விஷ்ணுபுரம்  குழும நண்பர்கள் உலகெங்கிலும் இருப்பதால் அந்தந்த நாடுகளின் சிறப்பான  மலர்கள் செடி,கொடிகளின் புகைப்படங்களை எனக்கு அனுப்புவார்கள். நானும் செர்ரி மலர் கொண்டாட்டங்களை டோக்கியோ செந்திலிடமும், மேப்பிள் இலைகளை பழனி ஜோதியிடமும் வானவில் யூகலிப்டஸ்  புகைப்படங்களை சுபாவிடமும், இலைகளே பொன்னாக பூத்து நிற்கும் ஜின்கோவை ஜெனிவா கணேஷிடமும் புகைப்படங்களாக  கேட்டு வாங்கி கொள்ளுவேன். அவர்களின் கண்களின் வழியே உலகத் தாவரங்களை வேண்டுமட்டும் இப்போது பார்க்கும், ரசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. அப்படி சமீபத்தில நண்பர் பெல்ஜியம் மாதவன்-ப்ரியா அவர்களது வீட்டில் ஆப்பிள் மலர்ந்திருக்கும், கனிகள் செறிந்திருக்கும் புகைப்படங்களை  அனுப்பியிருந்தார்கள்.

வெள்ளையும் இளஞ்சிவப்பும் கலந்த அழகிய ஐந்து இதழ் கொண்ட சிறு மலர்களும் அடர்சிவப்பு அரும்புகளும் கொத்துகொத்தாக நிறைந்து  மயங்க வைத்தன. இளம்பச்சை ஆப்பிள் கனிகள்  மரங்களில் செறிந்திருந்தன.  அந்த புகைப்படங்கள் என்னை ஆப்பிளின் தாவரவியல் உள்ளிட்ட பிற தகவல்களின் பின்னே செல்ல வைத்தது.  

சமீபத்தில்  கிறிஸ்தவ இறையியல் குறிப்பிடும் விலக்கபட்ட கனியான ஆப்பிள் மீண்டும் பேசுபொருளாயிருந்தது.

ஹார்வேர்ட் மருத்துவ பல்கலைக் கழகத்துக்கு சொந்தமான ஒரு மரபணு ஆய்வகத்தில் Joe Davis என்னும் ஒரு உயிரிக்கலைஞர் , (bio-artist) விவிலியம் சொல்லிய அதே அறிவு மரத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதன்பொருட்டு , உலகின் மிகபழைய ஆப்பிள் என கருதப்படும்  4000 வருடத்துக்கு முன்பான ஆப்பிளின் காட்டு மூதாதையான M. sieversiiயின்  மரபணுவை தேர்ந்தெடுத்திருக்கிறார்.மிகுந்த ஆர்வமூட்டும் செய்தி இது.

மத்திய ஆசியாவில் தோன்றி பின்னர் உலகெங்கும் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் உலகில் அதிகம் பயிராக்கப்படும் கனிமரங்களில் ஒன்று. பல நாடுகளில், பல நாகரீகங்களில் ஆப்பிள் மலர் நீளாயுளின், அழகு இளமை காதல் வளமை ஆகியவற்றின் குறியீடாக கருதப்படுகின்றன

 ஆப்பிள் மலரும்போது  பல ஐரோப்பிய அமெரிக்க வீடுகளில் பூச்சாடிகளில் அவற்றை அமைத்து அழகுபடுத்துவதும், திருமண அலங்காரங்களில் பயன்படுத்துவதும் உண்டு . ஆப்பிள் மரங்களில் இலையுதிர்காலம் முடியும் போது இலைகளுக்கு முன்பாக மலர்கள் உருவாகிவிடும் என்பதால் முழுமரமும் மலர் நிறைந்து கொள்ளை அழகுடன் இருக்கும்.  

இத்தனை அழகுடன் இருப்பினும் ஆப்பிள் மரத்தின் இலை தண்டு மற்றும் விதைகளில்  Amygdalin என்னும் நச்சுப்பொருள் இருக்கும். இந்த நச்சுப்பொருள் அதை உண்பவர்களின் உடலில் சயனைடு நஞ்சாக மாறிவிடும். இவை மிக குறைந்த அளவே இருக்கிறது என்றாலும் ஆப்பிள் நஞ்சு கொண்டிருக்கும் மரம் எனும் கவனம் தேவைப்படுகிறது. 

