கடந்த மாதம் பிரான்ஸுக்கு தன் மனைவி கமீலாவுடன் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் வந்திருந்த இங்கிலாந்து அரசர் சார்லஸுக்கு பிரத்யேகமாக சிறப்பு உணவுகளை ஃபிரான்ஸின்புகழ்பெற சமையல் கலைஞர்கள்தயாரித்திருந்தனர். சார்லஸுக்கு பிரியமான நீல சிங்கி இறால், கோழி இறைச்சியுடன் காளான், பிரான்ஸின் Comte சீஸ், பிரிட்டனின் நீல சீஸான Stichelton ஆகியவை மெனுவில் இருந்தன.
Stichelton சீஸ் உலகின் சிறப்பான ஐந்து சீஸ்களில் ஒன்று. Stilton போன்ற பிற நீலசீஸ்களைப் போல இவையும் பெனிசிலியம் பூஞ்சையின் ராக்போர்டி என்னும் சிற்றினத்தைக் கொண்டுதான் உருவாக்கப்படுகின்றன என்றாலும் Stichelton பாஸ்டுரைசேசன் செய்யப்படாத புத்தம் புது பாலில் உருவாக்கப்படுவது.
பிரான்ஸின் அல்சஸ் (Alsace) பகுதியை செர்ந்த புகழ்பெற்ற சீஸ் விற்பனையாளரும் நிபுணருமான பெர்னார்ட் ஆண்டனி இந்த விருந்தை முன்னின்று கவனித்துக்கொண்டார்.
உலகின் முன்னணி சீஸ் நுகர்வோரை கொண்ட, உலகின் சீஸ் தலைநகரமான பிரான்ஸில் மட்டுமே ஆயிரக்கணக்கான சீஸ் வகைகள் தயாரிக்கப்படுகின்றன.
பால்கட்டியானசீஸ் மனிதன் உருவாக்கிய உலகின் மிகப் பழமையான உணவுகளில் ஒன்று. எட்டிலிருந்து பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கால்நடைகளை மனிதன் உணவுக்கெனவளர்க்க துவங்கிய போதிலிருந்தேபால்கட்டியும்உருவாகப்பட்டிருக்கக் கூடும் என்று கருதப்படுகின்றது.
இறைச்சிக்கெனகொல்லப்பட்ட விலங்குகளின் இரைப்பையில் நம் மூதாதையர் பால் சேமித்து வைத்திருந்த போதுஅதிலிருந்தரென்னட்டினால் பால் கட்டியானதை தற்செயலாக கவனித்து பின்னர் முறையாக பால்கட்டி செய்யத்துவங்கி இருக்கலாம்.
வரலாறு
பண்டைய சுமேரியாவிலும் எகிப்திலும் ஏராளமாக சீஸ் உருவாக்கப்பட்டு உண்ணப்பட்டது.
3200 வருடங்களுக்கு முன்பான மிகப் பழமையான சீஸ் எச்சங்கள் எகிப்தின் கல்லறைகளிலும் 7000திலிருந்து 9000 வருடங்களுக்கு முன்பானவை என்று கண்டறியப்பட்டிருக்கும் சீஸ்கள் மங்கோலியாவில் இருந்தும் கிடைத்திருக்கின்றன.
மெசபடோமியாவின் அகழ்வாய்வுகளில் கிடைத்த பொது யுகத்திற்கு 3000 வருடங்களுக்கு முற்பட்ட களிமண் கட்டிகளில் சீஸ் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.
பண்டைய கிரேக்கத்திலும் ரோமாபுரியிலும் சீஸ் பிரதான உணவாக இருந்திருக்கிறது. உலகின் பிற பாகங்களை காட்டிலும் ஐரோப்பாவில் தான் பலவகைப்பட்ட சீஸ்கள் உருவாக்கப்பட்டன.பிரான்ஸின்1070 வருடத்தைய ஆவணங்களில் ராக்போர்டி நீல சீஸ்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
1477ல் Pantaleone da Cofienza என்பவரால் ஐரோப்பிய சீஸ்களை குறித்த பிரத்யேக நூலான Summa Lacticiniorum (“A Compendium of Milk Products”) வெளியானது. அந்த நூலில் சீஸ் ஆடு, மாடு, எருமைப் பாலிலிருந்து மட்டுமல்லாது ரெயின்டீர், குதிரை மற்றும் ஒட்டகப்பாலிலிருந்தும் உருவாக்கப்பட்டிருந்த தகவல்கள் உள்ளன.
பழங்காலத்தில் மென்மையானவை கடினமானவை என இருவகை பால்கட்டிகள் மட்டும் உருவாக்கப்பட்டன. மென்மையனவை உருவாக்கப்பட்ட இடங்களுக்கு அருகிலேயெ விற்கப்பட்டு புதியதாக உடனடியாக உண்ணப்பட்டன.பல நாட்கள் பழமையானவை கடின சீஸ்கள். அவை தொலைவுப்பிரதேசங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விற்கப்பட்டன.
எகிப்திய சுமேரிய நாகரிகங்களுடன் இணைந்து சீஸும் உருவாகி வளர்ந்தது.
கல்லறைக் கொள்ளையர்களின் கண்களில் படாமல் தப்பித்திருந்த கிமு 3000 த்தை சேர்ந்த ஒரு கல்லறை எகிப்தில் 1937ல்கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 60 வயதிருக்கும் ஒரு பெண்ணின் உடல் மறுவாழ்விற்கான அனைத்துப் பொருட்களுடனும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. மிக விரிவான 14 வகை உணவுகள், தட்டுக்களில் பரிமாறப்பட்டிருந்தது. அவற்றில் சூப், இறைச்சி, கேக்குகள், சமைக்கப்பட்ட கனி வகைகள், ஒரு பெரிய சீசாவில் வைன், கோதுமை ரொட்டி மற்றும் மூன்று சிறிய கிண்ணங்களில் சீஸ் ஆகியவை இருந்தன.
இப்படி எகிப்தின் பல கல்லறைகளில் சீஸ் மற்றும் சீஸ் மிச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இப்போதைய பிரபல சீஸ் வகையான halloumiயை போலவேயான சீஸ் 2500 வருடங்களுக்கு முன்பே எகிப்தில்உண்ணப்பட்டிருக்கிறது என்கிறது எகிப்தின் சுற்றுலா மற்றும் பழங்காலப் பொருட்களுக்கான அமைச்சகத்தின் அறிக்கையொன்று.
கிமு 3000 to 2500 ல் பண்டைய சுமேரியாவில்ஆட்டுப்பால் மற்றும் மாட்டுப்பாலிலிருந்து தயாரான சீஸ் உண்ணப்பட்டிருக்கிறது. சுமேரியர்களின் காதல் தேவதையான இனனாவுடன் (Inanna’) சீஸ் தொடர்புபடுத்தபட்டிருந்தது. இனனாவின் கோவில்களில் சீஸ் படையலிடப்பட்டிருக்கிறது.
