சரண் பள்ளியில் ஆனந்த உற்சவத்திற்கு அவனுடன் நாங்களும் 3 நாட்கள் தங்க வேண்டி இருந்தது. அவன் பள்ளிக்கு அருகிலிருக்கிறது காருண்யா.
காருண்யா பல்கலைக்கழகத்திற்கு பலமுறை நான் சென்றிருக்கிறேன் எப்போது அந்த சாலைவழி சென்றாலும் மீண்டும் மீண்டும் செல்ல விரும்பும் ஒரு இடமாகவே இருக்கும் எனக்கு காருண்யாவும் பெதஸ்தாவும்
இந்த முறையும் கணவர் மகனுடன் சென்றேன். வழக்கம் போலவே அங்கு எங்குமே புற்களை மிதிக்காதீர்களென்றோ பூக்களைப்பறிக்காதீர்களென்றோ புகைப்படம் எடுக்ககூடாதென்றோ., எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் சுதந்திரமான தேவன் இருக்குமிடமாகவே அன்றும் இருந்தது.
தொட்டுவிடலாமெனும் அண்மையில் மேற்கு தொடர்ச்சிமலைத்தொடர்களும்,. முகில் மூடிய மலைமுகடுகளும், நீர்த்துளி ததும்ப செழித்து வளர்ந்திருந்த புல்தரைகளும், பூக்களும் பறவைகளின் கீச்சிடலுமாக அங்கிருந்த சிலமணி நேரமும் நான் இறையின் அண்மையை உணர்ந்தவாரே இருந்தேன்
7 காட்சிகளையும் தேவனின் வரலாறையும் கண்டோம். சிலுவை சுமக்கும் காட்சியில் உருகி அங்கேயே கொஞ்சநேரம் நின்றேன். காட்டிக்கொடுக்கும் காட்சியிலும் அப்படியே.
Betrayal அதுதான் யுகம் யுகமாக மானுடத்தை தொடர்ந்துவந்துகொண்டே இருக்கிறது என்று நினத்துக்கொண்டேன். உண்மையில் பெரும் துரோகமென்பது பொதுவில் அனைவரும் நினைப்பது போல படுக்கையில் நிகழ்வதில்லை,நம்பிக்கை துரோகமே மாபெரும் பாவம். ஒருவரின் மேலான நமது உளமார்ந்த நம்பிக்கை முற்றாக அழிக்கப்படுகையில் நாமும் அழிந்தேதான் போகிறோம் அந்த கணத்தில். ஏற்படும்அந்த விரிசல்கள் மீண்டும் ஒட்டுவதில்லை
தேவன் உயிர்தெழுவதையும் அங்கிருந்த அறிவிப்புபலகையில் I am alive for ever and ever எனும் வாசகங்களையும் பார்த்தபடி இருந்தேன் சிலநிமிடங்கள்
மழை இல்லை எனினும் இளவெயிலும் ஈரக்காற்றும் இருந்த்தது. தங்கநிறத்தில் கண்ணாடி இறகுகளுடன் தும்பிகள் இணை இணையாக பறந்தன அந்த புல்வெளி எங்கும்
தெய்வீகக்ககுளத்தின் அருகில் சிறிதுநேரமிருந்தேன். சிறு சிறு கைவளையல்களாகவும், சில்லறைக்காசுகளாகவும் குளத்தின் அடியில் சேர்ந்திருந்தன நம்மில் பலரின் நம்பிக்கைகள்
ஒரு மூத்த சகோதரி புடவைத்தலைப்பால் முக்காடிட்டுக்கொண்டு விவிலியத்தை மடியில் பிரித்துப் படித்தபடி கண்களில் தாரை தாரையாய் நீர்பெருக அமர்ந்திருந்தார்
இன்னுமோர் இளைஞன் முழந்தாளிட்டு முகத்தை அங்கிருக்கும் ஒரு பீடத்தில் புதைத்தபடி இருந்தான் அவன் அழுதுகொண்டிருக்கிறான் என்பதை மெல்ல குலுங்கும் அவன் முதுகிலிருந்து அறிந்தேன்
கீச்சுக்குரலும் உற்சாகமுமாய் கத்தியபடி சில குழந்தைகளுடன் 2 குடும்பங்கள் வந்தன.. இவை எல்லாவற்றையும் கடந்து ஒரு இளைஞர்புறவுலகின் தொடர்பிலிருந்து முற்றிலும் விடுபட்டவராக கடமையே உருவாக தோட்டத்திற்கு நீர் பாய்ச்சிக்கொண்ட்ருந்தார் .
அங்கிருந்த chapel ல் இன்னும் நிறைய மனிதர்கள், பெரும்பாலும் வேண்டுதல்களுடன் மன்றாட்டுகளுடன் துயரங்களுடன் நம்பிக்கைகளுடன் விருப்பங்களுடன் அழுதும் தொழுதும் கொண்டிருந்தார்கள். என்னிடம் ஒரு சகோதரி வந்து மென்குரலில் எனக்கு ஏதாவது பிரார்த்தனைகளோ வேண்டுதல்களோ இருந்தால் சொல்லலாமென்றார்.
