
ஒரு முதிர்ந்த மரத்தின் வெட்டப்பட்ட அடிக்கட்டையைப் பார்த்திருக்கிறீர்களா? மரத்தின் நடுவிலிருந்து வெளி நோக்கிச் செல்லும் அடுக்கடுக்கான வட்டங்களை எண்ணிப்பார்த்தால், அந்த மரம் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தது என்று கணக்கிடலாம். இந்த ஆண்டு வளையக் காலக்கணக்கீடு நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான் அதற்கான பிரத்யேகத் துறைதான் டென்ரொக்ரோனாலஜி (Dendrochronology).
ஆனால் இந்த வளையங்கள் வயதை மட்டும் காட்டுவதில்லை. அந்த மரம் சுவாசித்த காற்றையும், அந்தந்த ஆண்டுகளில் அவற்றைச்சுற்றி காடுகளிலும், வானிலும் நடந்தவற்றையும் அதேவளையங்களில் பதித்து வைக்கிற்து.
காட்டுத்தீ பரவும்போது, ஒரு பெரிய மரம் எரிந்து சாகாமல் தப்பினால், மரப்பட்டையில் ஒரு காயம் ஏற்படும். மரம் அந்தக் காயத்தை மெல்ல மெல்ல அதன் வளர்ச்சியால் மூடும். ஆனால் உள்ளே கரிந்த தழும்பு ஆண்டுவளையத்தில் அப்படியே இருக்கும். அந்தத் தழும்பு எந்த வளையத்தில் உள்ளது என்று பார்த்தால், தீ எந்த ஆண்டு ஏற்பட்டது என்று தெரியும். ஒரே காட்டின் பல மரங்களில் இதைக் கணக்கிட்டு, தீ எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை வந்தது என்றும் கண்டறியமுடியும்.
வெள்ளத்தில் அடித்து வரப்படும் கற்கள், மரத்துண்டுகளால் ஆற்றங்கரை மரங்கள், காயமடையும். அவற்றின் வளையங்களில் இந்தக் காயத்தின் தழும்புகள் தெரியும்.
சில மரங்கள் வெள்ளத்தில் சாய்ந்து பின் வளர்ந்தால் அதன்பிறகு உருவாகும் வளையங்களின் வளர்ச்சித் திசை மாறும். வெள்ளம் அதிக நேரம் நின்றால், சில இலையுதிர் மரங்களில் வளையத்தின் உள்ளமைப்பிலும் மாற்றம் தெரியும். புயலில் சாய்ந்து மீண்டும் நிமிர்ந்த மரங்கள், தன்னைத் தாங்கிக்கொள்ள ஒரு பக்கத்தில் மட்டும் அதிகமாக வளர்ந்து, வளையத்தை ஒரு பக்கம் தடிமனாக்கும். இந்த reaction wood எனப்படும் கட்டைகளின் வளையங்களிலிருந்து புயலைக்குறித்த தகவல்களை அறியமுடியும்.
புயலில் அடுத்தடுத்துள்ள மரங்கள் விழுந்துவிட்டால், மீதமுள்ள மரங்களுக்கு வெளிச்சமும் இடமும் கிடைக்கும். அதனால் அந்த ஆண்டுக்குப் பிறகு வளையங்கள் திடீரென அகலமாகியிருக்கும்.
குளிர்ச்சியான ஆண்டுகளில் வளையம் மெல்லியதாக இருக்கும். சில மரங்களில் உறைபனியால் சிதைந்த “உறைபனி வளையம்” (frost ring) காணப்படும். எரிமலை வெடிப்புக்குப் பிறகு உலகம் குளிர்ந்த ஆண்டுகளில் இப்படியான வளையங்கள் மரங்களில் பதிவாகியுள்ளன.
