லோகமாதேவியின் பதிவுகள்

Category: தாவரங்கள் (Page 17 of 17)

Blue bonnet-state flower of Texas

டெக்சஸ் மாநில மலர்

Lupinus texensis, என்னும் தாவர அறிவியல் பெயருடைய   Texas bluebonnet  அல்லது  Texas lupine என்பது டெக்சஸ்  மற்றும் அதன் சுற்றுப்புறங்களில்  வளரக்கூடிய அழகிய அடர்நீல மலர்களை தரும் தாவரமாகும். இம்மலர்களே டெக்சஸின் மாநில மலராகவும் இருக்கின்றன Lupines எனப்படும் பேரினத்தின்,  Lupinus subcarnosus, L. havardii, L. concinnus, L. perennis, மற்றும் L. plattensis  ஆகிய 5 சிற்றினங்களுமே நீல பொன்னெட் என்றே அழைக்கப்படுகின்றன.

 கொத்துக்கொத்தாக தோன்றும் மஞ்சரிகளில் வரிசையாக அமைந்திருக்கும் மலர்களின் இதழ் அமைப்பு பெண்களும் குழந்தைகளும் அணியும் தாடைக்கு கீழ் நாடாவால் இணைக்கப்பட்டிருக்கும் bonnet என்னும் தொப்பியை போலிருப்பதால் இதற்கு blue bonnet  என பெயரிடப்பட்டிருக்கின்றது. Buffalo Clover, Wolf Flower என்னும் பெயர்களும் இதற்குண்டு  இவை பட்டாணி ,அவரைச்செடிகளின்  குடும்பமான Fabaceae (Pea Family) யை சேர்ந்தவை

5-7 பிரிவுகளாக விரல்கள்போல் விரிந்திருக்கும், கூரான நுனிகளையுடைய  பசுமைக்கூட்டிலைகளுடனும் , பீன்ஸ் பொன்ற காய்களினுள்ளே 6 அலல்து 7  மிகச்சிறிய மணிகளாக கடினமான மேலுறையுடன்  இருக்கும் விதைகளையும் கொண்டிருக்கும் இந்த ஓராண்டுத்தாவரம், அதிகபட்சமாக 3 மீட்டர் உயரம் வரை வளரும்

20லிருந்து 50 செ மீ  உயரமுள்ள தண்டிலிருந்து  சுமார் 50 அடர் நீல மலர்களையுடைய மிதமான வாசனையுடன் மஞ்சரி உண்டாகும். மஞ்சரியின் நுனியில் மட்டும் தூவெண் நிறத்தில் மொட்டுக்கள் காணப்படும்.  முதிர்ந்தபின் மலர்கள் ஆரஞ்சு நிறத்திலிருக்கும்.  பூக்கும்பருவம் மார்ச்சிலிருந்து ஏப்ரல் வரை, அரிதாக மே மாதத்திலும் இவற்றைக்காணலாம். புல்வெளிகளிலும் நெடுஞ்சாலை வழியின் சரிவுகளிலும், பயிரிடப்படாத திறந்த வெளிகளிலும் இவை  செறிந்து காணப்படும். மிகக்குறைவான நீரும் அதிக சூரிய வெளிச்சமும்  நீர் தேங்காத மண்ணும்  இவை செழித்து வளர தேவைப்படும்

1901 மார்ச் 7 அன்று  டெக்சஸீன் மாநிலமலராக Lupinus subcarnosus  என்னும் மற்றொரு சிற்றினமே  முதலில்அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் பெரும்பாலான டெக்சஸ் மக்களின் விருப்பத்தின்பேரில் L.texensis  மாநில மலராக மாற்றப்பட்டது. இம்மலருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்திற்கும், இவை  கொண்டாடப்படுவதற்கும் பிண்ணனியில் ஒரு முக்கியப்பெண்மணி இருந்திருக்கிறார்கள்

’’எங்கு மலர்கள் மலர்கிறதோ அங்கெல்லாம் நம்பிக்கையும் மலரும்’’ என்று அடிக்கடி சொல்லும் கல்வியாளரும் இயற்கை ஆர்வலரும் அமெரிக்காவின் 36 ஆவது அதிபரரான லிண்டன் பி ஜான்சனின் (Lyndon B Johnson) மனைவியுமான”Lady Bird” Johnson    என்பவரின் முயற்சியால்தான்  இன்று டெக்சஸின் நெடுஞ்சாலைகள் பலவண்ன வனமலர்களால் அழகுறக்காணப்படுகின்றது. 1965ல் அவரால் முன்னெடுக்கப்பட்டு கையெழுத்திடப்பட்ட HBA –  highway beautification Act  என்னும் நெடுஞ்சாலைகளை அழகுபடுத்தும் சட்டத்தின் பின்னரே இந்த செடி மிக அதிகமாக சாலியோர சரிவுகளில் பயிரிடப்பட்டது.

