லோகமாதேவியின் பதிவுகள்

Month: January 2026 (Page 2 of 2)

இண்டஸ்ட்ரியல் ஸ்டார்ச்!

ஜெர்மன் நாட்டுப்புறங்களில்  ஆல்ப் என்றொரு கண்ணுக்கு தெரியாத மிகத் தீங்கிழைக்கும் ஒரு  ஆவியைப் பற்றிய கதைகள் உண்டு. கதவின் சிறு இடைவெளி, சுவர்களின்  துளை, ஜன்னல்களின் விரிசல் என்று எந்த வழியாகவும் உள்ளே நுழைந்து உறங்கிக்கொண்டிருப்பவர்களின் நெஞ்சுக்குள் புகுந்துவிடும் ஆவி அது, அது உடலுக்குள் நுழைந்த பின்னர்தான் அதை உணரவே முடியும். பின்னர் ஆல்ப் பிடித்துக்கொண்டிருப்பவர் பலஹீனமாகி ஆற்றலையும் ரத்தத்தையும் இழந்து மெல்ல மெல்ல உயிரிழப்பார்கள்.  

இது வெறும் கதைதான் ஆனால் இப்போது    கண்ணுக்குதெரியாத இந்த  கெட்ட ஆவியைப்போலவே ஒன்று நம் அனைவரின் வீடுகளுக்குள்ளும்  நுழைந்து உணவு மேசையிலும் இடம் பிடித்து விட்டிருக்கிறது. அது நம் ஆரோக்கியத்தை மெல்ல மெல்ல உறிஞ்சிக்கொண்டு இருப்பதை நம் அறியாமல் இருக்கிறோம்.

இப்போது நாம் அன்றாடம் உண்ணும்  பதப்படுத்தபப்ட்ட இறைச்சி, பழச்சாறு, தயிர், மருந்து, பேக்கரித்திண்பண்டங்கள் என பலவகையான உணவுகளில் இருக்கும் இண்டஸ்ட்ரியல் ஸ்டார்ச் என்னும் நம் கண்ணுக்குத்தெரியாத தொழிற்துறை மாவுப்பொருள் தான் ஏராளமான ஆரோக்கியக் கேடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. 

பொதுவாக மைதா, வெள்ளைச்சோறு, சர்க்கரை இவைதான் உடல்நலனுக்குக் கெடுதல் என்னும்  புரிதலும் நம்பிக்கையும் பலருக்கு இருக்கிறது என்றாலும் 1940-களிலிருந்து உணவு அல்லாத காகிதம், மருந்து, பசை மற்றும் வேறு பல தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கென உருவாக்கப்பட்ட இந்த இண்டஸ்ட்ரியல் ஸ்டார்ச் இப்போது பரவலாக உணவுத்தொழிற்சாலைகளிலும் உபயோகப்படுத்தப்படுகிறது என்பதையும் அது கலந்திருக்கும்  நாம் மிகச் சாதாரணமாகவும், அதிகமாகவும் வாங்கி உண்ணும் உணவுப்பொருட்கள் உண்டாக்கும் ஆரோக்கிய சீர்கேடுகளையும் நம்மில் பலர் அறிந்திருக்கவில்லை. 

இந்த தொழில்துறை மாவுப்பொருள் (Industrial starch) என்பது மக்காச் சோளம், கோதுமை, உருளைக்கிழங்கு மற்றும் மரவள்ளிக்கிழங்கு போன்றவற்றிலிருந்து பெறப்படுகிற, பல்துறை திறன் கொண்ட, இயற்கையான, மட்கக்கூடிய  ஒரு  கார்போஹைட்ரேட் பாலிமர். இது காகிதத் தயாரிப்பு, ஜவுளி, மருந்துப் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஒரு மூலப்பொருளாகவும், பல்வேறு உணவு அல்லாத தொழில்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

பண்டைய பல நாகரீகங்களில்  பாப்பிரஸ் புற்களிலிருந்து உருவாக்கப்பட்ட காகிதங்களை ஒட்டுவதற்காகத்  தயாரிக்கப்பட்ட இந்த ஸ்டார்ச் 18,19-ம் நூற்றாண்டுகளில் தொழில்புரட்சியின் போது ஜவுளி, காகிதம் மற்றும் அச்சுத்தொழில்களில் மிக அதிகமான அளவு பயனாகத்தொடங்கியது. பின்னர் அவற்றின் பலவகயான உபயோகங்களின் தேவை அதிகமானபோது அவற்றில் ரசாயன மாற்றங்களும் செய்யப்பட்டு உணவு மருந்து போன்ற தொழிற்சாலைகளிலும் அவற்றின் பயன்பாடு துவங்கியது.  

இந்த இண்டஸ்ட்ரியல் ஸ்டார்ச் மிக அதிகமாகப் புழங்குவது காகிதத்தொழிற்சாலைகளில்தான். காகிதங்களின் வலிமை, அச்சிடக்கூடிய தன்மை மற்றும் மேற்பரப்பின் மிருதுத்தன்மை ஆகியவை இந்த ஸ்டார்ச்சினால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது.

ஜவுளித்துறையில் நெசவு இழைகளை வலுப்படுத்தவும் இதே ஸ்டார்ச் உபயோகப்படுத்தப்படுகிறது .

மருந்துத்தொழிற்சாலைகளிலும் இந்த ஸ்டார்ச் மாத்திரைகள் மற்றும் காப்ஸ்யூல்களில், செயல்புரியாத ஒரு துணை மூலப்பொருளாக மருந்துகளை ஒன்றிணைக்கும் பசையாகப் பயன்படுத்தபடுகிறது  மேலும் அழகுசாதனப் பொருட்களில் சருமத்திற்குள் உறிஞ்சப்படும்  பண்பை மேம்படுத்துவதற்காகவும் இந்த இண்டஸ்ட்ரியல் ஸ்டார்ச்  பயன்படுத்தப்படுகிறது.

தொழில்துறை மாவுப்பொருட்கள் அவற்றின் இயற்கையான வடிவத்திலிருந்து குறிப்பிட்ட தொழில்துறை தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு  பிரத்யேகமாக மாற்றியமைக்கப்படுகிறது. இந்தச் செயல்முறைகள் தொழில்துறை மாவுப்பொருளின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை மாற்றி, அதன் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன.

உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, கோதுமை ,மக்காச்சோளம் போன்ற மூலப்பொருட்களை ஊறவைத்து அரைத்து, பிரித்தெடுத்து உலர்த்துதல் மூலம் மாவுச்சத்தைப் பெற்ற பிறகு, அதன் பாகுத்தன்மை, ஒட்டும் தன்மை மற்றும் நிலைப்புத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்த இவை  மாறுபடுத்தப்படுகிறது (Modified). 

மேலும் இந்த மாவுப்பொருட்களிலில் நார்ச்சத்து ,  க்ளூட்டன் உள்ளிட்ட புரதங்கள், கொழுப்பு, எண்ணெய் மற்றும் தாதுக்கள் உள்ளிட்ட அனைத்துச் சத்துக்களும் முற்றிலுமாக நீக்கப்படுவதால் இதில் அமைலோஸ் மற்றும் அமைலோபெக்டின் என்னும் ஸ்டார்ச் பாலிமர்கள் மட்டுமே இருக்கும். பலமுறை சுத்திகரிக்கப்பட்டு (Refining) தூய மாவாக மட்டுமே இவை தயாரிக்கப்படுவதால் இவற்றில் மாவல்லாது வேறு எந்த சத்துக்களுமே இருப்பதில்லை. 

முன்-ஜெலாட்டினேற்றம் (Pre-gelatinization) போன்ற இயற்பியல் மாற்றத்தில்  மாவுப்பொருளை சமைத்து மீண்டும் உலர்த்துவதன் மூலம், அதற்கு குளிர்ந்த நீரில் உடனடியாகக் கரையும் திறன் அளிக்கப்படுகிறது, இது உடனடி உணவுகளுக்கு மிகவும் ஏற்றதோர் இயல்பு. 

இறுதியாக, என்சைம்கள் பயன்படுத்தப்பட்டு  இந்த மாவின் சங்கிலிகள் உடைக்கப்பட்டு குளுக்கோஸ் சிரப், மால்டோடெக்ஸ்ட்ரின்ஸ் மற்றும் டெக்ஸ்ட்ரோஸ் போன்றவை உருவாக்கப்படுகின்றன.