மழை நன்றாகப் பெய்த ஆண்டுகளில் மரம் நன்றாக வளர்ந்து, அகலமான வளையத்தை உருவாக்கும். வறட்சியான ஆண்டுகளில் வளர்ச்சி குறைந்து, வளையம் மிக மெல்லியதாக இருக்கும். வரிசையாக மெல்லிய வளையங்கள் இருந்தால், அது பல ஆண்டு வறட்சியைக் குறிக்கிறது. இப்படிப் பல நூற்றாண்டுகளின் மழை, வறட்சி வரலாறு மரவளையங்களில் இருந்து மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் தேக்கு மரங்களின் வளையங்களைக் கொண்டு பருவமழையின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தேக்கு ஒரு இலையுதிர் மரம். வறண்ட காலத்தில் வளர்ச்சி நின்று, மழைக்காலத்தில் மீண்டும் தொடங்குவதால் தேக்கில் ஆண்டுக்கு ஒரு தெளிவான வளையம் உருவாகிறது. வளையத்தின் அகலம் அந்த ஆண்டின் பருவமழையின் அளவோடு நல்ல தொடர்பு காட்டுகிறது.
புனேயிலுள்ள இந்திய வெப்பமண்டல வானிலையியல் நிறுவனத்தின் (IITM) ஆய்வாளர்கள் இந்த ஆய்வின்முன்னோடிகள். லக்னோவிலுள்ள பீர்பால் சாஹ்னி தொல்தாவரவியல் நிறுவனமும் இந்த ஆய்வில் பங்களித்தது. இவர்கள் கேரளா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் போன்ற இடங்களின் தேக்கு மரங்களை ஆய்வு செய்தனர்.
தென்மேற்கு தீபகற்ப இந்தியாவின் தேக்கு வளையத் தொடர்கள் சுமார் 500 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வதையும், அவற்றில் தீவிர வறட்சி ஆண்டுகளும் எல்-நினோ தொடர்பான பருவமழைக் குறைவுகளும் இந்த ஆய்வில் பதிவாகியுள்ளன.
நமது நாட்குறிப்பைப்போலவே மரங்களும் அவற்றின் ஆண்டு வளையங்களில் ஒவ்வொரு முக்கிய இயற்கை நிகழ்வுகளையும் ஆவணப்படுத்தி வைக்கின்றன. திருத்தி எழுத முடியாத அந்தக்குறிப்புகளில் இருந்து இயற்கை வரலாற்றின் நிகழ்வுகளை நாம் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னாலும் கூட அறிந்துகொள்ள முடிகிறது.

வறட்சி, வெள்ளம், புயல், காட்டுத்தீ இவற்றோடு ஆண்டு வளையங்களில் மரங்கள் அந்த ஆண்டின் கார்பன்-14 அளவையும் பதிவு செய்கின்றன. கார்பன்-14 என்பது கார்பனின் ஒரு கதிரியக்க ஐசோடோப்பு, அதாவது எடை சற்றுக் கூடிய கார்பன். தொல்பொருட்களின் வயதைக் கணிக்கும் “கார்பன் டேட்டிங்” இதைக்கொண்டுதான் செய்யப்படுகிறது.
ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு மரத்தின் ஆண்டு வளையத்தில் பதிந்த அப்படி ஒரு வான்நிகழ்வொன்றைக் குறித்த மிக முக்கியமான பதிவை ஒரு ஜப்பானிய மாணவி படித்தறிந்த போது, அறிவியலுக்குப் புதிய கதவொன்று திறந்தது.
இயற்கையின் மொழியைக் கற்றுக்கொண்டு, ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் கழித்து, மரங்களின் ஆண்டு வளையத்தில் பதிவாகி இருந்த அந்த தகவலை முதலில் படித்தவர் ஃபுசா மியாகே.
ஜப்பானின் நாகோயா பல்கலைக்கழகத்தின் ‘விண்வெளி-பூமி சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனத்தில்’ தற்போது பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஃபுசா மியாகே (Fusa Miyake) இயற்பியல் துறையைச் சேர்ந்த ஒரு ஜப்பானிய விஞ்ஞானி. இவர் காஸ்மிக் கதிர் இயற்பியல் (Cosmic Ray Physics) மற்றும் விண்வெளி-பூமி சுற்றுச்சூழல் அறிவியல் (Space-Earth Environmental Research) ஆகிய பிரிவுகளில் நிபுணத்துவம் கொண்டவர்.