அதன்பின்னரே பொட்டல் வெளிகளெல்லாம் பூத்துக்குலுங்கும் ரம்மியமான இடங்களாகின  சலிப்பும் சோர்வும் தரும் நெடுஞ்சாலைப்பயணங்கள் பார்வைக்கு இனிய மலர்களின் காட்சிகளுடன் மிக இனிதான விரும்பத்தக்க பயணங்களாகியது. இதன் பொருட்டு இவருக்கு அமெரிக்காவின் மிக உயரிய விருதுகளான presidential Medal of Freedom   மற்றும்  Congressional Gold Medal,  ஆகியவை அளிக்கப்பட்டன. 1982:ல் ஆஸ்டினில் இவரால் உருவாக்கப்பட்ட   தேசிய வனமலர்கள் ஆராய்ச்சி நிலையம் பின்னர் 2006ல் டெக்சஸ் பல்கலையுட்ன இணைக்கப்பட்டது..

இவரது வழிகாட்டலின் பேரில் 1932ல் ஜெக் கப்பல்ஸ் (Jac Gubbels) என்னும் புகழ்பெற்ற நிலவடிவமைப்பாளரை டெக்சஸின் நெடுஞ்சாலைத்துறை  பணியிலமர்த்தி நெடுஞ்சாலைகளின் ஓரங்களிலும் சரிவுகளிலும் வனச்செடிகளை வளர்க்கத்துவங்கினார்கள், இன்றும் வருடத்திற்கு  30  ஆயிரம் பவுண்டுகள்  வனமலர்ச்செடிகளின் விதைகளை இத்துறை வாங்குகின்றது

 

1912ல் பிறந்து பெரும்பாலான நிலப்பரப்புக்களை கொள்ளை அழகாகவும் வண்ண மயமாகவும் மாற்றிய இவர் தனது வாழ்நாளின் பிற்பாதியிலிருந்து மரணம் வரை உடல்நலக்குறைவால் கண் பார்வையின்றி இருந்தது வாழ்வின் முரண்களிலொன்று, 1912ல் பிறந்து 2007ல்  தனது 94 வயதில் இவர்  மரணமடைந்தார்

டெக்சஸ் மக்கள் அனைவருமே இம்மலர்கள் பூக்கும் பருவத்தில் குடும்பத்துடனும் வளர்ப்பு பிராணிகளுடனும் சென்று மலர்களின் இடையிலும் அவற்றின் பிண்ணனியிலும் புகைப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்வர். டெக்சஸ் நகரவாசிகளின் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்ட இம்மலரைக்குறித்தும் அச்செடிகள் வளர்ந்து மலர தயாராகிவிட்டதாவெனவும்  கிருஸ்துமஸ் முடிந்த உடனேயே    மக்கள் பேசிக்கொள்ள துவங்குவார்கள்

1933 லேயே இம்மலர்களுக்கான பிரத்யேக பாடலொன்றும்  டெக்சஸின் சட்டமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது. பாடலை இணையத்தில் காணலாம். டெக்சஸின் Chappell Hill என்னுமிடத்தில் இம்மலர்களுக்கான வருடந்திர விழா நடைபெற்று வருகின்றது

காற்று மண் மற்றும்  நீரிலிருந்து நச்சுப்பொருட்களை இவை  கிரகித்துக்கொள்ளும்.  எனவே விதைகளிலும் தாவரபாகங்களிலும் மிதமான நச்சுத்தன்மை காணப்படும். வீட்டிலும்  தொட்டிகளில் அலங்கரச்செடியாக இவற்றை வளர்க்கலாம். மே மாதத்தில் இவற்றின் காய்கள் பழுத்து  மஞ்சள் நிறமான பின்பு உள்ளிருக்கும் விதைகளை சேகரித்து ஓரிரவு முழுதும் நீரில் ஊற வைத்தோ , அல்லது  ஃப்ரீஸரில் ஓரிரவு உறைய வைத்து பின்னர் கொதிநீரில் நனைத்தோ கடின விதைஉறையை உடைத்து பின்னர் விதைக்கலாம்

