இந்த விடுமுறையில் எந்த பிரயாணமும் இல்லாமல் புத்தகங்களாகப் படித்துக்கொண்டே இருந்தேன். விஷ்ணுபுரம் மீள் வாசிப்பு 4 நாட்களில் முடித்தேன். காலை 9 மணிக்குள் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு புத்தகமும் கையுமாக தென்னை மரத்தடியில் அமர்ந்து நாள் முழுதும் வாசிக்கும் அருமையை, சுகத்தை எந்த இடையூறுமின்றி இப்போதுதான் அனுபவிக்கிறேன்
இந்தியா என்னும் கனவிற்குள் ஒருதவம் போல ஜெ பிரயாணம் செய்த ’’இந்தியப்பயணத்தை’’ நேற்று ஒரே மூச்சில் வாசித்தேன். வழக்கமாக ஜெ’வின் பயண அனுபவங்கள் எனக்கு ஏற்படுத்தும் பொறாமை உணர்ச்சி இம்முறை இல்லாமல், என்னவோ நானே நீண்ட பயணமொன்றை போய் வந்ததுபோல மகிழ்ச்சியாக இருந்தது. பழகிப்போன செளகரியங்களிலிருந்து வெளியே வந்தால் எனக்கும் பயணம் சாத்தியம்தான் என்றும் தோன்றியது. இதுவரை போகலைன்னாலும் இனி போகலாமென்னும் நம்பிக்கையும் வந்திருக்கின்றது
’’இந்தியா இன்னும் தீர்ந்துபோகவில்லை, எஞ்சி இருக்கின்றது’’, எனறு ஜெ சொல்லியிருப்பதை எனக்கும் நான் சொல்லிக்கொள்கிறேன்
எப்படி அவருக்கு இப்பயணம் மறக்கமுடியாத ஒன்றோ அப்படியே இந்த பயண அனுபவத்தின் வாசிப்பு, எனக்கும் மறக்கமுடியாத ஒன்று. அன்றன்றைக்கான நிகழ்வுகளை இரவு உறங்கப்போகும் முன்னர் சுடச்சுட எழுதியிருக்கிறாரென்பதால் உடன் நானும் பயணிக்கும் உணர்வுடனே வாசித்தேன். .
இருள் பிரியா நேரத்தில் கவித்துவமாக துவங்கிய இந்த பிரயாணம் அத்தனை அழகாக உடன் வந்த அனைவரின் பார்வையிலும் இந்தியா என்னும் கனவினை வாசிப்பவர்களுக்கும் விரித்து விரித்து காட்டிக்கொண்டே செல்கிறது.
சென்ற இடங்களையும் ஊர்களையும் மட்டும் சொல்லிச்செல்லாமல் அந்த நிலக்காட்சிகளை, அரசியலால் அங்கு நிகழ்ந்திருக்கும் மாற்றங்களை, உடைகளும் உணவும் மாறிக்கொண்டே வருவதை, விவசாயத்தை, தேநீர் கூட அரைப்பங்கு கால்பங்காகி, அவுன்ஸ் கணக்கில் குறைந்ததை, தங்குமிட செளகரியங்கள் அசெளகரியங்களை, அறை வாடகைகள் உணவுக்கான செலவு, அங்கங்கு இருக்கும் சாதி அமைப்புக்களை, நதிகளை, கால்நடைகளை, அவற்றின் வகைகளை, அவ்வப்போது வரலாற்றை, பாதுகாப்பும் பராமரிப்பும் இன்றி பல இந்தியப்புராதன சின்னங்களை நாம் இழந்துகொண்டிருப்பதன் பொருட்டான அவரின் ஆதங்கத்தை, எல்லாம் தொடர்ச்சியாக சுவாரஸ்யமாகவும் மனவருத்தத்துடனும், சொல்லிக்கொண்டேயிருப்பதால் ஒரு அழகிய நெடுங்கதையொன்றினை வாசிப்பதுபோல தொடர்ந்து வாசிக்க முடிந்தது.
