அழும் வில்லோ மரம் ஆங்கிலப் பெயர்: ‘வீப்பிங் வில்லோ ட்ரீ’ (Weeping Willow Tree) தாவரவியல் பெயர்: ‘சாலிக்ஸ் பாபிலோனிகா’ (Salix Babylonica)
அழுவதைப் போல தலைகுனிந்து, வளைந்து சோகமாக நிற்கும் மரங்களைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படித் தோற்றமளிப்பவை அழும் வில்லோ மரங்கள். ‘சாலிக்கேசியே’ (Salicaceae) குடும்பத்தைச் சேர்ந்தவை. வட சீனாவைத் தாயகமாகக் கொண்ட இந்த மரங்கள், வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா முழுவதும் ஆற்றங்கரைகள், ஆழமற்ற நீரோடைகள் ஆகியவற்றின் ஓரங்களில் காணப்படும். இவை 30 மீட்டருக்கும் மேல் ஓங்கி உயரமாக வளரக்கூடியவை. சதுப்பு நிலங்களில் செழிப்பாக வளர்கின்றன. நீண்ட, ஒடிசலான கிளைகளில் நளினமாகத் தொங்குகிற அவற்றின் இலைகள் மெல்லியதாக இருக்கும். மலர்கள் பச்சைக் கொத்துக்களாகக் காணப்படும். நிழல் தரும் இந்த மரம், ஒரு மீட்டர் விட்டம் கொண்டதாகவும், 20 மீட்டருக்கு மேலும் உயரம் கொண்டதாகவும் வளரும். இந்த மரத்தின் சிறப்புத் தன்மையே, இது எடை குறைவானதாகவும், அதிக வலுவுள்ளதாகவும் இருப்பதுதான். வில்லோ மரங்களில் 400க்கும் அதிகமான வகைகள் இருக்கின்றன; அவற்றில் குறிப்பாக ‘வீப்பிங் வில்லோ’ எனப்படும் அழும் வில்லோ மிக வசீகரமான மரம். வளைந்த கிளைகளில் தாழ்ந்த பசுமையான அழகிய நீண்ட இலைகளுடன் இருக்கும் இம்மரம், மழை பெய்யும் பொழுது இலைகளிலிருந்து சொட்டும் நீர்த்துளிகளுடன் கண்ணீர்விட்டு அழுவது போல இருப்பதால், இதற்கு இந்தப் பெயர். இதன் மரப்பட்டைகளிலிருந்துதான் மிகவும் மிருதுவான, அதே சமயம் அதிக காலம் உழைக்கக்கூடிய கிரிக்கெட் மட்டை (Cricket Bat), விசில், புல்லாங்குழல், மீன் பிடி தூண்டில், வண்ணத் தூரிகைகள், பொம்மைகள், அம்புகள் போன்றவை செய்யப்படுகின்றன. இது மட்டுமல்ல; இந்த மரம் மருத்துவப் பண்புகளையும் உள்ளடக்கியது. உலகில் மிகப் பாதுகாப்பான வலிநீக்கி, காய்ச்சல், வீக்கம் நீக்கும் மருந்தாகப் பயன்படும் ‘ஆஸ்பிரின்’ மருந்து இம்மரத்தின் இலைகளிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. இரத்தம் கட்டியாவதைத் தடுக்கும் தன்மை கொண்டதால், ஆஸ்பிரின் மாரடைப்புக்கும் (Heart Attack), புற்றுநோய்க்கும் எதிராகக் குறைந்த அளவில், நீண்ட காலத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. மண் சரிவுகள் ஏற்படாமல் இருக்க மலைப்பிரதேசங்களிலும், சீனா, ஸ்பெயின், அமெரிக்கா, லத்தீன், அமெரிக்கா போன்ற நாடுகளில் வணிக ரீதியாகவும் இவை வளர்க்கப்படுகின்றன. இந்தியாவில் நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இவை கொண்டு வரப்பட்டன.
பச்சை, சாம்பல் நிறத் தோல்பட்டையை உடைய யூகலிப்டஸ் மரங்களை நாம் பார்த்திருப்போம். பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியாவைத் தாயகமாகக் கொண்ட யூகலிப்டஸ் மரத்தின் ஓரினம் பல நிறங்களை உடைய மரப்பட்டையைக் கொண்டுள்ளது. கண்ணைக் கவரும் இந்த மரத்திற்கு, வானவில் மரம் என்று பெயர். நீலம், ஊதா, ஆரஞ்சு, அடர் சிவப்பு என பல நிறங்களை உள்ளடக்கிய இந்த மரம் காண்பவர் கண்களைக் கவர்கிறது. சுமார் 80 மீட்டர் உயரம் வரை வளரும் இந்த மரத்தின் அடிப்பகுதியின் சுற்றளவு 2 மீட்டர் வரை இருக்கும். மற்ற யூகலிப்டஸ் மரங்களைப் போலவே, இதன் பட்டைகள் ஆண்டுக்கு ஒருமுறை உரிந்துவிடும். புதிதாக இளம் பச்சை நிறத்தில் மரப்பட்டை தோன்றும். பச்சை நிறம் மெல்ல மாறத் தொடங்கி, பல வண்ணங்களில் மீண்டும் மாறும். அழகிய பல வண்ணத் தோற்றம் காரணமாக, ஹவாய், கலிஃபோர்னியா, டெக்சாஸ் போன்ற பகுதிகளில் அலங்காரத்துக்காக வளர்க்கப்படுகின்றன.
