திரு தியடோர் பாஸ்கரன் அவர்களுடனான இணைய வழி கூடுகை 12/9/2020 அன்று விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தினால் ஒருங்கிணைக்கபட்டது. நிகழ்வு மிக சிறப்பானதாக நிறைவானதாக  இருந்தது. இந்த நோய்தொற்றுக்காலத்திலும் இணையம் வழியே திரு முத்துலிங்கம் , திரு நாஞ்சில் நாடன், திரு தியடோர் பாஸ்கரன்  என மிக முக்கியமான் ஆளுமைகளுடன் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக உரையாடவும் பலவற்றை அறிந்துகொள்ளவும் முடிந்ததில் மகிழ்ச்சி.

விஷ்ணுபுரம் விழா, ஊட்டி,குரு நித்யா ஆசிரமத்தின் காவிய முகாம், ஈரோடு கூடுகைகளைப்   போல விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக நடத்தப்படும் எல்லா விழாக்களையும் போலவே இணைய வழிகூடுகைகளும் மிகச்சிறப்பாக நேரஒழுங்குடன், முறையாக நடப்பது ஆச்சர்யமளிகின்றது.  பொதுவாக ஒழுங்குடன்  இருப்பதாக சொல்லப்படும்  கூட்டங்களில் காணப்படும் செயற்கையும், வெற்றுச்சம்பிரதாயமும், உயிரற்ற தன்மையும், இறுக்கமும் இல்லாமல் இங்கு  சிரிப்பும் பாட்டும் மகிழ்ச்சியும் சுதந்திரமும் கூடவே முறையான ஒழுங்கும் இருப்பதுதான் வியப்பு.

திரு ராஜகோபாலன் வழக்கம்போலவே மிகச்சிறப்பாக மலர்ந்த முகத்துடன்  நிகழ்ச்சியை  நடத்தினார்.  அவருக்கு பின்னிருக்கும் அன்னை யானையும் குட்டியும் தும்பிக்கைகளால் தொட்டுக்கொள்ளும் சித்திரம் அழகு

தியடோர் பாஸ்கரனை போல மிக முக்கிய ஆளுமைகளை இப்படி ஏராளமானோர் சந்திக்கையில்  பன்முக ஆளுமையும் அனுபவசாலியுமான அவரிடமிருந்து பலவற்றை கற்றுக்கொள்ள முடிகின்றது. சூழல்மீதான் அவரது கரிசனமும் அறிவும் பிரமிப்பளிக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு இந்து தமிழ் நாளிதழில் சென்னையின் காணாமல் போகும் நீர்நிலைகளைக்குறித்தான அவரது கட்டுரையொன்றைக்குறித்து நான் அவருக்கு மின்னஞ்சல் செய்திருந்தேன். மின்னஞ்சல் முகவரியை தவறாக குறிப்பிட்டிருந்ததால் எனக்கே திரும்ப திரும்ப வந்துகொண்டிருந்து. பின்னர் பொறுமையாக சரியாக அதை அவரது முகவரிக்கே forward செய்தேன். மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றதையும் முன்னரனுப்பியவற்றில் நான் ஓரெழுத்தை விட்டுவிட்டதால்தான் அவை திரும்பின என்பதையும் குறிப்பிட்டு பதில் அளித்திருந்தார். மிக சின்ன விஷயங்களிலும் கவனமும் கரிசனமும் கொண்டிருப்பவர் என்பதற்கான் சான்று அந்நிகழ்வும். கடந்த ஆகஸ்ட் மாதமும் திரு.தியடோர் பாஸ்கரன் அவர்கள்  மத்திய அரசின் விஞ்யான் பிராசார் ஏற்பாடு செய்திருந்த ஒரு இணையவழிகூடுகையில் ஒருமணி நேரத்திற்கும் அதிகமாக மிக முக்கியமான சூழல் பதுகாப்பு குறித்த  உரையாற்றுகையில் நானும் கேட்க கொடுத்து வைத்திருந்தது

Slipper orchid வகையில் அரிதான ஒன்றான Paphiopedilum druryi குறித்தும், நாய்கள் பூனைகள் காட்டுயிர்களை குறித்துமான அவரது கருத்துக்கள் சுவாரஸ்யமானவை மட்டுமல்லாது மிக முக்கியமனவையும் கூட.

