புடவைத்தலைப்பை எடுத்துத் தலையை மறைத்துக்கொண்டேன். 11 மணி வெயில் மண்டையைப் பிளந்தது. கீழே தரையில் சதுரமாக அடுக்கப்பட்டிருந்த செங்கற்களின் மீது ரகு உட்கார்ந்துகொண்டான். தளர்ந்திருந்தான். தொடர்ந்து அழுததில் கண்களின் கீழே சுருக்கங்கள் விழுந்து, முகம் வெளிறிப்போய் இருந்தது.

என்னை நிமிர்ந்து பார்த்து, “அப்ப இனி நமக்கு அம்மா இல்லையா வசந்தி? அவ்வளவுதானா?” என்றான். கேட்டு முடிப்பதற்குள்ளாகவே கண்ணீர் பெருகியது. வேட்டியின் நுனியால் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தவன், “நான் நினைச்சுக்கூடப் பார்க்கலையே…” என்றான்.

“என்னடா செய்யறது…” என்று நான் அவனிடம் பேசத் தொடங்குவதற்குள் போன் அடித்தது. எடுத்தேன்; அதே எண்ணிலிருந்துதான் அந்த ஆறுமுகம் கூப்பிட்டான். “அம்மா, பக்கத்தில் வந்துட்டம்மா, இதோ இப்ப வந்துடுறேன்…” என்றான். இதையே அரை மணி நேரமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

ரோட்டோரமாக இருந்த அந்தக் குடிசையின் தகரக் கதவில் சின்னப் பூட்டு தொங்கிக்கொண்டிருந்தது. வாசலில் சின்னச் சின்னக் குவியலாக எம்-சாண்டும் , செங்கற்களும் குவிக்கப்பட்டிருந்தன. குடிசையின் கதவுக்குப் பக்கத்தில் ஒரு சதுரமான தகரத்தில், ‘ஆறுமுகம் ட்ரேடர்ஸ் – சில்லறையாகவும் மொத்தமாகவும் செங்கல், மணல் கிடைக்கும்’ என்று மஞ்சள் பெயிண்டால் கோணலாக எழுதி, அதன் கீழ் போன் நம்பரும் இருந்தது. காலை பத்து மணிக்கே வந்து அந்த நம்பருக்குக் கூப்பிட்டுச் சொல்லியும் அவன் வந்தபாடில்லை.

கால்கடுத்தது. எங்காவது உட்கார இடம் இருக்குமா என்று தேடுவதற்குள், தடதடவென்று சத்தத்துடன் வந்த பைக்கிலிருந்து ஆஜானுபாகனாக ஒருவன் இறங்கினான். ஸ்டாண்ட் போட்டு பைக்கை நிறுத்திக்கொண்டே, “மன்னிச்சிருங்கம்மா, ஒரு லோடு அனுப்பப் போனேன், அதான் லேட் ஆயிடுச்சு…” என்றான்.

கைலியை மடித்துக்கட்டி, முழுக்கை சட்டையைப் புஜங்கள் தெரியும்படி சுருட்டிவிட்டு, கழுத்துப்பட்டையில் கர்ச்சீப் சொருகியிருந்தான். “நீதான் ஆறுமுகமாப்பா?” என்றேன். ரகு அவனைக் கவனித்ததாகவே தெரியவில்லை. அப்படியே குனிந்து நிலத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். “ஆமாம்மா, சொல்லுங்க, எத்தனை செங்கல் வேணும்?” என்றான்.

“30 வேணும்னு சொன்னாங்கப்பா…” என்றேன். என்னை நிமிர்ந்து பார்த்து, “பெரிய காரியங்களாம்மா?” என்றான். நான், “ஆமாப்பா, நேத்து அம்மா தவறிட்டாங்க…” என்றேன்.

