இன்று காலை வழக்கத்தைவிடச் சீக்கிரமாகவே கல்லூரிக்குச்சென்றுவிட்டேன். வெள்ளிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு சிறப்பு நிகழ்வு இருக்கும்படி இந்தப் பருவத்தைக் கழிக்கவேண்டும் எனத் துறையில் முடிவு. எந்நேரமும் வகுப்பெடுத்துக்கொண்டிருந்தால் மாணவர்கள் சலிப்படையக்கூடும் எனவே துறைசார்ந்த சிறு சிறு நிகழ்வுகளை வாரா வாரம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறேன்
இன்று பருத்திப்பைகளை உபயோகிப்பது, ப்ளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பது என்பது குறித்த விழிப்புணர்வு அளிக்கத் துறையில் அனைவரும் துணிப்பைகளை கொண்டு வந்தோம். அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க சற்றுமுன்னதாகவே சென்றேன்.
வழியில் ஒரு வகுப்பறையின் முன்பு எனக்கு முன்னதாகவே வந்து எதிரெதிரே நின்று கொண்டிருந்தார்கள் ஒரு பெண்ணும் ஆணும். இன்று வெள்ளிக்கிழமையாதலால் அவள தலைக்குக்குளித்து இடைவரை யக்ஷி போல நீண்டிருந்த முடியில் சின்ன வண்ணத்துப்பூச்சியின் வடிவிலிருந்த கேட்ச் க்ளிப் மட்டும் போட்டிருந்தாள். கூந்தலின் நீர் சொட்டி அவளது இளஞ்சிவப்பு சுடிதாரின் கீழ்ப்புறம் ஈரமாகி இருந்தது.
அவனோ அவசரத்தில் புறப்பட்டிருப்பான் போல, கசங்கிய சட்டை, கலைந்த தலை. தூரத்திலேயே அவன் அவளிடம் ’’ஏய். சாரிடி. போன் அடிச்சது கேட்கலை,தூங்கிட்டேன் இதுக்குப்போய்க் கோவிச்சுப்பியா?’’…. என்று சொன்னது கேட்டது.
அவள் கண்களில் கனலும் கண்ணீருமாக, சில நோட்டுப்புத்தகங்களை மார்போடு சேர்த்து அணைத்துப்பிடித்துக்கொண்டு அவனைப்பார்க்காமல் எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்தாள். அழகாகப் பட்டையாக மையெழுதிய கண்கள்.
‘’ நான் என்ன சொன்னேன் இப்போ? இனிமே உன்னைக் கூப்பிடலைனுதானே சொன்னேன், அதுக்கெதுக்கு சாரிகேட்கற? போய் வேலையைப்பாரு’’…. என்கிறாள்.
இவன் மீண்டும் பாவமாக ’’சாரி சொல்லிட்டனில்லடி, நீ ராத்திரி 12 மணிக்குக் கூப்பிடுவேன்னு எனக்குத் தெரியலை தூங்கினது குத்தமா’’ என்கிறான். அவள் ’’அய்யோ குத்தமில்லை சாமி நல்லா போத்திட்டுத்தூங்கு. நான் தான் இனி கூப்பிடமாட்டனே’’…. என்கிறாள். இதைச்சொல்லுகையில் அவள் குரல் உடைகிறது.
நான் அவர்களைக் கடந்துவிட்டேன். ’’சரிடி, இனிமே நான் தூங்கவேமாட்டேன், நீ எப்போ கூப்பிட்டாலும் போன எடுக்கறேன்’’… அன்று அவனும், பதிலுக்குச் சீற்றத்துடன் ’’ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்னு கூப்பிட்டா நீ போனே எடுக்கலை எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா?’’… என அவள் மலை இறங்கி வந்ததையும் கடைசியாகக்கேட்டேன். புன்னகைத்துக்கொண்டே முதல் தளத்தில் இருக்கும் என் துறைக்கான படிகளில் ஏறினேன்.
அன்பு வளரட்டும்!
அன்பு வளரட்டும்!
அன்பு வளரட்டும்! நான் கல்லூரி காலங்களை கடந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன, இப்போது நினைத்தாலும் இனிமையும் படபடப்பும் சேந்தே இருக்கும் . 10 ஆண்டுகளில் இவ்வளவு மாற்றமா , இல்லை என்றால் நீங்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு பக்குவப்பட்ட ஆசிரியை! நான் கல்லுரியில் இறுதியாண்டு படிக்கும் காலத்தில் இதற்கு ஓத்த நிகழ்வு நடந்தது அவர்கள் என்னுடன் பயின்ற சகமாணவர்கள், இருவரையும் ஒரு நாள் முழுதுமாக விசாரணை என்ற முறையில் அண்ணன் தண்ணீர்கூட இல்லாமல் 6 மணி நேரம் 8 ஆசிரியர்கள் சூட்டு விசாரணை அவர்கள் வாழ்கையில் அது பெரும் அலையாக உருவெடுத்து புரட்டியது. இப்போது அது வெறும் நினைவுகள் மட்டுமே, அன்று!