லோகமாதேவியின் பதிவுகள்

மும்பை- அருளில் வேர்பற்றல்.

டாக்ஸி பிடித்து 2 மணி நேரம் பயணித்து சரணுடன் பேசியபடி மும்பையின் பிரம்மாண்டமான கட்டிடங்களைப் பிரமிப்புடன் பார்த்தபடி பயணித்தேன். மும்பை வாழ் தமிழர்களின் மெதடிஸ்ட் தேவாலயத்திற்கு 10 மணிக்கு வந்தோம். உள்ளே ஞாயிற்றுக்கிழமைக்கான பிரார்த்தனை துவங்கிவிட்டிருந்தது.

சரண் இறங்காமல் டாக்ஸி ஓட்டுநரிடம் என்னவோ பேசிக்கொண்டே இருந்தான் . நான் காத்திருந்து காத்திருந்து சலித்துப் போய் மீண்டும் உள்ளே தலையைக்காட்டி “என்னடா” என்றேன். “இரு வரேன்” என்று மீண்டும் பேசிக்கொண்டிருந்தான். என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று புரியாமல் நிற்கையில் தாழ்வாக உணர்ந்தேன்.

பாலிவுட் படங்கள் எனக்கு ஹிந்தி தெரியும் என்பதாக ஒரு மயக்கத்தை உருவாக்கி இருக்கின்றன அல்லது ஷாருக், சல்மான், ஆமீர்கான்கள் பேசினால் புரிகிறதோ என்னவோ. சுமார் 15 நிமிடங்கள் பேசிய பின்னரே சரண் இறங்கி வந்தான். டாக்ஸி அமர்த்தும்போதே செல்லவேண்டிய இடத்திற்கான தொகையும் அவரவர் போனில் வந்துவிடுகிறது. சரணுக்கு 550 என்றும் ஓட்டுநருக்கு 850 என்றும் வந்திருந்ததால் அதைப் பேசிக்கொண்டிருந்தோம் என்றான். “எவ்வளவுதான் கொடுத்தே கடைசியா” என்றேன். வழக்கம் போல அந்தக்கேள்விக்குபதில் சொல்லாமல் “வாம்மா போலாம்” என்று உள்ளே அழைத்துச் சென்றான்.

சற்று பெரிய தேவாலயம்தான். செருப்புகள் ஏராளமாக வெளியே ஒழுங்காக விடப்பட்டிருந்தன. பெரிய பெரிய பாத்திரங்களில் வாசனையாக என்னவோ செய்து மூடி வைக்கப்பட்டிருந்தது. பிரார்த்தனை நடக்கையில் உள்ளே செல்லலாமா வேண்டாமா என்று யோசனையாக இருந்தது.

ஆனால் காட்சனின் மனைவி ஜாஸ்மின், வெள்ளையில் நீல நிறம் கலந்த புடவையைத் தோளோடு போர்த்தியபடி மகிழ்ந்து சிரித்தபடி வந்து கைகுலுக்கி வரவேற்றார். உள்ளே சென்றோம். மரபான மர பெஞ்சுகளில் ஆண்களும் பெண்களும் தனித்தனியே அமர்ந்திருந்தார்கள். சிறு பிள்ளைகள் பென்ச் வரிசைகளுக்கு முன்பாக தரையில் பிளாஸ்டிக் பாய்கள் விரித்து அமர்ந்திருந்தார்கள். காட்சன் பிரார்த்தனைக்குத் தலைமையேற்று நடத்திக்கொண்டிருந்தார். ஒரு சிவப்பு அங்கியை அவரது சாம்பல் நிறச் சட்டைக்கு மேலே அணிந்திருந்தார். அவரில் நான் விஷ்ணுபுரம் விழாக்களில் சந்தித்த நண்பர் காட்சனைத் தேடினேன் ஆனால் காணோம்.