திரைப்படத்தில் காட்சிகள் மாறிக்கொண்டே இருப்பது போல நிலப்பரப்பும் மக்களும், தட்பவெப்பமும் சம்பவங்களுமாய் மாறிக்கொண்டே வருகின்றது ஜெயமோகனின் விவரிப்பில்
சிற்பக்கலை, கோவில் கட்டுமானம் போன்ற மிக நுட்பமான விஷயங்களுடன், சாப்பிடுகையில் ‘ஆ’ கேட்ட குட்டிப்பெண்னை, ஆங்கிலம் தெரிந்த ஒரே ஒருத்தரை, 9 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டே கோவிலில் பூஜை செய்யும் சிறுவனை, கடந்து சென்ற பேரழகிகளை, எரியும் சவங்களை, இப்படி ஏராளம் தகவல்களுடன் பயணத்தை சொல்லுகிறார்.
தீயாக கொட்டிய வெயிலில் வாடியும், பொழிந்த நிலவின் புலத்தில் நனைந்தும், நதிநீரில் திளைத்தும், தூசியிலும், பசியிலும் களைத்தும், பல்லாயிரம் முகங்களைக்கண்டபடி எத்தனை எத்தனை அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன அவருக்கு இந்த ஒரே பயணத்தில்?
அழுகல் பழங்களையே திரும்ப திரும்ப தலையில் கட்டியவர்களை, அறைவாடகையை உயர்த்தி ஏமாற்றியவர்களை, உணவிற்கான தொகையை கூடுதலாக வாங்கியவர்களை என்று இவர்களைப்பற்றி சொல்லும் போதும் புகாராகவோ குற்றசாட்டாகவோ இல்லாமல் , வாழ்வின் இயங்கியலில் அவர்களுக்கு ஏமாற்றுதல் ஒரு அங்கமாகிப் போயிருப்பதை ஆதங்கத்துடன்தான் சொல்லுகிறார்.
ஆணும் பெண்ணுமாய் பேசிக்கொண்டே கூட்டம் கூட்டமாய் வெட்டவெளியில் மலம் கழிப்பது, மின்சாரமே இல்லாமல் இருளிலேயே இயல்பாக வாழ்க்கையை நடத்துவது, சேறு மிதிபடும் தரையுள்ள வீடுகள் இவையெல்லாம் இன்றைக்குமிருக்கும் இதே இந்தியாவில், நானும், கதவைபூட்டிவிட்டு, இரவுடையை அணிந்துகொண்டு , குளியலறை இணைந்த படுக்கையறையில் கொசுவலைக்குள் பாதுகாப்பாக உறங்குவதும் , அனைத்து வசதிகளுடனான வாழ்வை வாழ்வதும் குற்ற உணர்வைத்தருகின்றது
ஜெயமோகன் சென்றிருந்த இத்தனை ஊர்களில் நாக்பூருக்கும் காசிக்கும் மட்டுமே நான் சென்றிருக்கிறேன்
ஆராய்சி மாணவியாக இருந்த போது, நாக்பூருக்கு ஒரு கருத்தரங்கின் பொருட்டு, ஃப்ரிட்ஜில் வைத்தது போல குளிர்ந்த ரயில் பெட்டியில் நடுங்கிக்கொண்டே சென்று, ஸ்ரீகுந்த் எனப்படும் அங்கு மட்டுமே கிடைக்கும் எனச்சொல்லப்பட்ட ஒரு இனிப்பையும், ஆரஞ்சுகளையும் சுவைத்திருக்கிறேன். அங்கு விளையும் ஒரு குட்டி ஆரஞ்சுப்பழத்தின் சாகுபடி நுட்பங்களை அங்கேயெ சிலகாலம் தங்கியிருந்து தெரிந்துகொண்டு வந்த என் உறவினர் ஒருவர் அதை இங்கு அவர் தோட்டத்தில் வெற்றிகரமாக விளைவித்தார்
