றொன்று என்று தொடர்ந்து வாசிப்பது பழக்கமாகிவிட்டிருக்கிறது  அனைத்தும் அரிய பதிவுகள்

இந்திய தாவரவியல் கழக (Indian Botanical Society) அமைப்பை உருவாக்கி, நடத்த உதவி, அந்த அமைப்பு சார்ந்து இந்திய தாவரவியல் இதழ் (Journal of the Indian Botanical Society) வெளியிடுவதிலும் முன்முயற்சி எடுத்த. ஃபைசனின்  பல மாணவர்களில் முதன்மையானவர்  மா.கிருஷ்ணன்.   

கிருஷ்ணன் தமிழில் சுற்றுச்சூழல் தொடர்பான படைப்புகளுக்கு முன்னோடி. மற்றும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமானவர். இவர் நீர்வண்ண ஓவியங்களை வரையும் பயிற்சியை பிலிப் ஃபைசனின் மனைவி டயானா ரூத் ஃபைசனிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறார். கொடைக்கானலில் ஃபைசனுடன் ஆய்வுக்குச் செல்கையில் புகழ்பெற்ற உயிரியலாளராரும், இந்திய இயற்கையியலின் முன்னோடிகளில் ஒருவருமானஆல்பர்ட் பெளர்ன்   மற்றும்  அவரது மனைவி எமிலி டிரீகிளேஷேர் ஆகியோருடனும் அவருக்கு  தொடர்பு உருவானது.

பௌர்ன்  நீர்வாழ் உயிர்களுக்கும் நீரின் ஆக்ஸிஜன் அளவுக்குமான உறவு பற்றிய முக்கியமான ஆய்வை செய்தவர். ஓவியரான அவர் மனைவி எமிலி இந்தியத் தாவரவியல் ஆய்வாளர்களில் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்.ஃபைசனின் flora of kodaikanal நூலில் எமிலியின் தாவரவியல் சித்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.எந்த வசதியும் இல்லாத அந்தக்காலத்தில்   இத்துறையின் மீதான ஈடுபாட்டினாலும் அப்பணிகளின் எதிர்கால முக்கியத்துவத்தை அவர்கள் நன்கு உணர்ந்திருந்ததாலும்  இவற்றை  செய்து முடித்திருக்கிறார்கள் .

நான் இளங்கலை அறிவியல் படித்த அதே துறையில்தான் இப்போது பணிபுரிகிறேன். துறையின் ஆய்வகம் நோய் தொற்றுக் காலத்தில் ஏகத்துக்கும் சேதமடைந்திருந்தது. பல அரிய தாவர சேகரிப்புகள் பூஞ்சைத்தொற்றில் அழிந்திருந்தன. மேலும்  உலர் தாவரங்களில் பலவும் பூச்சி அரித்து வீணாகியிருந்தன. எனவே இரண்டு உதவியாளர்களுடன் பலநாட்கள் செலவழித்து  ஆய்வகத்தை  சமீபத்தில் சுத்தம் செய்தேன்  ஆய்வக அலமாரிகளில் ஒன்றில். மறைந்த என் ஆசிரியரும்  நன்னீரியலில் (Limnology) மிக முக்கியமான ஆய்வுகள்  பலவற்றை  செய்து பல புதிய பாசி வகைகளை கண்டறிந்தவரான திரு சங்கரன் 1972ல் இருந்து 1975 வரை தொடர்ச்சியாக திருமூர்த்திமலை, கொடைக்கானல், வால்பாறை அட்டகட்டி என பல மலைப்பிரெதேசங்களுக்கு பயணித்து அப்பகுதியின் தாவரங்களை பட்டியலிட்ட ஒரு சிறிய நோட்டுப் புத்தகம் குப்பையில்  கிடந்தது.

தான்  பயணித்த  இடங்கள்,  கடல்மட்டத்திலிருந்து அப்பகுதியின் உயரம், நேரம் ஆகியவற்றுடன் 477 தாவரங்களை  பட்டியலிட்டு சிலவற்றை கேள்விக்குறியிட்டும் சிலவற்றை அன்றைக்கு மேலதிகம் தேடி வாசிக்க வேண்டும் என்றும் குறிப்பு எழுதி இருக்கிறார், அவர் அந்த  முக்கியமான ஆய்வை எந்த காரணத்தினால் முடிக்காமல் விட்டிருக்கிறார் என்று  தெரியவில்லை. இந்த பட்டியல் தகவல்களுடன்  மேலும் சில வருட ஆய்வை தொடர்ந்தால் அம்மலைப்பகுதிகளின் flora வை ஃபைசனைப்போல  உருவாக்கிவிடலாம். ஆர்வமுள்ள மாணவர்கள் தான் இல்லை. பொக்கிஷமாக இதை நான் பாதுகாத்து வைத்திருக்கிறேன்

ஏன் தாவரவியல் படிக்க வேண்டும் என நினைப்பவர்கள் மிக முக்கியமான இது போன்ற ஆய்வுகள் செய்த  ஃபைசன், எமிலி, மா,கிருஷ்ணன்  ஆகியோரின் விக்கி பதிவுகளை வாசித்தால் இத்துறையின் முக்கியத்துவம் புரிந்துவிடும். இவர்களை  தமிழ் விக்கி ஆவணப்படுத்தியது எத்தனை முக்கியம் என்பதுவும் புரியும்

மைத்ரி

அஜிதனை நான் முதலில் பார்த்தது பல வருடங்களுக்கு முன்னர் ஊட்டி காவிய முகாமில், அப்போதுதான் அருண்மொழியை முதலில் பார்த்ததும்.

நானும், அடர் நீலச் சதுரங்கள் கொண்ட வெண் பருத்தி புடவையில் அருண்மொழியும் குருகுலத்தின் உணவுக் கூடத்திற்கு செல்லும் வழியில் இருந்த ஒரு மண் மேட்டில் அமர்ந்திருந்தோம், உணவுக் கூடத்திலிருந்து நண்பர்களுடன் மேலேறி வந்து கொண்டிருந்த ஜெ அருணாவின் முதுதில் ஒரு தட்டு தட்டி ’வா நேரமாச்சு’ என்றபடியே கடந்து சென்றார். அடி கொஞ்சம் பலமாக விழுந்துவிட்டது. அருணா ’இதை பிடிங்க’ என்று என்னிடம்  கைப்பையை  கொடுத்துவிட்டு எழுந்து, உங்களை தொடர்ந்து வந்து பலமாக ஒரு அடி முதுகில் வைத்து ’எதுக்கு ஜெயன் அடிச்சே’? என்றார்கள். ஜெ திரும்பி’ ’இல்லடி செஷனுக்கு நேரமாச்சு அதான்’ என்றதும் ’அதுக்கு? அடிப்பியா? வலிக்குது தெரியுமா? என்று  சொல்லிக் கொண்டிருக்கையில் இருவருக்கும் இடையில் எங்கிருந்தோ அஜிதன் வந்து நின்றான்.  (வெண்முரசில் இதுபோலவே பீமனும் இடும்பியும் பேசிக்கொண்டிருக்கையில் கடோத்கஜன் இருவருக்கும் இடையில் வந்து நிற்பான்). பின்னர் விஷ்ணுபுரம் விழாக்களில் சில சமயம் அஜிதனை பார்த்திருக்கிறேன்

அஜிதன் எடுத்த குறும்படத்தை பார்த்தபோது அந்த அஜிதனா என்று பிரமிப்பாக இருந்தது. சென்ற மாதம் ஒரு கூடுகையில் தத்துவ விளக்கங்கள் குறித்து உரையாற்றிய அஜிதன் அதுவரை நான் பார்த்திருந்த, நான் கொஞ்சமாக வேணும் அறிந்திருந்த அஜிதனே இல்லை.

அஜிதன் அன்று பேசியவை அனைத்தும் மிகப்பெரிய விஷயங்கள் என்பது மட்டும்தான் எனக்கு புரிந்தது. அவற்றை பேசுகையில் அஜிதனின் உடல்மொழியும் ஆச்சர்யமூட்டியது மிக மிக சாதாரணமாக, எளிய அன்றாட நிகழ்வுகளை நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பது போல தான் அத்தனை தீவிரமான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தான்.

இளைஞர்கள் முக்கியமான, தீவிரமான விஷயங்களை பேசிக் கேட்கையில் நான் பிறரைக் காட்டிலும் மிக அதிகம் மகிழ்ச்சியடைவேன். ஏனெனில் ஏழாயிரம் இளைஞர்கள் படிக்கும் கல்லூரியில் பல வருடங்களாக பணியிலிருக்கிறேன். தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரிந்துகொண்டு கொஞ்சம் அதிகப்படியான அறிவுடன் இருப்பவர்கள் என்றுகூட விரல்விட்டு எண்ணிச் சொல்லக் கூடிய அளவில்தான் சிலர் இருக்கிறார்கள். எனவே அஜிதனை போன்ற அரிதினும் அரிய இளைஞர்கள் எனக்களிக்கும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளப்பரியது.

ஆனால் மைத்ரியில் கண்ட அஜிதன் முற்றிலும் வேறு. ஹரனின் பேருந்து பயணத்தின் தொடக்கத்திலேயே அஜிதன் என்னும் அரிய  படைப்பாளியை கண்டுகொள்ள முடிந்தது.  ஹரனின் பயணம் வாசிப்பவர்களின் பயணமும் ஆகிவிடுகிறது.

உடல் சூட்டை இருக்கைக்கு அளித்து அதை வாழ்விடமாக்க வேண்டும் என்னும் வரியில் இது நான் முன்பு அறிந்திருந்த அஜிதனல்ல என்று மீண்டும் எனக்கே சொல்லிக்கொண்டேன் .

மிக புதிய நிலப்பரப்பில் நாவல் விரிவதால் அக்கதையுடன் இன்னும் அணுக்கமாகி கதையையும் நிலப்பரப்பையும் சேர்ந்தே ரசிக்கவும் முடிந்தது அது மேலும் சுவாரஸ்யம் ஆக்கிவிடுகிறது வாசிப்பனுபவத்தை.

முழுவதும் வாசித்து முடித்த பின்னர் சில நாட்கள்தான் அந்த பயணமும் அக்கதை நிகழ்வதும் என்பதை நம்ப முடியவில்லை. பல நூறு வருடங்களுக்கான பயணம் அது. கதையை முழுக்க சொல்லி இன்னும் வாசிக்காதவர்களுக்கு வாசிப்பின்பத்தை குலைக்கவிரும்பவில்லை.

ஹரனை பசுமைப் பெருக்கும் பெண்மைப்பெருக்கும் தொடர்ந்து சூழ்ந்து வந்து கொண்டிருக்கிறது. கெளரியும், அன்னையும், ரிது பெரியம்மாவும், சிவப்பு ஆடை அணிந்த சிறுமிகளும், மணப்பெண்ணும் மைத்ரியும் இன்னும் பலருமாக.

உணவை, கட்டிடங்களை, மனிதர்களை, நிலப்பரப்பை, வசந்த காலத்தை, காதலை, உறவுகளை, பிரிவை, வலியை என்று  ஹரன் வாழ்வை முழுக்க அறிந்துகொள்ளும் அந்த அழகிய அரிய பயணத்தில் அஜிதன் என்னையும் கைப்பிடித்தும் கச்சரில் ஏற்றியும், பேருந்திலும், ஜீப்பிலும் கூட்டி செல்கிறான்.

பைன் மரங்களின் ஊசியிலை சருகுகளும், கோன்களும் நிறைந்த அந்த பாதை வழியே சோனியாவின் கடிவாளக் கயிற்றை பிடித்துகொண்டு ஹரனையும் அவன் மொத்த வாழ்வையும் அத்தனை அழகாக அவள் எடுத்துச் செல்கிறாள்.  மறக்க முடியாத பயணம் எனக்கும்.

அன்னையை நினைத்துக் கொள்கையில் ’’தூய அன்பென்னும் திரைக்கு அப்பால் தன்னை மறைத்து வைத்திருந்தார்’’ என்னும் வரிகள்  கண்ணீர் விடச் செய்தன.

குழந்தை போன்ற உடல் கொண்ட தெய்வ வடிவங்களை,  காதில் கேட்கும் இசையை, புதிய உணவை, கண்கூசும் பின்னொளியில்  நிழலுருவாக  தெரியும் கோவிலை சொல்லுகையிலும். இளமைக்காலத்தை சொல்லிக்கொண்டிருக்கும் மைத்ரியை  மேய்ச்சல் நிலமகள் என்கையிலும் அஜிதன் என்னும் திரைவிலகி  ஜெ தெரிந்தார்.

மைத்ரி முழுவதுமே எனக்கு தனித்த பிரியத்தை உண்டாக்கி இருக்கும் படைப்பு தான் எனினும் ஹரன் நினைப்பதுபோல் ’’ஒளியாலான, மனதில் என்றும் தங்கிவிடும் தருணமாக’’ எனக்கிருப்பது இருவரும் திரும்பும் வழியில் அந்த உன்னத  பின்மதியவேளையில் பொன்மழையின் ஆயிரம் ஊசிகள் புல்வெளியில் பெய்திறங்குவதை பார்த்தபடி குளிரில் இனிப்பை கொரித்துக்கொண்டு  நெருங்கி அவர்கள் இருவரும் அமர்ந்திருக்கும்  அந்த சித்திரம்தான்  கூடவே .ஃபெர்ன்களின் அந்த சுருண்ட இளம் குருத்திலை உணவும், அந்த புக்யால் புல்வெளியும்.

மைத்ரிக்கு ஹரன் கஸ்தூரி மிருகு, மாயப்பொன்மான். அவனுக்கு அவள் வனதேவதை ஜீதுவைப்போல  அந்த 3 நாட்கள் ஹரனுக்கும் பலநூறு வருட வாழ்வு. அந்த நினைவுகளுடன் அந்த பெரு வலியுடன் ஹரன் வாழ்ந்துவிடுவான். அவனுக்கான மீதமிருக்கும் வாழ்வை என்றும், மைத்ரி மற்றுமொரு ரிது என்றும் எனக்கே நான் சொல்லிக்கொள்கிறேன்.

கோட் பைக்குள் ஹரனறியாமல் மைத்ரி வைத்திருந்த  வாடியிருந்தும் நிறம் இழக்காமலிருந்த  புல்வெளியின் பலவண்ண மலர்கள் மைத்ரி அவனுக்கு மீட்டுக்கொடுத்த கெளரி 

இந்த வாசிப்பனுபவம் எனக்கும் ஒரு பெருங்கனவுதான். எழில் நிறைந்த கனவு, என்றென்றும் மனதில் எஞ்சி நிற்கும் கனவு.

அன்பும் ஆசிகளும் அஜிதனுக்கு

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே –

குருகு இதழில் வெளியான கட்டுரை

பல வருடங்களுக்கு முன்பு பாரதியார் பல்கலைக்கழகத்தின் மாபெரும் நூலகத்தில்  தியடோர் பாஸ்கரன் அவர்களின் ஆங்கிலக் கட்டுரை ஒன்றை முதன் முதலில் வாசித்தேன். கட்டுரையின் உள்ளடக்கம் இப்போது நினைவிலில்லை, திரைப்பட வரலாறு குறித்ததென்று தேசலாக நினைவு. ஆனால் அவரது அபாரமான மொழிநடையும் உன்னத ஆங்கிலமும் மனதில் பதிந்துவிட்டது.

ஒரு குக்கிராமத்திலிருந்து வந்து பல்கலைக்கழகத்தில் நகரத்து மாணவர்களுக்கிடையில் கண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோல ஆங்கிலம்  பேசத் தெரியாமல் திணறிக்கொண்டிருந்த காலம் அது. ஆங்கிலம் கற்கவென்றே ஆங்கிலக் கட்டுரைகளையும் நாளிதழ்களையும் தேடி வாசிக்க துவங்கிருந்தேன். அதன்பிறகு அவரது கட்டுரைகளை தேடத் துவங்கினேன் அதிகம் ஆங்கிலமும் ஒரு சில தமிழ் கட்டுரைகளும் பிற்பாடு கிடைத்தன.  அவரது இருமொழிப் புலமை குறித்தான பிரமிப்பு அன்றிலிருந்து இன்று வரை  தொடர்கிறது. அதன்பிறகு முனைவர் பட்ட ஆய்வு, திருமணம் என்று எதையும் வாசிக்க நேரமில்லாத நீண்ட காலம் கடந்துவிட்டிருந்தது.

அவரது தமிழ் கட்டுரைகள் வெகுஜன ஊடகங்களில் அடிக்கடி வரத் தொடங்கிய காலத்தில் நான் கல்லூரியில் பணியாற்ற துவங்கியிருந்தேன். அச்சமயத்தில் அவர் தீவிரமாக தமிழில் பல துறைகள் குறித்து எழுதிக்கொண்டிருந்தார். இன்றைக்கு போல தரச்சான்றிதழ் அந்தஸ்திற்காக மெனக்கெட வேண்டிய காலம் இல்லாததால் வகுப்புகளுக்கான இடைவெளிகளில் அப்போது நூலகத்திற்கு செல்ல நேரம் இருந்தது.

தேடித் தேடி அவரது எழுத்துக்களை வாசிக்க துவங்கியிருந்தேன். ஒரு முறை  இந்து தமிழ் நாளிதழில்  சென்னையின் காணாமல் போகும் நீர் நிலைகளை குறித்து வெளியான அவரது மிகச் சிறப்பான ஒரு  கட்டுரையை குறித்து  அவருக்கு மின்னஞ்சல் செய்திருந்தேன். மின்னஞ்சல் முகவரியை தவறாக குறிப்பிட்டிருந்ததால் எனக்கே அது திரும்ப வந்து கொண்டிருந்தது. பின்னர் பொறுமையாக சரியாக அதை அவரது முகவரிக்கே forward செய்தேன். மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றதையும் முன்னர் அனுப்பியவற்றில் நான் ஓரெழுத்தை விட்டுவிட்டதால்தான் அவை திரும்பின என்பதையும் குறிப்பிட்டு பதில் அளித்திருந்தார்.

மிகச் சிறிய விஷயங்களிலும் கவனமும் கரிசனமும் கொண்டிருப்பவர் அவர் என்பதற்கான சான்று அதுவும். அத்தனை நுண்மையான பார்வை வாழ்வின் மீதும் சூழலின் மீதும் இருப்பதால்தான் அவரது எழுத்துக்கள் அத்தனை வலிமையாக  இருக்கிறது. இந்த நுண்மையான அவதானிப்பு வாழ்வின் எல்லா தளங்களிலுமே அவருக்கு இருக்கிறது. ஒரு புதிய நிலப்பரப்பில் தேநீர் அருந்த போகையிலும் கூட அவருக்கு அருகிலிருந்த மரத்தின் சலசலப்பை கவனிக்க முடிந்திருக்கிறது. அங்கிருந்த அரிய இனமான ஹுலக் வெள்ளைப் புருவக் குரங்கு எனப்படும் வாலில்லா குரங்கை கவனித்து அதை பதிவு செய்கிறார். சூழல் எழுத்தாளர்களுக்கு இருக்கவேண்டிய  மிக முக்கியமான இயல்பு அதுவென்பதை அவரிடமிருந்தே நாம் கற்றுக்கொள்கிறோம். 

அத்தோடு மட்டுமல்லாது  அந்த அரிய உயிரினம் அஞ்சல் தலையில் இடம்பெற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கிறார். அரசு சில காரணங்களால் அப்போது அக்கோரிக்கையை பரிசீலிக்கவில்லை என்றாலும் இருபது ஆண்டுகள் கழித்து, காட்டுயிர் பாதுகாப்பின் அவசியம் உண்டான பின்னர்  ஓர் அஞ்சல் தலையில் அக்குரங்கு இடம்பெற்றது. அவரது கண்டுபிடிப்புக்களை இயற்கையின் அத்யாவசியமான அம்சங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் அக்கறை அவருக்கு எப்போதும் இருக்கிறது.

