இன்று ஜெ தளத்தில் மகத்தான நடிப்பு என்னும் பதிவில் தொட்டால் சிணுங்கி என்கிற தொட்டாற்சுருங்கியான, தொட்டல்வாடியாகிய மைமோசா பூடிகாவைப்பற்றி எழுதி இருந்தார். நமஸ்காரி என்றும் இதற்கு ஒரு பெயருண்டு

நான் அதிகம் அதிசயிக்கும் மகா புத்திசாலித்தாவரங்களில் மைமோஸாவும் ஒன்று. புறத்தூண்டல்களுக்கு உடனே இலைகளைச் சுருக்கி எதிர்வினையாற்றும் (thigmonasty) அதன் புத்திசாலித்தனத்தை விட தொடர்ந்து அளிக்கப்படும் பாதகமேதுமில்லாத புறத்தூண்டல்களைப் புரிந்துகொண்டு இலைகளைச்சுருக்காமலிருக்கும் அதன் நினைவாற்றலை நான் எல்லா வகுப்புகளிலும் சொல்லிச்சொல்லி மாய்வேன்.
நித்யவனம் முதல் தாவரவகுப்பு மாணவி ராஜி அங்கேயே இதை நிரூபித்துக்காட்டினாள்.
தொட்டால் சிணுங்கியின் அறிவியல் பெயர் Mimosa pudica. இதில் லத்தீனச்சொல்லிலான பேரினப்பெயர் mimosa என்பதற்கு mime, acting நடிப்பு/ “போலச் செய்தல்” என்று பொருள். விலங்குகளைப் போல இந்தத் தாவரம் தொடுதலுக்கு எதிர்வினை ஆற்றுவதால் இப்பெயர் பெற்றது.-osa என்றால் resembling என்று பொருள்.
ஜெ தலைப்பாக மகா நடிப்பு என்று கொடுத்திருந்தது பெரும் வியப்புண்டாக்கியது, எத்தனை பொருத்தம்.
Pudica என்னும் சிற்றினப்பெயருக்கு லத்தீன் மொழியில் “வெட்கப்படுபவள்” / “கூச்சப்படுபவள்” (to feel shame/ Bashful/Shrinking) என்று பொருள்.
என் பித்துக்களிலொன்று இந்த தாவரவியல் பெயர்களின் வேரைத்தேடி வெகுதூரம் செல்வது. அப்படி மைமோஸா பூடிகாவின் பின்னே பலநாட்கள் சென்றிருக்கிறேன். 17-ம் நூற்றாண்டில்தான் லின்னேயஸால் மைமோஸா பெயரிடப்பட்டது.அதன் சுருங்கும் இலைகளைக்கொண்டு விலங்குகளைபோல நடிக்கிறது என்னும் பொருளில் அந்தப்பேரினப் பெயரிடப்பட்டது.
ஸ்பேனிஷ் மொழியில் இதே மிமோஸா பிரியமான -affectionate என்று பொருள் படுகிறது,மேலும் செவ்வியல் லத்தீன மொழியில் இதற்கு Modest, bashful, shy , Chaste, virtuous, pure என்றெல்லாம் பொருள் உண்டு
லத்தீனச்சொல்லான pudere, என்பதற்கு வெட்கபப்ட வேண்டிய என்று பொருள் அதுதான் இதன்வேர்ச்சொல்லும் கூட. இத்தோடு icus என்னும் பின்னொட்டைச்சேர்த்து pudicus என்னும் ஆண் பால்பெயரும் (masculine), pudica என்னும் பெண்பால் பெயரும் (feminine), pudicum (neuter), என்னும் பால் பேதமற்ற பெயரும் உருவாக்கப்பட்டது. தாவர அறிவியல் பெயர்களில் இப்படி பாலினம் இருப்பதை நாம் அறிவோம்.
இந்த பூடிகா என்னும் பெயருக்கான வேர் மிகச்சுவாரஸ்யமானது. லத்தீனச்சொல்லான pudenda வெட்கப்பட வேண்டிய விஷயங்கள் அல்லது பகுதிகள் என்று பொருள் தருகிறது. மருத்துவ மொழியில் இடுப்புப் பகுதியிலிருந்து ஜனன உறுப்புகளுக்கு (to and fro) உணர்வுகளைக் கடத்தும் நரம்புக்கு pudendal nerve என்று பெயர். மகப்பேறு சமயத்தில் செய்யப்படும் regional anesthesia procedure க்கு pudendal block என்றுதான் பெயர். பின்னர் நவீன மருத்துவத்துறை உருவான பிறகு international anatomical nomenclature committee போன்ற அமைப்புகள் மனித ஜனன உறுப்புக்கள் மறைக்கப்பட வேண்டியவை, வெட்கத்துக்குரியவை எனும் புரிதலைத் தரும் இந்தச்சொல்லை பாடப்புத்தகங்களிலிருந்து நீக்க பரிந்துரைத்தது.
(சங்குப்புஷ்பத்தின் அறிவியல் பெயரான Clitoria ternatea அப்பட்டமாக பெண் ஜனன உறுப்பைக் குறிக்கிறது என்று அந்தப்பெயர் வைக்கப்பட்ட காலத்திலெழுந்த எதிர்ப்பைக்குறித்து முன்பு நான் எழுதி இருக்கிறேன்)
பிற்பாடு இதே சொல் மாடஸ்டி, ஹைடிங் என்னும் பொருளில் புழங்கி பின்னர் இறுதியாக வெட்குதலுக்கு வந்து சேர்ந்தது. எனவே தாவரவியல் இருபெயரீட்டு முறை வந்தபோது தொடுதலுக்கு தன் இலைகளை மூடிக்கொள்ளும் இதற்கு பூடிகா என்று லின்னேயஸால் பெயரிடபட்டது
இந்த இலைகள் மூடிக்கொள்வதற்குப் பின்னால் இருக்கும் அறிவியலையும் பார்த்துவிடலாம்

