மனிதன் அருந்தும் திரவ உணவுகளனைத்தும் பானங்கள் எனப்படுகின்றன. தாகம் தீர்க்கும் தண்ணீரிலிருந்து பால், பழச்சாறுகள், காப்பி, தேநீர் உள்ளிட்ட பலவகையான பானங்கள் அனைத்துக் கலாச்சாரங்களிலும் தொன்று தொட்டே புழக்கத்தில் இருந்து வருகின்றது. பானங்களில் மென்பானங்கள், சூடான பானங்கள் மற்றும் மது பானங்கள் என பலவகைகள் இருக்கின்றன.
உலகின் மிக அதிகமக்களால் அருந்தப்படும் விருப்பபானங்களில் முதன்மையாக குடிநீரும் தொடர்ந்து தேநீரும், பின்னர் மூன்றாவதாக பியரும் இருக்கின்றது.
தேநீரென்பது உலர்த்தி, பொடித்து, பதப்படுத்திய (Camellia sinensis) கமெலியா சினென்ஸிஸ் என்னும் தாவரத்தின் இலைகளை கொதிநீரில் இட்டு உண்டாக்கப்படுவது.
இதன் தாவரப்பெயரிலிருந்து இவை சீனாவை தாயகமாக கொண்டவை என அறிந்துகொள்ள முடியமென்றாலும் தேயிலையின் தாயகம் இந்தியாதானென்கின்றன ஆய்வுகள். அஸ்ஸாமின் காடுகளில் இயற்கையாக செறிந்து வளர்ந்திருந்த Thea assamica என்னும் தாவரத்தின் விதைகள், இந்தியாவிற்கு வந்துசென்ற சீனப்பயணிகளால் எடுத்துச்செல்லப்பட்டு அங்கு விளைவிக்கப்பட்டு பின்னர் அதுவே கமெலியா சினென்ஸிஸ் ஆனது என்பதே தாவரவியல் அடிப்படையிலான வரலாற்று உண்மை
தேயிலைச்செடிகளில் இரண்டு முக்கியவகைகளே உலகெங்கும் பெருமளவில் பயிராகின்றது ;
Camellia sinensis என்னும் சிறிய இலைகளை கொண்ட சீன வகை
Leavea of Assamica and Sinensis
Camellia assamica என்னும் சற்றே பெரிய இலைகளை கொண்ட இந்திய வகை
தேயிலைச்செடிகள் நல்ல உயரமான மரமாக வளரும் இயல்புடையவை. ஆனால் இவற்றிலிருந்து தளிரிலைகளை தொடர்ந்து அறுவடை செய்வதன் பொருட்டு,இவற்றை குறிப்பிட்ட இடைவெளிகளில் குட்டையாக கத்தரித்துக்கொண்டே இருப்பதால் இவை புதர்களைப்போல தோன்றுகின்றன.
தேயிலைகளின் ஒரு இலையரும்பு மற்றும் அதனடியிலிருக்கும் இரண்டு தளிரிலைகள் மட்டுமே அறுவடை செய்யப்படுகின்றன. இந்த இலையரும்பும் இருஇலைகளுமான பகுதி Golden flush எனப்படும். இவை மூன்று வருடங்களான தேயிலைச்செடிகளிலிருந்து நூறு ஆண்டுகள் வரை 7 லிருந்து 15 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து ஆண்டு முழுவதும் அறுவடை செய்யப்படும். இந்த இடைவெளி ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு தேயிலை ரகத்துக்கும் மாறுபடும்
Golden Flush உடன் மேலும் இரண்டு கீழடுக்கு இலைகளும் சேர்ந்த 5 இலைகள் அடங்கிய பகுதி flush எனப்படும் இவையும் பல நாடுகளில் அறுவடை செய்யப்படுகின்றது.
அறுவடை செய்யப்பட்ட இலைகள் உலர்த்தப்பட்டு, அவற்றில் ஆக்ஸிஜனேற்றம் நடைபெரும் வகையில் காயப்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட வெப்பத்தில் உலர்த்தப்பட்டு, நொதிக்கவைக்கப்பட்டு ,பின்னர் 1500க்கும் மேற்பட்ட பலவகைகளில் தேயிலைகள் சந்தைப்படுத்தப்படுகின்றன.
ஆக்ஸிஜனேற்றத்தை பொருத்தே தேயிலைக்ளின் தரம் வேறுபடுகின்றது. (உண்ணப்படாத வாழைப்பழங்கள் ஒருசிலநாட்களில் கருத்துப்போவது ஆக்ஸிஜனேற்றத்தால்தான்).
100 சதவீதம் முழுமையான ஆக்ஸிஜனேற்றம் செய்யப்பட்டவை
Black Tea
நாம் அனைவரும் சாதரணமாக அருந்தும் ’Black tea’ எனப்படும் கருப்புத்தேயிலை. 50 சதவிதம் மட்டுமே ஆக்ஸிஜனெற்றம் நடந்தால் கிடைப்பது. ’Oolong tea; எனப்படும் ஊலாங் தேயிலை, பசுந்தேனீர் ’Green tea’ எனப்படுவது ஆக்ஸிஜனேற்றதுக்கே உட்படுத்தப்படாத உலர்ந்த தேயிலைகளிலிந்து தயாரிக்கப்படுவது.
இம்மூன்று வகைகள் அல்லாது இன்னும் நூற்றுக்கணக்கான ரகங்களில் தேயிலை உலகெங்கிலும். சந்தைப்படுத்தப்பட்டிருக்கின்றது.
பசுந்தேநீரை உலரவைக்கையில் சிறு சிறு வட்டங்களாக சுருண்டு கொள்ளும் ரகம் அதன் தோற்றத்தினால் ’Gunpowder tea’. எனப்படுகின்றது.
Gun powder Tea
White tea, என்பது குறிப்பிட்ட வெப்பநிலையில் மிகக்குறைந்த நேரம் மட்டுமே ஆக்ஸிஜனேற்றம் செய்கையில் கிடைபப்து. இது மிகவும் மென்மையான் மணத்தையே கொண்டிருக்கும். வெள்ளை தேயிலை சீனாவுக்கு வெளியே அரிதாகவே கிடைக்கும்
Twig tea, குச்சி தேநீர் அல்லது குக்கிச்சா தேநீரென்பது (Kukicha tea) தேயிலைச்செடியின் இலைகளுக்கு பதிலாக குச்சிகளையும் தண்டுகளையும் மட்டுமே பதப்படுத்தி பொடித்து தயரிக்கப்படும் தேநீராகும். இவ்வகைத்தேநீர் ஜப்பானில் மட்டுமே கிடைக்கும். குச்சிகளையும் கிளைகளையும் மூன்று வருடங்களுக்கு மேலான தேயிலைச்செடிகளிலிருந்து மட்டுமே எடுப்பதனால் இத்தேநீருக்கு மூன்றுவருட தேநீரென்றும் ஒரு பெயருண்டு. (Three year Tea ) .இதில் காஃபின் துளியும் இLலையென்பதால் உறக்கமிழப்பு, பக்கவிளைவுகள் என எந்தகவலையும் இல்லாமல் எப்போதுவேண்டுமானாலும் எத்தனைகோப்பைகள் வேண்டுமானாலும் அருந்தலாம்.
பதப்படுத்தப்பட்ட தேயிலைச்செடியின் குச்சிகள்
காப்பியிலும் கொக்கோ பீன்ஸ்களிலும் இருக்கும் காஃபின் ஆல்கலாய்டு தேநீரிலும் இருக்கின்றது. 250 மிலி அளவுள்ள ஒருகோப்பை தேநீரில் காஃபினின் அளவானது;
Black tea- 45-65 மில்லி கிராம்
Green, white and ooloog teas: 25- 45 மில்லி கிராம்
தேநீரின் காஃபின் அளவானது தேயிலைதூளின் அளவு, நீரின் கொதிநிலை, தேயிலைத்தூள் கொதிக்கும் நேரம் ஆகியவற்றைப்பொருத்து மாறுபடும். பொதுவாக அதிகநேரம் கொதிக்க வைக்கையில் காஃபினின் அளவும அதிகமாகும்.
ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டிருக்காத, தரமான தேயிலைகளிலிருந்து உண்டாக்ப்பட்ட தேநீரை அருந்துவது இதயத்தை பாதுகாத்து, புற்றுநோய்க்கு எதிரக செயலபட்டு, உடலெடையை குறைத்து ரத்தத்தின் கொழுப்பையும் கட்டுப்படுத்துகின்றது
தேயிலைச்செடி வளரும் மண்ணில் இருக்கும் அலுமினியம் இலைகளிலும் இருக்கிறதென்றாலும் தினசரி சில கோப்பைகள் தேநீர் அருந்துகையில் இவை உடலாரோக்கியத்துக்கு எந்தவித ஆபத்தையும் உண்டாக்குவதிலை. நாளொன்றூக்கு 30 கோப்பைகளுக்கு மேல் தேநீர் அருந்தும் போதுதான் இந்த அலுமினிய உலோகம் நஞ்சாகி ஆரோக்கியகேட்டை உண்டாக்கும் வாய்ப்பு இருக்கிறது.
பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டிருக்காத ஆர்கானிக் தேயிலைகளும் இப்போது சந்தைப்படுத்தப் பட்டிருக்கின்றன.
Bubble Tea
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையான் தேநீர் பிரபலமாக இருக்கும் இந்தியாவில் பால் கலக்காத கருப்புத்தேநீரும் பால் கலந்த தேநீரும் பிரபலம். தைவானில் மரவள்ளிக்கிழங்கு மாவிலிருந்து செய்யப்படும் சிறு சிறு உருண்டைகளை தேநீரில் போட்டு தரப்படும் குமிழித்தேநீர் (Bubble tea) மிகபிரபலம். கீரைக்குழம்பைபோல பசுங்குழம்பாக அருந்தபடும் மாச்சா தேநீர் ஜப்பானின் பாரம்பரியத்துடன் கலந்துள்ள மிக்கியமான ஒன்று.
மாச்சா
எல்லா வகையான தேயிலைகளிலும் ஆன்டிஆக்சிடன்ட்டுகள் உள்ளன என்றாலும் தேயிலையின் வகைகளைப்பொருத்து இவற்றின் அளவு மாறுபடும். பொதுவாக பசும் தேயிலை மற்றும் வெள்ளைத்தேயிலையில் Epigallocatechin or ECGC எனப்படும் மிக முக்கியமான, ஆன்டிஆக்சிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது.. இவை இதயப்பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை உறுதிசெய்கின்றன
தென்னாப்பிரிக்காவில் வளரும் சிவப்புத்தேயிலைச் செடிகளிலிருந்து எடுக்கப்பட்டு ஆக்ஸிஜனேற்றமே செய்யப்டாத தேயிலைகளிலிருந்து கிடைப்பதே Rooibos tea எனப்படும் செந்தேநீர்
Pu’er Tea
சீனாவின் யுனான் மாகாணத்தின் பிரத்யேக வகையான pu’er tea எனப்படுவது தேயிலைகளை நுண்ணுயிர்களால் நொதித்தலுக்கு உள்ளாக்கி பின்னர் ஆக்ஸிஜனேற்றமும் செய்யப்பட்டு கட்டிகளாக விற்பனை செய்யப்படும் ஆரோக்கியத்துக்கு மிகவும் உகந்த ஒரு தேயிலை வகையாகும். இது முதியவர்களின் நோய் பிரச்சனைகளுக்கு அருமருந்தாக கருதப்படுகின்றது
ஊதா தேயிலை எனப்படுவது உலகின் மிக சமீபத்திய புதிய தேயிலை வரவாகும்
கென்யாவின் ஊதா தேயிலைச்செடிகள்
கென்யாவில் கடல் மட்டதுக்குமேல் 7500அடி உயரங்களில் மட்டுமே வளர்க்கப்படும் கலப்பின தேயிலைச்செடிகளிலிருந்தே இவை கிடைக்கின்றது. நேரடியான சூரிய ஒளிபடும்படி வளர்க்கப்படும் இந்த செடிகளின் இலைகளில் நீல நிறமியான ஆந்தோசையானினின் அளவு பல ம்டங்கு அதிகரித்து இந்த ஊதா நிறம் வருகின்றது. இவை பல நுண்சத்துக்களும் மருத்துவப்பயன்களும் கொண்டவை. உடலெடையை குறைக்கவும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், புற்றுநோயை தடுக்கவும் இந்த ஊதா தேநீர் பெருமளவில் பயன்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
தேயிலைத்தூளின் விலை சில நூறு ரூபாய்களிலிருந்து சில ஆயிரம்வரை வேறுபடுகின்றது எனினும் தங்கத்தைக்காட்டிலும் 30 மடங்கு அதிகமான விலையுள்ள தேயிலையும் சந்தையில் உள்ளது
சீனாவின் தாது உப்புக்கள் நிறைந்திருக்கும், குறிப்பாக இரும்புச்சத்து நிறைந்த ’வூயி’ மலைப்பகுதியின் 1000 வருடங்களைக்கடந்த 3 தாய் தேயிலைச்செடிகளிலிருந்து கிடைக்கும் ’’டா ஹாங் பாவ்’’ (Da Hong Pao) தேயிலையே உலகின் மிக விலையுயர்ந்த தேயிலை. இது கிராம் 1400 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகின்றது. பொதுவாக இத்தேயிலையில் உண்டாக்கப்படும் தேநீர் சீனாவிற்கு வருகைதரும் பிறநாட்டு தலைவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகின்றது. தாவரப்பொருட்களிலேயே விலையர்ந்ததும் இதுவே.
கேராளாவின் Neestream என்னும் மலையாளத்திரைப்படங்களுக்கான புதிய இணையதளத்தின் இவ்வருடத்தின் முதல், புதிய வெளியீடாக ஜனவரி 15, 2021 அன்று வெளியிடப்பட்டது. ‘’ The Great Indian Kitchen. புதிய தளத்தின் பிரமாதமான வெளியீடு இந்த அழகிய குடும்பச்சித்திரம்.
இயக்குநர் ஜியோ பேபி, இசை சூரஜ் குரூப் மற்றும் மேத்யூஸ் புலிக்கன். நிமிஷா சுஜயன் மற்றும் சூரஜ் வெஞ்சிரமூடு பிரதான பாத்திரங்களில் (இரண்டாவது முறையாக ஜோடியாக.)ஒரு சில காட்சிகளைத்தவிர முழுப்படமுமே கோழிக்கோட்டில் ஒரே வீட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது. இதே வீட்டில்தான் முன்பு 1993ல் மிதுனம் திரைப்படமாக்கபட்டது. பிற கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் அனைவருமே கோழிக்கோடு நாடக நடிகர்கள்
ஒரு கண்ணாடியையோ அல்லது கேமிராவையோ இந்தியவீடுகளில்,குறிப்பாக தென்னிந்திய வீடுகளில் வைத்தால் தெரியவருவதைத்தான் முழுப்படமும் காட்டுகிறது..
நாயகி நம்மைப்போல, அடுத்த வீட்டுபெண்ணைப்போல, தோழியைப்போல நாம் அன்றாடம் சந்திக்கும் நூற்றுக்கணக்கான் பெண்களில் ஒருத்தியைப்போல இருப்பதும் படத்தின் பெரிய பலம். இது நம் கதை என அனைத்து இந்தியப்பெண்களும் விதிவிலக்கின்றி உணருவார்கள் திரையில் நிமிஷா சுஜயனை பார்க்கையில்.
நிமிஷா நடிகை ஊர்வசியின் மூத்த சகோதரி கலாரஞ்சனியை அதிகம் நினைவூட்டும் முகச்சாயலையும் உடல்மொழியையும் கொண்டிருக்கிறார். முழுப்படத்தின் ஆத்மாவே நிமிஷாதான். சூரஜின் நடிப்பு வழக்கம் போலவே பிரமாதம். உடலெடையை குறைத்து கச்சிதமாக இருக்கிறார். பாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார்.இயல்பான சிறப்பான நடிப்பு.
மேசை நாகரீகம் குறித்து விளையாட்டாக சொல்லுவது போல சொன்ன மனைவியை கடிந்துகொண்டு அவளை மன்னிப்பு கேட்கச்சொல்லுவதும் ,அவள் மன்னிப்பை கேட்டவுடன் அகமலர்வதையும் அத்தனை அசலாக காட்டுகிறார். சிதல்புற்றுபோல ஆணவக்கரையான்களால் பெருகி வளர்ந்திருக்கும் இந்திய ஆணாதிக்க சமுகத்தின் பிரதிநிதியாக பிரமாதமாக பொருந்தி நடித்திருக்கிறார் சூரஜ்.
யானைப்பசியைப்போல ஆண்களின் இந்த வீங்கிய ஆணவத்திற்கு, கீரைக்கட்டுகளை தீனி போட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான் பெண்களுக்கான விதி.
சாலு கே தாமஸின் ஒளி இயக்கத்துக்கு, தனித்த பராட்டுக்களையும் அன்பையும் தெரிவித்தாக வேண்டும். அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார். துவக்க காட்சிகளில் நிமிஷாவின் நடன அசைவுகளின் போது அவர் முகத்தின் தெளிவை, மலர்வை, உறுதியை, கண்களின் ஒளியை அழகாக காட்டியவர், பின்னர் அவரே யோசனையில் ஆழ்ந்திருக்கும் களைஇழந்த முகத்துடன் இயந்திரமாக பாத்திரம் தேய்த்துக்கொண்டிருப்பதை, கலவியின் போது அவரின் மனஓட்டங்களை, சமையலறையில் மீள மீள வறுப்பதை, பொரிப்பதை, நறுக்குவதை, அரைப்பதை, பிறர் உண்ணுவதை என்று காட்சிகளை அருமையாக காட்டியிருக்கிறார்.
பெரும்பாலான கதாபாத்திரங்களுக்கு பெயரில்லை என்பதுவும் இத்திரைப்படத்தின் சிறப்பு. இது நம் கதை என்னும் உணர்வு பார்க்கும் ஒவ்வொரு பெண்ணுக்குமே இதனால் இன்னும் மேலோங்குகின்றது.
பள்ளிஆசிரியரான சூரஜ் நிமிஷாவை பெண்பார்க்கும் காட்சியில் திரைப்படம் துவங்கி சட் சட்டென்று காட்சிகள் மாறி, சூரஜ் தன் பெற்றோருடன் வசிக்கும் வீட்டில் வாழ வருகிறார் நிமிஷா.