ரகுவிடமிருந்து பெரிய கேவலொன்று எழுந்தது. கதறி அழத் தொடங்கினான். அவனருகில் போய் மண்டியிட்டு அணைத்துக்கொண்டு, “டேய், என்னடா இது? ப்ளீஸ், அழாதே. நாம என்ன செய்ய முடியும்?” என்று தேற்றினேன்.

ஒரு காரைச்சட்டியில் செங்கற்களை அடுக்கிக்கொண்டு வந்த ஆறுமுகம், கனிந்த புன்னகையுடன் ரகுவைப் பார்த்துவிட்டு, “அம்மா, கார் டிக்கியத் தொறங்கம்மா…” என்றான். ரகு கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்து, கார் சாவியை எடுத்து டிக்கியைத் திறந்தான். நான் போய் செங்கல்லை அடுக்க உதவி செய்யப் போனேன்.

“நீங்க விடுங்கம்மா, நான் பார்த்துக்கறேன்…” என்றவன், மடமடவென்று 30 செங்கற்களையும் அடுக்கிவிட்டு, “அம்மா, கூட நாலு கல்லு ஃப்ரீயா தாரேன் எடுத்துட்டுப் போங்க. ஏதாச்சும் விரிசல் விட்டுருந்தா அப்புறம் வாத்தியார் வேணாம்னுவாரு…” என்றபடி மேலும் நாலு செங்கற்களைக் கையில் எடுத்து வந்து டிக்கியில் வைத்தான். “தேங்க்ஸ்…” என்றபடி போனிலேயே பேசியிருந்த தொகையைக் கொடுத்தேன்.

ரகு கார் கதவைத் திறந்து உள்ளே அமர்ந்ததும், ஆறுமுகம் அவனருகில் சென்று, “சார், ‘ஆண்டாண்டு அழுது புலம்பினாலும் மாண்டார் மீண்டு வாரார்’னு பாட்டெல்லாம் இருக்கே. நீங்கல்லாம் படிச்சவங்க, இப்படி மனசை விடலாமா? நாமும் ஒருநாள் போகத்தானே போறோம்? மனசைத் திடமாக்கிக்கங்க சார்…” என்றான். ரகு அவனுக்குப் பதில் சொல்லாமல், ஸ்டியரிங்கில் கைகளை வைத்தபடி அப்படியே அமர்ந்திருந்தான். நான் ஆறுமுகத்திடம், “சரிப்பா, போயிட்டு வர்றோம்…” என்று விடைபெற்றுக்கொண்டேன்.

“ரகு, 12 மணி ஆயிடுச்சு. இப்பவே , இன்னும் நிறைய சாமான் வாங்கணுமே, காரை எடு…” என்றேன். என்னைத் திரும்பிப் பார்த்து, “வசந்திக்கா, அம்மாவை இனி நாம பார்க்கவே முடியாதா?” என்றான். கண்ணில் நீர் தாரை தாரையாக வழிந்தது.

“ரகு, என்னடா இது? அம்மா 80 வயசு வரை நல்லா வாழ்ந்தாச்சு.இப்ப அம்மா இல்லைன்னு நினைக்கவே கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா அதையே நினைச்சுகிட்டு இருக்க முடியுமாடா? மனசைத் தேத்திக்கோ, ப்ளீஸ். ஒண்ணுமே சாப்பிடாம வெறும் வயித்தோட வேற இருக்கே. நாம ஹோட்டல்ல போய் சாப்பிட்டுட்டு அப்புறமா கடைக்குப் போலாமா?” என்றேன்.

பைத்தியக்காரன் போலத் தன் உள்ளங்கையைப் பார்த்துக்கொண்டிருந்தவன், “வசந்திக்கா இங்க பாரு, இந்தக் கையாலதான்… இந்த கையாலதான் அம்மா வயித்துல சோப்புக்கட்டிமாதிரி பெரிய சூடத்தை வச்சுத் தீயைப் பத்த வச்சேன். அம்மாவை எரிச்ச கைக்கா இது? இதுல என்னால எப்படி இனி சாப்பிட முடியும்?” என்று கதறியபடி ஸ்டியரிங்கில் தலையைச் சாய்த்துக்கொண்டான்.