இனானாவின் கணவரும் மேய்ப்பர்களின் கடவுளுமான டுமுஸியின் (Dumuzi) பிரசாதங்களாகவும் சீஸ் கருதப்பட்டிருக்கிறது. டுமுஸியின் சொத்துகளாக பாலும் சீஸும்தான் சுமேரிய தொன்மங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன
பண்டைய ரோமிலும் கிரேக்கத்திலும் சீஸ்கள் தேன்கலந்தும், சீவி எண்ணெயில் பொறித்தும் உண்ணப்பட்டன.
கிரேக்க மருத்துவர் ஹிப்போகிரேட்ஸ் (கிமு460-375 ) ஆட்டுப்பால்சீஸ் குறித்து குறிப்பிட்டிருக்கிறார். தத்துவஞானி அரிஸ்டாட்டில்(கிமு384-322 ) ஆட்டுப்பால்கட்டிகள் குதிரை அல்லது கழுதை பால் கட்டிகளுடன் கலந்து உண்ணப்பட்டதை குறிப்பிட்டிருக்கிறார். பிதாகொரஸ் படைப்புகளிலும் சீஸ் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பண்டைய கிரேக்க தொன்மம் அரிச்டேயஸ் (Aristaeus) சீஸை கண்டுபிடித்தார் என்கிறது. கிரேக்கம் மற்றும் ரோமானியநாகரிகங்களில்சீஸ் விருப்பஉணவாகவும் பாலுணர்வு ஊக்கியாகவும்கருதப்பட்டது.
சீஸ்கட்டிகள், சீஸ்இனிப்புக்கள் மற்றும் சீஸ் செய்முறைகள் கிமு ஐந்தாம் நூற்றாண்டிலேயே ஏதென்ஸில் இருந்திருக்கின்றன. கிருஸ்துவுக்கு முந்தைய காலத்தில் வெது வெதுப்பான பால்கட்டிகள் உண்ணப்ட்டிருக்கின்றன.
ஜெஸ்ஸி தனது மகனாகிய தாவீதிடம் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் அவனது சகோதரர்களுக்கு பத்து ரொட்டிகளையும் பத்து சீஸ்துண்டுகளையும் கொண்டு செல்லுமாறு பணித்ததை விவிலியத்தின் பழைய ஏற்பாடு சொல்கிறது.
ரோமானியர்கள் புத்தம் புதிய சீஸுடன்அத்திப்பழங்களை கலந்து உண்ணுவதை பெரிதும் விரும்பினர்கள். வைக்கோல் புகையினால் பழமையாக்கப்பட்டு உப்பில் துவட்டப்பட்டு பைன் கோன்களும் மூலிகைகளும் சேர்க்கபட்ட சீஸ் அவர்களின் விருப்ப உணவாக இருந்தது.
ரோமானிய படை வீரர்களின் உணவில் ஆலிவ் உலர் திராட்சை மற்றும் சீஸ் ஆகியவை எப்போதும் இருந்தன. Feta என்பது கிரேக்கசீஸ்களின் அரசன் என கருதப்படுகிறது. இந்த சீஸ்தான் ஹோமரின் ஒடிசியில் குறிப்பிட்டிருப்பது. இதுவே வரலாற்றில் பதிவான மிகப் பழமையான சீஸ். Pietro Casola, என்னும் இத்தலிய பயணி கிரீட்டுக்கு 1494ல் வந்தபோது அங்கு அவர் கண்ட ஃபெடா உருவாக்கும் சேமிக்கும் முறைகளை பதிவு செய்திருக்கிறார்
‘’நாங்கள் குகைக்குள் நுழைந்தோம் ஆனால் அவன் அப்போது அங்கு இல்லை. பின்னப்பட்ட கூடைகளில் சீஸ் நிறைந்திருந்தது, அங்கிருந்த பல பாத்திரங்களில் கறந்த பாலும் புரதமும் நிரம்பியிருந்தன என்று விவரித்திருக்கிறார் ஹோமர்.
உலகம் முழுவதற்கும் ஒரே கடவுள் என்னும் மார்க்கத்தை கடைப்பிடிக்கும் Yazidism மதத்தினர், இந்த பூமி தெய்வீக லாலிஷ் மலைத்தொடரின் ரென்னட் வெண்ணருவி வழிந்து ஆதிபெருங்கடலில் கலந்து திரிந்துதான் உருவானது என்கிறது
பால்கட்டி பண்டைய மேற்கு ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் பல நாகரீகங்களில் பரவலாக புழக்கத்தில் இருந்த ஒரு உணவு என்பதை அகழ்வாய்வுகள் தெரிவிக்கின்றன.
9 அல்லது 8 கிமுவில் எழுதப்பட்டது என கருதப்படும் ஐரோப்பாவின் பழமையானதும் உன்னதமானதுமான ஹோமரின் பண்டையகிரேக்க கவிதை காவியமான இல்லியட்டில் ட்ரோஜன் போரின் பத்துநாட்கள் விவரிக்கபட்டிருக்கின்றன.
அத்திக்கனியின் சாறு பாலை திரியச் செய்து பாலாடைக்கட்டியாக மாற்றும் வேகத்துக்கிணையாக போர்க்கடவுளின் கோபம் குறைந்தது என்கிறார் ஹோமர்.
அத்திக்கனியிலிருக்கும் Ficin என்னும் நொதி பாலை தயிராக்கி சீஸை உருவாக்கும் என்பது பிற்பாடு ஆய்வுகளில் நிரூபணமாகியிருக்கிறது.
வரலாற்றின் தந்தை என கருதப்படும் ஹெரோடோட்டஸ் (Herodotus -கிமு484-408 “Scythian” சீஸ்களை குறிப்பிட்டிருக்கிறார்.
ஆஸ்திரியாவின் உப்புச்சுரங்களில் நடந்த அகழ்வாய்வுகளில் கிமு 800லிருந்து 400க்குள் தயாரிக்கப்பட்டிருக்கும் நீல சீஸ்களும் பீரும்கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
சீனாவின் Xinjiang பகுதியின் கல்லறைகளில் நடந்த அகழ்வாய்வுகளில் 3600 வருட பழமையான பால்கட்டியின் மிச்சங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அதைபோலவே 3000 ஆண்டுகளுக்கு முன்பான பால்கட்டி எகிப்தின் ஒரு கல்லறையில் ஜாடிக்குள் இருந்தது.
சிந்து சமவெளி நாகரிகத்தின்போது (கிமு3300–1300 ). இந்தியாவில் சீஸ்அறிமுகமாகி இருக்கலாம் என கருதப்படுகிறது.
