லோகமாதேவியின் பதிவுகள்

Category: தாவரங்கள் (Page 4 of 14)

ஷின்ரின் – யோகு-வனக்குளியல்.

 

வன சிகிச்சை, நிலச் சிகிச்சை,பசுமை சிகிச்சை, இயற்கை சிகிச்சை என்னும் பெயரால் அழைக்கப்படுவது, உடல், உள்ளம் மற்றும் ஆன்மாவிற்கான இயற்கையோடு இணைந்த ஒரு சிகிச்சை. இச்சிகிச்சை வனக்குளியல் என்று பொருள் படும் ஜப்பானிய சிகிச்சையான Shinrin-yoku வை அடிப்படையாக கொண்டது.

பாரசீக பேரரசை தோற்றுவித்தவரான பேரரசர் சைரஸ் 6ம் நூற்றாண்டில் நகரின் மையத்தில் மக்களின் ஆரோக்கியம் மேம்படும் பொருட்டு ஒரு பெரும் பூங்காவை அமைத்தார். இதுவே  பசுமை சிகிச்சையின் தொடக்கமாக கருதப்படுகிறது. 16ம் நூற்றாண்டில்  ஸ்வீடனை சேர்ந்த இறையியலாளரும் மருத்துவருமான  பாராசெல்சஸ்  ’’நோயிலிருந்து குணமடைதல் மருத்துவரிடமிருந்தல்ல, இயற்கையிடமிருந்தே கிடைக்கிறது’’ என்றார். 

1950 களில் உலகெங்கிலும் இயற்கைச் சூழலில் வசிப்பவர்களின் ஆரோக்கியம் குறித்த ஆய்வுகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக 1982ல்  ஜப்பானின் மீன்வளம், விவசாயம் மற்றும் வன அமைச்சகத்தின் அப்போதைய தலைவரான தோமோஹைட் அகியாமா ’’வனக்குளியல் ‘’ என்று பொருள் படும் Shinrin-yoku ( shinrin, “forest”, yoku, “bath, bathing” ) என்னும் சிகிச்சை முறையை உருவாக்கி காடுகளை நோக்கி  அதிக அளவில் மக்களை வரச்செய்தார். 

இயற்கையிலிருந்து துண்டிக்கப்பட்ட மக்களை மீண்டும் அதனுடன் இணையச் செய்வதற்கும், தங்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் வனங்களை மக்கள் பாதுகாக்கவும் இது வழிவகுக்கும் என அவர் நினைத்தார்

தற்சமயம் உலகெங்கிலும் பொதுவாக கடைப்பிடிக்கப்படும் யோகா மற்றும் தியான முறைகளைப்பொல வனசிகிச்சையும் பரவலாயிருக்கிறது.

மிக குறைந்த நேரமாக ஐந்து நிமிடங்களும் அதிகபட்சமாக 120 நிமிடங்களும் இந்த சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

 குறிப்பிட்ட காலஅளவு வனச்சூழலில் இருப்பவர்களின் ஆளுமைச்சிக்கல்கள் விலகி,மனழுத்தம் குறைந்து தேக ஆரோக்கியம் கூடுகிறது என்கிறார்கள் இந்த சிகிச்சையை அளிப்பவர்களும் மேற்கொள்பவர்களும்.

இவற்றுடன் வைட்டமின் D  குறைபாடு மற்றும் கூடுதல் உடல் பருமன் ஆகியவையும் இதனால் குணமாகிறது .

சிகிச்சை முறை

  • வனங்களின் விதவிதமான ஒலிகளை மனம் குவித்து செவி கூர்ந்து கவனிப்பது
  • நிலத்தை, மரங்களை இலைகளை கைகளால் தொட்டுக் கொண்டிருப்பது
  • மலர்களையும் இலைகளையும் கனிகளியும் முகர்ந்து வாசனையை அறிந்து கொள்வது
  • வனச்சூழலை, அதன் அழகை ஆழ்ந்து கவனிப்பது
  • சுவாசத்தை கவனித்து தூய காற்றை மகிழ்ந்து அனுபவிப்பது

இந்த சிகிச்சையை இப்படி பொதுப்படுத்த முடியாது, காடுகளில் இருப்பதன் மூலம் மனநிலை மாற்றம் அடைவது என்பது மிக அந்தரங்கமானதும் தனி நபர்களின் மனநிலை சார்ந்துமாகும்,  மேலும் இப்படி காடுகளில் மனிதர்கள் நெருங்கிச் செல்வது இயற்கையின் அழிவிற்கு காரணமாகும் என் இச்சிகிச்சை குறித்து சில விமர்சனங்களும் எழுகின்றன.

உலகின் பல நாடுகளும் இந்த வன சிகிச்சையை அங்கீகரித்து ஆதரவு அளித்து வருகின்றன. ஃபின்லாந்தில் 5 மணி நேரம் வனங்களில் இருப்பது மிக நல்லது என ஆய்வாளர்கள் வலியுறுத்துகிறார்கள்

மொத்த நிலப் பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு வனங்களால் சூழப்பட்டிருக்கும் ஜப்பானில் இந்த சிகிச்சைக்கு அரசு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. தென்கொரியாவில் 2009ல் சிகிச்சைவனமொன்று துவங்கப்பட்டு  பலருக்கும் பயனளித்ததால் 2022ல் சுமார் 30க்கும் மேற்பட்ட சிகிச்சை வனங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மனாழுத்தம் தற்கொலை எண்ணம் ஆகியவற்றிற்கு இந்த வனங்கள் சிகிச்சை அளிக்கின்றன

சமிபத்தில் தீயணைப்பு வீரர்களுக்கு பணி சார்ந்த மனஅழுத்தம் நீங்க  இங்கு வனசிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

சமீபத்தில் மரணமடைந்த பிரபல புகைப்பட நிபுணர் ஜான் ஐசக் போர்ச்சூழலில் புகைப்படமெடுத்து மனம் கலங்கிய தான் சூரியகாந்தி தோட்டங்களுக்குள் சென்ற பின்னர் மீண்டு வந்ததாக குறிப்பிட்டிருந்தார். கனடாவின் மருத்துவர்களும் பசுமை பரிந்துரையாக மனநல சிகிச்சைகளுக்கு  வனத்தில் நேரம் செலவழிக்க அறிவுரை கொடுத்து வருகிறார்கள்.

அமெரிக்க வன அமைச்சகம் இதற்கென பயிற்சி பெற்ற நிபுணர்களைக்கொண்டு அடர் வனங்களில் இரண்டு மணி நேரம்  சிகிச்சை அளிக்கிறது

தமிழகத்தில் இது பன்னெடுங்காலமாக வழக்கத்தில் இருந்திருக்கிறது. ஒரு சிறு முள் குத்தினால்கூட முள் நீக்குகையில் வலி தெரியாமலிருக்க பச்சையை பார்க்க சொல்லும் வழக்கம் இங்கு இருக்கிறது. பசுமை நிறம் குணமாக்கும் நிறம் என்பது தமிழர்களுக்கு  முன்பே தெரிந்திருக்கிறது

இப்போதைய அடுக்கக வாழ்வில் அனைவருக்கும் வீடுகளில் பசிய செடிகளுடன் கூடிய தோட்டங்கள் வைத்திருக்க முடியாதென்றாலும் அருகிலிருக்கும் காடுகளுக்கு குடும்பத்துடன் சென்று  அங்கு குறிப்பிட்ட நேரம் செலவழிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.

மாயன் கீரை!

மாயன் கீரை

கி மு 2600 ல் தோன்றிய மாயா நாகரிக மக்களின் உணவு  பெரும்பாலும் வேட்டை விலங்குகள், கீரை, பூச்சிகள் மற்றும் கிழங்குகளாகவே இருந்தது.   அகழ்வாய்வுகளில் கிடைத்த அவர்களின் எலும்புகளில் நடைபெற்ற ஆய்வுகள் அவர்கள் அதிகம் மக்காச்சோளமும் மான்கறியும் இலையுணவுகளையும் எடுத்துக் கொண்டதை காட்டுகிறது.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பல்லாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்ற தொல்குடியினரின் உணவுகள் குறித்த ஆய்வுகள் மாயன்கள் புரதச்சத்துக்காக உணவில் சேர்த்துக்கொண்ட மரக்கீரை ஒன்றின் முக்கியத்துவத்தை குறித்து தெரிவிக்கிறது.19.4% – 24.8% புரதச்சத்து கொண்டிருந்த பயறு வகைகளையும் அவர்கள் உணவில் இருந்தது என்றாலும் மாயன்களின் உணவில் பிரதான இடம்பெற்றிருந்த மரக்கீரையின் புரத அளவு 30 % இருந்தது

சாயா மரக்கீரை, கீரைமரம் என்று அழைக்கப்படும் இதன் அறிவியல் பெயர் நிடோஸ்கோலஸ் அகோனிடிஃபோலியஸ் (Cnidoscolus aconitifolius)

பிற வழங்கு பெயர்கள்:

English: tree-spinach; Spanish: chaya, chayamansa,cabbage-star
Swedish: chaya;

Unknown: chaya col, chaykeken, kikilchay
tree-spinach

French: manioc bâtard;

மாயன் கீரை என இப்போது பெயர் பெற்றிருக்கும், உலகின் பல இடங்களிலும் வளர்க்கப்படும் இந்த கீரை வருடம் முழுவதும் கீரையை அளிக்கிறது. மிக எளிதாக இவற்றை பயிர் செய்ய முடியும். இவற்றில் பூச்சி/ நோய்த் தாக்குதல் மிக குறைந்த  அளவே இருக்கும். மாயன் கீரை மரம்  அனைத்து காலநிலைகளிலும்  செழித்து வளரும், வறட்சியையும் தாங்கிக்கொள்ளும். இம்மரம் மிக அழகிய தோற்றம் கொண்டது இவற்றின் கீரையை கால்நடைகளுக்கு தீவனமாகவும் அளிக்கலாம். 

 பார்ப்பதற்கு மரவள்ளிக்கிழங்கு செடியை போலிருக்கும் இக்கீரை மரம் சமீப காலங்களில் மிக அதிக கவனம் பெற்றிருக்கிறது.

 மாயன்களின் காலத்து கீரை வகை கடல் மட்டதுக்கு வெகு உயரத்தில் அதிக கூர்மையான முட்களுடன் இருந்தது. 1944ல் தாவரவியலாளர் ரோஜெர் (Rogers McVaugh-1909 – 2009)  மாயன் கீரைமரத்தின்  காட்டுமூதாதையான Chaya brava என்னும் முட்கள் கொண்ட வகையிலிருந்து  முட்களற்ற கலப்பினமான Chaya mansa வை உருவாக்கினார்,

மான்ஸா என்பதற்கு லத்தீன மொழியில் வீடு என பொருள் இந்த கீரையை வீடுகளில் வளர்க்கலாம் என்பதற்காக அப்பெயர் வைக்கப்பட்டிருந்தது. 1918ல்  முட்கள் கொண்ட, முட்களற்ற மாயன் கீரை வகைகள் இரண்டுமே கியூபாவுக்கும் ஃப்ளோரிடா வுக்கும் மெக்சிகோவிலிருந்து அறிமுகமானது. பின்னர் அங்கிருந்து உலகமெங்கும் இக்கீரை வகை பரவியது

Mala Mujer, கெட்ட பெண்மணி என்ற வழங்கு பெயரில் மெக்சிகோவில் அதன் முட்கள் கொண்ட வகையும் சாயா மான்ஸா என்பது முட்களற்ற வகையுமாக உலக நாடுகள் பலவற்றிலும் இப்போது வளர்க்கப்படுகிறது.

மாயன்கீரையில்:

  • முட்களற்ற வகை Cnidoscolus chayamansa
  • முட்கள் கொண்டது Cnidoscolus aconitifolius

நெல்லிக்காய் குடும்பமான யுஃபோர்பியேசியை சேர்ந்த இவை சுமார் 15 அடி உயரம் வரை விரைவாக வளரும் எனினும் அடிக்கடி கத்தரித்து 2 அடி உயர அடர்ந்த புதராக வளர்க்கையில் கீரைகள் அதிகம் கிடைக்கும். கோடைக்காலத்தில் சிறு வெண்ணிற மலர்கள் தோன்றி வால்நட் போன்ற கனிகள் பிற்பாடு உருவாகும். இவற்றின்  சதைப்பற்றான தண்டுகளில் வடியும் வெண்ணிற பால் போன்ற திரவம் சரும அழற்சியை உண்டுபண்ணும்.தண்டுகள் மூலம் இவை எளிதில் வளர்க்கப்படுகிறது. இவற்றின் இலைகளும் இளம்தண்டுகளும் உண்ணப்படுகின்றன.

இக்கீரையில் புரதம் கால்சியம் இரும்பு சத்துக்கள் A  மற்றும் C  வைட்டமின்களும் நிறைந்திருக்கிறது

மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்க உணவுகளில் பிரதான இடம்பெற்றிருக்கும் மிக அதிக சத்துக்களை கொண்டிருக்கும் மாயன் கீரையை ஒருபோதும் சமைக்காமல் உண்ணக்கூடாது இவற்றில் இருக்கும் உடலுக்கு கேடுவிளைவிக்கும் ஹைட்ரோ சயனிக் அமிலம்  (hydrocyanic acid) கீரைகளை வெப்பமூட்டி சமைக்கையில் மட்டும்தான் வீரியமிழக்கும்.Blanching  எனப்படும் கொதிநீரில் சில நிமிடங்கள் மூழ்கவைத்து பின்னர் சமைப்பதும் நல்லது.

இக்கீரையின் வேதிப்பொருட்கள் அலுமினியத்துடன் வினைபுரிவதால், இக்கீரையை  ஒருபோதும் அலுமினிய பாத்திரங்களில் சமைக்க கூடாது.

ரத்தச்சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல மருத்துவ குணங்களும் இக்கீரை உணவிற்கு உண்டு 20 நிமிடங்களுக்கு குறையாமல் இவற்றை வேகவைக்க வேண்டும். பிற கீரை வகைகள் அனைத்தையும் காட்டிலும் சுவையும் சத்துக்களும் மாயன்கீரையில் பலமடங்கு அதிகமாக இருக்கிறது.

மாயன்கீரையை குறித்த காணொளி;https://youtu.be/0f8-m0kPGxk?si=dKdUK_hGI6Tvcgpr

விலக்கப்பட்ட கனி !

விஷ்ணுபுரம்  குழும நண்பர்கள் உலகெங்கிலும் இருப்பதால் அந்தந்த நாடுகளின் சிறப்பான  மலர்கள் செடி,கொடிகளின் புகைப்படங்களை எனக்கு அனுப்புவார்கள். நானும் செர்ரி மலர் கொண்டாட்டங்களை டோக்கியோ செந்திலிடமும், மேப்பிள் இலைகளை பழனி ஜோதியிடமும் வானவில் யூகலிப்டஸ்  புகைப்படங்களை சுபாவிடமும், இலைகளே பொன்னாக பூத்து நிற்கும் ஜின்கோவை ஜெனிவா கணேஷிடமும் புகைப்படங்களாக  கேட்டு வாங்கி கொள்ளுவேன். அவர்களின் கண்களின் வழியே உலகத் தாவரங்களை வேண்டுமட்டும் இப்போது பார்க்கும், ரசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. அப்படி சமீபத்தில நண்பர் பெல்ஜியம் மாதவன்-ப்ரியா அவர்களது வீட்டில் ஆப்பிள் மலர்ந்திருக்கும், கனிகள் செறிந்திருக்கும் புகைப்படங்களை  அனுப்பியிருந்தார்கள்.

வெள்ளையும் இளஞ்சிவப்பும் கலந்த அழகிய ஐந்து இதழ் கொண்ட சிறு மலர்களும் அடர்சிவப்பு அரும்புகளும் கொத்துகொத்தாக நிறைந்து  மயங்க வைத்தன. இளம்பச்சை ஆப்பிள் கனிகள்  மரங்களில் செறிந்திருந்தன.  அந்த புகைப்படங்கள் என்னை ஆப்பிளின் தாவரவியல் உள்ளிட்ட பிற தகவல்களின் பின்னே செல்ல வைத்தது.  

சமீபத்தில்  கிறிஸ்தவ இறையியல் குறிப்பிடும் விலக்கபட்ட கனியான ஆப்பிள் மீண்டும் பேசுபொருளாயிருந்தது.

ஹார்வேர்ட் மருத்துவ பல்கலைக் கழகத்துக்கு சொந்தமான ஒரு மரபணு ஆய்வகத்தில் Joe Davis என்னும் ஒரு உயிரிக்கலைஞர் , (bio-artist) விவிலியம் சொல்லிய அதே அறிவு மரத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதன்பொருட்டு , உலகின் மிகபழைய ஆப்பிள் என கருதப்படும்  4000 வருடத்துக்கு முன்பான ஆப்பிளின் காட்டு மூதாதையான M. sieversiiயின்  மரபணுவை தேர்ந்தெடுத்திருக்கிறார்.மிகுந்த ஆர்வமூட்டும் செய்தி இது.

மத்திய ஆசியாவில் தோன்றி பின்னர் உலகெங்கும் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் உலகில் அதிகம் பயிராக்கப்படும் கனிமரங்களில் ஒன்று. பல நாடுகளில், பல நாகரீகங்களில் ஆப்பிள் மலர் நீளாயுளின், அழகு இளமை காதல் வளமை ஆகியவற்றின் குறியீடாக கருதப்படுகின்றன

 ஆப்பிள் மலரும்போது  பல ஐரோப்பிய அமெரிக்க வீடுகளில் பூச்சாடிகளில் அவற்றை அமைத்து அழகுபடுத்துவதும், திருமண அலங்காரங்களில் பயன்படுத்துவதும் உண்டு . ஆப்பிள் மரங்களில் இலையுதிர்காலம் முடியும் போது இலைகளுக்கு முன்பாக மலர்கள் உருவாகிவிடும் என்பதால் முழுமரமும் மலர் நிறைந்து கொள்ளை அழகுடன் இருக்கும்.  

இத்தனை அழகுடன் இருப்பினும் ஆப்பிள் மரத்தின் இலை தண்டு மற்றும் விதைகளில்  Amygdalin என்னும் நச்சுப்பொருள் இருக்கும். இந்த நச்சுப்பொருள் அதை உண்பவர்களின் உடலில் சயனைடு நஞ்சாக மாறிவிடும். இவை மிக குறைந்த அளவே இருக்கிறது என்றாலும் ஆப்பிள் நஞ்சு கொண்டிருக்கும் மரம் எனும் கவனம் தேவைப்படுகிறது. 

 Malus domestica என்னும் ஆப்பிள் மரம்  பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பே Malus sieversii,  என்னும் அதன் காட்டுமூதாதையிடமிருந்து கலப்பினமாக உருவாக்கப்பட்டு இன்றைய கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானில்  சாகுபடி செய்யப்பட்டது. காட்டு மூதாதையான M. sieversii மிகச்சிறிய புளிப்பான கனிகளை கொண்டிருந்தது. எனவே அவற்றின் கலப்பினங்கள் உருவாக்கப்பட்டு மெல்ல மெல்ல புதிய வகைகள் உருவாகின.அவற்றின் சுவை, அழகிய நிறம், அதிக காலம் சேமித்துவைக்காலம் என்னும் வசதி ஆகியவற்றினால் ஆப்பிள்கள் உலகின் மிக விரும்பப்பட்ட கனிகளில் ஒன்றாக  இருக்கின்றன.

ஆப்பிள்கள் ரோசேசியே குடும்பத்தை சேர்ந்தவை இதே குடும்பத்தில்தான் பேரிக்காய்களும் ரோஜாக்களும் செர்ரிகளும் ஸ்ட்ராபெர்ரிகளும், ப்ளம்களும் இருக்கின்றன. 

விதையிலிருந்து உருவாகும் ஆப்பிள் அதன் இரண்டு பெற்றோரை போலவும் இருக்காது. இதனால் ஆப்பிள்களின் பரிணாம வளர்ச்சியில் பல்லாயிரக் கணக்கான வகைகள்  உருவாகி இருக்கின்றன. உடல் இனப்பெருக்க முறையில் தண்டுகளிலிருந்தும் ஆப்பிள்கள் பயிராகின்றன.

ஆப்பிள்கள் பல பண்டைய நாகரிகங்களில் ஆதிக்கம் செலுத்தியதை வரலாற்றில் காணலாம்.பல நாகரீகங்களின் நூல்களில் தேவதைக்கதைகளில், காப்பியங்களில், நாட்டுப்புற பாடல்களில்,  தொன்மங்களில் ஆப்பிள்கள் இடம்பெற்றிருக்கின்றன.