அவருக்கு பக்கவாட்டில் மைக் பொருத்தப்பட்டஇரண்டு பெஞ்சுகளில் பதின் பருவத்தில் பெண்களும் ஆண்களும் பிரார்த்த்னையின் இடையில் அவ்வப்போது பாடல்களைப் பாடினார்கள். காட்சனின் தலைக்கு பின்னே ஒரு டிஜிட்டல் பலகையில் என்ன பாடல், எந்தக் கீர்த்தனை எனும் எண்கள் ஒளிர்ந்தன. கூடியிருந்தோர் அதைப் பார்த்து தங்களிடம் இருக்கும் வேதப்புத்தகத்தின் பக்கங்களை எடுத்துக்கொள்கிறார்கள்.

பிரார்த்தனை முடிந்து ஒரு சில வசனங்களை ஒவ்வொருவராக காட்சன் வாசிக்கச் சொன்னால் உடனே தயங்காமல் வாசிக்கிறார்கள். கிடாரும் எலக்ட்ரிக்கல் ட்ரம்ஸும் கீபோர்டும் வாசித்த மூன்று இளைஞர்களுடன் சேர்ந்து மேலும் சில கோரஸ் பாடல்கள். பிற்பாடு சிறு பிள்ளைகள் மனப்பாடமாக சில வேத வசனங்களைச் சொன்னார்கள்.

சொன்ன ஒவ்வொருவருக்கும் சிறு இனிப்பு வழங்கப்பட்டது. ஒரு சொல் திருந்தாக் குழந்தைக்கு மற்றோர் சின்ன பிள்ளை தான் ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லிச் சொல்லி, அதைத் திரும்பச் சொல்லவைத்து இனிப்பை வாங்கிக்கொண்டு சென்றது. இறுக்கமான பெரும் கட்டுப்பாடுகள் இல்லாத, இயல்பான நட்புணர்வுடன் கூடிய ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை என்று தோன்றியது. குழந்தைகள் அங்குமிங்கும் ஓடியபடி இருந்தார்கள். ஞாயிறன்று குடும்பமாக இப்படி வந்திருப்போரை நினைத்து ஆச்சரியமாக இருந்தது எனக்கு.

பிரார்த்தனையும் பாடல்களும் வசனம் சொல்லுதலும் முடிந்த பின்னர், பெண்கள் முதலிலும் பின்னர் ஆண்களுமாக காட்சன் பேசிக்கொண்டிருந்த altar-ன் விளிம்பில் அரைவட்ட வடிவில் அமைக்கப்பட்டிருந்த செம்பட்டுத் துணியாலான சிறு மெத்தையில் முழந்தாளிட்டு அமர்ந்து அப்பமும் திராட்சை ரசமும் பெற்றுக்கொண்டார்கள். ஒரு மூதாட்டி முழந்தாளிட முடியாமல் தலைவணங்கி அப்பத்தைப் பெற்றுக்கொண்டார்.

ஜாஸ்மினிடம் திராட்சை ரசம் எப்படித் தயாரிக்கிறார்கள் என்று கேட்டு தெரிந்துகொண்டேன் . புளிக்காத ஆல்ஹகால் இல்லாத திராட்சை ரசம் செய்து விற்கப்படுகிறது அங்கு வாங்கிக்கொள்வதாகச்சொன்னார்.

பின்னர் நீண்ட கைப்பிடியுடன் கூடிய ஒரு சிறு பை போன்ற வெண்ணிறத் துணி உண்டியலில் காணிக்கை அளிக்கப்பட்டது. யார் எவ்வளவு அளிக்கிறார்கள் என்று பிறர் அறியாவண்ணம் கைகளை ஆழமாக உள்ளே விட்டு காணிக்கை அளிக்கும்படி அது வடிவமைக்கப்பட்டிருந்தது.