வாலில்லா குரங்காகட்டும், அரிய ஆர்கிட் மலராகட்டும், கிளிகளாகட்டும், வாழ்வாதாரம் இழந்த இசை வெள்ளாளர்களாகட்டும் அனைத்து உயிர்களின் மீதும் அவர் கொண்டிருக்கும் கரிசனமே அவரது எழுத்துக்களில் முதன்மையாக தெரியும். கூடவே சரியில்லாத மொழி மாற்றத்துக்கும், குழப்பமான மொழிநடைக்கும் அவரது கண்டனங்களையும் முன்வைக்கிறார். அவரது கம்பீரமான முரட்டு மீசையும் புன்னகைக்கும் கண்களையும் போல சூழல் சார்ந்த பல கட்டுரைகளில் இருக்கும் கரிசனமும் கண்டிப்புமான இந்தக்கலவையும் இருக்கிறது.   

கொரோனா காலகட்டத்தில் மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் தியடோர் பாஸ்கரன் அவர்களின் இணைய வழி கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்து. அதன் பிறகு ஜெயமோகன் அவர்கள் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக அவருடன் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்திருந்தார். இரண்டிலும் அவர் மிக முக்கியமான சூழல் பாதுகாப்பு குறித்த உரையை வழங்கினார். தமிழக அளவில், இந்திய அளவில் என்று அவரது பிரபல்யத்தை சுருக்கிவிட முடியாது உலகளவில் அவர் ஒரு மிக முக்கியமான பல்துறை பேராளுமை என்பதை அக்கூடுகைகள் உணர்த்தின.

தியடோர் பாஸ்கரன் சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக தீவிரமாக இயங்கி வரும் துறைகளை கவனித்தாலே பெரும் பிரமிப்பு உண்டாகும். இந்திய திரைப்பட தணிக்கை, திரைப்பட வரலாறு, சூழலியல், காட்டுயிர் பேணல், திரைப்படம், இயற்கை, இந்திய அரசியல் என்று அனைத்துமே வேறுபட்டவை.  இப்போது சூழல் இலக்கியம், பசுமை இலக்கிய படைப்புக்கள் நிறைய இருக்கின்றன என்றாலும் தியடோர் பாஸ்கரன் அவர்களே தமிழ் சூழலிலக்கியத்தின் முன்னோடியும் பிதாமகரும் ஆவார். 

தியடோர் பாஸ்கரனின் தாத்தா தில்லைக்கண் ஒரு இந்து. இளமையிலேயே அவர் வீட்டை விட்டு ஓடிவந்து கரூரில் அலைந்து கொண்டிருக்கையில் ஒரு கிருஸ்துவ பாதிரியாரின் அரவணைப்பு கிடைத்திருக்கிறது. அவரது  பொறுப்பில் இருக்கையில் தான் அவர் கிருஸ்துவராக மதம் மாற்றப்பட்டார். தியடோர் பாஸ்கரனின் தாத்தா ஒரு தமிழறிஞரும் கூட. அவர் பல தமிழ் பாடல்கள் எழுதியிருக்கிறார். தனது 50-வது வயதில் அவற்றை வாசித்த தியடோர் பாஸ்கரன் தன்னை இம்மண்ணின் வேருடன் பிணைத்து வைத்திருப்பது தமிழ்தான், தன் முதன்மை அடையளமாக தமிழன் என்பதையே முன்வைப்பேன் என்கிறார்.

வேட்டையில் விருப்பம் கொண்டிருந்த அவரது தந்தை பிரபல வேட்டைக்காரரும் அமெரிக்க அதிபராக இருந்தவருமான தியடோர் ரூஸ்வெல்டின் பெயரை தனது மகனுக்கும் வைத்தார். தந்தையுடன் வேட்டைக்கு சென்ற நாளொன்றில் ஆற்றுப்பாறையில் தன்னை நிற்க வைத்துவிட்டு துப்பாக்கியுடன் சற்றுத்தொலைவில் அவரது தந்தை காத்திருக்கையில் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு உண்டாகி இருக்கிறது. தன்னை கழுத்திலும் துப்பாக்கியை நீர்மட்டதுக்கு மேலும் வைத்துக்கொண்டு தன் தந்தை துணிச்சலாக ஆற்றைக்கடந்ததை தியடோர் பாஸ்கரன் நேர்காணலொன்றில் பகிர்ந்திருந்தார். வேட்டைக்காரரான தியடோர் ரூஸ்வெல்டின் பெயரை மகனுக்கு அவர் வைத்திருந்தால் என்னவோ அவரைப் போலவே இவரும் ஒரு இயற்கை விரும்பி ஆகிவிட்டிருக்கிறார். ஆசிரியர்களான தனது பெற்றோர்களை அந்த நேர்காணலில் நினைவுகூறும் தியடோர் பாஸ்கரன் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள கடுமையாக உழைத்த அவர்களைப்போல தான் எதிர்காலத்தில் அப்படி தேவைகளுக்காக உழைத்து வாழ்வை இழந்து விடக்கூடாது என்று  முடிவு செய்திருந்ததை பகிர்ந்துகொள்கிறார்.

சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் வரலாறு படிக்கையில் ஸ்காட்லாந்தை சேர்ந்த அவரது கணிதப் பேராசிரியர் கிப்பிள் கல்லூரியை சுற்றி இருக்கும் புதர்க்காட்டில் பறவைகளை காணச்செல்கையில் தியடோர் பாஸ்கரனும் உடன் செல்வது வழக்கம். அவரோடு பறவைகளை காத்திருந்து கண்டது, அவற்றின் பல வகைகளை இனம் கண்டுகொண்டது, அவற்றின் வாழிடத்தை அறிந்து கொண்டதுமாக அந்த அனுபவங்களே தன்னை இயற்கையுடன் இணைத்த புள்ளி என்கிறார் தியடோர் பாஸ்கரன். சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் அன்றிலிருந்தே விடுதி மாணவர்களுக்கு தனித்தனி அறை என்பதால்  அவருக்கு வாசிக்கவும் எழுதவும் நல்ல சுதந்திரமும் தனிமையும் அங்கு கிடைத்து.

அவரது கல்லூரிக்காலத்தில் ஆங்கிலப் புலமை பெற்றவராக இருந்திருக்கிறார். அவரது கிராமத்திற்கு  ஜான் என்னும் பிரிட்டிஷ் இளைஞர் வந்தபோது, அவருடன் ஆங்கிலம் பேச வேறுயாரும் இல்லாததால் தியடோர் பாஸ்கரன் அவருடன் பேசிப் பழகி நெருக்கமானார். ஜான் தனது சேகரிப்பில் இருந்த ஷேக்ஸ்பியரின் பல படைப்புக்களின் ஒலிநாடாக்களை இவருக்களித்திருக்கிறார். அவற்றை ஆழ்ந்து கவனித்து கேட்ட தியடோர் பாஸ்கரனுக்கு இலக்கியமும் நாடகமும் இசையும் அறிமுகமானது. மேலும்  ஜான் அளித்த பெர்னாட்ஷா, ரஸ்ஸல் ஆகியோரின் நூல்களும் அவரின் ஆளுமையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டாக்கின. அந்த வாசிப்பனுபவம் அவரது வாழ்வு குறித்தான அடிப்படையான தேடல்களுக்கு விடையளிக்கவில்லை எனினும் பல புதிய கதவுகள் அவருக்கு அப்போது திறந்தன. அச்சமயத்தில் இறையுணர்விலிருந்து தியடோர் பெருமளவில் விலகிவிட்டிருந்தார். அந்த கிராமத்தில் இருந்து பெளத்தம் குறித்த நூலை எழுதிக் கொண்டிருந்த ஜான் இப்போதும் நலமாக இருக்கிறார் என்று 2021-ல் தியடோர் பாஸ்கரன் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்

இவரது பணிச்சூழல்களும் மிக வித்தியாசமானவை. வரலாறு படித்து பட்டம் வாங்கிய இவர் தமிழக அரசு ஆவணக் காப்பகத்தில் ஆய்வாளராக பணி புரிந்தார். அப்போது பல ரகசிய, முக்கிய ஆவணங்கள் அவர் பொறுப்பில் அளிக்கப்பட்டிருந்தது. அவர் அவற்றை சரியாக படித்து, தொகுத்து எழுத வேண்டியிருந்தது. ராமநாதபுரம் திருநெல்வேலி மாவட்டங்கள் தொடர்புடையவைகளும், அங்கு நடந்த விடுதலைப் போராட்டம் சிதம்பரம் பிள்ளை, பாரதியார் ஆகியோரை குறித்தவைகள், ஆஷ்துரை கொலை வழக்கு போன்ற முக்கிய ஆவணங்களை எல்லாம் தியடோர் பாஸ்கரன் தொகுத்து எழுதினார். இரு வருட ஆவணக்காப்பக பணி முக்கிய ஆவணங்களை கையாள்வது தொகுத்தெழுதுவது ஆகியவற்றில் அவருக்கு நல்ல அனுபவத்தை அளித்தது. அந்த அனுபவங்கள் பின்னாட்களில் வரலாற்று பெரும்படைப்புக்களை எழுத அவருக்கு உதவியாக இருந்தன.

பல வருடங்களுக்கு முன்னர் திருச்சியில் (1967) அவர் இருக்கையில் அங்கிருக்கும் ஒரு ஏரிக்கு அரிய வகை பறவையினம் இமாலயத்திலிருந்து வரவிருப்பதாக ஒரு தகவல் கிடைக்கிறது. உடனே அவர் அதிகாலையில் புறப்பட்டு அங்கு செல்கிறார். அங்கிருந்த காவலாளி நடராஜனும் இவரும் அமர்ந்து அங்கு வரும் பறவைகளை அடையாளம் கண்டுகொண்டிருந்திருக்கிறார்கள். சற்று நேரத்தில் தொலைவிலிருந்து பறவை கூட்டமொன்றின் முழக்கம் கேட்டிருக்கிறது. அவர்கள் முன்னே பனித்திரையை கிழித்துக்கொண்டு வரித்தலை வாத்துகள் (Bar-headed Goose)  சாம்பல் நிற சிறகுகளை விரித்தபடி மெதுவாக ஏரியில் வந்து இறங்கி இருக்கின்றன. தியடோர் பாஸ்கரனுக்கு அது ஒரு மாயக்காட்சியை போல பரவசமளிக்கிறது. வெகுநேரம் அவற்றை பார்த்துவிட்டு திரும்பிய அவர்  ஏரிகளில் இனப்பெருக்கம் செய்து தெற்காசியாவிற்கு வலசை போகும் அப்பறவைகளை குறித்து வன அலுவலக ஆவணங்களில் தேடி வாசிக்கிறார். பின்னர் முதன் முதலில் 1967-ல் ஹிந்து பத்திரிகைக்கு அப்பறவையை குறித்த கட்டுரையை எழுதி அனுப்புகிறார். சில நாட்களிலேயே அக்கட்டுரை பிரசுரமானது. இக்கட்டுரையுடன் துவங்கி தொடர்ந்து ஹிந்து நாளிதழில் சூழல் இயற்கை காட்டுயிர் பறவைகள் என நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கிறார் தியடோர் பாஸ்கரன்.

மற்றொரு சமயம் அவரது காதல் மனைவி திலகாவுடன் குஜராத்தில்  ஒரு பயணம் மேற்கொண்டிருக்கையில் வழியில் சாரஸ் பறவை இணையொன்றின் அழகிய நடனத்தை பார்த்து அதை புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். குஜராத்தில் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்ளும் இளம் தம்பதிகளை வாழ்நாளில் ஒரே இணையுடன் வாழ்ந்து மடியும் காதல்பறவைகளான சாரஸ் இணையை காண பெரியவர்கள் அழைத்து செல்லும் வழக்கம் இருந்திருக்கிறது. இந்த  பறவைகளின் நினைவாகத்தான்  சூழலியல் மற்றும் காட்டுயிர் பற்றி தான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பை சாரஸின் நடனம் (The Dance of the Sarus) என்னும் பெயரில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகப் பதிப்பகத்தாரால்  வெளியிட்டார்.

குடிமைப் பணியில் தேர்ச்சி பெற்று இந்திய தபால் துறையில் சேர்ந்தார். தபால் துறை பணி அவருக்கு  மிகுந்த நிறைவை அளித்தது. அக்காலகட்டத்தில் பணி நிமித்தம் குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு மஹராஷ்ட்ரா, மேகாலயா, டெல்லி என தொடர்ந்து பயணித்தது அங்கிருந்து பலதரப்பட்ட மக்களின் வாழ்வின் இயங்கியலையும் இந்தியாவை குறித்த அறிதலையும் அவருக்கு அளித்தது. அச்சமயத்தில் ராஜீவ்காந்தி வாரம் 6 நாட்கள் வேலை என்பதை 5 வேலைநாட்களாக மாற்றினார். வார இறுதியில் முழுக்க இரண்டு நாட்கள் அவருக்கு விரும்பியவற்றை செய்யவும் பயணிக்கவும் கிடைத்தபோது மேலும் படைப்பாற்றலுடன் செயல்பட்டார். தபால் சேவை ஆட்கள் அதிகம் தேவைப்படும் ஒரு இலாகா, எனவே அப்பணியில் இருக்கையில் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்களுடன் தொடர்பு கொண்டிருந்தது, பல கிராமங்களுக்கு பயணித்தும் கிடைத்த நேரங்களில் எழுதியும் வாசித்தும் தனக்குள்ளிருக்கும் ஆளுமையை வெளிக்கொணர முடிந்தது.

தியடோர் பாஸ்கரன் வங்காள இயக்குநர் சித்தானந்த தாஸின் டான்ஸ் ஆஃப் சிவா என்ற ஆவணப்படத்தை குறித்து சிவ தாண்டவம் என்னும் கட்டுரையை கசடதபற இதழில் வெளியிட்டார். அக்கட்டுரைக்கு பிறகே அமெரிக்க வரலாற்று ஆய்வாளரான சார்லஸ் ஏ. ரையர்சன் அவரை தமிழ் திரைப்பட ஆய்வில் ஈடுபடும்படி ஊக்குவித்தார். இரண்டாண்டுகள் பணி விடுப்பு பெற்றுக்கொண்டு திரைப்பட பகுப்பாய்வு வகுப்பில் சேர்ந்து பல திரைத்துறை குறித்த பல விஷயங்களை அப்போது கற்றுக்கொண்டார். அங்கு அவரது ஆசிரியராயிருந்த  பி.கே. நாயர் தியடோர் பாஸ்கரனை புனே தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தின் மேலாண்மைக் குழுவில்  உறுப்பினராக்கினார். அங்கு இரண்டாண்டுகள் பல பழைய திரைப்படங்களை பார்த்த பாஸ்கரன் மீண்டும் தபால் பணியில் சேர்ந்தபோது கல்கத்தாவிற்கு பணிமாறுதல் பெற்றார். கல்கத்தாவிலும் திரைப்பட சங்கத்தில் உறுப்பினரானார்.

இந்தியத் திரைப்படத் தணிக்கை முறை பற்றி அவர் எழுதிய கட்டுரையை 1977-ல் நடைபெற்ற இந்திய வரலாற்று பேராயத்தில் வாசிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இக்கட்டுரையையும் மேலும் சில கட்டுரைகள் சேர்ந்த தொகுப்பு  1981-ல் தி மெசேஜ் பியரர்ஸ் (The Message Bearers) என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது. தேசிய இயக்கத்தில் தமிழ்த் திரைப்பட மற்றும் நாடகத் துறையினரின் பங்கினை விவரிக்கும் பல அரிய தரவுகளை கொண்ட  இந்த நூல் தமிழ்த் திரைப்பட வரலாற்றுத் துறையில் மிக அரியதும் மிக மிக முக்கியமானதும் கூட. தமிழ்த் திரைப்படத் துறையைப் பற்றிய அறிமுகம் செய்த அவருடைய அடுத்த  நூல், தி ஐ ஆஃப் தி செர்பன்ட் (The Eye of the Serpent) சிறந்த திரைப்படத்துறை புத்தகத்திற்கான தங்கத் தாமரை பெற்றது. தமிழ் சினிமா வரலாற்றை மிகச்சரியான வடிவத்தில் அடுத்த தலைமுறையினர் முன்னர் கொண்டு வந்து சேர்த்தவர் தியடோர் பாஸ்கரன். ஆங்கிலத்திலும் தமிழிலும் தமிழ்த் திரைப்பட வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பல முக்கியமான  புத்தகங்கள் இவர் எழுதியுள்ளார்.

தியடோர் பாஸ்கரன் ஷில்லாங்கில் இருக்கையில் முரசொலி மாறன் ஒரு மாலை அவரை சந்தித்தபோது பொதுவாக சினிமா குறித்து பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அந்த உரையாடலில் தியடோர் பாஸ்கரன் அவர்களின் திரைப்படங்களை குறித்த ஆழமான அறிவை அடையாளம் கண்டுகொண்ட முரசொலி மாறன் அவரது வார இதழில் சினிமாவை குறித்து எழுதும்படி கேட்டுக்கொண்டதோல்லாமல் ஒவ்வொரு தொடருக்கும் 1000 ரூபாய்கள் சன்மானம் அளிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அப்படித்தான் சினிமா குறித்து இவர் எழுத துவங்கினார்.

பணி நிமித்தம் மேகாலயாவிலிருந்த போது பங்களாதேஷ் விடுதலைப் போர்ச்சூழலில் தியடோர் பாஸ்கரன் தபால் தந்தி துறையையும் பாதுகாப்புத் துறையையும் இணைக்கும் சிறப்பு அதிகாரியாக பொறுப்பேற்றிருந்தார்.  அவருக்கு அப்போது 45 வயது. அப்போது அகர்தலாவில் முன்னணி படைப்பிரிவில் பணி புரிந்தார். அவர்களது  குடியிருப்புகளினருகே தேவைப்பட்டால் பயன்படுத்தி கொள்ள பதுங்கு குழிகள்  அமைக்கப்பட்டிருந்தன. எந்த சூழலிலும் தியடோர் பாஸ்கரன்  படைப்பிரிவுகளின் பல விதங்கள், அவை இயங்கும் விதம் ஆகியவற்றை கற்று கொண்டார் 

தேசிய டிஃபென்ஸ் கல்லூரியில் ஒரு வருட படிப்பை முடித்த அவருக்கு அந்த அமைச்சகத்தின் மூலம் பல உலக நாடுகளுக்கு பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜெர்மனி, கென்யா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்திய அரசின் விருந்தாளியாக சென்று அங்கும் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டு நாட்டை குறித்து அறிந்து கொண்டார். தபால் துறையில் படிப்படியாக உயர்ந்து தமிழ் நாட்டின் தலைமை தபால் அதிகாரியாக ஓய்வு பெற்றார். 

பணி ஓய்வு பெற்ற சில மாதங்களில் ரோஜா முத்தையா நூலகத்தில் இயக்குநராக பணிபுரியும் வாய்ப்பு அவருக்கு அளிக்கப்பட்டது.  மூன்று வருடங்கள் அந்த பணியில் இருந்தவர் மீண்டும் தனது  விருப்பத்திற்குகந்த இயற்கையை பேணுதல்,  காட்டுயிர்களை குறித்த கட்டுரைகள் எழுதுதல் ஆகியவற்றை தொடர்ந்தார். தற்பொழுது அந்த நூலகத்தின் அறங்காவலர் குழுவில் உறுப்பினராக உள்ள அவர் தனது நூல் சேகரிப்பு முழுவதையும் அந்த நூலகத்துக்கே அளித்துவிட்டார்.  

பாஸ்கரன் புகழ்பெற்ற விலங்கியலாளரான உல்லாஸ் காரந்தின் தி வே ஆஃப் தி டைகர் (The way of the Tiger) என்ற நூலை ”கானுறை வேங்கை” (2006) என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். சூழல் குறித்த அறிதலை அளிப்பவற்றுள் மிக முக்கியமான நூல் இது. தியடோர் பாஸ்கரன் அவர்களின் அனைத்து படைப்புகளும் இன்றியமையாதவை எனினும் சூழல் முக்கியத்துவம் கொண்ட ‘சோலை என்னும் வாழிடம், தாமரை பூத்த தடாகம், இன்னும் பிறக்காத தலைமுறைக்காக,வானில் பறக்கும் புள்ளெல்லாம், கானுறை வேங்கை, மழைக் காலமும் குயில் ஓசையும்’ ஆகியவை குறிப்பிடத்தக்க படைப்புகள்.