 மேற்கத்திய இலக்கியங்களில் மிக அதிகம் குறிப்பிடப்பட்டிருக்கும் கனி ஆப்பிள்தான். பண்டைய கிரேக்க வரலாற்றின் ட்ரோஜன் போரை துவங்கி வைத்ததும் ஒரு ஆப்பிள் தான். பல வருடங்களாக வீட்டை பிரிந்திருந்த ஒடிசெஸ், ஆப்பிள் மரங்கள் சூழ்ந்த  தோட்டத்தில் கழிந்த தனது பால்யத்தை நினைத்து நினைத்து ஏங்குகிறான்.

நார்ஸ் தொன்மங்களில் கவிதையின் கடவுளான இடுனா கடவுளர்க்கு இறவாமையை  அளிக்கும் மந்திர தங்க ஆப்பிள் கனியை அவளது பொறுப்பில் வைத்திருந்தாள்.

கெல்டிக் தொன்மம் ஆப்பிளை என்றும் இளமையுடன் இறவாமல் இருக்க முடியும்  மறு உலகிற்கான கனி என்கிறது. இப்படி ஆப்பிள்களின் மந்திர பண்புகளை கொண்டு ஆண்களை இளம்பெண்கள் வசியம் செய்யும் கதைகள் பல நாட்டுப்புறக்கதைகளில்  உள்ளது.

ஐரிஷ் தொன்மங்களின் மாபெரும் நாயகனான  கோன்லா, ஒரு அழகிய பெண் இறவாமையை அளிக்கும் என சொல்லி கொடுத்த  ஒரு ஆப்பிளால் வசியம் செய்யப்படுகிறான்

ஆர்தரியன் புராணங்களில், ஆர்தர் மன்னருக்கு மிகப்பிரியமான அவலோன் என்னும் ஒரு தீவில் செறிந்து வளர்ந்திருந்த ஆப்பிள் மரங்களின் கனிகள் பல மந்திர பண்புகளை பெற்றிருந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது

 பல தொன்மங்களில் ஆப்பிள்கள் ஆசையை தூண்டுதல், இறவாமை, காதல்,  மெய்ஞானம் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தப்படும் கனியாகவே இருக்கிறது . அரேபிய இரவுக் கதைகளிலும் வருகிறது மனிதனின் அனைத்து நோய்களையும் தீர்க்கும் ஒரு மந்திர ஆப்பிள்.

 பிரபல தேவதைக் கதையான ’’Snow White and the Poisoned Apple’’லில் ஸ்னோ ஒயிட் சூனியக்காரி கொடுத்த நச்சு ஆப்பிளால் மீளா உறக்கத்துக்கு போனபின்பு ஒரு காதல் முத்தமே அவள் எழுப்பும். இந்த பிரபல தேவதை கதை உலகின் பல மொழிகளில் பல கலாச்சாரங்களில் பல வடிவங்களில் இருக்கிறது

ஸ்வீடன் நாடோடிக்கதைகளின் வில்வித்தை நாயகனான வில்லியம் டெல் தன் மகனின் தலையிலிருந்த ஆப்பிளை ஒற்றை அம்பில் வீழ்த்தும் போட்டியில் வெற்றிபெறுகிறான்.வில்லியம்டெல்லும் ஆப்பிளும் என்னும் நாடன் பாடல் வீரத்துக்கான் பாடலாக பலகாலமாக அங்கு பிரசித்தி பெற்றிருக்கிறது.

ஐரோப்பிய நாட்டுப்புற கலாச்சாரத்திலும் ஆப்பிள் காதலின் அடையாளமாக கருதப்படுகிறது அங்கு நடைபெறும் ஆப்பிள் அறுவடை கொண்டாட்டங்களின் போது இளம்பெண்கள் நீளமாக சீவப்பட்ட ஆப்பிள் தோலை, தோள்களுக்கு பின்புறம் வீசி எறிவார்கள். அது எந்த ஆங்கில எழுத்தைப்போல விழுந்து வடிவம் கொண்டிருக்கிறதோ,அந்த எழுத்தை முதலாவதாக கொண்டிருக்கும் காதலன் அல்லது கணவன் கிடைப்பான் என்று அங்கு நம்பிக்கை உண்டு.

சேக்‌ஷ்பியரின் ரோமியோ ஜுலியட்டில், ரோமியோவை தனது விலக்கப்பட்ட கனி என்கிறாள் ஜூலியட்.

 ஆங்கில பழமொழியொன்று //ஒவ்வொரு நாளும் ஒரு ஆப்பிளை உண்டால் மருத்துவரே தேவையில்லை என்கிறது. இந்தப் பழமொழி// an apple a day will keep the doctor away//  முதன் முதலாக 1866 ல் அச்சில் வெளியானது.  

பிரபல கவிஞர்களான  Robert Frost, Emily Dickinson, Christina Rossetti,  Dylan Thomas  ஆகியோரும் ஆப்பிள்கள் பற்றி கவிதைகள் எழுதியிருக்கிறார்கள். பல பிரபல ஓவியர்கள் ஆப்பிளை வரைந்திருக்கிறார்கள். இயற்பியலாளர் ஐஸக் நியூட்டனின் தலையில் விழுந்த ஆப்பிள் புவியீர்ப்பு விசை குறித்த அறிதலை உலகிற்களித்தது.

 நியூயார்க்  நகரின் இணைப்பெயராகவே  பெரிய ஆப்பிள் என்னும் பெயர் இருக்கிறது. 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் நியூயார்க்கில் பிரபலமாக இருந்த குதிரை பந்தயத்தின் மிகப்பெரிய  தொகையை குறிப்பிட பயன்படுத்தப்பட்ட “The Big Apple” என்னும் குறியீட்டுச் சொல் பின்னர் விரிவடைந்து நியூயார்க்கின் பெயராகவே நிலைத்துவிட்டது.

கிறிஸ்தவ இறையியலில், விவிலியத்தின் ஆதியாகமம், ஏதேன் தோட்டத்தின் விலக்கப்பட்ட கனியை உண்டதால் தண்டனைக்கு உள்ளான ஆதாமையும் ஏவாளையும் குறிப்பிடுகிறது.  நூற்றாண்டுகளாக  பல இறையியல் நூல்களில் விலக்கப்பட்ட கனியாக  பெயரற்ற கனியே இருந்து வந்தது

 ஆரம்பகால கிறிஸ்தவ படைப்புகள் இதை கடவுளுக்கு கீழ்படியாததால் கிடைத்த தண்டனை என்பதை  சற்று  விரிவாக சொல்லமுற்பட்டபோது கனி என்று பொதுவாக குறிப்பிடாமல் ஒரு குறிப்பிட்ட கனியின் பெயரை சேர்த்தன. அப்படி பல கனிகள் கிழங்குகள் தானியங்கள் குறிப்பிடப்பட்டு இறுதியில்  அது ஆப்பிளாகி இருக்கிறது.

விலக்கப்பட்ட கனி என்பது கனியே அல்ல அது மனம் மயக்கும் ஒரு மது, திராட்சை ரசம் போல என்னுமோர் கருத்தும் அப்போது இருந்தது, வைன் அருந்துவது பாவம் என்னும் நம்பிக்கையின் அடிப்படையில் அக்கருத்து முன்வைக்கப்பட்டிருக்கலாம்.

 யூதர்களின் விவிலியமொன்று,  கடவுளின் கட்டளையை கீழ்ப்படியாமையை விளக்கும் அந்த நிகழ்வை இப்படி விவரிக்கிறது

“When the woman saw that the tree was good for eating and a delight to the eyes, and that the tree was desirable as a source of wisdom, she took off its fruit and ate. She also gave some to her husband, and he ate” (Genesis 3:6)

ஹீப்ரூ மொழியில் எழுதப்பட்ட பழைய விவிலியத்திலும் விலக்கப்பட்ட கனி ஆப்பிள் என்று குறிப்பிட்டிருக்கவில்லை. பிற்கால ஹீப்ரூ விவிலியத்தில் கனியை குறிக்க  உபயோகப்படுத்தபட்டிருந்த சொல் பெரி “peri”.

விவிலிய ஹீப்ரு மற்றும் நவீன ஹீப்ரூ இரண்டிலுமே பெரி என்பது கனி என்னும் பொதுவான பொருளைத்தான் கொண்டிருக்கிறது குறிப்பிட்ட கனியை அது சுட்டுவதில்லை. ஆப்பிளுக்கான ஹீப்ரூ சொல்லான “tapuach,”  என்பது ஹீப்ரூ மொழியில் உருவான  முதல் ஐந்து விவிலியங்களில் எங்குமே குறிப்பிடபடவில்லை. 

 ரபிஸ்  என்றழைக்கப்படும் விவிலிய மொழியியல்  ஆய்வாளர் மற்றும் மதகுருக்களில் ஒருவர் அது அத்திக்கனியாக இருக்கலாம் என்னும் கருத்தை முன்வைக்கிறார்.ஏனெனில் ஆதாமும் ஏவாளும் கனியை புசித்ததும் தங்களின் நிர்வாணத்தை உணர்ந்து வெட்கி அத்தி இலைகளில் ஆடையணிந்து கொண்டார்கள், எனவே அது அம்மரத்தின் கனியாக இருக்கலாம் என்கிறார் 

ரபிஸ் ஒருவேளை அந்தக் கனி கோதுமை மணியாக கூட இருக்கலாம் என்னும் ஒரு கருத்தையும் சொல்கிறார். ஏனெனில் ஹீப்ரூ மொழியில் கோதுமை மணிகளுக்கான் சொல்  “chitah,”  ஹீப்ரூ மொழியில் பாவம்- sin, என்பதற்கான சொல்”cheit,”  எனவே கோதுமை மணியும் விலக்கப்பட்ட கனி என்னும் சாத்தியங்களின் பட்டியலில் இருக்கிறது என்கிறார்,

 ரபிஸ் அவரது ஆய்வுக்கட்டுரையில் கொஞ்சம் கசப்பு சுவை கொண்ட, சுருக்கங்கள் இருக்கும் மிக தடிமனான தோல் கொண்டிருக்கும் முட்டை வடிவ எலுமிச்சை கனியான  citron என்பதை குறிக்கும் ஹீப்ரூ சொல்லான “etrog” என்பதை சுட்டிக்காட்டி அக்கனி எலுமிச்சை ஆகவும் இருக்கலாம் என்கிறார். யூதர்களின் பண்டிகைகளில் பண்டைய காலத்திலிருந்தே இந்த  எலுமிச்சை கனி முக்கியமான இடம் கொண்டிருக்கிறது

அதைப்போலவே ஏதேன் தோட்டத்தின் இருப்பிடமும் விவாதப்பொருளாகவே  இருக்கிறது. அது துருக்கியிலிருந்து ஓஹியோ வரை என்றும் இல்லை அது வடதுருவம் என்றும் பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன

விலக்கப்பட்ட கனி அத்தி, ஆலிவ், திராட்சை,கோதுமை, எலுமிச்சை, ஆப்ரிகாட், வாழை மாதுளை என்றெல்லாம்  மாறி மாறி வந்து கடைசியில்தான்  ஆப்பிளில் வந்து நின்றிருக்கிறது.  விலக்கப்பட்ட கனிகளுக்கான் இத்தனை சாத்தியங்கள் பரிசீலிக்கப்பட்டிருக்கையில் எப்படி அது இறுதியாக ஆப்பிளாயிற்று?  

துவக்க கால இறையியல் படைப்புகளில் விலக்கப்பட்ட கனியானது  வளமையை பெருக்குமென நம்பப்பட்ட மாண்ட்ரேக்  கனியாக கருதப்பட்டது,இதுவே வாழ்க்கை மரம்’’ tree of life’’ எனப்பட்டது. இனப்பெருக்கத்தின் ரகசியங்கள் கடவுளுக்கு மட்டுமே உரித்தானது என்பதால் இதன் கனிகள் மனிதர்களுக்கு விலக்கப்பட்டிருந்தது .பிறகு சாத்தானின் தூண்டுதலால் ஆதிமனிதன் அக்கனியை புசித்து இனப்பெருக்க ரகசியங்களை, காதலை காமத்தை அறிந்து கொண்டான்.

எனவே  கோபம் கொண்ட கடவுளால், அந்த  ஆதி தம்பதியினரும்,  விஷப்பாம்பாக மாற்றப்பட்ட சாத்தானும், சிறு செடியாக மாற்றப்பட்ட  அந்த மாண்ட்ரேக் மரமும் கடவுளால்  சொர்க்கத்திலிருந்து  வெளியேற்றப்பட்டனர்.அதன் பின்னர் அக்காலப் படைப்புகளில் விலக்கப்பட்ட கனி மாண்ட்ரேக் என்னும் சிறு செடியின் கனியாகவே சித்தரிக்கப்பட்டிருந்தது.

 பொ யு 250–200  ஆண்டுகளுக்கு முன்பான ஆதாமின் ஏழாம் தலைமுறை என கருதப்படும் ஏனோக்குவின் நூலில் கொத்துகொத்தாக திராட்சைகளை போன்ற கனிகள் விலக்கப்பட்ட கனிகளாக சித்தரிக்கப்பட்டன (Enoch 32:4). இது பின்னர் முதல் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்தது. 

 ஒரு நூற்றாண்டு கழித்தே திராட்சைகளின் இடத்தை அத்தி எடுத்துக்கொண்டது. 

கிறிஸ்துவுக்கு பிறகான முதல் ஆயிரமாண்டு காலத்தில் எழுதப்பட்ட குறிப்பிடத்தகுந்த படைப்பான   Life of Adam and Eve என்னும் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னரான ஆதாம் ஏவாளின் வாழ்க்கையை சொல்லும் படைப்பிலும் அது அத்திக்கனியென்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

இந்நூல் மொழியாக்கம் செய்யப்பட்ட  கிரேக்க, லத்தீன அர்மீனிய, ஜார்ஜிய, ஸ்லேவினிக் மற்றும் மேற்கு ஐரோப்பாவின் பல மொழிகளிலும் அப்படியே குறிப்பிடப்பட்டது. முக்கிய கிறிஸ்தவ  இறையியல் எழுத்தாளர்களும் விவிலிய அறிஞர்களுமான அகஸ்டின், தியடோர்  ஆகியோரும் அது அத்தியே என குறிப்பிட்டார்கள்  

அந்நூல்களின் சித்தரிப்பை அடிப்படையாக கொண்டு பல ஓவியங்களும் அதே கனிகளை வரைந்தன.அவற்றில் மிக அதிகம் இடம்பெற்றது அத்தியும் திராட்சையும்தான். சில சித்திரங்களில் அத்திமரத்தில் திராட்சை காய்த்திருந்தது.இன்னும் சில சித்திரங்கள்  மரத்தையோ கனியையோ அடையாளம் கண்டுகொள்ள முடியாத வகையில் வரையப்பட்டிருந்தன.

பிரான்ஸின் வடக்குப்பகுதி நகரமான  லையான்  (Lyon) தேவாலயமொன்றில் சிறியதாக கருப்பு நிறத்தில் ஆலிவ் கனிகளை நினைவூட்டும் கனி வரையப்பட்டிருந்தது

வடக்கு பிரான்ஸில் ஒரு தேவாலயத்தில் 1180–90க்கு  இடைப்பட்ட காலத்தில் வரையப்பட்ட ஒரு சித்திரத்தில் ஏற்கனவே கடிக்கப்பட்டிருந்த ஒரு உருண்டையான கனியை ஆதாம்  உண்ணும் சித்திரம் இருந்தது.அக்கனியில் ஆப்பிளை அடையாளம் காணும் மேற்புற பிளவு தெளிவாக தெரிந்தது.

3ம் நூற்றாண்டின் அலெக்ஸாண்டிரியா திராட்சையே ஆதமும் ஏவாளுமுண்ட விலக்கப்பட்ட கனி என்றார்.  பாரீஸின் வடக்கு புறநகர்ப்பகுதி தேவாலயங்களில் அக்காலத்து ஓவியங்களில் சாத்தானாகிய பாம்பு ஒரு கொத்து திராட்சைகளை வாயில் கவ்விக் கொண்டிருக்கும் சித்திரங்கள் இருந்தன.

 4ம் நூற்றாண்டில் (அனேகமாக  A.D. 382ல்) ரோம் நகரில்தான் இந்த ஆப்பிளின் வடிவம் துவங்கி இருக்கக்கூடும். போப் முதலாம் டமஸ்கஸ் , மொழியியலாளரான ஜெரோம் என்பவரிடம் விவிலியத்தை ஹீப்ரூவில் இருந்து லத்தீன மொழியில் மொழியாக்கம் செய்ய பணித்தபோது ஜெரோம் ஹீப்ரூவின் பெரி என்னும் சொல்லுக்கான லத்தீன இணைச்சொல்லாக மாலம் (“malum”) என்பதை உபயோகப்படுத்தினார். லத்தீன மொழியில் மாலம் என்பது சதைப்பற்றான உட்புறமும் ஏராளமான விதைகளையும் கொண்டிருக்கும் கனிகளின் பொதுப்பெயர். ஜெரோம் உபயோகப்படுத்திய மாலம் என்னும் சொல்லின் மற்றொரு இணைப்பொருள் ’’தீமை’’. 

ஜெரோம் அப்பணியை 15 ஆண்டுகள் எடுத்துக் கொண்டு செய்தார்.  அவர் கையாண்ட canonical Vulgate எனப்பட்ட பேச்சுவழக்கு லத்தீன மொழியிலான அப்படைப்புத்தான் மாலம் என்னும் தீமைக்கும் கனிக்குமான் ஒரே பொதுச்சொல்லினால் கனியை குறிப்பிட்டு விலக்கப்பட்ட கனி ஆப்பிள் தான் என்னும் விதையை ஊன்றியது

ஜெரோம் மொழியியலாளர் மட்டுமல்ல  ஒரு இறையியலாளர் மிக புத்திசாலியும் கூட . ஜெரோம் வேண்டுமென்றே அதை செய்திருக்க கூடும் என்று மொழியியலாளர்கள் பின்னர் யூகித்தனர். மொழிமாற்றத்தின்போது ஆப்பிளுக்கும் தீமைக்குமான ஒரு பொதுச்சொல்லை, தீமையை கொண்டு வரும் என்பதால்  கடவுளால் விலக்கபட்ட ஒரு கனிக்கு உபயோகப்படுத்துவது பொருத்தமாக இருக்கும் என அவர் நினைத்திருக்கலாம் என்கிறது அவர்கள் தரப்பு.எப்படியாகினும் மாலஸ் ஒரு நாகம் போல மெல்ல ஊர்ந்து வந்து வரலாற்றில் இடம் பிடித்தது ஜெரோமினால்தான்.

ஆனால் மாலஸ் என்பது சதைப்பற்றான எந்த கனியையும் குறிப்பதுதான் எனவே அக்கனி பேரிக்காய் அல்லது அத்தி அல்லது பீச் ஆக இருக்கலாம் என்ற கருத்தும் வலுவாக  பின்னர் எழுந்தது.அதை சொன்னவர்கள் தங்கள் தரப்பு ஆதாரமாக  1508 லிருந்து 1512 க்கு இடைப்பட்ட காலத்தில் சிஸ்டைன் தேவாலய உட்கூரையில் மைக்கேல் ஏஞ்சலோ வரைந்த சித்திரத்தில் அத்தி மரத்தை சுற்றிக்கொண்டிருக்கும் பாம்பை காட்டினார்கள் 

எனினும்  அதன் பின்னர் ஐரோப்பாவின் பல கலைவடிவங்களில் விலக்கப்பட்ட கனி ஆப்பிளாக சித்தரிக்கப்பட்டது. ஜெர்மானிய கலைஞரான  Albrecht Dürer என்பவரின் 1504 ஆண்டின் புகழ்பெற்ற  செதுக்கு சித்திரங்களில் ஆதாமும் ஏவாளும் ஆப்பிள் மரத்தடியில் நின்றுகொண்டிருக்கும் சித்திரத்தை  உதாரணமாக சொல்லலாம்.

அந்த சித்திரம் பிற்பாடு உருவாக்கப்பட பல ஓவியங்களுக்கு அடித்தளமாகவும் முன்னுதாரணமாகவும் இருந்தது. உதாரணமாக ஜெர்மானிய ஓவியர்  Lucas Cranach the Elder ன் ஆதாமும் ஏவாளும் சித்திரத்தில் மரத்திலிருந்து  பளபளக்கும் ஆபரணங்களை போல ஏராளமான ஆப்பிள்கள் தொங்கிக்கொண்டு இருந்தன.  