கரும்பு ஆங்கிலப் பெயர்: ‘சுகர்கேன்’ (Sugarcane) தாவரவியல் பெயர்: ‘சக்காரம் அபிசினாரம்’ (Saccharum officinarum) குடும்பம்: போயேசியே (Poaceae) தாயகம்: இந்தியா, நியூ கினியா
புல் வகையைச் சார்ந்த வெப்ப மண்டல நன்செய் பயிர். நீர் வளம் மிகுந்த வண்டல், கரிசல் மண்ணில் நன்கு வளரும். இலைத்தோகை மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மலர்க்கொத்து, ஆயிரக்கணக்கான சிறு பூக்களை உடையது. ஆண், பெண் பூக்கள் ஒன்றாக இருக்கும். கிளைகளற்று, தண்டுப்பகுதி உயரமாக வளரும். தண்டின் எடையில் 90 சதவீத சாறு இருக்கும்.
இனப்பெருக்கம்: தண்டுகளைப் பதியனிடுதல் முதிர்ச்சிக் காலம்: 12 மாதங்கள் அதிகம் பயிரிடப்படும் இரகங்கள்: சக்காரம் அபிசினாரம் (Saccharum officinarum) சக்காரம் சைனன்ஸீஸ் (Saccharum sinensis)
அடங்கியுள்ள சத்துகள்: இரும்பு, பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், காப்பர், வைட்டமின்கள் உலகில் 70 சதவீதத்திற்கும் அதிகமான சர்க்கரை கரும்பிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. பயிரிடும் நாடுகள்: பிரேசில், இந்தியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான், பெரு, கொலம்பியா, ஆஸ்திரேலியா, கியூபா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 100 நாடுகள்.
சுற்றளவு: 5 செ.மீ. உயரம் : 4 – 12 அடி இலைத் தோகை தண்டு நிறம் : இள மஞ்சள், பச்சை, ஊதா, இளஞ்சிவப்பு.
தாவரங்களின் வேர்கள் என்றாலே நிலத்துக்குக் கீழே இருப்பவை என்றுதான் நாம் அறிந்திருப்போம். தாவரங்களின் வேர் (Root – ரூட்) என்பது, நிலத்துக்குக் கீழ் காணப்படும் பச்சையமில்லாத பகுதி ஆகும். ஆனாலும், எல்லா வேர்களுமே நிலத்துக்குக் கீழ் இருப்பதில்லை. சில தாவர வகைகளில் வேரின் பகுதிகள் நிலத்துக்கு மேலும் வளர்வது உண்டு. வேர்களுக்கு தாவரத்தை நிலத்துடன் பிணைத்து வைத்திருத்தல், உணவைச் சேமித்தல், நிலத்திலிருந்து நீரையும் கனிமங்களையும் உறிஞ்சி அவற்றை தாவரத்தின் பிற பகுதிகளுக்குக் கடத்துதல் என நான்கு முதன்மையான செயற்பாடுகள் உண்டு. வெப்ப மண்டல, மித வெப்ப மண்டல மழைக்காடுகளில் அதிக ஆழத்தில் வேர்கள் செல்லமுடியாத ஆழமற்ற வேர்களைக் கொண்ட பெருமரங்களின் அடித்தண்டிலிருந்து உருவாகும் மிகப்பெரிய தட்டையான வேர் உதைப்பு வேர் அல்லது பலகை வேர் (Buttress Roots – பட்ரெஸ் ரூட்ஸ்) எனப்படும். இவை கிளைகள் அதிகமாக வளர்ச்சியடைந்திருக்கும் பகுதிக்கு எதிர்ப்புறமாக அமைந்து மரத்திற்கு சமநிலையை ஏற்படுத்துகின்றன. இந்த வேர்கள், மண்ணைத் துளைத்துக் கீழ் நோக்கியும் பக்கவாட்டிலும் சென்று தாவரங்களை நிலத்துடன் உறுதியாகப் பிணைத்து வைக்கின்றன. மழைக்காடுகளில் மண்ணின் ஆழத்தில் வளம் குறைவாகவும் மேற்பரப்பில் அதிகப்படியான உணவூட்டம் கிடைப்பதாலும் உதைப்பு வேர்கள் மண்ணில் மேற்புறமாகவே பரவி அதிக அளவில் சத்துகளை சேகரிக்கின்றன. பலகை வேர்கள் இல்லாத மரங்களின் ஆதார சக்தி (Anchorage Strength – அன்கோரேஜ் ஸ்ட்ரென்த்) 4.9 kNm (Kilo Newton Meter) என்றால் பலகை வேர்கள் உள்ள மரங்களின் ஆதார சக்தி, அதைக்காட்டிலும் இருமடங்காக 10.6 kNm என்ற அளவில் இருக்கும். அருகிலுள்ள மரங்களின் வேர்களுடன் உதைப்பு