காலையிலேயே பெருங்கூச்சல் கேட்டது. சமையலறை ஜன்னலிலிருந்து பார்த்தால் தெரியும் தோட்டத்தின் உரிமையாளரின் காட்டுச்சாலை, வடக்கில் நம் வீட்டுச் சமையலறை ஜன்னலைப் பார்த்துத்தான் இருந்தது. ராசுக்கவுண்டர் பெரிதாகச் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்.
‘’.. போடு, கீழே போடு, இருக்கறது பூரா நீ வழிச்சுட்டுப் போயிட்டா நான் ஒரத்துக்கு என்ன பண்ணறது? அதுவும் கேட்கறதுமில்ல; என்னமோ கொப்பனூட்டிலிருந்து எடுக்கறவளாட்டம் போடு கீழே ..’’
முருங்கை இலைகளை பருப்பில் போட்டதும் அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு ஜன்னலில் எட்டிப்பார்த்தேன். ராசுவின் எதிரில் கையில் அள்ளிய சாணியுடன் மாரியம்மாள் தலை குனிந்து நின்றிருந்தாள். விளிம்பு நிலை மக்களில் ஒருத்தி மாரியம்மாள். சனி ஞாயிறுகளில் அடுத்த நிறுத்தத்தில் இருக்கும் ஏராளமான கடைகளின் வாசலில் ஒன்றிரண்டில் சாணி போட்டு வழித்துவிட்டால் நூறோ இருநூறோ கிடைக்கும். அவ்வப்போது இப்படி அருகிலிருக்கும் தோப்புகளில் சாணியை பலர் இப்படி எடுத்துக்கொள்வார்கள். அது ஒரு உபரி வருமானம்.
மாரியம்மாள் இன்று ராசுக்கவுண்டரிடம் அதற்குத்தான் திட்டு வாங்கிக்கொண்டிருக்கிறாள்.
ராசுக்கவுண்டர் தனி ஆள். ஒரு வகையில் எனக்கு உறவினரும் கூட. அவரின் நங்கையின் வகையில் ஒரு பெண்தான் என் அண்ணன் ஒருவர் கல்யாணம் செய்துகொண்டிருக்கிறார். ஆனால் நான் ராசுவிடன் பேசியது கூட இல்லை. ஒரு பழைய சைக்கிளில் நான் கல்லூரிக்குச் செல்கையில் என்னை கடந்து அவர் பால் ஊற்றச் செல்கையில் அவ்வபோது பார்த்திருக்கிறேன். ஏனோ அவர் திருமணம் செய்துகொள்ளாமல் அந்த கோடிக்கணக்கான பெறுமதி உள்ள வீட்டில் ஓலைச்சாலையில் வசிக்கிறார். மாடும் கன்றும் எருமையும் ஆடும் கோழியும் தேங்காயும் மாங்காயுமாகச் செழிப்பான தோட்டம் அது.
சாணி அள்ளியதற்கு கொஞ்சம் அதிகமாகவே திட்டு , சத்தமும் அதிகமென்பதால் அக்கம்பக்கத்து ஆட்கள் எட்டிப் பார்த்தார்கள். ராசு மேலும் மகிழ்ந்து குரலுயர்த்தி, “எடுபட்ட சிறுக்கி, இனி தோட்டத்துப் பக்கம் வந்தீன்னா காலை முறிச்சுப்புடுவேன், போடி!” என்று கத்தினார்.
மாரியம்மாள் ஒதுங்கி ஓரமாகச் சென்று சாணியைக் கீழே போட்டுவிட்டுத் திரும்பி நடந்தாள். பின்னால் “சிறுக்கி மக” என்ற ராசுவின் குரல் எனக்கும் கேட்டது.
கோவிட் தொற்று முடிந்து கல்லூரி திறந்து சில மாதங்களில் ஒருநாள் ஏற்காட்டுக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. கல்லூரியிலிருந்தே காலை 5.30-க்குப் பேருந்து புறப்படுவதாக ஏற்பாடு. நான் வேடசந்தூரிலிருந்து புறப்படும் 5 மணி முதல் பேருந்தைப் பிடிக்க கருக்கிருட்டில் டார்ச் அடித்தபடி வெளியே வந்தேன். 200 அடிகள் பேருந்து நிறுத்தத்திற்கு நடக்க வேண்டும்.
தாத்தாரப்புச்சி மரத்திற்கருகில் ஏதோ ஒரு அசைவு, அப்படியே திடுக்கிட்டு நின்று விட்டேன். திரும்பி வீட்டுக்குச் செல்வதும் முடியாது. முதுகுக்குப் பின்னால் அந்த அசைவு மேலும் பயமுறுத்தும். அந்நேரத்துக்கு எந்த நடமாட்டமும் இல்லை, மையச் சாலையில் ஒரே ஒரு பைக் வெளிச்சமாக அகன்று போனதைத் தவிர.
துணிச்சலை வரவழைத்துக்கொண்டு “யாரு அங்கே?” என்றேன் சத்தமாக.