எனவே இது ஒரு மொழியில் ஏற்பட்ட நுண்மையான விளையாட்டு அல்லது தவறு  என்பதை மக்கள் உணரும் முன்னேயே ஆதாமும் ஏவாளும் ஆப்பிளுடன் இருக்கும் சித்திரங்கள் ஏராளமாக உருவாகிவிட்டிருந்தன.

அதே சமயத்தில் எலுமிச்சையும் ஆப்ரிகாட்டும்,மாதுளைகளும்  பல ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டன என்றாலும் ஆப்பிள் மிக அதிக இடமும் முக்கியத்துவமும் ஏற்றிருந்தது’

 12ம் நூற்றாண்டின் வழிபாட்டு நாடகமான Jeu d’Adam ல் பல இடங்களில் விலக்கப்பட்ட கனி என்பதை  மாதுளையை குறிக்கும் “forbidden pom” என்னும் சொற்களே குறிப்பிட்டன. ஜெர்மனியிலும் 10,12 நூற்றாண்டுகளில் விலக்கப்பட்ட கனியாக அத்தி மாதுளை ஆகியவை இடம் பெற்றிருந்தன ஆனால் 13ம் நூற்றாண்டில் அனைத்து கனிகளையும் விலக்கிவிட்டு ஆப்பிள் அந்த  இடத்தில் அமைந்தது 

 அதன் பின்னர் ஆப்பிள் வலுவாக  பிரான்சின் விலக்கப்பட்ட கனியின் இடத்தில் அமர்ந்தது. இங்கிலாந்திலும்  ஜெர்மனியிலும் அத்தனை விரைவில் மாற்றம் வந்திருக்காவிடினும்  பிரான்சின் கலாச்சார தாக்கத்தில்  13ம் நூற்றாண்டின் பின்பகுதியில் அங்கும் ஆப்பிள் அறிமுகமானது.பிரான்சையும் விரைவில் கடந்து  13ம் நூற்றாண்டின் இறுதியில் பல நாடுகளில் அத்தியை நகர்த்திவிட்டு ஆப்பிள்கள் இடம்பெற்றன,

14ம் நூற்றாண்டில்  ஆங்கிலம் பேசுமொழியாக இருந்த அனைத்து பிரதேசங்களிலும் பெரும்பாலான  அத்திகள் ஆப்பிள்களாகியிருந்தன.  . அதன் பின்னர் ஐரோப்பாவின் அனைத்து கலைகளிலும் அத்தி மறைந்து ஆப்பிள் நுழைந்தது

 ஆப்பிள் விலக்கப்பட்ட கனியாவதற்கு அச்சு இயந்திரங்களும் ஒரு காரணமாயிருந்தன. 16ம் நூற்றாண்டின் துவக்ககாலங்களில் முக்கிய அச்சு தொழிற்சாலைகள் எல்லாம் வடக்கு ஐரோப்பாவில் அமைந்திருந்தன. அவை உருவாக்கிய அனைத்து படைப்புக்களிலும் ஆப்பிள் விலக்கப்பட்ட கனியாக சித்தரிக்கப்பட்டது.

வடக்கு ஜெர்மனியின் புகழ்பெற்ற கலைஞர்களான Hugo van der Goes, Hieronymus Bosch, Lucas Cranach the Elder, Albrecht Dürer ஆகியோரின் சித்திரங்களில் விலக்கப்பட்ட கனி ஆப்பிளாகவே இருந்தது. 

ஜான் மில்டன் தனது இழந்த சொர்க்கத்தை பதிப்பத்தாரிடம் 5 பவுண்டுகளுக்கு  1667ல் உரிமம் பெற்று இப்போது 356 வருடங்கள் ஆகின்றன.

அவரது அப்பெரும் படைப்பில் விவிலியத்தின் ஆதிக்கதைதான் பேசுபொருள் . கதாபாத்திரங்களும் நமக்கு தெரிந்தவர்கள் தான் கடவுள், ஆதாம், ஏவாள், பாம்பின் வடிவத்தில் சாத்தான் மற்றும் ஒரு ஆப்பிள்.

கடவுளுக்கெதிரான மனிதனின் முதல் மீறலும்,  உலகிற்கு மரணத்தின் சுவையையும் அழிவையும் கொண்டு வந்த அந்த  விலக்கப்பட்ட மரத்தின் கனியை குறித்தான அறிமுகத்தில் ஜான் மில்டன் இப்படி குறிப்பிடுகிறார்

//Of Mans First Disobedience, and the Fruit

Of that Forbidden Tree, whose mortal taste

Brought Death into the World, and all our woe//

துவக்கத்தில் வெறும் கனி என்று சொல்லும் மில்டன் அந்த 1000 வரி கவிதையில் இரண்டு இடங்களில் ஆப்பிள் என்று குறிப்பிடுகிறார்.

மில்டன் வெறும் எழுத்தாளர் மட்டுமல்ல அவருக்கு பன்மொழிப்புலமை இருந்தது. லத்தீன, கிரேக்க மற்றும் ஹீப்ரூ மொழிகளில் நல்ல புலமை இருந்த அவர் வெளிநாட்டு மொழிகளுக்கான செயலராகவும் பணிபுரிந்தார். அவருக்கு நிச்சயம்  ஜெரோமின் நுண்மையான விளையாட்டு தெரிந்திருக்கும் இருந்தும் அவர் ஏன் ஆப்பிள் என்னும் சொல்லை தேர்வு செய்திருக்க கூடும்?

இதற்கு வரலாற்றாய்வாளர்கள் இருகருத்துகளை சொல்கிறார்கள்’ ஒன்று மில்டன் அக்கனி ஆப்பிள் என்றே நினைத்திருக்கலாம் . இரண்டு மில்டனும் ஆப்பிள்/மாலஸ் என்னும் சொல்லின் பொருளான சதைப்பற்றான விதைகள் நிரம்பிய ஏதோ ஒரு கனி என்னும் பொதுப்பெயரில் கூட அச்சொல்லை உபயோகப்படுத்தி இருக்கலாம் என்கிறார்கள்’

மில்டனுக்கு பின் வந்த எழுத்தாளர்கள் அச்சொல்லை பிரத்யேகமாக ஆப்பிளை குறிக்கும் சொல்லாகவே உருவகப்படுத்தி பிரபலமாக்கினர்.அதன்பிறகே உலகெங்கிலும் விலக்கப்பட்ட கனியாக ஆப்பிள் நிலைத்துவிட்டது.

கடவுளுக்கு கீழ்படிந்திருந்தால் மற்றுமொரு  நன்மை மரமான வாழ்க்கை மரத்தின் பலன்கள் மனிதனுக்கு கிடைத்திருக்கும் என்பதையே இறையியல் நூல்கள்  விலக்கப்பட்ட கனி என்பதன் மூலம் குறிப்பிட்டன. அது ஒரு குறியீடு என்பதையும் தாண்டி பல நூற்றாண்டுகளாக அக்கனி எது என்பதற்கு  இத்தனை முக்கியத்துவம் அளிக்கப்பட்டது வியப்புத்தான்.

 ஏவாளும் ஆதாமும் கீழ்படியாமை, மீறல் ஆகிய பாவங்களின் பொருட்டே பூமிக்கு அனுப்பப்பட்டனர். அக்குற்றத்தை காட்டிலும் நூற்றாண்டுகளாக அது எந்தக்கனி என்பதில் இத்தனை ஆராய்சிகள் செய்யப்பட்டிருக்கிறது.

 மொழியியலோ அழகியலோ தவறான புரிதலோ  ஆலிவிலிருந்து, மாதுளை, அத்தி, கோதுமை, திராட்சை என்று பல வசீகரிக்கும் வடிவங்கள் கொண்டு இறுதியில் ஆப்பிளாயிருக்கிறது விலக்கப்பட்ட கனி. இப்படித்தான் தீமையும் பல அழகிய, வசீகரிக்கும், சபலப்படுத்தும் வடிவங்களில் நம்முன் வந்து நிற்கிறது.

அதிலும் செக்கசிவந்த நிறமும் சதைப்பற்றும் சுவையும் கொண்ட ஆப்பிள் வசீகரமென்றால், முன்பே கடிக்கப்பட்ட ஆப்பிள்  கூடுதல் வசீகரம்தான்.

 சிவப்பு நிறம்கொண்ட ஆப்பிள் ஆசையும் காதலும் நிரம்பி இருக்கும் மனிதனின் இதயத்துக்கான குறியீடாகவும் கருதப்படுகிறது. உலகெங்குமே  ஆப்பிள் வடிவம்  தொழில்நுட்பம், மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்புக்களின் அடையாளமாக கருதப்படுகிறது. 

ஜூன் 7 1954 ல் தனது 42வது வயதில் ஆலன் டூரிங் அவருக்கு மிக பிடித்தமான அடர்சிவப்பு ஆப்பிளில் சயனைடை ஊசியில் செலுத்தி அதை கடித்துண்டார் மறு நாள் காலையில் ஒரு துண்டு கடிக்கப்பட்ட ஆப்பிளின் அருகில் அவரது சடலம் கிடந்தது. அதே கடிக்கப்பட்ட ஆப்பிள் தான் ஆப்பிள் நிறுவனத்தின் லோகோவாக அமைந்திருக்கிறது.

விலக்கப்பட்ட கனி என்பது மாதுளையோ அத்தியோ ஆப்பிளோ திராட்சையோ அல்ல எவையெல்லாம் அறமற்றதோ அவையனைத்துமே விலக்கப்பட்ட கனிகள்தான். 

ஏவாள் அக்கனியை தாணுண்டு ஆதாமுக்கும் அளித்து அவர்கள் சொர்க்கத்தை  இழந்தாலும் உலகை தோற்றுவித்தார்கள், வெண்முரசு நாவல் நிரையின் இமைக்கணத்தில் இந்த  வாழ்வின் சுழற்சியை, தொடர்ச்சியை சிகண்டியும் இளைய யாதவரும் பேசிக்கொண்டிருக்கும் ஒரு அத்தியாயத்தின் இருவரிகள் சொல்லி விடுகிறது. //ஆணை பெண் உண்கிறாள். அவன் உடலின் பகுதியென்றாகிறாள். அவள் வயிற்றில் அவன் கருவாகிறான்” //

டிகாப்ரியோ மரம்!

மத்திய ஆப்பிரிக்காவின் கேமரூன் நாட்டின் ‘எபோ’ காடுகள் இயற்கை வளம் மிகுந்தவை. மலை யானை, உலகின் மிகப்பெரிய கோலியாத் தவளை மிக அரிய  உலகின் ஒரு சில இடங்களில் மட்டுமே காணப்படும் Red colobuses குரங்குகள் பல அரிய தாவர வகைகள் என பலவற்றின் வாழிடம் இதுதான். உலகின் மழைப்பொழிவில் எபோ காடுகளின் பங்கு குறிப்பிடத்தக்கது .

இந்த எபோ காடுகளில் 1500 சதுர கிமீ அளவுக்கு மழைக்காடுகள் எபோ ஆற்றின் அருகில் இருக்கிறது.இங்கு 65 மிக முக்கிய உயிரினங்கள் அழியும் ஆபத்தில் இருக்கின்றன

உலகின் பிற இயற்கை வளங்களைப்போலவே எபோ காடுகளும் கனிம சுரங்கங்களுக்ககவும், சட்ட விரோத விலங்கு வேட்டை மற்றும் மரம் வெட்டுதல் ஆகியவற்றால் அழியும் அபாயத்தில் இருந்தது. பல சூழலியல் ஆர்வலர்கள் இந்த பிரச்சனையை  சர்வதேச அளவில் முன்வைத்தபோது எபோ காடுகள் பாதுகாக்கப்பட்ட பூங்காவாக அறிவிக்கப்படும் என்று அரசுத்தரப்பில் 2010ல் சொல்லப்பட்டும் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதன் பின்னரும் எபொ காடுகளின் 1,300  சதுர கிமீ அளவுள்ள பரப்பின் மரங்கள் வெட்டப்படுவதற்கான உரிமம்  அரசால் வழங்கப்பட்டது. எபோ காடுகளின் உயிரினங்களும் அங்கிருக்கும் தொல்குடிகளுக்குமான மாபெரும் அச்சுறுத்தலாக அது இருந்ததால் எதிர்ப்புகள் வலுத்தன. 

 எனவே அழிவின் விளிம்பில் இருந்த எபொ காடுகளை பாதுகாக்க கேமரூனின் ஆரய்ச்சியாளர்கள் சூழியலாளர்கள் ஆகியோர் இணைந்து சர்வதேச கவனத்தை ஈர்க்கும் பொருட்டு டிகாப்ரியோ உள்ளிட்ட பல பிரபலங்களின் கையெழுத்தை சேகரித்து  அரசுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் அனுப்பினார்கள் கூடவே எபோ காடுகளின் இயற்கை வளத்தை பட்டியலிட்டு உலகிற்கு அதன் முக்கியத்துவத்தை காட்ட நினைத்தார்கள் அப்படி பட்டியலிடுகையில்தான் அதுவரை அறியப்பட்டிருக்காத ஒரு மரம் கண்டுபிடிக்கப்பட்டது

 சீதாப்பழத்தின் தாவரக்குடும்பமான அனோனேசியை சேர்ந்த, 2022ல் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட  இம்மரத்திற்கு புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகரும் இயற்கை ஆர்வலரும், சூழியல் செயற்பாட்டாளருமான லியோனார்டோ டிகாப்ரியோ வின் பெயரிடப்பட்டிருக்கிறது. 

கேமரூன் நாட்டின் எபோ காடுகளின் பாதுகாப்பில் டிகாப்ரியோ காட்டிவரும் அக்கறையையும் அதை பாதுகாக்கும் அவரது முன்னெடுப்புக்களையும் சிறப்பிக்கும் பொருட்டு அக்காடுகளில் மட்டும் காணப்படும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த மரத்திற்கு Uvariopsis dicaprio என்று அவரது பெயர் இடப்பட்டிருக்கிறது, 

குறிப்பாக அக்காடுகளில் மரம் வெட்டப்படுவதற்கான எதிரான அவரது செயல்பாட்டின் முக்கியத்துவத்தின் பொருட்டே இந்த கெளரவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

எபோ காடுகளில் 50க்கும் குறைவான டிகப்ரியோ மரங்கள் மட்டுமே இருக்கின்றன அதுவும் வெறும் 4 சதுர கி மீ பரப்பளவில் மட்டும் இருக்கிறது. பலமுறை எபோ காடுகளில் தேடியும் இவை வேறெங்கும் காணப்படவில்லை.

கடல் மட்டத்திற்கு 850 மீ உயரத்தில்,4 அடி உயரமும் கவிழ்ந்து தொங்கும் மஞ்சள் இதழ்களை கொண்ட ஆண்மலர்களையும் கொண்டிருக்கும் இம்மரம் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால் அவசியம் பாதுகாக்கப்படவேண்டிய தாவரங்களில் ஒன்றாகி விட்டிருக்கிறது. இக்காடுகளின் மரம் வெட்டும் உரிமம் ரத்தானதில் டிகாப்ரியோவின் பங்கு மிக முக்கிய மானதென்பதால் இம்மரம் அவர் பெயரில் அழைக்கப்படுவது அவருக்கான பொருத்தமான அங்கீகாரம்.

இந்தப் பெயரிடல் கியூ தாவரவியல் பூங்காவின் தாவரவியலாளர் களான  Martin Cheek  மற்றும் George Gosline, ஆகிய இருவரின் பரிந்துரையின் பேரில் நடந்திருக்கிறது.

உலகின் மிக அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் எட்டு முறை இடம்பெற்ற செல்வந்தர் எனினும் மிகுந்த அர்ப்பணிப்புடன் இயற்கை பாதுகாப்பில் அக்கறை கொண்டவராகவே இவர் பொதுவெளியில் அறியப்படுகிறார்

திரைப்பட தயாரிப்பாளராகவும் இருக்கும் இவர் 2014ல் தயாரித்த மலை கொரில்லாகளைக் காப்பாற்ற போராடும் நான்கு நபர்கள் குறித்த பிரிட்டிஷ் ஆவணப்படம் ’விருங்கா’ மிக குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து விவசாயம், விலங்குகள் பாதுகாப்பு போன்ற பேசு பொருட்களை கொண்ட படங்கள் தயாரிப்பதில் டிகாப்ரியோ ஆர்வம் கொண்டிருந்தார். 

2019ல் புவி வெப்பமாதல் குறித்த  ஆவணப்படமாகிய  Ice on Fire, அவரால் தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து டிகாப்ரியோ சூழலியம் (Environmentalism)  தொடர்பான பல முன்னெடுப்புக்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

புவிவெப்பமாதல் உலகின் மிகப்பெரிய சவால் என்று சொல்லும் இவர் மழைக்காடுகள் அழிந்து வருவதையும் வாழிடங்ளை இழந்து பல உயிரினங்களின் இருப்பு கேள்விக்குறியாகவும் கவலைக்குரியதாகவும் ஆகிவிட்டிருப்பது குறித்தும்  தொடர்ந்து ஆவணப்படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார்

இயற்கை சார்ந்த விழிப்புணர்வு மற்றும் செயல்பாட்டின் பொருட்டு லியோனார்டோ டிகாப்ரியோ அறக்கட்டளை ஒன்றையும் (Leonardo DiCaprio Foundation,) 1998ல் நிறுவினார். இந்த அறக்கட்டளை மூலம் வளரும் நாடுகளின் இயற்கை பேணுதலுக்காக நிதியுதவிகள் அளிக்கப்படுகின்றது. 

இத்துடன் சூழலுக்கு இணக்கமான மின் வாகனங்களைத்தான் அவர் பயன்படுத்துகிறார்.

2000த்தில் சூழல் பாதுகாப்பு குறித்த பில் கிளிண்டனுடனான டிகாப்ரியோவின் நேர்காணல் க முக்கியமானது

2007ல் Live earth எனப்படும் மாபெரும் சூழல் விழிப்புணர்வு நிகழ்வையும் நடத்தினார் அதே ஆண்டில் ரஷ்யாவின் வன உயிர் பாதுகாப்பு அமைப்பு நடத்திய புலிகளுக்கான் உச்சிமாநாட்டுக்கு 1மில்லியன் டாலர் நன்கொடை வழங்கினார். அந்த மாநாட்டிற்கு பல தடங்கல்களுக்கு இடையில், இரண்டு முறை அவர் செல்லவேண்டிய விமானம் ரத்தாகியும் அவர் முயற்சி எடுத்து கலந்துகொண்ட போது புதின் டிகாப்ரியோவை ’’இவரே உண்மையான் ஆண்’’ என்று புகழ்ந்தார்.

இந்தோனேசியாவின் எண்ணெய்ப்பனை வளர்ப்பினால் காடழிதல் குறித்து கண்டனம் தெரிவித்தது, 2016ல்; அமெரிக்க தொல்குடிகள், அவர்களின் வாழ்விடங்களின், வன உயிர்களின் பாதுகாப்புக்கென  15.6 மில்லியன் டாலர் நன்கொடை அளித்தது, 2017ல்  காலநிலை மாற்றம் குறித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் பாராமுகக்தை கண்டித்து ஊர்வலம் சென்றது என டிகாப்ரியோவின் சூழல் செயல்பாடுகளை வரிசையாக சொல்லிக்கொண்டெ போகலாம்

சமீபத்தில் கிழக்கு பசிபிக் தீவுக் கூட்டங்களின் பாதுகாப்பிற்கென டிகாப்ரியோ 43 மில்லியன் டாலர்களை அளிப்பதாக அறிவித்திருக்கிறார். அவரும் அவரது அன்னையுமாக பல நன்கொடைகளை சூழியல் சார்ந்த செயல்பாடுகளுக்கென அளிக்கிறார்கள். அவரின் விக்கி பக்கத்துக்குள் சென்றால் இவரது சூழியல் செயல்பாடுகள் குறித்து மேலும் அறியலாம்

டிகாப்ரியாவின் இத்தையக சூழல் சார்ந்த செயல்பாடுகளால் அவரை சிறப்பிக்கும் பொருட்டு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட  மலேசியாவில் மட்டும் காணப்படும் ஒரு வண்டினத்துக்கு  Grouvellinus leonardodicaprioi,  என்றும் டொமினிக் குடியரசின் சிலந்தி ஒன்றுக்கு Spintharus leonardodicaprioi  என்றும் அவரது பெயர் முன்பே வைக்கப்பட்டிருக்கிறது.

டிகாப்ரியோ விற்கு  வாழ்த்துக்கள்!

https://en.wikipedia.org/wiki/Uvariopsis_dicaprio

 மரியா சிபில்லா!

