நள்ளிருள் நாறி / பிரம்ம கமலம் Epiphyllum oxypetalum

பிரம்மகமலம் நள்ளிருள் நாறி, இரவு ராணி, நிஷாகந்தி, குலேபகாவலி மலர், நள்ளிருள் ஒளிரி, அனந்த சயன மலர் என பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த அரிய அழகு மலர்ச்செடி கள்ளிக் குடும்பத்தைச் சேர்ந்தது. (Cactaceae)

இதற்கு Orchid cactus, Jungle cactus, Night blooming cereus, Dutchman’s Pipe. King of the Himalayan Flowers,  Queen of the Night,  Orchid cactus,  என்னும் ஆங்கிலப் பொதுபெயர்களும் உள்ளன.  இதன் அறிவியல் பெயரான Epiphyllum oxypetalum  என்பதில்  epi, phylum என்றால் இலையில் மேற்பரப்பிலிருந்து என்றும்  oxus என்றால் கூரிய,  petalum என்றால் இதழ்கள் என்றும் பொருள், இலைகளின் மேற்பரப்பிலிருந்து உண்டாகும் கூரிய நுனிகளையுடைய  இதழ்களுடனான மலர்களைக் கொடுக்கும் தாவரம் என்று பொருள்

உண்மையில் இவை இலைகளிலிருந்து மலர்களை தோற்றுவிப்பதில்லை. கள்ளி இனமாதலால் தண்டுகளே தட்டையாக இலைகளைப்போல இருக்கும். இந்த இலைத்தண்டிலிருந்தே மலர்கள் உருவாகும். வழவழப்பான, கொடியைப்போல இருக்கும் இவற்றை தாங்கும் இளம் காம்புகள் சிவப்புநிற செதில் போன்ற அமைப்புக்களால் சூழப்பட்டிருக்கும் எனவே பார்ப்பதற்கு தொப்புள் கொடியைப் போலவே இருக்கும். எனவேதான் இது பிரம்மகமலம் என்று இந்தியாவின் பல மொழிகளில் அழைக்கப்படுகின்றது, பிற பூக்களைப்போல, பகலில் பூத்து, இரவில் உதிர்ந்து விடாமல். பிரம்ம கமலம், இரவில் பூத்து, பகலில் உதிரும். 

வெண்ணிறத்தில் மயக்கும் நறுமணத்துடன் பெருமலர்கள் பின்னிரவில் மலரும்.  ஒரே செடியில் ஒரே சமயத்தில்  40 -100’ க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கும். விதை, கிழங்கு, தண்டு ஆகியவற்றிலிருந்து இனப்பெருக்கம் செய்யும் தாவரங்களைப்போலல்லாது, இவற்றின்   இலைகளைப் போலிருக்கும் தண்டுகளை நறுக்கி நட்டு வைத்தாலே புதியசெடி முளைத்துவிடும்.  இந்த மலர்கள் பொதுவாக ஆண்டுக்கு ஒரு முறைதான் பூக்கும். அதுவும் நள்ளிரவில் பூத்து ஓரிரு நாட்களில் உதிர்ந்து போகும் தன்மை கொண்டவை.

இவை  இரவில் மலர்வதனால் நிலவொளியில் இவற்றை   வௌவால்களும், Humming bird moth எனப் பெயர் கொண்ட பெரும் அந்திப்பூச்சிகளும்  (moths) தான் மகரந்தச்சேர்க்கை செய்யும். இரவின் நிலவு, நட்சத்திரம் ஆகியவற்றின் மிகக்குறைந்த ஒளியிலும் மகரந்தச்சேர்க்கை செய்யும் சிறு உயிரினங்களுக்கு இவற்றின் இருப்பு தெரியவேண்டுமென்றே இவை வெண்ணிறத்திலும். நல்ல வாசனையுடனும் இருக்கின்றன.  இப்படி இரவில் மலர்ந்து இரவாடிகள் எனப்படும் (nocturnals ) இரவில் மட்டும் செயலாற்றும் பூச்சிகளால் மகரந்த சேர்க்கை செய்யpபடும் மலர்கள் அனைத்திற்கும் பொதுவாக நிலவு மலர்களென்று பெயர்.( moon light flowers ) இந்தப் பூவின் நறுமணத்திற்கு காரணம் இதிலிருக்கும் , Benzyl Salicylate என்னும் வேதிப் பொருள்.

2லிருந்து 3 மீட்டர் உயரம் வரையே இவை வளரும் அதிகம் வளர்கையில் இலைத்தண்டுகளை வெட்டி எடுத்து வேறு புதிய இடங்களில் நட்டு வளர்க்கலாம்.. இச்செடி வளர்ந்து 3 வருடங்களில் 12லிருந்து 17 செமீ அளவிலிருக்கும், மெழுகுபோன்ற வழவழப்பான இதழ்கள் கொண்ட மலர்களை அளிக்கத்துவங்கும்

 சமூக ஊடகங்களில் சொல்லப்படும்  //இது  இமய மலைகளில் மட்டும் வளரும். பத்து  ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் வளரும் என்பதெல்லாம் கட்டுக்கதைகள்// இமயத்தில் மட்டுமல்ல , எங்கும் வளரும் இயல்புடையது இச்செடி ,

  தென் அமெரிக்காவின் மெக்ஸிகோ காடுகளைக் தாயகமாகக் கொண்ட இத்தாவரம், அங்கிருந்து உலகமெங்கும் பரவியுள்ளது. நல்ல வளமான மண்ணில் அதிகம் சூரியஒளி படாதவாறு அருகில் இவை பற்றிப்படர கொழுகொம்போ அல்லது மரமோ இருக்குமிடங்களில் வளர்க்கலாம் மரங்களினடியில் வளருகையில்  விரைவாக அவற்றைப் பற்றிக்கொண்டு ஏறி வளரும். மிக அதிகமாக நீர் விடத் தேவையில்லை

இரவின் மலர் என பொருள்படும் இந்த நிஷாகந்தி மலையாள இலக்கியங்களில் சிறப்பான இடம்பெற்றிருக்கின்றது. கேரளத்தில், ஒவ்வொரு வருடமும் நடைபெறும் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்கு    ‘நிஷாகந்தி விழா’ என்றே பெயர்.

