பொள்ளாச்சிக்கு வெகுஅருகில் தான் கேரளா இருக்கிறது. இங்கிருந்து கொழிஞ்சாம்பாறை வண்ணாமடைக்கெல்லாம் உள்ளூர் பேருந்துகள் இயங்குகின்றன. ஓணத்துக்கு விடுமுறையும்  எங்களூருக்கு உண்டு. கல்லூரியிலும் கேரள மாணவிகள் கணிசமாக இருக்கிறார்கள்.  பாலக்காட்டுச்சாலையில்தான் கல்லூரி என்பதால் கல்லூரி வாசலில் கேரளப் பேருந்துகள் நின்றுசெல்லும்.

 தாவரவியல்  சுற்றுலாவுக்கும் அடிக்கடி வயநாடு, திருச்சூர், கொச்சி என்று நாங்களும் போவதுண்டு

எனக்கு கேரளா மீதான சாய்வு அதிகமுண்டு  மலையாளம் பேசவும் கேட்கவும் பிரியப்படுவேன். வேடசெந்தூர் வீடும் கொஞ்சம் கேரள பாணியில் தான்  இருக்கிறது ஏராளம் செடி கொடி மரங்களும் வீட்டு முகப்புச் சுவற்றில் பதிக்கப்பட்டிருக்கும் கதகளி முக மரச்சிற்பமும், வீட்டைச்சுற்றிலும் கல்விளக்குகளும் மாலைநேரங்களில் விளக்கேற்றலுமாக,

சமீபத்தில் இருநாட்கள்  தருணுக்காக கேரளா செல்ல வேண்டி வந்தது. 50 நாட்கள் காடுறையும் பயிற்சியின் போது பெருமழையில் தனது காமிராவுடன் நனைந்தான் அதில் காமிரா லெனஸில் நீர்புகுந்து பூஞ்சை தொற்று உண்டாயிருந்தது

முன்பும் இப்படி ஆகும் போது கோவையிலிருந்து சென்னைக்கு அனுப்பி சரி செய்வது வழக்கம். இம்முறையும் அப்படியே அனுப்பினான், எனினும் கட்டணம் 16 ஆயிரம் ஆகும் என்றார்கள். திரும்ப வாங்கிக் கொண்டு  புகைப்படக்கலையில் இருக்கும் தன் நண்பர்களிடம் விசாரித்தான்.  விஷ்ணு என்னும் மணவிழாக்களை புகைப்படம் எடுக்கும் தருணின் மலையாளி நண்பன் திருச்சூரில் நியாயமான கட்டணத்தில் சரிசெய்பவர்கள் இருக்கிறார்கள் என்றதால் லென்ஸை கொடுக்கவும், சரிசெய்து வாங்கவும் என இருமுறை திருச்சூர் சென்றோம்

பொள்ளாச்சியில் இருந்து  2 மணி நேரத்தில் செல்ல நல்ல அகலமான தேசிய நெடுஞ்சாலை   NH 544, (முன்பு   NH 47) இருப்பதால் சுகமான பயணம்.  இருவரும் பிடித்த பாடல்களை மாற்றி மாற்றி கேட்டுக்கொண்டு சென்றோம்.தருணின் பிரியப்பட்ட ’’படே அச்சே லகத்தே ஹே’’ எனக்கும் பிடித்திருந்தது பலமுறை கேட்டோம். 

’’ஹம் தும் கித்னே பாஸ் ஹே

கித்னே தூர் ஹே சாந்த் சித்தாரே’’

திருச்சூரில் நுழையுமுன் மெர்சி, செயிண்ட் தாமஸ் உள்ளிட்ட பல பெண்கள் கல்லூரிகளையும் சில உயர்நிலைப்பள்ளிகளையும் கடந்தோம். இப்போது பருவத்தேர்வுகள் நடப்பதால் 12 மணிவாக்கில் ஒருவர் கைகளை ஒருவர் பிடித்துக்கொண்டும், அண்ணனோ அப்பாவோ முன்னால் அமர்ந்திருக்க இருசக்கரவாகனங்களில் பின்னால் அமர்ந்துகொண்டும் பேருந்துக்காக காத்துக்கொண்டுமிருந்த பல அழகிகளை கண்டோம். தருண் முகம் மலர்ந்து விகசித்து நிறைந்து காரோட்டினான் . 

தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளித்த, அலையலையான கூந்தலுடன் (சிற்றலைகள்) சேச்சிகள் கைப்பையுடன் பேருந்துக்காக காத்திருந்தனர். தினக்கூலிக்கு செல்லும் பல பெண்கள் தோளில் துண்டும் நைட்டியுமாகவே சென்றார்கள். இதை சில வருடங்களாகவே கேரளத்தில் பார்க்கிறேன். தமிழ்நாட்டில் அப்படி ஆண்களின் சட்டையை புடவைக்கு மேலே போட்டுக் கொள்கிறார்கள் சமீபகாலமாக.

வழியெங்கும் ஏத்தம் பழங்களும் அவற்றின் சிப்ஸ்கடைகளும் நிறைந்திருக்கின்றன. அவற்றிற்கு இணையாகவே கிரில் சிக்கன் கடைகளும் முளைத்திருக்கின்றன.

