லோகமாதேவியின் பதிவுகள்

Author: logamadevi (Page 13 of 24)

வெனிலா (Vanilla)

வெனிலா (Vanilla) என்பது மெக்ஸிகோவை பிறப்பிடமாகக் கொண்ட வெனிலா ஆர்க்கிட்களிடமிருந்து பெறப்படும்  வாசனைப்பொருள். வெனிலா என்றவார்த்தை ஸ்பானிஷ் வார்த்தையான, சிறுநெற்று (small pod)  என்பதிலிருந்து பெறப்பட்டது 

உலகளவில் வெனிலா பிளானிஃபோலியா;  (Vanilla  planifolia). வெனிலா டாஹிடென்ஸிஸ் , (Vanilla tahitensis, )  மற்றும் வெனிலா பம்போனா (Vanilla pompona,), ஆகிய மூன்று முக்கியமான இனங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றில் வெனிலா பிளானிஃபோலியா அதிகம்பயிரிடப்படுகின்றது .இச்செடி1808.ல் அறிவியல் பெயரிடப்பட்டது.

கொடியாக வளரும் வெனிலா, ஏதேனும் ஒருமரம், அல்லது பிற ஆதாரங்களில் சதைப்பற்றுள்ள வேர்களால் பற்றிக்கொண்டு மாற்றடுக்கில் அமைந்திருக்கும் தடிமனான அடர்பச்சைஇலைகளுடன் 35 மீட்டர் நீளம் வரை படர்ந்து வளரும்.ஒற்றை மலர்க்கொத்தில் 100 வரை பெரிய அழகிய வெள்ளை மற்றும் பச்சை கலந்த நிறத்தில் மலர்கள் நல்ல நறுமணத்துடன் இருக்கும்.

நீண்ட சதைப்பற்றுள்ள 10-20 செமீநீளமுள்ள, நறுமணம் உள்ள காய்கள் சிறிய விதைகளைக்கொண்டிருக்கும். பூக்கள் ஆண் (மகரந்தப்பை) மற்றும்பெண் (மலர்சூலகம்) ஆகிய இரண்டு இனப்பெருக்கஉறுப்புகளையுமே கொண்டிருக்கின்றன; இருப்பினும் சுய-மகரந்த சேர்க்கையைத் தவிர்க்க ஒருசவ்வு இந்த இரண்டு உறுப்புகளையும் பிரித்து வைக்கிறது. வெனிலா நடவு செய்த மூன்றாவது வருடத்திலிருந்து பூக்கத்தொடங்கும். மலர்ந்த 6 முதல் 9 மாதங்களில் காய்கள் உருவாகி அவைபச்சை நிறத்திலிருந்து இளமஞ்சள் நிறமாக மாறும் தருணத்தில்அறுவடைசெய்யப்படும்.

வெனிலாபயிர்களில் மெலிபோன் தேனியால் நடைபெறுவதை தவிர சுயமகரந்த சேர்க்கை நடைபெற 1% வாய்ப்பே உள்ளதால் 1836 ஆம்ஆண்டு, தாவரவியலாளரான சார்லஸ்பிரான்கஸ் மோரன் கைகளால் மகரந்தச்சேர்க்கை செய்வதை பரிசோதிக்கத்தொடங்கினார்.   1841 ஆம் ஆண்டு, கையால் மகரந்தச்சேர்க்கை செய்யும் எளிய முறைஒன்று  12 வயதான எட்மண்ட் ஆல்பியஸ் என்ற அடிமையால் உருவாக்கப்பட்டது.

ஒரு ஆரோக்கியமான கொடி வருடத்திற்கு 50 முதல் 100 காய்கள் வரை உற்பத்திசெய்கிறது; அறுவடைக்கு பிறகு கொடி மீண்டும் 12 முதல் 14 ஆண்டுகளுக்கு  உற்பத்தித்திறன்  உள்ளதாக இருக்கிறது.

இதனுடைய வர்த்தகமதிப்பு காய்களின் நீளத்தை பொறுத்து தீர்மானிக்கப்படுகின்றது.  15 செமீ நீளத்திற்கும் அதிகமாக இருந்தால் இது முதல்தரவகையிலும். 10 முதல் 15 செமீ நீளமாக இருந்தால்   இரண்டாவது  தரமாகவும் 10 செமீக்கும் குறைவானவை மூன்றாவது தரத்தின் கீழும் வருகின்றன.

சாகுபடி செய்யப்பட்ட பச்சைக்காய்கள் அப்படியே  விற்கப்படலாம் அல்லது சிறந்த சந்தைவிலையை பெறுவதற்கு   உலரவைக்கப்படலாம். வெனிலா பச்சைக்காய்களின் விலை கிலோ ரூ 3500. இதுவே பதப்படுத்தப்பட்டால், கிலோ ரூ 22,500.

வெனிலாவை உலரவைப்பதற்கு சந்தையில் நான்கு அடிப்படை நிலைகள் இருக்கின்றன: அழித்தல், வியர்ப்பூட்டுதல், மெதுவாக-உலரவைத்தல் மற்றும்  தகுந்தமுறையில் பாதுகாத்தல். இவ்வாறு பதப்படுத்தப்பட்ட காய்கள் சேமிக்கப்பட்டு, தரப்படுத்தப்பட்டு, பாரஃபின் உறையில் கட்டாக  சுற்றி வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. உலரவைக்கப்பட்ட வெனிலாகாய்கள் சராசரியாக 2.5%  வென்னிலினைக் கொண்டிருக்கிறது.

வெனிலாக்காய்கள்..பிரத்யேகவாசனையுள்ள மூலப்பொருள்கள் நிறைந்தது. வெனிலாவின் சாறில் உள்ள வென்னிலின் (4-ஹைட்ராக்ஸி-3-மெத்தாக்ஸிபென்ஸல்டெஹைட்) இதன் வாசனைப்பண்பு மற்றும் நறுமணத்திற்கு காரணமாகிறது. வென்னிலின் முதல்முறையாக 1858 ஆம் ஆண்டு கோப்லே என்பவரால் பிரித்தெடுக்கப்பட்டது. 

மற்றொரு சிறிய துணைப்பொருளான பைபரானல் (ஹெலியோடிராபின்).உள்ளிட்ட   பலஉட்பொருட்கள் வெனிலாவின் வாசனைக்கு காரணமாகின்றன.

உலகச்சந்தையில் குங்குமப்பூவிற்கு அடுத்த இடத்திலிருக்கும் வெனிலா, உணவுவகைகளிலும், அழகுசாதன தயாரிப்புகளிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வெனிலாவின் உலகளாவிய உற்பத்தியில் பாதியளவிற்கு. மடகாஸ்கரிலிருந்தே வருகிறது. வெனிலாவில் இருந்து பெறப்படும் எசன்ஸ், ஐஸ்கிரீம், பிஸ்கட், குளிர்பானங்களில் அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது.  

வெனிலாவின் அத்தியாவசிய எண்ணைகள் மற்றும் வென்னிலின் ஆகியவை தற்போது நறுமணசிகிச்சையிலும் (Aroma therapy) பயன்படுத்தப்படுகின்றன.

நள்ளிருள் நாறி

நள்ளிருள் நாறி / பிரம்ம கமலம் Epiphyllum oxypetalum

பிரம்மகமலம் நள்ளிருள் நாறி, இரவு ராணி, நிஷாகந்தி, குலேபகாவலி மலர், நள்ளிருள் ஒளிரி, அனந்த சயன மலர் என பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த அரிய அழகு மலர்ச்செடி கள்ளிக் குடும்பத்தைச் சேர்ந்தது. (Cactaceae)

இதற்கு Orchid cactus, Jungle cactus, Night blooming cereus, Dutchman’s Pipe. King of the Himalayan Flowers,  Queen of the Night,  Orchid cactus,  என்னும் ஆங்கிலப் பொதுபெயர்களும் உள்ளன.  இதன் அறிவியல் பெயரான Epiphyllum oxypetalum  என்பதில்  epi, phylum என்றால் இலையில் மேற்பரப்பிலிருந்து என்றும்  oxus என்றால் கூரிய,  petalum என்றால் இதழ்கள் என்றும் பொருள், இலைகளின் மேற்பரப்பிலிருந்து உண்டாகும் கூரிய நுனிகளையுடைய  இதழ்களுடனான மலர்களைக் கொடுக்கும் தாவரம் என்று பொருள்

உண்மையில் இவை இலைகளிலிருந்து மலர்களை தோற்றுவிப்பதில்லை. கள்ளி இனமாதலால் தண்டுகளே தட்டையாக இலைகளைப்போல இருக்கும். இந்த இலைத்தண்டிலிருந்தே மலர்கள் உருவாகும். வழவழப்பான, கொடியைப்போல இருக்கும் இவற்றை தாங்கும் இளம் காம்புகள் சிவப்புநிற செதில் போன்ற அமைப்புக்களால் சூழப்பட்டிருக்கும் எனவே பார்ப்பதற்கு தொப்புள் கொடியைப் போலவே இருக்கும். எனவேதான் இது பிரம்மகமலம் என்று இந்தியாவின் பல மொழிகளில் அழைக்கப்படுகின்றது, பிற பூக்களைப்போல, பகலில் பூத்து, இரவில் உதிர்ந்து விடாமல். பிரம்ம கமலம், இரவில் பூத்து, பகலில் உதிரும். 

வெண்ணிறத்தில் மயக்கும் நறுமணத்துடன் பெருமலர்கள் பின்னிரவில் மலரும்.  ஒரே செடியில் ஒரே சமயத்தில்  40 -100’ க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கும். விதை, கிழங்கு, தண்டு ஆகியவற்றிலிருந்து இனப்பெருக்கம் செய்யும் தாவரங்களைப்போலல்லாது, இவற்றின்   இலைகளைப் போலிருக்கும் தண்டுகளை நறுக்கி நட்டு வைத்தாலே புதியசெடி முளைத்துவிடும்.  இந்த மலர்கள் பொதுவாக ஆண்டுக்கு ஒரு முறைதான் பூக்கும். அதுவும் நள்ளிரவில் பூத்து ஓரிரு நாட்களில் உதிர்ந்து போகும் தன்மை கொண்டவை.

இவை  இரவில் மலர்வதனால் நிலவொளியில் இவற்றை   வௌவால்களும், Humming bird moth எனப் பெயர் கொண்ட பெரும் அந்திப்பூச்சிகளும்  (moths) தான் மகரந்தச்சேர்க்கை செய்யும். இரவின் நிலவு, நட்சத்திரம் ஆகியவற்றின் மிகக்குறைந்த ஒளியிலும் மகரந்தச்சேர்க்கை செய்யும் சிறு உயிரினங்களுக்கு இவற்றின் இருப்பு தெரியவேண்டுமென்றே இவை வெண்ணிறத்திலும். நல்ல வாசனையுடனும் இருக்கின்றன.  இப்படி இரவில் மலர்ந்து இரவாடிகள் எனப்படும் (nocturnals ) இரவில் மட்டும் செயலாற்றும் பூச்சிகளால் மகரந்த சேர்க்கை செய்யpபடும் மலர்கள் அனைத்திற்கும் பொதுவாக நிலவு மலர்களென்று பெயர்.( moon light flowers ) இந்தப் பூவின் நறுமணத்திற்கு காரணம் இதிலிருக்கும் , Benzyl Salicylate என்னும் வேதிப் பொருள்.

2லிருந்து 3 மீட்டர் உயரம் வரையே இவை வளரும் அதிகம் வளர்கையில் இலைத்தண்டுகளை வெட்டி எடுத்து வேறு புதிய இடங்களில் நட்டு வளர்க்கலாம்.. இச்செடி வளர்ந்து 3 வருடங்களில் 12லிருந்து 17 செமீ அளவிலிருக்கும், மெழுகுபோன்ற வழவழப்பான இதழ்கள் கொண்ட மலர்களை அளிக்கத்துவங்கும்

 சமூக ஊடகங்களில் சொல்லப்படும்  //இது  இமய மலைகளில் மட்டும் வளரும். பத்து  ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் வளரும் என்பதெல்லாம் கட்டுக்கதைகள்// இமயத்தில் மட்டுமல்ல , எங்கும் வளரும் இயல்புடையது இச்செடி ,

  தென் அமெரிக்காவின் மெக்ஸிகோ காடுகளைக் தாயகமாகக் கொண்ட இத்தாவரம், அங்கிருந்து உலகமெங்கும் பரவியுள்ளது. நல்ல வளமான மண்ணில் அதிகம் சூரியஒளி படாதவாறு அருகில் இவை பற்றிப்படர கொழுகொம்போ அல்லது மரமோ இருக்குமிடங்களில் வளர்க்கலாம் மரங்களினடியில் வளருகையில்  விரைவாக அவற்றைப் பற்றிக்கொண்டு ஏறி வளரும். மிக அதிகமாக நீர் விடத் தேவையில்லை

இரவின் மலர் என பொருள்படும் இந்த நிஷாகந்தி மலையாள இலக்கியங்களில் சிறப்பான இடம்பெற்றிருக்கின்றது. கேரளத்தில், ஒவ்வொரு வருடமும் நடைபெறும் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்கு    ‘நிஷாகந்தி விழா’ என்றே பெயர்.

பின்னிரவில் மலர்ந்து நல்ல மணம் வீசும் இம்மலர் பழந்தமிழ்ப் பாடல்களில் நள்ளிருள் நாறி என்று அழகிய பெயரில் குறிப்பிடபட்டுள்ளது.  இருவாட்சி மற்றும் முல்லையும் இதே பெயரில் சில இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. எனினும் இவையிரண்டும் பகலில் மலர்ந்து மாலை மணம் வீசுபவை. பிரம்மகமலமே இரவில் மலர்ந்து மணம்பரப்பும் எனவே இதற்குத்தான் இப்பெயர் மிகபொருத்தமாந்தாக இருக்கும்.


 Epiphyllum  பேரினத்தில் 15 சிற்றினங்கள் இருப்பினும் oxypetalum என்னும் சிற்றினமே உலகெங்கிலும் அதிகம் வளர்ககப்படுகின்றது. இலங்கையில் இதன் இரண்டு சிற்றினங்கள் வளர்கின்றன பிரமம்கமலத்தை விட மெல்லிய மலரிதழ்களை கொண்டிருக்கும்  Epiphyllum hookeri யும் இங்கு அதிகம் காணப்படுகின்றது

பிரம்மகமல மலர்கள் சில உடல் நோய்களுக்கு சிகிச்சைக்காக  உண்ணப்படுகின்றன. ஆனால் வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள மலராதலால் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இவற்றை உண்ணுதல் கூடாது

 வியட்நாமில் இம்மலரிதழ்களிலிருந்து எடுக்கப்படும் ஒரு மருந்தை பாலுணர்வை தூண்டும் மருந்தாக பயன்படுத்துகிறார்கள். இந்தியாவிலும் இம்மலர் பெண் மலட்டுத்தன்மையை நீக்க பழங்குடியினரால் உண்ணப்படுகின்றது. இதயநோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும், ரத்தக் கொழுப்பை குறைக்கவும் இம்மலர் பயன்படுகின்றது

  மிக மிக அரிதாகவே இச்செடியில் சிறு விதைகளுடனிருக்கும் இளஞ்சிவப்பு கனிகள் உருவாகும். கலப்பின செடிகளில் நிஷாகந்தி மலர்கள் வெள்ளயல்லாத ஆரஞ்சு மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு  நிறங்களிலும்   இருக்கின்றன.

பல கலாச்சாரங்களில் இம்மலரை காண்பது நல்ல சகுனமென்றும், மலரைக் காண்கையில் நினைத்தது நடக்குமென்றும், இந்தச்செடி மலர்வது,  நம்பிக்கைக்கு ஆதாரமாகவும் கருதப்படுகின்றது சில தென்தமிழக கிராமங்களில் இச்செடியில் மலர் விரியும் இரவில் அதற்கென பூசைகள் கூட செய்யப்படுவதுண்டு.  சிலர் தங்கள் வீடுகளில் இம்மலர் பின்னிரவில் மலருகையில் நண்பர்களுக்கு விருந்துவைத்து மகிழ்வதும் உண்டு.

ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ஏசு பிறந்தபோது அவரைக்காண வந்த மூன்று அரசர்களுக்கு வழிகாட்டிய நட்சத்திரங்களின் குறியீடாக  இம்மலரை கருதி இதை பெத்லகேமின் நட்சத்திரம் என்று அழைக்கின்றனர்.