பின்னிரவில் மலர்ந்து நல்ல மணம் வீசும் இம்மலர் பழந்தமிழ்ப் பாடல்களில் நள்ளிருள் நாறி என்று அழகிய பெயரில் குறிப்பிடபட்டுள்ளது.  இருவாட்சி மற்றும் முல்லையும் இதே பெயரில் சில இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. எனினும் இவையிரண்டும் பகலில் மலர்ந்து மாலை மணம் வீசுபவை. பிரம்மகமலமே இரவில் மலர்ந்து மணம்பரப்பும் எனவே இதற்குத்தான் இப்பெயர் மிகபொருத்தமாந்தாக இருக்கும்.


 Epiphyllum  பேரினத்தில் 15 சிற்றினங்கள் இருப்பினும் oxypetalum என்னும் சிற்றினமே உலகெங்கிலும் அதிகம் வளர்ககப்படுகின்றது. இலங்கையில் இதன் இரண்டு சிற்றினங்கள் வளர்கின்றன பிரமம்கமலத்தை விட மெல்லிய மலரிதழ்களை கொண்டிருக்கும்  Epiphyllum hookeri யும் இங்கு அதிகம் காணப்படுகின்றது

பிரம்மகமல மலர்கள் சில உடல் நோய்களுக்கு சிகிச்சைக்காக  உண்ணப்படுகின்றன. ஆனால் வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள மலராதலால் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இவற்றை உண்ணுதல் கூடாது

 வியட்நாமில் இம்மலரிதழ்களிலிருந்து எடுக்கப்படும் ஒரு மருந்தை பாலுணர்வை தூண்டும் மருந்தாக பயன்படுத்துகிறார்கள். இந்தியாவிலும் இம்மலர் பெண் மலட்டுத்தன்மையை நீக்க பழங்குடியினரால் உண்ணப்படுகின்றது. இதயநோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும், ரத்தக் கொழுப்பை குறைக்கவும் இம்மலர் பயன்படுகின்றது

  மிக மிக அரிதாகவே இச்செடியில் சிறு விதைகளுடனிருக்கும் இளஞ்சிவப்பு கனிகள் உருவாகும். கலப்பின செடிகளில் நிஷாகந்தி மலர்கள் வெள்ளயல்லாத ஆரஞ்சு மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு  நிறங்களிலும்   இருக்கின்றன.

பல கலாச்சாரங்களில் இம்மலரை காண்பது நல்ல சகுனமென்றும், மலரைக் காண்கையில் நினைத்தது நடக்குமென்றும், இந்தச்செடி மலர்வது,  நம்பிக்கைக்கு ஆதாரமாகவும் கருதப்படுகின்றது சில தென்தமிழக கிராமங்களில் இச்செடியில் மலர் விரியும் இரவில் அதற்கென பூசைகள் கூட செய்யப்படுவதுண்டு.  சிலர் தங்கள் வீடுகளில் இம்மலர் பின்னிரவில் மலருகையில் நண்பர்களுக்கு விருந்துவைத்து மகிழ்வதும் உண்டு.

ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ஏசு பிறந்தபோது அவரைக்காண வந்த மூன்று அரசர்களுக்கு வழிகாட்டிய நட்சத்திரங்களின் குறியீடாக  இம்மலரை கருதி இதை பெத்லகேமின் நட்சத்திரம் என்று அழைக்கின்றனர்.

இலங்கை இந்தியா சீனா ஜப்பான் ஆகிய பலநாடுகளின் தொன்மங்களில் இம்மலர் பலவிதங்களில் இறைத்தன்மையுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. இலங்கையில் புத்தருக்கு அஞ்சலி செலுத்த விண்ணுலகினர் மண்ணுலகுக்கு வரும் மலரின் வடிவமாக கருதப்படும் இது சொர்க்க மலர் என்று அழைக்கப்படுகிறது.   

சீனாவில் இம்மலர்களை பற்றிய குறிப்புக்கள் 1645ல் எழுதப்பட்ட நூல்களில் உள்ளது. சீனாவில் இது தோன்றியதும் மறைந்துவிடும் புகழின் நிலையாமைக்கு குறியீடாக பயன்படுத்தப்படுகின்றது. ஜப்பானில் இம்மலரை  கெக்கா பிஜின் அதாவது நிலவில் காணும் அழகு என்று அழைக்கிறார்கள்.  (Gekka Bijin)

 பொதுவாக இதை தாய் மகளுக்கும், நண்பர்கள் பிற  நண்பர்களுக்கும் பரிசாக அளித்து வளர்ப்பதென்றும் ஒரு வழக்கம் இருக்கிறது இச்செடிகளை விலைகொடுத்து வாங்கக்கூடாது யாரிடமேனும் பரிசாக வாங்கவேண்டும் என்னும் நம்பிக்கையும் உலகின் பலநாடுகளில் பொதுவாக இருக்கிறது.

உலகின் மிக விலையுயர்ந்த மலர்களில் இதுவும் ஒன்று சந்தைகளில் விற்கப்படாத மலரும் கூட.