டிசம்பர் கடைசி வாரத்தில் ஒரு நாள் அகரமுதல்வனிடமிருந்து அழைப்பு. பேசிக்கொண்டிருக்கையில் தான் திருவண்ணாமலையில் இருப்பதாகவும்,ஒரு வேள்விக்கான இடம் தேடிக்கொண்டிருப்பதாகவும் சொன்னார். வேள்வி எனும் சொல்லையே நான் காதால் யார் சொல்லியும் அதுவரை கேட்டிருக்கவில்லை
வெண்முரசில் பாஞ்சாலி தோன்றியதாக சொல்லப்படும் துருபதனின் வேள்வியிலிருந்து அஸ்தினாபுரத்தில், இந்திரப்பிரஸ்தத்தில் நிகழ்ந்த ராஜசூய வேள்விகள் மகா புருஷமேத வேள்வி வரை விலாவாரியாக வாசித்தறிந்திருக்கிறேன், எனினும் யாரும் ’வேள்வி’ என சொல்லிக் கேட்டதே இல்லை. ஆர்வமாக அதை குறித்து விசாரித்தேன் விளக்கமளித்தார் ’’வருகிறீர்களா தேவி’’? என்றும் கேட்டார்?
அகரமுதல்வன் மீது எனக்கு பெருமதிப்பும் அன்பும் எப்போதுமுண்டு. நான் பிரமித்து பார்த்துக்கொண்டிருக்கும் வெகுசிலரில் அகரனும் ஒருவர். நான் அது வரையிலும் திருவண்ணாமலைக்கு சென்றதில்லை. கிரிவலம், பெருஞ்சோதி ஏற்றுதல், இளையராஜா, ரமண மகரிஷி, துறவிகள், ஜெயமோகன் என்று அத்தலத்துடன் தொடர்புடைய சில விஷயங்கள் மட்டுமே துண்டு துண்டாக என் நினைவுகளில் இருந்தன. மேலும் வேள்விகளை அத்தனை தீவிரமாக வாசித்தவளாகையால் அதைப் பார்க்க வேண்டும் என விரும்பினேன்.
எல்லாவற்றைக்காட்டிலும் ’’வருகிறீர்களா தேவி?’’ என்பதை ஒரு தெய்வ விளி என்றே எடுத்துக்கொண்டேன், ஒரு திருத்தலத்திற்கு வருகிறாயா? என்றென்னிடம் எப்போது கேட்கப்பட்டாலும் கேட்பது தெய்வமென்றே நம்புவேன். தம்பியும் நானுமாக கலந்து கொள்வதாக சொன்னேன்.
5ம் தேதி அதிகாலை 4 மணிக்கு முந்தின நாள் தான் பணியில் இணைந்திருந்த புதிய ஓட்டுநருடன் நல்ல மழையில் புறப்பட்டு திருப்பூர் சென்று விஜியை அழைத்துக்கொண்டு திருவண்ணாமலை நோக்கி பயணித்தோம். ஊரை நெருங்கும் முன்னரே குறிஞ்சி பிரபா அவ்வப்போது அழைத்து எங்கிருக்கிறோம் என கேட்டுக்கொண்டார். குறிஞ்சிப்பிரபாவையும் நான் அன்றுதான் முதன் முதலாக சந்திக்கவிருந்தேன். அவர் பெயர் மட்டுமே எனக்கு பரிச்சயம்.
அழைப்பிதழில் அதீனா ஹோட்டலுக்கு முன்பாக வேள்வி நடைபெறும் என்றிருந்ததால் நேரே அங்கேயே சென்றோம். அதீனா ஹோட்டலுக்கு எதிர்புறம் ஒரு பிரம்மாண்டமான வண்ணமயமான கோவிலிருந்தது. வழக்கம் போல் கன்னத்தில் போட்டுக் கொண்டேன். தம்பி விஜி சொல்லித்தான் அது அசல் கோவிலல்ல, கோவிலைப்போன்ற அமைக்கப்பட்டிருக்கும் வேள்விப்பந்தலென்று.
