கடற்பயணங்களை குறித்து அதிகம் வாசிக்கிறேன், நேரம் கிடைக்கையில் எல்லாம். கல்லூரியில் பரிணாமக்கோட்பாடுகளை கற்பிக்கையில் டார்வினின் 5 வருடக் கடற்பயணத்தை விவரிப்பேன், கூடவே அவரின் காதலை, உடல்நிலையை பார்த்துக்கொள்ளுங்கள் என்று காதலியும் மனைவியும் ஆன எம்மா அவருக்கு அடிக்கடி எழுதும் கடிதங்களையும் சேர்த்துச் சொல்லுவேன்.
இன்று கப்பல் பெயரிடல் மரபுகள் தொடர்பான பொதுவான கடல்சார் வரலாற்றையும் டார்வினின் HMS Beagle பயணத்தையும் கொஞ்சம் இறங்கிப்போய் அல்லது நீந்திப்போய் வாசித்தேன்.
அப்போதெல்லாம் யார் அரசாட்சியில் இருக்கிறார்களோ அதைப் பொறுத்து HMS என்பது பொருள் கொள்ளப்படும்.”His/Her Majesty’s Ship” என்பது “அரசர்/அரசியின் கப்பல்” என்று பொருள்படும்.
அரசர் ஆட்சியில் இருந்தால் → His Majesty’s Ship (HMS)
அரசி ஆட்சியில் இருந்தால் → Her Majesty’s Ship (HMS)
வார்த்தை மாறினாலும், சுருக்கெழுத்து “HMS” என்றே தொடர்ந்து பயன்படுத்தப்படும்.
பிரிட்டிஷ் கடற்படையின் கப்பல்களுக்கு முன்னால் இந்த முன்னொட்டு வைக்கப்படுவது வழக்கமாக இருந்தது.
டார்வின் பயணித்த காலத்தில் (1831–1836) நான்காம் வில்லியம் மன்னராக இருந்ததால், அது His Majesty’s Ship Beagle ஆக இருந்தது. ஆனால் திரும்பியபோது விக்டோரியாவின் ஆட்சி என்பதால் அப்போது அது Her Majesty’s Ship என்றானது. இந்த HMS முன்னொட்டுக்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது.
1649-ல் இங்கிலாந்தில் முடியாட்சிக்கெதிரான உள்நாட்டுப் போரினால் முதலாம் சார்லஸ் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டு முடியாட்சி முடிவுக்கு வந்தது. பின்பு ஆலிவர் க்ரோம்வெல் தலைமையில் “Commonwealth of England” என்னும் பெயரில் முடியாட்சி இல்லாத அரசாட்சி வந்தது; பின்னர் ஏகப்பட்ட குழப்பங்கள் மீண்டும் நாடுகடத்தப்பட்டிருந்த முதலாம் சார்லஸின் மகன் இரண்டாம் சார்லஸ் வரவழைக்கப்பட்டு அரசராக முடிசூட்டப்பட்டார்.
இந்த மறுசீரமைப்புக்குப் பின்னரே “Royal Navy” என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக மீண்டும் புழக்கத்திற்கு வந்தது. க்ரோம்வெல் காலத்தில் அது “Commonwealth Navy” என அழைக்கப்பட்டது; அப்போதுதான் அரசருக்குச் சொந்தமான கப்பல்களுக்கு “His Majesty’s Ship” எனும் முன்னொட்டும் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது.

HMS எனும் முன்னொட்டு பெறும் கப்பல்கள் உண்மையிலேயே அரச குடும்பத்திற்குச் சொந்தமானவை என்பதை குறித்தது. ஏனெனில் அப்போதெல்லாம் அரசர் தனக்கென பல போர்க்கப்பல்களை வைத்திருப்பதில்லை, தேவைப்படும்போது கப்பல்களை வாடகைக்கு எடுப்பதோ கையகப்படுத்துவதோதான் வழக்கமாக இருந்தது. அரசுக்குச் சொந்தமான, அதிகாரப்பூர்வமான கப்பல்களை தனியார் கப்பல்கள், வணிகக் கப்பல்கள் ஆகியவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டவே இந்த முன்னொட்டு தேவைப்பட்டது. நீர்மூழ்கிக் கப்பல்களுக்கும் HMS முன்னொட்டு பயன்படுத்தப்பட்டது .”His Majesty’s Submarine” எனும் பொருளில், அவை HMS/m என எழுதப்படும்.
