ஜெ தளத்தில் இன்று ”மீண்டும் சந்திக்கும் வரை” கட்டுரையை மீள வாசித்தேன். எனக்கு இலங்கை நாட்கள் நினைவுக்கு வந்துவிட்டது. குறிப்பாய் கொஞ்சும் இலங்கை தமிழ்
அங்கு பேசப்படும் தமிழும், கடைத்தெருவிலும் ரயில் நிலையங்களிலும் ’’புகையிரத நிலையம்‘’ போன்ற தூய தமிழிலான பெயர்ப்பலகைகளும், மக்களின் பெயர்களும் அத்தனை அழகாக இருக்கும். தென்னைமரங்களும், சிரட்டைகளில் அரைலிட்டர் பால் ஊற்றி வைக்கலாம் போல் அளவில் மிகப்பெரிதான தேங்காய்களும், நினைத்துக்கொண்டாற்போல மழையும் இளவெயிலுமாக மாறி மாறி வருவதும், எல்லா வீட்டிலும் இருக்கும் பச்சைப்பசேல் தோட்டங்களுமாக கொழும்பு எனக்கு பெரிது பண்ணப்பட்ட கேரளம் போலவே இருக்கும்.
நண்பர்களின் வீடுகளுக்கு போகையில் நின்னுட்டு போறதுதானே? என்பார்கள். ’’வெளிக்கிட்டு ‘’ பல வருடங்களுக்கு முன்னர் கேட்டது மீண்டும் பின்னர் இப்போதுதான் இக்கட்டுரையில் வாசிக்கிறேன். அவர்கள் சொல்லும் ”வந்தனன்’’ அதனை நன்றாக இருக்கும் கேட்க. அப்படி ஒரு அழகுத்தமிழை வேறெங்கும் கேட்கவே முடியாது.
நடுவில் தாமரைக் குளமுடனிருந்த உதய தென்னக்கோனின் நாலுகட்டுவீடு, மசாலா மணக்கும் மரவள்ளிக்கிழங்கு கறி, சம்பலுடன் இடியாப்பம், அசங்க ராஜபக்ச’வின் வீட்டில் இருந்த பெரும் ரம்புத்தான் மரம் அதில் பறித்து நாளெல்லாம் சாப்பிட பழங்கள், அசங்க’வுடன் சென்ற மிகப்பழமையான புத்தரின் குகைக்கோவில்கள். அசைவ உணவகம் ஒன்றில் சைவம் மட்டும் சாப்பிடும் நான் தயி்ர் சோற்றை வெங்காயம் தொட்டுக்கொண்டு சாப்பிட்டதை ஒரு அம்மாள் எழுந்தே வந்து என்னருகில் நின்று வேடிக்கை பார்த்தது, மினுங்கும் கருமையில் வாளிப்பான பெண்கள், குதிகால் வரை நீண்டிருக்கும் அவர்களின் அடர்ந்த கூந்தல், இந்தியாவின் நைட்டியைப் போலவே பூப்பூவாக போட்டிருக்கும் பல நிற லுங்கியுடனேயே ஆண்கள் அலுவலகம் செல்வது, அங்கு கொடுக்கப்பட்டிருந்த வீட்டருகே இருந்த பெரும் ஏரி , அதன் அருகிருந்த மரக்கூட்டங்களில் எப்போதும் கேட்கும் பறவைகளின் கூச்சல், சந்தன நிற மலர்கள் செறிந்திருந்த ப்ளுமீரியா மரங்களின் அடியில் அமர்ந்து வாசித்த ஏராளமான புத்தகங்கள், இன்னும் மனதில் சுவைத்துக்கொண்டிருக்கும் வட்டாலப்பமுமாக கட்டுரை இலங்கைக்கே என்னை மீண்டும் கொண்டுபோனது.
பல் வைக்கப்பட்டிருக்கும் கருவறை
கொழும்பு வீட்டின் வாசலில் மாலைநேரங்களில் சிறு மணியொலி எழுப்பியபடி ஒரு பேக்கரிபொருட்களை விற்கும் வண்டி வரும். சூடான கேக்குகளும் பன்களும் ரொட்டிகளும் வாசனையாக புத்தம் புதியதாக கிடைக்கும். ஆர்வமாக வாங்கி மூவருமாக சாப்பிடுவோம். காரை வழியெல்லாம் நிறுத்தி நிறுத்தி மக்கள் இனிப்புக்களை வழங்கிக்கொண்டேயிருந்த ஒரு புத்த பூர்ணிமா நாளும், வெண்தாமரைகளுடன் சென்றிருந்த கண்டியின்புத்தரின் பல் இருந்த ஒரு கோவிலும் அதன் அமைதியும் அவ்வப்போது நினைவுக்கு வரும்.
கண்டி புத்தரின் பல் கோவில்
இலங்கை மக்களின் பெயர்கள் எனக்கு மிகவும் பிடிக்கும. சரண் அப்பா கொழும்பில் வேலைக்கு சேர்ந்த புதிதில் அடிக்கடி தொலைபேசியில் ”நானும் மஞ்சுளாவும் போனோம், வந்தோம், மஞ்சுளாவோடுதான் மதியம் சாப்பிட்டேன்” இப்படி. விகல்பமாய் நினைக்காமல் அங்கெல்லாம் அப்படித்தான் போல என்றெண்ணிக்கொள்வேன். குர்கானில் இவர் பணி புரிந்த நாட்களில் ஷேர் ஆட்டோவில் பெண்கள் இவர் மடியிலேயே உட்கார்ந்து வந்தெதெல்லாம் பார்த்திருக்கிறேனே! அப்படி நான் போகாத ஊர்களின் பழக்கங்களில் ஒன்றாக இருக்குமென நினைத்துக்கொள்வேன்
நீல அல்லி
எனினும் ஒருமுறை தானும் மஞ்சுளாவும் நீச்சல் குளத்தில் இருக்கறோம் என்ற போது கொஞ்சம் திடுக்கிட்டேன். அப்போதும் குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த தேவியை படித்த தேவி கடிந்துகொண்டாள், ”ஏன் இப்படி பத்தாம் பசலித்தனமாக இருக்கிறாய்” என்று
பின்னர் முதல்முறையாக இ்லங்கை சென்று பண்டர நாயக சர்வதேச விமான நிலையத்தில் மகன்களுடன் காத்திருக்கையில் எங்களை வரவேற்க அப்போதைய தேசிய மலரான நீலஅல்லி மலர்கொத்துக்களோடு காத்திருந்தார் அவரின் நண்பர் “மஞ்சுள ரண துங்க ”. இப்போது இலங்கையின் தேசிய மலர் அல்லிதான், நீல அல்லி அல்ல.அவரின் மலையொன்றின் மீது அமைந்திருந்த அழகிய வீடும், வீட்டுவாசலில் செறிந்த கனிகளுடன் நின்ற எலுமிச்சைமரமும், காம்பஸ் வைத்து வரைந்தது போல வட்ட முகத்துடன் ஒரு சிறுமியைபோலிருந்த அவர் மனைவியையும் இப்போதுதான் சந்தித்ததுபோல நினவிலிருக்கின்றது.
அங்கிருந்த 6 வருடங்களில் யாழ்ப்பாணம், ஜாஃப்னா, நுவரேலியா எல்லாம் பலமுறை சென்றிருக்கிறேன் எனினும் கண்டியை மறக்கவே முடியாது. ”தி்லங்க” என்னும் ஒரு மரவிடுதியில் அதிகாலை ஜன்னலை திறந்ததும் கண்ணில் பட்ட மலைமுகடுகளும் ஏரியும், விடுதியிலிருந்த மாபெரும் நாகலிங்க மரமும் , இரண்டு உள்ளங்கைகள் அளவிற்கு பூத்திருந்த மலர்களும், மனதை நிறைத்த அவற்றின் சுகந்தமுமாக, அங்கேயே அக்கணத்தின் நிறைவில் செத்துப்போய்விடலாம் என்றேயிருந்தது. தேவதைக்கதைகளில் வருவது போன்ற ஒரு நகரமது. இப்போதும் நாகலிங்கமலர்களின் நறுமணம் என்னை கண்டிக்கு அழைத்துச்செல்லும்.
1500 ஏக்கரில் பரந்து விரிந்த பசும்புல்வெளிகளுடன் இருந்த நுவரேலியாவின் அம்பேவல மாபெரும் மாட்டுப்பண்ணையும், சீஸ்தொழிற்சாலையும் அங்கு அருந்திய மிகச்சுவையான குளிர்ந்த பாலும் அடிக்கடி நினைவில் வந்து ஏக்கமுண்டாக்கும்.
நான் செல்லவிரும்பும் நாடுகளின் பட்டியல் நீளமாக காத்திருக்கின்றது. ஆனால் இனி சென்றால் மீள வராமல் அங்கே இருந்துவிட நினைக்கும் நாடென்றால் அது இலங்கைதான்.
“பொது விதிமுறை, ஒழுக்கம் மற்றும் பொது நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் உள்ளடக்கங்கள் அமைந்துள்ள’’தாகக்கூறி மலேசியா அரசின், 1984 ஆம் ஆண்டு அச்சகங்கள் மற்றும் வெளியீடுகள் சட்டம் செக்ஷன் 7(1) கீழ், நவீன் எழுதிய ‘பேய்ச்சி’ நாவலுக்கு மலேசிய உள்துறை அமைச்சு தடை விதித்திருக்கிறது.நாவலில் ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயர் சொல்லப்படுகிறது. பாலியல் சொற்களும், பாலியல் காட்சிகளும் நாவலில் உள்ளன. இவை வரும் தலைமுறையை சீர்குலைக்கும் என காரணங்கள் சொல்லப்படுகின்றது. இந்த நூலோடு சேர்த்து, ‘Gay is OK! A Christian Perspective’ என்னும் நாவலும் தடைசெய்யப்பட்டிருக்கிறது .
புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் வாழ்வைச்சொல்லும் பேய்ச்சி கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. தமிழக எழுத்தாளர்கள் பேய்ச்சி நாவலுக்கு எதிரான தடையைக் கண்டித்திருக்கிறார்கள். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கமும் இந்தத் தடையைக் கண்டித்துள்ளது. புதிய இலக்கிய சூழலை ஆரோக்கியமாக உருவாக்க முயல்வதற்காகக் கிடைத்த பரிசாகவே இந்தத் தடையைக் கருதுகிறேன்” என்கிறார் நவீன்.
சென்ற வருடம் ஏறக்குறைய இதே சமயத்திலான பேய்ச்சி குறித்தான அருண்மொழி ஜெயமோகன் அவர்களின் 45 நிமிடத்திற்கும் மேலான உரையை காணொளியில் முழுவதுமாக கேட்டேன். அருமையாக இருந்தது. நாவலின் உள்ளடக்கம் முழுவதையும், நாற்றுப்பரப்பின் மீது அலைஅலையென தடவிச்செல்லும் காற்றைபோல மெல்ல வருடிச்செல்கிறார். ஆனால் முழுக்கக்கேட்டதும் இனி வாசிக்கவேண்டியதில்லை என்னும் உணர்வு தோன்றாமல் அதை அவர் சுவைபடகூறும் விதத்தினாலேயே பேய்ச்சியை உடன் வாசிக்கவேண்டுமென்று தோன்றிவிட்டது.
அருணா முழு உரையையும் நினைவிலிருந்தே பேசுவது ஜெ வின் இப்படியான உரைகளை நினைவூட்டியது. அவரும் ஒரு முறைகூட குறிப்பெழுதிய துண்டுக் காகிதங்களை வைத்துக்கொண்டதும் பார்த்ததுமில்லை. இறுதி 5 நிமிடத்தில் ஒரே ஒருமுறை கண்ணாடியை போட்டுக்கொண்டு குறிப்பை பார்க்க எத்தனித்து பின்னர் அவ்வெண்ணத்தை புறக்கணித்து மீண்டும் உளளத்திலிருந்தே சொல்லத்துவங்குகிறார்
பேய்ச்சியை அவர் விவரித்தவிதம் அழகோ அழகு. சின்னப்பிள்ளைகள் பள்ளியில் கதையையோ பாடலையோ சொல்லுவதுபோல அத்தனை அபிநயித்து லயித்து சொல்லிக்கொண்டிருந்தார்.
அரைமணிநேரத்திற்கு பின்னர் கொஞ்சம் களைப்படைந்து மூச்சுவாங்கினாலும் கதை உருவாக்கிய மகிழ்ச்சியும் உணர்வெழுச்சியும் செலுத்த தொடர்ந்து பேசிக்கொண்டேஇருக்கிறார்.
கதையை முழுதாக உள்வாங்கிக்கொண்டு விரிவாக அவற்றைக்குறித்து பேசப்பட்ட பல உரைகளை கேட்டிருக்கிறேன் ஆனால் அருணா பேய்ச்சி கதைக்களத்துக்குள் நின்று, கதையுடன் இரண்டறக்கலந்து கதையை சொல்லிக்கொண்டிருந்தார். அந்த போடியத்தையே பேய்ச்சி கதையின் களமாக்கி, அதற்குள்ளேயே அவரின் அழகிய கையசைவுகளால் காட்சிகளை விவரிக்கிறார். தூரம் என்பதற்கு தொலைவில் கையைக்காட்டி, கிணறு என்று சொல்லுகையில் விரல்களால் ஒரு சிறு வட்டம் வரைந்து அக்கிணற்றைக் காட்டி, அங்கிருந்து இங்கிருந்து கொண்டுவந்ததையெல்லாம் அப்படி அப்படியே கைகளைக்கொண்டு காட்டிக்காட்டி விவரிப்பது அழகு.