என் மனதில் இருந்த வேள்வி என்னும் சித்திரத்துக்கு மிக பொருத்தமான ஒரு பந்தல் அங்கிருந்தது. மாபெரும் பந்தல் அது. மிக சிறப்பாகவும் மிக கவனமுடன் அமைக்கப்பட்டிருந்தது. வேள்விச்சாலையும் அப்படியே!
காரில் இருந்து இறங்க இறங்கவே குறிஞ்சி பிரபா அறிமுகப்படுத்திக்கொண்டார். உற்சாகமான இளைஞர். அவரைப்போலவே காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பணியாற்றிக்கொண்டிருந்த பலரையும் அங்கு பார்த்தேன். வேள்வியை நிகழ்த்தும் தன் மாமனிடம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார்.
ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து சூழ்ந்திருந்த துடியான இளைஞர்களிடம் என்னவோ கவனமாக சொல்லிகொண்டிருந்தவர் குறிஞ்சி பிரபா என்னைக்காட்டி ஏதோ சொன்னதும் நான் அவரருகில் செல்லும் முன்பு அவராக எழுந்துவந்து ’’நான் குறிஞ்சி செல்வன் வாங்க’’ என்று வரவேற்றார். குறிஞ்சி என்பது ஒருவேளை குடும்பப்பெயராக இருக்கும் என்று எண்ணிக்கொண்டேன்.
உடனேயே ’’அம்மாவுக்கு ஒரு சேர் போடுங்கப்பா’’ என்று பிறரை பணித்தார். பின்னர் நாங்கள் தங்குமிடம் குறித்து தகவல் சொல்லிவிட்டு பிற வேலைகளை பார்க்கச்சென்றார்.
வேள்விக்கான முன்னேற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. குறிஞ்சி பிரபாவிடம் பேசிக்கொண்டிருக்கையில் தான் அம்மகத்தான மனிதரைக் குறித்து அறிந்து கொள்ளத் துவங்கினேன். அவர் தன் தாய்மாமன் என்றும் ஜப்பானில் தொழில்செய்பவரென்றும் ஜோதிடக்கலை வல்லுநரென்றும் இந்த வேள்வியை பல வருடங்களாக பெருஞ்செலவில் பொதுநன்மைக்காக நடத்திக்கொண்டிருக்கிறார் என்றும் சொன்ன பிரபா மாமனின் பெயரான குறிஞ்சியைத்தான் தன் பெயருக்கு முன்னர் வைத்து கொண்டிருக்கிறார்.
தான் அணிந்திருந்த கருப்புச் சட்டையை தொட்டுக்காட்டி ’’இந்த சட்டையை நான் போட்டுகிட்டு இங்கே உட்கார்ந்திருக்கேன்னா அது மாமாவால்தான்’’ என்றார்.
வியப்பாக இருந்தது. அகரமுதல்வனிடம் இதை சொல்லுகையில் ’’பிரபா மட்டுமல்ல அவரது ஊருக்கு போனால் அந்த கிராமமே அவர் பெயரைத்தான் தன் பெயருக்கு முன்னால் போட்டுக்கொண்டுருக்கும். அத்தனைக்கு உணர்வுபூர்வமான பிணைப்பை தன் சுற்றத்தாருடன் கொண்டவர் அவர்’’ என்றார்.
நேற்றும் இன்றும் இருநாட்களாக அவ்வேள்வியில் கலந்துகொண்டது என் வாழ்வின் ஆகச்சிறந்த அனுபவம் என்றால் திரு குறிஞ்சி செல்வன் அவர்களை அறிந்துகொண்டது அதற்கிணையான அனுபவம்.
இத்தனை வருட வாழ்வில் கீழ்மைகளை மிக அருகிலென பலமுறை சந்தித்திருக்கிறேன். ஆனால் மானுட மனம் செல்லும் உச்சங்களை, அகவிரிவுகளை இப்படி அரிதாகவே காண்கிறேன். திரு குறிஞ்சி செல்வன் அவர்களின் எளிமை, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கவனம், வருபவர்களை ஒன்றுபோல அவர் கவனித்த விதம், அத்தனை பெரிய நிகழ்வில் மிக நுண்மையாக ஒவ்வொன்றையும் நோக்கிக் கொண்டிருக்கும் அவரது கூர்மை என வியந்து பார்த்துக் கொண்டிருந்தேன். சினிமாத்துறை உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் அவரது அழைப்பின் பேரில் வேள்வியில் கலந்து கொள்ள வந்திருந்தனர். மாபெரும் நிகழ்வது.
