லோகமாதேவியின் பதிவுகள்

Category: அனுபவம் (Page 11 of 11)

வயிறும் வாழ்வும்,

கடந்த ஆகஸ்டில் பூசாகோ கல்லூரி நிலாமுற்றம் நிகழ்வில் ஜானகிலெனினின் ’’எனது கணவரும் ஏனைய விலங்குகளும் ‘’ புத்தகம் குறித்துப்பேசி பரிசாக அந்த கல்லூரியில் அளித்த புத்தகம் ச. தமிழ்செல்வன் அவர்களின் ‘’ ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள்’’ அதை இன்று (12/12/17) முழுவதுமாய் வாசித்து முடித்தேன். அத்தனை நல்ல புத்தகம்.

நம் வீட்டு நிகழ்வுகளை நம் உடன்பிறந்த ஒருவர் பின்னாளில் நமக்கே கடிதமொன்றில் எழுதி அதை நாம் வாசிப்பது போல நெருக்கமான உணர்வினை அளித்தது. கூடவே மனதின் ஆழத்தில் உறங்கிக்கொண்டிருந்த சாப்பாட்டுடனான என் பல நினைவுகளையும் இவ்வாசிப்பு தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டது எனவே என் வயிறும் அது தொடர்பான இதுவரையிலான என் வாழ்வும் குறித்து எழுதுகிறேன்

உணவுடனான தொடர்பு என்பது என் வாழ்வின் இயங்கியலில்  பெரும் பங்காற்றிக்கொண்டிருக்கிறது.  சுவையாக சமைக்கும், சுவையறிந்து சாப்பிடும் ஒருத்தியாகவே நான் என் பதின்பருவத்திலிருந்து அறியப்பட்டிருக்கிறேன். அதற்கு முன்னரான என் பால்யகாலங்களில் நடந்த உணவு தொடர்பான பல நினைவுகள் இப்போது இப்புத்தகத்தால் தூசி தட்டி விடப்பட்டிருக்கிறது

நானும் அக்கா மித்ராவும் சிறுமிகளாய் இருக்கையில் பொள்ளாச்சி  வெங்கடேசா காலனியின் வாடகை வீட்டில் இருந்தோம், அப்பா அம்மா எப்போதாவது சினிமாவிற்கும் வெளி வேலைகளுக்கும் செல்ல வேண்டி இருந்தால் எங்கள் இருவரையும் வாசல் கதவைப்பூட்டி வெளியில் இருக்கச்சொல்லிவிட்டு இருவருக்குமான சாப்பாட்டையும்  குடிக்க தண்ணீரையும் வாசலில் வைத்துவிட்டு போய்விடுவார்கள் அனேகமாக இரவில் வீடு திரும்புவார்கள் அதை இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிற்து.

இரண்டு விவரமறியாச்சிறுமிகளின் பாதுகாப்பை விடவா வீட்டின் உள்ளிருப்பவை அரியதாக இருந்திருக்கும்? ஹாசினியை வன்புணர்ந்து நெருப்பிட்டு கொளுத்தியவனைப்போல பக்கத்துவீட்டில் இளைஞன் ஒருவனுமில்லாமல் போனது எங்களின் அதிர்ஷ்டமே

களங்கமில்லா அறியாமையுடன் எப்போதும் ஒரு தெய்வம் தொடர்ந்து வந்து காக்கும்  எனசொல்லுவார்களல்லவா? ஹாசினியை எந்தக்காரணத்தினாலோ காக்கத்தவறிய தெய்வம் எங்களிருவரையும் ஏனோ இன்றுவரையிலும்  கைவிட்டுவிடாமல் காக்கிறது

திண்பண்டங்களோ நொறுக்குத்தீனிகளோ  அறிந்திராத எங்களுக்கு அப்பா அடிக்கடி வாங்கும் வாழைப்பழக்கடைக்காரர் எங்களுக்கும் கையில்  இனாமாக தரும் இரண்டு வாழைப்பழங்கள் அளித்த மகிழ்ச்சியை எப்படி பதிவு செய்வது? மகிழ்ச்சி என்பதை விட son preference   மிக வலுவாக இருந்த எங்கள் வீட்டில் என் தம்பியின் பிறப்பிற்கு முன்பு நாங்கள் வேண்டாதவர்களாகவும், அவன் பிறந்த பின்னர் நாங்கள் தேவையற்றவர்களாகவும் இருந்த காலகட்டத்தில் இந்த இனாமாக அவ்வப்போது  கிடைத்த  வாழைப்பழங்கள்  எங்களுக்கான  ஒரு அங்கீகாரமாகவும் இருந்தது

ஏச்சுக்களும் வசவுகளுமாய்க் கழிந்த  பால்யவாழ்வில் எங்களையும் ஒரு பொருட்டாக  மதித்துத் தரப்பட்ட இந்த வாழைப்பழங்களும் சின்ன தம்ளருடன் காத்திருக்கும் எங்களுக்கு பால்காரர் ஊற்றும், கொஞ்சம் கொசுறுப்பாலும் அளித்தது பெரும் நிறைவைத்தான்

மார்கழி மாத விடியல்கள் மிக அருகிலிருந்த அய்யப்பன் கோவிலின் வெண்பொங்கல் வாசத்துடனே விடியும். குளிரைப்பொருட்படுத்தாது குளித்து ஈரத்தலையை காயவைக்காமலும் ஓட்டமாய் ஓடிப்போய் வரிசையில் நின்று வாங்கி சுடச்சுட பொங்கல்  சாப்பிட்டதும், வருடா வருடம் மாலை அணிந்து  எங்கிருந்தோ அங்கு வரும் ஒரு ஊமைச்சாமி, வீட்டு வாசலில் நின்ற செம்பருத்தியின் குருதி நிறப்பூக்களை கோவிலுக்கு போகையில் பறித்துக்கொண்டுபோவதும், என்ன காரணத்தாலோ அவரின் பிரசாதப்பொங்கலைத் தவறாமல் எங்களிரண்டுபேருக்குமாய் திரும்பி வருகையில் தினசரி தந்துவிட்டுப்போவதும் இப்போதும் நினைவிலிருக்கிறது. எங்களின் நிராதரவான நிலை அவரின் மனதிற்கும் அய்யப்பனுக்கும் தெரிந்திருக்குமோ என்னவோ!

வயிறு நிறைய சாப்பிடுவதொன்றே பெருங்கனவாயிருந்த காலங்கள் அவை

எதிர்வரிசை வீடுகளில் ஒன்றிலிருந்த கிருத்துவ குடும்பத்தைச்சேர்ந்த நிம்மி என்றழைக்கப்பட்ட  நிர்மலா அறிமுகப்படுத்திய ஒரு சுவையான தின் பண்டம்  நறுக்கிய தக்காளித்துண்டுகளில் சர்க்கரை தொட்டுக்கொண்டு சாப்பிடுவது.

எதன் காரணத்தாலோ எப்போதுமாய் வீட்டின் சந்தில் நிரந்தரமாய் நிறுத்தப்பட்டிருந்த சிமெண்ட் எடுத்துக்கொண்டு போகும் தள்ளு வண்டியொன்றின் அருகில் நாங்கள் மூவருமாய் அமரந்தபடி துளித்துளியாய் அந்த சர்க்கரை தொட்ட தக்காளித்துண்டுகளைச் சாப்பிட்டிருக்கிறோம் பல நாட்கள்.

 

அம்மா ஹார்லிக்ஸ் கண்ணாடிபாட்டிலில் தயிரை நீரூற்றிப்பெருக்கி குலுக்கி குலுக்கி வெண்ணை எடுப்பதும் நினைவில் இருக்கிறது.

திரிஸ்டவ்வின் திரிகளை மாற்றுவது பின்னர் வந்த அடிபம்ப் ஸ்டவ்வில் கைவலிக்க அடித்தது இன்று ஆட்டோஇக்னிஷன் ஸ்விட்ச் இருக்கும் அடுப்புகளும் , குக்கிங் ரேஞ்சுகளும்,மைக்ரோ வேவ் அடுப்புகளுமாய் சமையலறை,  மாறி வரும் வாழ்வுமுறைக்கேற்ப மாறி இருக்கிறது என்றாலும்  சமைப்பது பெண்களின் பணி என்பது மட்டும் மாறவில்லை. என்ன ஒரு ஆறுதலென்றால் முன்புபோல  சாப்பிடுவதும் அடுப்படியில் என்றில்லாமல் பெண்கள் கூடத்திற்கு வந்து சாப்பிட அனுமதிக்கபட்டிருக்கிறார்கள். பாலங்கள் எனும் சிவசங்கரியின் நாவலில் அந்த காலத்தில் பெண்கள்  உள்கட்டில் சாப்பிடுகையில் ரசத்தில் அப்பளத்தை நனைத்து வெளியில் இருப்பவர்களுக்கு சத்தம் கேட்காமல் சாப்பிடுவது குறித்துச்சொல்லி இருப்பார். முன்னைக்கு இபோது பரவாயில்லை அல்லவா?

எல்லா  பள்ளி விடுமுறைகளிலும் நாங்கள் செல்லும் ( கொண்டு விடப்படும்) ஊட்டி லவ்டேலின் லாரன்ஸ் பள்ளியிலிருந்த அத்தை வீட்டின் நினைவுகளோ அபூர்வம்

 

அந்த குளிரும் அங்கிருந்த  சர்வதேச உறைவிடப்பள்ளியின் உணவுகளும் பசுமையாக நினைவிலிருக்கிறது அங்குதான் முதன்முதலாக கனத்த வெண்ணிற பீங்கான் தட்டுக்களில் உணவையும் பீங்கான் கோப்பைகளில் சூடாக தேனீரும் உடன் வாட்டிய ரொட்டித்துண்டுகளையும் சாப்பிட்டது.

அத்தை மாமா இருவரும் அங்கு ஆசிரியர் குடியிருப்பில் வசித்ததால் உறவினர்களுக்கு பள்ளியின் மெஸ்ஸிலிருந்தே உணவளிக்கப்பட்டது. மதிய உணவை ஒரு பெரிய கேரியரில் வாங்கி வர மெஸ்ஸிற்கு சென்று அங்கு முட்டையை பூரியைப்போல எண்ணைச்சட்டியில் உடைத்து ஊற்றி  பொறித்து எடுப்பதை வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருப்போம்

அனுதினமும் உணவுடன் தரப்படும் பழக்கூழ், காலையில் கட்டாயமாய் பச்சைமுட்டை  அடித்து ஊற்றப்பட்ட பெரிய தம்ளர் பால், 10 பைசாவிற்கு அங்கிருக்கும் கடையில் கிடைக்கும் வாய்கொள்ளாத அளவில் பெரிதான, பல வசீகர வண்ணங்களில் இருக்கும் கோழிமுட்டை மிட்டாய்,  மளிகைக்கடைகளில், நாளிதளில் வெட்டி எடுத்துத்தரப்படும் தேங்காய் எண்ணைக்கட்டிகளும்,, ஆலங்கட்டி மழை பொழிந்த (அல்லது விழுந்த) ஒரு நாளில் ஓடி ஓடி நாங்கள் இருவருமாய் சேகரித்த நீர்க்கட்டிகளை எடுத்து அத்தை தயாரித்துக்கொடுத்த ஒரு வாசனையான ஆலங்கட்டித் தேனிரும், அப்போதுதான் அறிமுகமாயிருந்த  கோன் ஐஸ் கிரீம் கடையில் வீட்டில் இட்லி மாவு வைத்திருக்கப்பயன்படுத்தும்  பெரிய பாத்திரத்தில் ஐஸ்கிரீமும் தனியே 10-15 பிஸ்கட் கோன்களுமாய்  வாங்கி வந்து இஷ்டம் போல் அவற்றைச் சாப்பிட்டது, வீட்டின் முன்பு எப்போதும் இருக்கும் இளம் பனி  சூடியிருக்கும் புற்கள் நிறைந்திருக்கும் வெளியும் அவை எங்களின் சின்னஞ்சிறு கால்களில் எப்போதுமாய் ஏற்படுத்திக்கொண்டே இருந்த  ஈரமும் அதன் குளிர்ச்சியும், வீட்டின் முன்பிலிருந்த மஞ்சள் மலர்கள் நிறைந்திருக்கும்  பெயர் தெரியா பெருமரமொன்றும்  அதன் அடியில் அமர்ந்து பள்ளி வளாகத்தில் எப்போதும் நடந்துகொண்டிருக்கும் படப்பிடிப்புகளில்  கமலையும் ஸ்ரீதேவியையும் தர்மேந்திரா ஹேமாமாலினி மற்றும் அமிதாப்பச்சனையும் வேடிக்கை பார்த்தவாறு பொழுதைக்கழித்த நாட்களும் இப்போதுபோல பசுமையாய் வாசமாய்  குளிர்ச்சியாய் நினைவிலிருக்கிறது. நகர நாகரீகம் அறியா கிராமத்துச்சிறுமிகள் என்பதால் பலவித கெடுபிடிகளுடன் நாங்கள் அங்கு நடத்தப்பட்டிருந்தாலும் வயிறார உணவுண்டோம் என்பதை மறுப்பதற்கில்லை

வீட்டின் நேர் எதிரே இருந்த அம்மாபாதுகாவலராக பணியாற்றிய  மாணவிகளுக்கான விடுதியில் வாரம் ஒருநாள் அளிக்கப்படும் கஞ்சியும் கொள்ளுச்சட்னியும்  என்னை எப்போதும்  ஈர்க்கும். அவற்றை அவர்களுடன் அமர்ந்து சாப்பிடாத  நாட்கள இல்லை எனலாம்

பல காரணங்களால் நாங்களிருவரும் ஆத்தாவின் வீடிருக்கும் வேட்டைகாரன் புதூருக்கு 1 வருடம் அனுப்பப்பட்டபோது வறுமை இருந்தும் வயிறு நிறைய உணவும் மகிழ்ச்சியும் குதூகாலமும் இருந்தது எங்களுக்கு அங்கு 3 ஆம் வகுப்பு படித்த அந்த பள்ளியும் வாசலில் விற்றுக்கொண்டிருக்கும் இலந்தை வடை, மரச்சீனிக்கிழங்கு, நெல்லிக்காய் மாங்காய்பத்தை ஆகியவை 1 பைசா 2 பைசாவுக்கெல்லாம் கிடைத்தது. காடுமேடெல்லாம் சுற்றி புத்தகங்களுக்கு வெளியேயான வாழ்வொன்றினைக் கண்டுகொண்டதும்அங்குதான்

வீட்டின் முன்பிருக்கும் சீனிப்புளியங்காய் மரத்தின் மீதேறி சித்தப்பா உலுக்கியதும் பொல பொலவென உதிரும்  வெள்ளையும் இளஞ்சிவப்புமான சதையுடன் இருக்கும் கோணல் புளியங்காய்களும் அவற்றின்  பளபளக்கும் கரியவிதைகளை காயமின்றி உரித்தால் நினைத்தது நிறைவேறும் என்னும்   குழந்தைகளின் உலகிற்கான நம்பிக்கையொன்றும், நாங்கள் அப்படி கவனமாக உரித்த பலநூறு விதைகளும் பசுமையாய் மனதில் இருக்கின்றது.  சிறு வயதின் அந்த சுவையின் நீட்சியோ என்னவோ இப்போழுதும் அந்த காய்கள் அத்தனை பிரியம்

திருமணம் நிச்சயமாகி 2 மாதங்கள் கழித்து முகூர்த்தத்திற்கு 10 நாட்கள் முன்பாகத்தான்  வெளிநாட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்த  கணவர் என்னை முதன் முதலில் பார்க்க வந்தார். அன்றே இரு வீட்டாரின் அனுமதியுடனும் உடன் பயணிக்க ஒரு பெரும் பட்டாளத்துடனும் கோவைக்கு காரில் அழைத்துச்சென்று  ஆர் எஸ் புரம் எனும் பெரும் பகட்டான ஒரு வீதியில் காரை நிறுத்தி எனக்கு என்ன வேண்டுமென ஆர்வமுடன் கேட்டார். அவர் மனதில் என் முனைவர் பட்டமும் என் ஆய்வுக்கட்டுரைகளும் நான் பார்த்துக்கொண்டிருந்த பேராசிரியைப்பணியுமாய் என்னைக்குறித்த உத்தேசமான  ஒரு தோற்றம் இருந்திருக்கும் போல

ஆனால் எனக்குள்  எப்பொதும் இருப்பது ஒரு கிராமத்துச்சிறுமியே அல்லவா?