அங்கே ஓடை அங்கே மரங்கள் இங்கே கோவில் என்று அருணாவின் கைகள் சுட்டிக்காட்டிய இடங்களிலெல்லாம் என் மனம் ஓடிஓடிச்சென்றுகொண்டே இருந்தது. அவர் கதைக்குள்ளே சென்று சொல்வதல்லாமல் கேட்கும் என்னையும் கையைப்பிடித்து உள்ளே கூட்டிச்சென்று கதையை, அக்கதை மாந்தர்களை, நிகழ்வுகளை சொல்லுகிறார்.
அபாரமான நினைவாற்றல் அருணாவுக்கு. ஏராளமான கதாபாத்திரங்களின் பெயர்களை, அவர்கள் எங்கிருந்து வந்தார்களென்பதை அவர்களின் இயல்புகளை வரிசையாக சொல்லிக்கொண்டே போகிறார், கதையை மூன்று முக்கிய சரடுகளாக பிரித்துச் சொல்லி பின் உப சரடுடகளுடன் அவை பின்னப்பட்டதை சொன்னது மிகவும் சிறப்பு, இனி பேய்ச்சியை வாசிக்கையில் இவ்விளக்கம் பெரும் உதவியாக இருக்கும். எல்லா நாவல்களையும் சில முறை வாசிக்கும் வழமை உள்ளவள் நான். பேய்ச்சியை அப்படியல்லாது ஒருமுறை வாசித்தாலே போதுமென்னும் அளவுக்கு அருணா விவரிப்பில் கதைகுறித்தான தெளிவான ஒரு முன்கட்டமைப்பு மனதினுள் உருவாகிவிட்டிருக்கிறது.
அவ்வபோது அடுத்து என்ன சொல்வதென்று கொஞ்சமே கொஞ்சம் தயங்கி பின்னர் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புடவைகளில் ஒவ்வொன்றாய் தொட்டுத்தொட்டுப்பார்த்து வேண்டியதை தெரிவு செய்து உருவி எடுப்பதைப்போல ஒவ்வொரு சம்பவமாய் நினைவின் அடுக்குகளிலிருந்து தேடிஎடுத்து முகம் மலர சொல்லுகையில் முகம் சாய்ந்து, கருமணிகள் விழியின் ஓரத்திற்கு சென்று கழுவிய புறாமுட்டைகள் போல அவரின் அகலக்கண்கள் இன்னும் பெரிதாக மலர்கிறது.
கவண்கல்லில் ஆங்ஸாவையே சிறுவன் அடித்ததை சொல்லுகையில் அதை அவரே செய்துவிட்டதுபோல மெல்ல கிளுகிளுத்து சிரிக்கிறார். மஞ்சள் பறவை ரத்தம் சிந்தி மரணித்ததை சொல்லுகையில் குரல் இறங்கி முகம் மாறுபட்டு அச்சோகத்தை கேட்பவர்களுக்கும் கடத்துகிறார். அப்போய் குறித்தும் நாய்க்குட்டியை குறித்தும் சொல்லுகையில் அத்தனை குதுகாலம் அவரின் உடல்மொழியில். அப்போய் போன்ற சிறுவர்களின் கதாபாத்திரங்களை சொல்லுகையில் அருணாவின் வாசிப்பின், அறிவின் விசாலம் தெரிகின்றது பதேர் பாஞ்சாலியிலிருந்து நடாஷாவின் தம்பி வரை அடுத்தடுத்து சொல்லுகிறார்.
அதுபோலவே புதிய நிலத்தில் தங்களைபொருத்திக்கொள்ள முடியாமல், அப்பதற்றத்தில் குடிக்குள் மூழ்கும் ஆண்களை நீரில் வேரின்றி மிதக்கும் பாசிக்கும், ஆண்கள் அப்படியிருப்பதால், உளவிசை கூடிய பெண்கள் வேர்பிடித்த ஆல் போல அங்கு ஊன்றி வளரத்துவங்குகிறார்கள் என்று ஒப்பிட்டது வெகு சிறப்பு.
அருணாவின் உள்ளம் முழுக்க கதைக்களத்துக்குள் முழுமையாக ஒன்றியிருப்பதை கேட்பவர்கள் உணரமுடிகின்றது. ஈரமூக்கை கைகளில் வைக்கும் நாய்க்குட்டியை சிறுவன் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு ஓடிச்செல்லுவதை சொல்கையில் அருணா மேடையிலிருந்து ஓடிசெல்லாமலிருந்ததுதான் வியப்பு. அத்தனை அர்ப்பணிப்புடன், ஆர்வத்துடன் கதையை சொல்லுகிறார்
அருணா பேய்ச்சியை அடுக்கடுக்காக பிரித்து, அழகாய் கண் முன்னே காட்டுகையில் ஒரு மலரை அதன் பாகங்களை. ஆய்வுக்கூடத்தில் முதலில் புல்லிவட்ட இதழ்களை, பின்னர் அல்லிவட்ட இதழ்களை, பின்னர் சூலகம், மகரந்த காம்புகள் என ஒவ்வொன்றாக பிரித்து பிரித்து மாணவர்களுக்கு விளக்குவதுடன் ஒப்பிட்டுக்கொண்டேன்
கதையை அதில் கூறப்பட்டிருக்கும் மக்களை நிலப்பரப்புக்களை மொழியை பின்னர் கதாபாத்திரங்களின் இயல்பை என ஒவ்வொன்றாக சொல்லிச்சென்றது மிக நன்றாக இருந்தது
கோழிகள், விலங்குகள், யட்சி ராஜநாகம் தாவரங்கள், மூலிகைகள் என கலந்துவரும் பேய்ச்சியை உடன் வாசிக்கவேண்டும் என்னும் பெரும் விருப்பத்தை இந்த உரை ஏற்படுத்தியிருக்கிறது. உடனே வாங்கி வாசிக்கத் துவங்கிவிட்டிருக்கிறேன். எப்போதும் பொருத்தமாக பாந்தமாகவெ உடையணீயும் அருணா இந்த உரையின் போதும் அணிந்திருந்த ஆழ்நீலத்தில் இளம்பச்சை சரிகைக்கரையிட்ட புடவையும் அவரின் கண்ணியமான தோற்றத்தை இன்னும் கூட்டிக்காட்டியது.
இப்படி வரிவரியாக ஆழ்ந்து வாசித்து உணர்வெழுச்சியுடன் மணிக்கணக்காக ஒரு கதையை பேசமுடியுமென்னும் அளவிற்கு ஒருவர், ஒரே ஒருவர் வாசிப்பார்களேயானால் அதன் பொருட்டு உயிரைக்கொடுத்தாவது ஒரு கதையை எழுதிவிடவேண்டும் என்று எனக்கே கூட தோன்றியது ):
புஷ்கரவனத்தில் குடிலின் முன்பு நின்றிருந்த செண்பக மரத்தின் அடிமர நிழல், அந்தியில் ஏற்றி வைத்த மண் அகல் விளக்கொளியில் முற்றம் வரை விழுந்திருந்ததை கண்டுகொண்டிருந்த ஆஸ்திகனுக்கு அன்னை மானசாதேவி அன்று சொல்லத்துவங்கிய கதை, மானசாதேவியின் நூற்றெட்டு நாகஸ்தலங்களில் ஒன்றில் வழிபடும் சீர்ஷனுடன் பயணித்து, மற்றுமொரு அன்னை, ஆயர்குடிப்பிறந்த அழகை, ஆழிப்பால் பெருக்கின் அலையை,, கரியோனை, அணிச்சங்கனை,தேவர்க்கிறைவனை,அலைமலர் கண்ணனைப் பாடும் இனிய தாலாட்டில் நிறைவுற்றிருக்கிறது. இத்தனை ஆண்டுகாலம் எங்களுடனேயே வெண்முரசும் வளர்ந்தது, திகழ்ந்தது, இனி எந்நாளும் எங்களுடனும் இனி வரும் தலைமுறையுடனும் என்றென்றுமென இருந்து கொண்டுமிருக்கும்
இம்மாபெரும் படைப்பின் நிறைவைக்குறித்து நான் உண்மையில் அஞ்சிக்கொண்டிருந்தேன். முதலாவிண்னை வாசிக்க வேண்டாமென்று கூட நினைத்திருந்தேன். வருடங்களாக என்னுடன் மிக அணுக்கமாக இருந்த வெண்முரசின் நிறைவு எனக்குள் ஒரு வெறுமையை, மாளாத்துயரை, பொருளின்மையை உருவாக்கிவிடும் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அப்படி இல்லாமல் கமுகும், மஞ்சளும் செங்கீரையும், மூங்கிலும்,அசோகமும் ஆலும், அருகும், நிலவும் குளிரும், நீள்பீலியும், கானும், கடலும், வானும் வளியும், கரியோனின் நீலமலர்க்காலடி படிந்த பொன்பரப்பும், பால் உலர்ந்த கன்னங்களுக்கிடப்பட்ட ஓராயிரம் முத்தங்களுமாய், பூத்தெழுந்த பொன்மலரை பாடிப்புகழும் தாலாட்டுடன் இனிதே நிறைவுற்றிருக்கிறது. ஆம் நிறைவு என்று வாசிக்கையில் உணரும் உண்மையான் பொருளே வெண்முரசின் நிறைவுதானென்று எண்ணுகிறேன்.
வெண்முரசு துவங்கிய போதும் அழகு, எங்களுடனேயெ இத்தனை வருடங்கள் வளர்ந்தபோதும் அழகு, இளமழை பொழிந்துகொண்டிருக்கும் இருள்பிரியா இக்காலையில் நிறைவுற்ற போதோ இன்னும் பேரழகு. அவ்வன்னையின் தாலாட்டு ஓய்ந்த பின்னரும் அது சென்றடைந்த இடத்திலேயே இருக்கும் சீர்ஷனைப்போல வெண்முரசு நிறைவடைந்த பின்னரும் அது என்னை அழைத்துச் சென்று விட்டிருக்கும் அவ்வுலகிலேயே நிறைவுடன் இருக்கிறேன்.
மகாபாரதக்கதையில் மிகஇளம் வயதிலேயே பித்துக்கொண்டிருந்த, ஒரே மகனுக்கும் சந்தனுபரீக்ஷித் என்றெ பெயரிட்டிருக்கும் என் சகோதரி சங்கமித்ரா எங்களின் இளம்வயதில் பள்ளி விளையாட்டு மைதானத்தில் எனக்கும் இன்னும் சில தோழிகளுக்குமாக ஈரமணலில் குச்சியொன்றினால் ஒரு மரம் வரைந்து அடித்தண்டை சந்தனுவென்றும், அதிலிருந்து கிளைவிரித்துச்சென்ற முழுமகாபாரதக்கதையையும் சுருக்கமாக விளக்கிய கணம்தான் மகாபாரதக்கதைகளுக்கான விதையொன்று மனதில் விழுந்த கணம். வெண்முரசு நிறைவுற்றிருக்கும் இக்கணம் வரையிலும் அம்மரம் வளர்ந்தபடியேதான் இருந்தது
வெண்முரசு போன்ற பெரும்படைப்பொன்று நிகழ்ந்த காலத்தில் நானும் இருப்பதும், அதை முழுமையாக,வாசித்ததும், அம்மொழி எனக்கு புரிந்ததுமே என் வாழ்வின் ஆகசிறந்த விஷயங்களாகியிருக்கின்றன. என் வாழ்வையே வெண்முரசுக்கு முன்னும் பின்னுமென இரண்டாக பகுத்துக்கொள்ளலாம் அத்தனைக்கு பெரும் அகமாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் படைப்பு இது. துவங்கிய நாளிலிருந்தே தினமும் என் காலைகள் வெண்முரசினோடுதான் புலர்ந்தன. தவிர்க்க இயலாத காரணங்களால் சிலநாட்களைத்தவிர வேறெப்போதும் வெண்முரசை வாசிக்காமல் இருந்ததேயில்லை
சொல்லப்போனால் அஸ்தினாபுரியிலும் காசியிலும் மகதத்திலும் அங்கத்திலும் சொல்வளர்க்காட்டிலுமேதான் நான் வாழ்ந்துகொண்டிருந்தேன் அவ்வப்போது அவ்வுலகின் திரைவிலக்கி இவ்வாழ்வில் அன்னையும், ஆசிரியையுமாக இருந்தேனென்றே சொல்லலாம். வெண்முரசின் தாக்கமும் எனக்கு மிக அதிகம் இருந்தது. குறிப்பாக வெய்யோனும் மாமலரும். அப்போதெல்லாம் காலையில் வாசித்த அத்தியாயம் ஏற்படுத்திய உளஎழுச்சிகளிலிருந்து, அன்றைக்கு இரவு வரையிலுமே கூடவிடுபடமுடியாமலிருந்திருக்கிறேன்.
வகுப்பில் கரும்பலகையில் எழுதிக்கொண்டிருக்கும் போதும் உள்ளத்தின் ஒருபகுதியில் வெண்முரசின் எதோவொரு நிகழ்வொன்றின் பொருட்டான துயரோ, மகிழ்வோ பொருளின்மையோ, சீற்றமோ இருந்துகொண்டிருந்த நாட்கள் பற்பல. வாசிக்கையில் உடல்மெய்ப்புக்கொண்ட பலநூறுகணங்களை இப்போதென நினைவிலிருந்து மீட்டெடுக்க முடியும்.