இவரது ஆராய்ச்சிப் புலம் காஸ்மிக் கதிர்வீச்சு மற்றும் ஐசோடோப்புகள், விண்வெளியில் இருந்து வரும் அதிதீவிரக் கதிர்வீச்சுகள் பூமியின் வளிமண்டலத்தில் உண்டாக்கும் மாற்றங்கள், மர வளையக் காலக்கணக்கீட்டியல் ஆகியவை.
பழமையான மரங்களின் வளையங்களில் பதிவாகியுள்ள கார்பன்-14 அளவுகளை அளவிட்டு, கடந்த காலத்தில் நிகழ்ந்த சூரியப் புயல்கள் மற்றும் பேரண்ட நிகழ்வுகளைக் கண்டறிவது இவரது ஆய்வில் முக்கியப்பகுதி.
இவர் 2012-ம் ஆண்டு தனது முனைவர் பட்ட ஆய்வின் போது கி.பி. 774-775 -ம் ஆண்டில் ஏற்பட்ட தீவிர கதிர்வீச்சுப் பாய்ச்சலை அக்காலத்தில் வளர்ந்த ஜப்பானிய செடார் மரங்களின் (Cryptomeria japonica) அடிக்கட்டைகளில் இருந்த மர வளையங்கள் ஆவணப்படுத்தி இருப்பதை முதன்முதலில் கண்டுபிடித்தார். 2012-ல் Nature இதழில் தம் ஆய்வை வெளியிட்டார்.
இதற்கு முன்னோடியாக, 2008-ல் அண்டார்டிகாவின் பனிக்கட்டியில் பெரிலியம்-10 என்ற தனிமம் திடீரென உயர்ந்திருப்பது கண்டறியப்பட்டிருந்தது.
சூரியனிலிருந்து வரும் மிக ஆற்றல்மிக்க துகள்கள் வளிமண்டலத்தில் நைட்ரஜன், ஆக்சிஜன் அணுக்களுடன் மோதும்போது பெரிலியம்-10 உருவாகிறது. பின்னர் அது நுண்துகள்களுடன் இணைந்து பனிப்படலங்களில் படிகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சேரும் பனியைத் துளையிட்டு எடுக்கும்போது, அந்தக் காலத்தில் வளிமண்டலத்தில் நிகழ்ந்த மாற்றங்களின் பதிவுகளைப் பெற முடிகிறது.
கார்பன்-14 மரங்களின் ஆண்டு வளையங்களில் பதிவாகிறது; பெரிலியம்-10 பனிக்கட்டி மையங்களில் பதிவாகிறது.
ஜப்பானின் ஹிரோசாகி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த காசுஹோ ஹொரியுச்சி (Kazuho Horiuchi) தலைமையிலான ஆய்வுக் குழு அண்டார்டிகாவின் டோம் ஃபூஜி (Dome Fuji) நிலையத்தில் எடுக்கப்பட்ட பனிக்கட்டி மையத்தை (ice core) ஆய்வு செய்தனர். அதில் கி.பி. 775 ஆண்டை ஒட்டிய ஒரு பனியடுக்கில் பெரிலியம்-10த்தின் செறிவு அதன் அடிப்படை அளவைவிட சுமார் 80% திடீரென அதிகரித்திருப்பதைக் கண்டறிந்தனர். 2008-ல் வெளியான இந்த ஆய்வுமுடிவு முதலில் சூரிய செயல்பாட்டின் பதிவாகவும் பனி அடுக்குகளின் காலத்தை நிர்ணயிக்கும் கருவியாகவும்தான் பார்க்கப்பட்டது. அந்த உச்சத்தின் காரணம் அப்போது விளக்கப்படவில்லை.