அவரது படைப்புகளில் தரவுகள் மிக துல்லியமாக இருக்கும் புள்ளிவிவரங்கள், பெயர்கள், படங்கள் என்று அனைத்தும் மிகச் சரியாக அமைந்திருக்கும். கச்சிதமான வடிவமைப்பும், ஒழுங்கும் கொண்டிருக்கும் கட்டுரைகள் மிக சுவாரஸ்யமாக துவக்கி ஒரு சொல்லோ ஒரு வார்த்தையோ தேவையற்று  இடம்பெறாமல் உருவாகியிருக்கும். பசுமை இலக்கியத்தில் கட்டுரைகளை எழுதும் பயிற்சிகளுக்கு முன்னுதாரணமாக எக்காலத்திலும் சுட்டிக்காட்டப்படும் தகுதி கொண்டவை தியடோர் பாஸ்கரன் அவர்களின் அனைத்து கட்டுரைகளும். 

உயிர்மை இதழில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தியடோர் பாஸ்கரன் அவர்களின் சூழல் குறித்த கட்டுரைகள் வெளிவந்தன. ஒரு சிற்றிதழில் இத்தனை ஆண்டுகாலம் தொடர்ச்சியாக ஒருவரின் கட்டுரைகள் வருவதிலிருந்தே அவற்றின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள முடியும். அக்கட்டுரைகளின் தொகுப்பே ’கையிலிருக்கும் பூமி’. சில கட்டுரைகளை கவித்துவமாக துவங்கப்பட்டிருக்கும். கிளிகளை பற்றிய  ஒரு  கட்டுரை இப்படி துவங்குகிறது: ”நீலவானப் பின்புலத்தில் பனித்திவலைகள் மிதந்து வருவதைப் போன்ற தோற்றம். இருநோக்கியில் பார்த்தபோது அது வெள்ளை நிறக்கிளிகளின் திரள் என்பது புலப்பட்டது”. 

நீர்நாய்களுக்காக ஆளியாறு அணையருகே காத்திருப்பது, டாப்ஸ்லிப்பில் புதைக்கப்பட்ட ’ஹியூகோ வுட்’ உயிலை தேடி செல்வது, ஒரு  புதிய கிராமத்தில் ஓநாய்களை காண இரவெல்லாம் கயிற்றுக்கட்டிலில் டார்ச் அடித்து பார்த்துக்கொண்டு காத்திருப்பது என்று இயற்கை குறித்த பேரார்வத்தினால் அவர் மேற்கொண்ட பயணங்கள் அனைத்தும் ஆர்வமூட்டுபவை. ஒநாய்களை பார்த்த அனுபவத்தை சொல்லுகையில்  ”அவை உணவின்றி மெலிந்திருக்கும் அல்சேஷன் நாய்களைப் போன்ற தோற்றத்துடன்” இருந்ததாக குறிப்பிடுகிறார். இறைச்சிக்காகவும் தோலுக்காகவும் நோய்களை குணமாக்கும் மருந்து எனும் நம்பிகைக்காகவும் கொல்லப்படும் விலங்குகள் குறித்த வருத்தமும் கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆட்கொல்லி புலியை குறித்த பதிவில் அறம் எனப்படுவது குறித்தும், இசை வெள்ளாளர்களின் வாழ்வாதாரம் தேவதாசி ஒழிப்பு சட்டத்தினால் பாதிக்கப்படுவது குறித்துமான தியடோர் பாஸ்கரனின் கருத்துக்கள் கரிசனமன்றி வேறில்லை. ஒரு கட்டுரையில் தமிழ் சினிமாவில் இஸ்லாமியர்களின் சித்தரிப்பை குறித்த வருத்தத்தை முன்வைக்கிறார். ஓவியக்கலை போன்ற தொன்மையான அழகியல் பாரம்பரியம் அழிந்து போவதை குறித்து கவலைப்படுகிறார்.

சூழியல் தளத்தில் இவர் உருவாக்கிய பல புதிய தமிழ்ச்சொற்கள் தற்போது புழக்கத்தில் இருக்கிறது. மேலும் பல புதிய சொற்களின் தேவை இருக்கிறதென்றும் அவை உருவாக்காப்பட்டால்தான் மொழி வலுப்பெறும் என்று கருதுகிறார். இவர் உருவாக்கும் மூலச்சொற்கள், தமிழ் வழங்குபெயர்கள், சிறந்த மொழியாக்கங்கள் எல்லாம் தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கியமானவை. ஒரு உரையில் ’தேன்சிட்டுவை’ என்கிறார் நாம் ’தேன்சிட்டை’ என்பது தவறென்று அவர் சரியாக உச்சரிக்கையில் தான் தெரிகிறது. இயற்கையை எழுதுபவர்கள் ஒருபோதும் அரசியலை  தவிர்க்கமுடியாது, எனினும் இவரது கட்டுரைகள் அறிவியல் பூர்வமானவை மட்டுமல்ல அனுபவபூர்வமானவைகளும் கூட. 

மொழியாக்க கட்டுரைகளின் தரம் குறித்து சொல்லுகையில்: ”இயற்கை சார்ந்த நூல் ஒன்றை மொழிபெயர்க்கத் துணிபவருக்குப் புறச்சூழல், மரங்கள், காட்டுயிர் ஆகியவை பற்றிய பட்டறிவு அடிப்படை அளவிலாவது இருக்க வேண்டும். அது மட்டுமல்ல இயற்கை சார்ந்த கருதுகோள்களையும் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். இவற்றைப் பற்றி ஒன்றும் தெரியாமல் அத்துறை சார்ந்த நூல்களில் கைவைக்கக் கூடாது.” என்கிறார்.

சங்க இலக்கிய தாவரங்கள், விலங்குகள் என்று பலர் தங்களது வலைப்பக்கத்திலும் முகநூல் பக்கங்களிலும் எழுதுகின்றனர் அவற்றில் 90 சதவீதம் எந்த கவனமும், உயிரினங்கள் குறித்த அடிப்படை அறிவும் இல்லாமல் எழுதப்படுபவை. பலர் முருக்க மரம் என்பதற்கு கல்யாண முருங்கையின் புகைப்படத்தை பலாச மரத்திற்கு பதிலாக  வைத்திருக்கிறார்கள். கஞ்சக்கொல்லை என்னும் துளசி வகை கஞ்சாச்செடி என்று சொல்லப்பட்டிருக்கிறது பல வலைப்பக்கங்களில். முக்கியமான சூழல் சார்ந்த விஷயத்தை  பிறருக்கு தெரிவிக்கையில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச அக்கறையும் கவனமும் இன்றி எழுதப்படும் கட்டுரைகள் மலிந்து கிடக்கும் இச்சூழலில் தியடோர் பாஸ்கரன் அவர்களின் கருத்துக்களும், கட்டுரைகளும் உரைகளும் நூல்களும் மிக முக்கியமானவை. அவரை போல ஆயிரக்கணக்கான மைல் பயணம் செய்வது, நூற்றுக்கணக்கான நூல்களை வாசிப்பது, பல்துறை ஆளுமைகளுடன் நட்பு கொள்வதெல்லாம் செய்ய முடியாவிட்டாலும், அவரது எழுத்துக்களை தொடர்ந்து வாசித்தாலே இதுபோன்ற பிழைகளை தவிர்க்கலாம். 

தியடோர் பாஸ்கரன் அவரது சகோதரரின் மறைவின் போதும் மகளின் காதல் திருமணத்தின் போது தேவாலயங்களும் மதகுருக்களும் காண்பித்த மற்றொரு முகத்தை கண்டு வருந்தினார். அப்போது ஜே. கிருஷ்ணமுர்த்தியின் எழுத்துக்களும் அறிமுகமானதால் தான் அதுவரை சார்ந்திருந்த மதத்திலிருந்து தன்னை விலக்கிக்கொண்டார். அதன் பிறகு ’’இந்தியாவில் ஒரு கிறிஸ்தவனாக இருப்பது என்பதென்ன’’ என்பதை குறித்த தொடர் கட்டுரைகள் எழுதினார். ஒரு பல்கலைக்கழகம் அந்த கட்டுரைகளுக்காக  அவருக்கு DD எனப்படும் doctrine of divinity என்னும் பட்டம் அளித்து சிறப்பித்தது.  

மா. கிருஷ்ணன், ஜே. கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் தியடோர் பாஸ்கரனின் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்தியவர் சுவாமி என்னும் ஜென் குரு ஒருவர். இப்போது கொடைக்கானல் மடமொன்றில் இருக்கும் சுவாமியின் பல பயிற்சி வகுப்புகளில் தியடோர் பாஸ்கரன் கலந்து கொண்டிருக்கிறார். ஜென் மதம் தன் அடிப்படை கேள்விகளுக்கு விடை அளிக்கவில்லை, தன் வாழ்க்கையை பெருமளவில் மாற்றவும் இல்லை எனினும் வாழ்க்கை குறித்த கண்ணோட்டத்தை பெருமளவு மாற்றிவிட்டிருக்கிறது என்கிறார் இவர்.

50 வருடங்களாக கூரிய சூழல் எழுத்துக்களை எழுதி வரும் தியடோர் அவர்கள் சமீபத்திய ஒரு மேடை உரையில் வாசகர்கள் ஆர்வமுடன் வாசிப்பதே தன்னை மேலும் மேலும் எழுத தூண்டுகிறது என்கிறார் மிகுந்த பணிவுடன். அவரது பணி, பணிச்சூழல், பயணங்கள், அவர் எழுத்துக்களுக்கென அளிக்கும் கடும் உழைப்பு, அவரது தோழமைகள், அவரது வாசிப்பு, அவரது இத்தனை ஆண்டு கால அயராத எழுத்துப்பணி உள்ளிட பல பணிகள் ஒவ்வொன்றுமே சாதனைகள்தான். அவரது எழுத்துக்கள் வழியே நாம் காண்பது இயற்கையின் தரிசனத்தை தான்.

தியடோர் பாஸ்கரன் உலகக் காட்டுயிர் நிதியத்தின் இந்தியக் கிளையின் (WWF – India) அறங்காவலர் குழுவில் இடம் பெற்றிருந்த்தார். பெங்களூரு உயர் கல்விக்கான தேசிய ஆய்வுக் கழகத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.  தமிழ்நாட்டில் மதிப்புறு காட்டுயிர் காவலராக பணியாற்றியிருக்கும் தியடோர் பாஸ்கரன். இயற்கைக்கான உலக நிதியகத்தில் (WWF-India) அறங்காவலராகவும் இருந்தார். மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் தமிழ் சினிமாவை போதித்திருக்கிறார். இந்தியாவில், சர்வதேச கல்வி நிலையங்களில் முக்கிய தலைப்புக்களில் உரையாற்றியிருக்கிறார். இந்திய  தேசியத் திரைப்பட விருதுகள் தேர்வுக் குழுவில் நடுவராகவும் இருந்தார். 

தற்போது பெங்களூருவின் புறநகர் பகுதியில் இயற்கையின் அமைதியில் எப்போதும் பறவைகளின் குரல் கேட்டுக் கொண்டிருக்கும்  ஒரு வீட்டில் வசிக்கிறார். அன்று  ஏரியில், அமைதியான அதிகாலையில் இமாலயத்தில் இருந்து ஒரு தெய்வம் போல வந்து தியடோர் பாஸ்கரன் முன்பாக தரிசனம் தந்து அவர் அயராது எழுத காரணமாயிருந்த அந்த பறவைகளையும், அவற்றிற்கு பிறந்த, இனி பிறக்கப் போகும் பல தலைமுறைகளையும்  பணிந்து வணங்குகிறேன்.

என் பெயர் லோகமாதேவியல்ல, சரண்-நிறைவு

2005-ல் ஒரு வயதான தருணையும் சரணையும் அழைத்துக்கொண்டு விஜியின் திருமணத்தின் பொருட்டு ஒரேயடியாக இந்தியா வந்த பின்னர் அவனை பள்ளியில் சேர்த்தோம். பள்ளி அவனுக்கு எட்டிக்காயாகவே இருந்தது. பள்ளியில் அவன் அலறும் குரல் எனக்கு அடுத்த தெருவை தாண்டும் வரை கேட்கும், நானும் கண்ணீருடன் வீடு வருவேன்.அவனுடன் சேர்ந்து புத்தகங்களுக்கு மணிக்கணக்காக அட்டை போடுவது பளளி பெற்றோர் ஆசிரிய கூட்டங்களுக்கு  கல்லூரியில் அனுமதி வாங்கி அடித்து பிடித்து போவதுமாக  சரணுடன் நெருக்கமாக இருந்த நாட்களவை

 இந்த வேடசெந்தூர் வீட்டை கட்டிக் கொண்டிருக்கையில் கல்லூரி முடிந்து பேருந்தில் மாலை மூவருமாக பேருந்தில் பொள்ளாச்சியில் இருந்து வேடசெந்தூர் வந்துவிட்டு பின்னர் திரும்ப  இரவு பொள்ளாச்சி வருவோம். பொள்ளாச்சி வீட்டில் இருக்கவே முடியாதபடி நெருக்கடிகள் அளித்தவர்களுக்கு நான் எப்போதும் நன்றி சொல்லுவேன் அத்தனை நெருக்கடிகள் இல்லாதிருந்தால் இந்த வீட்டை கட்டி இருக்கவே மாட்டேன்.

அப்படி ஒருநாள் வேடசெந்தூர் வந்துவிட்டு காரில் விஜியுடன் 14 கி மீ கடந்து பொள்ளாச்சி சென்று,  வீட்டு வாசலில் வண்டியை நிறுத்திய பின்னர் அத்தனை தூரம்  என்னருகில் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த என்னருகில் நின்று கொண்டே பயணித்த சரண் காலடியில் இருந்த ஒரு பெரிய பாம்பொன்று சரேலென வெளியே சீறி பாய்ந்தது. அது விஷம் உள்ளதா இல்லையா என்றெல்லாம் பார்க்க  சந்தர்ப்பமே வாய்க்க விலை.அது சரணை எதுவும் செய்யாமலிருந்தது தெய்வாதீனம்தான்.

விஜி.வண்டி ஓட்டுகையில் அதை பார்த்திருந்தால் விபத்து ஏற்பட்டிருக்கும் சாத்தியங்களும் இருந்தன

அதுபோலவே ஏதோ ஒரு பரீட்சைக்காக சென்னைக்கு அவனையும் அழைத்துக்கொண்டு போயிருக்கையில் அபயம் அத்தையின் வேளச்சேரி  வீட்டில் முன்பக்கம் சரண் வெகுநேரம் விளையாடிக்கொண்டிருந்தான்.

எதற்கோ அவனை நானழைத்து, அவன் அங்கிருந்து விலகி என்னை நோக்கி நடக்க துவங்கிய மறு நொடி  போர்டிக்கோவில் மேல்பக்கம்  பதித்திருந்த கனத்த ஓடுகள் சில கீழே விழுந்து நொறுங்கின.

அங்கேதான் சரண் அத்தனை நேரம் நின்றிருந்தான்.எனக்கு திகைப்படங்கவே நெடு நேரமாயிற்று

அவனுடன் எதோ தெய்வனுக்ரஹம் இருக்கிறது என்பதை நான் எப்போதும் நம்புகிறேன். அவனுடன் மட்டுமல்ல ஆதரவற்றவர்களுடன் எப்போதும் அறியாத்தெய்வமொன்று எப்போதும் துணையிருக்கும், திக்கற்றவர்களுக்கு தெய்வமன்றி வேறு என்ன துணையிருக்கும்?  எங்களுக்கு இருந்தது,  இருக்கிறது. இருக்கும்.

சரண் சாந்தி பள்ளியில் படிக்கையில் 6 அல்லது 7-ல் என்று நினைக்கிறேன். அவன் பள்ளியிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது மாலை வரும்படி. என்னவாக இருக்கும் ஏதேனும் புகரா என்று யோசித்தபடியே சென்றேன்

முதல்வரின் அறையில் அமரவைத்து சரண் கலந்து கொண்ட ஒரு போட்டியில் தென்னிந்தியாவில்  முதலிடம் பிடித்ததற்காக ஆஸ்திரேலியாவின் வேல்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு தங்கப்பதக்கமும் கணிசமான ஒரு தொகைக்கு காசோலையும் வந்திருந்தது

 அந்த போட்டித்தேர்வுக்கும் அதன் பின்னரான 12- ம் வகுப்பு பொதுத்தேர்வு வரைக்குமே அலட்டிக்கொள்ளாமல் வீட்டில் தயாராகாமல்தான் சென்றான் பின்னர் மற்றொரு தேசிய அளவிலான போட்டியில் அதே வகுப்பில் தங்கப் பதக்கம் பெற்று மாநில அளவில் சிறந்த  மாணவன் என்னும் சான்றிதழ் சென்னை எஸ் ஆர் எம் கல்லுரியில்  வைத்து ஒரு பெரிய விழாவில் ஒய் எஸ் ராஜன் அவர்களால் வழங்கப்பட்டது. தேசிய அளவில் முதல் இரண்டு இடங்களில் எப்போதும் இருக்கும் சின்மயா பள்ளியின் ஆகச்சிறந்த கௌரவ் விருதும் காசோலையும் 12 ம் வகுப்பில் சரணுக்கு வழங்கப்பட்டது.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது வேல்ஸ் பல்கலைக்கழக  சான்றிதழையும் தங்கப்பதக்கதையும் வைத்துக்கொண்டு  சரண் நின்றிருக்கும் புகைப்படத்தை தினமலர் அலுவலகத்தில் கொடுக்க மகாலிங்கபுரம் வீதிகளில் நான் தன்னந்தனியே  நடந்து சலித்து அலுவலகத்தை  கண்டுபிடித்து அதை அடுத்த நாள் நாளிதழ்களில் வரவழைத்தது.

பின்னர் தருணும் அவனுமாக வாங்கிய  தங்கப்பதக்கங்கள்  எல்லாம் ஒரு வட்டப் பெட்டியில் கொட்டிக்கிடக்கின்றன. சாத்வீகியாக சாந்த ஸ்வரூபியாக இருந்த சரணை குறும்பனாக மாற்றிய பெருமை அவன் இளவல் தருணையே சேரும்.

தருணும் சரணுக்கு இணையாக படிப்பில் சுட்டி  அவனை தினம் மாலை பள்ளியில்  கண்டுபிடித்து காரிலேற்றுதே பெரும்பாடு.

 சரணை குறித்த பதிவென்பதால்  இதில் தருணை குறித்து அதிகம் எழுதவில்லை  அண்ணன் மீது மாளாநேசம் கொண்டவன் தருண், அவன் பள்ளிக்கு செல்ல துவங்கியிருக்காத,  சரண் கேஜி வகுப்புகளுக்கு சென்ற காலங்களில்  தினம் அண்ணன் வரும் ஆட்டோவை மாடியிலிருந்து பார்த்ததும் குதித்து கும்மாளமிடுவான்.

மாலை வீட்டுக்கு வரும் அவனுக்கு ஷூ சாக்ஸ் கழட்டி பணிவிடை செய்வது தினம் தினம் தருண்தான்,சரணுக்கு  உடல்நிலை சரியில்லாத நாட்களில்  நான் மருத்துவமனை செல்ல ஆட்டோவுக்கு போன் பண்ணுகிறென் என்றால் உடனே குட்டித் தருண் ஓடிப்போய் சரணுக்கு இரண்டு செட்  உடை, தண்ணீர்பாட்டில் ஆகியவற்றை ஒரு பையில் எடுத்து  வைத்து மருத்துவமனைக்கு தயாராகிவிடுவான். லகஷ்மணன் கூட ராமனுக்கு இத்தனை அனுசரணையாக இருந்திருக்க மாட்டான்

சரணைப் பள்ளியில் ஒரு பையன் அடித்து விட்டான், சரண் தேமே என்று அடி வாங்கிக்கொண்டு வந்தான், ஆனால் மறுநாள் அண்ணனை அடித்தவனை தருண் அடித்து ஒரு புதருக்குள் தள்ளிவிட்டுவிட்டான். அந்த விசாரணைக்கு நான்  பள்ளிக்கு விடுப்பெடுத்து செல்ல வேண்டி வந்தது. 