எப்போதும் வெண்முரசின் அத்தியாயங்களை நேரிடையாக தளத்தில் சென்று வாசிக்காமல், நான் வெண்முரசை மின்னஞ்சல் வழி தொடர்ந்து கொண்டிருந்ததால் உள்பெட்டியில் சென்று, மின்மடலை திற்ந்தே வாசிப்பேன். மீள் வசிப்பே தளத்தில். அது இம்மாபெரும் படைப்பு எனக்கே எனக்கெனெ எழுதப்பட்டு மின்மடலாக அனுப்பப்பட்டிருக்கிறது என்னும் ஒரு மகிழ்வையும் அங்கீகாரத்தையும் எனக்களித்து வந்தது பலநாட்கள் கண்விழித்திருந்து 12.01 க்கு காத்திருந்து வாசித்திருக்கிறேன்.
காலையில் வாசித்துவிட்டு மகன்களுக்கு சொல்ல இன்னொருமுறையும் வாசித்துவிட்டு, பயணங்களிலும், கல்லுரியில் வகுப்புகளுக்கான இடைவேளையிலும் மீள மீள வாசித்திருக்கிறேன்
மாமலர் நிகழ்ந்து கொண்டிருக்கையில் டெங்கு காய்ச்சலால் கொத்துக்கொத்தாக பலர் எங்களூரிலும் சுற்றுப்புற கிராமங்களிலும் உயிரிழந்து கொண்டிருந்தார்கள். எனக்கும் அக்காய்ச்சல் தொற்றி, உள்ளூரில் ஒரு சிறிய மருத்துவமனையில் 1 வாரமிருந்த போதும் தினம் வெண்முரசை வாசித்துக்கொண்டிருந்தேன். என் ரத்த அணுக்களின் அளவு 3000த்திலிருந்து மிக வேகமாக குறைந்த ஒரு அதிகாலையில் உடனே ஆம்புலன்ஸில் என்னை கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையின் டெங்கு சிறப்புப் பிரிவில் அனுமதிக்க வேண்டுமென்னும் ஒரு அவசரநிலையின் போது கண்ணீருடன் என் சகோதரி ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யச்சென்ற இடைவெளியிலும் அன்றைய வெண்முரசின் அத்தியாயத்தை வாசித்தேன். கோவைக்கு சென்று கொண்டிருக்கையில், வண்டியின் விரைவும் அந்த ஒலிப்பானின் சத்தமும் கடும்காய்ச்சல் கொடுத்த தலைவேதனையுமாக கனவும் நனவும் கலந்த ஒரு பயணத்தில் என்னுடன், உறவை முடித்துக்கொண்டு விடைபெற்ற கசனும், கண்ணீரும் சினமுமாக தேவயானியும் உடனிருந்தார்கள். நான் இறந்துவிடுவேனோ என்னும் அச்சமும், விடுதியில் இருந்த மகன்களின் நினைவும் எவ்வளவு இருந்ததோ அதற்கிணையாகவே , தேவயானியின் இறப்புக்கு நிகரான அந்த கைவிடப்பட்ட தருணமும் அது அளித்த துயரும் இருந்தது அப்போது. இப்போதும் ஆம்புலன்ஸின் ஒலி கேட்கையில் எனக்கு கசனும் தேவயானியும் // மீண்டெழும் வாய்ப்புள்ள இறப்பென்பது மாளாத்துயர்ப்பெருக்கு// என்னும் வரியும் நினைவுக்கு வரும்.
நானும் உடழலிந்து வெறும் உள்ளமென இருந்த நாட்கள் அவை. தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்த அந்த 3 நாட்களில் எனக்கு அலைபேசி கொடுக்கப்படவில்லை அதன்பொருட்டான என் அதி தீவிர முயற்சிகளை கேள்விப்பட்ட தலைமை மருத்துவர் ஒருவர் கேலியாக என்னிடம் ’’இப்படி மகாபாரதம் படிச்சே ஆகனும்னு அடம்பிடிச்சீங்கன்னா அப்புறம் கருடபுராணம் வாசிக்கவேண்டி வந்துரும்’’ என்றார் சிரித்தபடி. அதற்கு நான் புன்னகைக்கக்கூட செய்யாததால் ’’ஏம்மா, எப்பவோ நடந்த எல்லாருக்கும் தெரிஞ்ச கதைதானே மகாபாரதம், அதுக்கு ஏன் இப்படி மெனக்கெடறீங்க? என்றார். அவருக்குபுரியும்படி சொல்ல என்னிடம் பதிலில்லை ஆனால் எனக்கு அலைபேசியை கொடுக்கும்படி செவிலியரிடன் சொல்லி விட்டுச் சென்றார் அவர்
மானசாதேவியின் மடியில் படுத்து கதை கேட்ட ஆஸ்திகனைப்போலவே சிறுவர்களாக என்னிடம் கதைகேட்டு வெண்முரசின் கூடவே வளர்ந்து இன்று தோளும், மார்பும், அகமும் விரிந்த இளைஞர்களாக என் இரு மகன்களும் இருக்கிறார்கள். அப்போதெல்லாம் காலை 8 மணிக்கு வரும் பள்ளி வாகனத்துக்கு 7.30க்கே தயாராகி தெருமுனையிலிருக்கும் அரசப்பெருமரமொன்றின் புடைத்த வேர்களில் மூவருமாக அமர்ந்து வெண்முரசை வாசிப்போம் வாகனத்தின் மஞ்சள் நிறம் கண்ணுக்கு தென்படும் வரையில் கதை போய்க்கொண்டிருக்கும். முடியாத கதையின் நினைவுகள் கண்களில் நிறைந்திருக்க கனவிலென வண்டியேறிச்செல்லும் பெரியவன் சரண் மாலை வீடுதிரும்பி என் கைகளைப்பிடித்தபடி சாலையைக் கடக்கும்போதே ’’அப்புறம் என்னாச்சு சொல்லு சொல்லு’’ என்றபடியே வருவான் அந்த முழுநாளும் அவன் மனதில் வெண்முரசேதான் நிகழ்ந்து கொண்டிருந்திருக்கும்
9 ஆம் வகுப்பில் பூரிசிரவசின் மேல் பெரும் அபிமானமும் அணுக்கமும் அவனுக்கு ஏற்பட்டிருந்த அந்தக்காலத்தில், விடுதியில் தங்கவேண்டி வரும் எதிர் காலத்தின் பயிற்சியாக திங்கட்கிழமை பள்ளி விடுதியில் விட்டு வெள்ளியன்று வீடு திரும்பும் ஒரு ஏற்பாட்டை 3 மாதங்கள் செய்தேன். வீட்டிலிருந்து பள்ளி செல்லும் இளையவன் தருண் மதிய உணவு இடைவேளையில் அண்ணனை சந்திக்கும் போது கொடுக்க அன்றன்றைக்கான வெண்முரசின் நிகழ்வுகளை ஆங்கிலத்தில் சிறு சிறு குறிப்புகளாக ஒரு துண்டுப்பேப்பரில் எழுதி கொடுத்துவிடுவேன், 11, 12 வகுப்புக்களை இருவரும் கோவையில் ஒரு பள்ளி விடுதியில் இருவரும் தங்கிப்படிக்கையில், மாதமொருமுறை வெளியே அழைத்துச்செல்லலாமென்னும் ஞாயிறுகளிலும் சிறுவாணி அணைக்கு செல்லும் மரங்கள் சூழ்ந்த அந்தச்சாலையில், பள்ளிக்கு வெளியே சிறுபடிகளுடன் கூடிய பீடத்துடன் ஒரு கொடிமரம் இருக்கும் அங்கு அமர்ந்து மணிக்கணக்காக, ஒருமாத வெண்முரசின் கதைகளை பேசுவோம். பிற மாணவர்கள் குடும்பமாக கோவையின் உணவு விடுதிகளுக்கும் மால்களுக்கும் திரைப்படங்களுக்குமாக சென்ற பல நாட்களில் நாங்கள் மூவரும் அஸ்தினபுரியிலும் இந்திரபிரஸ்தத்திலுமாக இருந்தோம். வெண்முரசால் நானும் மகன்களும் இன்னும் அணுக்கமானோம்.
மகன்களுக்கு மட்டுமல்லாது மிக நெருங்கிய நண்பர்களுக்கும் அலைபேசியில் பலமணிநேரம் வெண்முரசின் முக்கியப்பகுதிகளை சொல்லி இருக்கிறேன். ஒருமுறை ராமேஸ்வரத்திற்கு பொள்ளாச்சியிலிருந்தே காரில் சென்று வந்த பயணம் முழுவதும் உடன்வந்த குடும்பத்தினருக்கும் சேர்த்து வெண்முரசை வழியெல்லாம் சொல்லிக்கொண்டே இருந்தேன். அப்போது துருவனின் கதை நிகழ்ந்துகொண்டிருந்தது. உணவுக்காக சாலையோரம் நின்றிருந்த போது அந்த வாடகைக்காரின் ஓட்டுனர் என்னிடம் தான் வாழ்க்கையில் கதையே கேட்டதில்லை என்றும் இந்தகதையை தெய்வமே சொல்லிக்கொண்டு வந்ததுபோலிருப்பதாகவும் சொன்னார் இனி மீதிக்கதையை தான் எப்படி தொடர்ந்து வாசிப்பதென்றும் கேட்டார். உளமகிழ்ந்து உங்களின் தளத்திற்கு சென்று எப்படி வாசிப்பதென்பதை சொல்லிக்கொடுத்தேன் அவருக்கு
.அவருக்கு கதையில் வரும் ’’கத்தியை குத்தி, சுழற்றி பின்னர் உருவி வெளியே எடுப்பது’’ என்பது போல வரும் ஒரு சொற்றொடரை குறித்து பெரும் பிரமிப்பு இருந்தது அதை சொல்லிக்கொண்டே இருந்தார்
எங்களது கோடைவிடுமுறைகள் எல்லாமே வெண்முரசுடன் தான் கழிந்தன. இளநாகனின் பயணமொன்றின் போது அவன் ஒரு மூதாட்டியின் இல்லத்தில் கம்பரிசிக்கூழ் அருந்துவதை வாசித்தபின்னர்,நினைத்துக்கொண்டதுபோல புத்தகத்தையும் கையில் எடுத்துக்கொண்டு மெல்ல நடந்தே பக்கத்து ஊருக்கு சென்று அங்கு சாலையோரம் விற்கப்பட்ட கம்பங்கூழை வாங்கி அருந்தியபின்னர் கதை சொல்லியபடி, கேட்டபடியே வீடு வந்தோம்.
மழைப்பாடல் புத்தகமாக வந்த சமயத்தில் அதை எடுத்துக்கொண்டே மகாபலிபுரம் கடற்கரையொட்டிய ஒரு விடுதியில் தங்கசென்றிருந்தோம். அங்கு அலைகளின் அருகிலமர்ந்து 5 நாட்களில் மழைப்பாடலை முழுமையாக வாசித்தோம். ’’இத்தனை செலவு செய்து அங்கு வந்தும் இந்த புத்தகத்தை படிக்கறதுக்கு பொள்ளாச்சியிலேயே இருந்திருக்கலாமென்னும்’’ கணவரின் அங்கலாய்ப்புக்கும், கோபத்திற்கும் அப்போது அஸ்தினபுரியிலும் மதுராவிலும் காசியிலும், காந்தாரத்திலும் இருந்த நாங்கள் எதிர்வினையாற்றவே இல்லை. இப்படி வெண்முரசுடன் கழிந்த இனியநாட்களின் பலநினைவுகள் ஏராளமாக எங்களுடன் இருக்கின்றது
சென்ற மாதத்திலிருந்து முதற்கனலிலிருந்து மீள் வாசிப்பை துவங்கி இருக்கிறோம். வெண்முரசு நிறைவெனும் துயர் அதிகம் ஏற்பட்டிருக்காததற்கு இந்த மீள் வாசிப்பும் ஒரு காரணம். பூரிசிரவஸின் முறிந்த காதல்களுக்கு கண்ணீர் விட்டழுத அன்றைய சரண், இப்போது எனக்கு கதையை சொல்லிக்கொண்டிருக்கிறான். மீண்டும் ஒரு முறை வாழக்கொடுத்து வைத்ததுபோலிருக்கிறது மகன் சொல்லச்சொல்ல வெண்முரசை நான் இப்போது கேட்கையில்.
வெண்முரசு ஏற்படுத்திய அதே பிரமிப்பும் மகிழ்வும் வெண்முரசின் வாசகர்களும் எனக்களித்தார்கள். வெண்முரசு ஒரே ஒருவரால் எழுதப்பட்ட பெரும்படைப்பென்பதை நம்பவே நம்பாத ஒரு தலைமுறைக்கு அது ஜெயமோகன் என்னும் ஒற்றை மனிதரால் மட்டுமே எழுதபட்டதென்று சொல்லும் சாட்சிகளாகவே வாசகர்களாகிய நாங்கள் இருப்பதாக நினைத்துக்கொள்வேன்.
