லோகமாதேவியின் பதிவுகள்

Category: தாவரங்கள் (Page 3 of 18)

ப்ரெஞ்ச் ஃப்ரைஸ்!

சில நாட்களாகச்செய்திகளில் உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸை  இத்தனை ஆண்டுகளாக ஏராளமாக இறக்குமதி செய்து கொண்டிருந்த இந்தியா, சத்தமே இல்லாமல் உலகின் மிகப்பெரிய உருளைகிழங்கு பிங்கர் சிப்ஸ் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாகி இருக்கிறது என்பதுதான் பேசுபொருளாகி இருக்கிறது.

 இருபது வருடங்களுக்கு முன்பு  இந்தியா, சுமார் 24 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பைக் கொண்டிருக்கிற  உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸினால் உருவாக்கப்படும் ஃப்ரென்ச் ஃப்ரையின் உலகளாவிய  சந்தையில் இடம்பெற்றிருக்கவில்லை, ஏன் சந்தைக்கு அருகில் கூட இந்தியா  இல்லை.

ஆனால் இன்று நிலைமை அடியோடு மாறி விட்டிருக்கிறது. 

உருளைகிழங்கு இந்தியாவின் மிக அதிகம் உண்ணப்படும் கிழங்கு உணவாகி இருக்கிறது. மிகப்பெரிய மற்றும்  நவீன உணவகங்களில் மட்டுமே கிடைத்துக் கொண்டிருந்த ஃப்ரென்ச் ஃப்ரை இப்போது  நடைபாதைக்கடைகளில் கூட கிடைக்கிறது.

இந்தியா  இப்போது (சீனாவுக்கு அடுத்தபடியாக) சுமார் 60 மில்லியன் டன் உருளைக்கிழங்குகளை  வருடாவருடம் உற்பத்தி செய்து உருளைக்கிழங்கு உணவை அதிகமாக உண்ணும் மக்களைக் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாக மட்டுமல்லாமல், அதிகமாக உருளைக்கிழங்கை ஏற்றுமதி செய்யும் இரண்டாவது  நாடாகவும் இருக்கிறது.

2025-ல் மட்டும் இந்தியா, 1817 கோடி மதிப்பிலான உறையச்செய்து, பதப்படுத்தப்பட்ட உருளைகிழங்கை ஏற்றுமதி செய்திருக்கிறது. இந்த சந்தை மதிப்பு ஐந்து வருடங்களுக்கு முன்பான  217 கோடி மதிப்பிலான உருளைக்கிழங்கு ஏற்றுமதியைவிட 9 மடங்கு அதிகம். இதே இந்தியாதான் 2000-ங்களின் மத்தியில்  வருடத்துக்கு 5-லிருந்து 7- ஆயிரம் டன் உருளைகிழங்குகளை இறக்குமதி செய்துகொண்டிருந்தது.

 எப்படி இந்தியா இந்த இடத்துக்கு வந்தது?

தக்காளியின் குடும்பமான சொலனேசியைச்சேர்ந்த உருளைக்கிழங்குப் பயிர் தென்னமெரிக்காவின் ஆண்டீஸ் மலைப்பகுதிக்கு சொந்தமானது. உருளைக்கிழங்கு 16 அல்லது 17-ம் நூற்றாண்டில் தான்  ஐரோப்பியர்களால் இந்தியாவுக்கு அறிமுகமாயிருக்கக்கூடும்.  7000-த்திலிருந்து 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் உருளைக்கிழங்கு மனிதர்களின் வளர்ப்புப்பயிராகி இருக்கக்கூடும் என்று நம்பப்டுகிறது.

பட்டாட்டா (‘batata’) என அழைக்கப்பட்ட இந்த கிழங்குகளை மலபார் கடற்கரைக்கு போர்த்துகீசியர்கள் முதலில் அறிமுகம் செய்தார்கள் என்றாலும் இதை இந்தியா முழுக்க,  குறிப்பாக வங்காளத்திற்கு கொண்டுவந்தது பிரிட்டிஷார் தான். பஞ்சகால உணவாக் கொண்டு வரப்பட்ட உருளைக்கிழங்கு இப்போது இந்தியாவின் எல்லாச் சமையலறைகளிலும் தவறாமல் இருக்கிறது.  உலகெங்கிலும் தற்போது சுமார் 5000 உருளைக்கிழங்கு வகைகள் உள்ளன.  இதில் 3000 வகை ஆண்டீஸ் மலைப்பகுதிக்கு சொந்தமானவை.

ஆனால் நாம் சமையலறையில் வைத்திருக்கும், சமைத்து உண்ணும் உருளைக்கிழங்குகள் எல்லாம் table potato வகையைச் சேர்ந்தவை.

ஏராளமாக விளையும் இவற்றால் இந்தியாவுக்கு பெரிய லாபம் எல்லாம் இல்லை. இந்த  டேபிள் வகையில், ஏற்றுமதி செய்யும் படியோ அல்லது சொல்லிக்கொள்ளும்படியோ சிறப்பாக ஏதுமில்லை. சர்வதேச உருளைக்கிழங்குச் சந்தை மிக கறாரானது. இந்திய சிறு விவசாயிகள் நெருங்கவே முடியாத  மிக இறுக்கமான தரக்கட்டுப்பாட்டு விதிகளைக் கொண்டது.

மேலும் உருளைக்கிழங்குகளை உறையவைத்து பதப்படுத்திப் பாதுகாக்கும் வசதிகளும், விளைந்த இடத்திலிருந்து பல இடங்களுக்கு அனுப்பும் வசதியும் இல்லாத விவசாயிகளுக்கு சாதாரண வகையை விளைவித்து உள்ளூர் சந்தையில் விற்பது மட்டுமே சாத்தியமாக இருக்கிறது. சொல்லப்போனால் உத்திப்பிரதேசம்,  பீகார் மற்றும் மேற்கு வங்கத்து விவசாயிகள், விற்றால் முதலுக்கே மோசம் வந்துவிடும் எனும் நிலைமைகளில், அறுவடை செய்த  உருளைகிழங்குகளை மீண்டும் நிலத்தில் புதைத்து விளைவிப்பதைக்கூடச் செய்திருக்கிறார்கள்.

1992-ல்  உலகின் மிகப்பெரிய  பதப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்கு சீவல்களை தயாரிக்கும்  அமெரிக்க நிறுவனமான Lamb Weston இந்தியாவிலிருந்த நட்சத்திர அந்தஸ்துகொண்ட மற்றும் உயர்ரக உணவகங்களுக்கு ஃப்ரென்ச் ஃப்ரை செய்வதற்கான பதப்படுத்தப்பட்ட , உறைந்த உருளைக்கிழங்குகளை அனுப்பத்துவங்கியது.  

பொன்னிறத்தில் மினுங்கிய மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு சீவல்களின் ருசியில் மயங்கிய இந்திய மேல்தட்டு மக்களால் Lamb Weston நிறுவனம் இந்தியாவில் ஆழமாகக் காலூன்றியது. ஆனால் இந்த நிறுவனம் இந்தியாவில் எந்த தொழிற்சாலையையும் துவங்கவில்லை,  இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட உருளைகிழங்குகளை  உணவகங்களுக்கு அனுப்பியே பெரும் பணம் பார்த்துக்கொண்டிருந்தது.

இதை கவனித்துக் கொண்டிருந்த Lamb Weston நிறுவனத்தின் உலகளாவிய போட்டியாளரான  கனடாவைச் சேர்ந்த மற்றொரு மாபெரும் உருளைக்கிழங்கு பதப்படுத்தும் நிறுவனமான  McCain Foods தானும் களத்தில் இறங்கி, பிரம்மாண்டமான உருளைக்கிழங்கு பதப்படுத்தும், பதப்படுத்திய உருளைக்கிழங்கை சேமிக்கும் குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட தொழிற்சாலையை   2007-ல் குஜராத்தில் மெக்சனா நகரத்தில் தொடங்கியது. ஃப்ரென்ச் ஃப்ரை மட்டுமல்லாது உடனடியாக தயாரித்துச் சாப்பிடக்கூடிய ஆலூ டிக்கி, பர்கர் போன்ற பல உருளைக்கிழங்கு உணவுகளையும் தயாரித்து இந்தியச் சந்தையை கையில் பிடித்து, உருளைக்கிழங்கின் சர்வதேச சந்தையில் இந்தியா கால் வைப்பதை மெக்கெய்ன் உறுதி செய்தது.  

குஜராத் விவசாயிகளுக்கு தரமான, நோயெதிர்ப்புச்சக்தி கொண்டிருக்கும் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யத் தேவையான விவசாய நுணுக்கங்களையும்  பயிற்றுவித்து, வேண்டிய கடனுதவிகளையும் அளித்து, உருளைக்கிழங்குகளை அறுவடைசெய்து  தாங்களே எடுத்துக்கொள்ளும் ஒப்பந்தத்தையும் இந்த நிறுவனம் போட்டுக்கொண்டதால், ஃப்ரென்ச் ஃப்ரை செய்யத் தேவையான, நீளம் அதிகமான சீவல்களை அளிக்கும் உருளைக்கிழங்கு வகைகளான  Shepody, Santana மற்றும் Innovator ஆகிவற்றை குஜராத் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விளைவித்தார்கள். பிறகு இந்தியா தொட்ட அனைத்து உருளைக்கிழங்கும் ஃப்ரென்ச் ஃப்ரை என்னும் பொன்னானது.

இந்த அசுர வேகத்தை, இஸ்கான் பாலாஜி, ஃபன்வேவ் மற்றும் ஹைஃபன், சில்ஃபில்   போன்ற இந்திய உருளைகிழங்கு நிறுவனங்கள் கவனித்து தாங்களும் களத்தில் தீவிரமாக இறங்கி, மெக்கெயினுக்கு இணையாகவே  இந்தியாவை முன்னணி உருளைக்கிழங்கு ஏற்றுமதியாளராக்கி இருக்கிறார்கள்.

இந்த நிறுவனங்களும் விவசாயிகளுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு சாகுபடி நுட்பங்களை  அவர்களுக்குப் பயிற்றுவித்து,  தரமான விதைகளையும், கடனையும் அளித்து,  அறுவடைக்கான உத்திரவாதத்தையும் பெற்றுக்கொண்டு விலையை முன்கூட்டியே தீர்மானித்து, இருதரப்புக்கும் பலன்கிடைக்கும் படி பார்த்துக் கொண்டார்கள். 

இந்த உருளைக்கிழங்குகள், நாம் சாதாரணமாகச் சமையலில் பயன்படுத்தும் நீர்ச்சத்தும் சர்க்கரைச்சத்தும் மிகுதியான வகையல்ல. குறிப்பாக, சண்டானா (Santana) மற்றும் ஃப்ரைசோனா (Friesona) போன்ற வகைகள் நீள்வட்ட வடிவில் இருக்கும். அவை மஞ்சள் நிற சதைப் பகுதியையும், அதிக மாவுச்சத்தையும், குறைந்த சர்க்கரைச்சத்தையும், குறைந்த நீர்ச்சத்தையும் கொண்டு, பிரெஞ்சு ஃப்ரைஸ் சீவல்களுக்கு ஏற்ற அளவில் விளைபவை. ஐரோப்பாவைச் சேர்ந்த இந்த வகை உருளைக்கிழங்குகள், பிரெஞ்சு ப்ரைக்குத் தேவையான முறுகலையும் பொன்னிறத்தையும் அளிப்பவை, எனவே உலகளவில் இவை மிக அதிகமாகச் சாகுபடி செய்யப்படும் வகைகளாக இருக்கின்றன.

இந்த இரண்டு ஐரோப்பிய உருளைக்கிழங்கு வகைகளும், இந்திய மண்ணில், குறிப்பாக நீண்ட பகல் பொழுதும், குளிர்ச்சியான இரவும், மிதமான வெயிலும் கொண்ட காலநிலையைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் நன்கு விளைகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, குஜராத்தில் உருளைக்கிழங்கைச் சேமித்து வைக்கும் வசதி கொண்ட தொழிற்சாலைகளும் இருப்பதால், உலகெங்கும் பதப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்கு சீவல்களை சீனாவை விடக் குறைந்த விலையில் இந்தியா ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது.

இந்த சர்வதேச நிறுவனங்களுடனான ஒப்பந்தம், உள்ளூர் சந்தையில் உருளைக்கிழங்கை விற்றுக்கொண்டிருந்த விவசாயிகளின் வருமானத்தை 75% அதிகரித்தது. இது இந்திய விவசாயிகளின் வாழ்வை மாற்றியது மட்டுமல்லாமல், இந்திய உருளைக்கிழங்கு பதப்படுத்தும் நிறுவனங்களின் விதியையும், தரத்தையும் மாற்றி அமைத்து, 2017-ம் ஆண்டு முதல் உலகெங்கும் உருளைக்கிழங்குகளை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு  இந்தியாவை மாற்றியது.

இதற்கு முன்பாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளும் மத்திய கிழக்கு நாடுகளும், பதப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்கு சீவல்களுக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை, குறிப்பாக பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து சந்தைகளை மட்டுமே சார்ந்திருந்தன.

குஜராத்தின் உருளைக்கிழங்கு சேமிப்பு மற்றும் பதப்படுத்தும் தொழிற்சாலைகளின் எழுச்சிக்குப் பிறகு, இந்தியாவை நாடாத, அணுகி இருக்காத சந்தை வாய்ப்புகள் தேடி வரத் தொடங்கின.

இந்த மாற்றத்திலும் முன்னேற்றத்திலும், இந்தியத்தாவரவியலாளர்கள் மற்றும் விவசாய விஞ்ஞானிகளின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் (ICAR) கீழ் இயங்கும் மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம் (CPRI – The Central Potato Research Institute), அதிக சதைப்பகுதியும், குறைந்த சர்க்கரை அளவும் கொண்ட, எண்ணெய் குடிக்காமல் பொன்னிறமாக முறுகி வறுபடுவதற்கு ஏற்ற உருளைக்கிழங்கு ரகங்களை உருவாக்கியது. இந்த உருளைக்கிழங்குகளும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகின்றன. 

CPRI உருவாக்கிய குஃப்ரி சிப்சோனா (Kufri Chipsona) மற்றும் ஃப்ரைசோனா (Frysona) போன்ற ரகங்கள், ஃபிரெஞ்சு ஃப்ரைஸ் மற்றும் சிப்ஸ் தயாரிப்புக்கு மிகவும் ஏற்றவை. இந்த ரகங்கள் இந்தியாவின் உருளைக்கிழங்கு ஏற்றுமதி வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கின்றன. 

இந்த முன்னணி நிறுவனங்களின் வளர்ச்சியும் வெற்றியும், மேலும் பல நிறுவனங்களை குஜராத்தில் உருளைக்கிழங்கு விளைவிக்க முன்வரச்செய்ததோடு, பதப்படுத்தும் நிறுவனங்களை அமைக்கவும் தூண்டியது. 2026-ல் மேலும் சில முக்கிய பெருநிறுவனங்கள் இங்கு அமைக்கப்படவிருக்கின்றன. 

2025 பிப்ரவரியில், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட உறையவைக்கப்பட்ட உருளைக்கிழங்கு சீவல்களின்  அளவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 20,000 டன்னைத் தாண்டியது. இதில் குஜராத்தின் பங்கு மட்டுமே 80% மாக இருந்தது. இப்போது குஜராத் இந்தியாவின் பிரெஞ்சு ஃப்ரைஸ் தலைநகராகி இருக்கிறது.

2024-ல், சர்வதேச சந்தையில் சீனாவை விட இந்திய உருளைக்கிழங்குகளின் சராசரி விலை மிகக் குறைவாக இருந்ததும், இந்தியா இரண்டாவது முக்கிய உருளைக்கிழங்கு ஏற்றுமதி செய்யும் நாடாக இருப்பதற்கு முக்கியக் காரணமாகியது.

நகரமயமாக்கலும் மாறிவரும் வாழ்க்கைமுறையும் பிரெஞ்சு ஃப்ரைஸ் போன்ற உறைந்த உணவுகளின் அதீத நுகர்வுக்குக் காரணமாக இருக்கின்றன.

நீர் பாய்ச்சுவதிலிருந்து சொட்டுநீர்ப்பாசனத்துக்கு மாறியிருப்பதும், தொடர்ந்து பயிரிட்டுக்கொண்டே இருக்காமல் கோடையில் நிலத்தைத் தரிசாக விடுவதும், சாண உரம் இடுவதும்  உருளைக்கிழங்கு சாகுபடியை அதிகரிக்கும் என்பதை  அறிந்துகொண்டிருக்கும் குஜராத் விவசாயிகள் உருளைக்கிழங்கு சாகுபடியின் களஆய்வுகளைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறார்கள். 

விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உருளைக்கிழங்கு சாகுபடியால் உயர்ந்திருப்பதால், குஜராத் இளைஞர்கள் பலரும் இப்போது விவசாயப் படிப்பில் வெகுவாக ஆர்வம் காட்டுகிறார்கள்.  

புதிய வகை உருளைக்கிழங்கு விதைகளைப் பற்றி இனி அறிந்துகொள்ள இருப்பதாக இளம் குஜராத் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். குஜராத்தில் விவசாயிகள் மட்டுமல்லாது, விவசாய இயந்திரங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் பெருகி இருக்கின்றன; லாபமும் பார்க்கின்றன.

மிகச்சிறந்த உருளைக்கிழங்குச் செடிகளை திசு வளர்ப்பு (Tissue Culture) முறையிலும் இப்போது பெருக்கிப் பயிரிடுகிறார்கள். 

சர்வதேச சந்தையில் இந்தியா இப்போது உருளைக்கிழங்கு சாகுபடியிலும் ஏற்றுமதியிலும் மிகவும் கவனிக்கத்தக்க நாடாக இருந்தாலும், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்துக்கு இணையாக இன்னும் வளர்ந்திருக்கவில்லை. உருளைக்கிழங்கு சந்தை மதிப்பை கணிப்பவர்கள் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா இந்த இரு நாடுகளுக்கு இணையாகவே வர வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள்.

எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கப்பட்ட, நீளமான இந்த உருளைக்கிழங்குச் சீவல்களான ‘ஃப்ரென்ச்  ஃப்ரைஸ்’  17-ம் நூற்றாண்டில் பெல்ஜியத்திலிருந்து உருவானதா அல்லது 18-ம் நூற்றாண்டில் பிரான்ஸிலிருந்து உருவானதா என்று காலங்காலமாக விவாதங்கள் நடைபெறுகின்றன. பிரான்ஸிலும் பெல்ஜியத்திலும் இது ‘ஃப்ரிட்ஸ்’ (Frites) என்றே அழைக்கப்படுகிறது. அயர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் இது ‘சிப்ஸ்’ (Chips) என்றே அழைக்கப்படுகிறது.

பெல்ஜியத்தின் மியூஸ் பள்ளத்தாக்குப் பகுதியில் பல காலமாக நீளமாக நறுக்கப்பட்ட மீன் துண்டுகள் எண்ணெயில் பொரித்தெடுக்கப்பட்டுக்கொண்டிருந்தன. 17-ம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு கடும் பனிக்காலத்தில் நதி நீர் உறைந்துபோனபோது, மீனுக்கு மாற்றாக உருளைக்கிழங்குகளை அப்படி மெலிதாகச் சீவி எண்ணெயில் பொரித்தெடுத்தார்கள். அதுதான் ஃப்ரென்ச் ஃப்ரைஸ் என்று பெல்ஜியம் தரப்பு வாதிடுகிறது.

ஆனால், வரலாற்றாய்வாளர்கள், 18-ம் நூற்றாண்டின் மத்தியில்தான் பெல்ஜியத்துக்கு உருளைக்கிழங்குகள் அறிமுகமானது, எனவே இந்தக் கதையில் உண்மையில்லை என்று கூறுகிறார்கள்

பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்பாக 1780-களில், பாரிஸின் ‘பாண்ட் நஃப்’ (Pont Neuf) என்னும் பாலத்தை ஒட்டிய நடைபாதைக்கடைகளில் எண்ணெயில் பொரித்தெடுத்த உருளைக்கிழங்குச் சீவல்கள் விற்கப்பட்டன. இந்த உணவின் செய்முறை 1795-ல் வெளியான, உருளைக்கிழங்கு உணவுகளுக்கான பிரத்யேக நூலான ‘La Cuisinière Républicaine’ (The Republican Cookbook)) என்னும் நூலில், 31 உணவுத் தயாரிப்புகளில் ஒன்றாகப் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்தச் சீவல்தான் ஃப்ரென்ச் ஃப்ரை என்று ஃப்ரென்சுத்தரப்பினர் வாதிடுகிறார்கள்.

ஆரம்பத்தில் ‘Frites’ அல்லது ‘Pommes Frites’ என்று பெல்ஜியத்திலும் பிரான்ஸிலும் குறிப்பிடப்பட்ட இந்த சீவல்கள், மொழியியல் குழப்பத்தினால்தான்  ‘ஃப்ரென்ச்  ஃப்ரை’  என்று ஆனது.

முதல் உலகப் போரின்போது அமெரிக்க வீரர்கள் இந்தப் பொரித்தெடுக்கப்பட்ட உருளைக்கிழங்கு சீவல்களைச் சாப்பிட்டார்கள். அப்போது பெல்ஜிய இராணுவத்தினர் பிரெஞ்சு மொழி பேசியதால், அமெரிக்க வீரர்கள் அந்த உணவை ‘ஃப்ரென்ச்  ஃப்ரை’ என்று குறிப்பிட்டார்கள்.

“french fried potatoes”  என்ற சொற்றொடர் முதன்முதலில் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டது 1856-ம் ஆண்டில் எலிசா வாரன் எழுதிய Cookery for Maids of All Work என்ற நூலில்தான். 

1856-களில் பிரபலமாக இருந்த ஆங்கில உணவு செய்முறை நூல்களில், நீளமான மெல்லிய உணவுச் சீவல்களை எண்ணெயில் பொரித்தெடுக்கும் முறையே “French fried” என்று குறிப்பிடப்பட்டது. நீண்ட மெல்லிய துண்டுகளாக எந்த உணவுப்பொருளையும் நறுக்குவதே பிற்பாடு “Frenching”  என்று குறிப்பிடபட்டது. இந்த இரண்டு காரணங்களால் ஃப்ரென்ச் ஃப்ரைக்கு இந்த பெயர் வந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 

20 -ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், “french fried”  என்பது வெங்காய வறுவல் அல்லது கோழி இறைச்சி போன்ற உணவு வகைகளுக்காக “ஆழமாகப் பொரித்தது” (deep-fried) என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டது.

அமெரிக்காவுக்கு ஃப்ரென்ச் ஃப்ரை அறிமுகமானது, அமெரிக்க அதிபர் தாமஸ் ஜெஃப்பர்சன் வெள்ளை மாளிகையில் அளித்த ஒரு விருந்தில்தான். தாமஸ் ஜெஃப்பர்சன் பிரான்ஸில் அமைச்சராக இருந்தபோது (1784–1789), சுவைத்துப்பார்த்த உருளைக்கிழங்கு வறுவலின் சுவையில் மயங்கி, அதன் செய்முறைக் குறிப்பைப் கையோடு கொண்டு வந்திருந்தார். அவரது தனிப்பட்ட சமையல்கலைஞரான ஜேம்ஸ் ஹெம்மிங்ஸ், 1802-ல் வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு இரவு விருந்தில் இதை அனைவருக்கும் சமைத்துப் பரிமாறினார். அதிலிருந்து ஃப்ரென்ச் ஃப்ரைஸ் அமெரிக்கர்களின் நாக்குகளில் நீங்கா இடம்பிடித்தது.

துரித உணவுகள் அமெரிக்காவில் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்த 20-ம் நூற்றாண்டின் மத்தியில், ஃப்ரென்ச் ஃப்ரை மிக எளிய ஆனால் அனைவருக்கும் பிடித்தமான துணை உணவாகப் பிரபலமடைந்தது.