நான் உற்சாகமாய் ’’அதோ தள்ளு வண்டியில் விற்கும் சீனிப்புளியங்காய்’’  என்றதும் அவர் முகத்தில் ஏற்பட்ட மாறுதலை இன்னும்  நினைவு கூறுகிறேன். உறைந்த முகத்துடன் கால் கிலோ வாங்கிவந்து நான் திரும்பி வரும் வழியெல்லாம் அதை வாயிலிட்டு அரைத்துக்கொண்டே வந்ததை இறுகிய முகத்துடன் கவனிக்காதது போல கவனித்துக்கொண்டு வந்தார். செல்லுமிடங்கள்  மாற்றுவதா சுபாவம்? மேலும் என் கிராமமும் நானறிந்த இயற்கை உணவுகளின் சுவையும் என் நாவில் மட்டுமல்ல ஜீன்களிலும் நிறைந்திருக்கையில் நான் அங்கிருக்கும் தனிஷ்க் கடையில் வைர நகையா கேட்டிருக்க முடியும்? இன்னும் நான் அப்படியே தான் இருக்கிறேன், இருப்பேன்.

மேலும் கனவுகளையும் கற்பனைகளையும் ஆசைகளையும் காலடியில் மிச்சமின்றி  தேய்த்து நசுக்கி அழிக்கும் நிகழ்வல்லவா கல்யாணமென்பது?அப்படி தகர்ந்திருக்கும் சரண் அப்பாவின் என்மீதான நம்பிகை ஒன்று (அதன் பின்னர் பலப்பல)

என்அப்பாவின் அப்பாவான அப்பாருக்கு அதே ஊரில் இருந்த விறகுக்கடைப் பெண்ணுடன் இருந்த தொடர்பு குறித்து எனக்கு இப்போதுதான் தெரியும் என்றாலும்  அந்த வயதில் ஒருமுறை அவருடன் நானும்  அந்த விறகுக்கடைக்குச்சென்று எனக்களிக்கப்பட்ட வெல்லத்தை சுவைத்தபடி வீடு திரும்பி ,எப்போதும் சாந்த சொரூபியாய் இருக்கும் ஆத்தாவிடம்  இனிமே போவியா போவியா என்று குச்சியில் அடிவாங்கியதும் அடித்துக்கொண்டிருந்த ஆத்தா அப்பொது அழுதுகொண்டிருந்ததும் இன்னும் நினைவில் இருக்கிறது. அந்த உண்மை கசப்பதால்  இன்றும் வெல்லம் எனக்கு இனிப்பதில்லை,. அந்த  அடியெல்லாம்  அப்பாருக்கானது என தாமதமாகத் தெரியவந்தது. யுகம் யுகமாக தொடரும் பெண்களின் துயருக்கு என் ஆத்தாவும் விதிவிலக்கல்ல.

ஆத்தா கைசாலையில்  சமைக்கும் அடுப்பில் கோட்டு அடுப்பென்று அழைக்கப்படும் இரண்டாம் அடுப்பில் தீச்சூட்டில் எப்போதும் இருக்கும் மண் சட்டியில் மீந்த குழம்பு ரசம் காய் எல்லாம் எப்போதும் சுண்டிக்கொண்டே இருக்கும் அது கலவையான மணமும் சுவையுமாய் இருக்கும். 10 பைசாவிற்கு ஒரு காகிதக்கூம்பு நிறைய பொட்டுக்கடலையும் நாட்டுச்சர்க்கரையும் தருவார்கள் அது ஒரு நொறுக்குத்தீனி எங்களுக்கெல்லாம் அப்போது. வேட்டைக்காரன் புதூரில் இருந்தது ஒரே வருடமென்றாலும் அந்த நினைவுகள் ஒரு ஜென்மத்திற்கானது

மறுபடியும் 4ஆம் வகுப்பிற்கு போகையில் குட்டிதம்பி பிறந்து வாழ்வு அப்பா அம்மாவிற்கு பூரணமாகியிருந்ததால் நாங்களும் 1 வருடம் அம்மா பணி மாறுதலின் பொருட்டு போன தாராபுரம் சென்றோம்

அங்கு  அம்மா வேலைபார்த்த விடுதியிலெயே தங்கி இருந்தோம் விடுதிக்கு பின்னால் கண்ணுக்கெட்டிய தூரம்  வரையிலும் நெல்வயல்கள் நிறைந்திருக்கும், மார்கழி தை மாசி மாதங்களில் பால்பிடித்திருக்கும் கதிர்களை உண்ண வரும் அரிக்குருவி என்னும் ஒருவகை சிறு கருங்குருவிகளை கண்ணுக்குத்தெரியாத மெல்லிய வலைகளை நெற்பயிருக்கு மேல் பரப்பி அவற்றின் கால்கள் வலையில்  மாட்டியதும் பிடித்து தலைகீழாக கட்டி விற்பனைக்கு கொண்டுவருவார்கள்.

பள்ளியிலிருந்து திரும்பும் பல மாலைகளில் மாடிப்படிக்கடியில் சிறு  மணிக்கண்களை அச்சத்தில்  உருட்டியபடி  குவியலாக கால்கள் சேர்த்துக்கட்டப்பட்டிருக்கும் 10 ,15 குருவிகள் பரிதாபமாகக் கழுத்துத்திருகி கொல்லப்படக்காத்திருக்கும்

இரவுகளிலிந்த அரிக்குருவிக்குழம்பிற்கெனவே வேட்டைக்காரன்புதூரிலிருந்து  அப்பாரும் சித்தப்பாவும் வருவதும் சிவப்பு நிற கற்கள் பதிக்கபட்ட மொட்டை மாடியில் குண்டுவிளக்கின் வெளிச்சத்தில் இரவுணவில் அந்த குருவிகளில் செய்யபட்ட குழம்பு பரிமாறப்பட்டதும் சாப்பிடுவதற்கு முன்பாக சித்தப்பா மாடியிலிருக்கும் குழாயில் தன் பாதஙகளை   பலமுறை தேய்த்துக்கழுவுவதும் இன்னும் நினைவிலிருக்கிறது

அருகில் ஓடிக்கொண்டிருக்கும் பெரிய ஆற்றிலிருந்து அயிரை மீன் குஞ்சுகளை  உயிருடன் ஒரு பெண் விற்றுவிட்டு போனதும் விடுதியின் காவலர் பழனிச்சாமி  துள்ளிக்கொண்டு உயிருடன் இருக்கும் அவற்றை சிறு மணற் குன்றில்  நுழைத்து கொல்வதை எந்த  குற்ற உணர்வுமின்றி  நாங்களிருவரும் வேடிக்கை பார்த்ததும் கூட நினைவிலிருகிறது

இதற்கெல்லாம் பிழையீடாகத்தான் பலவருடங்களுக்கு முன்பே நான் அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன் என்றும் சொல்லலாம்

5 ஆம் வகுப்பிற்கு மீண்டும் பொள்ளாச்சி, மீண்டும் அதே வாழ்வு இப்போது என்ன மாற்றமிருந்தது என்றால், எங்களால் ஆன பிரயோஜனத்தை அப்பா அம்மா கண்டுபிடித்துக்கொண்டார்கள் என்பதே,  மிகப்பெரிய ஆட்டுரலில் எங்களை மாவாட்டச்சொல்லலாம் , கனத்த இரும்பு வாளியில் நீர் நிரப்பி அக்காவை  வீடு துடைக்கச்சொல்லலாம், என்னை சமையல் செய்யசொல்லலாமென்றெல்லாம் அவர்கள் கண்டுகொண்டிருந்தமையால் வாழ்வின் போக்கு கொஞ்சம மாறி இருந்தது

நான் கரண்டியை கையில் பிடித்துக்கொண்டேன். அக்கா வீட்டு பராமரிப்பு. இதற்கிடையில் படிக்கவும் செய்தோம். சமையலில் பல பாடங்களை அப்போதிலிருந்து நான் கற்றுக்கொண்டிருந்தேன் எனினும் பல பாடங்கள் மிகக் கடினமாகக்கற்றுத்தரப்பட்டன  என்றுதான் தோன்றுகிறது

ஒரு முறை அம்மாவின் சினேகிதியும் தாராபுரம் சட்டமன்ற அவை உறுப்பினருமான   ஆனஒரு அம்மாளின் குடும்பம் வந்திருக்கும் பொழுது மதிய உணவு முழுக்கத்  தயார் செய்யும் பொறுப்பு. 7 ஆம் வகுப்பில் இருக்கும் சிறுமியான என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. சமையல் எல்லாம் முடித்து  சமையலறையையும் சுத்தம் செய்து தவறுதலாக அப்பளம் காய்ச்சிய சூடான எண்ணையை ஹார்லிக்ஸ்  கண்ணாடி பாட்டிலில் அப்போதே ஊற்றி அது அடிபிளந்து எண்ணை முழுதும் வீணாகி நல்ல அடி கிடைத்தது.இபோது சூடான எண்ணை விஷயத்தில் சர்வ ஜாக்கிரதையாக இருக்கிறேன்.

அந்த MLA  மிக வித்தியாசமானவர் பல நூறு ஏக்கரில் அவருக்கு வயல்களும் தோப்பும் இருந்தது அவர் எனக்கு தெரிந்து 3 முறை அந்த பதவியில் இருந்திருந்தார்,ஆயினும் மிகச்சிக்கனம்

நாங்கள் அனைவரும் கோதுமை உப்புமா சாப்பிட்ட ஒரு நாளில் தட்டுக்களிலிருந்து பச்சைமிளகாயை தனியே எடுத்துக்கொண்டுபோய் அதிலிருந்து சட்டினி அரைத்துவிட்டு அதற்கு விளக்கமாக ‘’ அதில் இன்னும் காரம் இருக்குன்னுதானே சாப்பிடாம தூக்கி போடறோம்’’ என்றார்

எங்களிருவரையும் அப்பா அம்மா இல்லாத பொழுது எங்கள்  வறுமையைக்காரணம் காட்டி உதாசீனப்படுத்துவதும் மற்றவர்கள் முன்னிலையில் சாதாரணமாக நடத்துவதும் அடிக்கடி நடக்கும். அத்தனை கஞ்சத்தனம் இருக்கும் அவரும் அவர் பெண்ணும் ஒரு முறை என்னையும் மித்ராவையும் அவர்களுடன் சென்னைக்குவேண்டி விரும்பி  வலுக்கட்டயாமாக அழைத்துப்போனார்கள் ,ஆச்சர்யமாக இருந்தது அந்த முதல் நெடும்பயணம்

சென்னை அண்ணா நகரிலிருந்த அவர்களின்  மிகப்பெரிய பங்களாவில் இறங்கிய அந்தநாளிலேயே  அறியாச்சிறுமிகளான எங்களிருவரையும் முழு வீட்டையும் நீரூற்றிகழுவிவிட சொன்னதும் மயங்கிவிழாத குறையாக அத்தனையும்  இரவு வரை செய்து முடித்த பின்னர்  அவர்கள் எப்போதோ வீடு பூட்டிவிட்டு போகும் போது குளிர்சாதனப்பெட்டியில் வைத்துவிட்டுப்போன  கெட்டுப்போயிருந்த வெண்டைக்காய் சாம்பாரையும் நீரில் நனைத்து வைக்கபட்டிருந்த   கொட்டை அரிசிச்சோற்றையும் சூடு கூட பண்ணாமல் அப்படியே சாப்பிடகொடுத்ததும் வெண்டைக்காய்  ஊசிப்போய் நூல்நூலாய் வந்ததும் நினைவிலிருகிறது.

எதற்கு எங்களை பொள்ளாச்சியிலிருந்து அழைத்துபோன்னர்கள் என்றும் அதன் பிறகே தெரிய வந்தது

அந்தக்குடும்பத்தின்  ஒரே ஆண் வாரிசான அப்போதே அண்ணா பல்கழையில் தங்கப்பதக்கம் வாங்கிய பொறியியல் பட்டதாரியும் மிக நல்ல மனதுள்ளவருமான   ——-அண்ணன், அவரின் திருமண நிச்சயத்திற்காக புறப்பட்டு வரும் வழியில் ரயிலில் அடிபட்டு 4 நாட்கள் கழித்தே தகவல் வந்தது,  குஜராத் அருகிலிருக்கும் ஒரு  மிகச்சிறிய மருத்துவமனையில் உடல் அழுகி வீங்கி அடையாளம் தெரியாமலிருந்த  அவரின் சடலத்தை அங்கேயே எரியூட்டியபின்னர் மனம் பேதலித்த அவரின் அப்பா   காணாமல் போய் இன்று வரை  வீடு திரும்பவில்லை, அந்த MLA அம்மாளும் இப்போது உயிருடன்இல்லை அவரின் ஒரே மகள் திருமணமின்றி  முக பக்கவாதம் வந்ததால் பேச்சுமிழந்து மாபெரும் சொத்தை பூதம் காப்பதுபோல காத்துக்கொண்டும் ஒரு தத்துப்பிளையை வளர்த்துக்கொண்டுமிருக்கிறார்

வாழ்வெனும் இந்த விளையாட்டில் கண்ணுக்குத்தெரியாத ஆட்டப்பங்காளியாக ஊழ் இருந்துகொண்டே இருக்கிறது அல்லவா?