கார் வாங்கிய பிறகு மாலை வேளைகளில் நானே அவர்களை பள்ளியிலிருந்து அழைத்து வருவேன் கடைசி பீரியட் வகுப்பு முடிந்ததும் சாக்பீஸ் படிந்த கைவிரல்களும் கலைந்த தலையுமாக  பள்ளிக்கு வரும் என்ன பார்த்து அங்கே முன்கூட்டியே  வந்து அமர்ந்து குடும்ப கதை பேசிக்கொண்டும் டப்பர் வேர் வியாபாரம் செய்துகொண்டும் இருக்கும் மேல்தட்டு பெடிக்யூர் மெனிக்யூர் செய்த ஒப்பனை கலையாத அம்மாக்கள்’’ இதான் சரண் தருண் அம்மா’’ என்று என்னை காட்டி  உயர்வாக பேசிக்கொள்ளுவர்கள்.

பெற்றோராசிரிய  கூட்டங்களில் மூன்று பள்ளிகளிலும் இருவரைக்குறித்தும் ஒருபோதும் ஒரு புகாரும் சொன்னதில்லை.இருவரும் 12 ம் வகுப்பு வரைக்கும் எந்த ட்யூஷனுக்கும் சென்றதில்லை.

குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே எங்களை முற்றிலும் கைவிட்ட நிராதரவான காலம் இருந்தது. தன்னந்தனித்திருந்தோம். சரண் தருண் இருவரும் மிகச் சிறுவர்களாக இருக்கையில் தெருமுனையில் மூவருமாக  நின்று போக்குவரத்தை மணிக்கணக்காக  பார்த்துக்கொண்டிருப்போம். கார் ஒருத்தருக்கு, பஸ் ஒருத்தருக்கு, பைக் ஒருத்தருக்கு என்று எங்களுக்குள் பிரித்துக்கொண்டு யாருடைய வண்டி அதிகம் கடந்து செல்கிறதோ அவர்கள் வெற்றியாளர்கள் என்னும் விளையாட்டு விளையாடுவோம். எப்போதும் கதை சொல்லுவேன் கண்கள் விரியக் கேட்பார்கள். அப்பா அம்மா சகோதர சகோதரிகள் அனைவராலும் கைவிடப்பட்டிருந்த புறக்கணிக்கப்பட்டிருந்த நிர்க்கதியான காலமது எனினும் எங்களின் அந்தரங்க வாழ்வை நாங்களே அன்பினால் நிறைத்து  ததும்பிக்கொண்டோம்.

பள்ளி விடுமுறைகளும் கல்லூரி விடுமுறைகளும் வேறு வேறு  சமயங்களில் இருக்குமென்பதல் மகன்களை பெரும்பாலும் வீட்டுக்குள் விட்டு கதவை பூட்டிவிட்டு செல்வேன் ஹால் முழுக்க செய்தித்தாள்களை பரப்பி அதில் உணவை எடுத்து வைத்திருப்பேன் மாலை திரும்ப வந்து மூவருமாக வீட்டை சுத்தம் செய்வது உள்ளிட்ட எல்லா வேலைகளையும் பார்ப்போம்.

அப்போதிலிருந்து கல்லூரி பள்ளி விடுதிக்கு போகும் வரை சமையல், துணி துவைத்து காயப்போடுதல், பாத்திரம் தேய்த்தல், அம்மிக்கல்லில் அரைத்தல்,  தோட்டச் செடிகளுக்கு நீர் பாய்ச்சுதல் என்று எதுவாகினும் மூவரும் சேர்ந்தே செய்வோம், எங்களுக்குள் நல்ல புரிதலும் அதனாலேயே உண்டாகியிருந்தது.

அந்த நாட்கள் கனவு போல கலைந்து மறைந்து போய்விட்டது, அக்காலத்தை  நான் இப்போதும் நினைத்து ஏங்குகிறேன். பள்ளிக்கு அவர்கள் வேனில் செல்ல துவங்கிய போது. அவர்களை அனுப்பி விட்டே நான் கல்லூரிக்கு புறப்படுவேன். பள்ளியின் மஞ்சள் நிற வேன் கண்ணுக்கு தெரியும் வரை தாத்தாரப்புச்சி மரத்தின்  புடைத்த வேரில் அமர்ந்து வெண்முரசு கதை கேட்டபடி காத்திருப்பார்கள்.

கண்களில் வெண்முரசு கனவென மிதக்க சரண் வேனில் ஏறிச்செல்வான்

 சின்மயா பள்ளியில் சரணுக்கு துவக்கக்தில் விருப்பமின்றி இருந்தது, அக்காலத்தில்  ஏகத்துக்குமழுகை.பின்னர் சரியாகி சின்மயா இப்போது அவன் வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டிருக்கிறது.

மாதா மாதம் அவர்களை  காணச் செல்லும் ஞாயிறுகளில் அதி்காலை எழுந்து அவர்களுக்கு பிடித்ததை சமைத்து  ஓட்டமாக ஓடி பள்ளிக்குச் செல்வேன். கோவை நகருக்கு சிலநாட்களில் செல்வதுண்டு, பலநாட்கள் பள்ளிக்கு வெளியே   சாலையோரம் இருந்த கொடிக்கம்பப் படிகளிலமர்ந்து வெண்முரசு கதையை நாள்முழுக்க கேட்டுவிட்டு உணவை காரில் சாப்பிட்டு விட்டு  மாலை பள்ளியில் திரும்ப கொண்டு விட்டு விட்டு  இருக்கிறேன் வெண்முரசு மகன்களுடன்  கூடவே வளர்ந்துவந்தது.

பள்ளி முடித்து கல்லூரிச்சேர்க்கைக்கு அவனுக்கு பல கல்லூரிகளில் இடம் கிடைத்தது. வேலூர் வெய்யில் என்பதால் எனக்குஅவனை அங்கு அனுப்ப பிரியமில்லை. ஆரவல்லி மலைத்தொடரருகில் ஒரு பல்கலைக்கழகத்தில் உபகாரச்சம்பளத்துடன் அனுமதி கிடத்தது அந்த நேர்முகத்தில் சரணிடம்’’ நீ வாங்கிய விருதுகளில் எதை உயர்வாக சொல்லுவாய்’’ என்னும் கேள்விக்கு நான் எந்த வெற்றியை அடைந்தாலும் அது என் அம்மாவின் முகத்தில் உருவாக்கும் புன்னகைக்கு மேலான விருதை இன்னும் தான் பெறவில்லை என்று சொன்னான்.

பல இடங்களில் இடம் கிடைத்தும் அம்ரிதா ஒரு பெருங்காட்டைப்போல் இருந்ததால் அங்கேயே சரண் சேரட்டும் என விரும்பினேன் .

அம்ரிதா கல்லூரியில் விடுதியிலிருந்து வாரமொருமுறை சரண் வருகையில் நான் பேருந்தில் அவன் வரும் வரை தெருமுனையில் காத்திருப்பேன் அவன் வந்ததும்  அவனது பையின் கைப்பிடியை இருவரும் ஆளுக்கொன்றாக பிடித்துக்கொண்டு மெல்ல நடந்து வீடுவருவொம் மீண்டும் ஞயிறு பேருந்துநிலையம் வரை அவனுடன் பேசிக்கொண்டு சென்று 3.30 மணி பேருந்தில் அனுப்பி வைப்பேன்.

சரண் என்னைப் போலில்லை நான் எப்போதும் உணர்வு பூர்வமாக முடிவெடுப்பவள் ஆனால் சரண் தர்க்க ரீதியாகவே எல்லாவற்றையும் பார்ப்பவன். மிகுந்த ஏழை மனம் கொண்டவன் ஆனாலும் வரம்புகளுக்குட்பட்டே அவனது மனம் இயங்கும் இதை பல முறை கண்டிருக்கிறேன்.

அவன் படித்த அம்ரிதா பல்கலைக்கழகத்தில் அசைவம் வளாகத்தில் எங்குமே உண்ணப்படக் கூடாதென்னும் கடுமையான நெறி இருந்தது.ஆனாலும் சில மாணவர்கள் திருட்டுத்தனமாக அசைவ உணவுகளை கொண்டு வந்து விடுதியில் சாப்பிடுவதும் கண்டுபிடிக்கப்பட்டால் ஒரு பருவம் தற்காலிக இடைநீக்கம் செய்யப்படுவதும் நடந்தது. சொந்த வாகனங்களில் வருபவர்களை சோதைனையிடமாட்டார்கள் என்பதால் அப்படி வரும் நண்பர்களின் வாகனங்களில் அசைவ உணவுகளை விடுதிக்குள் கொண்டு செல்வதும் நடக்கும். (இப்போது வெளிநாட்டு விருந்தினர்களுக்கென அசைவ உணவு அளிக்கும் கேண்டீன்கள் வளாகத்திலேயே இயங்குகிறதாம்)

ஒரு ஞாயிறு மாலை விடுதிக்கு சரணை கொண்டு விடப் போயிருந்தபோது நுழைவு வாயிலிலேயே இருக்கும் ரயில்வே கிராஸ் அடைக்கப்பட்டிருந்தது,அப்போது சரணுக்கு பரிச்சயமில்லாத ஒருவன் வந்து சரணிடம் தன்னிடம் அசைவ உணவு இருப்பதாகவும் காரில் ஏறி விடுதி வரை வரட்டுமா என்றும் கேட்டான் சரண் உடனடியாக அதில் அவனுக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டான் அந்த சரண் வயதே இருக்கும் பையன் விலகி சென்று விட்டான். எனக்கு என்னவோ மனக்கஷ்டமாகி விட்டது ’’ஏண்டா அவன் எப்படியும் சாப்பிட போறான் நம்ம காரில் கொண்டு போய் இறக்கி விட்டா என்ன’’ என்றேன்.

’’நாம ஒரு அமைப்புக்குள் இருக்கோம்னா அதன் நெறிகளுக்கு கட்டுப்பட்டு உடன்பட்டுத்தான் அதுக்குள்ள இருக்கனும். அம்ரிதாவில் யாரும் அசைவம் சாப்பிட வேண்டாம்னு சொல்லலை அந்த கேம்பஸில் சாப்பிடாதீங்கன்னுதான் சொல்லறாங்க. ஞாயிற்றுக்கிழமையே  அவன் வரனும்னு இல்லை அவன் நல்லா அசைவம் சாப்பிட்டுட்டு திங்கட்கிழமை காலையில் கூட 9 மணிக்கு முன்னாடி வந்துருக்கலாம், திருட்டுத்தனமா கொண்டு வந்து விடுதியில் சாப்பிடறதும் மத்தவங்களுக்கு இப்படி சாப்பிட கொடுக்கறதும் அமைப்பின் விதிகளுக்கு எதிரானது, இங்கு சொல்லப்படும் கடைப்பிடிக்கப்படும் விதிகளுக்கு மாறா ஒருத்தன் நடக்கும் போது அதில் நானும் பங்கெடுத்துக்கனும்னு அவசியம் இல்லை. நான் அப்படி ஒரு போதும் செய்யவும் மாட்டேன் மேலும் என் பேர் யாரு எது சொன்னாலும் கேட்டுக்கறதுக்கு நான் லோகமாதேவியும் இல்லை சரண் ‘’ என்றான் அவன் சொன்னதின் நியாயங்கள் பிறகு எனக்கு புரிந்தது.

பள்ளியில் ஒரு பெரும் செல்வந்தரின் மகன் ஒழுங்கு நடவடிக்கையின் பேரில் பள்ளியை விட்டு நீக்கப்பட்டபோதும் அவன் செல்வசெருக்கில் செய்த அந்த தவறை சரணால் மன்னிக்கவே முடியவில்லை. இப்படி பல விஷயங்கள் அவன் ஆளுமையை எனக்கு உணர்த்தி இருக்கின்றன.

சரண் வேர் கொண்டவன், தருண் சிறகு கொண்டவன். ஐரோப்பா செல்லும் முன்பு விமான நிலையத்தில் அவன் கண்ணிருடன் கண்ணாடி தடுப்பிற்கு அப்பால் நின்ற சித்திரம் கண்ணிலேயே இருக்கிறது.

இன்னும் சில வருடங்கள். பின்னர் அவன் நல்ல குடும்ப வாழ்வில் இருப்பதை பார்த்துவிடலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்.

சரண் தருண் திருமணங்களின் போது விழாவிற்கு வரும் உறவினர்களின் பார்வையில் படும்படி மலர்களும் ரிப்பனும் அமைக்கப்பட்டிருக்கும் உயர்ரக காரும், இடுப்பிலும் கையிலும் ஒட்டியாணம் வங்கியுமாக பொன்னால் ஜொலிக்கும் மருமகளும் எனக்கும் சரணுக்கும் தருணுக்கும் வேண்டியதில்லை. காரும் பணமும் வசதியும் எல்லாம் இருந்தும் தோல்வியுற்ற பல தாம்பத்தியங்களை மகன்களும் என்னுடன் சேர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை தாயின் பரிவுடன் அன்புசெலுத்தி பார்த்துக்கொள்ளும் அவர்களைப்போன்ற  ஆண்மகனின் முழு அன்புக்கும் பாத்தியமான,அவர்களின் மனதுக்குகந்த எளிய குடும்பப் பெண் போதும்.

பல வருடங்களுக்கு முன்னர் சரணை மசானிக் மருத்துவர் பரிசோதித்து அவன் நல்ல இயற்கை சூழலில் ஓடியாடி விளையாடினால் போதும் என்று சொன்ன பின்னர் தான் இந்த வீட்டைகட்ட முனைத்தேன். இங்கு வந்ததிலிருந்து படிப்படியாக குணமாகி ஆரோக்கியமான இளைஞனாக இன்று வளர்ந்து 23 வயதை தொட்டிருக்கிறான். 25இப்போது )(சரணையும் தருணையும் வளர்த்திய காலத்து கஷ்டப்பாடுகளனைத்துமே இப்போது கனவென மாறிவிட்டன.

சரண் 11ல் படிக்கையில் நான் பாண்டிச்சேரிக்கு ஒரு சிறுகதை பட்டறைக்கு செல்ல வேண்டி இருந்தது. அதன்பொருட்டு அவன் தலையிட்டு பேசத்துவங்கிய பின்னர் என் பொறுப்பை, என் வாழ்வை முழுக்க அவன் கைகளில் எடுத்துக்கொண்டான். அன்றிலிருந்தே என் சுதந்திரத்தை என்னால் உபயோகிக்க முடிந்தது.எல்லைகளைத் தாண்டாமல் அவற்றை  உணர்ந்து அதற்குள் என்னால் இப்போது விரும்பும் உயரம் வரை பறக்க முடிந்திருப்பது சரண் மற்றும் தருணால் மட்டுமே.

சரண் ஐரோப்பாவில் அரசு வேலையிலும் தருண் பெங்களூருவில் MBA இரண்டாம் ஆண்டிலும் இருக்கிறார்கள்

.

நான் மகன்களுக்கு உயிர்கொடுத்தேன் என்றால் அவர்களும் என்னை எல்லாவற்றிலும் இருந்து விடுவித்து என்னையும் மீண்டும் புதிதாக பிறக்க செய்திருக்கிறார்கள் சரணும் தருணும்  எனக்கு மகனும் அன்னையும் தந்தையும் நண்பனுமானவர்கள். இருவருக்கும் என் அன்பும் ஆசிகளும் எப்போதும்.

என் பெயர் லோகமாதேவி அல்ல , சரண் -2

சரணுக்கு நான் சொல்லி ச்சொல்லி வசந்த சார் மீது அளவற்ற மதிப்பும் பிரியமும் இருந்தது. இடையிடையே இந்தியா வரும்போதெல்லாம் தடுப்பூசியோ அல்லது சிகிச்சைகளின் பொருட்டொ சரணுக்கு ஊசி போட வேண்டி வந்தால் ஒருபோதும் வசந்த அதைச் செய்யமாட்டார் ’செல்ஸ்’ என்று குரல் கொடுப்பார் செலினாதான் போடுவார்கள்.சரணுக்கு இன்றும் ஊசி என்றால் குலை நடுங்கும்.  ஒரு முறை மைசூரு சென்று வந்தபோது வசந்த் சாருக்கெனச் சிறு கள்ளிச்செடி வாங்கி வந்து பரிசளித்தான் அதையும் அவன் பரிசளித்த ஒரு குட்டி பொம்மையையும் அவர் தனது மருத்துவமனை மேசையில் பல காலம் வைத்திருந்தார்.

அபுதாபியில் ஒருநாள் வீட்டைப் பகிர்ந்து கொண்டிருந்த ஒரு பெண்ணின் சகோதரியின் கணவர் காலமாகி விட்டார் என்று கேரளாவிலிருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பிற்கு அந்த ப்பெண் என்னை ’சேச்சி’ என்று கட்டிக்கொண்டு கதறியபோது சரண் அரண்டு போய் ’’என்ன என்ன’’ என்று அழுகையுடன் கேட்டான். ’’இந்த அத்தையின் சொந்தக்காரர் செத்துப்போயிட்டாரம் சரண்’’ என்று நான் சொன்னதும் அவன் என்னைக் கட்டிக்கொண்டு ’’அதான் வசந்த் டாக்டர் இருக்காரில்ல அவர் காப்பாத்துவாரு காப்பாத்துவாரு, அழுகாதே’’ என்று வீறிட்டான். இதை என்றைகாவது வசந்த் சாரிடம் சொல்லவேண்டும் என்றிருக்கிறேன்.

ஒருமுறை ஜெயந்தி கிருஷ்ணசாமி தம்பதிகளுடன் முஸாஃபாவிலிருந்து அபுதாபிக்கு சென்றிருக்கையில் இரவில் கார் கதவின் கண்ணாடி வழியே பிறைநிலவை பார்த்தபடி ’’அம்மா பாதி நிலா இங்கே இருக்கு மீதி நிலா எங்கே இருக்கு’’? என்றான் கவிதையாக.

சுட்டி விகடனில் வரும் சின்ன சின்னப் போட்டிகளை அவனுக்கு சொல்லிப் புரியவைத்து, அவன் சொல்லும் பதில்களை விகடனுக்கு எழுதிப் போடுவேன் அப்படியொரு புதிர்ப்போட்டி பதிலுக்கு அவனை ’’குட்டி ஷெர்லக் ஹோம்’’ என்று சொல்லிய ஒரு சான்றிதழ் வந்தது.

விகடன் படித்துமுடித்துவிட்டால் மேலும் கதைகள் கேட்பான் எனவே நானே இட்டுக்கட்டிய கதைகளைத் தொடர்ந்து சொல்லுவேன். தட்டிக்கொடுப்பதையும் கதையையும் எப்போது நிறுத்தினாலும் விழித்துக்கொண்டு மீண்டும் சொல்லச் சொல்லுவான்.

கணினியில் எளிய விளையாட்டுக்களை என்னுடன் சேர்ந்து என் கைகளின் மீது அவன் சிறு கையை வைத்து அவனும் விளையாடுவான். கணினி அவனுக்கு மிகப் பரிச்சயமானதும்  பிடித்தமானதுமாகிக்கொண்டிருந்தது.