இந்த மாறுபடுத்தப்பட்ட மாவுப்பொருட்கள் தான் தொழிற்சாலை மாவுப்பொருள் என்னும் பெயரில் அவற்றின் மேம்படுத்தப்பட்ட நிலைப்புத்தன்மை மற்றும் குளிர்ந்த நீரில் கரையும் திறன் போன்ற இயல்புகளின் காரணமாக, உணவு மற்றும் உணவு அல்லாத தொழில்களில் ஒரு அத்தியாவசியமான மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. 

பிரதான செயல்பாடுகள் 

இந்தத் தொழிற்துறை மாவுப்பொருட்கள் பலவகையான உணவுப் பொருட்களில்  கீழ்க்கண்ட பயன்பாடுகளுக்காக உபயோகப்படுதப்படுகின்றன. 

  • ஸ்டார்ச் சூப், சாஸ், புட்டிங் போன்ற உணவுபொருட்களில் திண்மையாக்கியாக (thickening agents) மிக அதிக அளவில் சேர்க்கப்படுகிறது.
  • பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், பேக்கரிப் பொருட்கள் மற்றும் தின்பண்டங்களின் உள்ளடக்கங்களை ஒன்றாக இணைக்க  உதவுகிறது.
  • தயிர் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பில் நீர் தனியே பிரிவதைத் தடுத்து, இவ்வுணவுகளின் சீரான தன்மையைப் பராமரிக்க உதவுகிறது. 
  • இது கொழுப்புக் குறைக்கப்பட்ட பொருட்களில் கொழுப்பை மாற்றியமைக்கும் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • மிட்டாய்கள், ஜெல்லிகள் மற்றும் பேக்கரி ஃபில்லிங்ஸ் போன்றவற்றில் உறுதியான கட்டமைப்பை உருவாக்கப் பயன்படுகிறது. 
  • மாவுச்சத்து மாற்றியமைப்பான்கள் (Starch modifiers) ஈரப்பதத்தை தக்கவைத்து, ரொட்டிகளில் புத்துணர்ச்சியை (freshness) நீட்டிக்கின்றன.
  • கேக்குகள், மிட்டாய்கள் மற்றும் பிஸ்கட்டுகளில் மிருதுத்தன்மையை மேம்படுத்துகின்றன. 
  • டெக்ஸ்ட்ரின்ஸ் (Dextrins) போன்ற தொழிற்சாலை மாவுப்பொருட்களின் வழித்தோன்றல்கள் இனிப்பு வகைகளில் சர்க்கரைப் பூச்சுகளுக்குப் (glazes)  பயன்படுத்தப்படுகின்றன.
  • உறைந்த உணவுகளில் நீர்ச்சத்து பிரிந்து வருவதை இவை தடுத்து நிறுத்துகின்றன. 
  • முன்-ஜெலாட்டினேற்றம் செய்யப்பட்ட மாவுப்பொருள் (Pre-gelatinized starch) உடனடியாகக் கரைந்து,  உடனடியாகத் தடிமனாகிறது. எனவே இது உடனடி சூப்கள், சாஸ்கள் மற்றும் டெஸர்ட்களில் அத்தியாவசியமானது.
  • பழச்சாறுகள் மற்றும் காய்கறிச் சாறுகள் போன்ற பானங்களில் கூழ்மத் துகள்களைப் பிடித்து வைத்திருக்கவும், பானத்தின் நிலைப்புத்தன்மையை அதிகரிக்கவும் இம்மாவு பயன்படுத்தப்படுகிறது.
  • வணிக ரீதியாகத் தயாரிக்கப்படும் வெள்ளை ரொட்டிகளில், கேக்குகள், பேஸ்ட்ரிகள்,மற்றும் பொரித்த பொருட்களின் Chips and Fried Snacks) மேல் பூச்சுக்கு அல்லது பிணைப்புக்கு இந்த மாவுப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது
  • ஊறுகாய்கள் மற்றும் சாஸ்களின்  கெட்டிப்புத் தன்மை மற்றும் நிலைத்தன்மையை அதிகரிக்க  இந்த மாற்றியமைக்கப்பட்ட மாவுச்சத்துக்கள்  பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
  • மயோனைஸ், சூப் மிக்ஸ்கள் மற்றும் இன்ஸ்டன்ட் சூப்கள்,  மற்றும் சில வணிக ரீதியான பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மசாலாப் பொடிகளில் நிரப்பியாகவும் பிணைப்பானாகவும்  இந்த ஸ்டார்ச் சேர்க்கப்படுகிறது.
  • ஜாம் மற்றும் ஜெல்லிகளுக்குத் தேவையான கெட்டிப்புத் தன்மையைக் கொடுக்க  இந்த மாவுப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.
  • குறைந்த கொழுப்புள்ள தயிர், ஐஸ்கிரீம்  (Low-Fat Dairy) போன்றவற்றில், கொழுப்பை நீக்கியதால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய (கெட்டியாக்க) இந்த ஸ்டார்ச் பயன்படுத்தப்படுகிறது.
  • இன்ஸ்டன்ட்  நூடுல்ஸின் அமைப்பை மேம்படுத்த இந்தச் சுத்திகரிக்கப்பட்ட மாவுப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.
  • பல இனிப்புப் பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பயன்படுத்தப்படும் அதிக புருக்டோஸ் சோளப் பாகு (High Fructose Corn Syrup – HFCS)இந்த வகை ஸ்டார்ச்சில் , இருந்துதான் தயாரிக்கப்படுகிறது.
  • சைவ பர்கர்கள் அல்லது மாற்று இறைச்சித் துண்டுகள்  (Meat Substitutes) போன்றவற்றில், கூறுகளை ஒன்றாகப் பிணைக்க  இந்த ஸ்டார்ச் பயன்படுத்தப்படுகிறது.
  • விளையாட்டுப் பானங்கள் (Sports Drinks), செயற்கை இனிப்புகள் (Artificial Sweeteners), இன்ஸ்டன்ட் ஓட்ஸ் போன்றவற்றிலும் இவை சேர்க்கப்படுகின்றன.

ஆரோக்கியக்கேடுகள்:

மாற்றியமைக்கப்பட்ட மாவுச்சத்துக்கள் (Modified Starches) இரத்தச் சர்க்கரை அளவில் ஏற்படுத்தும் தாக்கம்  என்பது அவற்றின் சர்க்கரை உயர்த்தல்  குறியீட்டை (Glycemic Index – GI) பொறுத்து மாறுபடும். 

சாதாரண மாவுப்பொருட்களை விட, அதிக செயலாக்கம் செய்யப்பட்ட மற்றும் என்சைம் மூலம் சிதைக்கப்பட்டஇந்த வகை மாவுப்பொருட்களின் வழித்தோன்றல்கள் (Maltodextrins, Dextrose) விரைவான இரத்த சர்க்கரை உயர்வுக்கு வழிவகுக்கும், ஏனெனில் அவை வேகமாக குளுக்கோஸாக மாற்றப்படுகின்றன. நீரிழிவு நோயாளிகள் அல்லது இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் இந்த வடிவங்களை அதிக அளவில் உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

இவற்றின் அதீத பயன்பாடு இதயநோய்களையும் உண்டாக்கலாம். நார்ச்சத்து இல்லாததால் ஜீரணமண்டலம் மற்றும் ஈரலின் செயல்பாடுகளும் இந்த மாவுப்பொருளினால் சீர்கெடும்

போலி ஸ்டார்ச் என்றும் உலகின் மிக மோசமான ஸ்டார்ச்  என்றும் அழைக்கப்படும் இவை உணவுப் பொருட்களின் அலமாரி வாழ்வையும் நீட்டிக்கின்றன என்பதால் பெரும்பாலான பேக்கரிகளில் இவை அதிகம் புழங்குகின்றன.

 உணவுப்பொருட்களில் கலக்கப்படும் தொழில்துறை ஸ்டார்ச் அதில் பயன்படுத்தப்படும் ரசாயனக் கலவைகளினால் மனித உடலுக்கு நஞ்சாகி, செரிமானக் கோளாறுகள் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும்.

இதன் உணவு சார்ந்த பயன்பாடுகளுக்கான தரக்கட்டுப்பாட்டு விதிகள் உருவாக்கப்படவேண்டி இருக்கிறது. இந்த வகை ஸ்டார்ச் கொண்டிருக்கும் உணவுபொருட்களில் இவை எத்தனைச் சதவீதம் இருக்கிறது என்பதையும் இதனால் உண்டாகக்கூடும் ஆரோக்கியக்கேடுகளும் தெளிவாகக்குறிப்பிடப்பட வேண்டும்.