பத்துப் பிள்ளைகள் கூட்டாக ஒரு பாடலை இனிமையாக மைக் பிடித்துப் பாடினார்கள். பின்னர் காட்சன் இறங்கி வந்து முகமன் கூறி வரவேற்றார். தேநீர் இடைவேளைக்குப் பிறகு என் உரை தொடங்கும் எனச் சொன்னார்.

காட்சனின் மகன் ஆரோனைப் பார்த்தேன். காட்சனின் சமீபத்திய இழப்பு குறித்து நான் அவருக்கு நினைவூட்டக் கூடாது என்று இரங்கல் தெரிவிக்கும் விதமாக ஏதும் சொல்லாமலிருந்தேன். ஆரோனை மிகச்சிறிய வயதில் வேடசந்தூரில் பார்த்தது, பின்னர் இப்போதுதான் பார்க்கிறேன். உற்சாகமான இளைஞன்.

வீட்டிற்கு வெளியே நான் தேநீர் அருந்துவதில்லை.காபி மட்டும்தான். சரண் எப்போதுமே காபி, தேநீர் அருந்துவதில்லை. எனவே வெளியே நின்று சிலருடன் பேசிக்கொண்டிருந்தோம். PPT போடுவதற்கான ஆயத்தங்கள் நடந்தன.

நான் என் லேப்டாப் கொண்டு வரவில்லை. சரணின் லேப்டாப்பில்தான் என் உரை இருந்தது. அதை ஸ்கிரீனில் போட்டார்கள். முதல் ஸ்லைடே எனக்கு திகைப்பாயிருந்தது. நான் “Rooted in Grace, Growing in Christ” என்று தலைப்பிட்டிருந்தேன். ஆனால் முதல் பாதியான “Rooted in Grace” மட்டும்தான் அங்கு இருந்தது. சரணைப் பார்த்தேன். அமைதியாக அதற்கும் அவனுக்கும் தொடர்பில்லாதது போல் அமர்ந்திருந்தான். அருகில் சென்று “என்னடா” என்றேன். “நான்தான் ‘Christ’ என்று வந்த இரண்டாம் பகுதியைத் தூக்கினேன், நீ போய் பேசு” என்றான். என்ன ஆணவம்?

உரையைத் துவங்கினேன். தலைப்பைச் சொல்லி ஏன் கிறிஸ்துவர் அல்லாத நான் அவர்கள் முன்பாக நிற்கிறேன் என்பதை முதலில் விளக்கினேன். தாவரப் பரவலின் வரலாறு, 1492 என்னும் தலைப்பில் நான் எழுதவிருக்கும் நூல், மனிதர்கள் மூலமாகப் பரவியவைகளில் கிறிஸ்துவ மிஷனரிகளின் “மிஷன் கிரேப்ஸ்” மற்றும் “மிஷன் மேங்கோ”. அப்படியே தேவாலயங்கள் திராட்சை ரசம் மட்டுமே அளிக்க நினைத்தது, அளிக்க முடியாத துருவப் பகுதி தேவாலயங்களின் உலர் திராட்சைகளை வெந்நீர் ஊற்றிப் பிசைந்து சாறெடுப்பதும், கெட்டியான சிரப்பில் தூய நீர் கலந்து கொடுப்பதைப் ஜான் வெஸ்லி பரிந்துரைத்ததையும் சொல்லி ஜான் வெஸ்லிக்கு வந்தேன்.

லூயி பாஸ்டர் 1862-ல் ஒயினில் இருக்கும் ஆல்கஹாலை அப்படியே நிலையாக இருக்க வைக்கவும் அது வினிகராக ஆகாமலிருகக்வும் பாஸ்டுரைசேஷனைக் கண்டுபிடித்தார். மெதடிஸ்ட் கிறிஸ்துவரான தாமஸ் வெல்ச் (Thomas Bramwell Welch) 1869-ல் ஒயினில் இருக்கும் ஆல்கஹாலைக் கொல்லும் ஒரு வகைப் பாஸ்டுரைசேஷனைக் கண்டறிந்தார். அப்படி ஆல்கஹால் இல்லாத ஒயினைத்தான் மெதடிஸ்ட் தேவாலயங்களில் நீர் கலந்து அளிக்க ஜான் வெஸ்லி பரிந்துரைத்தார்.