திடுக்கிடவைக்கும் திருப்பங்களோ, எதிர்பாரா சம்பவங்களோ, அவிழ்க்கப்படவேண்டிய மர்ம முடிச்சுகளோ இல்லாதது மட்டுமல்ல இதுபோல முன்பு வந்திருக்கும் பாலின சமத்துவம் குறித்தான திரைப்படங்களில் இருக்கும் வன்முறையும் இதிலில்லை. அன்பின் பெயரால், மரபின் பெயரால், சம்பிரதாயங்களின் பெயரால், சமூக கட்டுப்பாடுகளின் பெயரால், பெண்களுக்கு காலம் காலமாக அநீதி இழைக்கப்பட்டுக்கொண்டிருப்பதை சொல்லும் படமிது.
5 பாடல்களும், இடையிடையே சண்டைகளும் நடனங்களும் நிறைந்த வழக்கமான மரபான சினிமா இல்லை இது
துவக்கத்தில் முதல் அரைமணி நேரங்களுக்கு திரும்பத்திரும்ப காய்கறிகள் நறுக்கப்படுவது, நேந்திரம்பழங்கள் ஆவியிலடப்படுவது, இறைச்சி வெட்டப்படுவது, ஆப்பங்கள் ஊற்றப்படுவதென்று காண்பிக்கப்படுகையில் சிலருக்கு சலிப்புத்தட்டிவிடும். என்ன இது திரும்பத்திரும்ப இதையே காட்டுகிறார்களே என்று. அந்த சலிப்புத்தான் இப்படம் எதிர்பார்க்கும் வெற்றி.. அரைமணி நேரத்துக்கு திரும்பத்திரும்ப பார்க்கையில் சலிப்புத்தட்டும் விஷயத்தைத்தான், வாழ்நாள் முழுக்க எந்த உதவியும் இன்றி பல்லாயிரக்கணக்கான பெண்கள் மீள மீள செய்துகொண்டிருப்பதை சொல்லும் படமிது.
வெளியிலிருந்து பார்க்கையில் மகிழ்ச்சியான இல்லமென்று தோன்றும் ஆனால் உள்ளே ஆண்களின் நாக்கு, உடல், ஆணவம் இவற்றின் தேவைகளுக்கென வீட்டுப்பெண்களின் இளமையும் நேரமும் ஆரோக்கியமும் லட்சியங்களும், முழுவாழ்வுமே சுரண்டி உறிஞ்சி எடுத்துக்கொள்ளப்படுவதை, திருமணம் என்னும்பெயரில் பெண்கள் மிச்சமின்றி காலடியில் இட்டு நசுக்கப்படுவதை இப்போது நம் இந்தியச் சமூகத்தில் நடந்துகொண்டிருப்பதை அப்பட்டமாக காட்டும் படமிது
தெளிவான திரைக்கதை. இயக்குநர் அழகாக கதையைக்கொண்டு போகிறார். பொருத்தமான மென்மையான இசை, சிறப்பான படத்தொகுப்பு, அற்புதமான ஒளிப்பதிவு என மிக நல்ல ஒரு அனுவத்தை தருகின்றது இத்திரைட்பம்
ஆண்களின் இதயத்திற்கு அவர்களின் வயிற்றின் வழியேதான் பெண்கள் செல்லவேண்டுமென்னும் பழஞ்சொல் புழக்கத்திலிருக்கும் நம் சமூகத்தில் ஒருபோதும் பெண்களின் இதயத்திற்குள் ஆண்கள் நுழையும் வழிகுறித்து சொல்லப்பட்டதேயில்லை.
தினம் தினம் இறைச்சியும் காய்கறிகளும் நறுக்கப்பட்டு, பக்குவப்படுத்தப்பட்டு சமைக்கப்படுகின்றன. திரும்பதிரும்ப பரிமாறுதலும், எச்சிலெடுப்பதும், பாத்திரம் தேய்ப்பதும், துணி துவைப்பதும், வீடு கூட்டுவதும், மாடிப்படிகளிலிருந்து சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் புகைப்படங்கள் வரையிலும் துடைத்து சுத்தமாக்குவதும், விறகடுப்பில் அரிசிச்சோற்றை சமைப்பதும், அனைத்தையும் முடித்து, இரவில் வீட்டுக்கதவை தாளிடுவது வரை முடித்த பின்னர் காத்திருக்கும் கணவனின் உடல் பசிக்கும் இரையாவதுமாக அப்படியே ஒரு இந்திய சமூகத்தை காட்டியிருக்கிறார்கள்.
பெண்கள் இப்படி அடுப்படியிலும், துவைக்கும் கல்லிலும், எச்சிலெடுத்தும் வீணாய்போகையில் ஆண்கள் சீட்டு விளையாடிக்கொண்டும், அலைபேசியில் வாட்ஸ்அப் பார்த்துக்கொண்டும், யோகா செய்துகொண்டும் தன்னை, தன் நலனை, தன் தேவையை, தன் ஆரோக்கியத்தை, தன் சுவையை, தன் வாழ்வை பார்த்துக்கொள்ளுகிறார்கள். எந்த மிகைப்படுத்தலும் இல்லாத அப்பட்டமான படம்
அடைத்துக்கொண்டு ஒழுகும் சமையலறை சின்க்கை சரிசெய்ய ப்ளம்பரை வரச்சொல்லி பலமுறை நினைவூட்டியும் கடைசிவரை அது அப்படியேதான் இருக்கிறது. ஒரு காட்சியில் சமையலறை எச்சில் அடைத்துக்கொண்ட சின்க்கின் நாற்றம் தன் மீது அடிக்கின்றதா என நாயகி கணவனுடன் அந்தரங்கமாக இருக்கும் நேரத்திலும் முகர்ந்து பார்த்துக்கொள்கிறாள். அது சின்க்கின் நாற்றம் மட்டுமல்ல, தேய்த்துக்கழுவினால் போய்விடுவதற்கு, அன்பின்மையின், புரிந்துகொள்ளாமையின், சுரண்டப்படுதலின், பகிர்தலற்ற வெற்று வாழ்வின் நாற்றம் அது, எத்தனை தேய்த்துக்கழுவினாலும் போகாதது.
ஒரே ஒரு காட்சியில் மட்டும் நிமிஷாவின் தோழி ஒருத்தி மாடிப்படிகளில் அமர்ந்திருக்கையில் கணவன் மனைவிக்கு தேநீர் எடுத்துக்கொண்டு வருவதையும், அன்றிரவு அவர் சமைக்கபோவதாகவும் சொல்லும் காட்சியையும் வைத்திருக்கிறார்கள். விதிவிலக்கான ஆண்களும் ஆங்காங்கே இருக்கிறார்கள் என்று காட்ட.
நிமிஷா நடனஆசிரியையாக வேலைக்கு போக விரும்புவதைக்குறித்துச் சொல்லுகையில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் கணவனும் மாமனாரும் ’’அதெல்லாம் குடும்பத்துக்கு சரிவராது’’ என்று மறுத்துவிட்டு, உடனே ’’இன்று கடலைக்கறி பிரமாதம்’’ என்கிறார்கள். அந்த பாராட்டு நிமிஷாவுக்கும் நமக்கும் சொல்லுவதென்னவென்றால் எங்களுக்கு பிடித்ததுபோல சமைப்பதற்கு பிறந்து வளர்ந்திருப்பவர்கள் பெண்கள் என்பதைத்தான்.
நிமிஷாவின் மாதவிலக்கு நாட்களில் வீட்டுக்கு வேலைக்கு வரும் ஒரு பெண் வீடு கூட்டி துடைக்கையில் தனக்குள்ளே மெதுவாக பாடிக்கொண்டிருக்கிறாள். இப்படி வேலைக்கு வெளியெ வருவது பெண்களின் சின்ன சின்ன மகிழ்வுகளை சுதந்திரங்களை அனுபவிக்க வழிகாட்டுகிறது என்பதை அந்தகாட்சி நமக்கு உணர்த்துகிறது. உண்மையில் வேலைக்கு போகும் பெண்களுக்கு இரட்டைப்பணிச்சுமைதான் இருந்தும் வேலைக்கு போக விரும்புவது வீட்டிலேயே இருக்கையில் அவர்களின் கழுத்தை நெறிக்கும் மானசீக விரல்களிலிருந்து தற்காலிகமாகவாவது தப்பித்து மூச்சுவிட்டுக்கொண்டு மீண்டும் மாலை அதனிடம் அகப்பட்டுக்கொள்ளும் பொருட்டுத்தான்
இரவில் சமையலறை வேலைக்கு உதவ வரும் மருமகளை மாமியார் தடுத்து படுக்கையறைக்கு போகக்சொல்லுகிறார். அவருக்கு தெரியும் அங்கு அவரின் மகனென்னும் ஆணுக்கு இவள் தேவைப்படுவாளென.
அக்காட்சியில் படுக்கையறையில் இளம்பெண்ணின் உடல் ஆளப்படுவதும் சமையலறையில் இன்னுமொரு மூத்த பெண்ணின் உழைப்பு சுரண்டப்படுவதும் மாற்றி மாற்றி காண்பிக்கப்படும்.’’ 7 மணிக்கு மேல நீ இன்பலட்சுமி ’’பாடலை கூடங்களில் கேட்டு மகிழும் சமூகமல்லவா இது?
ஓயாத வீட்டுவேலைகளுக்குப்பிறகு உடலும் உள்ளமும் களைத்திருக்கும் பெண்களுக்கு, இன்பலட்சுமியாக இருக்கமுடியாமல், தாம்பத்ய உறவும், பாத்திரம் கழுவுவதைப்போல, எச்சில் எடுப்பதைப்போல, துணிதுவைப்பதைப்போல மற்றுமொரு வீட்டுவேலைகளிலொன்றாகி போய்விடுகின்றது என்பதையும் ஆண்கள் அன்றும் இன்றும் புரிந்துகொள்ளவேயில்லை
நெட்ஃப்லிக்ஸும் அமேஸான் பிரைமும் இப்படத்தை நிராகரித்ததற்கு காரணம் இதில் சொல்லப்பட்டிருக்கும் மத நம்பிக்கை தொடர்புடைய விஷயங்கள் என்கிறார்கள் இந்தப்படம் மதம் சார்ந்த நம்பிக்கைகளை கண்டிக்கவில்லை, மாறாக சடங்குகள், சம்பிரதாயங்கள், மரபு, குடும்ப வழக்கங்கள், காலம்காலமாக கடைப்பிடிக்கப் பட்டுக்கொண்டிருக்கும் மூடநம்பிக்கைகளை விட, வாழ வந்திருக்கும் பெண்ணின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் முக்கியமென்பதைத்தான் சொல்லுகின்றது.
அக்குடும்பத்தின் சந்ததியினரை உருவாக்குபவளை, கணவனுடன் இணைந்து இறுதி மூச்சு வரை வாழ்பவளை, புரிந்துகொள்ள, அவளின் தேவைகளை அறிந்துகொள்ள, நிறைவேற்ற, ஆண்கள் முன்வரவேண்டுமெனவும் வீட்டுவேலைகளில் அவர்களின் பங்கும் இருக்கவேண்டும் என்பதையெல்லாம் சொல்லவேண்டியே அக்காட்சிகளை சேர்த்திருக்கிறார்கள்
இந்தப்படத்தை ஆண்கள் அவசியம் பார்க்கவேண்டுமென்றெல்லாம் பரிந்துரைக்க வேண்டியதில்லை. ஏனெனில் சிலமணிநேர திரைப்படத்தில் திருந்தும் சமூகமல்ல இந்தியச்சமூகம். முழுச்செவிடான சமூகத்தின் காதுகளில் இப்படியான சங்குகளை ஊதுவது வீண்.
காலம்காலமாக இப்படி அடுப்படியில் அடக்குமுறைகளையும், சுரண்டல்களையும் அனுபவித்துக்கொண்டெ இருப்பவர்களுக்கும், நமக்கு முன்னே இவ்வாறு தன் இளமை, வாழ்நாள், கனவு, ஆற்றலெல்லாவற்றையும் இப்படியே இழந்து மறைந்துபோனவர்களுக்கும் , இனிமேலும் தொடரவிருக்கும் இந்த அநீதிக்கு இரையாகப்போகும் இன்றைய சிறுமிகளும் எதிர்காலத்து பெண்களுக்குமான சமர்ப்பணமாக இத்திரைப்படத்தை எடுத்துக்கொண்டு,பெண்கள் அவசியம் இதை பார்க்கவேண்டும்.
ஒரு காட்சியில் பல தலைமுறைகளை சேர்ந்த தம்பதியினரின் புகைப்படங்களை ஒவ்வொன்றாக மெதுவாக காமிரா காட்டிக்கொண்டிருக்கையில் பின்னணியில் தேங்காய் துருவும், தாளிக்கும், சமைக்கும் ஓசைகள் மட்டும் அஞ்சலி செலுத்துவதைப்போல கேட்டுக்கொண்டிருக்கும்.
நிமிஷா என்னவானாள்? ஒழுகிக்கொண்டேயிருந்த அந்த சமையலறைக்குழாய் சரிசெயயப்ட்டதா? நிமிஷா வேலைக்குப் போகிறாளா? அதே வீட்டின் அதே தேநீர்கோப்பையை கழுவிக்கொண்டிருக்கும் தங்கவளையல்கள் நிறைந்திருக்கும் அந்தக்கைகள் யாருடையவை?
Neestream ல் திரைப்படத்தைப்பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
தேநீர் விருந்துகள், ஹனமி செர்ரி மலர்க்கொண்டாட்டங்கள், ஹைகூ கவிதைகள், இகபானா மலரமைப்புக்கள், தனித்துவமான தோட்டங்கள், ஓரிகாமி காகிதவடிவங்கள் மற்றும் பாரம்பரிய கலைகளுக்காக ஜப்பான் உலகளவில் வெகு பிரபலம்.
ஹனமி கொண்டாட்டம்ஓரிகேமி காகித மலர்கள்
1950’களிலிருந்தே ஜப்பானின் பதிப்பகத் துறையில் முக்கிய பகுதியாகியிருக்கும், அனைத்து வயதுக்காரர்களுக்குமான மாங்கா வரைகதை வடிவம், நூற்றாண்டுகளின் பாரம்பரியம் கொண்ட சுமோ மல்யுத்தம், தோளோடு தோள் சேர்ந்து நிற்குமளவிற்கான நெரிசலில் இயங்கும், நின்றபடியே மதுவருந்தும் டேக்கினோமியா (Tachinomiya) பார்கள், வண்ணமயமான நடைபாதைக்கடைகள், அவற்றில் கிடைக்கும் பலவிதமான உணவுகள், அடுக்கிவைக்க வசதியாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்ட சதுர தர்பூசணிகள், இதய வடிவிலான தர்பூசணிகள், அறுகோண ஆரஞ்சுகள், புகழ்பெற்ற அனிமே (Anime) இயங்குபடங்கள், என்று ஜப்பான் அதன் வரலாறு, பாரம்பரியம், உணவு, கலாச்சாரம், தொழில்நுட்பம், மக்களின் சுறுசுறுப்பு, ஒழுங்கு மற்றும் பணிவு, உள்ளிட்ட பல காரணங்களுக்காகவும் உலகநாடுகள் அனைத்துமே வியந்து பார்க்கும் நாடாக இருக்கின்றது. ஜப்பானே, பிரபல மீனுணவுகளான சுஷி மற்றூம் சஷிமியின் பிறப்பிடமுமாகும்,
பல சுற்றுலா பயணிகளுக்கு ஜப்பானிய உணவு வகைகள் மட்டுமே ஜப்பானுக்கு செல்லப்போதுமான காரணம்! அதிலும் பலருக்கு சுஷி’யை சுவைப்பது பட்டியலில் முதலிடத்தில் இருக்கும்.
பல நூற்றாண்டுகளாக அரசியல், பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களால் வடிவமைக்கப்பட்டிருக்கும் ஜப்பானிய உணவு முறை, புதிய புதிய தாவரப்பொருட்கள், கடல்வாழ்உயிரிகள் மற்றும் கடற்பாசிகளின் சேர்மானம், பருவகால உணவுகள், சில எளிய ஆனால் பிரத்யேக சுவையை அளிக்கும் சுவையூட்டிகளும் இணைந்தது.
ஷஷிமி
சுஷி
’’வாஷோகு’’ என்பது ஜப்பானிய உணவு, சமையல் மற்றும், ஒன்றுக்கொன்று மிகப்பொருத்தமாக சேர்ந்துகொண்டு சுவையளிக்கும் ஜப்பானிய உணவு வகைகள் ஆகியவற்றைக் குறிக்கிறது. Wa (வா) என்பது ஜப்பானின் பாரம்பரியத்தையும் Shoku (ஷோகு) என்பது உணவையும் உணவு கலாச்சாரத்தையும், உண்ணுதலையும் சேர்த்தே குறிக்கின்றது. முதலில் கண்களால் உணவை உண்டபின்பே வாயினால் உண்ணவேண்டும் என்பது ஜப்பானியர்களின் பொதுவான கூற்று. அத்தனை வண்ணமயமாக, அழகாக உணவுகள் தயாரிக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு பரிமாறப்படும். மிசெலின் நட்சத்திர அந்தஸ்து கொண்டிருக்கும் உணவகங்களை அதிகம் கொண்டிருக்கும் முதல் மூன்றுநாடுகளிலும் ஜப்பான் இருக்கிறது.
இறைச்சி உணவை பெரும்பாலும் தவிர்த்தே வந்த ஜப்பானியர்கள், பேரரசர் மெய்ஜி தலைமையில் 1868’ல் நடைபெற்ற ஜப்பானின் நவீனமயமாக்கலுக்கு பிறகே பாரம்பரிய உணவிலும் இறைச்சியை சேர்த்துக்கொண்டனர்.
ஜப்பானிய உணவில் பிரதானமான அரிசிச்சோற்றுடன், ஏராளமான பக்க உணவுகள், தொடுகறிகள், மீன், “சுகேமோனோ” எனப்படும், காய்கறி ஊறுகாய்கள், டோஃபூ, பாலாடைக்கட்டி, சோயா, காளான்கள், நூடுல்ஸ், என கலவையான, அதிகம் வேகவைக்கப்படாத, பெரிதும் பச்சையாகவே தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்கள் இருக்கும், முழுமையான ஜப்பானிய உணவு முறை எத்தனை ஆரோக்கியமானதென்பதை ஜப்பானியர்களின் நீளாயுளையும், உடற்கட்டையும் பார்த்தே அறிந்துகொள்ளலாம். ஜப்பானில். கொழுத்த உடலுடையவர்களை அரிதாகவே காணமுடியும் .