இவை பூக்கும் காலத்தில் எங்கெங்கு மலர்கள் அதிகமாக  காணப்படும் என்னும் விவரங்களை மக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக GPS  சேவைகளும், புகைப்ப்டமெடுக்க வழிகாட்டுதல்களும், மக்கள் கூட்டமாக நெடுஞ்சாலையில் ஆங்காங்கே வண்டிகளை நிறுத்தி இவற்றை கண்டுமகிழ்வதால் அப்போது பின்பற்றவேண்டிய போக்குவரத்து ஒழுங்குமுறைகளும் பரவலாக தெரியப்படுத்தப்படுகின்றன. இப்பருவத்தில் சுற்றுலாப்பயணிகளை வரவேற்று  அழைத்துச்செல்ல  பல சுற்றுலா குழுமங்களும் இயங்குகின்றன. கடந்த பத்து வருடங்களில் ,இப்போது 2019ல் தான் இவை மிக அதிகமாக பூத்திருப்பதாக சொல்லப்படுகின்றது .இவற்றின் புகைப்படங்களுக்கென்றே பல இணையதளங்களும் இருக்கின்றன

அயர்லாந்தின் ஷம்ராக் மற்றும் ஜப்பானின் செர்ரி மலர்களுக்கும் ஃபிரான்ஸின் லில்லிகளுக்கும் இங்கிலாந்தின் ரோஜாக்களுக்கும்  ஹாலந்தின் ட்யூலிப் மலர்களுக்கும் இணையானதாக சொல்லப்படும் இம்மலரைக்குறித்த கவிதைகளும் கதைகளும் கூட ஏராளம் இருக்கின்றன. இவை பூக்கும் காலத்தில் இவற்றின் சித்திரங்கள் தீட்டப்பட்ட உடைகளும் திரைச்சீலைகளும் அதிகம் விற்பனைக்கு வரும் டெக்சஸுக்கு இம்மலருக்காகவேனும் ஒருமுறை வரவேண்டும் என இந்தியாவிலிருக்கும் அனைவரையும் நினைக்கவைக்கும்படியான பிரமிக்க வைக்கும் அழகினைக்கொண்ட  சுவாரசியமான மலர்  இந்த blue bonnet.

செர்ரி மலருக்கு கொண்டாட்டம்!

செர்ரி மரங்கள்  ப்ருனஸ் என்னும் பேரினத்தை சேர்ந்தவை. wild செர்ரியான –Prunus avium என்பதே செர்ரி பழங்களுக்காக வளர்க்கப்படும் மரமாகும்.  ஜப்பானியர்கள் பல நூறு கலப்பின செர்ரி வகைககளை  அவற்றின் அழகிய மலர்களின் பொருட்டு உருவாக்கினர்.

 செர்ரி வகைகளில் மலர்கள் தூய வெண்மையிலும், இளஞ்சிவப்பிலும், இளஞ்சிவப்பும் வெண்மையும் கலந்தும் காணப்படும்.  ஐந்து இதழ்கள் ஒற்றையடுக்கிலும் பத்திலிருந்து இருபது இதழ்கள் அடுக்குகளிலும்  வகைக்கேற்றபடி காணப்படும்.

ஜப்பானியர்கள் இதை சகுரா அல்லது ஊமி மரம் (Umi) என்றழைக்கிறார்கள் ஜப்பானில் உள்ள பலவகையான செர்ரி மரங்களும் மொத்தமாக  (sato zakura)  சட்டோ சகுரா என்றும், ஒற்றையடுக்கு மலர்கள்  யோஷினோ Yoshino (Prunus x yeodensis) என்றும் பல அடுக்குகள் உடையவை  யேசகுரா (yaezakura) என்றூம் அழைக்கப்படுகின்றன.   இரட்டை அடுக்கு மலர்களுடைய மரங்களை 1862ல்  ஜப்பானிலிருந்து  வட அமெரிக்காவிற்கு G.R. Hall  என்பவர் கொண்டு வந்தபின்னர் அங்கும் இவை வளர்கின்றன.

