முன்பெல்லாம் மகன்கள் சின்னக்குழந்தைகளாக இருக்கையில் நான் என்ன சொன்னாலும் நம்புவார்கள். இந்த ஊருக்கு வந்த புதிதில் இந்த புதுக்குடியிருப்பு அமைந்திருந்த ஊர் மேட்டில் இரண்டே இரண்டு வீடுகளும் சுற்றிலும் வயல்களும்தான் இருந்தன. வீட்டுக்கு எதிரே ஒரு மாபெரும் மாந்தோப்பு . தெருவெங்கும் அடர்ந்த மரங்களுடன் மாலை விளக்கேற்றுகையிலேயே முழுக்க இருட்டிவிடும்.
இந்தச்சூழலில் ஒரு பெண் தனியே குழந்தைகளுடன் வீடுகட்டி வசிக்க வந்தது ஊரில் பேச்சாக இருந்தது. அதுவும் முதல் சில வருடங்களில் மதிலும் கட்டவில்லை; பாம்புகள் அதிகம் வந்துகொண்டிருந்த இடமாக வேறு இருந்தது.

அவ்வப்போது வீட்டுக்கு வரும் கிராமத்துப் பெண்களால் துபாய்க்காரர் வீடு என்று பெயரும், தனியே ஒரு டீச்சரம்மா மகன்களுடன் வசிக்கிறார் என்பதும் ஊரெங்கும் பரவியது. அபுதாபி என்னும் பெயர் புழக்கத்துக்கு வந்திருக்கவில்லை, துபாய் எனும் குடைச்சொல்லுக்கு கீழே அபுதாபி, குவைத், ஷார்ஜா போன்ற நாடுகள் அடங்கி இருந்த காலமது. எப்படியானாலும் ஆர்னால்டு ஷ்வாஷ்னேகர் ஆண்கள் இல்லாமல் பெண் ஒருத்தி தனியே இருப்பது ஒரு அதிசயமாகி பலர் நேரில் வந்தும் ’’.. பன்னாடி எங்கே? எப்போ வருவாரு? எப்படி தனியாக தைரியமாக இருக்கிறேன்?..’’ என்றெல்லாம் கேட்கத் தொடங்கினார்கள்.
எனவே நான் பேச்சோடு பேச்சாகச் சொல்வதுபோல் தோட்ட வேலைக்கு வரும் பெண்களிடம், என்னிடம் ஒரு கைத்துப்பாக்கி இருக்கிறது என்று சொல்லிவைத்தேன், அதனால் எந்தப் பயமும் இல்லை, லைசென்ஸ் வேறு இருக்கிறது, பாதுகாப்புக்காக நான் எப்போது வேண்டுமானாலும் சுடலாம் என்றும் சொல்லிவிட்டதால் அக்கிராமம் முழுக்க அந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவியது. சரண், தருணிடமும் அதையே சொன்னேன்; பொய் சொன்னால் பொருந்தச் சொல்ல வேண்டுமல்லவா?
அவர்களும் ஒரு கேள்வியும் கேட்காமல் நம்பினார்கள். அவ்வப்போது துப்பாக்கி எங்கே இருக்கு என்று கேட்டு நச்சரிப்பார்கள். அது எல்லாம் மறைச்சு வச்சிருக்கேன், சொல்ல முடியாது குண்டு போட்டுருக்கில்லையா நீங்க எடுத்தா சுட்டுருவீங்க..’’என்பேன்.
சரண் புத்திசாலித்தனமாக, ’’…மறைச்சு வச்சிருந்தா திருடன் வந்தா டக்குன்னு எப்படி எடுப்பே?..’’ என்பான்.
நான் பதிலுக்கு ’’… அது வந்து மறைச்சுதான் வச்சிருக்கேன், ஆனா எனக்கு உடனே கைக்குக் கிடைக்கும் இடத்துல வச்சிருக்கேன்…’’ என்பேன். நான் கல்லூரிக்குச் சென்றிருக்கையில் இவர்கள் இருவரும் மாய்ந்து மாய்ந்து துப்பாக்கியைப் பல இடங்களில் தேடி இருக்கிறார்கள்.