இலங்கை இந்தியா சீனா ஜப்பான் ஆகிய பலநாடுகளின் தொன்மங்களில் இம்மலர் பலவிதங்களில் இறைத்தன்மையுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. இலங்கையில் புத்தருக்கு அஞ்சலி செலுத்த விண்ணுலகினர் மண்ணுலகுக்கு வரும் மலரின் வடிவமாக கருதப்படும் இது சொர்க்க மலர் என்று அழைக்கப்படுகிறது.   

சீனாவில் இம்மலர்களை பற்றிய குறிப்புக்கள் 1645ல் எழுதப்பட்ட நூல்களில் உள்ளது. சீனாவில் இது தோன்றியதும் மறைந்துவிடும் புகழின் நிலையாமைக்கு குறியீடாக பயன்படுத்தப்படுகின்றது. ஜப்பானில் இம்மலரை  கெக்கா பிஜின் அதாவது நிலவில் காணும் அழகு என்று அழைக்கிறார்கள்.  (Gekka Bijin)

 பொதுவாக இதை தாய் மகளுக்கும், நண்பர்கள் பிற  நண்பர்களுக்கும் பரிசாக அளித்து வளர்ப்பதென்றும் ஒரு வழக்கம் இருக்கிறது இச்செடிகளை விலைகொடுத்து வாங்கக்கூடாது யாரிடமேனும் பரிசாக வாங்கவேண்டும் என்னும் நம்பிக்கையும் உலகின் பலநாடுகளில் பொதுவாக இருக்கிறது.

உலகின் மிக விலையுயர்ந்த மலர்களில் இதுவும் ஒன்று சந்தைகளில் விற்கப்படாத மலரும் கூட.

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம் ஏன், எதற்கு, எப்படி நடத்தப்படுகின்றது என்பதையும் கும்பாபிஷேகத்தின் பின்னிருக்கும் அறிவியல் காரணங்களையும் இக்கட்டுரையில் காணலாம்.

வேத, ஆகம, சிற்ப சாஸ்திர முறைப்படி எழுப்பப்பட்ட ஆலயங்களில் யந்திரஸ்தாபனத்தில் தெய்வத் திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட  பின்னர் ஆலயங்களுக்கு     குடமுழுக்கு தேவையாகின்றது. குடமுழுக்கு செய்யப்பட்ட பின்னரே அந்த ஆலயம் வழிபாட்டுத் தலமாகின்றது.  குடமுழுக்கு அல்லது கும்பாபிஷேகத்திற்கான விதிகளை  வாமதேவர் என்னும் வடமொழி நூலாசிரியர்  தானெழுதிய வாமதேவ பத்தாதி’யில் சிவன் முருகனுக்கு சொன்னதாக விவரித்திருக்கிறார்

குடமுழுக்கு செய்ய நான்கு வகைகள் உள்ளன. அவை;

’ஆவர்த்தம்’ – புதிய கோவிலில் இறைவனின் திருவுருவத்தை அமைப்பது.

‘அனாவர்த்தம்’ – இயற்கை சீற்றங்களால் சேதமடைந்த கோவில்களை புதுப்பித்து, மறு பிரதிஷ்டை செய்வது.

‘புனராவர்த்தம்’ – காலத்தால் சிதிலமடைந்த கோவில்களை புதுப்பித்து புனர் நிர்மாணம் செய்வது.

 ‘அந்தரிதம்’ – மனிதர்களின் செயல்களால் ஏற்பட்ட குறைபாடுகளை சரி செய்து கோவிலை மீண்டும் புதுப்பிக்கும் பணியைச் செய்வது.

குறிப்பிட்ட இடத்தில் அமைக்கப்பட்ட கோவில்களில், தெய்வத் திருமேனிகளின் மீது தெய்வ சக்திகளை எழுந்தருளும்படி செய்வதற்கான வழிமுறைகளை செய்வதுதான் கும்பங்களுக்கு புனித தீர்த்தங்களினால் முழுக்காட்டப்படும் குடமுழுக்கு அல்லது கும்பங்களுக்கு அபிஷேகம் செய்யும் கும்பாபிஷேகம்.

ஆகம விதிப்படியும் சாஸ்திர முறைப்படியும் தெய்வ விக்கிரகங்களின் சக்தியையும் கோபுர கலசத்தில் உருவேற்றிய சக்தியையும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிப்பித்து ஊக்கப்படுத்த நடைபெறுவதே மகா கும்பாபிஷேகம்.  இதனை சைவர்கள் ‘மகா கும்பாபிஷேகம்’ என்றும் வைணவர்கள் ‘மகா சம்ப்ரோக்ஷணம்’ என்றும் அழைக்கிறார்கள்.

சிதிலம் அடைந்திருந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, சீரமைக்கப்பட்டு கும்பாபி ஷேகம் செய்யப்பட்டால் அதை புனருத்தாரணம் என்பார்கள்!

கல்லினாலும், மண்ணினாலும், சுதையினாலும்,  மரத்தினாலும் உலோகங்களாலும் உருவாக்கப்பட்டவை தெய்வவிக்ரகங்களாகும். பிரதிஷ்டை செய்யப்படும் தெய்வ விக்ரகங்களுக்கு ஆறு வகையான வாசங்கள், அதாவது இருப்புக்கள் மேற்கொள்ளப்படுதாக ஐதீகம். இவற்றில் நீரிலும் தான்யங்களிலும் மூழ்கவைக்கும் , ஜலவாசம், தானிய வாசம் என்பவை முதல் இரு நிலைகள். நவரத்தினங்கள் பயன்படுத்தப்படும் ரத்தின வாசம்  மூன்றாவது நிலை. பொற்காசுகள் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் தன வாசம் நான்காவதாகும். பலவகையான பட்டாடைகள் சிலைக்கு அணிவிக்கப்படும் வஸ்திர வாசம் ஐந்தாவதாகும். கடைசியாக, ஹம்சதூளிகா மஞ்சம் என்ற அன்னத்தின் சிறகுகளால் உருவான படுக்கை மேல் மான் தோல் அல்லது புலித்தோல் விரிக்கப்பட்டு, அதன் மீது  விக்ரகம் வைக்கப்படுவது ஆறாவதான சயன வாசமாகும்.

மேற்கண்ட ஆறு வாசமும் 48 நாட்கள் வைக்கப்படும் என்ற நிலையில், விக்ரகம் மொத்தம் 288 நாட்கள் பல நிலைகளை கடந்து பிரதிஷ்டைக்கு தயாராக இருக்கும். ஜல வாசம், தான்ய வாசத்தில் சிலைகளின் குறைகள் தெரிந்து விடும். ரத்தின வாசத்தில் நவக்கிரகங்களின் அம்சமான நவரத்தினங்களின் குணங்களை சிலைகள் பெறும். தன, வஸ்திர, சயன வாசத்தில் இருக்கும் சிலைகள் தெய்வ அதிர்வினை பெறுகின்றன என்பது ஐதீகம்.

ஒரு சில இடங்களில் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒரு வாரம் அல்லது 12 நாட்கள் வரையில் புஷ்பாதி வாசம், அதாவது, பல்வேறு விதமான நறுமண மலர்களில் சிலை மூழ்க வைக்கப்பட்டு இருக்கும் நிலையில், சிலைக்கு வாசனை ஏற்படுத்துவதும் உண்டு. புஷ்பாதி வாசத்துக்கு பிறகு, கண்களை திறக்கும் நிகழ்வுக்கு முன்பாக  சயனாதி வாசம் மூலம் விக்ரகத்தின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படும். அதன் பின்னர்,  கண் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தகுந்த பூஜைகளுக்குப் பிறகு தலைமை ஸ்தபதி தங்க ஊசி மூலம் சிலையின் கண்ணில் மெல்லிய கீறல் வரைவார். அதன் மூலம் கருவிழி திறக்கப்பட்டு, விக்ரகத்துக்கு முழுமையான அழகு வருகிறது.

பின்னர் கும்பாபிஷேகம் நடக்கும் ஆறுகாலம் அல்லது எட்டு காலம் யாகசாலையில் மந்திர உச்சாரணம் செய்யப்பட்டு, அதை ஈர்த்துக்கொண்ட புனித கலச நீர், காப்பு கயிறு போன்ற பல்வேறு புனிதப்பொருட்கள் மூலம் விக்ரகத்துக்கு தெய்வீகத்தன்மை அளிக்கப்படுகிறது.

ஸ்பரிசவாதி என்னும்  கடைசி வாசத்தில், கருவறையில் இருக்கும் பிரதான ஆச்சாரியார் மூலம் ஐதீக முறைப்படி விக்ரகத்தின் ஒன்பது துவாரங்களுக்கான மந்திரம் ஓதப்பட்டு, ஆன்மிக சக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அளிக்கப்பட்ட பின்னர், தொடர்ந்த இவ்வகையான் ஆன்மீக வழிகளில், விகரகம் முழுமையான கடவுளாக மாறுகிறது.  

இறைவன் தனது அகண்டாகாரமான சக்தியை ஒரு விக்ரகத்திற்குள் நிலைபெறச் செய்ய அடியவர்களுக்கு இவ்வாறு முறையான ஆன்மீக வழிகளைக்காட்டியதால்தான், பிரபஞ்சமெங்கிலும் பரந்து விரிந்திருக்கிற இறைவனுடைய சக்தியை ஈர்த்துச் வைத்துக்கொள்ளும்  மூலஸ்தான  மூர்த்தியை வடிவமைப்பது எளிய மக்களான நமக்கு கைகூடிய காரியமாயிருக்கிறது.

மூல விக்ரகத்திற்கு அஷ்டபந்தனம் சாற்றி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஆலயங்களில்  12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்வார்கள். கோவிலைக் கட்டி முடித்த பிறகு, தெய்வவிக்ரகங்களை பிரதிஷ்டை செய்யப்படும்.  பீடத்தின் மீது வைத்து, அந்த இடத்தில் இருந்து சிறிதும் அசையாமல் இருப்பதற்காக, அஷ்டபந்தனம் என்ற எட்டு விதமான பொருட்கள் கலந்த மருந்தின் சாந்து சாற்றப்படும்.

விக்ரஹ பிரதிஷ்டைக்கு முன்பு அஷ்டபந்தன சாந்தை பீடத்தில் சாற்றூதல்

 அஷ்டபந்தன மருந்து கலவை தயாரிப்பதற்கு, ‘கொம்பரக்கு’, ‘சுக்கான் தூள்’, ‘குங்கிலியம்’, ‘கற்காவி’, ‘செம்பஞ்சு’, ‘சாதிலிங்கம்’, ‘தேன்மெழுகு’, ‘எருமை வெண்ணெய்’ ஆகிய எட்டுப் பொருட்கள் தேவைப்படுகின்றன. இந்த எட்டுப் பொருட்களையும் குறிப்பிட்ட வரிசை முறைப்படி ஒவ்வொன்றாக சேர்த்து, உரலில் இட்டு தக்கபடி இடித்து, குறிப்பிட்ட பதம் கொண்டதாக தயாரிக்கப்படும்.  இந்த அஷ்ட பந்தன மருந்து, தெய்வ மூர்த்தத்தைப் பீடத்துடன் அழுந்தப் பிடித்துக்கொள்ளும்.

அஷ்டபந்தன சாந்து இடித்தல்

இதன் பின்னர் முக்கியப் பீடத்தையும் துணைப் பீடத்தையும் இணைக்க திரிபந்தனம் என்னும் சுக்கான் தூள், கருப்பட்டிக் கசிவு, முற்றிக் கனிந்த பேயன்பழம் ஆகியவற்றை கலந்த சாந்தைச் சேர்ப்பார்கள்.  .இந்த அஷ்டபந்தன சாந்து  12 வருடங்களில், தன் சக்தியை இழந்துவிடும், எனவே அதனை எடுத்துவிட்டு புதிதாக அஷ்டபந்தனம் சாற்றி கும்பாபிஷேகம் செய்வார்கள். இதற்கு ஜீர்ணோத்தாரணம் என்று பெயர்.


பெரிய ஆலயங்களில் வெள்ளியை உருக்கி பந்தனம் செய்து பிரதிஷ்டை செய்திருப்பார்கள். இதற்கு ரஜிதபந்தனம் என்று பெயர். இந்த ஆலயங்களில் 25 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடக்கும்.

மிகப்பிரமாண்டமான ஆலயங்களில் தங்கத்தை உருக்கி பந்தனம் செய்து பிரதிஷ்டை செய்திருப்பார்கள். இதற்கு ஸ்வர்ணபந்தனம் என்று பெயர். இந்தஆலயங்களில் 50 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறும்.

கும்பாபிஷேகத்தில், கும்பம் – கடவுளின் உடலையும்,, கும்பத்தின் மீது சுற்றப்பட்ட நூல் – 72,000 நாடி, நரம்புகளையும்,, கும்பத்தில் ஊற்றப்படும் நீர் – ரத்தத்தையும், அதனுள் போடப்படும் தங்கம் – ஜீவனையும், மேல் வைக்கப்படும் தேங்காய், தலையையும், பரப்பட்ட தானியங்கள்: ஆசனத்தையும் குறிக்கின்றது.

இது மட்டும் இல்லாமல் யாக மேடையில் சந்தனம், மலர்கள் மற்றும் வஸ்திரம் ஆகியவையும் அமைக்கப்படுகின்றன

கும்பாபிஷேக வழிமுறைகளும் கிரியைகளும்;

ஆவாஹனம்;  ஆவாஹனம் என்றால் கும்பத்தில் உள்ள நீருக்குள் மூர்த்திகளை எழுந்தருள செய்தல் என்பது பொருள். கும்பத்தை முதலில் கோயிலில் உள்ள தெய்வத்திருவின் அருகில் வைத்து தர்ப்பை, மாவிலை ஆகியவற்றைக் கொண்டு மந்திரங்கள் ஓதி, பிம்பத்தில் விளங்கும் மூர்த்தியை கும்பத்தில் எழுந்தருளச் செய்வார்கள். பிறகு அந்த கும்பத்தை யாகசாலைக்கு எழுந்தருளச் செய்வார்கள். தர்ப்பையின் மூலம் கும்பத்தில் உள்ள தெய்வீக சக்தியை பிம்பத்திற்கு மீண்டும் செலுத்துவார்கள்.

கும்பம்; யாகசாலையில் மந்திரம், கிரியை, தியானம் ஆகியவற்றுடன் வளர்க்கப்பட்டு எழும் புகையுடன் வேத ஒலி, சிவாகம ஒலி, மறை ஒலி ஆகியவற்றுடன் பக்தர்களின் நல்ல எண்ணங்களும், எங்கும் நிறைந்திருக்கின்ற திருவருள் சக்தியை தூண்டிவிட்டு கும்பத்தில் விளங்கச் செய்யும். அப்போது கும்பம் தெய்வீக சக்தி பெறும். இந்த கும்பத்தை சிவனின் வடிவமாக ஆகமங்கள் கூறுகின்றன.

பாலாலயம்; கும்பத்தை கோயிலில் உள்ள தெய்வச்சிலை அருகில் வைப்பார்கள். தர்ப்பை, மாவிலை கொண்டு மந்திரங்கள் ஓதி, தெய்வ வடிவில் விளங்கும் மூர்த்தியை கும்பத்திற்கு மாற்றுவார்கள். பின்பு அதை வேறிடத்திற்கு எழுந்தருளச் செய்வார்கள். இதை  பாலாலய பிரவேசம் என்பர்.

கிரியைகள்

கும்பாபிஷேகம் நடக்கும்போது ஒரு காலத்தில் 64  கிரியைகள் செய்யப்பட்டன. காலப்போக்கில் 55 கிரியைகள் செய்யப்பட்டன. ஆனால் தற்போது எல்லா கிரியைகளும் செய்யப்படுவதில்லை. 64ல்  பின்வரும் முக்கியமான கிரியைகளை மட்டும் தேர்ந்தெடுத்து  இபோது கும்பாபிஷேகத்தை நடத்துகின்றனர்.