அருகிலிருந்த  ஏர்போர்ட் பார்க்குக்கு மாலைவேளைகளில் அவனை அவன் தோழிகள் சியா, சிது அல்லது நவ்யா ஆகியோரின் குடும்பத்துடன் அழைத்துச் செல்வதுமுண்டு.சியா சிது குடும்பத்தினர் மாப்ளா முஸ்லிம்கள் எங்களுடன் வீட்டைப் பகிர்ந்து கொண்டிருந்தனர். என்னை ’மூத்தம்மே’ என்றழைக்கும் சியாவுக்கும் சரணுக்கும் மிகபிடித்தமான விளையாட்டு வீட்டில் இருக்கும் பெரிய காலி அட்டைப்பெட்டிகளுக்குள் அமர்ந்துகொள்வது.

முஸாஃபாவில் அப்போதுதான் அமைந்திருந்த கேரிஃபோர் பிரம்மாண்ட மாலுக்கு முதன்முறை சென்றிருக்கையில் அங்கிருந்த கூட்டத்தில் சரண் தொலைந்து போனான் வளாகம் முழுக்க அனைத்து தளங்களிலும் அறிவிப்பு செய்த பின்னர் எங்கிருந்தோ அலமாரிகளுக்கிடையில் விளையாடிக்கொண்டிருந்தவனை  அரபி ஒருவர் கண்டுபிடித்து க்கொண்டு வந்தார்.

அதே கேரிபோரில் தள்ளுவண்டியில் முன்பக்க கூடையில் சரண் அமர்ந்துகொண்டிருந்த ஒருநாளில் அமைதியாய் கூடையில்நான் எடுத்துப்போடும் பொருட்களைப் பார்த்தபடி வந்துகொண்டிருந்தவன் ஃபேர் அண்ட் லவ்லி எடுத்துபோடப்பட்டதும் அலறி ’’இது வேண்டாம் வேண்டாம்’’ என அழத்துவங்கினான்

அவனை என்ன சொல்லியும் சமாதானம் செய்ய முடியவில்லை ’’இது அம்மா முகத்துக்குப் போடறதுக்குடா’’ என்றபோது வீறிடுதல் இன்னும் அதிகமானது.பின்னர் அதை எடுக்கவேயில்லை.

அடுத்த வெள்ளியன்று மாலை சன் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கையில் ஃபேர் லவ்லி விளம்பரம் வந்தது. ஆறே நாட்களில் சிகப்பழகு என்னும் அந்த விளம்பரப்பெண்ணின் முகமாறுபாடுகள் அடுக்கடுக்காகக் காண்பிக்கப்பட்டபோது சரண் அச்சத்துடன்  ’’அம்மா பாத்தியா அந்த கீம் போட்டா உனக்கும் இப்படி நிறைய மூஞ்கி வந்துரும் அப்புறம் உன்னைப் பார்த்தா எனக்குப் பயமாயிரும்’’ என்றான்.

அவன் பிரியதுக்குரியவளாக ரீமா சென் இருந்தாள். சாப்பிட அடம்பிடிக்கும் சரணுக்கென்றே அவளின் ’’மே மாதம் 98ல்’’ பாடலைப் பதிவு செய்து வைத்திருந்தேன். ரயில் நிலையத்தில் ரீமா சென் கனத்த தொடைகளை தட்டிக்கொண்டு குதித்தாடத் துவங்கினால் சரணும் வாயைத்திறந்து பார்ப்பான் மட மடவென்று சாதம் ஊட்டி முடித்துவிடுவேன்.

தொடரும்

https://logamadevi.in/wp-admin/post.php?post=3018&action=edit

என் பெயர் லோகமாதேவியல்ல. சரண்-1

 (சரணின் 25-ம் பிறந்த நாளான 4/4/25 அன்று திருத்திய வடிவம்)

இன்று சரணின் 23 ம் பிறந்த நாள் காலம் எத்தனை வேகமாக ஓடி விட்டது என்று நினைக்கையில் பிரமிப்பாக இருக்கிறது. அபுதாபியில்  உஷா என்னும்  அரபி பேசத்தெரிந்த அண்டை வீட்டுப் பெண்ணுடன் அரசாங்க மருத்துவமனைக்கு சென்று  கர்ப்பத்தை உறுதி செய்துவிட்டு டாக்ஸியில் வீடு திரும்பிய நாள் நேற்று போல நினைவிலிருக்கிறது.

சரண் வயிற்றில் இருக்கையில் அவனுக்கு போஷாக்கான உணவுகள் என் வழியே அளிக்க முடிந்ததில்லை என்னும் மனக்குறை இன்றும் இருக்கிறது, என்றும் இருக்கும். இளம் வயதில் அவனது உடல்நிலை சரியில்லாமல் போகும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அந்த குற்ற உணர்ச்சி என்னை கொல்லும்.

தாம்பத்யத்தின் துவக்க கால சிடுக்குகளில் சிக்குண்டு இருந்த காலத்தில் சரண் உருவாகி இருந்தான். படிப்பு, வேலை ,கனவுகள், உற்றார், உறவுகள் என அனைத்தையும் விட்டுவிட்டு கண்காணாத பாலை நிலத்துக்கு வந்த அதிர்ச்சியே விலகாத நிலையில் கர்ப்பம், அதுசார்ந்த உடல் கோளாறுகள், அதீத பசி, சமைக்க முடியாமல் இருந்தது, உதவிக்கு மட்டுமல்ல மனம் விட்டு பேசவும் யாரும் அருகில் இல்லாதது, பொருளாதார சார்பு, இப்படி பல சிக்கல்கள் என்னைச் சூழ்ந்திருந்தன. வார இறுதிகளில் வீட்டில் இருப்பவர்களுடன் பேசுகையில் எனக்கு அவர்களிடம் சொல்லிக்கொள்ள ஒன்றுமே இருந்ததில்லை. ஆனால் எந்தப்புகாரும் இன்றி என்னை எல்லாவற்றிற்கும் ஒப்புக்கொடுத்துக்கொண்டு வாழத்துவங்கி இருந்தகாலமது

வயிற்றில் சரண் துடிப்பை உணர ஆரம்பித்த நாட்களில் நான் மெல்ல மெல்ல மாறினேன், எனக்குள் ஒரு உயிர் வளர்வது பெரும் நம்பிக்கையைப், பொறுப்பைப், பிடிப்பை வாழ்வின் மீதான விருப்பை மீண்டும் அளித்தது.

 எனக்கு என்னை நம்பி  என் வயிற்றில் ஓருயிர் என்பதுவும் என்னால் ஒரு உயிரை தரமுடியும் என்பதுவும் பெரும் உத்வேகத்தை அந்தச் சிக்கலான சமயத்தில் அளித்தது.

சரணுக்கு நானும் அவன் எனக்கும் பரஸ்பரம் உயிர்கொடுத்துக்கொண்டோம் என்றும் சொல்லலாம்..

அச்சமயத்தில் எனக்கு மிகத் தேவையாயிருந்த ஓய்வும்  பொருளாதார  காரணங்களுக்காக உடன் தங்க அனுமதித்திருந்த மற்றொரு  குடும்பத்தினால் முற்றிலும் இல்லாமல் போயிருந்தது. கொடுங்கனவு போலான நாட்கள் அவை.

கிருஷி விஞ்ஞான் கேந்திராவின் மூலம் கிடைத்திருந்த சணல் ஆய்வு மையத்தின் சயின்டிஸ்ட் பணியை குடும்பத்தினரால் இழந்து, கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்து , அதையும்  கல்யாணத்தின் பொருட்டு ராஜி வைத்துவிட்டு வந்த இழப்பின் வலி எப்போதும் இருந்த நாட்கள் அவை. கல்யணத்துக்கு முன்பு கல்லூரியில் சேர்ந்த பிறகு  எழுதவும் துவங்கி இருந்தேன். ஆதித்தனார் நினைவு போட்டிக்கென சரக்கொன்றை என்னும் முழுநாவலை கைப்பட எழுதி முடித்து அதை தட்டச்ச காத்திருந்தேன். நான் இழந்த பலவற்றில் அதுவும் ஒன்று.

கண்ணில் பசுமையே தட்டுப்படாமல் உள்ளும் புறமும் வெறிச்சோடியிருந்த பாலைவாழ்வு. மணற்புயல்  ஏஸி  அமைப்பின் வழியே வீடங்கும் அடிக்கடி மண்ணை நிறைத்துவிட்டு போகும் அதைச் சரிசெய்யக்கூட தோன்றாமல் மலைத்து போய் களைத்தமர்ந்திருப்பேன்.

குமட்டி வாயுமிழ்ந்துவிட்டு மீண்டும் சமைக்க வருவேன் இது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கெல்லாமே உண்டாவதுதான் எனினும் எனக்கு அருகில் உதவிக்கென  யாருமற்ற நிராதரவான நிலையென்பதால் எல்லாமே அதீதமாக இருந்தது. அப்போது எனக்கு அன்புடன் உதவி செய்ததாக நான் நினைத்த ஒரு பெண் ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம் தெரிய வந்தபோது தருண் பிறந்திருந்தான். அவள் வீட்டில் நான் கர்ப்ப காலத்தில் ருசித்து உண்ட  உணவின் ஒவ்வொரு பருக்கையும் மனதில் செரிக்கவே இல்லை.பிரசவத்துக்கு இந்தியா வந்தேன்.

விமானப் பயணத் தகுதியையும் கடந்து 9 மாதங்கள் முடிந்த நிலையில் போலியாக ஒரு பயணத் தகுதிச் சான்றிதழ் வாங்கி ஒரு வழியாக இந்தியாவுக்கு வர விமானப்பயணம் உறுதியானது.  அங்கு சென்றதிலிருந்து வியர்வை சுரக்காமல் கர்ப்பகால பருமனும் சேர்ந்து எடை கூடி விட்டிருந்தது ஆளும் உருமாறியிருந்தேன். அந்த 9 மாதங்களில் எனக்கு நிகழ்ந்தது ஆளுமைச்சிதைவென்று இப்போது நிதானத்தில் இருக்கையில் அறிய முடிகின்றது. 

என்னையும்  வயிற்றில் இருக்கும் குழந்தையையும் யாரோ எதோ செய்துவிடுவார்கள் என்னும் அச்சம் ஒவ்வொரு நொடியும் பீடித்திருந்தது. யாரும் சாப்பிட  எதாவது கொடுத்தனுப்பினால் அவற்றை ரகசியமாக சின்க்கில் கழுவி ஊற்றி விடுவேன்.

கடும் பசியும் சில குறிப்பிட்ட உணவுகளின் பேரிலான பெரு விருப்பமும் அவற்றை உண்ண முடியாத ஏக்கமுமாக கழிந்த அந்த கர்ப்பகால ஆதங்கம் இன்னும் இருக்கிறது.

எப்பாடு பட்டாவது குழந்தையை, துர்கா என்று நான் பேர்  வைத்திருந்த மகளை காப்பாற்ற  வேண்டும் என்று சதா நினைப்பிருக்கும். இந்தியாவுக்கு பயணிக்கையில் அபுதாபி வந்து ராகவன் அகல்யா வீட்டில் தங்கி இருந்தேன் ஒரிரவு. அவர்களது சிறுமகனின் விளையாட்டு கார் பொம்மைகள் இனம்புரியா கிளர்ச்சியை உண்டாக்கின அச்சமயத்தில்

காலை விமானத்தில் தன்னந்தனியே வயிற்றுக் குழந்தையை தடவிக்கொண்டு அமந்திருந்தேன். அம்மா வீட்டுக்கு  வருவதிலும் பெரிய ஆர்வமும் விருப்பமும் இல்லாமல்  இருந்தது, இருந்தும் தாம்பத்தியத்தில் இருக்கவேண்டிய அன்பு பாசம் காதல் இவற்றைக்காட்டிலும் சம்பிரதாயங்கள் முதன்மையாக கருதப்பட்டதால் தாய்வீட்டுக்கு செல்லவேண்டி வந்தது. ஒருவகையில் அந்த பாலையிலிருந்தும் ஓயாத பணிகளிலிருந்தும்  தற்காலிகமாகவேனும் விடுபட்டு வந்தது ஆசுவாசமாயிருந்தது என்னவோ உண்மைதான்.ஆனால் வாணலிக்கு பயந்து அடுப்பில் விழுந்த கதைதான் மீண்டும் நடந்தது

கோவை விமான நிலையத்தில் ஏதோ பழுது காரணமாக விமானம் ஒரு டன் செங்கல்லை போல்  டமாரென்று தரையிறங்கியதும் எனக்கு இடது பக்க முகம் முழுவதும் உணர்ச்சியற்று  மரத்துப்போனதுபோல ஆனது அச்சமயதில் அந்த பக்க பார்வையும் மங்கிவிட்டது. சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு தான் மீண்டும் பார்வையும் முகமும் சீரானது.

விமான நிலையத்தில் அக்கா அம்மா அப்பா விஜி காத்திருந்தனர். அனைவருக்கும் என் உடல் எடை கூடியிருந்தது பெரும் திகைப்பை உண்டாக்கி இருந்தது.  

எனக்கு  முகத்தில் இப்படி நேர்ந்ததை  சொன்னந்தும் நேராக ஆல்வா மருத்துவமனைக்கே செல்ல முடிவானது.

ஆல்வா முதன்முறையாக நீங்க போய் பாபுவை பாருங்க என்றார்

பாபு என்றது அவரது மகன் மருத்துவர் வசந்தை

நான் வசந்தைக் குறித்து முன்னர் கேள்விப்பட்டிருக்கிறேன் என்னை விட சற்று மூத்தவர், அவரது சகோதரி மித்ராவின் பள்ளித் தோழி.

ஆனால் அவரை ஒருபோதும் சந்தித்ததே இல்லை.அதன்பிறகு பல நூறு முறை சென்று குடும்பத்தில் பலரும் உயிருடன் இருக்கக் காரணமாயிருந்த அம்பராம்பாளையம் மருத்துவமனைக்கு அன்றிரவு தான் முதன் முதலில் சென்றேன்.

வசந்த் சார் அறையில் காத்திருந்தார். ஒரு ஸ்கேன் எடுத்து விட்டு அங்கே புதிதாக வந்திருந்த பெண் மருத்துவர் பிரசித் மரியா என்று நினைவு அவரை சந்திக்கச் சொல்லி ஒரு சிறு குறிப்பை எழுதித்தந்தார்.எதிரில் அமைந்திருந்த அவரின் அறைக்கு நான் அந்த குறிப்புடன்  அறையை விட்டு வெளி வருவதற்குள் மீண்டும் அழைத்து அதில் தான் எழுதியிருந்த please see logamadevi my friend என்றிருந்ததை அடித்து  our family friend என்று எழுதிக்கொடுத்தார்.

செலினா என்னும் தாயைபோல் பிற்பாடு பல சந்தர்ப்பங்களில் என்னை கவனித்துக்கொண்ட செவிலியையும் அன்றுதான் சந்தித்தேன். என்னை பரிசோதித்து விட்டு மருத்துவர் எல்லாம் நலமாக உள்ளது என்றும் ஸ்கேனில் ஒன்றும்  பிரச்சனை இல்லை என்று சொன்னதால் நான் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இன்னும் ஒருவாரத்தில் பிரசவம் ஆகிவிடும்  என்பதை மட்டும் கேட்டுக்கொண்டு வீடு திரும்பினேன்.

வெளிநாட்டில் இருந்து வந்திருந்ததால் பலர் என்னை வந்து பார்த்தார்கள். பலகாரங்கள் பூக்களால் நிறைந்திருந்தது வீடு

ஆசிரியர் ராஜ்குமார் சாரும் அவரது மனைவியும் எனக்கு பலகாரங்கள் வாங்கி வந்திருந்தனர் மாலைநேரத்தில் அப்பாவுடன் நடந்து போய் ஒரு இளநீரை (நான் பணம் கொடுத்து) வாங்கிக் குடித்துவிட்டு வருவேன் சிலநாட்கள்

ஈரோட்டில் சிம்னி என்னும் ஹோட்டலில், வளைகாப்பு அதிலும் எனக்கு நினைவு வைத்துக்கொள்ளும்படியாக ஏதும் இல்லை. குடும்பத்து ஆண்களின் பெருமிதமும் அன்பும் காதலும் அறிவும் பண்பும் பல தலைமுறை தொடர்ச்சியாக வரவேண்டுமல்லவா எனவே எனக்கும்ஆண் குழந்தையாக பிறக்கட்டுமென்று  மடியில்  கொஞ்சம் வளர்ந்துவிட்டிருந்த இந்திரா அக்காவின் மகன் ப்ரதீப்பை அமரவைத்தார்கள்  இன்னும் மணமாகி இருக்காத பாப்பிக்காவை நேரிட்டுப் பார்க்கச் சங்கடப்பட்டேன் 

ருக்மணி அத்தை நீ படற பாட்டை பாத்தா இன்னும் ரெண்டு நாளில் பிரசவம் ஆயிரும் போலிருக்கே என்றார்கள்.

 மித்ரா  வழக்கம் போல பல பழைய விஷயங்களை மிகைப் படுத்திக்கொண்டு வழியெங்கும் கதறி அழுது  என்னையும் அழவைத்துக்கொண்டு வந்த அந்த இரவுக் கார்ப் பயணம் மட்டும் நினைவில் இருக்கிறது. ஒரு சிக்னலில் கார் காத்திருக்கையில் ஒரு இளைஞன் என்னவோ விற்பனை செய்ய வந்தான், பட்டுப்புடவை , பூவும் நகைகளுமாய் இருந்துகொண்டு  கண்ணீருடன் இருந்த என்னை பார்த்து திகைத்து விலகிச் சென்றான். 

அம்மாஅப்பா  நிறைகர்ப்பிணியாயிருந்த  என்னை எப்படி கவனித்துக்கொண்டார்கள் என்பதை நான் எழுத்திலும் குறிப்பிட விரும்பவில்லை.

ஒருநாள் வீட்டில் யாரும் இல்லாதபோது குனிந்து நிமிர்ந்து வீட்டை பெருக்கினால் சுகப்பிரசவம் ஆகும் சிசேரியனுக்கு செலவும் குறையும் என்னும் அம்மாவின் நிர்தாட்சண்யமான கருத்துப்படி கூட்டிப் பெருக்கிக்கொண்டிருக்கையில் அந்த ஸ்கேன் ரிப்போர்டை எடுத்து வாசித்தேன் அதில் குழந்தையின் மூளை ரத்த நாளங்களில் ஒன்று விரிவடைந்திருப்பதாக குறிப்பிட்டிருந்தது. என்னிடம் அதைக் காண்பிக்காமல் வைத்திருந்திருக்கிறார்கள்.

ஈரக்குலை நடுங்குவது என்றால் என்னவென்று  அன்று உணர்ந்தேன் கதறி அழுது வீட்டுக்கு அப்பா, விஜி வந்ததும் உடனே வசந்த் டாக்டரை பார்க்கவேன்டும் என ஆர்ப்பாட்டம் செய்து புறப்பட்டேன்.அப்பாவிடம் அப்போது அம்பாஸடர் கார் இருந்தது.

வசந்த் சார் பொறுமையாக அன்று விமானம் தரையிறங்கிய அந்த அதிர்வில் இப்படி டைலேட் ஆகியிருக்கும் ஆனாலும் அதுவே சரியாகிவிடும் வாய்ப்புமிருப்பதால் கவலைப்படத் தேவையில்லை என்று தைரியம் கூறினார் அன்றிலிருந்து சரண்  நலமுடன் பிறந்த 4 ம் தேதிவரை அச்சம் என்னைநிழல் போலப் பின்தொடர்ந்தது

பிரசவத்துக்கு குறிப்பிட்ட  நாளும் கடந்துவிட்டதால் வசந்த் மருத்துவமனைக்கு வந்து தங்கிவிட சொன்னார்

கருப்பை சுருங்கி விரியும் அறிகுறி இல்லாததால் அதற்கான ஆக்சிடாசின் ஜெல் தடவியும் வலிவரவில்லை. தனா அக்கா உடனிருந்தார்கள் அறுவை சிகிச்சை என முடிவானது அறுவை சிகிச்சையை குறித்தும் முதல் பிரசவம் குறித்தும் எனக்கு சிறிதும் பயமேயில்லை சிசேரியனுக்கு ஆகும் செலவை எண்ணிக்கொண்டிருக்கும் அம்மாவை பார்க்கத்தான் பயமாயிருந்தது.