முதன்முதலாக வெண்முரசு கூடுகைக்கு விஜயசூரியனின் இல்லத்திற்கு சென்று அங்கு அத்தனை தோழமையும் அத்தனை புரிதலுமாக ஆணும்,பெண்ணும் வாசிப்பில் மகிழ்ந்திருக்க முடியுமென்பதை வாழ்வில் முதன்முதலாக கண்ட பிரமிப்பு எனக்கு இன்னும் இருக்கின்றது. அதுபோன்ற சந்தர்ப்பங்கள் என் குடும்பத்து பெண்களுக்கெல்லாம் கற்பனைக்கெட்டாதவை, எனக்கு எப்படியோ வெண்முரசால் அருளப்பட்டவை
.சொந்த ஊரான வேட்டைக்காரன் புதூரின் சித்தர் கோவிலுக்கு ஒருமுறை பேருந்தில் சென்று கொண்டிருக்கையில் ஜெயமோகனும் அருண்மொழியுமாய் ஒரு ஐரோப்பிய பயணத்திலிருந்த புகைப்படங்களை நண்பரொருவர் அனுப்பியிருந்தார். மகன்களுடன் அவற்றைப் பார்த்துப் பேசி மகிழ்ந்து கொண்டிருக்கையில் அருகில் அமர்ந்திருந்த ஒரு கிராமத்துப் பெண்மணி உங்களிருவரின் புகைப்படத்தை தொட்டுக்காட்டி’ யாரு கண்ணு உன்னோட அண்ணனும் நங்கையாளுமா?‘ என்றார்கள். மனம் சட்டென்று பூரித்து, நிரம்பி, மூச்சடைத்தது, சமாளித்துக்கொண்டு ’ஆம்’என்றேன்.
முதல் சந்திப்பிலேயே சின்னப்பிள்ளைக்கு சொல்லித்தருவதைப்போல அன்புடனும் பொறுமையுடனும் எனக்கு தமிழ் தட்டடச்சு செய்ய கற்றுக்கொடுத்த மீனாம்பிகையிலிருந்து, சொந்த சகோதர சகோதரிகளைப்போல இன்பத்திலும் துன்பத்திலும் தோள் கொடுக்க தயாராக உலகெங்கிலும் இருக்கும் அத்தனை நண்பர்களுடன் நானும் வெண்முரசு குடும்பத்தின் ஒர் அங்கம் என்பதைத்தவிர பெருமையான, சிறந்த விஷயம் எனக்கு வேறோன்றுமே இல்லை
வெண்முரசை வீட்டிற்கு வெளியே மரங்களுக்கு அருகிலும், அடியிலும் அமர்ந்தேதான் பெரும்பாலும் வாசித்திருக்கிறோம். மகன்களுடன் மரங்களும்,செடிகொடிகளும் சேர்ந்து வெண்முரசை கேட்டுத்தான் வளர்ந்தன. அன்று சிறு கன்றுகளாக வைத்திருந்தவை இன்று வீட்டைவிட உயரமான பெருமரங்களாகி விட்டிருக்கின்றன. மாமலர் துவங்குகையில் பூக்கத்துவங்கிய புன்னைக்கு மாமலர்ப்புன்னை என்றே பெயர். சொல்வளர்க்காடு துவங்குகையில் நட்டுவைக்கப்பட்ட ஏழிலைப்பாலையும், இந்திரநீலத்தில் பாளைவிட்ட தென்னையொன்றும், காண்டீபத்தின் போது மலரத்துவங்கிய கொடிச்சம்பங்கியும், வெண்முகில் நகரின் மீது படர்ந்து மலர்ந்த ருத்ரமல்லியுமாய் என் மகன்களுக்கு நான் விட்டுசெல்லவிருப்பது கதைகேட்டுக்கேட்டு வளர்ந்து இவ்வீட்டை சூழ்ந்திருக்கும் பசுமையையும், வெண்முரசென்னும் உறவுகளையும் மட்டும்தான்
வாசிப்பென்பது இத்தனை பெரிய இயக்கமாக, ஒரு கொண்டாட்டமாக இருப்பதெல்லாம் வெண்முரசைப்போன்ற ஒரு பேரிலயக்கியத்திற்க்குத்தான் சாத்தியம். என்னைபோல் வீட்டுக்கும், வேலைசெய்யும் இடத்துக்கும் தவிர வேறெங்கும் செல்லும் சாத்தியங்களும், சுதந்திரமும் அற்ற பெண்ணுக்கு வெண்முரசு திறந்து விட்டிருக்கும் வாயில்கள் ஏராளம்.
வெண்முரசின் சொற்களெல்லாம் எங்களின் மனதில் பல்லாயிரம் விதைகளாக, நிறைந்து முளைத்து வளர்ந்து கொண்டெ இருக்கின்றது. ஆலெனப்பெருகி அருகென தழைத்தபடியெ இருக்கும் வெண்முரசு வாழ்வில் கொண்டுவந்திருக்கும் நன்மாற்றங்களுக்கும், நிறைவிற்கும், மகிழ்விற்கும் இனிமைக்கும், துயருக்கும், கனிவிற்கும் இன்னும் எல்லாவற்றிற்குமாய் மனம் நிறைந்த நன்றிகள்
வெண்முரசின் கழிமுழையின் தாளம் என் இறுதிக்கணம் வரையிலும் இதயத்துடிப்பிற்கு இணையாகவே ஒலித்துக்கொண்டேதான் இருக்கும் ஒவ்வொரு வருடமும் இறுதிவருட படிப்பை முடித்துவிட்டு கண்ணீருடன் விடைபெற்றுக்கொண்டு பிரியும் மாணவர்களை நினைத்துக்கொண்டு தனித்தமர்ந்திருக்கையில் உணரும் இனிய துயரே இன்று எனக்கிருக்கிறது, ஒருவேளை எனக்கு பெண் பிறந்திருந்து அவளுக்கு விருப்பமானவருடன் அவளது திருமணம் முடிந்து அவள் சென்றிருந்தாலும் இப்படித்தான் உணர்ந்திருப்பேனாயிருக்கும்.
ஒரு உடல் நலக்குறைவின் பொருட்டு, மூளையை முற்றிலும் மழுங்கடிக்கும் வீரியமுள்ள மருந்துகள் எடுத்துக்கொள்வதால், வகுப்புக்களுக்கு செல்ல முடியவில்லை. கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளலாமென்று, ஒரு நீண்ட மருத்துவ விடுப்பில் சென்னை, செம்பரம்பாக்கம் சென்றேன். சரண்அப்பா துவங்கவிருக்கும் புதிய கிளையின் கட்டுமானப்பணிகள் அங்கு நடப்பதால் அவரிருக்கும் ஒரு அடுக்ககத்தில் தங்கி இருந்தேன்.
இப்படியான பெருநகரங்களில் இத்தனை நீண்ட நாட்கள் தங்கி இருப்பது இதுவே முதன் முறை. (கடைசியும் கூட!) திருமணமாகி. அபுதாபியில் பல வருடங்கள் இருந்தபோதும் அது அத்தனை உவப்பான வாழ்விடமாக எனக்கு தெரியவில்லைதான் எனினும் அன்னைமையிலும் மகன்களை வளர்த்துவதிலும் எப்படியோ அவ்வருடங்களை நான் கடந்துவிட்டிருந்தேன்.
ஆனால் இப்போது தனியே மகன்களின்றி, இங்கு இத்தனை நாள் இருந்தது பெரிய திகில் அனுபவமாகி விட்டது. புதிதாக கட்டப்பட்டிருக்கும் 20 தளங்களுடனான அடுக்ககம். பச்சையே எங்கும் இல்லை. மரக்கன்றுகளை கொண்டு வந்து இப்போதுதான் இறக்கிக்கொண்டிருக்கிறார்கள்
இவரை அனுப்பி காலை 8 மணிக்கு கதவைச் சாத்தினால் இரவு 8 மணி வரை கொடுந்தனிமை. காலி பங்களாவில் பேய் நடமாடுவதைப்போல அறையறையாக நடந்துகொண்டிருந்தேன். இரண்டுமூன்று நாட்கள் கழித்துத்தான், நானே என்னுடன் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை கண்டுபிடித்தேன்.
புறப்படுகையில் கொண்டு வந்திருந்த புத்தகங்களில் சில, பால்கனி இருக்கும், எட்டாவது மாடியிலிருந்து வாசிக்க உகந்தவையல்ல என்று சில பக்கங்களிலேயே தெரிந்தது. சுகந்தி சுப்ரமணியனின் பதிவுகளை வாசித்தேன் அவரின் எளிய கவிதைகளையும், நாட்குறிப்புக்களையும் சுகந்தி யாரென்று அறியாமல் வாசிப்பவர்களுக்கு பொருளற்றவையாக கூட தோன்றியிருக்கும், ஆனால் ஜெ’ தளத்தின் வாயிலாக நான் சுகந்தியை அறிந்துகொண்டவளென்பதால் அவரது பதிவுகள் என்னை பெரிதும் தொந்தரவு செய்தன
வாசல் தெளிக்க கோலம்போட என்று எந்த வேலையும் இல்லை பெரிதாக. புறநகர் குடியிருப்பென்பதால் சென்னையின் விரைவும் பரபரப்பும் கூட இங்கில்லை.
எல்லாவற்றையும் விட அங்கு மனிதர்களை அதிகம் பார்க்கவோ பேசவோ முடியவில்லை கதவை திறந்தால் இன்னும் இரண்டு வீடுகளின் கதவுகள், எப்போதாவது கீழே போனாலும், மின்தூக்கியில் துக்கவீட்டைபோல இறுகின முகத்துடன் இருக்கும் யாரும் யாரையும் பார்த்து பேசுவதோ, புன்னைகைப்பதோ கூட இல்லை
அங்கேயே இருக்கும் சிறிய பூங்காவில், சைக்கிள் ஓட்டிக்கொண்டு துரத்தி ஓடி விளையாடும் குழந்தைகள். (கூண்டுப்பறவைகளின் காதலில் பிறந்த குஞ்சுப்பறவைகளுக்கு எப்படி, எதற்கு, சிறகு என்று வண்ணதாசன் ஒரு கவிதையில் கேட்டிருப்பார். அதை நினைத்துக்கொண்டேன்) ஒரு சிறிய விநாயகர் கோவில், உள்ளேயே வந்து குழந்தைகளை ஏற்றி இறக்கும் பள்ளி வாகனங்கள், செல்போனில் மூழ்கி இருக்கும் இளைஞர்கள். இங்கிருப்பவர்களுக்கு வெளி உலகமென்பது ஞாயிற்றுக்கிழமைகளில் செல்லும் மால்களும் சினிமாவும் உணவகங்களும் மட்டும்தான் போல. பகலிலும் இரவிலுமாய் நாற்பது காவலாட்கள் உள்ளிருக்கும் எதையோ தீவிரமாக காவற்காக்கின்றனர். பெரிய நூலகம், ஏராளமாய் ஆங்கிலப்புத்தகங்களும், தமிழில் ஒரே ஒரு வைரமுத்துவின் புத்தகமும்.
வாரமொருமுறை கறிகாய்கள் விற்கும் ஒரு அம்மாவுக்காக. பெண்கள் கூட்டமாக காத்திருக்கிறார்கள் நான்கு முழம் மல்லிகைச்சரத்தை கொண்டு வந்து நறுக்கி, ஒரு இணுக்கு 20 ரூபாய் என்று அந்தம்மா விற்கிறார். வாங்கி அங்கேயே தலையில் வைத்துக்கொள்கிறார்கள். ”போன வாரமே மாங்காய் கொண்டு வரேன்னு சொன்னீங்களே என்னாச்சு” என்று வயிறு மேடிட்டிருந்த இளம் பெண்ணொருத்தி கேட்டுக்கொண்டிருந்தாள்
சென்னையில் இருக்கும் உறவினர்களுடன் ஒரு சினிமா போனோம். 6 பேர் இருக்கும் ஒரு குடும்பம் சென்னையில் சினிமா பார்க்க ஆகும் செலவில் இங்கு ஒரு குடும்பம் தாராளமாக ஒரு மாதத்தை மகிழ்ச்சியாக கழித்துவிடலாம் அத்தனை செலவுள்ள விஷயம் அது.
அதுவும் இடைவேளையில் விற்கும் சோளப்பொறியின் விலையை கேட்டு கிராமத்து மனுஷியான எனக்கு கண்ணைக்கட்டியது. முன்னைப்போல முகமூடியுடனோ, ஜட்டி மட்டும் போட்டுக்கொண்டு உடம்பெல்லாம் எண்ணையும் கரியுமாக பூசி, இருட்டில் பயந்தும் ஒளிந்துமோ கொள்ளையடிக்க வேண்டியதில்லை, உன்னத சீருடையணிந்து, குளிரூட்டப்பட்ட சென்னை மால்களில் சோளப்பொறி விற்றால் போதும் போலிருக்கிறது
ஆட்டோவிலும் இருசக்கரவாகனத்திலும் குடங்களுடன் சனம் அலைகின்றது தண்ணீருக்காக. வயதுக்கு மீறி கொழுந்த குழந்தைகள், எங்கெங்கும் துரித உணவுகள், ஒரு மழைக்கே நாறிப்போகும் தெருக்கள் என்று சென்னைப்பெருநகரின் முகத்தைப்பார்த்து மிரண்டு போனேன்.
உடல் ஓய்வெடுத்தாலும் உள்ளம் இது எனக்கான இடமல்ல என்று அலறிக்கொண்டெ இருந்தது. என்னால் அமைதியாக ஒரு மணி நேரம் கூட அங்கே இருக்கமுடியவில்லை. பால்கனியை திறந்தால் பரந்து விரிந்து, முற்றிலும் வறண்டிருக்கும் செம்பரம்பாக்கம் ஏரி இன்னும் மனச்சோர்வையளித்தது..
