இன்று தருணுக்குப் பிறந்த நாள் 24 வருடங்களாகிவிட்டதா? நம்பத்தான் முடியவில்லை. புட்டுத் தருணாக இருந்து எந்நேரமும் “தூக்கி தூக்கி” என அடம்பண்ணி இடுப்பிலேயே உட்கார்ந்துகொள்ளும் தருண் இப்போது பல பெண்களின் தூக்கத்தைக் கெடுக்கும் இளைஞனாகிவிட்டிருக்கிறான்.


அவனது முதல் பிறந்தநாள் முடிந்து 2003 ஆகஸ்ட் 28ம் தேதி அவனைத் தோளில் போட்டுக்கொண்டு, சரணைக் கையில் பிடித்துக்கொண்டு இந்தியா திரும்பியது கனவு போலிருக்கிறது. ஒரே சமயத்தில் பெரும் நம்பிக்கையாகவும் பெரும் பொறுப்பாகவும் இருந்தார்கள் அவர்கள் அப்போது; ஆனால் என் ஒரே பற்று இப்போது இருவரும் தான்.
தருணுக்கு ஸ்நேகிதிகள் எண்ணிக்கை கொஞ்சம் அதிகப்படிதான் என்றாலும், யாரிடமும் இதுவரை கூடுதல் பிரியமோ அடுத்த கட்டநகர்வுக்கான விழைவோ வந்ததில்லை (என்று சொல்கிறான், நானும் நம்புகிறேன்).
சரணை பிரீ கே.ஜி வகுப்புக்கு கொண்டு விடுகையில் தருணும் என் கையைப் பிடித்துக்கொண்டு உடன் வருவான், காலை மாலை இருவேளையும்.
வழியில் ஒரு வீட்டில் பொமெரேனியன் ஒன்று சாலையை கடப்பவர்களைப் பார்த்து, அதன் சைஸுக்கு பொருத்தமில்லாமல் பயங்கரமாக குலைக்கும். தருண் அந்த வீட்டு கேட்டைப் பிடித்துக்கொண்டு அதைப் பார்த்து பதிலுக்கு விடாமல் குரைத்து, அந்த நாய் அமைதியாகும் வரை அதை ஒரு வழி பண்ணுவான். சமாதானம் பண்ணி இழுத்துக்கொண்டு போவேன்.
சரண் பள்ளியில் மைதானத்தில் விளையாடுவதை கேட்டின் கீழிருக்கும் இடைவெளி வழியே குனிந்து பார்த்து, அண்ணன் தெரிந்தால் மகிழ்ந்து என்னிடம் சொல்லுவான். அந்தப் பள்ளி ஆசிரியைகளுக்கெல்லாம் அவன் அங்கே சேரும் முன்னரே செல்லமான செல்லம் பாலாமணி என்று ஒரு டீச்சர். அவனை எப்போதும் இடுப்பிலேயே வைத்துக்கொண்டிருப்பாள். இதோ இப்போது அந்த தருண் காட்டியல் முடித்து, எம்பிஏவும் முடித்து வேலையிலும் சேர்ந்துவிட்டான்,

யானை டாக்டரின் தாக்கம் இன்னும் இம்மியும் குறையவில்லை. எப்போதும் காட்டில்தான் இருக்கிறான். பாம்புகளைப் பாதுகாப்பதில் மிகத் தீவிரமாக ஈடுபடுகிறான். தருமனும் அர்ஜுனனும் பீமனும் கலந்த கலவை இவன்.
உடலெங்கும் அட்டை கடித்த வீரத்தழும்புகள் நிறைந்திருக்கிறது.”எப்போ பார்த்தாலும் வீட்டுத் தோட்டத்தை கூட்டிப் பெருக்கி சுத்தமாவே வச்சிருந்தா, எப்படி இங்கே பாம்பு வரும்? எங்கே தங்கும்” என்று அம்மாவிடம் கோபித்துக்கொண்டு இலைதழையை கூட்டிக் குவித்து, அதன் மீது ரெண்டு காலிப் பூந்தொட்டிகளை சற்று இடைவெளி இருக்கும்படி கவிழ்த்துவைக்கும் இளைஞனை எங்கேனும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதோ இருக்கிறானே தருண்.


பிரமாதமான சமையல் நிபுணன். எனக்குத் தெரிந்து தோழிகளுக்கு வீட்டில் பிரியமாக சமைத்துப் போடும் நண்பன் இவன்தான். அண்ணன் மீது மாறாத அன்பும் அபிமானமும் கொண்டிருப்பதில் லக்ஷ்மணனுக்குப் பிறகு தருணைத்தான் சொல்லவேண்டும்.