 Malus domestica என்னும் ஆப்பிள் மரம்  பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பே Malus sieversii,  என்னும் அதன் காட்டுமூதாதையிடமிருந்து கலப்பினமாக உருவாக்கப்பட்டு இன்றைய கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானில்  சாகுபடி செய்யப்பட்டது. காட்டு மூதாதையான M. sieversii மிகச்சிறிய புளிப்பான கனிகளை கொண்டிருந்தது. எனவே அவற்றின் கலப்பினங்கள் உருவாக்கப்பட்டு மெல்ல மெல்ல புதிய வகைகள் உருவாகின.அவற்றின் சுவை, அழகிய நிறம், அதிக காலம் சேமித்துவைக்காலம் என்னும் வசதி ஆகியவற்றினால் ஆப்பிள்கள் உலகின் மிக விரும்பப்பட்ட கனிகளில் ஒன்றாக  இருக்கின்றன.

ஆப்பிள்கள் ரோசேசியே குடும்பத்தை சேர்ந்தவை இதே குடும்பத்தில்தான் பேரிக்காய்களும் ரோஜாக்களும் செர்ரிகளும் ஸ்ட்ராபெர்ரிகளும், ப்ளம்களும் இருக்கின்றன. 

விதையிலிருந்து உருவாகும் ஆப்பிள் அதன் இரண்டு பெற்றோரை போலவும் இருக்காது. இதனால் ஆப்பிள்களின் பரிணாம வளர்ச்சியில் பல்லாயிரக் கணக்கான வகைகள்  உருவாகி இருக்கின்றன. உடல் இனப்பெருக்க முறையில் தண்டுகளிலிருந்தும் ஆப்பிள்கள் பயிராகின்றன.

ஆப்பிள்கள் பல பண்டைய நாகரிகங்களில் ஆதிக்கம் செலுத்தியதை வரலாற்றில் காணலாம்.பல நாகரீகங்களின் நூல்களில் தேவதைக்கதைகளில், காப்பியங்களில், நாட்டுப்புற பாடல்களில்,  தொன்மங்களில் ஆப்பிள்கள் இடம்பெற்றிருக்கின்றன.

 மேற்கத்திய இலக்கியங்களில் மிக அதிகம் குறிப்பிடப்பட்டிருக்கும் கனி ஆப்பிள்தான். பண்டைய கிரேக்க வரலாற்றின் ட்ரோஜன் போரை துவங்கி வைத்ததும் ஒரு ஆப்பிள் தான். பல வருடங்களாக வீட்டை பிரிந்திருந்த ஒடிசெஸ், ஆப்பிள் மரங்கள் சூழ்ந்த  தோட்டத்தில் கழிந்த தனது பால்யத்தை நினைத்து நினைத்து ஏங்குகிறான்.

நார்ஸ் தொன்மங்களில் கவிதையின் கடவுளான இடுனா கடவுளர்க்கு இறவாமையை  அளிக்கும் மந்திர தங்க ஆப்பிள் கனியை அவளது பொறுப்பில் வைத்திருந்தாள்.

கெல்டிக் தொன்மம் ஆப்பிளை என்றும் இளமையுடன் இறவாமல் இருக்க முடியும்  மறு உலகிற்கான கனி என்கிறது. இப்படி ஆப்பிள்களின் மந்திர பண்புகளை கொண்டு ஆண்களை இளம்பெண்கள் வசியம் செய்யும் கதைகள் பல நாட்டுப்புறக்கதைகளில்  உள்ளது.

ஐரிஷ் தொன்மங்களின் மாபெரும் நாயகனான  கோன்லா, ஒரு அழகிய பெண் இறவாமையை அளிக்கும் என சொல்லி கொடுத்த  ஒரு ஆப்பிளால் வசியம் செய்யப்படுகிறான்

ஆர்தரியன் புராணங்களில், ஆர்தர் மன்னருக்கு மிகப்பிரியமான அவலோன் என்னும் ஒரு தீவில் செறிந்து வளர்ந்திருந்த ஆப்பிள் மரங்களின் கனிகள் பல மந்திர பண்புகளை பெற்றிருந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது

 பல தொன்மங்களில் ஆப்பிள்கள் ஆசையை தூண்டுதல், இறவாமை, காதல்,  மெய்ஞானம் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தப்படும் கனியாகவே இருக்கிறது . அரேபிய இரவுக் கதைகளிலும் வருகிறது மனிதனின் அனைத்து நோய்களையும் தீர்க்கும் ஒரு மந்திர ஆப்பிள்.

 பிரபல தேவதைக் கதையான ’’Snow White and the Poisoned Apple’’லில் ஸ்னோ ஒயிட் சூனியக்காரி கொடுத்த நச்சு ஆப்பிளால் மீளா உறக்கத்துக்கு போனபின்பு ஒரு காதல் முத்தமே அவள் எழுப்பும். இந்த பிரபல தேவதை கதை உலகின் பல மொழிகளில் பல கலாச்சாரங்களில் பல வடிவங்களில் இருக்கிறது

ஸ்வீடன் நாடோடிக்கதைகளின் வில்வித்தை நாயகனான வில்லியம் டெல் தன் மகனின் தலையிலிருந்த ஆப்பிளை ஒற்றை அம்பில் வீழ்த்தும் போட்டியில் வெற்றிபெறுகிறான்.வில்லியம்டெல்லும் ஆப்பிளும் என்னும் நாடன் பாடல் வீரத்துக்கான் பாடலாக பலகாலமாக அங்கு பிரசித்தி பெற்றிருக்கிறது.

