லோகமாதேவியின் பதிவுகள்

கொல்கத்தாவும் கடலூர் சீனுவும்!

கொல்கத்தாவில் காளி வழிபாடு மிகப்பிரசித்தம். அதைப்போலவே காளிக்கு ஜபா குஸும் என்கிற குருதிநிற செம்பருத்தி (Jaba Kusum) மாலை அணிவிப்பதும்.

செம்பருத்தியின் இதழ்கள் காளியின் நாக்கு எனக் கருதப்படுகிறது இங்கு. கொல்கத்தாவின் பிரசித்தி பெற்ற கோவில்களில் இந்த மாலை தினந்தோறும் ஆயிரக்கணக்கில் பயன்பாட்டில் இருக்கிறது என்பதால் உள்ளூர் மலர்ச்சந்தை இந்தச் செம்பருத்தி மாலைகளையே பெரும்பாலும் நம்பி இயங்குகின்றது.

மலர்ந்த செம்பருத்தியில் மாலை கட்டினால் இதழ்கள் கிழிந்து, கசங்கி, காயம்பட்டு அணிவிக்கையிலேயே அதன் அழகை இழந்துவிடும் என்பதால் கல்கத்தாவின் பிரபல Mullick Ghat மலர்ச்சந்தையில் அதிகாலையில் செம்பருத்தி அரும்புகளைப் பறித்து மிக நெருக்கமாகத் தொடுத்து உருவாக்கும் கயிறைப் போன்றிருக்கும் செம்பருத்தி அரும்பு மாலைகள் வெகு பிரசித்தம். இந்த அரும்புமாலையைக் கடவுளுக்கு அணிவிக்கையில் அவை மெல்ல இதழவிழ்ந்து செக்கச்செவேலெனெ மிகச் சரியாக வழிபாட்டின்போது மலர்கின்றன.

செம்பருத்தியைப் போலவே, எருக்கம் மலர்களும் அன்னை காளியின் உக்கிர வடிவங்களுக்கும், வங்காளத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ‘தாரா தேவி’ வழிபாட்டிற்கும் மிக உகந்தவையாகக் கருதப்படுகிறது. எருக்கம்பூவின் உறைவிடமும் அதன் தன்மையும் உக்கிர தெய்வங்களின் அதீத ஆற்றலோடு  ஒத்துப்போவதாக அங்கு நம்பப்படுகிறது.

கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள புகழ்பெற்ற தாராபித் கோவிலில் தாரா தேவிக்கு எருக்கு மாலைகள் கிலோ கணக்கில் சாத்தப்படுகின்றன. வங்காளத்தில் சிவபெருமான் மற்றும் காளி வழிபாடு எப்போதும் ஒன்றோடொன்று இணைந்தது. சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான, நஞ்சை முறிக்கும் தன்மையுடைய பூக்களில் எருக்கம்பூ (வங்காள மொழியில் ‘அகந்தா’) முதன்மையானது.

கொல்கத்தாவில் உள்ள தக்ஷிணேஸ்வர் போன்ற பெரிய கோவில்களில் காளி தேவியோடு சேர்த்து சிவபெருமானுக்கும் தனி சன்னதிகள் உண்டு. திங்கட்கிழமைகள் மற்றும் பிரதோஷ நாட்களின் போது இந்த எருக்கு மாலைகள் சிவபெருமானுக்குச் சாத்துவதற்காக அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

செம்பருத்தி அரும்புகளைப் போலவே எருக்கம் மலர்களும் மிகவும் தடிமனான இதழ்களைக் கொண்டவை. இவை எளிதில் வாடாது; காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி நாள் கணக்கில் அப்படியே  புத்தம் புதிதாக இருக்கும். அதனால்தான் மலர் வியாபாரிகள் இதை அழகிய தடிமனான மாலைகளாகத் தொடுத்து விற்கிறார்கள்.

கொல்கத்தாவின் மலர்ச்சந்தைகளில் அந்த அடர் சிவப்புச் செம்பருத்தி மாலைகளுக்கு நடுவே, இந்த வெளிறிய எருக்கு மாலைகள் இருப்பதையே எனக்கு வழிபடலாம் போலிருந்தது.

கொல்கத்தா மலர்ச்சந்தையில் மட்டுமே காண முடியும் இவற்றை இப்போது அங்கிருக்கும் தம்பி கடலூர் சீனி புகைப்படமெடுத்து அனுப்பினார். நன்றி தம்பி.

2 Comments

  1. சரண்யா

    செம்பருத்தி மலர் மாலைகளை நான் சிவப்பு பச்சை பாசி மாலை என நினைத்துவிட்டேன்..
    ஒரு புகைப்படம் நம்மிடம் பேச வேண்டுமெனில் கொஞ்சம் சிரத்தை எடுத்து அதைப் பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும் என புரிந்து கொண்டேன் ஆசிரியரே..
    நன்றிகள் உங்களுக்கும் சீனு அண்ணாவுக்கும்

  2. Rajeshwari Raj

    சீனு அண்ணா நிலைபதிவுல இந்த படத்த பார்த்தப்ப, என்னடா பூ மார்க்கெட்ல பாசி மாலை அப்படின்னு கடந்து போயிட்டேன். நல்ல வேளைக்கு, இது செம்பருத்தி மொட்டு ன்னு சொன்னீங்க Mam. ரொம்ப நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