அபோடுஹ் நிகழ்ந்துகொண்டிருந்த வெண்முரசின் தீயின் எடையும் தாங்க முடியவில்லை. குருதிபெருக்கெடுத்து ஓடியது குருஷேத்திரக்களத்தில், துரியோதனனின் பாவை தன்னந்தனியெ களத்தில் நின்றிருந்த அன்றும், பீமனை குரங்குகள் புறக்கணித்தபோதும் கடுமையான உளச்சோர்வுக்கு உள்ளானேன். பாதிஇரவுகளில் அலறிக்கொண்டு விழித்தெழத்துவங்கினேன் ஒரே வாரத்தில்
நல்லவேளையாக சென்னை நண்பர் ஒருவர் பரிசளித்த புத்தகங்களை வாசித்தபின்னரே என்னுடன் தமிழ்நதியும் ,யூமா வாசுகியும், கசீ சிவகுமாரும் சில நாட்கள் உடனிருந்தனர்
நரம்புக்கோளாறு, இன்னும் இங்கிருந்தால் மூளைக்கோளாறாக மாறிவிடும் சாத்தியங்கள் தென்பட்டதால், விடுப்பு முடியும் முன்னரே ரயிலைப்பிடித்து, ஊர் வந்து சேர்ந்தேன். வெளிக்கதவை திறந்ததும் திடுக்கிட்டு தென்னையில் தாவி ஏறிய அணிற்பிள்ளைகளையும், புன்னம்பூக்களும் பவளமல்லியுமாய் நிறைந்துகிடந்த ஈர வாசலையும் குலைதள்ளி இருந்த வாழைகளையும் பார்த்தபின்பே பழைய மனுஷியானேன.
இந்த இரண்டு வாரத்தங்கலில் எதையாவது மீள நினைத்துக்கொள்வேன் என்றால் அங்கிருந்த துல்லிய நீலவானை பிரதிபலித்துக்கொண்டு, ஒளியலைகளுடனிருந்த மாபெரும் நீச்சல்குளத்தையும், மெட்ரோவில் பயணிக்கையில் என்னை நோக்கி சிரித்தபடி கையை நீட்டிய ஒரு குழந்தையையும் தான்.
பிழைப்புக்காக சென்னை போவது, என்பதை நெடுங்காலம் முன்பிருந்தே கேட்டுக்கொண்டிருக்கிறேன். சரிதான், சென்னையில் வாழ்தலே இல்லை வெறும் பிழைத்தல் தான்.
இதைக்குறித்து திரு ஜெயமோகன் அவர்களுக்கு எழுதிய கடிதமும் அதற்கு அவரின் பதிலும்.
ஊட்டி முகாமிலிருந்து வீட்டிற்கு மாலை 6 மணிக்கெல்லாம் திரும்பி விட்டோம் நானும் சரணும். பெருமழை பெய்துகொண்டிருந்த வெள்ளியன்று காலை புறப்பட்டு இப்போது வீடுதிரும்பியது வரையிலான இம்மூன்று நாட்களின் நிறைவிலும் இனிமையிலுமாய் மனம் நிறைந்திருக்கின்றது. வெள்ளியன்று நாங்கள் இருவரும் வருகையிலேயே முதல் அமர்வு துவங்கியிருந்தது, அப்போதிருந்து மூன்றாம் நாளின் நிறைவான அரங்குவரை, வழக்கம் போல எந்த தொய்வும் குளறுபடிகளும் இன்றி குறித்த நேரத்திற்கு முறையாக அரங்குகள் நடந்தன. இந்த ஒழுங்கு எப்போதுமே என்னை ஆச்சர்யப்படுத்தும் ஒன்று. பல்வேறு தளங்களிலிருந்து , பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும் மாணவன் உட்பட, பல அகவைகளில் வரும் இருபாலரும் பங்குகொள்ளும் கூடுகையில் ஒரு பிழையுமின்றி திட்டமிட்டபடியே எல்லாம் நடைபெறுவது மிக அரிதான ஒன்று, இம்முறையும் அப்படியே நடந்து முடி ந்தது
சென்ற வருடத்தைக்காட்டிலும் அதிக எண்ணிக்கையில் வாசகர்கள் வந்திருந்தோம், பெண்களும் முன்பைவிட நிறையப்பேர் கலந்துகொண்டிருந்தோம்.
நாஞ்சில் நாடன்,P.A. கிருஷ்ணன், தேவ தேவன், லக்ஷ்மி மணிவண்ணன்,உள்ளிட்ட பல எழுத்தாளர்களும் கலந்துகொண்டிருந்தார்கள். கதை, கவிதை கம்பராமாயண அரங்குகள் அனைத்துமே வெகு சிறப்பாக இருந்ததென்றாலும் , எனக்கென்னவோ இம்முறை கவிதை விவாத அரங்கு மிக மிக நன்றாக அமைந்திருந்தது என்று தோன்றியது. அத்தனை விரிவாகவும் பலதரப்பட்ட கோணங்களிலிருந்தும் வந்த கருத்துக்களாலும், விளக்கங்களாலும் கவிதை அரங்கு சிறப்பாக இருந்தது
கவிதைகளின் சிறப்பம்சங்களை சில விவாதங்களில் பேசினோம் என்றாலும் நாகப்பிரகாஷ் தெரிவு செய்திருந்த கவிதையைக்குறித்தான விவாதத்தில், எது நல்ல கவிதை என்பதற்கான விளக்கமும், எப்படி நல்ல கவிதையை இனம் காண்பதென்றும், எதை நாம் கவிதைவாசிக்கையில் கவனிக்கனுமென்றும் தெரிந்துகொண்டேன்.மூன்று நாட்களுக்கு முன்னரான என் கவிதை வாசிப்பிற்கும் இனிமேலான என் கவிதை வாசிப்பிற்கும், தெரிவிற்கும் நிச்சயம் நல்ல மாற்றமிருக்கும்.
திரு.மோகனரங்கன்
மோகனரங்கன் அவர்களின் ’முடிச்சு’ கவிதை விவாதம் ஆச்சர்யமளிக்கும் விதத்தில் விரிந்துகொண்டே போனது. அந்தக்கவிதையை முகாமிற்கு வரும்முன்னர் நான் தனிமையில் வாசிக்கையில் அது எனக்களித்த உணர்வையும் புரிதலையும் விட விவாதத்தின் போது ஜெ’வும் பங்கேற்பளர்களும் பிற எழுத்தாளர்களுமாய் அதை பல கோணங்களிலிருந்து அர்த்தப்படுத்துகையில் அது ஒரு மிக அழகிய நான் கொஞ்சமும் நினைத்திராத ஒரு வடிவிற்கு வந்து சேர்ந்தது. கலைடாஸ்கோப்பில் ஒவ்வொரு அசைவிற்கும் கோணங்கள் மாறி உள்ளிருக்கும் கண்ணாடிச்சில்லுகள் வேறு வேறு வண்ணச்சித்திரங்களைக் காண்பிப்பது போல. ஒரு சிறு புள்ளியாக என் மனதில் இருந்த அந்தக்கவிதையின் பொருள் விரிந்து விரிந்து மிக அழகிய சித்திரமானது
கரமசோவ் சகோதரர்களிலிருந்து ஜன்னல் வரை ஆரோக்யமான விவாதங்களும், விளக்கங்களுமாய் நிறைந்திருந்தது கதை அரங்கு
நெற்றியில் விபூதிப்பட்டை துலங்க வெண்கலக்குரலுடன் திருக்குறள் உரையாற்றிய திருமூலனாதனின் தமிழறிவை வணங்குகிறேன். ’’ தூண்டில் பொன்’’ என்பதற்கு ஜெ சொல்லிய அந்த பட்டு நூலை தூண்டிலில் கட்டுவது குறித்தான விளக்கம் இனி எப்போதும் நினைவிலிருக்கும்.
சிங்கை சுபாவும், திருமூலநாதனும்
வேளாவேளைக்கு சூடான சுவையான உணவும் , இடைவேளைகளில் தேனீருமாய் எல்லாம் கச்சிதமாக எப்போதும் போல நடந்தது
அரங்கில் அனைவரும் வசதியாக குடும்ப நிகழ்வொன்றில் அமர்ந்திருப்பது போல சாய்ந்தும் சம்மணமிட்டும் சிலர் நாற்காலிமாய் அமர்ந்துகொண்டிருந்தோம் எனினும் அரங்கு ஒரு கட்டுக்குள் இருப்பதையும் உணர்ந்திருந்தோம்.
இரவு 10 மணிக்கு மேலும் அரங்கில், ஆர்வமுடன் அமைதியாக அனைவரும் கலந்துகொண்டதும். பெருமழை வரப்போகும் அறிகுறிகளையும் யாரும் பொருட்படுத்தவில்லை என்பதையும்,வியப்புடன் நினைவு கூறுகிறேன்
14டிகிரி குளிரிலும் அனைவரும் அரங்கிற்கு சரியான நேரத்திற்கு வர அவசரமாய் குளித்து தயாராகி வந்தோம். எந்த குடும்ப நிகழ்விற்கும் இப்படி ஒரு மகிழ்ச்சியுடன் நாங்கள் கலந்துகொண்டிருக்கவில்லை.
நாஞ்சில் நாடன் அவர்களின் யுத்தகாண்ட உரை அத்தனைஅருமை, இன்னும் 1வாரம் தொடர்ந்து கம்பராமாயணமே அவர் தொடர்ந்து உரையாற்றுவாரெனினும் அமர்ந்து ஆர்வமாக கவனித்திருப்போம்
அரங்கிற்கு வெளியேயும் உணவுண்ணும் போதும் பேகிக்கொண்டிருந்ததில் மற்ற எழுத்தளர்களிடமிருந்தும், ஜெ;விடமிருந்தும், பங்கேற்பாளர்களிடமிருந்தும் நிறைய கற்றுக்கொண்டேன்.
முகாமிற்கு வரும்பொழுது நான் சுத்தமாக துடைத்த வெற்றுக்கலமாகவே வந்தேன். ஊர் திரும்புகையில் நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறேன்
3 நாட்களில் எத்தனை எத்தனை அறிதல்கள்?
இந்திய ஞானமரபில் தத்துவம், இந்தியச்சிற்பக்கலை குறித்தும் நிறைய அறிந்துகொண்டேன்
புதிதாக கலந்துகொண்ட இளம் வாசகர்கள் ஆர்வமிகுதியிலும் பதட்டத்திலும் கோர்வையாக பேசமுடியாமல் கேட்கநினைத்ததை துண்டு துண்டாக கேட்கையில், ஜெ அதை சரியாக தொகுத்து அழகாக முன்வைக்கிறார். உண்மையில் அதை மறுகட்டமைப்புச்செய்து அவர் சொன்ன பிறகே எங்களுக்கு மட்டுமல்லாது கேள்வி கேட்டவருக்கே அவர் கேட்க நினைத்ததென்னவென்று புரிந்தது
ஒரு நாளுக்கும் மற்றொன்றிற்கும், எந்த மாறறமுமில்லாத பணிச்சுமை எப்போதும் கூடி இருக்கும், மிகுந்த பரபரப்பான நாட்கள் நிறைந்த என் வாழ்வில் இந்த 3 நாட்களும் முழு ஓய்வு மட்டுமல்லாது, பற்பல புரிதல்களும், அறிதல்களும், தோழமையுமாய் நிறைந்திருந்தது
குருநித்யாவின் சமாதி இருக்கும் இடத்தில் எடுத்துக்கொண்ட குழுப்புகைப்படத்தை எனக்கு ஒரு தோழி பகிர்ந்திருந்தார். அதில் வாய்கொள்ளாச்சிரிப்புடன் இருக்கும் என்னை நானே வியப்புடன் பார்த்துக்கொண்டேன். இப்படி நான் மனம் விட்டுச்சிரிக்கும் ஒரு புகைப்படமும் வீட்டில் இல்லை ,ஏனெனில் அத்தகு தருணங்கள் இதுவரை வாய்த்ததில்லை. இந்த 3 நாட்களைக்குறித்தான இத்தனை நீளக்கடிதத்தில் எழுதிய அனுபவங்கள் அனைத்தையும் அந்தப்புகைப்படத்திலிருக்கும் என் சிரிப்பு சொல்லிவிடும்
இப்படி முற்றிலும் மகிழ்வான நிறைவான நாட்கள் வேறெந்த வகையிலும் எனக்கு கிடைத்திருக்காது என்பதை நிச்சயமாகச்சொல்லமுடியும் என்னால். இம்மூன்று நாட்களின் இனிய நினைவுகள், இன்னும் சில வருடங்களுக்கு உற்சாகமாக நான் வேலை செய்யவும் , தளரும் தருணங்களில் என்னை நானே தட்டிக்கொடுத்துக்கொள்ளவும் உதவி செய்யும்.