ஐரோப்பிய நாட்டுப்புற கலாச்சாரத்திலும் ஆப்பிள் காதலின் அடையாளமாக கருதப்படுகிறது அங்கு நடைபெறும் ஆப்பிள் அறுவடை கொண்டாட்டங்களின் போது இளம்பெண்கள் நீளமாக சீவப்பட்ட ஆப்பிள் தோலை, தோள்களுக்கு பின்புறம் வீசி எறிவார்கள். அது எந்த ஆங்கில எழுத்தைப்போல விழுந்து வடிவம் கொண்டிருக்கிறதோ,அந்த எழுத்தை முதலாவதாக கொண்டிருக்கும் காதலன் அல்லது கணவன் கிடைப்பான் என்று அங்கு நம்பிக்கை உண்டு.

சேக்‌ஷ்பியரின் ரோமியோ ஜுலியட்டில், ரோமியோவை தனது விலக்கப்பட்ட கனி என்கிறாள் ஜூலியட்.

 ஆங்கில பழமொழியொன்று //ஒவ்வொரு நாளும் ஒரு ஆப்பிளை உண்டால் மருத்துவரே தேவையில்லை என்கிறது. இந்தப் பழமொழி// an apple a day will keep the doctor away//  முதன் முதலாக 1866 ல் அச்சில் வெளியானது.  

பிரபல கவிஞர்களான  Robert Frost, Emily Dickinson, Christina Rossetti,  Dylan Thomas  ஆகியோரும் ஆப்பிள்கள் பற்றி கவிதைகள் எழுதியிருக்கிறார்கள். பல பிரபல ஓவியர்கள் ஆப்பிளை வரைந்திருக்கிறார்கள். இயற்பியலாளர் ஐஸக் நியூட்டனின் தலையில் விழுந்த ஆப்பிள் புவியீர்ப்பு விசை குறித்த அறிதலை உலகிற்களித்தது.

 நியூயார்க்  நகரின் இணைப்பெயராகவே  பெரிய ஆப்பிள் என்னும் பெயர் இருக்கிறது. 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் நியூயார்க்கில் பிரபலமாக இருந்த குதிரை பந்தயத்தின் மிகப்பெரிய  தொகையை குறிப்பிட பயன்படுத்தப்பட்ட “The Big Apple” என்னும் குறியீட்டுச் சொல் பின்னர் விரிவடைந்து நியூயார்க்கின் பெயராகவே நிலைத்துவிட்டது.

கிறிஸ்தவ இறையியலில், விவிலியத்தின் ஆதியாகமம், ஏதேன் தோட்டத்தின் விலக்கப்பட்ட கனியை உண்டதால் தண்டனைக்கு உள்ளான ஆதாமையும் ஏவாளையும் குறிப்பிடுகிறது.  நூற்றாண்டுகளாக  பல இறையியல் நூல்களில் விலக்கப்பட்ட கனியாக  பெயரற்ற கனியே இருந்து வந்தது

 ஆரம்பகால கிறிஸ்தவ படைப்புகள் இதை கடவுளுக்கு கீழ்படியாததால் கிடைத்த தண்டனை என்பதை  சற்று  விரிவாக சொல்லமுற்பட்டபோது கனி என்று பொதுவாக குறிப்பிடாமல் ஒரு குறிப்பிட்ட கனியின் பெயரை சேர்த்தன. அப்படி பல கனிகள் கிழங்குகள் தானியங்கள் குறிப்பிடப்பட்டு இறுதியில்  அது ஆப்பிளாகி இருக்கிறது.

விலக்கப்பட்ட கனி என்பது கனியே அல்ல அது மனம் மயக்கும் ஒரு மது, திராட்சை ரசம் போல என்னுமோர் கருத்தும் அப்போது இருந்தது, வைன் அருந்துவது பாவம் என்னும் நம்பிக்கையின் அடிப்படையில் அக்கருத்து முன்வைக்கப்பட்டிருக்கலாம்.