Paphiopedilum druryi

ராணுவ அதிகாரி போன்ற மிடுக்கான தோற்றமும், பொருத்தமான ஆழ்ந்த குரலுமாக வசீகரமான ஆளுமை அவர், குறிப்பாக  அந்த கம்பீர மீசை. அவரது மனைவியை அறிமுகப்படுத்தியதும் அப்படித்தான், அவர்களுக்குள் இருக்கும் அன்பையும் புரிதலையும் அந்த சிலமணி நேரங்களிலேயே உணர முடிந்தது.

அவர்களின் செல்லப்பூனையின் குரல் அவ்வப்போது மெல்லிசாக கேட்டுக்கொண்டிருந்தது. அவரது மனைவியும் காமிராவின் முன்னால் வருகையில் பூனையை கீழே விட்டுவிட்டு வந்துவிட்டார். அது ஒரே செல்லச்சிணுங்கலும் புகாருமாக குரல் கொடுத்துக்கொண்டே இருந்தது. பின்னர் தாளமுடியாமல் தாவி மேசைக்கு வந்தேவிட்ட அதை அவரும் வாரி எடுத்து   மடியிலிருந்திக்கொண்டார்.  அவ்வப்போது இணையவழி கணவருக்கு தெளிவாக வந்து சேராத கேள்விகளை இவர் தள்ளி இருந்து  மெல்லிய குரலில் மீண்டும் சொல்லுவதும், இவரும் முழுநிகழ்விலும் மனைவியின் பக்கமாகவே ஒரு செவியை குவித்து வைத்துக்கொண்டதுமாக அவர்களது அன்னியோன்யம் மனதுக்கு மிகவும் நிறைவளித்தது

 அவர் பேசிக்கொண்டிருந்ததை ஒரு screen shot எடுத்து சேமித்து வைத்துக்கொண்டேன். அவருக்கு பின்னால் அடுக்கபட்டிருந்த புத்தகங்களும் சிறிய கண்ணாடிக்குடுவை நீரில் செருகப்பட்டிருந்த அழகிய பூங்கொத்துக்களும், புத்தர் சிலையும், வாஞ்சையுடன் அவரது மனைவி அணைத்துகொண்டிருந்த பூனைக்குட்டியுமாய்,   இயற்கைமீதும் உயிர்களின் மீதும்  கரிசனம் நிறைந்த  அவரது ஆளுமையைக்குறித்தும் அந்த ஒரு காட்சியே முழுக்க சொல்லிவிட்டது.

பச்சைபுல்வெளிகளைக் குறித்தான அவரது கருத்து மிக முக்கியமானது.  பலவகைப்படும் Ground cover plants எல்லாவற்றையும் நிரந்தரமாக அப்புறப்படுத்திவிட்டு புற்களை மட்டும் நிரப்பி, பெரும் நீர்ச்செலவில் அதை வளர்த்தி , அதை அழகு எனக்கொண்டாடுவதில் எனக்கும் பெரும் ஒவ்வாமை இருக்கின்றது.   ஒழுங்கற்ற பல்லுயிர்ப்பெருக்கின் அழகுதானே இயற்கையென்பது?

 காட்டுயிர் பாதுகாப்பு என்றாலே சிங்கம்,புலி, கரடி யானைகளின் பாதுகாப்பு மட்டுமல்ல  flora and fauna இரண்டும் சேர்ந்ததே  காட்டுயிரென்பதை தியோடர் பாஸ்கரன் அவர்கள் சொல்லுகையில் அது பலருக்கும் சென்று சேர்கிறது.

 எனவே தான், நான் எப்போதும் ஆதங்கப்படும் களைச்செடிகளின் அழிவு குறித்தும் பாதுகாப்பைக் குறித்தும் அவரிடம் கேட்க நினைத்தேன் WWF India வின் குழுவிலும் இருந்திருக்கும், இத்துறையில் அனுபவமிக்க அவரது கருத்துக்கள் எல்லாமே சூழல் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பில் மிக முக்கிமானது.