1911-ல் ஐந்தாம் ஜார்ஜ் , ஆஸ்திரேலிய கடற்படைக்கு “Royal Australian Navy” எனும் பட்டத்தை வழங்கியபோது, HMAS (His Majesty’s Australian Ship) எனும் தனி முன்னொட்டு உருவானது.
மனித குல வரலாற்றின் தொடக்கத்தைச் சொன்ன டார்வினின் பரிணாமக் கொள்கை உருவாகக் காரணமாக இருந்த HMS Beagle கப்பலைக் குறித்துப் பார்க்கலாம்.
HMS Beagle (இந்தப் பெயரில் வந்த ஒன்பது கப்பல்களில் இது மூன்றாவது) 1820 மே 11ல் லண்டன் அருகே தேம்ஸ் நதிக்கரையில் உள்ள வூல்விச் கப்பல் தளத்தில் முதன்முதலில் கண்காணிப்பு, தூது போன்ற பணிகளுக்காக. கடலிறக்கப்பட்டது. “Beagle என்பது வேட்டை நாய் இனத்தின் பெயர்.— மணத்தைப் பின்தொடர்ந்து, தடம் துரத்தும் ஒரு சிறிய, விடா முயற்சி கொண்ட நாய்.
இது 10 பீரங்கிகள் கொண்ட, எடைகூடிய இரு பாய்மரங்களைக் கொண்ட “brig” வகைக் கப்பலாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அதன் நீளம் சுமார் 28 மீட்டர், அகலம் சுமார் 8 மீட்டர். 1820-ல் நான்காம் ஜார்ஜ் மன்னருக்கான கடற்படை அணிவகுப்பில், முழுமையாக பாய்மரங்கள் பொருத்தப்பட்ட நிலையில் பழைய லண்டன் பாலத்தின் அடியில் கடந்து சென்ற முதல் கப்பல் இதுதான்.
1825-ல் Beagle மேலும் ஒரு பாய்மரம் மூன்றாவதாகச் சேர்க்கப்பட்டு “bark” வகைக் கப்பலாக மாற்றப்பட்டது. அது (1826-30), லெப்டினன்ட் Pringle Stokes தலைமையில், தென் அமெரிக்கக் கடற்கரையை அளவிடும் முதல் பணிக்காக HMS Adventure கப்பலுடன் சேர்ந்து அனுப்பப்பட்டது. 1828-ல் கேப் ஹார்னில் தனிமையும், கடுமையான வானிலையும், மனச்சோர்வும் இணைந்ததால் ஸ்டோக்ஸ் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, லெப்டினன்ட் Robert FitzRoy கப்பலுக்குக் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ஃபிட்ஸ்ரோய் தனது இரண்டாம் பயணத்தில் நன்கு படித்த, கடற்பயணத்தைத் தாங்கும் ஆரோக்கியம் கொண்ட இளைஞர் ஒருவரைத் துணையாக அழைத்துச் செல்ல விரும்பினார்.
கடற்பயண நெறிகளின்படி கேப்டன் தன்னைவிட கீழ்நிலையில் உள்ள யாருடனும் நெருக்கமாக இருக்கக் கூடாது, கப்பலில் அனைவருமே அவரைவிடக் கீழ்நிலையில்தான் இருந்தார்கள், எனவே சம சமூக அந்தஸ்துடைய புத்திசாலியுமான ஒருவரை உடன் அழைத்துச் செல்ல ஃபிட்ஸ்ரோய் விரும்பினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை அவர் இதற்காகத் தொடர்பு கொண்டார்.
டார்வினின் ஆசிரியரான ஹென்ஸ்லோ, ஃபிட்ஸ்ரோய் க்கு துணையாக இருக்கக்கூடிய, இயற்கை வரலாற்றைப் படிக்க ஆர்வமுள்ள ஒரு இளைஞரைப் பரிந்துரைக்கும்படி கேட்கப்பட்டார். மூவரை அவர் பரிந்துரைத்தார். முதலிருவரும் இந்த வாய்ப்பை நிராகரித்த பின், டார்வின் பட்டியலின் முதலிடத்திற்கு வந்தார். டார்வினின் தந்தை பயணத்திற்கு அனுமதி தரவும்,பயணத்துக்கு போதுமான நிதியுதவி கிடைக்கவும் பல வாரங்கள் ஆனது.