  • ஆற்றல் மிக்க ஓர் ஆசாரியனைத் தேர்ந்தெடுத்து இறைவனின் அனுமதி பெற்று நியமனம் செய்யும்,. அனுக்ஞை .
  • இறைவனிடம் நமது தேவைகளைக் கோரிக்கையாக வைக்கும் சங்கல்பம் .
  • பூஜை பாத்திரங்களுக்குரிய தேவதைகளுக்குப் பூஜை செய்யும் பாத்திர பூஜை .
  • கணபதியை வழிபடும் கணபதி பூஜை .
  • வருண பகவானையும், சப்த நதி தேவதைகளையும் வழிபடும் வருண பூஜை.
  • பசு மூலமாக கிடைக்கும் பால், தயிர், நெய், பசு நீர், பசு சாணம் ஆகியவற்றை வைத்துச் செய்யப்படும் கிரியையான பஞ்ச கவ்யம் .
  • தேவர்களை வழிபடும் வாஸ்து சாந்தி 
  • திக்பாலர்களை வணங்கும் பிரவேச பலி 
  • ஆலயம் நிர்மாணம் செய்கையில் கஷ்டப்படுத்திய பூமா தேவியை மகிழ்விக்கச் செய்யப்படும் பரிகாரம். மண் எடுத்து வழிபடும் மிருத்சங்கிரஹணம் ..
  • எடுத்த மண்ணில் விதைகளைப் பயிரிட்டு முளைப்பாரி வளரச் செய்து , அதில் 12 சூர்யர்களான வைகர்த்தன், விவஸ்வதன், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகபிரகாசன், லோகசாட்சி, திரிவிக்ரமன், ஆதித்யன், சூரியன், அம்சுமாலி, திவாகரன் போன்றவர்களையும் ,சந்திரனையும் வழிபடும் அங்குரார்ப்பணம் 
  • ஆசாரியனுக்கும் மற்ற உதவி ஆசாரியர்களுக்கும் கையில் காப்புக் கட்டும் ரக்ஷாபந்தனம் .
  • கும்பங்களை இறைவன் உடலாக நினைத்து அலங்காரம் செய்யும் கும்ப அலங்காரம்.
  • விக்கிரகத்தில் இருக்கும் சக்தியை கும்பத்துக்கு மந்திரப் பூர்வமாக அழைக்கும் கலா கர்ஷ்ணம் .
  • கலசங்களை யாகசாலைக்கு அழைத்து வரும் யாகசாலை பிரவேசம் ..
  • யாகசாலையில் உள்ள சூரிய சந்திரனை வழிபடும் சூர்ய, சோம பூஜை .
  • யாகசாலையை பூஜை செய்யும் மண்டப பூஜை .
  • விக்கிரகங்களை மந்திரத்தின் மூலமாக சுத்தம் செய்யும் பிம்ப சுத்தி .
  • மிக முக்கியமானதான இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை ஒரு இணைப்பு மூலமாக விக்கிரகங்களுக்குக் கொண்டு சேர்க்கும் நாடி சந்தானம் .
  • 36 தத்துவத் தேவதைகளுக்கும், உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ருக்களுக்கும் சாந்தி செய்யும் விசேஷ சந்தி 
  • பூத (மனித) உடலை தெய்வத்தின் உடலாக மந்திரப் பூர்வமாக மாற்றி அமைக்கும் பூத சுத்தி 
  • 36 தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்கிரகங்களுக்குக் கொண்டு சேர்க்கும் ஸ்பர்ஷாஹுதி 
  • எட்டு பொருள்களால் மருந்தினால் மூர்த்தியையும், பீடத்தையும் ஒன்று சேர்க்கும் அஷ்டபந்தனம்.
  • யாகத்தைப் பூர்த்தி செய்யும் பூர்ணாஹுதி .
  • யாக சாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூஜிக்கப்பட்ட கும்ப நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்யும் கும்பாபிஷேகம் .
  • கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்கிரகத்துக்கு முறைப்படி அபிஷேகம், அலங்காரம் செய்யும் மஹாபிஷேகம் 
  • இறைவனை 48 நாட்கள் விசேஷ அபிஷேக பூஜைகள் செய்து முழு சக்தியுடன் இருக்கச் செய்யும் மண்டலாபிஷேகம் .

இவற்றோடு யாக குண்டங்களை அமைக்கவும் நெறிகள் உள்ளன.

 ஏக குண்டம் – ஒரு குண்டம் அமைத்தல்.

 பஞ்சாக்னி – ஐந்து குண்டம் அமைத்தல்.

 நவாக்னி – ஒன்பது குண்டம் அமைத்தல்.

உத்தம பக்ஷம் – 33.குண்டம் அமைத்தல்.

 யாக குண்டத்திற்கான மணல் பெரும்பாலும் புனித நதிப் படுகையிலிருந்தே பெறப்படும். கிடைக்காத பட்சத்தில் கிடைக்கின்ற மணலை நன்கு சுத்தப்படுத்தி கங்கை, காவிரி போன்ற புனித நீரைத் தெளித்து, மிருத்திகா பூஜை செய்த பிறகே அதனை ஹோம குண்டத்தின் அடித்தளமாகப் பயன்படுத்துதல் வேண்டும்.

ஹோமத்திற்காக சுத்தமான பசு நெய்தான் ஆஹுதி அளிக்கப்பட வேண்டும். உலோகப் பாத்திரங்களைத் தவிர்த்து மரக்கிண்ணம், மரப்பாத்திரம் அல்லது  வெள்ளி, தங்க கிண்ணங்களையோ, தென்னை, பனை ஓலையினால் ஆன தொன்னைகளையோ பயன்படுத்தலாம் .

யாகத்தில் ஆஹுதியை இடும் பொழுது மரக்கரண்டியை அல்லது மாவிலையை மட்டும் பயன்படுத்துதல் வேண்டும். யாக மரக்கரண்டியும். மா, பலா, தேக்கு, சந்தனம், வேங்கை போன்ற மரங்களில் செய்யபட்டிருக்கவேண்டும் . யாகத்தில் இடப்படும் ஆஹுதிகள், அரசு, ஆல், வேம்பு போன்ற மூலிகை மரப் பொருட்களாக இருக்க வேண்டும். ஆண்டாண்டு காலமாக மனதில் நெஞ்சிலும் உள்ள தீயவினைப் படிவுகளை யாக புகை  நீர் வடிவில் வெளியேற்றுகின்றது

யாக குண்டங்களும் தெய்வங்களைப் பொறுத்து மாறுபடுகின்றன. அவை;

விநாயகர் – பஞ்சகோணம்

முருகர் – ஷட்கோணம்

சிவன் – விருத்தம்

அம்மன் – யோணி

பரிவாரம் – சதுரம்.

கும்பாபிஷேகத்திற்கு செய்யப்படும் யாகங்களை எத்தன முறை செய்ய வேண்டும் என்றும் விதிமுறை உள்ளது. அது 2.காலம், 4.காலம், 8.காலம், 12.காலம் வரை செய்யும் முறை வழக்கத்தில் உள்ளது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை (ஒரு மாமாங்கம் = 12 வருடங்கள்) கும்பாபிஷேகம் செய்வது என்பதே மிகவும் விசேஷமானது.. அஷ்டபந்தனங்களின் சக்தியை மீண்டும் பெறுவதற்காக மட்டுமன்றி இவ்வாறு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வதற்கான வேறு சில அறிவியல் ரீதியான காரணங்களையும் பார்க்கலாம்.

 பழங்காலக் கோயில்களில் இடிதாங்கிகள் என்று தனியாக ஒன்றும் கிடையாது.  இடிதாங்கியை பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் 18 ஆம் நூற்றாண்டில் தான் கண்டுபிடித்தார்.

இடி மின்னல்கள் கோபுரத்தைத் தாக்கும் போது கோபுரங்கள் இடிந்து விழ வாய்ப்புகள் ஏராளமாக இருந்தும் நம் கோயில் கோபுரங்கள் பாதிக்கப்படாமல் இருந்திருக்கின்றன. ஏனெனில்,  இடி மின்னல்களில் இருந்து கோபுரத்தையும் கோயிலையும் காக்க, கும்பங்களில் காற்றுப்புகாதபடி  நவதானியங்களை நிரப்பி வைத்து விடுவார்களாம். அப்படி வைக்கப்படும் கும்பமும் அதில் உள்ள தானியங்களும் இடி தாங்கியாக செயல்பட்டு இடி மின்னலை நீர்த்துப் போக வைத்து விடும் தன்மையை  பன்னிரண்டு ஆண்டுகள் மட்டுமே கொண்டிருக்கும்.. மீண்டும் கோயில் புனரமைப்பின் போது கும்பமும் உள்ளிக்கும் தானியங்களும் புதிதாக மாற்றப்படுவதால் இடி தாங்கியாக மீண்டும் அது செயல்பட ஆரம்பித்து விடும்.

உறைபனியினடியில் உலகின் மிக முக்கிய தாவரங்களின் விதைகளை சேமித்து வைத்திருக்கும் விதைவங்கிகள் உலகின் முக்கியமான இடங்களில் இருக்கின்றன. பேரழிவு எற்பட்டு உலகத்தின் மொத்த தாவரங்களும் அழிந்து போனாலும் மீண்டும் அனைத்தையும் பயிரிட்டு உருவாக்கிக் கொள்வதற்காகத்தான் இப்படி விதைகள் சேமித்து வைக்கப்படுகின்ற்ன. பழங்காலத்தில் இத்தைய விதை சேமிப்பு வங்கிகளாக இந்த கலச கும்பங்களே இருந்திருக்கின்றன. கும்பங்களின் உள்ளிருக்கும் (மூன்று முதல் ஐந்து கிலோ அளவுள்ள நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள் அல்லது சில பகுதிகளில் ராகி,கம்பு,சோளம்,நெல், சாமை, திணை, தட்டைப்பயிறு, பாசிபயறு, துவரை)  தானிய விதைகள், 12 வருடங்களுக்கு முளைக்கும் திறனுடன் இருக்கும் பின்னர் அவை மீண்டும் புதிதாக மாற்றப்படும். இயற்கைப்பேரழிவுகள் ஏற்பட்டு கோவில் இருக்கும்  இடத்தின் தாவரங்கள் அனைத்தும் அழிந்தாலும், அந்ந்ததக் கோவில்கள்  இருக்குமிடங்களில் மீண்டும் அவற்றை சாகுபடி செய்து மனித குலத்தை காக்கும் இறைவழியிலான ஏற்பாடே இந்த கும்பங்களில் தானியங்களை சேர்த்துவைக்கும் வழக்கமென்கிறது மற்றுமொரு  அறிவியல் காரணம்.

இப்படி ஆன்மிகக் காரணங்களோடு பல அறிவியல் காரணமும் கும்பாபிஷேகத்தின் பின்னணியில் உண்டு

 கும்பாபிஷேகத் தினத்தன்று ஆலயத்துக்குச் சென்று வழிபட்டால், முப்பது முக்கோடித் தேவர்களின் ஆசியும் அருளும் கிடைக்கும்..  கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள இயலாதவர்கள், 48 நாட்கள் நடக்கும் மண்டல பூஜையில் கலந்துகொண்டும் அதே நன்மைகளைப் பெறலாம்.. ஒரு கும்பாபிஷேகத்தைக் காண்பது மூன்று ஜென்மங்களில் நாம் செய்த பாவத்தைப் போக்கக் கூடியது என்கிறது ஐதீகம்

வடதுருவத்திலிருக்கும் விதைப்பெட்டகம்

பெருமாள் முருகனின் கூளமாதாரி

கூளையன் என்னும் மாதாரிச்சிறுவன் பண்ணையக்காரரிடம் வருடக்கூலிக்கு விடப்படுகிறான். ஆடுகளை மேய்ப்பதும் சில்லறைவேலைகளை செய்வதும் பழையதை உண்பதும் வசவுகளை வாங்கிக்கொள்வதுமாக செல்லும் அவலவாழ்வுதான் எனினும் அவனுக்கும் அவனையொத்த அடிமைகளுடன் நட்பும் உறவுமாக ஒரு உலகிருக்கிறது. அவ்வுலகில் அவன் மகிழ்ந்திருக்கிறான். ஆடுகளுக்கு பெயரிட்டு அவைகளுடன் ஒட்டி உறவாடிக்கொண்டு அவைகளுடன் தாய்மொழியில் எப்போதும் பேசிக்கொண்டும் அதட்டிகொண்டும் இருக்கும் எளியவன் கூளையன்

அதிகாலையில் சாணம் அள்ளி, வாசல் பெருக்கி கைபடாமல் துணிசுற்றி மேல்சாதியினருக்கு பால் போசியை கொண்டு சென்று,  பட்டி நீக்கி ஆடுகளை மேய்க்கக்கொண்டு போவது தேங்காய்சிரட்டையில் காபிகுடிப்பது, வசவுகளையும் அடிகளையும் சராமாரியாக வாங்கிக்கொள்வதுமாய்  இருக்கும் கூளையன் என்னும் அறியாச்சிறுவனே கதைநாயகன்

சட்டியில்  கிழவனின் மலமும் மூத்திரமும் அள்ளும் நெடும்பன், சீக்குபண்ணயக்காரியின் கைக்குழந்தையையும் இடுப்பில் வைத்துக்கொண்டு  ஆடுமேய்க்க வரும் செவுடி,அவளின் நோயில் வெளுத்திருக்கும் தங்கை பொட்டி,  எருமைகளையும் மேய்க்கும் வவுறி, கள் தரும் மணி, பூச்சி  நாய், வெயில் மழை இரவு நிலவு மண்ணில் குழிபறித்து விளையாடும் பாண்டி, கிணற்று நீச்சல் பனம்பழம் புளியங்காய் பாறைச்சூட்டில் வறுத்த காடை முட்டைகள், இவர்களாலும் இவைகளாலும் ஆனது கூளையனின் உலகு

நாவல் முழுக்க பரந்துவிரிந்திருக்கும் மேட்டாங்காடும் பண்ணயக்காரர்களின் அழிச்சாட்டியமும்   மாதாரிகளின் அவலவாழ்வும்  விரிவாக அக்களத்திற்கேயான வாழ்வுமுறைகளின் விவரிப்புடன் சொல்லப்பட்டிருக்கிறது

மாட்டுக்கறி உண்னும்பொருட்டு  கூளையனுக்கு கிடைக்கும் ஒரு ராத்திரி விடுதலையை இன்னுமொரு நாள் அவனாக நீட்டிப்பது, கிழங்குப்பணத்தை அவனையே வைத்துக்கொள்ள பண்ணயக்காரர் சொல்லுவது இந்த இரண்டு இடங்களே  நமக்கு கொஞ்சம் ஆசுவாசம் தருவதாக இருக்கின்றது முழு நாவலிலும்

பண்ணையக்காரரின் அத்தனை ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் கேளாதவன் போலவே இருக்கும் கூளையன் தேங்காய் திருடி எதிர்பாரா பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்கிறான் கிணற்றில் கயிற்றில் கட்டித்தொங்கவிடப்படும் கூளையன் இறுதியில்  பன்ணையக்காரரின் மகன் செல்வத்தை கிணற்று நீரில் முக்கி கொல்வதில் முடிகின்றது கதை

விவசாயம் கூலிவாழ்க்கை, கிராமத்டு வாழ்வு, சாதி வேறூபாடுகள், ஆடுமாடு வளர்ப்பிலெல்லாம் பரிச்சயமுள்ளவர்களால் எளிதில் தொடரமுடியும் கதைஇது

அத்தைய வாழ்வில் அறிமுகம்கூட இல்லாதவர்களால் இந்நாவல் விரிக்கும் களத்தையும் விவரிக்கும் கதையையும் கற்பனையில் சித்தரித்துக்கொள்வது கடினமென்றே எனக்கு தோன்றுகிறது

 மைனாக்களை வேடிக்கை பார்ப்பது, மாட்டுக்கறி இரவிற்கு பிறகு தங்கைதம்பியை பிரிய மனமின்றி  தவிப்பது, பீடி குடித்துப்பழகுவது  ஆமரத்துக்கள் இறக்க கோவணத்தை அவிழ்த்துவிட்டு மரம்ஏறி அங்கிருந்து தெரியும் காட்டைப்பார்ப்பது  பனம்பழங்களை பொறுக்கி கிழங்குபோடுவது புளியம்பழம் உலுக்குவது இரவில் திருட்டுத்தனமாக பார்க்கும் தலைவர் படம் பட்டி ஆடு காணமால் போவது தேங்காய் திருடிமாட்டிக்கொள்வது என ஒரு மாதாரிச்சிறுவனின் வாழ்வை அப்படியே நம்மால் காணமுடியும்

