ஜெ தளத்தில் இன்று ”மீண்டும் சந்திக்கும் வரை” கட்டுரையை மீள வாசித்தேன். எனக்கு இலங்கை நாட்கள் நினைவுக்கு வந்துவிட்டது. குறிப்பாய் கொஞ்சும் இலங்கை தமிழ்

அங்கு பேசப்படும் தமிழும், கடைத்தெருவிலும் ரயில் நிலையங்களிலும் ’’புகையிரத நிலையம்‘’ போன்ற  தூய தமிழிலான பெயர்ப்பலகைகளும், மக்களின் பெயர்களும் அத்தனை அழகாக இருக்கும்.  தென்னைமரங்களும், சிரட்டைகளில் அரைலிட்டர் பால் ஊற்றி வைக்கலாம் போல் அளவில் மிகப்பெரிதான தேங்காய்களும்,  நினைத்துக்கொண்டாற்போல மழையும் இளவெயிலுமாக மாறி மாறி வருவதும், எல்லா வீட்டிலும் இருக்கும் பச்சைப்பசேல் தோட்டங்களுமாக கொழும்பு எனக்கு பெரிது பண்ணப்பட்ட கேரளம் போலவே இருக்கும்.

நண்பர்களின் வீடுகளுக்கு போகையில் நின்னுட்டு போறதுதானே? என்பார்கள். ’’வெளிக்கிட்டு ‘’ பல வருடங்களுக்கு  முன்னர் கேட்டது மீண்டும் பின்னர் இப்போதுதான் இக்கட்டுரையில் வாசிக்கிறேன். அவர்கள் சொல்லும் ”வந்தனன்’’ அதனை நன்றாக இருக்கும் கேட்க. அப்படி ஒரு அழகுத்தமிழை வேறெங்கும் கேட்கவே முடியாது.

நடுவில் தாமரைக் குளமுடனிருந்த உதய தென்னக்கோனின் நாலுகட்டுவீடு, மசாலா மணக்கும் மரவள்ளிக்கிழங்கு கறி, சம்பலுடன் இடியாப்பம், அசங்க ராஜபக்ச’வின் வீட்டில் இருந்த பெரும் ரம்புத்தான் மரம் அதில் பறித்து நாளெல்லாம் சாப்பிட பழங்கள், அசங்க’வுடன் சென்ற மிகப்பழமையான புத்தரின் குகைக்கோவில்கள். அசைவ உணவகம் ஒன்றில் சைவம் மட்டும் சாப்பிடும் நான் தயி்ர் சோற்றை வெங்காயம் தொட்டுக்கொண்டு சாப்பிட்டதை  ஒரு அம்மாள் எழுந்தே வந்து என்னருகில் நின்று  வேடிக்கை பார்த்தது, மினுங்கும் கருமையில் வாளிப்பான பெண்கள், குதிகால் வரை நீண்டிருக்கும் அவர்களின் அடர்ந்த கூந்தல், இந்தியாவின்  நைட்டியைப் போலவே பூப்பூவாக போட்டிருக்கும் பல நிற லுங்கியுடனேயே ஆண்கள் அலுவலகம் செல்வது, அங்கு கொடுக்கப்பட்டிருந்த வீட்டருகே இருந்த பெரும் ஏரி , அதன் அருகிருந்த மரக்கூட்டங்களில் எப்போதும் கேட்கும் பறவைகளின் கூச்சல்,   சந்தன நிற மலர்கள் செறிந்திருந்த ப்ளுமீரியா மரங்களின் அடியில் அமர்ந்து வாசித்த ஏராளமான புத்தகங்கள், இன்னும் மனதில்  சுவைத்துக்கொண்டிருக்கும் வட்டாலப்பமுமாக கட்டுரை இலங்கைக்கே என்னை மீண்டும் கொண்டுபோனது.

பல் வைக்கப்பட்டிருக்கும் கருவறை

கொழும்பு வீட்டின் வாசலில் மாலைநேரங்களில் சிறு மணியொலி எழுப்பியபடி ஒரு பேக்கரிபொருட்களை விற்கும் வண்டி வரும். சூடான கேக்குகளும் பன்களும் ரொட்டிகளும் வாசனையாக புத்தம் புதியதாக கிடைக்கும். ஆர்வமாக வாங்கி மூவருமாக சாப்பிடுவோம். காரை வழியெல்லாம் நிறுத்தி நிறுத்தி மக்கள் இனிப்புக்களை வழங்கிக்கொண்டேயிருந்த ஒரு புத்த பூர்ணிமா நாளும், வெண்தாமரைகளுடன் சென்றிருந்த கண்டியின்புத்தரின் பல் இருந்த ஒரு கோவிலும் அதன் அமைதியும் அவ்வப்போது நினைவுக்கு வரும்.