Prunus serrulata  எனப்படும் செர்ரி சைனா, ஜப்பான், இந்தியா மற்றும் கொரியாவை தாயகமாக கொண்டது. இலைகளை உதிர்க்கும் இச்சிறுமரம்   26–39 அடி வரை (7.9–11.9 m). வளரும் மரப்பட்டைகள் மிக மிருதுவாகவும் மூச்சுத்துவாரஙகள் எனப்படும்  lenticels நிறைந்தும் காணப்படும். இலைகள்  ஓரங்களில் பற்கள்போன்ற அமைப்புடன் எதிரடுக்கில்  நீள்முட்டை வடிவிலிருக்கும். மலர்கள் ரெசீம் மஞ்சரிகளில் உருவாகும். சதைப்பற்றான பழங்கள் 8-10 மிமி அளவில் இருக்கும். ஜப்பான் முழுவதிலும் செர்ரி மரங்கள் பள்ளிகள், கல்லூரிகள், பூங்காக்கள் அரண்மனைகள், கோயில்கள், சரணாலயங்கள் போன்ற பல இடங்களில்  வளர்க்கப்படுகின்றன

 

sakuramochi.jpg

இம்மரங்கள் வருடா வருடம்  பூத்துக்குலுங்கும் காலம் ஹனாமி எனப்படும் பூக்காணுதல் விழாவாக  ஜப்பானில் 3ஆம் நூற்றாண்டிலிருந்தே பெரும் கொண்டாட்டமாக நிகழ்ந்து வருகின்றது.. இறந்த மூதாதையர்களின் ஆன்மா செர்ரி மலரின் வண்ணங்களில் வாழ்கிறது என்று ஜப்பானியர்கள் நம்புகிறார்கள். மேலும் நல்ல அறுவடைக்கான கடவுள்களை வயலுக்கு வரவேற்கும் நிகழ்வாகவும் இந்த ஹனாமியை ஜப்பானியர்கள் கருதுகிறார்கள். மிக அழகாக பூத்துக்குலுங்கி பின்னர் சிலநாட்களிலேயே வாடி உதிரும் இவை மனித வாழ்வின் அநித்யத்தை சுட்டுவதாகவும் கருதப்படுகின்றது.

ஒவ்வொரு வருடமும்  ஜப்பானிய வானிலை தகவல் தளத்தில் பல்வேறு பிரதேசத்திலும் பூப்பூக்க தொடங்கும் தேதி அறிவிக்கப்படும்.. ஹனமியின் போது பூத்துக்குலுங்கும்  செர்ரி மரங்களுக்கு கீழ் ஜப்பானியர்கள் விருந்துபசாரம் செய்வார்கள். இரவில நடத்தப்படும் ஹனாமி யோசகுரா (இரவு நேர சகுரா) எனப்படும். இதன் பொருட்டு வண்ணமயமான விளக்குகள் பூங்காக்களில் தொங்கவிடப்பட்டிருக்கும்.

பல நூற்றாண்டுகளாக ஜப்பான் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்ட சகுராவின் பூக்கும்  காலத்தில்,  நாட்டில் 7 முதல் 10 நாட்கள் வரை  விடுமுறை விடப்படுகிறது,  இம்மரங்களினடியில் மக்கள் உறவு மற்றும் நட்புக்களுடன் குழுமி உணவுண்டும் கவிதைகள் வாசித்தும்  ஓய்வெடுத்தும்  மகிழ்ந்து பொழுதைக் கழிப்பார்கள்,

பல இடங்களில் இணைவரிசையில் எதிரெதிராக நடப்பட்டு  வளர்ந்திருக்கும் இம்மரங்களின் கிளைகள் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொண்டு கால்களின் கீழ் இதழ்களாலான  ஒரு மென்மையான கம்பளம் விரித்த பூக்கும் நடைபாதையை உருவாக்கியிருக்கும். வசந்த காலத்தில், பசுமை போர்த்திய மலைப் பகுதியில் இலைகளற்ற மரத்தில், சகுரா மலர்கள் பூத்துக் குலுங்குவது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. இந்த அற்புதமான மலர்களைக்காண  உலகின் பிற பகுதிகளிலிருந்தும் ஜப்பானுக்கு லட்சக்கணக்கான மக்கள் ஆர்வத்தோடு வருகை தருகின்றனர்

. இங்கு  100 யென் நாணயம் செர்ரி மலர்களுக்காக வெளியிடபட்டுள்ளது. பல நாடன் பாடல்களும் பாப் பாடல்களும் சகுராவிற்கென்றே பிரத்யேகமாக ஜப்பானில் உள்ளன. சகுரா பூக்கும் கால்த்தில் கிமானோ என்னும் தேசிய உடையிலிருந்து நோட்டுபுத்தகங்கள், குடைகள், அலங்காரப்பொருட்கள், கைப்பைகள் என பலவற்றிலும் இம்மலர்களின் சித்திரம் வரையப்பட்டிருக்கும். டாட்டூ எனப்படும் பச்சைகுத்துதலிலும் ஜப்பான் முழுக்க டிராகன் உருவத்துக்கு அடுத்தபடியாக இம்மலர்களின் வடிவமே உள்ளது. பல பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கு  சகுரா என்று பெயரிடுகிறார்கள்.