1831 டிசம்பர் 27 முதல் 1836 அக்டோபர் 2 வரை நடந்த, புவியியல் ஆய்வுக்காக மனித வரலாற்றை மாற்றிய அந்த இரண்டாம் ஆய்வுப் பயணத்தில், 22 வயதேயான பட்டதாரி இளைஞர் சார்லஸ் டார்வின், மத போதகராக ஆவதற்கு முன் வெப்பமண்டலப் பகுதிகளைப் பார்க்க ஆசைப்பட்டு இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார்.
முற்றிலும் மாறுபட்ட அரசியல் பின்னணியிலிருந்து வந்திருந்தாலும் (டார்வினின் குடும்பம் தீவிர லிபரல்கள்),ஃபிட்ஸ்ரோயும் டார்வினும் பயணத்தின்போது உண்மையான, நெருக்கமான நண்பர்களாக ஆனார்கள். மேலும் முந்தைய கேப்டன் ஸ்டோக்ஸ் மனச்சோர்வால் தற்கொலை செய்து கொண்டதால்,ஃபிட்ஸ்ரோய் அதே பாணியான மனச்சோர்வுக்கு உள்ளாகக்கூடும் என அவரைச் சுற்றியிருந்தோர் கவலைப்பட்டு, அவருக்கு ஒரு துணை தேவை என நினைத்தனர்.
டார்வின் தன் சுயசரிதையில் ஃபிட்ஸ்ரோயுடன் உண்டான கருத்து வேறுபாடுகளைக் குறிப்பிடுகிறார். அதிலொன்று அடிமைத்தனம் குறித்தது. அடிமைகளை பணிக்கு அமர்த்துவதைக் குறித்த தன் ஆட்சேபனையை டார்வின் தெரிவித்தபோது, ஃபிட்ஸ்ரோய் “அடிமைகள் அடிமைப்பட்டிருக்க விரும்புகிறார்கள்” என வாதிட்டார். விவாதம் சூடானபோது ஃபிட்ஸ்ரோய் இனி டார்வின் தன்னோடு சாப்பாட்டு மேசையில் இணையாக அமர்ந்து சாப்பிட க்கூடாது என ஆணையிட்டார். ஆனால் விரைவில் டார்வினிடம் அவர் மன்னிப்பு கேட்டுவிட்டதால் இருவரும் சமரசம் ஆனார்கள்

இளம் டார்வின்
கடற்பயணிகளுக்கு கப்பல் புறப்பட்டு சில நாட்களில் sea legs எனப்படும் கடலில் கால் ஊன்றுதல் பழக்கமாகி விடும்ஆனால் டார்வினுக்கு தொடர்ந்து வாந்தி மயக்கம் தலைசுற்றல் என்று நோய்வாய்பட்டுக்கொண்டே இருந்தார்.
கப்பலில் எப்போதும் அவர் ஒரு ஹேமக் தூளியில் படுத்தவாறே இருப்பார். கப்பல் கரையணைந்தால் உடனே இறங்கி கரைக்குச்சென்று விடுவார். ஐந்து வருடப்பயணத்தில் டார்வின் கப்பலில், கடலில் இருந்தது வெறும் 18 மாதங்கள் மட்டுமே. மூன்றரை வருடங்கள் அவர் நிலத்தில் இருந்ததால்தான் பரிணாமக்கோட்பாடு உருவானது.
ஃபிட்ஸ்ரோயின் முன்கோபம், மனநிலை ஏற்ற இறக்கம், டார்வினின் தொடர்ச்சியான கடல் நோய், காதலியின் ஏக்கம் ஆகியவற்றின் நடுவே ஐந்து ஆண்டுகளுக்குப் பின் மரியாதையுடனும் பாசத்துடனும் இருவரும் திரும்பியது ஒரு அதிசயம்தான்.