ஈரோடு, காஞ்சிகோவில் பண்ணை வீட்டில் வெண்முரசின் சிறப்புக்கூடுகையில் கலந்துகொண்ட பின்னர் இப்போதுதான் ஊர் திரும்பினேன். இதற்கு முன்னர் விஷ்ணுபுரம் விழாக்களிலும், ஊட்டி காவியமுகாம்களிலும் கலந்துகொண்டிருக்கிறேன் எனினும் இந்தக்கூடுகை மிகச்சிறப்பானதொன்றாக இருந்தது. திரு ஜெயமோகனின் எழுத்துக்களில் அனைத்தையுமே நான் வாசிப்பவள் அதுவும் மீள் மீள வாசிப்பவள் எனினும் ’வெண்முரசு’ என்னும் மாபெரும் படைப்பினைக்குறித்த பிரமிப்பே எனக்குள் முழுமையாக நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் மீள் வாசிப்பில் எனக்கு பல புதிய விஷயங்கள் தெரிய வந்துகொண்டே இருக்கின்றது.. எனவே இந்த வெண்முரசுக்கான சிறப்புக்கூடுகையில் நான மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டேன்.
முதல் நாள் ஜெ இல்லாவிடினும் வழக்கம் போலவே சரியான நேரத்தில் ஏற்கனவே கலந்துகொள்பவர்களுக்கு தெரிவித்திருந்தபடி முதல் அமர்வு துவங்கியது. திரு. மது ,வெண்முரசின் தரிசனங்களும் படிமங்களும் குறித்துப்பேசினார். ’’தண்நிலவும் கங்கையும், வழுக்கும் குளிர் நாகங்களும் சந்தனக்காப்புமாய் குளிர்ந்திருக்கும் சிவனை அனலோன் என்கிறோம்’’ என்னும் அவர் தமிழாக்கம்செய்த அந்த அழகிய சமஸ்கிருதப்பாடலுடன் துவங்கினார் குந்தி பீஷ்மர் சந்திப்பு சுப்ரியையின் எஞ்சும் நஞ்சு, முதற்கனலில் விதைத்தவை இன்று முளைத்து கிளைபரப்பி வளர்ந்திருப்பது என்று அழகாகப் போனது அவர் உரை.. குறிப்பாக சுழற்சி தரிசனம் குறித்து வெகு அருமையாக சொன்னார்.
அனைத்து அமர்வுகளிலுமே திரு கிருஷ்ணன் வலுவான ஆதாரபூர்வமான தகவல்கள் நிறைய அளித்தார். அவரை இதற்கு முன்னரே பல ஆண்டுகளாக, நிகழ்வுகளை கச்சிதமாக ஒருங்கிணைப்பவராக, மட்டுறுத்துனராக, உரைகளில் ஆழ்ந்து மட்டுறுத்துவதையே மறந்தவராக, உங்களின் மிக நெருங்கிய அன்பு நண்பராக அறிந்திருக்கிறேன். ஆனால் இந்தக்கூடுகையில் அவரின் legal expertise என்னவென்பதை உணர முடிந்தது.
Biological தந்தை யாரென்பதற்கான DNA சோதனைகளுக்கான சட்டம், பிறழ் உறவில் பெண்னை குற்றவாளியாக இணைக்கக்கூடாது எனும் சட்டம், கர்ணனை least crime committed என்று சொல்லலாம் இப்படி ஒவ்வொருஅமர்விலும் வெண் முரசு தொடர்பான பல சட்ட நுணுக்கங்களை விளக்கமாக கூறினார்
அடுத்த அமர்வில் பாரி, வெண்முரசின் உச்சதருணங்கள் குறித்துப்பேசினார். அரிஷ்டநேமி இளையயாதவர் குசேலர்,புஷ்கரன் என்று மிக முக்கிய கதாபாத்திரங்களின் உச்ச தருணங்களை விளக்கினார். பல வருடங்கள் ஊழ்கத்திலிருந்த இளைய யாதவரின் பீலிவிழி அவருக்குப்பதிலாக அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்ததை, இளைய யாதவருக்கும் குசேலருகும் இருந்த உறவை, புஷ்கரன் என்னும் ஆளூமையைக்குறித்தெல்லாம் பேசினார்.
அந்த அமர்விலும் நிறைய கலந்துரையாடினோம். கர்ணனுக்கும் சுப்ரியைக்குமான கசப்பு அவள் சேடி இறந்தபோது அவளின் வஞ்சமும் இறந்துவிடுவது இப்படி கலந்துரையாடலிலும் அதிகம் புதிய கோணங்களும் புதுப்புது அர்த்தங்களும் கிடைத்தன பலரிடமிருந்து
அடுத்ததாக ராகவ் சொற்களின் எண்ணிக்கை குறித்து மிக விரிவான ஒரு ஆய்வு செய்திருந்தார். அது மலைப்பாக இருந்தது மொத்த வார்த்தைகள் இதுவரை வெண் முரசிலெத்தனை, குறிப்பிட்ட சில வார்த்தைகள் எத்தனை முறை உபயோகத்திலிருக்கிறது, எப்படி ஒரு குறிப்பிட்ட வார்த்தையை சுலபமாக தேடி எடுக்கலாம் என்றெல்லாம் விளக்கினார்.
பின்னர் ராஜமாணிக்கம் அவரகளின் ‘ வெண்முரசில் தந்தைமை’’ அமர்வு துவங்கியது. அது தீப்பிடித்தது போல பலராலும் பலவிதங்களில் அனல் பறக்க விவாதிக்கப்பட்டு கூட்டுஉரையாக இருந்தது. குறிப்பாக பாரி, ’திருதிராஷ்டிரர் பெரும் தந்தையா அல்லது வெறும் தந்தையா’ என்று எடுத்துக்கொடுத்தது வெகு ஆர்வமாக மிகஆவேசமாகக்கூட விவாதிக்கப்பட்டது. திருதிராஷ்டிரர், தீர்கதமஸ், துரோணர்,ஜாததேவன் சாத்யகி விதுரர், யயாதி என்று தந்தையரின் பட்டியலும் விவாதமும் மிக சுவாரஸ்யமாக நீண்டுகொண்டே போனது.
பிறகு மறுநாளின் அமர்வில் ஜெ’வும் இருந்தார். அந்தியூர் மணி அவர்களின் ‘’ பிற இலக்கியஙகளிலிருந்து வெண்முரசில் எடுத்தாளப்பட்டவை’’ என்னும் உரையும், பாண்டிச்சேரி தாமரைக்கண்ணனின் மாமழை குறித்த அருமையான் உரையும், வேணுவின் ‘’ நீலம் மலர்ந்த நாட்களும், மதிய உணவிற்குபின்னர் ஜெ’வின் உரையுமாய் அன்றைக்கும் மிக அருமையான ஒரு நாளாகவே இருந்தது.
இந்த இரண்டு நாட்களுக்குப்பின்னர் இப்போது நினைக்கிறேன் நான் வெண்முரசை மிக நேரடியாக வாசித்திருக்கிறேன் என்று. வெண்முரசென்னும் ஒரு மாபெரும் அரண்மனையின் கதவுகளைத்திறந்து நேராக உள்ளே விடுவிடுவென்று சென்று கொண்டிருந்திருக்கிறென் அந்த மகத்தான படைப்பின் பலதளங்களையும் அடுக்கைகளையும் மறை பொருட்களையும் நான் அறிந்திருக்கவே இல்லை
வெண்முரசு வாசிப்பில் இத்தனை இத்தனை சாத்தியங்கள் இருக்கின்றது, பிரம்மாண்டமான் இப்படைப்பை இத்தனைஇத்தனை கோணங்களில் வாசிக்க முடியுமென்பதைத் தெரிந்துகொண்டேன் ஒவ்வொரு கூடுகையிலும் புதியவர்கள் இளைஞர்கள், மற்றும் பெண்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். அதுவும் மகிழ்ச்சியாக இருந்தது.
விஷ்ணுபுரம் விழா எப்படி வருடந்தோறும் நடைபெறுகின்றதோ, அப்படி வெண்முரசுக்கும் அவசியம் நடத்தினால் இன்னும் பல வாசகர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதை ஒரு வேண்டுகோளாகக் கேட்டுகொள்கிறேன்.
என்னைபொருத்தவரை மிக plain ஆக இருந்த வெண்முரசு வாசிப்பு இன்று மிகப்பெரிய சித்திரமாகிவிட்டிருக்கிறது.
உறிஞ்சுதாளில் சொட்டிய மைத்துளி ஊறி, விரிந்து பரவிச்செல்வதுபோல பல கோணங்களிலும் வாசிப்பின் சாத்தியங்கள் விரிந்து வருவதை பலரும் ஆச்சரயத்துடன் இந்த இரண்டு நாட்களும் உணர்ந்தோம். வழக்கம் போல சரியான நேரத்திற்கு உணவும் தேனீரும்சிற்றூண்டிகளும் வழங்கப்பட்டது, வாழையும் கரும்பும் சேனையும் மஞ்சளுமாக அருமையான சூழலில் இருக்கும் பண்ணை வீட்டில் இக்கூடுகை நடந்தது இன்னும் சிறப்பாக இருந்தது
இவற்றை எற்பாடு செய்தவர்களுக்கும் பலவேலைகளை விருப்பத்துடன் செய்தவர்களுக்கும் அமர்வுகளில் உரையாற்றியவர்களுக்கும், திருஜெயமோகனுக்கும் நன்றியை தவிர சொல்லிக்கொள்ள வேறென்ன இருக்கிறது?
இன்று மகன்களுடன் காஞ்சிபுரம் வந்து ஸ்ரீபாண்டவத்தூது பெருமாளை தரிசித்தோம். ஜெயமோகன் அவர்களின் காஞ்சி –ஊட்டி பதிவு வாசித்தபின்னர் இங்கு வரவேண்டும் என விரும்பினேன். கோடை விடுமுறை முடிந்து கல்லூரி திங்கட்கிழமை மீண்டும் திறப்பதால், இப்போது வராவிட்டால் இனி அடுத்தது நவம்பரில் தான் முடியும் எனவே சரண் அப்பாவை ராணிப்பேட்டைக்கு டிக்கட் போடச்சொல்லி நேற்று புறப்பட்டு வந்தோம். இத்தனை வருடத்தில் அவரின் உருக்காலை இருக்குமிடத்திற்கு நானாக வருவதாகச்சொன்னது இதுவே முதல் முறை என்பதால், ஏதோ காரணமிருக்குமென்று யூகித்திருந்தாலும் மனமகிழ்ந்து ரயிலடிக்கே எங்களை அழைத்துச்செல்ல வந்திருந்தார்.
வந்ததும் வராததுமாக பெருமாள் கோவிலுக்கு நாளை காஞ்சிபுரம் போகனும்னு சொன்னதும், எந்த உணர்ச்சியும் முகத்தில் காட்டாமல் ஜெயமோகன் எழுதியிருந்தாரே அந்த கோவிலுக்கா? என்றார். ஆமென்றேன் . ஜெ’வின் தளத்தில் அந்தகோவிலைப்பற்றி அவர் வாசித்திருக்க வாய்ப்பில்லை என் முகத்திலிருந்து வாசித்திருப்பார்.
ரோகிணி நட்சத்திரத்துக்குரிய நாள் இன்று , (13/6) என்பதால் கோவிலில் நல்ல கூட்டம். ரோகிணி நட்சத்திரத்துக்காரர்களும் அவர்களின் குடும்பமுமாக நெரிசலாக இருந்தது. அடிப்பிரதட்சணமும் அங்கப்பிரதட்சணமும் நிறையபேர் செய்துகொண்டிருந்தார்கள். நீண்ட வரிசையில் காத்திருந்து, பொறுமையாக தரிசித்தோம். அந்தக்கரியதிருமேனியின் அழகைச்சொல்ல வார்த்தையில்லை. திவ்யதேசங்களில் ஒன்றான, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மிகப்புராதானமான, மகாபாரதத்துடன் தொடர்புள்ள இக்கோவிலுக்கு, செந்நாவேங்கை வாசித்துக்கொண்டிருக்கும் போது வந்தது எனக்கு பெரும் மகிழ்வளித்தது. இதற்கு முன்னரும் காஞ்சி வந்திருந்தாலும் இக்கோவிலைப்பற்றி, ஜெயமோகன் அவர்கள் எழுதியதற்கு முன்னர் தெரிந்திருக்கவில்லை.
பலர் பெருமாளுக்கு பலவகைப்பாயசம் படைத்து வழிபட்டார்கள். வரிசையில் எனக்கு முன்பாக நின்றிருந்த ஒருவர் தீர்த்தம் வாங்கியபின்னும் நகராமல் கையை நீட்டியபடியே நின்றிருந்தார். நகருங்கோ, என பட்டர் சொன்னதும் விபூதி கொடுங்க என்றார். பட்டர் முறைத்துவிட்டு பெருமாள் ’’இந்த ஷேத்திரத்தில தீர்த்தம் மட்டும் தான் நீங்க இப்போ சொன்ன வார்த்தையை இங்கே எங்கயும் சொல்லப்படாது’’ என்றார்., கோவில்களில் அறிந்துகொள்ளவும் கடைப்பிடிக்கவும் வேண்டிய எளிய அடிப்படை விதிகளைக்கூட தெரிந்துகொள்ளாமல் இருப்பது நான் மட்டுமல்ல எனக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுக்குமளவிற்கு இன்னும் சிலர் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு ஒரே மகிழ்ச்சி. விபூதி கேட்டவரைப்பார்த்து மிகப்பிரியமாக புன்னகைத்துவிட்டு தீர்த்தம் வாங்கி, சடாரி வைத்துக்கொண்டு வெளியே வந்தேன்.