வெண்முரசு வழியே நான் அறிந்திருந்த வேள்விகளிலொன்றை அப்படியே அச்சு அசலாக நேரில் கண்டேன். மிகச்சிறப்பான வேள்விப்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. பார்வையாளர்கள் பகுதியில் உட்கூரை அலங்காரங்கள் வண்ணமயமான துணிகளில் மலர்வடிவில் அமைந்திருந்தது. வேள்வி நடைபெற்ற இடங்களில் உலோகக் கூரை, புகை உள்ளே நிறையாத உயரத்தில் புகை வெளியேறுவதற்கான தேவையான இடைவெளிகளுடன் கச்சிதமாக அமைக்கப்பட்டிருந்தது. வேள்விப்பந்தலை அமைத்தவரை சந்தித்த போது, கோவிலென்றே எண்ணி கன்னத்தில் போட்டுக்கொண்டதை அவரிடம் சொன்னேன். நாற்காலிகள் போதுமான அளவில் காத்திருந்தன.
எல்லாவேளையும் மிகச்சிறப்பான உணவு மனமுவந்து பரிமாறப்பட்டது.
சோளப்பொறியும் ஐஸ்கிரீமும் குழந்தைகளுக்கென வெளியே கிடைத்தது. ஏறக்குறைய என் வயதிலிருந்த ஒருவர் மூன்று சோளப்பொறி கூம்புகளை ஒரே சமயத்தில் வாங்கி மகிழ்ந்து சாப்பிட்டு கொண்டிருந்ததை பார்த்தேன். விழாக்கள் அனைவருக்குள்ளிருக்கும் குழந்தைகளை வெளியே கொண்டு வந்துவிடுகிறது
திரு குறிஞ்சி செல்வன் அவர்களின் மானசீகமான ஆயிரம் கைகளாக அங்கி பலநூறு இளையோர் இயங்கிக்கொண்டிருந்தனர். அவரைக்குறித்து பலரும் பேசிக் கொண்டிருந்தனர். அவரது சுற்றத்தார் மீது அவர் கொண்டிருக்கும் அக்கறையும் அன்பும் ஆச்சரியமளித்தது
சில ஆண்டுகளுக்கு முன்பாக முதன் முதலில் குடும்பத்தில் ஒரு தொழில் துவங்கினோம். அதற்கு எனது மூத்த சகோதரரும் பெருந்தொழிலதிபருமானவரையும் அழைத்திருந்தேன். அவரிடம் நிதி உட்பட எந்த உதவியும் நாங்கள் கேட்டிருக்கவில்லை. அவரின் தங்கை குடும்பத்தின் முதலடியின் போது மூத்தவராக அவரது ஆசிகளும் உடனிருக்கட்டும் என விரும்பினேன். துவக்க நிகழ்வன்று அவர் மட்டும் வந்திருந்தார். ’’அண்ணா, அண்ணி வரலையா? என்னும் சம்பிரதாயமான என் கேள்விக்கு இதுக்கெல்லாம் நான் வந்ததே பெரிது’’ என்றார். குன்றிப்போனேன்.
ஆறவே ஆறாமல் பச்சைக்குருதி வீச்சத்துடன் இருந்த அக்காயத்துக்கு குறிஞ்சி செல்வன் எப்படியோ அன்று மருந்திட்டார். மறுபிறவி என்னும் சாத்தியம் இருப்பின் அவருக்கு சகோதரியாக பிறக்க வேண்டும். இப்படியோர் கனிந்த அன்பில் திளைத்திருக்க வேண்டும்
குடும்ப மூத்தவராக உயர்ந்தநிலையில் இருக்கும் ஒருவர் சொந்த பந்தங்களுக்கும் பிறருக்கும் என்ன செய்யவேண்டுமோ அதை மனமுவந்து செய்துகொண்டிருந்தார்.