ஜப்பானில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமைகொண்ட சிறப்பான பலசேர்மானங்களையும், விதம் விதமான உணவு வகைகளை உருவாக்கும் கலைகளையும் உள்ளடக்கிய இந்த வாஷோகு, 2013 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் புலனாகா கலாச்சார பாரம்பரிய அந்தஸ்தை (UNESCO Intangible cultural heritage) பெற்றது, ஜப்பானில் இத்துடன் சேர்த்து 23 யுனெஸ்கோ அந்தஸ்துகள் உள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது. உண்ணுதல் மட்டுமல்ல, வாஷோகு ஒரு சமையல் அனுபவமும் கூட .
ஜப்பானிய உணவுகளில் மிக முக்கியமானது சுஷி மற்றும் சஷிமி. இவ்வுணவுகளுடன் தவறாமல் பச்சைநிறத்தில் மிகச்சிறிய அளவில் விழுதாக அளிக்கப்படும் ஒரு துணை உணவே வஸாபி. வஸாபியை சுவைத்தவர்கள், கேள்விப்பட்டிருப்பவர்கள், அதன் பச்சை நிறத்தைக்கொண்டு அது ஏதோ ஒரு செடியின் இலைகளின் பசையென்றோ அல்லது செடியை அரைத்த விழுதென்றோ நினைக்கக்கூடும்.
ஆனால் உருளைக்கிழங்குகளைப் போலவே விளையும் வஸாபிச்செடியின் சதைப்பற்றான, சத்துக்களும் பச்சையமும் நிறைந்துள்ள கிழங்குகளைப்போலிருக்கும், தண்டுப்பகுதியின் நீட்சிகளை (Stem tubers) துருவி எடுக்கப்படுவதே வஸாபி. வஸாபிதான் சுஷி, சஷிமியுடனான மிகப்பொருத்தமான இணையுணவு. இதன் பிரத்யேக சுவை, வாசனை மற்றும் எரிவு உலகின் வேறெந்த தாவரப்பொருட்களுக்குமே இருக்காது, மேலும் இது மிக மிக புதிதாகவே பரிமாறப்படுமொன்று.
ஷஷிமியுடன் வஸாபி விழுது
சுஷியை சுவைத்திருப்பவர்கள் வஸாபியையும் சுவைத்திருக்கக்கூடும் ஆனால் அது அசல் வஸாபிதானா என்பது சந்தேகம்தான். ஏனெனில் ஜப்பானிலேயே 5 சதவீதம்தான் அசல் வஸாபி கிடைக்கின்றதென்றும், இப்போது வஸாபி என அளிக்கப்படுவதும் சுவைக்கப்படுவதும் வஸாபியல்ல, வஸாபியின் நிழல் அல்லது சாயல் என்கிறார்கள் தலைசிறந்த ஜப்பானிய சமையல் கலை வல்லுநர்கள்.
போலி வஸாபி விழுதில், வஸாபி இலை, இலைக்காம்பு, கடுகு மற்றும் வஸாபியின் தாவரக்குடும்பத்தை சேர்ந்த முள்ளங்கி வகையொன்று (Cochlearia armoracia ), பச்சைசாயம், மிகக்குறைந்த அளவில் வஸாபியின் மலர்கள் ஆகியவைகள் கலக்கப்பட்டிருக்கும்.
வஸாபி கிழங்குகள்
வஸாபி செடிகள்
முட்டைகோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி, கடுகு ஆகியவற்றின் குடும்பமான பிராசிகேசியேவை (Brasicaceae) சேர்ந்த வஸாபியா ஜப்பானிகா, (Wasabia japonica, இணை அறிவியல் பெயர் Eutrema japonica) செடிகள் மெதுவாக வளரும் இயல்புடைய, ஆண்டு முழுதும் பூக்கும், வெண்ணிற இருபால் மலர்களையும், தடிமனான அடித்தண்டும், நீளகாம்புகளுள்ள சிறுநீரக வடிவிலான பெரிய இலைகளையும் கொண்டவை.
இதன் தாவர அறிவியல் பெயரின் பேரினப்பெயரான Wasabia’வின் பொருள் சரிவர எங்கும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. வஸாபி என்னும் ஜப்பானிய புழங்குபெயரின் லத்தீன் வடிவமாக வஸாபியாவே வைக்கப்பட்டது. சிற்றினமான japonica ஜப்பானை பிறப்பிடமாக கொண்டதை குறிப்பிடுகின்றது. இதுபோலவே தாவர அறிவியல் பெயர்களின் சிற்றினங்களில் indica என்பது இந்தியாவை, sinensis என்பது சீனாவை, Canadensis கனடாவை என்று அவற்றின் தாயகத்தை குறிப்பிடும் பெயர்களில் அமைந்திருக்கும்
இக்குடும்பத்தின் அனைத்து தாவரங்களுமே விசேஷமான நொதியான மைரோசினேஸை, குளுகோசினோலேட்டுக்களை, அய்சோதயோனேட்டுக்களை கொண்டிருக்கும். ((Myrosinase, Glucosinolates. Isothiocyanates). இச்செடிகளை அல்லது செடிகளின் பாகங்களை நறுக்கும் போதும், காயப்படுத்தும் போதும் இவை ஒன்று கலந்து கசப்பும், எரிவும், மணமுமாக வெளிப்படுகின்றன. முட்டைக்கோஸிலிருக்கும் அய்சோதயோனேட்டின் அளவை விட வஸாபியில் 3000 மடங்கு அதிகமென்பதால் இதன் சுவையும், மணமும், எரிவும் அலாதியாக இருக்கின்றது.
வளர்ந்த இச்செடியின் அடித்தண்டு சுமார் 18 லிருந்து 24 மாதங்களில், 12 லிருந்து 18 இன்ச் உயரமும் 40 மிமி அகலமும் வளர்ந்ததும் முழுச்செடியும் வேருடன் அறுவடை செய்யப்படும். இலைகள் நீக்கப்பட்ட அடித்தண்டுகளே வஸாபி கிழங்குகள். இவை மேலும் வளருமென்றாலும் இந்த அளவில் அடித்தண்டுகள் இருக்கையிலேயே வஸாபி விழுதின் பிரத்யேக சுவையும் எரிவும் மிகச்சரியாக இருக்கும்..
வஸாபி ஜப்பானில் எப்போதிலிருந்து, யாரால், எங்கு விளைவிக்கபட்டதென்பதை குறித்து ஜப்பானிலேயெ பலவிதமான வாய்வழிக்கதைகளும் கருத்துக்களும் நிலவுகின்றது.
பன்னெடுங்காலத்திற்கு முன்பு வேட்டைக்காரர்களாக இருந்த, மீனும், விலங்குகளும், கனிகளும் விதைகளும் கடலுணவுகளுமாக உண்டு கொண்டிருந்த ஜப்பானியர்கள் அப்போதே காடுகளில் இயற்கையாக கிடைத்த வஸாபி கிழங்குகளையும் உணவில் சேர்த்துக்கொண்டிருந்திருக்கலாமென்று பரவலாக நம்பப்படுகின்றது. சாமுராய் வீரர்களுக்கு அவர்களின் சேவைகளை பாராட்டும் விதமாக பரிசளிக்கப்பட்டன வஸாபி பண்ணைகள் என்றும் சொல்லப்படுகின்றது.
மியி மாகாணத்தில் 786ல் புத்த துறவியான கோஹ்போ-டாய்ஷி ( Kohbou-Daishi) காடுகளில் வளர்ந்திருந்த வஸாபி செடிகளை கொண்டு வந்து கோயா மலைகளிலும் (Mount Koya) அதன் அடிவாரத்திலும் பயிரடச்செய்ததற்கான ஆவணங்களே வஸாபியைக்குறித்து கிடைத்திருக்கும் முதல் வரலாற்று சான்று. 794’ல் உருவான ஜப்பானிய தாவரவியல் அகராதிகளிலும் வஸாபி குறிப்பிடப்பட்டிருக்கிறது.
918’ல் ஃபுகானே நோ சுககிட்டோ (Fukane-no-Sukehito) தொகுத்தளித்த ஹோன்ஸோ வாம்யோ (Honzo Wamyo) எனப்படும் ஜப்பானின் மிகப்பழமையான மூலிகைஅகராதியில் மலைகளைக்குறிக்கும் சொல்லான ’யாமாய்’ என்று அழைக்கப்பட்ட, மலைகளில் மட்டும் வளர்ந்த இந்த இச்செடியின் பெயர் பின்னர் மருவி வஸாபி என அழைக்கப்பட்டிருக்கலாம் என்றும் இவை 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஜப்பானில் இயற்கையான வாழிடங்களில் வளர்பவையென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் எங்கிஷ்கி (Engishiki) எனப்படும் ஜப்பானிய அரசுக்கான சட்டதிட்டங்கள், சடங்குகள் குறித்தான பழமையான் நூலிலும் வரிசெலுத்தியவர்கள் பணத்துக்கு பதிலாக வஸாபி கிழங்குகளை அளித்தது குறிப்பிடப்பட்டுள்ளது .
931–938 ல் தொகுக்கபட்ட வாம்யோ ருயிஜுஷா (Wamyo Ruijusho) எனப்படும் ஜப்பானின் முதல் அகராதியிலும் வஸாபியைப்பற்றிய குறிப்புக்கள் உள்ளன. ஜப்பான் வெற்றி பெற்ற பல போர்களுக்கு பிந்தைய உண்டாட்டுகளில் வஸாபியை உணவில் சேர்க்கப்பட்டதற்கான குறிப்புக்கள் பல ஆவணங்களில் இருக்கின்றன.
ஜப்பானியர்களின் கலாச்சாரத்தில் மிக முக்கிய இடம்பெற்றிருக்கும் இந்த வஸாபி. 10ஆம் நூற்றாண்டிலிருந்து மருந்துப்பொருளாகவே இருந்து, பின்னர் படிப்படியாக உணவில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
1338 லிருந்து 1573 வரைக்குமான காலத்தில், ஜப்பானின் அரசகுடும்பங்களில் மட்டும் உணவில் சேர்க்கப்பட்டிருந்த வஸாபி,. 1596-1615க்கு இடைப்பட்ட காலத்திலிருந்துதான் வணிக ரீதியாக பயிரிடப்படுகின்றது.
ஜப்பானிய சமையலில் கடுகைப்போல ஒரு மசாலாப்பொருளாக பயன்பாட்டிலிருந்த வஸாபி, பின்னர் மெல்ல மெல்ல சுஷி, பிற மீனுணவுகள், நூடுல்ஸ் மற்றும் சூப்பில் வாசனைக்காக சிறிதளவு சேர்க்கப்பட்டது
17ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஜப்பானை ஒன்றிணைத்த மூவரில் ஒருவரான லியாஷு டோகுகவா (Ieyasu Tokugawa) வஸாபி பிரியராக இருந்திருக்கிறார்
19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்துதான் வஸாபி பொதுமக்களுக்கும் கிடைத்திருக்கிறது. 1971 வரை பசையாக்கப்பட்ட வஸாபிதான் பாக்கட்டுகளில் விற்பனை செய்யப்பட்டது. 1973’ற்கு பிறகுதான் புத்தம் புதிய கிழங்குகளிலிருந்து வஸாபியை துருவி உண்ணும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது.
ஜப்பானில் பல்லாண்டுகளாகவே வஸாபி உணவிலும், மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வந்திருந்தாலும், 20 ஆம் நூற்றாண்டில் சுஷி/சஷிமி உணவுகள் பிரபலமானதும் அதன் இணைஉணவான வஸாபியும் உலகளவில் மிகபிரபலமடைந்தது. சுஷி உணவுக்கும் வஸாபிக்குமான பொருத்தம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாக ஜப்பானியர்கள் வேடிக்கையாக சொல்லுவதுண்டு. சுஷியின் பச்சை வாசனையை மறைக்க, பச்சை சுஷியின் கிருமிகளால் பாதிப்பு வராமலிருக்க பொருத்தமான துணையுணவாக வஸாபி அதிகம் பயன்பாட்டுக்கு வந்தது
20’ம் நூற்றாண்டின் துவக்கத்தில்தான் வஸாபியை தூளாக்கி சந்தைப்படுத்துதலும் துவங்கியது. இதன் சுவை புதிய வஸாபி விழுதைப்போல இருக்காதெனினும் இதையும் ஏராளமானோர் வீட்டு உபயோகத்திற்கென வாங்குவார்கள். தற்போது (-196°C) உறை நிலையில் திரவ நைட்ரஜனில் சேமிக்கப்பட்டு வஸாபியின் சுவையும் நிறமும் மணமும் பாதுகாக்கப்படுகின்றது.
வஸாபி கிழங்கை துருவுதல் என்பது உண்மையில் தேய்த்தல்தான் இவற்றிற்கென இருக்கும் விசேஷ சுறாத்தோலினால் உருவாக்கப்பட்ட ஓரோஷி (oroshi) சதுரத்துருவான்களிலோ, அல்லது கருங்கல்லிலோ, உலோகத்துருவான்களிலோ கிழங்குகள் வட்டசுழற்சியில் தேய்ககப்பட்டு விழுதாக்கப்படும். வஸாபியின் சுவையும் மணமும் குணமும் அது துருவப்படும் விதத்தை பொருத்தும் மாறுபடுகிறது..
இதிலிருக்கும் எளிதில் ஆவியாகக்கூடிய வேதிச்சேர்மங்களின் சுவையை அனுபவிக்கவேண்டி பாரம்பரியமான உணவகங்களில் வஸாபி, அவ்வப்போது புத்தம் புதிதாகவே விழுதாக்கப்பட்டு பரிமாறப்படுகின்றது. சில உயர்தர உணவகங்களில் வஸாபியை வாடிக்கையாளர்களே துருவிக்கொள்ளவும் வசதியுண்டு. பரிமாறப்பட்ட 15 நிமிடங்களில் வஸாபியை சுவைக்காவிட்டால் அதன் அசல்சுவை மறைந்துவிடும்.
பச்சைத்தங்கமெனப்படும் வஸாபி நாவில் பட்டதும் மூளையில் ஒரு மெல்லிய உதையை, நாசியில் உடனே ஒரு எரிச்சலை, பின்னரே நாவில் அதன் சுவையை உணருவீர்கள் என்கிறார்கள் ஜப்பானியர்கள். தேள் கொட்டியது போலவும் தீயில் சுட்டுக்கொண்டது போலவுமிருக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.
வஸாபியின் புகைகலந்த செவிகேட்காதவர்களுக்கான தீவிபத்து எச்சரிக்கை கருவியை வடிவமைத்த ஜப்பானிய தொழில்நுட்பத்திற்கு அசாதாரண அறிவியல் கண்டுபிடிப்புக்களுக்கான Ig நோபல் பரிசு 2011ல் கிடைத்தது. இதன் எரிச்சல் அத்தனை துரிதமாக மூளைக்கு செல்லும்.
வஸாபியின் எரிவு, மிளகாயிலிருக்கும் கேப்ஸைஸினைபோல் நெடுநெரம் தங்கி இருக்காமல் விரைவில் நாக்கிலிருந்து நீங்கிவிடும் வஸாபி விழுதை உண்ணுகையில் கண்களிலும் மூக்கிலும் நேரடியாக பட்டுவிடாமல் கவனமாக இருக்கவேண்டும். வஸாபி மிகசிறிதளவே உணவில் எடுத்துக்கொள்ளப்பட்டாலும் இதன் சுவை மறைந்திருந்து மிக குறைவாக தென்படுமொன்றல்ல, முழு உணவையும் முன்னின்று வழிநடத்திச்செல்லும் சுவை கொண்டதென்கிறார்கள் ஜப்பானியர்கள். மிககுறைந்த அளவிலேயெ இவ்விழுது எடுத்துக்கொள்ளப்படுவதால் இதன் பக்கவிளைவுகள் வெகு அரிதாகவே இருக்கும். வஸாபியை பொருத்தவரை குறைவே மிகுதி.
துருவிய அல்லது தேய்த்த வஸாபியின் மணமும் சுவையும் நிலைபெற இரண்டே இரண்டு நிமிடங்கள் காத்திருந்து பின்னர் இவை பரிமாறப்படும். கண்ணீல் நீரை நிறைத்து மூக்கை தூண்டி எரிச்சலடைய வைத்து எரிவை உடனடியாக மூளையில் உணரச்செய்யும் வஸாபியின் சுவையை வேறெந்தெ சுவையுடனும் ஒப்பிடவே முடியாது.
வஸாபி பண்ணை
ஜப்பானுக்கு செல்லாதவர்கள் ஜப்பான் முழுவதும் பச்சைப்பசேலெனெ செழித்து வளர்ந்திருக்கும் வஸாபிக்காடுகள் இருக்கும் என கற்பனை செய்து கொள்ளவேண்டாம். வஸாபி அத்தனை எளிதில் வளரும் தாவரமல்ல.. நேரடியான சூரியஒளிபடாத ஆற்றங்கரைகளிலும் மலைச்சரிவுகளிலும் வேர்கள் தூயநீரில் மூழ்கி இருக்கும்படியே இவை வளரும். சாதாரணமாக நம்வீட்டு தோட்டங்களில் எலுமிச்சை கறிவேப்பிலை வளர்பப்தைபோல வஸாபியை வளர்க்கமுடியாது. இவற்றை கட்டுப்படுத்திய சூழலில் பசுங்குடில்களில் வளர்க்கும் முயற்சிகள் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. வஸாபி கிலோ 160லிருந்து 250 டாலர்கள் வரை விலை இருக்கும். மிககுறைந்த அளவில் விளைச்சலும், அதைக்காட்டிலும் பன்மடங்கு அதிகமான உலகளாவிய தேவையும் கொண்டது வஸாபி.
டோக்கியோவின் ஷிஜுவோகாவில் பல நூற்றாண்டுகளாக இயற்கையான வாழிடங்களில் வஸாபி பயிரிடப்படுகின்றது. ஜப்பானில் வருடா வருடம் விளையும் வஸாபி கிழங்குகளில் சரிபாதி இங்கிருந்துதான் கிடைக்கின்றது
நீரோடைகளின் பாறைகளின் மீதடுக்கப்பட்ட சரளைக்கற்களின் மீது மணலைப்பரப்பி வஸாபியை பயிரிடும் பழமையான முறை டட்டாமி இஷி (tatami ishi) எனப்படும். இம்முறையில் நீர் இயற்கையாகவே வடிகட்டப்படுவதால் வஸாபியின் சுவையும் தரமும் முதல் தரத்திலிருப்பதாக சொல்லப்படுகின்றது.