கோபுரத்தில், எங்கள் வீட்டு அகத்தி மரத்துக்கு வருபவை போலவே அளவில் பெரிய பச்சைக்கிளிகள் ஏராளமிருந்தன, கூடவே அணில்களும். பிராகாரமெங்கும் கிளிகளுடையதும், குளத்தின் சுற்றுச்சுவரில் பக்தர்கள் வைக்கும் தானியங்களுக்காக வரும் புறாக்களுடையதுமாக நிறைய இறகுகள் அங்குமிங்குமாக கிடந்தது. இங்கு வந்ததின் நினைவாகஅங்கிருந்த ஒரு குஞ்சுக்கிளியின் பூஞ்சிறகொன்றினை எடுத்துக்கொண்டேன். குருதிச்சாரல் புத்தகத்திற்குள் அச்சிறகிருக்கிறது இப்போது, இனி எப்போதும்
காஞ்சியில் இன்னும் பல கோவில்களுக்கும் சென்றோம். பெருமழை பெய்துகொண்டிருக்கும் பொள்ளாச்சியிலிருந்து புறப்பட்டு இங்கு முகத்திலறையும் வெயிலில் அலைந்து உடல் களைத்தாலும் உள்ளம் குளிர்ந்திருந்தது. இனி துவங்கப்போகும் கல்வியாண்டிற்கான ஒட்டுமொத்த உற்சாகத்தையும் சக்தியையும் இந்தக்கோவிலிலிருந்து திரட்டிக்கொண்டேன்.
வெண்முரசினுடனேயே வாழ்ந்துவருதாகவே எப்போதும் உணர்பவள் நான், குருதிச்சாரலில் தூது வந்த கிருஷ்ணரின் கோவிலுக்கு நானும்வந்ததில், வெண்முரசிற்கு இன்னும் நெருக்கமானதுபோல உணர்கிறேன், அதற்காகவேதான் வந்தேன்.
திரு தியடோர் பாஸ்கரன் அவர்களுடனான இணைய வழி கூடுகை 12/9/2020 அன்று விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தினால் ஒருங்கிணைக்கபட்டது. நிகழ்வு மிக சிறப்பானதாக நிறைவானதாக இருந்தது. இந்த நோய்தொற்றுக்காலத்திலும் இணையம் வழியே திரு முத்துலிங்கம் , திரு நாஞ்சில் நாடன், திரு தியடோர் பாஸ்கரன் என மிக முக்கியமான் ஆளுமைகளுடன் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக உரையாடவும் பலவற்றை அறிந்துகொள்ளவும் முடிந்ததில் மகிழ்ச்சி.
விஷ்ணுபுரம் விழா, ஊட்டி,குரு நித்யா ஆசிரமத்தின் காவிய முகாம், ஈரோடு கூடுகைகளைப் போல விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக நடத்தப்படும் எல்லா விழாக்களையும் போலவே இணைய வழிகூடுகைகளும் மிகச்சிறப்பாக நேரஒழுங்குடன், முறையாக நடப்பது ஆச்சர்யமளிகின்றது. பொதுவாக ஒழுங்குடன் இருப்பதாக சொல்லப்படும் கூட்டங்களில் காணப்படும் செயற்கையும், வெற்றுச்சம்பிரதாயமும், உயிரற்ற தன்மையும், இறுக்கமும் இல்லாமல் இங்கு சிரிப்பும் பாட்டும் மகிழ்ச்சியும் சுதந்திரமும் கூடவே முறையான ஒழுங்கும் இருப்பதுதான் வியப்பு.
திரு ராஜகோபாலன் வழக்கம்போலவே மிகச்சிறப்பாக மலர்ந்த முகத்துடன் நிகழ்ச்சியை நடத்தினார். அவருக்கு பின்னிருக்கும் அன்னை யானையும் குட்டியும் தும்பிக்கைகளால் தொட்டுக்கொள்ளும் சித்திரம் அழகு
தியடோர் பாஸ்கரனை போல மிக முக்கிய ஆளுமைகளை இப்படி ஏராளமானோர் சந்திக்கையில் பன்முக ஆளுமையும் அனுபவசாலியுமான அவரிடமிருந்து பலவற்றை கற்றுக்கொள்ள முடிகின்றது. சூழல்மீதான் அவரது கரிசனமும் அறிவும் பிரமிப்பளிக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு இந்து தமிழ் நாளிதழில் சென்னையின் காணாமல் போகும் நீர்நிலைகளைக்குறித்தான அவரது கட்டுரையொன்றைக்குறித்து நான் அவருக்கு மின்னஞ்சல் செய்திருந்தேன். மின்னஞ்சல் முகவரியை தவறாக குறிப்பிட்டிருந்ததால் எனக்கே திரும்ப திரும்ப வந்துகொண்டிருந்து. பின்னர் பொறுமையாக சரியாக அதை அவரது முகவரிக்கே forward செய்தேன். மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றதையும் முன்னரனுப்பியவற்றில் நான் ஓரெழுத்தை விட்டுவிட்டதால்தான் அவை திரும்பின என்பதையும் குறிப்பிட்டு பதில் அளித்திருந்தார். மிக சின்ன விஷயங்களிலும் கவனமும் கரிசனமும் கொண்டிருப்பவர் என்பதற்கான் சான்று அந்நிகழ்வும். கடந்த ஆகஸ்ட் மாதமும் திரு.தியடோர் பாஸ்கரன் அவர்கள் மத்திய அரசின் விஞ்யான் பிராசார் ஏற்பாடு செய்திருந்த ஒரு இணையவழிகூடுகையில் ஒருமணி நேரத்திற்கும் அதிகமாக மிக முக்கியமான சூழல் பதுகாப்பு குறித்த உரையாற்றுகையில் நானும் கேட்க கொடுத்து வைத்திருந்தது
Slipper orchid வகையில் அரிதான ஒன்றான Paphiopedilum druryi குறித்தும், நாய்கள் பூனைகள் காட்டுயிர்களை குறித்துமான அவரது கருத்துக்கள் சுவாரஸ்யமானவை மட்டுமல்லாது மிக முக்கியமனவையும் கூட.
Paphiopedilum druryi
ராணுவ அதிகாரி போன்ற மிடுக்கான தோற்றமும், பொருத்தமான ஆழ்ந்த குரலுமாக வசீகரமான ஆளுமை அவர், குறிப்பாக அந்த கம்பீர மீசை. அவரது மனைவியை அறிமுகப்படுத்தியதும் அப்படித்தான், அவர்களுக்குள் இருக்கும் அன்பையும் புரிதலையும் அந்த சிலமணி நேரங்களிலேயே உணர முடிந்தது.
அவர்களின் செல்லப்பூனையின் குரல் அவ்வப்போது மெல்லிசாக கேட்டுக்கொண்டிருந்தது. அவரது மனைவியும் காமிராவின் முன்னால் வருகையில் பூனையை கீழே விட்டுவிட்டு வந்துவிட்டார். அது ஒரே செல்லச்சிணுங்கலும் புகாருமாக குரல் கொடுத்துக்கொண்டே இருந்தது. பின்னர் தாளமுடியாமல் தாவி மேசைக்கு வந்தேவிட்ட அதை அவரும் வாரி எடுத்து மடியிலிருந்திக்கொண்டார். அவ்வப்போது இணையவழி கணவருக்கு தெளிவாக வந்து சேராத கேள்விகளை இவர் தள்ளி இருந்து மெல்லிய குரலில் மீண்டும் சொல்லுவதும், இவரும் முழுநிகழ்விலும் மனைவியின் பக்கமாகவே ஒரு செவியை குவித்து வைத்துக்கொண்டதுமாக அவர்களது அன்னியோன்யம் மனதுக்கு மிகவும் நிறைவளித்தது
அவர் பேசிக்கொண்டிருந்ததை ஒரு screen shot எடுத்து சேமித்து வைத்துக்கொண்டேன். அவருக்கு பின்னால் அடுக்கபட்டிருந்த புத்தகங்களும் சிறிய கண்ணாடிக்குடுவை நீரில் செருகப்பட்டிருந்த அழகிய பூங்கொத்துக்களும், புத்தர் சிலையும், வாஞ்சையுடன் அவரது மனைவி அணைத்துகொண்டிருந்த பூனைக்குட்டியுமாய், இயற்கைமீதும் உயிர்களின் மீதும் கரிசனம் நிறைந்த அவரது ஆளுமையைக்குறித்தும் அந்த ஒரு காட்சியே முழுக்க சொல்லிவிட்டது.
பச்சைபுல்வெளிகளைக் குறித்தான அவரது கருத்து மிக முக்கியமானது. பலவகைப்படும் Ground cover plants எல்லாவற்றையும் நிரந்தரமாக அப்புறப்படுத்திவிட்டு புற்களை மட்டும் நிரப்பி, பெரும் நீர்ச்செலவில் அதை வளர்த்தி , அதை அழகு எனக்கொண்டாடுவதில் எனக்கும் பெரும் ஒவ்வாமை இருக்கின்றது. ஒழுங்கற்ற பல்லுயிர்ப்பெருக்கின் அழகுதானே இயற்கையென்பது?
காட்டுயிர் பாதுகாப்பு என்றாலே சிங்கம்,புலி, கரடி யானைகளின் பாதுகாப்பு மட்டுமல்ல flora and fauna இரண்டும் சேர்ந்ததே காட்டுயிரென்பதை தியோடர் பாஸ்கரன் அவர்கள் சொல்லுகையில் அது பலருக்கும் சென்று சேர்கிறது.
எனவே தான், நான் எப்போதும் ஆதங்கப்படும் களைச்செடிகளின் அழிவு குறித்தும் பாதுகாப்பைக் குறித்தும் அவரிடம் கேட்க நினைத்தேன் WWF India வின் குழுவிலும் இருந்திருக்கும், இத்துறையில் அனுபவமிக்க அவரது கருத்துக்கள் எல்லாமே சூழல் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பில் மிக முக்கிமானது.
பத்து வருடங்களுக்கு முன்பு வெகு சாதாரணமாக சாலையோரங்களிலும் தரிசு நிலங்களிலும் வேலிகளிலும் செறிந்து காணப்பட்ட நூற்றுக்கணக்கான களைச்செடிகள் இப்பொது அரிதாகவே காணக்கிடைக்கின்றன. அவற்றின் முக்கியத்துவம் தெரியாமல் அவற்றை இழந்துகொண்டே இருக்கிறோம்
NBR எனபடும் Nilgiri Biospehere reserve ஒரு மாபெரும் தாவர பொக்கிஷம். சில வருடங்களுக்கு முன்பு ஊட்டியில் மட்டுமே வளரும் endemic வகை தாவரங்களை காணும் பொருட்டு மாணவர்களுடன் அங்கு சென்றிருக்கையில் சாலையின் இருபுறமும் ஆட்கள் செடிகளை வெட்டி துப்புரவாக்கிக்கொண்டிருந்தனர். அதிர்ச்சியாகி காரணம் கேட்கையில் மறுநாள் ஒரு அரசியல் தலைவரின் வருகையின் பொருட்டு சாலைகள் தூய்மைப்படுத்தப்படுவதாக சொன்னார்கள். நீலக்குறிஞ்சி மலைமுழுதும் மலர்வதால் நீலகிரி எனப்பெயர் பெற்றிருக்கும் அம்மலையின் அரிய தாவரங்களையெல்லாம் அங்கு வரவிருக்கும் ஒரு பிரபலத்தின் பொருட்டு அகற்றுவதும் அழிப்பதுமெல்லாம் எத்தனைஅநீதி?
கல்லூரியிலும் நான் பொறுப்பேற்றுக்கொண்டிருந்த ’அமுக்கரா, சர்ப்பகந்தி, திப்பிலி, வெப்பாலை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மூலிகைகள் நிறைந்திருந்த ஒரு தோட்டத்தை கல்லூரித்தலைவரின் ’’பார்க்க அழகாக இல்லை’’ எனும் அபிபிராயத்தினால் அகற்றிவிட்டு பச்சைக்கம்பளம் விரித்தது போல கொரியன் புல்வெளியை அமைத்திருக்கிறார்கள். ஒருவாரம் வரை வேருடன் செடிகள் பிடுங்கப்படுவதையும் திரும்பத்திரும்ப இருவித்திலைத்தாவரங்கள் எதுவும் முளைத்து விடாமலிருக்க நிலம் முழுவதும் ரசாயன களைக்கொல்லி அள்ளிக்கொட்டப்படுவதையும் திகைத்துப்போய் பார்த்தபடி இருந்தேன். நீர்தெளிப்பான்கள் சீராக இயங்கிக்கொண்டிருக்கும் அந்த பச்சைப்புல்வெளியை கடந்துதான் தினமும் வகுப்புக்கு செல்வேன் வேதனையுடன்.