பண்டைய இந்தியாவிலும் சீனாவிலும் சீஸ் சிறிதளவில் தான் உண்ணப்பட்டிருக்கிறது. கிமு1000 ல்எழுதப்பட்டதாக கருதப்படும் ரிக்வேதத்தில் துளைகள் உள்ள மற்றும் இல்லாத இருவகைபால்கட்டிகள் ’dadhanvata’ எனும் பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது
சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் குர்சிகா என்னும் பெயரில் சீஸ் குறிப்பிட்டிருக்கிறது
17ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பல ஓவியங்களில் பால்கட்டிகள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.
சீஸ் மற்றும் சீஸ்தொழிற்சாலைகள் உருவான கதை
துல்லியமாக எங்கு எப்படி எவரால்சீஸ்உருவாக்கபட்டதுஎன்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை எனினும் சீஸ்உருவானதற்கான கதைகள் உலகெங்கிலும் காபி தேநீர் உருவானதற்கு இருப்பதை போலவே இருக்கின்றன.
அதில் மிக பிரபலமானது அரபு வணிகர் கதை.
பன்னெடுங்காலத்துக்கு முன்பு இறந்த விலங்குகளின் இரைப்பையில் இருபக்கமும் முடிச்சிட்டு நீர், பால்,பழச்சாறு போன்ற திரவங்களை பாலையில் நெடும் பயணம் மேற்கொள்பவர்கள் கொண்டு செல்வது வழக்கம். அப்படி கறந்த ஒட்டகப் பாலை கொண்டுசென்ற அரேபிய வணிகர் ஒருவர் வெகுநாட்களுக்கு பிறகு அது கட்டியாக இருப்பதை கண்டிருக்கிறார். அது மிதந்து கொண்டிருந்த நீரை அருந்திவிட்டு அந்த பால்கட்டியை உண்ணுகையில் மிக சுவையாக இருந்தது எனவே பாலை நெடுநாட்களுக்கு சேமித்து வைக்கும் வழியாக இரைப்பையில் ஊற்றி வைத்தால் பலநாட்களுக்கு உபயோகப்படுத்தும் வகையில் சுவையான பால்பொருளாக அது மாறுவது கண்டுபிடிக்கப்பட்டது என்பது தான் அந்த பிரபல கதை.
கிமு100ல் ரோமில் நூற்றுக்கணக்கான சீஸ் வகைகள் இருந்தன. ஜூலியஸ் சீசரின் காலத்தில் பலவகை சீஸ்கள் ரோமிலும் சுற்றியிருந்த பல பிரதேசங்களிலும் முக்கிய உணவாக இருந்தன.ரோமில் பலவிதமான சீஸ் வகைகள் உருவாக்கப்பட்டு உண்ணப்பட்டன. ரோமனியர்களே இங்கிலாந்துக்கும் சீஸ் தயாரிப்பைஅறிமுகப்படுத்தினர்
ஐரோப்பாவிலும் மத்திய கிழக்குநாடுகளிலும் சீஸ் உற்பத்தியும்பயன்பாடும் செழித்து வளர்ந்துகொண்டிருந்த காலங்களில் வடக்கு மற்றும் தென்னமெரிக்காவில் சீஸ் பற்றிய அந்த அறிதலும் இல்லாமலிருந்தது. ஐரோப்பிய குடியேறிகளால் அங்கு சீஸ் அறிமுகமாகி இருக்கும் என நம்பப்படுகிறது
ஐரோப்பாவின் மடங்களில் மத குருமார்களால் சீஸ் உருவாக்கம் பலவிதங்களில் மேம்படுத்தப்பட்டது. உதாரணமாக கோர்கொன்ஸோலா (Gorgonzola) எனப்படும் வெண்ணெய் நீக்கபட்டிருக்காத மாட்டுப் பாலிலிருந்து உருவாக்கப்படும் இத்தாலியின் பிரபல நீல சீஸ்வகையை சொல்லலாம். அது இத்தாலியின் ’போ’ பள்ளத்தாக்கில் (Po Valley) 879 A.Dயில்.துறவிகளால் உருவாக்கப்பட்டது. சீஸ் தயாரிப்பில்ஐரோப்பா செழித்து வளர்ந்து கொண்டிருந்தது. இத்தாலி 10 ம் நூற்றாண்டின்சீஸ் தயாரிப்பு மையமாக இருந்தது.
திபெத்திலும் மங்கோலியாவிலும் சீஸ் அறிமுகமான போது மலையாடுகளான யாக்கின் பாலில் சீஸ் தயாரிக்கப்பட்டது.
ஆசியாவுக்கு வந்த ஐரோப்பிய பயணிகள் 1615ல் சீஸ் உருவாக்கும் கலையை அங்கு அறிமுகப்படுத்தினர். ஆசியாவில் சீஸ் பயன்பாடு ஐரோப்பாவின் அளவுக்கு அன்றிலிருந்து இன்று வரையுமே இல்லை எனினும் சீஸ் உணவு அங்கு அறிமுகமாயிருந்தது.
சீனாவில் சீஸ் உபயோகம் மிக குறைவாகவே இருந்திருக்கிறது. 14 மற்றும் 17 ம் நூற்றாண்டுகளில் மிங் வம்சஆட்சியில் தெற்கு சீனாவில் “rushan” என்னும் சீஸ் வகை அரசர்களின் உணவில் இடம்பெற்றிருந்தது. அந்த சீஸ் முழு மீனுடனும் நூடுல்ஸுடனும் முட்டைக்கோஸுடனும் கலந்து விரும்பி உண்ணப்பட்டன.
கொதி நீரில் அமிழ்த்தி நூல் போல பிழிந்து, வெட்டப்பட்ட கயிறுகளாகவும் அப்போது சீஸ் உண்ணப்பட்டது. இன்றும் அப்படியான சீஸ் சரடுகள் யுனான் பிரதேசத்தில் கிடைக்கின்றன.
உலகெங்கிலும் சீஸ் உண்ணுதல் பிரபலமாகி இருந்தாலும் 19ம் நூற்றாண்டு வரை அது குடிசைத் தொழிலாகத்தான் இருந்தது. அமெரிக்காவில் 17ம்நூற்றாண்டில் சிறிய அளவில் சீஸ் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது,
1773ல் ஒஹையோவில் குடியேறிய இங்கிலாந்துக்காரர்களால் சீஸ் உற்பத்தி பண்ணைகளில் துவங்கப்பட்டு வெற்றிகரமாக நடந்தது. ஓஹையோவில் மேற்குப்பகுதி பின்னர் தொடர்ந்த 50 ஆண்டுகளுக்கு “Cheesedom” என்று அழைக்கப்பட்டது.150 வருடங்களுக்கு ஒஹையோவும் நியூயார்க்கும் அமெரிக்க சீஸ் உற்பத்தியின் பெரும் பங்கை தயாரித்தன.
