2004-ல் சரணும் தருணும் சிறுவர்கள். சரணுக்கு 3 வயது, தருணுக்கு 1 ½ வயது. அவர்களிடம் சொன்னாலும் புரியாத வயது என்பதால் கும்பகோணம் பள்ளி தீவிபத்தைப்பற்றி அவர்களிடம் சொல்லவில்லை.
கும்பகோணத்தில் ஸ்ரீ கிருஷ்ணா பிரைமரி, சரஸ்வதி நர்சரி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளும் ஒரே வளாகத்தில் நெரிசலான ஒரு கட்டிடத்தில் இயங்கின. சுமார் 900 குழந்தைகள் அங்கு படித்தனர்.
2004 ஜூலை 16 காலை 11 மணிவாக்கில் பள்ளியின் சமையலறையிலிருந்து பறந்த தீப்பொறி சமையலறையின் ஓலைக்கூரையிலிருந்து பள்ளியின் ஓலைக்கூரையில் பிடித்துக் காற்றில் மளவளவென்று பரவியது.
அன்று பள்ளிக்கு ஆய்வாளர் வருவதாக இருந்ததால் மாடியிலிருந்த ஆங்கில மீடியம் பிள்ளைகளையும் கீழ்த்தளத்தில் நெருக்கமாக அமரச்செய்து மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாகக் காண்பிக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். மாடியிலிருந்து இறங்க மிகக்குறுகலான ஒரே ஒரு படிக்கட்டும் பள்ளியிலிருந்து வெளியேற ஒரே ஒரு வாசலும் மட்டுமே இருந்தது. ஓலைக்கூரை எரிந்து சரிந்ததில் வகுப்பறைகளின் வாசல் முற்றிலும் மூடப்பட்டு, குழந்தைகள் தப்பிக்க வழியின்றி உள்ளே மாட்டிக்கொண்டு கருகி இறந்தனர். 10 வயதிற்கு உட்பட்ட 94 பிஞ்சுக் குழந்தைகள் ஆணா பெண்ணா என்று கூட கண்டுபிடிக்க முடியாமல் கருகிக்கட்டையாகக் கிடந்த அந்த காட்சி இன்னும் என் நெஞ்சில் அப்படியே இருக்கிறது.
மாடிப்படிகளில் பாதி இறங்கிய ஒரு குழந்தை, “அய்யோ பென்சில் டப்பாவை அங்கேயே வைத்துவிட்டேன், அது இல்லைன்னா அம்மா அடிப்பாங்க” என்று மீண்டும் ஓடிச்சென்று உள்ளே சிக்கி கருகிய சோகத்தையும் தாளவே முடியவில்லை. பேரண்டிங் குறித்த பெரும் கேள்வியை எழுப்பிய சம்பவம் அது.
நெருப்பு, சாவு, வெப்பம் எதுவும் அந்தப் பிஞ்சுகளுக்குத் தெரியவில்லை; பாதுகாப்பு பற்றியும் பெற்றோர் ஏதும் சொல்லித் தரவில்லை. பொருட்கள் பத்திரமாக இருக்க வேண்டும் என்று மட்டுமே கடுமையாகச் சொல்லித் தரப்பட்டிருக்கிறது. இன்றும் அப்படிப்பட்ட பெற்றோர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.
76 குழந்தைகள் அங்கேயே இறந்தார்கள்; 18 பேர் மருத்துவமனையில் தீக்காயங்களுடன் போராடித் தோற்று உயிர்விட்டார்கள். பிழைத்தவர்களில் பலருக்கு சரும மாற்று சிகிச்சை செய்து, கடும் மனச்சிக்கல்களுடன் இன்னும் வாழ்கிறார்கள்.
அன்று ஜெனிஃபர் ஆங்கில மீடியம் பள்ளியில் 4-ம் வகுப்பில் இருந்தாள். கீழ்த்தளத்தில் அமரவைக்கப்பட்டிருந்த அவள் அனுமதி பெற்று வெளியே இருந்த தண்ணீரை குடிக்கச் சென்றபோதுதான் தீ பரவியது. தீயைப்பார்த்ததும் உள்ளே வகுப்பில் இருந்த தன் தம்பியையும் இழுத்துக்கொண்டு வெளியே ஓடித்தப்பித்தாள் ஜெனிஃபர்.
தப்பிப் பிழைத்த குழந்தைகளுக்கு வேண்டியவற்றை அளித்து, உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தொடர்ந்து உதவிய அன்றைய ஆட்சியர் ராதாகிருஷ்ணன் மீது ஜெனிஃபருக்கு பெரும் அபிமானம் உண்டாகி இருக்கிறது, அந்தப் பிஞ்சு மனதில். ஆட்சியர் பணி குறித்த ஒரு கனவை அவர் விதைத்திருக்கிறார்.

வறுமையான குடும்பத்தைச்சேர்ந்த ஜெனிஃபர் இப்போது டிஎன்பிஎஸ்சி தேர்வில் வென்று, மாவட்டத்தில் 15 வது இடம்பெற்று, துணை மாவட்ட ஆட்சியராகப் பதவியேற்க இருக்கிறாள். ” எனது அதிகாரத்தில் முதலில் பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வேன்” என்கிறார். மானசீகமாக அவளது கைகளை இறுகப்பற்றிக் கொண்டேன். சமீபத்தில் தெரிந்துகொண்ட மிக மகிழ்ச்சியான செய்தி இதுதான்.
Leave a Reply