மகன் சரண் என் நெஞ்சில் ஏற்றவிருக்கும் சூடம் கண்ணில் தெரிந்தது; மனம் கலங்கினேன். கண்ணைத் துடைத்துக்கொண்டு, “ரகு அழாதே ப்ளீஸ், நேரமாச்சு போலாம். வீட்டுல அப்பா மட்டும்தான் இருக்காரு வரவங்களைப் பார்க்க. மாமாவும் லட்சுமியுமா அத்தனை வேலைகளையும் எல்லா குழந்தைகளையும் பார்த்துக்கிட்டு இருக்காங்க. போய் செய்ய எனக்கும் ஏகப்பட்ட வேலை இருக்கு, போலாம்…” என்றேன்.

மூக்கை உறிஞ்சிக்கொண்டு காரை எடுத்தான். “கூகுள் மேப்பில் வாத்தியார் சொன்ன அந்தக்கடை எங்கேன்னு நான் பார்த்து வழி சொல்றேன், நீ போ…” என்று சொல்லி மேப்பைப் பார்த்தேன். இன்னும் 6 கி.மீ. தூரத்தில் இருந்தது அந்தக் கடை.

நாளை நடக்கவிருக்கும் அம்மாவின் மூன்றாம் நாள் காரியங்களுக்கான பொருட்களை வாத்தியார் பட்டியலிட்டு, அந்தப் பட்டியலையும் வாங்க வேண்டிய கடையின் பெயரையும் வாட்ஸ்அப்பில் அனுப்பி இருந்தார். அந்தக் கடை ரோட்டிலிருந்து சற்று உள்ளே தள்ளி, வரிசையாக நின்ற புளிய மரங்களின் மறைவில் இருந்தது. ‘ஆதி’ என்று பெரியதாகவும், அதன் கீழே ‘பூஜை சாமான்கள் கிடைக்கும்’ என்று சிறிதாகவும் எழுதியிருந்த போர்டு கடையின் முகப்பிலேயே தெரிந்தது.

பூஜை சாமான்களுக்கு இத்தனை பெரிய கடையா?” என்று ஆச்சரியமாக இருந்தது. பொள்ளாச்சி வரும்போதெல்லாம் அந்த ரோட்டில் எத்தனையோ முறை போயிருந்தும் இந்தக் கடையை நான் பார்த்ததே இல்லை. அது சரி முன்ன பின்ன செத்தாத்தானே சுடுகாடு தெரியும்?

காரை மரநிழலில், புளியம்பூக்கள் பொன் போலத் தரையெங்கும் உதிர்ந்து கிடந்த இடத்தில் நிறுத்திவிட்டு உள்ளே போனோம்.

பெரிய கடை. உள்ளே ஒரு தடுப்பிற்கருகில் கீழே மூன்று பெண்கள் அமர்ந்து, சிறிய பித்தளைச் செம்புகளுக்கு நூல் சுற்றிக்கொண்டிருந்தார்கள். சற்றுத் தள்ளி ஒருவர் கையிலிருந்த பட்டியலைப் பார்த்து, “தர்ப்பைக்கட்டு 4, கற்பூரம் 5, குங்குமப் பாக்கெட் 4, தொன்னை 50, அகல் விளக்கு சின்னது 25” என்று சொல்லச் சொல்ல, இன்னொருவர் அவற்றை ஒரு பெரிய கவரில் எடுத்துப் போட்டுக்கொண்டிருந்தார். எங்களைப் பார்த்ததும் உள்ளிருந்து குள்ளமாக இருந்த ஒருவர், “என்னங்க வேணும்?” என்று கேட்டபடியே வந்தார்.