1830-1840களில் சுவிட்சர்லாந்தில் இருந்து வந்து குடியேறிய சிலரால் விஸ்கான்ஸின் பால்கட்டி தொழிற்சாலை துவங்கப்பட்டு வெற்றிகரமாக சீஸ் உற்பத்தி துவங்கியபோது அப்பகுதி விவசாயிகள் அனைவருக்கும் அவர்கள் எதிர்காலம் சீஸ் கட்டிகளாலானது என்பது புரிந்தது. அவர்கள் அனைவரின் கூட்டு ஸ்தாபனமாக1868ல் லிம்பர்கர்(Limburger) நகரில் மென்மையான வெள்ளை சீஸ் மொத்த வியாபார நிறுவனம் முதன் முதலில் வெற்றிகரமாக நிறுவப்பட்டது.
அமெரிக்க மக்கள் தொகை பெருகிய போது சீஸ்தேவையும் பெருகியது. சீஸ் தொழிற்சாலைகள் அமெரிக்க பண்ணைகளில் வேகமாக உருவாகத் துவங்கின, அமெரிக்காவின் முதல் பெருமளவில் சீஸ் தயாரிக்கும் தொழிற்சாலை பண்ணை விவசாயியான ஜெஸ்ஸி வில்லியம்சால் 1851ல் துவங்கப்பட்டு மிக வெற்றிகரமாக சீஸ் உற்பத்தி நடைபெற்றது.
பிரிட்டனில் 17ம்நூற்றாண்டில் உருவாக துவங்கிய போது எழுந்த தொழில் புரட்சி மேலும் சீஸ் தொழிலை விரிவாக்கியது.
அமெரிக்காவிலிருந்து புதிய சீஸ் தொழில்நுட்பங்களை அறிந்துகொண்ட பிரிட்டன் மிக சிறப்பான புதிய வகை சீஸ் தயாரிக்கும் தொழிற்சாலைகளை 1851ல் அமைத்தது. அங்கு பெருமளவில் சீஸ் தயாரிக்கப்பட்டு சேமித்து வைக்கப்பட்டது.
ஈராக், துருக்கி, கிரீஸ், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினிலும்சீஸின் சுவை வேகமாக பரவியது.
1860களில் ரென்னட் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டபோது உலகெங்கிலும் சீஸ் தொழிற்சாலைகள் வெற்றிகரமாக நிறுவப்பட்டு ஏராளமான சீஸ் தயாரிக்கப்பட்டது
1880ல் நெதர்லாந்தில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான சீஸ் தொழிற்சாலைகள் உருவாகி, 17 மில்லியன்டாலர்கள் பெறுமானமுள்ள 216 மில்லியன் பவுண்டு சீஸ் தயாரிக்கப்பட்டது. 1904 ல்317 பவுண்டு சீஸ் ஒரு வருடத்தில் தயாரிக்கப்பட்டது.
தொடர்ந்த வருடங்களில் பன்மடங்கு அதிகமான சீஸ்தேவை ஏற்பட்டு அதற்கேற்ப பால் உற்பத்தியும் அதிகரித்தது.1920ல் 418 மில்லியன்பவுண்டுகள் இருந்த சீஸ் உற்பத்தி 1970ல் 2.2 பில்லியன்பவுண்டுகளானது. 1990களில் மொத்த உற்பத்தி 6 பில்லியன் பவுண்டுகளாயிருந்தது.
தற்போது அமெரிக்காவின் மொத்த பால் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு சீஸ் தயாரிப்புக்கென உபயோகிக்கப்படுகிறது
சத்துக்கள் நிரம்பிய, சுவையான, பல காலம் சேமித்து வைக்கக்கூடிய சீஸ் உலகின் பல நாகரிகங்கள் தோன்றி வளர முக்கிய காரணமாயிருந்தது
சீஸ் உருவாக்கம்
சீஸ் உருவாக்குகையில் பால் மிதமான வெப்பத்தில் இருக்க வேண்டும்.பால் பாஸ்டுரைசேசன் செய்யப்பட்ட பின்னர் அதை தயிராக்கும் நுண்ணுயிர்கள் சேர்க்கப்படும். அந்த தயிரில் சீஸை உருவாக்கும் ரென்னட் சேர்க்கப்படும்.
பாலின் புரதங்கள் கெட்டியாகி திரண்டு அடர்த்தியாகி நீர் புரதத்தை வெளியேற்றி கொழுப்பை சேர்த்து வைத்துக் கொண்டு பால்கட்டியாகின்றது. இதுவே சீஸ் /பால்கட்டி.
இரண்டு நிலைகளில் சீஸ் தயாரிக்கப்படுகிறது. ஒன்று பாலை ரென்னட் கொண்டு கட்டியாக்குவது இரண்டு அதை பழமையாக்குவது
ரென்னட்டில் கைமோஸின் என்னும் நொதி இருக்கிறது, அதுவே பாலிலிருக்கும் கீஸின் புரத்தை திரளச்செய்து ஒன்று திரட்டிகெட்டியாக்கி வேபுரதத்தை (தயிர் நீர்) தனித்து பிரித்தெடுத்து சீஸை உருவாக்குகிறது
சீஸ் தயாரிப்பென்பது பாலிலிருக்கும் நீரை வெளியேற்றி கொழுப்பையும் கேஸின் புரதத்தையும் 6 லிருந்து 12 மடங்கு அடர்த்தியாக்குவதுதான்.
சீஸ் உருவான பின்னர் அவை அழுத்தப்பட்டுவே (Whey) புரதம்தனித்தும், அழுத்தப்பட்ட மென்மையான சீஸ்தனியாகவும்பிரிக்கப்படும்.
பிறகு சீஸ்கள் அப்படியே புதியதாகவும் அல்லது பழமையாக்கப்பட்டும் விரும்பிய வடிவங்களில் வெட்டப்பட்டு சந்தைப்படுத்தபடுகின்றன. பழமையாக்குதலுக்கு முன்பாக சீஸில் உப்பு தூவப்படும். உப்பு தூவுதல் சீஸுக்கு பிரத்யேகசுவையை அளிக்கவும் அவற்றை பாதுகாக்கும் செய்யப்படுகிறது. உப்பில்லா சீஸ்களும் இருக்கின்றன.
உலகின் மிக புகழ்பெற்ற செடார் சீஸ்கள் 3 செமீ கனமுள்ளஅட்டைகளாக வெட்டப்பட்டு ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு அவற்றின் எடையினால் நீர் புரதம் முழுக்க வெளியேற செய்து பின்னர் உருவாக்கப்படுபவை. இதுவே செடாரிங் “cheddaring.” எனப்படுவது.