தலை பாதங்களில் படும்படி  முதுகை வளைத்து உச்சகட்ட வலியை கொடுத்த அந்த ஊசியை முதுகுத்தண்டுவடத்தில் செலுத்தி என் கண்களை கட்டியபின் அவர்களுக்குள் பேசிக்கொண்டே அறுவை சிகிச்சை செய்தார்கள். சரணின் அழுகுரல் கேட்டது. செலினா சிஸ்டர் காதில் பையன் என்றார்கள்.

நான் அம்மா ஆகிவிட்டேன் என்று அந்த அழுகுரல் எனக்கு உணர்த்தியது. ஆனால் வேறு ஏதும் நினைக்குமுன்பே மயக்கமானேன்,  பிறகு வெகுநேரம்  கழித்து என்னை ஸ்ட்ரெச்சரில் அறைக்கு தள்ளிக் கொண்டு போகையில் தான் தனாக்கா எனக்களிக்கப்பட்டிருந்த  அறை என் 8 என்பதை  கவனித்து செவிலியரை கடிந்துகொண்டு  வேறு அறை அளிக்க உத்தரவிட்டார்கள்

மயக்கமா உறக்கமா என்று தெரியாமல் சிலமணி நேரம் கழிந்தபின்னரே சரணை காட்டினர்கள் பூப்போல இருந்தான் கைவிரல்களை இறுக்க மூடியிருந்தான் கண்களும் மூடி இருந்தது மிகச்சிறிய சின்னஞ்சிறிய ஓருயிர், பசி பொறுக்கமாட்டான். 

அச்சமயம் ஒரு  அன்னையாகி இருப்பது என்னவென்று பெண்களுக்கு மட்டுமே புரியுமென்று நினைக்கிறேன்.அந்த பொங்கிப்பெருகும் உணர்வை எழுத்தில் கொண்டுவரமுடியாது 

மித்ரா குழந்தையின் கைவிரல்கள், நகம் ஆகியவற்றில் குற்றம் கண்டுபிடித்தாள் எனக்கு அவளை நினைந்து ஆச்சர்யமாக இருந்தது ஆறுமுகம் சார் சொல்லுவாரே  எஜுகேட்டெட்இல்லிட்ட்டெரேட் என்று.  மறுநாளே கொசுக்கடி, வசதிகுறைவான அறையின் உறக்கம் இவற்றின் பொருட்டு மாமா அழைத்து திட்டுகிறாரென்னும் வழக்கமான பொய்யை சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றாள்

அம்மா கணக்குப்போட்டது  போலவும் நான் பயந்தது போலவும் இல்லாமல் 13 ஆயிரம் ரூபாய்களே வசந்த சார்  கட்டணமாக கேட்டிருந்தார். இத்தனைக்கும் நானிருந்த அறைக்கு அருகில் இருந்த மற்றொரு அறைக்கும் இடையில் ஒரு கதவு இருந்ததால் அந்த அறையும் எங்களுக்கே வசந்த் சார் அளித்திருந்தார். எனவே இரண்டு அறைகளிலும் வசதியாக தங்கிகொண்டிருந்தோம். வசந்த் என்னும் மருத்துவரை, மாமனிதரை குறித்தறிந்து கொள்ள துவங்கிய நாட்கள் அவை.

வீட்டுக்கு வந்தும் ஓய்வின்றி உடனே அபுதாபி புறப்பட ஆயுத்தங்கள் நடந்தன என்னை யாரும் ஏன் பச்சை உடம்புடன், அறுவை சிகிச்சை செய்துகொண்ட உடம்புடன் உடனே போகிறாய்? இத்தனை சிறிய குழந்தையை எப்படி வளர்ப்பாய் என்று கேட்கவில்லை நானும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு இரண்டுமே வாழ்விடங்கள் அல்ல வசிப்பிடங்கள் என்பது தெரிந்திருந்தது.

உன் உடல் முற்றிலும் கட்டுக்குலைந்து மாறிவிட்டிருந்ததைக்கூட வேறொருவர் சொன்ன பின்னர் கவனித்தேன். அதைகுறித்து எனக்கு புகாரெல்லாம் இல்லை நான் அந்த 1 வருடத்தில் எத்தனையோ மாற்றங்களுக்கு உள்ளாகி இருந்தேன் பலவற்றை இழந்திருந்தேன் குறிப்பாக என் சுயசார்பையும் தன்மதிப்பையும் எனவே உடல் மாற்றத்தை  ஒரு பொருட்டாக நினைக்கவே இல்லை.

சரண் என்று பெயரிடுவதில் ஒரு சிக்கல் வந்தது ஆனால் நான் அந்த பெயர் வைக்க உறுதியாக இருந்தேன்,மருத்துவமனையிலேயெ பிறப்புச்சான்றிதழ் வாங்க வேண்டி வந்ததால் அப்பொழுதே பெயர் வைத்தாயிற்று.

அதே உடம்புடன் சரணை எடுத்துக்கொண்டு ஈரோடு செல்லும் சம்பிரதாயம் அங்கே தங்க வேண்டிய சம்பிரதாயம் அங்கிருப்பவர்களும் குழந்தையை பார்க்க வேண்டும் என்னும் சம்பிரதாயம்,

 பச்சை உடம்புக்காரிக்கும் பச்சிளம்சிசுவுக்கும் சில செளகரியங்கள் அடைப்படையான வசதிகள் தேவை பயணத்தை   என் உடல் தாங்குமா என்றெல்லாம் யோசிக்க யாருக்கும் நேரமும் மனமும் இல்லை.  காருக்கு எரிபொருள் போடுவதிலிருந்து மருத்துவ செலவு வரை அம்மா அப்பாவையோ சரண் அப்பாவையோ சார்ந்திருக்கும் புதிய  அவல நிலை என்னை கீழானவளாக உணரசெய்து கொண்டிருந்தது.

பத்திய சாப்பாடு, பால் ஊற சிறப்பு உணவு கருப்பை சுருங்க லேகியம் இவை எல்லாம் நான் இன்னும் கதைகளில்தான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு கிடைக்காதவைகள்  நானிழந்தவைகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக அளிக்க சரண் வந்திருக்கிறான் என்னும் ஒரே எண்ணம் மட்டும் ஆழப்பதிந்திருந்தது.

 அதே உடம்புடன் பச்சிளம்  சரணை எடுத்துக்கொண்டு கோவைக்கு அலைந்து பாஸ்போர்ட் எடுத்து  அவனுக்கு 21 நாள் ஆகி இருக்கையில் அவனை சரியாக பிடித்துக்கொள்ளக்கூட தெரியாத நான் கோவை  விமான நிலையத்திலிருந்து அபுதாபி சென்றேன்.

விமானத்தில் ஒரு மூத்த பணிப்பெண் அவன் தலையை  சேர்த்து பாதுகாப்பாக எப்படி பிடித்து கொள்வது என கற்றுக்கொடுத்தார்

இருக்கையின் முன்பாக ஒரு சிறு தொட்டில், கடைகளில் எடை பார்க்கும் சில்வர் ட்ரே போல இருக்கும் அதில் வெல்வெட் போர்த்தப்பட்டிருக்கும், அதை என் முன்னே கொண்டு வந்து  வைத்தார்கள் அதில் சரணைப் படுக்க வைத்தேன் எனினும் விமானப்பயணம் எனக்கெப்போதும் அளிக்கும் அச்சத்தில் ஒருவேளை விபத்தேற்பட்டால் சரணும் நானும் தனித்தனியே பிரிய நேரிடும் என்று தீவிரமாக யோசித்து அவனை  மடியில் வைத்துக்கொண்டேன்.அவன் பசியாற்றவும் விமான இருக்கையில் பெரும் சிரமம் இருந்ததுஒருவழியாக  அபுதாபி சென்று சேர்ந்தேன்.

அபுதாபி வாழ்வில் தொடர்ந்த இருளிலும் சிறு சுடராக சரணே ஒளியேற்றிக்கொண்டிருந்தான்.

நல்ல உருண்டை முகமும் சுருட்டை தலைமுடியுமாக வளர துவங்கினான். டுட்டூ என்று எதோ ஒரு கதையில் வாசித்த பெயர் எனக்கு பிடித்து அதையே அவன்செல்லப்பெயராக்கினேன், விஜி அவனை டிப்பு குமார் என்று அழைப்பான்

அவனுக்கு அப்போது  நல்ல உணவுகள் அளிக்க முடிந்தது. தாய் பகை குட்டி உறவென்னும் நம் மரபு வேடிக்கையானது.

ஆனால் ஒரு வயதிருக்கையில அவனுக்கு எதனாலோ ஒவ்வாமை வந்தது எப்போதும் வாயுமிழ்தலும் வயிற்றுப்போக்குமாக இருந்து மெலிந்துபோனான்

அந்த குளிருட்டப்பட்ட வீடா, மணற்புயலால் வந்துசேரும் துகள்களா அல்லது உணவா எதுவென்று தெரியவில்லை எனினும் ஒவ்வொருநாளும் அவதிப்பட்டான். ஒவ்வொரு இரவும் நிச்சயம் வாயுமிழ்வான் எனவே அவனுக்கு மூச்சுதிணறிவிடும் என்று பயந்து கண்விழித்துப்பார்த்தபடிக்கே இருப்பேன் எப்போதுமவன் வாயுமிழ்வதை பிடிக்க ஒரு பாத்திரம் படுக்கைக்கு அருகில் இருக்கும்

ஓரிரவு கூட நான் முழுக்க உறங்கி இருக்கவில்லை

 கடற்கரைக்கு சென்று வந்த ஒரு நாள் ஏதோ விஷப் பூச்சி கடித்து அவன் கால்களிரண்டும்  வீங்கி இறுகி விட்டது வலியில் துடிதுடித்தான், ஒரு இந்திய மருத்துவர்  உடனே அவனை ஸ்பெலிஷ்டிடம் காட்ட வேண்டும் என்றார். யாருக்கும் அது என்னவென்றும் எப்படி குணமாக்குவது என்றும் தெரியவே இல்லை

 இந்தியாவுக்கு எத்தனை முறை போன் முயன்றும் அன்று வசந்த உட்பட  யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை, கருத்து நீலம் பாரித்த  கால்களுடன் வீறிட்டு அலறிகொண்டே இருந்த சரணுக்கு ஒரு இளஞ்சிவப்பு லோஷனை தடவியபடி எல்லா கடவுள்களையும் வேண்டிகொண்டு இரவெல்லாம் சுவரில் தலைசாய்த்து மடியில் அவனை போட்டுக்கொண்டு விழிந்திருந்தேன் சரண் அழுதழுது களைத்து உறங்கிப்போயிருந்தான் காலையில் அவன் கால் வீக்கம் வடிந்து தெய்வாதீனமாக முன்பு போல சரியாக இருந்தது,

அவனை கையில் வைத்துக்கொண்டு வீட்டுவேலைகள் துணி துவைப்பது உட்பட செய்து முடித்து குளிக்கப்போகையில் மட்டும் அவனைச் சுற்றி தலையணை  அமைத்துவிட்டு போவேன். என் இன்மையை எப்படியோ கண்டுபிடித்துக் கதற துவங்குவான்.

வீட்டுவேலைகளை  முடித்தபின்னர் அவனை மடியிலிருத்திக்கொண்டு கணினித்திரையில் சுட்டிவிகடனில் சித்திரக்கதைகளை காட்டிக்காட்டி கதை சொல்லுவேன் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பான்

ராய் அவனை உள்ளார்ந்த அன்புடன் சரண் சிங்கே என்றழைப்பார் சரணுக்கு இரண்டு வயதாகும் போது தருண் வயிற்றில்.  அந்த காலகட்டம் மற்றுமோர் கொடுங்கனவு. இந்தியாவுக்கும் அபுதாபிக்குமாக பந்தாடப் பட்டேன். 

கர்ப்பமாக சிறு மகனையும் தூக்கிக்கொண்டு கல்லூரிக்கு ஒருநாள்  மதிய வெயிலில் வந்தேன். செயலாளர் இப்போது மீண்டும் பேராசிரியர் வேலை தரும்படி இல்லை என்றார். மெல்ல மாடிப்படி ஏறி நான் அமர்ந்திருந்த அறை  லேப் எல்லாம் எட்டிப்பார்த்துவிட்டு வந்தேன். லேபில் எனக்கு பதிலாக வந்த கண்ணன் என்பவர் என்னவோ சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தார். வீட்டுக்கு திரும்பி வந்து குளியலறையில் கதறி அழுதேன்.

சரண் ஐந்து வயதாகும் வரை அங்கிருந்தான் அதற்குள் அவனது சிறு சைக்கிளை சைக்கிளுக்கென்றமைக்கப்பட்டிருக்கும் சிறுநடைபாதையில் அவனாக ஓட்டிக்கொண்டு செல்வது  வழக்கமாகி இருந்தது.

1வயது வரை அவன் பேச துவங்கவில்லை பின்னர் மெதுவே மாமா அம்மா அப்பா என துவங்கினான் எப்போதும் புத்தகங்கள் பார்த்துக்கொண்டிருப்பதில் பெருவிருப்பம் கொண்டிருந்தான்.

 வண்ணப்புகைப்படங்களை கண்கொட்டாமல் பார்ப்பான் விமான பயணத்தில் கொடுத்த  பஸில் விளையாட்டு அட்டைகளை அறை முழுவதும் பரப்பி வைத்து  அவற்றின் வடிவங்களை பொருத்தி விளையாடுவதும் ஒரு சிறு நடைவண்டியை அதன் பல விளக்குகள் மினுங்க ஓட்டிச்செல்வதும் பிடிக்கும் அவனுக்கு.

இட்லி தட்டில் எஞ்சியிருக்கும் துணுக்குகள்  அவனது விருப்ப உணவு.

தொடரும்

https://logamadevi.in/wp-admin/post.php?post=3013&action=edit

கடவுள் பிசாசு நிலம்

2022 விஷ்ணுபுரம் விழா அமர்வுகளில் ஒன்றில்தான்  முதன்முதலில் அகர முதல்வனை கண்டேன். அதற்கு  முன்பு அவரைச் சந்தித்ததில்லை.  ஈர நெற்றியில் திருநீற்றுப் பட்டை துலங்க, நெஞ்சு நிமிர்த்தி கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தார். தொடர் கேள்விகளுக்கு அசராத தெளிவான எதிர்வினைகள், இலங்கை என்று சொல்லப்பட்ட போதெல்லாம், ஈழம்  என்ற கறாரான திருத்தல்கள்,   பொருத்தமான இடங்களில்  சைவத்திருமுறைகளின் கம்பீர முழக்கங்கள், போருக்கு எதிரானவன் என்பதை சொல்லுகையில்  குரலில் இருந்த அழுத்தம் என அந்த அமர்வு முடிகையில் அகரமுதல்வனின் மீது பெரும் மரியாதையும் அன்பும் உண்டானது.  அதன்பிறகு என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினேன்.

அவருக்கு என்னை கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற தூரன் விருது விழாவிலேயே தெரிந்திருக்கிறது

முன்பு எப்போதோ ஒரு புலம்பெயர் இலக்கியமொன்றிலிருந்த  பல கவிதைகளில் ’’முருங்கைப்பூ உதிரும் முற்றம் இனி நமக்கில்லை கண்ணே’’ எனும் ஒரு வரி என்னை பல காலம் இம்சித்தது. அந்த உணர்வை, அந்த பிரிவின் வலியை, தாய் மண்ணை, அதிலிருக்கும் தாவரங்களை சொந்த பந்தங்களை,  பிரிவதென்பதின் பெருவலியை அந்த வரி எனக்கு சொல்லிக் காட்டிக் கொண்டே இருந்தது.

திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து 6 வருடங்கள் கொழும்புவில் வசிக்க நேர்ந்த போது நான் கண்ட இலங்கையில் போர்ச்சூழல் தீவிரமாக இருந்தது எனினும் பாதுகாப்பான பகுதியில் இருந்ததால் அதன் குரூரங்கள் எனக்கு முழுக்க தெரிந்திருக்கவில்லை. செய்தித்தாள்கள், பிற ஊடகங்கள் செவிவழிச் செய்திகள் அளித்தவற்றையே உண்மை என கருதினேன்.அவ்வப்போது வேவு விமானங்கள் பருந்தைப்போல வட்டமிடுவதை பார்க்க முடிந்தது.

பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்திருந்தது. ஒரு சுருள் கருவாப்பட்டை வாங்கியபோது அதன் விலை எனக்கு அதிர்ச்சி அளித்தது, ஏன் அத்தனை அதிக விலை? என்று அந்த சிறு கடைக்கரரிடம் கேட்டபோது ’’எல்லாம் போரால்’’ என்றார்.

கொழும்பு வீட்டிற்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து செல்லும் வழியெங்கும் ராணுவ வீரர்கள் மணல்மூட்டை தடுப்புக்கு பின்னால் துப்பாக்கி ஏந்தியபடி நின்றிருப்பார்கள். விசேஷ நாட்களில் வெண் தாமரைகளுடன் புத்தர் ஆலயங்களுக்கு செல்லும் வழியிலும், வீட்டருகிலும் கடைவீதியிலும் எங்கும் ராணுவம் இருந்தது. ஒருமுறை கடைவீதியில் இருந்து வீடு செல்லும் வழியில்  அப்படி ஒரு மணல்மூட்டை தடுப்பின் பின்னர் இருந்த கம்பிவேலி ஒன்றில் செங்காந்தள் கொடி அடர்ந்து படர்ந்து ஏராளமாக மலர்ந்திருந்தது. வழக்கமாக தாவரங்களை கண்டால் உண்டாகும் குதூகலத்துடன் ’’காந்தள் மலர்’’ என்று உரக்க சொல்லி அதை பறிக்க சென்றபோது கடுமையாக குடும்பத்தாரால் கண்டிக்கப்பட்டு வீட்டுக்கு ஏறக்குறைய இழுத்து வரப்பட்டேன். ஒரு மலரின் பெயரை சொல்லியது குற்றமாவென அன்று அது ஒரு பெரும் மனக்குறையாக இருந்தது.

சென்னை புத்தக விழாவில் வாங்கி வந்த சில முக்கிய புத்தகங்களில் அகரமுதல்வனின்  கடவுள் பிசாசு நிலமும் ஒன்று. அதை வாசிக்கையில்தான் அன்று அச்சூழலில் காந்தளின் பொருள் என்னவாயிருந்திருக்கும் என்பதை அறிய முடிகிறது. கண்டியின் அழகும், பேராதனை பல்கலைக்கழக தாவரவியல் தோட்டத்தின்  விரிவும், ரம்புட்டான் மரங்கள் அடர்ந்திருந்த அசங்க ராஜபக்‌ஷேவின் அழகிய வீடும், உதய தென்னக்கோனின் நாலுகட்டு வீட்டின் விசாலமும், மஞ்சுள ரணதுங்கவின் வீட்டின் விதைகளில்லா எலுமிச்சைகளும் எனக்கு அளித்திருந்த நிறைவையும் மகிழ்வையும் கடவுள் பிசாசு நிலம் முற்றிலுமாக துடைத்து அழித்ததோடில்லாமல் அக்காலகட்டத்தில் எனக்கிருந்த மகிழ்வை காட்டிலும் பல மடங்கு அதிக குற்ற உணர்வையும் அளிக்கிறது

அப்போதிருந்த இலங்கையின், யுத்தத்தின் உண்மை நிலவரமென்ன என்பதை இத்தனை காலம் கழித்து அகரன் மூலமாகத்தான் அறிந்து கொண்டிருக்கிறேன்

முதல் பக்கத்திலேயே //ஒரு பெருவேக அழிவுச் சூழலில் விழுந்து அதிலிருந்து பண்பு நலனால் அல்லாமல் நல்லூழ் காரணமாக மீண்டு வந்தவன்// என்னும் நாஜிகள் சித்திரவதைகளுக்கு உள்ளான இத்தலிய யூதரான  பிரைமோ லெவியின் வரிகள் சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வரிகள் அகரனுகும் ஆதீரனுக்கும் முழுமையாக பொருந்துபவை.

