வைரஸ் தொற்றினால் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால், இணையவெளியில் படங்கள் நேரடியாக ஒளிபரப்பாகும் இக்காலத்தில், இப்போது அனைத்து இந்திய மொழிகளிலும் மிகப்பிரபலமாயிருக்கிற தொகுப்புக் கதைகள் அல்லது குறும்படங்களின் திரட்டு (anthology movie) என்னும் வகையில் இன்னொரு புதுவரவு நான்கு குறும்படங்களின் தொகுப்பான பாவக்கதைகள் சுதா கோங்குரா, கெளதம் வாசுதேவ மேனன், வெற்றிமாறன் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரின் இயக்கத்தில் உறவுகளின் சிக்கலை அடிப்படையாகக்கொண்ட நான்கு கதைகளை சொல்லும் இப்படம் 2020 , டிசமப்ர் 18ல் நெட்ஃப்ளிக்ஸில் நேரடியாக வெளியானது
காளிதாஸ் ஜெயராம், சாந்தனு பாக்கியராஜ், அஞ்சலி, சிம்ரன், கெளதம் வாசுதேவ மேனன், கல்கி கோச்லின், ஜாஃபர் ஷாதிக், ப்ரகாஷ்ராஜ் ,சாய் பல்லவி மற்றும் சிலர் முக்கிய கதாபத்திரங்களில் .
முதல் படமான ’’தங்கம்’’ சுதாவின் இயக்கத்தில், சாந்தனுவும் காளிதாஸூம் முக்கிய பாத்திரமேற்றிருக்கின்றனர்
இரண்டாவது ’லவ் பண்ணா வுட்ரனும்’ அஞ்சலி இரட்டைவேடத்தில், கமலாகோச்லினுடன், இயக்கம் விக்னேஷ் சிவன்
மூன்றாவது கெளதம் மேனனின் ‘வான் மகள்’ சிம்ரனுடன் கெளதம் மேனனும் முக்கிய பாத்திரத்தில் வருகிறார்
நான்காவது வெற்றிமாறனின் ‘ஓரிரவு’” சாய்பல்லவி, பிரகாஷ்ராஜ் முதன்மை பாத்திரங்களில்
மூன்று படங்களில் கெளரவக்கொலை நடக்கின்றது வான் மகளில் மட்டும் கெளரவக்கொலையைக்குறித்து கற்பனை மட்டும் செய்கிறார்கள் நல்லவேளையாக, நிச்சயமாக நான்கு கதைகளுமே பார்வையளர்களை தொந்தரவு செய்கின்றன. அதிலும் மிக மிக மனக்கலக்கம் உண்டுபண்ணுகிறது’’ ஓர் இரவு’’ இது உண்மைக்கதையும் கூட
கல்கிகோச்லின் இதில் தமிழில் சொந்தக்குரலில் பேசுகிறார் அதுவும் மிகமோசமான பாலியல்தொடர்பான வசவுகளை சரளமாக பேசுகிறார்.
’’தங்கம்’’ 80’களில் நடக்கும் ஒரு முக்கோண காதலைச்சொல்லுகிறது. ஆண்-பெண் முக்கோணக்காதலுக்கு மாறாக இதில் ஆண்-ஆணிலி-பெண் என்னும் புதிய முக்கோணம். சத்தாரென்னும் இடைப்பாலினத்தவராக மிகச் சிறப்பாக காளிதாஸ். அவர் விரும்பும் தங்கமாக சாந்தனு, சாந்தனு சத்தாரின் தங்கையை விரும்புகிறார். சத்தார் ஆணுமல்ல பெண்ணுமல்ல தோற்றத்தில் ஆனால் மனதில் தன்னை பெண்ணாகவே பாவிக்கிறார் எனவே தங்கத்தை, (சாந்தனுவை) விரும்புகிறார். ஆனால் தங்கமோ சத்தாரின் தங்கையை காதலிக்கிறார். உண்மை தெரிந்து காதலர்களை சேர்த்துவைத்துவிட்டு சத்தார் உயிரைவிடுகிறார்.