வெகுகாலம் கழித்தே அது பொய் என்று தெரிந்துகொண்டார்கள். நான் என்ன சொன்னாலும் நம்பிய பொற்காலமது. ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை. இப்போது தருண் படிப்பு முடித்து வீட்டில் இருக்கிறான். அவனுக்கு வேலை வரும் ஆகஸ்ட்டில்தான் சென்னையில், எனவே நேரம் கிடைக்கையிலெல்லாம் அவனோடு பேசிக்கொண்டிருப்பேன்.
மகன்களோடு செலவிடும் சமயம் மிகவும் அரிது என்று அறிந்திருக்கிறேன். வேலை, கல்யாணம், குடும்பம் என அவர்கள் முன்புபெரும் கதவுகள் திறந்திருக்கின்றன. எனவே கிடைக்கும் சமயத்தை பேசிப்பேசிக்கழிக்கிறோம்
பெரும்பாலும் என் இளமைக்காலக்கதைகள் தான். அப்படிப் பேசிக்கொண்டிருக்கையில் நான் முதன்முதலில் தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்த சம்பவத்தைச் சமீபத்தில் சொல்லிக்கொண்டிருந்தேன்.
என் இளமைப்பருவத்தில் நான் மகிழ்ந்திருந்த காலமென்றால் அபயமத்தை வீட்டிலும், சரஸ்வதி பெரியம்மா வீட்டிலும் விடுமுறையில் இருந்த காலங்கள்தான். அதுவும் அபயமத்தை மீது எனக்குப் பெரும் பிரேமை இருந்தது.
என் சொந்த அத்தைகள் எல்லாம் மாமன்களிடம் அடியும் உதையும் வாங்கிக்கொண்டு, மூக்குச் சிந்திக்கொண்டும், அகால வேளையில் ரத்தக்காயங்களுடன் இடுப்பில் குழந்தைகளோடு வந்து கதவை தட்டும் அபலைகளும், அண்ணன் வீட்டில் சீராடிக்கொண்டு வந்து இருப்பவர்களுமாகத்தான் இருந்தார்கள்.
ஆனால் அபயமத்தை நன்றாகப் படித்து, என் மாமாவைக் காதல் திருமணம் செய்துகொண்டு, லவ்டேல் பள்ளியில் நல்ல வேலையில் இருந்ததோடு, புடவையை ஒற்றைத்தலைப்பாகப் போட்டுக்கொண்டு, குளிர்கண்ணாடி அணிந்து, ஒரு மொபெடில் ஜம்மென்று என்னையும் உட்காரவைத்துக்கொண்டு சேரிங் கிராஸ்க்கு அழைத்துச்செல்வார்கள். அத்தை நல்ல ஓங்குதாங்காக வேறு இருப்பார்கள். எனவே எனக்கு அவரைப் போல் இருக்க வேண்டுமென்று பெரிய கனவெல்லாம் இருந்தது.
லவ்டேலில் இருந்த அத்தையும் மாமாவும் சென்னை கிண்டி ஐஐடி-யில் பணிமாறுதல் பெற்று வந்தார்கள். பின்னர் என் கோடை விடுமுறைகள் எல்லாம் சென்னையில்தான். மாமா அங்கு உடற்பயிற்சி இயக்குநராகவும், அதே வளாகத்தில் இருந்த வனவாணி பள்ளியில் அத்தை உடற்பயிற்சி ஆசிரியையாகவும் பணியாற்றினர். ஆசிரியர் குடியிருப்பொன்றில் கீழ்த்தளத்தில் வீடு. ஒரு கோடை விடுமுறையின்போதுதான் அவர்கள் வீட்டில் கறுப்பு வெள்ளை தொலைக்காட்சி வாங்கி இருந்தார்கள். நான் போன முதல் நாளே ஞாயிறு என்பதால் அன்று மாலை ஏதாவது ஒரு மொழித் திரைப்படம் போடுவார்கள் என்று ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு இருந்தது.
மாமா ஒலிபரப்பு துவங்கும் முன்னர் தொலைக்காட்சியை ஆன் செய்து, கரகரவென்று சத்தத்துடன் கருப்பு வெளுப்பில் புள்ளிகளால் நிறைந்திருக்கும் திரையைக் காட்டி “பார்த்தியா, இதுதான் சென்னை மெரினா பீச் மணல்” என்று மொக்கை ஜோக் சொல்லிக்கொண்டிருந்தார்.
