சமீபத்தில் மீண்டும் பெங்களூர் செல்ல வேண்டி வந்தது. தருண் மேற்படிப்பை முடித்துவிட்டான். அவனது பட்டமளிப்பு நிகழ்வுக்கு எல்லோரும் வரவேண்டும் என விரும்பினான். முதன்முறையாக இந்தபயணத்தில்தான் தருண் விளையாட்டுப்பிள்ளை, பெண்களால் விரும்பப்படுபவன் என்னும் எளிய சித்திரங்களிலிருந்து பொறுப்பான ஆண் என்னும் இடத்துக்கு (என்மனதில்) வந்திருக்கிறான். அவன் முன்பே முதிர்ந்திருக்கக்கூடும்.
குந்திக்கு பார்த்தன் போல என் மனதிலிருக்கும் விழைவுகளெல்லாம் மகன் உருவெடுத்தது போல தருண் எப்போதும் எனக்கு.
ஒரு நாள் எதனாலோ கோபமாக இருந்த நான் அவனை வீட்டு வாசலில் எதற்கோ கடந்து சென்றேன். தருண் ’’.. ஏ புள்ளே பொன்னுத்தாயீ, என்ன? மாமன் நிக்கறேன் நீ பாட்டுக்கு போறவ ? திரும்பித்தான் பார்க்கறது?…’’ என்றான். குபீரென சிரித்துவிட்டேன். பெண்களால் ஏன் அவன் விரும்பப்படுகிறான் என்பதை நான் நன்கறிவேன்
சரண் எனக்கும் தந்தையின் இடத்தில் இருப்பவன்.
இந்த நிகழ்விலும் முதுகில் அறைந்த வெயிலில் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கையில் இயல்பாக என் தலையில் தன் கையை வைத்து, என் மீது வெயில் படமலிருக்க செய்தான் சரண். இதை அவன் நினைவில் கூட வைத்திருக்கப் போவதில்லை. ஆனால் நான் மின் மயானம் செல்லும் வழியிலும் நினைத்துக்கொள்வேன்.
தருண் என்னைப் போல் இல்லை என்பதும் ஆறுதலளித்தது. நான் என் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களால் ஆனவள், கசந்த இளமைப்பருவம், வலிமிகுந்த பிள்ளைப்பருவத்தின் வேதனைகளிலிருந்து மீண்டுவர முடியாதவள் நான். அந்த வஞ்சங்களை எல்லாம் ஒருபோதும் மறக்கவும் விரும்பாதவள். பல ஆண்டுகளாகின்றன என் தாய் வீட்டுக்குள் நான் காலடி எடுத்துவைத்தும் ஒரு வாய் தண்ணீர் குடித்தும்.
ஆனால் இந்த நிகழ்வுக்கு தன் இறுதிக்காலத்திலிருக்கும் தனது அப்புச்சி உடன் வரவேண்டுமென விரும்பினான் தருண். அவரை 86 வயதில் அத்தனை நீண்ட கார்ப் பிரயாணத்தில் மற்றொரு மாநிலத்துக்கு அழைத்து செல்வதிலிருந்த அனைத்துப் பாதகங்களும் அவனிடம் சொல்லப்பட்டன. ’’..எல்லாம் நான் பார்த்துக்கறேன்.. போறோம் அவ்வளவுதான்…’’ என்றான்.
எனவே அனைவரும் காரில் பெங்களூர் சென்றோம். தருண் மட்டுமே கார் ஓட்டத் தெரிந்தவன் ஓட்டுநர் வந்தால் இடம்பற்றாக்குறை ஆகும் என்பதால் சாம்பவி, லக்ஷ்மியுடன் ஐந்துபேராக தம்பியின் புதுப் பெரிய காரில் சென்றோம். தம்பி விஜி பணி நிமித்தம் வெளிநாட்டில் இருக்கிறான். சரண் மும்பையிலிருந்து சனிக்கிழமை விமானத்தில் வந்து ஞாயிறு இரவு திரும்பி செல்ல முடிவெடுத்திருந்தான்.
