சமீப காலங்களில் கொரியர் அனுப்புவது, வாங்குவது என்பதெல்லாம் பெரும் தொல்லை தரும் விஷயமாகிவிட்டிருக்கிறது. கோவிட் தொற்றுக்கு பிறகுதான் இப்படி . அதற்கு முன்பு சரியாகத்தான் இருந்தது. சரணும் தருணும் நானுமாக நிறைய பொருட்களை வாங்குவதும் அனுப்புவதுமாக இருப்போம். வீட்டில் யாரும் இல்லாதபோது பேக்கரி செல்வம் வாங்கி வைத்து பின்னர் கொடுப்பதுண்டு ஆனால் இப்போது அப்படி இல்லை, எப்படியோ யாரோ வேடசெந்தூர் என்னும் இக்கிராமம் இனிமேல் non service area என்று முடிவு செய்துவிட்டார்கள்.
உலகம் சுருங்கிக் கொண்டிருக்கிறது, சிறிய உலகம், உலகம் உள்ளங்கைகளில் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம் அதுவும் இந்த வேடசந்தூர் கிராமம் தூங்கா நகரமாகி அதிகாலை வரையிலும் பேக்கரிகள் லாரிடிரைவர்களுக்காக நடை திறந்து உயிர்ப்புடன் இருக்கிறது. மருத்துவமனை ஒன்றை தவிர மற்ற எல்லா வசதிகளுமே இருக்கிறது கடந்த பத்து வருடங்களில் மிக வேகமாக வளர்ந்திருக்கும் இந்தப் பகுதி எப்படி திடீரென்று ’’நான் சர்வீஸ் பகுதி’’யானது என்பதும் தெரியவைல்லை.
சரி வீட்டுக்கு வருவதுதான் கஷ்டம் கல்லூரி முகவரிக்கு அனுப்ப சொல்லலாம் என்றால் அங்கும் சிக்கல். கல்லூரியின் வாசலில் நின்று கொண்டு என்னை அழைப்பார்கள் நான் அப்போது வகுப்பிலோ அல்லது மீட்டிங்கிலோ இருந்தால் டெலிவரி செய்யாமல் திரும்பி போவதும், விடுமுறை நாட்களில் வீட்டிலிருக்கும் என்ன அழைத்து கல்லூரிக்கு பார்சல் வந்திருக்கிறது என்ன செய்வது என கேட்பதுமாக ரகளையாக இருக்கிறது
பார்சல்களை, தபால்களை அனுப்புவதும் முன்பு கல்லூரிக்கு அருகிலேயே ப்ரொபெஷனல் கொரியரின் கிளை இருந்ததால் வீட்டுக்கு திரும்பும் வழியில் அனுப்பிவிட்டு வர வசதியாக இருந்தது. சில மாதங்களுக்கு முன்னர் அங்கு சென்றிருக்கையில் அந்த கடையின் உரிமையாளர் அடையாளம் தெரியாமல் உருக்குலைந்து உடல்நலமின்றி இருந்தது அதிர்ச்சியளித்தது எதிர்பார்த்ததுபோல் கடை இப்போது இல்லை.
பொள்ளாச்சியின் ப்ரொபெஷனல் கொரியரின் தலைமை அலுவலகம் விசித்திரமாக ஒரு மிகக் குறுகிய சாலையின் இறந்த முனையில் அமைந்திருக்கும். அந்தச் சாலை அந்த தலைமை அலுவலக கட்டிடத்துடன் முடிவடைவதால் அங்கு காரில் சென்றால் காரை திருப்பி எடுக்க முடியாது எனவே நெடுந்தூரம் நடந்து செல்லவேண்டும் அல்லது காரை திருப்ப படாத பாடு படவேண்டும்.
சமீபத்தில் சென்னை நண்பரொருவருக்கு ஒரு சிறிய பொதியை வேறொரு கொரியர் சேவை மூலம் அனுப்பி அது அவருக்கு 10நாட்களுக்கும் மேலாக போய்ச்சேராமல் இழுத்தடித்து அவருக்கும் செலவும் சிரமமும் உண்டாகியது. எனக்கும் கொரியருக்கும் நேரம் சரியில்லை போலிருக்கிறது.