சந்தடியான மிக குறுகிய ஒரு கடைத்தெருவில் லென்ஸ் கடை இருந்தது. காரை நிறுத்த தேடித்தேடி ஒரு இடம் கண்டுபிடித்தோம்.பிடரி வரை வழியும் கேசமும், ஒற்றைத்தோடுடைய செவியனும் ஒல்லியான ஒல்லியுமாக தருணின் நண்பன் விஷ்ணு காத்திருந்தான்ன் . லென்ஸ்காரரும் அவனுமாக மலையாளத்தில் சம்சாரித்தனர் ( யே ஞான் வைல்ட்லைஃப் இல்லியா.ஞான் கல்யாணமா, தே ஆ புள்ளியா வைல்ட் லைஃப்) 

லென்ஸ் தூய்மையாக்கப்பட்டு சிலநாட்களில் கிடைக்கும் என்று சொல்லபட்டபின்னர்  நாங்கள் புறப்பட்டோம்

விஷ்ணு எங்களை பிரபல திருச்சூர் பூரம் விழா நடக்கும்  வடக்குநாதர் (சிவன்)  அம்பலத்துக்கு அழைத்துச் சென்றான்

 

புராணங்கள் அக்கோவில் பரசுராமரால் உருவாக்கப்பட்டது என்கிறது. சங்கரரின் பெற்றோர் வடக்குநாதர் முன்பாக செய்துகொண்ட பிரார்த்தனைகள் பேரில்தான் அவர் பிறந்தார் என்றும் சொல்லப்படுகிறது

கோவிலுக்கு எதிரில் இரு தேவி ஆலயங்கள் உள்ளன.பார மேட்டு காவு பகவதியும் திருவெம்பாடி பகவதியும் அருள்பாலிக்கிறார்கள். 

சிவராத்திரியின் போது கோவிலில் லட்ச தீபம் ஏற்படுமென்று சொன்னான் விஷ்ணு. பூரம் விழாவின் போது நூற்றுக்கணக்கில் அலங்கரிக்கபட்ட யானைகள் நிற்கும் இடமும் வலிய மற்றும் சிரிய வெடிகள் வெடிக்கப்படும் பரந்த வெளியும் புல் பரவிக் காணப்பட்டது.

வாகைமரங்கள் வெகுதூரம் கிளைகளோடி நின்றது, அதனடியில் காரை நிறுத்தினோம்.

கேரளாவின் மேற்கு பார்த்த சிவாலயங்களில் இதுவுமொன்று. அடுத்தமுறை அதிகாலை வரவெண்டும் என நினைத்துக் கொண்டேன்

அன்று வார இறுதிஎன்பதால் கோவிலை சுற்றிலும் நல்ல கூட்டம். கார்களும் பைக்குகளும் ஏராளம் நின்றன. பல காதல் ஜோடிகள். அருகிலிருக்கும் பள்ளியின் சிறுமிகள் பள்ளிச்சீருடையில்  தத்தமது காதலர்களுடன் அமர்ந்து ஐஸ்கிரீம் சுவைத்துக்கொண்டிருந்தனர். 

உச்சிவேளை என்பதால் கோவில் நடை அடைத்திருந்தது. சாத்திய நடையையும் , பெருமதில்களுக்கு பின்னிருந்து கரும்பாறையென தெரிந்த யானை முதுகுகளையும் கோவில் கூரையின் உயரத்துக்கு இருந்த வெண்கல சுற்றடுக்கு விளக்கு கம்பத்தையும் மட்டும் பார்த்தோம்.

பலர் வெட்டியாக அமர்ந்துகொண்டும், லாட்டரி சீட்டுக்கள் விற்றுக்கொண்டுமிருந்தனர். இரு வயசாளிகள் ஒரு கல்திட்டில் அமர்ந்து மும்முரமாக செஸ் விளையாடிக்கொண்டிருந்தனர். இருவருக்கும் முள்முள்ளாக தாடி, அழுக்கு வேட்டி பழுப்பேறிய சட்டை ஆனால் உற்சாகமாக காய்களை நகர்த்தி கொண்டிருந்தனர். அவர்களை பார்த்தது மகிழ்சியளித்தது. ஏற்ற இறக்கங்களுடன் வாழ்வை ஏறக்குறைய வாழ்ந்து முடித்து,  மீதமிருக்கும் வாழ்வை இப்படி  பொருள் கொண்டதாக மாற்றிக்கொண்டு விடுபவர்களை எனக்கு பிடிக்கும்.

எங்களூரில் அரசமரத்தடி விநாயர்கோவில் கல்திட்டில் வீட்டிலிருந்து ஏறக்குறைய துரத்தப்பட்ட ஊர்கவுண்டரும் இன்னும் சிலரும் அரிதாக ஓரிருசொற்கள் பேசிக்கொண்டு வந்துபோகும் பேருந்துகளை வேடிக்கை பார்த்தபடிக்கு சிலைகளை போல சாப்பாட்டு நேரத்துக்கு அழைப்பு வரும்வரை  நாளெல்லாம் அமர்ந்திருப்பார்கள். அவர்களை அப்படி பார்ப்பது துயரளிக்கும்

வடக்குநாதர் கோவிலுக்கெதிரே இருந்த கிளைச்சாலையில் நல்ல உணவகங்கள் அடுத்தடுத்திருந்தன அவற்றில் அக்‌ஷயாவுக்கு சென்றோம் மிக்சுவையான கப்பையும் மீன்கறியும் கிடைத்தது

பிரியாணியை அரிசிச்சோறு தனியாகவும் மசாலா தனியாகவும் இறைச்சி தனியாகவும் அடுக்கடுக்காக வைத்து தருகிறார்கள்.  நல்ல   சுத்தமான உணவகம். 