ஜப்பானில் இயற்கையாக விளையும் வஸாபி ஹான் வஸாபி எனப்படும்.(Hon wasabi). விதைகள் மூலம் நிலத்தில் பயிராகும் வஸாபி ஹடக் வஸாபி எனப்படும் (Hatake-wasabi) “hatake” என்றால் நிலமென்று பொருள். நிலத்தில் வளர்க்கப்படும் செடிகளிலிருந்து கிடைக்கும் வஸாபிக்கிழங்குகளை விடநீரில் வேர்களை பதித்து நிலத்தில் இலைகளுடன் இருக்கும் சவா செடிகளே (sawa wasabi) தரமான வஸாபிக்கிழங்குக்ளை கொடுக்கின்றன தரம்குறைவான் ஓக்கா வஸாபியும் அதிகம் பயிரிடப்படுகின்றது (oka wasabi ). ஜப்பானிய வஸாபியில் தருமா வகை( Daruma ) அழகிய வசீகரிக்கும் இளம் பச்சையிலும், மசுமா வசாபி (Mazuma ) நல்ல எரிவுடனுமிருக்கும்.
ஜப்பானில் உணவுகள் மிகப்பிரபலமென்றாலும் உணவுகளுக்கு நாம் பெருந்தொகையை செலவிட வேண்டியதில்லை, பெரும்பாலும் ஒரு முழு பாரம்பரிய உணவுக்கு 5 முதல் 10 அமெரிக்க டாலர் வரைதான் செலவாகும். வஸாபி உணவுக்கட்டணம் 2 லிருந்து 5 டாலர் வரையே இருக்கும்
துணை உணவாக மட்டுமன்றி வஸாபியின் மருத்துவகுணங்களுக்காகவும் ஜப்பானியர்கள் வஸாபியை உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். வஸாபியின் வேதிப்பொருட்கள் ஜீரணத்தை துரிதப்படுத்தி வயிற்றுப்புண்களை ஆற்றுதல், புற்றுநோய்கெதிராக செயல்படுதல், பற்சிதைவை தடுப்பது, ரத்தக்கட்டிகளின் சிகிச்சைக்கு என பல்வேறு முக்கிய மருத்துவப்பயன்களையும் கொண்டிருக்கின்றது ஒவ்வாமை நோய்களுக்கும் ஆஸ்த்மாவுக்கும் கூட வஸாபி மருந்தாகின்றது. வஸாபி கிழங்குகளில் அதிக அளவில் வைட்டமின் C, முக்கிய தாது உப்புக்கள்,பொட்டாஷியம் மற்றும் கால்ஷியம் சத்துக்களும் உள்ளது
உலகநாடுகள் பலவற்றிலும் உணவுப்பிரியர்களின் விருப்பத்திற்குகந்த வஸாபி தேவைக்கேற்ற அளவுகளில் விளைவிக்கப்படாததால்தான் வஸாபி போலிகளும் சந்தையில் அதிகம் புழங்குகின்றது.
பசுங்குடில்களில் வஸாபி
எளிதில் நோய்வாய்ப்படுவது , மிகத்தூய நீர் தேவைப்படுவது, கிழங்குகள் முற்றி அறுவடை செய்ய ஏறத்தாழ 2 வருடங்கள் தேவைப்படுவது ஆகிய காரணங்களினால்தான் வஸாபி அதிகம் பயிராவதில்லை. 2013 ல் ஜப்பானில் மட்டும் 17.000 டன் வஸாபி கிழங்குகள் அறுவடை செய்யப்பட்டும் உலகளாவிய இதன் தேவை பலமடங்கு அதிகமாவே இருந்துவருகிறது
புவியியல் ரீதியாக, வசாபி சந்தை வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா-பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா உட்பட ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய வஸாபி சந்தை 279.7 மில்லியன் அமெரிக்க டாலர்களக மதிப்பிடப்பட்டிருக்கிறது, 2027’ல் இது 590 மில்லியனாக உயருமென்றும் அனுமானிக்கப்படுகிறது
தற்போது வஸாபி சாகுபடி அமெரிக்கா, கனடா, தைவான், ஆகிய நாடுகளிலும் வேகம் பிடித்திருக்கிறது. நியூஸிலாந்தில் நீரியல் வளர்ப்பில் LED விளக்கொளியில் வஸாபி க்ளோன்களை வளர்க்கத் துவங்கியிருக்கிறார்கள்.
வஸாபி கிழங்குகளாகவும், தூளாக்கப்பட்டும், விழுதாகவும், துருவியும் சந்தையில் கிடைக்கின்றது. ஜப்பானுக்கு செல்லுகையில் அசல் வஸாபியை சுவைக்கும் அனுபவத்தை தவறவிடக்கூடாது. வஸாபி ஐஸ்கிரீம்களாகவும், பியரில், ஜின்னில், சோளப்பொறியில், நூடுல்ஸீல், சிற்றுண்டிகளில் கலக்கப்பட்டும் ஜப்பானில் பரவலாக கிடைக்கின்றது. வஸாபி விழுது கலக்கப்பட்ட பழரசங்களும் உண்டு. இனிப்பும் காரமும் வஸாபி மணமுமாக இளம்பச்சைநிற கிட்கேட் சாக்லேட்டுக்கள் ஜப்பானில் வெகு பிரபலம். வஸாபியின் இளம்பச்சை வண்ணத்திலிருக்கும் வஸாபி பொம்மைகளும் ஜப்பானிய குழந்தைகளுக்கு பிரியமானவை.
யூ ட்யூபில் வஸாபி சாகுபடியைக் குறித்தும், விழுதின் தயாரிப்பு, பயன்பாடு மற்றும் சுவை குறித்தும் ஏராளமான காணொளிகள் கிடைக்கின்றன . இவற்றில் தலைமுறைகளாக வஸாபி பயிரிடும் குடும்பத்தினரின் பண்ணையைக்குறித்த உணர்வுபூர்வமான காணொளி இந்த இணைப்பில் இருக்கின்றது.
நோய்த்தொற்று உச்சத்திலிருந்த, ஊரடங்கும் அமலில் இருந்த மார்ச் மாத நள்ளிரவொன்றில், வழியெங்கும் பூத்திருந்த மஞ்சள் மலர்களை நிறையவே நிறையாத கூடையில் பறித்துக்கொண்டே இருக்கும் நெடுங்கனவொன்றில் நானிருக்கையில் எங்கோ ஆழத்தில் குடுகுடுப்பைக்காரனின் குரலும் குடுகுடுப்பை ஒலியும் அஞ்சிய நாய்களின் குரைப்புமாக கேட்டுக்கொண்டிருந்தது. படுக்கயறையின் ஜன்னலுக்கு வெளியே நின்றபடி குறிசொல்லிக்கொண்டிருந்திருக்ககூடும்.
கனவிலேயே நாளை விடிந்ததும் எப்படியும் நேரில் குறிசொன்னதை விளக்கிச்சொல்லி பழம்புடவைகளையும் அரிசியோ பருப்போ எண்ணையோ தேவையைச்சொல்லி வாங்க வருவானில்லையா அப்போது பார்த்துக்கொள்ளலாமென்று ஆழ்மனமே ஆழ்மனத்திற்கு சொல்லி மீண்டும் கனவை தொடர்ந்து, தூங்கிவிட்டேன். வழக்கம் போல அதிகாலை விழித்து நாளைத் துவங்கினேன் ஆனால் கண் விழித்த நிமிஷத்திலிருந்தே என்னவாக இருக்கும் அவன் சொன்னவிஷயம் என்றூ உள்ளுக்குள் நிமிண்டலாகவே இருந்தது.
உலகளாவிய அசாதரண நோய்தொற்றுக் காலமாதலால், நிச்சயமற்றுப்போயிருந்த எதிர்காலம், மகன்களின் படிப்பு, ஆரோக்கியம், என் வேலை என்று ஏராளம் கவலைகளில் உழன்று கொண்டிருந்த சமயமாதலால் குடுகுடுப்பைக்காரனின் வரவுக்கு 2 நல்ல புடவைகளையும் அரிசியும் எடுத்து வைத்துக்கொண்டு காத்திருந்தேன்
6 மணி வாக்கில் வந்தான். இளைஞன், கரியவன் ஏராளமான வண்ணத்துணிகளை கைகளிலும் தோளிலும் போட்டுக்கொண்டிருந்தான். முறுக்கு மீசை, ரத்தச்சிவப்பில் பெரிய வட்டப்பொட்டு ,வெற்றிலையில் சிவந்த தடித்த உதடுகள். எதையோ வைத்திருந்த கனமான ஜோல்னா பைகளிரண்டு தோளிலிருந்து தொங்கிக்கொண்டிருந்தது.
என்னைப்பார்த்ததும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு எடுத்த எடுப்பிலேயே’’ இந்த வீட்டு மூத்த ராசாவுக்கு, மூத்த வாரிசுக்கு, குடும்பத்தை தாங்கப்போற காளைக்கு குறி சொல்லியிருக்கா ஜக்கம்மா’’ என்றதும் ஆர்வமும் கூடவே கவலையுமாக வெளியே போனேன். சரணுக்கு என்னத்தை சொல்லியிருக்காளோ ஜக்கம்மான்னு
’’தாயி, மகாலட்சுமி உன் களையான முகம் என்னிக்கும் வாடாது வாடவிடமாட்டா ஜக்கம்மா’’ என்று பால்வார்த்தான் பின்னர் தடாலடியாக ’’தாயி, நல்லா கேட்டுக்க இந்த வீட்டு மகராசன் மேல, மூத்த ராசாமேல, கன்னி ஒருத்தி கண்ணைப் போட்டுட்டா, அவ பார்வையை நல்லா பதிச்சு போட்டா, கவனிச்சுக்கேளு நான் சொல்லபோறதை’’ என்றான். நான் பரவசமாகிவிட்டேன்
எனக்கு சில வருடங்களாகவே மனக்குறை இருந்த ஒரு விஷயம் இது
சரண் வழக்கமாக எல்லா பையன்களும் சொல்லும் ’’எனக்கு பெண்களைப் பிடிக்கா’’தென்பதை 8 ஆம் வகுப்பிலேயே சொல்லிவிட்டாலும் அதன்பிறகும் அதில் மாற்றங்கள் எதையும் காண்பிக்கவேயில்லை, சொன்னது சொன்னதுதான்னு பெண்கள் பக்கம் திரும்பவேயில்லை
இந்தியாவின் தரமான பள்ளிகளில் இரண்டாவது பள்ளியான அவன் பள்ளிப்பெண்கள் அனைவருமே செல்வச்செழிப்பின் அழகும், இளமைப்பெருக்கின் அழகும், இயல்பான அழகுமாய் திளைப்பவர்கள். இவன் வகுப்பிலும் பேரழகிகள் தான் எல்லாருமே.
ஆனால் யாரிடமும் இவன் சிரித்துப்பேசியதையோ, அலைபேசியதையோ கூட நான் பார்த்ததில்ல. பள்ளி விழாவான ஆனந்த உத்ஸவ்’விற்காக 3 நாட்கள் அவனுடன் பள்ளியிலேயே தங்கவேண்டி வருகையில் என்னை முன்பே எச்சரித்தே கூட்டிப்போவான் ’’அம்மா என் வகுப்பு பொண்ணுங்க கிட்ட எல்லாம் ரொம்ப சிரிச்சி சிரிச்சு பேசாதே’’ என்று. நான் அந்த எச்சரிக்கைகளை கடுகளவும் பொருட்படுத்தியதும், கவனத்தில் கொண்டதும் இல்லையென்பது வேறு விஷயம்.
பள்ளியின் பசும்புல்தரையில் நானும் சரணுமாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் ஒரு குட்டைப்பாவாடை கத்தார் அழகி ’ஹாய் பொள்ச்சி’ என்று இவன் முதுகில் பளாரென ஒரு அறை வைத்துவிட்டுப்போனாள் ஒருமுறை. இவன் முகம் கடுகடுக்க அமர்ந்திருந்தான், ’’டேய் யாருடா?’ என்றதற்கு ’’ஜூனியர்மா, கொழுப்பு’’ என்றான். ’’அட சும்மா பேசலாமில்ல நீயும், அது அடிக்கற அளவுக்கு ஜாலியா இருக்கில்ல என்றதற்கு’’, அம்மா! நீ கொஞ்சம் பேசாம இருக்கியா? என்ற எதிர்வினை 2 லட்சமாவது தடவையாக அவனிடமிருந்து வந்தது.
இன்னும் ஒருத்தி அடுத்த நாள் வந்து ’’சா, உன்னிடம் இருக்கும் சாண்ட்விச் கூப்பனை எனக்கு தரமுடியுமா’’ வென்று கேட்டாள், எந்த பதிலும் பேசாமல் குறைந்த பட்சம் ஒரு புன்னைகை கூட இல்லாமல், பாண்ட் பாக்கட்டிலிருந்து கூப்பனை கொடுத்துவிட்டு தேமே என்று அமர்ந்திருந்த அவனை எரிச்சலுடன் பார்த்து’’ ஏன் இவ என்ன சீனியரா உனக்கு? என்றேன் ’’இல்ல கூடத்தான் படிக்கறா ’’ என்றான் கொஞ்சம் சிரிச்சாத்தான் என்னடா? என்றால் மீண்டும் அதே’’ நீ சும்மா இருக்கியா’’பாட்டையே பாடினான்
அந்த பெண் கொள்ளை அழகி. பொன்னிறகூந்தல் அலைஅலையாக இடுப்புவரை, பூனைக்கண்கள், கூர்நாசி, உருவிவிட்டது போல் உடல், நல்ல உயரம் இந்தியச்சாயல் அவள் உடல்மொழியிலும் இல்லை. பிறமாணவர்களிடம் விசாரிக்கையில் விழுந்தடித்துக்கொண்டு அவளை, அந்த சங்கரியைக் குறித்து ஒரு லாங் சைஸ் நோட்டில் எழுதும் அளவுக்கு தகவல்களை கொட்டினார்கள்
அப்பா சென்னைவாசி, சென்னைக்கு சுற்றுலா வந்த பிரேசில் அழகியுடன் காதல் வயப்பட்டு கல்யாணம், காதலின் சாட்சியாக ஒரே மகள் சங்கரி இவன் ஏன் இப்படி இருக்கிறானென்று அன்றைக்கும் ரொம்பவும் விசனப்பட்டேன்
பெருங்கவலையில் இருந்த எனக்கு ஜக்கம்மா குடுகுடுப்பைக்காரனிடம் சொல்லி அனுப்பிய தகவல் பெரிதும் மகிழ்ச்சி அளித்ததால் ’’அப்படியா’’, என்று வாய்விட்டே கேட்டேன்
என் உணர்வெழுச்சி நிரம்பிய அந்த வினாவை அவன் அதிர்ச்சியென்று தவறாக எடுத்துக்கொண்டிருக்கக்கூடும், ’’ஆமாந்தாயி ஆனா உங்க மகன் தப்பெதுவும் செய்யலை, கன்னி அவளாத்தான் கண்ணை வச்சுட்டா, கொள்ளிக்கண்ண, கொலைக்கண்ண வச்சிட்டா’’ என்றான். கவிஞனாயிருப்பான் போலிருக்கேன்னு நினைச்சேன். என்ன மொழிவளம்!
‘’ அதெல்லாம் வேண்டாம்ப்பா, இருந்துட்டு போகட்டும்’’ என்றதும் அவன் குழம்பிவிட்டான். பொதுவில் இப்படி சொன்னதும், கவலையடையும் தாய்களைத்தான் பார்த்திருப்பானோ என்னமோ!
’’தாயீ,, நான் கன்னின்னு சொன்னதை யார்’னு நினச்சீங்க’’ன்னு அவன் துவங்குமுன்னே நான் யாரா இருந்ததாலும் சரி ஒண்ணும் பிரச்சனையில்லைப்பா’’ என்றேன் கறாராக. அவன் மேலும் குழம்பி என்னையும் குழப்பும் உத்தேசத்துடன் பெரிய பூசையெல்லாம் வேண்டாம்மா, 3000 ரூபாதான் ஆகும் நல்லெண்ணை மட்டும் 2 லிட்டர் கொடுத்தாபோதுமெ’’ன்றான்.
’’அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்ப்பா,’’ என்று சொல்லி போய் புடவையை கொண்டு வரலாமென்று திரும்புவதற்குள், அவன் ‘’நாயக்கரம்மாக்கு இனி எல்லாம் நல்லாத்தான் நடக்கும்’’ என்றதும் மேலும் கடுப்பானேன். நாயக்கரம்மாவா!!!!!! .கொங்கு வட்டாரத்தின் நாயக்கர் பெண்களெல்லாம் ஓங்கு தாங்காக நல்ல உடற்கட்டுடன் பெருங்கூட்டுக்காரிகள் என்றே பெயரெடுத்திருப்பவர்கள்.
மறுபடியும் குண்டாகிட்டேனோ என்று கவலையாகவும் குடுகுடுப்பைக்காரன் மீது எரிச்சலாவும் இருந்தது. சரி எடுத்துவைத்த புடவையை கொடுத்து இவனை அனுப்பிடலாமென்று நினைக்கையில் மீண்டும் அவன் ’’இந்த வீட்டுக்கு இனி எல்லாமே நல்லத்துதான் பூரா ஆம்பளை ராசாவேதான் பொறப்பங்க ,இனி பெண் வாரிசே இல்லை, எல்லமே ராசாக்கதான், ஆளும் வம்சம்தான்’’ என்று ஒரே ஆணாதிக்க க்குரலாக கொடுது என்னை எரிச்சலடைய செய்தபடியே இருந்தான்.
எப்போ இனி இந்த வீட்டில் இனி பெண் குழந்தைகள் பிறக்கும்னு காத்திட்டு இருக்கும் என்னிடம் இவன் இப்படி சொல்லிக்கொண்டிருந்ததில் ஏகத்துக்கும் எரிச்சலானேன். ’’சரிப்பா நில்லு வரேன்’’னு சொன்னதும் மறுபடியுமவன் ’’தாயீ கன்னியின் கண்ணு’? என்றான்
’’அது இருக்கட்டும் அப்படியே’’ என்று காட்டமாக சொல்லிவிட்டு புடவைகளையும் பொருட்களையும் கொடுத்தேன். ’’தாயீ 3000 வேண்டாம், சின்ன பூசையா, ஒரு ஆயிரத்திலயாவது செஞ்சுபோடலாம் கண்ணு நல்லதில்லை’’ என்றான் மறுபடி. மறுத்துச்சொல்லி அவனை அனுப்புவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது..