கதையோட்டம் தொடர்ந்து சீராக இருப்பதில்லை சில சமயம் தேங்கி நிற்கிறது, சில சமயம் பீறீட்டு பாய்கிறது சில சமயம் வறண்டும் போகிறது

வளர்த்த வீரனின் கறியை திங்கமறுக்கும் கூளையன் நண்பனாகவும் இருந்து முள்ளுக்குத்தாமல் பழம் பொறுக்க செருப்பை தந்த, பட்டிக்காவலில் அப்பனுக்கு தெரியாமல் மச்சுக்குள் வந்து படுத்துக்கொள்ளச் சொன்ன,  கள்ளிறக்குகையில் துணை இருந்த, பள்ளிக்கூட கஷ்டத்தை கன்ணீருடன் பகிர்ந்துகொண்ட செல்வத்தை கிணற்று நீரில் அறியாமலும் தவிர்க்கமுடியாமலும் முக்கிக்கொல்வதுடன் முடியும் இக்கதை, வாசிக்கையில் பல இடங்களில்  காய்ந்த வயிற்றில் மிளகாய்கள் நீச்சம் போட்டு மிதக்கும் கம்மஞ்சோற்றுக்கரைசல்  இறங்குவது போல் குளுகுளுவென்றும் ஆங்கரமாய் அடிக்கும்வெயிலைப்போல கடுகடுவென்றும்  மாறி  மாறி கூளையனின் வாழ்வை சொல்கிறது, ஆசிரியரே சொல்லியிருப்பதுபோல் சொல்லாத பல கதைகளும் உள்ளது சொல்லப்பட்ட இக்கதையினுள்ளே

அற்றைத்திங்கள்

அற்றைத்திங்களில்  பெளர்ணமி கடந்து இரண்டு நாட்களான அந்நிலவு முதல் அத்தியாயத்திலிருந்து இறுதியான  23 ஆம் அத்தியாயம் வரைக்குமே  தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது., நாம் பயணிக்கையில் நம்மைத்தொடரும் நிலவு அவ்வப்போது கட்டிடங்களிலும் மரங்களிலும் மறைவது போல இங்கும் சில அத்தியாயங்களில் அது மறைந்தாலும் இறுதியில் மீண்டும்  குட்டைகளுக்குள் நீர்ப்பிம்பமாக வெளிவந்து விடுகின்றது.  காடுகள் அடர்ந்திருந்ததிற்கும்,அதனுள் பூர்வகுடியினர் மகிழ்ந்திருந்ததற்கும், நாகரீகம் என்னும் பெயரில் அத்தனைக்கும் ஆசைபட்டவர்களால் மெள்ள மெள்ள அவையெல்லாம் அழிந்துகொண்டிருப்பதற்கும், அனைத்திற்கும்  யுகங்களைக்கடந்த  மவுனசாட்சியாய் அந்நிலவு இருக்கிறது .  அட்டைப்படத்திலுமிருக்கிறது ஓர் பாலெனப்பொழியும் நிலவு கனிமங்கள் சுரண்டப்படுவதை மேலிருந்து பார்த்தபடி.  நினைத்திருக்குமாயிருக்கும் நல்ல வேளையாய்  தன்மேல் கால்பதித்த மனிதன் இன்னும் கரைத்தழிக்க வரவில்லையென்று     

நல்ல கதை , கதையென்று தட்டச்ச தயக்கமாயிருக்கிறது ஏனெனில் இதில் புனைவெதுவுமே இல்லை பெயர்களும் சில இடங்களும் வேண்டுமானால் புனையப்பட்டவையாயிருக்கலாம் மற்றவையெல்லாமே கசக்கும் உண்மையல்லவா? குடியிருக்கும் வீட்டின் கூரையை ஓட்டையிடும் நம் முட்டாள்தனத்தைப்பதிவுசெய்திருக்கும் புத்தகம் இது.

அழகாக கட்டமைக்கபட்டிருக்கிறது நாவல், புதிய யுகத்தைச்சேர்ந்த கொதிக்கும் குருதியுள்ள ஒரு இளைஞன் , ஒரு யுவதி, மிக மெல்லிய கோடாக சொல்லப்பட்டிருக்கும் அவர்களுக்கிடையேயான காதல், இணைந்து பணியாற்றும் சூழலில், அசாதாரண நிகழ்வுகளில்  அவர்களின் நெருக்கம் கூடுவது, பூர்வகுடியினரின் இயற்கையோடு இணைந்த வாழ்வும், அவ்வாழ்விற்கு  மெல்ல,மெல்ல ஆனால் மிக வலுவாக வந்துகொண்டிருக்கும் ஆபத்தும்,  அதிகாரதுஷ்பிரயோகமும், பிரபலங்களின் ஆதிக்கமும் வெளிநாட்டுச்சக்திகளின் பேராசையும், காடுகளும், பூர்வகுடியினரின் வாழ்வும் அழிவதற்கு காரணமாவதும், மனச்சாட்சியுள்ள சிலரின் கையாலாகாத எதிர்ப்புமாக கதை சொல்லப்படுகிறது.

 விளிம்பு நிலை மக்களின் தேவைகளை ஆதிக்கச்சக்தியினர்  வேலைவாய்ப்பாகவும் வெள்ளித்தட்டாகவும்  நிறைவேற்றி பதிலுக்கு வாழ்வாதாரங்களை விலைபேசுவதையும் புரியவைக்கும் கதையோட்டம். நேர்க்கோட்டில் கதையைச்சொல்லிச்செல்லாமல், குடும்பத்தை, அங்கிருப்பவர்களின் உணர்வுகளை ஆசாபாசங்களை, அக்கறையை,   அன்னியசக்திகளின் திட்டங்களை, மின்னஞ்சலும் கடிதங்களும் இன்றைய செய்திகளுமாய் இடையிடையே காட்டுவது , இப்படி  சொல்லவந்ததை தெளிவாக முன்கூட்டியே கட்டமைத்து பின்னர் அதற்கேற்ப  கதையைக்கொண்டுசென்றிருப்பது நல்ல உத்தி

பரணியின் அம்மா ஒரு typical  அம்மா மற்றும் மாமியார். அவரது பாத்திரம் மிக உயிர்ப்புடன் சித்தரிக்கபப்ட்டிருக்கிறது. கணவன் என்ற ஒற்றைப்பிம்மத்திற்குள் வாழ்வை அடக்கவேண்டியிருப்பது, அம்புலி என்னும் விளி தேய்ந்து தற்போது  பேச்சுக்கள் மொட்டையாக எழும்பி அடங்குவது, மிக, மரநிழலில் வாகனத்தை நிறுத்துவது, இருவரின் சம்பாஷணை போய்க்கொண்டே இருக்கையில் எழுத்தின் வடிவத்தை கொஞ்சம் போல மாற்றிக்கொடுத்ததிலேயே அது தொழிலாளர்களின் போராட்டமுழக்கமென்றும், தொழிலாளர்கள் சார்பாக பேசும் ஒருவரின் மனக்குமுறலென்றும் வாசிப்பவர்களுக்கு புரியும்படி எழுதி இருப்பது, அழகாக அத்தியாயங்களை முடிப்பது இப்படி பல நுண்ணிய,  அழகியவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்

மரங்களைக்கட்டித்தழுவிக்கொண்டு அவற்றை காப்பாற்றிய சிப்கோ இயக்கத்தையும், மணலில் புதையும் போராட்டத்தையும் கூட தொட்டுச்சென்றிருக்கிறது நாவல். BUFFER ZONE,  MONOCULTURE, காப்புக்காடுகள், புலிகளின் அழிவு, யானைகளின் வழித்தடம் இப்படி என் துறை தொடர்பான பலவறையும் வாசித்ததில் நான் அற்றைத்திங்களுக்கு இன்னும் நெருக்கமானேன். (நானும் பரணி நட்சத்திரமென்பதாலும் சிறுமியாயிருக்கையில் வந்த பிரைமரிகாம்ப்ளெக்ஸுமாய், என்னையும் கதையின் நாயகியாய் பாவித்துக்கொண்டதில்  இன்னும் கூடுதல் அணுக்கமும்  கிடைத்தது.) ):

தேனடைகளை கொஞ்சம் மிச்சம் வைக்கும் பூர்வகுடியினரின்  sustainbale harvesting  முறைகளை நானும் அவர்களுடன் இருக்கையில் கவனித்திருக்கிறேன். கிழங்குகளை அகழ்ந்தெடுக்கையில் 3ல் ஒரு பங்கு மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். கிழங்குகளிலிருந்தே இனப்பெருக்கம் செய்யும் தாவரங்களை அழிவிலிருந்து காப்பாற்ற. டாப்ஸ்லிப்பின் 35 tribal settiment  களில்  பலவற்றில் நான் பல காலம் செலவழித்திருக்கிறேன்.

பெண்ணியம் தொடர்பான சில செய்திகளும் இதில் சொல்லி இருப்பது போலவே நடைமுறையில் இருப்பவைதான்.  மான்களின் கர்ப்ப காலத்தில் அவற்றை வேட்டையாட மறுக்கும் அவர்களின் இயற்கை சார்ந்த அறத்திற்கும் மதக்கலவரங்களின் போது மாற்று இனத்தைச்சேர்ந்த கர்ப்பிணியின் கருக்குழந்தையை கைவிட்டு எடுத்து வெளியே வீசிய  மனிதர்களின் வெறித்தனத்திற்கும் என்ன பிழையீடிருக்கிறது நம்மிடம்? காட்டுமிராண்டி என்னும்  சொல்லை வசையாக பயன்படுத்த தகுதியற்றவர்கள் நாம்

கேரளாவின் அமைதிப்பள்ளத்தாக்கில் ஒரு பயிற்சியின் பொருட்டு அடர்ந்த வனப்பகுதியிலிருந்த நாட்களில், அப்போது  காடு முழுவதும் பூத்திருந்த மூங்கில் பூக்களை, அது ஒரு அபூர்வ நிகழ்வென்பதால் என் மாணவர்களுக்கு காட்ட கொஞ்சம் எடுத்துச்செல்ல அனுமதி கேட்ட போது அங்கிருந்த பூர்வகுடியினைச்சேர்ந்த ஒரு இளைஞன் திட்டவட்டமாக மறுத்ததும், கீழே உதிர்ந்துகிடந்த சில மலர்க்கொத்துக்களை பெருமுயற்சியின் பேரில்  அங்கிருந்த என் ஆசிரியர் வாங்கித்தந்ததும் நினைவிற்கு வந்தது. அத்தனைக்கு அவர்கள் காடுகளை சொந்தமென்று நினைத்து வாழ்ந்து வருகின்றார்கள் அந்த இளைஞனின்  சின்னஞ்சிறிய 30/40 வீடுகளே இருக்கும் ஊரின் பெயர் கருவறை. எத்தனை பொருத்தமிது இல்லையா?

 இயற்கை அன்னையின் கருவறையிலேயே இன்னும் இருக்கும் படி அருளப்பட்டவர்களை விரட்டிவிட்டு கனிம வளக்கொள்ளையிலிறங்கியிருக்கும் பேராசைக்காரர்களின் கதையென்பதால் உணர்வுபூர்வமாகவே 2 மணி நேரத்தில் வாசித்து முடித்தேன் இதை.

ஒரு பகுதியில் குறிப்பிடிருந்ததைபோலவே பூர்வகுடியினர் என்றால் இலையாடைகளுடனிருப்பார்கள் என்று முதன் முதலாக என் ஆய்வினைத்துவங்கிய போது நினைத்துக்கொண்டு சோலையாறு வனப்பகுதிக்கு சில ஜெர்மானிய நண்பர்களுடன் காட்டில் மேடுபள்ளங்களில் ஏறி இறங்கி புடவை கிழிந்து சோர்ந்து நாங்கள் அவர்களின் குடியிருப்பிற்குள் செல்கையில் அன்றைய தினம் அவர்களின் பண்டிகை என்பதால் மிக நேர்த்தியாக உடுத்திக்கொண்டு handbag  போட்டுக்கொண்டு நகச்சாயம் கூட பூசிக்கொண்டிருந்த அவர்கள் எங்களை பூர்வகுடியினரைப்போல வேடிக்கை பார்த்த கதையையும் நினைத்துக்கொண்டேன்Ecotourism போல இப்போது துவங்கப்பட்டு நல்ல லாபம் தந்துகொண்டிருக்கும் religious tourism  பற்றியும் ஆசிரியர் கலைச்செல்வி ஒரு பிடி பிடித்திருக்கிறார்.

வனத்துறை அதிகாரிகளே வனத்தை அழிக்க உடந்தையாயிருப்பதையும் பூர்வகுடியினரின் மொழியிலேயே சொல்லி இருப்பது சிறப்பு.வனத்துறையில் அதிகாரியாயிருக்கும் என் மாணவன் சொல்லுவான் காட்டுத்தீ பெரும்பாலும் அதிகாரிகள் ஏற்படுத்துவது என்று, மிக முக்கியமான விலைஉயர்ந்த மரங்களை வெட்டி கடத்திவிட்டு அந்த இடத்திற்கு தீ வைத்துவிட்டு சாம்பலாகிபோனதென்று கணக்கு காட்டப்படுவதை  எந்தக்கோடையிலும் சாதாரணமாகக்காணலாம்

            இறுதியில் பெற்றோரின் பாசத்தை இயற்கையுடன் ஒப்பிட்டது அழகு. பிணந்தின்னிக்கழுகுகளும் உடும்பைப்பிடித்த நரியும் படிமங்களாக எனக்குப்பட்டது. குணாவிடம் கதறி அழுத பரணியைபோல வாசித்து முடித்தபின்னர் மனம் கையலாகாத்தனத்தில் கதறியது. வேறேதும் செய்ய இயலாததால்.

சமூக அக்கறையுடன் சொல்லபட்டிருக்கும் ஒரு மிக அழகிய கதை அற்றைத்திங்கள் முழுக்கதைக்கும் சாரமாய் இருக்கிறது ‘’பெருங்காட்டின் ஒற்றைத்துளி’’ எனும் பசுமூங்கிலில்  முடையப்பட்ட முறத்தினை சொல்கையில். .

ஒரு சில தட்டச்சுப்பிழைகள் இருக்கின்றன, மாக்கல்லுபந்தம் உக்கடத்தீ இவையெல்லாம் என்னவென்று எனக்குப்புரியவில்லை,  அப்படி பலருக்கும் புரியாமல் போயிருக்கும் வாய்ப்பிருப்பதால், அவற்றிற்கெல்லாம்  கதையிலேயே விளக்கம் சொல்லி இருந்திருக்கலாம். மரவள்ளிகிழங்கென்றே இதுவரை வாசித்திருக்கிறேன் ’’மரவல்லி’’ யென்றல்ல, ஒருவேளை அப்படியும் ஒரு வழங்கல் இருக்குமோ என்னமோ, பின்னர் ஒரு இடத்தில் புலி வேட்டைக்கு வரும் ஆங்கிலேயெ அதிகாரிகளைக்குறித்தான ஒரு பத்தியில் துரைசாணி என்று ஒரு ஆண் அதிகாரியை குறிப்பிடபட்டிருக்கிறது  பொதுவில் துரையின் மனைவியே துரைசாணி

நினைவுதிர்காலம் -யுவன்

டிசம்பர் 2019 விஷ்ணுபுரம் விருது விழாவில் ஊர்சுற்றி கானல் நதி மற்றும் நினைவுதிர்காலம் ஆகியவற்றை வாங்கி வந்திருந்தேன். கானல் நதியை பொள்ளாச்சியிலிருந்து கும்பகோணம் வரையிலான ஒரு பயணத்தில்  தொடர்ச்சியாக வாசித்து முடித்தேன். ஊர்சுற்றியை எனக்கு முன்பே வாசித்திருந்த  நண்பர்களுடன் அதைக்குறித்து அவ்வப்போது பேசிக்கொண்டும் கதையைக்குறித்து சிலவற்றை  விவாதித்துக்கொண்டும்   ஒரு வார இறுதியில்வாசித்தேன். கடந்த திங்கட்கிழமை நினைவுதிர்காலத்தை துவங்கினேன். நேற்று வாசித்து முடித்தேன்.