உலகளவில் ஃப்ரென்ச் ஃப்ரைஸ் தயாரிப்புக்கும் பொதுவான பயன்பாட்டுக்கும் உள்ள உருளைக்கிழங்கு வகைகள் அவற்றின் மாவுச்சத்து (starch) மற்றும் நீர்ச்சத்து (moisture) அளவுகளைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகின்றன.

உலகளவில்  ஃப்ரென்ச் ஃப்ரைகளுக்கான அதிகம் பயன்படுத்தப்படும் “மாவுச்சத்து நிறைந்தவை” அல்லது “உலர்ந்தவை”, பொரிக்கும்போது சீவல்களின் மேற்புறம் முறுகலாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும் உருளைக்கிழங்கு வகைகளே ஃப்ரென்ச் ஃப்ரைஸுக்கு சிறந்த தேர்வாகும். அவற்றின் பட்டியல்:

  • Agria
  • Shepody
  • Ranger Russet
  • Russet Burbank 
  • Umatilla Russet
  • Innovator
  • Kennebec
  • Idaho Potato
  • Yukon Gold
  • Markies
  • Fontane
  • Umatilla Russet & Alturas

இவற்றில் ரஸ்ஸட் (Russet) வகைகளே உலகெங்கிலும் மிக அதிகமாகப் பயன்பாட்டில் இருப்பவை. ரஸ்ஸட் வகையில் குறிப்பாக, ரஸ்ஸட் பர்பேங்க் (Russet Burbank) வகைதான் மிக பிரபலமானது.

அமெரிக்கத் தாவரவியலாளரும் தோட்டக்கலை நிபுணருமான லூதர் பர்பேங்க் (Luther Burbank) என்பவரால், ஐரிஷ் உருளைக்கிழங்குப் பஞ்சத்துக்குப் பிறகு அதற்கான தீர்வாகக் கண்டுபிடிக்கப்பட்டதுதான் இந்த ரஸ்ஸட் பர்பேங்க் உருளைக்கிழங்கு. இது கண்டுபிடிக்கப்பட்டபோது அவ்வளவாக வரவேற்கப்படவில்லை.

அமெரிக்காவில் 1930-களில் இந்த வகையை வெறும் 4% மக்கள் தான் விரும்பினார்கள். ஆனால், பதப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்குகளுக்கான தேவை உருவான 1940 மற்றும் 50களில் இதன் விற்பனை அதிகரித்து, 2010-ல் இதன் பயன்பாடு சுமார் 70% ஆனது.

நீளமான, பெரிய, உருளை வடிவ, தட்டையான மேற்புறம் கொண்ட, மாவுச்சத்து அதிகமாகவும் நீர்ச்சத்து குறைவாகவும் இருக்கும் இந்த உருளைக்கிழங்கு, மொறுமொறுவென்ற மேற்புறமும் மிருதுவான உட்பகுதியையும் கொண்டிருக்கும் ஃப்ரென்ச் ஃப்ரைஸ் உருவாக்கத்துக்கு மிக பொருத்தமானது.

உருளைக்கிழங்குகளுக்குப் பொதுவாக ஏற்படும் நோய்களுக்கு இந்த ரஸ்ஸட்  வகை எதிர்ப்புத்திறன் கொண்டது.  தடித்த தோல் கொண்டிருப்பதால் 7°C -ல் இவற்றை சுமார் 5 மாதங்களுக்கு முளைக்காமல் சேமிக்கமுடியும். 

எனினும், அறுவடைக்குப் பின்னர் இவை முளைக்காமல் இருக்க * பல ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பிரென்ச் ஃப்ரை உருவாக்கம்

தோல் சீவப்பட்ட உருளைக்கிழங்குகளை நீளவாக்கில் மெலிதாக வெட்டி, குளிர்நீரில் கழுவி, துண்டுகளின் மேற்பரப்பில் இருக்கும் மாவுச்சத்து நீக்கப்படுகிறது.

உலர்த்திய பின்னர், மிதமான வெப்பத்தில் இருக்கும் எண்ணெயில் முதல் முறையும், பின்னர் மிக அதிக வெப்பத்தில் இருக்கும் எண்ணெயில் இரண்டாவது முறையும் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கப்படுகிறது. பெரும்பாலும், இரண்டாவது முறை பொரித்தெடுக்கும்போதுதான் ஃப்ரென்ச் ஃப்ரைஸுக்கான மொறுமொறுப்பும் சுவையும் கிடைக்கிறது. பின்னர் உப்புத் தூவப்பட்டு, பலவிதமான சாஸ்களுடன் இது உண்ணப்படுகிறது.

பொரித்தெடுக்க பெரும்பாலும் தாவர எண்ணெய்களும் ஒரு சில நிறுவனங்களில் விலங்குக் கொழுப்பும் தாவர எண்ணெய் கலவையும் பயன்படுத்தப்படுகிறது.

விளைவுகள்

மாவுச்சத்து மிகுந்த உருளைக்கிழங்கைத் தொடர்ந்து பயன்படுத்துவது நீரிழிவு  நோயை உருவாக்கக்கூடும். எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும்போது அதிக எண்ணெயை உருளைக்கிழங்கு உறிஞ்சிக் கொள்வதால், அதிகக் கொழுப்புச் சத்தும் கலோரியும் கொண்டிருப்பதால், உடல் எடை கூடுவதும், அதீத பருமன் (Obesity) உள்ளிட்ட பிரச்சினைகளும் உண்டாகும் சாத்தியம் மிக அதிகமாக இருக்கிறது. அதிக உப்பு சேர்க்கப்படுவதால், சோடியத்தின் அளவு அதிகமாகி இரத்த அழுத்த நோய் உண்டாகலாம்.

உருளைக்கிழங்கின் சத்துக்கள் நிறைந்த தோல் நீக்கப்பட்ட பின்னரே ஃப்ரென்ச் ஃப்ரைஸ் செய்யப்படுவதாலும், அது ஆரோக்கியமானதல்ல என்கிறார்கள் வல்லுநர்கள்.

மீண்டும் மீண்டும் பொரித்தெடுத்த எண்ணெயை உபயோகிப்பதால் இருதய நோய்களும் வரக்கூடும். மேலும், மிக உயர்ந்த வெப்பத்தில் மாவுச்சத்து உள்ள உணவுகள் சமைக்கப்படுகையில் உருவாகும் அக்ரிலாமைடு (Acrylamide), புற்றுநோய் உருவாக்குவதில் முக்கியமான காரணியாக இருக்கிறது.

(இந்த ஆபத்துக்கள் அனைத்துமே அடிக்கடி ஃப்ரென்ச் ஃப்ரைஸ் சாப்பிடுவதால் உண்டாகலாம். எப்போதாவது சாப்பிடுவதால் இப்படியான ஆபத்துகள் உண்டாவதில்லை.)

எனினும், உலகின் பிரபலமான உணவு வல்லுநர்கள், பிரென்ச் ஃப்ரைஸ் ஆரோக்கியமான உணவு அல்ல என்றுதான் சொல்கிறார்கள்.

உருளைக்கிழங்கு மற்றும் இந்த உருளைக்கிழங்குச் சீவல்களின் சமையல் வரலாறு, விவசாயம் பாரமப்ரியம் ஆகியவற்றைச் சொல்வதற்கென்றே பெல்ஜியத்தின் ப்ரூஜஸ் நகரில் ‘ஃப்ரீட்மியூசியம்’ (Frietmuseum) என்னும் பெயரில் ஒரு அருங்காட்சியகம் இருக்கிறது.  

பிரென்ச் ஃப்ரைஸின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது. இதற்கு, உறைந்த உணவுச் சந்தையின் தொடர்ச்சியான வளர்ச்சி, வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் அதிகரித்து வரும் தேவை, ஆன்லைன் உணவு விநியோகம் மற்றும் ‘உடனடி உணவுப் பொருட்களுக்கான அதிகரிதுவரும் தேவை போன்றவை காரணமாக இருக்கின்றன.

சர்வதேச ஃப்ரென்ச் ஃப்ரைஸ் சந்தையானது, 2024-ல் $17.45 பில்லியனாக இருந்து, 2029-க்குள் $23.17 பில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வளர்ந்து வரும் சந்தைகளில் உள்ள வலுவான பொருளாதார வளர்ச்சியும், துரித உணவு விடுதிகளின்  நிலையான வளர்ச்சியுமே இதற்கு முக்கியக் காரணிகளாகும்.

அக்ரிலாமைடு உருவாவதைக் கட்டுப்படுத்துவது மற்றும் ரஸ்ஸட் உருளைக்கிழங்கு விவசாயத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்வது போன்ற சவால்கள்  ஃப்ரென்ச் ஃப்ரையின் எதிர்காலத்துக்கான முக்கியச்சவால்களாக உள்ளன. ஆரோக்கியமான எண்ணெய்  வகைகள், புதிய குறைந்த சர்க்கரைச்சத்து கொண்ட  உருளைக்கிழங்கு வகைகள் சமையலறை தொழில்நுட்ப மேம்ம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டால் இந்தப் பொன்னிற உணவு அதன் சுவையான பயணத்தை ஆரோக்கியமாகத் தொடரும்.  

*முளைப்புத் தடுப்பான்: நீண்ட காலச் சேமிப்பிற்காக, ரஸ்ஸட் உருளைக்கிழங்குகளில் முளைப்பதைத் தடுக்கும்  CIPC (Chlorpropham)n போன்ற ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மேப்பிள் ஸிரப்!

அந்த மாபெரும் திருட்டு மிக நூதனமாகத் திட்டமிடப்பட்டது. கனடாவின்  க்யூபெக் நகரின் முக்கிய சேமிப்புக்கிடங்கில் இருந்த மிக விலை மதிப்புள்ள ஒன்றைக் கொள்ளையடிக்க வருடங்களாக ஒரு குழு திட்டமிட்டது.    அந்தக்கிடங்கில் பணியாற்றிய பெண்மணி ஒருவரின் கணவரான அவிக் கரோன் (Avik Caron) அந்த சேமிப்புக்கிடங்கு இருந்த நிலத்தின் உரிமையாளர்களில் ஒருவரும் கூட என்பதால் அவரும் அந்தக்கொள்ளையில் இணைந்திருந்தார்.

அவிக்கின் மனைவியிடமிருந்து  கிடங்கின் அமைப்பு, பீப்பாய்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் விதம் மற்றும் சேமிப்பின் அளவு ஆகியவற்றை கொள்ளையர்கள் தெரிந்துகொண்டார்கள்.

 
கள்ளச்சந்தை வணிகத்தில் மிகவும் பிரபலமாயிருந்த   ரிச்சர்ட் வாலியர் தான் அந்தக் கொள்ளையை தலைமையேற்று நடத்தினான். 

தொடர்ந்து மாதக்கணக்கில் யாருக்கும் தெரியாமல் யாராலும் கண்டுபிடிக்கப்படாமல் பல கோடி ரூபாய்கள் மதிப்புள்ள, சேமிப்பில் இருந்த ’’அந்த’’ மதிப்பு வாய்ந்த பொருள்,   ஆகஸ்ட் 2011-லிருந்து ஜூலை 2012 வரை சுமார் பத்துமாதங்களில் மெல்ல மெல்லக் கொள்ளையடிக்கபட்டது. 

கனடாவின் மிகப்பெரும் விவசாயக் கொள்ளை  என்று வரலாற்றில் குறிப்பிடப்படும், மிகப்பெரிய கொள்ளைச்சம்பவமான இது, வங்கியிலோ, வைரங்கள் காட்சிப்படுத்தப்பட்ட அருங்காட்சியகத்திலோ நகைக்கடையிலோ நடக்கவில்லை. 

க்யூபெக் நகரின் பரந்து விரிந்த மேப்பிள் சிரப் சேமிப்புக்கிடங்கில்  9571 பீப்பாய்களில் இருந்த  30 மில்லியன் டாலர் மதிப்புக்கொண்ட 3000 டன் நீர்மத்தங்கம் எனப்படும் மேப்பிள் சிரப்தான் கொள்ளை போனது.  சுவற்றுக்கு வெளியே லாரிகளை நிறுத்தி, துளையிட்டு ஃபோர்க் லிஃப்ட்கொண்டு பீப்பாய்களைத் தூக்கி, பீப்பாய்களிலிருந்து பம்ப் செய்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே இருந்த பீப்பாய்களில்  மேப்பிள் சிரப் சேகரிக்கப்பட்டு, பதிலுக்கு காலிப்பீப்பாய்களில் வெறும் தண்ணீர் நிரப்பப்பட்டது.

கொள்ளையிடப்பட்ட சிரப் யாருக்கும் எந்தச்சந்தேகமும் வராதபடி வெளிப்படையான சந்தையில் விற்கப்பட்டது.

கனடாவின் வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் கொள்ளையான இது 2012-ன் இறுதியில், வழக்கமான தரக்கட்டுப்பாட்டு சோதனையின் போது,  பொதுவாக 270 கிலோ அளவில் இருக்கும் மேப்பிள் சிரப் பீப்பாய்கள் மீது ஏறிப்பார்த்த அதிகாரிகள் பீப்பாய்கள் எடையில்லாமல் உருண்டபோது சந்தேகப்பட்டு திறந்து பார்க்கையில்தான் கண்டறியப்பட்டது.  க்யூபெக் சேமிப்புக்கிடங்கில் பல வருடங்களாக சேமிக்கபட்டிருந்த விலைமதிப்புள்ள மேப்பிள் சிரப் கொள்ளைபோனது உலகளவில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது.

 மிகப்பெரிய அளவிலான குற்றப்புலனாய்வு நடந்துதான் இந்தக்கொள்ளையில் ஈடுபட்ட சுமார் 25 பேர் கைதுசெய்யப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டது. 

விசாரணை நீண்டு கொண்டே சென்று 2016-ல் தான் ஒருவழியாக கொள்ளையர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டார்கள். ரிச்சர்டுக்கு 10 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டு 8 வருட சிறைத்தண்டனையும்,  உள்ளேயே இருந்து உதவியதற்காக அவிக்கின் மனைவிக்கு 5 வருட தண்டனையும் 1.2 மில்லியன் டாலர் அபராதமும், கொள்ளையடிக்கப்பட்ட மேப்பிள் சாற்றை ஏரளமாகப் பதுக்கி வைத்திருந்த  ரிச்சர்டின் அப்பாவுக்கு 2 வருட தண்டனையும் 10000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. * 

இந்த மேப்பிள் சிரப் என்னும் மேப்பிள் மரத்திலிருந்து கிடைக்கும் இயற்கையான இனிப்புச்சாறு எப்போதிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டு உபயோகத்தில் இருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைத்ததில்லை எனினும் உலகெங்கிலும் பிரபலமான ஒரு  கதை இப்படிச்சொல்கிறது:

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வடஅமெரிக்காவின் கடும்பனிக்காலமொன்றில்,  இராகுயிஸ் பூர்வீக குடிகளின் தலைவரான  வொக்ஸிஸ் (Woksis)  வேட்டையிலிருந்து சோர்வுடன் திரும்பி வந்தார். கடும்பனிப்பொழிவினால்  மரம் செடிகொடிகள் உறைந்துபோனதோடு விலங்கினங்களும் மறைவிடங்களில் உறக்கநிலையில் இருந்ததால் பலநாட்களாகவே வேட்டையில்  விலங்குகள் கிடைக்காமல் பனிக்காலம் அவர்களுக்கு கடும் பசிக்காலமுமாகவே  இருந்தது. அன்றும் வெறும் கையுடன் குடிசைக்கு திரும்பிய அவர் சுற்றிலும் உயர்ந்து வளர்ந்திருந்த மேப்பிள் மரங்களில் ஒன்றில் தனது கோடாரியை ஓங்கிக் குத்திச்செருகி விட்டு அருகிலிருந்த ஆற்றுக்கு இறங்கிச் சென்றார்.

அவரது மனைவி மொஹுவாவுக்கு ஒரு சிறு உறைந்த மான் இறைச்சித்துண்டு அன்றைய உணவுக்கு இரவலாகக் கிடைத்திருந்தது. இறைச்சியுடன் வீடு திரும்பிய அவர், கணவர்  மேப்பிள் மரத்தில் குத்திச்சென்ற கோடாரி உண்டாக்கிய காயத்திலிருந்து சாறு வடிந்து மரத்துக்கு கீழே வைக்கப்பட்டிருந்த கூடையில் சொட்டிக்கொண்டிருந்ததைப் பார்த்தார்.  மெல்லிய நறுமணத்துடன் அந்த கூடையில் சேகரமாயிருந்த அந்தத் திரவத்தை சுவைத்துப்பார்த்த அவர் அதன் இனிப்பில் மகிழ்ந்து, சமைக்க  உறைந்துபோகாத நீர் இல்லாததால் அந்த மரச்சாற்றிலேயே இறைச்சியை சமைத்தார்.  

அன்றைய உணவின் சுவை அபாரமாக இருந்ததோடு மேப்பிள் மரங்களை காயப்படுத்தினால் அதிலிருந்து மிகச்சுவையான இனிப்பான சாறு கிடைக்கும் என்பதும் அந்தப் பூர்வீகக்குடிகளுக்கு அப்போதிலிருந்து தெரியவந்தது.

இந்தக்கதை மட்டுமல்லாது பல கதைகளும் மேப்பிள் சாறு கண்டுபிடிக்கப்பட்டதைக் குறித்து உலவுகிறது என்றாலும் இதுவே மிக அதிகம் புழக்கத்திலிருக்கிறது.

வட அமெரிக்காவின், வடகிழக்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மேப்பிள் சாறு அங்கே ஐரோப்பியர்கள் வருவதற்கு வெகுகாலத்துக்கு முன்னரே  மரத்திலிருந்து சேகரிக்கப்பட்டு காய்ச்சிப் பயன்படுத்தப் பட்டுக்கொண்டிருந்தது.  அமெரிக்கப் பூர்வீகக் குடிகளின் சடங்குகளில் மேப்பிள் சாறு காய்ச்சி பதப்படுத்தப்பட்டு பயன்படுத்தபட்டது. வசந்தகாலத்தின் முதல் முழுநிலவில் மேப்பிள் சாற்றை அருந்தி மேப்பிள் நடனமிடுவதும் அவர்களின் கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாக இருந்தது.  அமெரிக்க பூர்வீகக்குடிகள் அனைத்துமே மேப்பிள் சாறு சத்துகளையும்  ஆற்றலையும் அளிப்பதையும் கண்டுகொண்டனர்.

பனிக்காலம் முடிந்து வசந்தம் துவங்குகையில் மேப்பிள் மரங்களில் சாறு நிரம்பி இருப்பதை அறிந்து கொண்டிருந்த அவர்கள் மரத்தில் V  வடிவ காயமுண்டாக்கி அதில் நாணல் தண்டுகளையும் , குழாய்களாக சுருட்டப்பட்ட மரபட்டைகளையும் செருகி சாற்றை சேகரிக்க கற்றுக்கொண்டனர்,

ஒழுகும் சாற்றை இறுக்கமாக பின்னப்பட்ட பிர்ச் மரபட்டைக்கூடைகளிலும் களிமண் பாத்திரங்களிலும்தான் சேமிக்க வேண்டும் என்பதையும் அவர்கள் அறிந்துகொண்டனர்.

துவக்கத்தில் வடிந்த சாற்றை அப்படியே சுவைத்தவர்கள் காலப்போக்கில் அதை காய்ச்சி நீரைச் சுருக்கி கெட்டியாக்கினால் சுவை கூடுவதோடு நெடுங்காலத்துக்கு சேமிக்கமுடியும் என்பதையும் அறிந்தார்கள். அப்படி உருவானதுதான் மேப்பிள் சிரப்.

குறைந்த வெப்பத்தில் இரவெல்லாம் சூடாக்கப்பட்ட மேப்பிள் சாறு அடுத்த நாள் கலையில் சாற்றின் மேற்பரப்பில் படிந்திருக்கும் பனிப்படலம் நீக்கப்பட்டு பெரிய கலன்களில் வேகமாக எரியும் நெருப்பில் காய்ச்சி சிரப் ஆக தயாரிக்கப்பட்டு  சேமிக்கப்பட்டது. களிமண் பாத்திரங்களைப் போலவே கருங்கற்களில் குழி உருவாக்கி அதிலும் மேப்பிள்சாற்றை சேமித்தார்கள்.

துவக்க கால ஐரோப்பிய குடியேற்றத்தின்போது அமெரிக்கப் பூர்வீகக்குடியினர் ஐரோப்பியர்களுஜ்கு மேப்பிள் சாற்றைச் சேகரிப்பதைக் கற்றுக்கொடுத்தார்கள். ஃப்ரான்ஸ் அரசின் பிரபஞ்சவியலாளரான  ஆன்றி திவெட் (André Thevet) பிரஞ்ச் கடற்பயணிகள் மேப்பிள் சிரப்பை அருந்தியதை அவரது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். 

1680-களில் ஐரோப்பிய  தோல் வணிகர்கள் மேப்பிள் சிரப் வணிகத்தையும் செய்தார்கள். ஆனால் ஐரோப்பியர்கள் மரத்தில் காயமுண்டாகி சாற்றை வடியச்செய்யாமல், மரத்தில்  துளையிட்டு  மேப்பிள் சாற்றை சேகரித்தார்கள். ஒரே மரத்தில் பல துளைகளிட்டும் சாறு சேகரிக்கப்பட்டது. ஏராளமாக சாறு சேகரிக்கப்பட்டு மாபெரும் மரக்கொள்கலன்களில் நிறைத்து,சுமை தூக்கும் விலங்குகளைக் கொண்டு  இழுத்துச்செல்லப்பட்டு பிரத்யேக சேமிப்புக்கிடங்குகளில் வருடக்கணக்காக மேப்பிள் சாறு சேமித்துவைக்கப்பட்டது.

நீர்மத்தங்கமென்று (Liquid gold) அழைக்கப்படும் இந்த மேப்பிள் சாறு 1970-களிலிருந்து பிளாஸ்டிக் குழாய்களைச்செருகி சேமிக்கப்படுகிறது. தொழில்நுட்ப உதவியும் இப்போது சாற்றை வடிகட்டப் பயனாகிறது. இப்போது எல்லாவித கலன்களிலும் சாறுசேகரிக்கப்படுகிறது.

மேப்பிள் மரங்களின் நூற்றுக்கணக்கான சிற்றினங்களில் மேப்பிள் சாறு மூன்று வகை மரங்களிலிருந்து கிடைக்கிறது.

சர்க்கரை மேப்பிள் எனப்படும் Acer saccharum, கருப்பு மேப்பிளான  Acer nigrum, சிவப்பு மேப்பிளான Acer rubrum ஆகிய மூன்றிலிருந்துதான் மேப்பிள் சிரப் பிரதானமாக தயாரிக்கப்படுகிறது.

இந்த மரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் சேமிக்கும் மாவுச்சத்தை  இலையுதிர்காலத்தில் இலைகள் முழுவதும் உதிர்ந்துவிடுவதால் வேர்களில் சேமித்துவைக்கிறது. குளிர்காலம் முடிந்து வசந்தம் துவங்குகையில், வெப்பம் உயர்ந்து பனி உருகும்போது, நீர் உறிஞ்சும் வேர்களால், இந்த சேர்த்துவைக்கப்பட்ட மாவுச்சத்தான ஸ்டார்ச் சர்க்கரையாக மாற்றப்படுகிறது. தண்டின் மேலே சாற்றேற்றத்தினால்,  மரத்தின் ஸைலம் எனப்படும் நீர்கடத்தும் குழாய்கள் வழியே கடத்தப்படும் இந்தச்சாறுதான் மேப்பிள் சாறு.

தொல்காலத்திலிருந்தே சாறு சேகரிக்கப்படுகையில் மரத்துக்கு சேதமாகாமல் கவனம் கொள்ளப்படுகிறது.