ஜப்பான் மட்டுமல்லாது இந்தியா, சைனா,  வாஷிங்டன், கொரியா, ஜெர்மனி, பிரேசில், ஆம்ஸ்டர்டாம், பாரீஸ் உள்ளிட்ட உலகின்  பலபகுதிகளில் வெவ்வேறு காலங்களில் செர்ரி மலர்க்கொண்டாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன

ஹனாமியின் சிறப்பு உண்வு வகைகள்

“cherry blossom sake,” – சகுரா மலர்கள் மிதக்கும் அரிசி மது

சகுரா மலர்களின் நறுமணத்துடன் தேனீர், சோயா பால் மற்றும் கோலா

Hanami bento –  ஹனாமி பெண்டோ எனப்படும்  வறுத்த மீன் துண்டு,பொறித்த காய்கறிகள், போன்றவைகள் இருக்கும் மதிய உணவுப்பெட்டி

Finger food  எனப்படும் சகுரா கலந்த உணவுகள், நறுக்கப்பட்ட பழத்துண்டுகள் இறால் , சுஷி மீன் மற்றும்  சமைத்த காய்கறிகள்

sakura mochi  எனப்படும்  சகுரா இலைகளால் சுற்றி வைக்கபட்டிருக்கும் சகுராவின் இளஞ்சிவப்பு, பனிப்பொழிவின் வெள்ளை மற்றும்   ஒரு நறுமணத்தாவரத்தின் பச்சைநிறம் என மூவண்ணத்தில் இருக்கும் அரிசிச் சோற்று உருண்டைகள்

மஞ்சள் கலந்த குடிநீர்

காப்புக்கட்டு

IMG_20180113_150904(1)me(8)

காலையில் இருந்தே காப்புக்கட்ட செடிகளை சேகரிக்கவும், வீட்டை சுத்தப்படுத்திகொண்டுமிருந்தோம். தோழியும் தங்கையுமான கிறிஸ்டி அலைபேசியில் பேசிக்கொண்டிருக்கையில் காப்புக்கட்டுவதைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன் காப்பு? யாருக்கு கல்யாணம் என்றெல்லாம் கேட்டாள்

அவளுக்கு விளக்கினேன் கொங்குப்பகுதியில் போகி அன்று மாலை காப்புக்கட்டுதல் பழங்காலம் தொட்டே நடைமுறையில் இருகிறது

இனி வரும் சந்தததிகளுக்கு மட்டுமல்ல இன்றைய இளம் தலைமுறையினருக்கே இதுகுறித்து தெரியாமல் இருக்கிறது

பண்டிகையின்போது வீட்டைச் சுத்தம் செய்து, வெள்ளையடித்து, தேவையற்ற பொருட்களைக் கழித்து, வீடுகளில் ‘காப்புக்கட்டு’ எனும் மூலிகைக்காப்பான்களைக் கட்டி, தை மாதத்தை வரவேற்பதே  தமிழர்களின் தொன்று தொட்ட மரபு. இதன் மூலம் பண்டிகைகளின்போதும் பின்வரும் காலங்களிலும் வீட்டில் இருப்பவர்களின் உடல்நலம் கெடாமல் பார்த்துக்கொண்டனர். இத்தகைய ‘காப்பு’ கட்டுதலில் மூலிகைகளான மாவிலை, வேம்பு, ஆவாரம், சிறுபீளை, தும்பை, பிரண்டை, துளசி  ஆகியவற்றின் தண்டு, இலை, பூ ஆகியவை  இருக்கும்  எளிய தாவரங்களான இவை, மிகப்பெரும் பலன்களை உள்ளடக்கியுள்ளன என்பது பற்றி நம் முன்னோர்கள் அறிந்திருந்தார்கள் தைத்திருநாளை வரவேற்க, தமிழர்கள் வீட்டில் ‘பூ’ காப்புக் கட்டிய பிறகே பொங்கல் கொண்டாட்டம் தொடர்கிறது.