அந்த அண்ணன் ஆவிஅமுதாவின் வாயிலிருந்துஆண்குரலில் தன்னை ஒரு நண்பன் ரயிலிலிருந்து தள்ளி விட்டதாக சொன்னதெல்லாம் கிளைக்கதை. பசியுடன் இரண்டு சிறுமிகள் பங்களாவின் அறைகளைசுத்தம் செய்த  அவ்விரவின் நினைவு எப்போது சென்னை சென்றாலும் தவிர்க்க இயலாமல் வந்துவிடுகின்றது

இன்றுவரை தோளுக்கு மேல் வளர்ந்த ஆண்பிள்ளைகளானபின்னரும் கூட என் இரு மகன்களையும்  மித்ராவைத்தவிர யாருடனும்  எத்தனை சர்க்கரையாக கூப்பிட்டாலும் எதன்பொருட்டும் நான் அனுப்பியதே இல்லை இது உளவியல் சிக்கலென்றாலும் சரி என்னால் அனுப்ப முடிவதே இல்லை,

பக்கத்துவீட்டு பிராமணப் பெண் கமலா தினசரி உணவு மேசையில் இணைக்கபட்டிருந்த  சிறு இயந்திரத்தில் காபிக்கொட்டையை வறுத்தரைத்து தினம் வாசனையாக காபி போடுவது, அவரின் மகனுக்கு அடிக்கடி தயிரில் மாம்பழச்சதையை பிசைந்து ஊட்டுவது, பசியுடன் பூட்டிய கதவிற்கு முன்னால் அமர்ந்து நாங்கள் காத்திருக்கும்  பல மாலைகளில் எங்களுடன் விளையாட ஓடிவரும் அவனிடமிருந்து வீசும் பூரிக்கிழங்கு வாசனை எல்லாமெல்லாம் இன்னும் நினைவிலிருக்கிறது

கல்லூரி வாழ்விலும் கல்யாணம் ஆகிப்போகும் வரையிலும் சமையல் என் பொறுப்பிலேயேதான் இருந்தது எனினும் வயிராற உண்ட நினைவில்லை ஒருபோதும்

கல்லுரியில் இளங்கலை தாவரவியல் படிக்கையில் நாட்டுநலப்பணித்திட்டத்தில்  ஒரு பகுதியாக ஆனைமலை காந்திஆசிரம கட்டிடப்பணிக்கு மாணவர்கள்  திருமதி சுசிலா என்னும் அன்னைமை நிறைந்த விலங்கியல் துறை ஆசிரியருடன் அனுப்பப்பட்டோம். அப்படிச் சென்றிருந்த  ஒரு முதல் நாளில் கூடி வேலை செய்ததாலோஅன்றி அதுபோல கடுமையான உழைப்புகளுக்கு பழகியதாலோ சிரமிமின்றி செங்கல் சுமக்கும் வேலைகளை முடித்த எங்களுக்கு ஒரு  ஓட்டு வீட்டின்  திண்ணையில் வாழையிலையில் முழுச்சாப்பாடு போட்டார்கள்.

என் வாழ்வில் நான் உண்ட முதல் நிறைவான வடைபாயசத்துடனான சாப்பாடு அதுவே.  பல வருடங்களுக்கு முன்பாக பணி ஓய்வு பெற்றிருந்த   சுசீலா அவர்களிடம் சமீபத்தில் அவரைப்பார்த்தபோது  இதைச்சொன்னதும் அவர் அறியாமல் கண் கலங்கி விட்டார்கள்

முதுகலை படிக்க பாரதியார் பல்கலைக்கு சென்றபின்னர் விடுதிச்சாப்பாடு பெரும் பிரமிப்பு அளித்தது. அண்டாக்களில் நிறைந்திருக்கும் உணவு வகைகளும் எத்தனை வேண்டுமானாலும் எடுத்து போட்டுக்கொள்ளலாமென்னும் சுதந்திரமும் என்னைப்போன்ற கிராமத்திலிருந்து  வந்த பாரபட்சமாய் பாவித்து வளர்க்கப்பட்ட  வீட்டைச்சேர்ந்த பெண்ணொருத்திக்கு எத்தனை கிளர்ச்சியைதந்திருக்கும் ?

வாரம் ஒரு நாள் எங்களுக்கு மதிய உண்வின் போது ஒரே ஒரு மசாலா திணித்துப் பொறிக்கப்பட்ட கத்தரிக்காய் ஒன்றே ஒன்று தருவார்கள் அது எனக்கு மிகப்பிடிக்கும் என்பதால் என் அறைத்தோழி சசி அந்த இரண்டுவருடமும் அவளுடையதை எனக்கே எனக்கென தந்துவிடுவாள் அதை அன்பென்பதா, பிரியமென்பதா அன்றி தனக்கில்லாவிடினும் பிறருக்கு அளிக்கும் அன்னைமை  என்பதா?

பின்னர் நல்ல உணவு நல்ல  இயற்கையான சூழல், நூலகப்பயன்பாடு, அது திறந்த எண்ணற வாயில்கள்  என வாழ்வு மிகப் பெரிய அளவில் மாறியதென்றே  சொல்லலாம்

அங்கிருக்கையில் பரிச்சயமான நண்பர் ஒருவர் அய்யங்கார் வீட்டுப்பையன். அவர் சாதத்தை அமுது, ரசத்தை சாத்தமுது , பொரியலை கறியமுதென்றெலாம்  சொல்வது வேடிக்கையாக இருக்கும். சிரித்தால் புண்பட்டுப்போவாரென்பதால்  சிரமப்பட்டு அடக்கிக்கொள்வேன்

முனைவர் பட்டத்திற்கென சென்ற அவினாசிலிங்கம் மனையியல்  பல்கலையில் உணவு பெரும் கொண்டாட்டமாயிருக்கும்

ஆராய்ச்சி மாணவிகளும் ஆசிரியர்களும் ஒன்றாக உணவருந்தலாம். சாப்பிடுபவர்கள் தரையிலும் சிறு பீடம் போன்ற மேசையில் உணவுமாய் இருக்கும். கால் மடித்து சம்மணமிட்டு தினசரி நிறைய காய்கறி பழங்கள் கீரை இரவு தவறாமல் பால் குறைந்த உணவுக்கட்டணம், அங்கிருக்கும் போதுதான்  என் உடல் நல்ல சதை பிடித்தது

ஆய்வுக்கட்டுரை ஒன்று சமர்ப்பிக்க பெங்களூருவிற்கு முதன் முறையாக சென்றிருந்த போது        எதேச்சையாக அந்த பன்னாட்டு கருத்தரங்கிற்கு வந்திருந்தவர்களின் விமானச்சீட்டுகளுக்கான பணத்தை திரும்பத் தரும் பொறுப்பு எனக்கு தரப்பட்டது சுமார் 6 லட்சம் தொகையை எந்த சிக்கலுமின்றி 2 மணி நேரத்தில் கொடுத்து முடித்ததை கேள்விப்பட்ட அப்போதைய கர்நாடக முதல்வரும் அந்த உணவுப்பாதுகாப்புக் கருத்தரங்கின் சிறப்பு விருந்தாளாருமான  திரு. வீரப்ப மொய்லி அவர்கள் என்னையும் என் தோழியையும் இரவு  நடைபெற இருந்த விருந்திற்கு அழைத்திருந்தார். அதுவும் ஒரு மறக்க முடியா இரவுணவு

அரசியல் விருந்தென்றால்  என்னவென்று அப்போதுதான் அறிந்து கொண்டோம், லால் பாக் பூங்காவில் அமைக்கப்பட்ட விருந்துத்திடலில் நாங்கள்சாப்பிடாமல் விட்டுவந்த உணவு வகைகளே பல நூறு இருக்கும். உண்மையில் அது வெறும் விருந்தல்ல உண்டாட்டு

அங்கு சந்தித்த ஜெர்மனியிலிருந்து வந்திருந்த சுப்பாராவ் அப்போதிலிருந்து இன்று வரை  நண்பரானதும் அவரின் ஹைதராபாத் வீட்டில் அவர் மனைவி சமைத்து மொட்டை மாடியில் சாப்பிட்ட இரவு உணவும் அப்போது சுவைத்த காரசாரமான கொங்குராச்சட்டினியும்  நினைக்கையிலேயே நாக்கை சுறு சுறுப்பாக்கிவிடும்

ஜெர்மனியின் ரால்ஃப் வருடா வருடம்வருவதும் அவருடன் இணைந்து  சிறு தெய்வங்கள் பற்றிய குறும்படமொன்றினைத்தயாரிக்கும் பொருட்டு கிராமம் கிராமமாக அலைந்து பல சிறிய கடைகளில் உணவுண்டதும், ஒரு இரவில் தோழி பிரியாவின் வீட்டில் தங்கி இருக்கையில் ரால்ஃப் ½ மணிக்கொருமுறை மாடியிலிருந்து கீழிறங்கிச்சென்று தங்கநிறத்தில் தயாரித்துக்கொண்டுவந்து தந்த தேனும் எலுமிச்சையுமிட்ட தெய்வங்களுக்கு படைக்கும் தரத்துடனிருந்த  தேனீரும் அன்று இரவெல்லாம்  உறக்கமின்றி பேசிக்கொண்டிருந்ததும் மறக்க இயலா  இனிய நினைவுகளில் ஒன்று

முனைவர் பட்டத்திற்கு பின்னரும் வீடு திரும்பி சமையலை தொடர்ந்தேன், பின் திருமணம், வளைகுடா நாட்டிலிருக்கும் கணவருடன் செல்ல கடவுச்சீட்டு வாங்குவதில் ஏதோ பிரச்சனையாக இருந்ததால் அப்போது லவ்டேல் அத்தை வேளச்சேரியில் இருக்கும் ஸ்டாலின் அவர்களின் மனைவி தன் தோழியானதால் அவரிடம் சொல்ல என்னையும் கூட்டிச்சென்றிருந்தார்கள்  அன்று திருமதி துர்கா அவர்கள் சிறு வெள்ளித்தம்ளரில் அளித்த காபியைப்போல வேறெங்கும் இது வரை குடித்ததே இல்லை அப்படியான சுவை அதில்.

கணவரின் வீடான ஈரோடில் சாப்பிட அமர்கையில் ஒரு சிறு கிண்ணத்தில் நீர் நிரப்பி வைத்துக்கொண்டு அன்னக்கரண்டியை காயப்போடாமல்  அவ்வப்போது அதில் போட்டு வைக்கும் நூதன  வழக்கத்தை என் மாமியாரிடமிருந்து கற்றுக்கொண்டேன். ஈரோட்டில் புதுமணப்பெண்ணாக குலதெய்வக்கோயிலுக்கு பொங்கல் வைக்கசென்றிருக்கையில் என்னைத்தவிர அனைவரும் பதற்றமாகவே இருந்தார்கள்.  பின்னர் வைத்த பொங்கல் வடக்கில் பொங்கி வழிந்த பின்னரே அனைவரின் முகமும் இயல்பானது . முதல் பொங்கல் வடக்கில் விழுந்தால் வந்திருக்கும் பெண்ணால் வரவென்றும் தெற்கில் விழுந்தால் செலவென்றும் நிலவி வரும் நம்பிக்கையை நல்லவேளையாக என்னிடத்தில் முன்னரே சொல்லவில்லை என்று நினத்துக்கொண்டேன்

அந்த குழைந்த பச்சர்சிப்பொங்கல் சாப்பாட்டிற்கு கோவிலில் இவரின் அண்ணி செய்து கொடுத்த ஈரோட்டின் பிரபல பச்சைப்புளி ரசம் அத்தனை சரியாக இணைசேர்ந்திருந்தது. நான் சாப்பிட்டதிலேயெ ஆகச்சிறந்த ரசம் அதுதான். இப்படி உணவு சார்ந்த நம்பிக்கைகள், உணவு தரும் நம்பிக்கைகள் பற்றியெல்லாம் தனியாக ஒரு புத்தகமே எழுதலாம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பலப்பல நம்பிகைகள் இப்படி இருக்குமல்லவா ?

என் அப்பா தயிரையும் எண்ணையையும் சேர்ந்து வைத்தால் கடிந்துகொள்ளுவார் இனறும், விளக்கு வைத்த பின்னர் எண்ணை யாருக்கும் தரக்கூடாது, உப்பை கையில் தரக்கூடாது, இரட்டை வாழைப்பழத்தை சிறுமிகள் சாப்பிடக்கூடாது, சிறுவர்கள் வெற்றிலை போடக்கூடாது, தயிர் சோற்றில் மீன் கலந்து உண்ணக்கூடாது, கீரையை இரவில் சாப்பிடக்கூடாது, இப்படி எத்தனை எத்தனைகூடாதுகள்?  அவசியம் இந்த நம்பிக்கைகளுக்குப் பின்  இருக்கும்  அறிவியலை பதிவிடவேண்டும் யாராவது

 

அபுதாபி சென்று அங்கு அப்போது கிடக்காத பல தென்னிந்திய சமையல் பொருட்களின்றி சமைக்க திணறியது, கருவுற்றிருக்கையில் நல்ல பசியுடன் சாப்பிட அமர்ந்தால்  அங்கு கிடைக்கும் சிவப்பு கொட்டை அரிசி கண்ணைமுழித்துக்கொண்டு தட்டில் இருப்பதைக்கண்ட மாத்திரத்தில் கண்ணீர் நிறைந்துவிடுவதுமாய் துவக்கமே கண்ணைக்கட்டியது

வாழ்வின் கடினப்பாடங்கள் அப்போழுதும் முடிவடையாமல் வாத்தியார்கள் இன்னுமின்னுமென பாடம் நடத்த வரிசையாய் நின்று கொண்டிருந்த  கொடுமைக்காலம் அது

நிறைமாதமாய் இருக்கையில் அங்கிருந்த தோழி ஒருத்தி உள்ளேயே அமர்ந்து சாப்பிடலாம் என்னும் அளவிற்கு பெரிய தட்டில் 9 வகையான கலவை சாதம் அளித்து அவள் வீட்டுக்கூடத்தில் அமர்ந்து  நிறைவுடன் உண்டது மட்டுமல்லாது அதே தோழி செய்த ஒரு மகத்தான துரோகமும் கூட நினைவிலிருக்கிறது. இரண்டையுமே மறக்க முடியவைல்லை மறக்கக்கூடியதுமல்ல அது

வட இந்தியாவிற்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருக்கையில் லஸ்ஸி குடித்த பஞ்சாபி ஒருவரின் கடையில்  சலவை இயந்திரத்தில் லஸ்ஸி தயரித்துக்கொடுத்த புதுமையை இன்றும் என் மாணவிகளுக்கு பால் பொருட்கள் குறித்து பாடம் எடுக்கையில்  தவறாமல் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

அதைப்போலவே கொழும்புவில் அவர் இருந்த பல வருடங்களில் மிகச்சுவையான் உணவுகளை சுவைத்திருக்கிறோம். ஒரு புத்த பூர்ணிமா அன்று பண்டார நாயகா விமான நிலையத்திலிருந்து  வீடு  வரைக்கும் காரை நிறுத்தி நிறுத்தி எங்களுக்கு அம்மக்கள் அளித்த இனிப்புகள், அசங்க ராஜ பக்‌ஷ எனும் நண்பர் ஒருவரின் வீட்டில் செய்து தந்த வட்டாலப்பம் எனும்  வாயிலும் தொண்டையிலும் பின் மனதிலும் கூடஇன்னும்  இனித்துக்கொண் டே இருக்கும் அவர்களின் பாரம்பரிய இனிப்பு. எல்லாவற்றிற்கும் மேலாக  அங்கு கிடைத்த கட்டித்தயிர், மண் சட்டிகளில் துணி கட்டி விற்கப்படும் வாசனையான சுவையான எருமைத்தயிரை இங்கு எதற்கும் ஈடு சொல்லவே முடியாது .