பின்னர் நடந்த ஆய்வுகளில், மியாகே குழு மரவளையங்களில் கண்டறிந்த அதே கி.பி. 774-775 கார்பன்-14 உயர்வுடன் ஒப்பிட்டபோது, ஹொரியுச்சியின் பெரிலியம்-10 உச்சமும் அதே நிகழ்வின் தடயம் என்பது உறுதியானது. இரண்டு வெவ்வேறு ஊடகங்களில் (மரம், பனி) ஒரே ஆண்டில் பதிவான இந்த ஒத்திசைவுதான் இது ஒரு உலகளாவிய அண்டக்கதிர் நிகழ்வு என்பதை நிறுவியது.
ஃபுசா மியாகே குழு தெற்கு ஜப்பானின் யாகுஷிமா தீவில் வளர்ந்த, பழமையான இரண்டு சீடார் (யாகுசுகி) மரங்களை எடுத்துக்கொண்டு, கி.பி. 750 முதல் 820 வரையிலான வளையங்களில் கார்பன்-14-ஐ அளந்தபோது, 774-க்கும் 775-க்கும் இடையில் அது சுமார் 1.2% உயர்ந்திருந்தது. இது இயல்பான சூரிய மாற்றத்தால் ஏற்படுவதைவிட ஏறத்தாழ 20 மடங்கு அதிகம்.
பின்னர் உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பழமையான மரங்களின் வளையங்களை ஆய்வு செய்தபோது, இந்தக் கார்பன் பாய்ச்சல் உலகளாவிய ரீதியில் ஒரே மாதிரி நிகழ்ந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. கி.பி. 774-775 காலத்தில் வளர்ந்த எல்லா மரங்களிலும் அந்த உச்சம் பதிந்திருந்தது. ஜெர்மனி, ரஷ்யா, அமெரிக்கா, பின்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் மரங்களிலும் அதே உச்சம் உறுதிசெய்யப்பட்டது.
ஒரு நாட்டில் ஒரு மரத்தில் மட்டும் இப்படி கார்பன் 14-ன் உச்சம் இருந்தால், அது அந்த இடத்தின் மண், காற்று அல்லது மரத்தின் தனிப்பட்ட நிலையால் ஏற்பட்டதாக இருக்கலாம். ஆனால் வெவ்வேறு கண்டங்களின், வெவ்வேறு வகை மரங்களில் ஒரே ஆண்டில் ஒரே அடையாளம் தெரிந்தால்,அதற்கான காரணம் வளிமண்டலம் முழுவதற்குமான ஒன்று என்பது உறுதியானது.
இந்த அதிகரித்த கார்பன் அளவு ஒட்டுமொத்த அளவில் பார்த்தால், மிக மிகச் சிறியது. அது மரங்களுக்கோ மனிதர்களுக்கோ விலங்குகளுக்கோ எந்தத் தீங்கும் செய்யவில்லை. அந்தக் காலத்தில் அது யாருக்கும் தெரியவும் இல்லை. ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் கழித்து, ஆண்டு வளையத்தை அளந்த பிறகே தெரியவந்தது.
கார்பன் 14 அதிகரித்தது ஒரு மாசுபாட்டினால் அல்ல; வளிமண்டலக் கார்பன்-14 செறிவு 1.2% கூடியதன் விளைவு மட்டுமே. இந்த அரிய திடீர் கார்பன் 14 உயர்வு என்னும் நிகழ்வு விண்வெளியில் இருந்து வந்த ஒரு தீவிரமான சூரியப் புயல் அல்லது காஸ்மிக் கதிர்வீச்சுப் பாய்ச்சலால் ஏற்பட்டிருக்கக்கூடும்.