வேள்வி மிக பிரம்மாண்டமாக, மிகச் சிறப்பாக நடந்தது. சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலின் தீக்ஷிதர்கள் நூற்றுக்கணக்கில் வந்திருந்து வேள்வியை நடத்திக்கொடுத்தனர். வேள்வித்தலைவராக இருந்தவர் அதற்கென்றே பிறந்து வளர்ந்தவர் போல நல்ல உயரமும் ஆகிருதியும் தேஜஸும் கணீர் குரலுமாக பொருத்தமாக இருந்தார். அவ்வேள்வியை ஒரு நிகழ்த்துகலையைபோல நம்மமுடியாத அளவிற்கான சிரத்தையும் ஈடுபாடுமாக செய்து முடித்தார்.
பூரணாகுதியின் போது சொல்திகழ்ந்த அவரது குரலும் எரிகுளத்தில் இடப்பட்ட பொருட்களும் சிவகோஷங்களும் ஒரு நடனம் போன்ற அவரது கையசைவுகளுமாக உடல்மெய்ப்புக்கொண்டது.
அவரை மானசீகமாக பலமுறை வணங்கிக்கொண்டேன்.வேள்விச்சாலை மிகச்சரியாக இறைஉருவங்களும் கர்ப்பகிரஹமுமாக தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது. அம்மன்களின் புடவைக்கட்டு அனைத்துப்பெண்களின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது.அதுவும் அந்த தாமரை மலர் நிறத்தில் கரையிட்ட வெண்பட்டு அமோகமாக இருந்தது.
வேள்வியின் துவக்கத்தில் பொற்கதவுகள் திறக்கப்பட்டு முழுஅலங்காரத்திலிருந்த கடவுளுக்கு தீபாராதனை காட்டப்பட்ட போதும் உடல் மெய்ப்புகொண்டது
தீக்ஷிதர்கள் அனைவருமே மிகச்சிறப்பாக வேள்வியை நடத்தினார்கள். வெண்முரசில் சொல்லப்பட்டிருக்கும் ’’வேள்வி என்பது நாவை பழக்குவதல்ல நெஞ்சை பழக்குவது என்று’’ அதை நேரில் கண்டேன்.வேதங்களுக்கு நெஞ்சைபழக்கியவர்கள் அனைவருமே.
27 நட்சத்திரங்களுக்கும் ஐம்பெரும் பூதங்களுக்குமாக நாற்கோண வடிவிலான 32 எரிகுளங்கள், வேள்வித்தலைவருக்கான விளிம்புகளில் செந்தாமரை இதழ்கள் வரையப்பட்டிருந்த மாபெரும் வட்டவடிவிலுமாக மொத்தம் 33 எரிகுளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வேள்வியை நிகழ்த்துபவர்கள் அமர சிறு புல் பாயிலிருந்து, உள்ளே அனல் கொண்டிருக்கும் சமித்துகள் நெய்க்கிண்ணங்கள், கருங்காலிக்கட்டையில் செய்யப்பட்ட கரண்டிகள் எல்லாம் சரியான நேரத்துக்கு எந்த பிசகுமின்றி கிடைக்கும்படி, விடுபடல்கள் இன்றி தயராக வைக்கப்பட்டிருந்தன.
மறுநாள் காலை பிரபலங்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் சிறப்பு பூசையில் கழுத்தில் அணிவிக்க வேண்டிய மலர்மாலைகள் இரவே ஈரத்துணியில் சுற்றப்பட்டு தெர்மாகோல் பெட்டிகளில்,அடுக்கி வைக்கப்பட்டன.
எரிகுளங்களின் நான்கு திசைகளிலும் வேள்விக்கு எத்திசையிலிருந்தும் தடங்கல் வரக்கூடாதென்பதற்காக வைக்கப்பட்ட தர்ப்பையிலிருந்து எல்லாம் எல்லாம் மிகச்சரியாக பிழைக்கான வாய்ப்பேயில்லை என்றபோதிலும் சிறு கவனக்குறைவு கூட இல்லாமல் முறையாக நடந்தது.
மேளதாளங்களும் வாண வேடிக்கைகளும் இருந்தன. மிகச்சரியாக மிக முறையாக வேள்விக் கொடி ஏற்றப்பட்டது. வெண்முரசுக்குள் நின்றுகொண்டு வேடிக்கை பார்ப்பது போலிருந்தது எனக்கு.