பின்னர் ஜான் அவரது இளமைக்காலம், மீட்கப்பட்ட கொள்ளி,அவரது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து அவர் ஆக்ஸ்போர்டில் துவங்கிய புனிதக் குழுவைப் பற்றியெல்லாம் சொன்னேன்.

அக்குழுவினர் வாரம் இரண்டு நாட்கள் உபவாசம் இருப்பது, அன்றாடம் இறையியல் வகுப்புகள் எடுப்பது, சிறைச்சாலை சென்று கைதிகளுக்காக ஜெபிப்பது, கைதிகளின் குடும்பக் கடன்களைத் தீர்க்க புனிதக் குழுவினர் பகுதிநேர வேலை செய்து சம்பாதிப்பது, சிறையிலிருந்து வெளியே வருபவர்களுக்கு வேலை வாங்கித் தருவது போன்ற முறையான நெறிகளுடன் இயங்கினார்கள்.

பிற மாணவர்கள் இந்தப் புனிதக் குழுவின் கட்டுக்கோப்பான அமைப்பைப் பார்த்து கிண்டலாக “என்னடா உங்கள் குழுவின் மெத்தட் பலமா இருக்கே” என்றார்கள். ஜான் கோபித்துக்கொள்ளாமல் அவர் அமைத்த கிறிஸ்துவப் பிரிவுக்கே அந்தக்கிண்டலைஅடைப்படையாக வைத்து’மெதடிசம்’ எனப் பெயரிட்டார். அப்படி மெதடிசம் உருவானதை, ஜான் சென்ற 2,50,000 மைல் குதிரைப் பயணத்தை, அவர் அடிக்கடி சென்ற லண்டனின் ஒரு தாவரவியல் பூங்காவை, அப்படியான பூங்காவை அவர் மெதடிஸ்ட் தேவாலயங்கள் அனைத்திலும் அமைக்க வேண்டும் என்று பரிந்துரைத்ததையெல்லாம் சொன்னேன்.ஜானின் தோல்வியுற்ற மணவாழ்வைக்குறித்தும் பேசினேன்.

ஜான் வெஸ்லே தனது 48-வது வயதில் மேரி வாஸெய்லைத் திருமணம் செய்தார். மேரி ஒரு பணக்கார வர்த்தகரின் விதவை மனைவி.நான்கு பிள்ளைகளுடன் அவர் ஜானை மணந்து கொண்டார்.

மேரிக்கு வெஸ்லேயின் இடைவிடாத பயணங்கள் மற்றும் பிற பெண்களுடன் அவர் கொண்டிருந்த ஆன்மீகக் கடிதத் தொடர்புகள் (Spiritual correspondence) பெரும் அதிருப்தியைத் தந்தன. வெஸ்லே ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான மைல்கள் குதிரையில் பயணம் செய்ததால், மேரி தனிமையில் விடப்பட்டார். இவர்களது திருமண வாழ்க்கை 30 ஆண்டுகள் நீடித்தாலும், அதில் பெரும் பகுதி பிரிவிலேயே கழிந்தது. மேரி பலமுறை வெஸ்லேயை விட்டுப் பிரிந்து சென்றார். இறுதியில் 1781-ல் மேரி காலமானபோது, வெஸ்லேவுக்கு அது குறித்த தகவல் கூடத் தெரியவில்லை; அவர் மேரியின் இறுதிச் சடங்கில் கூட கலந்துகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.

வெஸ்லே தனது நாட்குறிப்பில், ஒரு இறைப்பணியாளராகத் தனக்குத் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை என்பதைப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.