7ஆம் வகுப்பிலோ 8ஆம் வகுப்பிலோ படித்துக்கொண்டிருக்கும் போது தலைமை ஆசிரியராக இருந்த அம்மா பள்ளிக்குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்கையில் குடும்பத்தினர் இலவசமாக உடன் பயணிக்கலாமென்னும் வசதியினால் நானும் அக்காவும் அவர்களுடன் காசிக்கு சென்றிருந்தோம். ஜெ விவரித்திருந்த எதுவுமே எனக்கு பார்த்ததாக நினைவிலில்லை எல்லா இடங்களையும் போலவே அங்கும் சந்தடியும் நெரிசலுமாயிருந்தது. மறக்க முடியாத ஒன்றென்றால் எங்கோ, ஒரு அகல அகலமான படிக்கட்டில் வரிசையாக உட்கார்ந்திருந்த பிச்சைக்காரர்களுக்கு , ஒரு பச்சைப்புடவையை வித்தியாசமாக கட்டிக்கொண்டிருந்த, நெற்றியில் பெரியவட்டமாக குங்குமம் வைத்திருந்த, வெள்ளை வெளேரென்ற ஒரு அம்மாள் தங்கம் போல பளபளத்த ஒரு தூக்குச்சட்டியில் பிசைந்த தயிர்சாப்பாட்டையும் அவருக்கு பின்னால் ஒரு மாமா எவர்சில்வர் பாத்திரத்தில் ஜிலேபியுமாக கொடுத்துக்கொண்டே வந்தார்கள். என்னால நம்பமுடியாதபடிக்கு அதில் பெரும்பாலான பிச்சைக்காரர்கள், எட்டி பாத்திரத்தில் என்ன இருக்கிறதென்று பார்த்துவிட்டு வேண்டாமென்று மறுத்துவிட்டார்கள்’
அப்போது நாங்கள் மிக வறுமையிலிருந்தோம். வயிறு நிறைய சாப்பிட்ட நினைவே இல்லாத காலமது . அந்த தயிர்சோற்றையும் இனிப்பையும் அவர்கள் மறுத்தது எனக்கு பெரும் துக்கமாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. இப்போதும் அது ஏனென்று எனக்கு புரியவில்லை. அதற்கு முந்தைய கணம் வரைபுதிய இடம் அளித்த அச்சத்தினால், கூட்டத்தில் தொலைந்துவிடுவேன்னும் பயத்தில் யாராவது ஒருத்தரின் கைகளை கெட்டியாக பிடித்துக்கொண்டே வந்த நான், அதற்கப்புறம் தொலைந்து போகவேண்டுமென்று விரும்பினேன். என்னை கண்டுபிடிக்க முடியாமல் எல்லோரும் திரும்பிப்போன பின்னால், அங்கே பிச்சைக்காரியாக இருந்து சோற்றை வேண்டாமெனச்சொல்லாமல் அள்ளி அள்ளி உண்பதை கற்பனை செய்துகொண்டேயிருந்தேன். ஆனால் பத்திரமாக அதே பழைய வாழ்க்கைக்கு என்னை திரும்பக்கூட்டிக்கொண்டு வந்துவிட்டார்கள்.
காசி என்றால் இது மட்டுமே இன்னும் நினைவிலிருக்கிறது.
நிச்சயம் இந்த எல்லா ஊர்களுக்கும் இதே வரிசைப்படி மகன்களுடன் கூடிய விரைவில் செல்லப்போகிறேன் இப்படி இதை முன்கூட்டியே சொல்லிக்கொள்வது ஒருவிததில் புறப்பட உந்துசக்தியாகவும் இருக்கும்
ஜெ மிகச்சமீபத்தில் சொல்லியிருப்பது போல ‘’பயணம் ஒரு தெய்வம், அதை உபாசிப்பவர்களுக்கே அது அமையும்’’ நானும் உபாசித்துக்கொண்டுதானிருக்கிறென். அருளப்பட காத்திருக்கிறேன்
Leave a Reply