சமீபத்தில் வெண்ணிலாவின் சென்னை வீட்டிலிருந்து எனக்கொரு பார்சல் வந்திருந்தது. திங்கட்கிழமையன்று ’’வீட்டுக்கு அனுப்ப முடியாது தலைமை அலுவலகம் வந்து வாங்கிக்கொள்ளவேண்டும் காலை 9- இரவு 8 மணிக்குள்’’ என்று குறுஞ்செய்தி வந்திருந்தது.
கல்லூரி விடுமுறையில் ஃப்ளூ விலிருந்து மீண்டு ஓய்வில் இருந்தேன். தருணை அழைத்துக்கொண்டு செவ்வாய்க்கிழமை பொள்ளாச்சிக்கு இதற்கென்று சென்றபோது அன்றைய பகல் வேலை நேரம் முடிந்து இரவு வேலைக்கான ஒரு நபர் மட்டும் இருந்தார். அவர் நான் போனபோது சாவகாசமாக வீட்டில் யாருடனோ அலைபேசிக்கொண்டிருந்தார் என்னை அசிரத்தையாக கவனித்து என்னவென்று கேட்டார் நான் தகவல்சொல்லி குறுஞ்செய்தியை காட்டிய போது அதை சரியாக கூட பார்க்காமல் ’’சென்னையா இன்னும் வந்திருக்காது நாளைக்கு வாங்க’’ என்றார்
நான் பொறுமையை இழக்காமல் எனக்கு தகவல் வந்தபின்னர் தான் வந்திருக்கிறேன் என்றதும் கிளிப்பிள்ளை போல சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார். அவர் போனை அணைத்திருக்கவில்லை எதிர்முனை உயிருடனேயே இருந்தது. ’’போன் மெசேஜ் எல்லாம் பார்த்துட்டு வராதீங்க நாங்க போன் பண்ணி கூப்பிட்டு சொன்னாதான் வரணும்’’ என்று உபரிதகவல் வேறு கொடுத்தார் . என்ன ஒரு பொறுப்பில்லாத்தனம்?
அவர் நெடுநாட்களாக இரவுப்பணியில் வேலைஏதுமில்லமால் சுகமாக இருந்திருக்கிறார் இப்படி என்னைப்போல துரதிர்ஷ்டசாலிகள் வந்தால் விரட்டிவிடுவதும் வழக்கமாயிருக்கிறது.
இப்படி பொறுப்பற்றவர்கள் எந்த நிலையில் எந்தப்பணியிலிருந்தாலும் பலருக்கு பெரும் சிக்கல்கள் ஆபத்துக்கள் உண்டாகும்
அந்த அசிரத்தை திலகத்திடம் பேசிக்கொண்டிருக்க முடியாமல் கசந்துபோய் வீடு திரும்பினேன்
மீண்டும் எனக்கு அதே குறுஞ்செய்தி 2 நாட்களாக வந்துகொண்டிருந்தது கூடுதலாக 3 நாட்களில் வாங்காவிட்டால் அனுப்பியவருக்கே திரும்ப அனுப்பிவிடுவோம் என்று அச்சுறுத்தல் வேறு.
எனவே இன்று காலையே புறப்பட்டு போனோம் இரவு அதே அசிரத்தை ஆசாமி இருந்தால் என் பொறுமை எல்லைதாண்டும் சாத்தியமிருந்ததால் காலையில் போவதே உசிதம் என்று பட்டது.
மிகச்சரியாக காலை 9 மணிக்கு போனபோது அங்கு கதவு திறந்திருக்கவில்லை வாசலில் ஸ்டூலில் ஒரு பெரியவர் கொரியர்கள் அனுப்ப வந்தவர்களுக்கென பணியிலிருந்தார்
நான் விவரம் சொன்னதும் ’’10 மணிக்குத்தான் வருவாங்க காத்திருங்க’’ என்றார்
தெள்ளத் தெளிவாக காலை 9 மணியிலிருந்து இரவு 8 மணி வரை என்று செய்தி வந்திருந்தது.
பொறுமையாக காத்திருந்தேன். உடன் மேலும் சிலர் வந்து காத்திருந்தார்கள். மருந்துபார்சலுக்காக இரண்டாவது நாளாக காத்திருந்த ஒரு பெரியவர் முன்பு இதே ப்ரொபெஷனல் கொரியர் அதன் சேவைக்கு புகழ்பெற்றிருந்ததை வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார்.