நுவரேலியாவின் மாபெரும் பால்பண்னையொன்றிற்கு சென்றிருந்தபோது குடித்த பெரிய கண்ணாடித்தம்ளரில் தரப்பட்ட அருமையான குளிர்விக்கபட்ட மிகச்சுவையான அடர்த்தியான பாலைப்போல உலகில் வேறெங்கும் குடிக்கவே முடியாது என அடித்துச்சொல்லுவேன்

இலங்கை உணவகங்களில் பெரிய தாம்பாளமொன்றை மேசை நடுவில் வைத்து ஆடு கோழி மாடு மீன் இறால் என பலவகை இறைச்சிகளையும் கலந்து செய்த குழம்பொன்றை நடுவில் கொட்டப்பட்டிருக்கும் சோற்றுக்குவியலின் நடுவே ஊற்றி சுற்றி அமர்ந்திருப்பவர்களிடம் சிறிய கரண்டிகளை தருகிறார்கள் ஓரங்களிலிருந்து எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக பேசிச்சிரித்தபடி சாப்பிட துவங்குகிறார்கள். நம்மைபோல உணவகங்களில் தட்டு நம் முன்னால் வைக்கப்பட்டட்தும் அதன் மீது பாய்ந்து நிமிடமாய் உணவை முடித்து விடாமல் மெதுவாகப் சாபிட்டு அதிக நேரம் உணவகங்களில் செலவிடுகிறார்கள்

அது போன்ற ஒரு உணவகத்தில் அசைவம் சாப்பிடாத எனக்கு என்ன வேண்டும் என் கேட்டதற்கு நான் அரிசிச்சோறும் தயிரும் வாங்கிக்கொண்டேன் கேட்காமலேயே தேன் கொண்டுவந்தார்கள், அவர்கள் வெறும் சோற்றில் தயிர் பிசைந்து உண்பதில்லை தயிரில் தேன் கலந்து சாப்பிடுவதே அங்கு வழமை. நான் சோற்றில் உப்பும் தயிரும் பிசைந்து நறுக்கிய வெங்காயம் தொட்டுக்கொண்டு சாப்பிட்டதை பலர் எழுந்து வந்து வேடிக்கை பார்த்தனர்

உலர் சட்டினியான சம்பல் அதனுடன் இடியாப்பம். பாலில் வேக வைத்த அரிசிச்சோற்றுக்கட்டிகள்,  பெரும் தேங்காய்கள் என கொழும்புவின்  நினைவில் இருக்கும் உணவுகளின் பட்டியல் நீண்டது

ஹீரோ மோட்டார்ஸில் கணவர் வேலை செய்த குறுகிய காலத்தில் குர்கானில் ஒரு கடுங்கோடையில் விடுமுறையில் சென்று மாட்டிக்கொண்டேன். வெயில் ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொரு வடிவில் இருக்கும் என்பதை உணர்ந்த காலம் அது உடல் உருகும் வெம்மை அங்கிருக்கும்.  அங்கு ஒரு முறை வீட்டில் மட்டன் குழம்பு வைத்துக்கொண்டிருந்தேன். நான் சாப்பிடாவிட்டாலும் மற்றவர்களுக்கு அசைவம் சமைத்துக்கொண்டுதானிருக்கிறேன். மணக்க மணக்க வைக்கும் கைவாகு வாய்த்திருப்பதால்  விரிவான சமையல் அன்று. திடீரென கதவு தட்டும் சத்தம். வாசலில் ஒரு கிண்ணத்துடன் அருகில் குடியிருக்கும்   தனியே வசிக்கும் இரு இளைஞர்கள் .  குழம்பின் வாசனை இழுத்ததால் என்ன நினைத்தாலும் நினைத்துக்கொள்ளட்டும் கேட்டே விடுவோமென்று வந்துவிட்டார்கள். உண்மையில் எனக்கு கண்ணைக்கரித்துக்கொண்டு வந்து விட்டது. வீட்டையும் அம்மா கைச்சமையலையும் விட்டு பொருளீட்டும் பொருட்டு  பிரிந்து இப்படி எத்தனையோ  இளைஞர்கள் பழைய நினைவுகளை சுவைத்துக்கொண்டிருக்கிறார்களல்லவா? அன்று உணவை அந்த இளைஞர்களுடன் பகிர்ந்தே உண்டோம்.

என் மகன்களுக்கு இந்த நிலை வராமல் இருக்க இரண்டுபேரும் நன்றாகவே சமைக்க கற்றுக்கொண்டிருக்கிறார்கள்  சுவையான உணவுக்கு மட்டுமல்ல அருமையான புரிதலுடனான  இல்லறத்திற்குமாய் சேர்ந்தே அவர்கள் சமைக்க கற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆம் கணவன் மனைவி இருவருமாய் சேர்ந்து சமைத்து உண்னும் இனிய குடும்ப வாழ்வு அவர்களுக்கு அமையட்டும் என்பதுவே என் தினசரி வேண்டுதல். சமையலறைக்கு வெளியே ஒரு வசீகர உலகை நான் அடையாளம் கண்டுகொண்டிருக்கிறேன்  என் மருமகள்களுக்கு சமையலறையும் வசீகரமாகட்டும்

சின்ன மகன் தருண் அரைக்கும் விஷேச சட்னிகளுக்கு நான் பெரும் ரசிகை அவன் கொழுந்து நாரத்தை இலைகளை பருப்புடன் வறுத்து அரைக்கும் துவையலுக்கு சாப்பிடும் அனைவரும் நிச்சயம் ரசிகர்கள் ஆவார்கள். வெயில் வீணாய்ப்போகாமல் நிறைய ஊறுகாய்கள் போடக்கற்றுக்கொண்டிருக்கிறேன். நண்பர்கள் மத்தியில் இவை விசேஷமாய் பேசப்படும் அளவிற்கு சுவையாக இருக்கும்.

மகன்களைப்பற்றி இன்னுமொரு சுவையான சம்பவமிருக்கிறது. இவரின் தம்பிக்கு பெண் பார்க்கபோன இடத்தில் தட்டில் மிக்சர் கொண்டு வந்து வைத்தார்கள். அபுதாபியிலிருந்து வந்திருந்த நாங்களும் சென்றிருந்தோம். போன உடன் என் மாமியாருக்கு பெண்ணைபிடிக்கவில்லை அதையும் அவர்களிடமே நேரடியாக சொல்லியும் விட்டார். ஆனால் சரண் தருண் இருவரும் மிக்சர் பிடித்துவிட்டிருந்தது தட்டிலிருந்து கையை எடுக்கணுமே! பிடிக்கவில்லை என்றபின்னும் இருந்து  மிக்சரைக்காலி செய்துவிட்டு வந்த அபுதாபி சிறுவர்களை பற்றி என்னவெல்லாம் கேலிபேசினார்களோ அன்றைக்கு?

ஆனால் நகைமுரணாக அதே பெண் தான் இன்று அவர்களில் சித்தி. எங்கெங்கோ சுற்றி பெண் கிடைக்கமால் மீண்டும் அவர்கள் வீட்டிற்கே வந்து கெஞ்சிக்கூத்தாடி திருமணம் செய்து கூட்டி வந்தோம். உரிமையுள்ள வீடென்று தெரிந்துதான் மிக்ஸர் சாப்பிட்டு இருக்கிறார்கள்

மாணவிகளுடன் கல்விச்சுற்றுலாவிற்கு சென்று திரும்பும் வழியில் ஒருமுறை பேருர் கோவிலருகில் வந்ததும் அங்கும் பேருந்தை நிறுத்தி சாமிகும்பிடப்போனோம். திரும்பி பேருந்தில் எல்லோரும் அனேகமாய் ஏறிவிட்டபோது ஒரு மாணவி புளியோதரை தராங்க என்று ஒரு குரல் கொடுத்ததும் கும்பலாய் பலர்  மட மடவென இறங்கி பிரசாதம் வாங்கினார்கள் அதில் அவர்களின் ஆசிரியையான நானும் இருந்தேன்

திரு ஜெமோ அவர்களின் அனுமதியுடன் வெண் முரசு காட்டும் உணவுகள் குறித்து அன்னம் பிரம்மமென்னும் தலைப்பில் சமீபத்தில் உரையாற்றியபோது மகபாரதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும், உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய செலுத்து நெறிகளையும் ஒடுக்கு நெறிகளையும்பற்றி பலர் வியந்து தகவல்கள் கேட்டுக்கொண்டது மகிழ்வளித்தது.

இன்னும் சமையலில் சலிப்பு வராமல் புதிது புதிதாய் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். முன்னாள் முதல்வர் ஒருவருக்கு கல்லூரி விழா ஒன்றில் குழம்பு ஊற்ற முனைகையில் ’தேவி நிறைய ’தான்’ போடு என்றதும் குழம்பினேன். ஏதோ தோப்புக்கரணம் போடு முட்டி போடு என்பது போல என்ன இது தான்’ போடுவது என்று

பின்னர் அவரே ’முழிக்காதே தான் என்றால் குழம்பில் உள்ள காய்கறிகள் அள்ளி போடு என்றார்.

ஜெ மோ அவர்கள் நடத்தும் ஊட்டி முகாமில் கடந்த மார்ச் மாதத்தில் கலந்துகொண்டிருந்தேன். பொள்ளாச்சியிலிருந்து  நல்ல வெயிலில் கிளம்பிஅந்த குருகுலத்திற்கு சென்று சேர்கையில் நல்ல குளிரும் இளமழையுமாய் ரம்மியமாய் இருந்தது 7 மணிக்கெல்லாம் பற்கள் கிட்டிக்கும் குளிர்,  8 மணிபோல ஒரு பெண் துறவி  மணியடித்து அழைத்ததும் இரவுணவிற்கு சென்றோம், கொதிக்ககொதிக்க அரிசிச்சோறும் ஆவி முகத்தில் அடிக்கும்படி கொதித்த பல காய்களை பெரிது பெரிதாக வெட்டிப்போட்டிருந்த குழம்புமாய் அந்த சூடும் சுவையும் அபாரம். மலைக்காய்களுக்கே உரித்தான சுவையும் மணமும்  சூடாய் சாப்பிட்டதில் வயிறும் மனமும் சேர்ந்தே நிறைந்தது. கவிஞர் தேவதேவனும் அங்கிருந்தார் உட்கார இடமின்றி அவரருகில் உட்கார தயங்கிய என்னை பரவாயில்லை உட்காரும்மா என்றுதந்தையின் பாசத்துடன்  சொன்னதும் அவரருகில் அமர்ந்து அந்த குளிர் இரவில் நானும் தருணும் மற்ற பங்கேற்பாளர்களுமாய் சாப்பிட்டது வாழ்விலே ஒரு முறைதான் நிகழும் அற்புதக்கணங்களில் ஒன்று.

புதிய வார்த்தைகள் புதிய பக்குவங்கள் புதியசேர்மானங்கள், உத்திகள் என்று நாளும் கற்றுக்கொண்டே இருக்கிறேன்

யார் வந்தாலும் சின்ன அளவிலாவது சமைத்துச் சாப்பிட வைத்து அனுப்ப பெரிதும் முயலுவேன் . மனிதர்களுக்கு மட்டுமல்லாது பல வருடங்களாய் அதிகாலையில் காகங்களுக்கும் உணவிடுகிறேன். உப்புமா வைத்த  ஒரு நாள்  கல்லூரி வரை துரத்தி வந்து காகம் கொத்தியதை அடுத்து இப்போது அதை மட்டும் வைக்காமல் மற்றவற்றை அளிக்கிறேன். 6 மணிக்கு முன்னால் என் கையால் சாப்பிட்டு வருடக்கணக்காக பழகிய அவைகள் கொஞ்சம் தாமதமானலும் அதட்டி கத்திக்கூச்சலிட்டு என்னை ஒரு வழி பண்ணி விடும்

சில வருடங்களுக்கு முன்னால் வெண்முரசின் இரண்டாம் பாகத்தை மூன்றாம் முறை ஒரு மதிய நேரத்தில் தனியெ வீட்டிலிருந்து வாசிக்கையில் முன் வாசலில் காகமொன்றின் குரல் பலமாக வித்தியாசமாய் கேட்டுக்கொண்டே இருந்தது. வாசிக்க அது இடைஞ்சலாய் இருந்ததால் கொஞ்சம் எரிச்சலோடு பொறுமையின்றி சென்று பார்க்கையில் வாசல் திண்ணையேறி உள்ளே வர முயன்று கொண்டிருந்த  ஒரு கொம்பேறி மூக்கன் பாம்பை தலையிலேயே கொத்தியபடி என்னை அழைத்து எச்சரிக்கை குரல் கொடுத்த அந்த காகத்தின்  சோற்றுக்கடனை இப்போது நினைத்தாலும் உடல் சிலிர்க்கும் பாம்பை நானும் இன்னொரு பெண்ணுமாக துரத்தினோம் என்றாலும் சிலிர்ப்பூடும் நிகழ்வு இது

கடந்த வாரம் நல்ல மழை பெய்து கொண்டிருந்த காலையில் மின் கம்பிகளில் சொட்டச்சொட்ட நனைந்தபடி என்னை கூவி அழைத்தால் நான் நனைந்துகொண்டு வருவேன் என்பதால் எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாய் மழையில் நனைந்த படி காத்திருந்த அவற்றின் மனதை என்னவென்பது!. நெகிழ்ந்து போய்விட்டேன்

தோட்டத்தில்  வளர்க்கும் மரவள்ளிக்கிழங்குகளை தோண்டி சாப்பிட வரும் சிவப்புக்கண்களுடனான   சாம்பல் வண்ன முயல்கள், நான் கல்லுரி முடிந்து திரும்பும் மாலைவேளைகளில்  தோட்டக்கதவின் கம்பி இடைவெளியில் என் கால்களுக்குள் நுழைந்து ஓடும் போது கிடைக்கும் இன்பத்தை பதிவு செய்வதும் கடினம் அவற்றிற்கென்றே கிழங்குகளை மாற்றி மாற்றி பயிரிடுகிறேன் எப்போதும்

இளநீர் குடித்த பின்னர் வழுக்கையை தென்னையில் இருக்கும் அணில்கள் விரும்பி சாப்பிடும் என்பதால் மரத்தடியில் வைத்து விடுவோம் பாவமாய் திரும்பித்திரும்பி பார்த்தபடி பதற்றமாய் யாரும் பிடுங்கிக்கொண்டு போய்விடுவார்களோ எனும் அச்சத்துடனே அவசரமாய் இரு கைகளையும் ஏந்திக்கொண்டு அவை சாப்பிடும் அழகே அழகு

தேனீக்களும் வண்டுகளும் குளவிகளும் நீரருந்தவென்றே ஒரு கல்லுருளி பிரத்யேகமாய் நீர் நிரப்பி எப்போதுமிருக்கும் வீட்டில்

சிறு தொட்டி ஒன்று புன்னை மரத்தடியில் முத்துப்போன்ற பூக்கள் மிதக்க குளிர்ந்த நீருடன் காத்திருக்கும் காகங்களும் கொக்குகளும் கிளிகளும் நீரருந்தவென்று

வாழும் உயிருக்கெல்லாம் வயிற்றுக்கு சோறிட இயலாவிட்டாலும் முடிந்த வரை உதவலாமல்லவா?