 30 லிருந்து 40 வயதான, 12 அங்குலச் சுற்றளவு கொண்ட மேப்பிள் மரங்களிலிருந்து தான் சாறு கிடைக்கும்.  ஒரு மேப்பிள் மரம் சுமார் நூறு வருடங்களுக்கு தொடர்ந்து சாறு அளிக்கும். ஒரு பருவத்தில் ஒரு மரம் சுமார் 150 லிட்டர் சாற்றைக் கொடுக்கிறது. இந்த அளவானது, மரத்தின் ஆரோக்கியம், மண் வளம் மற்றும் காலநிலையைக் குறித்து மாறுபடும். சுமார் 150 லிட்டர் சாற்றை கொதிக்க வைத்தால்தான் 1 லிட்டர் சிரப் கிடைக்கும். 

மெல்லிய இனிப்புடன் 3% சர்க்கரையும் பெரும்பாலும் நீர் மட்டும் இருக்கும் சாறு காய்ச்சப்பட்டு அதிலிருக்கும் நீர் ஆவியான பின்பு  70-75% சர்க்கரை கொண்டிருக்கும் மிக இனிப்பான மேப்பிள் சிரப் தயாரிக்கப்படுகிறது.  

மரங்களிலிருந்து வடியும் முதல் சாறு தங்கசாறு-Gold maple syrup. , அடுத்து வருவது ஆம்பர்- Amber, அடுத்து அடர் சாறு-dark ,அடுத்ததும் கடைசியில் வடிவதும் மிக அடர்சாறு- very dark என்று நான்கு வகை சிரப்கள் ஒரே மரத்திலிருந்து கிடைக்கிறது.

ஜனவரி மாதத்தின் கடைசியிலிருந்து ஏப்ரல் கடைசிவரை இந்த சாறு சேகரிக்கப்படுகிறது. 

முதல் சாற்றில் நிறமும் நறுமணச்சுவையும் மிதமாகவும் பின்னர் வரும் சாற்றில் நிறம் அடர்த்தியாகவும் நறுமணச்சுவை (flavour ) அதிகமாகவும் இருக்கும்.

முதல்தர மேப்பிள் சாறு காக்டெயில்களிலும்,  யோகர்ட்டின் மீதும் பரிமாறப்படுகிறது. அம்பர் வகை பேன்கேக் மற்றும் வேஃப்ஃபில்களுடன் சேர்த்துச் சுவைக்கப்படுகிறது.

அடர் மேப்பிள் சாறு பார்பெக்யூ முறையில் சமைக்கப்படும் இறைச்சிகளின் மீது தடவவும், அவற்றிற்கான ஆணங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

மிக அடர்ந்த மேப்பிள் சாறு இறைச்சியை பதப்படுத்தவும், பேக்கரிப்பொருட்கள் தயாரிப்பிலும் உபயோகப்படுத்தப்படுகிறது.

 மேப்பிள் மரங்களின் ஏசர் பேரினத்தின் மூன்று வகைகள் அல்லாது மற்ற வகை மேப்பிள் மரங்களிலிருந்தும் சிரப் குறைந்த அளவில் தயாரிக்கப்படுகின்றது.

உதாரணமாக பாக்ஸ் எல்டர் எனப்படும் Acer negundo, சில்வர் மேப்பிள் மரமான A. saccharinum, பேரிலை மேப்பிளான A. macrophyllum மற்றும் ஃப்ளோரிடா மேப்பிளான  A.floridanum ஆகியவற்றிலிருந்தும் மிகக்குறைந்த அளவில் சாறு எடுக்கப்படுகிறது.

மேப்பிள் அல்லாத பிர்ச், வால்நட் மற்றும் பனை மர வகைகளிலிருந்தும் கூட சிரப் கிடைக்கிறது. 

மேப்பிள் சிரப் மிட்டாய்களாகவும், மேப்பிள் வெண்ணெய் மற்றும் மேப்பிள் சர்க்கரையாகவும் சந்தையில் கிடைக்கிறது. சிரப் காய்ச்சப்படுகையில் நுண்ணுயிரிகளைக் கொண்டு நொதிக்கச்செய்து மாறுபட்ட சுவையும், வாசனையுமாக பல வகை சிரப்களும் கிடைக்கின்றன.

மேப்பிள் சிரப் தயாரிப்பு பொதுவாக வடஅமெரிக்காவின் வடகிழக்குப்பகுதியில் தான் மையம் கொண்டிருக்கிறது. மேப்பிள் மரங்களை பெருமளவில் வளர்த்தி மேப்பிள் சிரப் தயாரிக்கும் பண்ணைகள் சுகர் புஷ் (sugar bush) என அழைக்கப்படுகின்றன.

1930 வரைக்கும் அமெரிக்காவே மேப்பிள் சிரப் உற்பத்தியில் முதலிடத்தில் இருந்தது. அதன்பின்னர் கனடாதான் இன்றைய தேதி வரை மேப்பிள் சிரப் உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறது.

குறிப்பாக க்யூபெக் மாகாணத்தில்தான் மிக அதிக மேப்பிள் சாறு தயாராகிறது. அங்குதான் முன்பு குறிப்பிட மாபெரும் மேப்பிள் சாறு கொள்ளை நடந்தது. க்யூபெக்கில் நட்டுமே சுமார் 14 ஆயிரம் பண்ணையாளர்கள் மேப்பிள் மரங்களை வளர்க்கிறார்கள்.

மேப்பிள் சிரப் ஜப்பான் மற்றும் தென்கொரியாவிலும் தயாரிக்கப்படுகிறது.  தென்கொரியாவில் வடியும் சாறு சிரப்பாக காய்ச்சி எடுக்கப்படாமல் அப்படியே  gorosoe என்னும் பெயரில் சுவைக்கப் படுகிறது.

கனடாவிலிருந்து தயரிக்கப்படும் மேப்பிள் சிரப் சூடாகவே உலோக அல்லது கண்ணாடி டின்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. மேப்பிள் சிரப் என்னும் பெயர்  பாட்டில்களின் மேலே இருக்கும் லேபிளில் ஃப்ரென்ச் மற்றும் ஆங்கிலத்தில் 1.6  மிமீ என்னும் ஃபான்ட் அளவில் தான் இருக்கவேண்டும் எனும் விதியும் இருக்கிறது. 

சர்வதேச மேப்பிள் சிறப்பு நிறுவனமும்,(International Maple Syrup Institute-IMSI) பல மேப்பிள் தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து, சிரப்பின் உற்பத்தி தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பாக, அமெரிக்கா மற்றும் கனடாவின் மேப்பிள் சிரப் தயாரிப்பு விதிகளைத் திருத்தி இருநாடுகளுக்கும் பொதுவாக ஒரே மாதிரியான விதிகளையும்  உருவாக்கி இருக்கின்றன. 

மேப்பிள் சிரப்பில் ஏராளமான ஆற்றலும், மாவுச்சத்து, சர்க்கரைச்சத்து,  புரதம், கொழுப்பு மற்றும் வைட்டமின்கள் கனிமங்கள் நிறைந்திருக்கிறது. 

உலகெங்கிலும் பல பிரதான உணவுகளுக்கு தொடு உணவாகவும், டாப்பிங்ஸ் எனப்படும் மேலே தடவி உண்ணப்படும் உணவாகவும் மேப்பிள் சிரப்  பயன்பாட்டில் இருக்கிறது. 

மேப்பிள் சிரப்பைவிட தரம் குறைவான மக்காச்சோள சிரப்புடன் சர்க்கரை கலந்த டேபிள் சிரப் – Table syrup வளரும் நாடுகளில் மேப்பிள் சிரப்புக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் நாம் உயர் விடுதிகளில் மேப்பிள் சிரப் என்று சுவைத்துப்பார்ப்பது  அநேகமாக டேபிள் சிரப்தான்

கனடாவின் கலாச்சாரத்தில் மிக முக்கியமான இடம் பெற்றிருக்கிறது மேப்பிள் மரமும் மேப்பிள் சிரப்பும். கனடவின் தேசியக்கொடியுலேயே மேப்பிள் இலை பொறிக்கப்பட்டிருக்கிறது. மேப்பிள் இலையே கனடாவுக்கான குறியீடாகத்தான் கருதப்படுகிறது.

கடந்த சில வருடங்களாகவே இயற்கை உணவுகளுக்கான தேடலும் தேவையும் அதிகரித்திருப்பதால் மேப்பிள் சிரப்பின் விற்பனையும் உலகளவில் மிக அதிகமாயிருக்கிறது. 

மாபெரும் மால்களிலும், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஏரளமான இனிப்பு பானங்களின் வரிசையில் நமக்கு இயற்கை அளித்திருக்கும் மாபெரும் கொடையான, தீங்கற்ற, ரசாயனங்களற்ற இந்த இனிப்புச்சாற்றையும் தேர்வு செய்து சுவைத்துப்பார்க்கலாம்.

*கனடாவின் மேப்பிள் சிரப் கொள்ளை குறித்த  the sticky என்னும் நகைச்சுவை தொடர் அமேஸான் பிரைமிலும் dirty money என்னும் ஆவணப்படம் நெட்ஃபிளிக்ஸில் இருக்கிறது. மேலும் ஏராளமான crime podcast நிகழ்வுகளும் இந்த மேப்பிள் சிரப் கொள்ளை குறித்து வந்திருக்கிறது

கரையோர நாணல்கள்!

நாணல்கள்

 நீர்நிலைகளின் கரைகளிலும் சதுப்பு நிலங்களிலும் வளரும் உயரமான புல் வகைத் தாவரங்கள் நாணல் எனப்படுகின்றன. நாணல் பூங்கொத்துக்கள்   பெரிய அளவில் தூய வெள்ளையிலும் இளஞ்சிவப்பிலும் ஊதாநிறத்திலும் பறவையின் இறகுபோல இருக்கும்.

புல் குடும்பமான போயேசியை சேர்ந்த இவற்றின் அறிவியல் பெயர் Phragmites australis. பேரினப்பெயரான Phragmites  வரப்புகளில் புதராக வளர்பவை என்றும் சிற்றினப்பெயர்  ஆஸ்திரேலியாவை தாயகமாகக் கொண்டவை என்றும் பொருள் கொண்டிருக்கிறது.

60 செ மீ நீளமுள்ள இலைகளுடன் இவை சுமார் 2 லிருந்து 4 மீ உயரம் வரை வளரும்.  கோடைக்காலத்தின் இறுதியில் இளம் ஊதா நிற மலர்மஞ்சரிகள் 40 செமீ அளவில் உருவாகும். கூர்மையான சிறு மலர்களின் நுனியில் சாம்பல் நிறத்தில் பட்டுப்போன்ற நீளமான இழைகள் இருக்கும். இவ்விழைகள் நாணலின் நுண் விதைகளைக் காற்றில் பல இடங்களுக்கும் கொண்டு செல்ல உதவும்.

இவை  உலகெங்கிலும் உள்ள ஈரநிலங்களில் (அண்டார்டிகாவைத் தவிர) காணப்படுகிறது.  உயரமான, மெல்லிய, அதிக உற்பத்தித் திறன் கொண்ட புல் வகையான  நாணல் பல்லாயிரமாண்டுகளாக மனிதர்களுக்குப் பல விதங்களில் பயன்படுகிறது. 

நாணல்கள் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்களால்  விவசாயம் , தீவனம் கூரை, சுவர்கள், மீன் பொறிகள் முதலிய கட்டுமான நோக்கங்களுக்காகவும் ,காற்று , உறைபனிக்கு எதிராகப் பாதுகாக்கும் பாய்கள், வேலிகள் ஆகியவற்றை தயாரிக்கவும், கூழ் மற்றும் காகிதம் உருவாக்கும் தொழில்துறையை உள்ளடக்கிய பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கும்,  எரிபொருளாக  ஆற்றல் உருவாக்கத்திலும் பயன்படுகிறது.

ஏராளமான இதன் இலைகள் மலிவான, எளிதில் கிடைக்கும் ஓலைப் பொருளாகக் கூரைவேய்வதில் உலகெங்கும் மிக அதிகம் பயன்படுகிறது. இவற்றிற்கு நீர் நாணல் என்றும் பெயருண்டு.

இந்த நாணல் மட்டுமல்லாது நாணலில் பல வகைகள் உண்டு

  • பெருநாணல்

பெருநாணலான  Arundo donax என்பது 6 லிருந்து 10 மீ உயரம் வளரக்கூடியது. இதற்கு யானைப்புல் என்றும் பெயருண்டு.இதன் தண்டுகளிலிருந்து இசைக்கருவிகள் செய்யப்படும். இதன் நாரிழைகளிலிருந்து துணிகளும் நெய்யப்படுகின்றன. வெட்ட வெட்டth தொடர்ந்து 25 வருடங்களுக்கு வளர்ந்துகொண்டே இருக்கும் இவற்றிலிருந்து உயிரி எரிபொருளும் உருவாக்கப்படுகின்றது.

பல பழங்குடியினர் இதன்  மாவுச்சத்து நிறைந்த வேர்க்கிழங்குகளிலிருந்து மதுபானமும் உருவாக்குகிறார்கள். புல்லாங்குழல் உள்ளிட்ட பல காற்றிசைக் கருவிகள் இதிலிருந்து செய்யப்படுகின்றது. தெற்கு பிரான்ஸ் பகுதியில்  இசைக்கருவிகளுக்கென  இப்பெருநாணல் சாகுபடி செய்யப்படுகின்றது.

  • பர்மா நாணல் 

Neyraudia reynaudiana என்னும் அறிவியல் பெயர் கொண்ட இந்த நாணல் பட்டு நாணல், போலிநாணல் என்றும் அழைக்கப்படுகிறது.  இதன் அறிவியல் பெயர் Reynaudia என்னும் க்யூபாவின் நீலப்பச்சை புல்லின் பெயரை மாற்றியமைத்து வைக்கப்பட்டது. 3 அடி நீளம் கொண்ட ஆயிரக்கணக்கான நுண்மலர்களை கொண்ட பட்டுப்போன்ற மலர் மஞ்சரியினால் இந்த நாணலுக்கு பட்டுநாணல் என்னும் பொயர் வந்தது

  • ரிப்பன் நாணல்

Phalaris arundinacea என்னும் அறிவியல் பெயர் கொண்ட ரிப்பன் நாணல் இளஞ்சிவப்பு இலைகளுடன் மிக அழகிய தோற்றம் கொண்டிருக்கும். இவை நீரிலிருக்கும் மாசை உறிஞ்சி எடுத்துக்கொள்ளும் என்பதால் கழிவுநீர் சுத்திகரிப்பில் பெரிதும் பயன்படுகிறது. சத்து நிறைந்த இலைகள் கால்நடைதீவனமாகவும் உலர் இலைகள்   கட்டிகளாக்கப்பட்டு எரிபொருளாகவும் பயனாகின்றன.

  • இனிப்பு நாணல்

Glyceria maxima என்னும் இனிப்பு நாணல் சீனாவை சேர்ந்தது.  இந்த நாணல் கால்நடை தீவனமாகப் பயனாகிறது. இதன் நாரிலிருந்து கூடைகள் பின்னப்படுகிறது

  • சிறு நாணல்

Calamagrostis பேரினத்தின் 200-க்கும் அதிகமான  சிற்றினங்கள் அனைத்தும் சிறு நாணல் எனப்படுகின்றன. மிக அழகிய தோற்றம் கொண்ட குட்டையான நாணல் வகையான  இவை அலங்கார புல்வகைகளாகப் பெரிதும் பயன்பாட்டில் இருக்கின்றன

சூழலுக்கு இணக்கமான இந்த நாணல்களின் பல்வேறு வகைகளும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக உலகின் பல பாகங்களிலும் மீண்டும் பெருமளவு பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது.

லைக்கன்கள்-Lichens!

இன்று காலைதான் புன்னை மரத்தில் crustose லைக்கன்கள் வளர்ந்திருப்பதைப்பார்த்தேன். ஏகத்துக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. பாசிகளும் பூஞ்சைகளும் இணைந்து வாழும் கூட்டுயிரிகளான லைக்கன்கள் எனப்படும் கீழ்நிலைத்தாவரங்கள் தூய சூழல்களில் மட்டுமே வளர்பவை. வேர்களற்ற இவை நேரடியாகக்காற்றிலிருந்து உணவையும் நீரையும் உறிஞ்சிக்கொள்பவை எனவே மாசுபட்ட்ட சூழலில் இவை வளரவே வளராது. இந்தத் துண்டு நிலத்தில் 17 வருடங்களாக உரங்களோ பூச்சிக்கொல்லிகளோ ரசாயன மருந்துகளோ எதுவுமே பயன்படுத்தாமல் இருந்ததில் இப்போது லைக்கன்கள் வளர்ந்திருக்கின்றன. தூய சூழல் இருக்கும் இடம் இந்த வீடுஎன்பதை இந்த லைக்கன்கள் காட்டுகின்றன.

இயற்கையான இடங்களில் வளர்ந்திருக்கும் லைக்கன்கள் அந்தசூழல் மாசுபடும் போது,மெல்ல மெல்ல அங்கிருந்து மறைந்துவிடுவதால் அவற்றிற்கு pollution indicatorஎன்றே பெயருண்டு. crustose, foliose fruticose எனப்பலவகை லைக்கன்கள் உண்டு வீட்டில் இருப்பது crustose.

தேவி ஹேப்பி!

ஆடலுடன் பாடலும் அய்யாரெட்டும்!

70-களில்  தமிழ் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிகளில் நடித்த எல். விஜயலக்ஷ்மியை நினைவிருக்கிறதா? இந்தப் பாடலைச் சொன்னால் உடனே நினைவுக்கு வருவார். மாறுவேடத்தில் முறுக்கு மீசை வைத்துக்கொண்டு பஞ்சாபி உடையில் இருக்கும் எம். ஜி. ஆருடன் ’’ஆடலுடன் பாடலைக்கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம்’’ என்று பாங்கரா நடனமாடுவாரே அதே விஜயலக்ஷ்மிதான்.

பூனாவில் வசித்த தமிழ்பிராமணக் குடும்பத்துப் பெண்ணான விஜயலக்ஷ்மி, 5 வயதிலிருந்தே ,  இசை மற்றும் நாட்டியக்கலைஞரான தன் தாயிடமிருந்து நடனம் கற்றுக்கொண்டார். 9-வது வயதில் குடும்பத்துடன் சென்னை வந்த விஜயலக்ஷ்மி வழுவூர்  ராமையா பிள்ளையிடம்  நடனம் கற்றுக்கொண்டார். 

சென்னையில் விஜயலக்ஷ்மியின் அரங்கேற்றம் குமாரி கமலா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடந்தது. பின்னர் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தன. பல தென்னிந்திய மொழிகளில் சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி கணேசன், முத்துராமன் உள்ளிட்ட பல முன்னணிக் கதாநாயகர்களுடன் இணைந்து நடித்த விஜயலக்ஷ்மி இந்தப் பாடலினால் வெகுவாக பிரபலமானார். சுமார் பத்தாண்டுகள் தென்னிந்திய திரைஉலகில் பிரகாசமான நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருந்தார் விஜயலக்ஷ்மி.

1969-ல் ஊட்டி வரை உறவு திரைப்படத்தில் இரு விஜயாக்களில் ஒருவராக கே ஆர் விஜயாவுடன் நடித்துக் கொண்டிருக்கையில் படப்பிடிப்புத் தளத்தில்  அவரது சகோதரனின் நண்பரும் பிலிப்பைன்ஸின் IRRI அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த இந்திய வேளாண் விஞ்ஞானியுமான  சுரஜித் குமார் தத்தாவை (Surajit Kumar De Dutta ) சந்தித்தார் விஜயலக்‌ஷ்மி. 

காதல் வயப்பட்ட தத்தாவும் விஜயலக்ஷ்மியும் அந்த ஆண்டே திருமணம் செய்து கொண்டார்கள்.  ஊட்டி வரை உறவுதான் விஜயலக்ஷ்மியின் கடைசித் திரைப்படம், அதன்பிறகு அவர் நடிக்கவில்லை. பிலிப்பைன்ஸ் அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் மிக முக்கியமான நெல் கண்டுபிடிப்பிற்கான ஆய்வில் ஈடுபட்டிருந்த கணவர் தத்தாவுடன்  அவரும் பிலிப்பைன்ஸ் சென்றார்.

தத்தா பணியாற்றிக் கொண்டிருந்தது பிலிப்பைன்ஸ் நாட்டின், லாகுனா மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச நெல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான   IRRI யில் .    IRRI பதினேழு நாடுகளில் 1,300 ஊழியர்கள் பணியாற்றும் கிளை அலுவலகங்களைக் கொண்டுள்ளது.

1960- களில் ஆசியாவில்  நிலவிய தானியப் பஞ்சத்தை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு அரிசி இனங்களை வளர்க்கும் பசுமைப் புரட்சி இங்கு தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. அந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் பல விஞ்ஞானிகளின் முயற்சியால் உருவான  நவீன நெல் ரகங்கள், விவசாயிகளுக்கு பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது, IRRI-ல் கண்டுபிடிக்கப்பட்ட  புதிய நெல் ரகங்கள் மூன்று மடங்கு  உற்பத்தியை அளித்தன.

இந்த ஆராய்ச்சியால் அரிசியை பிரதானமான உணவாகக் கொண்டிருந்த இந்தியா உள்ளிட்ட  பல நாடுகள்  அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்றன. அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தவர்தான்  சுரஜித் தத்தா. 

சுரஜித் குமார் தத்தா பசுமைப்புரட்சியில் மிக முக்கிய பங்காற்றியவர். ஆனால் அவரது பங்களிப்பு போதுமான அளவு உலகின் கவனத்துக்கு வரவில்லை.  

சுரஜித் தத்தா என்னும் இளம் வேளாண் விஞ்ஞானியான இவர்தான் IRRI-ல் தொடர்ந்து நடைபெற்ற வேளாண்மைச் சோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்ட IR-8 எனப்படும் புதிய நெல் வகையின் ஆய்வுக்கு பொறுப்பேற்றுக் கொண்டிருந்த விஞ்ஞானியாக இருந்தவர். 

உலகின் பல லட்சம் மக்களின் பிரதான உணவான அரிசி பல உலக நாடுகளில் விளைகிறது என்றாலும் மிக அதிகமாக விளைவது தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவில் தான். 

1960-களில்  பல காரணங்களால் அரிசி  உற்பத்தி  உலகெங்கிலும் மிகக்குறைவாக  இருந்தது. நெற்பயிரின் உயரம் மிக அதிகமாக இருந்ததால் காற்றில் பயிர்கள் உடைந்து விழுந்தது, மிகக்குறைவான நெல்மணிகளை உருவாக்கிய ரகங்கள், உரங்கள் மண்ணில் சேர்க்கப்பட்டாலும் அவற்றை எடுத்துக்கொள்ளாத ரகங்கள் எனப்பல காரணங்களால் உலகளாவிய நெல்லுற்பத்தி கடும் வீழ்ச்சியில் இருந்த காலமது. 

எனவே வறுமை மற்றும் பட்டினியைக் குறைக்கவும், நெல் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் மற்றும் நெல் விவசாயத்தின் சுற்றுச் சூழலை மேம்படுத்துதலையும் நோக்கமாகக் கொண்டு பிலிப்பன்ஸில்  International Rice Research Institute என்கிற IRRI நிறுவனம் 1960-களில் ஆரம்பிக்கப்பட்டது. 

IRRI நிறுவனம் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் 15 விவசாய ஆராய்ச்சி மையங்களில் ஒன்று. ஆசியாவின் மிகப்பெரிய இலாபநோக்கமற்ற விவசாய ஆராய்ச்சி மையமாகவும் இருக்கிறது IRRI,

IRRI யின் கிளைகள் உருவாக்கப்பட்ட  நாடுகளில் தேசிய விவசாயக் கூட்டு ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க அமைப்புகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. உலகெங்கிலும் இருந்த முக்கியமான வேளாண் விஞ்ஞானிகள் IRRI-ல் இணைந்தனர். 