கிட்டத்தட்ட நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னதான அரிய நீல நிற வைரக்கல்லான  ஹோப் வைரம் உள்ளிட்ட பதினான்கு கோடி பல்துறை சார்ந்த பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் ஸ்மித்சோனியன் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தின் (Smithsonian National Museum of Natural History) ஒரு மதிய வேளை அது. அறிவியலாளரான சினிச்சி நகஹரா (Shinichi Nakahara) தனது மேசையின் இழுப்பறையை திறந்து அந்த கண்ணாடிப் பெட்டியை கவனமாக எடுத்தார்.1981 லிருந்து  அதனுள் இருந்த பதப்படுத்தப்பட்டிருந்த  பட்டாம் பூச்சியை மீண்டும் கவனமாக ஆராய்ந்தார். 

பட்டாம்பூச்சி மற்றும் அந்துப்பூச்சிகள் துறையில் வல்லுநரான நகஹராவால் அந்த பட்டாம் பூச்சியை வெகு காலமாக, 2018  டிசம்பர் மாதமான அப்போது வரை இனம் காண முடியாமல் இருந்தது. அந்த அரிய கருப்பு வண்ண ஆண் பட்டாம்பூச்சியின் உடல் பனாமாவில் கிடைத்தது. ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் மாணவன் பாப்லோ (Pablo Sebastián Padrón) அதை கண்டு பிடித்து அதன் உடலை புகைப்படம் எடுத்து நகஹராவுக்கு அனுப்பி அதை இனம் கண்டு சொல்லும்படி கேட்டிருந்தான்.  பின்னர் அது பாடம் செய்து அங்கே சேமித்துவைக்கப்பட்டது. அந்த பட்டாம்பூச்சியை இனம் காண்பது பெரிய சவாலாக அமைந்துவிட்டது நகஹராவுக்கு. மேலும் ஒரு பட்டாம்பூச்சி கிடைத்தால் ஒப்பிட்டு பார்க்க உதவியாக இருக்கும் என அவர் நினைத்துக் கொண்டு காத்திருந்தார்.

பளபளக்கும் கரிய இறக்கைகளும், இறக்கைகளின் விளிம்புகளில் பாலாடை நிறப் புள்ளிகளின் வரிசையும் கொண்ட அந்த பட்டாம்பூச்சி மிக வசீகரமாயிருந்தது. இறகுகள் இணையும் இடத்தில் இருந்த செந்தீற்றல் அதை மேலும் அழகாக்கி இருந்தது.

அதன் உடல் அமைப்பு பட்டாம்பூச்சிகளின் மிகப்பெரிய குடும்பமான பியரிடேவை (Pieridae) சேர்ந்தது என தெரிவித்தாலும் அதன் கருப்பு நிறம் சந்தேகத்துக்கு இடமளித்தது. எனவே நகஹராவும் பாப்லோவும் காத்திருந்தனர். 

Shinichi Nakahara

அதிர்ஷ்டவசமாக, இரண்டு மாதங்கள் கழித்து மிஸிஸிபி பல்கலைக்கழகத்தின் பூச்சியியலாளரான ஜான் (John MacDonald) பனாமாவிலிருந்து தன்னால் இனம் காணமுடியவில்லை என்னும் குறிப்புடன் ஒரு கருப்பு நிற பட்டாம்பூச்சியின் புகைப்படத்தை நகஹராவுக்கு அனுப்பியிருந்தார்.

புகைப்படத்தில் இருந்த பட்டாம்பூச்சி தன்னிடம் இருந்த அதே கருப்பு பட்டாம்பூச்சியை போலிருந்ததால், நகஹரா, ஜானிடம் அந்த பூச்சி உடலின் ஒரு காலை மட்டும் உடனே  அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். இரண்டின் DNA சோதனைகளையும் செய்து அவை Catasticta  பேரினத்தை சேர்ந்த  மிக அரிய வகை பட்டாம்பூச்சிகள் என்பதை கண்டறிந்தார். 

அதுவரை விவரிக்கவும், கண்டுபிடிக்கப்பட்டும் அடையாளம் காணப்பட்டுமிராத அவற்றின் வேறு மாதிரிகள் எங்கேனும் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறதா என அடுத்த 30 மாதங்களும்  14  பட்டாம்பூச்சி அருங்காட்சியங்களில் தேடிப்பார்த்த போது எங்குமே அவை இல்லை. எனவே  புதிய கண்டுபிடிப்பான அதற்கு பொருத்தமான பெயரை தேடினார் நகஹரா

அத்தனை அரிய பட்டாம்பூச்சிகளான அவற்றிற்கு 17ம் நூற்றாண்டின் பிரபல ஓவியக்கலைஞரும் பூச்சியியலில் பெரும் கண்டுபிடிப்புக்கள் செய்தவரும் பட்டாம்பூச்சிகளில் பேரார்வம் கொண்டிருந்தவருமான  மரியா சிபில்லா மெரியனின் (Maria Sibylla Merian) பெயரை வைக்க முடிவு செய்து அந்தப் பட்டாம்பூச்சிக்கு  Catasticta sibyllae என்று பெயரிட்டார்.

மரியா சிபில்லா அவர் வாழ்ந்த நூற்றாண்டின் மாபெரும் அறிவியல் மற்றும் ஓவியக்கலைஞராக அறியப்பட்டவர். 17ம் நூற்றாண்டில் பெண்கள் இருந்த நிலைக்கு மாறாக பல அரிய சாதனைகளை தாவரவியலிலும், பூச்சியியலிலும் செய்தவர்.

17ம் நூற்றாண்டின் பிரபல  தாவரவியல் ஓவியக் கலைஞரான  ஜெர்மெனியை சேர்ந்த மரியா சிபில்லா (1647-1717) மிக இளைய வயதிலேயே கம்பளிப்புழுக்கள், கூட்டுப்புழுக்கள் மற்றும் பூச்சிகளிலும் அவை வாழும், உண்ணும் தாவரங்களிலும்  வெகுவாக  ஆர்வம் கொண்டிருந்தார். மரியாவின் மாமா ஒரு பட்டுப்புழு உற்பத்தியாளர், எனவே அவருக்கு அப்புழுக்களை கவனிப்பதில் இயற்கையாகவே ஆர்வம் உண்டானது

மரியா தனது 11ம் வயதிலிருந்தே ஓவியங்கள் வரையத் துவங்கினார். அவரது பொழுதுபோக்கு இறந்த பூச்சிகளை பாடம் பண்ணுவதில்  அவரது தாய் மாமாவுக்கு உதவுவதும், அவற்றை அலமாரிகளில் அடுக்கி வைப்பதும்தான். எனவே மரியாவிற்கு பூச்சிகளின் உலகில் நல்ல பரிச்சயமுண்டானது, 

ஜான்ஸ்டன் (Jonston) உருவாக்கிய முதல் விலங்கியல் அகராதியை அவர்களின் குடும்பத்திற்கு சொந்தமான அச்சகம் மரியா சிறுமியாக இருக்கையிலேயே வெளியிட்டது. அந்த அகராதியின் அழகிய வண்ணப்படங்களால் மரியா வெகுவாக  ஈர்க்கப்பட்டிருந்தாள். 

மரியா ஃப்ராங்க்ஃபர்ட்டில் ஏப்ரல் 2,  1647 ல்  சிற்பியும் பதிப்பக உரிமையாளரும் ஓவியருமான மேத்யூஸுக்கும் (Matthaeus Merian) ஜோஹன்னாவுக்கும் (Johanna Sibylla Heim) பிறந்தார்.  ஜொஹன்னா மெரியனின் இரண்டாவது மனைவி. மரியாவுக்கு 3 வயதாக இருக்கையில் தந்தை மேத்யூஸ் இறந்த பின்னர் ஜோஹன்னா உருவப்பட ஓவியரான  ஜேகப்பை  (Jacob Marrel-1613/14 – 1681)   மணந்துகொண்டார். 

மரியா ஒவியம் வரைவதை அவரது தாய் மறுமணம் புரிந்துகொண்ட பிரபல ஓவியரும் அவளது வளர்ப்புத்தந்தையுமான ஜேகப்பிடமிருந்து  கற்றுகொண்டார் .   

ஜேகப் ஒரு மலர் ஓவியர், உருவ வரைபட நிபுணர் மற்றும் தேர்ந்த சிற்பி.

ஃப்ராங்க்ஃபர்ட்டின் பிரபல உருவ வரைபட நிபுணரான  ஜார்ஜின் (Georg Flegel -1566-1638),   மாணவராக இருந்து ஓவியக்கலையை கற்ற இவர்   Utrecht க்கு 1632 ல் குடிபெயர்ந்தார். அங்கு உயிர் ஓவியக்கலை வல்லுநரான  ஜேனின் (Jan Davidsz. de Heem -1606-1683/4) அறிமுகம் உண்டானது. அக்கலையையும் ஜேகப் கற்றுத்தேர்ந்தார்

ஜேகப்பின் படைப்புக்களில் மிகவும் பிரபலமானவை மேசையின் மீதிருக்கும் கூடைகளில் வைக்கப்பட்டிருக்கும் கனிவகைகளும், பூச்சாடிகளில் அமைக்கப்பட்டிருக்கும் மலர்களும் தான். குறிப்பாக கனிகளின் மேற்புறத்தின் நுட்பமான அமைப்புக்களை ஜேகப் துல்லியமாக வரைந்திருப்பார்.

அழகிய உலோகக் கிண்ணங்களில் வைக்கப்பட்டிருக்கும் பீச், ரத்தினக்கற்களை போன்ற விதைமுத்துக்களை காட்டிக் கொண்டிருக்கும் மாதுளை, தோல் மீதிருக்கும் மெல்லிய வெண்படலத்துடன் காணப்படும் கொத்து கொத்தான திராட்சைகள்  ஆகியவை மிக தத்ரூபமாக வரையப்பட்டிருக்கும்.

ஜேகப்பின் ஓவியங்களில் பூச்சி அரித்த இலைகளும், பழுத்து அழுகிய கனிகளும் காணப்படும். எத்தனை அழகியதாயினும் அழிவு என்பது இயற்கையில் தவிர்க்க முடியாது என்பதை அவரது ஓவியங்கள் உணர்த்தின.

ஜேகப்,  ஜெர்மனியின் பிராங்க்பர்ட்டில் பிறந்தார். எண்ணெய் ஓவியங்கள் அவரது தனித்த பிரியத்துக்குரியவையாக இருந்தன. 1641ல் ஜேகப் கேதெரினா எலியட்டை மணந்தார். 1649ல் எலியட் மரணமடைந்த பின்னர் ஃப்ராங்க்ஃபர்ட்டில் வாழ்ந்துவந்த   பிரபல சிற்பியான மேத்யூஸ் மெரியனின் (Matthäus Merian) விதவையான  ஜொஹன்னா சிபில்லாவை (Johanna Sibylla Heimius)  1651ல் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். அப்போதுதான் மனைவியின் மகளான மரியாவை தனது மாணவராக்கிக்கொண்டு ஓவியக்கலையை கற்பித்தார்.

அப்போதிலிருந்து  அவர் இறந்த 1681 வரை அவர் ஃப்ராங்க்ஃபர்ட்டிலேயே பெரும்பாலும் வாழ்ந்தார்.

ஜேகப்பின் ஓவியங்களில் குறியீடுகள் மிக சிறப்பானவை. மலர்களில் பல்லியோ  பட்டாம்பூச்சிகளோ இருந்தால் அவை உயிர்த்தெழுதலையும், நத்தைகள் சோம்பேறித்தனத்தையும் குறித்தன 

கூரிய இதழ்களுடன் இருக்கும் நீண்ட ஊதா மலர்மஞ்சரிகள் தூய ஆவியை, வாடிய மலர்கள் மரணத்தை,  லில்லிகள் பணிவையும் குறித்தன. ட்யூலிப் மலர்களே அவரின் சிறப்பு ஓவியங்கள் என கருதப்படுகின்றன. ட்யூலிப் மலர்களின் ஓவியங்களும் அவற்றின் விலைகளும் குறிப்பிடப்பட்டிருந்த ஜேகப்பின் நான்கு ஓவியத்தொகுதிகள் மிக புகழ்பெற்றவை. மரியாவும் அவரை போலவே ட்யூலிப்களின் ஓவியங்களை வரைந்தார்.

ஜேகப்பின்  மறைவுக்கு பின்னர் அவரது மகனும் மரியாவின் சகோதருமான கேஸ்பர் மெரியன் மரியாவுக்கு செம்புப் பட்டயங்களில் செதுக்கோவியங்களை வரைய கற்றுக்கொடுத்தார். அக்காலத்தில் ஜெர்மனியில் பெண்கள் ஓவியம் வரைவதும் விற்பதும்  சில நகரங்களில் தடை செய்யப்பட்டிருந்தது.  ஆனால் மரியா வாழ்நாள் முழுவதும் ஓவியங்களை வரைந்தார்

மரியா  சிறுமியாயிருந்த போதிலிருந்து கர்ப்பமுற்றிருந்த போதும் , குழந்தை வளர்ப்பு காலங்களிலும், இல்பேணிக்கொண்டிருக்கையிலும் எப்போதும் வரைந்துகொண்டே இருந்தார்.

மரியாவுடன் ஓவியம் வரைய கற்றுக்கொண்ட ஜேகப்பின் மாணவரான ஜோகன்ஸைத்தான் (Johann Andreas Graff)  மரியா  1665ல்  காதல் திருமணம் செய்துகொண்டார். மரியாவின் கணவரும் கட்டிடக்கலை ஓவியங்களில் வல்லுநர். அவரது 9 பெரிய தாள்களில் வரையப்பட்ட st. பீட்டர்ஸ்  தேவாலயத்தின்  ஓவியம் மிக பிரபலமானது. ஆனால் மரியாவுடையது தோல்வியுற்ற தாம்பத்யம் .  

 1668ல் மரியா அந்நகரின் இளம்பெண்களுக்கு மலரோவியங்கள் வரையக் கற்றுக் கொடுத்தார்,  Jungferncompaney (“Company of Young Misses,”) எனப்படும் திருமணத்திற்கு காத்திருக்கும் மேல்மட்ட குடும்பப்பெண்களின்  அத்தகைய குழுமங்களில் மலர்களின்  ஓவியம் வரையக் கற்றுக்கொடுப்பது, லினென் துணிகளில் இயற்கை சித்திரங்களை எம்பிராய்டரி செய்வது, ஆகிய வகுப்புக்களின் மூலம் மரியாவுக்கு பல செல்வந்தர்களின் சொந்த தோட்டங்களுக்கு செல்ல அனுமதி கிடைத்தது. மேலும் பல பூச்சிகளை தாவரங்களை மரியா வரைய இவை உதவியாக இருந்தன

 பெரும்பாலான் ஐரோப்பிய பூச்சி இனங்களை ஆராய்ந்திருந்த மரியா எப்படி அவை பிறக்கின்றன, வளர்கின்றன,உணவுண்கின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன இறக்கின்றன என்பதை முழுமையாக ஆய்வு செய்து  ஓவியங்களாக ஆவணப்படுத்தினார். 

மரியாவுக்கு புழுக்கள் அழகிய பூச்சிகளாக உருமாறுவதை காண்பதில் பெருவிருப்பம் இருந்தது.  மரியா பூச்சிகளின் இனப்பெருக்க உறுப்புக்களை கவனித்து அவற்றின் ஆண் பெண்  வேறுபாட்டுடன் ஓவியங்கள் வரைந்தார்

பூச்சிகளை குறித்த பயமமேதுமில்லாமல் அவற்றை கைகளில் பிடித்து கவனமாக உற்று நோக்கி பல ஓவியங்களை அவர் வரைந்தார். பல வகையான பூச்சிகளை வீட்டில் பெட்டிகளில் வளர்த்தார்

மரியாவின் வீடு சீசாக்களிலும் பெட்டிகளிலும் அடைக்கப்பட்டு வளர்ந்த பூச்சிகளாலும் தொட்டிகளில் வளர்ந்த பல வகையான செடிகளாலும் நிறைந்திருந்தது

1679 ல் தனது இரண்டாவது மகள் பிறந்த ஒரு வருடத்தில், இரு வருடங்கள் கூர்ந்து கவனித்து வரைந்த ஓவியங்கள், தகவல்கள் அடங்கிய  ’’கூட்டுப்புழுக்களின் அதிசய உருமாற்றம்’’ என்னும் தனது    Der Raupen wunderbarer Verwandlung (the wondrous transformation of caterpillars  and their curios diet of flowers )  நூலை வெளியிட்டார். அவர் கைகளால் வரையப்பட்ட, பல வண்ணங்களில் இருந்த, வெகு அழகிய, மிக துல்லியமான பூச்சிகள், அவை அமரும் தாவரங்களின் ஓவியங்கள் அறிவியல் இலக்கியத்தின் புது வரவாக கவனம் பெற்றன,

அந்நூலில் பிற பூச்சியியல் நூல்களில் இருப்பதைப்போல செடிகொடிகளின் பின்னணியில் பூச்சிகளை வரையாமல் ஒவ்வொரு பூச்சிக்கும் அவற்றின் வாழிடத்துக்கும், உணவுக்கான தாவரத்துக்குமான தொடர்பையும் காட்சிப்படுத்தினார்.

உண்மையில் உலகின் முதல் சூழலியாளர் மரியாதான்  1683ல் இதன் இரண்டாம் படைப்பையும் மரியா வெளியிட்டார். தாவரங்களுக்கும்  விலங்குகளுக்குமான தொடர்புகளை மரியா அவரது ஓவியங்களில் ஆவணப்படுத்தியிருந்தார்.

லத்தீன் மற்றும் டச்சு மொழிகளில் சூழியல் அடிப்படைகளை தெளிவாக கொண்டிருந்த அந்நூல்கள் ஐரோப்பாவில் பெரும அதிர்வலைகளை எழுப்பியது

1681ல் தந்து வளர்ப்புத்தந்தை ஜேகப் இறந்தபின்னர் மரியா ஃப்ராங்க்ஃபர்ட்டுக்கு திரும்பி தன் அன்னையுடன் வசித்தார் அப்போதும் பல படைப்புக்களை வெளியிட்டார்

1686ல் தவளைகள் அவற்றின் முட்டைகள், தலைப்பிரட்டைகளின் ஓவியங்களுடன் மரியா வெளியிட்ட ஓவியங்களும் குறிப்புக்களும் அவருக்கு பின்னர் வந்த டச்சு நுண்ணோக்கியலாளரான ஆண்டனி வான் லூவன் காக்கின் (1632-1723)  அதேபோன்ற கண்டுபிடிப்புக்கு   வெகுவாக முன்னால் இருந்தது. மரியாவே முதன் முதலில் இருவாழ்விகளின் இனபெருக்கவியலை ஆவணப்படுத்தியவர் 

1698ல் மரியா  தனது ஓவியங்களை ஏலம் விட்டு பெருந்தொகை பெற்று பூச்சிகளை அவற்றின் வாழ்விடத்துடன் இணைத்து வரையத் துவங்கினார். அதன் பின்னர் மரியா உலகெங்கும் ஒரு தாவரவியலாளராக, பூச்சியியலாளராக ஓவியக் கலைஞராக, இயற்கையியலாலராக அறியப்பட்டார்.

 அக்காலகட்டத்தில் பிரபலமாக  இருந்த  அலங்கார ஓவியங்களைப் போலல்லாமல் தேவையற்ற  வரியோ, வண்ணமோ இல்லாமல் தன் கண்களால் கண்டவற்றை அப்படியே  கைகளால்  வரைந்தார் மரியா 

17ம் நூற்றாண்டின் பழமையான கலாச்சாரத்தளைகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட மரியா பூச்சிகளின் இனப்பெருக்கவியல் குறித்த  பல ஆய்வுகள் செய்தார், ஆனால் .அக்காலத்தில் இனப்பெருக்கம் குறித்த ஆய்வு பெண்களுக்கானதல்ல  என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டார்

அப்போதிலிருந்து இன்று வரைக்கும் மரியா கலாச்சார தடைகளை உடைத்து வென்று முன்னேறிய பெண்ணாகவே அறிவியல் வரலாற்றில் கருதப்படுகிறார். மரியாவின் ஓவியங்கள் மிக துல்லியமான அறிவியல் அடிப்படைகளையும் மிகச்சரியான வண்ணங்களையும் கொண்டிருந்தன. ஒவ்வொரு பூச்சிகளையும் அவற்றின் முட்டைப் பருவத்திலிருந்து படிப்படியாக கவனித்து அவற்றின் இறப்பு வரை வரைந்து ஆவணப்படுத்தினார்

ஓவியங்களில்  இருந்த பூச்சிகள், தாவரங்கள் குறித்த இனப்பெருக்கவியல் உள்ளிட்ட பல   மிக விவரமான தகவல்களையும் மரியா எழுதினார் . மரியாவே பூச்சிகளின் வளர்சிதை மாற்றங்கள் குறித்து ஓவியங்களில் காட்சிப்படுத்தி ஆவணப்படுத்திய முதல் பெண்மணி.   