.
இந்த மூலிகைத்தாவரங்கள் அனைத்திலும் ஒவ்வொரு துண்டு  இருக்கும் படி சின்னச்சின்ன கட்டுக்களாக (கடைகளில் விற்கும் கொத்தமல்லிகட்டுக்கள் போல) கட்டி வீட்டின் அறைகளின் 4 மூலைகளிலும் புஜை அறையிலும் ஜன்னல்களிலும் மொட்டை மாடியின்  மூலைகளிலும், கிணற்றுச்சுவர், அம்மிகல், ஆட்டுக்கல், என அனைத்து இடங்களிலும் செருகி வைப்பதே காப்புக்கட்டுதல் . அடுத்த ஆண்டு போகி வரையிலும் இவை உலர்ந்து அந்த இடத்திலேயெ இருக்கும்

முன்னாட்களில் குப்பைக்குழியில் கூட காப்புக்கட்டி வைத்தனர் விவசாயிகள். குப்பைக் குழி என்பது விவசாயிக்கு உரக்கிடங்கு அல்லவா?

குப்பைக்குழியில் சாணமும் சாம்பலும் தொழுவத்துக்கழிவுகளும் கொட்டப்பட்டு அவை மட்கி உரமாகி பின்னர் மண்ணில் இடுவதால் மண்ணின் வளத்திற்கும் விளைச்சலுக்கும் அடிப்படை என்னும் காரணத்தில் அங்கும் காப்புக்கட்டி வைக்கும் வழமை இருந்தது  மதுரையில் சில பகுதிகளில் மாடுகளுக்கும் கழுத்தில் இதுபோல காப்பு மாலை கட்டிப் போடும்வழக்கம் இருக்கிறது

சிறுபீளை

காப்புக்கட்டப்பயன்படுத்தும் அனைத்துத்தாவரங்களுமே வைரஸ் தொற்றுக்கு எதிராகவும், பல நோய்களை தீர்க்கும் குணங்களுடன் இருப்பவை அதிலும் இந்த சிறு பீளை நல்ல கிருமி நாசினி. பீளைப்பூவைச் சேகரித்து தலையணைக்குள் அடைத்து வைக்கும் பழக்கம் கூட முன்பிருந்தது தலையில் நீர்கோர்த்து பாரமாக இருக்கையில் இந்த தலையணையை தலைக்கு வைத்துப்படுத்துக்கொள்ளலாம்.. சிறந்த நிவாரணி இது. கோவையின் பீளமேடு இந்த செடி அங்கு செழித்து வளர்ந்ததால் வைக்கபப்ட்ட பெயர் வெண்மையாக பூத்துக்குலுங்கும் சிறுபீளை, தென் மாவட்டங்களில் ‘பொங்கல் பூ’ எனவும் அழைக்கப்படுகிறது

 ஆவாரை

சங்க காலத்தில மடல்-மா ஏறி வரும்போது பயன்படுத்தப்பட்ட இந்தப் பூ தைப்பொங்கலப்போது காப்புக்கட்டிலும் இருக்கிறது
பாக்டீரியா தொற்றுக்கு எதிரானது இந்தப்பூ கோவையில் ஆவாரம்பாளையம் என்றும் ஒரு ஊர் இருக்கிறது

 

மாவிலை

வீட்டில் வாக்தேவதை என்றொரு தேவதை நம்மைச் சுற்றிக் கொண்டே இருக்கும். நாம் எந்த வார்த்தை சொன்னாலும் அத்தேவதை அப்படியே ஆகட்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்.. நன்மை தரும் சுபவார்த்தைகளைச் சொன்னால் அவ்வீட்டில் வாக்தேவதையும் அப்படியே ஆகட்டும் என்று ஆசிர்வதிக்கும். அசுபமான கெடுவார்த்தைகளைச் சொன்னால் அதையும் அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிடும். ஆனால் மாவிலைத் தோரணம் கட்டியிருக்கும் வீட்டில் அசுபமான வார்த்தைகளைக் கேட்டால் மாவிலை காற்றில் அசைந்து அவ்வார்த்தையின் பலனை வெளியேற்றி விடும். இப்படி ஒரு ஐதீகம் இருக்கிறது நம் மரபில்

மாவிலை கரியமில வாய்வை உறிஞ்சிக்கொள்கிறது அழுகிப்போகாமல் காய்ந்து உலரும்ம் தன்மை கொண்டது  உலர்ந்தாலும் நல்ல நறுமணம் கொண்டது கிருமித்தொற்றுக்கு எதிரானது

