கூளையன் என்னும் மாதாரிச்சிறுவன் பண்ணையக்காரரிடம் வருடக்கூலிக்கு விடப்படுகிறான். ஆடுகளை மேய்ப்பதும் சில்லறைவேலைகளை செய்வதும் பழையதை உண்பதும் வசவுகளை வாங்கிக்கொள்வதுமாக செல்லும் அவலவாழ்வுதான் எனினும் அவனுக்கும் அவனையொத்த அடிமைகளுடன் நட்பும் உறவுமாக ஒரு உலகிருக்கிறது. அவ்வுலகில் அவன் மகிழ்ந்திருக்கிறான். ஆடுகளுக்கு பெயரிட்டு அவைகளுடன் ஒட்டி உறவாடிக்கொண்டு அவைகளுடன் தாய்மொழியில் எப்போதும் பேசிக்கொண்டும் அதட்டிகொண்டும் இருக்கும் எளியவன் கூளையன்
அதிகாலையில் சாணம் அள்ளி, வாசல் பெருக்கி கைபடாமல் துணிசுற்றி மேல்சாதியினருக்கு பால் போசியை கொண்டு சென்று, பட்டி நீக்கி ஆடுகளை மேய்க்கக்கொண்டு போவது தேங்காய்சிரட்டையில் காபிகுடிப்பது, வசவுகளையும் அடிகளையும் சராமாரியாக வாங்கிக்கொள்வதுமாய் இருக்கும் கூளையன் என்னும் அறியாச்சிறுவனே கதைநாயகன்
சட்டியில் கிழவனின் மலமும் மூத்திரமும் அள்ளும் நெடும்பன், சீக்குபண்ணயக்காரியின் கைக்குழந்தையையும் இடுப்பில் வைத்துக்கொண்டு ஆடுமேய்க்க வரும் செவுடி,அவளின் நோயில் வெளுத்திருக்கும் தங்கை பொட்டி, எருமைகளையும் மேய்க்கும் வவுறி, கள் தரும் மணி, பூச்சி நாய், வெயில் மழை இரவு நிலவு மண்ணில் குழிபறித்து விளையாடும் பாண்டி, கிணற்று நீச்சல் பனம்பழம் புளியங்காய் பாறைச்சூட்டில் வறுத்த காடை முட்டைகள், இவர்களாலும் இவைகளாலும் ஆனது கூளையனின் உலகு
நாவல் முழுக்க பரந்துவிரிந்திருக்கும் மேட்டாங்காடும் பண்ணயக்காரர்களின் அழிச்சாட்டியமும் மாதாரிகளின் அவலவாழ்வும் விரிவாக அக்களத்திற்கேயான வாழ்வுமுறைகளின் விவரிப்புடன் சொல்லப்பட்டிருக்கிறது
மாட்டுக்கறி உண்னும்பொருட்டு கூளையனுக்கு கிடைக்கும் ஒரு ராத்திரி விடுதலையை இன்னுமொரு நாள் அவனாக நீட்டிப்பது, கிழங்குப்பணத்தை அவனையே வைத்துக்கொள்ள பண்ணயக்காரர் சொல்லுவது இந்த இரண்டு இடங்களே நமக்கு கொஞ்சம் ஆசுவாசம் தருவதாக இருக்கின்றது முழு நாவலிலும்
பண்ணையக்காரரின் அத்தனை ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் கேளாதவன் போலவே இருக்கும் கூளையன் தேங்காய் திருடி எதிர்பாரா பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்கிறான் கிணற்றில் கயிற்றில் கட்டித்தொங்கவிடப்படும் கூளையன் இறுதியில் பன்ணையக்காரரின் மகன் செல்வத்தை கிணற்று நீரில் முக்கி கொல்வதில் முடிகின்றது கதை
விவசாயம் கூலிவாழ்க்கை, கிராமத்டு வாழ்வு, சாதி வேறூபாடுகள், ஆடுமாடு வளர்ப்பிலெல்லாம் பரிச்சயமுள்ளவர்களால் எளிதில் தொடரமுடியும் கதைஇது
அத்தைய வாழ்வில் அறிமுகம்கூட இல்லாதவர்களால் இந்நாவல் விரிக்கும் களத்தையும் விவரிக்கும் கதையையும் கற்பனையில் சித்தரித்துக்கொள்வது கடினமென்றே எனக்கு தோன்றுகிறது
மைனாக்களை வேடிக்கை பார்ப்பது, மாட்டுக்கறி இரவிற்கு பிறகு தங்கைதம்பியை பிரிய மனமின்றி தவிப்பது, பீடி குடித்துப்பழகுவது ஆமரத்துக்கள் இறக்க கோவணத்தை அவிழ்த்துவிட்டு மரம்ஏறி அங்கிருந்து தெரியும் காட்டைப்பார்ப்பது பனம்பழங்களை பொறுக்கி கிழங்குபோடுவது புளியம்பழம் உலுக்குவது இரவில் திருட்டுத்தனமாக பார்க்கும் தலைவர் படம் பட்டி ஆடு காணமால் போவது தேங்காய் திருடிமாட்டிக்கொள்வது என ஒரு மாதாரிச்சிறுவனின் வாழ்வை அப்படியே நம்மால் காணமுடியும்
கதையோட்டம் தொடர்ந்து சீராக இருப்பதில்லை சில சமயம் தேங்கி நிற்கிறது, சில சமயம் பீறீட்டு பாய்கிறது சில சமயம் வறண்டும் போகிறது
வளர்த்த வீரனின் கறியை திங்கமறுக்கும் கூளையன் நண்பனாகவும் இருந்து முள்ளுக்குத்தாமல் பழம் பொறுக்க செருப்பை தந்த, பட்டிக்காவலில் அப்பனுக்கு தெரியாமல் மச்சுக்குள் வந்து படுத்துக்கொள்ளச் சொன்ன, கள்ளிறக்குகையில் துணை இருந்த, பள்ளிக்கூட கஷ்டத்தை கன்ணீருடன் பகிர்ந்துகொண்ட செல்வத்தை கிணற்று நீரில் அறியாமலும் தவிர்க்கமுடியாமலும் முக்கிக்கொல்வதுடன் முடியும் இக்கதை, வாசிக்கையில் பல இடங்களில் காய்ந்த வயிற்றில் மிளகாய்கள் நீச்சம் போட்டு மிதக்கும் கம்மஞ்சோற்றுக்கரைசல் இறங்குவது போல் குளுகுளுவென்றும் ஆங்கரமாய் அடிக்கும்வெயிலைப்போல கடுகடுவென்றும் மாறி மாறி கூளையனின் வாழ்வை சொல்கிறது, ஆசிரியரே சொல்லியிருப்பதுபோல் சொல்லாத பல கதைகளும் உள்ளது சொல்லப்பட்ட இக்கதையினுள்ளே
Leave a Reply