பெரும்பாலான சீஸ்கட்டிகள் இறுதியில் பல வடிவங்களும் துளைகளும் கொண்ட அச்சுக்களில் வைத்து அழுத்தப்பட்டு உருவாகின்றன.
பழமையாக்குதல்
சீஸ் உருவாக்கத்தில் பழமையாக்குதல் என்பது மிக நுட்பமான பகுதி
சில சீஸ் வகைகள் தயரானதுமே புத்தம் புதிதாக உண்ணப்படுகின்றன. பெரும்பாலான சீஸ் வகைள்பழமையாக்கப்பட்டு பின்னரே சந்தைப்படுத்தப்படுகின்றன.
இந்த பழமையாக்குதல் இரண்டு வாரங்களிலிருந்து 2 வருடங்கள் வரை நீளும்
Mozzarella சீஸ் இரண்டு வாரங்கள் பழமையாக்கப்படுகின்றது. Parmigiano-Reggiano இரண்டு வருடங்கள் பழமையாக்கப்பட்டது
புதிதாக இருக்கையில் இருக்கும் ரப்பர் போன்ற இழுவைத் தன்மை முற்றிலும் நீங்கி மிருது தன்மையை அளிக்கிறது பழமையாக்குதல்.
பழமையாக்கலில் ரென்னட்டின் நொதிகளால் உண்டாகும் வேதி வினைகளும் நுண்ணுயிரிகளின் செயல்பாடும் இருக்கிறது பழமையாக்கலின் போது லாக்டிக் அமிலம் சிட்ரிக் அமிலம் பால் கொழுப்பு மற்றும் புரதம் ஆகியவை பலவித நறுமணம் கொண்ட பொருட்களால் மாற்றமடைகின்றன.
மேலும் சீஸ் உருவாகும் போது இருக்கும் பாக்டீரியாக்கள் அவை பழமையாகும்போது இருப்பதில்லை. இந்த பாக்டீரியாக்களின் உடலிலிருக்கு ம்நொதிகள் சீஸில் கலந்து பழமையாக்குதலின்போது பிரத்யேக நறுமணத்தை உண்டாக்குகின்றன. எனவேதான் பலவகைப்பட்ட பாலிலிருந்து தயாராகும் சீஸ்கள் பலநூறு வகை நறுமணங்களும் சுவையும் கொண்டிருக்கிறது
பழமையாக்கலின் போதும் லாக்டிக்அமிலத்தில் உண்டாகும் மாற்றம் கரியமில வாயுவை உண்டாக்கி ஸ்விஸ் சீஸ்களின் துளைகளுக்கு காரணமாயிருக்கிறது .
சீஸ்கள் பல விதங்களில்பழமையாக்கப்படுகின்றன. நறுமணமிக்க இலைகளைக் கொண்டும், சாம்பல் கொண்டு புகையிட்டும் எரிசாராயத்தில் ஊற வைத்தும் பழமையாக்கல் நடைபெறும். பழமையாக்கல் முறைகள் அனைத்தும் சீஸ்களில் பாக்டீரியா வளராமல் இருக்கவும் அவற்றின் பிரத்யேக சுவைக்கும் காரணமாகின்றன. சிலவற்றில் மேற்புறம் மெழுகு பூசப்படுகிறது. நீல சீஸ்களில் பெனிசிலியம் ராக்போர்டி என்னும் பூஞ்சைக்காளான் ஸ்போர்கள் தூவப்படுகின்றன. ராக்போர்டி நீல சீஸ் அதிக உப்புச்சுவையும் நல்ல நெடியும் கொண்டது. உள்ளே ஓடும் பூஞ்சைக்காளானின் நீல நூலிழைகள் இருக்கும் இந்த சீஸ் உலகின் பிரபலமான சுவையான சீஸ்களிலொன்று.
சீஸ் நுண்ணுயிரிகள்
பாலில் இருக்கும் லேக்டோ பேசில்லஸ் பாக்டீரியாக்கள் பாலை புளிக்கச் செய்பவை. இவையே சீஸ்களின் வெண்ணெய் போன்ற தன்மைக்கும் சுவைக்கும் முக்கிய காரணமாயிருப்பவை.
Penicillium candidum பூஞ்சை சீஸின் வெளிப்புறமிருக்கும் பழுப்பு விளிம்பை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது.
இன்னும் சில பிரத்யேக ப்ரொப்பயானிக் பாக்டீரியாக்கள் சுவிஸ்சீஸில் இருக்கும் துளைகளுக்கு காரணமான கார்பன் டை ஆக்ஸைடைஉருவாக்குபவை. E. von Freudenreich என்னும் நுண்ணியலாளர் 19 ம்நூற்றாண்டின் இறுதியில் Emmental சீஸ் உருவாக்கத்தில் ப்ரொபியானிச்அமிலத்தின் பங்கு குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது கண்டுபிடித்த புதிய வகை பாக்டிரியா அவர் பெயராலேயே (Propionibacterium freudenreichii subsp. shermani என்று அழைக்கப்பட்டது.
இந்த பாக்டீரியா டாம்&ஜெரி கார்ட்டூன் சித்திரத்தில் ஜெரியின் பிரியத்துக்குரிய, துளைகள் கொண்டிருக்கும் பொன் மஞ்சள் நிற ஸ்விஸ் சீஸின்உருவாக்கத்தில் பயன்படுகிறது.
சீஸ் உருவாக்கத்தின்போது வெளிப்படும் கார்பன் டை ஆக்ஸைடினால் உருவாகும் இந்த துளைகள் சீஸின் கண்கள் என அழைக்கப்படுகின்றன. துளைகள் இல்லாத சுவிஸ் சீஸ் குருட்டு சீஸ் (Blind Cheese) என்றழைக்கப்படுகிறது.
ஸ்விஸ் சீஸ் இப்போது சுவிட்ஸர்லாந்தில் மட்டுமல்லாது உலகின் பல நாடுகளிலும் தயாராகின்றன. இந்த வகை சீஸ்கள் முதலில் உருவாக்கப்பட்டபோது இத்துளைகள் சீஸின் குறைபாடுகளாக கருதப்பட்டு அவற்றை சரிசெய்ய பல முயற்சிகள் செய்யப்பட்டன. இப்போது துளைகளே சுவிஸ் சீஸ்களின் பிரத்யேக அடையாளமாகிவிட்டிருக்கிறது
அமெரிக்காவில் 1960களிலிருந்து மிக நுண்ணிய துளைகள் கொண்டிருக்கும் பேபி சுவிஸ் சீஸ்கள் உருவாக்கப்படுகின்றன.