கல்லாவில் கண்ணாடிப் பெட்டியில் பழம்பறிகள் காத்திருந்தன மிருதுவாக பொன்மஞ்சளில் மினுங்கிக்கொண்டு (கன்னிப் பெண்ணின் கன்னம் போல் -ஜெ)

அவற்றில் இரண்டை வாங்கிக்கொண்டேன். அவ்வபோது சிறுமழை தூரலாக பெய்வதும் உடனே இளவெயிலடிப்பதுமாக இருந்தது.  2 மணிக்கெல்லாம் வெயில் முதுகை அறைந்தது தமிழகத்தை விட கேரளத்தில் வெயில் உக்கிரமாக இருந்தது.

பாலக்காடு வனப்பகுதியில்  பணிசெய்யும்  யானைசிவா அவனது ஆசிரியை என்பதால் ஒரு பிரத்யேக விஷயத்துக்கென அனுமதி வாங்கி என்னை  அழைத்திருந்தான். எனவே திருச்சூரிலிருந்து பாலக்காடு சென்று அங்கு மாலை வரை இருந்துவிட்டு ஊர் திரும்பினோம் வழியெங்கும் லண்டானா, கம்யூனிஸ்ட் பச்சை செடிகள் ஏராளமாய் பரவி இருந்தன.

அங்கு  கிடைத்த அந்த அனுபவத்தை சிவாவின் பணி நிமித்தம் பொதுவெளியில் பகிரமுடியவில்லை அது ஒரு அற்புதமான அரிய அனுபவம். அன்பு அதுவும் கள்ளமற்ற தூய அன்பு அதில் திளைத்தது என என் வாழ்வில் மறக்கவே மறக்க முடியாத இனிய அனுபவம். டாப்ஸ்லிப் யானைப்பாகன்  (கல்பனா) பழனிச்சாமியின் மனைவி சாந்தி அங்கிருந்தார் அவரளித்த எலுமிச்சை இலை கிள்ளிப்போட்ட அருமையான கட்டஞ்சாயா குடித்தோம்

வீடுவர பின்னிரவானது. பழம்பறியும் பானைத்தண்னீருமாக இரவுணவு முடித்தேன். 

நேற்று லென்ஸ் சரியாகிவிட்ட தகவல் வந்ததால் மீண்டும் இன்று திருச்சூர். இம்முறை அதிகாலை ஐந்துமணிக்கே புறப்பட்டோம், காலை 7 30க்கு கோவிலில் இருந்தோம் அந்நேரத்துக்கே கோவிலில் ஓரளவுக்கு கூட்டம் இருந்தது

 மிக மிக அழகிய, மிகப்பழைய மிக தூய்மையாக பராமரிக்கப் படும் கோவில்.  நியதிகள் எழுதிவைத்திருக்கும் நீல நிற போர்டுகளை தவிர யாருமே எந்த கெடுபிடிகளையும் செய்யவில்லை. மிக அமைதியாக இருந்தது வளாகம். கார்த்திகை மாத மென்பதால் கருப்புச் சேலையும் கருப்பு வேட்டியுமாக சபரிமலைக்கு மாலையிட்ட பலருமிருந்தனர்,

அங்கே  வேண்டிக்கொண்டால் தேர்வில் நல்ல மதிப்பெண் வரும் என்னும் நம்பிக்கை இருப்பதால் மாணவ மாணவிகள் அதிகமிருந்தனர்

பல கேரள கோவில்களைப்போலவே மேல்சட்டை, லுங்கி அணிந்து வர இங்கும் அனுமதியில்லை. ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கும் அனுமதி இல்லை

கோவிலை சுற்றுகையில் அர்ஜுனன் வில்லுக்குழி என்று ஒரு தீர்த்தம் இருந்தது அதை பச்சைவலையிட்டு மூடிவைத்திருந்தனர். வலையின் கிழிசல் வழி எட்டிப் பார்த்தோம் நீண்டவிழி போல அல்லது வில்போன்ற வடிவ பாறைக்குழியில் நீர் நிறைந்திருந்தது. அதன் ஒரு நுனியில் பிரகாசமான நட்சத்திரவடிவ  மஞ்சள் மலர்களுடன் ஒருசிறுசெடி இருந்தது.

 அந்த தீர்த்தத்தில் கைகால்களை தூய்மைசெய்தபின்னரே கோவிலுக்குள் நுழைய வேண்டும் என்னும் வழக்கம் முன்பிருந்து பிற்பாடு அவற்றை பாதுகாக்க இப்படி மூடி வைத்திருப்பதாக பின்னர் கேட்டறிந்தேன். 