லேபிள்களில் இருந்து தொழில்துறை மாவுப்பொருட்களை கண்டறிதல்:

தொழில்துறை மாவுப்பொருட்கள் அல்லது அதன் வழித்தோன்றல்கள் பல்வேறு பெயர்களில் லேபிள்களில் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தால், அது சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து அதிகம் உள்ள உணவு எனப் புரிந்துகொள்ளலாம்:

  • சுத்திகரிக்கப்பட்ட மாவு (Refined Flour): மிகவும் பொதுவான வடிவம். நார்ச்சத்து முற்றிலும் நீக்கப்பட்டது.
  • சோள மாவு (Corn Starch): கெட்டிப்பாக்கி அல்லது நிரப்பியாகப் (Thickener or Filler) பயன்படுத்தப்படுகிறது.
  • மாற்றியமைக்கப்பட்ட மாவுச்சத்து (Modified Starch): இதன் பொருள், சோளம், உருளைக்கிழங்கு அல்லது அரிசியில் இருந்து எடுக்கப்பட்டு வேதியியல் ரீதியாக மாற்றியமைக்கப்பட்ட ஸ்டார்ச். இது சாஸ்கள், சூப்கள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பொருட்களில்  சேர்க்கப்படுகிறது.
  • மால்டோடெக்ஸ்டிரின் (Maltodextrin): இது ஸ்டார்ச்சில் இருந்து பெறப்படும் ஒரு வகை சர்க்கரை/நிரப்பி. அதிக கிளைசெமிக் குறியீட்டைக் (High GI) கொண்டது. விளையாட்டுப் பானங்கள் மற்றும் மசாலாப் பொடிகளில் அதிகம் காணப்படும்.
  • உருளைக்கிழங்கு மாவு (Potato Starch) / அரிசி மாவு (Rice Starch): இவை பிணைப்பான்களாகப் (Binders) பயன்படுத்தப்பட்டிருக்கலாம். 

ஊட்டச்சத்து அட்டவணையைக் கவனிப்பதன் மூலமும் இந்த வகை ஸ்டார்ச்சின் சேர்க்கையைக் கண்டறியலாம்.

  • குறைந்த நார்ச்சத்து (Low Fiber): ஒரு உணவில் உள்ள மொத்த கார்போஹைட்ரேட்டுடன் ஒப்பிடும்போது, நார்ச்சத்து (Dietary Fiber) மிகக் குறைவாக இருந்தால், அந்த உணவு சுத்திகரிக்கப்பட்ட மாவைக் கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது. உதாரணமாக, ஒரு ரொட்டியின் 20 கிராம்  கார்போஹைட்ரேட்டுக்கு  1 கிராம் மட்டுமே நார்ச்சத்து இருந்தால், அது பெரும்பாலும் சுத்திகரிக்கப்பட்ட மாவைக் கொண்டது என்று பொருள்.
  • சர்க்கரை அளவு (Sugar Content): மால்டோடெக்ஸ்டிரின் அல்லது HFCS போன்ற ஸ்டார்ச்-சார்ந்த இனிப்பான்கள் சேர்க்கப்பட்டிருந்தால், “சேர்க்கப்பட்ட சர்க்கரைகளின்” (Added Sugars) அளவு அதிகமாக இருக்கும்.

 தயாரிப்புத் தகவலை சரிபார்த்தல்:

உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்பைப் பற்றி அளிக்கும் விளக்கங்களையும் கவனிக்கலாம்:

முழு தானிய முத்திரை (Whole Grain Stamp): உண்மையாக நார்ச்சத்து நிறைந்த முழு தானிய உணவுகளில், “100% முழு தானியம்” என்னும் வாசகமோ அல்லது அதற்குரிய  முத்திரையோ இருக்கிறதா என்று பார்க்கலாம். இந்த முத்திரை இல்லை என்றால், அது பெரும்பாலும் சுத்திகரிக்கப்பட்ட  மாவுகளின் கலவையாக இருக்கலாம்.

“மைதாவற்றது” அல்லது “நார்ச்சத்து நிறைந்தது” (Maida-Free or High-Fiber): ஒரு  உணவுப்பொருள் இந்தத்தகவல்களைக்கொண்டிருந்தால், வாங்கும் முன்பு உள்ளடக்கப் பட்டியலைச் சரிபார்த்து உறுதிப்படுத்துவது நல்லது.

காகிதத் தொழிற்சாலைகள்,  ஜவுளித் துறை, உணவுப் பதப்படுத்துதல் மற்றும் மருத்துவத் தயாரிப்புகள் வரை தொழில்துறை ஸ்டார்ச்சின் பங்கு இன்றியமையாதது. அதன்   பரந்த பயன்பாடு பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமாக அமைகிறது என்றாலும்  அதன் பயன்பாட்டின் மறுபக்கம் மறைக்கப்பட்ட, நம் கண்ணுக்குத்தெரியாத ஆபத்துகள் நிறைந்திருக்கிறது. இந்தத் தொழில்துறை மூலப்பொருளின்  உணவு சார்ந்த பயன்பாட்டிற்கு சரியான கவனம் அளிக்கப்படாவிட்டால் மனித ஆரோக்கியத்திற்கு இது நிச்சயமாக  அச்சுறுத்தலாக மாறக்கூடும்.

வீடுகளில் சமைப்பது குறைந்துபோய் ஹோட்டல்களில் இருந்தும் பேக்கரிகளில் இருந்தும் வரவழைத்துச் சாப்பிடுவது வாடிக்கையாகிவிட்டிருக்கும் இந்த அவசரயுகத்தில்  உணவு சார்ந்த ஆரோக்கியக்கேடுகள் வராமலிருக்க நாம் கவனம் கொள்ள வேண்டும். படிப்பு மற்றும் வேலைகளின் பொருட்டு வீட்டை, சொந்த மாநிலத்தை, நாட்டைவிட்டு வெளியே தங்கி இருக்கும் லட்சக்கணக்கான மக்களின் ஆரோக்கியத்திற்கு இந்த கண்ணுக்கு தெரியாத ஸ்டார்ச் பெரும் ஆபத்துக்களை உண்டு பண்ணக் கூடும் எனவே விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். 

2025-ல்  14.92 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் இந்த வகை மாவுப்பொருட்களின் உலகச்சந்தை மதிப்பு 2030-ல்  17.30  பில்லியனாக உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கணிப்பு,  அதிகரித்துக்கொண்டே இருக்கும் இந்த மாவுப்பொருட்களின் உலகளாவிய தேவையைக் காட்டுகிறது.  எனவே  இவ்வகை ஸ்டார்ச் பொருட்களுக்கான தரக்கட்டுப்பாடு,  சத்தான உணவுகுறித்த விழிப்புணர்வு போன்றவை மிக மிக அவசியமாகிவிட்டிருக்கிறது.

அறிவியலே இலக்கியமாக!

(தன்னறம் வெளியீடாக 2025-ல் வந்த கல்லெழும் விதை, தந்தைப்பெருமரம் ஆகிய இரு நூல்களுக்கு ஜெ -வின் முன்னுரை)

இருபதாம் நூற்றாண்டுக்கே உரிய ஓர் இலக்கியத்துறை என்பது அறிவியல் இலக்கியம். அறிவியல்புனைவு என ஒன்று உண்டு, அது இலக்கியத்திற்கான கருப்பொருட்களையும்  படிமங்களையும் அறிவியலில் இருந்து எடுத்துக்கொள்வதுதான் அது. அறிவியல் இலக்கியம் என்பது அறிவியலையே இலக்கியமாக எழுதுவது. அறிவியலில் உள்ள தகவல்களும் கொள்கைகளும்தான் எழுதப்படும். கற்பனைக்கு இடமே இல்லை. ஆனால் அந்தத் தகவல்களையும் கொள்கைகளையும் கொண்டுவாசகனின் கற்பனையை விரிவாக்கி அறிவியலை புகட்டுபவை அறிவியல் இலக்கியங்கள்.

நான் அப்படிப் படித்த முதல்நூல் சோவியத் ருஷ்ய வெளியீடான யாக்கோப் பெரெல்மான் எழுதிய பொழுதுபோக்குப் பௌதீகம் என்னும் இரண்டு பகுதிகள் கொண்ட நூல். என் பள்ளிப்பருவத்தில் எந்த ஒரு மாயாஜாலப் படைப்பையும் விட என்னை ஆட்கொண்டது அந்த புத்தகம்தான். அந்நூலில் ஜூல்ஸ்வெர்ன் போன்ற அறிவியல் புனைவெழுத்தாளர்களை தொடர்ந்து மேற்கோள் காட்டியிருந்தார். பல நாவல்களை நான் முதன் முதலில் கேள்விப்பட்டதே அந்நூல் வழியாகத்தான்.