நான் பதில் சொல்வதற்குள் உள்ளிருந்து வேகமாக வந்த இளைஞன் ஒருவன், “டேய் ரகுநாத்! என்னடா இங்கே? எப்படி இருக்கே?” என்று ரகுவின் கையைப் பிடித்துக்கொண்டான். ஒரு நொடி திகைத்த ரகு, “முருகானந்தா! நீயா? என்னடா இங்கே?” என்றபடி அவன் கைகளை இறுகப் பற்றிக்கொண்டான்.

“நல்லாக் கேட்ட போ! கடையே என்னோடதுதான். வா, வா, உள்ளே வா…” என்றவன் என்னிடம் திரும்பி, “அக்கா, ஆளே அடையாளம் தெரியலை. உங்களை வாங்கக்கா…” என்று நான் கை வைத்திருந்த இடத்துக்குப் பக்கத்தில் இருந்த சிறு தடுப்புப் பலகையை அப்படியே மேலே தூக்கி வழி உண்டாக்கி உள்ளே அழைத்துப் போனான்.

கடைக்குப் பின்னாடியே வீடு. உயர்தரமான சோபாக்களுடன் இருந்த ஹாலின் ஏசி சில்லிப்பு இதமாக இருந்தது. “உட்காருங்க” என்றவன், உள்ளே திரும்பி “கமலி…” என்று குரல் கொடுத்தான். “அப்புறம் எப்படிரா இருக்கே? லவ் மேரேஜாமா? சொன்னாங்க…” என்றான். ரகு சற்று வெட்கி, “ஆமாடா, ஒரே பிரச்சனையா இருந்தது, அதான் யாரையும் கூப்பிட முடியலை…” என்றான்.

“போகட்டும் விடு, இங்கே எங்கே வந்தே?” என்றான். ரகு கண்ணில் நீர் தளும்ப, தொண்டை அடைக்க, “அம்மா தவறிட்டாங்கடா நேத்து…” என்றான்.

மிக இயல்பாக, “ஓ அப்படியா? மூணாம் நாள் காரியத்துக்கு சாமான் வாங்க வந்தியா? சரி இரு…” என்றபடி வெளியே பார்த்து, “பசுபதிண்ணே…” என்றான். அந்தக் குள்ளமான மனிதர் “தம்பி சொல்லுங்க…” என்றபடி கதவருகில் நின்றார். “அண்ணே, இவர் கொடுக்கிற லிஸ்ட்டை மடமடன்னு எடுத்து வைங்க பார்க்கலாம். மத்த வேலையெல்லாம் அப்புறம், முதல்ல இதை முடிக்கணும்…” என்றான். அவர் பணிவாக “சரி தம்பி…” என்றார். ரகு போனில் இருந்த பட்டியலை முருகானந்தத்திடம் காட்டினான். அவன் அதைத் தன் எண்ணுக்கு மாற்றி பசுபதிக்கு அனுப்பி, “அண்ணே, நல்லாப் பேக் பண்ணிருங்க…” என்றான்.

கமலி வந்து கையிலிருந்த ‘வாழைப்பூ’ செம்பை டீபாயில் வைத்துவிட்டு, இருவரையும் பார்த்துக் கைகூப்பி “வணக்கம், வாங்க…” என்றாள். காம்பஸ் வைத்து வரைந்தது போன்ற வட்ட முகம், சின்னதாக முத்து ஜிமிக்கியும் கழுத்தில் தடிமனாகச் சங்கிலியும் அணிந்திருந்தாள். சாட்டை போன்ற நீளப் பின்னல். செம்பிலிருந்த நீரை குடிப்பதற்குள் அவள் பின்னாடியே ஒரு அம்மாள் வந்து இருவருக்கும் டபரா டம்ளரில் காபி கொடுத்தார். மறுக்க முடியாமல் வாங்கிக்கொண்டோம். காபி கள்ளிச் சொட்டுப் போல் அருமையாக இருந்தது. கமலியும் அங்கிருந்த குட்டி மொடாவில்  அமர்ந்து கொண்டாள்.

ரகு, “முருகா, அம்மா நமக்கெல்லாம் மீன் வறுத்துக் கொடுப்பாங்களே, நினைவிருக்கா?” என்றான்.