எங்கும் தேங்கி நிற்காமல் காற்றில் பட்டுத் துணி போல் நழுவி நழுவி சென்று கொண்டே இருப்பான்; யாரையும் காயப்படுத்துவதில்லை, அதில் கவனமாக இருக்கிறான். என் வஞ்சங்கள் அவனை தொட்டுவிடாத தூரத்தில்தான் இருக்கிறான். சரணுக்கு எல்லாமே கருப்பும் வெள்ளையும்தான், என்னைப்போலவே, இடையில் ஒரு சாம்பல் நிறமெல்லாம் இல்லை; ஆனால் தருண் அப்படியில்லை, மன்னிக்கிறான் எவராயினும் எப்பிழை செய்திருந்தாலும்!
குந்திக்கு அர்ஜுனன் போல் என் விழைவுகளே வடிவாக உருவானவன் தருண். மகன்களோடு சென்ற கார் பயணங்களைத்தான் நான் மின்மயானம் செல்லும் வழியில் நினைத்துக்கொள்வேனாயிருக்கும். சரண் கண்கள் ஒளிர தீவிரமாக பேசிக்கொண்டிருந்தவற்றை கேட்டுக்கொண்டிருந்ததையும் அப்போது நினைத்துக் கொள்வேன்.
சமீபத்தில் ’’ஒடிஸி’ படம் பார்த்துவிட்டு பின் இரவு வீடு திரும்புகையில், அந்தப் படத்தின் நாயகனின் அகப்பயணம் பற்றி தருண் சொல்லிக்கொண்டேவந்த, அவ்வளவையும் திகைப்புடன் கவனித்துக்கொண்டிருந்தேன். சென்ற மாதம் குடும்பப் பிரச்சனையைப் பேச பொது நண்பர்கள் இருவர் வந்திருந்தபோது, அவனும் உடனிருந்து மிக முதிர்ச்சியாக பலவற்றை பேசிக்கொண்டிருந்ததையுமே திகைப்புடன் கவனித்தேன். சரணின் இடத்துக்கு தருண் வந்துவிட்டிருக்கிறான். இருவரும் எனக்களிக்கும் மாரல் சப்போர்ட்டைப்போல இவ்வுலகில் வேறு யாருமே அளிக்கவில்லை; இனி அளிக்கவும் முடியாது.

நான் ஒருமுறை சென்னையிலிருந்து ரயிலில் பொள்ளாச்சி வந்தேன். அந்த குட்டி ஸ்டேஷனில் Dr Logamadevi என்று அட்டையில் எழுதி தூக்கிப் பிடித்துக்கொண்டு நின்றான். மொத்த ஸ்டேஷனுமே வேடிக்கை பார்த்தது நான் இறங்கி வந்ததை. இப்படி சரண், தருணைப் போன்ற இயல்பில் இருக்கும் ஒருவரை நான் எப்போதும் மனதில் எனக்கானவராக கற்பனை செய்துவைத்திருந்தேன். புத்திசாலி, handsome, playful, nature loving நகைச்சுவையுணர்வு கொண்டவன் என்று,அதில் கவிதை எழுதுவதும் இருந்தது எனினும் இரண்டு பேருமே அதில் இன்னும் இறங்கவில்லை, ஒருவேளை இனிமேல் எழுதக்கூடும்.
தருணைக் குறித்து பெருமையாய் எண்ணிக்கொள்ளும் நினைவுகளில் மிக முக்கியமானது: வீட்டுக்கருகே இருக்கும் ஒரு நீர்நிலையில் கிடந்த ஒரு மீன்பிடி வலையில் எப்போதோ நுழைந்து வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டு, உடலின் காயமும் பசியும் தாகமும் வலியும் தாங்காமல் உயிருக்குப் போராடிய ஒரு பாம்பை கண்டுபிடித்து, அவ்வழியில் சென்றவர்களிடம் கெஞ்சிக்கேட்டு கத்தி வாங்கி வரச்சொல்லி நெடுநேரம் போராடி வலையைஅறுத்து அதைக் காப்பாற்றியதுதான்.
அந்தப் பாம்பு அவன் அதை முழுவதும் காப்பாற்றும்வரை பயத்திலும் பசியிலும் காப்பற்றப்பட்டு விடுவோம் என்னும் நம்பிக்கையிலும் அவன் விரலைத் தன் வாலால் இறுக்க, ஒரு சின்னக் குழந்தையைப் போல் சுற்றிப் பிடித்திருந்தது. அவனால் நீருக்குள் விடப்பட்டதும் அந்தப்பாம்பு மறுபிறவி எடுத்தது போல வழுக்கிக்கொண்டு இறங்கிச் சென்றதை கண்ணீருடன்தான் வீடியோவில் பார்த்தேன். நானும் அந்த பாம்புதான் மகன்களால் காப்பாற்றப்பட்டு மகிழ்ந்திருப்பவள்.மகன்களை பிடித்துக்கொண்டே இருப்பவள்.
எத்தனையோ சிக்கல்களில் இருந்து என்னை இருவரும் உயிருடன் விடுவித்திருக்கிறார்கள்


தருணே!
உனக்கென காடு எப்போதும் திறந்திருக்கட்டும், உன் கனவுகள் என்றென்றும் கலையாதிருக்கட்டும், அன்பும் ஆசிகளும்.
கடவுளே காத்துக்கொள்க.