வேர்கள் பின்னிப் பிணைந்து வலை போன்ற அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு அருகிலுள்ள மரங்களையும் பாதுகாக்கின்றன. இவை மண்ணுக்கு மேல் 80 அடி தூரமும், 15 அடி உயரமும் மண்ணுக்குக் கீழ் 30 அடி தூரம் வரையிலும் வளரக்கூடியது. மிகவும் தடித்து உயரமான, நீளம் அதிகமான அலையலையாக படர்ந்தவைகள் என இவற்றில் இரண்டு வகைகள் காணப்படுகின்றன. மழைக்காடுகளில் பட்டுப்பருத்தி, அத்தி மற்றும் மருத மரங்களில் அதிகமாக இவ்வகை பலகை வேர்கள் காணப்படும்
மூச்சு வேர்கள் (Respiratory – ரெஸ்பைரேட்டரி) ஊன்று வேர்களில் இருந்து செங்குத்தாக நீர் மட்டத்திற்கு மேலும், நிலத்திலும் வளர்பவை. அலையாத்தித் தாவரங்கள்
அண்டை வேர்கள் (Root Buttresses – ரூட் பட்ரெஸ்ஸஸ்) பெரு மரங்களில், பட்டையாகத் தடித்து சுவர் எழுப்பியது போல உயர்ந்து, சுற்றிலும் வளர்பவை. மருத மரம் (Buttress Tree)
மிதவை வேர்கள் (Floating – ஃப்ளோட்டிங்) நீர்த் தாவரங்கள் மிதக்க உதவும். மென்மையாகவும், பருத்தும் காணப்படும். காற்று நிறைந்தவை. ஆகாயத் தாமரை
உறிஞ்சு வேர்கள் (Haustorial – ஹாஸ்டோரியல்) தொற்றிப் படரும் தாவரங்களில் காணப்படும். கொடிகளுக்குத் தேவையான நீர், உணவு போன்றவற்றை உறிஞ்சும் வேர்கள். கஸ்குட்டா (Cuscutta)
ஒட்டு வேர்கள் (Clinging – கிளிங்கிங்) மரங்களில் தொற்றிப் படரும் தாவரங்களில் காணப்படும். மரப்பட்டைகளின் இடுக்குகளில் பதிந்திருக்கும். மிளகுக் கொடி
உறிஞ்சு கவச வேர்கள் (Velamen – வெலாமென்) செடியின் அடியிலிருந்து உண்டாகி தொங்கிக்கொண்டு, காற்றில் உள்ள ஈரத்தை எடுத்துக்கொள்ளும். ஆர்க்கிட் தாவரங்கள்
2050-ஆம் ஆண்டில் உலகின் மக்கள்தொகை, 900 கோடியாகப் பெருகும் என்பது ஒரு கணிப்பு. அந்தச் சூழலில், உணவுப் பாதுகாப்பு மிக முக்கியமான ஒன்று. உலகில் வாழும் அனைத்து மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்ய, வேளாண்துறையால் மட்டும் முடியாது. எனவே, பிற வழிகளின் மூலம் மாற்று உணவைத் தேடவேண்டிய கட்டாயத்தில் உலகம் இருக்கிறது. அப்படிப்பட்ட மாற்று உணவாகப் பூச்சி உணவுகள் தற்போது பிரபலமடைந்து வருகின்றன. தாய்லாந்து, சீனா, ஜப்பான், பிரேசில், மெக்சிகோ, கானா, வியட்நாம் போன்ற நாடுகளிலும், ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மத்தியிலும் பூச்சியை உண்ணும் பழக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. தமிழகக் கிராமப்புறங்களில்கூட ஈசல் பூச்சிகளை வறுத்து உண்ணும் வழக்கம் உள்ளது. மனிதர்கள், பூச்சிகளை உணவாக உட்கொள்வது ‘என்டமோபாஜி’ (Entomophagy) எனப்படுகிறது. 1,000க்கும் மேற்பட்ட உண்ணப்படும் பூச்சிகளின் வரிசையில், வெட்டுக்கிளி, எறும்பு, வண்டு, பட்டுப்புழு, சிலந்தி, தேள், தேனீ, கரப்பான் பூச்சி போன்றவை உள்ளன. பூச்சிகள், இயற்கையிலேயே அதிகப்படியான புரதம், கொழுப்புச் சத்துகளைக் கொண்டுள்ளன. இவை விரைவாக இனப்பெருக்கம் ஆகின்றன. பூச்சிகளை மனிதர்கள் உட்கொண்டாலும், சூழலியல் சமநிலை குலையாது. இன்னும் 30 ஆண்டுகளில், ‘பறக்கும் புரதங்கள்’ என அழைக்கப்படும் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணையும் என்கின்றனர் பூச்சியியல் வல்லுநர்கள்.
தெரிந்து கொள்வோம்!