செல்லும் வழியில் பழைய சிவாஜி பாடல்களையும், திருச்சி லோகநாதனின், சிதம்பரம் ஜெயராமனின் பாடல்களையும் ஒலிக்க வைத்து அவருக்கு பிடித்திருக்கிறதா? என்று அடிக்கடி கேட்டுக் கொண்டான். நான் அவனை வியப்புடன் பின்னாலிருந்து கவனித்துக்கொண்டிருந்தேன்.
கோரிக்கையற்று கிடக்குதண்ணே இந்த வேரில்பழுத்த பலா, வசந்த மாளிகையின் பாடல்களை எல்லாம் அவர் ரசிப்பதைப் பார்த்து, “இது பிடிக்குமா அப்புச்சி உங்களுக்கு?” என்று கேட்டுக்கொண்டான். அவர் மகிழ்ந்து, “பின்னே!” என்றார்.
“இது யார் பாடினதுனு சொல்லுங்க?” எனக் கேட்பதும், அடிக்கடி அவரை சிறுநீர் கழிக்க இறக்கிவிட்டு, உதவி பிறகு கைகளை கழுவிவிட்டு, மீண்டும் மாற்றுடை அணிவித்துவிடுவதுமாக, பொறுமையாகக் கார் ஓட்டிக்கொண்டு வந்தான்.
தொப்பூரைத் தாண்டி இருக்கையில் ’’விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது, பாடல் ஒலித்தது. அதில் வரும் எனக்குப் பிடித்த “பாலில் நெய்யளவு பரந்த புன்னகை” என்னும் வரிகளைச் சிலாகித்துவிட்டு, அதன் அர்த்தத்தை என்னிடம் மீண்டும் கேட்டு, “சே, எப்படி எழுதியிருக்காங்க இல்லை?” என்று அதிசயித்தான். பின் நினைத்துக்கொண்டது போல, “ஆமா, அதென்ன கையளவு பழுத்த மாதுளை?” என்றான். மயான அமைதி நிலவி யாரும் பதில் சொல்லாமலிருக்கையில், அவன் அப்புச்சி “ஹ ஹ” என்று மெல்ல சிரித்தார். பின்னர் அவனும் புன்னகைத்துவிட்டு பயணத்தைத் தொடர்ந்தான்.
அவனுக்கு பிடித்த பாடல்களும் கேட்டோம். ’’நீரலைகள் இடம் மாறி நீந்துகின்றன் குழலோவில் தொடங்கி,
துணைவனைக்காக்கும் கடமையும் தந்தாய் தூயவளே நீ வாழ்கவைத்தொட்டு,
காய்ந்துபோன சோலையோரம் கங்கை வந்து பாயும் நேரத்துக்கு வந்து
பின்னர் ஒரே பாய்ச்சலாக டிப்பம் டப்பம் பாடலுக்கு வந்து
‘’அவ அழக பத்தி பாட… இல்ல எஜுகேஷன்…
என் மனசு இனி உனக்கு… ஒரு பிளேஸ்டேஷன்…
நீ இருக்கும் எடம் எனக்கு…ஒரு ஹில் ஸ்டேஷன்…
நீ வேணுமுன்னு பண்ணபோறேன்…
மெடிடேஷன்… என்று தாவிக்கொண்டிருந்தான்
ஒரு முழுநாளும் காருக்குள் அடைபட்டிருந்ததில் சாம்பவி பொறுமை இழந்திருந்தாள். அருகில் உறங்குபவர்கள் வாயில் விரலை விடுவதும், “ஏன் பையா படத்துக்கு பையான்னு பேர் வச்சாங்க அதில் யாரு பையன்? எதுக்கு சிவாஜிக்கு 50 வயசில் பிரேக்கப் பாட்டு? (எழுதுங்கள் என் கல்லறையில் அவன் பைத்தியக்காரன் என்று), “ஏன் அருணகிரிநாதர் முருகனை பெருமாள்ங்கறாரு?”(முத்தைத்திரு) அய்யே சீ, சிவாஜி கன்னத்தையா சொல்லறா? (கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து மதுவருந்தாமல் விடமாட்டேன்) என்றெல்லாம் கேள்வி கேட்டுப் பிராண்டிக் கொண்டிருந்தாள்.
திரும்பி வரும்போது பெங்களூரின் பிரபல மால் ஒன்றின் முன் காரை நிறுத்தி, அப்புச்சி கையால் தனது பட்டச்சான்றிதழை வாங்கிக்கொள்ளும்படி ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டான் தருண்.