தொடர்ந்து சோவியத் வெளியீடுகளான அறிவியல்நூல்கள் என்னை பெரிதும் கவர்ந்தன. ‘அனைவருக்குமான உடலியங்கியல்’ என்னும் நூலை செல்லுமிடமெல்லாம் கொண்டு சென்று பயின்றதை நினைவுகூர்கிறேன். அதன்பிறகு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பொதுவாசிப்புக்குரிய அறிவியல்நூல்கள் மேல் பெரும் பித்தே எனக்கு உருவாகியது. என்னை ஆங்கில அறிவியல் இலக்கியத்திற்குள் கொண்டுசென்ற நூல் டெஸ்மண்ட் மோரிஸ் எழுதிய நிர்வாணமான குரங்கு.இன்றுவரை அத்தகைய எழுத்துக்களின் தீவிரமான வாசகன் நான்.  அவற்றில் ரிச்சர்ட் ரிஸ்டாக், கார்ல் சகன் போன்ற அறிவியலாளர்கள் உண்டு. கொஞ்சம் கூடுதலான ஊகங்களை அளிக்கும் லயால் வாட்ஸன் போன்றவர்கள் உண்டு. பெரும்பாலும் புனைவா என்ற ஐயம் தோன்றச்செய்யும் எரிக் வான் டேனிகன் போன்றவர்களும் உண்டு.

தமிழில் அறிவியல் எழுத்துக்கு பலரும் சுஜாதாவை மேற்கோள் காட்டுவதுண்டு. எனக்கு சுஜாதாவின் நல்ல சிறுகதைகள், அதைவிட நாடகங்கள் மேல் பெருமதிப்புண்டு. தமிழின் சிறந்த சூழல்சித்தரிப்பாளர் என்ற எண்ணமும் உண்டு. ஆனால் அவர் மேலோட்டமான அறிவியல் எழுத்தாளர் , மிக மோசமான முன்னுதாரணம் என நினைக்கிறேன். நல்ல அறிவியல்நூல்கள் இல்லாத பொதுவாசிப்புச் சூழலில் அறிவியலை வேடிக்கையான துணுக்குச் செய்திகளாக கொண்டுசென்றவர். அறிவியல்கொள்கைகளை விளக்குவதற்கான மொழியோ புரிதலோ அவருடைய எழுத்தில் வெளிப்பட்டதில்லை.

பாமரர்களுக்கும் அறிவியலைக் கொண்டுசெல்வது என்பது அறிவியலை பாமரத்தனமாக ஆக்குவதோ, பாமர மொழியில் அறிவியலைச் சொல்வதோ அல்ல. சுஜாதாவுக்கு அறிவியல் சுவாரசியமாக இருக்கமுடியும் என்ற நம்பிக்கை இருந்ததில்லை. ஆகவே அறிவியலை எப்போதுமே மிக மேலோட்டமாகவும், பெரும்பாலும் அரைகுறையாகவும்தான் அவர் சொன்னார். (அதை அவர் சுருக்கிச் சொல்வது என நினைத்துக்கொண்டார்) பாமரவாசகர்களைக் கவரும் வேடிக்கை, கிண்டல் ஆகியவற்றை ஊடாகக் கலந்துகொண்டார். பெரும்பாலும் அவருடைய வாசகர்கள் அவருடைய அறிவியலெழுத்தில் ரசித்தது அந்த சில்லறை வேடிக்கைகளைத்தான். அத்தகைய விடலைத்தனமான மொழியில் எழுதப்படும் அறிவியல் சார்ந்த எழுத்துக்களை ஏராளமாக உருவாக்கினார் என்பதனால்தான் அவர் மோசமான முன்னுதாரணம்.

அறிவியல் இலக்கியம் சுவாரசியத்திற்காக அறிவியலுக்கு அப்பால் எதையும் நாடவேண்டியதில்லை. இந்தப் பிரபஞ்சத்தின் , இந்த உயிர்வெளியின் ஆழத்து மர்மங்களை நோக்கித் திறப்பது என்பதனாலேயே அறிவியல் பெரும் வசீகரம் கொண்டது. கற்பனையை அதன் எல்லை வரைக்கும் கொண்டுசெல்லக்கூடியது. தமிழில் அத்தகைய அறிவியல் சார்ந்த எழுத்துக்களை என்.ராமதுரை ஓரளவுக்கு எழுதியிருக்கிறார்.ஆனால் சூழியல் தளத்தில் தியடோர் பாஸ்கரன் எழுதிய நூல்களே மெய்யாகவே அறிவியல் இலக்கியம் என்று சொல்வதற்கான தகுதி கொண்டவை.

தியடோர் பாஸ்கரன் வாசகனை மொழியால் கிச்சுகிச்சு மூட்டவில்லை. அவர் அவனுடைய முதிர்ச்சியை நம்பினார். அறிவியல் செய்திகளைக் கொண்டு வாசகனை திகைப்படையச் செய்யவுமில்லை. அறிவியலின் தரவுகளையும் கொள்கைகளையும் கூரிய மொழியில், தெளிவாக முன்வைத்தார். அதற்குரிய கலைச்சொற்களை தானே உருவாக்கினார் . தனியொருவராக சுற்றுச்சூழலியல் அறிவியலை தமிழ் வாசிப்புலகில் நிலைநிறுத்தினார். அறிவியல் செல்லும் அறிதலின் ஆழங்களை, அது உருவாக்கும் பிரபஞ்ச தரிசனங்களையே தியடோர் பாஸ்கரன் முன்வைத்தார். தமிழில் அவர் அதற்கு மகத்தான முன்னுதாரணம்.

தியடோர் பாஸ்கரனின் வழியில் வந்த முதன்மையான அறிவியல் இலக்கிய ஆசிரியர் என்று லோகமாதேவியைச் சொல்வேன். அவர் தாவரவியல் நிபுணர், ஆய்வாளர், பேராசிரியர். தாவரங்களைப் பற்றிய அளப்பரிய ஆர்வத்தை தன் வாழ்க்கையாகக் கொண்டவர். தன் துறையில் பெரும் ஈடுபாடு கொண்ட ஓர் ஆசிரியர் என்ன செய்யமுடியும் என்பதற்கான சான்றாக அமையும் சிலரையே நாம் வாழ்க்கையில் சந்திக்க முடியும். லோகமாதேவி அத்தகையவர்களில் ஒருவர். அவ்வகையில் தமிழில் தாவரங்களைப் பற்றி பொதுவாசகர்களுக்காக உருவாக்கப்படும் இலக்கிய மரபு ஒன்று இனி உருவாகும் என்றால் அவரே அதன் முன்னுதாரணமும் முன்னோடியுமாகக் கருதப்படுவார்.

லோகமாதேவி அறிவியல் திரட்டியுள்ள தரவுகளையும், அறிவியல் நிரூபித்துள்ள கொள்கைகளையும் மட்டும்தான் சொல்கிறார். ஆனால் அவற்றை இன்றைய வாழ்க்கைச்சூழலுடன் இணைத்துக்கொண்டு, நாம் அறிந்த நம் சூழலில் நாமறியாத என்னென்ன உள்ளது என்ற பிரமிப்பை உருவாக்கும்படி முன்வைக்கிறார். அந்தப் பிரமிப்பு இயற்கை என்னும் இந்த மாபெரும் உயிர்வெளி பற்றிய ஒரு மெய்யியல்தரிசனமாக வாசகனில் விரிவடைகிறது. அந்த தரிசனமே அவருடைய கட்டுரைகளை வாசிப்பவர்கள் அவற்றை இலக்கியமாகக் கொள்ளச் செய்கிறது.

உதாரணமாக, ஒரு தாவரவியலாளரின் பார்வையில் பயிர் என்றும் களை என்றும் பேதமில்லை. எல்லாமே செடிகள்தான். களைகளும் ஓரு சூழலின் பிரிக்கமுடியாத பகுதிதான், அவையும் ஒருவகை தேசியச் செல்வம்தான், அரசு களைகளின் அழிவையும் கண்காணிக்கவேண்டும் என்று லோகமாதேவி சொல்லும் இடம். எனக்கு அது மெய்சிலிர்ப்பூட்டும் ஒரு வேதாந்த தரிசனமாகவே இருந்தது. களை,களையப்பட வேண்டியது என்னும் சொல்லே தாவரங்கள்மீதான பொறுப்பற்ற பார்வையை காட்டுவது என நினைத்தேன்.