போராளிகளுக்கு மரண வீட்டிலும் உணவளிக்கும்  அடைக்கல மாதாவான அன்னையர், வன்முறையை தவிர்க்க வேண்டும் என அன்றாடம் பிரார்த்தனையின் போது சொல்லும்  பள்ளி அதிபர், அம்புலி வளரும் இரவுகளில் சாமியாடி வாக்கு சொல்லும் பூட்டம்மா போன்ற பல வடிவங்களில் இருக்கும் கடவுளரையும்,  மது வெறியில் பைலா பாடல்களை கூச்சலிட்டு பாடிக்கொண்டு, கையறிகுண்டுகளை அப்பாவி சனங்களின் மண்டையோட்டுக்குள் எறியும், பல தந்திரங்கள் செய்து, அமைதி என்னும் போர்வைக்குள் பதுங்கி இருந்த, குருதி வெறி கொண்டிருக்கும் விலங்குகளா,ன அரசின் ஆர்மிக்கார பிசாசுகளையும், குருதியால் சிவந்து,ஓயாது அழுது துயர் புழுதி படிந்திருந்த நிலத்தையும் காணும், படிக்க போகாமல் ’’உந்த ஆர்மிக்காரங்களை கொழும்புக்கு அடிச்சு துரத்த போறேன்’’ என்று சொல்லும் பத்து வயது  ஆதிரனின்  கதையாக விரிகிறது கடவுள் பிசாசு நிலம்

ஒவ்வொரு வரியும் துயரிலும் குருதியிலும் தோய்ந்திருப்பினும் அவற்றையும் தாண்டி கொண்டு கவனிக்கச் செய்கிறது  நூலை உருவாக்கி இருக்கும் அழகு தமிழ் மொழி

போராளியான அண்ணன், வீட்டிற்கு வந்து போய் கொண்டிருக்கும் மற்றொரு போராளி மருதன், அவர் மீது நேசம் கொள்ளும் பின்னர் கால ஓட்டத்தில் போராளியாகும் அக்காள் என ஆதீரனுக்கு குடும்பமே இலங்கையின் போர்ச்சூழலை முழுக்க தெரிவித்துக் கொண்டிருக்கும் அமைப்பாக இருக்கிறது.

ஆர்மிக்காரங்களை எதிர்த்துப் பேசும், எப்போதும் வீடு தங்காமல் சுற்றித் திரிந்து கண்ணில் பட்டவை, காதில் கேட்டவைகளின் மூலம் நாட்டு நடப்பை மேலும் அறிந்து கொள்ளும் ஆதீரனுக்கு இயல்பாகவே போர்க்குணம் உருவாகிறது. போராளியாக வேண்டும் என்று துடிக்கும் ஆதீரனுக்கு அண்ணனின் கைத்துப்பாக்கியின் எதேச்சையான தீண்டல் வேட்கையின் குளிரை உண்டாக்குகின்றது.

பன்னிச்சையடி கிராமத்தின் அத்தனை பேருக்கும் ஆதரவாக, ஆறுதலாக, பற்றிக்கொள்ள பிடிப்பாக, தெய்வமாக இருக்கும் பன்னிச்சை மரமும் ஒருநாள் ஷெல்லடித்து சாம்பலாகிறது. அச்சாம்பலையும் நெற்றியிலிட்டு கொள்ளும் மக்களை, அவர்களின் மரபுகளை, வேர்களை,  வாழ்வின் இயங்கியலை, இடம் பெயருதலை, மரணங்களை, காதலை, நம்பிக்கைகளை, கனவுகளை காட்டுகிறது கடவுள் பிசாசு நிலம்

வாசகசாலைக்கு சென்று வாசிக்கும், போராளிகளோடு நட்பிலிருக்கும், மெல்ல வளர்ந்து வரும், போராளியாக வேண்டும் என ஒவ்வொரு கணமும் விரும்பும் ஆதீரன் பதின்மவயதில் காதல் கொள்கிறான்.

போரை, போராளிகளின் வாழ்வை, குருதியை, குப்பி கடித்தும், வெட்டியும் தூக்கிட்டும்,  கையறிகுண்டிலும் நிகழும் மரணங்களை போரின் துயர்களை, மேலும் பலகொடுமைகளை, இழப்பின் வலியை சொல்லும் அகரனும் அம்பிகையுடனான ஆதீரனின் காதலைச் சொல்லும் அகரனும் ஒரே ஆளுமை என்பதை சிரமப்பட்டுத்தான் நம்ப வேண்டியிருக்கிறது.

பிளவாளுமையாக இருந்தே அவற்றை அகரன்  எழுதியிருக்க முடியும். யுத்தத்தின்  தீவிரத்தை சொல்லும் வேகமும் உணர்வுபூர்வமும் காதலை சொல்லுகையில் பல மடங்கு அதிகரித்து விடுகிறது. அம்பிகாவிற்கும் ஆதீரனுக்குமான காதலை சொல்லுகையில் மற்றொரு அழகிய வடிவெடுத்து விடுகின்றது அகரனின் மொழி

தாகம் பெருகிய வழிப்போக்கனின் கையில் கிடைத்த செவ்விளநீர் போல காதல் ஆதீரனை கைகளில் ஏந்திக் கொள்கிறது பெண்ணின் கண் மொழியில் ஆயிரமிருக்கிறது ஆயுத எழுத்துக்கள் என்கிறான் ஆதீரன். கூழாங்கல் போல அடியாழத்தில் கிடந்து, பின்னர் மெல்ல மெல்ல ஒடும் நீரில் மேலேறி வரும் அம்பிகாவை காண்கையில் ஆதிரனுக்கு காதலைச்சொல்லவும் பொருத்தமாக சைவப்பாடல்களே தோன்றுகிறது. அப்பாடல்களை எல்லாம் அகரனின் கணீர் குரலிலேயே கேட்டேன்.

அம்பிகா எனும் கூழாங்கல்லை சுமந்து ஓடும் நதியாகிறான் ஆதீரன். அம்பிகா கூந்தலை சுழற்றுகையில் ஆதீரனின் ஞானத்தின் பசுந்தரையில் விதை வெடித்து செடி எழுகிறது.ஆதீரனால் முத்தமிடப்படும் அம்பிகா மேலும் வடிவு கொள்கிறாள்.

அம்பிகாவுடனான காதலை சொல்லும் ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு எழுத்தும் இனிப்பில் தோய்ந்திருக்கிறது. இந்த நூலில் அம்பிகா ஆதீரன் பகுதிகளை மட்டும் தனியே வாசிக்க வேண்டுமென்றிருக்கிறேன், நான் வாசித்த  ஆகச்சிறந்த காதல் கதைகளில் ஆதீரன் அம்பிகை கதையுமொன்று

உப்புக்காட்டில் நெடுவல் ராசனுடன் ஆதீரன் செல்லும் உடும்புவேட்டைகள் இதுவரை நான் வாசித்திராத தீவிரத்தன்மை கொண்டிருந்தன. அப்படியொரு வேட்டை குறித்து நான் முன்பெப்போதும் கேட்டிருந்ததுமில்லை

வெயிலில் காய்ந்து நாறும் உடும்பின் தோல்கள், அவற்றால் உருவாக்கப்படும் மேளம், காளி எழுந்து நின்றாடும் நெடுவல் ராசனின் தோள்கள், குப்பைத்தண்ணி வார்த்தல்,சமைந்த பெண்ணுக்கு அருந்த தரப்படும் கத்தரிக்காய் சாறு,  உடன் புக்கை,புட்டும் சொதியும் அப்பங்களும், முசுறு எறும்புகள், மரவள்ளிக்கிழங்கு, மரமடுவங்கள், இதரை வாழைகளும் இலுப்பையடி சுடலைலைக்காடும்,  சம்பா அரிசிச் சோறும் உடும்புகுழம்பும், பச்சை மிளகாய் சம்பலும், பூவரசங்குச்சிகளும்,  பருப்பும், பாகற்காய் குழம்பும், மோர்மிளகாய் பொரியலுமாக நானறிந்திருக்காத இலங்கை  ஆதீரனின் கண்கள் வழியே ஒவ்வொரு பக்கத்திலும் விரிந்து மலர்கிறது. பல் விழும் கனவு  கண்டால் துயர்மிகுந்த ஏதோ நிகழும் என்னும் நம்பிக்கையை போல நமக்கும் பொதுவான சிலவற்றையும் ஆதீரன் மூலமறிய முடிகின்றது.

கணபதிபிள்ளையும், தணிகை மாறனும்,தவா அண்ணனும், பழமும்,  அரிய ரத்தினம் கோபிதனும், பவி மாமனும், தாமோதரம்பிள்ளையும், காந்தியண்ணாவும், அல்லியக்காவும்,  ஓவியனும், கபிலனும்,  ’பட்டாம்பூச்சி’ வாசிக்கும் மருதனும், சலூன் இனியனும்  இலங்கைப்போரின் பல குருர பக்கங்களை காட்டுகிறார்கள். கபிர் அடிக்கும் இடங்களிலிருந்து மனிதர்கள் தொடர்ந்து இடம் பெயருகிறார்கள், எறும்புகள் கூட போரைப்பற்றியே யோசித்துக்கொண்டு மரங்களிலிருந்து கீழிறங்குகின்றன.

நிகழப்போவதை முன்பே யூகிக்கிறாள் பூட்டம்மா, குன்றிமணிகளையும் செங்கற்களையும் அரைத்து மண்ணுக்காய் நஞ்சுண்டு மடிந்த பொன்னாச்சியும் நஞ்சின் மீதியை நிலமுண்ண போகிறது என்கிறாள். வீரச்சாவும், வித்துடல்களும் விழுப்புண்களும் எரிதழல் வெளியில் ஒரு சொல்லைப்போல் அலர்கின்றன.

ஆதீரன் வீட்டிலும் அல்லியக்கா வீட்டிலும் இன்னும் பல வீடுகளிலும் மரணம் அழையா விருந்தாளியாக கதவை திறந்து வந்து கொண்டே இருக்கிறது

அமைதிப் பேச்சுவார்த்தை, சமாதான உடன்படிக்கை எனும் போர்வை களையெல்லாம் கிழித்தெறிந்துவிட்டு யுத்தம் துவங்கி விடுகிறது.  யேசுதாஸ் குரலில் வளர்ந்து கொண்டிருந்த ஒரு காதல் கருகிச்சாகிறது. யார் முதலில் வீரச்சாவடைவது என்று பேசிக்கொள்ளும்  இளவெயினியும் பூம்பாவையும் தூரிகையும் பெண்போராளிகளின் உலகை காட்டுகிறார்கள்.

கிபிர் தாக்குதலும்,  ஷெல்லடிப்பும், இயக்கத்தின் பின்னடைவும்,  விழுந்துகொண்டே இருக்கும் வித்துடல்களும்,அதிகரித்துக்கொண்டே இருக்கும் காயம்பட்டவர்களும், ஊரையே மூடும் கந்தகமணமுமாக ஆதீரன் காட்டும் போர்  உச்சம் மனதை கலங்கடிக்கிறது. அந்த மண்ணில் அப்போது வாழ்ந்த ஆதீரன் மீது கனிவும் தனித்த பிரியமும்  பொங்கிப்பெருகிறது.

யுத்தம் அமைதியை விட மேலானது என்று ஆதீரன் எழுதி வைக்கிறான். எளிய மனிதர்களின் பல வாழ்க்கை கணக்குகளை யுத்தம் தன் கோரக்கரங்களால் கிழித்தெறிகிறது.

அம்பிகையின் இறுதிச்சடங்கின் போது ஆதீரனின் தெளிவையும்,  பூட்டம்மா அடிவயிற்றில் மண் வைத்து நீரூற்ற சொல்வதையும், பன்னிச்சை மரத்துடனும் உப்புக்காட்டுடனும் நடுகற்களுடனும் ஆதீரனுக்கிருக்கும் உணர்வுபூர்வமான பந்தத்தையும் மனமும் கண்களும் கலங்க வாசித்தேன்.

அவ்வளவு நடந்தும் பெண்கள் கூந்தலில் காந்தளைச் சூடும் நாள் வரும், நிலம் விடியும் என்று  கதை முடிகின்றது. தூரிகையின் பதுங்கு குழிக்குள் அசைந்தாடுகிறது ஒரு தளிர்.

நேரடியாக யுத்தத்தை சொல்லாமல், யுத்தப் பின்னணியில் அந்நிலத்தை, அம்மனிதர்களின் வாழ்வை, புலம்பெயர்தலின் அவலத்தை சொல்லும் கதை இது. இதில் எத்தனை உண்மை, எத்தனை புனைவு எத்தனை சொல்லாமல் விடப்பட்டவை  என்பது ஆதிரனுக்கும் அகரனுக்கும்தான் தெரியும் எனினும் இந்நூல் ஒவ்வொரு பக்கம் வாசிக்கையிலும் அளித்த துயரம் நூறு சதவீதம் உண்மை.

இத்தனை உணர்வுபூர்வமாக  புலம்பெயர்ந்தவர்களின், யுத்தத்தின் போராளிகளின்,  இயக்கத்தின், காதலின் கதையை வாசித்ததில்லை.அகரனின் மொழி வன்மை திகைக்க வைக்கிறது.

விஷ்ணுபுரம் விழாவில் அகரனிடம் பேசிக்கொண்டிருக்கையில் அவர்கள் குடும்பத்துக்கு பரம்பரையாக சொந்தமாயிருந்த  வாள் ஒன்றை அவரது பூட்டம்மா போர்ச்சூழலில் எங்கோ மறைத்து வைத்தாரென்றும் அதை பின்னர் ஒருபோதும் கண்டுபிடிக்க  முடியவில்லை என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்.

அது வேறெங்குமில்லை, யுத்தகாலத்திலான தன் வாழ்வை   இத்தனை கனம் கொண்ட  மொழியில் சொல்லும்  அகரமுதல்வனாகத்தான்  அவ்வாள் கூர் கொண்டிருக்கிறது

அம்மாவின் கண்களை கொண்டிருக்கும் பொன்னாச்சி சொல்லியபடியே அகரனின் கால்கள் இனி சோர்வில்லாது நடக்கட்டும். அகரனுக்கு அன்பும் நன்றியும்.

குரங்கு முக ஆர்கிட்

குரங்கு முக ஆர்கிட் மலர்கள்

ஆர்கிடேசி குடும்பத்தை சேர்ந்த ஆர்கிட் (orchid) மலர்கள் அவற்றின் மிக அழகிய வடிவங்களாலும்  நிறங்களாலும் உலகப்பிரசித்தி பெற்றவை. ஆர்கிடேசி குடும்பத்தில் சுமார் 1000 பேரினங்களும் 25,000 சிற்றினங்களும் பல்லாயிரக்கணக்கான் கலப்பினங்களும் உள்ளன

இவற்றில் நிலத்தில் வாழ்வன, மரங்களில் மீது வளர்வன, என பலவகையான வாழிடங்களில் வளர்பவை உள்ளன.ஆர்கிடுகள் ஸ்பாஞ் போன்ற சிறப்பு வேர்களால் காற்றிலிருந்து ஈரத்தை எடுத்துக்கொண்டு உயிர்வாழும்

 பிற தாவர வகைகளிலிருந்து ஆர்கிடுகள் அவற்றின் வண்ணமயமான விதவிதமான  வடிவங்களில் இருக்கும் மலர்களால் வேறுபட்டு பிரபலமடைந்திருக்கின்றன. தோட்டக்கலைத்துறையில் மிக முக்கிய மற்றும் சிறப்பான இடம்பெற்றிருப்பவை ஆர்கிட்மலர்கள் .ஐஸ்கிரீம்களில் நாம் சுவைக்கும் வெனிலா  ஒரு  ஆர்கிடிலிருந்தே பெறப்படுகிறது

ஆர்கிட்மலர்களில் மனிதனைப்போன்றவை, வேற்றுகிரக வாசிகளை போன்றவை, பறவைகள் வண்டுகள் விலங்குகளை போன்றவை நடனமாடும் மங்கையை போன்றவை என  நம் கற்பனைக்கெட்டாத வடிவங்களில் மலர்கள் இருக்கின்றன

இவற்றில் மிகs சிறப்பான ஒன்றும் இந்தியாவின் பல பகுதிகளில் ஆஞ்சனேயர்  மலர் என்று வணங்கப்படுவதும் குரங்கு ஆர்கிட் எனப்படும் Dracula simia, ஆர்கிட்கள்

இவை மரங்களின் மீது தொற்றிப்படர்ந்து வளரும் ஆர்கிடுகள். மலரிதழ்கள் குரங்கின் முகத்தைப்போலவே அமைந்திருப்பது இயற்கையின் ஆச்சர்யங்களில் ஒன்று

ஒவ்வொரு பருவத்திலும் கொத்துக்கொத்தாக மலரும் இவை ஆரஞ்சின் இனிய மணம் கொண்டிருக்கும்

 இந்த குரங்கு முக ஆர்கிடுகள் பெருவின் குளிர்நிரம்பிய காடுகளில் 1000திலிருந்து 2000 மீ கடல்மட்டத்துக்கு மேல் உயரமான இடங்களில் ஏராளமாக காணப்படுகின்றன

இதன் அறிவியல் பெயரின் முதல் பாதி, இதன் புல்லிகளின் இரு நீட்சிகளால் டிராகுலாவின் பற்களை நினைவூட்டுவதால் டிராகுலா என பெயரிடப்பட்டது. அறிவியல் பெயரில் இரண்டாம் பாதி சிமியா என்பது குரங்கை குறிக்கும்

குரங்கு ஆர்கிட் தாவரத்தை தாவர வகைப்பாட்டியலின் தந்தையான லின்னேயஸ் 1881ல் கண்டுபிடித்தார்.   

அமெரிக்காவின் மிஸிஸிப்பி நதிக்கரையோர நகரத்தை சேர்ந்தவரும் ஆர்கிடேசி குடும்பத்தில் முக்கிய ஆய்வுகளை செய்த தாவரவியலாளருமான  Carlyle August Luer, இந்த ஆர்கிடுக்கு இந்த அறிவியல் பெயரை 1978ல் வைத்தார்.