யாரிடமும் வாசிப்புக்குறித்து பகிர்ந்துகொள்ளக்கூட முடியவில்லை . அப்படி ஒரு நிறைவு எனக்குள்.

எந்த புத்தகம் வாசித்தாலும் கதையும் மொழிநடையும் சில வர்ணனைகளும் வாசிக்கையில் நானே கட்டமைத்துக்கொண்டசில காட்சிகளும் உள்ளே மீள மீள நிகழ்ந்துகொண்டிருக்கும். பின்னர் கதையைக்குறித்து எழுதுவேன் அல்லது யாரிடமாவது பேசுவேன்

நினைவுதிர்காலம் அப்படியல்லாது வேறுபட்ட உணர்வுநிலையில் என்னை வைத்திருக்கிறது. எனக்கே எதை நம்ப முடியவில்லை என்றால் இந்தக்கதை எனக்கு புரிந்துவிட்டதுதான். இசைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது . கொங்குபிரதேசத்தில் பிறந்து வளர்ந்தவள் நான். என் வாழ்வு முழுக்க இசை போன்ற நுண்கலைக்கான exposure எள்ளளவும் இன்றி காடும் தோட்டமும் வீடும் வேலையுமாய் இருந்தது.  தப்பிப்பிழைத்து எப்படியோ கல்லூரியும் பல்கலையும் போய் படித்தேன் என்றாலும் அடிப்படிஅயில் அதே கிராமத்து உழைக்கும் வர்க்கத்து மனுஷிதான் நான்.

இசைக்கும் எனக்குமான தொடர்பென்றால் எப்போதாவது திரையிசைப்பாடல்களை கேட்பதும் ’நல்லாருக்கே’ என்றோ ’சகிக்கலை இந்தப்பாட்டு’ என்றோ சொல்லுவதோடு முடிந்துவிடும். மற்றபடி இசைக்கு என்னையும் எனக்கு இசையையும் துளியும் பரிச்சயமில்லை

இந்தக்கதை முழுக்க, (இதைக்கதை என்று சொல்லலாமாவென்றும் தெரியவில்லை) இசையை , ஒரு இசைமேதையை அவரது உறவுகளை அதன் சிக்கலான பல அடுக்குகளை அவரது வாழ்வு முழுமையை இசையின் பற்பல நுட்பங்களை பல வகையான இசையை இசையாளுமைகளை சொல்லியது.  வாழ்நாளில் பள்ளிப்பருவத்தில் கணேஷ் குமரேஷின் துவக்ககால கச்சேரியொன்றைத்தவிர வேறு இசைதொடர்பான கச்சேரிகளுக்கு கூட போயிறாத என்னை இக்கதை முழுவதுமாக கட்டிப்போடுவிட்டது.

இக்கதை முழுவதையும் என்னால் அனுபவித்து ரசித்து ஆழ்ந்து வாசிக்க முடிந்ததில் எனக்கே ஆச்ச்சர்யம்தான்

ஏறத்தாழ  250 பக்கங்கள் கொண்ட முழுக்கதையையும் நேர்காணல் உரையாடல் வடிவிலேயே கொண்டு வந்திருப்பதும் எந்த இடத்திலும் சிறிதும் தொய்வின்றி கொண்டு போயிருப்பதும் சிறப்பு.

வறட்சியான ஜீவனற்ற கேள்வி பதில்களாக இல்லாமல் சாமார்த்தியமான பொருத்தமான சரியான சுவாரஸ்யமான கேள்விகளும் அதற்கு சற்றும் குறைவில்லாத பதில்களுமாய் துவக்கத்திலிருந்தே கதையுடன் ஒட்டுதல் வந்திவிட்டிருந்தது. மேலும் ஆஷாவையோ திரு ஹரிஷங்கரையோ குறித்து தோற்றம் எப்படியிருக்குமென்று எந்த அபிப்பிராயமும் இல்லாததால் அவர்களைக்குறித்து எனக்குள் ஒரு கற்பனைச்சித்திரம் உருவாகிவிட்டிருந்தது. அவரை  பல இடங்களில் நுட்பமாக வர்ணித்துமிருந்ததால் அவரின் ஆளுமைக்கு எனக்குள் சரியான வடிவமொன்று அமைந்துவிட்டிருந்தது.

அவர்கள் பேசிக்கொண்டிருந்த அறை அந்த வீடு  அவரின் செல்லப்பிராணிகள் சமையலுக்கு உதவும் பெரியவர் சமையலில் என்ன பதார்த்தங்கள் அதில் அவர் விரும்பி உண்ட இனிப்பு ஒரு விளக்கைபோடுவது அதை  அணைத்து மஞ்சள் விளக்கை போடுவது  பேசிக்கொண்டிருக்கையிலேயே அந்தி மாயம் போல வந்து கவிழ்ந்துவிடுவது,இடையிடையே அவர் ஓய்வறைக்கு செல்வது, ஆஷாவின்  கார் கோளாறாவது, அவ்வப்போது இடையிடும் சில விருந்தினர்கள் அங்கிருக்கும் அலமாரிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள் என்று விலாவாரியான விவரிப்புக்கள் இருந்ததால் நானும் அந்த அறையில் அமர்ந்திருந்தேன் என்றே சொல்லலாம். எப்பேர்ப்பட்ட ஆளூமை அவர் என்னும் பிரமிப்பு இன்னும் அகலவில்லை

மூத்த சகோதரரின் மீது மனக்குறை இருப்பினும்  மரியாதைக்குறைச்சலோ மலினமான அபிப்பிராயமோ துளியும் அற்றவர். அவரது ஆளுமை எனக்கு அவர் மீது பெரிதும் மரியாதை கொள்ள வைத்தது.

தில்லி சுல்தானின் அரசவையில் ஆஸ்தான பாடகராக இருந்த அவரது முத்தாத்தாவின் கதை மெய்ப்புக் கொள்ள வைத்துவிட்டது. அக்கதையை வாசிக்கையில் வாசிப்பதுபோலவே இல்லை எனக்கு  ஒரு புராதன கருப்பு வெள்ளைத்திரைப்படத்தில் நானும் ஒரு பாத்திரமேற்று அங்கே அக்கச்சேரியில் இசையைக்கேட்டபடிக்கு அமர்ந்திருந்தேன்.

கிராமத்தில் அழியில் எதிர்ப்பட்டவருக்கென ருத்ரவீணை வாசித்த அவரது முன்னோர், கோளாறாகி ரயில் நின்று விட அப்போது புழுதியில் அமர்ந்து அந்த கிழவனாருடன் சேர்ந்து கச்சேரி செய்த அண்ணா, விசிலிலேயே இசைத்த நண்பர், காரணமறியா அவரது தற்கொலை, காணாமலே போன இன்னொரு தோழன் என்று ஒரு புனைவுக்கதையின் எல்லா சுவாரஸ்யங்களும் இருந்தது இதில்.  பல முக்கியமான வேலைகளை புறக்கணித்துவிட்டு தொடர்ந்து வாசிக்கச்சொன்னது கதை என்னை

தெய்வீகமான முப்பாட்டன்கள்,  நேர்மையையே முக்கியமாக கொண்டிருந்த, தகப்பனார் மாபெரும் இசைமேதையான அண்ணா அவரது சில சறுக்கல்கள், அவர் மீது  இவருகிருக்கும் ஒரு மாற்றுக்கூடகுறையாத மரியாதையும் பக்தியும் ஆஷாவின் அந்தரங்க வாழ்வைக்குறித்துத் தெரிந்துகொண்ட சில விஷயங்களுமாக நினைவுதிர்காலம் என்றென்றைக்குமாய் மனதில் வரி வரியாக நினைவிலிருக்கும் கதைகளொலொன்றாகிவிட்டது

பல பக்கங்களில்  அற்புதமான கவிதைகளை பத்திகளாக கொடுத்திருந்தது போலிருந்தது. பத்திகளின் வரிகளை மடக்கி கவிதைகளாக்குவதைத்தான்  வாசித்திருக்கிறேன் இது முற்றாக எதிராயிருந்தது. உதாரணமாக  கச்சேரி நாளன்று அவரது மனநிலையைப்பற்றி சொல்லும் பத்தியை சொல்லுவேன்

// கச்சேரி நாளில் செவிகளில் ஒருவிதக்கூர்மை அதிகரிப்பது, அதிகாலைப்பொழுதின் நிர்மலமான அமைதியின் பரப்பில் ஒவ்வொரு ஒலியாக சொட்டி குமிழிகளையும் வளையங்களையும் உருவாக்குவது, புத்தம் புதிய காகம், முதன்முறையாக காதில் விழும் சைக்கிள் ஒலி, அந்தக்கணம் தான் பிறந்து உயர்ந்தது போன்ற ஜன்னலோர மரக்கிளை//

அபாரம்

இப்படி பல பக்கங்களில் அடிக்கோடிட்டுக்கொண்டே வாசித்தென்

சத்தியத்தில் அடிக்கோடிட்டு வாசிக்கும்படியான புத்தகங்களை அரிதாகவே கிடைக்கப்பெறுகிறேன்

ஸ்ரீஹரிஷங்கர் அவரது மனைவி ஊர்மிளாவைப்பற்றிச்சொல்லியவற்றை வாசிக்கையில் மட்டும் அங்கெயே மனம் நின்று விட்டது. அவ்வரிகளை மீள மீள வாசிப்பேன். பின்னர் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு வேறு ஏதேனும் வழக்கமான இல்பேணுதலுக்கு சென்று விடுவேன் மனம் மட்டும் கடுமதுரம் ஒன்றை சாப்பிட்ட தித்திப்பில் நிறைந்திருக்கும் எப்படியாகப்பட்ட பேரன்பு அது என்று சிலாகித்துக்கொண்டேயிருக்கும் மனம்

இருவருமாக கருப்புக்கார் ஒன்றைத்துரத்திச்செல்லும் அந்த கனவிற்கு பின்னர் உங்கள் மனைவியிடன் உங்களுக்கும் அதே போன்ற கனவே வந்ததென்று சொன்னீர்களா என்னும் கேள்விக்கு // பளிங்கு பொன்ற மனம் அது வீணாக கலக்குவானேன் . அவளை பிரியமாக அணைத்துக்கொண்டேன்//  என்கிறார் அறியமால் கண் நிறைந்தது எனக்கு வாசித்ததும்

/ மாயப்பிரசன்னத்தின் வசம் சொந்தக் கவலைகளை ஒப்படைத்துவிட்டு அடைக்கலமாகிவிடும் மார்க்கம் எவ்வளவு இதமாயிருக்கிறது//

 இவ்வரிகளிலும் மனம் சிக்கிக்கொண்டது கொஞ்ச நேரத்திற்கு

ஹிந்துஸ்தானி இசையுலகம் எனக்கு முற்றிலும் பரிச்சய்மற்றது என்பதை விடவும் அந்நியமானது என்றே சொல்லுவேன்.என்னால் இந்தக்கதையுடன் இத்தனை ஆழ்ந்துபோக முடிந்ததின் ஆச்சரயம் இன்னும் நீடிக்கிறது . ஸாரங்கியும் வயலினும் குரலிசையும் மொஹர்சிங்கும் மேண்டலினும் ஜுகல்பந்திகளும்  ராகங்களும் அதில் புகுத்தப்ட்ட புதுமைகளும் மேல் கீழ்ஸ்தாயிகளும் தாளமும் ஸ்வரமுமாக எனக்கு அறிமுகமற்ற ஆனால் மிகவும் வசீகரமான ஒரு உலகிலிருந்தேன் வாசிக்கையிலும் இதோ இப்போதும்

எதேச்சையாக கானல் நதிக்கு பின்னரே நான் இதை வாசிக்கும்படி அமைந்துவிட்டது

கானல்நதி தஞ்செய் முகர்ஜி என்னும் ஆளுமையைபற்றியது. அதில் என்னால் பெரிதாக இறங்க முடியவைல்லை

இப்படி கதையைக்குறித்து எழுதிக்கொண்டேபோனால் கதை வந்திருக்கும் 286 பக்கங்களையும் விட அதிகமக எழுதுவேன் போலிருக்கின்றது. அத்தனைக்கு இக்கதையைக்குறித்துச் சொல்ல எனக்குள் நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது.. இசையை கொஞ்சமும் அறிந்திராத ஒரு வாசகிக்கு இந்த கதை இத்தனை பரவசமளிக்குமென்றால் அதன் நுட்பங்களை அறிந்தவர்களுக்கு இது எப்படி இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்

மண்ணும் மனிதரும்

’மரளி மண்ணிகே’ என்னும் தலைப்பில் நவீன இந்தியாவின் ரபீந்திரநாத் தாகூர் என்று ராமச்சந்திர குஹாவால் புகழப்பட்ட சிவராம காரந்த் அவர்கள் கன்னடத்தில் எழுதி தமிழில் ’மண்ணும் மனிதரும் ‘ என்ற தலைப்பில்  தி.ப. சித்தலிங்கையாவால்    மொழி பெயர்க்கபட்ட நாவலில்  மூன்று தலைமுறை மனிதர்கள் வாழ்ந்த காலமும் அவர்களை வாழ்நாளெல்லாம் ஊர்விட்டு ஊர் அலைக்கழித்த சூழலையும் குறித்து இக்கட்டுரை விவரிக்கிறது.

1840 தொடங்கி 1940 வரை வாழ்ந்த ஒரு குடும்பத்தையும் அக்குடும்பத்தின் உறவுகளை சுற்றத்தை நட்பை தொடரும் இருதலைமுறைகளை சொல்லுகிறது ’மீண்டும் மண்ணுக்கே’ என்னும் பொருள்படும் தலைப்பில் கன்னடத்தில் எழுதப்பட்ட இந்நாவல்

மிக விரிவான தளத்தில் எழுதபட்டிருக்கும் இந்நாவலின் கதை புரோகிதம் செய்துவாழும் அந்தணரான ஐதாளரின் குடும்பத்தை மையமாக கொண்டிருக்கிறது.  ஐதாளரின் தந்தை சிக்கனம் கருதி நல்ல பெருமழை பெய்யும் காலத்தில் ஐதாளருக்கு  செய்து வைக்கும் கல்யாணத்தில் நாவல் துவங்கி ஐதாளரின் பேரன் ராமனின் கல்யாணத்தில் முடிகின்றது

கழிமுகத்தில் ஒரு சிறு வீட்டைத்தவிர வேறெந்த சொத்துக்களும் இல்லாத புரோகிதம் செய்யப்போகும் இடத்திலேயே அன்றைய உணவை முடித்துக்கொள்ளும்  ஐதாளரும்  கடும் உழைப்பாளியான குழந்தைகள் இல்லா அவரது மனைவி பார்வதியும் சிறுவயதிலேயே கணவரை இழந்து குறைபட்டுபோன ஐதாளரின் சகோதரி சரஸ்வதியுமே  முதல் தலைமுறை மாந்தர்களாக  துவக்கத்தில் வருகின்றனர்.

ஐதாளர் குழந்தையின்பொருட்டு செய்துகொள்ளும் இரண்டாம் திருமணம் அதில் பிறந்து செல்லம் கொடுக்கப்பட்டு திசைமாறிப்போன லச்சன் அவன் மனைவி நாகவேணி ஆகியோர் இரண்டாம் தலைமுறை

கழிமுக வீட்டை விட்டு பெருநகரத்துக்கு  கல்வியின் பொருட்டு இடம்பெயரும் அவர்களின் மகன் ராமன்   மூன்றாம் தலைமுறை  என நீளும் கதையில் 18   மற்றும் 19  ஆம் நூற்றாண்டின் காலச்சூழலை மிக நன்றாக அவதானிக்க முடிகின்றது.

பல்வேறுபட்ட குணச்சித்திரங்கள் உள்ள பாத்திரங்களின் வாயிலாக அன்றைய மாந்தர்களுக்கு மண்ணின் மீதான பெருவிருப்பு இருந்ததையும் பெண்களின் அயராத உழைப்பால் குடும்பங்கள் தலை நிமிர்வதையும் தெளிவாக காணமுடிகின்றது

ஐதாளரின் திருமணத்திற்கு வர துணியாலான குடைபிடிப்பவர்களே ஊரின் பெருந்தனக்காரர்களென்னும் வரியிலிருந்தே அக்காலத்தின் பொருளாதார நிலையை அறிந்துகொள்ளலாம்.