ஒரு மேம்பால வளைவில் செல்லுகையில் வானில் அழகாக ஒரு வண்ணத் தீற்றலாய் வானவில் தோன்றியது, காரை நிறுத்தி, “அப்புச்சி, அங்கே பாருங்க” என்று சொல்லிக் காண்பித்தான். என் வஞ்சங்கள் தொட்டிருக்காத தொலைவில் அவன் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது,பெருமிதப்பட்டுக்கொண்டேன்.

ஹோசூர் தாண்டியதும் பயங்கரப் போக்குவரத்து நெரிசல். மொத்தம் 12 மணி நேரம் எந்தச் சடைவும் புலம்பலும் சோர்வும் இன்றிப் பொறுமையாய், மகிழ்ந்து கார் ஓட்டிக்கொண்டு வந்து எங்களைப் பத்திரமாய் பெங்களூர் கொண்டு போய்ச் சேர்த்தான்.
கிறைஸ்ட் பல்கலைக்கழகம் ஜே ஜேவென இருந்தது. பெரும் கல்வி நிறுவனம் என்பதால் ஆயிரக்கணக்கில் கூட்டம் இருந்தது. அதிலும் பெண்கள் அனைவருக்கும் வெள்ளை நிறப் புடவைதான் Dress Code என்பதால், ஏராளமான தேவதைகளுக்கு மத்தியில் இருந்தோம். இளமையின் அழகு, பட்டம் வாங்கும் நிறைவு என கலவையான அழகுகளில் திளைத்தோம். தருணுக்குக் கேட்கவே வேண்டாம், மூழ்கித் திளைத்துக்கொண்டிருந்தான்.

நான் இதுவரை பார்த்திராத அவன் தோழிகளையும் பல்கலை வளாகத்துக்கு வெளியே சந்தித்தேன் இம்முறை. அதில் ஒருத்தி யக்ஷகானக் கலைஞர். காது மூக்கு கழுத்து என அணிகலன்கள் எதுவுமில்லாமல், உயர்த்திக் கட்டிய கூந்தலோடு எளிய சிவப்பு பனியனும் ஜீன்ஸுமாக நல்ல உயரமாகப் பேரழகியாக வந்து நின்றாள். அவள் மகாபாரத நிகழ்வொன்றில் அர்ஜுனனாக நடித்த காணொளியை முன்பே பார்த்திருக்கிறேன்.
எப்போதும் அவன் தோழிகளின் புகைப்படங்களை பொதுவெளியில் பகிரக்கூடாதென்னும் அன்புக்கட்டளை இட்டிருக்கிறான் தருண். (அடுத்த வீட்டுபெண்களை அப்படி நாம காட்டக்கூடாது இல்லையாம்மா?)
ரிதி ஆல்வாவுக்குப் பிறகு நான் சந்தித்த அசல் அழகி இவள்தான். இவளும் மங்களூர் கொங்கணிக் குடும்பம் என்பது இன்னுமொரு ஒற்றுமை. “கண்ணுக்குள்ளேயே இருக்கிறார்கள்” என்பார்களே, அப்படி அந்தப் பெண் கண்ணுக்குள்ளேயே நிற்கிறாள். பேரழகி என்பது வெறும் புறத்தோற்றம் மட்டுமல்ல; அவளது கம்பீரமான உடல்மொழி ,நாணிக்கொண்டிருக்காமல், அதே சமயம் “அழகி” என்னும் அகந்தையும் இல்லாமல், கம்பீரமாகவும், அதே சமயத்தில் அழகாகவும் இருந்தாள்.
பல்கலைக்கழகத்தில் அன்று 1,785 பேருக்குப் பட்டம் அளிக்கப்பட்டது. அதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். நான் பெண்களின் பெயர்களை எல்லாம் கவனித்துக்கொண்டிருந்தேன். எனக்குப் பெண் பெயர்களைக் கேட்பதும் அறிந்துகொள்வதும் எப்போதுமே மிக விருப்பம்.