IRRI-ன் இயக்குநராக சாண்ட்லர் நியமிக்கப்பட்டார். அமெரிக்க தோட்டக்கலைத்துறை நிபுணரான சாண்ட்லரின் தலைமையின் நவீன நெல் கலப்பின உருவாக்கத்துக்கான குழுவொன்று அமைக்கப்பட்டது. அக்குழுவில் சுரஜித் தத்தாவும் இருந்தார்,  உலகெங்கிலும் இருந்த   பல முக்கியமான வேளாண் விஞ்ஞானிகள் சாண்ட்லரின் தலைமையில் ஆயிரக்கணக்கான நெல் வகைகளைச் சேகரித்து பிலிப்பைன்ஸுக்கு அனுப்பி கலப்பின ஆய்வுகளை மேற்கொண்டார்கள்.

IRRI விஞ்ஞானிகள் உயரம் குறைவான, உரங்களை எடுத்துக்கொண்டு உற்பத்தியை அதிகரிக்கும் கலப்பின High Yielding Variety  என்பதைக் குறிக்கும் HYV நெல் ரகங்களை உருவாக்கும் சோதனைகளைத் துவங்கினார்கள். 

தொடர்ந்து நடந்த கலப்பினச் சோதனைகளில் இந்தோனேஷியாவின் நெட்டை நெல் ரகமான பீட்டாவையும் (Peta) சீனாவின் டீ ஜியோ வூ ஜென் (Dee Geo Woo Gen – DGWG)  என்னும் நடுத்தர உயரம் கொண்ட நெல் வகை ஒன்றையும் கலந்து ஒரு புதிய கலப்பின நெல் ரகத்தை உருவாக்கினார்கள்.

அந்த கலப்பின நெல் ரகம் பீட்டாவை விட உயரம் குறைவாகவும்,   DGWG-யை விட உறுதியாகவும், நேராக நிமிர்ந்தும் இருந்தது. அதன் இலைகள் மிக அதிகச் சூரிய ஒளியை பெறும்படி அமைந்திருந்தன எனவே அவற்றில் வழக்கமாக உருவாவதைக் காட்டிலும் மிக அதிகமான நெற்கதிர்கள் உருவாகின. 

இந்த சோதனையில் ஈடுபட்டிருந்தவர்களில் முதன்மையானவரான சுரஜித் தத்தா. இந்த மிக முக்கியமான, நெல் உற்பத்தி வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக அமைந்த ஆய்வின் முடிவை பல வேளாண் சஞ்சிகைகளிலும் IRRI-யின் சஞ்சிகைகளிலும்  வெளியிட்டார். அந்த நெல் ரகம் உரம் போடாமல்  ஒரு ஹெக்டேருக்கு 5 டன்னும் உரமிட்டால் 9.4 டன்னும் உற்பத்தியை அளித்தது என்பது உலகெங்கிலும் பெரும் ஆச்சர்யத்தை உண்டாகியது. அதற்கு முன்பு எந்த நெல் வகையும் எங்கும் 9.4 டன்/ஹெ உற்பத்தியை அளித்தது இல்லை. 

இந்த புதிய நெல் ரகம் IRRI-யில் நடைபெற்ற 38 கலப்பின சோதனைகளில் 8 ஆவது சோதனையில் உருவானது என்பதால் ஆய்வுக்கட்டுரைகளில் IR8-288-3  என்று குறிப்பிடப்பட்டது.  

அந்த   நவீன, அதிக விளைச்சல் தரும் நடுத்தர உயரம் கொண்ட நெல் ரகம் IR-8 என இறுதியாக IRRI-யினால் பெயரிடப்பட்டு  வெப்பமண்டலத்தின், பாசன வசதி கொண்ட தாழ் நிலங்களில் பயிர் செய்ய அறிமுகமானது.  

IR-8  நெல் ரகத்தின் ஒரு குறிப்பிட்ட   ஜீன்  (semidwarf-1 gene – Os01g0883800)  நெற்பயிரின் உயரத்தைக் கட்டுப்படுத்தும் இயக்கச்சாறான ஜிப்பரலினை ஒழுங்குபடுத்துவதால் அது நடுத்தர உயரம் கொண்டிருந்தது. அதன் விளைச்சல் ஒரு  ஹெக்டேருக்கு  6- லிருந்து 10 டன் வரை இருந்தது.

1966-ன் வறட்சி நிலவிய பருவத்தில் நைட்ரஜன் உரத்தை எடுத்துக்கொண்டு முன்னைக்காட்டிலும் மூன்று மடங்கு விளைச்சல் கொடுத்த IR-8 ஐக் குறித்து தத்தா மீண்டும் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டார்.  

பிலிப்பைன்ஸில் 88 கிலோ நெல் விதைகள் விதைக்கப்பட்டு 71 டன் நெல் அறுவடை செய்யப்பட்டதை கேள்விப்பட்ட அப்போதைய பிலிப்பன்ஸ் பிரதமர்  மார்கோஸ் (Ferdinand Marcos)  IRRI  நிறுவனத்துக்கு 1966-ல் வருகை தந்து தத்தாவின் ஆய்வுகளைக் குறித்து தெரிந்துகொண்டு அவரை மனமாரப் பாராட்டியதோடு கையோடு தத்தாவிடிமிருந்து 2 கிலோ IR-8 நெல் விதைகளையும் பெற்றுக்கொண்டார்.

தனது ஆட்சிக்காலத்தில் பிலிப்பைன்ஸின் பஞ்சத்தைப் போக்குவதாக சபதமேற்ற மார்கோஸ் ’’Masagana 99’’ என்னும் பெயரிடப்பட்ட நெல்பயிரிடும் இயக்கத்தைத்தொடங்கி இந்த விதைகளை விவசாயிகளுக்கு  அளித்து 3 ஆண்டுகளில் பிலிபபைன்ஸை நெல் உற்பத்தியில் தன்னிறைவு அடையச்செய்தார்

 அதற்குப் பின்னர்தான்  நெல் ரகங்களைத்தேடி தாய்நாடு வந்த தத்தா தனது நண்பரின் தங்கை நடித்துக்கொண்டிருந்த படப்பிடிப்பு நடந்த ஊட்டிக்கு வந்து தன் காதல் மனைவி விஜயலக்ஷ்மியைச் சந்தித்தார். 

உலகளவில் பெரும் புரட்சியை உண்டாக்கிய ஒரு    IR-8 நெற் பயிர்   1970-களில்   இந்தியாவில் பட்டினியை, பசியைப் போக்கி பல உயிர்களைக் காப்பாற்றியது 

1950, 60- களில் இரண்டாம்  உலகப் போருக்குப் பின்னரான  காலமென்பதால் உருவான  உணவுப்பற்றாக் குறையோடு பெரும் வறட்சியும் பஞ்சமும் இந்தியாவில் உருவாகி இருந்தது. பிரிட்டிஷ் அரசு  புகுத்திய நவீன வேளாண் முறைகளோடு இந்தியாவின் பாரம்பரிய வேளாண் முறைகளும் கலந்திருந்த  காலகட்டமும் அதுதான்.

எனவே  இந்தியா பசுமைப்புரட்சியை 60-களில் தழுவிக்கொண்டு அரிசி மற்றும் கோதுமையின் விளைச்சலை அதிகரித்தது. பிலிப்பைன்ஸின் IR -8 நெல் விதைகள் இந்தியாவில் அறிமுகமானது. 

மேற்கு கோதாவரியைச் சேர்ந்த 29 வயது இளம் விவசாயி  நெக்கந்தி சுப்பாராவ்தான்  (Nekkanti Subba Rao) 1967-ல் இந்தியாவில் IR-8 பயிரிட்ட முதல் விவசாயி. IR-8  நெல் ரகத்தை தனது நிலத்தில் பயிரிட்டு அதன் அதீத விளைச்சலை மற்ற விவசாயிகளுக்கும் சுப்பாராவ் காண்பித்தார்,  

தனது நிலத்தில் IR8 ரகத்தை தொடர்ந்து பயிரிட்டதோடு சுப்பாராவ் சுற்றியிருந்த சுமார் 2000 ஏக்கர் நிலத்திலும் IR-8 பயிரிடுவதை,  அவற்றிற்கான பாசன  வசதியை,  உரமிடுப்படுவதை எல்லாம் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டும் இருந்தார்.  

சுப்பாராவுக்கு ஆந்திராவில் Mr.IR8 என்றும் அரிசி விற்பன்னர் என்றும் பெயர் வந்துவிட்டிருந்தது. இதே சுப்பாராவ்தான் வெள்ளத்தினால் பாதிக்கப்படாத Swarna-Sub1, என்னும் 1979-ல் கண்டுபிடிக்கப்பட்ட நெல் ரகத்தை IR-8 ஐப்போலவே பிரபலபடுத்தியவர்.  

தொடர்ந்து தமிழ்நாட்டிலும் IR-8 பரவலாகப் பயிரிடப்பட்டது. ஆந்திராவிலும் தமிழ்நாட்டிலும் IR-8ன் விளைச்சல் விவசாயிகள் நம்பமுடியாத அளவுக்கு இருந்தது. அற்புத அரிசி IR-8 என்றே அதற்குப் பெயர் வந்துவிட்டிருந்தது. 

திருவண்ணாமலை விவசாயியான கணேசன்  IR-8 பயிரிட்டு அதன் அதீத விளைச்சலால் குடும்பம் நிமிர்ந்ததால் அப்போது பிறந்த தன்  மகனுக்கு ’அய்யாரெட்டு’ என்றே பெயரிட்டார். ஹெக்டேருக்கு 2 டன் நெல் விளைந்துகொண்டிருந்த அவரது நிலத்தில் IR-8 பயிரிட்டபோது 16 டன் /ஹெ கிடைத்தது.

இந்தியா மட்டுமல்லாது வியட்நாம், பர்மா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகளில் IR-8 உணவுப் பற்றாக் குறையைப் போக்கி உணவுப் பாதுகாப்பை  உறுதி செய்தது. 

பிலிப்பன்ஸ் தீவொன்றில் உரங்களிடாமல் பயிரிடும்போது ஹெக்டேருக்கு 7 டன்னும் உரங்களிட்டபோது 10 டன் விளைச்சலும் கிடைத்தது.  

மற்ற நெல் ரகங்கள் 150-170  நாட்களில் அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருக்கையில் IR-8 ரகம் 105 – 130 நாட்களில் முதிர்ந்து அறுவடைக்கு தயாராகிறது.

IR- 8 பயிரிட்டு ஒரே ஒரு சாகுபடியில் லாபம் கிடைத்து ஹோண்டா பைக் வாங்க முடிந்ததால் வியட்நாமில் IR-8 க்கு ஹோண்டா அரிசி எனப்  பெயர் வந்திருந்தது.  

IR-8, அற்புத அரிசி எனப் பெயர்வந்தது   அதன் மிக உயர்வான தன்மைகளினால் அல்ல. IR-8 எளிதில் நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகும் இயல்பு கொண்டிருந்த, தடிமனான, வேகவைத்த பிறகு மேலும் தடிமனாகவும் கடினமாகவும் சுண்ணாம்பு போலவும் ஆகிவிடுகிற அரிசியை அளிக்கும் நெற்பயிர்தான் என்றாலும் பஞ்சகாலத்தில் பல உயிர்களைக் காப்பாற்றி பட்டினியைப் போக்கியதால் அது அற்புத அரிசியாக இருந்தது.

எனவே IR-8 நெல் ரகம் மேம்படுத்தப்பட வேண்டி இருந்தது. IRRI-யின் தாவரப் பெருக்கத்துறையின் தலைவராக 1972-ல் பொறுப்பேற்றுக்கொண்ட இந்திய தாவரவியலாளரான குருதேவ் சிங் குஷ் இந்தப்பணியை முன்னெடுத்தார். 

IR-8 நெல் ரகத்தை மேலும் பல கலப்பின ஆய்வுகளுக்குள்ளாக்கி  IR-36, எனும்   நோயெதிர்ப்பு திறன் அதிகம் கொண்டிருக்கும், மெல்லிய, சுவையான அரிசியை அளிக்கும், IR-8 ரகத்தைக் காட்டிலும் விரைவிலேயே முதிர்ந்துவிடும் ரகத்தை குஷ் கண்டுபிடித்தார். 

IR-36, 80-களில் மிகப்பரவலாக சாகுபடியான ரகமாக இருந்தது. தொடர்ந்த ஐந்து ஆண்டுகளில் குஷ்  IR- 20 , மற்றும்  IR-50 ரகங்களையும் கண்டறிந்து விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தினார். அவரது பணிக்காலத்தில்  300-க்கும் மேற்பட்ட நவீன நெல் ரகங்கள் கண்டறியப்பட்டு ஆசியா,ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின்  நெல் பயிராகும் பிரதேசங்களுக்கு அறிமுகமானது,

குஷ் 1996-ல் அரிசி உற்பத்தியில் மிகச்சிறந்த சேவையாற்றியதற்காக அமெரிக்கப் பயிர்பெருக்க நிபுணரான  ஹென்றியுடன் (Dr. Henry Beachell) உலக உணவு விருதினைப் பகிர்ந்துகொண்டார். 

2016 நவம்பரில் IR-8-ன் 50-வது பிறந்த நாள் தலைநகர் தில்லியில் அரசியல் தலைவர்கள். வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகளால் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. 2021 நவம்பர் 28 அன்று IR-8 -ன் 55 வது பிறந்த நாளும் கொண்டாடப்பட்டது 

நியூயார்க்கில் 1981-ல் வெளியிடப்பட்ட  தத்தாவின் Principles and Practices of Rice Production என்னும் நூல் அரிசிச்சாகுபடியின் அகராதி என்றே கருதப்படுகிறது.

அதற்கு முன்பே தத்தா மேலும் இரண்டு முக்கியமான நூல்களை எழுதி யிருந்தார்.

 “Availability of Phosphorus and Utilization of Phosphate Fertilizers in Some Great Soil Groups of Hawaii”என்னும் நூல்  1963-லும்  “Availability of Phosphorus to Sugar Cane in Hawaii as Influenced by Various Phosphorus Fertilizers and Methods of Application” என்னும் நூல் 1965-லும் வெளியானது.

தத்தா 27 வருடங்கள் IRRI நிறுவனத்தில் முதன்மை விஞ்ஞானியாக  நெல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். 

தத்தாவிற்கு 1992-ல் இந்தியாவின் வேளாண் அறிவியல் பங்களிப்பிற்காகவும் பசுமைப்புரட்சியில் அவரது முக்கியப் பங்களிப்பிற்கும்  பெருமை மிக்க Norman Borlaug  விருது அளிக்கப்பட்டது.

2004-ல்  தத்தா பிலிப்பைன்ஸ் குடியரசுத் தலைவரால் கவுரவிக்கப்பட்டார்.

IRRI – பணிக்குபின்னர் தத்தா அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய வர்ஜீனியா பல தொழில்நுட்ப மாநிலப் பல்கலைக்கழகத்தின் (Virginia Polytechnic Institute and State University) சர்வதேச ஆராய்ச்சி, கல்வி மற்றும் மேம்பாட்டுக்கான நிறுவனமான OIRED-ல் இணைத்தலைவராக  20 வருடங்கள் பணியாற்றி அந்நிறுவனத்தின் நிதி நிலைமையை வெகுவாக மேம்படுத்தினார், (Office of International Research, Education, and Development). அதே பல்கலைக் கழகத்தில் விஜயலக்ஷ்மியும்  பணியிலிருந்தார்.

தத்தாவின் சேவையைப் பாராட்டி அமெரிக்காவில் அவருக்கு ஏராளமான விருதுகள் அளிக்கப்பட்டன. அமெரிக்காவின் சர்வதேச வேளாண் சேவைக்கான விருதைப்பெற்ற முதல் நபர் தத்தாதான். தற்போது ஓய்வு பெற்றிருக்கும் தத்தாவும் விஜயலஷ்மியும் கலிஃபோர்னியாவில் டேவிஸ் நகரில் வசிக்கிறார்கள். அவர்களது ஒரே மகன்    சிலிகான் பள்ளத்தாக்குப் பகுதியில் தொழில்நுட்ப நிறுவனம் நடத்தி வருகிறார்.

 அமெரிக்காவின் உலக அரிசி ஆராய்ச்சி அறக்கட்டளை விஜயலக்‌ஷ்மி மற்றும் தத்தா ஆகிய இருவரின் பெயரிலும் (SK and Vijji De Datta Award for Rice Research) சிறந்த அரிசி ஆராய்ச்சிக்கு  US$130,000 பரிசுத்தொகை அளிப்பதாக சமீபத்தில் அறிவித்திருக்கிறார்கள்.

’ஆடலுடன் பாடலைக்கேட்டு’  நடனத்தில் விஜயலக்ஷ்மி ஆடப்போவதாகத் தெரிந்துகொண்ட எம்ஜிஆர் அவரது நடனத்திறமையை முன்பே கேள்விப்பட்டிருந்ததால் 5 நாட்கள்  ஒத்திகை பார்த்த பின்னரே   படப்பிடிப்புக்கு வந்தார் என சொல்லப்படுகிறது. அத்தனை பிரபலமான நட்சத்திரமாக இருந்த அவர் கணவரின் வேளாண் ஆராய்சிக்கென தனது மிகப் பிரகாசமான எதிர்காலத்தை துறந்து பிலிப்பைன்ஸுக்குச் சென்றது சாதாரணத் தியாகமல்ல.

திருமணத்துக்குப் பிறகு மெட்ரிகுலேஷன் தனித்தேர்வு எழுதித் தேர்ச்சிபெற்ற விஜயலஷ்மி சென்னைப்பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வியில் வணிகவியல் பட்டம் பெற்றார். பின்னர்  பல ஆண்டுகள் ஆடிட்டராகப் பணியாற்றினார்

எல். விஜயலட்சுமி கலப்பின அரிசி வளர்ச்சியின் அறிவியல் ஆய்வுகளில் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும் அவரது   மனப்பூர்வமான ஆதரவு   தத்தாவை தனது புதிய ஆய்வுகளை எந்த இடைஞ்சல்களுமின்றித்  தொடர அனுமதித்தது. அந்த வகையில்,IR-8 கண்டுபிடிப்பில் விஜயலக்ஷ்மியின் பங்களிப்பு   மறைமுகமானது ஆனால் மிகவும் முக்கியமானது.

தனது பொது வாழ்க்கையைத் துறந்து,   கல்வியைத் தொடர்ந்து, குடும்பப் பொறுப்புகளை நிர்வகித்ததன் மூலம், கணவர் தனது கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த விஜயலக்ஷ்மி உதவினார். கணவருடன் பிலிப்பைன்ஸுக்கும் பின்னர் கண்டம் தாண்டியும் பயணித்தார்.  

ஒரு ஆணின் வெற்றிக்குபின்னால் இருக்கும் பெண்ணிற்கான மிகச்சிறந்த   உதாரணமாக விஜயலக்ஷ்மி இருக்கிறார்.

IRRI-யின் தொடர்ந்த ஆய்வுகளால் 1966-ல் 257 மில்லியன் டன்னாக இருந்த  உலக அரிசி உற்பத்தி 2010-த்தில் 686 மில்லியன் டன்னாக உயர்ந்தது. ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கானோர் பசியாறினார்கள். 

இந்திய மணவிழாக்களில் மஞ்சள் கலந்த பொன்னிற அரிசியை அக்ஷதையாக மணமக்களின் மீது  தூவுதல் என்பது நூற்றாண்டுகள் பழமையான இந்திய பண்பாட்டையும்  வரலாற்றையும்  கொண்டாடும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த அக்‌ஷதைதான் மணமக்களின் வாழ்வில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்கான ஆசிகளை அளிக்கிறது.


இந்தியாவின் பஞ்சத்தைப் போக்க ஒரு புதிய அரிசி வகையை கண்டறிந்த காதல் கணவருடனான விஜயலக்ஷிமியின்  வாழ்க்கைக்கான ஆசீர்வாதம் லட்சோபலட்சம் பசித்த வயிறுகள் குளிர்ந்த போது அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும். இன்னும்  பல்லாண்டுகள் இதே பேரன்புடன் இவர்கள் வாழ்வு தொடரட்டும். இருவருக்கும் வணக்கங்களும் அன்பும்.

மலர்த்துளியும் ஈஸ்வரனும்!

இன்று tenuiflora விற்கும் parviflora விற்குமான வேறுபாட்டை அறிந்துகொள்ள அந்த இருவகைகளிலும் இருக்கும் மஞ்சரிகளை ஆராய்ந்துகொண்டிருந்தேன். இரண்டுமே மஞ்சரியின் சிறுமலர்களைத்தான் குறிக்கின்றன என்றாலும் நுட்பமான வேறுபாடு இருக்கிறது. துளசியுடையது tenuiflora  தெட்சியின் வகைகளில் ஒன்று  parviflora. இப்படி  தாவரப்பெயர்களின் etymologyயின் பின்னால் போவது எனக்கு விருப்பமானதொன்று. சொல்லப்போனால் இந்ததுறையில் எனக்கு ஈடுபாடு வந்ததே இந்தப்பெயர்களில் இருகும் வசீகரம்தான்.  

parviflora   என்பது நுண்மலர்களைக்குறிக்கிறது ஆனால் அதே பேரினத்தில் இருக்கும் பிற மலர்கள் அல்லது மஞ்சரிகளில் இருக்கும் floret களின் அளவைக்காட்டிலும் சிறியவைகளுக்கே அந்தப்பெயரை லின்னேயஸ் வைத்திருக்கிறார். comparitively smaller உதாரணமாக இக்ஸோரா பார்விஃப்ளோராவைச்சொல்லலாம். தெட்சியின் மஞ்சரிகளை உருவாக்கியிருக்கும் சிறு மலர்களின் அளவைக் காட்டிலும் சிறியதாக இருக்கும் பார்விஃப்ளோராவின் அளவு. 

லின்னேயஸ் பெயரிடுவதற்கு எத்தனை மெனக்கெட்டிருக்கிறார் என்று நினைக்கையில் வியப்பாயிருந்தது. இந்த இக்ஸோரா -Ixora என்னும் பெயரையே எடுத்துக்கொள்ளலாம். சிவனுக்கு பிரியமானது கோவில்களில் சிவனுக்கு பூஜைக்குபயன்படுத்துவது என்பதால் iswara என்பதை latinize செய்து ixora  என்னும் பேரினப்பெயரை வைத்திருக்கிறார். ஸ்வீடிஷ் உயிரியலாளரான லின்னேயஸுக்கெப்படி நம்  ஈஸ்வரனை தெரிந்தது? சுவாரஸ்யமான ஒரு வரலாறு இருக்கிறது இதன் பின்னே.

1669-லிருந்து 1676 வரை மலபாரில் கவர்னராகப்பணிபுரிந்த டச்சு ராணுவ அதிகாரி ஹெண்ட்ரிக் அட்ரியான் ரீட் அந்தப்பகுதியின் 740 தாவரங்களை விவரித்து எழுதிய நூல் hortus malabaricus. இந்த நூல் உருவாக்கத்தில் கேரளத்தின் மூலிகைவைத்தியரான இட்டி அச்சுதன் பெரும்பங்காற்றினார். 

ஈழவரான அச்சுதன் ஆயுர்வேதமருத்துவராக சேரத்தலாவில் இருந்தார். கொச்சி அரசரான வீர கேரள வர்மாதான் அச்சுதனை ஹெண்ட்ரிக் ரீடிக்கு அறிமுகம் செய்துவைத்தார். அச்சுதனின் பனையோலைச்சுவடிகளிலிருந்து பல தகவல்களை ரீடி எடுத்துக்கொண்டிருக்கிறார். மலையாளத்திலிருந்த அவற்றை ஆங்கிலத்தில் ஒரு குழுவாக பல பிராமணர்கள் மொழிபெயர்த்து உதவி இருக்கிறார்கள். அவர்கள் அனைவரின் பெயர்களும் அந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.அச்ச்சுதன் ஒவ்வொரு தாவரத்திற்குமான அந்தபிரதேசத்தின் வழங்குபெயர்களை தெளிவாகத்  தெரிவித்திருக்கிறார். உண்மையில் இந்த நூல் ஒரு botanical treatise என்பதைக் காட்டிலும் ஒரு cultural storehouse என்றுதான் சொல்ல வேண்டும்.