 யூதர்களின் விவிலியமொன்று,  கடவுளின் கட்டளையை கீழ்ப்படியாமையை விளக்கும் அந்த நிகழ்வை இப்படி விவரிக்கிறது

“When the woman saw that the tree was good for eating and a delight to the eyes, and that the tree was desirable as a source of wisdom, she took off its fruit and ate. She also gave some to her husband, and he ate” (Genesis 3:6)

ஹீப்ரூ மொழியில் எழுதப்பட்ட பழைய விவிலியத்திலும் விலக்கப்பட்ட கனி ஆப்பிள் என்று குறிப்பிட்டிருக்கவில்லை. பிற்கால ஹீப்ரூ விவிலியத்தில் கனியை குறிக்க  உபயோகப்படுத்தபட்டிருந்த சொல் பெரி “peri”.

விவிலிய ஹீப்ரு மற்றும் நவீன ஹீப்ரூ இரண்டிலுமே பெரி என்பது கனி என்னும் பொதுவான பொருளைத்தான் கொண்டிருக்கிறது குறிப்பிட்ட கனியை அது சுட்டுவதில்லை. ஆப்பிளுக்கான ஹீப்ரூ சொல்லான “tapuach,”  என்பது ஹீப்ரூ மொழியில் உருவான  முதல் ஐந்து விவிலியங்களில் எங்குமே குறிப்பிடபடவில்லை. 

 ரபிஸ்  என்றழைக்கப்படும் விவிலிய மொழியியல்  ஆய்வாளர் மற்றும் மதகுருக்களில் ஒருவர் அது அத்திக்கனியாக இருக்கலாம் என்னும் கருத்தை முன்வைக்கிறார்.ஏனெனில் ஆதாமும் ஏவாளும் கனியை புசித்ததும் தங்களின் நிர்வாணத்தை உணர்ந்து வெட்கி அத்தி இலைகளில் ஆடையணிந்து கொண்டார்கள், எனவே அது அம்மரத்தின் கனியாக இருக்கலாம் என்கிறார் 

ரபிஸ் ஒருவேளை அந்தக் கனி கோதுமை மணியாக கூட இருக்கலாம் என்னும் ஒரு கருத்தையும் சொல்கிறார். ஏனெனில் ஹீப்ரூ மொழியில் கோதுமை மணிகளுக்கான் சொல்  “chitah,”  ஹீப்ரூ மொழியில் பாவம்- sin, என்பதற்கான சொல்”cheit,”  எனவே கோதுமை மணியும் விலக்கப்பட்ட கனி என்னும் சாத்தியங்களின் பட்டியலில் இருக்கிறது என்கிறார்,

 ரபிஸ் அவரது ஆய்வுக்கட்டுரையில் கொஞ்சம் கசப்பு சுவை கொண்ட, சுருக்கங்கள் இருக்கும் மிக தடிமனான தோல் கொண்டிருக்கும் முட்டை வடிவ எலுமிச்சை கனியான  citron என்பதை குறிக்கும் ஹீப்ரூ சொல்லான “etrog” என்பதை சுட்டிக்காட்டி அக்கனி எலுமிச்சை ஆகவும் இருக்கலாம் என்கிறார். யூதர்களின் பண்டிகைகளில் பண்டைய காலத்திலிருந்தே இந்த  எலுமிச்சை கனி முக்கியமான இடம் கொண்டிருக்கிறது

அதைப்போலவே ஏதேன் தோட்டத்தின் இருப்பிடமும் விவாதப்பொருளாகவே  இருக்கிறது. அது துருக்கியிலிருந்து ஓஹியோ வரை என்றும் இல்லை அது வடதுருவம் என்றும் பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன

விலக்கப்பட்ட கனி அத்தி, ஆலிவ், திராட்சை,கோதுமை, எலுமிச்சை, ஆப்ரிகாட், வாழை மாதுளை என்றெல்லாம்  மாறி மாறி வந்து கடைசியில்தான்  ஆப்பிளில் வந்து நின்றிருக்கிறது.  விலக்கப்பட்ட கனிகளுக்கான் இத்தனை சாத்தியங்கள் பரிசீலிக்கப்பட்டிருக்கையில் எப்படி அது இறுதியாக ஆப்பிளாயிற்று?  

துவக்க கால இறையியல் படைப்புகளில் விலக்கப்பட்ட கனியானது  வளமையை பெருக்குமென நம்பப்பட்ட மாண்ட்ரேக்  கனியாக கருதப்பட்டது,இதுவே வாழ்க்கை மரம்’’ tree of life’’ எனப்பட்டது. இனப்பெருக்கத்தின் ரகசியங்கள் கடவுளுக்கு மட்டுமே உரித்தானது என்பதால் இதன் கனிகள் மனிதர்களுக்கு விலக்கப்பட்டிருந்தது .பிறகு சாத்தானின் தூண்டுதலால் ஆதிமனிதன் அக்கனியை புசித்து இனப்பெருக்க ரகசியங்களை, காதலை காமத்தை அறிந்து கொண்டான்.