18-ம் நூற்றாண்டில் பிரபலமாகிக்கொண்டிருந்த “Philosophy of Simple” என்பதில் ஜான் கொண்டிருந்த நம்பிக்கையையும், பல மூலிகைகளின் கலவையான மருந்துகளில் நச்சுத்தன்மை கொண்டிருக்கும் ஆண்டிமனி, பாதரசம் ஆகியவற்றை கலந்துஅளிக்கும் லத்தீனம் பேசும் மருத்துவர்களிடம் செல்லாமல், தன் குழந்தைக்கு சுகவீனம் உண்டாகையில் வீட்டுக் கொல்லைப் புறத்தில் இருக்கும் ஒரு எளிய ஒற்றை மூலிகையைக் கொண்டு அதன் மூலம் தாயே மருத்துவம் பார்க்க முடியும் என்றார் வெஸ்லி.

அப்போது பிரபலமாயிருந்த doctrines of signature என்னும் மனித உடல் பாகங்களைபோலவே தோற்றம் கொண்டிருக்கும் தாவரங்கள் அந்த உடல்பாகங்களில் உண்டாகும் நோய்களைத்தீர்க்கும் என்பதிலும் ஜான் நம்பிக்கை கொண்டிருந்தார்.

ஆயிரக்கணக்கான மூலிகை மருத்துவக் குறிப்புகள் அடங்கிய இரண்டு நூல்களையும் எழுதினார் வெஸ்லி:

Primitive Physic (1747) மற்றும் A Survey of the Wisdom of God in the Creation: Or, a Compendium of Natural Philosophy (1763).

இவற்றில் ஏராளமான மூலிகைகள், அவற்றை எதற்கு, எப்படி, எவ்வளவு பயன்படுத்துவது என்று விளக்கி இருந்தார். இவை மட்டுமல்லாது தனது வாழ்க்கையை, அந்த நீண்ட பயணத்தில் தான் கவனித்த இயற்கையின் அற்புதங்களை, பழங்குடியினருடன் நடந்த உரையாடல்களில் அவருக்குக் கிடைத்த மூலிகை சிகிச்சை விவரங்களை,கசந்த மணவுறவை, வாழ்வின் துயரங்களை மெதடிஸ்ட் பிரிவினருக்குத் துவக்க காலத்தில் உண்டான சோதனைகளை எல்லாம் விரிவாக The Journal of John Wesley என்னும் நூலில் எழுதினார். அவரது அனைத்து நூல்களும் பல பாகங்களாக, பல எடிஷன்களாக வெளியாகின.

மெதடிசத்தின் அடிப்படையான 141 சங்கற்பங்களை The “Standard Sermons” என்னும் நூலாக வெளியிட்டார், அவரது மிகப்பிரபலமான நூலான A Plain Account of Christian Perfection 1766-ல் வெளியானது. இந்த நூலின் தாக்கம் பிற்பாடு பெந்தெகொஸ்தே பிரிவிலும் இருந்தது. மேலும் பல நூல்களையும் அவர் எழுதினார்.

ஜான் வெஸ்லி , இறைப்பணியாளர் என்பவர், நற்செய்திகளைப் பிரசங்கிப்பதோடு ஒரு தாவரத்தின் தோற்றத்தில், இலையில் , மலரில்,கனியில், விதையில் இருக்கும் அற்புதங்களைக் காட்டி தேவனின் படைப்பாற்றலின் அற்புதங்களையும் மக்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்.

இதைச்சொல்லுகையில் leaf of shame என்னும் தலைப்பில் ஆதாமும் ஏவாளும் அணிந்துகொண்ட அத்தியிலைளைச்சொல்லி ஒரு இலையின் அபாரமான, மனிதர்கள் அதைப்போல வரையக்கூட முடியாத நரம்பமைப்பைக் காட்டினேன்.

இப்படி ஜான் வெஸ்லியின் வாழ்வை, அவர் உருவாக்கிய மெதடிஸக் கிறிஸ்துவப் பிரிவைச் சொல்லி அப்படியே விவிலியம் காட்டும் தாவரங்களுக்கு வந்தேன். (முழுமையான ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீண்ட உரையைத் தனியே கட்டுரையாகத் தயாரித்துக்கொண்டிருக்கிறேன்).