 17 வருட மணவாழ்வு 1685ல் விவாகரத்தில் முடிந்த பின் மரியா நெதர்லாந்தின்  (Friesland) மதம்  சார்ந்த  Labadists என்னும் அமைப்பில் தன் சகோதர கேஸ்பருடன்  இணைந்துகொண்டார். அவ்வமைப்பு கிருத்துவம் சார்ந்த பல சேவைகளை செய்து வந்தது. அக்குழுவின் நோக்கமும் நம்பிக்கையும் இயற்கையின் படைப்புகளை நெருங்கி அறிவதன் மூலம் அவற்றை படைத்த கடவுளை அறியலாம் என்பது.  அங்கு மரியா மேலும் ஓவியங்கள் வரையலானார் இரண்டு வருடங்களில் மரியாவின் பல ஓவியங்களின் தொகுதிகள் அவ்வமைப்பின் அச்சுக்கூடத்தில் பிரசுரமாகியது.

அந்த மத அமைப்பில்  அவரது  கணவர்  Graff தானும் இணைந்துகொண்டு மீண்டும் மரியா தன்னுடன் வாழவேண்டுமென பல தகராறுகள் செய்தார். 1692 ல் தாயும் இறந்த பின்னர்  மரியா ஆம்ஸ்டர்டாமுக்கு சென்று  மகள்களுடன் வசித்தார். அங்குதான் பெண்களும் வணிகம் செய்யலாம் என்பதை கண்டுகொண்டார்   அங்குதனது  ஓவியங்களை விற்று கிடைத்த வருமானத்தில் சுயமாக வாழ்ந்தார்.

1698ல் மரியாவும் மகள்களும் ஆடம்பரமான ஒரு வீட்டில் வாழ்ந்தனர்.

ஆம்ஸ்டர்டாமில் மரியாவின் படைப்புகள் நல்ல விலைக்கு போனது. அங்கு அவர் உலகின் பல பாகங்களிலிருந்து தருவிக்கப்பட்டிருந்த பாடமாக்கப்பட்ட  பல பெரிய பட்டாம்பூச்சிகள் அருங்காட்சியகங்களின் கண்ணாடிச்சட்டகங்களில் ஊசியால் பிணைக்கப்பட்டிருந்ததை பார்த்தார்.எனினும் அவர் அவற்றை ஒரு போதும் வரையவில்லை. பூச்சிகளை அவற்றின் இயற்கையான வாழிடங்களில் வரையவே விருப்பம் கொண்டிருந்தார்.

1699ல் ஆம்ஸ்டர்டாம் அரசு  மரியாவிற்கும் மகள் டோரதியாவுக்கும் சுரிநாம் செல்ல அனுமதி அளித்தது. அங்கு ஐந்தாண்டுகள் இருப்பதாக பயணத்திட்டம் இருந்த்து எனினும் 2 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு மலேரியா தொற்று உண்டானதால் அவர் ஆம்ஸ்டர்டாமிற்கு திரும்பினார். அந்த  பயணத்திற்கான நிதி திரட்டும் பொருட்டு மரியா தனது 255 ஓவியங்களை விற்றிருந்தார். அப்போது அறிவியல் நூல்களுக்கான மொழியாக லத்தீன் இருந்தது. எனவே மரியா லத்தீன மொழியை கற்றுக்கொண்டார்

அப்போது அதிகம் அறியப்பட்டிருக்காத அறிவியல் ரீதியான தேடலுக்கென மரியா அந்தப் பயணத்தை மேற்கொண்டார். ஜூன் 1699ல்  தனது 52வது வயதில்  மகள் டோரதியாவுடன்     தென்னமெரிக்காவின் சுரிநாமிற்கு மரியா பயணப்பட்டார். அது ஒரு மிக துணிச்சலான பயணம் அதற்கு முன்பு வரை ஆண்களால் அரசியல், பொருளாதார ராணுவ காரணத்துக்காகவே அப்படியான தொலைதூர பயணங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அக்காலத்தில்  அரிய பொருட்களை தேடும் பொருட்டு கடற்பயணம் மேற்கொண்ட ஆண்களில் யாரும் மரியாவை உடனழைத்துச் செல்லவில்லை.

அப்போதைய ஆணாதிக்க உலகில் ஒரு 52 வயது பெண்ணாக அவர் அறிவியல் தேடலுக்கு ஒரு பயணத்தை முன்னெடுத்தது மிகப்பெரிய ஆச்சரியம். தனது ஓவியங்களை விற்றுக்கிடைத்த நிதியை கொண்டே மரியா பயணத்தை செய்துமுடித்தார்.

சுரிநாமில் 2 வருடங்கள் மரியா தன் கைகளில் கிடைத்தவற்றை எல்லாம் சேகரித்தார். தலைநகர் Paramariboவின் பூங்காக்களில், சுரிநாம் ஆற்றின் கரைகளில், கரும்புத் தோட்டங்களில் மட்டுமல்ல அந்த ஆற்றை சிறு படகில் கடந்து மழைக்காடுகளிலும் தனியே பயணித்து அங்கு வாழ்ந்த தொல்குடிகளை சந்தித்து அவர்களிடமிருந்தும் பல பூச்சிகளை பெற்றார். பூச்சி, புழுக்கள் மூலிகைகள் குறித்த தகவல்களை சேகரித்தார்.  தொல்குடியினரும் மரியாவின் மீதான அன்பினால் காடுகளுக்குள் துணையாக வந்து அவரது ஆய்வில் உதவினார்கள்.

சுரிநாமில் இரு அடிமைப் பணிப்பெண்கள் மரியாவிற்கு உதவினர். மரியாவின் அத்தனை புகழுக்கும் இந்த அடிமைபெண்களே காரணம் என சொல்லப்படுகிறது. சில படைப்புக்களில் அவர்களிருவரின் பெயர்களை குறிப்பிடாமல் இரு இந்திய அடிமைப் பணிப்பெண்களுக்கும் தனது நன்றியை மரியா தெரிவித்திருக்கிறார்.

பல மரங்களில் மரியா ஏணியில் ஏறி உயரங்களில் வாழ்ந்த பூச்சிகளை சேகரித்தார்.  மலேரியா காய்ச்சல் வந்ததால் 1701ல் தான் மரியா மீண்டும் ஆம்ஸ்டர்டாமுக்கு திரும்பினார். இந்தப் பயணத்தின் ஆய்வு முடிவுகள் தான் மரியாவின் பெரும்படைப்பான Metamorphosis insectorum Surinamensium

 1705.ல் அவரது மிக பிரபலமான படைப்பான  ’’Metamorphosis Insectorum Surinamensium’’ வெளியானது அந்நூலில் சுரிநாமின் புழுக்கள், தேரைகள், எறும்பு, பல்லி, நாகம், சிலந்திகள் மற்றும் பலவித  பூச்சிகளின் வளர்சிதை மாற்றங்கள் தெளிவாக ஆவணப்படுத்த பட்டிருந்தன

லத்தீன் மொழியில் எழுதப்பட்ட  பல செதுக்கு ஓவியங்களுடன் கூடிய அந்த ஆடம்பரமான வண்ணமயமான  இந்த  நூலிலிருந்த மழைக்காடுகளின், தாவரங்களும், பல்லி பாம்புகள் உள்ளிட்ட பூச்சி இனங்களும் பல நாடுகளின் இயற்கை ஆர்வலர்களின் வீடுகளுக்குள் நுழைந்தன.

மலர்மஞ்சரிகளில் அமர்ந்திருக்கும் நீல பட்டாம்பூச்சிகளும், உணர்கொம்புகளை நீட்டிக்கொண்டிருக்கும் அந்துப்பூச்சிகளும், முட்டைகளும் தலைப்பிரட்டைகளும் சூழ இருக்கும் கொழுத்த தவளைகளும், பல இலைகளை தின்று கொண்டிருக்கும் வரிகளுடன் கூடிய கூட்டுப்புழுக்களும், மரங்களின் மீது ஏறிக்கொண்டிருக்கும் எறும்புகளும் இருக்கும் அவரது ஓவியங்கள் தத்ரூபமாகவும் அழகாகவும் மட்டுமல்லாது, அறிவியல் ரீதியாக மிகச் சரியாகவும் இருந்தன. பல ஓவியங்களில் மலரிதழ்களில் பூச்சிகள் உண்டாகிய துளைகளும் பாதி கடிக்கப்பட்ட இலைகளும், இதழ்களே இல்லாத மலர்களும் இருந்தன.

மரியாவின் நூல் ஏதேன் தோட்டம்போல அழகாக உருவாக்கப்பட்டதல்ல, இயற்கையின் விதிக்குட்பட்ட உயிரினங்கள் உள்ளபடிக்கே அதில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன

 மரியா இந்த நூலை வெளியிட்ட போது அவரது சமகால அறிஞர்கள் உயிர்களின் உயிர்களின் தன்னிச்சையான தோற்றம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அரிஸ்டாட்டிலின் காலத்திலிருந்து நம்பப்பட்ட ’’உயிர்கள் உயிரற்றவைகளிலிருந்து தன்னிச்ச்சையாக தோன்றின என்னும் கருதுகோளான spontaneous generation விவாதிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் மரியாவின் படைப்புக்கள் பூச்சிகளின் சிறுவிலங்குகளின் இனப்பெருக்கத்தை துல்லியமாக காட்டின. ஆண்பெண் வேறுபாட்டை இனப்பெருக்க உறுப்புக்களை துல்லியமாக விவரித்த மரியாவின் நூல் அப்போது பெரிய பேசு பொருளாக இருந்தது.

மாமிசம் உண்ணும் பூச்சிகள் அழுகும் இறைச்சியிலிருந்தும், மேலும் பல பூச்சிகள் புத்தகங்களுக்குள்ளிருந்தும், பனித்துளிகளிலிருந்து அந்துப்புச்சிகளும்,  எலிகளும் தேள்களும் பழைய நைந்து போன கம்பளியிலிருந்தும் தோன்றுவதாக  பலர் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கையில் மரியா பூச்சிகளின் இனப்பெருக்கவியலை ஓவியங்களில் ஆவணப்படுத்தினார். 

 மரியா உலகின் பல அறிவியல் அறிஞர்களுடன் தொடர்பில் இருந்தார். அவரது படைப்புக்கள் பலநாடுகளின் நூலகங்களில் பெருமைக்குரிய சேகரிப்பாக காட்சிப்படுத்தப்பட்டன. ஜெர்மனியின் மிகப்புகழ் பெற்ற கவிஞரும், பூச்சிகளின் வளர்சிதை மாற்றம் குறித்த ஆர்வம் கொண்டிருந்தவருமான  கோத்தி (Goethe) மரியாவை கலைக்கும் அறிவியலுக்குமிடையில் வண்ணமயமாக பயணித்தார் என்று புகழ்கிறார்.

 17ம் நூற்றாண்டில் பெண்கள் எளிதில் செய்துவிடமுடியாத துணிச்சலான பலவற்றை செய்தவரும் அசாதாரணமான அறிவியல் படைப்புக்களை உருவாக்கியவருமான மரியாவின் படைப்புகளின் முக்கியத்துவத்தை அந்த நூற்றாண்டில் பலரறிந்திருகக்வில்லை  

மரியா  ஓவியங்களை வரைய துவங்கி இருக்கையில் அவரது ஓவியங்களில் இருந்த பல பட்டாம்பூச்சிகள் இனம் காணப்பட்டிருக்கவில்லை. மரியாவிற்கு பூச்சிகளை இனங்கண்டு வகைப்படுத்தலில் ஆர்வமில்லை அவரே ஒருமுறை சொன்னது போல அவை எப்படி உருவாகி உருமாறி வாழ்வை முழுமை செய்கின்றன என்பதில்தான் ஆர்வமிருந்தது.  வகைப்பாட்டியலின் தந்தை லின்னேயஸ் பிற்பாடு மரியாவின் பல படைப்புக்களை பூச்சிகளின் வகைப்பாட்டின்போது உதவியாக வைத்துக்கொண்டார்.  

ஜெர்மானிய விலங்கியலாளர்  Ernst Haeckel  சூழலியல் என்று பொருள்படும்  Oecologie என்னும் சொல்லிலிருந்து ecology என்னும் சொல்லை உருவாக்கியதற்கு இரு  நூற்றாண்டுகள் முன்னரே மரியா சூழலியல் தொடர்புடைய பல நூறு ஓவியங்களை வரைந்திருந்தார்

 பல ஓவியங்களில் மரியா உணவுச்சங்கிலியையும் காட்சிப்படுத்தி இருக்கிறார். 

Metamorphosis நூலின் 18 வது ஓவியத்தில் ஒரு கொய்யா மரத்தின் இலைகளை எறும்புகளும், இலை வெட்டும் பூச்சிகளும் கடித்து தின்றுகொண்டு, தண்டில் ஏறிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் சில எறும்புகள், சிறு சிலந்தியொன்று, ஒரு கரப்பான்பூச்சியின் அருகில் ஒரு டாரன்டுலா சிலந்தி ஒரு தேன்சிட்டுவை தின்று கொண்டிருக்கிறது,  சினைப்பையுடன் ஒரு டாரண்டுலாவும் காணப்படுகிறது. 

உயிரினங்களின் வாழ்விற்கான போராட்டத்தை,  சார்லஸ் டார்வின் தனது   Origin of Species, வெளியிடுவதற்கு 150 வருடங்களுக்கு முன்னரே மரியா  தனது படைப்புகளில் விவரித்திருந்தார்.

1670 ல் அவர் வெளியிட்ட கேட்டர்பில்லர் நூலில் ஆண் பெண் பட்டாம்பூச்சிகள் கூடி முட்டை இட்டு புழுக்கள் உருவாகின்றன என்பதை முதன்முதலில் எழுதி ஆவணப்படுத்தி இருந்தார்.

மரியாவின் படைப்புகள் பிற அறிவியல் படைப்புகளில் இருந்து மிகவும் வேறுபட்டிருந்தன. உதாரணமாக வாழைமரத்தின் ஓவியத்தில் அவர் அதன் தாவரவியல் பண்புகளுடன் வாழைப்பழத்தின் சுவையையும் விவரித்திருந்தார். ஐரோப்பா அதுவரை அத்தகைய படைப்புகளை கண்டிருக்கதில்லை.

 பனையின் வேரை வெட்டி வேகவைத்து உண்ணலாம் என்னும் குறிப்புடன், அவை ஆர்டிசோக்குகளின் மையப்பகுதியை காட்டிலும் சுவையானவை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். பல ஓவியங்களில்  தாவரங்களின் மருத்துவ இயல்புகளையும் மரியா குறிப்பிட்டிருக்கிறார்.  

1715ல் பக்கவாதம் தாக்கி உடலின் ஒரு பாகம் செயலிழந்தது, அந்நிலையிலும் மரியா ஓவியங்களை வரைந்துகொண்டிருந்தார்.

மரியாவிற்கு இரு மகள்கள் ஜொஹானா மற்றும் டோரதியா (Johanna Helena Herolt Graff&    Dorotea Maria Hendriks Graff).மரியாவின் மகளான  ஜொஹானாவும் மிகப்புகழ்பெற்ற ஓவியர். ஜொஹானாவின் பல படைப்புகளில் அவளது தாயின் கையெழுத்தையும் காணலாம்’

மரியா ஜனவரி 13, 1717 ல் அவரது 70 வது பிறந்த நாளுக்கு முன்னர் இறந்த போது அவரது இறப்புச்சடங்கிற்கு வந்திருந்த  ரஷ்யப் பேரரசர் முதலாம்  பீட்டர் அலெக்சியேவிச் ரொமானோவின் தூதுவர் மரியாவின் வீட்டில் மீதமிருந்த வண்ணக்கலவைகளை பெரும் விலைக்கு பெற்றுக்கொண்டார்.

மரியாவின் இறப்புக்கு முன்னரே அவரது படைப்புகளில்  ரஷ்ய பேரரசர் பீட்டர் ஆர்வம் கொண்டிருந்தார். அவரது மறைவுக்குபின்னர் அவரது மீதமிருந்த பெரும்பாலான படைப்புக்களை அவரே பெருவிலை கொடுத்து வாங்கிக்கொண்டார்.  

மரியா இறந்தபின்னர் St. Petersburgல் அவரால் உருவாக்கப்பட்டிருந்த அருங்காட்சியகத்தில்  ஓவியரான டோரதியாவின் கணவர் ஜார்ஜுக்கு (Georg Gsell) நல்ல பதவியளித்து அரசவை ஓவியராகவும் வைத்துக்கொண்டார். டோரதியாவும் அங்கேயே பின்னர் வாழ்ந்தார்.

மிக சிறப்பான படைப்பாளியாக இருந்தும் உலகால் அங்கீகரிக்கப்படாத ஜேகப் மரணப்படுக்கையில் இருக்கையில் ’’இல்லை நான் முற்றிலும் உலகால் மறக்கப் படமாட்டேன், நான்தான் மரியாவின் தந்தை என உலகம் என்னை நிச்சயம் ஒரு நாள் கொண்டாடும்’’ என்றார், மரியா ஜேகப்பை காட்டிலும் பிரபலமானார்.

மரியாவின் caterpillars நூலின் மூன்றாவது  தொகுப்பை மரியாவின் மறைவுக்கு பின்னர் டோரதியா வெளியிட்டார். அவரது metamorphosis நூல் 18 ம் நூற்றாண்டில் பல  மறுபதிப்புக்கள் வெளியாகி அவர் பெயரை  உலகெங்கும் பரப்பின

சிறப்புக்கள்

மரியாவின்றப்புக்கு வெகுகாலம் கழித்தே அவரது படைப்புக்களின்  முக்கியத்துவம் உலகால் அறியப்பட்டது. 20ம் நூற்றாண்டின் இறுதியில்தான் மரியாவின் படைப்புகள் மீண்டும்  உலகின் கவனத்துக்கு வந்தன. அவரது பல படைப்புகள் அப்போது சிறப்பு செய்யப்பட்டன

  • 1905ல்  Opsiphanes cassina meriana என்னும் பட்டாம்பூச்சியும் 1967ல்  பட்டாம்பூச்சியின் துணை சிற்றினமொன்றிற்கும் postman butterfly Heliconius melpomene meriana; என்றும் மரியாவின் பெயரிடப்பட்டது.
  • க்யூபாவின் ஒரு அந்துபூச்சிக்கு  Erinnyis merianae என்றும் ஒரு  வண்ணமயமான வண்டினத்துக்கு  Plisthenes merianae என்றும் பெயரிடஒபட்டது. 
  • கும்பிடு  பூச்சியின் பேரினமொன்று  Sibylla என்றும், ஆர்கிட் வண்டினமொன்று Eulaema meriana என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.
  • Argentine black and white tegu (Salvator merianae), என்னும் வளர்ப்பு பிராணியாக வளர்க்கப்படும் பெரிய பல்லி வகைக்கும் அவரது பெயரடிப்பட்டிருக்கிறது.
  • மரியாவின் சிலந்திகள் குறித்த படைப்புகளை சிறப்பிக்கும் பொருட்டு  பறவைகளை பிடித்து உண்ணும் சிலந்தியொன்றிற்கு  Avicularia merianae  என்று பெயரிடப்பட்டது.
  • 2017ல் மற்றுமொரு சிலந்தி Metellina merianae என்று அவர் பெயரிடப்பட்டது 
  • ஒரு தேரை  Rhinella merianae என்றும் ஒரு நத்தை Coquandiella meriana  என்றும் பெயரிடப்பட்டிருக்கின்றன
  • ஆப்பிரிக சிறு பறவையினம் இன்றிற்கு Saxicola torquatus sibilla.   எனப்பெயரிடப்பட்டிருக்கிறது.
  • ஒரு தாவர பேரினத்துக்கு  Meriania எனவும், ஒரு தாவர சிற்றினம் Watsonia meriana   எனவும் பெயரிடப்பட்டது.
  • 2009  வெளியான The Year of th Flood   என்னும் நாவலில் மரியா ஒரு துறவியாக காட்டப்பட்டிருந்தார்.
  • மரியாவின் உருவப்படம் ஜெர்மனியின் 500 DM நோட்டில் சித்தரிக்கப்பட்டது
  • அதுபோலவே  0.40 DM தபால் தலையில் அவரது உருவப்படம் சித்தரிக்கப்பட்டு செப்டம்பர் 17 1987ல் வெளியிடப்பட்டது. மரியாவின் பெயரில்  ஐரோப்பாவில் பல பள்ளிகள் இருக்கின்றன,
  • மொசார்ட்டின் கச்சேரிகளில் இசைக்கருவிகளில் மரியாவின் மலரோவியங்கள் சித்தரிக்கப்பட்டன.
  • 2008ல்  பனாமாவின் அரிய கருப்பு பட்டாம்பூச்சியொன்றிற்கு Catasticta sibyllae  பெயரிடப்பட்டது.
  • 2013, ஏப்ரல் 2 ம் தேதி மரியாவின் 366 வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் டூடுல் அவரது  பூச்சிகள், பல்லிகள் தாவரங்களின் ஓவியங்களிலேயே கூகுள் என வடிவமைத்து சிறப்பித்திருந்தது .
  • ஜெர்மெனியின் இரண்டாவது  பெரிய நவீனமயமாக்கபப்ட்ட ஆய்வுக்கப்பலுக்கு   மரியாவை கெளரவப்படுத்தும் விதமாக  RV Maria S. Merian  என்று பெயரிடப்பட்டது
  • 2016ல் மரியாவின், Merian’s Metamorphosis insectorum Surinamensium  மறு பிரசுரம் செய்யபட்டது.
  • 2017ல்  மரியாவின் ஓவியங்கள் குறித்த ஒரு கருத்தரங்கு ஆம்ஸ்டர்டாமில் நிகழ்ந்தது 
  • மார்ச் 2017ல்,  ஓஹியோவின் Lloyd நூலகம் மற்றும்   அருங்காட்சியகத்தில்  மரியாவின் பல ஓவியங்களின் முப்பரிணாம  கண்காட்சியையும், பாடம் செய்யப்பட்ட பல பூச்சிகளின் கண்காட்சியையும்  ஏற்பாடு செய்திருந்தது
  • நியூயார்க் டைம்ஸின் 2017 ஜனவரி இதழில் மரியா உலகின் முதன் முதலாக பூச்சிகளை அவற்றின் வாழிடம் உணவு ஆகியவற்றுடன் வரைந்து ஒரு கூட்டு சூழலியல் தொகுப்பாக ஓவியங்களை வரைந்த முதல் ஆளுமை என ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது

மரியா அசாதாரணமான , மிக ஆர்வமுள்ள, அதிபுத்திசாலியான சுயசார்புள்ள பெண்ணாகவே அறிவியல் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறார்.