9.30க்கு ஒரு பெண்மணி தோளில் ஹேண்ட்பேக்கும் கையில் மதிய உணவுப்பையும் காதில் செல்போனுமாக மெல்ல நடந்து வந்தார் அவரது சாவகாசமான உடல்மொழியிலேயே அவர் அங்குதான் பணிபுரிகிறார் என்பது தெரிந்தது. வந்தவர் கதவை திறக்காமல் கட்டிடத்தின் பின்புறம் சென்று மறைந்தார். பின்னர் 10 மணிக்கு மீண்டும் காட்சியளித்து கதவை திறக்க முற்பட்ட போது அவருக்கு மீண்டும் போன் வந்தது. போனில் பேசிக்கொண்டே (சாப்பிட்டீங்களா? பாப்பா போயிட்டாளா? ம் ம் ம் அதான் சொன்னேனில்ல ம் சரி அதுக்கென்ன ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்)
தருண் பொறுமையிழந்து உள்ளே சென்றதும் போனை அணைக்காமலேயே கண்களால் என்ன காரியம் என்று வினவினார் நான் அலைபேசி குறுந்தகவலை காட்டியதும் கம்ப்யூட்டரை உயிர்ப்பித்து போனில் பேசிக்கொண்டும் கேட்டுக்கொண்டும் என் எண்ணை தட்டச்சிப் பார்த்தார். பார்சல் அங்குதான் திங்கட்கிழமையிலிருந்து காத்திருக்கிறது என்றது கணினி
போனில் பேசுவதை நிறுத்தாமலேயே. அங்கும் இங்கும் தேடிக்கொண்டிருந்தவரிடம் சென்னையிலிருந்து வாட்ஸ் ஆப்பில் அனுப்பட்டிருந்த பார்சல் புகைப்படத்தை காட்டியதும் ’’பேரு என்ன லோகமாதேவியா?’’ என்று 8 வது முறையாக கேட்டுவிட்டு உள்ளே சென்று 10 நிமிடங்களில் பார்சலை கொண்டு வந்தார். அப்போதும் போனில் பேசிக்கொண்டேதான் இருந்தார் எதிர்முனைக்கு உம் கொட்டியவாறே என்னிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டார்.
பெருமூச்சுடன் வாங்கிகொண்டு காருக்கு வந்தேன்
இப்படி அசட்டையாக சோம்பேறிகளாக எப்படி இவர்களால் இருக்க முடிகிறது?
முன்பு ஸ்டேட்பேங்கில் எங்கள் சம்பளம் போடப்படும் அப்போதும் இப்படித்தான் சம்பந்தப்பட்டவர் இருக்கைக்கு வரவே 11மணியாகும் பின்னர் கம்பிக்கு வெளியே காத்திருப்பவரை அவர் நிமிர்ந்துபார்க்க 12 மணி ஆகும் நிமிர்ந்துபார்த்துவிட்டு அவர் காபி குடிக்க போய்விட்டு திரும்பி வருவதற்குள் 10 20 வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்று கொண்டிருப்பார்கள் மெத்தனமென்றால் அப்படி ஒரு மெத்தனமாக பணி செய்வார்கள் இதை திண்ணக்கம் அல்லது தடித்தனம் என்பார்கள் இங்கெல்லாம். அதன்பிறகு கல்லூரி வளாகத்திலேயே இப்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை செயல்படுவதால் பிரச்சனை இல்லாமல் இருக்கிறது.
ப்ரொபெஷனல் கொரியர் தொலைபேசி எண் மற்றும் வாடிக்கையாளர் சேவை என் இரண்டையும் குறித்துக்கொண்டு வந்து இப்போது வரை அழைக்கிறேன் யாரும் எடுக்கவில்லை
இப்படியான பணியாளர்களை மாற்ற வேண்டும் அல்லது கண்டிக்கவாவது வேண்டும். இல்லாவிட்டால் ப்ரொபெஷனல் என்னும் பெயரையாவது அசிரத்தை, அசட்டை, அல்லது மெத்தன கொரியர் சேவை என்று மாற்றி வைக்க வேண்டும்