முகுந்த் நாகராஜன் அவர்களின் கவிதைகளுக்கான ஓர் கூடுகை ஹோசூரில் 2025 செப்டம்பரில் நடந்தது. கவிஞரும் மருத்துவருமான வேணு வேட்ராயன் இந்தச் சந்திப்பை ஒருங்கிணைத்தார். 20 பேர் கலந்து கொண்டோம். ஒரு குறுங்காட்டுக்குள் ஏராளமான மரங்களும், நிழலும் நிறைந்திருந்த மழலையர் பள்ளியொன்றில் சந்திப்பு நிகழ்ந்தது.   முகுந்த் நாகராஜன் பெங்களூருவிலிருந்து வந்திருந்தார். அவர் கவிதைகளின் வழியே எங்களுக்கு மிகவும் பரிச்சயமாயிருந்த கார்த்திகாவும் நேயமுகிலும் வரவில்லை எனினும் நேயமுகில் கவிதைவடிவில் அங்கேதான் ஓடியாடிக்கொண்டிருந்தாள்.

இந்தச் சந்திப்பு உறுதியானதிலிருந்தே பங்கேற்பாளர்கள் அனைவரும் முகுந்த் நாகராஜனின் கவிதைதொகுப்பையும் அவாது வலைத்தளத்தையும் தொடர்ந்து வாசித்திருந்தோம்.நேயமுகில் எங்கள் எல்லோருடைய மகளுமாகியிருந்தாள்.

அவரது கவிதைகளின் எளிமையும் அதற்கு மாற்றாக அவை சுட்டும் தீவிரமானவைகளும், கல்லூரியின் இந்தப் பருவத்துக்கான கடைசி நாட்களில், அத்தனை வேலைகளையும் ஒத்தி வைத்துவிட்டு  என்னை இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு ஹோசூர் செல்லவைத்தது.

முகுந்த் நாகராஜன் கவிதைகள் இழந்த பால்யத்தை, காதலை, குழந்தைமையை. மகளதிகாரத்தை. தனிமையை. இறப்பை, மொழியை, எண்களை, பெயர்களை, மழையை,சொந்த நிலத்தை, இயற்கையை,  பொருள் வயின் பிரிந்திருப்பதன் துயரை, தனிமையை,கனவுகளை,  நகர வாழ்வில் பொருந்திக் கொள்ள முடியாத சிக்கல்களைப் பேசுபவை.

ஒரேமுறைதான்

கலவரம்

பழக்கப்பட்டஊரின்

முகம்மாறிப்போயிற்று.

தினம்போகும், வரும்சாலையில்

டயர்களைஎரித்துக்கொண்டிருந்தார்கள்

கோஷம்போட்டபடி.

தற்காலிகஉற்சாகத்தில்,

பாதையின்குறுக்கேவிழ

மரத்தைஅறுத்ததுஒருகும்பல்.

அப்போதுதான்

முதல்தடவையாய்

அந்தமரத்தை

அங்குபார்த்தேன்.

முதல் தடவையே கடைசித்தடவையுமானதைச் சொல்லும் இந்தக்கவிதையும்  அதன் தலைப்பும்  அளிக்கும்  துயரம் எல்லோருக்குமானது.

அவர் கவிதைகள் காட்டும் ரயில் நிலையம், அதன் வாசலில் விற்கப்படும் பொம்மை, மால்கள், பூவிற்பவர்கள்,  தெருக்கள், தோசைகள், அளவுச்சாப்பாடு, குழந்தைகள் விளையாடும் பூங்காக்கள் மற்றும் கரப்பான்பூச்சிகளாலான அன்றாடமும் அனைவருக்குமானதுதான் என்றாலும் அதன் கவிதைத் தருணங்களைத் தவறவிட்டவர்கள் தான் அக்கவிதைகளின் வாசகர்களாயிருந்தோம் என்பதை ஒவ்வொரு கவிதையும் சொல்லிக்கொண்டே இருந்தது.இனி எந்தப்பெயர் தெரியாத ஊரின் ஹோட்டலிலும் இருக்கும்  குள்ள வாஷ்பேசினும் எங்களுக்கு   மிகப்பிடித்தமான தொன்றாகத்தான்  இருக்கப் போகிறது.