1. பூச்சியியல் ஆய்வாளரை, ஆங்கிலத்தில் இப்படி அழைப்போம் ……………………… 2. உலகின் நீளமான மீன் எது? …………………… 3. மணிப்பூர், மிசோரம் மாநிலங்களின் மாநிலப் பறவை எது? ……………… 4. பறக்க முடியாத பெரிய பறவை எது? ………………………
விடைகள்: 1. என்டமாலஜிஸ்ட் Entomologist- 2. ஜயன்ட் ஓர் மீன் (Giant Oar Fish). நீளம்: 110 அடி 3. மிஸஸ். ஹியூம்ஸ் பீஸன்ட் (Mrs. Hume’s pheasant) 4. நெருப்புக் கோழி (Ostrich)
சமையலில் மிக முக்கியமான பொருள் கடுகு (Mustard – மஸ்ட்டர்ட்). சிறிய செடியாக வளரும், கடுகுத் தாவரத்தில் இருந்து பெறப்படும் விதையே கடுகு. தாவரக் குடும்பம் ‘பிராசிகேசியே’ (Brassicaceae). ஐரோப்பாவைத் தாயகமாகக் கொண்டது. கடுகுச் செடி நீளமான இலைகளுடன், மென்மையான தண்டுப் பகுதி கொண்டது. 90 செ.மீ. முதல் 4 அடி உயரம் வரை வளரும். பூக்கள் மஞ்சள் நிறத்தில் சிறியதாக இருக்கும். ‘சிலிகுவா’ (Siliqua) என்று அழைக்கப்படும் பச்சைக் காய்களில் கடுகு விதைகள் பொதிந்து இருக்கும். 150 நாட்களில் செடி வளர்ந்து, முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகும். சமையலில் கடுகின் பயன்பாடு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்துள்ளது. வெண்கடுகைவிட (Brassica alba – பிராசிகா அல்பா) கருங்கடுகில் (Brassica nigra – பிராசிகா நிக்ரா) காரம் மிகுந்து இருக்கும். கடுகைச் சூடேற்றும்போது, அதன் மேல் உள்ள தோல் அகன்று ‘மைரோஸினேஸ்’ (Myrosenase) எனப்படும் மணமுள்ள நொதியம் (enzyme) வெளிப்படுகிறது. இதுவே கடுகின் தனிப்பட்ட சுவைக்குக் காரணம். கடுகு அதிக கலோரி கொண்டது. 100 கிராம் கடுகில், 508 கலோரி கிடைக்கும். இதில் செலினியம், மெக்னீசியம், கால்சியம், மாங்கனீஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், இரும்பு, புரதம், நார்ச்சத்து போன்ற சத்துகள் உள்ளன. எளிதில் வளர்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்தும், கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனைக் குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு. இந்தியக் கடுகுச்செடியின் (Brassica juncea) கீரை, உணவாகப் பயன்படுகிறது. கடுகு எண்ணெய் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.
கடுகு அருங்காட்சியகம்
அமெரிக்காவில் உள்ள ‘மிடில்டான்’ (Middleton) என்ற இடத்தில் கடுகு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 1992இல் அமைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில், உலகம் முழுவதும் உள்ள 70க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பெறப்பட்ட 6,090 கடுகு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் சனிக்கிழமை ‘தேசிய கடுகு தினம்’ (National Mustard Day) கொண்டாடப்படுகிறது.
நரம்பு வடிவ மலர்ச் செடி ஆங்கிலப் பெயர் : ‘ஸ்கெலிடன் ஃபிளவர்’ (Skeleton Flower) தாவரவியல் பெயர் : ‘டைபிலியா கிரேயி’ (Diphelleia Grayi) தாவரக் குடும்பம் : ‘பெர்பெரிடாசியே’ (Berberidacea)
மழையில் நனைந்தால் தனது வெள்ளை நிறத்தை இழந்து கண்ணாடி போன்று மாறிவிடும் பூக்களைக் கொண்ட செடி வரி ‘வடிவ மலர்ச்செடி’ எனப்படுகிறது. ஜப்பான், சீனா, அமெரிக்காவின் அப்பலாச்சியன் மலைப்பகுதி ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே காணப்படுகிறது. குளிர் நிறைந்த மலைப்பகுதிகளே இது வளர்வதற்கு ஏற்ற சூழலைத் தருகிறது. கிழங்குகளில் இருந்து முளைத்து வளரும் இந்தத் தாவரத்தின் இலை அகலமாக குடைபோல இருக்கும். ஒரு மீட்டர் அகலத்துக்கு இலைகள் பரவியிருக்கும். செடி 40 செ.மீ. உயரம் வரை வளரும். மே முதல் ஜூலை வரை மலர்களைத் தோற்றுவிக்கும். செடியின் நுனியில் கொத்தாக 6 மெல்லிய இதழ்கள் கொண்ட சிறிய வெள்ளை நிறப் பூக்கள் பூக்கும். இந்தச் செடியின் பழங்கள் அடர் நீல நிறத்தில் இருக்கும். பூவின் இதழ்கள் மழையில் நனைந்தால் நிறமிழந்து கண்ணாடி போல ஆகி, பின் ஈரம் உலர்ந்த பின் மீண்டும் வெள்ளை நிறம் தோன்றும். நிறம் மறையும்போது, பூ இதழ்களின் நரம்பு அமைப்பு கண்ணாடிக்குள் தெரியும் மெல்லிய எலும்புகள் போலத் தெரிவதால் இதற்கு ‘ஸ்கெலிடன் ஃபிளவர்’ (Skeleton Flower) என்று பெயர். பூ இதழ்களின் செல்கள் நெருக்கமாக இல்லாமல் இடைவெளியுடன் அமைந்திருப்பதே இப்படி நிறமிழக்கக் காரணம். மழைக்காலங்களில் இந்தச் செடியின் பூக்கள் பனிக்கட்டியால் செய்ததுபோல மிக அழகாகக் காணப்படும். இந்தத் தன்மை காரணமாக, ‘தாவரங்களில் பச்சோந்தி’ (Chameleon of the Woods – கேமலியேன் ஆஃப் தி வுட்ஸ்) என்றும் இந்தச் செடி அழைக்கப்படுகிறது.