இட்டி அச்சுதனின் ஓலைச்சுவடிகளில் பிற்பாடு பெரிய அளவில் ஆய்வுகள் நடந்தன.இட்டி அச்சுதனின் வாழ்க்கை வரலாற்றை A N Chithambaram  எழுதி அதைக் கேரள சாகித்ய அகாதமி வெளியிட்டது. மேலும் அச்சுதனைப்பற்றி அறிந்துகொள்ள N S Arunkumar எழுதிய ‘’Horthoos malabarikoos charithavum Sasthravum’’ என்னும் நூல் உதவுகிறது.

திருவனந்த புரம் TBGRI யில் ஹார்டஸ் மலபாரிகஸில் குறிப்பிடப்பட்டிருக்கும் தாவரங்களுக்கெனத்தனியே ஒரு தோட்டம் அமைக்கப்பட்டது.இணையத்தில் ஹார்டஸ் மலபாரிகஸின் ஸ்கேன் பிரதி முழுமையாகக்கிடைக்கிறது.அதை மேலோட்டமாக பார்த்தேன், ஆயிரக்கணக்கான பக்கங்களில் இருப்பது பழங்குடித்தாவரவியல் தொகுப்புத்தான்.

1753-ல் லின்னேயஸ் இருபெயரீட்டு முறையை அறிமுகபப்டுதியபோது ரீடியின் நூலில் இருந்து மலபார் பகுதியில் ஈஸ்வரன் கோவில்களில் பயனபடுத்தப்படும் மலர் என்னும் குறிப்பைக்கொண்டே  இக்ஸோரா பெயரிடப்பட்டது. 

பார்விஃப்ளோராவிலிருந்து மலபாருக்கு வந்துவிட்டேன்

அடுத்த டென்யூஃப்ளோரா என்பது துளசியின் திர்சஸ் வகை சிறப்பு மஞ்சரிகளிலிருப்பதைப் போன்ற நுண்ணிய,  வலிமையற்ற, மிக மெல்லிய மலர்களைக்குறிக்கிறது. எனக்கு ஜெ வின் மலர்த்துளி என்னும் சொல் நினைவுக்கு வந்தது. லின்னேயஸ் இப்போது இருந்திருந்தால் ஜெ விடம் ஆலோசனை கேட்டு மேலும் பல பொருத்தமான சொற்களில் பெயரிட்டிருப்பார். 

யானைப்புளி

இந்த ஹெண்ட்ரிக் ரீடியின் பெயரில் தான் ஆப்பிரிக்க கனவுக்கொடியும் மனம்மயக்கும், இல்பொருள் தோற்றம் உண்டாக்கும் இயல்புகளையுடையதுமான எண்டெடா ரீடி என்னும் யானைப்புளிக்கொடி பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படி தகவல்களுக்குள் தகவலாகத்தேடித்தேடிப் பயணிப்பது ஒரு போதை போலாகிவிட்டிருக்கிறது. 

இனி நான் டென்யூஃப்ளோராவை மலர்த்துளி என்றே குறிப்பிடப்போகிறேன்.

ஸாம்பா!

லோஸர் எனப்படும்  திபெத்திய புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் மிகத்தொன்மையான சடங்குகளுடன் ஒரு வாரம்வரை நடைபெறும். திபெத் மக்கள் பல நாட்களுக்கு முன்பிருந்தே வீடுகளை சுத்தம் செய்யத் தொடங்குவார்கள். வீட்டுச்சுவர்களுக்கு வர்ணம் அடித்து வீடெங்கும் மலர்களால் அலங்காரம் செய்து சுவர்களில் சூரியன், சந்திரன், தலைகீழ் ஸ்வஸ்திக் வடிவம் ஆகியவற்றை  வரைந்து வைப்பார்கள்.

புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது ஊதுவர்த்திபோல எரிகையில்  வாசனைப்புகை தரும் செடார், ரோடோடென்ரான் மற்றும் ஜுனிபர் மரங்களின் சிறுகிளைகள் ஒடிக்கப்பட்டுச் சேகரித்து வைக்கப்படும்

புத்தாண்டுக்கு முன்பே கடன்கள் அடைக்கப்பட்டு, குடும்பத் தகராறுகள் பெரியவர்களால் பேசித் தீர்த்து வைக்கப்படும். புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது மட்டும் உண்ணப்படும், கடலைமாவில் வெண்ணெயும் சர்க்கரையும் கலந்து, கழுதைக்காது வடிவில் பொறித்தெடுக்கப்பட்டு, மீண்டும் சர்க்கரை தூவி உருவாக்கப்படும் காப்ஷே (Khapse) எனப்படும் பிஸ்கட்  போன்ற ஒரு பலகாரம்  ஏராளமாக செய்து வைக்கப்படும்.  சாங் (chang) எனப்படும் பார்லி மதுவும்  தயாரிக்கப்பட்டு சேமித்து வைக்கப்படும். ஆட்டுத்தலை என்னும் சொல்லும் புதுவருடத்துவக்கம் என்னும் சொல்லும் திபெத்திய மொழியில் ஏறக்குறைய ஒன்றே போல் இருக்குமென்பதால் வீடுகளில் வெண்ணையால் ஆட்டுத்தலைபோல உருவம் செய்து வைக்கப்படும். 

வாளி போன்ற பாரம்பரிய மரத்தொட்டியான,  ஒரு மரக்கட்டையால் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கும்     ஐந்து தானியம் எனப்பொருள்படும் ஃபைமெரில் (phyemar)  ஒரு பாதியில் அரிசியும் மறுபாதியில் வறுத்த பார்லியைப் பொடித்த ஸாம்பாவும், பார்லி தானியங்களும், பார்லி தானியக்கதிரும், வர்ணமேற்றப்பட்ட வெண்ணெயும் நிறைத்து வீட்டுக்கு முன்பாக வைக்கப்படும். ஐந்து பொருட்களை நிறைத்து வைக்கப்படும் இந்த வாளி நல்ல அறுவடைக்கும் கடவுளின் ஆசிக்கும் அடையாளமாகக்  கருதப்படுகிறது.

புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு வருகை தரும் விருந்தினர்கள் அந்த வாளியிலிருந்து  கொஞ்சம் ஸாம்பாவை எடுத்து காற்றில் மூன்று முறை சுண்டி விட்டு விரல்களில் ஒட்டி இருக்கும் ஸாம்பாவை வாயிலிட்டுச் சுவைத்த பின்னர் ‘’தாஷி டெலெக்’’  ( Tashi delek.) என்று உரக்கச் சொல்லி ஆசியளிப்பார்கள். ’’தாஷி’’ என்றால் நல்ல விஷயங்கள் ’’டெலெக்’’ என்றால் ’’ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் ’’என்று பொருள்

இந்த ஸாம்பா திபெத்தியர்களின் வாழ்வில் மிக முக்கியமானது. திபெத்தியர்களின் வலிமை அவர்களின் வாழ்வு, பிரார்த்தனை எல்லாவற்றிலும் ஸாம்பாவின் பங்கு பெருமளவில் உள்ளது. ஸாம்பாவை அறிந்துகொள்வது திபெத்தை அறிந்து கொள்வது தான். 

ஸாம்பா  என்னும் திபெத்தியர்களின் பிரதான உணவைக் குறித்த பல நூறு நாட்டுப்புறக்கதைகள் திபெத்தில் பலநூறு ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ளன. இது வெறும் உணவல்ல, திபெத்தின் வரலாறு, கலாச்சாரம், திபெத்தில் இதுநாள் வரை வாழ்ந்து மறைந்த மூதாதையைருடனான திபெத்தியர்களின் தொடர்பு என அனைத்துமே ஸாம்பாதான். ஸாம்பாவின் சுவைதான் திபெத்தின் சுவை   என்கிறார்கள் திபெத்தியர்கள்

திபெத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக  பிரதான உணவாக இருந்து வரும் மிக எளிமையான இந்த  ஸாம்பா என்னும் உணவு பார்லியை  வறுத்துப் பொடித்து செய்யப்படுகிறது. ஸாம்பா  எப்போதிலிருந்து திபெத்தின் முக்கிய உணவாக இருக்கிறது என்பதற்கான எழுத்துபூர்வமான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றாலும் புத்த மதம் அங்கு அறிமுகமாகும் முன்பே ஸாம்பா உருவாகியிருக்கும் எனக் கருதப்படுகிறது. 7-ம் நூற்றாண்டில் ஸாம்பாவை காற்றில் வீசி எறியும் வழக்கம்  அரசர் முடிசூடிக்கொள்கையிலும்  அமைச்சர்கள் பதவி ஏற்கையிலும், திருமண விழாக்களிலும் நடந்தது. 13-ம் நூற்றாண்டிலிருந்து  பிறந்த நாள், புத்தாண்டு போன்ற  எல்லா முக்கியத்தருணங்களிலும்  ஸாம்பா பொடி தூவுதல் கடைப்பிடிக்கப்படுகிறது.

திபெத்தில் இறைச்சி உணவு மிகக் குறைவாகவே  புழக்கத்தில் இருக்கிறது.  1993-லிருந்து வேட்டை தடை செய்யப்பட்டிருப்பதால், மிக குறைவான யாக் எனப்படும் இமயக்காளையின் இறைச்சியுடன் பெரும்பாலும் தானியங்களும் காய்கறிகளும் பால், நெய், வெண்ணெயுடன் சேர்ந்த உணவுதான் உண்ணப்படுகிறது. 

திபெத்தின் தாழ்வான நிலங்களில் உருளைக்கிழங்கு, பட்டாணி, கோதுமை, டர்னிப், ஆப்ரிகாட் ஆகியவையும், மேட்டு நிலங்களில் பார்லி சாகுபடியும் நடைபெறும், இவற்றோடு திபெத் எங்கும் அபரிமிதமாக வளரும் Argentina anserina என்னும் பிரகாசமான மஞ்சள் மலர்களைக் கொண்டிருக்கும் செடியின் கிழங்குகளும் உண்ணப்படுகிறது.

திபெத்தில் ஸாம்பா என்னும் சொல் பார்லி தானியத்தையும் குறிக்கும் சொல்லாக இருக்கிறது. சுமார் 5600 ஆண்டுகளுக்கு முன்பிருந்து திபெத்தின் முக்கிய உணவாக இருந்துவரும் ஸாம்பா,  பார்லி சாகுபடியின் வரலாற்றையும் உடன் கொண்டிருக்கிறது. திபெத்தில் ஸ்பிடி, சன்ஸ்கார்,  புராங், லடாக் மற்றும் பிர் பகுதிகளில்   மேட்டு நிலப்பயிராக பார்லி அதிகமாக சாகுபடியாகிறது.

வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்து மேற்கில் கிரேக்க தீவுகளிலும் கிழக்கில் திபெத் வரையிலும் பரவி இயற்கையாகவே வளர்ந்திருந்த   காட்டுபார்லியான Hordeum vulgare ssp. spontaneum தான் கிமு 9000-த்தில் மனிதர்களால் முதன்முதலாக சாகுபடி செய்யப்பட்ட தானியமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்தப்பயிரின் பூர்வீகம் மற்றும் பரவலுக்கான சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை எனினும் பாகிஸ்தான் இந்தியா, நேபாளம் வழியாக பார்லி திபெத்தின் தெற்குப் பகுதியில் அறிமுகமாகி இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. 

திபெத்தில் மனிதக் குடியிருப்புகளுக்கருகே காட்டுபார்லி சாகுபடி செய்யப்பட்டது.  அப்போதிலிருந்தே திபெத் பார்லி சாகுபடியின் மையங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.  மேட்டு நிலத்தில் நன்கு வளரத்துவங்கிய பார்லியோடு மனிதர்களும் திபெத்தின் உயரமான நிலங்களில் வாழத்துவங்கினார்கள்.

ஆயிரக்கணக்கான வருடங்களாக  பார்லியின் காட்டு மூதாதையில் தொடர்ந்து நடந்த கலப்பினச் சோதனைகளுக்குப்பிறகு கிடைத்த திபெத்திய மேட்டுநிலப்பார்லிதான் (Hordeum vulgare L., qingke)  மனிதனின் தேவைக்காக மாற்றியமைத்துப் பயிரிட்டவைகளில் மிக முக்கியமானதென்று வேளாண் வரலாறு குறிப்பிடுகிறது. தொல்லியலாளர்களால் திபெத்தின் கடல்மட்டத்துக்கு மேல் 3400 மீ உயரத்தில் இந்த வகை பார்லியின் எச்சங்கள் கண்டறியப் பட்டிருக்கின்றன. திபெத்தின் மனிதக்குடியேற்றத்தை பார்லியின் சாகுபடிதான் தீர்மானித்தது என்று வரலாற்றாய்வாளர்கள் கருதுகிறார்கள்.  

தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக சாகுபடியும் கலப்பின உருவாக்கமும் செய்யப்பட்டதால் பார்லியின் காட்டுமூதாதைச் செடிகளின்  நீள் முட்டை வடிவ தானியங்கள் இப்போது உருண்டை வடிவமாகிவிட்டிருக்கிறது.

திபெத்தில் விளையும் பயிர்களில் 70% இருக்கும் இந்த மேட்டு நில பார்லிதான் திபெத்தின் தேசியபப்யிர். திபெத்தில் பயிராகும் அரிசி கோதுமை மற்றும் சோளப்யிர்களின் விளைச்சலைக் காட்டிலும் மேட்டுநில பார்லியின் விளைச்சல் சற்றுக்குறைவுதான் எனினும் சாகுபடியாகும் நிலபப்ரப்பு பார்லிக்குத்தான் மிக அதிகம். 

மிக அதிகக் குளிரையும் தாங்கும், ஐந்து மாதங்களில் அறுவடைக்குத் தயாராகும் இந்த திபெத்திய மேட்டு நிலப் பார்லி  கடல் மட்டதிலிருந்து 4200- 4500-மீ உயரத்தில் மிகச் செழிப்பாக  வளர்கிறது. கதிர்கள் மஞ்சள் நிறமாக மாறி, கதிர்மணிகளின் ஈரப்பதம்   20% to 22%. இருக்கையில்  அறுவடை செய்யப்படுகிறது. 

 திபெத்தின்  ஐந்து முக்கிய நிலப்பரப்புகளில்   பயிராகும் மேட்டு நிலப்பார்லி, திபெத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள புராங் நிலப்பரப்பில் மிக அதிக அளவில் பயிராகிறது.   தெற்கு இமாலயப் பகுதியைச் சேர்ந்த இந்தப் பிரதேசத்தில் கடல் மட்டத்திற்கு மேலான உயரம் திபெத்தின் மற்ற  பகுதிகளை விட குறைவாக  3900-மீ தான் இருக்கிறது என்றாலும் இங்குதான்  மிக உயர் ரக பார்லி பயிராகிறது. பனியற்ற  100 நாட்களும் ஆண்டுக்கு 3270 மணிநேர சூரியஒளியும் கிடைப்பதால் இங்கு விளையும் முதல் தர பார்லி  அரசகுடும்பத்தினருக்கும் மேட்டுக்குடியினருக்குமானதாக்க கருதப்படுகிறது.

ஸாம்பா தயாரிக்கும் முறை:

மேட்டுநில பார்லி முதிர்ந்த பின்னர் அறுவடை செய்யப்பட்டு தூய்மைப் படுத்தப்படுகிறது

பார்லி  தானியம் சுடு மணலில் நல்ல வாசனை வரும் வரை வறுக்கப்படும்.

கல்செக்குகளில் வறுக்கபட்ட பார்லி உடைத்து மாவாக்காப்படும்

திபெத்திய காலநிலையில் இந்த உலர் மாவு கெட்டுப்போகாதென்பதால்  வருடக்கணக்காக  பிரத்யேகமான துணிப்பைகளில் சேமித்து வைக்கப்பட்டு தேவையானபோது ஸாம்பா தயாரிக்கப்படுகிறது.

ஸாம்பா மலையேறுபவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் சத்துணவாக இருக்கிறது. உலர் ஸாம்பாவை எடுத்துச் செல்பவர்கள் எளிதாக இதனுடன் பாலோ நீரோ  கலந்து உண்ணலாம். சூடாகவோ குளிர்ந்தோ அப்படியே உண்ணலாம். 

ஸாம்பா பெரும்பாலும் தேநீருடன்தான் உண்ணப்படுகிறது. உலர்பொடியான ஸாம்பாவை தேநீரில்லாமல்  விழுங்கச் சிரமமாக இருக்கும் என்பதாலும், திபெத்தியர்கள் தேநீர் பிரியர்களென்பதாலும் ஸாம்பாவுடன் தேநீரைக்கலந்து உண்பது அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும் அனுபவம் ஆகிவிடுகிறது.

அதிலும் வெண்ணெய்த் தேநீர் ஸாம்பாவுக்கு பொருத்தமான இணை உணவாகிறது.  ட்ரீ (dri) எனப்படும் இமயப்பசுவின்    பாலிலிருந்து கிடைக்கும் வெண்ணெய் கலந்த தேநீரும் திபெத்தின் சிறப்பு உணவுகளில் ஒன்று. வெண்ணெய்த் தேநீருக்கென்றே இருக்கும் ஒரு கிண்ணத்தில் சிறிது வெண்ணெய்  விட்டு உப்புக்கலந்து அதில் தேநீரை ஊற்றி மரக் கரண்டியால் நன்கு அடித்துக் கலக்கி வெண்ணெயும் தேநீரும் ஒன்றுடன் ஒன்று நன்கு கலந்தபின்னர் சிறிது சர்க்கரை சேர்த்து  வெறும் தேநீராகவோ அல்லது  ஸாம்பாப் பொடியுடன் சேர்த்தோ இந்தப்பானம் அருந்தப்படும். காய்ச்சல், சளி தொந்தரவுகளுக்கு இந்த வெண்ணெய்த் தேநீர்   மருந்தாகவும் அமைந்துவிடுகிறது. திபெத்திய யாக் வெண்ணெய் நல்ல புளித்த வாடையும், சுவையும் கொண்டிருக்குமென்பதால் ஸாம்பா வெண்ணெய்த் தேநீரின் சுவை பிரத்யேகமாக இருக்கும். திபெத்துக்குச் செல்லும் சுற்றுலாப்பயணிகள் 8-10 யுவானுக்கு கிடைக்கும் இந்த தேநீரை அவசியம் சுவைத்துப் பார்க்க வேண்டும். ட்ரியின் வெண்ணெயுடன் ஸாம்பாப் பொடியைக் கலந்த உலர் கட்டிகளும் திபெத்தில் விற்பனையாகின்றன. கொதிக்கும் தேநீரில்  அல்லது பாலில் கட்டிகளைப் போட்டு கலக்கி, உப்போ சர்க்கரையோ கலந்தால் ஸாம்பா தேநீர் தயரகிவிடும்

உலர் ஸாம்பாப் பொடியை சரி பாதி அளவுக்கு நீர் அல்லது பால் சேர்த்து  கைகளால் மெதுவாக கட்டியில்லாமல் கலக்கி  கொதிக்க வைத்தும் அருந்தலாம். அல்லது உலர் மாவைக் கொதிநீரில் மெல்ல மெல்லக் கலக்கி சர்க்கரை அல்லது உப்பு சேர்ந்து சிறு உருண்டைகளாகவும் உருவாக்கலாம்.

 ஸாம்பாவின் சுவை எப்படி இருக்கும்? சாதா தேநீருடன் கலந்த ஸாம்பா தனிச்சுவையுடனும் யாக்கின் வெண்ணய்த்தேநீருடன் அருந்துகையில் பிறிதொரு சுவையுடனும் இருக்கும். எனவே ஸாம்பாவின் சுவையை இப்படித்தான் இருக்கும் என அறுதியிட்டுச் சொல்ல முடியாது. இப்போது ஸாம்பா, நெய், பால்வண்டல், மசாலா பொருட்கள் கலந்து பல்வேறு சுவைகளிலும் கிடைக்கிறது.

ஸாம்பா திபெத்தின் கலாச்சார அடுக்குகளில் இரண்டறக் கலந்து விட்டிருக்கிறது. புத்த மத விழாக்களில் படையலாக ஸாம்பா படைக்கப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களில் காற்றில் தூவப்பட்டு ஆசியளிக்கப் பயன்படுகிறது. இறந்தவரின் ஆன்மா பயணப்பட துணையாகிறது என்று நம்பப்படுவதால் தவறாமல் ஸம்பா உணவு இறப்புச் சடங்குகளில் இடம்பெறுகிறது. பிராந்திய வேறுபாடுகள் மற்றும் பேச்சுவழக்கு வேறுபாடுகளைக் கடந்து திபெத்தை ஒன்றிணைக்கிறது ஸாம்பா. 

திபெத்திய அரசியலில் ஸம்பாவின் பங்கு மிக முக்கியமானது. உலகெங்கிலும் இருக்கும் திபெத்தியர்களின் ஒற்றை அடையாளமாக ஸாம்பா இருக்கிறது. ’’ஸாம்பா உண்பவர்கள்’’ என்னும் அழைப்பு திபெத்திய எழுச்சிப் போராட்டங்களின் போது அனைவரையும் ஒன்றிணைத்த ஒரு மந்திரச் சொல்லாக இருந்தது.

 1950-களில் திபெத் சீனாவுடன் இணைக்கப்பட்டபோது,  சீனா திபெத்தின் கலாச்சாரத்தை மாற்ற முனைந்தது. அப்போது திபெத்தியர்கள் ஒண்றிணைந்து ஸாம்பாவை தங்கள்  அடையாளமாகக் கொண்டு போராடினார்கள். சீன உணவுகளில் அரிசியே பிரதானமாக இருந்ததால்  ’’நாங்கள் ஸாம்பா உண்பவர்கள்’’ என்னும் முழக்கம் திபெத்தியர்களின் தனித்த அடையாளமாக இருந்தது. போராட்டத்தின் போது நாடு கடத்தப்பட்டவர்கள் தங்களுடன் ஸாம்பாவை எடுத்துச் சென்றார்கள், எங்கிருந்தாலும் ஸாம்பாவையே  உண்டார்கள் 

 1957-ல் திபெத்தின் மிரர் நாளிதழ் (Mirror of News) ’’ஸாம்பா உண்பவர்கள் அனைவரும்! வாருங்கள்!’’ என அறைகூவியது. 1959 -ல் நிகழ்ந்த  திபெத்திய எழுச்சியின் போது, ​​”சாம்பா-உண்பவர்கள்” என்ற பதாகையின் கீழ் புரட்சியாளர்கள் அணிவகுத்துச் சென்றதன் மூலம், திபெத்தின் சக்திவாய்ந்த அடையாளமாக ஸாம்பா மாறியது. 2008-லும் 2012-லும் நடந்த எழுச்சிப் போராட்டங்களின் போது ’’எழுந்திருங்கள் ஸாம்பா உண்னும் திபெத்தியர்களே’’ என்னும் முழக்கத்துடன் போராட்ட அணிவகுப்பில் உலர் ஸாம்பாப்பொடியை தூவிக்கொண்டே சென்றதும் ஸாம்பாவின் இன்றியமையை உலகிற்குக் காட்டியது. திபெத்திய எழுச்சிப் போராட்டங்கள் அனைத்துமே ஸாம்பாபோராட்டம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

புரட்சியாளர்கள்’’ நாங்கள் ’’ஸாம்பா உண்பவர்கள் எங்கள் வேர்களை மறக்கமாட்டோம்’’ என்று முழக்கமிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். நவீன திபெத்திய  புரட்சி இயக்கங்களும் திபெத்தின் அடையாளமாக ஸாம்பாவையே குறிப்பிடுகிறது. வெகுவாக மாறிவிட்டிருக்கும் இன்றைய திபெத்திலும் ஸாம்பா  மையப்புள்ளியாக இருக்கிறது .