மிக தொன்மையான மிகமிக அரிய ஒவியங்கள் சுவர்களெங்கும் இருந்தன நல்ல தடித்த உருவத்துடன்  குட்டையான நீலக்கண்னன் ஒரு பாறையில் அமர்ந்து குழலூத மல்லிகைமலர்ச்சரம் சுற்றிய கொண்டையிட்ட பேரிளம்பெண்கள் சிலர் அவனை தோளுக்கு பின்னிருந்து குனிந்து பார்க்கும் சித்திரம் வசீகரமாயிருந்தது,அனைத்து ஓவியங்களும் அடிப்பக்கம் விளக்குப்புகையால் அழிந்தும் சேதமுற்றும் இருந்தன,

சுற்றும் வழியெங்கும் விளக்கேற்றும் சிறு பள்ளத்துடன் இரண்டடியில் தரையில் பதிக்கப்பட்ட கல்தூண்கள் இருந்தன. கல்பாவையரும் ஆங்காங்கே இருந்தனர்.  முன்வாசலின் மாபெரும் வெண்கல விளக்குகளிலிருந்து  கல்தூண் பள்ளம் எல்லாமே கண்ணாடிபோல் மழைநீர் தெங்கி இருந்தது

சுவற்றில் புடைப்பாக செதுக்கப்பட்டிருந்த ஒரு கல்பாவையின் கைவிளக்குக்குழியின் நீர்பரப்பில்  நீலவானம் தேங்கி இருந்தது.

பச்சை பூக்களிட்ட வெள்ளை புடவையும் பச்சைரவிக்கையுமாக ஒரு அம்மை சுற்றி வந்து கொண்டிருந்தார். வெகுநாட்களாக அப்படி புடவை எடுக்க நினைத்திருந்தேன். அவரிடம் நேரே சென்று அதுபோன்ற  புடவை எனக்கும் வேண்டும் எங்கு கிடைக்கும் என்று கேட்டேன்.  செட் சாரி என்று கேட்டால் எங்கும் கிடைக்குமென்றார். அந்த புடவை அவருக்கு மிக அழகாக இருப்பதையும் சொன்னேன்

கருப்புபுடவையில் சபரிமலைக்கு மாலையிட்டிருந்த ஒரு அம்மை புதுவெண்ணெயின் நிறத்திலிருந்தார். எலுமிச்சம்பழம் போன்ற அவரது சிறுகொண்டையில் துளசி சூடியிருந்தார்.சச்சதுரமாகவும் நல்ல வட்டத்திலும் தனித்தனி சன்னதிகள், சன்னதிகளின் கூரை முகப்பு விளிம்புகளில், படமெடுக்கின்றன வெண்கல நாகங்கள். 

மலையாளத்தில் என்னவோ இடியாப்பம் போல பெயரெழுதியிருந்த போர்டின் பின்னால் மஞ்சள் பூசப்பட்ட கல்தெய்வங்கள் நான்கிருந்தன அவற்றின் அருகிலிருந்த அலரி மரக் கிளைகளில் சபரிமலை சென்று திரும்பியவர்களின் மாலைகள் தொங்கவிட பட்டிருந்தன

 வடக்குநாதர் நெய்லிங்கத்தால் ஆனவர் லிங்கத்தின் மீது பொன்காப்பிட்டிருந்தனர். அவருக்கு பின்புறம் நெய் சிறு மலைபோல் சேர்ந்திருந்தது.

அமர்நாத் பனிலிங்கம் போல வடக்குநாதரின் நெய்லிங்கமும் உலக பிரசித்தம். அந்த நெய்யின் ஒரு துள்ளியை துண்டு வாழையிலையில் செஞ்சந்தனக்குழம்பும் மலர்களும் வைத்து பிரசாதமாக அளித்தார்கள் அந்த நெய் உடல்நோய்களை போக்கும் என்று அங்கு நம்பிக்கை

கோவிலெங்கும் நீளமாக  தொங்கவிடப்பட்டிருந்த சாமந்தி மாலைகள் வாடியிருந்தன.  கழுவப்பட்ட மாபெரும் வெண்கல உருளிகள் கவிழ்த்தும் சாய்த்தும் வைக்கப்பட்டிருந்தன

அவ்வளவாக புழக்கத்தில் இல்லாத  வெளிச்சுற்று பிரகார  கல்திண்ணைகளில் பெரிய பெரிய மட்டை அரிசி மூட்டைகளும் கோகுலகிருஷ்ணா அக்மார்க் நெய் தகரடின்களும் அடுக்கி  வைக்கப்பட்டிருந்தன

பச்சைப்பட்டு விரிக்கபட்டிருந்த  துலாபார தராசுகள் ஒழிந்திருந்தன.அந்த தட்டுக்களைம்  தொட்டு வணங்கினார்கள்.

மழைதூறிக்கொண்டே இருந்தது. ஒரு கல்தூணில் கைப்பிடியுடன் ஒரு பனையோலைக்குடை சாத்தி வைக்கப்பட்டிருந்தது

வடக்குநாதரின் பின்புறம் ஸ்ரீ பார்வதி அருள்பாலிக்கிறாள்.