தெற்கு பிரான்ஸின் ராக்ஃபோர்ட் பிரதேசத்தில் உருவான நீல சீஸ் குறித்து ஒர் பழங்கதை உண்டு
அங்கிருந்த ஒரு குகையில் சீஸ் உண்டு கொண்டிருந்த ஒரு இளைஞன் தூரத்தில் சென்ற அழகிய இளம்பெண் ஒருத்தியை கண்டு அப்படியே சீஸை குகையில்விட்டுவிட்டு அவளை தேடி சென்று விடுகிறான். பலமாதங்கள் கழித்து வந்து பார்க்கையில் குகையிலிருந்த சீஸ் பெனிசிலியம் ராக்ஃபோர்டி (Penicillium roqueforti) என்னும் நீலப்பூஞ்சையால் நீலமாயிருந்ததையும், அதன் உண்ணத்தூண்டும் வாசனையால் உண்ணும்போது அது முன்னைக்காட்டிலும் மிக சுவையாக இருந்ததையும் கண்டு அதன் பின்னரே நீல சீஸ்கள் இருந்தது என்கிறது அந்தக்கதை.
பாஸ்டுரைசேசன்எனப்படும் குறிப்பிட்ட வெப்பநிலையில் பாலில் இருக்கும் நோய்க்கிருமிகளை நீக்குதல் நடைபெறாதபாலிலிருந்து உருவாகும் சீஸ்களினால் உண்டாகும் ஆரோக்கிய கேடுகளும் கவனத்தில்கொள்ளவேண்டியவை. ஆஸ்திரேலியாவில் பாஸ்டுரைஸ் செய்யப்படாத பாலிலிருந்து சீஸ் உருவாக்குதல் தடை செய்யப்பட்டிருக்கிறது
லிஸரியா என்னும் மனித உடலில் ஒட்டுண்ணியாக தங்கி நோய் உண்டாகும் பாக்டீரியாகள் இருக்கும் சாத்தியம் கொண்ட நீல சீஸ் கருக்கலைப்பை உண்டாக்கும் அபாயம் இருப்பதால் கர்ப்பிணிகள் உண்ண வேண்டாம் என்று அமெரிக்கா அறிவுறுத்துகிறது.
எப்போதும் பாக்டீரியாஈஸ்ட் மற்றும் இழைப்பூஞ்சைகள் போன்ற நுண்ணுயிர்கள் இருந்து கொண்டிருப்பதால் சீஸ்அலைவ் (Alive) உயிருள்ளது என்றே குறிப்பிடப்படுகிறது
இந்த சீஸ் நுண்ணுயிரிகள் மனிதர்களின் வயிற்று பகுதியில் வழக்கமாக இருக்கும் நன்மை செய்யும் நுண்ணுயிர் குழாமுடன் எப்படி செயல்புரிகிறது, வாழிடங்களை எவ்வாறு பகிர்ந்துகொள்கின்றன என்பதுகுறித்த ஆய்வுகள் இன்னும் துவங்கவில்லை எதிர்காலத்தில் நுண்ணுயிராய்வுகளில் இது மிக இன்றியமையததாக இதுவே இருக்கலாம்.
ரென்னட்
அசைபோடும் விலங்குகளின் இரைப்பைச் சுவற்றில் இருக்கும் சிக்கலான பல நொதிகளின் கலவைதான் ரென்னட். ரென்னட்டில்லி பேஸ், பெப்ஸின் மற்றும் கைமோசின் உள்ளிட்ட பல நொதிகள் இருக்கின்றன. இவற்றில் கைமோஸின் பால் புரதமான கேசீனை கெட்டியாக்கி திரளச்செய்கிறது. ரென்னட் சேர்க்கப்படும் போதுதான் சீஸ் தனியாகவும் திரவப்புரதமான வே தனியாகவும் பிரிந்து வருகிறது.
விலங்கு ரென்னட்களுக்கு இணையாக தற்போது பாக்டீரியாக்களிலிருந்தும் ரென்னட் எடுக்கப்பட்டு சீஸ் தயாரிப்பில் உபயோகப்படுத்தப்படுகிறது
பாலருந்தும் இளம் கன்றுகளின் இரைப்பையின் நான்காவது அறையின் சுவற்றில் (abomasum) இருக்கும் ரென்னெட் அந்த தோல் பகுதியை தனித்து பிரித்தெடுத்து அதிலிருந்து சேகரிக்கப்படுகிறது
முதிர்ந்த விலங்குகளின் இரைப்பை சுவற்றில் ரென்னட் மிக மிககுறைவாகவே இருக்கும். எனவே இளம் கன்றுகள் இறைச்சிக்கென கொல்லப்படுகையில் அவற்றின் வயிற்றுப்பகுதி ரென்னட்டுக்கென எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இப்படி சேகரிக்கப்பட்ட வயிற்றுப்பகுதி சிறு துண்டுகளாக்கப்பட்டு உப்பு நீரிலோ அல்லது ’வே’ புரதநீரிலோ சில நாட்களுக்கு வினிகருடன் கலந்து ஊறவைக்கப்படுகிறது பின்னர் பிழிந்து வடிகட்டப்பட்டு, சாறெடுக்கப்பட்டுரென்னட் திரவம் தயாராகிறது. இந்த ரென்னட்டின்1 கிராம் சுமார் 4 லிட்டர் பாலை திரளச்செய்கிறது
நவீன உயிர் தொழில்நுட்பத்தின் மூலமும் ரென்னெட் விலங்கு இரைப்பைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது
ஒரு கிராம் ரென்னட்டில் சுமார் 0.7 கிராம் நொதிகள் இருக்கும் 1 கிலோ சீஸில் சுமார் 0.0003 கிராம் ரென்னட் நொதிகள் பயன்பட்டிருக்கும்.
பண்டைய கிரேக்கத்தில் ரென்னட் இளம் மான்கள் உள்ளிட்ட மற்றும் பல விலங்குகளிருந்தும் அத்திக்கனியிலிருந்தும் எடுக்கப்பட்டிருக்கிறது
சைவர்களுக்காக தக்காளி உருளைக்கிழங்கு குடும்பமான சொலனேசியை சேர்ந்த தாவரமான Withania coagulansன் கனிகளிருந்து ரென்னட்டுக்கு இணையான நொதிகள் எடுக்கப்பட்டு சீஸ் தயாரிக்கப்படுகிறது
அத்திக்கனி, எலுமிச்சைச் சாறு, Mucor mieheiஎன்னும் பூஞ்சை, Cynara thistle மலர்கள் ஆகியவற்றிலிருந்தும் ரென்னட்டுக்கு இணையாக தயிரை சீஸ் ஆக மாற்றும் நொதிகள்எடுக்கப்படுகின்றது.அன்னாசிப்பழங்களில் இருக்கும் ப்ரோமெலினும் bromelain சீஸ்தாயாரிப்பில் பயன்படுகிறது
தாவர ரென்னட் குறித்து அரிஸ்டாட்டில் அத்திக்கனியை பிழிந்தசாற்றை ஒரு சிறு துண்டு கம்பளியில் நனைத்து அந்த கம்பளியை கழுவிய நீரை பாலில் கலந்து பாலை திரியச் செய்துகெட்டியாக்குவது குறித்து விளக்கியிருக்கிறார்.