பழங்குடி இனத்தைச்சேர்ந்த தோழி ராஜியின் ஊட்டி வீட்டில் சாப்பிட்ட மிகச்சுவையான மூங்கில் குருத்துக்குழம்பு, பாலக்காடு பிராமணப்பெண்ணான என் தம்பியின் காதல் மனைவி அவர்களின் மகளுக்கு ஒரு சிறு ஆட்டுக்குட்டியைக்காண்பித்து சாப்பாடு ஊட்டிகொண்டிருக்கையில் சரண் அப்பா சும்மாயிருக்க முடியாமல் ‘’ நீங்க எல்லாம் ஆட்டுக்குட்டியைப்பார்த்துட்டு சாப்பிடுவீங்க, நாங்க  ஆட்டுக்குட்டியையே சாப்பிடுவோம் ‘’ என்று சொல்லி வைக்க அது ஒரு சிறு குடும்பப்பூசலானது, இந்த ஆயுத பூஜைக்கு மயிலாப்பூரில் இருக்கும் தளிகை என்னும் பெயரில் ஒரு உணவகம் சென்று ‘’ பிராமணாள் போஜனப்பிரியராயிற்றே’’ சுவையாக இருக்குமென நம்பி சாப்பிட்டால் மண்ணள்ளி வாயிலிட்டது போல உப்பும் உரைப்பும் ஒன்றுமில்லாமல் இருந்தது, இப்படி இன்னும் எழுதினால் எழுதிக்கொண்டே போகலாமென்னும் அளவிற்கு உணவின் நினைவுகள் தளும்புகின்றது மனதில்

திரு ச. தமிழ்செல்வனின் எழுத்துக்கள் என் மனதின் அடியில் கனன்று கொண்டிருந்த பல  நினைவுகளை  ஊதி கொழுந்துவிட்டெரியச்செய்து விட்டது. எழுத்தில் எழுதியபின்னர் என்னவோ ஒரு நிம்மதியும் வந்திருக்கிறது. உளமயக்கோ என்னவொ ஆனால் கொஞ்சம் விடுதலை உணர்வுடன் இருக்கிறேன் இப்போது . அவருக்கு எனது நன்றிகள்

கால் கட்டும், கல்யாணமும்

பாலித்தீவில் மக்களிடையே ஒரு சமயம் சார்ந்த தொன்மையான பழக்கம் இருக்கின்றது. திருமண விழாக்களில் உயிருடன் ஒரு வாத்து மற்றும் ஒரு கோழியை அவற்றின் சின்னஞ்சிறியகால்களில் கல்லைக்கட்டி விட்டு ஏகப்பட்ட மந்திர உச்சாடனங்கள் மற்றும் பூசைகளின் பின்னர் கூட்டமாக ஒரு நீர் நிலைக்குச்சென்று அந்த ஒரு பாவமும் அறியா பறவைகளை  நீரில் விடுகிறார்கள். தப்பிக்க வழியின்றி மூழ்கி இறந்து அங்கேயே அவை மட்கி விடுவது புதிதாய் திருமணம் செய்துகொள்பவர்களின் குடும்ப வாழ்விற்கு  நல்லது என்னும் நம்பிக்கையின் பேரில் இது செய்யப்படுகின்றதாம்.கடவுளின் பெயரால்  செய்யபடும் வன்முறைகளில் இது உச்சமென்றே நான் நினைக்கிறேன்

எத்தனை குரூரம்?. மஞ்சள் நீரில் உடல் சிலிர்க்கும் பலி விலங்கினை கழுத்தின் குருதிக்குழாயை ஒரே வெட்டில் அறுக்கும் நம் சடங்கு  இதற்கு ஒப்பிடுகையில் பரவாயில்லை என்று நினைத்துக்கொண்டேன்.

உண்மையில் பல திருமணங்களில்  தப்பிக்க வழியின்றி   கல்லை கால்களில் கட்டிக்கொண்டு  மூழ்கி இறந்து  மட்கும் வரை இல்லறத்தில் இருக்கும் தம்பதியினருக்கும் இது பொருந்தும் அல்லவா இதைத்தான்நாம் கால்கட்டு என்று கல்யாணத்தை சொல்லிக்கொண்டிருக்கிறோமோ?

 

கடவுளுடன் சண்டை

கடந்த ஜூலையில் பாரதியார் பல்கலையில் என் பதவி உயர்வின் பொருட்டான  பயிற்சியின் ஒரு பகுதியாக  கல்லாறு தோட்டகக்லைத்துறை பழப்பண்ணைக்கும் திரும்பி வரும் வழியில் பிரசித்தி பெற்ற  மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலுக்கும் சென்றிருந்தோம். அங்கு செல்வது எனக்கு முதல் முறை.  கோவிலையொட்டிய சரிவில் அதிசயமாய், கறகள் ஒன்று போல நிறைந்திருக்குமாற்றில் தண்ணீர் கணிசமான அளவில் இருந்து ஒடிக்கொண்டுமிருந்தது.

சிறிய கோவில்தான் ஆனால் வெளியில் ஏகத்துக்கும் இடம், நல்ல கூட்டமும் கூட
சமீபத்தில் குண்டம் இறங்கி இருந்திருக்கிறார்கள் , அந்த சாம்பலை நிறைய அள்ளி நெற்றிக்கு இட்டுக்கொண்டும்,வீட்டிற்கு எடுத்துக்கொண்டும்  செல்பவர்களை பார்த்தேன்.

நீண்ட வரிசையில் காத்திருக்கும் போது பிரகாரத்தில் நடு வயதில் ஒரு பெண் நன்கு உடுத்திக்கொண்டு பின்னலில் கொஞ்சமாய் பூவெல்லாம் வைத்துக்கொண்டு கையில் ஒரு மஞ்சள் பையை பிடித்தபடி, அம்மன் இருக்கும்  திசை  நோக்கி  உட்கார்ந்து கொண்டு ‘’ கட்டையில் போறவளே என்று துவங்கி, நாசமாய் போயிருவே, நல்லா இருந்துருவியா ‘ என்று ஏகதுக்கும்  வசை பாடிக்கொண்டிருந்தார்கள், அனைவரும் திரும்பி பார்க்கும் படிக்கு உரக்க வேறு சண்டை.
சில சமயம் தொண்டை காய்ந்ததோ என்னவோ தலைகுனித்துகொண்டு கொஞ்ச நேரம் அமைதி, பின் மீண்டும் வரவழைத்துக்கொண்ட ஆங்காரத்துடன் அதே வசை

சந்தனக்காப்பில் அருளிக்கொண்டிருந்த அம்மனுக்கு உள்ளேயும் அர்ச்சனை நடந்தது.

இது போலவே முன்பொருமுறை பேருந்தில் சென்று கொண்டிருக்கையில் ஒரு பெண்மணி ஒரு கோவிலின் வாசலில் மண்ணைவாறி தூற்றிக்கொண்டிருந்தார்கள்
அவர்களும் என்னவோ கண்ணிருடன் வசைபாடிக்கொண்டிருந்தது இன்னும்நினைவில் இருக்கிறது

குலதெய்வக்கோவிலில்  பல சமயம் ஆடு பலியிட்டு முடிந்தபின்னர்   அந்த குருதி சிந்தியிருக்கும் இடத்தில்  சில  பெண்களுக்கு சாமி வந்து கூந்தல் சுழற்றி புடவையை இழுத்துச்செருகியபடி ‘’டேய் ‘’ என்று கணவர் உள்பட அனைவரையும் கூவி அழைத்தபடி, முழு எழுமிச்சையை வாயிலிட்டு  கடித்து துப்பியும், நாக்கில் கற்பூரம் ஏற்றிக்கொண்டும் அருள் வாக்கு சொல்வதை பலமுறை கண்டிருக்கிறேன்

எல்லா ஆண்களும் பவ்யமாக துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு ’’சொல்லு ஆத்தா உனக்கென்ன குறை’’ என் று நிற்பார்கள்
அது வேறு வகையிலான out let   என் று எனக்கு தோன்றும்

 உனக்கு என்ன வேணும் என்ரு ஒரு முறை கூட கேட்டிருக்காத ஆண்களுக்கான ஒட்டுமொத்த அதிர்ச்சி வைத்தியத்தை ஏதோ ஒரு பெண் குடும்ப விழாக்களில்  வலிந்து செய்து, அடுத்த வருட  குலதெய்வ விழா வரையிலும்  பெண்களுக்கு நடக்கவிருக்கும் அநீதிகளுக்கெல்லாம் கொஞ்சமாய்  ஏற்பாடு செய்து கொள்ளும் பிழையீடு   அது என்றெண்ணுவேன், கூடவெ மிக்க மகிழ்ச்சியுடன் அவள் சீக்கிறம் மலையேறிவிடக்கூடதென்று விரும்பியபடி வேடிக்கை பார்ப்பேன்

ஆனால் இப்படிகடவுளைஇப்படி பகிரங்கமாய் வசைபாடுவது?

இது என்ன மாதிரி மனநிலை ?

பைத்தியம்  என்று உறுதியாக சொல்ல முடியாதபடிக்கு சுயநினைவுடன் நல்ல தெளிவாகத்தான் பேசுகிறார்கள்

ஒரு வேளை கடவுள் இருப்பாரே ஆனால் வரிசையில் நின்று வேண்டிக்கொள்ளும் எங்களை விட, கடவுளை சொந்தமாய் நினைத்து, சண்டையிட்டு வசைபாடும் அளவிற்கு நம்பும் இவர்களுக்காவது எதாவ்து செய்யலாம்

நன்றிச்செண்டுகள்

கடந்த வருடம் எனக்கும் என் அம்மாவிற்குமாய் தீவிரசிகிச்சை அளித்த ஒரு  மருத்துவருக்கு நான் எழுதிய ஒரு கடிதம்இது.   தவிர்க்க முடியாதபடி மருத்துவத்திற்கு ஆளாகவேண்டியுள்ள  நோயாளிச் சமூகத்தின் பிரதிநிதியாக என் trigeminal neuralgia விற்கு பிறகு  மீண்டும் அவரிடம் குடும்பமாய் வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டி இருந்ததால் இரண்டிற்கும் சேர்த்து இந்த நன்றிக்கடிதத்தை கோவை மருத்துவர்  திரு பாலகுமார் அவர்களுக்கு எழுதினேன்.

எனக்கு ஏற்பட்ட வலியை எங்களூரில் பல் வலியென்று கண்டுபிடித்து (?) root canal சிகிச்சைக்கெல்லாம் என்னை தயார் படுத்தினார்கள். பின்னரே நான் அவரிடம் மருத்துவ ஆலோசனைக்காக வந்தேன். 20 நிமிடங்களில் இது ஒரு நரம்பு,  அதன் பாதுகாப்பிற்கென இருக்கும் மேற்பூச்சை இழப்பதால் வரும் கடுமையான வலி  என்னும் மிகச்சரியானதோர் கண்டறிதலுக்கு  வந்து, சரியான ஆலோசனை வழங்கினார். Remarkable diagnosis!!

MRI ,  CT எல்லாம்  எடுக்க சொல்லவில்லை.மிகத்துல்லியமான கண்டறிதல், அதற்கான குறிப்பிட்ட வலிநிவாரணியைப் பரிந்துரைத்தார்.. ஒரு வேளை இதற்கு மேலதிக சில பரிசோதனைகள் செய்ய வேண்டுமெனச்சொல்லியிருந்தாலும் கட்டுப்பட்டிருப்பேன். எனினும் அப்படி சொல்லாமல் எளிமையான முறையில் மிக விலைகுறைந்த   (20 மாத்திரைகள் 11 ரூபாய்கள்) சரியான மருந்துகளை பரிந்துரைத்தார். கோவை தற்போது medical capitol என்று அழைக்கப்பட்டாலும் அங்கும் நோயாளிகளை கசக்கிப்பிழியும் அறமற்ற மருத்துவமனைகளே ஏராளம் என்பதை அனைவரும் அறிவோம். எங்கள் குடும்ப மருத்துவர் வசந்திற்கு அடுத்து அறத்தின் பேரிலான  நிலைப்பாட்டுடன் சிகிச்சை அளிப்பது இவர்தான்

எனக்குப்பின்னர் வெகு சில நாட்களிலேயே என் பெற்றோர்களுக்கும் சிகிச்சை அதிலும் என் அம்மாவிற்கு அதி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சர்க்கரை நோயாளியான அம்மாவை 75 வயதிற்கு பின்னரான இந்த இருதய அடைப்பிலிருந்தும் அதன் உடனான சில கோளாறுகளிலிருந்தும் மீட்டெடுத்து உயிரளித்தது மருத்துவ இயலின் எல்லைகள் தாண்டிய ஒரு சிகிச்சை.