பயணக் காலகட்டத்தில் (1831-1836) இருவரும் மிக நெருக்கமாக இருந்தார்கள். பயணத்தின்போது பகிரப்பட்ட அறிவியல் ஆர்வங்கள் அவர்களது வேறுபாடுகளைக் குறைத்தன. ஆனால் இங்கிலாந்திற்குத் திரும்பியபின், அவர்களது மாறுபட்ட கருத்துகள் ,குறிப்பாக கிறிஸ்தவ மத விஷயங்களிலும் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டிலும் மிக வெளிப்படையாகத் தெரிந்தன.
பயணத்தின் தொடக்கத்திலும் முடிவிலும், டார்வினே பைபிளை உறுதியாக நம்பியவராகவும், ஃபிட்ஸ்ரோய் சந்தேகவாதியாகவும் இருந்தார் என்பதை பல ஆதாரங்கள் காட்டுகின்றன. உண்மையில், டார்வினுக்கு Charles Lyell-ன் “Principles of Geology” புத்தகத்தைக் கொடுத்தவரே ஃபிட்ஸ்ரோய் தான். அந்தப் புத்தகம்தான் பூமியின் “ஆழ்கால”க் கோட்பாட்டை முன்வைத்து, டார்வினின் எதிர்கால கருத்துகளுக்கு அடிப்படையாக அமைந்தது; இதைக்குறித்து ஃபிட்ஸ்ரோய் பின்னாளில் பெரிதும் வருந்தினார்.

ராபர்ட் ஃபிட்ஸ்ரோய்
பூமி புத்தம் புதியது என்று நம்பிய ஃபிட்ஸ்ரோய் பூமி மிகப்பழையது என்று ஃபாஸில்களை ஆதாரமாகக்கொண்டு டார்வின் விளக்கி, பரிணாமக்கோட்பாட்டையும் உலகின் முன்வைத்து கடவுளை இரண்டாம் பட்சமாகி விட்டார் என்று பெரும் குற்றவுணர்வுக்காளானார். டார்வினை அந்தப்பயணத்துக்கு உடன் அழைத்துப் போயிருக்கக்கூடாது என அவர் வருந்தினார்.
ஒரு பிரபலமான விவாதத்தில் ஃபிட்ஸ்ரோய் கலந்துகொண்டு டார்வினின் கோட்பாட்டை வெளிப்படையாகவே எதிர்த்தார். டார்வினின் “The Voyage of the Beagle ” புத்தகத்தில் தன்னையும் தன் அதிகாரிகளையும் போதுமான அளவு பாராட்டவில்லை என்று வருத்தம் அடைந்தார் ஃபிட்ஸ்ரோய். டார்வினின் பயணப் புத்தகமான மூன்று தொகுதிகளாக வெளியான ’’Narrative of the Surveying Voyages of His Majesty’s Ships Adventure and Beagle’’ ஃபிட்ஸ்ரோயின் புத்தகத்தை விட அதிகம் விற்பனையாகி, அவருக்கு மேலும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
பின்னாளில் நியூசிலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்ட ஃபிட்ஸ்ரோய், நியூஸிலாந்து பூர்வகுடிகளான மாவோரி மக்கள் மீதான அனுதாபத்திற்காக வெள்ளையர்களால் வெறுக்கப்பட்டார். ஒரு நிலத் தகராறில் ஒன்பது வெள்ளையர்களைக் கொன்ற ஒரு மாவோரி தலைவரை மன்னித்ததால் மேலும் வெறுப்பை சம்பாதித்தார். வாழ்நாள் முழுவதும் மனச்சோர்வும் கடும் கோபமும் அவரை வாட்டியிருந்தாலும், அவர் யாரிடமும் பகைமை வைத்திருக்கவில்லை, தான் கருத்து வேறுபடும் நபர்களிடமும் இரக்கம் காட்டினார். இறுதியில் 1865ல் ஃபிட்ஸ்ரோய் தன் கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஓர் அரசரின் பெயரால் புறப்பட்ட அந்தச் சிறு கப்பல், ஒரு சாதாரணப் தேடல்பணிக்காகவே அனுப்பப்பட்டது. ஆனால் அது திரும்பி வந்தபோது, உலகம் இயங்குவது இறைவனின் பெயரால் அல்ல, அறிவியல் விதிகளின்படி என்று சொல்லிய ஒரு உலகைப்பயணத்தின் சாட்சியாக மாறியிருந்தது.
Leave a Reply
You must be logged in to post a comment.