விலங்குப் பால்பொருட்களைஉண்ணாத தீவிர சைவர்களுக்கென கோதுமைப்பால், சோயாப்பால், அரிசிப்பால் மற்றும் முந்திரிப்பாலிலிருந்து சீஸ் உருவாகப்படுகின்றது. இவை எலுமிச்சைச் சாறு அல்லது வினிகர் உபயோகபடுத்தி திரளச் செய்யப்படுகின்றன.
சீஸ் சுவையும் நிறமும் மணமும்
சீஸின் சுவை மணம் ஆகியவை அது உருவாக்கப்பட்ட பாலை அளித்த விலங்கு, அவ்விலங்கின் உணவு பாலின் கொழுப்பின் அளவு ஆகியவற்றை பொருத்து மாறுபடுகிறது
சில வகை சீஸில் கிராம்பு குருமிளகு போன்ற மசாலா பொருட்கள், பழத்துண்டுகள், பூண்டு ஆகியவையும்சேர்க்கப்படுகிறது.
சீஸ் வெள்ளை, பழுப்பு, ஆரஞ்சு, அடர் பழுப்பு, நீலம், பச்சை, மஞ்சள் ஆகிய நிறங்களில் இருக்கும். இவற்றில் ஆரஞ்சு நிறம் இயற்கையாக பாலிலிருந்து அல்லாமல் சாய மரத்திலிருந்து கிடைக்கும் அன்னட்டொ (annatto) எனும்சாயத்தை கொண்டு உருவாக்கப்படுகிறது. அமெரிக்காவில் இந்த ஆரஞ்சு சீஸ் மிக பிரபலமான பால் உணவு
பெரும்பாலான சர்வதேச சீஸ் வகைகள் ரென்னட் கொண்டு கெட்டியாக பட்டவை.உதாரணங்களாக செடார். கெளடா மெஜெல்லா, ஸ்விஸ்நீலம், கேமெம்பெர்ட் ஆகியவற்றை சொல்லலாம் (e.g., Cheddar, Gouda, Mozzarella, Swiss, Blue, Camembert).
அமிலங்களை கொண்டு உருவாகும் சீஸ்களுக்கு உதாரணமாக குவார்க், காட்டேஜ் சீஸ் ஆகியவற்றை சொல்லலாம்.(Cottage cheese and Quark)
ஸ்பெயினின் மெல்லிய புளிப்பு சுவை கொண்ட Manchego ஆட்டுப்பால்சீஸ், பின்னப்பட்ட வைக்கோல் அச்சுக்களில் வைத்து அழுத்தி தயாரிக்கப்படுகிறது. வைக்கோல் பின்னலின் வடிவம் இந்த சீஸின் மேற்புறத்தில் பதிந்திருக்கும் சீஸ்களை கொண்டு ஊறுகாய்களும் தயாரிக்கப்படுகின்றன. Feta போன்ற உப்பு நீரில் ஊறவைக்கப்பட்ட சீஸ் ஊறுகாய்கள் உலகின் பல பாகங்களில் புழக்கத்தில் உள்ளன.
உப்பு நீரில் ஊற வைத்த சிறிதாக பந்துகளைப்போல்உருட்டப்பட்ட ஆட்டுப்பால்கட்டி ஊறுகாய்கள் உலகப்பிரசித்தம் .
சீஸில் வைட்டமின்களும் சர்க்கரையும் கொழுப்புசத்தும் புரதமும் இருப்பதால் இது ஒரு சத்தான முழுமையான உணவு.
சீஸ் வகைகள்
சீஸ் வகைகளை தரம் பார்த்து தேர்ந்தெடுக்கவும் பழமையாக்கவும் சேமித்துவைக்கவும் விற்பனை செய்யவும் அறிந்த வல்லுநர் cheesemonger எனப்படுகிறார்
ஒவ்வொரு சீஸ்வகையின் பின்னும் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது.அந்தசீஸ் உருவான பிரதேசம், அதன் கலாச்சாரம் அதன் வரலாறு ஆகியவற்றினால் அந்த சீஸ் வடிவமைக்கப்பட்டிருக்கும்
நல்ல நெடிகொண்ட பல சீஸ் வகைகள் துறவிகளால் கண்டுபிடிக்கப்பட்டன. ஆல்ஹகால் கொண்டு கழுவப்பட்டு பிரத்யேக நறுமணமும் சுவையும் பெறும் சீஸ்களில் பிரபலமானவை Beaufort, Reblochon ஆகியவை. இம்முறையும் துறவிகளால் தான் கண்டுபிடிக்கப்பட்டது. பிரபல ப்ரைசீஸ் (bri), 7ம் நூற்றாண்டில் துறவிகளால் உருவாக்கப்பட்டது.
துறவிகள் 12ம் நூற்றாண்டில் கண்டுபிடித்த சீஸ்களில் முதன்மையானது சீஸ் அரசன் எனப்படும் Parmesan சீஸ் .
பெரும்பாலான சர்வதேச சீஸ் வகைகள் ரென்னட் கொண்டு கெட்டியாகப்பட்டவை. உதாரணங்களாக செடார், கெளடா மஜெல்லா, ஸ்விஸ் நீலம் கேமெம்பெர்ட் ஆகியவற்றை சொல்லலாம் (Cheddar, Gouda, Mozzarella, Swiss, Blue, Camembert).
அமிலங்களை கொண்டு உருவாகும் சீஸ்களுக்கு உதாரணம் குவார்க் மற்றும் காட்டேஜ் சீஸ் ஆகியவை (Cottage cheese & Quark)
ஸ்பெயினின் மெல்லிய புளிப்பு சுவை கொண்ட Manchego ஆட்டுப்பால் சீஸ், பின்னப்பட்ட வைக்கோல் அச்சுக்களில் வைத்து அழுத்தி தயாரிக்கப்படுகிறது. வைக்கோல் பின்னலின் வடிவம் இந்த சீஸின்மேற்புறத்தில் பதிந்திருக்கும். உலகின் பிரபல சீஸ் வகைகளில் ரிக்கோட்டாவும் ஒன்று.
சீஸ்களை கொண்டு ஊறுகாய்களும் தயாரிக்கப்படுகின்றனFeta போன்ற உப்பு நீரில் ஊறவைக்கப்பட்ட சீஸ்ஊறுகாய்கள்உலகின் பல பாகங்களில் புழக்கத்தில் உள்ளன.