தமிழில் சூழியல் பற்றிப் பேசியவர்களே அதிகமும் இயற்கை பற்றிப் பேசியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தொடர்ச்சியாக இயற்கையின் அழிவைப் பற்றிய அபாயமணியை அடிப்பவர்களாக, அதற்காகக் கொஞ்சம் அறிவியலை கடந்து செல்பவர்களாக இருக்கிறார்கள். உதாரணமாக, சீமைக்கருவேலத்தை ஒரு மாபெரும் நோய்க்கூறாக அவர்கள் சித்தரிப்பதைச் சொல்லலாம். ஆனால் அவர்கள் சொல்லும் எந்தத் தீங்கையும் சீமைக்கருவேலம் இழைப்பதில்லை, அதற்கான ஒரு அறிவியல்சான்றுகூட உருவாக்கப்படவில்லை என்று லோகமாதேவி சொல்லுமிடத்தைக் குறிப்பிடலாம்.

இயற்கையை காக்கும் பொறுப்புள்ளவனாக மனிதனை லோகமாதேவி சித்தரிக்கவில்லை. இயற்கை மேல் பரிவுணர்ச்சி (sympathy) கொள்ள மனிதனுக்கு தகுதி உண்டா என்ன?  இயற்கையைப் புரிந்துகொள்ள, அதில் தன்னை இணைத்து உணர மட்டுமே அவருடைய கட்டுரைகள் வலியுறுத்துகின்றன. அவற்றிலுள்ளது ஓர் ஆழ்ந்த தன்மய உணர்வுதான் (empathy). உதாரணமாக நகரங்களில் செயற்கை மின்வெளிச்சத்தில் இரவெல்லாம் நின்றிருக்கும் தாவரங்கள் இரவும் பகலும் மாறிவருவதை உணரமுடியாதபடி ஆகின்றன, இது ஒரு சித்திரவதை, அவற்றின் உயிரியல்பே தாறுமாறாகிவிடுகிறது என்னும் குறிப்பைச் சுட்டிக்காட்டுவேன். இங்கே எவருமே யோசிக்காத ஒரு கோணம் அது.

லோகமாதேவி ஒரு வாசகராக எனக்கு அறிமுகமானவர். கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்தவரை கட்டுரைகள் எழுதும்படி கோரி, வற்புறுத்தி எழுதச் செய்தேன். ஏனென்றால் தமிழில் அறிவியல் இலக்கியம் உருவாகவேண்டும் என்னும் விழைவு எனக்கு இருந்தது. மிகமிகக் குறைவாகவே பொறுப்புணர்வுடன், அறிவார்ந்த நடையில், எழுதப்படும் அறிவியல் இலக்கியம் தமிழில் வெளிவருகிறது. அதற்கான வாசகர்கள் இங்கே இன்னும் பெருவாரியாக உருவாகவில்லை. அறிவியலை  வேலைக்கான கல்வியாகவே நாம் கற்கிறோம், அறிவுத்தேடலுக்காக வாசிப்பதே இல்லை. ஆயினும் அறிவியக்கச் செயல்பாடு என்பது அது இயல்பானது என்பதனால், தேவை என்பதனால் நிகழவேண்டியதே ஒழிய சூழலின் ஆதரவு அதற்கு ஒரு பொருட்டு அல்ல என எண்ணினேன்.

லோகமாதேவி என் இணையப்பக்கத்தில்தான் நீண்ட அறிவியல் கட்டுரைகளை எழுதினார். பல கட்டுரைகள் எனக்கு எழுதப்பட்ட கடிதங்கள். இன்று லோகமாதேவியின் பலநூல்கள் வெளிவந்துவிட்டன. அவர் ஓர் ஆய்வாளராக சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறார். தாவரவியல் வகுப்புகள் நடத்துகிறார். தமிழகத்தில் தேவையான,முற்றிலும் புதிய ஓர் அறிவுத்தளத்தை அறிமுகம் செய்யும் வாசகராகவும் அறியப்பட்டிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

ஜெயமோகன்

கரையோர நாணல்கள்!

நாணல்கள்

 நீர்நிலைகளின் கரைகளிலும் சதுப்பு நிலங்களிலும் வளரும் உயரமான புல் வகைத் தாவரங்கள் நாணல் எனப்படுகின்றன. நாணல் பூங்கொத்துக்கள்   பெரிய அளவில் தூய வெள்ளையிலும் இளஞ்சிவப்பிலும் ஊதாநிறத்திலும் பறவையின் இறகுபோல இருக்கும்.

புல் குடும்பமான போயேசியை சேர்ந்த இவற்றின் அறிவியல் பெயர் Phragmites australis. பேரினப்பெயரான Phragmites  வரப்புகளில் புதராக வளர்பவை என்றும் சிற்றினப்பெயர்  ஆஸ்திரேலியாவை தாயகமாகக் கொண்டவை என்றும் பொருள் கொண்டிருக்கிறது.

60 செ மீ நீளமுள்ள இலைகளுடன் இவை சுமார் 2 லிருந்து 4 மீ உயரம் வரை வளரும்.  கோடைக்காலத்தின் இறுதியில் இளம் ஊதா நிற மலர்மஞ்சரிகள் 40 செமீ அளவில் உருவாகும். கூர்மையான சிறு மலர்களின் நுனியில் சாம்பல் நிறத்தில் பட்டுப்போன்ற நீளமான இழைகள் இருக்கும். இவ்விழைகள் நாணலின் நுண் விதைகளைக் காற்றில் பல இடங்களுக்கும் கொண்டு செல்ல உதவும்.

இவை  உலகெங்கிலும் உள்ள ஈரநிலங்களில் (அண்டார்டிகாவைத் தவிர) காணப்படுகிறது.  உயரமான, மெல்லிய, அதிக உற்பத்தித் திறன் கொண்ட புல் வகையான  நாணல் பல்லாயிரமாண்டுகளாக மனிதர்களுக்குப் பல விதங்களில் பயன்படுகிறது. 

நாணல்கள் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்களால்  விவசாயம் , தீவனம் கூரை, சுவர்கள், மீன் பொறிகள் முதலிய கட்டுமான நோக்கங்களுக்காகவும் ,காற்று , உறைபனிக்கு எதிராகப் பாதுகாக்கும் பாய்கள், வேலிகள் ஆகியவற்றை தயாரிக்கவும், கூழ் மற்றும் காகிதம் உருவாக்கும் தொழில்துறையை உள்ளடக்கிய பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கும்,  எரிபொருளாக  ஆற்றல் உருவாக்கத்திலும் பயன்படுகிறது.

ஏராளமான இதன் இலைகள் மலிவான, எளிதில் கிடைக்கும் ஓலைப் பொருளாகக் கூரைவேய்வதில் உலகெங்கும் மிக அதிகம் பயன்படுகிறது. இவற்றிற்கு நீர் நாணல் என்றும் பெயருண்டு.

இந்த நாணல் மட்டுமல்லாது நாணலில் பல வகைகள் உண்டு

  • பெருநாணல்

பெருநாணலான  Arundo donax என்பது 6 லிருந்து 10 மீ உயரம் வளரக்கூடியது. இதற்கு யானைப்புல் என்றும் பெயருண்டு.இதன் தண்டுகளிலிருந்து இசைக்கருவிகள் செய்யப்படும். இதன் நாரிழைகளிலிருந்து துணிகளும் நெய்யப்படுகின்றன. வெட்ட வெட்டth தொடர்ந்து 25 வருடங்களுக்கு வளர்ந்துகொண்டே இருக்கும் இவற்றிலிருந்து உயிரி எரிபொருளும் உருவாக்கப்படுகின்றது.

பல பழங்குடியினர் இதன்  மாவுச்சத்து நிறைந்த வேர்க்கிழங்குகளிலிருந்து மதுபானமும் உருவாக்குகிறார்கள். புல்லாங்குழல் உள்ளிட்ட பல காற்றிசைக் கருவிகள் இதிலிருந்து செய்யப்படுகின்றது. தெற்கு பிரான்ஸ் பகுதியில்  இசைக்கருவிகளுக்கென  இப்பெருநாணல் சாகுபடி செய்யப்படுகின்றது.