இந்த உச்சத்துக்குக் காரணம் என்ன? தொடக்கத்தில் சூப்பர்நோவா வெடிப்பு, காமா கதிர் வெடிப்பு போன்றவையும் காரணங்களாகக் கருதப்பட்டன. ஆனால் அவற்றுக்கான வானியல் தடயங்கள் கிடைக்கவில்லை. பின்னர் கிடைத்த பெரிலியம்-10, குளோரின்-36 சான்றுகள் மிகத் தீவிரமான சூரியத் துகள் நிகழ்வையே சுட்டுகின்றன. எனினும் அது எவ்வகை சூரிய நிகழ்வு என்பதில் விஞ்ஞானிகளிடையே விவாதம் தொடர்கிறது.
இந்தக் கதிரியக்கக் கார்பன் மரங்களுக்குள் எப்படி நுழைந்தது என்பதைப் பார்க்கலாம்.
மேல் வளிமண்டலத்தில் விண்வெளியிலிருந்து வரும் காஸ்மிக் கதிர்கள் உருவாக்கும் நியூட்ரான்கள் நைட்ரஜனுடன் மோதி, கார்பன்-14 என்ற கதிரியக்க கார்பனை உருவாக்குகின்றன. இது ஆக்சிஜனுடன் சேர்ந்து கார்பன் டை ஆக்சைடாகிறது.
வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடில் கார்பன்-12, கார்பன்-13, கார்பன்-14 ஆகிய மூன்று ஐசோடோப்புகளும் உள்ளன. இவற்றில் கார்பன்-12 மிக அதிக அளவிலும், கார்பன்-13 குறைந்த அளவிலும், கதிரியக்கக் கார்பன்-14 மிகமிகக் குறைந்த அளவிலும் காணப்படுகின்றன.
மரங்கள் (தாவரங்கள் அனைத்தும்) ஒளிச்சேர்க்கையின்போது வளிமண்டலத்திலிருந்து கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு, அதிலுள்ள கார்பனைச் சர்க்கரை உள்ளிட்ட கரிமப் பொருட்களாக மாற்றுகின்றன. இவ்வாறு கார்பன்-12, கார்பன்-13 ஆகியவற்றுடன் மிகச் சிறிய அளவிலான கார்பன்-14 -ம் மரத்தின் திசுக்களில், குறிப்பாக மரக் கட்டை எனப்படும் (Secondary Xylem) ஸைலத்தின் செல்லுலோஸ் இழைகளில் நிரந்தரமாகச் சேமிக்கின்றன.
அதனால் ஒவ்வோர் ஆண்டும் உருவாகும் வளையத்தில், அந்த ஆண்டின் கார்பன்-14 அளவு பதிந்துவிடுகிறது.
கி.பி. 774–775 காலகட்டத்தில் வளிமண்டலத்தில் கதிரியக்கக் கார்பன்-14 அளவு திடீரென அதிகரித்தது. கார்பன்-14, ஆக்சிஜனுடன் இணைந்து கார்பன் டை ஆக்ஸைடில் இடம்பெற்று வளிமண்டலத்தில் பரவியது. அக்காலத்தில் ஒளிச்சேர்க்கை செய்துகொண்டிருந்த மரங்கள், வளிமண்டலத்திலிருந்து கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டபோது, அதிலிருந்த கார்பன்-12, கார்பன்-13 ஆகியவற்றுடன் கார்பன்-14 ஐயும் தங்கள் திசுக்களில் பதிவு செய்துகொண்டன.
வளிமண்டலத்தில் கார்பன்-14 அளவு திடீரென அதிகரித்ததால், மரங்களின் ஆண்டு வளையங்களிலும் அதன் அளவு வழக்கத்தைவிட அதிகமாகப் பதிவானது. இந்த அதிகரிப்பு ஜப்பான், ஜெர்மனி, ரஷ்யா, அமெரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மரங்களில் கண்டறியப்பட்டது. இருப்பினும், வடக்கு மற்றும் தெற்கு அரைக்கோளங்களில் மரங்களின் வளரும் பருவங்கள் வேறுபடுவதால், அந்த அதிகரிப்பு பதிவான ஆண்டு வளையத்தில் சிறிய வேறுபாடுகள் இருக்கலாம். இதனால்தான் இந்த நிகழ்வு கி.பி. 774–775 நிகழ்வு என்று குறிப்பிடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மரங்கள் உருவாக்கும் புதிய வளையம் அந்தந்த ஆண்டின் வளிமண்டலத் தரவுகளைப் பிரதிபலிக்கும் ஒரு ‘உயிர் காலப்பெட்டியாக’ செயல்படுவதால், கி.பி. 774-ன் மர வளையச் செல்கள் இந்தக் கதிர்வீச்சின் தடயத்தை இன்றளவும் அழியாமல் தாங்கி நிற்கின்றன.