விருஷபன், ராமன், அய்யப்பன், சங்கர நாராயணன், கணபதி என அனைத்து சன்னதிகளிலும் விக்ரகங்களை சுற்றி ‘ப’ வடிவில் பெருஞ்சுடரொளிரும் தீபங்கள் எரிந்தன

அங்கிருக்கும் அனைத்து சன்னதிகளிலும் ஒரே நேரத்தில் வழிபாடு நடக்குமென்றார்கள்

நெய் விளக்கேற்றும் பிரார்த்தனை நடந்துகொண்டே இருந்தது. தமிழக கோவில்களில் இருக்கும் தண்ணீர் பாட்டில் மூடியளவுக்கான மைக்ரோ விளக்குகளை போலல்லாமல்  அங்கு விற்பனை செய்யப்பட்ட, சற்றுப்  பெரிய குழிக்கரண்டி நெய் பிடிக்கும் விளக்குகளில் சுத்தமான  பசு மஞ்சள் நெய்யில் பக்தர்கள் தீபமேற்றினார்கள் 

அங்கிருந்த பல மரங்கள் நூற்றாண்டுகள் பழமையானவை. மரங்களை சுற்றிலும் உயரமான அகலமான மேடை அமைக்கப்பட்டிருந்தது; ஒரு அரசமரத்திற்கு சந்தான கோபாலகிருஷ்ண மரம் என்று பெயர்ப்பலகை இருந்தது .

வழக்கமாக லத்தீன அறிவியல் பெயர்களே பரிச்சயமாயிருந்த எனக்கு இந்தப்பெயரும் அந்த மரமும் பார்க்கவே மகிழ்ச்சி அளித்தது. சுற்றத்துவங்குகையிலேயே எனக்கு வலதுபுறம் இளஞ்சிவப்பு தளிரிலைளுடன் இருந்த ஒரு மரத்தை பார்த்திருந்தேன். அதை எனக்கு அடையாளம் தெரியவில்லை.இலைகள் பளபளத்தன. அதே யோசனை உள்ளே ஓடிக்கொண்டிருந்தது பொதுவாக செம்புநிறத்தில் தளிரெழுவதுதான் வழக்கம். இந்த மரம் என்னவாக  இருக்குமென யோசித்துக்கொண்டே வந்தேன்

சட்டையில்லாமல் வேஷ்டியின் ஒரு நுனியை தூக்கிபிடித்துக்கொண்டு வந்த தருண் மலையாளிகளைப்போலவே இருந்தான். ரோமாபுரியில் ரோமானியனாகத்தானே இருக்கனும்?

சுற்றி முடிக்கையில் அருகில் வந்தபோதுதான் அம்மரம் அதுநாள் வரைநான் பார்த்தேயிருக்காத பார்க்க பெரிதும் காத்திருந்த அசோகமரமென்று அதன் தீக்கொழுந்துகளை போன்ற ஆரஞ்சு மஞ்சள் மலர்கள் கொண்ட மஞ்சரிகளை கொண்டு அறிந்தேன். பரவசத்தை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. தருணிடம் நூறுமுறையாவதுது ’’அசோகமரம்டா’’ என்று சொல்லியிருப்பேன். மகிழ்ச்சியில் மரத்தடியில் கொஞ்சம் நேரம் அமர்ந்திருந்தேன், மலர் மஞ்சரிகள் ஒன்றிரண்டு தான் இருந்தன. 

அம்மரத்தை குறித்து அதழில் ஒரு பதிவும் முன்பு எழுதியிருந்தேன். 

 கர்ப்பகிருக வாசல் மணி பாற்கடலைகடைந்த வாசுகி என்று ஐதீகம் எனவே அதை பிரதோஷ மாலைவேலைகளில் தலைமை நம்பூதிரி மட்டுமே ஒலிக்க செய்வாராம் அன்று பிரதோஷம் எனவே மாலை அது ஒலித்திருக்குமாயிருக்கும்.

நந்தி  சிவனின் நேரெதிரே இல்லாமல் சற்று விலகி  தனி மண்டபத்தில் இருந்தது

இத்தலத்தின் வடக்குநாதரையும் பார்வதியையும் பரசுராமர் பிரதிஷ்டை செய்தாரென்றும், கணபதி ராமர் சங்கரநாராயணன் திருவுருவங்களை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்தாரென்றும் சொல்லப்படுகிறது.

அனைத்து விக்ரகங்களும் பொற்காப்பிடப்பட்டிருந்தன. பெருவிளக்குகளின் சுடரொளியில் அப்பொன்னும் நெருப்பென சுடர்ந்தது.

கோவிலின் அமைதி தவிர்க்கமுடியாமல் தமிழக கோவில்களின் கூச்சல்களை நினைக்கவைத்தது. பெருங்கற்கள் பதித்த தளம் கோவிலைச்சுற்றிலும். பல கற்களில் நெடுஞ்சாண்கிடையாக பலதிசைகளில் விழுந்துவணங்கும்  மேலாடையின்றி அரையாடை மட்டும் அணிந்த ஆண் சிலைகள் சிறியதாக செதுக்கப்பட்டிருந்தது

வடக்குநாதர் சன்னதியில் சபரிமலைக்கு மாலையிட்டிருந்த ஒரு அம்மை ’’சுவாமியே சரணம் அய்யப்பா’’ என்று பக்திமேலிட கூவினார், சரிதானே சபரிமலைக்கு மாலையிட்டால் மாலையிட்டவரும் பிறரும் அய்யப்பன் தானென்றால் வடக்குநாதனும் ஐயப்பன்தானே அவருக்கு?