 தலாய் லாமா தனது உரையொன்றில்  ’’நாம் ஸாம்பா உண்பவர்கள், நம் எங்கு சென்றாலும், வாழ்வு நமக்கு எத்தனை கடினமாக இருந்தாலும் நம்முடன் எப்போதும் ஸாம்பாவைக் கொண்டுசெல்வோம்’’ எனக் குறிப்பிட்டார்.

 இப்போதும் திபெத்திய அரசியல் விவாதங்களில் ’’நான் ஸாம்பா உண்பவன்’’ என்று சொல்வது, எத்தனை எதிர்ப்பு வந்தாலும் திபெத்திய விழுமியங்கள் மீது மாறாத பற்றுக்கொண்டிருப்பதன் குறியீடாகச் சொல்லப்படுகிறது. 

புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக ஸாம்பாச் சண்டை எனப்படும் ஒருவர் மீது ஒருவர் ஸாம்பா உலர்பொடியை எறிந்து விளையாடும் நிகழ்வு நல்ல அறுவடையின் வேண்டுதலாக நடைபெறும். விருந்தினர்கள் வருகையின் போது அளிக்கப்படும் முதல் உணவும் ஸாம்பாதான்.

ஸாம்பா உலர்பொடியைத் தயாரித்து அதன் தேநீரை அல்லது உருணடைகளை தயாரிப்பது ஒரு தியானம் போல் புத்த துறவிகளால் கவனம் சிதறாமல் மனதை ஒன்றுபடுத்தி ஒரு சடங்காகவே  செய்யப்படும். ஸாம்பாவின் எளிமையும் தூய்மையும் புத்தமதத்தின்  குறியீடாகவும் திபெத்தில் கருதப்படுகிறது. செல்வச்செழிப்பின் அடையாளமாகவும் கருதப்படும் பார்லிதான் குருதட்சணையாகவும் அளிக்கப்படுகிறது. 

.இங்கு விளையும் பார்லியில் புரதம் கூடுதலாக இருக்கிறது எனவே அதிலிருந்து சங் பீர் தயாரிக்கப்படுகிறது. ஸாம்பாவில் மாவுச்சத்து, புரதம், வைட்டமின்கள்களோடு பல நுண்சத்துக்களும் நார்சத்தும் நிரம்பி இருக்கிறது.மிக அதிக அளவில் பீட்டா குளுக்கான் இருப்பதும் பார்லியில்தான்.

ஸாம்பா பார்லியின் ஏராளமான சத்துக்களால் இந்த எளிய உணவு இப்போது ஒரு Prebiotic உணவாக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. Prebiotic உணவுகள் நம் வயிற்றில் இருக்கும் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை மேலும் பலமடங்காக்கும் இயல்புடையவை . மேலும் ஸாம்பா குறைந்த க்ளைசீமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த உணவாக இருக்கிறது. தொடர்ந்து பார்லி உண்ணுவது ரத்தச் சர்க்கரை அளவையும் ரத்தக் கொழுப்பு அளவையும் குறைப்பது ஆய்வுகளில் நிரூபணமாகியிருக்கிறது.  உலகின் எந்த நாட்டையும் விட பார்லியின் தனி நபர் பயன்பாடு திபெத்தில் தான் அதிகமாக இருக்கிறது.  திபெத்தியர்களின் அசாதாரண உடல் வலிமைக்கும் ஸாம்பாதான் காரணமாக இருக்கிற நவீன மயமாகி விட்டிருக்கும் இன்றைய திபெத்தியர்களுக்கும் ஸாம்பா இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே முடியாது. உலகின் அனைத்துப்பகுதிகளையும் போலவே திபெத்திலும்  வாழ்க்கையின் போக்கிற்கு ஏற்ப உணவுக்கலாச்சாரமும்   மாறிவிட்டிருந்தாலும் ஸாம்பா திபெத்திய உணவில் காலத்தைக்கடந்தும் அப்படியே மையப்புள்ளியாக  நிலைத்து நின்றிருக்கிறது. 

ஸாம்பா திபெத்தின் பிரதான உணவு மட்டுமல்ல திபெத்திய நாகரீகத்தின் அடித்தளமும் ஸாம்பாதான். இன்றும் ஸாம்பா உலகெங்கிலும் இருக்கும் திபெத்தியர்களை ஒண்றினைத்து  அவர்களின் வேர்கள் இருக்கும் நிலப்பரப்பை நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.

குப்பை மட்குரமும் கோடையில்லா ஆண்டும்!

இந்தோனேஷியாவின் தென் பகுதியில் அமைந்திருக்கும் சும்பவா தீவிலிருந்த மாபெரும் எரிமலையான தம்போரா  1815  ஏப்ரல் 5 அன்று மிக லேசாக அதிர்ந்து நடுங்கி  சாம்பலையும் எரிமலைக் குழம்பையும் வாயுக்களையும் கொஞ்சமாகக் கக்கியபோது அது அடுத்து உண்டாக்கவிருந்த பேரழிவை அந்தத் தீவில் யாரும் எதிர்பார்த் திருக்கவில்லை. முந்தைய மூன்று ஆண்டுகளாக தம்போரா உறுமிக் கொண்டுதான் இருந்தது. அவ்வப்போது வாயுக்கள் கசிந்து, கரும்புகை மேகங்கள் எரிமலை உச்சியைச் சூழ்ந்திருந்தன. எனவே அதை தீவுவாசிகள் மிகச்சாதாரணமாக எடுத்துக்கொண்டார்கள்.

மெல்ல மெல்ல நில அதிர்வு அதிகமாகி தம்போரா ஏப்ரல் 10 அன்று மாலை பெரும் வெடியோசையுடன் வெடித்துச்சிதறிய போது சும்பவா தீவின் 35000 வீடுகளும் எரிமலைக் குழம்பில் மூழ்கி காணாமலாகி,  அலறக்கூட நேரமில்லாமல் 110000 பேர் நெருப்பாற்றினால் விழுங்கப்பட்டார்கள்.

14,000 அடி உயரத்தில் இருந்த தம்போரா வெடித்தபோது அதன்  4,000 அடி உச்சி வானில் வெடித்துச் சிதறியது, நான்கு மைல்  அகலமும் 2,000 அடி ஆழமும் கொண்ட ஒரு குழியையும் அந்த பெருவெடிப்பு உருவாக்கி இருந்தது

எரிமலையின் நெருப்புத் தூள், விமானங்கள் பறக்கும் உயரத்தை விட அதிகமாக, 40 கி மீ உயரத்தை அடைந்தது. எரிமலைத் தூசி மேகம் 1000 கி மீ தொலைவு வரை சென்றது.  சுமார் 41 கி மீ³ DRE (dense rock equivalent) அளவுக்கு பாறைக்குழம்பு வெடித்துச் சிதறியது.

தொடர்ந்து 3 மணி நேர வெடிப்பிற்குப் பின்னர்   இரவு 10 மணியளவில் நெருப்புத் தூண் வீழ்ச்சியடைந்தபோது எரிமலையின் சரிவுகளில் 100 மைல் வேகத்தில் ஓடத் தொடங்கிய நெருப்பாறுகள்  கடலில் கலந்து அழிவுகரமான ஆழிப்பேரலையை ஏற்படுத்தின. தூசி மற்றும் சிதிலங்கள் பல வாரங்களாக விழுந்தன, பல கி மீ  தொலைவில் உள்ள வீடுகள் இடிந்து வீழ்ந்தன. நன்னீர் ஆதாரங்கள் அசுத்தமாக்கப்பட்டன, பயிர்கள் அழிந்தன,  கந்தக வாயு உருவாக்கிய நுரையீரல் தொற்றினால்   பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள்.

மேலும் பல்லாயிரக்கணக்கானோர் பசி மற்றும் நோயால் இறந்தனர், சும்பவா மற்றும் அருகிலுள்ள தீவுகளில் உயிரிழப்பு எண்ணிக்கை 60,000 முதல் 90,000 வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எரிமலை வெடிப்பின் தீவிரம் 1-லிருந்து 8 வரையான கணக்கீட்டில்  Volcanic Explosivity Index (VEI), என்று குறிப்பிடப்படுகிறது. கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில்   8  அளவிலான  எரிமலை வெடிப்புகள் ஏதும் உருவாகி இருக்கவில்லை. தம்போராவின்  VEI 7 என்று அளவிடப்பட்டது.

எரிமலையியலாளர்கள் மனித குல வரலாற்றிலேயே தம்போரா எரிமலை வெடிப்புதான் ஆகப்பெரிய அழிவை, உலகளாவிய தாக்கத்தை உண்டாக்கிய அல்ட்ரா பிளினியன் வெடிப்பு என வகைப்படுத்துகிறார்கள்

கனமான தூசிப் பொழிவு சும்பவா, லொம்போக், பாலி தீவுகளையும் ஜாவாவின் மேற்குப் பகுதியையும் 20 முதல் 50 செ மீ தூசியால் மூடியது, மேலும் எரிமலையிலிருந்து 1000 கி மீ தொலைவில் கூட 1-2 செ மீ தூசி அடுக்கு காணப்பட்டது. தாம்போரா மலை வெடிப்பின் புகைமண்டலம் 27 மைல்கள் (43.5 கி மீ) உயரத்தை அடைந்தது.  

தம்போரா வெடித்தபோது ஏறத்தாழ 150 சதுர மைல் அளவுக்கு அதிலிருந்து எரிமலைக் குழம்போடு சாம்பலும், ப்யூமிஸ் கற்களும், உடைந்த பெரும் பாறைகளும், பலவகையான  வாயுக்களுடன் 60 மெகாடன் கந்தக வாயுவும் வெளியேறின.  

தம்போரா வெடிப்புகள் கந்தக வாயுக்களை வளிமண்டலத்தில் உயர்த்தியது, அங்கு அவை நீராவியுடன் கலந்து  கந்தக அமிலத்துளிகள் நிரம்பிய மேகங்களை உருவாக்கின. இந்தோனேஷியாவிற்கு வெகு தொலைவில் இருந்த நாடுகளிலும் சூரிய ஒளி இந்த மேகங்களால் மூடப்பட்டு சிவப்பு நிறமானது, காற்று மற்றும் மழையினால் மேகங்கள் சிதறவில்லை.   

கந்தக அமிலம் சூரிய கதிர்வீச்சை மறைத்ததால் உலகளாவிய வானிலை  மாறியது. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா சராசரியை விட குறைந்த வெப்பநிலையுடன் கூடிய கடுமையான குளிர் நிரம்பிய கோடையை எதிர்கொள்ள நேரிட்டது,   உலகின் சராசரி வெப்பநிலை 3°C குறைந்தது.  

தம்போரா வெடிப்பு மூன்று ஆண்டுகள் நீடித்து, உலகளாவிய வானிலை அழிவுகளை உண்டாக்கியது. தொடர்ந்து குளிர்ந்த வானிலை மற்றும் சூரிய வெளிச்சம் குறைவாக இருந்ததால் பயிர்கள் நாசமடைந்தன. பஞ்சம் மற்றும் குளிர்ந்த வானிலையை உலகின் பெரும்பகுதி அனுபவித்தது, எனவே 1816-ம் ஆண்டு “கோடை இல்லாத ஆண்டு” என அழைக்கப்பட்டது.

மனித குல வரலாற்றில்  பயங்கரமான எரிமலை வெடிப்புகள் ஏராளமாக நடந்துள்ளன. காலநிலைக்கு வெகுவாக குளிர்ச்சியைக் கொண்டு வந்த மவுண்ட் பினடுபோவின் “சிறிய உமிழ்வு” முதல், டோங்கா தீவுக்கூட்டத்தின் ஹுங்கா டோங்கா-ஹுங்கா ஹா’அபையின் அதிரடியாக நடந்த வெடிப்பு வரை எரிமலை வெடிப்புக்கள் உயிர்ச்சேதம், பொருட்சேதம் காலநிலை மாற்றம் போன்றவற்றை மட்டுமல்லாது வேறு வகையான தாக்கங்களையும் விளைவுகளையும் உண்டாக்கி இருக்கிறது. அமெரிக்காவின் யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா பல காலகட்டங்களில் நிகழ்ந்த மூன்று மாபெரும் எரிமலை வெடிப்பினால் உருவான ஒரு பிரதேசம்தான்.   

மாபெரும் எரிமலை வெடிப்புகள் அவை நிகழ்ந்த இடத்திலிருந்து மிக மிகத் தொலைவில் இருக்கும் பகுதிகளிலும் காலநிலையில் அதீத தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது. 17-ம் நூற்றாண்டின் எரிமலை வெடிப்புகள் தீவிரமான விவசாய நெருக்கடிகளை உலக நாடுகள் பலவற்றில் உருவாக்கின. 18-ம் நூற்றாண்டில் இத்தாலி மற்றும் ஜப்பானில் குறிப்பிடத்தக்க வீரியம் கொண்ட பல எரிமலை வெடிப்புக்கள் நிகழ்ந்தன. 

19-ம் நூற்றாண்டில் மிகத்தீவிரமான காலநிலைத்தாக்கத்தை உருவாக்கியது இந்தோனேஷியாவின் தம்போரா எரிமலை வெடிப்பு. உலகளாவிய அளவில், தாம்போரா வெளியிட்ட கந்தகம் விரைவாக உலகம் முழுவதும் பரவி, உலக வெப்பநிலையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியது, இது விவசாய உற்பத்தித்திறனைப் பாதித்தது,

அயர்லாந்தில் தொடர்ந்து நிலவிய குளிர் அதிகமான காலநிலை கோதுமை, ஓட்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு பயிர்களை அழித்து பஞ்சத்திற்கு வழிவகுத்தது. கோடை இல்லாத ஆண்டில் மலேரியா மற்றும் டைபஸ் நோய் பரவலும் உண்டானதால்  அங்கு 40,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்தோனேஷியாவிற்கு வெகு தொலைவில் இருந்த பல நாடுகளிலும் வளிமண்டலத்தில் இருந்த வெடிப்புத் தூசியால் செம்பொன் நிற சூரியஸ்தமனங்கள் ஏற்பட்டன. 

சூரிய உதயத்தை காணக் காத்திருக்கும் பெண்ணின் சித்திரங்கள் காஸ்பர் டேவிட் பிரெட்ரிக் உள்ளிட்ட பல கலைஞர்களால் அப்போது வரையப்பட்டன. 

1816 -ம் ஆண்டு ஜூன் நடுப்பகுதியில் கடுங்குளிரினால் மேரி, பெர்சி ஷெல்லி, கவி பைரன் மற்றும் மற்ற இரு நண்பர்கள் சுவிட்சர்லாந்தில் சிக்கிக்கொண்டனர். அப்போது நேரம் போக்குவதற்காக பைரன் ஒவ்வொருவரும் ஒரு படைப்பை  எழுதலாம் எனப் பரிந்துரைத்தார், அதுவே மேரி ஷெல்லி பிராங்கன்ஸ்டீனை உருவாக்கவும் பைரன் டார்க்னஸ் என்னும் புகழ்பெற்ற துன்பியல் கவிதையை எழுதவும் காரணமாக அமைந்தது. 

ஜெ.எம்.டபிள்யு டர்னரின் அக்காலத்தைய ஓவியங்களில் சிவப்பு நிறம் அதிகமாக இருந்தது.   

தாம்போரா மலை வெடிப்பு இந்தியத் துணைக் கண்டத்திற்கு கிழக்கே உள்ள வங்காள விரிகுடாவின் சுற்றுச்சூழல் நிலைமைகளையும் சூழலியலையும் பாதித்தது, இதனால் வங்காளத்தில் காலராத் தொற்று ஏற்பட்டது. இந்த நோய் விரைவாகப் பரவி, 1823 வரை நீடித்த உலகளாவிய தொற்றுநோயில் பல கோடி மக்கள் உயிரிழந்தனர். சென்னையில் கடும் கோடையில் மழைப்பொழிவும் பனியும் உண்டானது. 

கிழக்கு ஆசியா முழுவதிலும் பருவமழைக் காலம் பாதிக்கப்பட்டது. சீனாவின் யுனான் மாகாணத்தில் விளைச்சல் காலம் முழுவதும் வெள்ளம் மற்றும் குளிர்ந்த வானிலை நிலவியதால் 1815-1818 வரை மூன்று ஆண்டுகள் கொடிய பஞ்சம் நிலவியது.

 யுனான் பஞ்சத்திற்குப் பிறகு, பணப்பயிர்கள் அழிந்ததால் பல உள்ளூர் விவசாயிகள் பாப்பிச்செடிகளை விளைவிக்கத் தொடங்கினர். பின்னர் யுனான் மாகாணம் உலகின் முக்கிய அபின் உற்பத்தி செய்யும் பகுதியாக மாறியது.

தாம்போரா மலை வெடிப்பு வட அமெரிக்கக் கண்டத்தில் வறட்சியை ஏற்படுத்தியது, அதனால் அட்லாண்டிக் பெருங்கடலில் நுழைந்த நன்னீரின் அளவு குறைந்தது. இது நீரின் உப்புத்தன்மையால் இயக்கப்படும் கடலோட்டங்களை பாதித்தது, இதனால் வடக்கு பெருங்கடல் தற்காலிகமாக சூடாகி அட்லாண்டிக் பெருங்கடல் குளிர்ந்தது.

பயிர்கள் முற்றிலும் அழிந்ததால் சுவிட்சர்லாந்தில் உண்பதற்கு பூனை இறைச்சி மட்டுமே எஞ்சியிருந்தது, 

நெப்போலியன் போர்கள் முடிவுக்கு வந்திருந்த காலத்தில் உண்டான தம்போரா வெடிப்பு  ஐரோப்பாவில் பெரும் அழிவை ஏற்படுத்தியது. ஆண்டுக்கணக்காக தொடர்ந்த கடும் குளிர், பெருமழைக்காலங்கள் மற்றும் பனியினால் ஐரோப்பாவில் கோதுமை, ஓட்ஸ்,  புல்லரிசி விளைச்சல் முழுவதும் இல்லாமல் போய்  பட்டினியும் கலவரமும் கொள்ளைகளும் நடந்தன. உணவின்றி ஏராளமான கால்நடைகளும் மடிந்தன. லட்சக்கணக்கானோர் நாடுவிட்டு உணவுக்காகவும் உயிர் வாழ்வதற்காகவும் புலம்பெயர்ந்தார்கள்.  பலர் தங்களைத்தாங்களே அடிமைகளாக விற்றனர். இந்த நிலைமை 1819 வரை தொடர்ந்தது.  

இந்த நிகழ்வு உலக வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்ததோடு உணவு உற்பத்தி முறைகளில், சமூக அமைப்புகளில்  மாற்றமேற்படுத்தி இலக்கிய மற்றும் கலை வெளிப்பாடுகளிலும் தாக்கம் உண்டாக்கியது. தம்போரா வெடிப்புச் சுற்றுச்சூழல் அமைப்புகளின்  மீது மிக ஆழமான தாக்கத்தை உண்டாக்கியது.


எரிமலை வெடிப்பினால் உண்டான மிக நேரடியான விவசாய நெருக்கடிக்கு வரலாறு 1816-ன் கோடையில்லா ஆண்டை உருவாக்கிய தம்போரா வெடிப்பையே உதரணமாகக் காட்டுகிறது.

தொடர்ந்த ஆண்டுகளில் இந்த நெருக்கடியினால் உண்டான உணவுப் பாதுகாப்பின்மையை  களையும் பொருட்டு ஐரோப்பா முழுவதும் விவசாய வழிமுறைகள் மேம்படுத்தப்பட்டு பல புதிய முன்னெடுப்புகளும் மசோதாக்களும் உருவாகின. 

அச்சமயத்தில்தான் ஐரோப்பாவில் குப்பை மட்குரமான ஹ்யூமஸ் மண் வளத்தை அதிகப்படுத்துவதை கண்டறிந்து அது தொடர்பான ஆராய்ச்சிகள் துரிதப்படுத்தப்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஐரோப்பா முழுவதும் வேளாண் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட்டு மண்வளத்தை, பயிர்களின் விளைச்சலை அதிகரிக்கச் செய்யும் ஆய்வுகள் தீவிரப்படுத்தப் பட்டன,

19-ம் நூற்றாண்டில் குப்பை மட்குரமான ஹ்யூமஸ் என்னும் சொல் ஐரோப்பாவெங்கும் மிக அதிகமாக புழங்கியதற்கு தம்போரா உருவாக்கிய பேரழிவு ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது.

“Humus” என்னும் கிரேக்க வேர்களைக்கொண்ட லத்தீனச்சொல்லுக்கு பூமி, நிலம், மண் எனப் பலபொருட்கள் உள்ளன. மனிதர்கள், மண்ணில் வாழ்கிறவர்கள்  என்னும் பொருள் கொண்ட இந்திய ஐரோப்பிய வேர்களைக் கொண்டிருக்கும்    “Homo” என்பதுவும் இதனோடு இணைந்த சொல்தான்.


மண்ணிலிருந்து தோண்டி எடுத்தல் என்பதைக் குறிக்கும் Exhume மற்றும் மண்ணில் புதைக்கப்பட்ட பிற்பாடு என்பதைக் குறிக்கும் Posthumous ஆகிய சொற்களும் ஹ்யூமஸுடன் இணைந்தவைகளே. 

18-ம் நூற்றாண்டின் இறுதியில் நிலத்தில் இருக்கும்  தாவர மற்றும் விலங்குப் பொருட்களின் சிதைவால் உருவான, ஊட்டச்சத்துக்களும் நுண்ணுயிரிகளும்  நிறைந்த, மண்ணில் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் மண்ணில் உள்ள கரிமப் பொருளுக்க  மட்கு, மட்குரம், குப்பைமட்குரம் என்பவற்றைக் குறிக்கும்  “Humus” என்ற ஆங்கிலப் பெயர்   18-ம் நூற்றாண்டின் இறுதியில் உருவாகி 1790-களில் விவசாய மற்றும் தாவரவியல் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள், நூல்களில் இடம்பெற்றது.  

எனினும் மட்குரங்களினால் மண்வளம் மேம்படுத்தப்படுவதில் தீவிரமான ஆய்வுகள் தம்போரா வெடிப்பிற்குப் பிறகான உணவுப் பற்றாக்குறையின் போது ஐரோப்பா முழுக்க நடைபெற்றபோதுதான் Humus என்னும் சொல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக  இருந்தது. 

பண்டைய மெசபடோமிய, எகிப்திய சீன, மற்றும் இந்திய வேளாண் நாகரிகங்கள்   சாணம், மற்றும் தாவரக் கழிவுகளைச் சேர்ப்பதால் பயிர் விளைச்சல் மேம்படுகிறது என்பதை அறிந்திருந்தனர்.

ஹ்யூமஸ் என்கிற  மட்குரத்தின் வேதியியல் குறித்து அவர்கள் அறியாவிட்டாலும், மண் வளத்தைப் பராமரிக்க கழிவுகளைச் சேர்த்தல் மற்றும் பயிர் சுழற்சி ஆகியவற்றை நடைமுறைப்படுத்தினர்.

ரோமானிய எழுத்தாளர்களான கொலுமெல்லா மற்றும் பிளினி ஆகியோர் சாணம் மற்றும் சாம்பல் மூலம் மண்ணை வளப்படுத்தும் முறைகளைப் பற்றி எழுதினர்.

5,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்திய வேளாண்மை, இயற்கையாக மண் ஆரோக்கியத்தை  மேம்படுத்துவதை வலியுறுத்தியது.

சுரபாலரால் எழுதப்பட்ட விருக்ஷாயுர்வேதம், கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம், 12-ம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட அபிலா சிதார்த்த சிந்தாமணி என்கிற மனஸோல்லாசா   போன்ற பண்டைய இந்திய நூல்கள்   உரம், தாவரக் கழிவுகள் மற்றும் கழிவுகளை உரமாக்கும் முறையின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டன.

