
பிரபல மலையாள நடிகர் சலீம் குமார் நேற்றிரவு (6/6/26)மறைந்தார். நேற்று காலை கொச்சி அம்ரிதா மருத்துவமனையில் அவர் வென்டிலேட்டர் உதவியுடன் அனுமதிக்கப்பட்டிருந்த செய்தியின் போதே மனம் இதை எதிர்பார்த்திருந்தது. ஏனெனில் அவர் பலவகையான ஆரோக்கிய குறைபாடுகளால் பல்லாண்டுகாலம் பாதிப்பிலிருந்தவர். அவற்றோடு தான் நம்மை அழவும் பெரும்பாலும் சிரிக்கவும் செய்தார். ஈரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவர் தளர்ந்திருந்தார் ஆனாலும் ஏராளமான படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
நான் அவரை மாயாபஸாருக்கு பிறகுதான் நேரில் ஒருமுறை பார்த்தேன். சிஐடி மூசா விலிருந்து அவர் எங்கள் மூவருக்கும் பிரியப்பட்ட தாரமாகி இருந்தார். அடிக்கடி ஏசியாநெட்டில் அந்தப் படத்தைப் பார்ப்போம். அம்மா வீட்டில் வேலைகளுக்கு உதவியாக இருந்த மஞ்சு சிஐடி மூசா படம் போட்டால் ஹாலில் உருண்டு உருண்டு புரண்டு புரண்டு சிரிப்பாள்.
எங்களூரில் விவசாயப் பணிகளைக் காட்டிலும் ஷூட்டிங்கிற்கு செல்பவர்கள் தான் அதிகம். நடந்துபோகும் தொலைவிலிருக்கும் தோப்புகளுக்கும் வயல்களுக்கும் வெகுசிலரே களை எடுக்கவும் பிற காட்டுப்பணிகளுக்கும் செல்வார்கள். மற்ற அனைவரும் அரசமரத்தடி விநாயருக்கு எதிரே வந்து நிற்கும் டிராக்டர்களில் crowd artist களாக புறப்பட்டு செல்வார்கள்.
பெரும்பாலும் மாதத்தில் 20 நாட்கள் இதுதான் நடக்கும் கணிசமான தொகையும் ஒரு தண்ணீர் பாட்டிலும் மதியவுணவும் கொடுக்கப்படும் என்பதாலும் வேறு வேலை பெரிதாக ஏதுமில்லாமல் சண்டை நடக்கையில் மார்க்கெட் அல்லது குடோன்களில் குறுக்கும் நெடுக்குமாக ஓடவேண்டும் அல்லது காய்கறி வாங்குவதுபோல் பாவனை அல்லது அரசமரத்தடி பஞ்சாயத்துகளில் கூடிநிற்க, மறியலில் கோஷமிட என்று எளிய, ஒப்பனை தேவைப்படாத வேலைகள் தான். மேலும் சினிமா நடிகர்களை அருகில் பார்க்கலாம் என்பதும் கூடுதல் பிரயோஜனம். திரும்ப அதே டிராக்டரில் வீடு திரும்பிக்கொள்ளும் வசதி வேறு.
ஃபகத் ஃபாஸிலின் படமான டயமண்ட் நெக்லஸ் இந்த வீட்டிற்கு நேர் எதிரில் அப்போது கட்டப்பட்டுக் கொண்டிருந்த அஸ்வினின் வீட்டில் தான் நடந்தது. லாலேட்டனோ மம்மூட்டியோ சுரேஷ் கோபியோ இல்லை, யாரோ ஒல்லிப்பிச்சிப் பையன் ஹீரோ அவனுக்கு தலையில் அதிகம் முடியுமில்லை என்று சொல்லப்பட்டதால் ஆர்வமிழந்து நான் அங்கே வேடிக்கை பார்க்க கூட போகவில்லை.
சுமார் 1 வாரம் படப்பிடிப்பு நடந்தது அது ஒரு பள்ளி விடுமுறைக்காலம் என்பதால் சரணும் தருணும் பெரும்பாலும் அங்குதான் இருந்தார்கள் சரணுக்கு நாயகியின் அடர்ந்த நீண்ட கூந்தல் மீது பெரும் பிரேமை உண்டாகி இருந்தது அதைச் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனான்.
ஆனால் ஒருநாள் அந்த நாயகன் ஃபாஸிலின் மகன் என்றும் ஃபாஸிலும் மம்மூட்டியும் படப்பிடிப்புக்கு அன்று வந்துசென்றார்கள் என்றும் கேள்விப்பட்டபோது ’’அடடா போயிருக்கலாமே என்று நினைத்தேன்.