எங்கும் தீபாராதனைதட்டு நீட்டப்படவில்லை. விருப்பப்பட்டவர்கள் சன்னிதியின் படிக்கட்டில் ரூபாய்களை வைத்துச்செல்கிறர்கள்.  பிரகாரத்தின் விருஷபன் என்னும் கடவுள். அப்பெயரை முதன்முதலில் பார்க்கிறேன் அங்கு மூன்று முறை கைதட்டி வணங்குகிறார்கள்

ஆங்காங்கே நெற்றுத்தேங்காய்கள் குவித்துவைக்கப்பட்டிருந்தன.

ஏராளமான செம்மந்தாரை மரங்கள் மலர்கொண்டிருந்தன. கல்தரையெங்கும் அதன் தாமரையிதழ்களை ஒத்த இளஞ்சிவப்பிதழ்கள் சிதறிக்கிடந்தன. பெருமரங்களின் பாசம்பிடித்த கிளைகளில் ஆர்கிடுகள் மண்டிக்கிடந்தன.

ஸ்ரீ மூலஸ்தானம் என்று பெயர் பலகை வைக்கப்பட்டிருந்த மகிழமரம் முகப்பிலேயே இருந்தது.அதை சுற்றிவிட்டே பிரகாரத்தை சுற்றத் துவங்குகிறார்கள். அதுதான் தலமரமாயிருக்கும் என நினைத்தேன்.

 தாழ்ந்த கூரைகொண்ட மண்டபத்தின் கல்பாவியதிண்ணையின் தரையில் சற்று அமர்ந்துவிட்டு கோவிலைவிட்டுப் பிரிய மனமில்லாமல் புறப்பட்டோம்

கோவிலின் வெளிவாசலிலும் பெரும் வெண்கலவிளக்கு கம்பமிருந்தது, பலசுற்றுத்தட்டுக்களை கொண்டிருந்த அவ்விளக்கின் அடியில் ஒரு ஆமை வடிவம் தாங்கிக்கொண்டிருப்பது போல அமைந்திருந்தது.

கோவிலுக்கு வெளியே புதுமணத்தம்பதிகளின் போட்டோஷூட் நடந்துகொண்டிருந்தது  கிளிப்பச்சை பட்டுடுத்தி கைகளில் விரிந்த தென்னம்பாளையை  பிடித்துக்கொண்டிருந்த மணப்பெண் கொள்ளையழகு. 

 ’’தருண் ஒரு கேரளா பெண்ணை பாரேன்’’ என்றேன் ’’பார்க்கலாம் பார்க்கலாம்’’ என்றான் அமர்த்தலாக

 இந்த வீட்டில் மாலை வேளையில் செட்டு முண்டுடுத்தி அகலக்கண்னில் பட்டையாய் மையெழுதிக்கொண்டு  அலையலையான கூந்தலில் மலர்சூடிக்கொண்டு வெண்கல விளக்கேற்றும் மருமகளை மணக்கண்ணில் ஆசையாக பார்த்துக்கொண்டேன.

உணவகங்களில் பதிமுகப்பட்டையிட்டு இளஞ்சிவப்பிலும் சீரகமிட்ட பழுப்பிலும் வெதுவெதுப்பான நீரருந்த தந்தார்கள். இப்படி தமிழகத்துக்கென்று பிரத்யேக அடையாளங்கள் ஏதாவது இருக்கிறதா என்று யோசித்தேன்.யானை, தென்னை, தென்னம்பாளை,  பதிமுக தண்ணீர், சீரகவெள்ளம் தேங்காயெண்ணய் தேய்த்து குளித்த கூந்தல், செட்டுப் புடவை பனையோலைக்குடை, மட்டைஅரிசி, லாட்டரி, பழம்பறி  நேந்திரம்பழம் என்று இங்கு ஏராளம் இருக்கிறதே. 

கோவிலுக்கு எதிரே சிவா பரிந்துரைத்திருந்த உணவகமான ’பாரத்’தில் காலையுணவு, புட்டும் கடலைக்கறியும்  நல்ல சுவையிலும் தரத்திலும் இருந்தது.

வழியில் ஒரு மாபெரும் பதாகையில் குருதிச்சிவப்பில் உடைகளும் ஆபரணங்களுமாக பகத் ஃபாஸிலும் நஸ்ரியாவும் ஐஸ்கிரீம் விளம்பரமொன்றில் காட்சியளித்தார்கள்  

அங்கிருந்து கல்யாண் சில்க்ஸ் சென்று  கருப்பில் மலர்கள் வரையப்பட்ட வெள்ளை செட் புடவை எடுத்தேன்.விலை தமிழ்நாட்டை விட பல மடங்கு குறைவு. இந்த கல்யாண் சில்க்ஸ் காரர்கள் ஏன் கோவையில் மட்டும் கொள்ளைவிலை வைத்து விற்பனை செய்கிறார்கள் என்று ஆதங்கமாக இருந்தது. செட் புடவைக்கு துணையாக நாவல் பழநிறப்புடவையொன்றையும் எடுத்தேன்.