அதிகமாகச் சொல்லப்பட்ட பெயர்களில் சாக்ஷி, நவ்யா, ஷாலினி, மஞ்சு, ஷாலு, மது, ரியா, சிஜு, பிஜு இருந்தன. பல நூறு பெயர்களில் எனக்கு மிகப்பிடித்தமானதாக ‘மிதிலா உல்லாஸ்’ இருந்தது. சொல்லிச்சொல்லிப்பார்த்துக்கொண்டேன்.

ஒருத்தியின் பெயர் ரியா வர்லியானா! (“அவ தங்கச்சி பேர் தெரியுமா உனக்கு? ரியா வந்தியானா” – தருண்)
அஞ்சலி தேவி என்று பெயர் அழைக்கப்படும்போது, எனக்குக் காம்பஸ் வைத்து வரைந்தது போன்ற வட்ட முகத்துடன், கூடுதல் புஷ்டியாக, அகலக் கண்களுடன், இடுப்பென்பதே இல்லாத, ’’…அழைக்காதே, நினைக்காதே, அவைதனிலே என்னை, ஓ ராஜா…” என்று பாடிய அழகி மனதில் வந்து சென்றார்.
அனிதா அகஸ்டின், ஜுகுனு ஓபராய் போன்ற ஸ்டைலிஷ் பெயர்களும், இருந்தன. சாவியோனா கந்து பேமா என்னும் நீண்ட பெயர் எனக்கு ஜெ-வின் ‘பேமா’ கட்டுரையை நினைவுக்குக் கொண்டுவந்தது.
தேவதுலா என்னும் பெயரும், பூவண்ணம் எனும் பெயரும் அத்தனை அழகாக இருந்தன.
அங்கித் ராஜ் அதிகாரி, ட்ரிஷா குரியாக்கோஸ், நட்டாலியா தாமஸ், அதிதி பச்சோலி, கிருணாளி மண்ட்ரேகர் ஆகிய பெயர்களும் கவனிக்க வைத்தன. கன்னிகா பரமேஸ்வரி, அம்பிகா ஆகிய பெயர்களும் இனித்தன.
ஒரு பெண்ணின் பெயர் ஜோஷ்வா குலுகுண்டி. (“ஒருவேளை ஊட்டி கொடைக்கானல் பக்கத்துக் குடும்பமாய் இருக்கும்” – தருண்)
சந்தோஷி மந்த மூஸ், ஷிவாஞ்சலி ஜெகதீசன் போன்ற பெயர்கள் கம்பீரமாக இருந்தன.
அந்த நெரிசலில் என்னை ஒரு பெண் பின்னாலிருந்து வந்து தொட்டு, “நீங்க தருணின் அம்மாதானே?” என்றார். ஆச்சரியமாக, “ஆம்” என்றேன்.
முகம் விரிய புன்னகைத்து, “நான் தருணின் ஆசிரியை கரீனா” என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, கையைப் பற்றிக்கொண்டு வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார். சரணிடம் ஐரோப்பாவிலிருந்து வந்த பின்னர் மும்பை பிடித்திருக்கிறதா என்றும் கேட்டார்.
“எப்படி என்னைக் கண்டுபிடித்தீர்கள்?” என்று கேட்டேன். அவரது கைபேசியை எடுத்து, அதில் தருண் அவருக்கு அனுப்பியிருந்த என் புகைப்படத்தைக் காட்டி, “இதைவச்சுத் தேடிக் கண்டுபிடித்தேன்” என்றார்.
ஒரு மாணவனின் குடும்பத்தை அப்படித் தேடிக் கண்டுபிடித்துப் பேசும் ஆசிரியையான அவரையும் என்னையும் நான் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டேன். நான் ஒருபோதும் அப்படிச் செய்ததே இல்லை. என்னை அப்படி யாரேனும் பார்க்க விரும்பினால், என் அறைக்குச் சென்று காத்திருக்கும்படியோ அல்லது அறைக்கு வரும்படியோதான் சொல்லியிருக்கிறேன்.

அனைத்து ஆசிரியர்களும் ஒரே மாதிரி இருக்க வேண்டியதில்லை என்றாலும், என்னால் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

பிறகு குழுப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். தருண் நிச்சயமாக எங்களுடன் அறைக்கு அப்போது வர வாய்ப்பில்லை என்பதால் நாங்கள் மட்டும் புறப்பட்டுச் சென்றோம்.