அவரால் இது பல நாடுகளுக்கு அறிமுகமாகி ஆர்கிட் மலர் விரும்பிகள் இதை உலகெங்கிலும் ஆர்வமாக வளர்க்கத் துவங்கினார்கள்

20ம் நூற்றாண்டின் துவக்த்தில் குரங்கு ஆர்கிடுகள் ஏராளமாக சாகுபடி செய்யப்பட்டு பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன

 பல கலப்பின சோதனைகளும் அப்போது செய்யப்பட்டு இதன் நூற்றுக்கணக்கான கலப்பின வகைகளும்  அப்போது உருவாக்காப்பட்டன

இப்போதும் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் பல அமெரிக்க  கடைகளில் இவை விற்பனை செய்யபடுகின்றன, இவற்றை மிக எளிதாக வீடுகளில் வளர்க்லாம்

 குரங்கு ஆர்கிட் மலர்கள் வெண்மை, இளஞ்சிவப்பு ஊதாமற்றும் மண் என பல நிறங்களில் இருக்கும்

  • The Dracula Simia ‘Taylors’  வகை மிக அழகிய  ஊதா நரம்புகளோடும் இளஞ்சிவப்பு மலர்களை கொண்டது
  • The Dracula Simia ‘Enchantment’ வகை அடர் ஊதா நிற இதழ்களில் வெண்திட்டுக்களை  கொண்டிருக்கும்
  • The Dracula Simia ‘Lilac Fire’  வகை மிக பிரகாசமனது இது இளஞ்சிவப்பில் வெண்கோடுகள் கொண்டிருக்கும்
  • The Dracula Simia ‘Mystic’ வகை மிக மிக அழகிய ஆழ்ந்த ஊதா மற்றும் இளஞ்சிவப்பு நிற இதழ்களில் வெள்ளை மற்றும் மஞ்சள் தீற்றல்களுடன்  காணப்படும்

தாவரவியல் குறித்த அடிப்டை அறிவு இல்லாத சிலரும், வம்புகளையும் வதந்திகளையும், பொய்ச்செய்திகளையும் சமூக ஊடகங்களில் பரப்பும் விஷமிகளும் இந்த குரங்கு ஆர்கிட்மலர்கள் 100 வருடத்துக்கு ஒருமுறைமலரும் அபூர்வகை மலர் என்றெல்லாம் செய்திகளை பகிர்கிறார்கள். இதன்  மலர்வடிவம் குரங்கின் முகம் போன்றிருப்பது மட்டும்தான் உண்மை, இவையும் பிற தாவரங்களை போலவே அவற்றிற்குரிய  பருவங்களில் தொடர்ந்து மலர்பவைதான்.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் அந்நியசெலவாணி ஈட்டுதலில் மிக முக்கிய இடம்பெற்றிருக்கும், உயர்ந்து கொண்டே இருக்கும் ஆர்கிட் சந்தை 2028ல்   அமெரிக்க டாலர்களில் 363.2 மில்லியனை எட்டும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

 ஆர்கிட் வளர்ப்பு மிகுந்த லாபம் தரும் ஒன்றாக இருக்கும் இந்தியாவில் அருணாச்சலபிரதேசம் ஆர்கிட் சாகுபடியில் முன்னணியில் இருக்கிறது. அருணாச்சலபிரதேசம் ஆர்கிடுகளின் இந்தியசொர்க்கம் என அழைக்கப்படுகிறது. சிக்கிம்மில் இருந்து மட்டும் சுமர் 560 வகையான ஆர்கிடுகள் பிற நாடுகளுக்கு எற்றுமதியாகின்றது

மலர் உணவு-Floraphagia

 மனிதர்களின் வாழ்வில் மலர்கள் பிரிக்க முடியாத அங்கமாகி விட்டிருக்கின்றன. பண்டைய காலத்திலிருந்தே உலகின் அனைத்து நாகரிகங்களும் இறைவழிபாட்டில், பண்டிகைகளில், மங்கல நிகழ்வுகளில் பிறப்பு,இறப்பு திருமணம் உள்ளிட்ட  சடங்குகளிலும் தலையில் சூடிக் கொள்ள, மாலையாக,  மருந்தாக, மகிழ்ச்சிக்காக,  அழகுக்காக, பரிசளிக்க என்று பலவிதங்களில் மலர்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். மலர்களின் பொருள் என்னவென்பதை சொல்லும் மலர்மொழி உலகெங்கிலும் புழக்கத்தில் இருக்கிறது. மலர் மருத்துவமும் அனைவரும் அறிந்ததே.

 இவற்றோடு  இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பல வகையான மலர்கள் சமையலில் சேர்த்துக் கொள்ளப்பட்டு உண்ணப்படுகிறது.  ஆங்கிலத்தில் Edible Flowers-EF என்று குறிப்பிடப்படும் இம்மலர்கள் பல தாவர குடும்பங்களை சேர்ந்தவை. இவற்றில் பல சமைக்கப்படுகின்றன, ஒரு சில மலர்கள் சமைத்த பிற உணவுகளின் மீது அலங்காரம் செய்ய பயன்படுகின்றன மேலும் பல அப்படியே சமைக்காமல் உண்ணப்படுகின்றன. மருத்துவ காரணங்களுக்காகவும் அவற்றின் சுவைக்காகவும் மலர்களின் பிரத்யேக சத்துக்களின் பொருட்டும் இவை உணவாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

பண்டைய ரோமானிய கிரேக்க, சீன மூலிகை மருத்துவர்கள் மலர்களின் உணவுப் பயன்பாட்டைக் குறித்தும் அவற்றால் குணமாகக்கூடிய நோய்களையும் விளக்கி இருக்கின்றனர். தொல்குடிகளான அஸ்டெக்குகள், இன்க்காக்களும் மலர்களை உணவாக எடுத்து கொண்டிருக்கின்றனர். இந்து மதம் உள்ளிட்ட பல மதச்சடங்குகளில் மலர்கள் உண்ணப்படுகின்றன. மெக்ஸிகன் பழங்குடியினர் பலநூற்றண்டுகளாக மலர்களை உண்டு வந்திருக்கின்றனர்.

மலர் உண்ணுதலை முதன் முதலாக  ‘floriphagia’ என்னும் சொல்லால் 2013ல் Lara-Cortés என்பவரின் குழுவினர் குறிப்பிட்டனர்.

சாமந்தி மலர்களை ரோமானியர்கள் உணவில் குங்குமப்பூ நிறம் கிடைக்க பயன்படுத்தி இருக்கிறார்கள். இப்போதும் சாமந்திப்பூ ’’ஏழைகளின் குங்குமப்பூ’’ என்று அழைக்கப்படுகிறது. குங்குமப்பூவில் கலப்படமாகவும் இம் மலரிதழ்கள் பயன்படுகின்றன.

ரோஜா இதழ்கள் பல பண்டைய நாகரிகங்களில் உணவுக்கு சுவை மணம் நிறம் அளிக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இன்றும் ரோஜா பன்னீரும் குல்கந்தும் இனிப்புகளும் நம்மிடையே பிரபலமாக இருக்கிறது. செம்பருத்தி தேநீர் சில வருடங்களாக பசுமை மருத்துவத்தின் மூலம் தென்னிந்தியாவில் பிரபலமாகி வருகிறது.

17ம் நூற்றாண்டில் வயோலா என்னும் அடர் ஊதா மலர், திரவ மருந்துகளுக்கும்  மதுபானங்களில் நிறமூட்டவும் பயன்படுத்தப்பட்டது.

இந்தியாவில் மட்டும் சுமார்  35 வகையான மலர்கள் உண்ணப் படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆர்டிசோக் எனப்படும் மலரரும்புகள் (Cynara scolymus). காலிஃப்ளவர் என்னும் பூக்கோசு (Brassica oleracea var. botrytis) புராக்கலி என்னும் பச்சைபூக்கோசு (Brassica oleracea var. italica), வாழைப்பூ, அகத்திப்பூ, முருங்கைப்பூ ஆகியவை பலரும் அறிந்திருக்கும் உணவில் சேர்க்கப்படும் மலர்கள்.  ஸ்ட்ராபெரி, கடுகு மற்றும் கொத்துமல்லி மலர்களும் உண்ணக்கூடியவையே.

 தாமரை மலரிதழ்கள் சீனா, ஜப்பான் மற்றும் இந்தியாவில் காஷ்மீரில் உண்ணப்படுகின்றன. இவற்றை தேநீர் தயாரிப்பில் அதிகம் உபயோகிக்கிறார்கள்.

 தாய்லாந்தில் சாமந்தியின் ஒரு வகையான டாஜிடஸ், காகித மலர் மற்றும் கேந்தி மலர்கள் உண்ணப்படுகின்றன. அமெரிக்காவில் டாஜிடஸ், அலரி எனப்படும் ஃப்ராங்கி பானி மலர்கள் மற்றும் கற்றாழை மலர்கள் உண்ணப்படுகின்றன. பிரேஸிலில் வாழைப்பூவுடன்  பூசணிப் பூவும் உண்ணப்படுகிறது.

மிகச்சாதாரணமாக பார்க்க முடிகின்ற சிறு வெண்ணிற டெய்ஸி மலர்கள் விழாக்கால விருந்துகளில் உணவுகளை அலங்கரிக்கவும் உணவுகளோடு சேர்த்து உண்ணவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Tisanes எனப்படும்  பருவ கால உலர் மலரிதழ்களில் உண்டாக்கப்படும் தேநீர் சர்க்கரை நோய் உள்ளிட் பல நோய்களுக்கான சிகிச்சையில் அதிகம் பயன்படுத்தபடுமொன்று

தென்தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் பொன்னாவாரை மலர்களில் தேநீர் தயாரித்து அருந்துவார்கள். நீலத்தேநீர் எனப்படுவது சங்கு புஷ்ப த்திலிருந்து உண்டாக்கப்படும் மருத்துவ குணங்கள் மிக்க நீலத்தேநீர். சங்கு புஷ்ப அரும்புகள் தாய்லாந்தில் அரிசியுடன் வேகவைக்கப்பட்டு நீலச்சோறு உண்டாக்கப்படுகிறது.

குங்குமப்பூவின் மூன்று சூலகமுடிகள் மட்டும்தான்  குங்குமப்பூ என சந்தை படுத்தப் பட்டிருக்கிறது. சோம்பு மலர்கள் சூப்’களில் புத்தம் புதிதாக சேர்க்கப்படுகின்றன. குழந்தையின்மைக்கு தீர்வாக சிலரால் நள்ளிருள் நாறி என்றும் நிஷாகந்தி, பிரம்மகமலம் என்றும் அழைக்கபடும் மலர்  உண்ணப்படுகின்றது.

கொரியாவில் Hwajeon எனப்படும் அரிசிமாவு இனிப்பொன்றில் அந்தந்த பருவ கால மலர்கள் சேர்க்கப்படுகின்றன. பிரபல நறுமணப்பொருளான கிராம்பு எனப்படுவது அம்மரத்தின் முதிரா மலர் அரும்புகள் தான், ஆக்ஸாலிஸ் எனப்படும் புளியாரைக்கீரை மலர்களும் உண்ணக்கூடியவைதான்..

அனைத்து மலர்களும் உண்ணத்தக்கவை அல்ல என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும் தாவரங்களில் பல நச்சுத்தனமை கொண்டவை எனவே நன்கு அறிந்திருந்தால் மட்டுமே புதிய தாவர வகைகளின் மலர்களை உண்ண வேண்டும். இன்னும் சில உண்ணப்படும் தாவர மலர்களில் நச்சுப்பொருட்கள் இருப்பதால் மிக குறைந்த அளவிலேயே அவை உண்ணப்படவேண்டும்.

உதாரணமாக ஆப்பிள் மலர்கள் உண்ணக்கூடியவையே எனினும் அவற்றின் சயனைட் நஞ்சைப்போன்ற நஞ்சு இருப்பதால் மிக மிக குறைவான அளவிலேயே அவற்றை உண்ணவேண்டும். அதுபோலவே வயோலா மற்றும் பொராஜ் மலர்கள் சிறுநீர் பெருக்கும் இயல்புடையவை என்பதால் கவனமாக அவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் நஞ்சுகொண்டிருப்பவை  மட்டுமலல்ல. குறிப்பிடட்ட சில விளைவுகளை உண்டாக்கும்  வேதிப்பொருட்களை  கொண்டிருக்கும் மலர்களும் இருக்கின்றன.

பல வகையான மலர்கள் உண்ணத்தகுந்தவை மேலும் பல மலர்களின் உண்ணும் தன்மை இப்போது ஆராயப்பட்டு கொண்டிருக்கிறது. காய்களையும் கனிகளையும் இலைகளியும் வேர்க்கிழங்குகளையும் போல மலர்களையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் அவற்றில் நஞ்சு கொண்டிருப்பவை, பல முக்கிய வேதிப்பொருட்களை கொண்டிருப்பவை எவையெவை என அறிந்து கொண்டு அவற்றை தவிர்த்துவிட்டு மற்றவற்றை உண்ணலாம்

  • உண்ணக்கூடிய மலர்களை குறித்து மேலும் தெரிந்து கொள்ள Monica Nelson Adrianna Glaviano ஆகிய இருவர் இணைந்து உருவாக்கிய நூற்றுக்கணக்கான உணவு மலர்களை குறித்த பிரபலமான Edible Flowers: How, Why, and When We Eat Flowers  என்னும் நூலை வாசிக்கலாம்.
  • மேலதிக தகவல்களுக்கு:https://www.healthline.com/nutrition/edible-flowers#TOC_TITLE_HDR_6

மரம் தழுவுதல்

பழந்தமிழ் இலக்கியங்கள் சதங்கை அணிந்த இளம்பெண்கள் கால்களால் உதைத்தால் மட்டுமே மலரும் மரங்களை குறிப்பிடுகின்றன.

தன் கணவனை காணாமல் துயருற்ற தமயந்தி ஒரு மரத்திடம் தான் சென்று புலம்புகிறாள்.

தான் விளையாட்டாக மணலில் புதைத்து வைத்த புன்னை விதை முளைத்து செடியாகிவிட்டது, தனக்கு சோறூட்டுகையில் அச்செடிக்கும் ஊட்டுவதாக தாய் பாவனை செய்வாள். எனவே என்னுடன் வளர்ந்த அப்புன்னை மரம் தன் தங்கை அதனருகில் தலைவனுடன் காதல் செய்ய நாணம் கொள்கிறேன் என்னும் தலைவியொருத்தியையும் நாம் அறிவோம்

நம் முன்னோர்கள் இயற்கையுடன் கொண்டிருந்த அணுக்கமும் பந்தமும் நம்மிடையே முற்றிலும் இப்போது இல்லை

இயற்கையை அறிந்துகொள்ளுதலின் குறைபாடென்னும் (nature deficit disorder) பெருநோய் உலகை பீடித்திருக்கிறது.இதற்கு தீர்வாக பல நாடுகள் பல முன்னெடுப்புக்களை கடந்த சில ஆண்டுகளாக துவங்கி இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் மரம் தழுவுதல்.

21 மார்ச் 2017’ல் கேரளா திருவனந்தபுரத்தை சேர்ந்த 4620 மக்கள்  மரங்கள் மற்றும் காடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி என் மரம் என் வாழ்வு என்னும் முழக்கத்துடன்,மரங்களை தழுவிக்கொள்ளும் பிரம்மாண்ட நிகழ்வில் ஈடுபட்டார்கள். அந்த நாள் சர்வதேச  வன நாள் ஆகையால் அந்நிகழ்வு பெரும் கவனம் பெற்றது . அதில் பங்கு பெற்றோர் குறைந்தபட்சம் 60 நொடிகளாவது  மரங்களை ஆரத்தழுவிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இது கின்னஸ் சாதனையாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது

இது போன்ற நிகழ்வுகளுக்கு செப்டம்பர் 12  1730’ல் நடந்த ஒரு வரலாற்று நிகழ்வு முன்னுதாரணமாக இருந்தது. வடஇந்தியாவின் தார்பாலைப்பகுதியின் ஒரு கிராமத்தில் தாவரங்களையும் காடுகளையும் வழிபடும் பிஷ்னோய் மார்க்கத்தை சேர்ந்த 294 ஆண்கள்  மற்றும் 69 பெண்கள் அப்பகுதி அரண்மனை கட்டுமானத்திற்காக பாலையின் பசுமைக்கு காரணமாகவும், கால்நடைகளுக்கு தீவனமாகவும் இருந்த  பல நூறு வன்னி மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்தார்கள். அனைவரும் மரம் வெட்ட வந்தவர்ள் முன்பு மரங்களை ஆரத் தழுவிக்கொண்டு போராடினார்கள்.  போராட்டத்துக்கு அம்ரிதா தேவி என்னும் பெண் தலைமை தாங்கினார். மரங்களை வெட்டக் கூடாது என்று தழுவிக்கொண்டு போராடிய அம்ரிதா தேவி அவரது மூன்று மகள்கள் உள்ளிட்ட 300 போராட்ல்டகாரர்கள் அன்று வெட்டிக்கொல்லபட்டார்கள்.

 அதுவே ’தழுவுதல்’ என்னும் பொருள் கொண்ட 1970களில் துவங்கிய  சிப்கோ இயக்கத்துக்கும் முன்னுதாரணமாக அமைந்தது. உத்திரபிரதேசத்தில் துவங்கிய சிப்கோ இயக்கம் மர சத்தியாகிரகமென்னும் பெயரில் இந்தியாவெங்கும் வேகமாக பரவியது. இன்றும் மரம் தழுவுதல் ஒரு சிகிச்சையாகவும் வழிபாட்டு முறைகளிலொன்றாகவும் உலகின் பல பகுதிகளில் நடைபெறுகின்றது.

சிப்கோ போராட்டம்

மனிதர்களுக்குத்தான்  மரம் தழுவுதல் என்பது புதிய விஷயம், ஆனால் விலங்கினங்களுக்கு மரம் தழுவுதல் என்பது இயற்கையிலேயே அவை அறிந்திருக்கும்  ஒன்று.

தென்னமரிக்காவின் அசையாக்கரடி (sloth), கோலா கரடிகள், புலி, பூனை, அணில்,பாண்டாக்கள் மற்றும்  ஒராங்குட்டான்கள் மரம் தழுவுதலை அறிந்திருக்கின்றன..

.

2014ல் நடந்த ஒரு ஆய்வு இவ்விலங்குகளில் கோலா கரடியே மிக அதிகமாக  மரம் தழுவும் விலங்கு என்கிறது.

மர உச்சியில் வாழும் கோலா கரடிகள் தங்கள் உடலை குளிரச்செய்ய மரங்களை தழுவிக்கொள்கின்றன.

மரங்களின் உள்ளே எப்போதும் நீரும் , திரவ வடிவில் உணவும் சாற்றேற்றம் எனப்படும் தொடர் நிகழ்வாக நடந்துகொண்டே இருப்பதால், விலங்குகள் மரங்களை தழுவிக்கொள்ளுகையில் அவற்றின் உடலெப்போதும் குளிர்ச்சியாக இருக்க இது மிக உதவுகிறது. அகசிவப்பு கதிர் புகைப்படங்கள் மரங்களை தழுவிக்கொள்ளும் விலங்குகளின் உடல் வெப்பம் குறைவதை காட்டுகின்றன.

உலகின் பல்வேறு  நாடுகளும் மரம் தழுவும் நிகழ்வினை சூழல் பாதுகாப்பின் பொருட்டு முன்னெடுத்து நடத்துகின்றன. இந்நிகழ்வில் பெரும்பாலும் பள்ளிக்குழந்தைகள் பங்கேற்பதில் கவனம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

மரம் தழுவுதல் என்பது ஒரு சிகிச்சையாகவும் நடைபெறுகிறது.உணர்வுபூர்வமான சமயங்களில் நம் உடலில் சுரக்கும் ஆக்ஸிடோசின் (Oxytocin) என்னும் ஹார்மோன் மரம் தழுவுகையிலும் உருவாவது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது 

மரத்தை அணைத்துக் கொள்ளும்  மனிதர்களின் மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி பெருகுகிறது.  மரங்களை இறுக அணைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் பேரியற்கையின்  ஒரு பகுதியாக அவர்களை மனப்பூர்வமாக உணர்கிறார்கள். 

வழக்கமான புத்தாண்டு கொண்டாட்டங்களான வழிபாடு, கேளிக்கை மற்றும் விருந்துகளுடன் இவ்வாண்டில் இருந்து குடும்பத்துடன் மரம் தழுவுதலையும் இணைத்துக்கொள்ளலாம்.அதுவே குடு்ம்ப ஆரோக்கியம், உடலாரோக்கியம் மற்றும் சூழலாரோக்கியதுக்கான இன்றியமையாத சிகிச்சை.

வீடுகளில் வளர்க்க முடியாதவர்கள் , மனம் இல்லாதவர்கள் சுற்றுப்புறங்களிலும், சாலையோரங்களிலும், வனப்பகுதிகளிலும் காணப்படும் பெரு மரங்களையாவது ஆரத்தழுவிக்கொள்ளலாம்.

நேபாளத்தில் 2014ல் புத்த துறவிகள், அரசியல் தலைவர்கள்,பள்ளிக்குழந்தைகள், உள்ளிட்ட 2000 பேர் மரம் தழுவினர். பல நாடுகளில் இதுபோன்ற நிகழ்வுகளை கின்ன ஸ் சாதனைப் புத்தகத்தில் குறிப்பிடுவதன் பொருட்டு விண்ணப்பிக்கிறார்கள்.

« Older posts Newer posts »

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