தலையில் முக்காடிட்டுக்கொண்டிருந்த மாரியம்மாள் மெல்ல வெளியே வந்து என்னைச் சாதிப் பெயர் சொல்லி அழைத்து – “ச்சி நாந்தானுங்க” என்றாள்.
ஆச்சரியமாக இருந்தது, அந்த இருட்டில் அவள் அங்கே ஒளிந்திருந்தது. “என்ன மாரியம்மா, இந்நேரத்துல இங்கே?” என்றேன்.
அவள் சற்று நகர்ந்து முன்னே வந்து முக்காட்டை எடுத்துவிட்டாள். பொழுது துலங்கிக்கொண்டிருக்கையில், அவள் முகம் கொஞ்சமாகத் தெரிந்தது. தலையில் நெற்றியைச் சுற்றிப் போடப்பட்டிருந்த வெள்ளைநிறக் கட்டில் ரத்தம் ஊறிக்கசிந்திருந்தது.
சில நாட்களுக்கு முன் தான் அவள் புருஷன் மாரி அவள் மீது சந்தேகப்பட்டு பாட்டிலில் ஓங்கி தலையில் அடித்த ரத்தப் பெருக்கோடு அப்பா வீட்டிற்குப் பஞ்சாயத்துக்கு வந்தார்கள். சமாதானம் செய்து அம்பரம்பாளையம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தபோது போட்ட கட்டுதான் அது.
மாரியம்மாள் அந்தச் சமூகத்திலேயே கொஞ்சம் வெளுப்பும் லட்சணமுமாக அழகி. மாரி வழக்கமான புருஷன்மார்களைப் போலத்தான், ஊதாரி, குடிகாரன். ஆனால் மாரியம்மாள் மீது எப்போதும் சந்தேகம். இரண்டு பிள்ளைகள் வேறு.
மாரியம்மாளிடம் “இங்கே வா, என்ன இந்நேரத்தில் இங்கே இருக்கே? என்ன?” என்றேன்.
“மன்னிச்சுருங்கம்மா” என்றாள். எனக்குப் புரியாமல் “என்ன சொல்லறே?” என்றேன்.
“ராசுக்கவுண்டர் சாலைக்குப் போயிட்டு வர்றேனுங்க. நீங்க கேட்டுக்கதவு திறக்கறதைப் பார்த்துட்டு இங்கே ஒளிஞ்சுகிட்டனுங்க” என்றாள்.
திகைப்பாய் இருந்தது. கீழ் சாதி மேல் சாதி எல்லாம் இந்தச்சுரண்டலுக்கு இல்லை போலிருக்கிறது. “என்ன மாரிம்மா? முதல்லயே வீட்டில் உனக்குப் பிரச்சனை, இப்படிப் பண்ணலாமா? மாரிக்குத் தெரிஞ்சா இன்னும் சண்டை ஜாஸ்தியாகுமில்ல?” என்றேன்.
“என்ன பண்ணறதுங்க அவரு செலவுக்கு காசே தரதில்லை, கவுண்டர், அப்பப்போ இப்படி கூப்பிடுவாருங்க, வெள்ளன புள்ளைங்க தூங்கையில போனா, கவுண்டரு கைச்செலவுக்கு காசு கொடுப்பாருங்க. அதுங்க எதுனா ஆசையாச் சாப்பிடக் கேட்டா வாங்கிக்கொடுக்கலாம்னுதாங்க” என்றாள்.
’’..சரி வீட்டுக்குபோ யாராச்சும் பார்ப்பாங்க..’’ என்று சொல்லிவிட்டு விலகி பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தேன். அன்று முழுவதும் மாரியம்மாளின் கீழுதட்டில் ரத்தம் கசிந்த காயம் நினைவிலேயே இருந்தது.
அந்த மாரியம்மாள் தான் அதே ராசுக்கவுண்டரிடம் இன்று திட்டுவாங்குகிறாள் இருட்டில் நடப்பது யாருக்கும் தெரியாதுதான் என்றாலும் ஊரறிய இப்படி வேஷம்போட்டால் ,சந்தேகமும் வராதல்லவா?
அங்கிருந்து வீட்டை நோக்கி வந்த மாரியம்மாள் பின் வாசலில் நின்றிருந்த என்னைப்பார்த்து’’.. லீவுங்களாங்க –ச்சி?,,’’ என்றாள் . ’’..ஆமா மாரிம்மா என்றேன்..’’சிரித்தபடி அவளது மாட்டை இழுத்துக்கொண்டு போனாள். நெற்றியில் மாரி பாட்டிலில் அடித்த காயம் தழும்பாகி இருந்தது.
உள்ளே வந்தேன். அலைபேசியில் ஏராளமான மகளிர் தின வாழ்த்துக்கள் வந்திருந்தது. எல்லோருக்கும் ’’ஹேப்பி வுமன்ஸ் டே ’’என்று பதில் சொல்ல வேண்டும்.
Leave a Reply