எனவே  கோபம் கொண்ட கடவுளால், அந்த  ஆதி தம்பதியினரும்,  விஷப்பாம்பாக மாற்றப்பட்ட சாத்தானும், சிறு செடியாக மாற்றப்பட்ட  அந்த மாண்ட்ரேக் மரமும் கடவுளால்  சொர்க்கத்திலிருந்து  வெளியேற்றப்பட்டனர்.அதன் பின்னர் அக்காலப் படைப்புகளில் விலக்கப்பட்ட கனி மாண்ட்ரேக் என்னும் சிறு செடியின் கனியாகவே சித்தரிக்கப்பட்டிருந்தது.

 பொ யு 250–200  ஆண்டுகளுக்கு முன்பான ஆதாமின் ஏழாம் தலைமுறை என கருதப்படும் ஏனோக்குவின் நூலில் கொத்துகொத்தாக திராட்சைகளை போன்ற கனிகள் விலக்கப்பட்ட கனிகளாக சித்தரிக்கப்பட்டன (Enoch 32:4). இது பின்னர் முதல் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்தது. 

 ஒரு நூற்றாண்டு கழித்தே திராட்சைகளின் இடத்தை அத்தி எடுத்துக்கொண்டது. 

கிறிஸ்துவுக்கு பிறகான முதல் ஆயிரமாண்டு காலத்தில் எழுதப்பட்ட குறிப்பிடத்தகுந்த படைப்பான   Life of Adam and Eve என்னும் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னரான ஆதாம் ஏவாளின் வாழ்க்கையை சொல்லும் படைப்பிலும் அது அத்திக்கனியென்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

இந்நூல் மொழியாக்கம் செய்யப்பட்ட  கிரேக்க, லத்தீன அர்மீனிய, ஜார்ஜிய, ஸ்லேவினிக் மற்றும் மேற்கு ஐரோப்பாவின் பல மொழிகளிலும் அப்படியே குறிப்பிடப்பட்டது. முக்கிய கிறிஸ்தவ  இறையியல் எழுத்தாளர்களும் விவிலிய அறிஞர்களுமான அகஸ்டின், தியடோர்  ஆகியோரும் அது அத்தியே என குறிப்பிட்டார்கள்  

அந்நூல்களின் சித்தரிப்பை அடிப்படையாக கொண்டு பல ஓவியங்களும் அதே கனிகளை வரைந்தன.அவற்றில் மிக அதிகம் இடம்பெற்றது அத்தியும் திராட்சையும்தான். சில சித்திரங்களில் அத்திமரத்தில் திராட்சை காய்த்திருந்தது.இன்னும் சில சித்திரங்கள்  மரத்தையோ கனியையோ அடையாளம் கண்டுகொள்ள முடியாத வகையில் வரையப்பட்டிருந்தன.

பிரான்ஸின் வடக்குப்பகுதி நகரமான  லையான்  (Lyon) தேவாலயமொன்றில் சிறியதாக கருப்பு நிறத்தில் ஆலிவ் கனிகளை நினைவூட்டும் கனி வரையப்பட்டிருந்தது

வடக்கு பிரான்ஸில் ஒரு தேவாலயத்தில் 1180–90க்கு  இடைப்பட்ட காலத்தில் வரையப்பட்ட ஒரு சித்திரத்தில் ஏற்கனவே கடிக்கப்பட்டிருந்த ஒரு உருண்டையான கனியை ஆதாம்  உண்ணும் சித்திரம் இருந்தது.அக்கனியில் ஆப்பிளை அடையாளம் காணும் மேற்புற பிளவு தெளிவாக தெரிந்தது.

3ம் நூற்றாண்டின் அலெக்ஸாண்டிரியா திராட்சையே ஆதமும் ஏவாளுமுண்ட விலக்கப்பட்ட கனி என்றார்.  பாரீஸின் வடக்கு புறநகர்ப்பகுதி தேவாலயங்களில் அக்காலத்து ஓவியங்களில் சாத்தானாகிய பாம்பு ஒரு கொத்து திராட்சைகளை வாயில் கவ்விக் கொண்டிருக்கும் சித்திரங்கள் இருந்தன.

 4ம் நூற்றாண்டில் (அனேகமாக  A.D. 382ல்) ரோம் நகரில்தான் இந்த ஆப்பிளின் வடிவம் துவங்கி இருக்கக்கூடும். போப் முதலாம் டமஸ்கஸ் , மொழியியலாளரான ஜெரோம் என்பவரிடம் விவிலியத்தை ஹீப்ரூவில் இருந்து லத்தீன மொழியில் மொழியாக்கம் செய்ய பணித்தபோது ஜெரோம் ஹீப்ரூவின் பெரி என்னும் சொல்லுக்கான லத்தீன இணைச்சொல்லாக மாலம் (“malum”) என்பதை உபயோகப்படுத்தினார். லத்தீன மொழியில் மாலம் என்பது சதைப்பற்றான உட்புறமும் ஏராளமான விதைகளையும் கொண்டிருக்கும் கனிகளின் பொதுப்பெயர். ஜெரோம் உபயோகப்படுத்திய மாலம் என்னும் சொல்லின் மற்றொரு இணைப்பொருள் ’’தீமை’’. 

