“பொது விதிமுறை, ஒழுக்கம் மற்றும் பொது நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் உள்ளடக்கங்கள் அமைந்துள்ள’’தாகக்கூறி மலேசியா அரசின், 1984 ஆம் ஆண்டு அச்சகங்கள் மற்றும் வெளியீடுகள் சட்டம் செக்‌ஷன் 7(1) கீழ், நவீன் எழுதிய ‘பேய்ச்சி’ நாவலுக்கு மலேசிய உள்துறை அமைச்சு தடை விதித்திருக்கிறது.நாவலில் ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயர் சொல்லப்படுகிறது. பாலியல் சொற்களும், பாலியல் காட்சிகளும் நாவலில் உள்ளன. இவை வரும் தலைமுறையை சீர்குலைக்கும் என காரணங்கள் சொல்லப்படுகின்றது. இந்த நூலோடு சேர்த்து, ‘Gay is OK! A Christian Perspective’ என்னும் நாவலும் தடைசெய்யப்பட்டிருக்கிறது .

புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் வாழ்வைச்சொல்லும் பேய்ச்சி கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. தமிழக எழுத்தாளர்கள் பேய்ச்சி நாவலுக்கு எதிரான தடையைக் கண்டித்திருக்கிறார்கள். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கமும் இந்தத் தடையைக் கண்டித்துள்ளது. புதிய இலக்கிய சூழலை ஆரோக்கியமாக உருவாக்க முயல்வதற்காகக் கிடைத்த பரிசாகவே இந்தத் தடையைக் கருதுகிறேன்” என்கிறார் நவீன்.

சென்ற வருடம் ஏறக்குறைய இதே சமயத்திலான பேய்ச்சி குறித்தான அருண்மொழி ஜெயமோகன் அவர்களின் 45 நிமிடத்திற்கும் மேலான உரையை காணொளியில்  முழுவதுமாக கேட்டேன். அருமையாக இருந்தது. நாவலின் உள்ளடக்கம் முழுவதையும், நாற்றுப்பரப்பின் மீது அலைஅலையென தடவிச்செல்லும் காற்றைபோல மெல்ல  வருடிச்செல்கிறார். ஆனால்  முழுக்கக்கேட்டதும் இனி வாசிக்கவேண்டியதில்லை என்னும் உணர்வு தோன்றாமல் அதை அவர் சுவைபடகூறும் விதத்தினாலேயே பேய்ச்சியை உடன் வாசிக்கவேண்டுமென்று தோன்றிவிட்டது.

அருணா முழு உரையையும் நினைவிலிருந்தே பேசுவது ஜெ வின் இப்படியான உரைகளை நினைவூட்டியது. அவரும் ஒரு முறைகூட குறிப்பெழுதிய துண்டுக் காகிதங்களை  வைத்துக்கொண்டதும் பார்த்ததுமில்லை. இறுதி 5 நிமிடத்தில் ஒரே ஒருமுறை கண்ணாடியை போட்டுக்கொண்டு  குறிப்பை  பார்க்க எத்தனித்து பின்னர் அவ்வெண்ணத்தை புறக்கணித்து மீண்டும் உளளத்திலிருந்தே சொல்லத்துவங்குகிறார்

பேய்ச்சியை அவர் விவரித்தவிதம் அழகோ அழகு. சின்னப்பிள்ளைகள் பள்ளியில் கதையையோ பாடலையோ சொல்லுவதுபோல அத்தனை அபிநயித்து லயித்து சொல்லிக்கொண்டிருந்தார்.

அரைமணிநேரத்திற்கு பின்னர் கொஞ்சம் களைப்படைந்து மூச்சுவாங்கினாலும் கதை உருவாக்கிய மகிழ்ச்சியும் உணர்வெழுச்சியும் செலுத்த தொடர்ந்து பேசிக்கொண்டேஇருக்கிறார்.

