குள்ளச்சித்தன் சரித்திரத்தில் வரும் வேம்பு குறித்து விஷ்ணுபுரம் விழாவில் கேட்ட ஒரு வரி உள்ளேயே உறுத்திக்கொண்டு இருந்தது. அதன்பொருட்டே அப்புத்தகத்தை தேடத்துவங்கி மிகுந்த பிரயாசைக்கு பிறகு கிடைக்கப்பெற்றேன். உண்மையில் எங்குமே குள்ளச்சித்தன் சரித்திரமும் பகடையாட்டமும் கிடைக்கவே இல்லை. அலைந்து திரிந்து யார் யாரிடமோ சொல்லி எப்படியோ சென்னையிலிருக்கும் சகோதரர் யோகீஷ்வரனின் உதவியால் தருவித்தேன். நான் எதிர்பார்த்திருந்ததும் என் மனதில் இப்புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து (வேம்புவை மையமாகக்கொண்டு) நானே உருவக்கிக்கொண்டிருந்த சித்திரமும், இப்புத்தகம் கொடுத்த வாசிப்பனுபவமும் முற்றிலும் வேறு எனினும் நான் பல ஆண்டுகளாக தொடர்புடைய சித்தர்கள் கதையாக இது இருந்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.
சமீபத்தில் நான் வாசித்த வெளியேற்றம், ஊர்சுற்றி, நினைவுதிர்காலம் இவற்றுடன் குள்ளச்சித்தன் சரித்திரம் வாசிக்கையில் இவையெல்லாமே தொடர்ந்துவரும் ஒரே கதையின் தொடர்ச்சி என்று கூட உணர்ந்தேன். நினைவுதிர்காலத்தின் விசிலிசைக்கலைஞனைக்கூட, (ஆற்றில் மறைந்துபோனானே அவனை) குள்ளச்சித்தனின் நெருப்பைக்குடித்துக்கொண்டு எரிந்துகொண்டிருந்த அந்த இளம் இசைமேதை ப்ருத்வியுடன் தொடர்புபடுத்திக்கொண்டேன். அருந்தவத்தை, ஊர்சுற்றியில் வரும் ஒரு பெண்பயணியுடன், இப்படி நானாகவே ஒரு தொடர்சியை உருவாக்கிக்கொண்டேன் .
பல வரிசையில் புள்ளிகளிட்டு எங்கோ துவங்கி எங்கெங்கொ நுழைத்து, வளைத்து ஒவ்வொன்றையும் சுற்றியும் இணைத்தும் கோடுகளிட்டு இறுதியில் அழகிய வசீகரிக்கும் வடிவிலான ஒரு நெளிக்கோலம் போடுவதைபோல சிகப்பி, அய்யர், வேம்பு, ஆலாஸ்யம், சித்தர், முத்துசாமி, மௌல்வி, செய்யது ராமாமிர்த்தம்மாள்,பென்குவின் கழுகு புலி பழனி, ராமநாதன் என்று கதைமாந்தர்களை காட்டிகொண்டெ வருகிறீர்கள், ஒவ்வொருவரும் பிறருடன் எப்படியோ எங்கேயோ தங்களை இணைத்துக்கொள்கிறார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கண்ணியில் சந்திக்கிறார்கள் இறுதியில் காணக்கிடைக்கும் அந்த கோலம் அத்தனை அழகு. எல்லாப்புள்ளிகளும் தனித்தனியாக தெரிகின்றது எல்லாமே ஒற்றைக்சரடொன்றினால் இணைக்கவும் பட்டிருக்கிறது.
சாமான்யர்களும், காலங்கள் கடந்த நினைவுகளும், ஜென்மவாசனையும், சாமான்யர்கள் இயங்கவியலா தளங்களில் இயங்குபவர்களுமாக கதை வசீகரம். அழுக்குசாமி சித்தர் வாழ்ந்து மறைந்த வேட்டைக்காரன்புதூரை சேர்ந்தவளென்பதாலும் ஒரு ஆசிரியையாக சித்தர்களை குறித்து அனேக வருடங்களாக பாடமெடுத்துக்கொண்டிருப்பவளாகவும் கதைக்குள் நான் ஆழ்ந்திருந்தேன் வாசிக்கையில்.
நான் பிறந்து வளர்ந்த வேட்டைக்காரன்புதூரில் இப்போதும் அழுக்குசாமி சித்தரின் ஜீவசமாதி, பிரசித்தி பெற்ற கோவிலாக இருக்கிறது, சிறுமியாக ஆத்தா அப்பாரின் கைகளைபிடித்துக்கொண்டு அங்கு சென்ற நினவுகளும் சித்தரைக்குறித்து கேட்டிருந்த ஏராளம் கதைகளும் குள்ளச்சித்தனை வாசிக்கையில் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது.