ஜெரோம் அப்பணியை 15 ஆண்டுகள் எடுத்துக் கொண்டு செய்தார்.  அவர் கையாண்ட canonical Vulgate எனப்பட்ட பேச்சுவழக்கு லத்தீன மொழியிலான அப்படைப்புத்தான் மாலம் என்னும் தீமைக்கும் கனிக்குமான் ஒரே பொதுச்சொல்லினால் கனியை குறிப்பிட்டு விலக்கப்பட்ட கனி ஆப்பிள் தான் என்னும் விதையை ஊன்றியது

ஜெரோம் மொழியியலாளர் மட்டுமல்ல  ஒரு இறையியலாளர் மிக புத்திசாலியும் கூட . ஜெரோம் வேண்டுமென்றே அதை செய்திருக்க கூடும் என்று மொழியியலாளர்கள் பின்னர் யூகித்தனர். மொழிமாற்றத்தின்போது ஆப்பிளுக்கும் தீமைக்குமான ஒரு பொதுச்சொல்லை, தீமையை கொண்டு வரும் என்பதால்  கடவுளால் விலக்கபட்ட ஒரு கனிக்கு உபயோகப்படுத்துவது பொருத்தமாக இருக்கும் என அவர் நினைத்திருக்கலாம் என்கிறது அவர்கள் தரப்பு.எப்படியாகினும் மாலஸ் ஒரு நாகம் போல மெல்ல ஊர்ந்து வந்து வரலாற்றில் இடம் பிடித்தது ஜெரோமினால்தான்.

ஆனால் மாலஸ் என்பது சதைப்பற்றான எந்த கனியையும் குறிப்பதுதான் எனவே அக்கனி பேரிக்காய் அல்லது அத்தி அல்லது பீச் ஆக இருக்கலாம் என்ற கருத்தும் வலுவாக  பின்னர் எழுந்தது.அதை சொன்னவர்கள் தங்கள் தரப்பு ஆதாரமாக  1508 லிருந்து 1512 க்கு இடைப்பட்ட காலத்தில் சிஸ்டைன் தேவாலய உட்கூரையில் மைக்கேல் ஏஞ்சலோ வரைந்த சித்திரத்தில் அத்தி மரத்தை சுற்றிக்கொண்டிருக்கும் பாம்பை காட்டினார்கள் 

எனினும்  அதன் பின்னர் ஐரோப்பாவின் பல கலைவடிவங்களில் விலக்கப்பட்ட கனி ஆப்பிளாக சித்தரிக்கப்பட்டது. ஜெர்மானிய கலைஞரான  Albrecht Dürer என்பவரின் 1504 ஆண்டின் புகழ்பெற்ற  செதுக்கு சித்திரங்களில் ஆதாமும் ஏவாளும் ஆப்பிள் மரத்தடியில் நின்றுகொண்டிருக்கும் சித்திரத்தை  உதாரணமாக சொல்லலாம்.

அந்த சித்திரம் பிற்பாடு உருவாக்கப்பட பல ஓவியங்களுக்கு அடித்தளமாகவும் முன்னுதாரணமாகவும் இருந்தது. உதாரணமாக ஜெர்மானிய ஓவியர்  Lucas Cranach the Elder ன் ஆதாமும் ஏவாளும் சித்திரத்தில் மரத்திலிருந்து  பளபளக்கும் ஆபரணங்களை போல ஏராளமான ஆப்பிள்கள் தொங்கிக்கொண்டு இருந்தன.  

எனவே இது ஒரு மொழியில் ஏற்பட்ட நுண்மையான விளையாட்டு அல்லது தவறு  என்பதை மக்கள் உணரும் முன்னேயே ஆதாமும் ஏவாளும் ஆப்பிளுடன் இருக்கும் சித்திரங்கள் ஏராளமாக உருவாகிவிட்டிருந்தன.

