மத்திய ஆப்பிரிக்காவின் கேமரூன் நாட்டின் ‘எபோ’ காடுகள் இயற்கை வளம் மிகுந்தவை. மலை யானை, உலகின் மிகப்பெரிய கோலியாத் தவளை மிக அரிய உலகின் ஒரு சில இடங்களில் மட்டுமே காணப்படும் Red colobuses குரங்குகள் பல அரிய தாவர வகைகள் என பலவற்றின் வாழிடம் இதுதான். உலகின் மழைப்பொழிவில் எபோ காடுகளின் பங்கு குறிப்பிடத்தக்கது .
இந்த எபோ காடுகளில் 1500 சதுர கிமீ அளவுக்கு மழைக்காடுகள் எபோ ஆற்றின் அருகில் இருக்கிறது.இங்கு 65 மிக முக்கிய உயிரினங்கள் அழியும் ஆபத்தில் இருக்கின்றன
உலகின் பிற இயற்கை வளங்களைப்போலவே எபோ காடுகளும் கனிம சுரங்கங்களுக்ககவும், சட்ட விரோத விலங்கு வேட்டை மற்றும் மரம் வெட்டுதல் ஆகியவற்றால் அழியும் அபாயத்தில் இருந்தது. பல சூழலியல் ஆர்வலர்கள் இந்த பிரச்சனையை சர்வதேச அளவில் முன்வைத்தபோது எபோ காடுகள் பாதுகாக்கப்பட்ட பூங்காவாக அறிவிக்கப்படும் என்று அரசுத்தரப்பில் 2010ல் சொல்லப்பட்டும் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதன் பின்னரும் எபொ காடுகளின் 1,300 சதுர கிமீ அளவுள்ள பரப்பின் மரங்கள் வெட்டப்படுவதற்கான உரிமம் அரசால் வழங்கப்பட்டது. எபோ காடுகளின் உயிரினங்களும் அங்கிருக்கும் தொல்குடிகளுக்குமான மாபெரும் அச்சுறுத்தலாக அது இருந்ததால் எதிர்ப்புகள் வலுத்தன.
எனவே அழிவின் விளிம்பில் இருந்த எபொ காடுகளை பாதுகாக்க கேமரூனின் ஆரய்ச்சியாளர்கள் சூழியலாளர்கள் ஆகியோர் இணைந்து சர்வதேச கவனத்தை ஈர்க்கும் பொருட்டு டிகாப்ரியோ உள்ளிட்ட பல பிரபலங்களின் கையெழுத்தை சேகரித்து அரசுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் அனுப்பினார்கள் கூடவே எபோ காடுகளின் இயற்கை வளத்தை பட்டியலிட்டு உலகிற்கு அதன் முக்கியத்துவத்தை காட்ட நினைத்தார்கள் அப்படி பட்டியலிடுகையில்தான் அதுவரை அறியப்பட்டிருக்காத ஒரு மரம் கண்டுபிடிக்கப்பட்டது
சீதாப்பழத்தின் தாவரக்குடும்பமான அனோனேசியை சேர்ந்த, 2022ல் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இம்மரத்திற்கு புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகரும் இயற்கை ஆர்வலரும், சூழியல் செயற்பாட்டாளருமான லியோனார்டோ டிகாப்ரியோ வின் பெயரிடப்பட்டிருக்கிறது.
கேமரூன் நாட்டின் எபோ காடுகளின் பாதுகாப்பில் டிகாப்ரியோ காட்டிவரும் அக்கறையையும் அதை பாதுகாக்கும் அவரது முன்னெடுப்புக்களையும் சிறப்பிக்கும் பொருட்டு அக்காடுகளில் மட்டும் காணப்படும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த மரத்திற்கு Uvariopsis dicaprio என்று அவரது பெயர் இடப்பட்டிருக்கிறது,
குறிப்பாக அக்காடுகளில் மரம் வெட்டப்படுவதற்கான எதிரான அவரது செயல்பாட்டின் முக்கியத்துவத்தின் பொருட்டே இந்த கெளரவம் அளிக்கப்பட்டிருக்கிறது.
எபோ காடுகளில் 50க்கும் குறைவான டிகப்ரியோ மரங்கள் மட்டுமே இருக்கின்றன அதுவும் வெறும் 4 சதுர கி மீ பரப்பளவில் மட்டும் இருக்கிறது. பலமுறை எபோ காடுகளில் தேடியும் இவை வேறெங்கும் காணப்படவில்லை.
கடல் மட்டத்திற்கு 850 மீ உயரத்தில்,4 அடி உயரமும் கவிழ்ந்து தொங்கும் மஞ்சள் இதழ்களை கொண்ட ஆண்மலர்களையும் கொண்டிருக்கும் இம்மரம் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால் அவசியம் பாதுகாக்கப்படவேண்டிய தாவரங்களில் ஒன்றாகி விட்டிருக்கிறது. இக்காடுகளின் மரம் வெட்டும் உரிமம் ரத்தானதில் டிகாப்ரியோவின் பங்கு மிக முக்கிய மானதென்பதால் இம்மரம் அவர் பெயரில் அழைக்கப்படுவது அவருக்கான பொருத்தமான அங்கீகாரம்.
இந்தப் பெயரிடல் கியூ தாவரவியல் பூங்காவின் தாவரவியலாளர் களான Martin Cheek மற்றும் George Gosline, ஆகிய இருவரின் பரிந்துரையின் பேரில் நடந்திருக்கிறது.