பத்து வருடங்களுக்கு முன்பு வெகு சாதாரணமாக சாலையோரங்களிலும் தரிசு நிலங்களிலும் வேலிகளிலும் செறிந்து காணப்பட்ட நூற்றுக்கணக்கான களைச்செடிகள் இப்பொது அரிதாகவே காணக்கிடைக்கின்றன. அவற்றின் முக்கியத்துவம் தெரியாமல் அவற்றை இழந்துகொண்டே இருக்கிறோம்

NBR  எனபடும் Nilgiri Biospehere reserve ஒரு மாபெரும் தாவர பொக்கிஷம். சில வருடங்களுக்கு முன்பு ஊட்டியில் மட்டுமே வளரும் endemic வகை தாவரங்களை காணும் பொருட்டு   மாணவர்களுடன் அங்கு சென்றிருக்கையில் சாலையின் இருபுறமும் ஆட்கள் செடிகளை வெட்டி துப்புரவாக்கிக்கொண்டிருந்தனர். அதிர்ச்சியாகி காரணம் கேட்கையில் மறுநாள்  ஒரு அரசியல் தலைவரின் வருகையின் பொருட்டு சாலைகள் தூய்மைப்படுத்தப்படுவதாக சொன்னார்கள்.  நீலக்குறிஞ்சி மலைமுழுதும் மலர்வதால் நீலகிரி எனப்பெயர் பெற்றிருக்கும் அம்மலையின் அரிய தாவரங்களையெல்லாம் அங்கு வரவிருக்கும் ஒரு பிரபலத்தின் பொருட்டு அகற்றுவதும் அழிப்பதுமெல்லாம்  எத்தனைஅநீதி?

கல்லூரியிலும் நான் பொறுப்பேற்றுக்கொண்டிருந்த ’அமுக்கரா, சர்ப்பகந்தி, திப்பிலி, வெப்பாலை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மூலிகைகள் நிறைந்திருந்த ஒரு தோட்டத்தை கல்லூரித்தலைவரின் ’’பார்க்க அழகாக இல்லை’’ எனும் அபிபிராயத்தினால் அகற்றிவிட்டு பச்சைக்கம்பளம் விரித்தது போல கொரியன்  புல்வெளியை அமைத்திருக்கிறார்கள். ஒருவாரம் வரை வேருடன் செடிகள் பிடுங்கப்படுவதையும் திரும்பத்திரும்ப இருவித்திலைத்தாவரங்கள் எதுவும் முளைத்து விடாமலிருக்க நிலம் முழுவதும் ரசாயன களைக்கொல்லி அள்ளிக்கொட்டப்படுவதையும் திகைத்துப்போய் பார்த்தபடி இருந்தேன்.  நீர்தெளிப்பான்கள் சீராக இயங்கிக்கொண்டிருக்கும் அந்த பச்சைப்புல்வெளியை கடந்துதான்  தினமும் வகுப்புக்கு செல்வேன் வேதனையுடன்.

தியோடர் பாஸ்கரன் அவர்களைப்போல  இயற்கைச்சூழல் மீதும், உயிர்களின் மீதும் அக்கறைகொண்டிருக்கும்  ஒருசில செல்வாக்குள்ள அதிகாரிகளாவது இப்போது செயலாக இருந்தால் மீதமிருக்கும் காட்டுயிர்களையாவது காப்பாற்றலாம். இந்த நிகழ்சிக்கு பிறகு பலர் என்னிடம் களைச்செடிகளை குறித்து ஆர்வமாக பேசுகிறார்கள்.  இப்படி விஷ்ணுபுரம் நிகழ்வுகள் ஏற்படுத்திக்கொடுக்கும் திறப்புக்களுக்கும் இதுபோன்ற நல்ல நிகழ்வுகளுக்குமாக, திரு ஜெயமோகன் அவர்களுக்கும்,  திரு ராஜகோபாலன், ஆஸ்டின் செளந்தர், மற்றும் சந்தோஷ் உள்ளிட்ட நிகழ்வு நல்லபடியாக நடக்க காரணமாயிருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.