சத்தார் தன்னை சிலர் துரத்துகையில் வீடு வீடாக சென்று கதவைத்தட்டி கெஞ்சிக்கதறுவதெல்லாம் ஆந்திர நெடி அடிக்கும் காட்சிகள். பொதுவாகவே தெலுங்குத்திரைப்படங்களில் லாஜிக் என ஏதும் இருந்தால் அதை சல்லடையிட்டு தேடி க் கண்டுபிடித்து அதன் மென்னியை திருகி கொன்று குழிதோண்டி புதைத்து விட்டே கிளைமேக்ஸ் காட்சிகளை அமைப்பார்கள். இதிலும் அப்படியே! எப்பவோ செத்துப்போன சத்தாரின் கைப்பையும் அதனுள்ளிருக்கும் சாந்தனு கொடுத்த பரிசான உதட்டுச்சாயமும் அப்போது ஊருக்கு வரும் சாந்தனுவின் கண்ணில்படவேண்டி ஆற்றில் காத்திருக்கிறது.
காளிதாஸ் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். சாந்தனுவும் இதில் பாத்திரத்துக்கு பொருந்தி நடித்திருக்கிறார். இதில்தான் பழைய பாக்கியராஜின் சாயல் அங்கங்கே தென்படுகின்றது சாந்தனுவின் உடல்மொழியில் . இரண்டு வாரிசுகளை ஒன்றாக திரையில் பார்ப்பது அதுவும் நன்றாக நடிப்பதை பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது கதை 80களில் நடப்பதாக காட்டுகிறார்கள் 80களில் வெளிவந்திருக்கவேண்டிய கதையும் கூட.
’’லவ் பண்ணா வுட்ரனும்’’, அஞ்சலி இரட்டைவேடங்களில் முதல்காட்சியிலேயே மிகச்சிக்கன உடையில் தாராளமாக ஏராளமாக வருகிறார். ஆதிலட்சுமிஅஞ்சலி வீட்டு கார் ஓட்டுநரைக் காதலித்து கெளரவக்கொலை செய்யப்படுகின்றார். அக்கா உயிரழந்த அதே நாளில் தங்கை ஜோதிலட்சுமிஅஞ்சலியும் தன் காதலைச்சொல்ல வீட்டுக்கு வருகிறார் கல்கி கோச்லின் அஞ்சலியின் தோழி. இவர்களிருவருக்கும் ஒருபால் உறவு இருப்பதுபோல துவக்கத்திலிருந்து கதையை கொண்டுபோய் இறுதியில் உண்மை என்னவென்று போட்டு உடைக்கிறர்களாம். இன்னும் கொஞ்சம் கவனமாக துவக்க காட்சியின் வசனங்களை கட்டமைத்திருக்க வேண்டும். பார்வையாளர்களுக்கும் அப்படியேதான் கதையை காட்டுகிறார்கள் துவக்கத்தில். நரிக்குட்டியாக ஜாஃபர் ஷாதிக் பிரமாதமான, இயல்பான நடிப்பு அதிலும் அவரது கார்வையான குரல் மிகச்சிறப்பு. இனி கவனிக்கப்படுவார், கவனிக்கப்படவேண்டும். காதலனான கார் ஓட்டுநரின் குரலும் அப்படியே, கம்பீரம்
ஜாதி அடிப்படையில் நடக்கும் கெளரவக்கொலையை சொல்லும் படம்தான் இதுவும். இடையிடையே கதாபாத்திரங்கள் அத்தனை முக்கிய நிகழ்வுகள், வன்முறைகள் சுற்றிலும் நடக்கையில் சிரித்துக் கொண்டிருப்பது எரிச்சலூட்டுகிறது. அப்பா பாத்திரத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர் அந்த பாத்திரத்தின் ஆழத்தை உணர்ந்திருப்பதாக தெரியவில்லை. ’’தங்கத்தி’’ல் பெண்களின் அறையில் உறங்கியதற்காக் ஆவேசமாக மகன் சத்தாரை எட்டிஎட்டி உதைக்கும் அந்த அப்பாவின் ஆக்ரோஷம் இவருக்குமல்லவா இருப்பதாக காட்டியிருக்கனும்?