அவரிடம் மிகச் சிறப்பானதென்னவென்றால் நம்பிக்கை ஊட்டும்  உடல் மொழி.  அம்மா அப்பாவை மெல்ல தொட்டு அல்லது தட்டியபடி புன்னகையுடன் பேசும் அந்த உடல்மொழியிலேயே  உடல்நிலை பெரும்பாலும்  சீராகிவிடும்., அவ்வப்போது நல்ல தமிழிலும் பேசுகிறார்..

இந்தியாவில்  பெரிய சிக்கல். டாக்டர்களின் ஈகோ   என்பார் ஜெயமோகன். செகண்ட்ஒப்பீனியன் கேட்பதை பெரிய குற்றமாகவே எடுத்துக்கொள்ளும் நிலையில் அவர் மனமுவந்து அம்மாவை அம்மாவின் விருப்பத்திற்குரிய மருத்துவரிடம் காட்டவேண்டுமென்றால் காட்டசொல்லியதையும் நினைவு கூறுகிறேன்.. இரண்டாம் கருத்தை நாடினார் என்பதற்காகவே நோயாளிகளை தண்டிக்கும் டாக்டர்களைப்பற்றி நாம் ஏராளம் கேள்விப்பட்டிருக்கிறோம்.  அறத்துடன் திறமையும் பெருந்தன்மையும் சேர்ந்த ஒரு மருத்துவராக அவர் மேல் என் மதிப்பு பலமடங்கு கூடி இருக்கிறது இப்போது.

நோய்களுக்கு சிகிச்சைசெய்யும்போது நோயாளியின் மனதில் உள்ள அவநம்பிக்கையை போக்குவதையும் ஒரு சிகிச்சையாகவேசெய்யவேண்டுமென்றும் கேள்விப்பட்டிருக்கிறேன், ,.   உடல்நோய்களின் விளைவாக அவநம்பிக்கையிலும் வாழ்வு குறித்த எதிர்மறைசிந்தனையிலும் இருக்கும் நோயாளிகளை. வாழவேண்டுமென்ற விருப்புறுதி நோக்கி தள்ளிச்செல்வது மருத்துவரின் உடல்மொழியே.( ஜெயமோகன்) அதுவே நோய்களுக்கு முதல் மருந்து. அது அவரிடம் இருக்கிறது.

.  என் அம்மாவைப்போல முதுமையில் வலியின் முன் மண்டியிட்டு மன்றாடி   மருத்துவரிடம்   உடலை பலர் ஒப்படைக்கிறார்கள்.    நோய் எனும் அந்த ராட்சத வல்லமைக்கு சரியான  பதில் சொல்கிற ஒரு சில திறன் வாய்ந்த மருத்துவரகளில் அவரும் ஒருவர்.  அம்மா அடைந்த வேதனைகளிலிருந்து அவர்களை விடுவித்து. குணப்படுத்தினார். அவருக்கும் அவருடன் இணைந்திருந்த மருத்துவர்களுக்கும் என் நன்றிகள்.  ஒரு நேர்மையான திறமையான மருத்துவராக தனது பங்கை சரியாக செய்த ஒருவருக்கான நன்றிக்கடிதம் இது.

மருத்துவத்துறையின்  இந்த அறமின்மைக்கு மாற்றாக அவர் வெகு சீக்கிரம் துவங்கப்போகும் சொந்த மருத்துவமனை,    இருக்குமென்பதால் அதற்கு  “அறம் ” என்றே கூட பெயரிட்டுவிடலாம்.

மருத்துவத்துறை பெரும்பாலும் வணிகமயமாகிவிட்டநிலையில் எந்த  தகிடு தத்தங்களும் இல்லாமல் எளிய மருந்துகளின் மூலமாகவும் நம்பிக்கையான உரையாடல்களாலும் மாத்திரமே  வியாதிகளைக் குணப்படுத்தும் மருத்துவர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். என்பதற்கும்  என்னைப்போன்றவர்கள் முற்றிலும் நம்பிக்கையிழக்காமலிருப்பதற்கும்  திரு பாலகுமாரும்,திரு வசந்த் அவர்களுமே காரணம்.  எதிர்காலத்தில்இவரும்  திரு ஆல்வாவாகவே எளிய மக்களின் வாழ்வில் அறியப்படுவார் என்றே நம்புகிறேன், விரும்புகிறேன்,. அவரின் எதிர்கால புதிய சொந்த மருத்துவமனைக்கு என் வாழ்த்துக்களுடனும் ,மீண்டும் அனைத்திற்குமான நன்றிகளுடனும்

லோகமாதேவி

 

 

,

 

 

 

மலையாளமும் தமிழும்

மொழி சார்ந்த பல சிரமங்களுக்கு  திருமணமாகி கொங்கு நாட்டிலிருந்து அபுதாபிக்கு சென்றதும் நான் அனுபவித்திருக்கிறேன். அப்போதெல்லாம் இப்போது இருப்பதைப்போல தமிழ் ஆட்கள் இல்லை சுற்றிலும் மலையாளிகளே .எனக்கு பேசவும் யாரும் இன்றி  அவர்கள் பேசுவதும் புரியாமல்   நிலவரம்  ஒரே    கலவரமாக இருந்தது முதல் 6 மாதங்கள்

’’எந்தா சேச்சி கண்ணடை இட்டிருக்குனு?  காழ்ச்சி கொறவுண்டா? , பாங்கு விளிக்குன்ன சப்தம் கேட்டோ?’’ என்றெல்லாம் வேக வேகமாக என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் பேய் முழி  முழித்துக்கொண்டிருந்தேன்  வெயிலடிக்கும் பொழுதுகளில் ’’நல்ல பனி குட்டிக்கு’’ என்பதைக்கேட்டு குழம்பி இருக்கிறேன். பனிபிடிப்பது என்றால் காய்ச்சலென்று தெரிய வெகு நாட்களாகியது

’’இன்னலே’’ என்றால் நான் இன்றைக்கு என்று பலநாட்கள் நினைத்துக்கொண்டிருக்கையில் அதற்கு ‘’நேற்று’’ என்று அர்த்தம என்பதே பல மாதங்கள்  கழித்துத்தான் தெரியவந்தது.

சரண் வயிற்றிலிருந்த போது எனக்கு இனிப்புகள் தர வந்த ஒரு மலையாளி பெண்மணி  ’’ தேவி நல்ல வண்ணம் வச்சுட்டுண்டு’’ என்றதும் நான் நல்ல நிறமாகிவிட்டேன் என்று நினத்து பூரித்துப்போய், பின்னர்  சரண் அப்பா   வண்ணம் வைப்பது என்றால் குண்டாவது  என்று விளக்கமளித்தபின்னர் ஏகத்துக்கும் கவலைப்பட்டேன்

புதியதாய் வாங்கிய இட்லிச்சட்டியில் ’’இன்னும் கொறைச்சு வெள்ளம் வைக்கணும்’’ என்று என்னிடம் சொல்லப்பட்டதை நான் இன்னும்  குறைவாக என்று அர்த்தம் பண்ணிக்கொண்டு மிகக்குறைவாக தண்ணீர்  வைத்து பாத்திரம் கரிப்பிடித்த கதையெல்லாம் நடந்த பின்னர் சுதாரித்துக்கொண்டேன்

காரியமாக தினம் ஏசியானெட்டும் கைரளியுமாகப் பார்த்து பேப்பரும் பேனாவுமாய் களம் இறங்கி  3 வருடங்களில் சரளமாக மலையாளம் பேசவும், மனசிலாக்கவும் முடிந்தது, ஆசான் சுரேஷ் கோபியின் கற்பித்தலில் பல மலையாளக்கெட்டவாரத்தைகளும்  கூட கற்றுக்கொண்டேன்!!!

இப்போது இங்கு கல்லூரியில் கேரளாவிலிருந்து மாணவர்கள் சேர்க்கை என்றால் கூப்பிடு லோகமாதேவியை என்னுமளவிற்கு மலையாளம் அத்துப்படி. கேரளவிலிருந்து வருபவரகளிடம் ‘’ஒண்ணு வேகம் போய் ஃபிஸ் அடைக்கணும்  கேட்டோ, நமக்கு  கோர்ஸினைக்குறிச்சு பின்ன  சம்சாரிக்காம் ‘’ என்பேன் அவர்களும் உடன் பணம் கட்டிவிடுவார்கள்.

ஆனால்  மலையாளம்  அத்தனை இனிமையான மொழி. அந்த பாஷையின் இனிமையிலிருந்து வெளியெற மனசின்றி இன்னும் இன்னுமென பேசிப்பேசி அதிகம் நான் இப்போழுது பேசுவதும் விரும்புவதும் தமிழை விடமலையாளத்திலேயே !

காருண்யமும் ஆனந்தமும்

சரண் பள்ளியில் ஆனந்த உற்சவத்திற்கு அவனுடன் நாங்களும் 3 நாட்கள் தங்க வேண்டி இருந்தது. அவன் பள்ளிக்கு அருகிலிருக்கிறது காருண்யா.

காருண்யா பல்கலைக்கழகத்திற்கு பலமுறை நான் சென்றிருக்கிறேன் எப்போது அந்த சாலைவழி சென்றாலும் மீண்டும் மீண்டும் செல்ல விரும்பும் ஒரு இடமாகவே இருக்கும் எனக்கு காருண்யாவும் பெதஸ்தாவும்

இந்த முறையும் கணவர் மகனுடன் சென்றேன். வழக்கம் போலவே அங்கு எங்குமே புற்களை மிதிக்காதீர்களென்றோ பூக்களைப்பறிக்காதீர்களென்றோ புகைப்படம் எடுக்ககூடாதென்றோ., எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் சுதந்திரமான தேவன் இருக்குமிடமாகவே அன்றும் இருந்தது.

தொட்டுவிடலாமெனும் அண்மையில் மேற்கு தொடர்ச்சிமலைத்தொடர்களும்,. முகில் மூடிய மலைமுகடுகளும், நீர்த்துளி ததும்ப செழித்து வளர்ந்திருந்த புல்தரைகளும், பூக்களும் பறவைகளின் கீச்சிடலுமாக அங்கிருந்த சிலமணி நேரமும் நான் இறையின் அண்மையை உணர்ந்தவாரே இருந்தேன்

 

7 காட்சிகளையும் தேவனின் வரலாறையும் கண்டோம். சிலுவை சுமக்கும் காட்சியில் உருகி அங்கேயே கொஞ்சநேரம் நின்றேன். காட்டிக்கொடுக்கும் காட்சியிலும் அப்படியே.

Betrayal அதுதான் யுகம் யுகமாக மானுடத்தை தொடர்ந்துவந்துகொண்டே இருக்கிறது என்று நினத்துக்கொண்டேன். உண்மையில் பெரும் துரோகமென்பது பொதுவில் அனைவரும் நினைப்பது போல படுக்கையில் நிகழ்வதில்லை,நம்பிக்கை துரோகமே மாபெரும் பாவம். ஒருவரின் மேலான நமது உளமார்ந்த நம்பிக்கை முற்றாக அழிக்கப்படுகையில் நாமும் அழிந்தேதான் போகிறோம்  அந்த கணத்தில். ஏற்படும்அந்த விரிசல்கள் மீண்டும் ஒட்டுவதில்லை

தேவன் உயிர்தெழுவதையும் அங்கிருந்த அறிவிப்புபலகையில்  I am alive for ever and ever  எனும் வாசகங்களையும் பார்த்தபடி இருந்தேன் சிலநிமிடங்கள்

மழை இல்லை எனினும் இளவெயிலும் ஈரக்காற்றும் இருந்த்தது. தங்கநிறத்தில் கண்ணாடி இறகுகளுடன்  தும்பிகள் இணை இணையாக பறந்தன அந்த புல்வெளி எங்கும்

தெய்வீகக்ககுளத்தின் அருகில் சிறிதுநேரமிருந்தேன். சிறு சிறு கைவளையல்களாகவும், சில்லறைக்காசுகளாகவும் குளத்தின் அடியில் சேர்ந்திருந்தன நம்மில் பலரின் நம்பிக்கைகள்

ஒரு மூத்த சகோதரி புடவைத்தலைப்பால் முக்காடிட்டுக்கொண்டு விவிலியத்தை மடியில் பிரித்துப் படித்தபடி கண்களில் தாரை தாரையாய் நீர்பெருக அமர்ந்திருந்தார்

இன்னுமோர் இளைஞன் முழந்தாளிட்டு முகத்தை அங்கிருக்கும் ஒரு பீடத்தில் புதைத்தபடி இருந்தான் அவன் அழுதுகொண்டிருக்கிறான் என்பதை மெல்ல குலுங்கும் அவன் முதுகிலிருந்து அறிந்தேன்

கீச்சுக்குரலும் உற்சாகமுமாய் கத்தியபடி சில குழந்தைகளுடன் 2 குடும்பங்கள் வந்தன.. இவை எல்லாவற்றையும் கடந்து ஒரு இளைஞர்புறவுலகின் தொடர்பிலிருந்து முற்றிலும் விடுபட்டவராக கடமையே உருவாக தோட்டத்திற்கு நீர் பாய்ச்சிக்கொண்ட்ருந்தார் .

அங்கிருந்த chapel ல் இன்னும் நிறைய மனிதர்கள், பெரும்பாலும் வேண்டுதல்களுடன் மன்றாட்டுகளுடன் துயரங்களுடன் நம்பிக்கைகளுடன் விருப்பங்களுடன்  அழுதும் தொழுதும் கொண்டிருந்தார்கள். என்னிடம் ஒரு சகோதரி வந்து மென்குரலில் எனக்கு ஏதாவது பிரார்த்தனைகளோ வேண்டுதல்களோ இருந்தால் சொல்லலாமென்றார்.

அவரின் கண்களை  புன்னகையுடன் நேராக சந்தித்து எனக்கு வேண்டுதல்களோ குற்றச்சாட்டுக்களோ, ஏன்புகார்களோகூட ஏதுமில்லை என்றேன். எனக்கு அன்று உண்மையில் இறைவனிடன் சொல்லிக்கொள்ள ”நான் அவரைக்கண்டுகொண்டேன்” என்னும் ஒரு சேதியே இருந்தது

அந்த பெண்ணின் கண்ணீரிலும்,, அந்த இளைஞனின் துயரத்திலும், குழந்தைகளின் உற்சாகத்திலும், அந்த நீர்பாய்ச்சிக்கொண்டிருந்த இளைஞனின் கடமைஉணர்விலும்,அங்கிருந்த மரங்களின் பூக்களிலும், பறவைகளிலும்,ஏதோதோ காரணத்தின் பொருட்டு அங்கு வந்திருந்த மனிதர்களின் நம்பிக்கையிலும் அந்த நம்பிக்கைகளின் மறு வடிவாக காலத்தைக்கடந்தபடி நீரின் அடியில் காத்திருக்கும் வளையல்களிலும் நான் இறைவனைக்கண்டேன்

கிருஸ்து எனும் ஒரு குறிப்பிட்ட சமயத்தின் கடவுளையல்ல நான் அங்கு உணர்ந்தது  எல்லாபடைப்புக்களுக்கும் மூலமான பிரம்மத்தை பெரும் இறையையே கண்டுகொண்டேன்.