உலகின் மிக அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் எட்டு முறை இடம்பெற்ற செல்வந்தர் எனினும் மிகுந்த அர்ப்பணிப்புடன் இயற்கை பாதுகாப்பில் அக்கறை கொண்டவராகவே இவர் பொதுவெளியில் அறியப்படுகிறார்
திரைப்பட தயாரிப்பாளராகவும் இருக்கும் இவர் 2014ல் தயாரித்த மலை கொரில்லாகளைக் காப்பாற்ற போராடும் நான்கு நபர்கள் குறித்த பிரிட்டிஷ் ஆவணப்படம் ’விருங்கா’ மிக குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து விவசாயம், விலங்குகள் பாதுகாப்பு போன்ற பேசு பொருட்களை கொண்ட படங்கள் தயாரிப்பதில் டிகாப்ரியோ ஆர்வம் கொண்டிருந்தார்.
2019ல் புவி வெப்பமாதல் குறித்த ஆவணப்படமாகிய Ice on Fire, அவரால் தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து டிகாப்ரியோ சூழலியம் (Environmentalism) தொடர்பான பல முன்னெடுப்புக்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
புவிவெப்பமாதல் உலகின் மிகப்பெரிய சவால் என்று சொல்லும் இவர் மழைக்காடுகள் அழிந்து வருவதையும் வாழிடங்ளை இழந்து பல உயிரினங்களின் இருப்பு கேள்விக்குறியாகவும் கவலைக்குரியதாகவும் ஆகிவிட்டிருப்பது குறித்தும் தொடர்ந்து ஆவணப்படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார்
இயற்கை சார்ந்த விழிப்புணர்வு மற்றும் செயல்பாட்டின் பொருட்டு லியோனார்டோ டிகாப்ரியோ அறக்கட்டளை ஒன்றையும் (Leonardo DiCaprio Foundation,) 1998ல் நிறுவினார். இந்த அறக்கட்டளை மூலம் வளரும் நாடுகளின் இயற்கை பேணுதலுக்காக நிதியுதவிகள் அளிக்கப்படுகின்றது.
இத்துடன் சூழலுக்கு இணக்கமான மின் வாகனங்களைத்தான் அவர் பயன்படுத்துகிறார்.
2000த்தில் சூழல் பாதுகாப்பு குறித்த பில் கிளிண்டனுடனான டிகாப்ரியோவின் நேர்காணல் க முக்கியமானது
2007ல் Live earth எனப்படும் மாபெரும் சூழல் விழிப்புணர்வு நிகழ்வையும் நடத்தினார் அதே ஆண்டில் ரஷ்யாவின் வன உயிர் பாதுகாப்பு அமைப்பு நடத்திய புலிகளுக்கான் உச்சிமாநாட்டுக்கு 1மில்லியன் டாலர் நன்கொடை வழங்கினார். அந்த மாநாட்டிற்கு பல தடங்கல்களுக்கு இடையில், இரண்டு முறை அவர் செல்லவேண்டிய விமானம் ரத்தாகியும் அவர் முயற்சி எடுத்து கலந்துகொண்ட போது புதின் டிகாப்ரியோவை ’’இவரே உண்மையான் ஆண்’’ என்று புகழ்ந்தார்.
இந்தோனேசியாவின் எண்ணெய்ப்பனை வளர்ப்பினால் காடழிதல் குறித்து கண்டனம் தெரிவித்தது, 2016ல்; அமெரிக்க தொல்குடிகள், அவர்களின் வாழ்விடங்களின், வன உயிர்களின் பாதுகாப்புக்கென 15.6 மில்லியன் டாலர் நன்கொடை அளித்தது, 2017ல் காலநிலை மாற்றம் குறித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் பாராமுகக்தை கண்டித்து ஊர்வலம் சென்றது என டிகாப்ரியோவின் சூழல் செயல்பாடுகளை வரிசையாக சொல்லிக்கொண்டெ போகலாம்
சமீபத்தில் கிழக்கு பசிபிக் தீவுக் கூட்டங்களின் பாதுகாப்பிற்கென டிகாப்ரியோ 43 மில்லியன் டாலர்களை அளிப்பதாக அறிவித்திருக்கிறார். அவரும் அவரது அன்னையுமாக பல நன்கொடைகளை சூழியல் சார்ந்த செயல்பாடுகளுக்கென அளிக்கிறார்கள். அவரின் விக்கி பக்கத்துக்குள் சென்றால் இவரது சூழியல் செயல்பாடுகள் குறித்து மேலும் அறியலாம்
டிகாப்ரியாவின் இத்தையக சூழல் சார்ந்த செயல்பாடுகளால் அவரை சிறப்பிக்கும் பொருட்டு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மலேசியாவில் மட்டும் காணப்படும் ஒரு வண்டினத்துக்கு Grouvellinus leonardodicaprioi, என்றும் டொமினிக் குடியரசின் சிலந்தி ஒன்றுக்கு Spintharus leonardodicaprioi என்றும் அவரது பெயர் முன்பே வைக்கப்பட்டிருக்கிறது.
டிகாப்ரியோ விற்கு வாழ்த்துக்கள்!
- எபோ வனப்பகுதியை குறித்து அறிந்துகொள்ள https://en.wikipedia.org/wiki/Ebo_Wildlife_Reserve
- டிகாப்ரியோவின் விக்கி பக்கம்: https://en.wikipedia.org/wiki/Leonardo_DiCaprio
- Uvariopsis dicaprio மரம் குறித்து மேலும் அறிந்துகொள்ள’https://www.nbcnews.com/pop-culture/pop-culture-news/new-tree-species-named-leonardo-dicaprio-rcna11337 &