இறுதிக்காட்சியில் சொந்தச்சகோதரியை ஈவிரக்கமின்றி கொலைசெய்த அப்பாவிடம், அஞ்சலி எந்த உணர்வெழுச்சியும் இல்லாமல் பள்ளிக்குழந்தைகள் மனப்பாடச்செய்யுளை ஒப்புவிப்பதுபோல பேசும் மொக்கை வசனங்களும் அப்படியேதான், கதையின் மையஒட்டத்துடன் பொருந்தாமல் இருக்கிறது
வான்மகளில் பருவம் வந்திராத சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்படும் பாவத்தை சொல்லுகின்றார்கள் .சிம்ரன் இத்தனை தளர்ந்துவிட்டரா?
கெளதம் வாசுதேவ மேனன் சிம்ரனின் கணவராக இரு பெண்குழந்தைகளுக்கு தகப்பனாக வருகிறார். மனைவியுடன் காதல்மொழி பேசுகையிலும், மகள்களுடன் பாசமொழி பேசுகையிலும் ஒருபெரும் பிரச்சனைக்குப் பின்னர் மனமுடைந்து துயரமொழி பேசுகையிலும் சரி ஒரே மாதிரியான கூர்ந்த முகபாவத்துடன் ’’ ஹார்பர்லருந்து இன்னிக்கு பொருளை எப்படியும் தூக்கிறனும்’’ என்று கள்ளக்கடத்தல் கும்பலின் தலைவன் பேசுவதைப்போலவோ அல்லது கையும் களவுமாக பிடிபட்ட குற்றவாளியை அணுகும் காவலதிகாரியை போலவோதான் படம்முழுக்க வருகிறார், பார்க்கிறார் பேசுகிறார்.
நல்ல கதை நல்ல காட்சியமைப்புக்கள், நல்ல கதைக்களம். அந்த கற்பனைக் கொலைக்காட்சியை தவிர்த்திருக்கலாம். தலைப்பில் பாவம் இருப்பதால் வலிய சேர்த்திருக்கிறார்களோ என்னவோ! இதை நேர்மறையான ஒரு கதையாகவே கொண்டு போயிருக்கலாம்
வெற்றிமாறனின் ’’ஒரிரவை’’மனதை கல்லாக்கிக்கொண்டுதான் பார்க்கவேண்டும் கொலைவெறியுடன் எடுத்திருக்கிறார். திரையில் பார்க்கையிலேயே இப்படியென்றால் இது உண்மையில் நடந்திருப்பதை நினைக்கையில் துக்கம் தாளமுடியவில்லை தணிக்கைசெய்தே வெளியிட்டிருக்கவேண்டும் என்று நினைக்கவைத்த பெரும் மானசீக அவஸ்தையை கொடுக்கும் காட்சிகள் பல.
சாய்பல்லவி அழகு நன்றாக நடித்திருக்கிறார் உண்மையிலேயே கர்ப்பிணியை போல் ஒப்பனைவேறு
கதையை மிகவும் இளகின மனசுள்ளவர்கள் பார்க்காமலிருப்பதே உத்தமம். வாழ்நாளில் மறக்கமுடியாத திரைக்கதை. இப்படி ஜாதிவெறி பிடித்தவர்களுக்கு இத்திரைப்படம் ஒரு மோசமான முன்னுதாரணமாக ஆகிவிடக்கூடாதே என்னும் பதைபதைப்பும் சேர்ந்துகொண்டது பார்க்கையிலேயே
பிரகாஷ்ராஜ் வழக்கம்போல மிரட்டுகிறார் நடிப்பில். இந்த பாத்திரமெல்லாம் அவருக்கு தண்ணீர்பட்ட பாடு
வெளியுலகின் குரூரங்களிலிருந்து தப்பி பாதுகாப்பாக குடும்பமென்னும் சிறகினுள் வந்து அடைந்துகொள்ளுதல் என்னும் அடிப்படை நம்பிக்கையை தகர்க்கும் கதைகள் இவை. தற்போதைய இந்தியாவின் இன்னொரு முகத்தை அப்பட்டமாக காட்டும் கதைகளும் கூட.