“பின்னே! வாசல்ல விறகடுப்புக் கூட்டி அருமையா செஞ்சு கொடுப்பாங்களே! நான் வீட்டுக்குத் தெரிஞ்சுரும்னு பாக்கெல்லாம்  போட்டுக்கிட்டுதான் போவேன். எப்படி மறக்க முடியும் அதெல்லாம்?” என்று சிரித்தான். கமலிக்கும் தெரியும் போல அவன் அசைவம் சாப்பிடுவது; முகத்தில் சிரிப்புடன் உட்கார்ந்திருந்தாள்.

முருகானந்தம், “டேய், நாமெல்லாரும் ஸ்கூல் முடிஞ்சதும் போய் சாயங்காலம் சுப்பிரமணிய சாமி கோயில் வாசல்ல அப்பா வச்சிருந்த கடையில உட்கார்ந்து ராத்திரி வரை அரட்டை அடிப்போமே? உங்க அம்மா லேட்டா வந்தா செமத் திட்டுத் திட்டுவாங்க உன்னை!” என்றான்.

“ஆமாம்ல!” என்ற ரகு, “அந்தக் கடையை இப்போ யாருடா பார்த்துக்கறா? மணி அண்ணனா?” என்றான்.

“இல்லடா, அதையெல்லாம் வித்தாச்சு அப்பா போனப்புறம்…”

“அப்பா போயிட்டாரா? அய்யோ! எப்போ?” “ரெண்டு வருஷம் ஆச்சுடா. அப்பா போன ஆறாம் மாசம் அம்மாவும் போயிட்டாங்க. அப்புறமாதான் இங்கே இருந்த நிலத்துல கடையைப் போட்டு, பின்னாடி வீட்டையும் கட்டிட்டு வந்துட்டேன். அப்பா பேரேதான் கடைக்கு வச்சிருக்கேன் ‘ஆதி’ன்னு. நல்லாப் போகுது இப்போ! உன்கிட்ட சொல்றதுக்கென்ன, இன்னும் ரெண்டு பிரான்ச் கோயமுத்தூர்ல போட்டாச்சு போன வருஷம்…” என்றான்.

கமலியிடம் திரும்பி, “கமலி, நான் சொல்லுவேனே என் ஸ்கூல் பிரண்டு ரகுநாத்னு, அவன்தான் இது. இது வசந்திக்கா. எங்களுக்கெல்லாம் கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் அக்காதான் சொல்லிக் கொடுத்து பாஸ் பண்ண வச்சாங்க…” என்றவன் மீண்டும் என்னிடம் திரும்பி, “டியூஷன்ல செம அடி அடிப்பீங்களே, நினைவிருக்காக்கா?” என்றான். நான் சிரித்தேன்.

“அப்படி அடிச்சு சொல்லிக் கொடுக்கலைன்னா நானெல்லாம் எங்கே உருப்பட்டிருப்பேன்? ரகு நினைவிருக்கா, அப்பா கடையிலதானே நாம பிளஸ்-டூ ரிசல்ட் பார்த்தோம்?”

“ஆமாடா, சுதாகர் நம்பர் வரலைன்னு அழு அழுன்னு அழுதானே பாவம்!”

“அப்படி அழுதவன்தான் இப்போ துபாயில பெரிய பிசினஸ்மேனா இருக்கான். நாம பாஸ் பண்ணிட்டு இங்கே கிடக்கோம்!” என்றான் முருகானந்தம்.

பசுபதி, “தம்பி, எல்லாம் எடுத்து வச்சாச்சுங்க…” என்று குரல் கொடுத்ததும், கமலி எழுந்துகொண்டு, “அண்ணா, சமையல் எல்லாம் ஆச்சு, கட்டாயமா சாப்பிட்டுட்டுத்தான் போகணும்…” என்றாள்.