ஏழை அந்தணர் வீடுகளில் உணவுப்பழக்கம் எப்படியென்பதையும் மிக சாதரணமாக சொல்லிச்செல்கிறார் கதாசிரியர் கணவர் புரோகிதம் பண்ணப்போகும் வீட்டில் சாப்பிடுவதால் பெண்களிருவரும் அவடக்கீரை தாளித்தோ அல்லது உருளைகிழங்கோ வெள்ளரிக்காய்களோ இருக்கும் மிக எளிய உணவை ஒரு பொழுது உண்டுவிட்டு இரவில் பிடி அவலை நனைத்து சாப்பிட்டுவிட்டு படுக்கின்றனர்.   கடும் உழைப்புக்கு சற்றும் பொருந்தாத ஏழ்மை.  மாவடு தேடி நல்ல வெய்யிலில் பலகிலோமீட்டர் தூரம் நடந்து கிடைத்த மாங்காய்களை  ஊறுகாய் போடுவதும் சித்தரிக்கபட்டிருக்கிறது. அவர்களுக்கு உதவி செய்யும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த சூரனே சொல்லுவதுபோல ’பிராமணர்களுக்கு எதற்கு குறைவென்றாலும் நாக்குக்கு மட்டும் அப்படி  வேண்டியிருக்கிறது’

பெண்கள் அக்காலத்தில் செய்துகொண்டிருந்த வேலைகளை நினைக்கவும் முடியாது இக்காலத்துப்பெண்களால் வீட்டைப்பெருக்குவது பற்றுப்பாத்திரங்களை தேய்ப்பது கால்நடைகளுக்கு நீரும் தீவனமும் வைப்பது வயலில் வேலை செய்வது வண்டல் மண்ணை அரித்து சட்டி சட்டியாக கொண்டு வந்து சேர்ப்பது நீர்பாய்ச்ச ஏற்றமும்  கபிலையும்  இறைப்பது தினப்படி  வீட்டை மெழுகுவது தோட்டத்தில் விதைப்பது நாற்று நடுவது அறுப்பது புன்னைக்காய்களை சேகரித்து எண்ணை எடுப்பது பால் கறப்பது கடல் நீரைகாய்ச்சி வீட்டு சமையலுக்கு தேவையான  உப்பெடுப்பது வெள்ளத்தில் அடித்து வரும் மரக்கட்டைகளை உயிரைப் பணயம் வைத்து விறகுக்கென சேர்ப்பதென்று முடிவில்லாமல் நீள்கிறது இவர்களின் உழைப்பின் பட்டியல். அசாத்தியமான உடல்வலிமையுடன் மனவலிமையும் உள்ளவர்களாயிருந்திருக்கிறார்கள் அப்போதைய பெண்கள். வெயிலும் மழையும் வெள்ளமுமாய் ஓயாமல் வாழ்வை அலைக்கழித்தாலும் பெண்கள் யாவரும் மூன்று தலைமுறைகளிலுமே புரிதலும் சகிப்புத்தன்மையும் மன்னிக்கும் விசாலமனதும் உளளவர்களாகவே இருக்கிறார்கள்

கணவர் எந்நேரம் வீடுதிரும்பினாலும் எந்த கேள்வியும் கேட்காமலிருப்பது புத்திரபாக்கியத்துக்கென மறுதிருமணம் செய்யும் போதும் எதிர்ப்பின்றி அதை ஏற்றுக்கொள்வது அத்திருமணத்திற்கென்று அப்பளம் இடத்துவங்குவதென்று பெண்கள் அக்காலத்தில் செய்துகொண்டிருந்த வேலைகளையும் அனுபவித்துக்கொண்டிருந்த வேதனைகளையும் அவர்களுக்கு நடந்துகொண்டிருந்த அநீதிகளையும் அப்போதைய வாழ்வின் இயங்குமுறைககளாகவே சொல்லிச்செல்கிறது இந்நாவல்

அப்போது வழக்கத்திலிருந்த குறுநிலங்களில் நடைபெற்றுக்கொண்டிருந்த  பெரிய முதலீடுகள்  இல்லாத விவசாய முறைகளையும் அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த முடி மணங்கு சேர் கோர்ஜி என்னும் அளவை முறைகளும் கதையில் பல இடங்களில் சொல்லப்படுகின்றன.

எத்தனை ஏழ்மையிலிருப்பினும் அந்தணர்களான அவர்களுக்கு கீழிருக்கும் தாழ்த்தபட்டவர்களோடு இணைந்தே விவசாயம் நடந்திருக்கிறதென்பதும் ஐதாளரின் குடும்பத்திற்கு சூரனும் பச்சியும் செய்யும்  பிரதிபலன் எதிர்பாராத தொடர் உதவிகளிலிருந்து புலனாகின்றது,

இறந்த மாட்டின் சவத்தை பறையர்கள் வந்து எடுத்துச்செல்லும் வழக்கமும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது

கழிமுகத்தில் அமைந்திருக்கும் ’’கோடி’’ கிராமமே கதைக்களமென்பதால் அப்பொழுது படகுகளுக்கு மஞ்சி என்னும் பெயரிருந்ததும் பாய்மரப்படகில் ஒரு வகை பத்தொமாரி என்பதும் கோடா என்பது மிகபெரிய பாய்மரப்படகென்பதும் ஐதாளரின் பார்வையில் துறைமுகப்பகுதியை விவரிக்கையில்  குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்து  இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்காத பெயர்களையும் விஷயங்களையும் இதில் தெரிந்துகொள்ளலாம்

பிள்ளை இல்லாதவர்கள் சுவீகாரம் எடுத்துக்கொள்வது அப்போதும் நடைமுறையிலிருந்திருப்பதை சரஸ்வதியும் பார்வதியுமாய் ஐதாளரிடம் அதுகுறித்து பேசுவதிலிருந்து தெரிகிறது. எதிர்பாரா விதமாக ஐதாளர் சுவீகாரத்திற்கு முனையாமல் சத்தியபாமையை இரண்டாம் திருமணமே செய்துகொள்வது அந்தப்பெண்களுடன் நம்மையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

 இரண்டாவதாக ஒருத்தி தன் வாழ்வில் வரப்போகும் போதும் பார்வதி அவள் கன்னடபிராமணர்களில்   ’கோட’ அல்லது ’சிவள்ளி’ இவற்றில் எந்தப்பிரிவை சேர்ந்தவளென்பதில் கவலை கொள்வதிலிருந்து அப்போது சாதிவேற்றுமைகள் மட்டுமன்றி  குடும்பங்களுக்குள் நுண்ணிய சாதீய அடுக்கின் சிக்கல்களும்  இருந்திருக்கிறதென்பதை அறியலாம்.

திருமண ஊர்வலத்தில் ஒவ்வொருவர் கையிலும் இரண்டு பந்தங்களை கொடுத்து கூட்டம் அதிகமானதுபோல் காட்டுவது பாட்டியன்னம் என்னும் பாட்டிமை அன்று மணமகளுக்கு நடக்கும் சடங்கு  தாசிகள் பொன் பெற்றுக்கொண்டு சலாமிடுவது பெரும் அந்தஸ்தாக கருதப்படுவது  போன்ற விவரணைகளிலிருந்து அப்போதிய திருமணங்களின் போது   நடக்கும் பலவகையான முறைமைகள் வழக்கங்கள் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடிகின்றது.

 லச்சன் பிறந்த பிறகு அவனை பள்ளிக்கூடம் சேர்ப்பது குறித்தான பிரச்சனையில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் அவனை சேர்ப்பதென்பது இழிவு என்று பெரியவர்கள் யாவரும் ஒன்றே போல அபிப்பபிராயப்படுவதிலிருந்து தீண்டாமை 18 ஆம் நூற்றாண்டு முடியும் தருவாயிலும் மிகத்தீவிரமாக நிலவி வந்திருப்பதை உணரலாம்.

மெல்ல மெல்ல வட்டிக்கு பணம் கொடுக்கும் வழக்கம் வருவதை, ஆடம்பரத்துக்கு விருப்பப்படும் குடும்பங்கள் பெருகுவதையெல்லாம் சீனப்பன், சீனப்பய்யராக மாறுவதுபோன்ற நுட்பமான கதாபாத்திர மாற்றங்களின் மூலம் சொல்லத் துவங்குகிறார் கதாசிரியர்.

 காட்சிகள் மாறிக்கொண்டே வந்து லச்சன் தட்டுக்கெட்டு திசைமாறி தீய வழக்கங்களுக்கு அடிமையாகி, அவனால் அவன் மனைவியின் உடல்நிலையும் பாழாவதை பார்க்கிறோம், 500 ரூபாய் பணம் கொடுத்தால் மணியக்காரர் பதவி கிடைக்கும் என்னும் வரிகளில்  லஞ்சம் கொடுக்கும் சூழல் 19 ஆம் நூறாண்டில் மெல்ல துவங்கியிருப்பதை உணரலாம்

பீட்ஸா இந்தியக்குக்கிராமங்களிலும் புழக்த்திலிருக்கும் இக்காலகட்டத்தில் நாவலில் காப்பி என்னும் பானம் மெல்ல கலாச்சாரத்துக்குள் நுழைவதையும் பல ஆச்சாரமான குடும்பங்கள் அதை வீட்டுக்குள்ளே  அனுமதிக்காமலிருந்ததையும் வியப்புடன்  வாசிக்க முடிகின்றது.

காலங்கள் மாறி  வருகையில் லச்சனின் மனைவியான நாகவேணி சரஸ்வதியை, பார்வதியை போலல்லாமல் தன்னந்தனியே கணவனின்றியும் வாழ்த்துணிகையில் பெண்களின் மனோநிலையும் மாறிக்கொண்டு வருவதை நாம் அறியலாம்.

 சுதந்திரப்போரட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு செல்லும் ராமன் அப்போதைய சுதந்திர உணர்வெழுச்சி மிக்க இளைஞர்களின் பிரதிநிதியாக சித்தரிக்கப்பட்டிருக்கிறான்

எத்தனையோ க‌ஷ்டகாலங்கள் மாறி மாறி வந்தாலும் மீண்டும் மீண்டும் மூன்று தலைமுறைப்பெண்களும் அந்த ஓட்டு வீட்டுக்கே திரும்புகிறார்கள் அம்மண்ணே அவர்களை  பிணைக்கிறது வாழ்வுடன் ’’மீண்டும் மண்ணிற்கே’’ என்னும் கன்னட தலைப்பும் ’’மண்ணும் மனிதரும்’’ என்னும் தமிழாக்க தலைப்பும் மிகபொருத்தமாக கதையின் மூன்று தலைமுறை மாந்தர்களையும் நமக்கு காட்டித்தருகின்றது

வேளாண்மையும் தொற்றுநோயின் இறப்புக்களும் ஏழ்மையுமாக முதல் தலைமுறை ஆங்கிலக்கல்வியும் புதிய கலாச்சாரமும் கிடைக்கப்பெறும் இரண்டாம் தலைமுறை  பெருநகரங்களுக்கு கல்வியின் பெயரால் இடம்பெயரும் அங்கு வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்கொள்ளும் மூன்றாம் தலைமுறை என மாறிவரும் தலைமுறைகளின் மூலம் மாறி வந்திருக்கும் இந்திய சமூக வாழ்வினையும்   சொல்லும் இந்நாவல் இறுதியில்  ராமன் சரஸ்வதி என்னும் அவனின்  பாட்டியின் பெயருடன் துடைப்பமும் கையுமாக வீட்டுப்பொறுப்பை நிர்வகிக்க வல்லவள் என்னும் சித்திரத்தைக் கொடுக்கும் பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்வதுடன் நிறைவடைகிறது.   

இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர் குழந்தைக்காக ஐதாளர் மறுதிருமணம் செய்துகொள்ளுவதும் பின்னர்  சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபடும் மூன்றாம் தலைமுறைக்காரனான நவீன சிந்தனையுளவனான ராமனும் பிற காரணங்களை விட வீட்டுபொறுப்பில் உள்ள பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக காட்டியிருப்பதும்  காலங்கள் எத்தனை மாறினாலும் பெண்களின் இடமென்று ஆண்கள் நிர்ணயம் செய்துவைத்திருப்பது சமையலறையும் படுக்கையறையும் தானென்பதையும் அன்றும் இன்றும் என்றும் இது ஆண்களின் உலகே என்பதை இந்நாவலும் காட்டும் இடமென்பதாகவும் கொள்ளலாம்

இந்நாவல் நமக்கு அக்காலத்திலிருந்த  சாதீய அடுக்குகள் தீண்டாமை தொற்று நோய்கள் பெண்களின் வாழ்வு முறை ஆண்களின் அதிகாரம் புதுக்கலாச்சாரங்கள் மெல்ல மெல்ல சமுகத்தில் நுழைவது என பலவற்றைச் சொல்கிறது.

சிவரம காரந்தின் பாட்டி தனது தள்ளாத வயதில் விருப்பு வெறுப்புகளின்றி இக்கதையை  அவருக்கு சொல்லியதால் கதையிலும் எந்த பாரபட்சமும் சார்பும் இன்றி கதை மாந்தர்கள்  அனைவரும் நடுநிலையுடன்  சித்தரிக்கபட்டிருக்கின்றனர்

மண்ணும் மழையும் பெண்களும் ஏழ்மையும் இசையும் இயற்கையுமாக அழகிய நாவல் இது. ராமனும்  அவன் தாயும் ஓர் இரவில் பொழியும் நிலவின் புலத்தில் நனைந்தபடி  கடற்கரையில் அமர்ந்திருக்கும் ஒருகாட்சி  சம்சாரம் ஒரு நரகமென்றாலும் அதிலும் ரசிக்கத்தக்க விஷயங்கள் சம்பவங்கள் நிகழ்வுகள் இருக்கும் என நமக்கு இக்கதை உணர்த்தும் ஒரு அழகுச்சாட்சி. அக்காட்சி  ஒரு கவிதையையைப்போல  கதையில் தீட்டப்பட்டிருக்கும்.

ஞானபீட விருது சாகித்ய அகாடமி விருது என பலவற்றைப் பெற்ற அறிஞரான சிவராம காரந்தின் கன்னட மொழிவளத்திற்கு சற்றும் குறையாமல் தமிழில் மிகசிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கும் திரு தி ப சித்தலிங்கையாவிற்கு வாசிக்கும் அனைவரின் நன்றிகளும் கட்டாயம்  உரித்தாகும்

நிலத்தில் படகுகள்

விஷ்ணுபுரம் விழாவில் வாங்கிய ஜேனிஸ் பரியத்தின் ‘ நிலத்தில் படகுகள் ‘’ கதைத்தொகுப்பை இன்று  2 மணிநேரத்தில் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். சமீபத்தில் வாசித்ததில் மிகவும் கவர்ந்த கதைகள்னு இதிலிருக்கும் எல்லாவற்றையுமே சொல்லலாம். வழக்கத்தைக்காட்டிலும் மெதுவாக வாசித்தேன்.

கதைக்களமும், கதாபாத்திரங்களின் பெயர்களும், உணவு வகைகளும், பானங்களும், கலாச்சாரமும், மொழியும், நம்பிக்கைகளும், அவர்களின் இடர்களும், துயர்களும், வாழ்வுமுறையும் மிக வேறுபட்டது நான் இதுவரையிலும் வாசித்தவற்றிலிருந்தும் என் வாழ்வுமுறையினின்றும். அதுவே மிகவும் வசீகரித்தது.  ஜேனிஸ் மண்மகள்தான்.  வாழ்ந்த இடத்தின் ஆன்மாவை இப்படி எழுத்தில் உள்ளபடியே கொண்டுவருவது அவருக்கு சாத்தியப்பட்டிருக்கிறது. திரு விஜயராகவன் துவங்கி  திரு.சிறில் அலெக்ஸ் வரையில் மொழிபெயர்த்தவர்கள் கதைகளின் ஆன்மாவை கொஞ்சமும் சிதைக்காமல் மெருகேற்றியிருப்பதும் வியப்பளித்தது.