அக்கம் பக்கத்துக் குழந்தைகளும் வந்து அந்த குட்டி ஹால் முழுக்க நிறைந்து அமர்ந்திருந்தோம். அத்தை பெரிய பாத்திரத்தில் வாழைக்காயை மெல்லிசாகச் சீவி, எண்ணெயில் பொரித்து, உப்பு மிளகாய்த்தூள் போட்டுப் பொரித்து எல்லோருக்கும் சின்னச் சின்னக் கிண்ணங்களில் சாப்பிடக் கொடுத்திருந்தார்கள்.
அன்று ஒரு கருப்பு வெள்ளை மராத்திப்படம்; எனக்கு அந்தப் படம் லேசாகத்தான் நினைவில் இருந்தது, ஏதோ இளம் சன்னியாசியின் படம் அது. அந்தச் சிறுவனும் அவன் தங்கையுமாகக் காடெல்லாம் அலைவார்கள். ஒரு சமயம் ஊரில் எங்குமே அவர்களுக்குச் சமைக்கப் பாத்திரமோ சாப்பாடோ கொடுக்க மறுப்பார்கள்.
பசித்தழுத தங்கைக்கு இளம் சன்னியாசி கனன்று சுடும் தன் முதுகையே அடுப்பாக்கிக் காட்டுவார். தங்கை அவரது முதுகில் தோசைக்கல் மாதிரி ஒவ்வொரு ரொட்டியாகச் சுட்டுச் சுட்டு எடுப்பாள்.

அந்தப் படத்தின் மற்ற காட்சிகள் எல்லாம் எனக்கு மறந்துவிட்டன. ஆனால் இந்த தோசைக்கல் முதுகு மட்டும் மனதில் அப்படியே பதிந்துவிட்டது.
ஆனால் இந்தத் தருண் நான் சொன்னதை நம்பவே இல்லை. துப்பாக்கி வைத்திருந்ததையெல்லாம் நம்பினவன், “..போடா! முதுகு தோசைக்கல்லாமா? அதுல ரொட்டி சுடுவாங்களாமா? யார்கிட்ட கதை விடுறே? இப்படியெல்லாம் ஒரு புராணக்கதை நான் எங்கேயுமே கேட்கலை” என்று ஒரேயடியாக மறுத்தான்.
நானும் என்ன என்னவோ கூகுளில் தேடியும் அப்படி ஒரு படத்தை என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. இவன் வேறு, “டேய் சும்மாதானே சொன்னே? உண்மையைச் சொல்லு” என்று வெறுப்பேற்றிக்கொண்டிருந்தான்.
’’..சத்தியமா அப்படி ஒரு படம் இருந்ததுடா, நான் டிவியில் பார்த்த முதல் படமே அதான் , எதுக்குடா பொய்சொல்லபோறேன் உன்கிட்ட..’’ என மீள மீளச் சொல்லி என் முகம் வாடிய பின்னர், அவன் “சரி இரு, நான் தேடுறேன்” என்று ஜெமினையிடம், பல விதங்களில் கேட்டு, ஒருவழியாக அது 1940-ல் வெளியான 35 எம் எம் கறுப்பு வெள்ளை மராத்திப் படமான ‘Sant Dhyaneshwar’ என்பதையும், அதன் யூடியூப் லிங்க் எடுத்தும் அந்த முதுகு தோசைக்கல்லில் ரொட்டி சுடப்படுவதையும் பார்த்துவிட்டான்.
அந்த இளம் சன்னியாசி அவரது யோக வலிமையின் வெப்பத்தினால் முதுகைச் சூடு பண்ணி இருக்கிறார் என்பது இப்போது தெரிந்தது. நல்லவேளையாக படம் யூடியூபில் இருந்தது; இல்லாவிட்டால் நான் பொய் சொன்னேன் என்று நினைத்திருப்பான்
திரைப்பட இணைப்பு: https://www.youtube.com/watch?v=HPqQydBYwz8 (Zee Music Marathi)
காட்சியின் தனி இணைப்பு: https://www.youtube.com/watch?v=DWs9LI_LT_8
(தங்கை முக்தாபாய் ஞானேஸ்வரின் தகிக்கும் முதுகில் ரொட்டி சுடும் அந்த புகழ்பெற்ற காட்சி).
Leave a Reply