2013 ல் வெளியான திருஷ்யம் படத்தின் அடுத்த பாகமான திருஷ்யம் -2 அதே ஜீத்து ஜோஸப் இயக்கத்தில் ஆசிர்வாத் சினிமாவின் அந்தோனி பெரும்பாவூர் தயாரிப்பில் பிப்ரவரி 19 ,2021’ல் அமேஸான் ப்ரைமில் வெளியானது.சதீஷ் குருப் ஒளி இயக்கம்.
முதல் பாகம் எடுக்கப்பட்ட அதே தொடுபுழாவில் பெரும்பாலான காட்சிகளும் , ஒருசில காட்சிகள் மட்டும் கொச்சியிலுமாக மொத்தம் 46 நாட்களில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டது.
முதல் திருஷ்யத்தின் அதே மோகன்லால், மீனா, அன்சிபா ஹாஸன் மற்றும் எஸ்தர் அனில் கூட்டணி இதிலும் . 6 வருடங்களில், கொஞ்சம் வளர்ந்திருக்கும் மகள்களும் மாறியிருக்கும் வீட்டின் கட்டமைப்புமாக இரண்டாம் பாகத்திற்கு தேவையான மாற்றங்கள்இயல்பாக அமைந்திருக்கிறது..
குடும்பத்தை காப்பாற்ற எந்த எல்லைக்கும், அது கொலையானாலும், கொலையை தடயமின்றி மறைப்பதானாலும் தயங்காத குடும்பத்தலைவனும் எந்த அச்சுறுத்தலும் மிரட்டலும் சித்திரவதையும் வந்தாலும் அவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் குடும்பத்தினருமாக பிரமாதமான வெற்றிப்படமாக அமைந்து விட்டிருந்தது முதல் பாகம். மற்ற எதைக்காட்டிலும் குடும்ப நலனெனும் அறத்தில் விடாப்பிடியாக நிற்கும் தந்தையாக, கணவனாக மோகன்லாலெனும் அசல் கலைஞன் பிரமாதாப்படுத்தியிருந்த படமது.
மிக அழகாக, முழுமையாக முடிந்த , இனி இரண்டாம் பாகமாக தொடர எந்த சாத்தியங்களும் இன்றி கச்சிதமாக, நேர்த்தியாக முடிக்கப்பட்ட ஒரு படத்தை, மிக சாமார்த்தியமாக, புத்திசாலித்தனமாக, பிரமாதமாக இரண்டாம் பாகமாக எடுத்து அதை வெற்றிப்ப்படமாகவும் கொடுத்திருக்கிறார்கள்.
முதல் படத்திற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத,போலீஸாரால் துரத்தப்படும் குறறவாளி ஜோஸ், ஓடிவருவதும், பின்னர் பிடிபடுவதும், பிடிபடும் முன்பு காவல் நிலையத்தில் சவத்தை புதைத்துவிட்டு திரும்பும், ஜார்ஜ்குட்டியை ஒரு சிறிய இடைவெளி வழியாக அவன் பார்ப்பதுமாக பரபரப்பான துவக்கக்காட்சிகள்.
துயரமான சம்பவங்கள் நடந்து முடிந்து 6 வருடங்களாகியும் அந்தக்குடும்பத்தினர் அந்த நினைவுகளிலிருந்து மீளமுடியாமலிருக்கின்றனர். எனினும் காலப்போக்கில் மெல்ல மெல்ல தேறிக்கொண்டும் வருகின்றனர். 12 ல் படிக்கும் இ்ளைய மகளும் படிப்பை முடித்து வீட்டில் திருமணத்திற்கு காத்திருக்கும் மூத்தவளும், சினிமாபித்து பிடித்திருக்கும் ஜார்ஜ் குட்டி திரையரங்கு உரிமையாளராகி இருப்பதும் ,அதன்பொருட்டு வாங்கிய கடனில் மீனாவுக்கு அதிருப்தி இருப்பதுமாக கதை சாதரணமாக நகருகின்றது. ஆனால் டீக்கடையிலும் ஆட்டோ ஸ்டாண்டிலும் ஜார்ஜ் குட்டிதான் அக்கொலையை செய்திருக்ககூடுமென்றும், அவர் மகளும் செத்துப்போன அந்த பையனும் காதலித்து, நெருக்கமாக வீட்டிலிருக்கையில் ஜார்ஜ்குட்டி பார்த்து பின்னர் கொலை நடந்ததாகவும் அரசல் புரசலாக பேசிக்கொண்டே இருக்கிறார்கள்
பழைய நினைவுகளினால் அஞ்சுவுக்கு அவ்வப்போது வலிப்பு வருகின்றது , வருந்தும் மீனா இரண்டு வருடங்களுக்கு முன்பாக பக்கத்தில் குடிவந்திருக்கும் சரிதாவுடன் மட்டும் நட்புடன் கவலைகளை பகிர்ந்துகொண்டு பேசிக்கொண்டிருக்கிறாள். முன்பு போல ஜார்ஜ்குட்டி நல்லவனென்று இப்போது ஊருக்குள் பேச்சில்லாததற்கு பிறர் கண்களை உறுத்தும் அவர்களின் செல்வச்செழிப்பும் ஒரு காரணமாகிவிட்டிருக்கிறது.