உப்பு நீரில் ஊற வைத்த சிறிதாக பந்துகளைப்போல்உருட்டப்பட்ட ஆட்டுப்பால்கட்டி ஊறுகாய்கள் உலகப்பிரசித்தம் .
சீஸ் அறிவியல்
சீஸ் தயாரிப்பு நுண்ணியிரியல், வேதியியல், கால்நடையியல், விலங்கியல்,தாவரவியல், பாய்மவியல் (rheology), ஊட்டச்சத்தியல் ஆகிய அறிவியல் துறைகளுடன் தொடர்புடையது
சீஸ் உருவாக்குதல் மிகபழைய காலத்தின் கலை என்றாலும் நவீன தொழில்நுட்பம் சீஸ் தயாரிப்பில் பல புதுமைகளை புகுத்தி உள்ளது. சீஸ் தொழிற்சாலையில் உலகின் மற்ற அனைத்து தொழிற்சாலைகளையும் விட அதிக நொதிகளை உபயோகிக்கிறது. அதுபோலவே சீஸ்நொதித்தலும், பழமையாக்கலும் வேதியியல் ரீதியாக மிக சிக்கலானது, முக்கியமானதும் கூட.
உற்பத்தி மற்றும் நுகர்வு
2022ல் உலக சீஸ் உற்பத்தி சுமார் 22.17 மில்லியன் மெட்ரி டன் ஆக இருந்தது. இதில், முன்னணி உற்பத்தியாளராக நீடிக்கும் ஐரோப்பாவின் பங்கு மட்டும் 10.55 மெட்ரிக்டன்
சர்வதேச பால் பொருட்களின் குழுமம் மிக அதிக சீஸ் உண்ணும் நாடாக பிரான்ஸை அறிவித்திருக்கிறது. அதனை நெருக்கமாக தொடர்கிறது இத்தாலி
பிரான்ஸ் ஐஸ்லாந்து பின்லாந்து டென்மார்க், ஜெர்மனி ஆகிய நாடுகளில் தனி நபர் சீஸ் நுகர்வு ஆண்டுக்கு 25 கிலோ
இந்தியாவில் சீஸ்
உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி செய்யும் நாடாக இருந்தும் இந்தியா 35% பாலை மட்டும் சீஸ்உற்பத்திக்குபயன்படுத்துகிறது.
உலக சீஸ் நுகர்வு தனிநபருக்கு சராசரியாக 7கிலோ. ஆனால் இந்தியாவில் தனிநபர் சராசரி சீஸ் நுகர்வு வெறும் 200 கிராம் மட்டுமே
பீட்ஸா பர்கர்உணவகங்கள் இந்தியாவில் அதிகரித்து கொண்டிருப்பதால் இனி இந்தியாவின் சீஸ் உற்பத்தியும் நுகர்வும் பெருமளவில் அதிகரிக்கலாம்.
மகாராஷ்டிரம் மற்றும் குஜராத்தில் சீஸ் மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிகம் உண்ணப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் சீஸில் சரிபாதி இந்த இரு மாநிலங்களில் உபயோகிக்கபடுகிறது.
- சீஸ் என்னும் சொல் லத்தீனcaseus எனும்பாலின் கேஸின் (casein) புரதத்தைகுறிக்கும்சொல்ல்லிருந்துஉருவானது
- உலகின் பல மொழிகளிலும்சீஸ் என்னும் சொல்லின் உச்சரிப்புக்கு இணையான சொற்களேபால்கட்டியைகுறிக்கபயன்பாட்டில் இருக்கின்றது
- சீஸ்களில் கொழுப்பு புரதம்கால்சியம்பாஸ்பரஸ் சோடியம் ஆகியவை நிறைந்துள்ளன. மிகச்சத்தானஉணவுதான் எனினும் அதிகப்படியான சீஸ் உண்ணுதல் இதயநோய்களுக்குகாரணமாகும் என்று எச்சரிக்கப்படுகிறது
- உலகில் தற்போது 2000 வகையான சீஸ்கள் இருக்கின்றன. அவற்றும்மிகப்பிரபலாமனதும் மிக அதிகம் உண்ணப்படுவதும்பீட்ஸாக்களில் இருக்கும் Mozzarella சீஸ்.
- இங்கிலாந்தின் சில பகுதிகளில் மாபெரும் சீஸ்உருளைகளைசரிவான சாலையில் உருட்டிச் செல்லும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு அந்த சீஸ் உருளை பரிசளிக்கப்படும்
- உலகின் மிக விலைகொண்டசீஸ் பால்கன்கழுதைப்பாலில்செய்யபட்டபுயூல் சீஸ் (Pule) இது ஒரு கிலோ ஆயிரம் டாலர்களுக்கும் அதிகமான விலை கொண்டது
- மணல், மெழுகு, ஐஸ் சிற்பங்களை போலவே சீஸ்சிற்பக்கலையும் இருக்கிறது.
- சீஸ்லேபிள்களை தொடர்ந்து சேகரிப்பவர்களும் உண்டு இந்த சீஸ்லேபிள் மீதான பிரேமை “tyrosemiophilia”.எனப்படுகின்றது
- குழு புகைப்படங்கள்எடுக்கையில்சீஸ் என்று சொல்லி புன்னகைக்கவைப்பது1930களில்வழக்கத்துக்கு வந்து உலகெங்கும் பரவியது.
நீல சீஸின்பிரத்யேகநெடியிலிருந்து, ப்ரை’யின் மனம் மயக்கும் கிரீம் சுவையின் இன்பம் வரை, ஒவ்வொரு சீஸ்வகையும் கலாச்சாரம், புவியியல் அறிவியல் மற்றும் புதிய உணவுக்கான மனிதனின் தீராத தேடல் ஆகியவற்றின் கதையைச் சொல்கிறது.
சீஸ் தனியாக உண்ணப்பட்டாலும் வைனுடன் சேர்த்துக் கொண்டாலும் உணவின் ஒரு பகுதியாக இருந்தாலும் உலகெங்கிலும் சிறப்பான சுவைக்கான உத்திரவாதத்தை அளிக்குமொன்றாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கிறது. அடுத்த முறை நீங்கள் சீஸ் துண்டொன்றை சுவைக்கையில் அதனுடன் இணைந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான பாரம்பரியத்தையும், அதை உருவாக்கிய ஒரு ரசனை மிகுந்தவரையும் அதனுடன் இணைந்த ஒரு கதையையும் தேடி கண்டடைந்து மனதிற்குள்ளாகவாவது பாராட்டுங்கள் .
இதை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கையிலேயே மேலும் புதிய சீஸ் வகைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கக்கூடும். Say cheese!