விவிலியம் சொல்லும் 7 முக்கிய தாவரங்களை, ஏன் அவற்றை குறிப்பாக விவிலியம் சொல்கிறது என்று உரையின் அடுத்த பகுதிக்கு வந்தேன்: பார்லி, கோதுமை, அத்தி, மாதுளை, ஆலிவ், திராட்சை மற்றும் தேன்ஆகியவை இரண்டாம் விதியாகிய உபாகமத்தில் (Deuteronomy 8:8) இஸ்ரேல் நாட்டின் செழுமையையும் வளத்தையும் குறிக்கும் ஏழு முக்கியமான நில விளைபொருட்களாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. முதல் 6 தாவரங்களின் தாவரவியல் மற்றும் கலாச்சார ரீதியான முக்கியத்துவத்தையும் விளக்கினேன்.

7-வதாகச் சொல்லியிருக்கும் தேன் என்பது நிச்சயம் தேனீக்களின் தயாரிப்பான தேனாக இருக்காது என நான் நினைத்தேன். தேன் என்று உபாகமம் குறிப்பிடுவது முற்றிய பேரீச்சைக் கனிகளின் இனிப்பான சாறாகத்தான் இருக்கும். ஏனெனில் 6 தாவரப் பொருட்களுக்குப் பிறகு 7-வதாக ஒரு பூச்சியிடமிருந்து கிடைக்குமொன்றைச் சொல்லி இருக்க வாய்ப்பில்லை.. பேரீச்சையைச் சொல்லியதால் அப்படியே ஏன் குருத்தோலை ஞாயிறுக்குப் பேரீச்சையின் விரிந்த குருத்தோலை பயன்பாட்டில் இருக்கிறது என்பதையும், பேரீச்சை ஓலை கிடைக்காத பிரதேசங்களில் தென்னை, பைன், ஆலிவ் போன்ற என்னென்ன மரங்களில் இலைகளைப் பயன்படுத்துகின்றனர் என்பதையும் சொல்லிவிட்டு பைபிளில் எனக்குப் பிடித்தமான “Consider the lilies” என்பதற்கு வந்தேன்.

அத்தனை அழகாக இயற்கையில் வளர்ந்து மலர்ந்திருக்கும் அழகிய லில்லிகளைப் பார்க்காமல் ஏன் அன்றாட உணவு மற்றும் பிற உலகியல் தேவைகளுக்கான கவலையில் மூழ்கி இருக்கிறீர்கள் என்ற அந்த கவித்துவமான செய்தி எனக்கு மிகப்பிடித்தமானதொன்று.

ஏன் லில்லி? ஏன் consider the roses என்று ரோஜாக்கள் சொல்லப்படவில்லை என்பதையும், லில்லி என்பது இப்போது நாம் சொல்லும் லில்லியாக இருக்காது, செவ்விதழ்களும் கருமையான உட்பகுதியும் கொண்டிருக்கும் பாப்பி லில்லிகளாகத்தான் இருக்கும், ஏனென்றால் இந்தச் செய்தி பிரசங்கிக்கப்பட்ட மலைப்பகுதியின் அடியில் இருந்த ‘கடல்’ என்றே அழைக்கப்படும் மாபெரும் ஏரியின் கரையில் அந்த லில்லிகள்தான் வளர்ந்திருந்தன என்று உரை தொடர்ந்தது.

அதன் பின்னர் புகழ்பெற்ற “I am the vine, you are the branches and my father is the gardener” க்குச் சென்றேன். சரண் கவனித்துக் கொண்டிருக்கிறான் என்னும் எச்சரிக்கை உணர்வை எப்போதோ மறந்துவிட்டு நேராக இதயத்திலிருந்து பேசிக்கொண்டிருந்தேன். ஹிசோப்பும், செடாரும், நல்விதை நல்ல நிலத்தில் விழவேண்டும், சிறு கடுகு ஆனால் பெரும் விளைச்சல் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சில botanical parables-க்கு வந்து இறுதி செய்தேன்.