மரியா உயிரனங்களுக்கான தொடர்புகளை ஆவணப்படுத்திய முதல் அறிஞரும் கலைஞருமாவார் 

அப்போது உருவாகி இருக்காத சூழலியல் துறையை நிறுவியவரகவும் மரியாவே கருதப்படுகிறார் ஏனெனில் மரியாவின் ஓவியங்கள் உணவுச்சங்கிலி, உயிரினங்களின் ஒன்றுடன் ஒன்றான தொடர்பு, எவ்வாறு அவற்றின் வாழிடம் அவற்றின் வாழ்க்கையில் நேரடியாக செல்வாக்கு செலுத்துகிறது, எப்படி வாழ்விற்கான போராட்டத்தில் வலியவை வெல்கின்றன ஆகியவற்றை  காட்டுகின்றன. இவற்றின் தொகுப்பைத்தான்  இப்போது சூழலியல் என்கிறோம்

 உயிரற்றவைகளிலிருந்து தானாகவே உயிரினங்கள் தோன்றுகின்றன என்னும் கருதுகோளை முதலில் பொய்ப்பித்தவரும் மரியாதான்.

அறிவியலை தங்களது பாதையாக தீர்மானம் செய்யும் பெண்கள் மரியாவை முன்னோடியாக கொள்ளலாம், ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு பாதையேதும் இல்லாத பிரதேசங்களில் மரியா புதிய பாதைகளையும், அறிவியலுக்கும் கலைக்குமிடையேயான பாலங்களையும் உருவாக்கினார் பூச்சியியலுக்கும் தாவரவியலுக்குமான  தொடர்புகளை கண்டறிந்து ஆவணப்படுத்தினார்.

ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தின் ஆர்டிஸ் லைப்ரரி அருங்காட்சியங்களில்  லின்னேயஸ், அரிஸ்டாட்டில், சார்லஸ் டார்வின் உள்ளிட்ட 35 ஆண் அறிஞர்களின் படைப்புக்களுடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் ஓவியங்களில்  M.S.Merian என்னும் பெயரைப்பார்த்தால் கூர்ந்து கவனியுங்கள்,  அறிவியல் வரலாற்றில் மரியா விட்டுச்சென்றிருக்கும் வண்ணச்சுவடுகள் அதில் இருக்கும்.

கீரைகளின் அரசி- பரட்டைக்கீரை

நுண்சத்துக்களும் வைட்டமின்களும் நார்ச்சத்தும் நிறைந்து, குறைவான கலோரிகளே உள்ள பச்சைக்கீரைகள் நம் ஆரோக்கிய உணவில் மிக முக்கியமான இடம்பெற்றிருப்பவை. கீரைகளை உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்ளுவது உடற்பருமனை குறைக்கவும், இதயப்பதுகாப்புக்கும் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் மிகவும் உதவும்

உலகின் சத்து நிறைந்த 100 உணவுகளின் பட்டியலில் முதல் பத்தில் இருக்கும் (Kale) கேல் எனப்படும் கீரை தற்போது உலகின் ஆரோக்கிய உணவுக்கான தேடலில் இருப்போரின் புதிய விருப்பக்கீரையாகி விட்டிருக்கிறது. முட்டைகோஸ். காலி ஃப்ளவர், பச்சைபூக்கோசு ஆகியவற்றின் அதே பிரேஸிக்கேசி குடும்பத்தை சேர்ந்தவை இக்கீரைகளும். இவற்றில் ஊதா, இளம் பச்சை, அடர்பச்சை, சிவப்பு, மண் நிறம், என பல நிறங்களும், இலைகள் சுருண்டவை, நேரானவை, மென்மையானவை என பல வகைகளும் உள்ளது. சுருண்ட கேசம்போன்ற இலைகளின் தோற்றத்தினாலேயே பரட்டைக்கீரை எனப்படுகின்ற இக்கீரை இதில் நிறைந்துள்ள சத்துக்களால் கீரைகளின் ராணி என்றும் அழைக்கப்படுகிறது.  

  இதன் பூர்வீகம் ஐரோப்பா கண்டத்தில் அமைந்துள்ள நாடுகளாகும். புதராக வளரும் செடிகளின் நடுப்பகுதியில் காணப்படும் இலைகளைத் தவிர்த்து மற்றவை அறுவடை செய்யப்படுகிறது. சுமார் கி.பி நான்காம் நூற்றாண்டிலேயே கிரேக்க நாட்டில் இக்கீரையை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளன. இவை பண்டைய ரோம் பகுதியிலும் அதிகம் காணப்பட்டிருக்கிறது.  இக்கீரையை கனடா நாட்டினருக்கு ரஷிய வணிகர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

19 ஆம் நூற்றாண்டிலேயே  உலகெங்கும் உணவில் அறிமுகபடுத்தும் பொருட்டு இவை சாகுபடி செய்யபட்டதென்றாலும் இப்போதுதான் இவை பெருமளவில் பயன்பாட்டில் இருக்கின்றன

இதன் பலவகைகளில் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் வகைகளின் தாவர அறிவியல் பெயர்கள்

  • Brassica oleracea ssp. acephala group
  • Brassica oleracea var. sabellica-சுருண்ட இலைகளைக்கொண்டது
  • Brassica oleracea var. palmifolia
  • Brassica oleracea var. ramosa
  • Brassica oleracea var. costata
  • B. napus ssp. napus var. pabularia

உலகெங்கிலும் இப்போது இக்கீரை பரவலாக சந்தைப்படுத்தப்பட்டும் உணவில் சேர்த்துக்கொள்ளப்பட்டும் வருகின்றது

அதிகம் சந்தைகளில் கிடைக்கும் பரட்டைக்கீரையின் வகைகள்

  • சுருட்டையான இலைகளுல்லவை
  • அடர்ந்த புதர் போற இலைகளுள்ளவை
  • அகன்ற மிருதுவான இலைப்பரப்புளவை
  •  இறகுபோல அமைப்புள்ளவை

ஒரு கோப்பை பரட்டைக்கீரையில் விட்டமின் K, A, C, B1, B2, B3, B6, கால்சியம் மேங்கனீஸ், மெக்னீஷியம், காப்பர், பொட்டாஸியம், இரும்புச்சத்து, ஆகியவையும், லியூட்டின், பீட்டா கரோட்டின், புரதம் கார்போஹைட்ரேட்டுகளும் லினோலெனிக் அமிலமும் நிறைந்திருகின்றன. ஆண்டி ஆக்ஸிடண்ட்டுகளான  க்யூசெர்டின் மற்றும் கேம்ஃபிராலும் இதில் செறிந்து காணப்படுகின்றது.. ஈரல் செயலிழப்பு,  வைரஸ் தொற்று ஆகியவற்றுக்கு எதிராக இக்கீரை சிறப்பாக செயல்படுகின்றது.சல்ஃபரோபேன் நிறைந்துள்ளதால் இது புற்றுநோயை தடுக்கும்.

இக்கீரையில் ஒரு முழு ஆரஞ்சில் இருப்பதைக்காட்டிலும் அதிகமான் அளவில் வைட்டமின் C இருக்கிறது.  இது HDL எனப்படும் நல்ல கொழுப்பின் அளவை அதிகப்படுத்தி, LDL எனபடும் கெட்ட கொழுப்பை பெருமளவில் குறைக்கும். இரத்தம் உறைவதற்கு தேவையான வைட்டமின் K இதில் மிக அதிகம் உள்ளது. இதிலிருக்கும் அதிக மெக்னீஷியம் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கின்றது. கண்பார்வை குறைபாட்டை தடுக்கும் லூயிட்டினும் ஜியாஸேந்தினும் இதில் நிறந்து உள்ளன. நீர்ச்சத்தும் மிகுந்திருக்கின்றது

கீரைகளை நீரில் கொதிக்க வைத்து வேகவைக்கும்போது நுண்சத்துக்கள் பெருமளவில் அழிந்துவிடுவதால் நீராவியில் வேக வைத்து சாப்பிடலாம் அப்போது இதன் கொழுப்பை குறைக்கும் தன்மை மிக அதிகமாகிவிடுகிறது. சமைக்காமல் பச்சையாக சாலட்டுகளிலும், மைக்ரோவேவில் சமைத்தும் சாப்பிடுவது இன்னும் சிறப்பான பலன்களை அளிக்கும். 

சமைக்கையில் கெட்டியான தண்டுப்பகுதியையும், நார் நிறைந்து கடினமாக இருக்கும் நடு நரம்பையும் நீக்கிவிடுவது நல்லது

விதைகளிலிருந்து உருவாக்கப்படும் இக்கீரை மிக விரைவாக வளர்ந்துவிடும். உலகின் பல்வேறு நாடுகளிலும் இக்கீரை விரும்பப்பட்டாலும், இந்தியர்கள் கசப்பு சுவையுள்ள கீரைகளை விலக்கும் மனப்பான்மையுள்ளவர்களாகையால் இந்தியாவில் இதன் சாகுபடியும் பயன்பாடும் மிகக்குறைவாகவே இருக்கிறது.

 அமெரிக்காவில் இக்கீரையை அறிமுகப்படுத்திய பெருமை டேவிட் ஃபேர் சைல்ட் (David Fairchild) என்னும் தாவரவியலாளரையே சேரும்., அமெரிக்காவின் கலிஃபோர்னியா, ஜார்ஜியா, நியூ ஜெர்சி மற்றும் டெக்ஸாஸில் சுமார் 7500ஏக்கர்களிலான் பண்ணைகளில் இக்கீரைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. கேலின் உண்ணும் கீரை வகைகளோடு  அலங்காரச்செடி வகைகளும் அமெரிக்காவில் பரவலாக விரும்பப்படுகின்றது கீரைகளை தேர்வு செய்கையில் உறுதியான, உடையும் இலைகளும், ஈரமான நல்ல நிறத்தில் இருக்கும் தண்டும் இருப்பதாக பார்க்கவேண்டும்.

உடையாள், பெருந்தொற்றுக்கால வாசிப்பை குறித்து!

உடையாளில் ஜெ சொல்லிக்கொண்டு வரும் நுண்ணுயிர் மற்றும் தாவர அறிவியல் தகவல்களைக்குறித்து நான் எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். தினமும் 9-4 மணிவரை இருக்கும் ஆன்லைன் வகுப்புக்கள். அதைக்காட்டிலும் அதிகமாக சமயம் எடுத்துக்கொள்ளும் அவற்றிற்கான முன் தயாரிப்புக்கள் என்று நாள் முழுவதுமே இதிலேயே தீர்ந்து போய்விடுகின்றது. உடையாள் காட்டும் மகரந்தசேர்க்கை, விதை முளைத்தல் உள்ளிட்ட பல தாவரஅறிவியல் தகவல்கள், புறக்காரணிகள் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் நுண்ணியிர்களின் வளர்ச்சி போன்ற மிகச்சரியான அறிவியல் தகவல்களை குறித்தெல்லாம் குறிப்புகள் எடுத்துக்கொண்டிருக்கிறேன்

 ஜெ சொல்லி இருப்பது போலவே பசைபோன்ற சுரப்புக்களினால் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு பேக்டீரியாக்கள் திண்டு போல, முடிச்சுபோல கொத்துக்களாக காணப்படு்ம். Stromatolites பாறைகள் எனப்படுபவை மிகச்சரியாக அப்படி பசையினால் பலகோடி வருடங்களுக்கு முன்பு ஒன்றாக திரண்டு அடுக்கடுக்கான பாறைகளைப்போல இறுகியிருக்கும் நீலப்பச்சை பேக்டீரியக்காலனிகள்தான். Stromatolites என்றாலே கிரேக்க மொழியில் அடுக்குப்பாறைகள் என்றுதான் பொருள்

இவற்றிலிருக்கும் பேக்டீரியாக்கள் மற்ற பேக்டீரியாக்களை போலல்லாமல் பச்சையம் கொண்டிருக்கும், சூரியஒளியைக்கொண்டு ஒளிச்சேர்க்கை மூலம் உணவை தாவரங்களைப்போலவே தயாரிக்கவும் செய்யும் (Photosynthetic cyanoBacteria) உடையாளில் சொல்லி இருப்பது போலவே இப்படிமப்பாறைகள் மிக மிகமெதுவாக வளர்ந்திருக்கின்றன, 1 மைக்ரான் தடிமன் வளரவே 2000 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.

மனிதஇனம் தோன்றும் முன்னரே உருவாகியிருந்த இவற்றினால்தான் அப்போது 1 சதவீதம் மட்டுமே இருந்த ஆக்சிஜன் 20 சதவீதமாக அதிகரித்து மனித இனம் உள்ளிட்ட பிற உயிர்கள் தோன்றவும் காரணமாக இருந்திருக்கின்றது. இப்போது இவை பெருமளவில் அழிந்துபோய்விட்டன. இப்படிமப்பாறைகளில் உயிருடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பேக்டீரியாக்கள் இருப்பவை பஹாமா தீவுகளிலும் ஆஸ்திரேலியாவிலும் மட்டும்தான் இருக்கின்றன.

ஆஸ்திரேலியாவின் இந்த படிம பேக்டீரியாப்பாறைகள் இருக்கும் அதி உப்புநீர்நிலையான Hamelin Pool – பகுதி யுனஸ்கோவால் பாரம்பரியச் சின்னமாகவும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

இதைப்போலவே biofilms எனபப்டும் பேக்டீரியாக்களின் கூட்டத்தையும் நாம் கண்களால் காணமுடியும். உதாரணமாக அதிவெப்பத்திலும் உயிர்வாழும் thermophilic பேக்டீரியாகள் வெந்நீர் ஊற்றுக்களில் கூட்டம் கூட்டமாக காணப்படும். அமெரிக்காவின் Yellow stone மற்றும் Oregon னின் வெந்நீர் ஊற்றுக்களில் இப்படியான பேக்டீரியாக்களின் காலனிகள் அழுத்தமான மஞ்சள் பச்சை சிவப்பு என பல வண்ணங்களில் நீர்நிலைகளின் அடியிலும், கரைகளிலும் படிந்திருப்பதை பார்க்கலாம்.

உடையாளில் சொல்லி இருப்பதைப்போல ஒரு குறிப்பிட்ட சூழலில் இருக்கும் சத்துக்களை நுண்ணுயிரிகள் எடுத்துக்கொள்ள கையாளும் பல்வேறு வழிமுறைகளை ecological niche என்கிறது அறிவியல்.

ஆய்வகங்களிலும் பெட்ரி தட்டுக்களில் பேக்டீரி்யாக்கள் பல நிறங்களில் பல வடிவங்களில் திட்டுக்கள் போல் கூட்டமாக வளர்வதை சாதாரணமாக பார்க்கலாம்.

ஒளிச்சேர்க்கை செய்யும் திறனுள்ள பேக்டீரியாக்களைப் போலவே தன்னுடலில் இருக்கும் சில குறிப்பிட்ட காந்தத்தன்மையுடைய நுண்சத்துக்களை குட்டி காம்பஸ்களைபோல உபயோகித்து பூமியின் காந்தப்புலனை கண்டறிந்து அதில் போய் அப்பிக்கொள்ளும் magnetic bacteria’க்களும் கூட உள்ளன.

ஜனனி, ஜெனி போன்ற பெயர்களின் பொருளைக்குறித்தும் ஆவலாக வாசித்து குறிப்பெடுத்து வைத்தேன். எனக்கு இதில் தனித்த ஆர்வமுண்டு. சமீபத்தில் தாவரப்பெயர்களின் etymology குறித்தான உரையின் பொருட்டு கிரேக்க லத்தீன் தாவரப்பெயர்களில் மாறாத பொருளுள்ளவற்றை மட்டும், Alba என்றல் வெள்ளை nigrum என்றால் கருமை இப்படி, ஒரு நீண்ட பட்டியலாக தொகுத்து வைத்திருக்கிறேன்.

உடையாளில் ஜெ சொல்லிக்கொண்டு வரும் எல்லாமே நுண்ணுயிரியல் சொல்லும் உண்மைகள்தான். நான் இப்போது Bacteriology மற்றும் Virology பாடங்களைத்தான் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறேன்

ஆய்வகங்களில் பேக்டிரியாக்களை வளர்க்கும் ஊடகத்தை தயாரிப்பதோ அல்லது நுண்ணுயிர்கள் வளரும் Micro environment குறித்தோ சொல்லுகையில் அவை எல்லாமே உடையாளில் இருப்பதை நினைத்துக்கொள்ளுகிறேன். தினமும் இந்த வகுப்பெடுக்கும் முன்பாக இன்னொரு முறை உடையாளை வாசித்துவிடுகிறேன்.

//மரத்தின் இலைகள் மிக அதிகமாக சூரிய ஒளியை பெறும்படி வடிவம் கொண்டவை. மரத்தின் இலைகளில் காற்று மிக அதிகமாகப் படும்// ஆம் இது தாவரவியலின் அற்புதங்களில் ஓன்று.

Phyllotaxy எனப்படும் தண்டுகளின் மீது இலைகள் எப்போதுமே சூரிய ஒளி படும்படியே அமைந்திருக்கும் இலையமைப்பை நான் மாணவர்களுக்கு நேரில் செடிகளை மரங்களை காட்டி கற்றுக்கொடுப்பேன். குப்பை மேனியின் இலையமைப்பை பார்த்தால் அத்தனை அழகாக இருக்கும் இலைக்காம்புகளின் நீளத்தை தேவைக்கேற்ப கூட்டியும் குறைத்தும் ஒரு பச்சைப்பூங்கொத்தைப்போல சூரியனை நோக்கியே எல்லா இலைகளையும் காட்டிக்கொண்டிருக்கும் அது.

பெருகவேண்டும் என்னும் துடிப்பான ’திருஷ்ணை’யை பற்றி சொல்லி இருக்கிறீர்கள். வைரஸின் திருஷ்ணையை குறித்து அறிகையில் ஆச்சர்யமாகவும் பயமாகவும் கூட இருக்கிறது. சாதாரண நுண்ணோக்கியால் கூட காணமுடியாத மிகச்சிறிய உயிரி்யான அதன் கொடூர புத்திசாலித்தனம் அச்சமூட்டுகிறது உண்மையில்.