தியோடர் பாஸ்கரன் அவர்களைப்போல இயற்கைச்சூழல் மீதும், உயிர்களின் மீதும் அக்கறைகொண்டிருக்கும் ஒருசில செல்வாக்குள்ள அதிகாரிகளாவது இப்போது செயலாக இருந்தால் மீதமிருக்கும் காட்டுயிர்களையாவது காப்பாற்றலாம். இந்த நிகழ்சிக்கு பிறகு பலர் என்னிடம் களைச்செடிகளை குறித்து ஆர்வமாக பேசுகிறார்கள். இப்படி விஷ்ணுபுரம் நிகழ்வுகள் ஏற்படுத்திக்கொடுக்கும் திறப்புக்களுக்கும் இதுபோன்ற நல்ல நிகழ்வுகளுக்குமாக, திரு ஜெயமோகன் அவர்களுக்கும், திரு ராஜகோபாலன், ஆஸ்டின் செளந்தர், மற்றும் சந்தோஷ் உள்ளிட்ட நிகழ்வு நல்லபடியாக நடக்க காரணமாயிருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
குள்ளச்சித்தன் சரித்திரத்தில் வரும் வேம்பு குறித்து விஷ்ணுபுரம் விழாவில் கேட்ட ஒரு வரி உள்ளேயே உறுத்திக்கொண்டு இருந்தது. அதன்பொருட்டே அப்புத்தகத்தை தேடத்துவங்கி மிகுந்த பிரயாசைக்கு பிறகு கிடைக்கப்பெற்றேன். உண்மையில் எங்குமே குள்ளச்சித்தன் சரித்திரமும் பகடையாட்டமும் கிடைக்கவே இல்லை. அலைந்து திரிந்து யார் யாரிடமோ சொல்லி எப்படியோ சென்னையிலிருக்கும் சகோதரர் யோகீஷ்வரனின் உதவியால் தருவித்தேன். நான் எதிர்பார்த்திருந்ததும் என் மனதில் இப்புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து (வேம்புவை மையமாகக்கொண்டு) நானே உருவக்கிக்கொண்டிருந்த சித்திரமும், இப்புத்தகம் கொடுத்த வாசிப்பனுபவமும் முற்றிலும் வேறு எனினும் நான் பல ஆண்டுகளாக தொடர்புடைய சித்தர்கள் கதையாக இது இருந்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.
சமீபத்தில் நான் வாசித்த வெளியேற்றம், ஊர்சுற்றி, நினைவுதிர்காலம் இவற்றுடன் குள்ளச்சித்தன் சரித்திரம் வாசிக்கையில் இவையெல்லாமே தொடர்ந்துவரும் ஒரே கதையின் தொடர்ச்சி என்று கூட உணர்ந்தேன். நினைவுதிர்காலத்தின் விசிலிசைக்கலைஞனைக்கூட, (ஆற்றில் மறைந்துபோனானே அவனை) குள்ளச்சித்தனின் நெருப்பைக்குடித்துக்கொண்டு எரிந்துகொண்டிருந்த அந்த இளம் இசைமேதை ப்ருத்வியுடன் தொடர்புபடுத்திக்கொண்டேன். அருந்தவத்தை, ஊர்சுற்றியில் வரும் ஒரு பெண்பயணியுடன், இப்படி நானாகவே ஒரு தொடர்சியை உருவாக்கிக்கொண்டேன் .
பல வரிசையில் புள்ளிகளிட்டு எங்கோ துவங்கி எங்கெங்கொ நுழைத்து, வளைத்து ஒவ்வொன்றையும் சுற்றியும் இணைத்தும் கோடுகளிட்டு இறுதியில் அழகிய வசீகரிக்கும் வடிவிலான ஒரு நெளிக்கோலம் போடுவதைபோல சிகப்பி, அய்யர், வேம்பு, ஆலாஸ்யம், சித்தர், முத்துசாமி, மௌல்வி, செய்யது ராமாமிர்த்தம்மாள்,பென்குவின் கழுகு புலி பழனி, ராமநாதன் என்று கதைமாந்தர்களை காட்டிகொண்டெ வருகிறீர்கள், ஒவ்வொருவரும் பிறருடன் எப்படியோ எங்கேயோ தங்களை இணைத்துக்கொள்கிறார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கண்ணியில் சந்திக்கிறார்கள் இறுதியில் காணக்கிடைக்கும் அந்த கோலம் அத்தனை அழகு. எல்லாப்புள்ளிகளும் தனித்தனியாக தெரிகின்றது எல்லாமே ஒற்றைக்சரடொன்றினால் இணைக்கவும் பட்டிருக்கிறது.
சாமான்யர்களும், காலங்கள் கடந்த நினைவுகளும், ஜென்மவாசனையும், சாமான்யர்கள் இயங்கவியலா தளங்களில் இயங்குபவர்களுமாக கதை வசீகரம். அழுக்குசாமி சித்தர் வாழ்ந்து மறைந்த வேட்டைக்காரன்புதூரை சேர்ந்தவளென்பதாலும் ஒரு ஆசிரியையாக சித்தர்களை குறித்து அனேக வருடங்களாக பாடமெடுத்துக்கொண்டிருப்பவளாகவும் கதைக்குள் நான் ஆழ்ந்திருந்தேன் வாசிக்கையில்.
நான் பிறந்து வளர்ந்த வேட்டைக்காரன்புதூரில் இப்போதும் அழுக்குசாமி சித்தரின் ஜீவசமாதி, பிரசித்தி பெற்ற கோவிலாக இருக்கிறது, சிறுமியாக ஆத்தா அப்பாரின் கைகளைபிடித்துக்கொண்டு அங்கு சென்ற நினவுகளும் சித்தரைக்குறித்து கேட்டிருந்த ஏராளம் கதைகளும் குள்ளச்சித்தனை வாசிக்கையில் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது.
குதிரை வியபாரத்திலிருந்த என் அப்பாரு எப்போதும் வீட்டில் இருந்ததில்லை திடீரென வருவார் சிலநாட்கள் இருப்பார் மீண்டும் வியாபாரத்திற்கு சென்று விடுவார். அப்படி வீடு தங்கும் நாட்களில், இரவுகளில் வீட்டு முன்திண்ணையில் இருந்த பளபளப்பாய் மினுங்கும் ஈட்டி மர பெஞ்சில் என்னையும் சேர்த்து ஒரு கருப்புக்கம்பளியில் போர்த்திக்கொண்டு ராமாயணமும் மகாபாரதமும் , திகம்பரராக அக்கிராமத்திற்கு வந்த அழுக்குச்சாமி சித்தர் கதையையும் சொல்லிக்கொண்டிருப்பார். அப்பாருவிடமிருந்து வீசும் புகையிலை வாசனையும், கம்பளியும் கதையும் கொடுக்கும் கதகதப்புமாக அவர் அணைப்பிலேயே நான் உறங்கிய இரவுகள் அனேகம்.
ஆத்தாவும் எத்தனையோ முறை சித்தரைபற்றி சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அவரை உடைஉடுத்தச்செய்ய ஊர்ப்பெரியவர்கள் பட்ட பாட்டையும், இரண்டு முறை ரெட்டைப்பிள்ளைகள் பிறந்து இறந்துபோனதும், அழுக்குசாமி சித்தர் தன் உடலின் அழுக்குகளை திரட்டி அதையே மருந்தாகத் தந்து அதை உண்டபின்னரெ என் அப்பா அழுக்குராசு பிறந்து தங்கியது பின்னர் மூன்றுஅத்தைகளும் இரண்டு சிற்றப்பன்களுமாய் குடும்பமும் வறுமையும் பெருகியது, சித்தர் இரவுகளில் உடல்பாகங்களை தனித்தனியெ கழட்டி வைத்துவிட்டு கிடந்த கோலம், பலருக்கும் அழுக்கையே தீர்வாக அளித்தது, ஒரே சமயத்தில் கிராமத்திலும் வேறு பல இடங்களிலும் அவரைக்கண்ட கதைகள், அவரது மேல் துண்டை வாங்கிக்கொண்டு கோர்ட்டுக்குச் சென்று வழக்குகளில் வெற்றிபெற்றவர்களின் கதைகள் ,அவரால் தூக்கிவிடப்பட்டு பெரிய மனிதர்களானவர்கள் இப்படி கதைகளின் வழியே கேட்டுக்கேட்டு சித்தர் என் இளமைப்பிராயத்திலிருந்து என்னுடனேயெ இருக்கிறார். அப்போதிலிருந்து இப்போதுவரை நான் அடிக்கடி செல்லும் கோவிலும் இந்த சித்தர் கோவில்தான். முன்பு கோவிலினருகில் கரைபுரண்டோடிக்கொண்டிருந்தது ஆறு, இப்போது அது வெறும் புதர்மண்டிய மந்தைத்தடம்.
சித்தர் கோவிலைக்குறித்து உதிரி உதிரியாக பல நினைவுகள் எனக்குள் இருக்கும் குள்ளச்சித்தனில் சொல்லியிருப்பது போலவே. அந்த ஆற்றுநீரில் அப்பாருவின் கண்காணிப்பில் விளையாடியது, மீன் பிடித்தது ஒரு அண்ணனின் திருமணம் அக்கோவிலில் நடந்தபோது மணப்பெண்ணுடன் கருக்கிருட்டில் ஆற்றிற்கு குளிக்க வந்து விசையுடன் இருந்த ஆற்றுத்தண்ணீரில் புதுப்பெண்ணின் சந்திரப்பிரபை அடித்துச்செல்லபட்டது, அப்போதிலிருந்து அங்கிருக்கும் மகிழமரங்கள் அதனடியில் நான் உணரும் விளங்கிக்கொள்ள முடியாத பிறருக்கு விளக்கியும் சொல்ல முடியாத மனஅமைதி, அங்கிருக்கும் சித்தர் திருவுருவின் ஓவியங்கள், இப்படி
இப்போது கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் என் மகனின், அங்கு நடைபெறுவதாக இருக்கும் திருமணத்தை பல்லாயிரம் முறை மனக்கண்ணில் காட்சியாக்கி பார்த்தபடிக்கிருப்பேன் அங்கிருக்கையிலெல்லாம்.
என் மனதின் அடியாழத்தில் இருந்த நினைவுகளையும் குள்ளச்சித்தனின் கதையையும் கலந்தேதான் நான் வாசித்தேன் என்பதால் புதுவிதமான வாசிப்பனுபவம் கிடைத்தது.
அந்த வேம்பு, அய்யர் அய்யருடன் வேம்பு உடன்கட்டை ஏறியது இவையெல்லாம் எனக்கு பெரும் எதிர்ப்பார்ப்பை உண்டுபண்ணுகின்றது நினைக்கையிலெல்லாம். இந்தகதையை மட்டும் விரிவாக்கி வேறு கதையாக யுவன் எழுதியிருக்கிறாரா?எனக்கே அப்படி ஒரு மயக்கா? நான் அவரது எழுத்துக்களை தேடித் தேடி இப்போதுதான் (சுரேஷ் பிரதீப்பின் ‘ நினைவுகளை தொடுத்தெழுதும் வரலாறு’’ க்குபின்னர்) வாசிக்கத்துவங்கியிருக்கிறேன்.
எங்கோ ஆதரவற்றிருந்த, அய்யரால் ஒத்தாசை செய்யபட்ட, பெண் தன்மையுடன் ஒரு உதவியாள் பல வருட விஸ்வாசம் பின்னர் அதுவே ஒருதலையாக விருப்பம் பின்னர் அய்யரின் மறைவு வேம்புவும் உடன்கட்டைஏறுவது என்று விரிவாக ஒரு கதையை யுவன் எழுதிவிட்டதாக நானே நினைத்துக்கொண்டு அந்த கதையை வாசிக்கும் உத்தேசத்துடன்தான் இப்புத்தகத்தை பிரித்தேன்.
கதைமொழி எளிமை எந்த ஜாலங்களும் இல்லை, சரளமும் கூட உரையாடல்களின் இயல்புத்தன்மை இக்கதைக்கு பெரும் பலம். உரையாடல்களின் வழியே சொல்லப்பட்டவைகளை அதே உணர்வுநிலைகளில் யுவன் அல்லது கதைமாந்தர்கள் உத்தேசித்தை சரியாக விளங்கிக்கொள்ள முடிகின்றது. முன்பின்னாக மாற்றிச்சொல்லப்பட்டிருக்கும் சில தகவல்களை நிகழ்வுகளை, பிறிதொருவரின் பார்வையில் கோணத்தில் மீண்டும் சொல்லப்பட்டிருந்தவைகளை வாசிக்கையிலும் எந்த குழப்பமும் இல்லாமல் கதை மனதுக்குள் செல்கின்றது.
முத்துசாமியின் மறைவு குறித்து வெகுநேரம் சிந்தித்துக்கொண்டிருந்தேன். கல்லூரி வளாகத்தில் பெருங்கொன்றைகள் இப்போது பூத்திருக்கின்றன. வகுப்புக்களுக்கு செல்கையில் அடர்மஞ்சள் கொத்துக்களிலிருந்து மலர்கள் மெல்ல மெல்ல ஓசையின்றி மிதந்து உதிர்வதை பார்த்துக்கொண்டே செல்வேன். அவற்றிற்கு உதிர்வதில் எந்த புகாரும் இல்லை அவை உதிர்கையிலேயே காப்பிக்கொட்டை நிறத்தில் நுண்விதையொன்றின் வடிவில் அதே மரத்தில் தங்களை விட்டுச்செல்கின்றன . மலர் உதிர்வதைப்போல இயல்பாக உதிர்வது என்பதைகுறித்து அடிக்கடி நினைத்துக்கொள்ளுவேன் முத்துச்சாமி மண் மறைந்தது அப்படித்தான் இருந்தது.
குள்ளச்சித்தன் சரித்திரம் குறித்த என் புரிதல் மிகவும் நேரடியானதும் எளிமையானதும் தான். எனினும் யுவனின் இக்கதையை நான் வாசிக்கவில்லை கேட்கவில்லை பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்குள் இக்கதை சித்தர் குறித்த நினைவுகளில் பலவற்றை கிளர்த்தி விட்டது..
இக்கதைகுறித்து ஜெ எழுதிய ‘’மாற்று மெய்மையின் மாய முகம்” .