அந்த சுவரெழுப்பிக்கட்டப்பட்ட சுண்ணம் பூசிய  சுவர்களுடனிருந்த அந்த பிரார்த்தனைக்கூடத்தில் மட்டுமல்ல , பச்சைபசேலென்ற அந்த தோட்டத்திலும், பலைமுகடுகளிலும் மனிதர்களிலும், பறவைகளிலும் புல் பூண்டுகளிலுமே தேவன் இருந்தார்

காருண்யாவின் வரலாறோ அதன் உரிமையாளர்களின் கதைகளோ அவர்களின் கல்விப்பணியோ எதுவும் எனக்கு ஒரு பொருட்டாகவில்லை அன்று. அந்த இயற்கை நிரம்பி ததும்பி வழிந்துகொண்டிருக்கும் இடத்தை நமக்களித்த அந்த குடும்பத்திற்கு  என் நன்றிகளைத்தெரிவித்துக்கொண்டேன் மானசீகமாய்

அடுத்த 3 நாட்களும் இதற்கு முற்றிலும் வேறானதோர் மனநிலையில் இருந்தேன் ஆனந்த உற்சவத்தில்

பூஜ்யஸ்ரீ ஸ்வரூபானந்தாக்களும் அனுகூலானந்தாக்களும் எங்களுக்கு அனுக்கிரஹமளித்து உய்வித்தார்கள். நல்ல உயர்தரமான துணியில் தயாரிக்கப்பட்ட உன்னதமான, எளிமைக்கும் துறவிற்கும் அடையாளமாகிய காவியை அணிந்திருந்தார்கள்.

முதன்மை ஸ்வரூபானந்தா நிகழ்சியை துவங்க வருகை தரும் முன்பு ஏகத்திற்கும்  பெற்றோர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அலைபேசியை முற்றிலும் அணைத்துவிடவேண்டும், சிறுகுழந்தைகளுடன் வந்திருப்பவரகள் அவை தொல்லை தராமல் சப்தமிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் இப்படி பலபல கட்டளைகள்.

அந்த ஸ்வரூபானந்தா மேடையில் இயந்திரமாய் சில வார்த்தைகளைப்பேசிவிட்டு பின் கீழே  கூடைப்பந்து மைதானத்தை அரங்காக மாற்றியிருந்ததால் அங்கு வந்து அமர்ந்தார் அவரின் பாதம் தரையில் படுமுன்பெ அவரின் பாதத்திற்கும் மண்தரைக்குமிடையே ஒரு குட்டிப்பட்டுத்தலையணை வைக்கப்பட்டது

40 வயதைக்கடந்த பெற்றொர்களின் 2800 பேர் இருந்த அந்த பெரும் கூட்டத்திற்குஅவர் அம்புலிமாமா கதைகள் சொன்னார் ஆன்மீகசொற்பொழிவென்ற பெயரில்

மிகுந்த நாடகத்தன்மையுடன் கைகளை அசைத்தபடியும் ஒரு வசதியான ஆசனமொன்றில் அம்ர்ந்துகொண்டே எந்த உணர்ச்சியும் இல்லாதும் அவர் அதைசொல்லிக்கொண்டிருந்தார்.  பூரணகும்ப மரியாதையுடன் அவர் ஒரு அவதார புருஷராகவே நடத்தப்பட்டார். அவரின் அகமொழியாகிவிட்ட அழகான ஆங்கிலத்தில் பேசினார் ஆனால் ஜெயமோஹனின் எழுத்துக்கள் வழி நாமடையும் பரவசமும் உணர்வெழுச்சியும் ஒரு கணமும் அங்கிருந்த யாருக்கும் ஏற்படவேயில்லை.

சொற்பொழிவு (!!!!!) முடிந்தபின்னர் அவரின் காலடியில் மடமடவெனெ விழுந்த யாரயும் அவர் கவனிக்கவும் இல்லை. இயந்திரம் போல கைகள் அருளாசி வழங்கிக்கொண்டிருந்தது.

காருண்யாவில் இறையையும், சுதந்திரத்தயும் ஆனந்தாவில் அவதாரபுருஷர்களையும் ஆசாமிகளையும் விதிகளையும் ஒருசேரப்பார்த்தது நல்ல வித்தியாசமானதோர் அனுபவமாயிருந்தது

 

இதுவா ரகசியம்?

 

சில வாரங்களுக்கு முன்னர் பிரபல புலனாய்வுப்பத்திரிக்கை ஒன்றில்   சில கோடிகள் செலவில் பள்ளிப்பெண்களுக்கான சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் குறித்த ஒரு பதிவு வந்திருந்தது. அதற்கான புகைப்படத்தில் சில பெண்கள் சீருடையில் அந்த இயந்திரத்தினின்றும் நாப்கின்களை எடுக்கிறார்கள். அவர்கள் முகத்தை முழுவதுமாக மறைத்து வெளியிட்டு இருக்கிறார்கள். ஏன்?
பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பெண்கள் கூட முன்வந்து சமுதாயத்தில் முகம் காட்டி நீதி பெறும் இந்த நாளில், பாலியல் தொழிலிருந்து மீண்டு வந்த ஒரு பெண் தன் கடந்து வந்த பாதையை புத்தகமாக வெளியிட்டிருக்கும் காலத்தில், நாப்கின் எடுத்து உபயோகிப்பது இன்னும் மறைக்கப்பட வேண்டிய விஷயமா? வெகு ஜன ஊடகங்களே இதிலிருந்து இன்னும் வெளி வரவில்லையெனில் எப்படி மற்றவர்களிடம் இதற்கான் புரிதலை எதிர்பர்க்க முடியும்?  மாதவிடாயென்பது, தவிர்க்க முடியாத, பெண்கள் எதிர்கொண்டே ஆக வேண்டிய ஒன்றென   ஆண்களின் உலகம் அறிந்து கொள்வதெப்போது?

சானிடரி நாப்கின் விற்கும் பன்னாட்டு கம்பெனியே பெயரை whisper என்று தானே சொல்லிகொள்கிறது/? இது ரகசியமாய் இருக்க வேண்டியது ஆனால் பூப்பு நன்னீராட்டு விழாவிற்கு தெருவடைத்து   பந்தலிட்டு அழைப்பிதழ் கொடுத்து, ஊரெங்குமாய் போஸ்டர் அடித்து, முரசறிவிக்காத குறையாக  அந்த இளம் பெண்  உடல் ரீதியாக கருத்தரிப்புக்கு தயாராகிவிட்டதை அனைவருக்கும் அறிவித்துக் கொண்டாடி மகிழலாம் இல்லையா? என்ன முரண் இது?

மருத்துவ இயலின் படி  ஒவ்வொரு மாதமும், கருத்தரிப்பிற்காக, கருப்பையின் உள் மடிப்புகளில் (endometrium), ஒருவேளை அந்த முதிர்ந்த முட்டை கருவாகுமேயானால், அதற்கு போதிய ஊட்டச்சத்தை வழங்குவதற்காக போதிய இரத்தம் கருப்பையின் உட்புற மடிப்புக்களில் தேங்கி இருக்கும்

விளம்பரங்களில் வருவது போல ஒரு சில சொட்டுக்களல்ல இந்த மாதவிடாய் குருதிப்போக்கென்பது. பெண் கருத்தரிக்காத நேரங்களில் இம் மடிப்புகளில் உள்ள  இழையங்களும்,  நுண்ணிய குருதிக் குழாய்களிலிருந்து வெளிவரும் குருதியும் சேர்ந்து  வெளியே கழிவாக தள்ளப்படுகிறது. உடன் சிலருக்கு கடும் வலியும் தசைப்பிடிப்பும் கால் குடைச்சலும்  கூட இருக்கும். இந்நிகழ்வு மாதந் தோறும் சுமார் மூன்று முதல் ஏழு நாட்களுக்கு நடைபெறுகிறது.

 

பெரும்பாலான பெண்கள் மாதவிடாயின்போது 50 மி.லி. வரை உதிரம் இழக்கிறார்கள். ஒரு பெண் தன்  வாழ்நாளில் சுமார் 3,500 நாட்கள் மாதவிடாயில்  இருக்கிறாள்
இந்த நாட்களில் தங்கள் உள்ளாடைகள் கறைபடாதிருக்கவே அணையாடை அல்லது அடைப்பான்  எனப்படும் நாப்கின்களை உபயோகிக்கின்றனர். உடலில் இருந்து வெளியாகும் அனைத்து கழிவுகளைப்போலவேதான் மாதவிலக்கு உதிரமும்  தூய்மையற்றது.  கசியும் தன்மை கொண்ட அதனை கட்டுப்படுத்தவும் முடியாது

 

சூடாயியம், இந்து  இசுலாமிய மற்றும் பல்வேறு மதங்கள் மாதாந்திர சுழற்சியில் இருக்கும்  பெண்களை பல நிகழ்வுகளிலும் தடை செய்து அவர்கள் அப்போது தனித்து இருக்க வேண்டுமெனவே வலியுறுத்துகிறது

மாதவிலக்கு நாட்களில் இவ்வாறு விலக்கபப்டுவதும், இதோடு வலி, எரிச்சல், சோர்வு, கசகசப்பு தனிமை எல்லாம் சேர, பெண்களும் இந்த நாட்களை பெரும்பாலும் வெறுக்கிறார்கள்.

இவற்றுடனேதான் பெண்கள் இந்த ஆண்களின் உலகில் எல்லா துறையிலுமே முன்னடி எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள். உயிரியல் ரீதியாக பலவீனமானவர்கள் என்று சொல்லப்படும் பெண்கள்தான் ஆண்களுக்கான உணவு, உடை அவர்களுக்கான பாதுகப்பான சுத்தமாக பரமரிக்கப்பட்டிருக்கும் வீடு ஆகியவற்றை அளித்துக்கொண்டிருக்கிறார்கள். மாத விலக்கு நாட்களில் பெண்களுக்கு தேவையானது கருணையோ இரக்கமோ அல்ல அப்படி ஒன்று இருக்கிறது எனும் புரிதல் மட்டுமே

பெண்களை பெரும்பாலும்  வெறும் உடலாக மட்டுமே அறிந்துகொண்டிருக்கும் இந்த ஆண்களுக்கானது என்று சொல்லப்படும் உலகில் இந்த உடல்ரீதியான ஒரு நிகழ்வு குறித்த புரிதல் இல்லாமலிருப்பது அநீதி. மளிகைக்கடையிலும் மருந்துக்கடையிலும் இந்த நாப்கின்களை பெண்களே வெட்கப்பட்டுக்கொண்டு கேட்பதும் கடைக்காரர் ஒரு நாளிதழில்  அதை  மறைவாக சுற்றிஎடுத்துக்கொண்டு வருவதும்  தேவையே இல்லை.

1960 இல் இருந்து  பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சியை மாற்றும் மருந்துகளைக் கொண்டு மாதவிடாய் நேருவதையும் கருத்தரிப்பதையும் கூட தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளத்துவங்கி இருக்கிறார்கள்.

உரக்க சொல்லப்படவேண்டியதுமில்லை, ரகசியமும் இல்லை, இந்த மாதவிடாய் எனும் உடலியல் நிகழ்வை.  ஒரு மருந்துக்கடையில் feminine hygienic  பொருளொன்றை நான் கேட்கையில் அங்கிருக்கும் பெண்கள் நமுட்டுச்சிரிப்புடன் அதை எடுத்துக்கொடுத்தது இன்னும் நினைவில் இருக்கிறது, பெண்கள் முதலில் நமக்கு நிகழ்வதென்ன என்னும் புரிதலுடன் இருக்க   வேண்டும்

எல்லா நாளையும் போலவே குருதிக்கசிவு இருக்கும் இந்த நாட்களில் விளம்பரங்களில் காட்டுவது போல  விமானம் ஓட்டும் , குதிரை சவாரி செய்யும், நீளம்தாண்டும் பெண்கள் மட்டுமன்றி பேருந்தின் நெரிசலில் சிக்கி பயணிக்கும் பெண்களையும் ஓய்வின்றி குடும்பதிற்காக உழைக்கும் பெண்களையும், இது போல அவர்கள்  இயங்கும் பல தளங்களையும் ஆண்கள் கட்டாயம் எண்ணிப்பார்க்கவேண்டும். இந்த சில  நாட்கள் விலக்கி வைக்கப்படவேண்டியது அல்லவே அல்ல என்பதை இதுபோன்றதோர் சுழற்சியின் முட்டையிலிருந்து உருவான ஆண்களாலும் பெண்களாலும் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த உலகம் புரிந்துகொள்ளவேண்டும்

உலகம் தொடர்ந்து இயங்க காரணமாயிருக்கும் மாதாந்திர முட்டை உற்பத்தி பெண்கள் வெட்கப்பட வேண்டிய விஷயமும் ஆண்கள் அருவருப்பு படவேண்டிய விஷயமும் ரசியமாய் வைத்துக்கொள்ள்ப்பட வேண்டிய விஷயமும் அல்ல இது சரியான புரிதலுடன் எதிர்கொள்ள வேண்டிய ஒன்று. அதற்காக சுகாதாரமான நாப்கின்கள் பயன்படுத்துவோரின் முகங்கள் நிச்சயம் மறைக்க படவேண்டியதல்லவே அல்ல

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 

இன்று நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் அதாவது நான் இளங்கலை படித்த தற்போது துணைப்பேராசிரியராகப் பணிபுரிகின்ற கல்லூரியில்,வைரவிழாகொண்டாட்டங்களில் ஒன்றாக முன்னாள் மாணவர்களின் சந்திப்பும்  அப்போது3 சிறந்த முன்னாள் மாணவர்களுக்கு விருது  வழங்குதலும் நிகழ்ந்தது  .