வேம்பு

வேம்பு நமக்கெல்லாம் மிகவும் அறிமுகமான் மூலிகை  சிறந்த வைரஸ் எதிர்ப்பு குணம் உள்ளது. தைக்கு பிறகு    வரும் கடும் கோடையில் அம்மை போன்ற வைரஸ் தொற்றுக்கள் வருமென்பதால் முன்கூட்டியெ இவை வராமல் தடுக்க காப்புக்கட்டும் போது வேம்பின் இலைகளை கட்டுகிறோம். அதேபோல், காற்றில் பரவும் நோய்கள் எளிதில் பரவாமல் தடுக்க, கோயில் திருவிழாக்கள் தொடங்கும்போது ஊரின் பல்வேறு இடங்களிலும் வேப்பிலைகளைக் கட்டும் பழக்கம் இருக்கிறது

தும்பை இலை:

தும்பை இலையின் வாசம் இளைப்பு, தலைவலி, நீர்வேட்கை ஆகியவற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்க உதவுகிறது..  இதுவும் anti viral குணங்கள் நிறைந்தது

பிரண்டை:

‘பிரண்டை’ என்பது தடித்த தசைப்பகுதி நிரம்பிய கொடிப்பகுதியாகும்.    இதுவும் பல கிருமித்தொற்றுக்களுக்கு எதிரானது

துளசி

அனைவரும் அறிந்த துளசியின் இலைகளில் எளிதில் காற்றில் பரவும் மூலிகை பொருட்கள் உள்ளன பச்சை இலை உடைய துளசி ஸ்ரீதுளசி அதே வேளையில்   ராம துளசி என்பது கருநீல நிறம்  கொண்டது. துளசி மாடத்தில் இவை இரண்டையும் சேர்த்துத்தான் வளர்க்க வேண்டும்

ஒரிசாவில் சித்திரை, வைகாசி மாதங்களில் துளசிச் செடியின் மேல் பந்தலிட்டு , மேலிருந்து   பந்தலின் துளை வழியே நீர் சொட்டு சொட்டாக அச்செடியின் மேல் விழும் வண்ணம் செய்து வழிபாடு செய்வார்கள். இதன் மூலம் அவர்கள் தாம் முன்னர் செய்த பாவங்களிலிருந்து விடுபடலாம் என நம்புகின்றனர். தாவ்ரங்களில் துளசிக்கும் கனிகளில் எலுமிச்சைக்கும் வேதங்கள் சொன்னால் விளங்கிக்கொள்ளும் சக்தி உள்ளது என்று கூட் சொல்வார்கள்

மார்கழிக் குளிர் முடிந்து தொடங்கும் தை வேனில் காலம் உடலில் உஷ்ணமான நோய்களை உண்டாக்கிவிட்டு விடும். இதையெல்லாம் கணித்தே, நம் முன்னோர்கள் போகியின்போது, ‘காப்புகட்டுதல்’எனும் சடங்கு வைத்து பொங்கலில் வீட்டில் இருக்கும் உயிர்களுக்கு நோய் அண்டாமல் வருமுன் காக்கும் யுக்தியைக் கையாண்டனர்

அறிவியல் பின்புலம் உள்ள நம் தமிழரின் மரபுகளை நாமும் மறக்காமல் அடுத்த தலைமுறைக்கும் கற்றுத்தர முயலவேண்டும்

கிறிஸ்டிக்கு நன்றி

தாவரவியலும் தமிழர் பண்பாடும்

இன்று மார்கழி துவங்கிவிட்டது. பல வீடுகளில் எந்த மாற்றமும் இல்லையெனினும் இன்னும் மரபும் பழமையும் மிச்சமிருக்கும் சில கிராமத்து வீடுகளில் சாணப்பிள்ளையாரும் கோலமும் மரத்தடி பிள்ளையாருக்கு அதிகாலை நீராட்டுமாய் இருக்கத்தான் செய்கிறது. நல்ல வேளையாக நான் இவற்றையெல்லாம் பார்க்க கிராமத்தில் இருக்கிறேன்
சாணப்பிள்ளையாரும் அதில் மலர்களுமான இந்த வழமையில் தாவரவியல் பின்புலம் இருகிறது. அதிகாலையில் குடும்பத்தினர் கோவில்களுக்கு செல்லும் மாதமாகையாலும் அடுத்து தை பிறப்பதாலும் இந்த மாதத்தில்தான் முன்பு பரவலாக திருமணங்கள் உறுதி செய்யப்பட்டன. இப்போழுது போல அப்போதெல்லம் matrimony . com ல் கொண்டாட்டமாய் திருமணங்கள் நிச்சயிக்கப்படவில்லை. அவையும் இலை மறை காய்மறையாகவே இருந்தகாலம் அது
வாசலில் சாணப்பிள்ளையாருக்கு அருகு வைத்திருந்தால் அந்த வீட்டில் கல்யாணத்திற்கு பிரம்மச்சாரி இளைஞர்கள் இருப்பார்கள், பூசணிப்பூ ,( அது ஒரு unisexual மலர் ) இருந்தால் கல்யாணவயதில் பெண்பிள்ளைகள் இருப்பார்கள், அருகும் பூசணிப்பூவும் சேர்ந்திருந்தால் கல்யாணத்திற்கு மகனும் மகளும் இருக்கிறார்கள், செம்பருத்தி சங்குப்பூ போன்றவை ( மகரந்தமும் சூலகமும் சேர்ந்திருக்கும் bisexual மலர்கள் இவை) இருப்பின் திருமணமான கணவனும் மனைவியுமாய்க் இருகிறார்கள் பெண்ணோ ஆணோ கல்யாண வயதில் அந்த வீட்டில் இல்லை என்று கொள்ளலாம். அதிகாலையில் வீடுகளைக்கடந்து கோவில்களுக்கு செல்பவர்கள் இவற்றிலிருந்து செய்திகளைத்தெரிந்து கொண்டு பின் பேசி முடிவு செய்தால் தையில் திருமணம் நடக்க ஏதுவாக இருக்கும்