நீர்த்துளிகளைக்கொண்டிருக்கும் கூரிய ஊசியிலைகளுடனிருந்த  பைன் மரஙக்களுக்கிடையிலும், ரோடோடென்ரான் மலர்க்கொத்துக்களை பார்த்தபடிக்கும், வாசற்படிக்கு இருபுறமும் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் ஆர்க்கிட்களை கடந்தும், மலைச்சரிவெங்கும் அடுக்கடுக்காக  தெரியும் வயல்வெளிகளிலும்,  வெடிக்க காத்திருக்கும் அடர் ஊதா ஜகரண்டா  மரங்களை தாண்டியும்,  ஷில்லாங்கிலும்,  போம்ரெங் குக்கிராமத்திலும், லிக்குமீரிலும், சந்த்பாரியின்  விஸ்தாரமான தேயிலைத்தோட்டங்களிலும் நடந்துகொண்டும், விடுதிகளில் நூடுல்ஸும், பன்றி இறைச்சியும், கிரீம் பன்களும் சாப்பிட்டுகொண்டும் கதைகளை வாசித்துக்கொண்டிருந்தேன் அல்லது நானும் அக்கதைகளுக்குள்ளேயே, கனவுகளில் வரும் எண்களிலிருந்து சூதாட்டத்தில் வெற்றிபெறுவதை கணிக்கும் தையல்காரர் சுலைமானாகவும், தங்க மாஸிர் மீன்களை பிடித்துக்கொண்டிருக்கும்  மாமா கின்னாகவும் குளிர்காயும் கரி அடுப்பின் கங்குகள் அணையும் வரை மகனுக்கு பழங்கதைகளை சொல்லிக்கொண்டிருக்கும் அம்மாவாகவும், பயணப்பைக்குள் சிவப்பு சம்பா அரிசியை மறைத்து வைக்கும் பாரிஷாவாகவும், கிராம்பும் சிகரெட்டும் மணக்கும் தோழியாகவும் இன்னும் பலராகவும் இருந்தேன்

முதல்பக்கத்திலிருந்தே கதைகளுக்குள் ஆழ்ந்து மூழ்கிவிட முடிந்தது. மந்திரங்கள், நீர்த்தேவதைகள், விசித்திரமான  நம்பிக்கைகள், குதிரைகள் பாய்ந்துவிழுந்து இறக்கும் ஏரிகள், மணக்கும் தேவதாரு மரங்கள் என பக்கத்துக்குப்பக்கம் மிகப்புதிய நான் இதுவரையிலும் வாசித்து அறிந்திராத பிரதேசங்களில் நடக்கும் கதைகளென்பதால் புத்தகத்தை கீழே வைக்கவே இல்லை

நேரில் விழாவில் சந்தித்து பேசியிருந்ததாலென்று நினைக்கிறேன், பல இடங்களில் ஜேனிஸையும் அவரது பால்யம் மற்றும் பதின்மவயது நினைவுகளையும் என்னால் அடையாளம் காணமுடிந்தது

இஸ்ரேலுக்கு கணவன் விட்டுச்சென்ற இரவில் பள்ளிப்பருவத்து காதலனைதேடிச்செல்பவள் , விடுமுறைக்கு செல்கையில் தனது காதலனை வேறு யாரும் அபகரித்துக்கொள்ளாலிருக்கனும் என்று விசனப்படும்  சிறுமி, புதிய லினன் துணியைபோல மணக்கும் பள்ளித்தோழி, காதலனை சடுதியில் மாற்றிக்கொள்ளும் இன்னொருத்தி, ஒரேயொரு மதியநேர பைக்பயணத்தில் விடுதலையை அறிந்துகொள்ளும் மற்றுமோர் சிறுமி, சாரா கிரேஸ், மெல்வின் என்று ஜேனிஸ்  அறிமுகபடுத்தும் பெண்கள் மிக வசீகரமானவர்கள், இனி என்றும் மறக்கமுடியாதவரகளும் கூட

மந்திரங்களும், நம்பிக்கைகளும், நோயும், கலவரமும், மலைத்தொடர்ச்சிகளும், செழிப்பான மண்ணும், தாவரங்களும், துயரங்களும், காதலும், பிரிவும், மர்மங்களும், முத்தங்களும், இறப்பும் இக்தைகளெங்கும்  தூவியிருப்பது போலிருந்ததுது. இப்படி nativityயுடன் கதைகளை படித்து வெகுகாலமாகிவிடது

எல்லாக் கதைகளுமே மிகச்சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டிருகின்றன என்றாலும் ஆகச்சிறந்ததென்று விஷால்ராஜாவின் கதையைச்சொல்லுவேன்

கதைகளுக்குள் ஆழ்ந்துவிட்டதால் வாசித்து முடிந்து சமையலறைக்கு இரவுணவு தயாரிக்கச் செல்கையில் என் வீடே எனக்கு மிகப்புதிதாக தெரிந்தது கதைக்களங்களிலிருந்து  என் மனம் இன்னும் விலகவேயில்லை சமைக்கபிடித்திருந்த  கரண்டி வழவழப்பான செதில்களை உடைய கா பாவாக தோன்றியது,  விளக்கு வெளிச்சத்தில்  ஜன்னல் வழியே கூரிய நுனிகள் கொண்ட பைன் மரமாக  இருந்தது என் பிரியத்துக்குரிய புன்னை

  இக்கதைகளில் வரும், பிடித்துவிட்டால் பிறகு ஒருபோதும் விடவே விடாத நீர்த்தேவதையைப்போல என்னை இந்த கதைகளும்  ஒரேயடியாக பிடித்துக்கொண்டு விட்டன

கொடிமரம்- (த்வஜஸ்தம்பம்)

ஆலயங்களின் வடிவமைப்பு, அவை அமையவிருக்கும் நிலத்தை தேர்ந்தெடுக்கும் நியதிகள், விக்ரகங்களின் வடிவம், கட்டிட அமைப்பில் இருக்க வேண்டிய சமன்பாடுகள், மண்டபம், பிராகாரம், ஆகியவற்றிற்கான நீள, அகல, உயர விகிதங்கள், விமானங்களின் வகைகள், ஸ்தலவிருக்‌ஷங்கள், தீர்த்தங்களை உருவாக்குதல், உற்சவ விக்ரகங்களின் அளவுகள், அம்சங்கள், நித்யபூஜை விதிகள், உற்சவ முறைகள், அர்ச்சகர்கள், ஸ்தபதிகள் ஆகியோரின் தகுதிகள் போன்றவற்றையெல்லாம் நிர்ணயித்து நமக்கு வழிகாட்டுபவையே ஆகமங்கள் எனப்படும்.

 தெய்வ வடிவங்களை அமைப்பதற்கும், தெய்வத்தின் இருப்பிடமான ஆலயங்களை நிர்மாணிப்பதற்கும் அவற்றில் நடத்தப்படும் நித்ய பூஜைகளுக்கும், மரபுகளுக்குமான  முறையான விதிகளும், சட்டதிட்டங்களும், கட்டுப்பாடுகளையும் சொல்லும்  இந்த ஆகமங்கள் சைவ ஆகமங்கள், வைஷ்ணவ ஆகமங்கள் (வைகானசம், பாஞ்சராத்ரம்) என இருவகைப்படும். கிராமதேவதைகளுக்கான ஆலயங்களை அமைப்பதற்கும், தனிப்பட்ட மனிதர்கள் தங்கள் குடும்ப நலனிற்காகவும், வேறு பலன்களுக்காகவும் மேற்கொள்ள வேண்டிய ஜபம், பூஜை, ஹோமம் ஆகியவற்றிற்கும் இந்த ஆகமங்களே வழிகாட்டுகின்றன.  

சில்பசாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம், கட்டிடக்கலை ஆகியவையும் ஆகமங்களுக்குள்ளே அடக்கம். அவற்றையும் ஒருங்கிணைத்துத்தான் பெரும்பாலான ஆலயங்கள் பாரத நாட்டில் நிர்மாணிக்கப்பட்டன. 

ஆலயம் புருஷாகாரம் என்கிறது இந்த ஆகமங்கள், அதாவது மனித உடலின் அமைப்பை போன்றதே ஆலயங்களின் அடிப்படை கட்டுமான அமைப்பும்.  ஒரு ஆலயமென்பது  மனிதன் மேற்கே தலை வைத்து கிழக்கே கால் நீட்டி மல்லாந்து படுத்திருப்பதுபோல் கட்டப்படுகிறது.

 உடம்பினை இருப்பிடமாகக் கொண்டு ஜீவாத்மா உறைவது போல, ஆலயத்தை இருப்பிடமாகக் கொண்டு பரமாத்மா விளங்குகிறார். தோல், குருதி, ஊன், எலும்பு, மஜ்ஜை, கொழுப்பு, சுக்கிலம் ஆகிய ஏழுவகைத் தாதுக்களால் மனித உடல் அமைந்திருப்பது போல, கருங்கல், வெண்கல், செங்கல், மணல், சாம்பல், நீர், சுண்ணாம்பு எனப்படும் ஏழு வகைப் பொருள்களால் ஆலயங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.  

ஆலயத்தின் கர்ப்பக்கிகம் முகமாகவும், அர்த்த மண்டபம் கழுத்தாகவும், இருதோள்கள் துவார பாலகர் நிற்குமிடமாகவும், கொடி மரம் வரையுள்ள பாகம் உடம்பாகவும், கொடிமரம் முதுகுத்தண்டாகவும், பாதங்கள் வாயிற் கோபுரமாகவும் இருக்கின்றன. உடம்பில் உள்ள முதுகெலும்பு போன்றது கோவிலுக்கு கொடிமரம் என்று ஆகமங்கள்  சொல்கின்றன. நம் முதுகுத் தண்டுவடத்தில் 32 எலும்பு வளையங்கள் உள்ளன. அது போலவே 32 வளையங்களுடன் கோவில் கொடி மரம்  அமைக்கப்படுகிறது. 

மனித உடலுக்கு முதுகெலும்பைப் போலக் கொடிமரத்துக்கு அதன் தண்டுப் பகுதி இன்றியமையாதது. முதுகெலும்பின் நடுத்தண்டு மூலாதாரத்திலிருந்து பிரம்மாந்திரம் வரை இருப்பதுபோல கொடிமரமும் மூலலிங்கத்தின் மட்டத்திலிருந்து ஸ்தூபியின் அளவு வரை இருக்கும். கொடிமரத்துக்கு வீணா தண்டம், மேரு தண்டம் என்னும் பெயர்களும் உண்டு. குண்டலினி சக்தி சுழுமுனை நாடி வழியாக எழுவது போல் கொடி மரத்தில் இடபக் கொடி ஏற்றப்படுகையில்தான் கோவில்  விழாக்கள் துவங்குகின்றன.

கொடிமரம்  இந்துக்கோவில்களில் பலிபிீடத்திற்கு  அருகே,  கருவறைக்கு முன் நிறுவப்பட்டிருக்கும். இதற்கு சமஸ்கிருதத்தில் துவஜஸ்தம்பம் என்று பெயர். த்வஜ- என்றால் கொடி, ஸ்த- ம்ப-  என்றால் தூண். இதை நிறுவுவதற்கும், வணங்குவதற்கும், சமயச் சடங்குகளும், நியம நியதிகளுமுள்ளன.

மரத்தினால் செய்யப்பட்டு  பித்தளை, செம்பு, வெள்ளி, பொன் போன்ற உலோகத்தகடுகள் வேயப்பட்டிருக்கும் கொடிமரங்கள் விருக்ஷ சாஸ்திரத்தின் அடிப்படையில்  முதிர்ந்த உயரமான ஒற்றை மரத்தில் செய்யப்படுகின்றன. சந்தனம், தேவதாரு, செண்பகம், தேக்கு வில்வம், மகிழம் முதலிய மரங்களிலிருந்துதான் கொடி மரங்கள் தயாரிக்கப்படுகின்றன. வைரம் பாய்ந்த செண்பகம், வில்வம், மகிழம்  போன்றவற்றிலிருந்து கொடிமரங்களை உண்டாக்குவது உத்தமம் , அதாவது அதிக பலன்களை இம்மரம் பக்தர்களுக்கு அளிக்கும், நன்கு விளைந்த  பலா, மா ஆகியவற்றிலிருந்து கொடிமரங்கள் செய்வது மத்திமம், அதாவது குறைவான பலன்களை அளிக்கும், உறுதியான கமுகு பனை ஆகிய மரங்களிலிருந்து கொடிமரங்களை உருவாக்குவது அதமம், அதாவது மிக சொற்ப பலனையே தரும் என்கின்றது ஆகமங்கள். மரத்தின் மேலே வேயப்பட்டிருக்கும் உலோகப்பட்டைகள் கொடிமரத்தை இடி, மின்னல் மழை, வெயிலிலிருந்து காக்கும்,

கொடி மரம் ராஜகோபுரத்தை விட அதிக உயரமாக இருக்காதபடியும்,கருவறை விமானத்துக்கு நிகரான உயரத்துடன் இருக்கும்படியுமே அமைக்க்கப்படும். அதுபோல கருவறையில் இருந்தும், ராஜகோபுரத்தில் இருந்தும் எவ்வளவு தூரத்தில், எவ்வளவு உயரத்தில் கொடி மரம் அமைந்திருக்க வேண்டும்  என்பதற்கும் விதிகள் உள்ளன. இது கோவிலுக்கு கோவில் மாறுபட்டாலும்,  கொடி மரத்தில் ஐந்தில் ஒரு பாகம் பூமிக்குள் இருக்கும்படிதான் எங்குமே நிறுவப்படும். பெரும்பாலான சிவாலயங்களில் கொடி மரம், நந்தி மற்றும் பலிபீடம் ஆகிய மூன்றும் மூலவரை  நோக்கியே அமைக்கப்படுகின்றன.

கொடி மரம், மும்மூர்த்திகளையும், அவர்களின் மூன்று தொழில்களையும் உணர்த்துகின்ற குறியீடாக திகழ்கிறது.  அகலமாகவும், சதுரமாகவும் இருக்கும் பத்ரபீடம் எனப்படும் அடிப்பகுதி, படைப்பு தொழிலுக்கு உரியவரான பிரம்மாவையும், அதற்கு மேல் உள்ள எண்கோணப் பகுதியான விஷ்ணு பாகம் காத்தல் தொழிலுக்கு உரியவரான விஷ்ணுவையும், அதற்கு மேல் உள்ள நீண்ட ருத்ர பாகம், சம்ஹாரத் தொழிலை செய்யும் சிவபெருமானையும் குறிக்கும். 

கொடிமரத்தின் தண்டு எனப்படும் நீண்ட உருளை வடிவ உயர்ந்த தூணின் உச்சியில்  மேகலை எனப்படும் மூன்று குறுக்குச் சட்டங்கள் கருவறை தெய்வத்தை நோக்கி இருக்கும்படி அமைந்திருக்கும். இதை ஏர் பலகை, திருஷ்டிப் பலகை என்றும் அழைப்பார்கள்  இதில் சிறு சிறு மணிகளும் இணைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஆலயத்துக்கு ஏற்ப இந்த அமைப்பு வேறுபட்டு காணப்படும். ஒரே பட்டையுடன் இருக்கும் கொடி மர அமைப்பை கருடஸ்தம்பம் என்று சொல்வார்கள்.  

எல்லா கொடிமரங்களும் ஒரே மாதிரியான அமைப்பில் இருப்பதில்லை சிலவற்றில் தீபமேற்றும் பிறைகள்  அமைந்திருக்கும். சில பீடங்களில் தாமரை மலர்கள் இதழ் விரித்திருக்கும் சிலவற்றில் சதுரபீடத்தின் நான்கு பக்கங்களிலும் புடைப்புச்சிறபங்களாக தெய்வங்கள் வீற்றிருப்பதும் உண்டு.

 சில கொடிமரங்கள் கருங்கல்லிலும் கூட உருவாக்கப்படுகின்றன.ஆனால்  நரம்போட்டமில்லாத விரிசலில்லாத உறுதியான  ஒற்றைக்கல்லால் மட்டுமே உருவாகியிருக்கும். இப்படியான கல்கொடிமரங்களை அதிகம் கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் காணலாம். நார்கோண, அறுகோண, எண்கோண உருளைப்பகுதிகளும் உண்டு.

 பிரபஞ்ச கதிர்களை கருவறை விமானக் கலசங்கள் ஈர்த்து கருவறையில் இருக்கும் மூலவ‌ர்மீது பாய்ச்சும். இந்த பிரபஞ்ச சக்தியை அப்படியே நேரடியாக  ஏற்றுக் கொள்ளும் தன்மை சாதாரண மனிதர்களுக்கு இல்லை. இந்த கொடிமரமானது இந்த பிரபஞ்ச சக்தியை ஈர்த்து, பக்தர்களின் உடல் ஏற்றுக் கொள்ளும் தன்மைக்கு இந்த சக்தியைமாற்றி கருவறைக்கு முன்னின்று கடவுளை வணங்கும் பக்தர்கள் மீது பாய்ச்சும் எனப்படுகின்றது.