ஆன்லைன் வகுப்புக்கள் தொடங்கியிராத ஞாயிறென்பதால் சரண் தருண் இருவரும் இன்னும் உறக்கத்திலிருந்தார்கள். யாராயிருக்கும் அந்த கன்னி? என்று யோசனை உள்ளே ஓடிக்கொண்டே இருந்தது. அந்த பின்வீட்டிலிருக்கும் ஒல்லிபிச்சிபெண்ணா? தலைமுடி கொத்தமல்லி கட்டாட்டம் சின்னதா இருக்குமே அந்த தோப்புக்காரர் பொண்ணாயிருக்குமோ?
அடுத்த தெருவில் இருக்கும் போலீஸ்காரர் பெண்ணா? அல்லது அய்யோ, அடிக்கடி சரண் மருமகனா வர கொடுத்து வச்சிருக்கனும்னு சொல்லிட்டே இருக்குமே ஒரு வாயாடி அம்மா, ரெண்டு தெரு தள்ளி அவ பொண்ணா இருந்துருமோ?
சரணை மருமகனாக்கும் விருப்பத்தை என்னிடமே வெளிப்படையாக அந்த அம்மாள் சொல்லிய ஒரு நாளில் நான் மைய்யமாக சிரித்து அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தேன். எனக்கு சம்மந்திகூட சரிக்குச்சரி சண்டை போடத் தெரியனுமே!
ஆனால் அன்று தருண் ’’அட பக்கத்திலேயே செட்டில் ஆயிட்டியே, வெரி குட், கைகொடு’’னு சொல்லிச்சொல்லி அண்ணனை வெறுப்பேற்றியதில் சரண் அரண்டு போய் கூகிள் மேப்பில் பாழுங்கிணற்றின் லொகேஷன் தேடிக்கொண்டிருந்தான்.
சரி யாரா இருந்தாலும் சரின்னு சமாதானமாக்கிக்கொண்டேன் என்னை.
ஆனால் முதலில் எழுந்து வந்த தருணிடம் ஆர்வமாக விஷயத்தை சொன்னதும் அண்ணன் மேல கன்னிப்பார்வையா? இருக்கட்டும் ’’எனக்கு என்ன சொன்னான்’’ என்றான் ஆர்வமாக. ’’ஒண்ணுமே சொல்லையே’’ என்றதும் ஒரே சண்டை ’’நீயெல்லாம் ஒரு தாயா? அண்ணனுக்கு ஒரு பார்வைன்னு சொன்னான்னா சின்னவனுக்கு என்ன ஏதுன்னு விசாரிக்க மாட்டியா’’ என்று
சரி குடுகுடுப்பைகாரனின் போன் நம்பர் இல்லாட்டி வாட்ஸ் அப் நம்பர் இருக்கா எடு எடு என்றால் எங்கே போய் எடுக்க? ஏண்டா அநியாயம் பண்ணறே குடுகுடுப்பைகாரன்களுக்கு ஏதுடா போனெல்லாம்?‘’ ’’ஏன் இருக்காதா, அன்னிக்கு பஸ்டாண்டில் ஒரு அம்மா பிச்சை எடுத்தாஙகளே அப்போ அவங்க இடுப்பில் போனை சொருகி வச்சிருந்து எடுத்து பேசினாங்களே அப்போ ஏன் இவங்ககிட்டே இருக்காது, நீதான் கேட்காம விட்டுட்டே! எனக்கு எதாச்சும் கன்னி பார்வை இருந்துன்னா பார்த்து மேல எதாச்சும் செஞ்சிருப்பேனே’’ என்று அவன் ஒரு பக்கம் புலம்பிக்கொண்டிருந்தான்
சரண் எழுந்துவந்ததும் விஷயத்தை சொன்னோம் சிடு சிடுவென்று முகத்தை வைத்துக்கொண்டு ’’நீ என்ன கன்னின்னா, கன்னிப்பொண்ணுன்னு நினச்சுட்டு இருக்கியா, அவன் சொன்னது எதாச்சும் கன்னி தெய்வமா இருக்கும் எப்படியாச்சும் உன்கிட்ட ஒரு ஐயாயிரம் தேத்தலாம்னு பார்த்துருக்கான் நீ தப்பிச்சுட்டே, அவ்வளவுதான், போம்மா’’ என்றான்’
அட அவ்வளவுதானா? ஜக்கம்மா என்ன இப்படி பண்ணிட்டாளே? என்ன என்னமோ நினச்சு சந்தோஷப்பட்டாச்சு அதுக்குள்ள.
இன்னுமே தருண் அதே குடுகுடுப்பைக்காரனை வீதிகளில் அவ்வபோது தேடுவான், அவனுக்கும் பார்வை எதாவது பட்டிருக்கா என்று தெரிந்துகொள்ள.
உண்மையில் தருணின் பார்வைகள் பட்டிருக்கும் ஏராளமான பெண்களின் வீட்டில் அவற்றை எடுக்க பூசை செய்யவேண்டி இருக்குமென்பதை குடுகுடுப்பைக்காரன் தெரிந்துகொண்டால் அவன் காட்டில் மழைதான்.
ஒரு நீண்ட விடுப்பில்2019 ஆகஸ்டில் சென்னை சென்றிருந்தேன். சென்னை விஷ்ணுபுரம் குழும நண்பர்கள் சொல்லி , திரு ராஜகோபால் , (Samarth learning solutions) நடத்திய இரண்டு நாட்களுக்கான ஆளுமை மேம்பாட்டு பயிற்சியில் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் கலந்துகொண்டேன்
உண்மையில் கலந்துகொள்வதற்கு முன்னர் ’ஆளுமை மேம்பாட்டிற்கு என்ன இரண்டு நாட்கள் பயிற்சியளிக்க வேண்டியிருக்கிறது’ என்னும் அலட்சிய மனோபாவம் இருந்தது. மேலும் ”எனக்கென்ன இனி மேம்மடுத்திக்கொள வேண்டும், 12 வருடங்களாக நல்ல ஆசிரியையாகத்தானே இருக்கிறோம்? என்றும் ஒரு கேள்வி இருந்தது. எதற்கும் போகலாம் சென்னை குழும நண்பர்களை பரிச்சயம் செய்துகொண் டதுபோலிருக்கும் என்றே சென்றேன் உண்மையில்
இதுபோன்ற நிறைய பயிற்சிகளை எங்களுக்கு கல்லூரியில் வருடா வருடம் அளித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். அந்த பயிற்சிகள் என்பது, ஒருவர் மேடையில் ’’ எப்படி நாங்கள் இந்த உயரிய தொழிலை தெய்வமென நினைக்கவெண்டும், முன்னுதாரணமான ஆசிரியர்களின் வாழ்க்கை குறிப்பு’’ இப்படி சொற்பொழிவாற்றுவார், அல்லது எங்களுக்கு சில விளையாட்டுககள் நடத்துவார்கள் அன்றெல்லாம் மகிழ்ந்திருந்து வீடு திரும்புவோம் அவ்வளவுதான். பயிற்சி என்று சொல்லப்பட்ட அந்த நிகழ்வுகளிலிருந்து எங்களுக்கு கற்றுக்கொள்ளவோ, மேம்படுத்திக்கொள்ளவோ ஏதும் இருந்ததே இல்லை.
ஆனால் இந்த பயிற்சியில் கலந்துகொண்டு நிறைவு செய்த பின்னரே இது எத்தனை அவசியமான ஒன்று என்பதையும் நான் மிகத்தாமதமாக இப்பயிற்சியினை எடுத்துக்கொண்டிருக்கிறேன் என்றும் உண்ர்ந்து வருந்துகிறேன். 15பேர் கலந்துகொண்டோம். பெரும்பாலும் தகவல்தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் துறையை சேர்ந்தவர்களும் என்னைதவிர இன்னொரு ஆசிரியரும். அனைவரும் விஷ்ணுபுரம் குழுமத்தை சேர்ந்தவர்களே!
12 வருட ஆசிரியத்தொழிலில் நான் முக்கியமென கருதிவந்தது, பெரும்பாலும் அன்பாயிருப்பது, தேவைப்பட்டால் கடுமைகாட்டுவது, நேரம் தவறாமை, மாணவர்களுக்கு சரியாக விஷயத்தை கொண்டு சேர்ப்பது, மாணவர்களின் அந்த அவய்துக்கேயான சிக்கல்களையும் அன்னையென இருந்து தீர்வுகாண்பது இவைகளை மட்டுமே.
ஆனால் இந்த பயிற்சியின் பின்னரே இன்னும் எத்தனை முக்கியமான நான் அவசியம் பின்பற்றவேண்டிய, எனக்கும் மாணவர்களுக்கும் சேர்த்து பயனளிக்கக்கூடிய நுட்பமானவிஷயங்கள் இருக்கின்றன என்றறிந்து கொண் டேன்
ஆசிரியத்துக்கு மட்டுமல்ல, ஒரு உரையாடலை எப்படி சாமார்த்தியமாக கொண்டு போவது, வியாபாரப்பேச்சுக்களை எப்படி வெற்றிகரகமாக நடத்துவது இப்படி ஏராளமாக கற்றுக்கொண்டோம்
பங்கேற்பாளர்கள் பேசுவதை வீடியோவாக எடுத்து மீண்டும் எங்களுக்கே போட்டுக்காண்பிக்கையில் அதில் நாங்கள் செய்தவையும் செய்யக்கூடாதவைகளும் எங்களுக்கே தெளிவாக தெரிந்தது
இந்த பயிற்சியின் வாயிலாக அல்லாது வேறெப்படியும் நாங்கள் இதுபோன்ற தவறுகளை, தோற்றப்பிழைகளை சரிசெய்துகொண்டிருக்கவும் ஏன் அறிந்துகொண்டிருக்கவும் கூட வாய்ப்பில்லை,. இரண்டு நாட்களுமே கொட்டும் மழையில் முழுக்க நனைந்து கொண்டும் கூட பின்மாலை வரை நீண்ட பயிற்சியில் அனைவரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டோம்
ராஜகோபாலும் அவர் நண்பர் அருணும் இப்பயிற்சியை நடத்தினார்கள். இருவரும் மிக்க தோழமையுடன் சிரித்த முகத்துடன் சோர்வின்றி , கட்டணமுமின்றி எங்களுக்கு முழுமனதுடன் பயிற்சி அளித்தனர். பயிற்சியாளர்களுடன் பங்கேற்பாளர்கள் இருந்ததைபோலல்லாமல் நெருங்சிய சினேகிதரோ அல்லது சொந்த சகோதரனோ வந்திருந்து வீட்டு முன்னறையில் காபி குடித்துக்கொண்டே இயல்பாக பேசிக்கொண்டிருந்தது போன்ற ஒரு சுவாதீனமும் செளகரியமும் எங்கள் அனைவருக்கும் இருந்தது.
.திரு ராஜகோபால் அவர்களை வெண்முரசு வாசகராக விஷ்ணுபுரம் விழாவில் இலக்கிய வாசகராகத்தான் அறிமுகம் ஆனால் இப்படியான பயிற்சிகளை நடத்துபவர் என்றே இப்பொழுதுதான் அறிந்துகொண்டேன்..
விடுப்பு முடிந்து இனி ஒரு ஆசிரியையாக மாணவர்கள் முன்னால் நின்று முன்னைக்காட்டிலும் சரியாகவும் சிறப்பாகவும் என்னால் பாடங்களை நடத்த முடியும் என்று திடமான நம்பிக்கை வந்திருக்கிறது இப்போது
பங்கேற்பாளர்களில் பல துறைகளை சேர்ந்தவர்களும் இருந்தார்கள். அவர்களுடன் கலந்துரையாடியதும் நல்ல அனுபவமாயிருந்தது,. பயிற்சியளித்த ராஜகோபால் மற்றும் அருண் அவர்களுக்கும், விஷ்ணுபுரம் குழுமத்திற்கும் பயிற்சிக்கு தன் வீட்டில் இடமளித்த திரு செளந்தருக்கும் நன்றி.
ஜா ஜா என்னும் ராஜகோபால்
இந்த பதிவு ஒரு கடிதமாக ஜெ வின் தளத்தில் வெளியானது, கடிதத்துக்கு சமர்த் குறித்த ஜெ வின் விரிவான பதில் இருக்கும் இணைப்பு;
மனித மூதாதையர்கள் சுமார் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே மது அருந்தியிருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.குகை ஓவியங்கள், தகவல்கள் பொறிக்கப்பட்ட களிமண் கட்டிகள், அகழ்ந்தெடுக்கப்பட்ட மட்பாண்டங்களின் மிச்சங்கள், பாப்பிரஸ் சுருள்களின் குறிப்புக்கள், கல்லறை சித்திரங்கள், எகிப்து பிரமிடுகளின் சீசாக்களும் மதுக்கோப்பைகளும் குடுவைகளும், என நமக்கு கிடத்திருக்கும் எல்லா ஆதாரங்களுமே மதுபானங்கள் மனித குல வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடம்பெற்றிருந்ததை சொல்கின்றன.
மதுவைக் குறித்துப் பேசாத உலக இலக்கியங்களே இல்லை. தண்ணீரை திராட்சை ரசமாக்கியதுதான் ஏசு நிகழ்த்திய முதல் அதிசயமே. நோவா, திராட்சை ரசத்தைக் குடித்துப் போதைக்குள்ளாகி சுயநினைவிழந்து படுத்திருந்தததை சொல்லுகின்றது விவிலியம். வளர்பிறையில் வளர்ந்து தேய்பிறையில் சிறுத்துக்கொண்டு போகும் சோமனுக்குரிய கொடியை பிழிந்து எடுக்கும் சோமபானம் நம்மை துயரிலிருந்தும் பிணியிலிருந்தும் விடுவிக்குமென அதர்வவேதம் குறிப்பிடுகின்றது. வேதகாலத்தில் வாழ்ந்த அசுரர்களும், கிராதர்களும் அரிசி, பார்லி மற்றும் தினை மாவுகளிருந்து தயாரிக்கப்பட்ட சுர’ பானம் அருந்தியதாக வேதம் கூறுகிறது
புராதன இந்தியாவில் வாழ்ந்த ஆயுர்வேதத்தையும் ஜோதிடத்தையும் அடிப்படையாகக் கொண்டு கொடிய நோய்களுக்கு சிகிச்சை அளித்த சரக மகரிஷி (Charaka) சுரபானத்தை வலிநீக்கியாகவும், மயக்கமூட்டியாகவும் பயன்படுத்தியதற்கும், அவருக்கும் முந்தைய காலத்தை சேர்ந்த சுஷ்ருதர் கருச்சிதைவான பெண்ணொருத்திக்கான சிகிச்சையின் போது அவளுக்கு வலிதெரியாமலிருக்க சுரபானத்தை அளித்ததற்கும் சான்றுகள் உள்ளன.
ராமாயணத்தில் பல இடங்களில் மதுஅருந்துதல் பற்றிய குறிப்புகள் உள்ளன. மகாபாரத்திலும் யவனமது, தேறல் உள்ளிட்ட பலவகையான் மதுவை ஆண்கள் பெண்கள் என வேறுபாடின்றி அனைவரும் அருந்தியிருப்பதை காணலாம். கடவுளின் கட்டளையின்படி சேகரித்த தாவங்களை கடலில் கரைத்து அமிர்தமெடுத்து பருகி வலிமைமிக்கவர்களாவதை குறிப்பிடுகின்றது வால்மீகி ராமாயணம் .புத்தமத நூல்கள் கரும்பின் சாற்றுடன் பல தாவரங்களை சேர்த்து உண்டாக்கும் சுரா என்னும் பானத்தையும், தேனை புளிக்க வைத்து உண்டாக்கும் மதுவையும் பற்றி சொல்லுகின்றது
சங்க இலக்கியங்களில் தமிழர் பயன்படுத்திய மதுவகைகள் குறித்துப் பல செய்திகள் விரிவாகக் காணப்படுகின்றன. மனிதகுலத்தின் வரலாறோடு இணைந்தேதான் இருந்திருக்கிறது போதையூட்டும் பானங்களும் பிற வஸ்துக்களும்.
பழமரங்கள் தங்களின் விதை பரவுதலை பழங்களை உண்ணும் விலங்குகளின் மூலம் உறுதிப்படுத்த முற்றிக்கனிந்த பழத்தின் வாசனையிலேயே அவற்றில் சர்க்கரை உள்ளதையும் அவை உண்ணத் தகுந்ததாயிருப்பதையும் விலங்குகளுக்கு தெரிவிக்கிறது.
உதிர்ந்து கேட்பாரற்றுக் கிடக்கும் அழுகிய பழங்களின் சர்க்கரைகளை இயற்கையாகவே காற்றிலும் மண்ணிலும் இருக்கும் ஈஸ்ட்கள் உட்கொள்ளத் தொடங்கும் போது சர்க்கரை ஆல்கஹாலாக மாறுகிறது இவற்றை உண்ணும் குரங்குகள் போதையை அறிந்து, பின்னர் தொடர்ந்து இத்தகைய கனிந்த, நொதித்த பழங்களையே உண்ணத்துவங்குகையில், விலங்குகளையும் பறவைகளையும் பின்தொடர்ந்தே, உண்ணக்கூடிய உணவையும் தேவையான மருந்தையும் கண்டறிந்த ஆதிமனிதர்களும் அதையே உண்ணத்துவங்கி, பின்னர் தேவைக்கேற்ப பழங்களை நொதித்தலுக்கு உள்ளாக்கி மதுவை உருவாக்க துவங்கியிருக்கலாமென்கிறது மதுபானங்களின் வரலாற்றை சொல்லும் பல அனுமானங்களில் மிகபிரபலமான ஒன்றான drunken monkey hypotheis.
ஆதிமனிதர்கள் உணவைப் பாதுகாக்கவும், வேட்டையாடவும் விவசாயம் செய்யவும் வழியற்ற குளிர்காலங்களுக்கான உணவை சேமிக்கவும், பலவிதமான நுட்பங்களைப் பயன்படுத்தினர், அதிலொன்றுதான் தானியங்களை உடைத்து மாவாக்கி கரைத்து கொதிக்கவைத்து நொதித்தலுக்குள்ளாக்குவது .
பண்டைய மனிதகுலத்தின் குறிப்பிடத்தக்க திருப்புமுனைகளில் ஒன்றாக இயற்கைபொருட்களிலிருந்த சர்க்கரையை புளிக்கவும் நொதிக்கவும் வைத்து ஆல்கஹால் உருவாகும் நுட்பத்தை அறிந்துகொண்டதும் சொல்லப்படுகின்றது. கற்கால மனிதர்கள் மட்டுமல்லாது பூச்சிகள், பறவைகள், யானைகள், பழ வெளவால்கள், குரங்குகள் என அனைத்துமே மதுவின் நுகர்வுக்கு ஆட்பட்டிருந்தவைதான் மனிதனும் பிற விலங்குகளும் மதுபானங்கள், அதிகப்படியான உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு ஆகியவற்றிலிருந்து கிடைத்த நன்மைகளுக்கு ஏற்பத்தான் பரிணாமம் அடைந்திருக்கிறோம் .