கார்பன் 14 ஐஅளவிடுதல்.
வீழ்ந்து இறந்த மரங்களிலும் உயிருடன் இருக்கும் மரங்களிலும் இந்த ஆண்டு வளையங்களை அளவிடமுடியும். உயிருள்ள மரங்களில் சிறு பென்சில் அளவுக்கான துளைப்பானால் துளையிட்டு வளையங்கள் நீளமான குச்சிபோல எடுக்கப்படுகின்றன. இதனால் அம்மரங்களுக்கு எந்தப்பாதிப்பும் இல்லை. அந்த சிறு காயம் விரைவில் ஆறிவிடுகிறது.

பெரு மரங்களின் ஒவ்வொரு ஆண்டு வளையமும் மெல்லிய துண்டாகத் தனியே செதுக்கி உரித்து எடுக்கப்படுகிறது. வளையங்களுடன் ஒட்டி இருக்கும் பிசின், சாறு போன்றவற்றை ரசாயனங்களால் நீக்கி, அந்த ஆண்டில் உருவான செல்லுலோஸை மட்டும் தூய்மையாக தனியே எடுக்கிறார்கள். அதை எரித்து கார்பன் டை ஆக்சைடாக்கி, பின்னர் கிராஃபைட் வடிவுக்கு மாற்றுகிறார்கள். அதன்பின் AMS (Accelerator Mass Spectrometer) என்ற கருவி, கார்பன் அணுக்களை எடைக்கேற்பப் பிரித்து எண்ணுகிறது. வளிமண்டலத்தில் ஒரு லட்சம் கோடி சாதாரண கார்பன் அணுக்களுக்கு ஒரே ஒரு கார்பன்-14 அணுதான் இருக்கும். அந்த ஒன்றின் எண்ணிக்கையைச் சாதாரண கார்பனுடன் ஒப்பிட்டு, ஆண்டுவாரியாக வரைபடம் போடுகிறார்கள். அந்த வரைபடத்தில்தான் கி.பி. 774-775-ல் ஒரு திடீர் உச்சம் தெரிந்தது.
இப்படியான ஆய்வுகளால் என்ன பயன்?
1.தொழில்நுட்ப உலகிற்கான எச்சரிக்கை: இன்றைய சமூகம் முழுக்க முழுக்க செயற்கைக்கோள்கள், மின் வலையமைப்புகள் மற்றும் இணையத் தொடர்புகளை நம்பியே இயங்குகிறது. கி.பி. 774-ல் நிகழ்ந்தது போன்ற ஒரு பேரலை இக்காலத்தில் மீண்டும் நிகழ்ந்தால், உலகளாவிய தொழில்நுட்பக் கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும். இதை விஞ்ஞானிகள் ஓர் எச்சரிக்கையாகக் கருதுகின்றனர்.
1859-ல் ஏற்பட்ட கேரிங்டன் சூரியப் புயலில் தந்தி இணைப்புகள் செயலிழந்தன; 1989-ல் கனடாவின் கியூபெக் பகுதியில் ஒரு சூரியப் புயல் பல மணி நேர மின்தடையை ஏற்படுத்தியது.