அதே சமயத்தில் எலுமிச்சையும் ஆப்ரிகாட்டும்,மாதுளைகளும்  பல ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டன என்றாலும் ஆப்பிள் மிக அதிக இடமும் முக்கியத்துவமும் ஏற்றிருந்தது’

 12ம் நூற்றாண்டின் வழிபாட்டு நாடகமான Jeu d’Adam ல் பல இடங்களில் விலக்கப்பட்ட கனி என்பதை  மாதுளையை குறிக்கும் “forbidden pom” என்னும் சொற்களே குறிப்பிட்டன. ஜெர்மனியிலும் 10,12 நூற்றாண்டுகளில் விலக்கப்பட்ட கனியாக அத்தி மாதுளை ஆகியவை இடம் பெற்றிருந்தன ஆனால் 13ம் நூற்றாண்டில் அனைத்து கனிகளையும் விலக்கிவிட்டு ஆப்பிள் அந்த  இடத்தில் அமைந்தது 

 அதன் பின்னர் ஆப்பிள் வலுவாக  பிரான்சின் விலக்கப்பட்ட கனியின் இடத்தில் அமர்ந்தது. இங்கிலாந்திலும்  ஜெர்மனியிலும் அத்தனை விரைவில் மாற்றம் வந்திருக்காவிடினும்  பிரான்சின் கலாச்சார தாக்கத்தில்  13ம் நூற்றாண்டின் பின்பகுதியில் அங்கும் ஆப்பிள் அறிமுகமானது.பிரான்சையும் விரைவில் கடந்து  13ம் நூற்றாண்டின் இறுதியில் பல நாடுகளில் அத்தியை நகர்த்திவிட்டு ஆப்பிள்கள் இடம்பெற்றன,

14ம் நூற்றாண்டில்  ஆங்கிலம் பேசுமொழியாக இருந்த அனைத்து பிரதேசங்களிலும் பெரும்பாலான  அத்திகள் ஆப்பிள்களாகியிருந்தன.  . அதன் பின்னர் ஐரோப்பாவின் அனைத்து கலைகளிலும் அத்தி மறைந்து ஆப்பிள் நுழைந்தது

 ஆப்பிள் விலக்கப்பட்ட கனியாவதற்கு அச்சு இயந்திரங்களும் ஒரு காரணமாயிருந்தன. 16ம் நூற்றாண்டின் துவக்ககாலங்களில் முக்கிய அச்சு தொழிற்சாலைகள் எல்லாம் வடக்கு ஐரோப்பாவில் அமைந்திருந்தன. அவை உருவாக்கிய அனைத்து படைப்புக்களிலும் ஆப்பிள் விலக்கப்பட்ட கனியாக சித்தரிக்கப்பட்டது.

வடக்கு ஜெர்மனியின் புகழ்பெற்ற கலைஞர்களான Hugo van der Goes, Hieronymus Bosch, Lucas Cranach the Elder, Albrecht Dürer ஆகியோரின் சித்திரங்களில் விலக்கப்பட்ட கனி ஆப்பிளாகவே இருந்தது. 

ஜான் மில்டன் தனது இழந்த சொர்க்கத்தை பதிப்பத்தாரிடம் 5 பவுண்டுகளுக்கு  1667ல் உரிமம் பெற்று இப்போது 356 வருடங்கள் ஆகின்றன.

அவரது அப்பெரும் படைப்பில் விவிலியத்தின் ஆதிக்கதைதான் பேசுபொருள் . கதாபாத்திரங்களும் நமக்கு தெரிந்தவர்கள் தான் கடவுள், ஆதாம், ஏவாள், பாம்பின் வடிவத்தில் சாத்தான் மற்றும் ஒரு ஆப்பிள்.

கடவுளுக்கெதிரான மனிதனின் முதல் மீறலும்,  உலகிற்கு மரணத்தின் சுவையையும் அழிவையும் கொண்டு வந்த அந்த  விலக்கப்பட்ட மரத்தின் கனியை குறித்தான அறிமுகத்தில் ஜான் மில்டன் இப்படி குறிப்பிடுகிறார்

//Of Mans First Disobedience, and the Fruit

Of that Forbidden Tree, whose mortal taste

Brought Death into the World, and all our woe//

துவக்கத்தில் வெறும் கனி என்று சொல்லும் மில்டன் அந்த 1000 வரி கவிதையில் இரண்டு இடங்களில் ஆப்பிள் என்று குறிப்பிடுகிறார்.

மில்டன் வெறும் எழுத்தாளர் மட்டுமல்ல அவருக்கு பன்மொழிப்புலமை இருந்தது. லத்தீன, கிரேக்க மற்றும் ஹீப்ரூ மொழிகளில் நல்ல புலமை இருந்த அவர் வெளிநாட்டு மொழிகளுக்கான செயலராகவும் பணிபுரிந்தார். அவருக்கு நிச்சயம்  ஜெரோமின் நுண்மையான விளையாட்டு தெரிந்திருக்கும் இருந்தும் அவர் ஏன் ஆப்பிள் என்னும் சொல்லை தேர்வு செய்திருக்க கூடும்?