வாணவேடிக்கையை கழுத்து வலிக்க பார்த்துக்கொண்டிருந்தேன்.2 நாட்களும் இசைக்கச்சேரிகள் கலைநிகழ்ச்சிகளும் இருந்தன
மேளக்காரர்கள் ஓய்வெடுக்கையில் அவர்களுக்கு ஐஸ்கிரீம்கள் கிண்ணங்களில் அல்ல பெட்டிபெட்டியாக கொடுக்கப்பட்டது. கைவலிக்க அத்தனை நேரம் வாசித்த அவ்விளைஞர்கள் சிறுவர்களைப் போல குதூகலித்துக்கொண்டு அதை சாப்பிட்டார்கள்
உணவை அளிப்பதைவிட அதை மனமுவந்து அளிப்பது முக்கியம் குறிஞ்சி செல்வன் உணவை மட்டுமல்ல அனைத்தையுமே மனமுவந்தே அளிக்கிறார்.
சென்னை சென்றிருந்த போது அவருக்கு சொந்தமான விமலம் மெஸ்ஸில் சாப்பிட்ட ரசம் இன்னுமே மனதில் ஏக்கம் நிறைந்த நினைவாக இருக்கிறது அப்படியொரு சுவையான ரசத்தை நான் சாப்பிட்டதே இலை. எங்கள் குடும்பங்களில் எனக்கு நன்றாக சமைப்பவள் என்னும் பெயருண்டு. //தேவி கைகழுவின தண்ணியில் கருவேப்பிலை கிள்ளிப்போட்டா கூட ரசம்னு ஊத்தி சாப்பிடலாம்// என்னும் ஒரு பேச்சு கூட உண்டு. ஆனால் எனக்கு விமலம் ரசம் அத்தனை பிடித்திருந்தது
வேள்விக்கொடி ஏற்றுகையில் வேடசெந்தூர் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த அப்போதுதான் அரும்பத்துவங்கி இருந்த முத்து முத்தான புன்னை மலர்களையும் கொடுக்க வாய்த்திருந்தது.
வேள்வியை நடத்தியவர்கள் தக்ஷன் அளிக்காமல் விட அவிர்பாகம் போன்ற புராணக்கதைகளையும் நாதஸ்வர வாசிப்பில் என்ன ராகம் வாசிக்கப்படுகிறது அது யாருக்கு பிரியமானது போன்ற தகவல்களையும் ஸ்லோகங்களின் பொருளையும் சொல்லிக்கொண்டே இருந்தது மிகச்சிறப்பு. அங்கு நிகழ்ந்து கொண்டிருந்ததன் முழுமையான சித்திரத்தையும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அறிந்து கொள்ள வசதியாக இருந்தது.
குபேர பூஜையின் போதும் பல விளக்கங்கள் அளிக்கப்பட்டன. குபேரன், அவர் மனைவி சித்ரகலா, அவர் நிதியை கொடுத்து வைத்திருந்த சங்க, பதும நிதிப் பெண்கள், நவநிதிகள், அஷ்டலஷ்மிகள், அவர்களின் இயல்புகள் அந்த யாகத்தினால் என்னென்ன பயன்கள் என அனைத்தையும் மிக தெளிவாக சொல்லிச்சொல்லியே வேள்வி நிகழ்த்தப்பட்டது.
மனிதத்திரள் அங்கிருந்தது. ஆயிரக்கணக்கில் சமூகத்தின் எல்லா அடுக்குகளிலிலிருந்தும் இருந்தோம் எனினும், எங்கும் யாரும் யாரையும் கடிந்துகொள்ளவோ தாழ்வாக நடத்தவோ ஏன் முகத்தில் ஒரு சுணக்கத்தை காட்டவோ கூட இல்லை. முழு மரியாதையுடன் ஒவ்வொருவரும் நடத்தப்பட்டார்கள்.
பந்தியில் என்னுடன் அமர்ந்து எழுந்திருக்க மறுத்து சலம்பிக்கொண்டிருந்த ஒருவரைக்கூட பவுன்சர்கள் பொறுமையுடன் கையாண்டார்கள்.
அத்தனை கூட்டத்தையும் நெரிசலோ இடர்பாடுகளோ சிறு மனக்கசப்போ இன்றி வெற்றிகரமாக நடத்துவதென்பது சாதாரணமல்ல.