வினய்சந்திரன் என்னும் ஒரு பெரிய தயாரிப்பாளரை அவ்வப்போது சந்தித்து, ஜார்ஜ்குட்டி, தான் எடுக்கவிருக்கும் ஒரு திரைப்படம் குறித்தும், அதன் திரைக்கதையை குறித்தும் அடிக்கடி பேசிக்கொண்டிருக்கிறார்.அதை மீனா விரும்பாவிட்டாலும் தொடர்ந்து செய்கிறார்
6 வருடங்களாகியும், அந்த கேஸை முடிக்க முடியாமலானதாலும், செத்துப்போனது காவல் உயரதிகாரியின் மகனென்பதாலும் போலிஸும் ரகசியமாக ஜார்ஜ் குட்டியை கண்காணித்துக்கொண்டேதான் இருக்கின்றது.
மகனின் உடல் பாகங்கள் கிடைத்தாலே ஆத்ம சாந்திக்கான பரிகார பூஜைகள் செய்ய முடியுமென்பதால் மீண்டும் ஜார்ஜை அவனது தந்தை தேடி வருகிறார், மகளின் கல்யாணமுயற்சிகளுக்கு தடையாக ஊருக்குள் அவளைப்பற்றி உலவும் கட்டு்க்கதைகள் இருப்பதில் மீனா மனமொடிந்திருக்கிறார், சரியாக இதே வேளையில் 6 வருடங்களுக்கு முன்பு கைதாகி சிறைத்தண்டனை அனுபவித்துவந்த முதற்காட்சியின் ஜோஸ் விடுதலையாவதுமாக கதை வேகமெடுக்கிறது.
மிக சிறப்பான இந்த அடிப்படை விஷயங்ளைக்கொண்டு மேலே கதையை பின்னிப்பின்னி சாமார்த்தியமாகவும் எந்த தொய்வுமின்றியும் கொண்டு செல்கிறார்கள்.
ஜோஸ் செய்த கொலையால் அவன் குடும்பவாழ்வு சிதைந்திருப்பது, அதற்கு பிழையீடாக அவனுக்கு பணம் தேவைப்படுவது, செத்துபோனவனின் உடல் இருக்கும் இடம் குறித்து துப்புக்கொடுத்தால் பெருந்தொகை பரிசாக காவல்துறை அளிக்கும் என்றூ தெரிந்துகொண்ட ஜோஸ் அவனுக்கு தெரிந்த உண்மையை போலீஸில் சொல்ல முடிவெடுப்பதுமாக இரண்டாம் பாதி பரபரப்பாக நகருகின்றது
ஜோஸ் உண்மையை சொன்னதும் போலீஸ் ஸ்டேஷன் தோண்டப்படுகிறது, DNA பரிசோதனைகளுக்குபின் ஜார்ஜ் குட்டியை இந்தமுறை எப்படியும் பிடித்தே ஆகவேண்டுமென போலீஸ் முனைகிறது, குடும்பத்தை மீண்டும் காவலில் எடுது விசாரிக்கிறார்கள். மனைவியும் மகள்களும் அச்சத்தில் ஜார்ஜ்குட்டியின் திட்டங்களை சிதைக்கிறார்கள். படம் பல திடீர் திருப்பங்களுடன் செல்கின்றது
வெளிப்படும் சிலரின் சுயரூபங்கள், போலீஸ் விரித்திருந்த கண்காணா வலையில் ஜார்ஜ்குட்டியின் மனைவியும் மகள்களும் விழுந்துவிடுவது என எதிர்பாரா இத்திருப்பங்களால் நாமும் திகைத்துப்போகிறொம்
புதைத்த உடல் திரும்ப கிடைத்ததா? ஜார்ஜ் குட்டியின் குற்றம் நிரூபிக்கப்பட்டதா? என்னவானது மீதிக்கதை என்று அவசியம் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். முதற்பாகத்தின் மிகச்சரியான தொடர்ச்சி என்பதால் அதைப்பார்க்காமல் இந்த பாகத்தைப் பார்கையில் கதை புரியாமலாகும் சாத்தியமிருக்கிறது. எனவே பார்க்காதவர்கள் இரண்டையும் சேர்த்துப்பார்ப்பது மிக நல்ல திரையனுபவமாக இருக்கும்
ஆர்ட் டைரக்டர் ’ராஜீவ் கோவிலகத்து’ மிகப்பிரமாதமாக முன்பாகத்தின் அதே தெரு, அதே டீக்கடை, போலீஸ் ஸ்டேஷன், கேபிள் டிவி அலுவலகெமென்று, அச்சுப்பிசகாமல் மீண்டும் செட் போட்டதற்கும், கோவிட் பரிந்துரைகளுக்கென ஒரு மேற்பார்வைக்குழுவொன்றை அமைத்து அதன் தலைமையில் மிகக்கட்டுப்பாட்டுடனும் தேவையான எல்லா பாதுகாப்புடனும் 56 நாட்களுக்கு கணக்கிட்ட முழுப்படப்பிடிப்பை 46 நாட்களிலேயே முடித்ததற்கும், தொடர்ந்து திருஷ்யம் 3 எடுக்கும் அளவுக்கு இந்த பாகத்தை வெற்றிகரமாக கொடுத்திரு்ப்பதற்கும் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்
திருஷ்யம் 2 தெலுங்கில் வெங்கடேஷும், ஹிந்தியில் அஜய்தேவகனும் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறது. தமிழில் கமல் சம்மதிக்க காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கேள்வி.