சீன விவசாயிகள் பசுந்தாள் உரமிடும் முறையைப் பின்பற்றினர். ரோமானியர்கள் விலங்குச் சாணத்தையும், மூடுபயிர்களையும் பயன்படுத்தி மண் வளத்தை அதிகரிக்கலாம் என அறிந்திருந்தனர்.

இடைக்காலத்தில்  பொதுமக்களின் அறிவுக்கு எட்டாத வகையில் மடாலயங்களில் மட்டும் மேம்படுத்தபட்ட வேளாண் அறிவு பாதுகாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

விவசாய நிலங்களில் மண்ணை வளமாக்கும் கழிவுப்பொருட்கள் திரட்டப்பட்டன என்றாலும் அதற்கான அறிவியல் புரிதல் அப்போது குறைவாக இருந்தது.

அக்காலகட்டத்தில் இந்தியாவில் விவசாயிகள் இயற்கை உரங்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். மண் பராமரிப்பு என்பது வாய்வழியாகவும் விவசாயிகளின் அனுபவ அறிவு மூலமாகவும் கடத்தப்பட்டது. பயிர்களின் விளைச்சல் மற்றும் வருவாயைப் பராமரிக்க விவசாயிகளை மன்னர்கள் மற்றும் ஜமீந்தார்கள் ஊக்குவித்தனர்.

கிருஷி-பராசரா போன்ற பிராந்தியக் கையேடுகள் மற்றும் கட்டுரைகள் இந்திய வேளாண்மையில் இயற்கை வேளாண் முறைகளை வலியுறுத்தின.

பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் (1757–1947) பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வணிக ஒற்றைப் பயிர்களான அவுரி, பருத்தி, தேயிலை ஆகியவற்றை அறிமுகப்படுத்தினர்.

அப்போது இந்திய வேளாண் முறை பாரம்பரிய உயிரியல் முறையிலிருந்து விலகி, ரசாயனங்கள் உபயோகிக்கப்பட்டு  பல பகுதிகளில் மண் சோர்வுக்கு வழிவகுத்தது.

அச்சமயத்தில்தான் இந்தியாவில் பணியாற்றிய ஆங்கில தாவரவியலாளர் சர் ஆல்பர்ட் ஹோவர்ட்   கழிவுகளை உரமாக்கி மண் வளத்தை அதிகப்படுத்துதலுக்கு முன்னுரிமை அளித்து மண் வளத்தைக்காக்கும் ஆய்வுகளை முன்னெடுத்தார்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய காலமான 1947–1980களில்  பசுமைப் புரட்சி உருவாகி ரசாயன உரங்களையும் அதிக விளைச்சல்  அளிக்கும் கலப்பின பயிர்களையும் அறிமுகப்படுத்தியது.

இந்திய வேளாண்மையின் கவனம் செயற்கை உரங்களின் பயன்பாட்டுக்கு மாறியதால் மட்குரம் மற்றும் உயிரி உரங்களில் இருந்து கவனம் குறைந்தது.

அதிக அளவிலான ரசாயன வேளாண்மை,மண் கரிம கார்பன் குறைப்பு,மண் சிதைவு மற்றும் பாரம்பரிய வேளாண் அறிவின் இழப்புக்கு வழிவகுத்தது. விளைவாக வேளாண் உற்பத்தித்திறன் அதிகரித்தாலும், நீண்டகால மண் ஆரோக்கியம் மற்றும் பல்லாண்டுகளாக உருவாகி வந்த குப்பை மட்குரத்தின் அளவு வெகுவாகக் குறைந்தது.

1990 களில் இருந்து தற்போதைய நவீன வேளாண் காலம் வரை சுபாஷ் பாலேகர் மற்றும் நம்மாழ்வார் போன்றோரால் உயிரியல் வேளாண்மை, இயற்கை வேளாண்மை முறைகள் மீட்டெடுக்கும் முயற்சிகள் தீவிரமடைந்திருக்கின்றன   

அறிவியல் புரட்சி நிகழ்ந்த  17ம்-18ம் நூற்றாண்டுகளில்தான் “ஹியூமஸ்” என்ற சொல் இலத்தீன் மொழியிலிருந்து வந்தது.

1761-ல் வாலேரியஸ்  ஹ்யூமஸ் என்கிற குப்பை மட்குரத்தை மண்ணின் ஒரு அங்கமாக அல்லாது மண்ணின் தனித கூறாக அங்கீகரித்தார். இவர் ஹ்யூமஸை “சிதைந்த இயற்கைக்கரிமப் பொருள்” என்று வரையறுத்தார். ஆனால் அந்த நேரத்தில் ஹ்யூமஸின் வேதியியல் தன்மை பற்றிய அறிதல்கள் தெளிவற்று இருந்தன. இருப்பினும், வாலேரியஸின் பங்களிப்பு பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளின் இறுதியில் வளர்ந்து வந்த அறிவியல் முறைகளால் சோதிக்கக்கூடிய கருதுகோள்களை வழங்கியது. 

18-ம் நூற்றாண்டைச்சேர்ந்த ஜெத்ரோ துல் (1674 –1741,) மண் தாவர வளர்ச்சிக்கு ஒரு ஊடகம் மட்டுமே, தாவரங்கள் நீரில் கரைந்த ஊட்டச்சத்துக்களை மட்டுமே உறிஞ்சுகின்றன என்று அறிவித்து   ஹ்யூமஸின் பங்கை குறைத்து மதிப்பிட்டார். 

ஜெர்மனியைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி ஆல்பிரெக்ட் தேயர் (1752-1828) ஹ்யூமஸை மண்வளத்திற்கான முதன்மை ஆதாரமாக மீண்டும் வலியுறுத்தினார், ஹ்யூமஸ்தான் தாவர ஊட்டச்சத்தின் முதன்மை ஆதாரம் என்று வலியுறுத்தினார். இதுவே “ஹ்யூமஸ் கருதுகோள்” என்று அழைக்கப்பட்டது.1809-ல் மட்குரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ‘’புத்திசாலித்தனமான வேளாண்மையின் கோட்பாடுகள்’’ என்ற நூலையும் அவர்  வெளியிட்டார். 

இந்த கருதுகோள் அதிக கரிமப் பொருள் இருப்பு மற்றும் அதிக மண் வளம் ஆகியவற்றுக்கு இடையேயான  தொடர்புகளுக்கான விளக்கத்தை உருவாக்கிய ஆரம்ப முயற்சியாகப் பார்க்கப்பட்டது.

தொடர்ந்த ஆண்டுகளில் ஹ்யூமஸின் கார்பன், தாவரங்களுக்கு முக்கியமான கார்பன் ஆதாரம் என்று அறியப்பட்டது, ஜெர்மானியத் தாவரவியலாளர் ஸ்ப்ரெங்கல் (1787–1859) 1826-ல் ஹ்யூமஸில் உள்ள கரையக்கூடிய உப்புகள்தான் உண்மையான ஊட்டச்சத்துக்கள் என்பதை நிரூபித்தார்

19-ம் நூற்றாண்டின் மத்தியில் ஹ்யூமஸ் கோட்பாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தது. 

வேளாண்மையில் ரசாயன புரட்சி உண்டான  இக்காலகட்டத்தில் ஜெர்மன் வேதியியலாளர் ஜஸ்டஸ் வான் லீபிக் (1803 – 1873) 1840 களில் மண் அறிவியலை புரட்சிகரமாக மாற்றினார். இவர் தாவரங்கள் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்றவற்றைப் போல் மண்ணிலிருந்து நேரடியாக ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுகின்றன, ஹ்யூமஸிலிருந்து நேரடியாக அல்ல என்பதை நிரூபித்தார்.  இவரே நவீன வேளாண் வேதியியலுக்கான அடித்தளத்தை அமைத்தார்.

இவர் ஹ்யூமஸ் மண்ணின் இயல்புகளை மேம்படுத்துகிறது மற்றும் ஊட்டச்சத்துக்களைத் தக்கவைக்கிறது என்பதை நிரூபித்தார், ஆனால் அது நேரடியாக தாவர உணவல்ல என்பதையும் காட்டினார்.

இவரது ஆய்வு முடிவுகள் வேதியியல் உரங்களின் மீது கவனம் செலுத்த வழிவகுத்தது, ஆனால் மண் ஆரோக்கியத்திற்கு ஹ்யூமஸ் முக்கியமானதாக இருந்ததென்பதை அவர் மறுக்கவில்லை.

 அவரது ஆய்வுகள் ஹ்யூமஸ்:

  • மண்ணின் பல்வேறு இயல்புகளை மேம்படுத்துகிறது
  • நீர் தக்கவைப்பை அதிகரிக்கிறது
  • மண் pH ஐ சமநிலைப்படுத்துகிறது
  • நுண்ணுயிர் செயல்பாட்டை ஆதரிக்கிறது என்பதை நிறுவின.

இவரது  ஆய்வு முடிவுகள் பெருமளவில் வேளாண் மாற்றங்கள் உருவாக்கி, செயற்கை உரங்களின் வளர்ச்சி மற்றும் பரவலான பயன்பாட்டுக்கு வழிவகுத்ததால், வேளாண்மை  உயிரியல் முறைகளிலிருந்து விலகி ரசாயன அடிப்படியிலானது. பயிர் விளைச்சல் அதிகரித்தது, ஆனால் நீண்டகால அதிகபட்ச  ரசாயனப் பயன்பாடு மண் சிதைவுக்கு வழிவகுத்தது.

19-ம் நூற்றாண்டின் இறுதிகளில் ரஷ்ய புவியியலாளரும்  மண் அறிவியலின் அடித்தளங்களை அமைத்த பெருமைக்குரியவருமான வாசிலி வாசிலியேவிச் டோகுசேவ் (1846–1903)  தீவிரமான களப்பணிகளுக்குப் பின்னர் மண்ணை வகைப்படுத்தினார். இவரது பங்களிப்பு மண் உயிரியல் ஆய்வுகளில் மிக முக்கியமானதாக இருந்தது

அதே காலகட்டத்தில் அமெரிக்க நவீன மண் அறிவியலின் தந்தையான   யூஜின் வோல்ட்மர் ஹில்கார்ட் (1833 – 1916)  தனது மண் வளம் குறித்த விரிவான ஆய்வு முடிவுகளை வெளியிட்டார். மண் வேதியியலில் இவரது பங்களிப்பு உலகளாவிய கவனம் பெற்றது. 

இவற்றைப்போன்ற 20- ம் நூற்றாண்டின் மண் நுண்ணுயிரியல் ஆராய்ச்சிகள் ஹ்யூமஸின் பங்களிப்பை  மறுமதிப்பீடு செய்தன. ஹ்யூமஸ் நேரடி தாவர உணவல்ல என்றாலும் மண்ணின் இயல்புகளை மேம்படுத்துதல், ஈரப்பதத்தைத் தக்கவைத்தல், நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளுக்கு உணவளித்தல் ஆகிய மிக முக்க்கியமானவற்றைச் செய்கிறது என்பது கண்டறியப்பட்டது.

மண் நுண்ணுயிரிகளின் கண்டுபிடிப்பு ஹ்யூமஸ் எவ்வாறு ஆரோக்கியமான மண் சூழலமைப்பை உருவாக்குகிறது என்பதை வெளிப்படுத்தியது.

1950 களின் நடுப்பகுதியில் சர் ஆல்பர்ட் ஹோவர்ட் உள்ளிட்டவர்களால் தலைமை தாங்கப்பட்ட உயிரியல் வேளாண்மை இயக்கத்தினால் கழிவுகளை உரமாக்கல்,  குப்பைமட்குரம், மற்றும் இயற்கை மண் வளம் ஆகியவற்றின் மீதான ஆர்வம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

20- நூற்றாண்டின் இறுதிகளில்  யூத அமெரிக்க கண்டுபிடிப்பாளர், உயிர்வேதியியளாலர், மற்றும் நுண்ணுயிரியலாளரான செல்மன் ஆபிரகாம் வாக்ஸ்மேன் (Selman Waksman) (1888-1973) மண்ணில் வாழும் உயிரினங்களின் சிதைவு குறித்த ஆராய்ச்சியின் போது ஸ்ட்ரெப்டோமைசின் உள்ளிட்ட  பல நுண்ணுயிர் எதிர்ப்பிகளைக் கண்டுபிடித்தார். இவரே  “மண் நுண்ணுயிரியல்” என்ற சொல்லை உருவாக்கினார், இவரது ஆய்வு மட்குரங்கள் மண் வளத்தில் உண்டாக்கும் தாக்கம் பற்றிய பெரும் புரிதலை அளித்தது.

ஆங்கிலேய தாவரவியலாலரும் இயற்கை வேளாண்மையின் தந்தை எனக் கருதப்படுபவருமான சர் ஆல்பெர்ட் ஹோவர்ட்  (1873 –  1947) இந்திய விவசாயிகளுடன் தங்கி இருந்து மட்குரம் குறித்த பல ஆய்வுகளின் கண்டுபிடிப்புக்களை வெளியிட்டார், அவர் இந்திய பயிர் நோயியலில் பெரும் பங்காற்றினார். 

மட்குரங்களால் மண்வளம் பெருகுவதை நிரூபித்தவர்களில் இவர் மிக முக்கியமானவர். இந்தியாவின் மத்திய பிரதேச, இந்தூரில் உள்ள பாரம்பரிய இந்திய வேளாண் முறைகளை ஆய்வு செய்தார். இந்தூர் கழிவுகளை உரமாக்கும் முறையை உருவாக்கினார்.ஆரோக்கியமான மண்ணுக்கு ஹ்யூமஸ் கட்டுமானம் அவசியம் என்று வலியுறுத்தினார். “அன் அக்ரிகல்சரல் டெஸ்டமெண்ட்” (1940) என்ற நூலை எழுதி உலகளாவிய உயிரியல் வேளாண்மையை வலியுறுத்தினார்.

இதன் விளைவாக இந்திய பாரம்பரியக் கழிவுகளை உரமாக்கும் முறைகள் உலகளாவிய நவீன மட்குரத்தின் அடிப்படையிலான உயிரியல் வேளாண்மைக்கு பங்களித்தது. இக்காலகட்டதுக்குப் பிறகே உயிரியல் வேளாண்மை பிரபலமடைந்து மண் ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. 

21-ம் நூற்றாண்டின் சுற்றுச்சூழல் நெறிமுறைகள், நீடித்த வேளாண்மை, காலநிலை எதிர்ப்புத்திறன், மற்றும் கார்பன் சேமிப்பிற்கு குப்பை மட்குரம் மிக அவசியம் எனக் கருதுகிறது.

நவீன மண் அறிவியல் ஹ்யூமஸை மண் நுண்ணுயிரியல், கார்பன் சுழற்சி, மற்றும் காலநிலையோடு இணைந்து செயல்படும் வேளாண்மைக்கு அத்தியாவசியம் என்கிறது

 நிலத்தின் மேற்பரப்பில் தான் இந்த மட்குதல் என்னும் செயல் நுண்ணுயிரிகளால் நடைபெறுகிறது. குப்பை மட்குரமான ஹ்யூமஸ் உருவாகும் நிகழ்வு ஹ்யூமிஃபிகேஷன் (Humification) எனப்படுகிறது

ஹ்யூமிஃபிகேஷன் என்பது இறந்த உடல்கள் அழுகி மட்குதல் என்னும் செயல்பாட்டின் (decomposition) ஒரு பகுதியாகும். இது மண்ணில் உள்ள உயிரினங்களின் சடலங்கள் மற்றும் செடியின் கழிவுகள் மண்ணில் விழுந்து அழிந்தபின்பு நிகழும் ஒரு முக்கியமான நிலை.

ஹ்யூமிஃபிகேஷன் செயல்முறை:

  • முதலில், செடி மற்றும் விலங்குகளின் சடலங்கள் மண்ணில் விழுகின்றன.
  • இவைகள் பாக்டீரியா, பூஞ்சைகள் போன்ற சிதைக்கும் நுண்ணுயிரிகளின் (decomposers) மூலம் சீரான முறையில் நொறுக்கப்படுகின்றன.
  • இதனால், கார்பன், நைட்ரஜன் போன்ற மூலக்கூறுகள் சிதைவடைகின்றன.
  • இதன் பின், மிகக் குறைவாக முற்றிலும் சிதைவடையாத கழிவுகள் மண்ணிலேயே இருந்து விடுகின்றன – இதுவே ஹ்யூமஸ்  எனப்படும் குப்பை மட்குரமாகிறது.

ஹ்யூமஸ் என்பது கருமை நிறமுடைய, நைட்ரஜனும் கார்பனும் நிறைந்த ஒரு சீரான இணைபொருள். இது மண்ணின், காற்றோட்டம், ஈரப்பதம், நீரைத் தக்கவைத்துக்கொள்ளும் இயல்பு மற்றும் வளத்தை மேம்படுத்துகிறது. ஹ்யூமிஃபிகேஷன் மிக மெதுவாக நடக்கும் ஒரு இயற்கை செயல்முறை ஆகும், மட்குரம் உருவாக பல ஆண்டுகளாகும். 

அனைத்து குப்பை மட்குரங்களும் ஒன்று போல் இல்லை. மண் அறிவியலில், மட்குரங்கள் மண்ணில் அது நீடித்திருக்கும் காலத்தின்  அடிப்படையில்  இரண்டாக வேறுபடுத்தப்படுகிறது. 

  1. ஊட்டச்சத்து மட்குரம் என்பது மண் உயிரினங்களால் விரைவாக நுகரப்படும் உயிரியல் பொருட்களைக் கொண்டுள்ளது. 
  2. மாறாக, நிரந்தர மட்குரம் என்பது உடைக்கப்படுவதற்கு கடினமான ஹியூமிக் பொருட்களால் ஆனது, இது மெதுவாக அழிக்கப்பட்டு மண்ணில் நீண்ட காலம் தங்கி இருக்கிறது. இந்த மட்குரம்தான் ஊட்டச்சத்துக்களையும் நீரையும் பிணைத்து வைத்து, வளமான மட்குர மண்ணின் உயிரியல் கட்டமைப்பின்  சுமார் 90 சதவீதத்தை உருவாக்குகிறது.

நிரந்தர மட்குரம் நிறைந்த மண் ’களிமண்-மட்குரம்’ தொகுப்புகளால் செழித்துக் காணப்படுகிறது. மட்குரப் பொருட்கள் மற்றும் களிமண் தாதுக்களுக்கு இடையேயான பிணைப்பானது மண் நுண்ணுயிரிகளின் செயல்பாட்டால் உருவாக்கப்படுகிறது.

நிரந்தர மட்குரம்  தாவரங்களின் வேர்களுக்கருகே எப்போதும்  நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை கிடைக்கச் செய்கிறது. குப்பை மட்குரம் இல்லாத மண்ணில், இந்த தொகுப்புகள் பெரும்பாலும் இல்லை. எனவே உரமிடல் மூலம் மண்ணுக்கு சேர்க்கப்படும் ஊட்டச்சத்துக்கள் பெரும்பாலும் தாவரங்களால் பயன்படுத்தப்படாமல் நீர்மட்டத்தில் இறங்குகின்றன, இதனால் தாவரங்கள் பலவீனமடைந்து நோய்க்கு ஆட்படுகின்றன.

பூமியின் மேற்பரப்பில் கிடைக்கக்கூடிய 4-12 அங்குல குப்பை மட்குரம் கொண்ட மண் எனும் விலைமதிப்பற்ற வளம் கவனமாக பாதுகாக்கப்பட வேண்டி இருக்கிறது.

ஒவ்வொரு தாவரமும் மண்ணில் வளர்ந்து பின்னர் அறுவடை செய்யப்படுகையில் மண் கணிசமான அளவில் ஊட்டச்சத்துக்களையும் மட்குரத்தையும் இழக்கிறது. காடுகள் மட்டுமே தங்கள் நுகர்வை விட அதிக மட்குரத்தை  உருவாக்க முடியும். மற்ற அனைத்து மண்ணும் தொடர்ந்து மட்குரத்தை இழக்கிறது. 

உலகெங்கிலும் உள்ள  விளைநிலங்களில் ஏற்கனவே மட்குரம் குறைவாக உள்ளது, அதாவது குறைந்த 1 முதல் 2 சதவீதம் அல்லது மிகக் குறைந்த < 1 சதவீதம்.

எனவே, நமது விளைநிலங்களில் இருக்கும் மட்குரத்தை  பாதுகாப்பது மட்டும் போதாது. உலகளாவிய மட்குர அளவுகளை  அதிகரிக்கக் கூடிய வகையில் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்றால், மட்குர மேலாண்மை மற்றும் மண்ணின் உயிரியல் அமைப்பு பற்றிய ஆழமான புரிதல் தேவைப்படுகிறது.

விளைநிலங்களில் மட்குரத்தை  பெறுவதற்கான எளிய முறை உயிரியல் கழிவுகளை திரட்டிச்சேகரிப்பது, ஊடு பயிர்கள் மற்றும் துணைப் பயிர்களின் பயிரிடல், உயிரி உரங்களின் சீரான விநியோகம் மற்றும் நிலத்தைத் தரிசாக விடுவதை தவிர்த்தல் ஆகியவை அடங்கும். நிரந்தர மட்குர உருவாக்கத்தில் ஹ்யூமிக் அமிலங்களைப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்க பயனை அளிக்கும்.

ஹியூமிக் அமிலங்கள் மட்குரம் நிரம்பிய  மண்ணில், பீட், கடல்நீர் மற்றும் லியோனார்டைட் என்று அழைக்கப்படும் மென்மையான லிக்னைட்டில் காணப்படுகின்றன. அதிக ஆக்சிஜனேற்றம் அடைந்த லியோனார்டைட்டிலிருந்து பெறப்படும் ஹ்யூமிக் அமிலங்கள் பாரம்பரிய ஆதாரங்களிலிருந்து பெறப்படும் ஹ்யூமிக் அமிலங்களை விட ஐந்து மடங்கு அதிக உயிரியல் செயல்பாட்டைக் கொண்டுள்ளன.

மண்ணில், ஹ்யூமிக் அமிலங்கள் பயிர்களின் தாவர வளர்ச்சி மற்றும் வேர் வளர்ச்சியை மேம்படுத்துவதன் மூலமும், விரும்பத்தக்க மண் நுண்ணுயிரிகளின் பெருக்கத்தை தூண்டுவதன் மூலமும் மட்குர உருவாக்கத்தைத் தூண்டுகின்றன. அவை தேவையான களிமண்-ஹ்யூமஸ் தொகுப்புகளின் உருவாக்கத்தை செயல்படுத்தி நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை பிணைத்து வைத்து, தேவைப்படும்போது தாவரங்களுக்கு அளிக்கின்றன.

மண்ணில் ஒரு சதவீதம் மட்குர அதிகரிப்பு ஒரு ஹெக்டேருக்கு 170,000 லிட்டர் அதிக நீர்த் தக்கவைப்புத் திறனை வழங்குகிறது,  இது வறட்சி எதிர்ப்புத்தன்மை மற்றும் நீர் பாதுகாப்பில் ஹ்யூமஸின் முக்கியமான பங்கை நிரூபிக்கிறது.  

மண் கட்டமைப்பை மேம்படுத்துதல், ஊட்டச்சத்துக்களை சேமித்தல், நீர் வளங்களை நிர்வகித்தல், கார்பனை தக்கவைத்தல், மற்றும் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளுக்கான வாழ்விடமாக செயல்படுவது- ஆகிய ஐந்து முக்கிய செயல்பாடுகள் மூலம் ஹ்யூமஸ் வேளாண்மையில் மிக முக்கியப்பங்காற்றுகிறது

கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் நாம்  ஹியூமஸின் இருபங்கை இழந்திருப்பது வேளாண்மை நடைமுறைகளை  மறுகட்டமைப்புச் செய்யவேண்டியதன்  அவசியத்தை வலியுறுத்துகிறது. 

