வன சிகிச்சை, நிலச் சிகிச்சை,பசுமை சிகிச்சை, இயற்கை சிகிச்சை என்னும் பெயரால் அழைக்கப்படுவது, உடல், உள்ளம் மற்றும் ஆன்மாவிற்கான இயற்கையோடு இணைந்த ஒரு சிகிச்சை. இச்சிகிச்சை வனக்குளியல் என்று பொருள் படும் ஜப்பானிய சிகிச்சையான Shinrin-yoku வை அடிப்படையாக கொண்டது.
பாரசீக பேரரசை தோற்றுவித்தவரான பேரரசர் சைரஸ் 6ம் நூற்றாண்டில் நகரின் மையத்தில் மக்களின் ஆரோக்கியம் மேம்படும் பொருட்டு ஒரு பெரும் பூங்காவை அமைத்தார். இதுவே பசுமை சிகிச்சையின் தொடக்கமாக கருதப்படுகிறது. 16ம் நூற்றாண்டில் ஸ்வீடனை சேர்ந்த இறையியலாளரும் மருத்துவருமான பாராசெல்சஸ் ’’நோயிலிருந்து குணமடைதல் மருத்துவரிடமிருந்தல்ல, இயற்கையிடமிருந்தே கிடைக்கிறது’’ என்றார்.
1950 களில் உலகெங்கிலும் இயற்கைச் சூழலில் வசிப்பவர்களின் ஆரோக்கியம் குறித்த ஆய்வுகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக 1982ல் ஜப்பானின் மீன்வளம், விவசாயம் மற்றும் வன அமைச்சகத்தின் அப்போதைய தலைவரான தோமோஹைட் அகியாமா ’’வனக்குளியல் ‘’ என்று பொருள் படும் Shinrin-yoku ( shinrin, “forest”, yoku, “bath, bathing” ) என்னும் சிகிச்சை முறையை உருவாக்கி காடுகளை நோக்கி அதிக அளவில் மக்களை வரச்செய்தார்.
இயற்கையிலிருந்து துண்டிக்கப்பட்ட மக்களை மீண்டும் அதனுடன் இணையச் செய்வதற்கும், தங்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் வனங்களை மக்கள் பாதுகாக்கவும் இது வழிவகுக்கும் என அவர் நினைத்தார்
தற்சமயம் உலகெங்கிலும் பொதுவாக கடைப்பிடிக்கப்படும் யோகா மற்றும் தியான முறைகளைப்பொல வனசிகிச்சையும் பரவலாயிருக்கிறது.
மிக குறைந்த நேரமாக ஐந்து நிமிடங்களும் அதிகபட்சமாக 120 நிமிடங்களும் இந்த சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
குறிப்பிட்ட காலஅளவு வனச்சூழலில் இருப்பவர்களின் ஆளுமைச்சிக்கல்கள் விலகி,மனழுத்தம் குறைந்து தேக ஆரோக்கியம் கூடுகிறது என்கிறார்கள் இந்த சிகிச்சையை அளிப்பவர்களும் மேற்கொள்பவர்களும்.
இவற்றுடன் வைட்டமின் D குறைபாடு மற்றும் கூடுதல் உடல் பருமன் ஆகியவையும் இதனால் குணமாகிறது .
சிகிச்சை முறை
- வனங்களின் விதவிதமான ஒலிகளை மனம் குவித்து செவி கூர்ந்து கவனிப்பது
- நிலத்தை, மரங்களை இலைகளை கைகளால் தொட்டுக் கொண்டிருப்பது
- மலர்களையும் இலைகளையும் கனிகளியும் முகர்ந்து வாசனையை அறிந்து கொள்வது
- வனச்சூழலை, அதன் அழகை ஆழ்ந்து கவனிப்பது
- சுவாசத்தை கவனித்து தூய காற்றை மகிழ்ந்து அனுபவிப்பது
இந்த சிகிச்சையை இப்படி பொதுப்படுத்த முடியாது, காடுகளில் இருப்பதன் மூலம் மனநிலை மாற்றம் அடைவது என்பது மிக அந்தரங்கமானதும் தனி நபர்களின் மனநிலை சார்ந்துமாகும், மேலும் இப்படி காடுகளில் மனிதர்கள் நெருங்கிச் செல்வது இயற்கையின் அழிவிற்கு காரணமாகும் என் இச்சிகிச்சை குறித்து சில விமர்சனங்களும் எழுகின்றன.
உலகின் பல நாடுகளும் இந்த வன சிகிச்சையை அங்கீகரித்து ஆதரவு அளித்து வருகின்றன. ஃபின்லாந்தில் 5 மணி நேரம் வனங்களில் இருப்பது மிக நல்லது என ஆய்வாளர்கள் வலியுறுத்துகிறார்கள்
மொத்த நிலப் பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு வனங்களால் சூழப்பட்டிருக்கும் ஜப்பானில் இந்த சிகிச்சைக்கு அரசு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. தென்கொரியாவில் 2009ல் சிகிச்சைவனமொன்று துவங்கப்பட்டு பலருக்கும் பயனளித்ததால் 2022ல் சுமார் 30க்கும் மேற்பட்ட சிகிச்சை வனங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மனாழுத்தம் தற்கொலை எண்ணம் ஆகியவற்றிற்கு இந்த வனங்கள் சிகிச்சை அளிக்கின்றன
சமிபத்தில் தீயணைப்பு வீரர்களுக்கு பணி சார்ந்த மனஅழுத்தம் நீங்க இங்கு வனசிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
சமீபத்தில் மரணமடைந்த பிரபல புகைப்பட நிபுணர் ஜான் ஐசக் போர்ச்சூழலில் புகைப்படமெடுத்து மனம் கலங்கிய தான் சூரியகாந்தி தோட்டங்களுக்குள் சென்ற பின்னர் மீண்டு வந்ததாக குறிப்பிட்டிருந்தார். கனடாவின் மருத்துவர்களும் பசுமை பரிந்துரையாக மனநல சிகிச்சைகளுக்கு வனத்தில் நேரம் செலவழிக்க அறிவுரை கொடுத்து வருகிறார்கள்.
அமெரிக்க வன அமைச்சகம் இதற்கென பயிற்சி பெற்ற நிபுணர்களைக்கொண்டு அடர் வனங்களில் இரண்டு மணி நேரம் சிகிச்சை அளிக்கிறது
தமிழகத்தில் இது பன்னெடுங்காலமாக வழக்கத்தில் இருந்திருக்கிறது. ஒரு சிறு முள் குத்தினால்கூட முள் நீக்குகையில் வலி தெரியாமலிருக்க பச்சையை பார்க்க சொல்லும் வழக்கம் இங்கு இருக்கிறது. பசுமை நிறம் குணமாக்கும் நிறம் என்பது தமிழர்களுக்கு முன்பே தெரிந்திருக்கிறது
இப்போதைய அடுக்கக வாழ்வில் அனைவருக்கும் வீடுகளில் பசிய செடிகளுடன் கூடிய தோட்டங்கள் வைத்திருக்க முடியாதென்றாலும் அருகிலிருக்கும் காடுகளுக்கு குடும்பத்துடன் சென்று அங்கு குறிப்பிட்ட நேரம் செலவழிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.