இதற்கு வரலாற்றாய்வாளர்கள் இருகருத்துகளை சொல்கிறார்கள்’ ஒன்று மில்டன் அக்கனி ஆப்பிள் என்றே நினைத்திருக்கலாம் . இரண்டு மில்டனும் ஆப்பிள்/மாலஸ் என்னும் சொல்லின் பொருளான சதைப்பற்றான விதைகள் நிரம்பிய ஏதோ ஒரு கனி என்னும் பொதுப்பெயரில் கூட அச்சொல்லை உபயோகப்படுத்தி இருக்கலாம் என்கிறார்கள்’

மில்டனுக்கு பின் வந்த எழுத்தாளர்கள் அச்சொல்லை பிரத்யேகமாக ஆப்பிளை குறிக்கும் சொல்லாகவே உருவகப்படுத்தி பிரபலமாக்கினர்.அதன்பிறகே உலகெங்கிலும் விலக்கப்பட்ட கனியாக ஆப்பிள் நிலைத்துவிட்டது.

கடவுளுக்கு கீழ்படிந்திருந்தால் மற்றுமொரு  நன்மை மரமான வாழ்க்கை மரத்தின் பலன்கள் மனிதனுக்கு கிடைத்திருக்கும் என்பதையே இறையியல் நூல்கள்  விலக்கப்பட்ட கனி என்பதன் மூலம் குறிப்பிட்டன. அது ஒரு குறியீடு என்பதையும் தாண்டி பல நூற்றாண்டுகளாக அக்கனி எது என்பதற்கு  இத்தனை முக்கியத்துவம் அளிக்கப்பட்டது வியப்புத்தான்.

 ஏவாளும் ஆதாமும் கீழ்படியாமை, மீறல் ஆகிய பாவங்களின் பொருட்டே பூமிக்கு அனுப்பப்பட்டனர். அக்குற்றத்தை காட்டிலும் நூற்றாண்டுகளாக அது எந்தக்கனி என்பதில் இத்தனை ஆராய்சிகள் செய்யப்பட்டிருக்கிறது.

 மொழியியலோ அழகியலோ தவறான புரிதலோ  ஆலிவிலிருந்து, மாதுளை, அத்தி, கோதுமை, திராட்சை என்று பல வசீகரிக்கும் வடிவங்கள் கொண்டு இறுதியில் ஆப்பிளாயிருக்கிறது விலக்கப்பட்ட கனி. இப்படித்தான் தீமையும் பல அழகிய, வசீகரிக்கும், சபலப்படுத்தும் வடிவங்களில் நம்முன் வந்து நிற்கிறது.

அதிலும் செக்கசிவந்த நிறமும் சதைப்பற்றும் சுவையும் கொண்ட ஆப்பிள் வசீகரமென்றால், முன்பே கடிக்கப்பட்ட ஆப்பிள்  கூடுதல் வசீகரம்தான்.

 சிவப்பு நிறம்கொண்ட ஆப்பிள் ஆசையும் காதலும் நிரம்பி இருக்கும் மனிதனின் இதயத்துக்கான குறியீடாகவும் கருதப்படுகிறது. உலகெங்குமே  ஆப்பிள் வடிவம்  தொழில்நுட்பம், மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்புக்களின் அடையாளமாக கருதப்படுகிறது. 

ஜூன் 7 1954 ல் தனது 42வது வயதில் ஆலன் டூரிங் அவருக்கு மிக பிடித்தமான அடர்சிவப்பு ஆப்பிளில் சயனைடை ஊசியில் செலுத்தி அதை கடித்துண்டார் மறு நாள் காலையில் ஒரு துண்டு கடிக்கப்பட்ட ஆப்பிளின் அருகில் அவரது சடலம் கிடந்தது. அதே கடிக்கப்பட்ட ஆப்பிள் தான் ஆப்பிள் நிறுவனத்தின் லோகோவாக அமைந்திருக்கிறது.

விலக்கப்பட்ட கனி என்பது மாதுளையோ அத்தியோ ஆப்பிளோ திராட்சையோ அல்ல எவையெல்லாம் அறமற்றதோ அவையனைத்துமே விலக்கப்பட்ட கனிகள்தான். 

ஏவாள் அக்கனியை தாணுண்டு ஆதாமுக்கும் அளித்து அவர்கள் சொர்க்கத்தை  இழந்தாலும் உலகை தோற்றுவித்தார்கள், வெண்முரசு நாவல் நிரையின் இமைக்கணத்தில் இந்த  வாழ்வின் சுழற்சியை, தொடர்ச்சியை சிகண்டியும் இளைய யாதவரும் பேசிக்கொண்டிருக்கும் ஒரு அத்தியாயத்தின் இருவரிகள் சொல்லி விடுகிறது. //ஆணை பெண் உண்கிறாள். அவன் உடலின் பகுதியென்றாகிறாள். அவள் வயிற்றில் அவன் கருவாகிறான்” //