சைவ வைணவ கோவில்களின் கொடிமரங்களுக்குள் வேறுபாடுகளும் இருக்கும். சிவாலயங்களில் கொடிமரத்தின் உச்சியில் நந்தியும் வைணவாலயங்களில் சுதர்சன சக்கரமோ அல்லது ஹனுமான் உருவமோ பொறிக்கப்பட்டிருக்கும்.

கம்போடியகோயில் கொடிமரம்

இவை மாறாத விதிகளல்ல, பல கோவில்களில் கருவறை தெய்வத்திற்கு உகந்த பல உருவங்களும், துணைதெய்வங்களும், வாகனங்களும் கொடியிலும், கொடிமரத்திலும், பீடத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும். உச்சியில் கலசங்கலும் வேலும் அமைந்திருக்கும் கொடிமரங்களும் உண்டு. கேரளகோவில்களில் கம்போடியக்கோயில்களில்  தமிழகக்கோயில் கொடிமரங்களினின்றும் வேறுபட்ட உச்சிப்பகுதிகளைக்கொண்ட கொடி மரங்களை காணலாம்.

குருவாயூர் கோயில் கொடி மரம்

சிலபெருமாள்கோயில்களில் கருடனும், அம்பாள்  ஆலயங்களில் சிம்மமும், முருகர் ஆலயத்தில் மயிலும், விநாயகர் ஆலயங்களில் மூஷிகமும், துர்கை ஆலயத்தில் சிம்மமும், சாஸ்தாவிற்கு குதிரையுமாக, கொடிமரத்தின் மேற்புறத்தில் கொடிச் சின்னங்கள்  பொறிக்கப்பட்டிருக்கும்.

மூல விக்ரகம், உற்சவ விக்ரகங்களைப்போலவே ஒர் கோவிலின் சக்தி மையமாக கொடிமரமும் விளங்குகின்றது, அதனாலேயே கோவிலில் நுழையுமுன்னர் கொடிமரத்தை வணக்கிவிட்டு உள்ளே நுழைகிறோம்.

 கொடிமரத்தை வணக்குவது, வலம் வருவதுமட்டுமல்ல, பார்ப்பதே புண்ணியமென்கின்றது சாஸ்திரங்கள். கருவறை குடிகொண்டிருக்கும் தெய்வங்களுக்கான சேவைகளில்  பெரும்பாலானவை கொடிமரத்திற்கும் செய்யப்படுகின்றன. சில கோவில்களில் கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் ஆகாசதீபத்தை கொடிமரத்தில் ஏற்றும் வழக்கமும் உண்டு.  கொடிமரமில்லா கோவில்களில் உற்சவங்களும் நடைபெறாது

 ஒவ்வொரு சிவாலயத்திலும் ஐந்து வகையான லிங்கங்கள் இருப்பதாக ஐதீகம் 1. விமானம்- ஸ்தூல லிங்கம்; 2. கர்ப்பக்கிரகம்-சூக்ஷ்மலிங்கம்; 3. பலிபீடம்-அதிசூக்ஷ்மலிங்கம்; 4. கொடிமரம்-காரணலிங்கம்; 5. மூலலிங்கம்-மஹாகாரணலிங்கம்.

 துவஜஸ்தம்பம் எனப்படும் கொடிமரத்தில் திருவிழாவின் முதல்நாள் கொடியேற்றுவது துவஜாரோகணம் என்றும், விழா முடிந்து கடைசி நாள் கொடியிறக்குவது துவஜாவரோகணம் என்றும் அழைக்கப்படுகிறது. கொடிமரத்தின் முன் ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்தல் வேண்டும். கொடிமரம்,நந்தி,பலிபீடம் இவைகளின் நிழல்களை மிதிக்க கூடாது என்றும் சொல்லபடுகின்றது.

சோற்றுக்கற்றாழை-Aloe vera

ஆஃப்பிரிக்காவின் வடக்குப்பகுதியில் தோன்றிய ஆலோ வீரா (Aloe vera)  உலகெங்கிலும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நோய் தீர்க்கவும் அழகை மேம்படுத்தவும் அலங்காரச்செடியாகவும் பயன்பட்டு வருகின்றது. இதன் 360 சிற்றினங்களில் 130 மட்டுமெ ஆப்பிரிக்காவில் தோன்றியவை. மற்றவை கலப்பின வகைகள்.

 இதன் சதைப்பற்றான இலைகளினுள்ளிருக்கும் கெட்டியான சாறு பல்வேறு மருத்துவ குணங்களுடையது. கெட்டியான இந்த சாற்றினாலேயே இது சோற்றுக்கற்றாழை என அழைக்கப்படுகின்றது. இலங்கையில் இது பிள்ளைக்கற்றாழை.

உலகின் பல நாடுகளில் இந்த தாவரம் சாகுபடி செய்யப்பட்டு பல்வேறு மருந்துகளும், அழகு சாதனப்பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. சோற்றுக்கற்றாழையின் மருத்துவக்குணங்கள் பண்டைய எகிப்து மற்றும் சீனாவில்  பெரிதும் பயன்பாட்டில் இருந்திருக்கின்றது. மாவீரர் அலெக்ஸாண்டர் தனது குருவான அரிஸ்டாட்டிலின் வழிகாட்டுதலின் பேரில் சொகோட்ரா (Socotra) தீவுகளை கைப்பற்றியதே அங்கு செழித்து வளர்ந்திருந்த இந்த கற்றாழைகளுக்காவே என்கின்றது வரலாறு.

நெஃப்ரிடியும்  கிளியொபாட்ராவும்

எகிப்தின் பேரழகிகள் நெஃப்ரிடியும்  கிளியொபாட்ராவும் (Nefertiti and Cleopatra) சருமப்பொலிவிற்கு இதன் சாற்றை பயன்படுத்தினார்கள். எகிப்தியர்கள் இதனை ’’அழியாத்தாவரமென்றார்கள்’’, கிரேக்கர்கள் இதை உலகின் எல்லாப்பிணியையும் போக்கும் மாமருந்தென்றார்கள். மெசாபடோமியாவில்  கிறிஸ்துக்கு 2200 வருடங்களுக்கு முன்பே  சோற்றுக்கற்றாழையின் பயன்கள் இருந்ததை அகழ்வாய்வில் கிடைத்திருக்கும்  களிமண் பலகைகள் தெரிவிக்கின்றன.

கொலம்பஸ் தனது கடற்பிரயாணங்களில் கப்பலுக்குள்ளேயே தொட்டிகளில் இந்த செடியை வளர்த்தி, உடனிருந்தவர்களின் காயங்களுக்கும், நோய்களுக்கும் சிகிச்சையளித்திருக்கிறார். 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பேனிஷ் துறவிகள் சோற்றுக்கற்றாழையை பலவிதங்களில் மருந்தாக பயன்படுத்தி , அதன்  பயன்களை பலருக்கும் தெரியப்படுதினார்கள், மாயன்கள் இதை  ”இளமையின் ஊற்று” என அழைத்தார்கள்.

புனித வேதகாமம் சிலுவையிலிருந்து எடுத்த கர்த்தரின் உடலை சோற்றுக்கற்றாழைச் சாற்றில் பதப்படுத்தியதை சொல்கின்றது.  சோற்றூக்கற்றாழையைக் குறித்து 5 இடங்களில் வேதகாமத்தில் குறிப்பிடபட்டிருக்கின்றது.

நைல் நதிக்கரையோரம் அமைந்திருந்த பண்டைய எகிப்து நகரமான தெபெஸிலிருந்து, 1858ல் கண்டெடுக்கப்பட்ட, கிறிஸ்து பிறப்பிற்கு 1,550 வருடங்கள் முன்பு எழுதப்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படும் எகிப்தியர்களின் மருத்துவநூலான  “papyrus of Eber”  ல்  சோற்றுக்கற்றாழைகளின் பல பயன்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த நூல் தற்போது ஜெர்மனியின் ஜெர்மனியின் லெய்ப்ஸிக் (Leipzig)  பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது. எகிப்தியர்கள் சோற்றுக்கற்றாழையை கடவுளாக வழிபட்டதோடல்லாது, புனிதச்சின்னமாகவும் கருதினார்கள். இறந்த உடல்களை மம்மிகளாக்குதல் என்னும் பதப்படுத்துதலுக்கும் சோற்றுக்கற்றாழையை அதிகம் பயனபடுத்தி இருக்கிறார்கள்.

ஜப்பானில் மருத்துவருக்கு வேலையில்லாமல் செய்யும் தாவரமென்றே இதற்குப் பெயர். அங்கு இந்த ஜெல்லை தயிரில் கலந்து சாப்பிடுவதுண்டு.

இஸ்லாம் அன்றாட வாழ்வில் பல்வேறு விதங்களில் பயன்படும் இந்த கற்றாழையை அற்புதச் செடி (Miracle plant) என்றே குறிப்பிடுகின்றது. ஷார்ஜாவில்  2014ல் குரானில் குறிப்பிடப்பட்டிருக்கும், சோற்றுக்கற்றாழை, கருஞ்சீரகம், எலுமிச்சம்புல், அத்தி, ஆலிவ் உள்ளிட்ட  50  மருத்துவ தாவரங்களுக்கென்றே ஒரு பிரத்யேக பூங்காவை உருவாக்கி இருக்கிறார்கள்.

1800 களிலிருந்து இதன் உலகளாவிய பயன்பாடு மருத்துவத்துறையிலும் அழகுசாதனத்துறையிலும் மிகப்பெரும் அளவில் துவங்கியது.1944ல் ’A bomb’ அணுகுண்டு வீச்சில் காயம்பட்ட ஜப்பானிய வீரர்கள் கற்றாழைச்சாற்றை தடவியே விரைவில் நலம்பெற்றார்கள்.  இதன் தாவர அறிவியல் பெயரான Aloe vera வில் Aloe  என்பது கசப்புத்தன்மையுடைய பளபளக்கும் பொருள் என்னும் பொருள்படும் ‘’Alloeh’’  என்னும் அரபிச்சொல்லிலிருந்தும் இதன் சிற்றினப்பெயராகிய vera என்பது கிரேக்கமொழியில் ‘’True’’ உண்மையான என்னும் பொருளையும் கொண்டது. இதன் அறிவியல் பெயரையே உலகெங்கிலும் பொதுப்பெயராகவே வழங்கும் அளவிற்கு இது புழக்கத்தில் இருக்கும் ஒரு தாவரமாகிவிட்டிருக்கிறது.

பாரம்பரிய மருத்துவமுறைகளின் தாய் எனக்கருதப்படும் ஆயுர்வேதத்தில் சோற்றுக்கற்றாழை ‘Ghrita- kumari” எனப்படுகின்றது. பெண்களின் நலனுள்ளிட்ட இதன் பல்வேறு  பயன்களை  இம்மருத்துவ முறை விளக்கமாக சொல்லி இருக்கிறது.. பல்வேறு நோய்களுக்கும் இதிலிருந்து எடுக்கப்படும் மருந்துகளை ஆயுர்வேதம் பரிந்துரைக்கின்றது

பூஞ்சைத்தொற்று, பேக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக செயல்படும் இந்த சோற்றுக்கற்றாழையில் மனித உடலுக்கு மிக அத்யாவசியமான 8 முக்கிய அமினோ அமிலங்களும் வைட்டமின் சத்துக்களும், தாது உப்புக்களும், பிற முக்கிய சத்துக்களும்  நிறைந்துள்ளது

 உலகெங்கிலும் வளரும் இந்த தாவரத்தின் பேரினமான Aloe பல சிற்றினங்களை உள்ளடக்கியது.  3அல்லது 4 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் இத்தாவரம் அதிகபட்சமாக 21 சதைப்பற்றான இலைகளை உருவாக்கி 30-70செமீ உயரம் வரை வளரும். இதன் சாற்றில் ஏறக்குறைய 200 வகையான முக்கிய வேதிப்பொருட்கள் உள்ளன. முக்கோண வடிவில் இருக்கும் சதைப்பற்றான இலைகள் விளிம்புகளில் கூரான பற்களைப்போன்ற அமைப்பை கொண்டிருக்கும் இவை அஸ்போலேடேசியே (Asphodelaceae) குடும்பத்தை சேர்ந்தவை. சிவப்பும் மஞ்சளுமான சிறு மலர்கள்  செடியின் மத்தியிலிருந்து உருவாகும் நீளமான ஒற்றைத்தண்டின் நுனியில் கொத்தாக இருக்கும். இலைச்சோறும், மஞ்சள் நிற இலைப்பிசினும் புற்றுக்கட்டிகளை அழிப்பது, ஜீரணத்துக்கு உதவுவது உள்ளிட்ட பல மருத்துவ குணங்கள் நிறைந்தவை.

 இவற்றில் கொடிபோல படருவது, மரம்போல வளருவது, மிக சிறியது, குறுகிய இலைகள் கொண்டது,செந்நிறமானது என பல அழகிய வகைகள் காணப்படுகின்றன.

சோற்றுக்கற்றாழையின் பயன்கள்

சருமப்பாதுகாப்பு

புற்றுநோயை தடுக்கும்

மலமிளக்கி

கேச வளர்ச்சியை ஊக்குவிக்கும்

உடலை குளிர்விக்கும்

வயிற்று உபாதைகளை குணமாக்கும்

ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்

புண்களை ஆற்றும்

நோயெதிர்ப்புச்சக்தியை கொடுக்கும்

 நல்ல முதிர்ந்த இலைகளை செடியின் கீழ்பகுதியிலிருந்து வெட்டி எடுக்கலாம். ஒரு சமயத்தில் 3 அல்லது 4 இலைகளை இப்படி எடுக்கலாம். நன்கு கழுவி மேல்தோலை கத்தியால் பிளந்து உள்ளிருக்கும் சோறு போன்ற பிசுபிசுப்பான கண்ணாடிபோல பளபளக்கும் ஜெல் பகுதியை எடுக்கவேண்டும்

இதிலிருந்து வடியும் மஞ்சள் நிறபிசினை வடியவிட்டு ஜெல் போன்ற பகுதியை மட்டும் தனியே எடுத்து உபயோக்கிக்கலாம்.

நேரடியாக உடலின் மேற்புறத்திலோ அல்லது கேசத்திலோ இந்த ஜெல்லை தடவலாம் அல்லது இதை நன்கு கழுவி நொங்கு போன்ற இதன் சதையை சாப்பிடலாம், ஜூஸ் போல தயாரித்தும் அருந்தலாம். பலநாட்களுக்கு இவறை குளிர்பதனப்பெட்டியில் சேமித்தும் வைக்கலாம்

  மாறிவரும் வாழ்வுமுறைகளாலும் மருந்துகளின் பக்கவிளைவுகளினாலும் தாவர மருந்துப்பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உலகெங்கிலும் இருக்கிறது. கடந்த 20 வருடங்களில் சோற்றூக்கற்றாழையின் தேவை  அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. உலகளவில் தாய்லாந்து சோற்றூக்கற்றாழை ஜெல் தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கிறது. ஒருகிலோ கற்றாழை ஜெல்லின் விலை சுமார்  100 லிருந்து 250 ரூபாய்கள் வரை இருக்கும். பொடியாகவும் ஜெல்லாகவும் சாறாகவும் கழுவி சுத்தம் செய்யப்பட்ட துண்டுகளாக்வும் சந்தையில் இவை கிடைக்கின்றன. வீட்டில் தொட்டிகளில் மிக எளிதாக இவற்றை நல்ல சூரிய ஒளி இருக்கும் இடங்களில் மிககுறைந்த நீரூற்றி வளர்க்கலாம்.

இரண்டு ஏக்கர் நிலத்தில் பெரிதாக எந்த பராமரிப்புச்செலவுமின்றி 20 லிருந்து 30 டன் எடையுள்ள கற்றாழைகளை வளர்த்து 5 அல்லது 6 லட்சம் லாபம் பார்க்கலாம்.அரிதாக சிலருக்கு சோற்றுக்கற்றாழை ஒவ்வாமையை உண்டாக்கும்.

« Older posts Newer posts »

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