கேரளா ஆண்கள் அணியும் தொள தொள ஜீன்ஸ் ஒன்று தருணும் எடுத்துக்கொண்டான்

. பின்னர் கேரளா  பயணத்தை முழுமையாக்க லாட்டரி சீட்டும் . லாட்டரியில் கோடிகள் பரிசு விழுந்தால் வேலையை ராஜி வைத்துவிட்டு மீதமிருக்கும் நாளெல்லாம் வாசித்துக்கொண்டு எழுதிக்கொண்டு தாவரங்களை தேடிபயணித்து கொண்டிருமிருக்கும் பகல் கனவிற்குபின்னர் சரணை அழைத்து பரிசு கிடைத்தபின்னர் முதல்வர் அறைக்குச்சென்று ராஜி வைப்பதை பற்றி எப்படி பேசப்போகிறேன் என்று சொல்லிக்காட்டினேன். அவன் சிரிக்காமல் இப்படியேதான் நாவிதராக  நடித்த கவுண்டமணி நம்பியார் வீட்டில் லாட்டரி பரிசு விழுந்ததும் பேசுவார் என்றான்.

கசைத்தெருவை கொஞ்சம் சுற்றினோம்.பலகாலத்துக்கு பிறகு அடர்மஞ்சள் சாமந்தி மாலையிடப்பட்டிருந்த புட்டபர்த்தி பாபாவின் கட் அவுட் ஒன்றை வழியில் பார்த்தேன்

தமிழகத்தை விட இங்கு அழகிய டிசைன்களில் நைட்டிகள்விற்பனையிலிருந்தன.  ரத்தச்சிவப்பில் அதிகம் இருந்தன. கேரளத்தின் சீஸ் நிறப்பெண்களுக்கு அந்த சிவப்பு  எடுப்பாக இருக்கும்.

பிறகு சுத்தமாக்கப்பட்டிருந்த லென்ஸ் வாங்கினோம். 16 ஆயிரங்கள் ஆகுமென்று சென்னையில் சொல்லப்பட்ட அது வெறும் 800 ரூபாய்களில் சரிசெய்யப்பட்டு கிடைத்தது. (கேமரா லென்ஸ் பிரச்சனைகளுக்கு அணுகவும் கேமரா சிட்டி திருச்சூர்).

அங்கிருந்து தோட்டதுக்கு வைக்க  கூரையிட்ட இரும்பு ஊஞ்சல் வாங்கலாமென்று திருச்சூரின் பிரபல புள்ளோக்காரன் பர்னிச்சர்ஸ் போனோம்

 வரவேற்ற பெண்ணிடம் கார்டன் ஸ்விங் வேண்டுமென்றேன் அவளுக்கு மனசிலாகவில்லை, ஊஞ்சல் வேணும் என்றேன். ஓ ஊஞ்சாலா வரு’’ என்று மாடிக்கு அழைத்து சென்றாள். எனக்கு தேவையான மூவர் அமரும் ஊஞ்சல் அங்கு இல்லாததால் திரும்பினோம்.  பிரமாண்டமான கடை மரச்சாமன்கள் உன்னதமாக இருந்தன. கோவையைக்காட்டிலும் இங்கு நன்றாக இருக்கின்றது விலையும் பரவாயில்லை

அருகிலேயே மற்றொரு புள்ளோக்காரன் கடை, மற்றொரு பிரம்மாண்டம் சகோதரர்களாம் ஒருவருக்கொருவர் போட்டிபோலிருக்கிறது.ஒரு கடையில் 24 ஆயிரம் சொல்லப்பட்ட ஒரு ஊஞ்சல் மற்றொரு கடையில் 19 ஆயிரம். 

மீண்டும் பாலக்காடு . வழியில் தருணின் பிரேக் அப் கலெக்‌ஷன் பாடல்கள் கேட்டோம்.அவனது பிரியத்துகுகந்த ’’எங்கிருந்தாலும் வாழ்க’’ வை பலமுறை,

 ’இங்கே ஒருவன் காத்திருந்தாலும் 

இளமை அழகை பார்த்திருந்தாலும் 

சென்ற நாளை நினைத்திருந்தாலும் 

திருமகளே நீ வாழ்க!’

காட்டில் ஒரு நீண்ட நடைசென்றேன். முந்தின நாள் இரவு மானை துரத்தி வந்தபோது பதிந்திருந்த சிறுத்தையின் கால்தடங்கள் மழைச்சேற்றில் கூடவே வந்தன. வட்டகண்ணிகளின் இலைகளில்  எறும்புகள் துளையிட்டிருந்தன,  கம்யூனிஸ்ட் பச்சையுடன் மிக்கானியா ஆக்ரமிப்பும் அங்கு அதிகமிருந்தது

 மிக்கானியா

கம்யூனிஸ்ட் கட்சி கேரளமெங்கும் பரவியதுபோல் அச்செடியும் பரவியதால் கம்யூனிஸ்ட் பச்சை என்று பெயர் வந்தது என்று நானும் சிவாவும் பேசிக்கொண்டோம்