திரைக்கதை நாயகனின் பார்வையில் நகர்வதாலும், அந்தகொலையின் நியாயம் நமக்கு விளக்கப்பட்டிருப்பதாலும் பார்வையாளர்களாகிய நாமும் ஜார்ஜ்குட்டி செய்த கொலை மறைக்கப்படவேண்டுமெனவே விரும்புவது உறுத்தலான விஷயமாக இருக்கிறது உலக நியதிக்கெதிரானதல்லவா இது? மகனை இழந்த எதிர்தரப்பின் நியாயமென்று ஒன்று இருக்கிறதே!ஒருவேளை இனி வரப்போகும் திருஷ்யம்- 3 ல் இந்த உறுத்தலுக்கும் தீர்வு இருக்குமாயிருக்கும்
M.S ஆனந்தனின் (அறிமுக) இயக்கம் மற்றும் திரைக்கதையில் 2021 பிரவரி 19 அன்று உலகெங்கிலும் பலமொழிகளில் வெளியான தமிழ் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘சக்ரா’. விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் ரெஜினா கெஸான்ட்ரா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில், தயாரிப்பு விஷால்
ரோபோ ஷங்கர் , நீலிமா, சிருஷ்டி டாங்கே, மனோபாலா, வெகுகாலத்துக்கு பிறகு கே ஆர் விஜயாம்மா ஆகியோரும் இருக்கிறார்கள்.
2018ல் வெளியான விஷாலின் இரும்புத்திரை திரைப்படத்தின் (ஒருவிதத்தில் ) தொடர்ச்சிதான் சக்ராவாம்..
சுதந்திர தினத்தன்று நகரில் தொடர்ந்து 50 வீடுகளில் நடக்கும் தொடர்கொள்ளைகள் என்னும் ஒரே புள்ளியை ஜவ்வாக இழுத்து முழுநீள திரைப்படமாக்கி 1.30 மணி நேரத்திற்கு பாடாய்படுத்தி எடுக்கிறார்கள்
ஆச்சரயமாக இருக்கின்றது, உலகசினிமா சென்று கொண்டிருக்கும் பாதையைக்குறித்தும், வெள்ளித்திரை என்னும் சக்திவாய்ந்த ஊடகத்தில் கிடைத்த வாய்ப்பை எப்படி பயன்படுத்துவது என்றும் கொஞ்சமும் அறிதல் இல்லாமல், சினிமாவிற்கான அடிப்படை சிரத்தைகூட இல்லாமல் இந்தக்காலத்திலும் இத்தனை போட்டி நிறைந்த தொழிலில் சக்ராவை எடுத்திருப்பதை நினைக்கையில்.
கதை (?) இதுதான். முகமூடி அணிந்த கொள்ளையர் இருவர் 49 வீடுகளில் சுதந்திர தினத்தன்று பெரும்பாலான காவலதிகாரிகள் முக்கியஸ்தர்களுடன் கொடியேற்றும் விழாக்களுக்கு பாதுகாப்புப்பணிக்கு சென்றிருக்கையில் தொடர்ந்து கொள்ளையடிக்கிறார்கள். 50 ஆவது வீடு ராணுவத்தில் பணியாற்றும் நாயகன் விஷாலின் பாட்டி வீடென்பதை நாயகனி்ன் காதலியும் காவலதிகாரியுமான ஷ்ரத்தா தெரிந்து கொள்கிறார்.
கொள்ளை போனவற்றில் ராணுவதிகாரியாக இருந்து இறந்த, விஷாலின் அப்பா வாங்கிய அசோக சக்ரா பதக்கமும் இருந்ததால் அதை எப்படியும் மீட்டெடுக்க உறுதிபூண்ட நாயகன் தன் காதலியின் துறையான காவல்துறையில் இஷ்டம் போல புகுந்து விளையாடி குற்றவாளிகளை, அது சைபர் க்ரைமென்பதால் கையும் கம்யூட்டருமாக பிடிக்கிறார்.
துவக்கத்தில் கொள்ளை நடந்த ஒவ்வொரு வீடாக சாவகாசமாக காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். கொட்டாவியுடன் அடுத்து கதை எப்போது நகரும் என்று காத்திருக்கையில் நாயகன் வந்து விசாரிக்கிறேன் பேர்வழி என்று காலொடிந்த நத்தையின் வேகத்தில் படத்தை நகர்த்துகிறார். இந்த கதைக்கு இரண்டு நாயகிகள் வேறு.