இதன் இலைகள் சுருங்குவதற்குப் பின்னால் ஒரு வியக்கத்தக்க உடலியல் மற்றும் மின்-வேதியியல் செயல்பாடு உள்ளது. தொட்டால் சிணுங்கிச்செடியின் இலைக்காம்புகளின் அடிப்பகுதியில் பல்வைனஸ் எனப்படும் மெல்லிய செல்கள் உள்ளன. இவை நீரைத் தங்களுக்குள் நிரப்பி, நல்ல அழுத்தத்துடன் இலைகளை நிமிர்த்தி விறைப்பாக வைத்திருக்கும். நாம் இலையைத் தொட்டவுடன், ஒரு மின் வேதியியல் சமிக்ஞை இலைக்காம்பின் அடிப்பகுதிக்கு வேகமாகப் பாய்கிறது.
இந்த சமிக்ஞை கிடைத்தவுடன், பல்வைனஸ் செல்களில் உள்ள பொட்டாசியம் அயனிகளும் (K⁺), குளோரைடு அயனிகளும் (Cl⁻) திடீரென செல்களுக்கு வெளியே தள்ளப்படுகின்றன. இதனால், செல்களுக்குள் இருந்த நீர் மூலக்கூறுகள் ஆஸ்மாசிஸினால் திசுக்களை விட்டு வெளியேறுகின்றன.
நீர் வெளியேறியவுடன் செல்கள் தங்களின் உள்அழுத்தத்தை இழந்து சட்டெனச் சுருங்குகின்றன. இதனால் இலைகள் அப்படியே வாடி கீழே தொங்கிவிடுகின்றன. மீண்டும் நீர் உள்ளே சென்று இலைகள் நிமிர 15 முதல் 30 நிமிடங்கள் வரை ஆகும். அவ்வளவுதான்.
இந்தத் தாவரம் தன் ஆற்றலை ஏராளமாகச் செலவழித்து ஏன் இப்படிச் சுருங்க வேண்டும் என்பதற்குப் பரிணாம ரீதியாக இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன:
தாவரங்களை உண்ணும் பூச்சிகளோ அல்லது விலங்குகளோ தொடும்போது, தாவரம் சட்டெனச் சுருங்கி வாடிப் போவது போலக் காட்சியளிக்கும். இதனால் “இது காய்ந்த, உண்ணத் தகுதியற்ற தாவரம்” என நினைத்து விலங்குகள் சென்றுவிடும்.
இலையின் மீது அமரும் சிறிய தீமை விளைவிக்கும் பூச்சிகளை, இலைகள் சட்டென மூடுவதன் மூலம் கீழே உதிர்த்துத் தள்ள இது உதவுகிறது.
தாவர அறிவியல் வரலாற்றில் ராபர்ட் ஹூக் போன்ற தொடக்கக்கால அறிவியல் அறிஞர்கள் தாவரங்களுக்கும் விலங்குகளைப் போல நரம்பு மண்டலம் இருக்கிறதா என்று ஆராயத் தூண்டுகோலாக இருந்ததே இந்த ‘பூடிகா’ தான்.

தன் மார்பகங்களையும் ஜனன உறுப்பையும் கைகளால் மூடிக்கொண்டிருகும் வீனஸ் தேவதையின் சிலையின் அந்தக்குறிப்பிட்ட போஸுக்கு வீனஸ் பூடிகா என்றுதான் பெயர்.
காலையில் மகா நடிப்பு வாசித்ததிலிருந்து மனம் இந்த வேர்ச்சொற்களின் பின்னால் சென்று விட்டது.
ஜெ தளத்தில் அந்த கட்டுரை படித்த போதே நினைத்தேன், நீங்கள் அதைப் பற்றி விரிவாக எழுதி விடுவீர்கள் என்று. இரண்டு வார்த்தைகளில் இருந்து எவ்வளவு கற்றுக்கொள்ள முடிகிறது. கற்றலின் இன்பத்திற்கு இணை இல்லை.
என்னை பத்தி வேற சொல்லி இருக்கீங்க. அது கூடுதல் சந்தோஷம். நன்றி Mam.
ஆசானும் ப்ரொபஸரும் ஏற்கனவே பேசி வச்சுக்கிட்டு கட்டுரைய எழுதி இருப்பாங்கன்னு தோணுது மேம்.
அடப்பாவமே!
ஆசானும் ப்ரொபஸரும் ஏற்கனவே பேசி வச்சுக்கிட்டு கட்டுரைய எழுதி இருப்பாங்கன்னு தோணுது மேம்.
தொட்டாற்சுருங்கியை தொடும் ஒவ்வொரு கணமும் நமக்குள் இருக்கும் “குழந்தை” ஆனந்தமாய் வெளிப்படும்.
மனிதன் தான் மிகப்பெரிய தொட்டாற்சுருங்கி! கணந்தோறும் நடிப்பு தான்! நபருக்கு நபர், சொல்லுக்குச் சொல், இடத்துக்கு இடம், நேரத்துக்கு நேரம்….. ! … !