குதிரை வியபாரத்திலிருந்த என் அப்பாரு எப்போதும் வீட்டில் இருந்ததில்லை திடீரென வருவார் சிலநாட்கள் இருப்பார் மீண்டும் வியாபாரத்திற்கு சென்று விடுவார். அப்படி வீடு தங்கும் நாட்களில், இரவுகளில் வீட்டு முன்திண்ணையில் இருந்த பளபளப்பாய் மினுங்கும் ஈட்டி மர பெஞ்சில் என்னையும் சேர்த்து ஒரு கருப்புக்கம்பளியில் போர்த்திக்கொண்டு ராமாயணமும் மகாபாரதமும் , திகம்பரராக அக்கிராமத்திற்கு வந்த அழுக்குச்சாமி சித்தர் கதையையும் சொல்லிக்கொண்டிருப்பார். அப்பாருவிடமிருந்து வீசும் புகையிலை வாசனையும், கம்பளியும் கதையும் கொடுக்கும் கதகதப்புமாக அவர் அணைப்பிலேயே நான் உறங்கிய இரவுகள் அனேகம்.
ஆத்தாவும் எத்தனையோ முறை சித்தரைபற்றி சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அவரை உடைஉடுத்தச்செய்ய ஊர்ப்பெரியவர்கள் பட்ட பாட்டையும், இரண்டு முறை ரெட்டைப்பிள்ளைகள் பிறந்து இறந்துபோனதும், அழுக்குசாமி சித்தர் தன் உடலின் அழுக்குகளை திரட்டி அதையே மருந்தாகத் தந்து அதை உண்டபின்னரெ என் அப்பா அழுக்குராசு பிறந்து தங்கியது பின்னர் மூன்றுஅத்தைகளும் இரண்டு சிற்றப்பன்களுமாய் குடும்பமும் வறுமையும் பெருகியது, சித்தர் இரவுகளில் உடல்பாகங்களை தனித்தனியெ கழட்டி வைத்துவிட்டு கிடந்த கோலம், பலருக்கும் அழுக்கையே தீர்வாக அளித்தது, ஒரே சமயத்தில் கிராமத்திலும் வேறு பல இடங்களிலும் அவரைக்கண்ட கதைகள், அவரது மேல் துண்டை வாங்கிக்கொண்டு கோர்ட்டுக்குச் சென்று வழக்குகளில் வெற்றிபெற்றவர்களின் கதைகள் ,அவரால் தூக்கிவிடப்பட்டு பெரிய மனிதர்களானவர்கள் இப்படி கதைகளின் வழியே கேட்டுக்கேட்டு சித்தர் என் இளமைப்பிராயத்திலிருந்து என்னுடனேயெ இருக்கிறார். அப்போதிலிருந்து இப்போதுவரை நான் அடிக்கடி செல்லும் கோவிலும் இந்த சித்தர் கோவில்தான். முன்பு கோவிலினருகில் கரைபுரண்டோடிக்கொண்டிருந்தது ஆறு, இப்போது அது வெறும் புதர்மண்டிய மந்தைத்தடம்.
சித்தர் கோவிலைக்குறித்து உதிரி உதிரியாக பல நினைவுகள் எனக்குள் இருக்கும் குள்ளச்சித்தனில் சொல்லியிருப்பது போலவே. அந்த ஆற்றுநீரில் அப்பாருவின் கண்காணிப்பில் விளையாடியது, மீன் பிடித்தது ஒரு அண்ணனின் திருமணம் அக்கோவிலில் நடந்தபோது மணப்பெண்ணுடன் கருக்கிருட்டில் ஆற்றிற்கு குளிக்க வந்து விசையுடன் இருந்த ஆற்றுத்தண்ணீரில் புதுப்பெண்ணின் சந்திரப்பிரபை அடித்துச்செல்லபட்டது, அப்போதிலிருந்து அங்கிருக்கும் மகிழமரங்கள் அதனடியில் நான் உணரும் விளங்கிக்கொள்ள முடியாத பிறருக்கு விளக்கியும் சொல்ல முடியாத மனஅமைதி, அங்கிருக்கும் சித்தர் திருவுருவின் ஓவியங்கள், இப்படி
இப்போது கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் என் மகனின், அங்கு நடைபெறுவதாக இருக்கும் திருமணத்தை பல்லாயிரம் முறை மனக்கண்ணில் காட்சியாக்கி பார்த்தபடிக்கிருப்பேன் அங்கிருக்கையிலெல்லாம்.