அப்படி பல வருடங்களுக்கு முன்பாக தென்சங்கம்பாளையம் கோழிப்பண்ணையில் சுரேஷ் கோபியின் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது நான் சுரேஷ் கோபியின் பரம ரசிகையாக அவரை பார்க்கலாம் என்று அங்கு சென்றிருந்தேன். ஆனால் சுரேஷ் கோபி அங்கே இல்லை ஒருவேளை கேரவனில் இருந்திருக்கலாம். படப்பிடிப்புத்தளத்தில் ஒரு நாற்காலியில் சலிம் அமர்ந்திருந்தார் அவருக்கான காட்சிகள் ஏதும் படமாக்கப்படவில்லை.
அவர் அவரது வயதைக்காட்டிலும் திரையில் தெரிவதைக் காட்டிலும் மூத்தவராக தெரிந்தார். அதுவே முதலும் கடைசியுமாக நான் சலீமைப்பார்த்தது.
எனக்கு சலீம், ஸ்ரீனிவாசன், மற்றும் மாமுக்காயா, இன்னொசெண்ட், ஜெகதி ஸ்ரீகுமார் ஆகியோரை மிகவும் பிடிக்கும் இவர்கள் மீது பெருமதிப்பும் கொண்டிருக்கிறேன்’
சலீமை பொருத்தவரை அவரைக் காட்டிலும் அவரது மனைவி சுனிதாவின் மீது எனக்கு பிரியம் அதிகம் அதிகம் பொது வாழ்வில் தன்னைக் காட்டிக்கொள்ளாதவர். காதல் கணவர் சலீம் மீது பெருங்காதலுடனேயே 30 வருடம் வாழ்ந்தவர்.
பல சமயங்களில் சுனிதாவை நான் என்னுடன் ஒப்பிடுக்கொள்வேன். சலீமை எதிர்பார்க்காமல் இருமகன்களையும் வளர்த்து ஆளாக்கி குடும்பத்தை தனியே தைரியமாக பேணியவர் சுனிதா
அவர்கள் இருவரும் காதல் வயப்பட்ட போது சலீம் நடிகராகி இருக்கவில்லை கொச்சி கலாபவனில் ஒரு மிமிக்ரி கலைஞராக கால்பதிக்க போராடிக்கொண்டிருந்தார். நிரந்தர வருமானமோ சொல்லிக்கொள்ளும்படியான வேலையோ இல்லாத சலீமுடன் காதல் வயப்பட்டிருந்த சுனிதாவின் வீட்டில் திருமணத்துக்க்கு பெரும் எதிர்ப்பு இருந்தது. சுனிதா திடமாக ’’எனக்குக் கல்யாணம் என்று ஒன்று நடந்தால் அது இந்த வேலை இல்லாத பணம் இல்லாத சலீமுடன் தான்’’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்.
பின்னர் அவர்களது திருமணம் 1996 செப்டம்பரில் ஒரு மாலை வேளையில் மிக எளிமையாக நடந்தது. மணநாளுக்கு மறுநாள் காலைதான் சலீமுக்கு அவரது முதல் திரைப்பட வாய்ப்பான இஷ்டமானு நூறு வட்டம் படப்பிடிப்புக்காக உறவினர் ஒருவரின் கார் வந்து வீட்டு வாசலில் நின்றது. அந்த நிமிஷத்திலிருது சலீம் கேரளம் கொண்டாடும் மாபெரும் நடிகரானார், சுனிதா முழுக்க முழுக்க வீட்டை கவனித்துக்கொண்டார். சுனிதாவுடன் சலீமின் தாய் கௌசல்யாவும் அவர் உயிருடன்இருந்த வரை குடும்பத்தை கவனித்துக்கொண்டார்.
தாய் மீது அளப்பரிய பாசம் கொண்டிருந்த சலீம் அவரது மறைவுக்குப்பின்னர் தனது சொந்த ஊரில் தாயின் நினைவாக ஒரு திறந்தவெளி அரங்கொன்றை நிறுவினார்.
சலீமின் தந்தை கங்காதரன் நாத்திகர், எனவே மகனுக்கு மத அடையாளம் அற்ற ஒரு பெயர் வைக்கவேண்டும் என்றே சலீம்குமார் எனப் பெயரிட்டார்
சுனிதாவுக்கு சளி பிடித்தால் கூட வீடு ஸ்தம்பித்துவிடும் என்று சலீம் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார் அத்தனைக்கு முழுவீட்டையும் சுனிதா தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தார் அரிதினும் அரிதாகவே சுனிதவும் மகன்களும் அவரோடு பொதுவிழாக்களுக்கு வந்தார்கள்.