பலவகையான பானங்கள் ஆதிகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பினும் திராட்சை ரசத்திலிருந்து வைனும் தானியங்களிலிருந்து கிடைத்த பியரும் அவற்றுள் முக்கியமானது. தண்ணீருக்கும் தேநீருக்கும் அடுத்தபடியாக உலகின் மிக அதிகமாக அருந்தப்படும் விருப்ப பானமாக பியரே இருக்கின்றது. பியரை உருவாக்கும் கலையும் அறிவியலும் ஜைத்தாலஜி (Zythology) எனப்படுகின்றது.. பியர் பிரியர்களுக்கு Zythophiles என்று பெயர்.
பியரின் வரலாறும் மிகச்சுவையானது, உண்மையில், மனித நாகரிகத்தின் வரலாறென்பதே பியரின் வரலாறுதான் என்கிறார்கள் மானுடவியலாளர்கள். மனிதன் வேட்டை வாழ்விலிருந்து விலகி, தானியங்களை பயிரிடும், விவசாயத்தை அடிப்படையாக கொண்ட ஒரு வாழ்க்கைக்கு மாறியபோதே பியர் தயாரிப்பும் தொடங்கியிருக்கலாமென்று கருதப்படுகின்றது. . தாவரப்பயன்பாட்டியலான Economic Botany’யும், பல்லாயிரம் வருடங்ளுக்கு முன்பு, தானிய வகைகள் சாகுபடி செய்யப்பட்டபோதே பியரும் உருவாகியிருக்கக்கூடும் என்கிறது.
சுமேரியர்கள், எகிப்தியர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், சீனர்கள் மற்றும் பிரிட்டிஷ் உட்பட பல கலாச்சாரங்களிலும் நாகரிகங்களிலும் பியர் அழுத்தமான அடையாளத்தை பதித்திருக்கிறது.
அகழ்வாய்வில் 5000 வருடங்களுக்கு முன்பான சுமேரயாவின் களிமண் கட்டிகளில் ரொட்டியின் கடவுளான நின்காசி (Ninkasi) பியரின் தயாரிப்பை பலருக்கு கற்றுக்கொடுத்ததற்கான குறிப்புகள் இருந்தன.. பாபிலோனியர்கள் சுமேரியாவை வென்று சுமேரியர்களின் பியர் தயாரிக்கும் திறன்களைப் பின்பற்றினர். பாபிலோனிய மன்னர், ஹமுராபி, பியர் தயாரிப்பின் சட்டங்களை அறிவித்து பியரை 20 வெவ்வேறு வகைகளாக வகைப்படுத்தியிருந்தார்
சுமேரியாவின் பியர் கலாச்சாரம் பின்னர் எகிப்துக்குள்ளும் நுழைந்து, எகிப்திய கலாச்சாரத்தின் முக்கிய பகுதியாக மாறியது எகிப்தியர்கள் பார்லி மற்றும் பண்டைய கோதுமை வகையான எம்மர் உள்ளிட்ட பல தானியங்களிலிருந்தும் பியரை காய்ச்சினர். அவர்களிடம் அடர்ந்த நிற, இனிக்கும், கலங்கிய, நட்புக்கான, அழகுபடுத்தப்பட்ட, சத்தியத்தின் பியர்களும், மறு வாழ்விலும் நீடிக்கும் இறுதிச் சடங்குகளுக்கான தனித்த வகையும், கல்லறைகளுக்கு “புளிப்பில்லாதவையும்” இறப்பற்ற நித்திய பியருமாக பல வகைகள் இருந்தன. பிரமிடுகளை கட்டியவர்கள் உள்ளிட்ட பல தொழிலாளிகளுக்கு நாளொன்றிற்கு 4 லிட்டர் பி்யரே சம்பளமாக கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது
பல நாகரிகங்களின் விருப்பமான மற்றும் பாதுகாப்பான பானங்களில் ஒன்றாக பியர் வேகமாக புகழ்பெற்றது. கூடவே காய்ச்சும் முறைகளின், சேர்மானங்களின் மாற்றங்களுக்கு தகுந்தபடி பியரின் சுவையும், இயல்பும் மாறிக்கொண்டுமிருந்தது. பாபிலோனியர்கள் அடர்ந்த கலங்கலான தானியமிச்சங்கள் அப்படியே இருக்கும் பியரை வைக்கோலால் உறிஞ்சிக் குடித்தார்கள். பல நாடுகளில் ஆலிவ் எண்ணெய், பாலாடைக்கட்டி, புல்வகைகள்,, கேரட் போன்றவற்றையும், கஞ்சா மற்றும் பாப்பி போன்ற மயக்கமூட்டிகளையும் கூட பியரில் கலந்து அருந்தினார்கள்
.அத்தனை ஆயிரம் வருடங்களுக்கு முன்பே புழக்கத்தில் இருந்த உலகின் மிகப்பழமையான மதுபானம் பியரே. எனினும் கசப்பு சுவையுடன் இருக்கும் பியர் கி.பி 822 வரை உருவாகி இருக்கவில்லை.
பல சோதனை முயற்சிகள் பியரின் சுவையை மேம்படுத்தவும் முளைவிட்ட தானியங்களின் இனிப்புச்சுவையை மட்டுப்படுத்தவும் உலகின் பலபகுதிகளில் நடந்த வண்ணமே இருந்திருக்கின்றன. இந்த சேர்மானங்கள் நாட்டுக்கு நாடு, இடத்திற்கு இடம் மாறுபட்டிருந்தது. பிற வாசனைப்பொருட்கள் சேர்க்க்கபட்டவை க்ரூட்’பியர் (Gruit beer) என்னும் பொதுப்பெயரில் அழைக்கப்பட்டன.(“Gruit” என்பது ஜெர்மானிய மொழியில் மூலிகை என பொருள்படும்)
செம்பருத்தி, தேயிலை. உலர்ந்த ஆரஞ்சின் தோல், பலவகையான கிழங்குகள், லவங்கப்பட்டை, லாவண்டர் அரும்புகள், Achilea milefolium எனப்படும் Yarrow, நல்ல நெடியுடைய செடியான ஹிஸ்ஸாப் (Blue giant hyssop), ஜூனிபர் பழங்கள், இஞ்சி, கேரவே விதை, சோம்பு, ஜாதிக்காய், புதினா, கிராம்பு, குருமிளகு, சீரகம், வனிலா, கொத்துமல்லி நெல்லிக்கனிகள், பைன் மர ஊசியிலைகள், சில கடல்பாசிகள், கொக்கோ, மிளகாய்கள், கசகசாவிதைகள், மஞ்சள் என பலதாவரப்பொருட்கள் பியரில் கலந்து சுவை மாறுபாடு சோதிக்கப்பட்டது
நாம் கிணற்று நீர் இனிப்புச் சுவையாக மாற நெல்லிமரக்கட்டைகளை போடுவது போல் குறிப்பிட்ட சில மரங்களின் சிறு சிறு கிளைகளை உடைத்து கொதிக்கும் பியரில் சேர்க்கும் வழக்கம் கூட இருந்திருக்கிறது. இனிப்பை அதிகமாக்கவும் ஆப்ரிகாட், செர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ஆகியவற்றை சேர்த்திருக்கிறார்கள்.
ஹாப்ஸ் மஞ்சரி
பியர் வெகுநாட்களுக்கு கெட்டுப் போகாமலிருக்கவும் சுவையை மேம்படுத்தவும் அலமாரி வாழ்வை (Shef life) அதிகரிக்கவும் பியரில் பல்வேறு தாவரங்களும் தாவர பொருட்களும் சேர்க்கப்பட்டு சோதிக்கப்பட்டுக்கொண்டிருக்கையில், மடாலயங்கள் இப்படி சுவை மாறுபாட்டிற்காக சேர்க்கப்படும் மூலிகைகளுக்கு வரி விதித்ததால் அந்த வரிவிதிப்பு பட்டியலில் இல்லாத பிறவற்றை சோதித்து பார்க்கும் முயற்சியாகத்தான் அப்போது மருத்துவத்தாவரமாக பயன்பட்டுக்கொண்டிருந்த ஹாப்ஸ் என்கிற ஹுமுலஸ் லுபுலஸ் (Humulus lupulus) என்னும் அறிவியல் பெயர் கொண்ட இந்தச்செடி பியர் உலகிற்குள் கொண்டு வரப்பட்டது, பின்னர் பியரின் கசப்புச்சுவை வரலாறானது.
ஹாப்ஸின் பயன்பாடு துவங்கிய பின்னர் சுவைக்காக சேர்க்கப்பட்டுக் கொண்டிருந்த பிற தாவர உபயோகங்கள் மெல்ல மெல்ல குறைந்து பின்னர் இல்லாமலே ஆனது. 1516ல் ஹாப்ஸின் உபயோகம் குறித்து சட்டமே இயற்றும் அளவிற்கு ஹாப்ஸ் பியருக்கு அளித்த சுவையும் நன்மையும் இருந்தது
பியரின் தூய்மை விதி எனப்படும் 1487ல் பரிந்துரைக்கப்பட்டு பின்னர் 23 ஏப்ரல் 1516’ல் அமலாக்கப்பட்ட ஜெர்மனியின் “ரெய்ன்ஹீட்ஸ்ஜ்போட்” (Reinheitsgebot) பியர் தூய்மைச் சட்டம் நீர், ஹாப்ஸ் மற்றும் பார்லி தவிர பிற அனைத்தையும் பியரை காய்ச்சும் பொருட்களிலிருந்து நீக்கியது. ஜெர்மனியின் இந்த பியர் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கான கட்டுப்பாட்டு விதியே உலகின் முதல் உணவுசார்ந்த தரக்கட்டுப்பாட்டு விதியாகும். பின்னர் 300 ஆண்டுகளுக்கு பின்னரே நொதித்தலில் ஈஸ்ட்டின் பங்கு லூயிஸ் பாஸ்டரால் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இவ்விதியில் ஈஸ்ட் நான்காவதாக சேர்க்கப்பட்டது
தானியங்களுடனும் பழக்கூழ்களுடனும் ரொட்டித்துண்டுகளை சேர்த்து நொதித்தலுக்கு உ்ள்ளாக்கி மதுபானங்களை உண்டாக்குவது நம் வரலாற்றில் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பே இருந்தும், லூயிஸ் பாஸ்டருக்கு முன்பு ரொட்டித்துண்டுகளில் ஈஸ்ட் இருப்பது தெரியாமலேயே உபயோகப்படுத்திக் கொண்டிருந்தது ஒரு மர்மம்தான்.
இன்றளவும் பியர் தயாரிப்பில் ஈஸ்ட்டின் இரண்டு வகைகளான, நொதித்தல் முடிந்தபின்னர் பியர் திரவத்தின் மேலே மிதக்கும் சக்காரோமைஸீஸ் செரிவிசியே (Saccharomyces cerevisiae) மற்றும் அடியில் வண்டலாக படிந்துவிடும் சக்காரோமைஸீஸ் கார்ல்பெர்ஜென்ஸிஸ் (Saccharomyces carlsbergensis).) ஆகியவையே உபயோகப்படுத்தப் படுகின்றன. முந்தையது top beer எனப்படும் Ale , பிந்தையது bottom beer எனபடும் Lager.
பியரில் சேர்க்கப்படுவதற்கு முன்பே ஹாப்ஸ் செடிகள் வேறு பயன்பாட்டிற்காக வளர்க்கப்பட்டிருக்கலாம்.. கிபி 7ஆம் நூற்றாண்டில் பலவகையான தானியங்களை நீரில் கலந்து கொதிக்கவும் நொதிக்கவும் வைத்து, கசக்கும் மலர்களும் கலந்து செய்யப்படும் பலபெயர்களில் அழைக்கப்பட்டாலும் ஒரே சுவையுடன் இருந்த போதையூட்டும் பானெமென்று பியரை குறிப்பிட்டிருக்கிறார். இயற்கைஆர்வலரும் தீராப்பயணியுமான ப்ளைனி தனது இயற்கையின் வரலாறு ( Naturalis Historia) நூலில்.
ஹாப்ஸ் தோட்டங்கள்
கி.பி 822 ல் வடக்கு பிரான்ஸின் பிகார்டியில் பெனடிக்டைன் மடத்தின் மடாதிபதி அடால்ஹார்ட் எழுதிய மடத்திற்கான நெறிகளைக் குறித்தான நூலில் பியர் தயரிக்கும் பொருட்டு காடுகளிலிருந்து ஹாப்ஸ் மலர்க்கொத்துக்களை சேகரிப்பதும் குறிப்பிடப்பட்டிருந்ததே ஹாப்ஸின் பயன்பாடு குறித்த முதல் முக்கிய வரலாற்று ஆவணம். 1150,களில் ஜெர்மானிய மடாதிபதிகள் கசப்புச்சுவைக்கும், அதிக நாட்கள் பியர் கெட்டுப்போகாமல் இருக்கவுமாக ஹாப்ஸின் பயன்பாட்டை அதிகமாக்கினர்.
பியர் தயரிப்பில் சேர்க்கப்பட்ட இந்த மலர்க்கொத்து அத்தனை ஆயிரமாண்டு கால பியர் சுவையை மாற்றியமைத்தது. ’க்ரூட்’ தாவரங்களின் விற்பனையில் வருமானம் பெற்றுக்கொண்டிருந்த கத்தோலிக்க திருச்சபைகள் ஹாப்ஸின் பயன்பாட்டை, கடுமையாக எதிர்த்தனர். ஆனால் ஹாப்ஸ் பியரின் வரலாற்றில் ஆழமாக வேர்களை வளர்க்கத் தொடங்கியது.
கசப்பு, பிரத்யேக சுவை மற்றும் நறுமணத்திற்காக உலகெங்கிலும் பியரில் சேர்க்கபட்ட ஹாப்ஸ் , வணிக ரீதியாக பெருமளவில் பயிராக்கவும் பட்டது. மாசசூசெட்ஸ் நிறுவனம் 1629 ஆம் ஆண்டில் ஹாப்ஸை வட அமெரிக்காவிற்கு அறிமுகப்படுத்தியது, ஆனால் இது ஒரு முக்கியமான வணிகப் பயிர் ஆவதற்கு 1800 வரை ஆனது. இன்று பெரும்பாலான ஹாப்ஸ் ஒரிகான், வாஷிங்டன், இடாஹோ மற்றும் கலிபோர்னியாவில் வளர்க்கப்படுகின்றன.
மஞ்சள் நிறப்பிசினுடன் பெண்மஞ்சரிகள்
பார்லி அல்லது பிற தானியங்களை ஊறவைத்து பின்னர் அவற்றை முளைக்கச்செய்து, வறுத்து,உடைத்து, பொடித்து, நீர் கலந்து கொதிக்க வைத்த பின் கிடைக்கும் இனிப்புச்சுவையுடன் இருக்கும் கலவையான வொர்ட் (wort) ல் குறிப்பிட்ட சமயத்தில் இந்த ஹாப்ஸ் செடியின் பெண்மலர்கொத்துக்களை (சிறு சிறு மலர்கள் நெருக்கமாக இணைந்திருக்கும் கனகாம்பர மலர்க் கொத்தைபோன்ற மலர்மஞ்சரிகளை) உருவிப்போடுவார்கள். பின்னர் நொதித்தலுக்காக ஈஸ்ட் சேர்க்கப்பட்டு பியர் தயாரிக்கப்படும்
கசக்கும் பியருக்கான் விருப்பம் உலகெங்கிலும் பரவி. ஹாப்ஸின் பயன்பாடு அதிகரிக்க துவங்கியபோதே இதன் கலப்பினங்களும் உருவாக்கப்பட்டன. ஐரோப்பா, தென்மேற்கு ஆசியா மற்றும் வட அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட ஆண்டு முழுவதும் பூத்துகாய்க்கும் வகையான, கஞ்சாச்செடியின் கன்னாபேசியே cannabaceae குடும்பத்தைச் சேர்ந்தது இந்தத்தாவரம். இதன் பெண்மஞ்சரிகளை மட்டுமே பியர் தயாரிப்பில் பயன்படுத்துவதாலும் இம்மஞ்சரிகள் சரங்களாக தொங்கிக் கொண்டிருப்பதாலும் தமிழில் இவற்றை சரலதை என அழைப்பது பொருத்தமாக இருக்கும்.
சரலதை (பெயரிட்ட சுபாவுக்கு நன்றி)
ஆண்டு முழுவதும் பூத்துக்காய்க்கும் பல்லாண்டுத்தாவரமான இது சுமார் 50 வருடங்கள் தொடர்ந்து பலன் தரும். ஆண் பெண் கொடிகள் தனித்தனியே காணப்படும். ஆண் பூக்கள் தளர்வான மஞ்சரிகளகவும் ,பெண் மஞ்சரி சரமாக, நெருக்கமாக, இலைச்செதில்களால் சூழப்பட்ட சிறிய மலர்களுடனும் காணப்படும். பொதுவாக உலகெங்கிலும் பயிரிடப்படுவது Humulus lupulus ஜப்பானில் பயிரிடப்படுவது, Humulus japonicas, சீனாவில் பயிரப்படுவது Humulus yunnanensis என்னும் வகைகளாகும்.;
இந்தியாவில் இமாச்சலபிரதேசத்தின் லஹால் (Lahaul ) பழங்குடியினரின் கிராமத்தில்தான் 1973ல் ஹாப்ஸ் சாகுபடி துவங்கியது. அதற்கு முன்பு வரை இம்மலர்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன.
ஹாப்ஸ் கொடிகள் வைன்ஸ் (Vines) என்றழைக்கப்படுவதற்கு மாறாக பைன்ஸ்’ (Bines) என்று அழைக்கப்படுகின்றன, ஏனென்றால் அருகிலிருக்கும் ஆதரவை தனது வளைந்த கொடிபோன்ற தண்டுகளால் சுற்றி வளைத்துக்கொண்டு ஏறும் வைன்களை போலல்லாது இவை தண்டுகளிலிருக்கும் கடினமான முட்களைப் பயன்படுத்தி ஆதரவை பற்றிக்கொண்டு, கடிகார வளைவில் சுற்றிக் கொண்டு ஏறுகின்றன.