  • பர்மா நாணல் 

Neyraudia reynaudiana என்னும் அறிவியல் பெயர் கொண்ட இந்த நாணல் பட்டு நாணல், போலிநாணல் என்றும் அழைக்கப்படுகிறது.  இதன் அறிவியல் பெயர் Reynaudia என்னும் க்யூபாவின் நீலப்பச்சை புல்லின் பெயரை மாற்றியமைத்து வைக்கப்பட்டது. 3 அடி நீளம் கொண்ட ஆயிரக்கணக்கான நுண்மலர்களை கொண்ட பட்டுப்போன்ற மலர் மஞ்சரியினால் இந்த நாணலுக்கு பட்டுநாணல் என்னும் பொயர் வந்தது

  • ரிப்பன் நாணல்

Phalaris arundinacea என்னும் அறிவியல் பெயர் கொண்ட ரிப்பன் நாணல் இளஞ்சிவப்பு இலைகளுடன் மிக அழகிய தோற்றம் கொண்டிருக்கும். இவை நீரிலிருக்கும் மாசை உறிஞ்சி எடுத்துக்கொள்ளும் என்பதால் கழிவுநீர் சுத்திகரிப்பில் பெரிதும் பயன்படுகிறது. சத்து நிறைந்த இலைகள் கால்நடைதீவனமாகவும் உலர் இலைகள்   கட்டிகளாக்கப்பட்டு எரிபொருளாகவும் பயனாகின்றன.

  • இனிப்பு நாணல்

Glyceria maxima என்னும் இனிப்பு நாணல் சீனாவை சேர்ந்தது.  இந்த நாணல் கால்நடை தீவனமாகப் பயனாகிறது. இதன் நாரிலிருந்து கூடைகள் பின்னப்படுகிறது

  • சிறு நாணல்

Calamagrostis பேரினத்தின் 200-க்கும் அதிகமான  சிற்றினங்கள் அனைத்தும் சிறு நாணல் எனப்படுகின்றன. மிக அழகிய தோற்றம் கொண்ட குட்டையான நாணல் வகையான  இவை அலங்கார புல்வகைகளாகப் பெரிதும் பயன்பாட்டில் இருக்கின்றன

சூழலுக்கு இணக்கமான இந்த நாணல்களின் பல்வேறு வகைகளும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக உலகின் பல பாகங்களிலும் மீண்டும் பெருமளவு பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது.

விவேகானந்தரும் விஜயகாந்தும்!

இன்று விவேகானந்தர் ஜெயந்தி கல்லூரியில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. விவேகானந்தரையும், இளமையில் அவரைப் போலாக வேண்டும் என்று கனவுகொண்டிருந்த தருணையும் நினைத்துக்கொள்கிறேன்.

சரண், தருணை நான்தான் பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்துச்செல்வேன். அப்படியொரு மாலையில் 1-ம் வகுப்பிலிருந்த தருணின் வகுப்பாசிரியை கீதா மிஸ் என்னை அவசியம் சந்திக்க வேண்டும் எனத் தகவல் சொல்லி இருந்ததால் அவருக்காக ஆசிரியர் அறையில் காத்திருந்தேன். அவரது மேசை முழுக்க குழந்தைகள் வரைந்த படங்களும் திருத்தவேண்டிய தாள்களும் நிரம்பிக்கிடந்தன. களைத்துப்போய் தலையில் சாக்பீஸ் துகள்களுடன் வந்த அவர் கண்ணாடியைக் கழற்றித் துடைத்துக்கொண்டே எதிரில் இருந்த நாற்காலியில் அமரும்படிச் சொன்னார். வழக்கமாக அவரது முகத்தில் இருக்கும் புன்னகை அன்று இல்லை என்பதை கவனித்தேன்.

எடுத்த எடுப்பிலேயே ...வீட்டில் நிறைய டிவி பார்ப்பிங்களா... என்றார் ... இல்லைங்க எங்க வீட்டில் டிவியே இல்லையே!..என்றேன்

. ... அப்போ அடிக்கடி பசங்களை சினிமாக்கு கூட்டுட்டு போவீங்களா?.. என்றார்.

.. இல்லைங்க, எப்பவாவதுதான் போவோம்…“

என்னை நம்பாமல் முறைத்துப்பார்த்துவிட்டு“ ..அப்புறம் எப்படிங்க வகுப்பில் மாணவர்களை எல்லாரும் எதிர்காலத்தில் என்னவாகப் போறீங்கன்னு வரிசையாச் கேட்டு, ஒவ்வொருத்தருனும் டாக்டர், இஞ்சினீயர், கலெக்டர், கண்டக்டர்னு சொல்லிட்டிருக்கறப்போ தருண் எழுந்து விஜயகாந்த் ஆகப்போறேன்னு சொல்லறான்?, ஏன்னு நான் கேட்டா எங்கம்மாதான் அப்படி ஆகனும்னு சொன்னாங்கன்னு சொல்லறான், சின்னக்குழந்தைகளை இந்த வயசிலெயெ சினிமாவை நோக்கித் தள்ளறது சரியா ? அதுவும் நீங்களே ஒரு டீச்சரா இருந்துகிட்டு?... என்றார்.

அயர்ந்து போனேன். தருணுக்கு விஜயகாந்தைத் தெரியும் என்பதே எனக்குத்தெரியாது, அன்னையின் விழைவுகள் ஜீன் வழியாகக் கடத்தப்படுமென்பது உண்மையென்றால் அவன் பார்த்திபன் ஆக வேண்டும் என்றுதானே நியாயமாகச்சொல்லி இருக்க வேண்டும் ஆனால் எப்படி விஜயகாந்த்?

கீதா மிஸ்ஸிடம் அப்படி நான் எதுவும் சொன்னதில்லை என்று சத்தியம் செய்துவிட்டு அது சம்பந்தமாகத் தருணைக்கண்டிக்கிறேன், சினிமா மோகத்திலிருந்து அவனைத் திருப்பித் திருந்திய குமரனாக்கி நல்வழிப்படுத்துகிறேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு வீட்டுக்கு மகன்களை அழைத்துக்கொண்டு வந்தேன்.

தருணுக்கு எதிர்காலத்தில் ஒரு பன்றிகுட்டியாக வேண்டும் என்னும் ஒரு பெருவிருப்பம் இருந்ததுதான் எனக்குத்தெரியும், பள்ளியிலிருந்து வீடு செல்லும் வழியில் ஒரு சாக்கடையில் பன்றிக்குடும்பமொன்று இருந்தது, கட்டாயம் அங்கே காரை நிறுத்தி மனங்குளிர அவன் பன்றிகளைப் பார்த்து ரசித்தபின்னரே காரை எடுக்கமுடியும்.

கொஞ்சம் வளர்ந்து, நம்மைப்போல எளியமானுடர்கள் பிற்காலத்தில் பன்றிகளாக முடியாது என்று தருண் அறிந்துகொண்ட போது அவன் 3-ம் வகுப்பு முடித்து விட்டிருந்தான். அப்போதும் மனம் தளராமல் கண்ணாடி முன்பு நின்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மட்டும் பன்றிக்குட்டியைப்போல மாற்றிக்கொள்ளும் சாத்தியங்களைப்பற்றி யோசிப்பான்.

ஒரு ஞாயிறன்று உயரமாக தலையணைகளை அடுக்கி வைத்து அவற்றின் மேலிருந்து தரையில் குதிக்கும் பரிசோதனையொன்று நூழிழையில் பிசகிப்போய் தரையில் குப்புற விழுந்து உதடுகள் வீங்கி பத்துப்பதினைந்துநாட்கள் அசல் பன்றிக்குட்டியைப் போலவே முகம் இருந்ததை நொடிக்கொருதரம் கண்ணாடி முன்பு நின்று பார்த்துப்பார்த்துத் துயருற்றவன் பிறகு ஒருபோதும் பன்றிகுட்டிகளைப் பற்றிப் பேசவேயில்லை

இரவு சமைக்கையில் அதே யோசனையில் இருந்தேன் கொஞ்சநாள் முன்பு ரமணா திரைப்படத்தை லேப்டாப்பில் மகன்களுடன்பார்த்து, கல்லூரிப் பேராசிரியராரன விஜயகாந்த் குற்றங்களைத் தட்டிக்கேட்பதை, சண்டைக்காட்சிகளில் எதிராளியின் நெஞ்சுக்குநேரே அவர் கால்கள் உயர்ந்ததை எல்லாம் சிலாகித்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது அதனால் சொல்லி இருப்பானோ என்றூ ஒரு சம்சயமும் உண்டானது.