வேளாண் அறிவியல் ஹ்யூமஸின் சிக்கலான மூலக்கூறு கட்டமைப்புகள் மற்றும் தொடர்புகள் பற்றிய நமது புரிதலை ஆழப்படுத்திக் கொண்டிருக்கிறது என்றாலும் நமது உணவுப்பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டிருக்கிறது என்னும் உண்மை  நம் முன்னே தெளிவாக உள்ளது.

குப்பை மட்குரத்தின் முக்கியத்துவம் வெறும் மண் சேர்ப்புப் பொருள் என்பதற்கும் அப்பால் நீண்டு விரிகிறது,   மீட்டெடுக்கப்பட்டிருக்கும் பாரம்பரிய வேளாண் முறைகளும் புதிய ஆராய்ச்சிகளும் ஹ்யூமஸ் நிறைந்த மண்ணை உருவாக்கி வேளாண் உற்பத்தித்திறனை மாற்றுவதற்கான அற்புதமான சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்தியுள்ளன. 

எதிர்காலத்தில் உலக உணவுப்பாதுகாப்பு பெரும் அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடும். மக்கள் தொகைப் பெருக்கத்தினாலும் விளைநிலப்பற்றாக்குறையாலும் உணவுக்கான தேவை அதிகரிப்பது, முக்கிய வேளாண் பகுதிகளில் நீர்வள மூலங்கள் குறைதல், மற்றும் காலநிலை மாற்றத்தின் காரணமாக கடுமையான வானிலை மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு இவை அனைத்தும் இந்த அழுத்தங்களுக்கு காரணமாக இருக்கும்.

இந்த சவால்களை எதிர்கொள்ள பல வழிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன, அவற்றில் செயல்திறன் குறைந்த நிலங்களில் பயிர் விளைச்சலை அதிகரிப்பதும், வேளாண் வளங்களின் பயன்பாட்டு செயல்திறனை மேம்படுத்துவதும் (அதாவது நீர், உரம் மற்றும்  உயிரிப் பூச்சிக்கொல்லிகள்), உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றுவதும், உணவுக்கழிவுகளைக் குறைப்பதும் அடங்கும்  இந்த வழிமுறைகள் பயனுள்ளவை என்றாலும், உலக உணவுப்பாதுகாப்பில் ஏற்படும் பாதிப்புக்கு இவை நேரடியாக தீர்வு காணவில்லை.

எனவே மண்ணில் உள்ள ஹ்யூமஸினால் மேம்படும் மண்ணின் வளமென்பது தொடர்ந்து நீடிக்கக்கூடிய மற்றும் உறுதியான வேளாண் அமைப்புகளுக்கான அடித்தளமாக இருக்கிறது.  

வேளாண்  அறிவியல் தொழில்நுட்பங்கள் தொடர்ந்து வளர்ந்து வரும்போதும் மேம்படுத்தப்படும்போதும், ஹ்யூமஸ் வேளாண்மையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மேலும் முக்கியமான பங்கு வகிக்கும். இதன் பொருட்டு  ஹியூமஸ் மேலாண்மை உத்திகளில் ஆய்வுகள் தொடர வேண்டியது மிக முக்கியமான தேவையாயிருக்கிறது. 

ஹ்யூமஸ் நிறைந்த மண்ணின் மூலம் நாம் நிலத்தின் வளமையை மட்டும் மேம்படுத்தவில்லை  உணவுப் பாதுகாப்பிற்கான நாளைய சவால்களை சமாளித்து, எதிர்கால தலைமுறைகளுக்கான சுற்றுச்சூழல் வளங்களைப் பாதுகாத்து, நீடித்த உணவு உற்பத்திக்கான அடித்தளத்தையும் கட்டியெழுப்புகிறோம்.

(தாம்போரா இன்னும் உயிருடன் இருக்கிறது. அதன் கடைசி வெடிப்பு 1967-ல் நிகழ்ந்தது, 2011, 2012 மற்றும் 2013 களில் தம்போரா மெல்ல உறுமியபடி  கசிவுகளையும் வாயுக்களையும் வெளியேற்றியது)

திறந்திடு சீசேம்!

வெள்ளிமலை தாவரவியல் குழுவினர் இன்று வரை தொடர்பில் இருக்கிறார்கள். நானே அதிகாலையில் எழுந்து நாளைத்துவங்கும் ஒருத்தி என்றால் அதில் சிலர் நான் எழும்போதே எனக்கென ஏதேனும் தகவலோ கேள்வியோ புகைப்படமோ வைத்திருப்பார்கள். ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். அவர்களுடன் இணைந்து நானும் புதிதுபுதுதாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

இன்று காலை பெங்களூர் பிரியா நிறைந்து பூத்திருந்த எள் வயலின் புகைப்படம் அனுப்பி எள்ளின் வகைகளைக்குறித்து கேட்டிருந்தார். நான் அதன் கருப்பு வெள்ளைபிரவுன் சிவப்பு வகைகளையும் அதன் ஆங்கிலப்பெயரான Sesame , தாவர அறிவியல் பெயரான Sesamum indicum (Sesamum indicum subsp. indicum)என்பதையெல்லாம் காரில் கல்லூரிக்கு வருகையில் சொல்லிக்கொண்டிருந்தேன்.

அறிவியல் பெயரிலிருந்து வந்த இதன் sesame என்னும் ஆங்கிலப்பெயருக்குப்பின்னால் ஒருசுவாரஸ்யம் இருக்கிறது.

எள் இந்தியாவுக்கு சொந்தமான பயிர்.மனிதர்கள் பயிரிட்ட முதல் எண்ணெய்பயிர் எள் தான். சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எள் இந்தியாவில் பயிராகிறது. இந்து மதம் விஷ்ணுவின் வியர்வையிலிருந்து உருவான பயிர் என்று எள்ளைச்சொல்கிறது. தரிசு நிலங்களில் கூட எள் பயிராகும். பல மதங்களில் எள்ளும் எள் எண்ணெயும்புனிதமானதாகக் கருதப்படுகிறது.

பெடாலியேசியைச்சேர்ந்த (Pedaliaceae) எள்ளின் கனி எனப்படும் pods மிகச்சுவாரஸ்யமானது. பல நாகரீகங்களில் சத்துக்கள் அடங்கிய இதன் சிறு விதைகள் அந்த கனியிலிருந்து வெடித்து திறந்து வெளியாவதைப் புதையல் கிடைத்தது போல் எனக்கொள்வார்கள். எனவேதான் open sesame என்பது புதையல் இருக்கும் இடம் திறப்பதற்கான மந்திரச்சொல்லாக இருக்கிறது.

அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் குகையை திறக்க அலி ’’திறந்திடு சீசேம்’’ என்று சொல்வது இதனால்தான். பாபிலோனியாவில் பல மந்திர தந்திர வித்தைகளில் எள் எண்ணெய் எனப்படும் நல்லெண்ணெய் உபயோகத்திலிருக்கிறது. யூதர்களின் மாயாவாத சடங்குகளில் எள் சொர்க்கத்தின் இன்னொரு பெயராகக் கருதப்படுகிறது. ஹீப்ரூ மொழியிலும் எள்ள்ளுக்கு கடவுள் என்னும் பொருள் இருக்கிறது

sesame என்னும் கிரேக்கச்சொல் பழமையான செமிடிக் மொழிகள் ஒன்றான, இப்போது புழக்கத்தில் இல்லாத பண்டைய மெசபடோமியர்களின் மொழியான அக்காடியனின் (Akkadian) தாவர எண்ணெய் என்னும் பொருள் கொண்ட்  šamaššamu என்னும் சொல்லில் இருந்து உருவானது.

57% எண்ணெய் அளவு கொண்டிருக்கும் எள்ளின் பல பயன்களில் ஒன்று அதிலிருக்கும் லிக்னன்களான sesamin & sesamolin ஆகியவற்றின் ரத்தக்கொழுப்பைக்குறைக்கும் இயல்பு. இதன் தமிழ்ப்பெயரில் ஒன்றான திலம் என்பதிலிருந்துதான் ஆங்கிலப்பெயரான் til என்பது வந்திருக்க வேண்டும்.எள் தான் எண்ணெய்ப்பயிர்களின் ராணி.

நேற்று Dr செளமியா அவரது தோட்டதில் இருந்த எள் சக்களத்தி என்று சொல்லப்படும் எள் பயிரைப்போலவே இருக்கும் Cleome monophylla வின் புகைப்படத்தை அனுப்பி இருந்தாள். எத்தனை எத்தனை சுவாரஸ்யங்கள் தாவரங்களில் !

Cleome monophylla-PC Dr. Sowmiya

தாலியா!

அகரமுதல்வனின் வாட்ஸ்அப் நிலைத்தகவலில்  ரத்தச்சிவப்பில் ஒரு குட்டி தாலியா மலரைப் பார்த்தேன். அத்தனை வசீகரமாக இருந்தது பார்க்க.  color wheel -ல் பச்சைக்கு நேர் எதிரில் இருப்பது சிவப்பு என்பதால் பச்சை இலைகளுக்கிடையில் தெரிந்த அந்த மலர் அழகான அழகாயிருந்தது.

எனக்குத் தாலியாக்கள் மீதும் பிரியம்தான். பள்ளி கல்லூரிக் காலங்களில் வீட்டு வாசலில் காலை நேரத்தில்   ஊட்டி ரோஜாவும் தாலியாக்களும் விற்கப்படும். நான் ஊட்டி ரோஜாக்களை விரும்பியதில்லை. அது ஒரு வாரம் வரை வாடாமலிருப்பதும் அடுத்தநாளில் இருந்தே இதழ்களில் விளிம்புகளில் கருப்புப் படிந்துவிடுவதும்,  கனமாக இருப்பதும் காரணமென்றாலும் முதன்மைக்காரணம் அது மலராமல் கூம்பியே இருப்பதுதான்.எனக்கு மலரென்றால் மலர்ந்திருக்க வேண்டும்.

தாலியா அப்படியல்ல குழந்தையொன்று சிரிப்பதைப் போல  முழுக்க மலர்ந்திருக்கும் அதில் பல நிறங்கள் இருந்தாலும் நான் அதிகம் தேர்ந்தெடுப்பது வெள்ளையும் இளஞ்சிவப்பும்தான். கல்லூரி முதல் அவ்ருடம் படிக்கையில் (நானும் மித்ராவும் ஒன்றாகத்தான் கல்லூரிக்குள் நுழைந்தோம்)மித்ராவின் கல்லூரித்தோழர் அமல்ராஜ் கம்பீரமாக  ஒரு சைக்கிளில் பூக்களை விற்றுக்கொண்டு வருவார். கல்லூரிக்குச் செல்ல அரை மணி நேரம் முன்பு அவர் வீடு வீடாகப் பூக்களைச் சைக்கிளின் பின்னிருக்கும் கூடையில் வைத்துக்கொண்டு நிமிர்வுடன் வருவார். ஒருபோதும் அந்தச்செயலில் அவர் வருத்தமுற்றதும் தாழ்வாக உணர்ந்ததும் இல்லை. குளித்து நல்ல உடையணிந்து வரும் அவர் அப்படியே அதே உடையில் பின்னர் கல்லூரிக்கு குறித்த நேரத்தில் வந்துவிடுவார். பிற்பாடு அவர் உடற்பயிற்சி இயக்குனராகியதை அறிந்து கொண்டேன், அவரை, அவரது இளமைக்காலத்தை  அவருடன் பொருளாதாரம் படித்த   மித்ராவின் தங்கை நினைவு கூறுகிறாள் என்பதை  அவர் கற்பனை கூடச் செய்திருக்க  மாட்டார். தனக்கான செலவுகளுக்காகப் படிக்கையிலேயே ஒரு வேலையைச் செய்து கொண்டிருந்த அவர்மீது எனக்கு அப்போதும் இப்போதும் பெரும் மரியாதை உண்டு. 

தாலியாவுக்கு வருகிறேன். அப்படி நான் தாலியாக்களை பின்னலில் வைத்துக்கொண்டுதான் கல்லூரிக்குச் செல்வது வழக்கம். அரிதாக டிசம்பர் பூச்சரமும் வைப்பதுண்டு. பின்னல் நல்ல அடர்த்தியாக இடைவரை நீண்டிருக்கும். (அந்த அடர்ந்த நீண்ட கூந்தலைத்தான் சரணுக்கும் தருணுக்குமாகப் பிரித்துக் கொடுத்துவிட்டேன்).மித்ராவுக்கு என்னைக் காட்டிலும் நீண்ட அடர்ந்த பின்னல். இப்போது தாலியாக்களை பின்னலில் வைத்துக்கொள்ளும் பெண்களைப் பார்ப்பதில்லை.ஏன் பூச்சரம் வைத்துக் கொள்பவர்களும் அதிகமில்லை. 

அந்தப்புகைப்படத்தில் தாலியா அப்படி கொள்ளை அழகாக இருந்தது. அநேகமாக அகரமுதல்வன் அதை ஒரு மலை வாசஸ்தலத்தில் எடுத்திருக்கக்கூடும் ஏனெனில் உடனிருந்த புகைப்படத்தில் ஒரு ஆப்பிரிக்கன் லில்லியும் இருந்தது. இவையிரண்டுமே கடல்மட்டத்துக்கு 1000 அடி மேலே இருக்கும் பகுதிகளில் மட்டுமே செழிப்பாக வளரும்.

தாலியாக்கள் வெகுசுவாரஸ்யமான வரலாற்றைக் கொண்ட மலர்கள்.

மெக்ஸிகோவை பூர்வீகமாகக் கொண்ட இவை சூரியகாந்தியின் குடும்பமான அஸ்டரேசியைச் சேர்ந்தவை. தாலியா பேரினத்தில் சுமார் 50 சிற்றினங்களும் ஆயிரக்கணக்கான நிறங்களில் மலர்களும் இருக்கின்றன.

தாலியாக்கள் 14-லிலிருந்து 16-ம் நூற்றாண்டுவரை மீசோஅமெரிக்கப் பகுதியில் பெரும்பான்மையாக இருந்த பழங்குடி இனக்குழுக்களின் தொகுப்பான ஆஸ்டெக்குகளின் தாவரமாக மட்டுமே இருந்தது. ஸ்பானிஷ் படையெடுப்பின் பின்னரே தாலியாக்கள் ஐரோப்பாவிற்கு அறிமுகமாயின.

1525-ல் மெக்ஸிகோவிற்கு வந்த ஸ்பேனியர்கள் இந்த அழகிய மலரைப் பார்த்தார்கள் 1570-களில் மெக்ஸிகோவிற்கு ஸ்பெயினின் இரண்டாம் பிலிப் மன்னரால் அனுப்பப்பட்ட அவரது தனிப்பட்ட மருத்துவர் ஃப்ரான்சிஸ்கோதான் முதன் முதலாகத் தாலியாக்களை எழுத்தில் விவரித்தவர். மன்னரால் அந்த ப்பிரதேசத்தின் இயற்கைப் பொருட்களைக் குறித்து விரிவாக அறிந்துகொண்டு வரும்படி பிரான்சிஸ்கோ ஆணையிடப்பட்டிருந்தார். அச்சமயத்தில் தாலியாவின் வகைகளில் சிலவற்றின் கிழங்குகளைப் பழங்குடியினர் உணவாகப் பயன்படுத்துவதையும் ஃப்ரான்சிஸ்கோ ஆவணப்படுத்தினார். 

தண்டுகள் உள்ளே காலியாக இருப்பதைக்குறிக்கும் “water pipe”, “water pipe flower”, “hollow stem flower”, “cane flower” போன்ற பெயர்களில் தாலியாக்கள் அப்போது அஸ்டெக்குகளின் மொழியில் அழைக்கப்பட்டன. 7 வருடங்கள் மெக்சிகோவின் தாவரங்களை அறிந்து ஆராய்ந்து முடிவுகளை நான்கு தொகுதிகளாகப் பிரசுரித்த ஃப்ரான்சிஸ் மிக அழகிய சித்திரங்களையும் கைப்பட வரைந்திருந்தார்.

Nova Plantarum, Animalium et Mineralium Mexicanorum Historia, என்னும் அந்த நூல் 1578-ல் வெளியானது. அந்த நூலில் தாலியாவின் இரு சிற்றினங்களை பிரான்சிஸ்கோ விவரித்திருந்தார்.( Dahlia pinnata & Dahlia imperialis)1615-ல் அவை லத்தீன மொழியாக்கம் செய்யபட்டு இரு தொகுதிகளாக வெளியானது.

1787-ல் இரத்தச்சிவப்புச் சாயம் அளிக்கும் cochineal பூச்சிகளைத் திருடிவருவதற்காக மெக்சிகோவிற்கு அனுப்பப்பட்ட  ஃப்ரெஞ்ச் தாவரவியலாளர் நிக்கோலஸ் (Nicolas-Joseph Thiéry de Menonville) இந்தப் பிரகாசமான மலர்களைக் குறித்தும் ஆவணப்படுத்தினார். நிகோலஸ் அவருக்குச் சொல்லி அனுபியப்டி  cochineal  பூச்சிகளி திருடவில்லை மாறாக அவற்றை மெக்ஸிகோ பழங்குடியினரிடமிருந்து விலைக்கு வாங்கி அவை வளரும் சப்பாத்திக்கள்ளி வகைகளைத் தாவரவியல் பூங்காவில் வளர்த்து அந்தபூச்சிகளை பெருகச்செய்து அதற்கான பாராட்டையும் பெற்றார். இன்றும் அந்தப்பூச்சிகள் அந்த சப்பாதிக்கள்ளிகளில் தான் வாழ்கின்றன. இவற்றினல் தான் அடர்சிவப்பு நிறம் “coccineus,” எனப்பெயர் பெற்றது.

தாவரங்களின அறிவியல் பெயர்களில் காக்சினியா என்று இருப்பவைகளின் மலர்கள் எல்லாம் குருதிச்சிவப்பில் இருப்பதைப் பார்கக்லாம்.  அகரமுதல்வன் எடுத்த புகைப்படத்தில் இருப்பது Dahlia coccinea மலர்தான். ரத்தச்சிவப்பு தெட்சி மலரின் அறிவியல் பெயர் இக்ஸோரா காக்சீனியா.

பின்னர் பல வருடங்கள் தாலியாவின் நறுக்கப்பட்ட தண்டுகளும் விதைகளும் தொடர்ந்து ஐரோப்பாவிற்கு மெக்ஸிகோவிலிருந்து அனுப்பப்பட்டன. பின்னர் படிப்படியாக உலகநாடுகள் அனைத்திற்கும் தாலியா அறிமுகமானது. ஆயிரக்கணக்கான கலப்பின வகைகளும் உருவாகின.

தாலியா என்னும் இதன் பேரினப் பெயரிலேயே குழப்பம் நிலவியது. தாவர வகைப்பாட்டியலை நிறுவியவரான லின்னேயஸ் அவரின் மாணவரான  Anders Dahl, என்பவரைச் சிறப்பிக்கும் பொருட்டு தாலியா என்னும் பேரினத்தை வைத்தார் என பரவலாக நம்பப்பட்டது. ஆனால் தாலியா ஐரோப்பாவுக்கு அறிமுகமான 1789-க்கு 11 வருடங்கள் முன்பே லின்னேயஸ் இறந்துவிட்டார். மேட்ரிட் தாவரவியல் பூங்காவின் இயக்குனரான  Abbe Cavanilles,  தான் Anders Dahl யின் பெயரைச் சிறப்பிக்கும் பொருட்டு தாலியாவுக்கு வைத்தார் என்பது பிற்பாடு அறியபட்டது.

 1805-ல் ஜெர்மானிய தாவரவியலாளர்  கார்ல் (Carl Ludwig Willdenow, asserting) தாலியாவை  ஜார்ஜினா (Georgina) என்று பெயர் மாற்றம் செய்தார். 1810-ல் எழுத்துபூர்வமாக இம்மலர் மீண்டும் தாலியா எனக்குறிப்பட்டது.

கடல் மட்டத்துக்கு மேல் 1,500 – 3,700 m உயரதில் செழித்து வளரும் தாலியாக்கள்  பனிப்பொழிவற்ற உலகின் எல்லா பாகங்களிலும் வளருகின்றன.

தாலியாக்கள் பல வருடம் மலரளிக்கும் பெரினியல் வகையைச் சேர்ந்தவை. அவற்றின் மலர் எனச் சொல்லப்படுவது உண்மையில் மலர்த்தலை என்னும் மஞ்சரிதான். மலர்த்தலைகள் பிரகாசமான வண்ணங்களில் இருக்கும் பெரும்பாலும் தாலியாக்களில் மணம் இருக்காது. மகரந்தச்சேர்க்கைக்கு பூச்சிகளைக் கவர பிரகாசமான அதன் வண்ணங்களே போதுமென்பதால் நறுமணம் இருப்பதில்லை.

இங்கிலந்தின் புகழ்பெற்ற ராயல் ஹார்டிகல்சர் அமைப்பு 1969-ல் சர்வதேச தாலியா பெயர்களின் பதிவேட்டை உருவாக்கியது இந்தp பதிவேடு ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படுகிறது.(The International Register of Dahlia Names) தாலியாக்களின் உருவாக்கத்திலும் அவற்றின் உலகளாவிய பரவலிலும் மிக முக்கியப்பங்காற்றியவராக நியூயார்க்கின் ஜார்ஜ் தோர் பர்ன் (George C. Thorburn) அறியபப்டுகிறார்.

1963-ல் தாலியா மெக்சிகோவின் தேசிய மலராக அறிவிக்கப்பட்டது.

ஒற்றை அடுக்கு, பல அடுக்கு , மிகப்பெரியவை, மிகக்குட்டியான மினி வகைகள், நாடாபோன்ற இதழ்கொண்டவை, வெளியடுக்கு பெரிதாகவும் உள்ளடக்கு சிறியதாகவும் இருப்பவை பந்துபோன்ற பொம்பன் (Pompon) வகைகள் என இப்போது சுமார் 5700 வகை தாலியாக்கள்  நீலத்தைத்தவிர மற்ற எல்லா நிறங்களிலும், நிறக்கலவைகளிலும் இருக்கின்றன.

எடின்பர்க் தோட்டக்கலைதுறை1846- ல் நீல நிற தாலியாக்களை உருவாக்குபவர்களுக்கு 2000 பவுண்டு பரிசு அறிவித்தது.அது இன்று வரை உருவாக்கபடவில்லை.

அதன் காரணம் தாவரவியலாளரல்லாதோருக்கு புரிந்துகொள்ளக் கடினமென்றாலும் எளிமையாகச் சொல்ல முயற்சிக்கிறேன்.

நீல நிறம் உருவாக ஆந்தோசையானின் என்னும் நிறமி தேவை. தாலியாக்களில் ஆந்தோசையானின்கள் உள்ளன எனினும் தூய நீல நிறம் உருவாக delphinidin என்னும் ஆந்தோசையானின் ஒரு வகை நிறமியில் 6 ஹைட்ராக்சைல் தொகுப்புகள் இருந்தாக வேண்டும் ஆனால்  இன்று வரையிலும் தாலியாக்களில் 5 ஹைட்ராக்சைல் தொகுப்புக்களே உருவாகி இருக்கின்றன.

பொதுவாகவே இயற்கையில் நீல நிற மலர்கள் மிக அரியவை . நூற்றாண்டுகளாகத் தாவரப் பெருக்கவியலாளர்கள் முயற்சித்தும் இன்று வரை ட்யூலிப்களில் நீல நிற மலர்களைக் கொண்டு வர முடியவில்லை. இப்போது இருப்பவை எல்லாம் almost blue என்னும் வகையில் வருபவைதான். இயற்கையாக நீல நிறத்தில் ஹைட்ராஞ்சியா, கார்ன் மலர்கள், இமாலய பாப்பிகள் மற்றும் டெல்பீனியம் போன்ற  ஒருசிலமலர்களே இருக்கின்றன.

 பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்த தாலியா உலகின் மிக விரும்பப்படும் தோட்டமலராக  இருக்கிறது.

« Older posts Newer posts »

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