காதலின் மகத்துவத்தை பேசிப்பேசித் தீர்க்கும் கவிதைகளுக்கு மத்தியில் இழந்த காதலும், இடம் மாறிப்போய்விட்ட சலவைக் கடையும் ஒன்றென்னும் இந்தக் கவிதை உண்மையில்  ஆசுவாசமளிக்கிறது.

ஒரேநாளில்

நீஎன்காதலைமறுத்த

அதேநாள்மாலை

எங்கள்தெருசலவைக்கடை

இடம்மாறி

வெகுதொலைவுக்குச்சென்றது.

இப்படி

ஒரேநாளில்

எல்லோரும்என்னைக்

கைவிட்டால்எப்படி?

சமீபத்தில் பெங்களூருவில் மகன் தங்கி இருக்கும் வீட்டுக்குப்போனபோது வீடு தொடங்கிய இடத்திலேயே முடிந்து போனது எனக்கு பெரும் ஏமாற்றமளித்தது. காலெட்டி வைத்து நடக்கமுடியாவிட்டால் போகிறது கைவீசிக்கூட நடக்கமுடியாத இடத்தை எப்படி வீடென்பது என்று விசனப்பட்டேன். அங்கிருந்து விரைந்து ஊர் திரும்பினேன்.

 முகுந்தின் 

ஒருபெட்ரூம்ஹால்கிச்சன்அவ்வளவுதானா? v

என்னும் கவிதையும்,

தரைக்குமேலேபோய்விட்டதுவாழ்க்கை, தரைஇருக்கிறதாஇந்தவீட்டுக்குஎன்றுபார்க்ககுனிந்தேன்//

 போன்ற கவிதைகள் நகரங்களின் அடுக்கக வாழ்வை நினைவூட்டுபவை.

எப்போதும் எதையோ சொல்லவருவது போல முகம் கொண்டிருந்த ஒருத்தி கல்யாணத்துக்கு பிறகு   வைத்திருக்கும் ஊமை முகம் எனக்கு       அந்தரங்கமாக துயரளித்தது. கவிழ்த்துப் போடப்பட்ட   அளவுச் சாப்பாட்டின் வட்ட விளிம்பில் பிரதிபலிக்கும் தனிமையைப் பேசும் கவிதையும் அப்படித்தான்,

ஆனால் நேயமுகில்  வரும் கவிதைகள் எல்லாம் நிச்சயமாக மனதிலிருந்து புன்னகைக்க வைக்கின்றன.வெண்ணெய் தின்னும் கிருஷ்ணன் சிலையோடு  விளையாடுகையில் ’’வாயில் விரலை வைக்காதே கிருஷ்ணா’’ என்கிறாள் நேயமுகில் ’’சாரி நேயமுகில்’’ என்கிறான் கிருஷ்ணன்.  முகுந்த் நாகராஜன் பேசுகையில் ’’குழந்தைகள் நாம் சொல்வதைக் கேட்பதில்லை, ஆனால் நாம் செய்வதை திருப்பிச் செய்கின்றன’’  என்றார்

வெகு காலத்துக்கு பேசப்படும் கவிதைகளை எழுதியவரும்,அமைதியே வடிவானவருமான முகுந்த் நாகராஜன் அந்த முழுநாளிலும்  மொத்தம் நூறு சொற்கள் கூட பேசி இருக்க மாட்டார். சில்லிட்டிருந்த  தரையில்  அந்த மழலையர்  பள்ளிக் குழந்தைகளின் குட்டிகுட்டிப் பாய்களைப் போட்டுக்கொண்டு நாங்களும்,  மாடிப்படியில் வேணுவும், ஒரு நாற்காலியில் முகுந்துமாக அமர்ந்து நாளெல்லாம் கவிதையை பற்றிப் பேசிக்கொண்டிருந்தது இனிய அனுபவமாக இருந்தது.

குழந்தைகளின் உலகில் நுழையமுடியாத, குழந்தைகளைப் புரிந்துகொள்ளாத பெற்றோர்களையும், குழந்தைமையை, குழந்தைகளின் தனித்தன்மையை காலடியில் தேய்த்து நசுக்கும் பள்ளிக்கூடங்களையும் அவரின் பல  கவிதைகள் பேசுகின்றன.

குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் ரயிலுக்கு வழியனுப்ப அந்த குழந்தைகள் பெர்த்தில் படுத்து போர்த்திக் கொள்வதும் ஒரு குழந்தை அவர்களிடம் டிக்கெட் கேட்பதும் அவர்கள் பிரிந்து செல்லும் ரயிலும், பெரியவர்கள் அந்தப் பயணத்தை வெறும் பெரியவர்களுக்கானதாக்கி விட்டு ரயிலை பொருட்படுத்தாமலிருப்பதையும்  சொல்லும் கவிதை.

 ’சடுக்கு மடம்’ கவிதையும் அதைப்போலத்தான். அவன் சரியாக சறுக்குமரம் என்று உச்சரிக்கையில் அவனது கள்ளமற்ற அறியாமை விலகி அவன் முதிர்ந்து விடுகிறான். சொந்தமாக விழுந்து உடைந்த  கோப்பையைக் குறித்த கவிதையை வெகு நேரம் பேசினோம். முகுந்த் அப்போது ‘’fall on its own’’  குறித்து  விளக்கிப்  பேசுகையில்  அவரது கவிதைகளில் தெரியும் முகுந்த் நாகராஜன் என்னும் எளிய மனிதரல்லாத, ஒரு தீவிரமான ஆளுமையை பார்த்தோம்.

சரவணபவனில் தன்னால் சாப்பிட முடியாத பெரிய தோசையை வாங்கிய சின்னப்பெண்ணும்,ஒருத்தனுக்கு எதுக்கு முழுதர்பூசணிப்பழமும் போன்ற கவிதைகள் காட்டும் சப்டெக்ஸ்ட் அபாரமாயிருந்தது.அம்மாவும் பெண்ணும் கடல்பண்ணி, அதன் கரையில் சிப்பி எடுத்து விளையாடும் கவிதையும் அப்படித்தான். ரெட்பலூன் கொடு’  என்றதும் திடுக்கிடும் சாமியும். தினம் கட்டுபடியாகாததால் கிணற்றில் போடப்படும் கடவுளும் இருக்கிறார்கள் இவரது  கவிதைகளில்.

எனக்கு இந்தத் தொகுப்பில் மிகமிகப்பிடித்ததவை என்றால் பச்சைப்புன்னகை , அற்றைத்திங்கள் மற்றும்  நிலவில் மயங்குவது ஆகியவை.

ஹோசூரிலிருந்து திரும்புகையில்   ரயிலடிக்கு   வந்து  அழைத்துச்  சென்றதருணுடன் பொள்ளாச்சி வரும்வரைக்கும் நேயமுகிலின்  கின்மோர் விளையாடினோம்.தருண் நேயமுகிலாகி இருக்கிறான். இப்போது தினம் பெங்களுருவில் இருந்தும் கின்மோர் விளையாடுகிறோம்.

காட்டுயானை ஒன்று வீட்டுக்குள் நுழைந்து சமாளிக்க முடியாமல் போவதும், வேலைக்கும் காலைக்குமாய் ஒரு கடி கடிக்கும் மகளும்,    பஸ்நம்பர் கூட தெரியாத அந்தக் குட்டி கரப்பான் பூச்சியும் வாழ்க்கை அப்படியொன்றும்  சலித்துக் கொள்ளவேண்டிய ஒன்றல்ல  என்று  இவரது  கவிதைகள்  படிப்பிக்கின்றன. உலகமே பாலிஷ் போட்டது போல  மேலும் மெருகேறி இருக்கிறது இப்போது.

திரும்பும் ரயில் பயணத்தில் திண்பண்டங்கள் விற்பனைச் செய்வபர்களை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு  தலையில் கையை வைத்துக்கொண்டு  சுக்குக்காபி சுக்குக்காபி , பிரட் ஆம்லேட் பிரட் ஆம்லேட் என்று தானும் விற்றுக்கொண்டிருந்த ஒரு  குட்டிப்பெண் நேயமுகிலாகத் தெரிந்தாள்.