தும்பைமலர்களும் அவ்வப்போது இருக்கும் தும்பை வைரஸ் தொற்றைத்தடுக்கும் குணமுள்ளது. பனிக்காலத்தில் அது போன்ற தொற்றுக்கள் பரவாமல் இவை தடுக்கும்
ஸ்டிக்கர் கோலமிடும் இந்த நவநாகரீககாலத்தில் இவற்றை தெரிந்துகொள்ளவாவது செய்யலாம்.
”மார்கழித்திருநாளில் மங்கையர் இளந்தோளில் கார்குழல் வடிவாக கண்ணன் வந்தான்”” என்னும் இந்த பாடலை நினைவு கூறுகிறேன் இந்த. அற்புதமான மாதத்தில்

 

வர்தா!

  சில மாதங்களுக்கு முன்னர் புதிய தலைமுறையில் வர்தாவால் விழுந்த மரங்கள் பற்றி பதிவு செய்திருந்தார்கள்..
Nativity species என சொல்லப் படுகின்ற நம் நாட்டு மரங்கள் பெரும்பாலும் எந்த பாதிப்பிற்கும் உள்ளாகவில்லை. வேளச்சேரியில் அதிகபட்சம் நம் மரங்கள் தான், அதிகம் பாதிப்படையாத இடம் வர்தாவால்.weak tree என சொல்லப்படும் மாமரம் கூட புயலை தாக்குப்பிடித்திருக்கிறது. அழகிற்காகவும், கண்கவர் மலருக்காகவும், வேகமாக வளர்வதற்காகவும்வளர்க்கப்பட்ட வெளிநாட்டை சார்ந்த மரங்களே காற்றை தாக்குப்பிடிக்க முடியாமல் வேரோடு சாய்ந்துள்ளன!!
இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இந்த வெளிநாட்டை சார்ந்த மரங்களில் நம் பறவைகளும், அணில்களும், ஏனைய உயிர்களும் கூடு கட்டி வாழாமல், நம் நாட்டு மரங்களில் தான் கூடு வைத்து வாழ்கின்றன..
நம்மாழ்வார் கூறியது போல நிச்சயம் ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு முருங்கை மரம், ஒரு பப்பாளி மரம், ஓரு கருவேப்பிலை மரம், ஓரு வாழை மரம், இடமிருந்தால் ஒரு வேப்ப மரம் வைக்கலாம். இவை அனைத்தும் நம் உணவு தேவை, சுற்றுச்சூழல், உணவு சங்கிலி, கலாசாரம், மருத்துவம் சார்ந்து பின் விளைவாக கெடுதல்களை தராதது.
இந்த வர்தா சொல்லி சென்றிருப்பது, நம் தேவைக்கான மரங்கள் எதுவோ, அதை தேடி வளர்த்து பயன் பெறுவதுதான். நம் நாட்டின் மரவகைகள் 4500க்கும் மேல்..
கடந்தாண்டு december நல்ல மனங்களையும், மனிதர்களையும் அடையாளம் காட்டியது போல், அந்த december நமக்கான நல்ல மரங்களை அடையாளம் காட்டி சென்றிருக்கிறது..
ஏனென்றால் மரம், ஒரு செல் உயிரி மட்டுமல்ல, ஒரு சொல் உலகம்!!!

ayini3

Newer posts »

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