இரவு இருவருக்கும் கதைசொல்லித் தூங்கவைக்கையில் மெதுவாக“.. தருண், கீதா மிஸ் கிட்ட என்னடா சொன்னே?.. என்றேன்.

..அதுவா நான் பெரிசாகி விஜயகாந்த் ஆகப்போறேன்னு சொன்னேன், கீதா மிஸ் முறைச்சுப்பார்த்து இனிமே அப்படிச்சொன்னா அடிப்பேன்னாங்க..ஆனா நான் பயந்துக்கலை அவங்க அடிக்கவே மாட்டாங்கனு எனக்குத்தெரியும்..“ என்றான்.

``...எதுக்குடா அப்படிசொன்னே? உனக்கு விஜயகாந்த் பிடிக்குமா?..

..ஆமா பிடிக்கும் நீதான சொன்னே அவர் ரொம்ப நல்லவரு நமக்கு நிறைய நல்லது பண்ணி இருக்காருன்னு அதான் நான் சொன்னேன்..

..நானா, நான் எப்படா சொன்னேன்..?

... மீ மறந்துட்டியா நீயே? அந்த பெட்ருமில் அவர் போட்டோ கூட இருக்கே நீ அதைக்காமிச்சு சொல்லி இருக்கே, தலையில் துண்டு கட்டிட்டு, கையை இப்படி கட்டிட்டு நிப்பாரே அந்த விஜயகாந்த்,,, என்றான்.

..அடப்பாவி அவர் விஜயகாந்த் இல்லடா விவேகானந்தர்..

... ஹி ஹி ஆமா வி- ல ஆரம்பிச்சதால நான் மாத்திச் சொல்லிட்டேன் நாளைக்கு கீதா மிஸ்கிட்ட சொல்லிடறேன் நான் விவேகானந்தராகப் போறேன்னு.. என்றான்.

வேடசெந்தூ ர் வீடு கிரஹப்பிரவேசத்துக்கு வந்திருந்த என் ஆசிரியர் திரு ராஜகுமார் அவர்கள் விவேகானந்தரின் சட்டமிடப்பட்டிருந்த அந்தப் புகைப்படத்தைப் பரிசளித்திருந்தார் இன்றுமவர் அதே இடத்திலிருந்து சைடாக எங்களைப்பார்த்து புன்னகைத்துக் கொண்டிருக்கிறார், அந்தப் புகைப்படத்தைக்காட்டி அவரைக் குறித்து மகன்களிடம் பேசி இருக்கிறேன்.அதில் வந்த வினை அது. இதையெல்லாம் இன்னுமே வீட்டில் பேசிப்பேசி சிரித்து தருணை கோபமூட்டுவோம்.

சில வருடங்களுக்கு முன்பு இதே நாளில் என்னைத் தெரியாத்தனமாக விவேகானந்தரைக் குறித்து உரையற்றச் சொன்னார்கள். நானும் ஜெ வின் தளத்திலிருந்தும் விவேகானந்தரைக் குறித்த நூல்களிலிருந்தும் மிகத்தரமான ஒரு உரையைத் தயாரித்துகொண்டு போய் விவேகானந்தரின் பயணங்கள் என்னும் செறிவான உரையாற்றினேன்.

அதுவரை அரைத்தமாவே அரைக்கப்பட்ட அந்த அரங்கில அது மிகப்புதியதோர் எழுச்சி உரை (என்பதையும் நானே சொல்லிக்கொள்கிறேன்). மேடையில் அமர்ந்திருந்த ஒரு பெரும் பேராசிரியர் பிரமை பிடித்ததுபோல் இருந்தார், வேறு வழியில்லாமல் என்னைப்பாராட்டி விட்டு, தான் அந்த உரையைப் பதிவு செய்திருப்பதாகவும், கல்லூரி நிர்வாகத்துக்கு அதைஅனுப்பி என்னைக்குறித்துச் சொல்லப்போவதாகவும் சொன்னார்.

அவர் பணி ஓய்வு பெற்று இரண்டு வருடங்களாகிது பாவம் அவரால் அதை இன்று வரை செய்ய முடியவில்லை என்பதையும் என்னை அதன்பிறகு நிர்வாக அங்கத்தினர் இடம்பெறும் முக்கிய விழாக்களில் உரையாற்ற அழைப்பதில்லை என்பதையும் இந்த நன்னாளிலே புன்னைகையுடன் நினைவு கூறுகிறேன்.

தருணுக்கு இன்னும் விவேகானந்தராகும் உத்தேசம் இருக்குமேயானால் அவனது ஏராளமான தோழிகள் அதற்கு அனுமதி தரவேண்டி இருக்கும் சிக்கலும் இப்போது இருக்கிறது என் பதை அவனுக்கு நினைவூட்ட வேண்டும்.

// இன்னும் இருந்துகொண்டிருக்கிறது அந்த அழகிய முகம். என்றும் மாறாத இளமையிலேயே அவரை நம் நினைவுகளில் நீடிக்கச் செய்த விதி பெரும் கருணைகொண்டது//- ஜெ

அம்மை அப்பன் அயோனிகன்!

மிக மிக அரிதாகவே கண்ணீர் விட்டு அழுகிறேன். அப்படியான உறுதிப்பாடோ முன்முடிவோ எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் துயர்களுக்கும் கஷ்டப்பாடுகளுக்கும் immune ஆகிவிட்டிருக்கிறேன். அந்த shield ஐயும் கடந்து உள்ளே செல்லும் கூர்நுனிகள் உண்டாக்கும் காயங்களுக்கான கண்ணீரை மிக நெருங்கியவர்கள் மட்டுமே கண்டிருக்கிறார்கள். 

ஆனால் அகரமுதல்வன் இயக்கத்தில் ரமேஷ் பிரேதனின் அம்மை, அப்பன், அயோனிகன் ஆவணப்படம் பார்க்கையில் என்னையுமறியாமல் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தேன். ரமேஷ் பிரேதன் இறந்த  செய்தியைக் கேட்டபோது மெய்யாகவே வருந்தினேன்தான். அதற்குச் சிலநாட்கள் முன்புதான் விருதுக்கான வாழ்த்து தெரிவித்த எனக்கு ’’நன்றி தோழர்’’ என்று ரமேஷ்பிரேதன் முதலும் கடைசியுமாகப் பதிலனுப்பி இருந்தார்.

ஒரு அறைக்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருக்கும் அவர், அத்தனை திரளான வாசகர்களையும் அந்த விழாவையும் அந்த அங்கீகாரத்தையும்  நேரில் அனுபவித்தபின், இந்த விருதை வாங்கிய பின் அவர் இறந்திருக்கலாமென்று நினைத்துக்கொண்டு இருந்தேன், எனினும் தேற்ற யாருமில்லாத தனிமையில் பெருகிய அந்தக்கண்ணீர்தான் ரமேஷின் இழப்புக்கான என் இதயபூர்வமான அஞ்சலி.

இந்த ஆவணப்படப்படபிடிப்பின் பல வித்தியாசமான களங்கள், மாந்தர்கள். பிரபலங்களின் நினைவுத்தொகுப்புக்கள், மிகச்சிறப்பான இயக்கம், mystic ஆன ஒரு பொதுத்தனமை எல்லாவற்றையும் விட பிரேமாவின் இழப்பின் துயரும் அவரின் உடைந்த இதயத்தின் குருதிக் கசிவெனப் பெருகிய கண்ணீரும்தான் எனக்கு முதன்மையாகத் தெரிந்தது. ’’என்னைப் பிரேமான்னு கூப்பிடமாட்டாரு பன்னிக்குட்டின்னு, பூனைக்குட்டின்னு கூப்பிடுவாரு’’ என்று அவர் கண்ணீர் பெருக்கியபோது நானும் உடைந்து அழுதேன்.