கண்டி புத்தரின் பல் கோவில்

இலங்கை மக்களின் பெயர்கள் எனக்கு மிகவும் பிடிக்கும. சரண் அப்பா  கொழும்பில் வேலைக்கு சேர்ந்த புதிதில் அடிக்கடி தொலைபேசியில் ”நானும் மஞ்சுளாவும் போனோம், வந்தோம், மஞ்சுளாவோடுதான் மதியம் சாப்பிட்டேன்” இப்படி. விகல்பமாய் நினைக்காமல் அங்கெல்லாம் அப்படித்தான் போல என்றெண்ணிக்கொள்வேன். குர்கானில் இவர் பணி புரிந்த நாட்களில் ஷேர் ஆட்டோவில் பெண்கள் இவர் மடியிலேயே உட்கார்ந்து வந்தெதெல்லாம் பார்த்திருக்கிறேனே! அப்படி நான் போகாத ஊர்களின் பழக்கங்களில் ஒன்றாக இருக்குமென நினைத்துக்கொள்வேன்

நீல அல்லி

எனினும் ஒருமுறை தானும் மஞ்சுளாவும் நீச்சல் குளத்தில் இருக்கறோம் என்ற போது கொஞ்சம் திடுக்கிட்டேன். அப்போதும் குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த தேவியை  படித்த  தேவி கடிந்துகொண்டாள், ”ஏன் இப்படி பத்தாம் பசலித்தனமாக இருக்கிறாய்” என்று

பின்னர் முதல்முறையாக இ்லங்கை சென்று பண்டர நாயக சர்வதேச விமான நிலையத்தில்  மகன்களுடன் காத்திருக்கையில் எங்களை வரவேற்க அப்போதைய தேசிய மலரான நீலஅல்லி மலர்கொத்துக்களோடு காத்திருந்தார்  அவரின் நண்பர் “மஞ்சுள ரண துங்க ”. இப்போது இலங்கையின் தேசிய மலர் அல்லிதான், நீல அல்லி அல்ல.அவரின் மலையொன்றின் மீது அமைந்திருந்த அழகிய வீடும், வீட்டுவாசலில் செறிந்த கனிகளுடன் நின்ற எலுமிச்சைமரமும், காம்பஸ் வைத்து வரைந்தது போல வட்ட முகத்துடன் ஒரு சிறுமியைபோலிருந்த அவர் மனைவியையும் இப்போதுதான் சந்தித்ததுபோல நினவிலிருக்கின்றது.

அங்கிருந்த 6 வருடங்களில் யாழ்ப்பாணம், ஜாஃப்னா, நுவரேலியா எல்லாம் பலமுறை சென்றிருக்கிறேன் எனினும் கண்டியை மறக்கவே முடியாது. ”தி்லங்க” என்னும் ஒரு மரவிடுதியில் அதிகாலை ஜன்னலை திறந்ததும் கண்ணில் பட்ட மலைமுகடுகளும் ஏரியும், விடுதியிலிருந்த மாபெரும் நாகலிங்க மரமும் , இரண்டு உள்ளங்கைகள் அளவிற்கு பூத்திருந்த மலர்களும், மனதை நிறைத்த அவற்றின் சுகந்தமுமாக, அங்கேயே அக்கணத்தின் நிறைவில் செத்துப்போய்விடலாம் என்றேயிருந்தது. தேவதைக்கதைகளில் வருவது போன்ற ஒரு நகரமது. இப்போதும் நாகலிங்கமலர்களின் நறுமணம்  என்னை கண்டிக்கு அழைத்துச்செல்லும்.

1500 ஏக்கரில் பரந்து விரிந்த பசும்புல்வெளிகளுடன் இருந்த நுவரேலியாவின் அம்பேவல மாபெரும் மாட்டுப்பண்ணையும், சீஸ்தொழிற்சாலையும் அங்கு அருந்திய மிகச்சுவையான குளிர்ந்த பாலும் அடிக்கடி நினைவில் வந்து ஏக்கமுண்டாக்கும்.

நான் செல்லவிரும்பும் நாடுகளின் பட்டியல் நீளமாக காத்திருக்கின்றது. ஆனால் இனி சென்றால் மீள வராமல் அங்கே இருந்துவிட நினைக்கும் நாடென்றால் அது இலங்கைதான்.

அம்பேவல பண்ணை