ஒரு சிற்றாறு காட்டின் குறுக்கே ஆழமற்று ஓடியது. ஆற்றில் இறங்கி குளிர்ந்த நீரில் ஆற்றின் போக்கிலெயே கொஞ்சம் நடந்தேன். சீறுமீன்கள் காலடியில் மொய்த்தன, ஆற்றின் நடுவிலிருந்த பாறையொன்றின் மீதமர்ந்து காத்திருந்த கருந்தலை மீன்கொத்தியொன்று  சரேலென்று பாய்ந்து லாவகமாக  தன் சிற்றலகால் ஒரு மீனை கொத்தி விழுங்கிச் சென்றது அத்தனை மீன்களிலொன்றைக்கூட தன் இருகைகளால் பலமுறை முயன்றும் தருணால் பிடிக்கவே முடியவில்லை. இயற்கையின் கணக்குகள் அத்தனை சீக்கிரம் பிடிபடுவதில்லை,

வேங்கைமரத்தின் இறகுக்கனிகள், காட்டுகுருமிளகின் வால்போன்ற மஞ்சரிகள், காட்டுத்திப்பிலிச்செடியின் இதயவடிவஇலைகள், பெயர் தெரியாத பல செடிகளை பார்த்தவாறே நடந்தேன்,நீரில் மிதந்துவந்த தான்றிக்காய்களை  சேகரித்தேன். எங்கெங்கிருந்தோ யானைகளின் பிளிறலும் மயிலகவலும் கேட்டுக்கொண்டே இருந்தது. ஒரு கிலுகிலுப்பை செடியின் மலர்களில் நூற்றுக்கணக்கான பட்டாம்பூச்சிகள் மொய்த்துக்கொண்டிருந்தன

காட்டின் நடுவில் மீண்டும் அசோக மரமொன்றை கண்டேன் அருகிலிருந்த பெருமரமொன்று முறிந்து வீழ்ந்ததில் கிளைகள் ஒடிந்து சேதமுற்றிருந்தது எனினும் அழகாக இருந்தது.ஒரே நாளில் இரண்டு மரங்கள்

அத்தனையடர்ந்த காட்டில் அப்படி நெருக்கமாக இருந்துவிட்டு அங்கிருந்து புறப்படவே எனக்கு மனமில்லை. வனக்காவலர்களில் பல பெண்கள் இருந்தனர் பின்ஸி, அஸ்வதி, சந்தியா, நித்யா என அவர்களின் பெயர்களை கேட்டுக்கொண்டேன்

பெண்கள் வேலையில் இருப்பது எனக்கு பிடிக்கும் அதுவும் இப்படி வன காவலர்களாக சீருடையில் இருந்தவர்களை பார்க்க அத்தனை பிடித்திருந்தது. காட்டிலிருந்த பழங்குயின பெண்ணொருருவர் அவருக்கென்று சேகரித்திருந்த சுருளிக்கீரையை எனக்களித்தார். அரிய உணவு. எங்கும் கிடைக்கவே கிடைக்காதது. அதைக்குறித்து தனியே ஒரு பதிவு எழுத வேண்டும்

ஆற்றிலிருந்துஒரு சிறுகல்லை நினைவுக்காக எடுத்துக்கொண்டு அதே பகிர்ந்துகொள்ள முடியாத அன்பில் மீண்டும் திளைத்து மனமின்றி புறப்பட்டேன்

பாலக்காடு பொள்ளாச்சி நெடுஞ்சாலையில்  ஒரு விளம்பர பலகையில் நெற்றி அகன்ற, கேசமிழந்த உடல்பருத்த சுரேஷ் கோபி இருந்தார். அயினிப் புளிக்கறியில் செம்பமூட்டு ஆச்சியிடம் ஆசான் கேட்டதுபோல ’இப்படி கோலங்கெட்டு போனிங்களே’ என்றதற்கு ’வயசாச்சுசில்ல’ என்றார்.காலம்தான் எத்தனை இரக்கமற்றது?

வழியெங்கும்  அழகிய சிவப்பு ஓட்டுக்கூரைகளுடன் அழகிய மரங்களடர்ந்த வீடுகள்.மா பலா வாழை நெல்லி இல்லாத வீடுகளே இல்லை கேரளத்தில். மாமரங்கள் அனைத்துமே மலர்ந்திருந்தன

நாட்டு மரங்களில் செந்துருவின் நிறத்தில் கிளைத்த மஞ்சரிகளும். கலப்பின மரங்களில் பசுமஞ்சள் மலர்களுடன் கூம்பு மஞ்சரிகளும் இருந்தன. எல்லா மலர்களும் சிறுபூச்சிகளும் ஈக்களும் எறும்புகளும் மொய்த்தன. இப்போது மகரந்தச்சேர்க்கை   நடந்துதான் கோடையில் கனிகளை உருவாகும்

மதிய உணவு  நெடுஞ்சாலையில் ஒரு சைவ உணவகத்தில். வல்லரிச்சோறும் ஊதா தட்டைக்காய் துவரனும் பிரமாதமாக இருந்தது 

சாலையின் ஒரு திருப்பத்தில் ஒரு அழகிய பெண் ஸ்கூட்டியில் எங்களை கடந்துசென்றாள், தருண் ’’எண்ட ஸ்டேட்டு கேரளமானு எண்ட சி எம் விஜயனானு’’ பாடலை ஒலிக்கச்செய்தான்.

மழை ஓய்ந்திருந்த பின்னிரவில் வீடு திரும்புகையில் புன்னை மரக்கிளைகளுக்கிடையில் நிலவு காத்திருந்தது. நீண்ட நிறைவான நாள்.