கதையை முழுதாக உள்வாங்கிக்கொண்டு  விரிவாக அவற்றைக்குறித்து பேசப்பட்ட பல உரைகளை கேட்டிருக்கிறேன் ஆனால் அருணா பேய்ச்சி கதைக்களத்துக்குள் நின்று, கதையுடன் இரண்டறக்கலந்து கதையை  சொல்லிக்கொண்டிருந்தார். அந்த போடியத்தையே பேய்ச்சி கதையின் களமாக்கி, அதற்குள்ளேயே அவரின் அழகிய கையசைவுகளால் காட்சிகளை விவரிக்கிறார். தூரம் என்பதற்கு தொலைவில் கையைக்காட்டி, கிணறு என்று சொல்லுகையில் விரல்களால் ஒரு சிறு வட்டம் வரைந்து அக்கிணற்றைக் காட்டி, அங்கிருந்து இங்கிருந்து கொண்டுவந்ததையெல்லாம் அப்படி அப்படியே கைகளைக்கொண்டு காட்டிக்காட்டி விவரிப்பது அழகு.

அங்கே ஓடை அங்கே மரங்கள் இங்கே கோவில் என்று அருணாவின் கைகள் சுட்டிக்காட்டிய இடங்களிலெல்லாம் என் மனம் ஓடிஓடிச்சென்றுகொண்டே இருந்தது. அவர் கதைக்குள்ளே சென்று சொல்வதல்லாமல் கேட்கும் என்னையும் கையைப்பிடித்து உள்ளே கூட்டிச்சென்று கதையை, அக்கதை மாந்தர்களை, நிகழ்வுகளை   சொல்லுகிறார்.

அபாரமான நினைவாற்றல் அருணாவுக்கு. ஏராளமான கதாபாத்திரங்களின் பெயர்களை, அவர்கள் எங்கிருந்து வந்தார்களென்பதை  அவர்களின் இயல்புகளை  வரிசையாக சொல்லிக்கொண்டே போகிறார், கதையை மூன்று முக்கிய சரடுகளாக பிரித்துச் சொல்லி பின் உப சரடுடகளுடன் அவை பின்னப்பட்டதை சொன்னது மிகவும் சிறப்பு, இனி  பேய்ச்சியை வாசிக்கையில் இவ்விளக்கம் பெரும் உதவியாக இருக்கும். எல்லா நாவல்களையும் சில முறை வாசிக்கும் வழமை உள்ளவள் நான். பேய்ச்சியை அப்படியல்லாது ஒருமுறை வாசித்தாலே போதுமென்னும் அளவுக்கு அருணா விவரிப்பில் கதைகுறித்தான தெளிவான ஒரு முன்கட்டமைப்பு மனதினுள் உருவாகிவிட்டிருக்கிறது.

அவ்வபோது அடுத்து என்ன சொல்வதென்று கொஞ்சமே கொஞ்சம் தயங்கி பின்னர் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புடவைகளில் ஒவ்வொன்றாய் தொட்டுத்தொட்டுப்பார்த்து  வேண்டியதை தெரிவு செய்து உருவி எடுப்பதைப்போல ஒவ்வொரு சம்பவமாய் நினைவின் அடுக்குகளிலிருந்து தேடிஎடுத்து முகம் மலர சொல்லுகையில் முகம் சாய்ந்து,  கருமணிகள் விழியின் ஓரத்திற்கு சென்று கழுவிய  புறாமுட்டைகள் போல அவரின் அகலக்கண்கள் இன்னும் பெரிதாக மலர்கிறது.

கவண்கல்லில் ஆங்ஸாவையே சிறுவன் அடித்ததை சொல்லுகையில் அதை அவரே செய்துவிட்டதுபோல  மெல்ல கிளுகிளுத்து சிரிக்கிறார். மஞ்சள் பறவை ரத்தம் சிந்தி மரணித்ததை சொல்லுகையில் குரல் இறங்கி முகம் மாறுபட்டு அச்சோகத்தை கேட்பவர்களுக்கும் கடத்துகிறார். அப்போய் குறித்தும் நாய்க்குட்டியை குறித்தும் சொல்லுகையில் அத்தனை குதுகாலம் அவரின் உடல்மொழியில். அப்போய் போன்ற சிறுவர்களின் கதாபாத்திரங்களை சொல்லுகையில் அருணாவின் வாசிப்பின், அறிவின் விசாலம் தெரிகின்றது பதேர் பாஞ்சாலியிலிருந்து நடாஷாவின் தம்பி வரை அடுத்தடுத்து சொல்லுகிறார்.

