லோகமாதேவியின் பதிவுகள்

மயிலே மயிலே!

பாண்டிச்சேரியிலிருந்து பாரதி செந்தூர் எனக்கு அஸ்ஸாமின் நெய் மிளகாய் விதைகளை அனுப்பி இருந்தாள். அந்தச் செடி இங்கு வளருமா என எனக்குச் சந்தேகம் இருந்தது. ஆனாலும் ஒரு சிறு பாத்தி பிடித்து அதை விதைத்தேன். பத்து பன்னிரண்டு செடிகள் முளைத்து அதில் சில பிழைத்து 4 செடிகள் மட்டும் வளர்ந்தன. அதில் பூக்கள் பூத்ததும் மகிழ்ந்து போனேன். சின்ன பிஞ்சுகளைப் போட்டோ எடுத்து வைத்துக்கொண்டேன். உலகின் மிகக் காரமான மிளகாய்களில் ஒரு வகை வீட்டில் வளர்வதில் பெருமையாக இருந்தது

.

சில நாட்களுக்கு முன்பு மும்பையிலிருந்து வந்ததும் போய்ப் பார்த்தேன். இரண்டு காய்கள் நன்றாக மூத்துத் திரண்டிருந்தன.. இன்று காலை கொஞ்சம் மேகமூட்டமாக இருந்தது. மழை வருமென நினைத்து மயில்கள் அகவிக்கொண்டிருந்தன. ஞாயிற்றுக்கிழமைதானே, மதியம் சுடுசாதம் சாப்பிடுகிறேன் எனவே கொஞ்சம் ஸ்பெஷலாகச் சமைக்கலாம் என்று அந்த மிளகாய்களைப் பறிக்கப் போனேன்.

தோட்டத்தில் சில மயில்கள் குஞ்சுகளுடன் குப்பையைக் கிளறிக்கொண்டிருந்தன. என்னைக் கண்டால் அவை அஞ்சுவதில்லை. நான் மயில்கால் சூப் சாப்பிடமாட்டேன் என எப்படியோ அவற்றிற்குத் தெரிந்திருக்கிறது.

நான் மிளகாய்ச் செடிகளைப் பார்த்து நடக்கையிலேயே ஒரு பெண் மயில் அந்தச் செடி அருகில் போய் இரண்டு சிவந்த மிளகாய்களையும் கொத்தி வாயிலிட்டு என் கண் முன்னாலேயே லபக் என விழுங்கியது.

கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை கதைதான். “பொக்” எனப் போய்விட்டது. “அடீ மயிலே, அஸ்ஸாம் நெய் மிளகாயேதான் வேணுமா உனக்கு? பக்கத்துப் பாத்தியில் சம்பா மிளகாய் நீள நீளமாய் இருந்ததே பார்க்கலையா நீ? என்ன அநியாயம்!”

பாண்டிச்சேரியிலிருந்து பார்சலில் வந்த மிளகாய் விதைகளில் எல்லாம் அல்லா அந்த மயில் பேரை எழுதி வைத்திருப்பார் போல. அந்த மயிலின் பேர் என்னவாக இருக்கும்?

இன்னும் நாலைந்து பிஞ்சுகள் இருக்கின்றன அதிலொன்றிலாவது லோகமாதேவி என்னும் பெயர் இருக்குமாவென்று அல்லாவுக்குத்தான் தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