‘சால்ட்’ எனும் நவீன உணவகத்திற்குச் சாம்பவியும் சரணும் என்னை மதிய உணவுக்கு அழைத்துச் சென்றார்கள். சரண் அன்று பில்லுக்கு கொடுத்த தொகையில் நான் இரண்டு மாதங்கள் குடும்பத்தை ’’வீசி எறிந்து’’ செலவழித்து நடத்தியிருப்பேன்.
நல்ல மழை அன்று. மாலை அறைக்குத் திரும்பிய தருணுக்கு, கொட்டும் மழையில் அன்று கோலி அடித்த சிக்ஸில் வெற்றி பெற்ற அணியைப் பெங்களூரு இளைஞர்கள் வெறிபிடித்துக் கொண்டாடிக்கொண்டிருந்த அந்த இரவில், காரை எடுத்துக்கொண்டு சென்று மொகாபரா அலுவலகப்பை ஒன்றை வாங்கி வந்த சரண் பட்டம் பெற்றதற்காகப் பரிசளித்தான். தருணுக்கு எப்போதும் தந்தையின் இடத்திலிருப்பவன் சரண்.

பின்னர் சரணை இரவு விமான நிலையத்தில் கொண்டு போய் விட்டுவிட்டு, கிரிக்கெட் பைத்தியங்களிடம் மாட்டிக்கொள்ளாமல் பெரும்பாடுபட்டு அறைக்கு வந்து சேர்ந்தோம்.
காலை நேரமே புறப்பட்டு ஊர் திரும்பினோம். யக்ஷகான அழகி வந்திருந்து எங்களுடன் காலை உணவுண்டு விடை கொடுத்து அனுப்பினாள். மனதில் எடைகூட வைக்கும் பேரழகு அவளுடையது. அன்று மதியம் கிறைஸ்ட் பல்கலையில் ஒரு உரையாற்றவிருந்தாள். அவளது அழகிற்கு அவளது புத்திசாலித்தனமும் ஒரு காரணம்தான். நிமிர்வுள்ள இப்படியான பெண்களை எனக்கு எப்போதும் மிகப்பிரியம்.
அவளுடன் வெண்முரசு பற்றியும், மருத்துவர் /கவிஞர் வேணு வேட்ராயன் சென்னையில் குறுந்தொகையை நாட்டிய நாடகமாக்கப் போகும் முயற்சியைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தேன். இதையெல்லாம் பேச இதுநாள் வரை எனக்கு ஒரு இளம் பெண் கிடைத்ததே இல்லை. பேசிக்கொண்டிருந்த அவளின் நினைவே மனதிலாட ஊர் திரும்பினேன்.

வரும் வழியில் ‘ஆஹா’ என்னும், ஒரு இளைப்பாறிக்கொள்ளும், ஓய்வறைகள் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு, ராஜபாளையம் வடை போன்ற சுவையான சூடான தின்பண்டங்கள் தரும் ஓர் இடத்தில் காரை நிறுத்தினோம். மீண்டும் நல்ல பாடல்கள் கேட்டுக்கொண்டு வரும் வழியில், தருண் சற்று ஓய்வெடுக்க காரை நிறுத்திய ஓரிடத்திலிருந்து, ‘கோழிக்கீரை’ எனப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த பர்ஸ்லேன் (Purslane) கீரைச் செடியைப் பறித்துக்கொண்டு வந்தேன். இப்போது தருணின் பட்டமளிப்பு நாளின் நினைவாக அந்தத் தொட்டியில் வேர்பிடித்து வளர்கிறது அந்த ‘கிராஜுவேஷன் கீரை’.

கொச்சின் கவின் கேர் நிறுவனத்தில் விரைவில் பணியில் இணையவிருக்கும் தருணுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் அன்பும்!
எல்லா வளங்களும் பெற்று ஆனந்தமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள் தருண் தம்பி.
ஆமா, அதென்ன கையளவு பழுத்த மாதுளை?”
எனக்கும் அதற்கான பதில் தெரியவில்லை தான்..
தேவதுலா…
நெஞ்சில் நிற்கும் பெயர்..
தருணின் ரசிகை நானும் தான்..
என்றும் தருணுடன் துணை நிற்கும் என் அன்பு…
இறை அருளட்டும்…