அதுபோலவே புதிய நிலத்தில் தங்களைபொருத்திக்கொள்ள முடியாமல், அப்பதற்றத்தில் குடிக்குள் மூழ்கும் ஆண்களை நீரில் வேரின்றி மிதக்கும் பாசிக்கும், ஆண்கள் அப்படியிருப்பதால், உளவிசை கூடிய பெண்கள் வேர்பிடித்த ஆல் போல அங்கு ஊன்றி வளரத்துவங்குகிறார்கள் என்று ஒப்பிட்டது வெகு சிறப்பு.

அருணாவின் உள்ளம் முழுக்க கதைக்களத்துக்குள் முழுமையாக ஒன்றியிருப்பதை கேட்பவர்கள் உணரமுடிகின்றது. ஈரமூக்கை கைகளில் வைக்கும் நாய்க்குட்டியை சிறுவன் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு ஓடிச்செல்லுவதை சொல்கையில் அருணா மேடையிலிருந்து ஓடிசெல்லாமலிருந்ததுதான்  வியப்பு. அத்தனை அர்ப்பணிப்புடன், ஆர்வத்துடன் கதையை சொல்லுகிறார்

அருணா பேய்ச்சியை அடுக்கடுக்காக பிரித்து, அழகாய் கண் முன்னே காட்டுகையில் ஒரு மலரை அதன் பாகங்களை. ஆய்வுக்கூடத்தில் முதலில் புல்லிவட்ட இதழ்களை, பின்னர் அல்லிவட்ட இதழ்களை, பின்னர் சூலகம், மகரந்த காம்புகள் என ஒவ்வொன்றாக பிரித்து பிரித்து மாணவர்களுக்கு விளக்குவதுடன்  ஒப்பிட்டுக்கொண்டேன்

கதையை அதில் கூறப்பட்டிருக்கும் மக்களை நிலப்பரப்புக்களை மொழியை பின்னர் கதாபாத்திரங்களின் இயல்பை என ஒவ்வொன்றாக சொல்லிச்சென்றது மிக நன்றாக இருந்தது

 கோழிகள், விலங்குகள், யட்சி ராஜநாகம் தாவரங்கள், மூலிகைகள் என கலந்துவரும் பேய்ச்சியை உடன் வாசிக்கவேண்டும் என்னும் பெரும் விருப்பத்தை இந்த உரை ஏற்படுத்தியிருக்கிறது. உடனே வாங்கி வாசிக்கத் துவங்கிவிட்டிருக்கிறேன். எப்போதும் பொருத்தமாக பாந்தமாகவெ உடையணீயும் அருணா இந்த உரையின் போதும் அணிந்திருந்த ஆழ்நீலத்தில் இளம்பச்சை சரிகைக்கரையிட்ட புடவையும் அவரின் கண்ணியமான தோற்றத்தை இன்னும் கூட்டிக்காட்டியது.

 இப்படி வரிவரியாக ஆழ்ந்து வாசித்து உணர்வெழுச்சியுடன் மணிக்கணக்காக  ஒரு கதையை பேசமுடியுமென்னும் அளவிற்கு ஒருவர், ஒரே ஒருவர் வாசிப்பார்களேயானால் அதன் பொருட்டு உயிரைக்கொடுத்தாவது ஒரு கதையை எழுதிவிடவேண்டும் என்று எனக்கே கூட தோன்றியது ):

உரையை கேட்க ; https://www.youtube.com/watch?v=5QttdXnHZ9w