கி.பி. 774-775-க்குப் பிறகு, இத்தகைய அண்டக்கதிர் உச்சங்கள் வேறு பல காலங்களிலும் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது:
கி.பி. 993-994-ன் நிகழ்வை மியாகே குழுவினரே 2013-ல் மரவளையங்களில் கண்டறிந்தனர். கி.மு. 660 நிகழ்வு 2019-ல் அடையாளம் காணப்பட்டது. கி.மு. 5259, கி.மு. 7176 நிகழ்வுகள் 2022-ல் ஐரோப்பா, ரஷ்யா, அமெரிக்கா ஆகியவற்றின் மரவளையங்களில் கண்டறியப்பட்டன.
இதுதவிர, கி.பி. 1052, கி.மு. 5410, கி.மு. 5480 ஆகிய காலகட்டங்களிலும் கார்பன்-14 அளவில் அதிகரிப்புகள் ஏற்பட்டதற்கான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இதுபோன்ற நிகழ்வுகள் கடந்த காலத்தில் நிகழ்ந்திருக்கின்றன என்றால், எதிர்காலத்திலும் இத்தகைய அதிதீவிர சூரியத் துகள்கள் நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவற்றின் சாத்தியமான தாக்கங்களைப் புரிந்துகொள்வதற்கும், செயற்கைக்கோள்கள், தகவல் தொடர்பு அமைப்புகள், மின்சாரக் கட்டமைப்புகள் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் எதிர்கொள்ளக்கூடிய அபாயங்களை மதிப்பிடுவதற்கும் இந்தக் கண்டுபிடிப்புகள் முக்கியமானவை. மரங்களின் ஆண்டு வளையங்களில் பதிவாகியிருக்கும் கார்பன்-14 தடயங்கள், கடந்த காலத்தை அறிந்துகொள்வதற்கான சான்றுகள் மட்டுமல்ல; எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ளக்கூடிய விண்வெளி நிகழ்வுகளைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோல்களும்கூட.
2. துல்லியமான காலக்கணிப்பு: கி.பி. 993-இல் ஏற்பட்ட கார்பன்-14 உச்சம் பல நாடுகளின் மரங்களில் கண்டறியப்பட்டு, காலத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ஒரு மரத்தின் ஆண்டு வளையங்களில் இந்த உச்சத்தைக் கண்டறிந்தால், அந்த வளையம் உருவான ஆண்டைத் துல்லியமாகக் கணிக்க முடியும். இதற்கு அடுத்தடுத்த வளையங்களை எண்ணிப் பார்த்து மரம் வெட்டப்பட்ட ஆண்டையும் அறியலாம். இதே முறையில், கனடாவில் கிடைத்த மரத்துண்டுகள் கி.பி. 1021-ம் ஆண்டில் வெட்டப்பட்டவை என்பதை, 2021-ல் Nature இதழில் வெளியான ஆய்வு உறுதிப்படுத்தியது.
3.பிற துறைகளுக்குப் பயன்: தொல்லியல் மற்றும் வரலாற்றுத் தடங்களை மிகத் துல்லியமாக ஒரே ஆண்டில் பொருத்த (Absolute Dating) இந்த மர வளையத் தரவுகள் பெரிதும் உதவுகின்றன. நவீன அறிவியல் கருவிகளால் கண்டறிய முடியாத பல பூமி-வான்சார் ரகசியங்களை மரங்களும் பாதுகாத்துள்ளன என்ற உண்மை அறிவியல் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஃபுசா மியாகேயின் இந்தக் கண்டுபிடிப்பினால் விண்வெளி சார்ந்த அதிதீவிரக் கதிர்வீச்சு நிகழ்வுகள் அறிவியல் உலகில் “மியாகே நிகழ்வுகள்” (Miyake Events) என்று அவரது பெயராலேயே அழைக்கப்படுகின்றன.