நான் எழுந்துகொண்டு, “இன்னொரு சமயம் ஆகட்டும்மா. இப்ப வீட்டுல எல்லாரும் காத்துக்கிட்டு இருப்பாங்க, போகணும்…” என்று சொல்லி விடைபெற்றுக்கொண்டேன். ரகு பசுபதியிடம் தொகையைக் கொடுத்துவிட்டு காருக்கு வந்தான்.

முருகானந்தம் கூடவே வந்து, அவன் போனில் இருந்த இரட்டைக் குழந்தைகளின் போட்டோவைக் காட்டி, “இதாண்டா பொண்ணுங்க. மந்தஹாசினி, மதுரபாஷிணின்னு அம்மன் பேரே வச்சுட்டோம். 7-வது படிக்கறாங்க பி.கே.டி. ஸ்கூல்ல. 4 மணிக்கு வேன்ல வருவாங்க…” என்றவன், “உனக்கு?” என்றான்.

“எனக்கு ஒரே பொண்ணுடா, சாம்பவி. நானும் குலதெய்வத்தோட பேர்தான் வச்சிருக்கேன்…” என்றான். என்னைப்பார்த்து, “சரண் என்னக்கா பண்றான்?” என்றான். நான் அவன் மும்பையில் வேலையில் இருப்பதைச் சொன்னேன். காரருகில் வந்தும் இருவரும் பேசிக்கொண்டே இருந்தார்கள்.

கடைக்கு முன்பாகப் பெரிய காரில் ஒரு இளைஞன் வந்து இறங்கினான். ‘புது மாப்பிள்ளை’ என்று முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது. முருகானந்தத்தைப் பார்த்து, “சார், சீமந்தத்துக்கு வேணுங்கற சாமான் எல்லாம் இங்கே இருக்கா?” என்றான்.

முருகானந்தம், “எல்லாம் இருக்கு சார், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. இவங்களை அனுப்பிட்டு வர்றேன், அடுத்து உங்களுக்கு எடுத்துரலாம். ஆனா மூக்கு பிழியறதுக்கு ஆலம் மொக்கெல்லாம் நீங்கதான் எடுத்துக்கணும், அது கடையில கிடைக்காது…” என்றான். “ஓகே ஓகே” என்ற அவன், கடைக்கு முன்பு போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்துகொண்டான்.

வாசலில் வந்து நின்ற பைக்கிலிருந்து களைத்துப்போன இரண்டு ஆண்கள் இறங்கி, வெளியே வந்து நின்ற பசுபதியிடம், “ஏங்க, கருமாதி சாமான் எல்லாம் வேணும்…” என்றார்கள். “வாங்க, லிஸ்ட்டைக் கொடுங்க…” என்றார் அவர்.

“சரிடா, நீ போய் கடையைப் பாரு…” என்ற ரகுவும் நானும் விடைபெற்றுக் காரில் ஏறி உட்கார்ந்தோம்.

“ரகு, 16-ஆம் நாளுக்கு என்ன வேணும்னு போன்ல சொல்லிரு, நான் கொடுத்து அனுப்பிடுறேன். இந்தா என் கார்டு. அப்புறமா சுதாகர் நம்பர் இருந்தா அனுப்பு. அடுத்து வந்தா கட்டாயம் சாப்பிட்டுட்டுத்தான் போகணும், கமலி பிரமாதமா சமைப்பா…” என்றவன் கைகுலுக்கி விடை கொடுத்தான்.

காரில் உட்கார்ந்து பெல்ட் போட்டுக்கொண்ட ரகு, ரோட்டைத் தாண்டியதும், “அக்கா, 3 மணி ஆயிடுச்சு. கௌரி கிருஷ்ணா போய் சாப்பிட்டுட்டு அப்புறமா வீட்டுக்குப் போலாமா? பசிக்குது…” என்றான். அவன் தலையில் இருந்த புளியம்பூவைத் தட்டிவிட்டு, “போலாண்டா, எனக்கும் பசிக்குது…” என்றேன்.