அவரின் கண்களை புன்னகையுடன் நேராக சந்தித்து எனக்கு வேண்டுதல்களோ குற்றச்சாட்டுக்களோ, ஏன்புகார்களோகூட ஏதுமில்லை என்றேன். எனக்கு அன்று உண்மையில் இறைவனிடன் சொல்லிக்கொள்ள ”நான் அவரைக்கண்டுகொண்டேன்” என்னும் ஒரு சேதியே இருந்தது
அந்த பெண்ணின் கண்ணீரிலும்,, அந்த இளைஞனின் துயரத்திலும், குழந்தைகளின் உற்சாகத்திலும், அந்த நீர்பாய்ச்சிக்கொண்டிருந்த இளைஞனின் கடமைஉணர்விலும்,அங்கிருந்த மரங்களின் பூக்களிலும், பறவைகளிலும்,ஏதோதோ காரணத்தின் பொருட்டு அங்கு வந்திருந்த மனிதர்களின் நம்பிக்கையிலும் அந்த நம்பிக்கைகளின் மறு வடிவாக காலத்தைக்கடந்தபடி நீரின் அடியில் காத்திருக்கும் வளையல்களிலும் நான் இறைவனைக்கண்டேன்
கிருஸ்து எனும் ஒரு குறிப்பிட்ட சமயத்தின் கடவுளையல்ல நான் அங்கு உணர்ந்தது எல்லாபடைப்புக்களுக்கும் மூலமான பிரம்மத்தை பெரும் இறையையே கண்டுகொண்டேன்.
அந்த சுவரெழுப்பிக்கட்டப்பட்ட சுண்ணம் பூசிய சுவர்களுடனிருந்த அந்த பிரார்த்தனைக்கூடத்தில் மட்டுமல்ல , பச்சைபசேலென்ற அந்த தோட்டத்திலும், பலைமுகடுகளிலும் மனிதர்களிலும், பறவைகளிலும் புல் பூண்டுகளிலுமே தேவன் இருந்தார்
காருண்யாவின் வரலாறோ அதன் உரிமையாளர்களின் கதைகளோ அவர்களின் கல்விப்பணியோ எதுவும் எனக்கு ஒரு பொருட்டாகவில்லை அன்று. அந்த இயற்கை நிரம்பி ததும்பி வழிந்துகொண்டிருக்கும் இடத்தை நமக்களித்த அந்த குடும்பத்திற்கு என் நன்றிகளைத்தெரிவித்துக்கொண்டேன் மானசீகமாய்
அடுத்த 3 நாட்களும் இதற்கு முற்றிலும் வேறானதோர் மனநிலையில் இருந்தேன் ஆனந்த உற்சவத்தில்
பூஜ்யஸ்ரீ ஸ்வரூபானந்தாக்களும் அனுகூலானந்தாக்களும் எங்களுக்கு அனுக்கிரஹமளித்து உய்வித்தார்கள். நல்ல உயர்தரமான துணியில் தயாரிக்கப்பட்ட உன்னதமான, எளிமைக்கும் துறவிற்கும் அடையாளமாகிய காவியை அணிந்திருந்தார்கள்.
முதன்மை ஸ்வரூபானந்தா நிகழ்சியை துவங்க வருகை தரும் முன்பு ஏகத்திற்கும் பெற்றோர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அலைபேசியை முற்றிலும் அணைத்துவிடவேண்டும், சிறுகுழந்தைகளுடன் வந்திருப்பவரகள் அவை தொல்லை தராமல் சப்தமிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் இப்படி பலபல கட்டளைகள்.
அந்த ஸ்வரூபானந்தா மேடையில் இயந்திரமாய் சில வார்த்தைகளைப்பேசிவிட்டு பின் கீழே கூடைப்பந்து மைதானத்தை அரங்காக மாற்றியிருந்ததால் அங்கு வந்து அமர்ந்தார் அவரின் பாதம் தரையில் படுமுன்பெ அவரின் பாதத்திற்கும் மண்தரைக்குமிடையே ஒரு குட்டிப்பட்டுத்தலையணை வைக்கப்பட்டது
40 வயதைக்கடந்த பெற்றொர்களின் 2800 பேர் இருந்த அந்த பெரும் கூட்டத்திற்குஅவர் அம்புலிமாமா கதைகள் சொன்னார் ஆன்மீகசொற்பொழிவென்ற பெயரில்
மிகுந்த நாடகத்தன்மையுடன் கைகளை அசைத்தபடியும் ஒரு வசதியான ஆசனமொன்றில் அம்ர்ந்துகொண்டே எந்த உணர்ச்சியும் இல்லாதும் அவர் அதைசொல்லிக்கொண்டிருந்தார். பூரணகும்ப மரியாதையுடன் அவர் ஒரு அவதார புருஷராகவே நடத்தப்பட்டார். அவரின் அகமொழியாகிவிட்ட அழகான ஆங்கிலத்தில் பேசினார் ஆனால் ஜெயமோஹனின் எழுத்துக்கள் வழி நாமடையும் பரவசமும் உணர்வெழுச்சியும் ஒரு கணமும் அங்கிருந்த யாருக்கும் ஏற்படவேயில்லை.
சொற்பொழிவு (!!!!!) முடிந்தபின்னர் அவரின் காலடியில் மடமடவெனெ விழுந்த யாரயும் அவர் கவனிக்கவும் இல்லை. இயந்திரம் போல கைகள் அருளாசி வழங்கிக்கொண்டிருந்தது.
காருண்யாவில் இறையையும், சுதந்திரத்தயும் ஆனந்தாவில் அவதாரபுருஷர்களையும் ஆசாமிகளையும் விதிகளையும் ஒருசேரப்பார்த்தது நல்ல வித்தியாசமானதோர் அனுபவமாயிருந்தது
Leave a Reply