ஹாப்ஸ் கொடிகள்
இதயவடிவில் பற்களுடன் கூடிய விளிம்புகளை கொண்டிருக்கும், எதிரடுக்கில் அமைந்திருக்கும் இலைகளுடன் இருக்கும் இக்கொடிகளின் பெண் மஞ்சரிகள் மகரந்த சேர்க்கை நடைபெறும் முன்னர் அறுவடை செய்யப்பட்டுவிடும். விதைகளுக்காக மட்டும் 200 பெண் கொடிகளுக்கு ஒன்று என்னும் விகிதத்தில் விட்டுவிட்டு மற்ற ஆண் கொடிகள் அகற்றப்பட்டுவிடும். .
ஆழமான ஆணிவேர்களையும் நீரை சேகரிக்கும் மேற்பரப்பு வேர்களையும் அடிக்கிழங்கையும் கொண்டிருக்கும் இவை, கிழங்குகள், நறுக்க்கபட்ட தண்டுகள் மற்றும் விதைகளின் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை விரைந்து வளரும் இயல்புடையவை, 30 அடிவரை வளரும் இவை 18 அடியில் நறுக்கபட்டு அடர்த்தியாக வளர்க்கப்படும். ஒரு ஏக்கரில் சுமார் 1000 கொடிகளை வளர்த்தலாம்..
ஹாப்ஸ் மலர்கள் கசப்புச்சுவையை மட்டும் அளிக்கும் ஆல்ஃபா மலர்கள் மற்றும் நறுமணம் அளிக்கும் அரோமா மலர்கள் என இருவகைப்படும். இரண்டு பண்புகளையும் கொண்ட மலர்களுக்கான கலப்பின முயற்சிகள் தாவரவியலாளர்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பியரின் கசப்புச்சுவைக்கும் பிற இயல்புகளுக்கும் காரணமாயிருப்பது இம்மலர்களில் உள்ள ஆல்ஃபா அமிலங்களான ஹுமுலோன், பீட்டா அமிலங்கலான லுபுலோன் உள்ளிட்ட ஏராளமான வேதிச்சேர்மானங்கள் ( humulones , lupulones , leucine, valine, isoleucine, cohumulone colupulone, adhumulone, adlupulone), இவை மலர்களின் எடையில் 25 சதவீதத்துக்கும் அதிகமான அளவில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
முளைவிட்ட பார்லியின் மிதமான இனிப்புச்சுவையை ஈடுகட்ட ஹாப்ஸ் பெண்மலர்களிலிருக்கும் மஞ்சள் நிறப்பிசினின் கசப்புச்சுவை மிகபொருத்தமானது. ஹாப் மஞ்சரிகள் பழுத்து, பிசினின் அளவு மிக அதிகமாகவும் இருக்கும்போது அறுவடை செய்யப்படுகிறது. பின்னர் இவை பிசின் உதிர்ந்துவிடமால் கவனமாக உலர்த்தப்படுகின்றன.
பொதுவாக ஹாப்ஸ் மலர்கள் புத்தம் புதியதாக கொதிக்கும் பியர் கலவையில் சேர்க்கப்படுகின்றன. மாறாக உலர்ந்த மலர்க்கொத்துக்களும், பிசினை உலர்த்தி பொடித்த பொன்மஞ்சள் பொடியும், மலர்கொத்துக்களை உலர்த்தி அரைத்து பிசைந்து செய்யபட்ட கட்டிகளும் கூட உபயோகப்படுத்தபடுகின்றன
ஹாப்ஸ் உலர் கட்டிகள்
ஹாப்ஸ் மலர்கள் கொதிக்க வைக்கப்படும் நேர அளவு, அவற்றின் கசப்பின் அளவீடு (IBUs), மலர்களின் தரம் ஆகியவையே இறுதியில் பியரின் சுவை மணம் தரம் ஆகியவற்றை முடிவுசெய்கின்றது
ஹாப் பிசின்களின் பியர் நுரையை மேம்படுத்தவும் உறுதிப்படுத்தவும் உதவுகின்றன மற்றும் வொர்ட் கலவையை தெளியவைத்து அதிலிருக்கும் நுண்ணியிரிகளை நீக்குகின்றன. கோப்பைகளில் பியர் ஊற்றப்படும் போது கோப்பையின் விளிம்பில் பொங்கி நுரைத்து நிலைத்து நிற்கும் ’head’ என்னும் இயல்பையும் அதிகப்படுத்தும். பிரத்யேக வாசனையையும், விரும்பத்தக்க கசப்புச்சுவையையும் அளிக்கும் நெடுங்காலம் பியரை சேமித்துவைக்கவும், பியர் கெட்டுப்போகாமலும், புளித்து விடாமலும் பாதுகாக்கும். இதிலேயே அதிக கசப்புடைய storng hoppy beers, மிதமான கசப்புடைய weaker hoppy beer ஆகிய வேறுபடும் உள்ளது
உலகெங்கிலுமே சாகுபடி செய்யப்படும் இந்த ஹாப்ஸ் அவை வளரும் சூழலை, நிலப்பரப்பை பொருத்து வளரியல்புகளிலும் வேதிச்சேர்மாங்களிலும் நுண்ணிய மாற்றங்களை கொண்டிருக்கும்.
ஜெர்மனியின் Hallertau பகுதியில்தான் உலகின் அதிகமான ஹாப்ஸ் கொடிகள் பல்லாண்டுகளாக பயிரிடப்பட்டு வந்தன. இப்போது அதிகமாக, அதாவது உலகின் மொத்த ஹாப்ஸ் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு ஹாப்ஸ் சாகுபடி செய்யும் நாடு அமெரிக்காதான்
பியரின் கசப்புச்சுவை சர்வதேச கசப்பு அலகில் IBU (international bittering units) அளவிடப்படும் வெவ்வேறு வகையான பியர்களின் கசப்புச்சுவையை அளவிட்டு விளம்பரப்படுத்துகின்றன பல பியர் தயரிப்பு நிறுவனங்கள். IBU அலகின் வரம்பு 0-1,000 ஆகும், ஆனால் மனித சுவை ஏற்பிகள் அதிகபட்சமாக 120 IBU கசப்பை மட்டுமே ஏற்க முடியும். 20க்கும் குறைவான IBU உள்ளவைகள் மிக மிக குறைவான ஹாப்ஸ் சேர்ககப்பட்டவையென்றும், 20 லிருந்து 45 வரை IBU உள்ளவை சாதாரண கசப்பு சுவையுள்ளவையென்றும், 45க்கும் மேல் இருப்பவையே மிகத்தரமான அதிகளவு ஹாப்ஸ் சேர்க்கப்பட்டவையென்றும் பியர்கள் வகைப்படுத்தப்படுகின்றன. அரிதாக 70 கும் மேல் IBU அளவு இருக்கும் வகைகளும் தயாரிக்கப்படுகின்ற்ன
ஹாப்ஸ் பியருக்கென்றே உருவான தாவரமென்றே சொல்லலாம். பியரின் ஆன்மா என்றழைக்கப்படும் ஹாப்ஸ் மலர்களைக்குறித்த ஆய்வுகள் தொடர்ந்து பலவருடங்களாக நடந்தபடியே இருக்கின்றன. இம்மலர்களின் வேறு பல பயன்பாடுகளும் பரிசீலனையில் உள்ளன ஹாப்ஸ் ஆராய்ச்சியென்பது ஹாப்ஸின் இனப்பெருக்கம, வளர்ச்சி, அறுவடை மற்றும் உலர்த்தல், அவற்றின் வேதியியல் மற்றும் பியர் தரத்தில் அவை ஏற்படுத்தும் தாக்கம் என அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கியது, உலகெங்கிலும் உள்ள நாடுகளில் விஞ்ஞானிகள் மற்றும் நிறுவனங்களால் விரிவான சர்வதேச ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெறுகிறது.
பியரின் சுவை மேம்பாட்டிற்கான சோதனை முயற்சிகள் இன்னும் தீரவில்லை. இப்போதும் ஃபின்லாந்தின் ஒரு வகை பியரை ஜுனிபர் மரக்கிளைகளின் வழியே ஊற்றி வடியச்செய்து பின்னர் அருந்துகிறார்கள். நோக்னே (Nøgne) என்னும் நார்வீஜியாவின் புதிய வகை பியரில் ஒன்றுக்கு மூன்று வகையான ஈஸ்ட் உபயோகப்படுத்தப்பட்டு ஹாப்ஸும் தேனும் சேர்க்கப்படுகின்றது
கடந்த 100 ஆண்டுகளில் உலகளாவிய பீர் உற்பத்தி ஏழு மடங்கு அதிகரித்திருக்கின்றது. தானியங்களின் இனிப்பை மட்டுமல்லாது, வாழ்வின் கசப்பையும் பியரின் கசப்பு சமன்செய்கிறதோ என்னவோ, கடந்த நான்கு தசாப்தங்களில் (1970–2010) உலகளாவிய பியர் உற்பத்தி 630 மில்லியனிலிருந்து 1846 மில்லியன் ஹெக்டாலிட்டர்களுக்கு அதிகரித்திருக்கிறது. உலகின் அதிகம் விரும்பி அருந்தப்படும் மதுபானங்களில் முதன்மையானதாக பியர் இருப்பதற்கு காரணமாயிருக்கும் ’ஹாப்ஸ்’ தாவர உலகம் நமக்களித்திருக்கும் எண்ணற்ற பயன்களில் மற்றுமொன்று.
ஊரடங்கு காலத்தில் அமேசான் பிரைமில் பேகம் ஜான் பார்த்து முடித்தேன். காலையில் துவங்கி இடையிடையேஆன்லைன் வகுப்புக்களும் மதியம் கல்லூரியில் நடந்த ஒரு ஜூம் கூடுகையுமாய் இடைவெளிவிட்டு பார்த்ததில் என்னவோ நிறைவில்லாமல், கதையோட்டத்துடன் உணர்வுபூர்வமாக என்னை பிணைத்துகொள்ளமுடியாமல் இருந்ததால் மீண்டும் மாலை எல்லா முக்கிய வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு முழுதாக இடையூறுகளும் இடைவெளிகளும் இன்றி பார்த்தேன். என் மனதின் ரணங்கள் காய்ந்து கெட்டிப்பட்டுவிட்டதென்று நினைத்திருந்தேன் ஆனால் இன்னும் ஈரமிருக்கின்றது போல. கசிந்து அழுதே விட்டேன் இரண்டு முறை என்னையறியாமல்.
இந்திய பாகிஸ்தான் பிரிவினையை இப்படி பாலியல் தொழில் செய்யும் பெண்களின் பார்வையில் திரைப்படமாக எடுக்க முடியுமென்பதே எனக்கு பெரும் வியப்பளித்தது. வித்யாபாலன் நல்ல தேர்வு அவரில்லாவிட்டால் தபு செய்திருப்பார். வித்யாவும் தபுவும் ஒன்றேபோலானவர்கள் என்பதுதான் என் அபிப்பிராயம் எனினும் தபுவுக்கு உடல்மொழியிலும் தோற்றத்திலும் கூடுதல் முதிர்ச்சி. வித்யாவில் எங்கோ ஒரு நெகிழும் தன்மை அல்லது ஒரு மென்மை இருப்பதை நம்மால் உணர முடியும் குறிப்பாக அவரது அகலக்கண்கள். ஆண் பிள்ளைச்சட்டைபோல உடைகள், கால்களை அகலமாக வைத்து உட்காருவது, ஹூக்கா பிடிப்பது, முதுகுபிடித்து விடச்சொல்லி கட்டிலில் படுத்துக்கொண்டே பேசுவது, அறைவது, என்று எத்தனை ஆண்பிள்ளைத்தனங்களை வித்யா செய்துகொண்டிருந்தாலும் அவரது அகலக்கண்களில் பெண்மை மிளிர்கிறது. அதன் பொருட்டே அவரை இதில் தெரிவு செய்திருக்கிறார்கள் போலிருக்கிறது.
வலிமிகுந்த கதை
எனக்கு எப்போதுமே பாலியல் தொழில்செய்யும் பெண்களின் மீது கரிசனமும் பிரியமும் வாஞ்சையும் உண்டு. பாலுறவை ஒரு தொழிலாக செய்து உடலை, உயிரை, வயிற்றை, குடும்பத்தை வளர்ப்பெதென்பது எத்தனை அவலம்? எத்தனை வலி மிகுந்த வாழ்வு அவர்களுடையது இல்லையா?
நாஞ்சில் சார் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கேட்டார்,//உடலுறவு என்னும் சொல்லே அகராதியில் இல்லை மனம் பெரும் பங்காற்ற வேண்டிய ஒரு செயலை எப்படி வெறும் உடல்களின் உறவென்று சொல்ல முடியுமென்று///
இருளிலும் கண்களை மூடி சகித்துக்கொள்ளும் நிகழ்வாக இது நம்மைச்சுற்றியும் எத்தனையோ ஆயிரம் பெண்களுக்கு இருக்கிறதல்லவா?
இதிலும் உடலை ஒருவனுக்கு ஆளக்கொடுத்துவிட்டு விட்டத்தை வெறித்துக்கொண்டோ, விருப்பமானவனை நினைத்துக்கொண்டோ, ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டோ பெண்கள் படுத்துக்கொண்டிருக்கும் காட்சிகள் என்னை மிகவும் வேதனைப்படுத்தியது.
வீட்டு உதவியாளனும் பாலியல்தொழிலுக்கு ஆள் பிடித்துவருபவனாகவும் வரும் அந்த ஆணின் காதல் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது அவனும் அவளும் ஒரு மொட்டைப்பாறையில் மனதை திறந்து பகிர்ந்துகொள்ளும் காட்சி சிறப்பாக இருந்தது. உண்மையில் முதல் பாதியின் தீவிரம் இரண்டாம் பாதியிலும் இருந்திருந்தால் இந்த திரைப்படம் இன்னும் நல்ல சிறப்பான இடத்திற்கு வந்திருக்கும். அந்தப்பெண் ///மார்பும் யோனியும் எல்லாம் வெறும் சதைத்திரள், என் ஆத்மாவில் இருக்கிறது உன்மேலான காதலென்று// சொல்லும் காட்சி அத்தனை நெகிழ்சி.
அந்த மாஸ்டரை ஏன் திடீரென வில்லனாக்கினார்களென்று தெரியவில்லை அவர் குலாபோவை ஏமாற்றும் காட்சி எனக்கு மிகவும் வலித்தது. அவளை அந்த ஜட்காவோ ரிக்ஷாவோ, அதில் ஏற்றிவிட்டு ’விபச்சாரிகளுக்கு கணவர்களல்ல, வாடிக்கையாளர்கள் தான் கிடைப்பார்கள்’ என்று சொல்லும் காட்சியில் நான் அழுதேன் . அந்த காட்சியின் தீவிரத்தினால் மட்டுமல்ல, எத்தனை புத்திசாலிகளாகவும் அழகிகளாகவும் முதிர்ச்சியுடனும் இருந்தாலும் அன்பின் பேரால் பெண்கள் யுகம் யுகமாக எத்தனை எளிதாக ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறார்களென்னும் உண்மை எனக்கு வலித்ததினாலும் அழுதேன்.
அந்த பெண்ணை அங்கேயே அனுபவிக்கத்துவங்கிய அந்த ஆணுடன் அந்த வண்டி நகருகையில் குலாபோவின் அழுகை கேட்டுக்கொண்டே இருக்கும்
சமீபத்தில் நான் இப்படி மனம் கலங்கியதில்லை .
அதுபோலவே ஒரு 10 வயதுபெண்ணின் தகப்பனான காவலதிகாரியின் முன்னால் அந்த சிறுமி தன் உடைகளை களைந்துவிட்டு நிற்கும் காட்சியும்
எங்கேயோ பார்த்து போலிருக்கிறாரே என்று நினைத்துக்கொண்டே இருந்து பின்னர் கண்டுபிடித்தேன் இலா அருணை. அந்த லுங்கியும் பனியனுமாக வரும் வில்லன் சஞ்சய் பாண்டே, சஞ்சய்தத்தை போலவே தெரிந்தார் எனக்கு.
என் அபிமானத்துக்கு உரிய நஸ்ருதீன் ஷாவும் இருக்கிறார். படுக்கையில் சாய்ந்தவாறு நஸ்ருதீனும, அவரெதிரே வித்யாவும் இருக்கும் அந்த ஒரு காட்சியில் மங்கலான ஒளியில் மின்னும் ஆபரணங்களும் உடைகளும் உலோகப்பொருட்களுமாக அக்காட்சியின் பழமையை காட்டும் ஒளியமைப்பு அத்தனை பிரமாதமாக இருந்தது. வித்யாவுக்கு மட்டுமான கூடுதல் பிரகாசத்தில் முகம் ஒளிர அவர் நயந்தும் சினந்தும் கெஞ்சியும் கொஞ்சியும் பேசுவது சிறப்பு
இரண்டாம் பாதியை மிக செயற்கையான நாடகத்தன்மையுடன் எடுக்காமல் முன்பாதியைப்போலவே எடுத்திருக்கலாம் என்று ஆதங்கமாக இருந்தது. நல்லவேளையாக இது முழுவதும் உண்மைக்கதையல்லவென்பதும் ஆறுதலாக இருந்தது.
ஜெ தளத்தில் இன்று ”மீண்டும் சந்திக்கும் வரை” கட்டுரையை மீள வாசித்தேன். எனக்கு இலங்கை நாட்கள் நினைவுக்கு வந்துவிட்டது. குறிப்பாய் கொஞ்சும் இலங்கை தமிழ்
அங்கு பேசப்படும் தமிழும், கடைத்தெருவிலும் ரயில் நிலையங்களிலும் ’’புகையிரத நிலையம்‘’ போன்ற தூய தமிழிலான பெயர்ப்பலகைகளும், மக்களின் பெயர்களும் அத்தனை அழகாக இருக்கும். தென்னைமரங்களும், சிரட்டைகளில் அரைலிட்டர் பால் ஊற்றி வைக்கலாம் போல் அளவில் மிகப்பெரிதான தேங்காய்களும், நினைத்துக்கொண்டாற்போல மழையும் இளவெயிலுமாக மாறி மாறி வருவதும், எல்லா வீட்டிலும் இருக்கும் பச்சைப்பசேல் தோட்டங்களுமாக கொழும்பு எனக்கு பெரிது பண்ணப்பட்ட கேரளம் போலவே இருக்கும்.
நண்பர்களின் வீடுகளுக்கு போகையில் நின்னுட்டு போறதுதானே? என்பார்கள். ’’வெளிக்கிட்டு ‘’ பல வருடங்களுக்கு முன்னர் கேட்டது மீண்டும் பின்னர் இப்போதுதான் இக்கட்டுரையில் வாசிக்கிறேன். அவர்கள் சொல்லும் ”வந்தனன்’’ அதனை நன்றாக இருக்கும் கேட்க. அப்படி ஒரு அழகுத்தமிழை வேறெங்கும் கேட்கவே முடியாது.