கதையின் இறுதியில் ஜெ குறிப்பிட்டிருக்கும் தாவரங்களையும் விலங்குகளையும் இணைக்கும் கற்பனை வெகு சுவாரஸ்யம். Plantibodies என்பது அப்படியான தாவரங்களிலிருந்து நேரடியாக எதிர்ப்புசக்தியை நாம் பெற்றுக்கொள்ளும் ஒரு முயற்சிதான். ஒரு விறுவிறுப்பான் ஹாலிவுட் திரைப்படம் போலிருக்கிறது உடையாள்.

https://youtube.com/watch?v=EDkR2HIlEbc%3Ffeature%3Doembed

2019ல் வெளியான Fantastic Fungi என்னும் தாவரவியலாளர்களும் இ்ணைந்து தயாரித்திருக்கும் மிக நல்ல படத்தை முடிந்தால் பாருங்கள். பலகோடியாண்டுகளுக்கு முன்னரே தோன்றியிருக்கும் நுண்ணுயிரிகளான பூஞ்சைகளின் உலகை அத்தனை அழகாக காட்டியிருக்கிறார்கள். உடையாள் வாசிப்பவர்கள் இந்தப்படத்தை பார்ப்பது பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன்.

Symbiont என்பதற்கு ’’ஒத்துயிர்’’ என்பது மிகச்சரியான சொல். மாணவர்களுக்கு இதை சொல்லிவிட்டேன்.

உடையாளைப்பற்றி எழுத இன்னும் ஏராளம் இருக்கின்றது

தாவரக்குருடு

காக்கை கூடு பதிப்பகம் சமீபத்தில் ‘செங்கால் நாரை விருது’க்கான போட்டியை அறிவித்து இருந்தது! அவற்றில் முதல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்ட சுற்றுச் சூழல் சார்ந்த எனது கட்டுரை:

நம் தேவைகளுக்கான தாவரங்களை குறித்த அடிப்படை அறிவை பெற்றிருக்காததே தாவரக் குருடாகும்! நம்மை சுற்றியுள்ள தாவரங்கள், மரங்களை கவனிக்காதது, நமக்கும் அவற்றுக்குமான உறவை உணராமல் அழிப்பது! இவற்றை பயன்படுத்தாமலும், பாதுகாக்காமலும் வாழ்ந்து மடிகிறோம். இதை அறிந்தால், அரிய நன்மைகள்! 

உலகின் மொத்த நிலப்பரப்பில் 2.4 சதவீதத்தைத்தான் இந்தியா கொண்டிருக்கிறது எனினும்   இங்கு மட்டுமே  47,513 தாவர வகைகள் இருக்கின்றன. அதாவது உலகில் இதுவரை அறியப்பட்ட சுமார் 0.4 மில்லியன் தாவரங்களில், 11.4% இந்தியாவில் இருக்கின்றது.இவற்றில் 28% இந்தியாவில் மட்டுமே காணப்படும் எண்டெமிக் வகையை சேர்ந்தவை.

உலகின் மலரும் வகை தாவரங்களில் 6% இந்தியாவில் இருக்கிறது.  பலவகையான அரிய தாவரங்களை கொண்டிருப்பதால் உலகின் மூலிகைப் பூங்கா என்று அழைக்கப்படும் இந்தியாவின் வளங்களிலிருந்து  பல தாவரங்களை  கடந்த காலங்களில் முழுவதுமாக இழந்திருக்கிறோம் மேலும் பல அரிய தாவரங்கள்  மிக வேகமாக அழிந்துகொண்டிருக்கின்றன.

நகரமயமாக்கல், காடுகள் அழிக்கப்பட்டு விவசாய நிலங்களாவது சுரங்கங்கள் உள்ளிட்ட காரணங்களினால் மட்டுமல்லாது தாவரகுருடினாலும் இவை அழியும் அபாயத்தில் இருக்கின்றன

கடந்த மாதம் NBR  எனப்படும் நீலகிரி உயிர்கோளத்தின் அரிய தாவரங்களை குறித்த ஆய்வுக்காக சென்றிருக்கையில் நீலகிரி மலைப்பாதை ஒரு பிரமுகரின் வரவுக்கென தூய்மைப் படுத்த பட்டுக்கொண்டிருந்தது. சாலையின் இருபுறங்களிலும் இருந்த புதர்ச்செடிகள் மற்றும் சிறுசெடிகளனைத்தும் இயந்திரங்களால் அப்புறப்படுத்தப்பட்டன. இந்தியாவெங்கிலும் இப்படி பலநூறு தாவரங்கள்  தூய்மைப்படுத்துதல் என்னும் பெயரில் நிரந்தரமாக அழிக்கப்படுகின்றன.

அழிக்கப்படும் அரிய மூலிகைத் தாவரங்கள்!

அப்படி அகற்றப்படும் பல்லாயிரக்கணக்கான சிறு செடிகளில்   இன்னும் கண்டுபிடித்திருக்க பட்டிருக்காத புற்றுநோய்க்கான மருந்தளிப்பவைகளோ கொரோனா போன்ற பெருந்தொற்றிற்கு சிகிச்சையளிக்கும் மூலிகைகளோ இருக்கக்கூடும். மிகச்சாதாரணமாக சுற்றுப்புறங்களில் காணப்படும் நித்யகல்யாணி செடிகளிலிருந்துதான் புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் பல மருந்துகள் கிடைக்கின்றன

பல வளர்ந்த நாடுகளில் களைச்செடிகள் அரசுடமையாக்க பட்டிருக்கின்றன. சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் எந்த செடியையும் யாரும்  அனுமதியின்றி பறிக்கவோ, அகற்றவோ, பயன்படுத்தவோ முடியாது இப்படி கடுமையான சட்டங்கள் மூலம் தாவரங்கள் பாதுகாக்கப்படவேண்டிய வந்ததே தாவரக் குருட்டுத்தன்மையால்தான்.

ஜேம்ஸ் ஹெச்.வாண்டர்ஸி, எலிசபெத் சக்சீலர்

1999ல் தான்  J. H. Wandersee &  E. E. Schussler என்னும் இரு அமெரிக்க தாவரவியலாளர்களால் தாவர குருடு ’’plant blindness’’ என்னும் சொல் உருவாக்கப்பட்டது.

இப்போதைய விரைவான வாழ்க்கையில் நிலவோ மழையோ வெயிலோ நம்மை கடக்கும் சிறு பறவைகளோ எதையும் கவனிக்க நேரமில்லாதவர்களாகிப்போன நம்மில் பலரும் மிக நெருக்கடியான சாலை போக்குவரத்தில் பல மணி நேரம் காத்திருக்கும் போது கூட சாலையோரங்களில் நிழலும் குளிர்ச்சியும் அளிக்கும், அழகிய மலர்களுடன் கண்ணைக்கவரும் படி நின்றிருக்கும் பலவிதமான மரம், செடி கொடிகளை கவனிப்பதில்லை.

சாலை விரிவாக்கத்திற்காக காவு கொடுக்கப்படும் மரங்கள்!

சாலை விரிவாக்கத்தின் பேரில் பெருமரங்கள் இயந்திர ரம்பங்கள் கொண்டு வெட்டி அகற்றப் படுகையிலும் அங்கே சாலையை கடக்க காத்திருப்போர்  பல வருடங்கள் வளர்ந்து பயன் தந்து கொண்டிருந்த மரங்களை இழப்பதைக் குறித்தும், அங்கு நடப்பது  படுகொலைக்கு சமம் என்பதையும் உணர்வதில்லை. மரங்களும் உயிருள்ளவைதான்.அவை ரத்தம் பெருக்கி கதறுவதில்லை எனவே அவற்றை அழிப்பது யார் கவனத்துக்கும் வருவதில்லை.

கோடைக்காலங்களில் குடிநீர் பற்றாக்குறைக்கு  காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டு இருக்கும் பலரில் ஒருவர் கூட பல நூறு மரங்கள் வெட்டப்படுகையில் அதை கண்டிக்க நினைப்பதில்லை. ஏனெனில் குடிநீருக்கும் மரங்களின் எண்ணிக்கைக்கும் இருக்கும் நேரடி தொடர்பு தெரியாத அளவிற்கு  தாவர குருடாக இருப்பதுதான்

தாவர குருடு என்பது நாம் முழுக்க முழுக்க நமது அடிப்படை தேவைகளுக்கு சார்ந்திருக்கும் தாவரங்களை குறித்த அடிப்படை அறிவை பெற்றிருக்காதது, நம்மை சுற்றி இருக்கும் தாவரங்களை கவனிக்காதது, முக்கியத்துவத்தை உணராமல் அழிப்பது, அவற்றை பாதுகாப்பதன் அவசியம் அறியாதது ஆகியவையே…!

நாமனைவரும் தெரிந்தும் தெரியாமலும் இயற்கையுடனான நமது தொடர்பை துண்டித்து கொண்டிருக்கிறோம். அடுக்கக வாழ்க்கையில் இயற்கையை அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் இல்லை. நவீனமய வாழ்வின் விசையால் இழுக்கப்படும் கிராமப்புற மனிதர்களுக்கும் இவற்றை அறிந்து கொள்ள அவகாசம் இருப்பதில்லை

நம் அன்றாட வாழ்வில் ஒரே ஒரு நாள் கூட உணவு, இருப்பிடம், மருந்து, குடிநீர், காற்று, போன்ற தாவரங்களினால் மட்டுமே கிடைக்கும் பயன்களை அனுபவிக்காமல் கழிவதில்லை. எனினும் அவற்றை குறித்த அறிவு நமக்கு இருப்பதே இல்லை அறிந்து கொள்ள முயற்சிப்பதும் இல்லை.

பள்ளிக் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வியிலும் கூட ஆங்கில எழுத்துக்களுக்கு நம் தேசத்துக்கு சொந்தமான வேம்பும் மஞ்சளும்  அல்ல, ஆப்பிளும் கேரட்டும் தான் கற்றுக் கொடுக்கப் படுகிறது.  ஆனால் வெளிநாட்டவர் இந்திய இயல் தாவரங்களுக்கு பயன்பாட்டு உரிமம் வாங்கினால் வருந்துகிறோம் வழக்குத் தொடுக்கிறோம்.

நம் வீட்டை சுற்றி இருக்கும், நாம் அன்றாடம் காணும் தாவரங்களின் பெயர்களை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க பெற்றோர்களும், இயற்கையுடன் நெருங்கின தொடர்பிலிருந்த முந்தைய தலைமுறையை சேர்ந்த வீட்டுப்பெரியவர்களும், பள்ளியை சுற்றி இருக்கும் மரம்,  செடி, கொடிகளை குறித்த அறிவை போதிக்க ஆசிரியர்களும் முன்வருவதில்லை.

கராத்தே, சிலம்பம், வாய்ப்பாட்டு, இசைக் கருவிகள், நடனம் பள்ளிப் பாடங்களுக்கான பிரத்யேக பயிற்சி என்று ஒரு நாளில் இரவு வரை பல சிறப்பு பயிற்சிகளுக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் முக்கிய தாவரங்களை, சில மூலிகைகளை, ஒரு சில மரங்களின் பெயர்களை, அவை மலரும் காலங்களை, அவற்றின் பயன்களை குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைப்பதில்லை. அவ்வப்போது இயற்கை நடைக்கு செல்ல அனுமதித்தால் அல்லது அழைத்துச் சென்றாலும் கூட போதும்.

நம்மை சுற்றியிருக்கும் மரங்களில் 10 பெயர்களையாவது தெரியுமாவென சுயசோதனை செய்து பார்த்தால், பலருக்கு தெரியவரும் தாங்கள் தாவரகுருடுகள் என்பது!

ஆனால்,  பலருக்கு விலங்குகளின் பெயர்கள் தெரிந்திருக்கிறது. குறிப்பாக நாய்களின் பல வகைகள் அவற்றின் விலை, அவை எந்த நாட்டை சேர்ந்தவை என்பதெல்லாம் தெரிந்திருக்கும். பலருக்கு பறவைகளை குறித்த அடிப்படை அறிவு இருக்கும் அதில் பலர் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். ஆனால்  பெரும்பான்மையானோர் தாவரங்கள் குறித்து தெரிந்து கொள்ள முன்வராதது தான் தாவரங்களின் அழிவுக்கும் காரணமாகிவிடுகிறது.

நகருதல், பல நிறம் கொண்டிருத்தல், வாலைக்குழைப்பது, கொஞ்சுவது, நம் கட்டளைகளுக்கு கீழ்படிந்து நம்மை மகிழ்விப்பது, வீட்டை பாதுகாப்பது போன்ற பலவற்றால் விலங்குகளை நாம் நேசிக்கிறோம் பாதுகாக்கிறோம்

வீட்டுத்தோட்டத்திலும், அலங்காரச்செடிகளாக வீட்டினுள்ளும் வெளியேவும் வளரும் தாவரங்கள், உணவு பயிர்கள் ஆகியவற்றை குறித்து அளவுக்கு தெரிந்திருக்கலாம் என்றாலும் காடுகளில் இருப்பவற்றையும்  மனிதர்களால் சாகுபடி செய்யப்படாத அரிய தாவரங்களையும், பழங்குடியினர் உணவுக்கும் மருத்துவ சிகிச்சைக்கும் பயன்படுத்தும் எண்ணற்ற அரிய மூலிகைகளை குறித்தும் எதுவும் தெரியாது நகரத்து வாசிகளுக்கு.

உலகின் மிகச்சிறிய செடியான வுல்ஃபியா நம்மைச் சுற்றியுள்ள பல நீர்நிலைகளில் இருக்கிறது அவற்றை பாசிகள் என்று எண்ணி கடக்கிறோம். உலகின் மிகப்பெரிய மலரையும் மிகப்பெரிய மஞ்சரியையும் அறிந்துகொள்ளாமல் நம் குழந்தைகள் அடிப்படை கல்வியை தாண்டி உயர்கல்விக்கு செல்கிறார்கள்.

நீர்பரப்பில் பரந்து விரிந்து படர்ந்துள்ள பாசி! உள்படம் மஞ்சரி.

இந்த தாவர குருடு மனிதர்களுக்கு பழக்கப்பட்டு இயல்பான ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது. மனித மூளை நகருகின்ற, பல வண்ணங்களில் இருப்பவற்றை உடனே அடையாளம் கண்டு கொள்கிறது. ஒரே நிறத்தில் பச்சைப் பெருக்கில்  அசையாமல் இருக்கும் தாவரங்களை அடுத்தபடியாகத்தான் மூளை அடையாளப்படுத்திக் கொள்கிறது.

ஓரிடத்தில்  நிலையாக இருப்பதால் தாவரங்கள் அலட்சியமாகவும், உயிரற்றவையெனவும் நினைக்கப்படுகின்றன. தாவரங்களும் வளர்கின்றன, நீரையும் உணவையும் தேடுகின்றன, உணவை சேமித்து வைக்கின்றன, காதல் செய்கின்றன, கருவுருகின்றன, சந்ததியை பெருக்குகின்றன.

இரண்டு தலைமுறைகள் முன்பு வரை தாவரங்கள் குறித்த அறிவு இத்தனை மோசமாக இல்லை அடிப்படை கல்வியில் மரங்கள், அவற்றின் சித்திரங்கள் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

சிறார் நூல்களில் இயற்கையும் ஒரு முக்கிய அம்சமாக இருந்தது. புலியும் அணிலும் கிளியும் குரங்குகளும், அவை  வாழும் காடும் மரங்களும் அவர்களுக்கான கதைகளில் இடம்பெற்றிருக்கும். சிறார் நூல்களின் பெயர்களே நிலவையும் காட்டையும் குறிக்கும் அம்புலிமாமா, அணில் அண்ணன் என்று இருக்கும்!

அவை இப்போது அடியோடு அழிந்து அதிபுனை கற்பனை கதாபாத்திரங்களான மாயாவிகள், இரும்பு மனிதர்கள் சிலந்தி மனிதர்கள் நிறைந்திருக்கும் கதைகளும் தொடர்களும்  இணைய விளையாட்டுக்களுமாக இயற்கையிலிருந்து விலகியிருக்கும் சிறார் உலகை யதார்த்த உலகிலிருந்தும் முற்றிலுமாக துண்டித்து விட்டிருக்கிறது.இயற்கை குறித்த அறிதலுக்கான அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டிருக்கும் உலகில் வாழும் குழந்தைகளுக்கு தாவரங்களை தெரிந்துகொள்ளும் வாய்ப்புக்களே இல்லை.

செங்காந்தள் மலர்கள், செங்கால் நாரைகள்!

கரிய கண்களை உடைய விரால் மீன்கள், கனிகளை சிந்தி விளையாடும் மந்திகள், செங்கால் நாரைகள்,  செங்காந்தள் மலர்கள், மரங்கள் செடிகள் மலர்கள் என பலவகை உயிரினங்கள்  அப்போது அடிப்படை கல்வியிலேயே அறிமுகமாகி இருந்தன  எனவே அவற்றை குறித்து மேலதிகம் அறிந்து கொள்ளும் ஆர்வமும் குழந்தைகளுக்கு இயல்பாகவே உண்டாகி இருந்தது

பொதுவில் காட்டுயிர் பாதுகாப்பென்று நிறைய பேசப்படுகின்றது ஆனால், காட்டுயிர் என்றதும் அனைவரும் நினைப்பதும் நம்புவதும் காட்டு விலங்குகளை மட்டும்தான். புலிகளை காப்பாற்ற வேண்டும், யானைகள் படுகொலையை தடுக்க வேண்டும், பறவைகளின் வாழ்விடத்தை பாதுகாக்க வேண்டும் … என்று பலர் குரல் கொடுக்கிறார்கள்! வன விலங்குகளின் பாதுகாப்பிற்காக தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல அமைப்புகள் இருக்கின்றன. அவை, காப்பாற்றப்பட வேண்டியது மிக அவசியம் தான். ஆனால், காட்டுயிரென்பது அங்கிருக்கும் தாவரங்களும் தான் என்பதை நாம் உணர்வதில்லை!

காடுகளில் அழிந்து கொண்டு வரும் தாவரங்கள் குறித்தும், அரிய மூலிகைகளின் பாதுகாப்பு குறித்தும் அக்கறை கொள்ளும் அமைப்புகள் அதிகமில்லை.

சத்தியமங்கலம் வனப்பகுதியில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் முழுக்காடும் பொன்னென மூங்கில் மலர்ந்திருந்தது. சாலையோரங்களில் அவற்றின் விளைந்த மூங்கிலரிசி மணிகள் கொட்டிக்கிடந்தது. ஆனால் அந்த வழியாக சென்ற  சுற்றுலாப் பயணிகள் அனைவரும் காடுகளின் விளிம்பில் தெரியும் யானைகளையும் மான்களையும் வியந்து கூச்சலிட்டு புகைப்படமெடுத்து கொண்டிருந்தனர்.

ஒரே ஒருவர் கூட அரிய மூங்கில் மலர்வை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.அந்த மூங்கில் மிகை மலர்வு எத்தனை அரியது என்பதும் யாருக்கும் தெரியவில்லை. 50 அல்லது 60 வருடங்கள் கழித்து ஒட்டுமொத்தமாக மலர்ந்து முற்றிலும் மூங்கில்கள்  அழியும் அரிதிலும் அரிய நிகழ்வு அது. அந்த மிகைமலர்வை அங்கிருந்த பலர் அவர்களின் வாழ்நாளில் மீண்டும் பார்ப்பதற்கான வாய்ப்புக்கள் அரிது.  50 வருடங்கள் கழித்து அவர்களின் அடுத்த தலைமுறையினர் அந்த சாலை வழியாக வருகையில் மீண்டும் காண சாத்தியம் இருக்கிறது.

கண்ணைக் கவரும் அபூர்வமான மூங்கில் பூக்கள்!

இப்படி குறிப்பிட்ட இடைவெளியில் மலர்ந்து அழியும் மூங்கில்கள், 12 வருடங்களுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சிகள் ஆகியவை எந்த குழப்பமும் இல்லாமல் மிகத்துல்லியமான காலக்கணக்குகளின் அடிப்படையில் அதே காலத்தில் மலரும் அதிசயத்தை வளரும் தலைமுறையினர் எத்தனை பேர் அறிந்து கொண்டிருக்கிறார்கள்?