நிகழ்ச்சி முழுநாளும் உற்சாகமாக நடந்தது நேரத்துக்கு உணவு , தேநீர் சிற்றுண்டிகள் கிடைப்பதை சரண்யா உறுதிபடுத்தினாள்.   விஷ்ணுபுர நிகழ்வுகளில்  பங்கேற்பவர்களுக்கு இப்படியான  ஒருங்கிணைக்கும் இயல்புகள் எல்லாம் இயற்கையாகவே வந்து விடுகிறது என்று சரண்யாவை பார்க்கையில்  நினைத்துக் கொண்டேன். முழுமனதாக நிகழ்ச்சியிலும் பங்கேற்பாள், இடையிடையே வரும் போன் அழைப்புக்களைக் கேட்டு உணவு தேநீரை எல்லாம்   வாங்கிவைப்பாள்,  நிகழ்ச்சி முடிந்தபின்னர் அந்த இடத்தை தூய்மை செய்து குப்பைகள் வெளியே கொண்டுபோய் போடப்படுவது வரைக்குமேஅக்கறையாகக்  கவனித்தாள்.   சரண்யாவுக்கு எங்கள் அனைவரின் சார்பிலும் நன்றியும் அன்பும்.

நிகழ்ச்சியின் துவக்கத்திலும் முடிவிலும் சின்னஞ்சிறு கிளியேவை இனிமையாக பாடிய தீபாவுக்கும், வேணு வேட்ராயனுக்கு ஒருங்கிணைப்பில்  உதவிய செல்வஜெயபாரதிக்கும் நன்றி. வேணு வேட்ராயனைப் போல கண்டிப்பான ஒரு  கவிஞரை நான் இதுவரை சந்தித்ததில்லை. அத்தனை  பேரும் எல்லா கவிதைகளையும் வாசித்திருக்க வேண்டும், கவிதைகளை விரைவாக வாசிக்க கூடாது மெதுவாக அனுபவித்து வாசிக்க வேண்டும் என்ற கண்டிப்புடன் சொல்லி இருந்தார்.

 நிகழ்ச்சியின்   இடைவேளையில் என்னிடம் சிலர்   தாவரவியல் குறித்து பேசத் தலைப்பட்டபோது ‘’கவிதையைப் பத்தி பேச வந்தா அதை மட்டும்தான் செய்யனும் ‘’ என்று கடிந்துகொண்டார் (வேணும்னா தாவரவியலுக்கு  ஒரு அமர்வு வச்சுக்கலாம் இன்னொரு நாளைக்கு லோகமாதேவி!!!!) நல்லவேளை வேணு வேட்ராயன் பேராசிரியர் பணிக்கு வராமல்  மருத்துவராக இருக்கிறார் . மாலை ஒவ்வொருவராக விடைபெற்றுக் கொள்கையில் ராஜேஷ் என்னும் இளைஞர் வேணுவிடம் போய்  அவர் கைகளை பிடித்துக்கொண்டு ’’ரொம்ப நல்லா இருந்தது  நிகழ்ச்சி, ரொம்ப சந்தோஷம். கவிதை முகாமுக்கு வந்ததும் லோகமாதேவியைச் சந்திச்சதும்’’ என்று சொல்லத் துவங்கினார். பதறிப்போன நான் தொலைவிலிருந்தே ராஜேஷ்க்கு சைகை செய்து அத்தோடு நிறுத்திக் கொள்ளச்சொன்னேன் நிறுத்திக்கொண்டார் 🙂

நிகழ்ச்சியை மிகக்கச்சிதமாக ஒழுங்குடனும் சுவாரஸ்யமாகவும் ஒருங்கிணைத்த வேணுவேட்ராயனுக்கு  நன்றி.பிறக்கையிலேயே முகுந்த் நேயமுகில் அப்பாவாகப் பிறந்திருப்பார் என நினைத்துக்கொள்கிறேன். 

இந்தக் கவிதைகளின் நாயகி நேயமுகிலுக்கு கட்டிமுத்தம்.குழந்தைகளின் உலகின் கள்ளமின்மையையும்  பெரியவர்களின் உலகின் பொருளின்மையையும் காட்டும் கவிதைகளுக்கும் முகுந்த் நாகராஜனுக்கு உள்ளிருக்கும் இன்னும் முதிராத  அந்த சிறுவனுக்கும் என் அன்பு.