அவரைப்  பருமனான உடலுடன் கழிவறைக்கு அழைத்துச்செல்கையில்   எடை தாளாமல்   ஒருவர் மீது ஒருவர் விழுந்து விடுவதை கண்ணீரும் சிரிப்புமாகச்சொன்னதும், தான் கோபித்துக்கொண்டு இருந்தாலும் ’’பன்னிக்குட்டி வா உனக்கு வைன் வாங்கித்தரேன்’’ என்று ரமேஷ் சொல்லுவதையும், இன்னும் அவர் தன்னோடு தான் இருக்கிறார் என்ற அவரின் காதலில் தோய்ந்த நம்பிகையுமாக, ஜெ சொல்லி இருப்பது போல தமிழ் இலக்கிய உலகம் மட்டுமல்ல, அன்பென்பதை மறந்தே போயிருக்கும் மொத்த மானுடமே அவருக்கு கடமைப்பட்டிருப்பதாவே எண்ணுகிறேன். ரமேஷ் பிரேதனின் நூலில் பிரேமாவை மழையெனச் சித்தரித்திருப்பதுதான் எத்தனை பொருத்தம். அப்படித்தான் அன்பை அவர் ரமேஷ் பிரேதன் மீது பொழிந்துகொண்டிருந்தார்,

ரமேஷ் செயலாக இருக்கையில் பிரேமா அவரிடம் சென்று சேரவில்லை அவர் படுக்கையில் இருக்கையில்தான் அவரிடம் சென்றிருக்கிறார். அவருக்குப் பணிவிடைகள் செய்வதன் மூலம்தான் அவரை நேசித்திருக்கிறார்.அந்த அன்பில், நேசத்தில், காதலில்   தளும்பிக் கொண்டிருந்த அவருக்கு இப்போது ரமேஷின் இழப்பு உண்டாக்கியிருக்கும் துயரைத்தான் என்னால் தாளமுடியவில்லை.

அசலான காதலோ நேசமோ இப்போதெல்லாம் அரிதினும் அரிதாகவே நிகழ்கிறது, காணக்கிடைக்கிறது. சொல்லப்போனால் பெரும்பாலான இப்போதைய நேசம், உறவு,காதல் எனப்படுவதெல்லாமே மிக வெளிப்படையான கணக்கீடுகள் அல்லது ஏமாற்றுதல்கள் மட்டுமே. நம்பிக்கையூட்டும் அணுகுமுறைகள், மிக எளிய நாடகங்கள் மூலமே அன்பைப்பெறமுடிகிறது பலருக்கும். பின்னர் அணுகியதைக் காட்டிலும் எளிதாக விரைவாக அதிலிருந்து விடுபட்டுப் புதியவற்றை நோக்கிச் செல்கிறார்கள்.

ஆகப்பெரிய நம்பிக்கைத்துரோகங்கள் படுக்கையிலல்ல இப்படியான விலக்குதல்களிலும் விலகிச்செல்லுதல்களில்தான் நிகழ்கின்றன. எனினும் ஆணும் பெண்ணுமாக இருபாலாருக்கும் நேசமென்பது மிகத்தேவையாக இருப்பதால் அதன்பொருட்டு தொடர்ந்து பலியாகிக் கொண்டும் பலிவாங்கிக்கொண்டும் இருக்கிறார்கள்.

இளமையில் இருப்போருக்கும், ஆரோக்கியமானவர்களுக்கும் உண்மையான அன்பு கொண்டிப்பவர்களுக்கும் மிக நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கும் இதுவே நிகழ்கையில், இளமை இறங்கு முகத்திலிருக்கையில், குணப்படுத்த முடியாத மரபுரீதியான உடல்நிலையும், அசாதாரணமான உடலெடையும் கொண்ட சொல்லிக்கொள்ளும்படியான பொருளாதார நிலையுமில்லாத ரமேஷ் பிரேதன் மீதான பிரேமாவின் தூய அன்பு என்னை அசைத்துவிட்டது, I sway!

விஷ்ணுபுரம் விழாவன்று பிரேமாவை  இறுகக்கட்டிக் கொள்ள முடியவில்லை. இந்த வருடத்திய பயணங்களின் பட்டியலில்  முதன்மையாகப் பிரேமாவைச் சந்திக்கவிருக்கிறேன் ஆரத்தழுவிக்கொள்ளப்போகிறேன்.

அந்தத் தூய அன்பை, கண்ணீரையும் துயரத்தையும் விழுங்கும் முயற்சியில் தோற்று கட்டுக்கள் அவிழ்ந்து அவர் உடைந்தழுவதெல்லாம் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.  

பிரேமாவையும் ரமேஷ்பிரேதனையும் நினைத்தால் பொறாமையாகவும் இருந்தது. மிகத்தூய அன்பை அளித்தும் பெற்றுக்கொண்டுமிருந்த  இருவரல்லவா?

ஒரு பிழையீட்டைப் போலப் பிரேமாவின் காதலின்பொருட்டும் இழப்பின் பொருட்டும்   நானும் அழுது கொண்டிருந்தேன்

13 வருடங்கள் ஒரே அறையில் படுக்கையிலேயே வாழ்ந்து, எழுந்து நடக்கவும் வெளி உலகை, வானைக்காண  பெருவிருப்பம் கொண்டிருந்தவரின் மறைவுக்குப் பின்னர்   அந்த வீட்டுக்கு வந்து, வீட்டிலேயே இரண்டு நாட்கள் இருந்த சிட்டுகுருவியை அது அவர்தான் என்று பிரேமா சொன்னது உண்மைதான். நான் நம்புகிறேன் அவரது ஆன்மா 16 நாட்கள் அங்கேயே தான் இருந்திருக்கும்.

எடை கொண்டிருந்த உடலற்ற ஆன்மாவாகவாவது பரந்த வானை அந்தச் சில நாட்களில் பார்க்கவும் அனுபவிக்கும் வாய்ப்பிருந்தும், தன்னை எந்தக்  கணக்கீடும் நோக்கமும் இல்லாமல் நேசித்த பிரேமாவுடன் 2 நாட்கள்  இருக்கவும் சிட்டுகுருவியென வந்தது ரமேஷ் பிரேதன் தான்.

அம்மா சிலவருடங்களுக்கு முன்பாக ஒரு பண்டிகை நாளில் இரவில் நெஞ்சடைத்து இறந்துபோனார்கள். தினமும் மாலையும் குளிக்கும் பழக்கம் அம்மாவுக்கும் இருந்தது என்னைப்போலவே அல்லது எனக்கிருக்கிறது அம்மாவைபோலவே.

அன்று மாலையும் குளித்து, உடல் துவட்டிய ஈரிழைத்துண்டை இனி ஒருபோதும் உடலைத் துவட்டப்போவதில்லை, நெருப்புக்கு தின்னக்கொடுக்கபோகிறோம் என்றறியாமல். வராந்தா கம்பி மீது கடைசியாகக் காயப்போட்டிருந்தார்கள்.

அம்மா இறந்து உடலை வீட்டுக்குக் கொண்டுவந்த நள்ளிரவில் எதேச்சையாகக் கவனித்தபோது அந்தத் துண்டில் வழக்கத்தைக் காட்டிலும் பெரிய அளவிலான வெட்டுக்கிளிஒன்று அமர்ந்திருந்தது. அதே துண்டின்  மீது 2 நாட்கள் அந்தப் பூச்சி அசையாமல் அமர்ந்திருந்து எங்கள் கதறலை, கண்ணீரை, பொருளற்ற சடங்குகளை, இனி யார் மீதும் பிரயோகிக்க முடியாத,  அச்சு முறிந்து கிடந்த அப்பாவின் ஆணவத்தையெல்லாம்   பார்த்துக்கொண்டிருந்தது.

பின்னர் எங்கோ எப்படியோ மறைந்துவிட்ட அந்தப்பூச்சி அம்மாவின் அஸ்தியை  மின்மயானத்திலிருந்து  வாங்கிக்கொண்டு வருகையில் தம்பி விஜியின் முதுகிலும் அஸ்தியை பாரதப்புழாவில் கரைத்துவிட்டு திரும்புகையில் உடனிருந்த இன்னொருவரின்  தோளிலும் இருந்தது. அது அம்மாதான் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

இந்த  ஆவணப்படத்தின் மிஸ்டிக்கான பகுதிகளாக கருப்புவெள்ளையில் காட்சிப்படுத்தப்பட்டவைகளும்  அந்த வண்ணத்துப்பூச்சியும் பறக்கும் பன்றியுமிருந்தன என்றாலும் பிரேமாவின் கண்ணீரும் அவர் சிட்டுகுருவியைப்பற்றி தொண்டையடைக்கச்  சொன்னதும் தான்  ஆவணப்படத்தின் உச்சம்.

 இந்த ஆவணப்படத்தின் இறுதியில்  இயக்கம் அகரமுதல்வனென்னும் பெயரைப் பார்க்க அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.  வெள்ளித்திரையில் இதே பெயரின் ஓரெழுத்து சிவப்பில் தனித்துத் தெரிகையில் முன்வரிசையில் அமர்ந்து பார்க்கக் காத்திருக்கிறேன்.

பிரேமாவுக்கும் அகரனுக்கும் அன்பு.

Newer posts »

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