சலீம் தான் காங்கிரஸ் அனுதாபி என்பதை எப்போதும் பெருமிதமாகச் சொல்லிக் கொண்டவர். உச்ச நடிகர்கள் அனைவரிடமும் பழகும் வாய்ப்புப் பெற்றிருந்தாலும் அவர்களுடன் அளவான நட்பைப் பேணிக்கொண்டு, தன் இளமைக்கால நண்பர்களுடனும் அரசியல் தொடர்புகளுடனுமே நெருக்கமாக இருந்தார். சினிமா உறவுகள் நிரந்தரமில்லை படப்பிடிப்பின் போது மட்டுமே கூடும் கூட்டம் அது என்றும் சலீம் சொல்லி இருக்கிறார்.

அசாத்தியமான கலைஞர் சலீம் நான் அவரது நகைச்சுவைக்கு மட்டுமல்லாது குணசித்திர வேடங்களுக்கும் ரசிகை. சலீமின் மறைவு கேரள திரைத்துறை கலாச்சாரத்தின் ஒரு பெரும் சகாப்தத்தின் முடிவு
அவரது சிரோசிஸ் என்னும் ஈரல் அழிவு நோய்க்கு பலரும் மதுப்பழக்கம் தான் காரணம் என்று நினைக்கிறார்கள் ஆனால் அவரது குடும்பத்தில் பரம்பரையாகவே ஈரல் பாதிப்பு இருந்தது. காப்பி டீ கூட குடிக்காத சலீமின் சகோதரும் ஈரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருந்தார். சலீம் நவீன அலோபதி மருத்துவத்தின் மீது நம்பிக்கை அற்றவராக இருந்தார். எனவே ஈரல் பாதிப்பிற்கு பல வகையான மாற்று மருத்துவங்களை பலகாலமாக முயற்சித்தார்.
அதில் ஒருவர் 51 நாள் அரிசிக்கஞ்சியுடன் கலந்து சாப்பிடச் சொல்லிய மூலிகை மருந்து ஒரு பலனும் இல்லாமல் அவரது நிலையை மேலும் மோசமாக்கியது. சலீம் அந்த சிகிச்சையை கைவிட்ட போதுதான் தெரிந்தது, அதைப் பரிந்துரைத்தவருக்கே புற்றுநோய் கடைசிக் கட்டத்தில் இருந்தது என்று.
பின்னரும் ஒரு புதிய இயற்கை சிகிச்சை முயற்சியை மேற்கொண்டார். 500 இளநீரில் கலந்த முலிகை மருந்தை உட்கொள்ளும் அந்த முயற்சியும் ஈரலை பாதுகாக்க தவறிய போது அந்த மருத்துவர் மிக எளிதாக ’’எல்லாத்தையும் கொட்டீராதீங்க, சருமப்பாதுகாப்புக்கும் இதே இளநீரை உபயோகிக்கலாம்’’ என்று சொன்ன அநியாயமும் நடந்தது.
பின்னரே சலீம் ஈரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு சம்மதித்து அது வெற்றிகரமாக நடந்தது. அவர் icuவில் இருக்கையில் சுனிதா அவர் இருந்த அறையின் கண்ணாடிக் கதவுக்கு வெளியேவே அகலாமல் நின்றிருந்து சலீம் வெளியே வந்தபின்னரே அவருடன் அறைக்குத் திரும்பியதை கேரளச் சினிமா உலகம் இன்னும் சொல்லிக் கொண்டிருகிறது. சலீம் அடிக்கடி சொல்வார்’’ பலமுறை நானே சரி போதும் போகலாம் என்று நினைத்திருக்கிறேன் ஆனால் சுனிதா ஒவ்வொருமுறையும் என்னை மீட்டெடுத்திருக்கிறாள் ’’ என்று. இந்த முறை சலீமை 56 வயதில் சுனிதா இழந்தே விட்டார்.
அவரது இருமகன்களில் ஒருவர் திரைத்துறைக்கு வந்திருக்கிறார். மஞ்சும்மல் பாய்ஸிலும், லோஹாவிலும் அவர் இருக்கிறார். மிக நல்ல மனிதர் சலீம், எப்போதும் சிரி நிறைந்திருந்த அவரது laughing villa என்னும் பொருத்தமான பெயரிடப்பட்ட இல்லம் இன்றுதான் மௌனமாக இருக்கிறது

2010ல் சலீமின் நண்பர் கொச்சின் ஹனீஃபா மறைந்த போது சலீம் ‘’நான் வருத்தப்படவில்லை விரைவில் நான் அவனைச்சென்று சந்திக்க இருக்கிறேன்’’ என்றார். மூச்சுலகில் உடல் உபாதைகள் ஏதுமின்றி மகிழ்ந்திருங்கள் சலீம். நிறைவடையுங்கள் வணங்குகிறேன். சுனிதாவுக்கும் மகன்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களும் அன்பும்.
Leave a Reply