தாவரங்களுக்கு ஒளிநாட்டக் கணக்குகளும் உண்டு. ஒவ்வொரு தாவரத்திற்கும் இந்த ஒளிநாட்டக் கணக்கு வேறுபடும். மிகுந்த ஒளிநாட்டமுடையவை, குறைந்த நாட்டமுடையவை, இவற்றுக்கிடையில் இருக்கும் மிகுதியும் குறைவும் இல்லாமல் மத்திம ஒளித்தேவை உள்ளவை என இவை வகைப்படுத்தப்படும். ஒளி, வெப்பம் மழை ஆகிய சமிக்ஞைகளை கொண்டு அவை இலைகளை உதிர்ப்பது, உறக்க நிலையில் இருப்பது, மலர்தல், கனி கொடுத்தல் ஆகியவற்றைக் காலக் கணக்கு பிசகாமல் செய்து வருகின்றன.  இரவிலும் நகரங்களில் எரிந்துகொண்டிருகும் விளக்குகளின் ஒளிமாசினால் இந்த கணக்கு பிறழ்கையில் தாவரங்களின் வளர்ச்சி உள்ளிட்ட பலவும் பெரும் குழப்பத்துக்குள்ளாகின்றன.

நெடுஞ்சாலைகளின் விளக்குகளின் எண்ணிக்கையை, ஒளியை கட்டுப்படுத்துதல், தேவையான இடங்களில் மட்டும் இரவு விளக்குகளை உபயோகித்தல் என்று இந்த ஒளிமசு தொடர்பான முறைப்படுத்தல்கள் சில நாடுகளில் துவங்கி இருக்கின்றன.நீர் மாசு, காற்று மாசு, நில மாசு என பல சூழல் மாசுபாடுகளை கவனித்து கவலைப்படும் உலகம் ஒளிமாசினால் தாவரங்களுக்கு ஏற்படும்  சிக்கல்களை பொருட்படுத்துவதில்லை.

அதிக ஒளி உமிழும் விளக்குகள் மரங்களை பாதிக்கவே செய்யும்!

ஆகாயத்தாமரை போன்ற நீர்வழித்தடங்களை ஆக்ரமிக்கும் களைகள்,  பார்த்தீனியம் போன்ற ஆக்ரமிப்பு நச்சுக்களைகள் பல்கிப்பெருகி பெரும் சூழல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன.அதைக் குறித்த போதுமான அறிதல் இப்போது இல்லை.

சூழல் பாதுகாப்பில் மட்டுமல்லாது அன்றாடம் நாம் புழங்கும் கேசப்பராமரிப்பு சருமப்பாதுகாப்பு, நோய் சிகிச்சைகள் போன்றவற்றிலும்  இந்த தாவர குருடு பலவிதங்களில் நம்மை தவறாக வழிநடத்துகிறது. மஞ்சள் காமாலைக்கு மருந்து என சந்தைகளில் கிடைக்கும் மஞ்சல்கரிசலாங்கண்ணி அசல் மூலிகையல்ல, போலி மலைவல்லாரை, வல்லாரைக்கீரை என பயன்படுத்தப்படுகிறது,  தற்போது சூழலுக்கு புதிய அச்சுறுத்தல்களாகி இருக்கும் பொன்னாங்கண்ணி கீரை என விற்பனை செய்யப்படும் கழிவுநீரில் வளர்ந்து அந்நீரின் உலோக மாசுக்களை இலைகளில் சேமித்து வைத்திருக்கும்  சீமைப்பொன்னாங்கண்ணி, செழித்து வளர்ந்து வேகமாக நீர்நிலைகளை ஆக்ரமித்து வெறும் மணல் தடங்களாக மாற்றிக்கொண்டிருக்கும் நெய்வேலி காட்டாமணக்கு,  ஆகிய அயல் ஆக்ரமிப்பு தாவரங்களின் பரவலும்  உடனடி கவனம் கோருபவை.

கண்ணைக் கவரும் பூக்களுடன் அசோக மரம்! நெடிதுயர்ந்த நெட்டிலிங்க மரம்!

பலரால் அசோகமரமென்று அழைக்கப்பட்டு கொண்டிருப்பது அசோகமரமல்ல, அது நெட்டிலிங்கம் எனப்படும் போலி அசோகமரம். சரகா அசோகா என்னும் ஆரஞ்சு நிற மலர்க்கொத்துக்களை கொண்டிருக்கும் அழகிய மரமே அசோகம் என்பதையும் தெரிந்து கொள்ளாதவர்கள்  உண்டு!

நம்மை சுற்றி இருக்கும் பல தாவரங்களில் கடும் நஞ்சு கொண்டவையும் இருக்கின்றன.  ரைசின் என்னும் கடும்  நஞ்சு ஆமணக்கு கனிகளிலும், சிவப்பும் கறுப்புமாக அழகுடன் இருக்கும் குன்றிமணியில் ஏப்ரின் என்னும் கொடும் நஞ்சும் இருக்கிறது. பல கிராமப்புற குழந்தைகள் ஆண்டுதோறும் இவற்றை கடித்து சுவைத்து உயிரிழந்திருக்கிறார்கள் அல்லது உயிராபத்தை சந்திக்கிறார்கள்.

புலி யானை போன்றவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதை தெரிந்து கொண்டிருக்கும் இப்போது பள்ளிக்கல்வியும் உயர்கல்வியும் கற்றுக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அழிந்துவரும் தாவர இனங்களில் ஒன்றையாவது தெரியுமா என்று சோதித்து பார்த்தால் தெரியும் இந்த தாவர குருடின் தீவிரத்தன்மை என்னவென்று.

காலநிலை மாற்றத்துக்கும் நீராதாரங்களுக்கும் உணவுப்பாதுகாப்புக்கும் மருந்துகளுக்கும் நமக்கிருக்கும் ஒரே ஆதாரம் தாவரங்களே.  அவற்றை அழிவிலிருந்து பாதுகாப்பது கவனிப்பதும் ஆராதிப்பதும் வழிபடுவதும்தான் இதிலிருந்து நிவாரணம் பெற ஒரே வழி

தொன்று தொட்டு மரத்தை வழிபடும் மகளிர்!

இதன் பொருட்டுத்தான் நம் முன்னோர்கள் திருமண சடங்கிலிருந்து பிறப்பு, இறப்பு சடங்குகள் வரை  தாவரங்களை முன்னிருத்தினர்.   தினசரி கோலமிடுகையிலேயே தாமரை  உள்ளிட்ட பல மலர்களின்  வடிவங்களை அமைக்கும் வழக்கமிருந்தது. கோடைக்கால நோய்களுக்கு எதிராக மூலிகைகளால் காப்புக் கட்டுவது, வேங்கைப்பாலில் பொட்டு வைப்பது,வேப்பிலையை அரைத்து பூசுவது, வேம்பையும், அரசையும் கடவுளாக வணங்குவது என்று சடங்குகள் வழியே தாவரங்களை அறிந்துகொள்ள எண்ணற்ற வழிகள் நமக்கிருந்தன. சடங்குகள் மெல்ல மெல்ல  மறைந்துபோகையில் இவற்றை அறிந்துகொள்வதும் நின்று போகின்றது.

தாவரங்களில் பாலினமுண்டு என்பதுவும் அவற்றில் ஆண் பெண் மரங்களும் மலர்களும் இணைந்தும் தனித்தும் இருப்பது பலருக்கு தெரியாது. ஆண் மரங்களை மலட்டுப்பெண் மரங்களென எண்ணி அவற்றை வெட்டியகற்றுபவர்களும் உண்டு!

சீமைக்கருவேலம் குறித்த பொது நல வழக்கொன்று சில வருடங்களுக்கு முன்னர் தொடுக்கப்பட்டது. தாவரவியலாளர்கள் சூழலியலாளர்கள் ஆகியோரிடம் அந்த வழக்கின் உண்மைத்தன்மை , அறிவியல் ஆதாரங்கள் ஆகியவை கேட்கப்படாமல் சீமைக்கருவேலங்களை வெட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அப்போது எது சீமை, எது நாட்டு மரமென்று தெரியாமல் பலநூறு நாட்டு கருவேல மரங்கள் வெட்டப்பட்ட கொடுமையும் நடந்தது!

ஊனுண்ணும் தாவரங்கள் தங்களது புரதசத்து குறைப்பாட்டை போக்க பூச்சிகளை பிடித்து உண்கின்றன, ஆண் மலர்களின் மகரந்தங்கள், சேர்க்கையின் பொருட்டு பெண் மலரை தேடி 20 கிமீ தூரம் வரை காற்றில் பயணிக்கும் என்னுமளவுக்கு ஆழமாக தாவரங்களை அறிந்துகொள்ள முடியாவிட்டாலும் தொட்டாசிணுங்கி தொடப்பட்டதும் உடனே எதிர்வினை ஆற்றுவதையாவது கவனித்து தாவரங்களும் நம்மைப்போலவே  புழு பூச்சிகளை, விலங்குகளைப்போல உயிருள்ளவைதான் என்று தெரிந்து கொள்ளலாம்

தற்போது தாவரங்களின் மீது ஈடுபாட்டுடன் இருப்பவர்களும், தாவரவியல் துறையில் ஈடுபட்டிருப்பவர்களும் தாவரங்களை நேசிப்பவர்களும் இயறகையோடு இணைந்த வாழ்வில் இருந்தவர்களாக இருப்பார்கள்.இன்னும் சிலருக்கு தாவரவியல் குறித்து  கற்பித்த  மிகச் சிறந்த ஆசிரியர்கள் கிடைத்திருப்பார்கள்.

அவற்றுடன் வாழ்ந்து அவற்றின் முக்கியத்துவம் தெரிந்தவர்கள் அவற்றைக் குறித்து கவலைப்படவும் அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றை பாதுகாக்கவும் எண்ணுவார்கள். எனவேதான் சிறார்களின் உலகில் தாவரங்கள் இடம்பெறுவது மிக முக்கியமானதாக இருக்கிறது. ஆரம்பக் கல்வியில் பிற துறைகளுக்கு ஈடாக நுண்ணுயிர்கள் தாவரங்கள் குறித்தும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்

தங்கள் குழந்தைகள் மருத்துவராக பொறியாளராக கணினி துறையில் வல்லுநராக வேண்டும் என விரும்பும் பெற்றோர்களில் சிலராவது எவற்றால் நாம் அனைவரும் உயிருடன் இருக்கிறோமோ, எவற்றால் சுவாசிக்க காற்றும் குடிக்க நீரும் கிடைக்கிறதோ, எவை இன்றி உலகம் இயங்க முடியாதோ அவற்றை குறித்து  தங்கள் பிள்ளைகள் கற்றுக்கொண்டு அத்துறையிலும் சாதிக்க வேண்டும் என்று விரும்பலாம்

உணவு, எரிபொருள் மற்றும் நீர் பற்றாக்குறை, குறைந்து கொண்டே வரும் சாகுபடிக்கான நிலப்பரப்பு, அதிகரிக்கும் மக்கள் தொகை மற்றும் காலநிலை மாற்றங்கள் இவை அனைத்திற்கும் ஒரே தீர்வாக இருப்பது தாவரங்களின் பாதுகாப்பும் பயன்பாடும் தான்உலக தாவரங்களில் 4269 வகைகள்  மிக மிக அதிக அழியும் அபாயத்தில் இருப்பவை என்றும் மேலும் 5725 தாவரங்கள் அழிவை நோக்கிய பாதையில் இருப்பதாகவும்   சிவப்பு பட்டியலிடப் பட்டிருக்கின்றது.  அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கைகளும் போதுமான அளவில் நடைபெறவில்லை. அழியும் நிலையிலிருப்பவை என்று அடையாளப்படுத்தப் பட்டவைகளில் வெறும் 41 சதவீத தாவரங்கள்மட்டுமே பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ் வருகின்றன

மனித குலம் இப்பூமியில் தொடர்ந்து வாழ தாவரங்களின் பாதுகாப்பு மிக முக்கியம். சூழலுடனும் அதிலிருக்கும் தாவரங்களுடனும் மிக நெருக்கமான தொடர்பிலிருப்பது அவற்றின் பாதுகாப்பில் முதல் படி. தாவரங்களுக்கு உண்டாகும் பாதிப்பு மனிதர்களுக்கும் உண்டாகும் பாதிப்புத்தான்!

காக்கைக் கூடு நடத்திய ‘செங்கால் நாரை விருது’ போட்டியில் முதல் பரிசு பெற்ற கட்டுரை!

கட்டுரையாளர்; லோகமாதேவி

தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தாவரவியல் ஆய்வாளர். 2016 லிருந்து நாளிதழ்களிலும், இணைய இதழ்களிலும்  சூழலியல் சார்ந்த அறிவியல் கட்டுரைகளை எழுதி வருகிறார். இத்துடன் மொழியாக்க கட்டுரைகளையும், கதைகளையும் எழுதியிருக்கிறார். அரிஸோனா பல்கலைக்கழக இணையத்தில் அறிவியல் தகவல்களை தமிழாக்கம் செய்யும் பணியில் 2019 லிருந்து ஈடுபட்டிருக்கிறார்.

தற்போது தாவரவியல் அகராதியை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

குரங்கு முக ஆர்கிட்

குரங்கு முக ஆர்கிட் மலர்கள்

ஆர்கிடேசி குடும்பத்தை சேர்ந்த ஆர்கிட் (orchid) மலர்கள் அவற்றின் மிக அழகிய வடிவங்களாலும்  நிறங்களாலும் உலகப்பிரசித்தி பெற்றவை. ஆர்கிடேசி குடும்பத்தில் சுமார் 1000 பேரினங்களும் 25,000 சிற்றினங்களும் பல்லாயிரக்கணக்கான் கலப்பினங்களும் உள்ளன

இவற்றில் நிலத்தில் வாழ்வன, மரங்களில் மீது வளர்வன, என பலவகையான வாழிடங்களில் வளர்பவை உள்ளன.ஆர்கிடுகள் ஸ்பாஞ் போன்ற சிறப்பு வேர்களால் காற்றிலிருந்து ஈரத்தை எடுத்துக்கொண்டு உயிர்வாழும்

 பிற தாவர வகைகளிலிருந்து ஆர்கிடுகள் அவற்றின் வண்ணமயமான விதவிதமான  வடிவங்களில் இருக்கும் மலர்களால் வேறுபட்டு பிரபலமடைந்திருக்கின்றன. தோட்டக்கலைத்துறையில் மிக முக்கிய மற்றும் சிறப்பான இடம்பெற்றிருப்பவை ஆர்கிட்மலர்கள் .ஐஸ்கிரீம்களில் நாம் சுவைக்கும் வெனிலா  ஒரு  ஆர்கிடிலிருந்தே பெறப்படுகிறது

ஆர்கிட்மலர்களில் மனிதனைப்போன்றவை, வேற்றுகிரக வாசிகளை போன்றவை, பறவைகள் வண்டுகள் விலங்குகளை போன்றவை நடனமாடும் மங்கையை போன்றவை என  நம் கற்பனைக்கெட்டாத வடிவங்களில் மலர்கள் இருக்கின்றன

இவற்றில் மிகs சிறப்பான ஒன்றும் இந்தியாவின் பல பகுதிகளில் ஆஞ்சனேயர்  மலர் என்று வணங்கப்படுவதும் குரங்கு ஆர்கிட் எனப்படும் Dracula simia, ஆர்கிட்கள்

இவை மரங்களின் மீது தொற்றிப்படர்ந்து வளரும் ஆர்கிடுகள். மலரிதழ்கள் குரங்கின் முகத்தைப்போலவே அமைந்திருப்பது இயற்கையின் ஆச்சர்யங்களில் ஒன்று

ஒவ்வொரு பருவத்திலும் கொத்துக்கொத்தாக மலரும் இவை ஆரஞ்சின் இனிய மணம் கொண்டிருக்கும்

 இந்த குரங்கு முக ஆர்கிடுகள் பெருவின் குளிர்நிரம்பிய காடுகளில் 1000திலிருந்து 2000 மீ கடல்மட்டத்துக்கு மேல் உயரமான இடங்களில் ஏராளமாக காணப்படுகின்றன

இதன் அறிவியல் பெயரின் முதல் பாதி, இதன் புல்லிகளின் இரு நீட்சிகளால் டிராகுலாவின் பற்களை நினைவூட்டுவதால் டிராகுலா என பெயரிடப்பட்டது. அறிவியல் பெயரில் இரண்டாம் பாதி சிமியா என்பது குரங்கை குறிக்கும்

குரங்கு ஆர்கிட் தாவரத்தை தாவர வகைப்பாட்டியலின் தந்தையான லின்னேயஸ் 1881ல் கண்டுபிடித்தார்.   

அமெரிக்காவின் மிஸிஸிப்பி நதிக்கரையோர நகரத்தை சேர்ந்தவரும் ஆர்கிடேசி குடும்பத்தில் முக்கிய ஆய்வுகளை செய்த தாவரவியலாளருமான  Carlyle August Luer, இந்த ஆர்கிடுக்கு இந்த அறிவியல் பெயரை 1978ல் வைத்தார்.

அவரால் இது பல நாடுகளுக்கு அறிமுகமாகி ஆர்கிட் மலர் விரும்பிகள் இதை உலகெங்கிலும் ஆர்வமாக வளர்க்கத் துவங்கினார்கள்

20ம் நூற்றாண்டின் துவக்த்தில் குரங்கு ஆர்கிடுகள் ஏராளமாக சாகுபடி செய்யப்பட்டு பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன

 பல கலப்பின சோதனைகளும் அப்போது செய்யப்பட்டு இதன் நூற்றுக்கணக்கான கலப்பின வகைகளும்  அப்போது உருவாக்காப்பட்டன

இப்போதும் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் பல அமெரிக்க  கடைகளில் இவை விற்பனை செய்யபடுகின்றன, இவற்றை மிக எளிதாக வீடுகளில் வளர்க்லாம்

 குரங்கு ஆர்கிட் மலர்கள் வெண்மை, இளஞ்சிவப்பு ஊதாமற்றும் மண் என பல நிறங்களில் இருக்கும்

  • The Dracula Simia ‘Taylors’  வகை மிக அழகிய  ஊதா நரம்புகளோடும் இளஞ்சிவப்பு மலர்களை கொண்டது
  • The Dracula Simia ‘Enchantment’ வகை அடர் ஊதா நிற இதழ்களில் வெண்திட்டுக்களை  கொண்டிருக்கும்
  • The Dracula Simia ‘Lilac Fire’  வகை மிக பிரகாசமனது இது இளஞ்சிவப்பில் வெண்கோடுகள் கொண்டிருக்கும்
  • The Dracula Simia ‘Mystic’ வகை மிக மிக அழகிய ஆழ்ந்த ஊதா மற்றும் இளஞ்சிவப்பு நிற இதழ்களில் வெள்ளை மற்றும் மஞ்சள் தீற்றல்களுடன்  காணப்படும்

தாவரவியல் குறித்த அடிப்டை அறிவு இல்லாத சிலரும், வம்புகளையும் வதந்திகளையும், பொய்ச்செய்திகளையும் சமூக ஊடகங்களில் பரப்பும் விஷமிகளும் இந்த குரங்கு ஆர்கிட்மலர்கள் 100 வருடத்துக்கு ஒருமுறைமலரும் அபூர்வகை மலர் என்றெல்லாம் செய்திகளை பகிர்கிறார்கள். இதன்  மலர்வடிவம் குரங்கின் முகம் போன்றிருப்பது மட்டும்தான் உண்மை, இவையும் பிற தாவரங்களை போலவே அவற்றிற்குரிய  பருவங்களில் தொடர்ந்து மலர்பவைதான்.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் அந்நியசெலவாணி ஈட்டுதலில் மிக முக்கிய இடம்பெற்றிருக்கும், உயர்ந்து கொண்டே இருக்கும் ஆர்கிட் சந்தை 2028ல்   அமெரிக்க டாலர்களில் 363.2 மில்லியனை எட்டும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

 ஆர்கிட் வளர்ப்பு மிகுந்த லாபம் தரும் ஒன்றாக இருக்கும் இந்தியாவில் அருணாச்சலபிரதேசம் ஆர்கிட் சாகுபடியில் முன்னணியில் இருக்கிறது. அருணாச்சலபிரதேசம் ஆர்கிடுகளின் இந்தியசொர்க்கம் என அழைக்கப்படுகிறது. சிக்கிம்மில் இருந்து மட்டும் சுமர் 560 வகையான ஆர்கிடுகள் பிற நாடுகளுக்கு எற்றுமதியாகின்றது

« Older posts Newer posts »

© 2025 அதழ்

Theme by Anders NorenUp ↑