விழாவின்பொருட்டு நேற்றிலிருந்தே அத்தப்பூக்கோலம் போடத் துவங்கி இன்றும் காலையில் சென்று அதை மற்ற தோழிகளின் உதவியுடன் முடித்தேன்

அடுத்த முறை பூக்கோலம் போடுகையில் வழமைபோல வட்டமாக conventional design ல், போடாமல் புதிதாய் சிலவற்றை முயற்சிக்க இன்றே பல மாதிரிகள் பார்த்து வைத்துக்கொண்டேன்

என் வாழ்வில் இதுபோல எளிமையான விஷயங்களில் என்னை ஈடுபடுத்திக்கொள்ளவும் மனமொன்றி அவற்றை செய்துமுடிக்கவும்  இன்னும் வாய்த்திருப்பதிலும் இயலுவதிலும் மகிழ்கிறேன்

விருது பெற்றவர்களில் ஒருவர் தமிழகவானிலை துறை இயக்குனர் திரு பாலசந்திரன். வெகுநாட்களுக்குப்பிறகு நல்ல மழை பொழிந்த இன்னாளில் அவர் இங்கு வந்திருந்து விருது பெற்றது பொருத்தமாக, மகிழ்வாக இருந்தது

என் வகுப்பு நண்பர்களில் சிலரே வந்திருந்தார்கள் அதுவும் பெருமுயற்சிக்குப்பின்னர். பலர் வரவில்லை  பல காரணங்களின் பொருட்டு

வந்திருந்த நாங்கள், செல்வமணி, செல்வகுமார், கண்ணன், சிவச்சந்திரன், ஜூனியர் சிவச்சந்திரன் (  ஜூனியர் புவனா என்று சொல்வதே பொருத்தம் அப்படியே அம்மாவின் ஜாடை அதே கண்கள் , அதே உடல்மொழி!), டேவிட்,மயில்சாமி, ரவி, மட்டுமே

விழாவில் சிறிது நேரமும்  பின்னர் கல்லூரியை, துறையை சுற்றிப்பார்த்ததுமாய் பொழுது போனது. கல்லூரி அடியோடு மாறிப்போனதுபோல நாங்கள் வெகுவாய் மாறி இருக்கவில்லை. உருவம் மட்டுமே மாறியிருந்தது, உள்ளமும் சுபாவமும் அப்படியே இருந்ததால் இயல்பாய் 28 வருடங்கள் பின்னொக்கி செல்லவும் மகிழ்ந்திருக்கவும் முடிந்தது. வராத சிலரும் நினைவில் எங்களுடன் இருந்தார்கள், அனைவருமாய் அமுதசுரபியில் மதிய உணவு, பின்னர் கோபியை வலுக்கட்டாயமாக பணிபுரியும் இடத்திற்கே சென்று சந்திதோம்,  செல்வமணியின் காரில் மயில்சாமி மற்றும் ரவி என்னை கொண்டுவந்து வீட்டில் சேர்த்துவிட்டு சென்றார்கள், வீட்டில் இருக்கும் பென்சில் மரத்தின் தாவரவியல் பெயர் எனக்குதெரியுமா என ரவி சோதித்து கேள்விகேட்டதும் நான் ‘Acacia auriculiformis’   என சரியாக சொல்லிவிட்டேன். (என்கிட்டேயேவா?)

பல வருடங்களுக்குப்பிறகு நண்பர்களைச்சந்தித்ததில் மகிழ்ச்சி அனைவருக்கும்,

மாறிவரும்காலகட்டமும் அதற்கேற்றாற் போல மாறிவரும் வாழ்வின் இயங்கியலும், வெகுவாய் மாற்றத்துக்குள்ளாகிவிட்டிருக்கும்  உயர்கல்வித்துறைக்குறித்தும், குடும்பத்தைக்குறித்தும், பேராசிரியர்கள்பற்றியும் நிறையப்பேசினோம்

இனி வரும் காலங்களில். அனைவரும் குடும்பநண்பர்களாய் என்றென்றைக்குமாய் தொடரணும் என்றே அனைவரும் விரும்பினோம் அதுகுறித்து நிறைய பேசினோம், அப்படியே நடக்கட்டும்! அனைவரின் சார்பாகவும்  வந்திருந்த அனைவருக்கும் வரமுடியாமற் போனவர்களுக்குமாய் எனதன்புகள் என்றென்றைக்குமாய்!

பின்னர் கணிதத்துறை இந்துமதி மேடம் வீட்டுத்திருமணம், அஸ்ஸாம் மாப்பிள்ளையும் கொங்குப்பெண்ணும், கூடுதல் மகிழ்ச்சி மணமக்களைகண்டதில். அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும்  அன்புகளும்.

காணிநிலம் வேண்டும்

தினம் நாட்குறிப்பு எழுதிக்கொண்டிருந்தேன் பின்னர் சில காரணங்களால் வேறுசில விஷயங்களை prioritize செய்ததில் தினசரி நடந்தவற்றை எழுதுவது நின்றே போனது. பின்னர் இருந்த சோர்வான மனநிலையில் ஏதும் எழுதவோ வாசிக்கவோ இல்லை. 3 நாட்கள் விடுமுறையில் வந்திருந்த சரண் எப்போதும் போலான அம்மாவை காணும் ஆவலில் ,என்னை தேற்றியதோடு இந்த வலைப்பூவை துவங்கிக் கொடுத்து அவசியம் தினசரி எழுதிக்கொண்டும் வாசித்துக்கொண்டும் எப்போதும் போல மகிழ்ச்சியான அம்மாவாக இருக்கணும் எனும் அன்புக்கட்டளை இட்டுச்சென்றிருக்கிறான்

அதிகாலை துவங்கி இரவு 8 மணி வரையிலான அலைச்சல் மிகுந்த மிக மீண்ட நாள் இன்று. சரணை மீண்டும் விடுதியில் விட்டுவிட்டு வந்தது, என்னை இன்னும் சிறு பெண்ணைப்போல எண்ணிஅரைமணிக்கொருதரம் நலம்விசாரித்துக்கொண்டும் கவலைப்பட்டுக்கொண்டும் இருக்கும் மித்ராவை அவளின் சீர்கெட்ட உடல்நிலையுடன் கண்டது. எனக்கு மிகப்பிரியமான பவானியை அவள் திருமணத்தின் பொருட்டு சென்று பார்த்து அவள் இனி இந்தியாவிலிருந்துபுறப்பட சிலநாட்களே இருக்கிறது என்னும் கசக்கும் உண்மையை அறிந்தது உள்பட பல காரணங்களால் நான் உளச்சோர்வுடன் இருந்தேன் எனினும் இரவு வீடு திரும்பி காரின் முகப்பு வெளிச்சத்தில் ஒளிரும் பச்சிலைகளும் சின்ன சின்ன உருண்டைக்காய்களுமாய் தெரிந்த புன்னைமரத்தைக்கண்டதும் என் சோர்வெல்லாம் மறைந்துவிட்டது
இந்த வீடு எனக்குத்தரும் நம்பிக்கையும் ஆசுவாசமும் வேறேதுவும் யாரும் எப்போழுதும் அளித்ததில்லை
பல வருடங்களுக்கு முன்னர் இந்தியா வந்து 2வருடங்களாகிய காலகட்டத்தில் இங்கே வீடு கட்ட நான் முடிவு செய்தபோது ஆதரிக்க யாருமில்லாததைவிட அத்தனைபேரும் எதிர்த்தார்கள், உலகமே தாழ்பணிந்து நகரமயமாக்கலுக்கு பின்னால் சென்று கொண்டிருக்கையில் பொள்ளாச்சியிலிருந்து இரு மகன்களுடன் ஒரு குக்கிராமத்திற்கு செல்வதான என்முடிவை பைத்தியக்காரத்தனமென்றே அனைவரும் அபிப்பிராயப்பட்டார்கள்
எனினும் என் முடிவில் உறுதியாய் இருந்தேன் அப்போதைய உடல்நிலையையோ அரசுப்பணி அமையாததால் கல்லூரியின் பணிச்சுமைஉள்ளிட்ட பல பிரச்சினைகளோ எதுவும் எனக்கு முக்கியமாக இல்லாமல் இந்த வீட்டைக்கட்ட எல்லா முயற்ச்சிகளையும் செய்தேன்
பள்ளிப்பிராயத்திலிருந்தே இதுபோல பசுமரங்கள் சூழ்ந்த ஒரு வீடு என் கனவு
பாரதியை எழுத்து எழுத்தாக மனனம் செய்திருந்த பள்ளிப்பருவத்தில் மிகக்கவரந்த பாடல்கள் என்றால் காணி நிலம் வேண்டுமென்னும் பராசக்திக்கு பாரதியின் விண்ணப்பக்கவிதையும், கண்ணம்மா எனும் காதலிக்கு எழுதிய காற்றுவெளியிடையும் தான்
நிலவூறித்ததும்பும் விழிகளும் அமுதூற்றினை ஒத்த விழிகளும் பத்தரைமாற்றுபொன்னொத்த மேனியுமாய் வர்ணித்து,வையத்தில் தானுள்ள மட்டிலும் அவளன்றி வேற்று நினைவில்லை எனச்சொல்லும், காதல் ததும்பி வழியும் இந்த கவிதையே, இந்த நிமிடம் வரையிலும் நான் வாசித்த ஆகச்சிறந்த காதல் கவிதை
காணிநிலம் வேண்டும் கவிதை வாசிக்க வாசிக்க அந்த காட்சிகள் மனதில் விரிந்துகொண்டெ செல்லும் பக்கதிலேயே இருக்கும் பத்துப்பனிரெண்டு தென்னைமரங்களும், கத்தும் குயிலோசையும், பாட்டுக்கலந்திட பத்தினிப்பெண்ணொருத்தியும், முத்தாய்ச்சுடரும் நிலவும்,தென்னங்கீற்றும், தூய வெண் மாடங்களும், அங்கே காவலிருக்கும் அன்னையுமாய் என் மனதிலும் அப்படி ஒரு இயற்கையுடன் இணைந்த மாளிகை வாசிக்கும் தோறும் மனதில் எழுந்து வந்து, ஆழ்மனதில் அச்சித்திரம் அப்படியே பதிந்துவிட்டிருக்கிறது
வீடு கட்டுகையிலேயே 12 தென்னை மரங்களை எண்ணி நட்டு வைத்தேன்.
சிறிதாக 4 அறைகளுடன் சிமிழ் போல ஒரு வீடும் சுற்றி மரம்செடிகொடியுமாய் திட்டமிட்டு வீட்டைக்கட்டினேன்
புன்னை தென்னை வேம்பு பலா, வெற்றிலை குமிழி,தேக்கு,வாழை செம்பருத்தி, நெல்லி மா,மூங்கில்,மந்தாரை அரப்பு விளா,சாம்பங்காய், கொய்யா,எலுமிச்சை, மல்லிமுல்லை கீரைகள், பனை,கமுகு,சப்போட்டா,சந்தனம்,சென்பகம்,பென்சில் மரம், நாரத்தை,நொச்சி,ஜூனிபர்,சைகஸ்,ஆடாதொடை, கனகாம்பரம்,முட்டைபழமரம்,பேஷன் பழக்கொடிமுருங்கை, பூஜைக்கான மலர்களுக்காக பல செடிகள், கிண்ணம் கிண்ணமாய் 2 வண்ணங்களில் பூத்துதள்ளும் அலமண்டா,ரோஜாக்கள்,பப்பாளி,மல்பெரி, மர, பாட்டில் பிரஷ், இலுப்பை, இலவம் மகிழம்,மலைவேம்பு,என்று எனக்கு பிரியமான எல்லாம் வைத்து வளர்த்திருக்கிறேன்
கத்தும் குயிலோசை மட்டுமன்றி எண்ணிலடங்கா பறவைகளின் குரலிலேயே விடிகிறது என் எல்லாக்காலைகளும். புன்னைமர நிழலின் குளிர்ச்சியில் இருக்கும் தொட்டித்தண்ணீரைஅருந்த வரும் மரங்கொத்தியும், காகமும்,கிளிகளும் புறாக்களும் எத்தனை எத்தனை அழகு
பலாவில் குடி இருக்கும் நாரைகள் இரண்டும்,மலைவேம்பின் பழங்களை கொத்தித்தின்ன வரும் கிளிக்கூட்டமும்,பட்டுப்பூச்சிகளும் ஓணான்களும் தட்டாரப்பூச்சிகளும், எறும்புக்கூட்டங்களும், பச்சோந்திகளூமாய் பல்லுயிருக்கும் புகலிடமானது இவ்வீடு
நட்டு வைத்துநீரூற்றீய எனக்கு எந்த வஞ்சமும் இன்றி காயும் பழமும் இலையும் காற்றுமாய் அள்ளி அள்ளிதந்துகொண்டிருகின்றன இம்மரங்களூம் செடிகளும்
என்னிடம் இருந்து ஏதும் எதிர்பார்க்காத, என்னை எப்போழுதும் வஞ்சிக்காத, நிராகரிக்காத, என்னை ஒருகணமும் தாழ்வாக எண்ணவைக்காத என் பிரிய மரங்கள்  , துரோகங்களாலும் வஞ்சங்களாலும் நிரைந்து வழியும் இவ்வுலகிலிருந்து மூச்சுத்திணறியபடி மாலை நான் வீடு திரும்புகையில் கிளையசைத்து , குதூகலமாய் வரவேற்கும் மரங்களும்,ஓய்வான வேளைகளில் கயிற்றுக்கட்டிலில் தென்னைமரத்தடியில் அமர்ந்து பாடல்கள் கேட்டுக்கொண்டும், புத்தகம்வாசித்துகொண்டும், இருக்கும் என்னை, அன்னையின் ஸ்நேகத்துடன் குனிந்துபார்த்தவாறிருக்கும் இவற்றை விட எனக்கு என்ன ஆ்றுதல் இருக்கும்?
பொழியும் நிலவினில் மகன்களுடன் கதைபடித்துக்கொண்டு கதை சொல்லிக்கொண்டு, பின்னிரவு வரையிலும் விழித்திருந்தபடி, விண்மீன்களையும் சிவப்பும் பச்சையுமாய் கண்சிமிட்டிக்கொண்டு இறங்கியபடியோ மேலேறிக்கொண்டோ இருக்கும் விமானங்களை வேடிக்கை பார்த்தவாரோ, அன்றி பிடித்த உணவினை சமைத்து உண்டபடியோ கழித்த எண்ணற்ற அற்புத கணங்களுகெல்லாம நான் என்ன கைமாறு செய்துவிட முடியும் இம்மரங்களுக்கும் செடிகளுக்கும்
எளியதும் நம் கண்முன்னே கையருகில் இருக்கும் ஒன்று அரியதாக இருக்க முடியாதென்றும் .அருகிலிருப்பது என்றுமே அரிதானதாயிறாது என்றுமே நாம் நம்பத்தலைப்பட்டிருக்கிறோம், அப்படி இல்லை எனபதை நான் , தாவரங்களுடனான இவ்வீட்டின் வாழ்வனுபவத்தில் சொல்கிறேன்

இயற்கையுடன் இணைந்த பசுமை சூழ்ந்த இருப்பிடம் தரும் உற்சாகமும்,அவை மீள மீள தரும்  வாழ்வின் மீதான பிடிப்பையும் அனுபவித்தால் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும்,

Newer posts »

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