முடிக்கும் முன்பாக உலகில் “ஆமென்” எனும் சொல் 3000 ஆண்டுகளாக எப்படி கிறிஸ்துவுக்கு முன்பாகவே உருவாகி, ஒரு ஆசி, ஒரு தீச்சொல் அல்லது ஒரு நற்செய்தி என எது சொல்லப்பட்டாலும் “சொன்னவை நடக்கட்டும், ஆம் அவ்வாறே ஆகுக” என்னும் பொருளில் இன்று வரை தொடர்ந்து வருகிறது என்பதைச் சொன்னேன். உலகின் மிக அதிகமாக எழுத்தில் பயன்படுத்தப்படுவது “the” எனும் சொல். உரையாடலில் அதிகம் பயன்படுவது “ok”. அன்றாடம் ஒருவராலேயே பலமுறை, அதிகமுறை சொல்லப்படுவது “ஆமென்”.

இத்தனை ஆண்டுகளாகியும் எந்த மொழியாக்கமும் செய்யப்படாமல் சேதமின்றி அசலாகவே நீடித்திருக்கும்அந்தச் சொல்லை விளக்கி, முற்காலத்தில் பெரும் கட்டிடங்கள் தூண்கள் எழுப்பப்படுகையில் அவற்றை நிறுவி ஆமென் சொல்லும் வழக்கமிருந்தது என்பதைச் சொல்லி “நண்பர்களே, நான் இன்று பகிர்ந்துகொண்ட நற்செய்திகள் அனைத்தும் உங்களுக்கும் பயன்படட்டும் ஆமென்” என்று உரையை முடித்தேன்.

ஒர் சமயச்சடங்கு வைன் அளிக்கப்பட்டு முடிக்கப்படுவதைப் போல் ஒரு உரை அல்லது பிரார்த்தனை ஆமென் என்று சொல்லபட்டுத்தான் நிறைவுறுகிறது. ஆமென் என்பது ஒரு spiritual seal. ஒரு குழந்தையை மார்போடு அணைத்துக்கொண்டிருக்கும் செவிலியின் உருவம் ஆமென் என்னும் சொல்லுக்கான சித்திரமாக முன் காலத்தில் புழக்கத்திலிருந்தது.

மதியம் கடலைக்கறியும் பருப்புமாக எளிய ஆனால் சுவையான உணவு அளிக்கப்பட்டது. காட்சன் பனையோலையில் அவர் கைப்படச் செய்த அழகிய திராட்சைக் கொத்து, ஊதா வண்ணமேற்றப்பட்டு எனக்குப் பரிசளிக்கப்பட்டது. ஒரு சிறு தொகையும் உறையிலிட்டு அளித்தார்கள். உணவு இடைவேளையில் பிள்ளைகளுக்குத் தமிழ் எழுதப் படிக்கவும், பாடல் பாடவும் தன்னார்வலர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது.

மதியம் வெளியே தோட்டத்தில் நின்று தாவரங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். மீண்டும் உள்ளே சென்று மேடையேறி சாம் ஹிக்கின்பாதமின் ’ கலப்பையும் நற்செய்தியும்’ நூலை நான் தமிழில் மொழியாக்கம் செய்வதைச் சொல்லி, ” கோதுமையை விளைவிப்பவனே நற்செய்தியைப் பிரசங்கிப்பவனைக் காட்டிலும் கர்த்தருக்கு நெருக்கமானவன்” என்று சாம் சொல்லியிருப்பதைச் சொல்லி உரையை முழுமை செய்தேன். களைத்திருந்தேன், ஆனாலும் நிறைவுற்றிருந்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