அகரமுதல்வனின் ஆகுதி நிகழ்வுகளின் கச்சிதத்தை ஒழுங்கை எப்போதும் வியந்திருக்கிறேன். அது குறிஞ்சி செல்வன் போன்றோரிடமிருந்து அளிக்கப்பட்டதும் அகரன் போன்றோர் பெற்றுக்கொண்டதும் என்பதை இங்கு அறிந்துகொண்டேன் அது ஒரு மரபுத்தொடர்ச்சிதான்.
பூரணாகுதி நடைபெறும் முன்பாக குறிஞ்சிபிரபா என்னை அழைத்துச்சென்று எரிகுளங்களின் அருகே அமர்ந்திருந்த அவரது சகோதரிகள், அண்ணி ஆகியோருடன் அமரச்செய்தார். புகையினால் கண்களும் நெகிழ்வினால் மனமும் கசிந்து அமர்ந்திருந்தேன்.திரு குறிஞ்சி செல்வனுடன் இருப்பவர்கள் அனைவரும் அவராகவே இருந்தார்கள் அவரின் கனிவின் அலையில் நனையாதவர்களை நான் பார்க்கவே இல்லை.
அவரின் ஏராளமான ஜப்பானிய நண்பர்கள் வந்திருந்தனர். அவர்களும் கர்மசிரத்தையுடன் நிகழ்வுகளில் கலந்துகொண்டார்கள் இந்திய பண்பாட்டின் மீது பக்திமார்க்கத்தின் மீது இவ்வேள்வி அவர்களுக்கு எத்தனை உணர்வுபூர்வமான பிடிப்பை உண்டாகி இருக்கும் என்பதை என்னால் உணர முடிந்தது.
ஜப்பானிய பெண்களில் பலர் புடவை உடுத்தி கொண்டிருந்தனர். அதிலொருவரின் சீஸ் நிறத்துக்கு அவர் அணிந்திருந்த இரத்தச்சிவப்பு புடவை பல பெண்களை பெருமூச்சு விட வைத்தது
அவர்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன பூஜையின் பொது சொல்லப்பட்ட மந்திரங்களை முழுஉடலே செவியாகி உள்ளம் குவித்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
திரு குறிஞ்சி செல்வனை குறித்து சொல்லப்பட்டவற்றில் விருந்தினர்கள் நிகழ்வு முடிந்து கிளம்பிச்செல்லுகையில் எப்போதும் அவர் ’’இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து போகலாம்’’ என்று சொல்லுவதை குறிப்பிட்டார்கள். மனிதர்களின், உறவுகளின் அருகிருப்பில் எத்தனை மகிழ்பவராக இருந்தால் இதை சொல்லக் கூடும்? உலகேயொருகுடி என்கிறது நம் மரபு அந்த ஒற்றைச் சொல்லே இவரை செலுத்துகிறது போலும்.
நிகழ்வின் போது ஒரு தண்ணீர் பாட்டிலை நான் நாற்காலியின் அடியில் வைத்திருந்தேன் என் முன்னால் அமர்ந்திருந்த ஒரு சிறுவன் வெகு இயல்பாக அந்த பாட்டிலில் இருந்து நீரருந்திவிட்டு மீண்டும் மூடி வைத்தான். அந்த தண்ணீர் யாருடையது என்னவென்றெல்லாம் அவன் யோசிக்கவேயில்லை தாகமெடுக்கையில் அருகிலிருந்ததை எடுத்து குடித்தான் அவ்வளவே.
குறிஞ்சி செல்வனும் அப்படித்தான் நற்செயல்களை எதையும் எண்ணாமால் தாகமெடுக்கையில், நீரருந்துவதைப்போல வெகு இயல்பாக செய்துகொண்டிருக்கிறார்.
இவ்வேள்வியில் கலந்துகொண்டதை பெரும் பாக்கியம் என்று நினைக்கிறேன். அஷ்டலஷ்மிகளில் யார் யாருக்கு என்ன என்ன சக்திகள். யாருக்கு யார் துணையாக வேண்டும் என்று ஒரு பெரியவர் மைக்கில் வேள்வியின் போது கதையொன்றை சொல்லிக்கொண்டிருந்தார்.