என் மனதின் அடியாழத்தில் இருந்த நினைவுகளையும் குள்ளச்சித்தனின் கதையையும் கலந்தேதான் நான் வாசித்தேன் என்பதால் புதுவிதமான வாசிப்பனுபவம் கிடைத்தது.
அந்த வேம்பு, அய்யர் அய்யருடன் வேம்பு உடன்கட்டை ஏறியது இவையெல்லாம் எனக்கு பெரும் எதிர்ப்பார்ப்பை உண்டுபண்ணுகின்றது நினைக்கையிலெல்லாம். இந்தகதையை மட்டும் விரிவாக்கி வேறு கதையாக யுவன் எழுதியிருக்கிறாரா?எனக்கே அப்படி ஒரு மயக்கா? நான் அவரது எழுத்துக்களை தேடித் தேடி இப்போதுதான் (சுரேஷ் பிரதீப்பின் ‘ நினைவுகளை தொடுத்தெழுதும் வரலாறு’’ க்குபின்னர்) வாசிக்கத்துவங்கியிருக்கிறேன்.
எங்கோ ஆதரவற்றிருந்த, அய்யரால் ஒத்தாசை செய்யபட்ட, பெண் தன்மையுடன் ஒரு உதவியாள் பல வருட விஸ்வாசம் பின்னர் அதுவே ஒருதலையாக விருப்பம் பின்னர் அய்யரின் மறைவு வேம்புவும் உடன்கட்டைஏறுவது என்று விரிவாக ஒரு கதையை யுவன் எழுதிவிட்டதாக நானே நினைத்துக்கொண்டு அந்த கதையை வாசிக்கும் உத்தேசத்துடன்தான் இப்புத்தகத்தை பிரித்தேன்.
கதைமொழி எளிமை எந்த ஜாலங்களும் இல்லை, சரளமும் கூட உரையாடல்களின் இயல்புத்தன்மை இக்கதைக்கு பெரும் பலம். உரையாடல்களின் வழியே சொல்லப்பட்டவைகளை அதே உணர்வுநிலைகளில் யுவன் அல்லது கதைமாந்தர்கள் உத்தேசித்தை சரியாக விளங்கிக்கொள்ள முடிகின்றது. முன்பின்னாக மாற்றிச்சொல்லப்பட்டிருக்கும் சில தகவல்களை நிகழ்வுகளை, பிறிதொருவரின் பார்வையில் கோணத்தில் மீண்டும் சொல்லப்பட்டிருந்தவைகளை வாசிக்கையிலும் எந்த குழப்பமும் இல்லாமல் கதை மனதுக்குள் செல்கின்றது.
முத்துசாமியின் மறைவு குறித்து வெகுநேரம் சிந்தித்துக்கொண்டிருந்தேன். கல்லூரி வளாகத்தில் பெருங்கொன்றைகள் இப்போது பூத்திருக்கின்றன. வகுப்புக்களுக்கு செல்கையில் அடர்மஞ்சள் கொத்துக்களிலிருந்து மலர்கள் மெல்ல மெல்ல ஓசையின்றி மிதந்து உதிர்வதை பார்த்துக்கொண்டே செல்வேன். அவற்றிற்கு உதிர்வதில் எந்த புகாரும் இல்லை அவை உதிர்கையிலேயே காப்பிக்கொட்டை நிறத்தில் நுண்விதையொன்றின் வடிவில் அதே மரத்தில் தங்களை விட்டுச்செல்கின்றன . மலர் உதிர்வதைப்போல இயல்பாக உதிர்வது என்பதைகுறித்து அடிக்கடி நினைத்துக்கொள்ளுவேன் முத்துச்சாமி மண் மறைந்தது அப்படித்தான் இருந்தது.
குள்ளச்சித்தன் சரித்திரம் குறித்த என் புரிதல் மிகவும் நேரடியானதும் எளிமையானதும் தான். எனினும் யுவனின் இக்கதையை நான் வாசிக்கவில்லை கேட்கவில்லை பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்குள் இக்கதை சித்தர் குறித்த நினைவுகளில் பலவற்றை கிளர்த்தி விட்டது..
இக்கதைகுறித்து ஜெ எழுதிய ‘’மாற்று மெய்மையின் மாய முகம்” .
மாற்றுமெய்மையின் மாயமுகம், யுவன் சந்திரசேகரின் குள்ளச்சித்தன் சரித்திரம்
Leave a Reply