ஷ்ரத்தா கொஞ்சம் நல்லபெயருடன் முன்னுக்கு வந்துகொண்டிருந்தார், சக்ரா அவருக்கு திருஷ்டிப்படம்
ப்ளம்பர், டயல் ஃபார் ஹெல்ப், விதவை மனைவி, வேலைக்காரப்பெண், எப்போதோ இறந்துபோனவரின் அலைபேசி, கம்ப்யூட்டரில் சேமித்த தகவல்களை திருடி திருட்டு, ஓய்வுபெற்றவர்கள் மட்டுமே குறி, விஷாலுக்கு விடுக்கப்படும் மர்ம தொலைபேசி சவால் என்று கதை இலக்கில்லாமல் நூலறுந்த, வாலறுந்த பட்டமாக எங்கெங்கோ போய்க்கொண்டிருக்கிறது.
விசாரணையின் முக்கிய பாயிண்டுகளை விஷால் போர்டிலெல்லாம் எழுதி துப்பறிகிறார். கடைசியில் அந்த முக்கிய குற்றவாளி அப்படியொன்றும் திறமையான கம்ப்யூட்டர் திருட்டையெலலாம் செய்யவில்லை சாதா திருட்டுதான் செய்கிறார்.
அப்பாவின் பதக்கத்திற்கும் விஷாலுக்குமான உணர்வுபூர்வமான பந்தமேதும் சொல்லப்படவே இல்லை. வில்லியின் ஃப்ளாஷ் பேக் கதை எல்லாம் மனதில் ஒட்டவேயில்லை. அம்மாவை குடிகார அப்பா கொலைசெய்யும், சித்தி கொடுமை செய்யும் அரதப்பழசான முன்கதையெல்லாம் எரிச்சலூட்டுகிறது. கட்டக்கடைசியிலாவது எதாவது உருப்படியாக காட்டுவார்களென்றால் அதுவும் இல்லை. முடிவல்ல தொடக்கமென்று வில்லி குரலில் சொல்லி பயப்படுத்துகிறார்கள் , இனியும் தொடருமா என்று கலக்கமாக இருக்கிறது.
உயரிய ராணுவ விருதான அசோக சக்கரா விருதினை மையமாக கொண்டே சக்ரா எனதலைப்பாம் சக்கரமென்றே வைத்திருக்கலாம் , கதை சுத்திச்சுத்தி வந்துகொண்டே இருக்கிறது.
ஒரே சமயத்தில் இந்தப்படம் ஆங்கிலம் உள்ளிட்ட இன்னும் 5 மொழிகளில் வெளியிடப்பட்டிருப்பது, இந்தபடத்திற்கான காப்பி ரைட் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால். விஷால் வாழ்வா சாவா என்னுமளவிற்கு பிரச்சனைகளை சந்தித்து, கோர்ட் கேஸ் என்று அலைந்து நஷ்டயீடு கொடுத்ததெல்லாம் வியப்பளிக்கிறது. இத்தனை துயரப்பின்னணிகளுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத, தகுதியில்லாத, திரைக்கதையாக்கம், திரையாக்கம், இயக்கம் மற்றும் நடிப்பு
மனதில் நிற்காவிட்டால் போகிறது காதில் கேட்பதுபோலக்கூட பாடல்கள் இல்லை. யுவன் ஷங்கர் ராஜாவா இசை? என்று மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒளி இயக்கமும் கதைக்களங்களும் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. ரோபோ ஷங்கர் போன ஜன்ம பழசான நகைச்சுவையைத்தான் செய்கிறார். சிரிப்புக்கு பதிலாக கோபம் வருகிறது. வசனங்களும் இரும்புத்திரையிலி்ருந்து எடுத்து தூசு தட்டப்பட்டவைதான் புதிதாக ஒன்றுமே இல்லை. நாயகிக்கு வேலையே இல்லை லாஜிக் என்பதே திரைக்கதையில் எங்கும் எட்டிப்பார்ப்பது கூட இல்லை. சிக்கலான காவல்துறை விவகாரமொன்றை, பெண்காவலதிகாரியின் ராணுவ காதலரே கடைசி வரை கையாளுகிறார்.
தேவையில்லாத காட்சிகளும் வீண்வசனங்களுமாய் நிறைந்திருக்கிறது படம்முழுக்கவே. அந்த ATM விஷயமெல்லாம் திணி திணியென்று திணிக்கப்பட்டது. வில்லியைக்குறித்தும் அவரது கம்ப்யூட்டர் திருட்டுக்களைக் குறித்தும் பலமாக பில்டப் கொடுத்து விளக்கிக்கொண்டே இருக்கும் முதல்பாதி ரோதனையென்றால் அதற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லமால் மொக்கை வாய்சவடால்களாக பேசிக்கொண்டு இருக்கும் இரண்டாம் பாதி வேதனை. அதுவும் அந்த செஸ் விளையாட்டு உரையாடல்களெல்லாம் போதுமடா சாமி என்று அலறவைக்கின்றது. வில்லியை வலைவீசிப் பிடிக்கும் காட்சிக்கு நல்லவேளையாக விஷாலே நமக்கு பதிலாக சிரித்து விடுகிறார். படத்தில் ஒரே நல்ல விஷயம் காதல் காட்சிகளும் காதல் பாட்டுக்களும் இல்லையென்பதுதான்.
சக்ராவை பார்த்ததற்கு பிழையீடாக, அர்ஜுன், சமந்தாவெல்லாம் இருக்கும் இரும்புத்திரையை இன்னொரு முறை பார்க்கலாம்