நான் எனக்கு துணையாக அந்த 8 பேரில் தைரிய லஷ்மியை வேண்டிக்கொண்டேன் இனி மீதமிருக்கும் காலங்களில் எனக்கு நிகழவிருக்கும் நல்லவைகளையும் அல்லவைகளையும் சந்திக்கும் துணிவை அவள் அளிக்கட்டும்.
மகன்களுடன் அலைபேசி அந்த இரவோடிரவாக எல்லாவற்றையும் சொல்லிச்சொல்லி இருவரும் எந்த நிலையில் இருந்தாலும் அந்தந்த நிலையில் பிறருக்கு குறிஞ்சி செல்வனைப் போலவே மனமுவந்து உதவி, அனைவரையும் அரவணைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று சொன்னேன்.
அவர் மனைவியின் பெயர் விஜயலஷ்மி எத்தனை பொருத்தம்? வெற்றியும் செல்வமும் அவருடன் வாழ்ந்துகொண்டல்லவா இருக்கிறது?
அவர் பெயரும் தான் குறிஞ்சி, அரிதான, பலரால் பார்க்க முடியாத உலகின் வெகுசிறப்பான மலர்களில் ஒன்று ஆனால் பார்க்க எளிய நீல நிற கனகாம்பரம் போலிருக்கும், மிக பொருத்தமான பெயர் அவருக்கு.
உணவுப்பந்தியில் நிறுத்தப்பட்டிருந்த பெருமூங்கில்கள் ஒன்றில் தளர்ந்திருந்த சணல் கயிற்றை அங்கு மேற்பார்வையில் இருந்த ஒர் கரிய இளைஞன் அவிழ்த்து இறுக்கி கட்டினான் யாரும் அவனை அதைச்செய்யும்படி கேட்டுக்கொள்ளவில்லை. அவனாக செய்தான்.
கூட்டத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை அளித்துகொண்டிருந்த ஒருவர் ஒரு முதியபெண்மணியிடம் ஒரு பாட்டிலை கொடுத்துவிட்டு ’’போதுமா இன்னொரு பாட்டில் வேணுமா? ’’என்று கேட்டார்
வாண வேடிக்கை பார்த்து கால்கடுக்கவே எங்கேனும் அமர இடம் தேடிக்கொண்டிருந்தேன், அங்கிருந்த ஒரு இளைஞன் ஒரு பெட்டியை காட்டி ’’அதில் உட்காந்துக்கங்க’’ என்றான்
எல்லாருமே எனக்கு குறிஞ்சி செல்வனாகத்தான் தெரிந்தார்கள், அவர்தான் அவர்களும்.
பூரணாகுதியின் பிறகு வேள்வி நிறைவில் இந்திரன் வந்து அமைவதாக ஐதீகம் . இந்திரனுடன் குறிஞ்சி செல்வனின் சகதாபமும் இறையென அதில் எழுந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வேள்வி முடிந்ததும் தூறலாக மென் மழை பொழிந்தது இதற்கு சான்று.
அங்கு இறைவன் அனல் வடிவானவன். அனலால் சூழப்பட்டவர்களின் உள்ளங்களிலிருந்து சிறுமை மறைகிறது என்கிறது மகாபாரதம். எப்பேற்பட்ட நற்செயல் இந்த வேள்வி?
வேள்விகளெல்லாம் மாமனிதர்கள் நடத்துவது. எனினும் மகாபாரதம் எளிய மானுடரின் அன்றாட செயல்களில் ஐந்தை ஐந்துவேள்விக்கு நிகர் என்கிறது அவற்றில் ஒன்றான கற்பித்தலை 20 ஆண்டுகளாக செய்துகொண்டிருப்பவளாக இந்த வேள்வியின் பயன் அல்லது புண்ணியம் எனக்கும் கிடைத்திருக்குமேயானால் அது என் குடும்பத்தாரையும் கடந்து, மேலும் நீண்டு என் மாணவர்களையும் தொட்டருளட்டும் என வேண்டிக்கொண்டேன்.
குறிஞ்சி செல்வனுக்கும் அகரமுதல்வனுக்கும் குறிஞ்சி பிரபாவுக்கும் என் அன்பும் நன்றியும்.