நடுவில் தாமரைக் குளமுடனிருந்த உதய தென்னக்கோனின் நாலுகட்டுவீடு, மசாலா மணக்கும் மரவள்ளிக்கிழங்கு கறி, சம்பலுடன் இடியாப்பம், அசங்க ராஜபக்ச’வின் வீட்டில் இருந்த பெரும் ரம்புத்தான் மரம் அதில் பறித்து நாளெல்லாம் சாப்பிட பழங்கள், அசங்க’வுடன் சென்ற மிகப்பழமையான புத்தரின் குகைக்கோவில்கள். அசைவ உணவகம் ஒன்றில் சைவம் மட்டும் சாப்பிடும் நான் தயி்ர் சோற்றை வெங்காயம் தொட்டுக்கொண்டு சாப்பிட்டதை ஒரு அம்மாள் எழுந்தே வந்து என்னருகில் நின்று வேடிக்கை பார்த்தது, மினுங்கும் கருமையில் வாளிப்பான பெண்கள், குதிகால் வரை நீண்டிருக்கும் அவர்களின் அடர்ந்த கூந்தல், இந்தியாவின் நைட்டியைப் போலவே பூப்பூவாக போட்டிருக்கும் பல நிற லுங்கியுடனேயே ஆண்கள் அலுவலகம் செல்வது, அங்கு கொடுக்கப்பட்டிருந்த வீட்டருகே இருந்த பெரும் ஏரி , அதன் அருகிருந்த மரக்கூட்டங்களில் எப்போதும் கேட்கும் பறவைகளின் கூச்சல், சந்தன நிற மலர்கள் செறிந்திருந்த ப்ளுமீரியா மரங்களின் அடியில் அமர்ந்து வாசித்த ஏராளமான புத்தகங்கள், இன்னும் மனதில் சுவைத்துக்கொண்டிருக்கும் வட்டாலப்பமுமாக கட்டுரை இலங்கைக்கே என்னை மீண்டும் கொண்டுபோனது.
பல் வைக்கப்பட்டிருக்கும் கருவறை
கொழும்பு வீட்டின் வாசலில் மாலைநேரங்களில் சிறு மணியொலி எழுப்பியபடி ஒரு பேக்கரிபொருட்களை விற்கும் வண்டி வரும். சூடான கேக்குகளும் பன்களும் ரொட்டிகளும் வாசனையாக புத்தம் புதியதாக கிடைக்கும். ஆர்வமாக வாங்கி மூவருமாக சாப்பிடுவோம். காரை வழியெல்லாம் நிறுத்தி நிறுத்தி மக்கள் இனிப்புக்களை வழங்கிக்கொண்டேயிருந்த ஒரு புத்த பூர்ணிமா நாளும், வெண்தாமரைகளுடன் சென்றிருந்த கண்டியின்புத்தரின் பல் இருந்த ஒரு கோவிலும் அதன் அமைதியும் அவ்வப்போது நினைவுக்கு வரும்.
கண்டி புத்தரின் பல் கோவில்
இலங்கை மக்களின் பெயர்கள் எனக்கு மிகவும் பிடிக்கும. சரண் அப்பா கொழும்பில் வேலைக்கு சேர்ந்த புதிதில் அடிக்கடி தொலைபேசியில் ”நானும் மஞ்சுளாவும் போனோம், வந்தோம், மஞ்சுளாவோடுதான் மதியம் சாப்பிட்டேன்” இப்படி. விகல்பமாய் நினைக்காமல் அங்கெல்லாம் அப்படித்தான் போல என்றெண்ணிக்கொள்வேன். குர்கானில் இவர் பணி புரிந்த நாட்களில் ஷேர் ஆட்டோவில் பெண்கள் இவர் மடியிலேயே உட்கார்ந்து வந்தெதெல்லாம் பார்த்திருக்கிறேனே! அப்படி நான் போகாத ஊர்களின் பழக்கங்களில் ஒன்றாக இருக்குமென நினைத்துக்கொள்வேன்
நீல அல்லி
எனினும் ஒருமுறை தானும் மஞ்சுளாவும் நீச்சல் குளத்தில் இருக்கறோம் என்ற போது கொஞ்சம் திடுக்கிட்டேன். அப்போதும் குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த தேவியை படித்த தேவி கடிந்துகொண்டாள், ”ஏன் இப்படி பத்தாம் பசலித்தனமாக இருக்கிறாய்” என்று
பின்னர் முதல்முறையாக இ்லங்கை சென்று பண்டர நாயக சர்வதேச விமான நிலையத்தில் மகன்களுடன் காத்திருக்கையில் எங்களை வரவேற்க அப்போதைய தேசிய மலரான நீலஅல்லி மலர்கொத்துக்களோடு காத்திருந்தார் அவரின் நண்பர் “மஞ்சுள ரண துங்க ”. இப்போது இலங்கையின் தேசிய மலர் அல்லிதான், நீல அல்லி அல்ல.அவரின் மலையொன்றின் மீது அமைந்திருந்த அழகிய வீடும், வீட்டுவாசலில் செறிந்த கனிகளுடன் நின்ற எலுமிச்சைமரமும், காம்பஸ் வைத்து வரைந்தது போல வட்ட முகத்துடன் ஒரு சிறுமியைபோலிருந்த அவர் மனைவியையும் இப்போதுதான் சந்தித்ததுபோல நினவிலிருக்கின்றது.
அங்கிருந்த 6 வருடங்களில் யாழ்ப்பாணம், ஜாஃப்னா, நுவரேலியா எல்லாம் பலமுறை சென்றிருக்கிறேன் எனினும் கண்டியை மறக்கவே முடியாது. ”தி்லங்க” என்னும் ஒரு மரவிடுதியில் அதிகாலை ஜன்னலை திறந்ததும் கண்ணில் பட்ட மலைமுகடுகளும் ஏரியும், விடுதியிலிருந்த மாபெரும் நாகலிங்க மரமும் , இரண்டு உள்ளங்கைகள் அளவிற்கு பூத்திருந்த மலர்களும், மனதை நிறைத்த அவற்றின் சுகந்தமுமாக, அங்கேயே அக்கணத்தின் நிறைவில் செத்துப்போய்விடலாம் என்றேயிருந்தது. தேவதைக்கதைகளில் வருவது போன்ற ஒரு நகரமது. இப்போதும் நாகலிங்கமலர்களின் நறுமணம் என்னை கண்டிக்கு அழைத்துச்செல்லும்.
1500 ஏக்கரில் பரந்து விரிந்த பசும்புல்வெளிகளுடன் இருந்த நுவரேலியாவின் அம்பேவல மாபெரும் மாட்டுப்பண்ணையும், சீஸ்தொழிற்சாலையும் அங்கு அருந்திய மிகச்சுவையான குளிர்ந்த பாலும் அடிக்கடி நினைவில் வந்து ஏக்கமுண்டாக்கும்.
நான் செல்லவிரும்பும் நாடுகளின் பட்டியல் நீளமாக காத்திருக்கின்றது. ஆனால் இனி சென்றால் மீள வராமல் அங்கே இருந்துவிட நினைக்கும் நாடென்றால் அது இலங்கைதான்.
“பொது விதிமுறை, ஒழுக்கம் மற்றும் பொது நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் உள்ளடக்கங்கள் அமைந்துள்ள’’தாகக்கூறி மலேசியா அரசின், 1984 ஆம் ஆண்டு அச்சகங்கள் மற்றும் வெளியீடுகள் சட்டம் செக்ஷன் 7(1) கீழ், நவீன் எழுதிய ‘பேய்ச்சி’ நாவலுக்கு மலேசிய உள்துறை அமைச்சு தடை விதித்திருக்கிறது.நாவலில் ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயர் சொல்லப்படுகிறது. பாலியல் சொற்களும், பாலியல் காட்சிகளும் நாவலில் உள்ளன. இவை வரும் தலைமுறையை சீர்குலைக்கும் என காரணங்கள் சொல்லப்படுகின்றது. இந்த நூலோடு சேர்த்து, ‘Gay is OK! A Christian Perspective’ என்னும் நாவலும் தடைசெய்யப்பட்டிருக்கிறது .
புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் வாழ்வைச்சொல்லும் பேய்ச்சி கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. தமிழக எழுத்தாளர்கள் பேய்ச்சி நாவலுக்கு எதிரான தடையைக் கண்டித்திருக்கிறார்கள். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கமும் இந்தத் தடையைக் கண்டித்துள்ளது. புதிய இலக்கிய சூழலை ஆரோக்கியமாக உருவாக்க முயல்வதற்காகக் கிடைத்த பரிசாகவே இந்தத் தடையைக் கருதுகிறேன்” என்கிறார் நவீன்.
சென்ற வருடம் ஏறக்குறைய இதே சமயத்திலான பேய்ச்சி குறித்தான அருண்மொழி ஜெயமோகன் அவர்களின் 45 நிமிடத்திற்கும் மேலான உரையை காணொளியில் முழுவதுமாக கேட்டேன். அருமையாக இருந்தது. நாவலின் உள்ளடக்கம் முழுவதையும், நாற்றுப்பரப்பின் மீது அலைஅலையென தடவிச்செல்லும் காற்றைபோல மெல்ல வருடிச்செல்கிறார். ஆனால் முழுக்கக்கேட்டதும் இனி வாசிக்கவேண்டியதில்லை என்னும் உணர்வு தோன்றாமல் அதை அவர் சுவைபடகூறும் விதத்தினாலேயே பேய்ச்சியை உடன் வாசிக்கவேண்டுமென்று தோன்றிவிட்டது.
அருணா முழு உரையையும் நினைவிலிருந்தே பேசுவது ஜெ வின் இப்படியான உரைகளை நினைவூட்டியது. அவரும் ஒரு முறைகூட குறிப்பெழுதிய துண்டுக் காகிதங்களை வைத்துக்கொண்டதும் பார்த்ததுமில்லை. இறுதி 5 நிமிடத்தில் ஒரே ஒருமுறை கண்ணாடியை போட்டுக்கொண்டு குறிப்பை பார்க்க எத்தனித்து பின்னர் அவ்வெண்ணத்தை புறக்கணித்து மீண்டும் உளளத்திலிருந்தே சொல்லத்துவங்குகிறார்
பேய்ச்சியை அவர் விவரித்தவிதம் அழகோ அழகு. சின்னப்பிள்ளைகள் பள்ளியில் கதையையோ பாடலையோ சொல்லுவதுபோல அத்தனை அபிநயித்து லயித்து சொல்லிக்கொண்டிருந்தார்.
அரைமணிநேரத்திற்கு பின்னர் கொஞ்சம் களைப்படைந்து மூச்சுவாங்கினாலும் கதை உருவாக்கிய மகிழ்ச்சியும் உணர்வெழுச்சியும் செலுத்த தொடர்ந்து பேசிக்கொண்டேஇருக்கிறார்.
கதையை முழுதாக உள்வாங்கிக்கொண்டு விரிவாக அவற்றைக்குறித்து பேசப்பட்ட பல உரைகளை கேட்டிருக்கிறேன் ஆனால் அருணா பேய்ச்சி கதைக்களத்துக்குள் நின்று, கதையுடன் இரண்டறக்கலந்து கதையை சொல்லிக்கொண்டிருந்தார். அந்த போடியத்தையே பேய்ச்சி கதையின் களமாக்கி, அதற்குள்ளேயே அவரின் அழகிய கையசைவுகளால் காட்சிகளை விவரிக்கிறார். தூரம் என்பதற்கு தொலைவில் கையைக்காட்டி, கிணறு என்று சொல்லுகையில் விரல்களால் ஒரு சிறு வட்டம் வரைந்து அக்கிணற்றைக் காட்டி, அங்கிருந்து இங்கிருந்து கொண்டுவந்ததையெல்லாம் அப்படி அப்படியே கைகளைக்கொண்டு காட்டிக்காட்டி விவரிப்பது அழகு.
அங்கே ஓடை அங்கே மரங்கள் இங்கே கோவில் என்று அருணாவின் கைகள் சுட்டிக்காட்டிய இடங்களிலெல்லாம் என் மனம் ஓடிஓடிச்சென்றுகொண்டே இருந்தது. அவர் கதைக்குள்ளே சென்று சொல்வதல்லாமல் கேட்கும் என்னையும் கையைப்பிடித்து உள்ளே கூட்டிச்சென்று கதையை, அக்கதை மாந்தர்களை, நிகழ்வுகளை சொல்லுகிறார்.
அபாரமான நினைவாற்றல் அருணாவுக்கு. ஏராளமான கதாபாத்திரங்களின் பெயர்களை, அவர்கள் எங்கிருந்து வந்தார்களென்பதை அவர்களின் இயல்புகளை வரிசையாக சொல்லிக்கொண்டே போகிறார், கதையை மூன்று முக்கிய சரடுகளாக பிரித்துச் சொல்லி பின் உப சரடுடகளுடன் அவை பின்னப்பட்டதை சொன்னது மிகவும் சிறப்பு, இனி பேய்ச்சியை வாசிக்கையில் இவ்விளக்கம் பெரும் உதவியாக இருக்கும். எல்லா நாவல்களையும் சில முறை வாசிக்கும் வழமை உள்ளவள் நான். பேய்ச்சியை அப்படியல்லாது ஒருமுறை வாசித்தாலே போதுமென்னும் அளவுக்கு அருணா விவரிப்பில் கதைகுறித்தான தெளிவான ஒரு முன்கட்டமைப்பு மனதினுள் உருவாகிவிட்டிருக்கிறது.
அவ்வபோது அடுத்து என்ன சொல்வதென்று கொஞ்சமே கொஞ்சம் தயங்கி பின்னர் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புடவைகளில் ஒவ்வொன்றாய் தொட்டுத்தொட்டுப்பார்த்து வேண்டியதை தெரிவு செய்து உருவி எடுப்பதைப்போல ஒவ்வொரு சம்பவமாய் நினைவின் அடுக்குகளிலிருந்து தேடிஎடுத்து முகம் மலர சொல்லுகையில் முகம் சாய்ந்து, கருமணிகள் விழியின் ஓரத்திற்கு சென்று கழுவிய புறாமுட்டைகள் போல அவரின் அகலக்கண்கள் இன்னும் பெரிதாக மலர்கிறது.
கவண்கல்லில் ஆங்ஸாவையே சிறுவன் அடித்ததை சொல்லுகையில் அதை அவரே செய்துவிட்டதுபோல மெல்ல கிளுகிளுத்து சிரிக்கிறார். மஞ்சள் பறவை ரத்தம் சிந்தி மரணித்ததை சொல்லுகையில் குரல் இறங்கி முகம் மாறுபட்டு அச்சோகத்தை கேட்பவர்களுக்கும் கடத்துகிறார். அப்போய் குறித்தும் நாய்க்குட்டியை குறித்தும் சொல்லுகையில் அத்தனை குதுகாலம் அவரின் உடல்மொழியில். அப்போய் போன்ற சிறுவர்களின் கதாபாத்திரங்களை சொல்லுகையில் அருணாவின் வாசிப்பின், அறிவின் விசாலம் தெரிகின்றது பதேர் பாஞ்சாலியிலிருந்து நடாஷாவின் தம்பி வரை அடுத்தடுத்து சொல்லுகிறார்.
அதுபோலவே புதிய நிலத்தில் தங்களைபொருத்திக்கொள்ள முடியாமல், அப்பதற்றத்தில் குடிக்குள் மூழ்கும் ஆண்களை நீரில் வேரின்றி மிதக்கும் பாசிக்கும், ஆண்கள் அப்படியிருப்பதால், உளவிசை கூடிய பெண்கள் வேர்பிடித்த ஆல் போல அங்கு ஊன்றி வளரத்துவங்குகிறார்கள் என்று ஒப்பிட்டது வெகு சிறப்பு.
அருணாவின் உள்ளம் முழுக்க கதைக்களத்துக்குள் முழுமையாக ஒன்றியிருப்பதை கேட்பவர்கள் உணரமுடிகின்றது. ஈரமூக்கை கைகளில் வைக்கும் நாய்க்குட்டியை சிறுவன் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு ஓடிச்செல்லுவதை சொல்கையில் அருணா மேடையிலிருந்து ஓடிசெல்லாமலிருந்ததுதான் வியப்பு. அத்தனை அர்ப்பணிப்புடன், ஆர்வத்துடன் கதையை சொல்லுகிறார்
அருணா பேய்ச்சியை அடுக்கடுக்காக பிரித்து, அழகாய் கண் முன்னே காட்டுகையில் ஒரு மலரை அதன் பாகங்களை. ஆய்வுக்கூடத்தில் முதலில் புல்லிவட்ட இதழ்களை, பின்னர் அல்லிவட்ட இதழ்களை, பின்னர் சூலகம், மகரந்த காம்புகள் என ஒவ்வொன்றாக பிரித்து பிரித்து மாணவர்களுக்கு விளக்குவதுடன் ஒப்பிட்டுக்கொண்டேன்
கதையை அதில் கூறப்பட்டிருக்கும் மக்களை நிலப்பரப்புக்களை மொழியை பின்னர் கதாபாத்திரங்களின் இயல்பை என ஒவ்வொன்றாக சொல்லிச்சென்றது மிக நன்றாக இருந்தது
கோழிகள், விலங்குகள், யட்சி ராஜநாகம் தாவரங்கள், மூலிகைகள் என கலந்துவரும் பேய்ச்சியை உடன் வாசிக்கவேண்டும் என்னும் பெரும் விருப்பத்தை இந்த உரை ஏற்படுத்தியிருக்கிறது. உடனே வாங்கி வாசிக்கத் துவங்கிவிட்டிருக்கிறேன். எப்போதும் பொருத்தமாக பாந்தமாகவெ உடையணீயும் அருணா இந்த உரையின் போதும் அணிந்திருந்த ஆழ்நீலத்தில் இளம்பச்சை சரிகைக்கரையிட்ட புடவையும் அவரின் கண்ணியமான தோற்றத்தை இன்னும் கூட்டிக்காட்டியது.
இப்படி வரிவரியாக ஆழ்ந்து வாசித்து உணர்வெழுச்சியுடன் மணிக்கணக்காக ஒரு கதையை பேசமுடியுமென்னும் அளவிற்கு ஒருவர், ஒரே ஒருவர் வாசிப்பார்களேயானால் அதன் பொருட்டு உயிரைக்கொடுத்தாவது ஒரு கதையை எழுதிவிடவேண்டும் என்று எனக்கே கூட தோன்றியது ):