பூமியின் வரலாறு என்பது மனிதர்களின் வரலாறு மட்டுமல்ல. நாம் எழுதத் தொடங்குவதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே, மரங்களும் பாறைகளும் பனிக்கட்டிகளும் தங்களுக்குள் காலத்தின் தடயங்களைப் பதிவு செய்துகொண்டிருக்கின்றன. மரத்தின் ஓர் ஆண்டு வளையத்தில் பதிந்திருக்கும் தகவல், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அண்டவெளி நிகழ்வை இன்று நமக்குச் சொல்கிறது. மனிதர்கள் விட்டுச்செல்லும் ஆவணங்களைப் போலவே, இயற்கையும் தனக்கான ஆவணங்களைப் பாதுகாத்து வைத்திருக்கிறது. அவற்றை வாசிக்கக் கற்றுக்கொள்வதில் தான் அறிவியலின் பங்கிருக்கிறது. பூமியின் வரலாற்றை மனிதர்கள் மட்டும் எழுதவில்லை; இயற்கையும் அதைத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறது.
_________________________________________________________________________________________
மேலும் தகவல்களுக்கு:
1. முதன்மை ஆய்வு — 2012
Fusa Miyake et al. · Nature · 2012
A signature of cosmic-ray increase in AD 774–775 from tree rings in Japan
ஜப்பானிய சிடார் மரங்களின் ஆண்டு வளையங்களில் கி.பி. 774–775 காலத்தில் கார்பன்-14 அளவு திடீரென அதிகரித்ததை முதன்முதலில் அறிவித்த ஆய்வு. ஓராண்டில் சுமார் 12‰ அதிகரிப்பு பதிவானது.
ஆய்வுக் கட்டுரையைப் படிக்கவும் — Nature
2. பல நாடுகளின் மரங்களில் உறுதிப்படுத்துதல் — 2014
Jull et al. · Geophysical Research Letters
Excursions in the ¹⁴C record at A.D. 774–775 in tree rings from Russia and America
ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட இடங்களின் மர வளையங்களிலும் இதே அதிகரிப்பு கண்டறியப்பட்டது. இது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நிகழ்ந்த மாற்றமல்ல என்பதற்கு முக்கிய ஆதாரம்.
3. பனிக்கட்டிகளில் கிடைத்த சான்று — 2015
Miyake et al. · Geophysical Research Letters
Cosmic ray event of A.D. 774–775 shown in quasi-annual ¹⁰Be data from the Antarctic Dome Fuji ice core
அண்டார்டிகாவின் பனிக்கட்டி மாதிரிகளில் பெரிலியம்-10 (Be-10) அளவிலும் தொடர்புடைய அதிகரிப்பு கண்டறியப்பட்டது. இது மர வளையங்களில் கிடைத்த கார்பன்-14 சான்றுக்கு தனித்துவமான ஆதாரத்தை வழங்குகிறது.
4. நிகழ்வின் காரணம் குறித்த ஆய்வு — 2018
Büntgen et al. · Nature Communications
Solar superstorm of AD 774 recorded subannually by Arctic tree rings
ஆர்க்டிக் பகுதிகளின் மர வளையங்களை ஆய்வு செய்த இந்தப் படைப்பு, நிகழ்வு சூரியனுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும், அது கி.பி. 774-ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் நிகழ்ந்திருக்கலாம் என்றும் ஆதாரங்களுடன் முன்வைக்கிறது.
ஆய்வைப் படிக்கவும் — Nature Communications
5. சூரியத் தோற்றத்துக்கான பல்வேறு ஐசோடோப்பு ஆதாரங்கள் — 2015
Nature Communications
Multiradionuclide evidence for the solar origin of the cosmic-ray events of AD 774/5 and 993/4
கார்பன்-14 மட்டுமன்றி பிற கதிரியக்க ஐசோடோப்புகளின் பதிவுகளையும் இணைத்து, 774–775 மற்றும் 993–994 நிகழ்வுகளுக்கு சூரியனே காரணமாக இருந்திருக்கலாம் என்ற கருத்தை ஆராய்கிறது.ஆய்வைப் படிக்கவும் — Nature Communications
Leave a Reply
You must be logged in to post a comment.