நிகோலாய் வாவிலோவ்  மேற்கு உக்ரைனின்  செர்னிவ்சி நகரின் கோதுமை வயல்களிலிருந்து முற்றிய தானியங்களை நண்பர்களுடன் சேகரித்துக்கொண்டிருந்தார்.  அது  1940- ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி.  

கருப்பு ஓக் மரக்கட்டைகளை அந்நகரின் கருப்புக்களிமண்ணில் பிசைந்து நிறுத்தி உருவாக்கிய கோட்டைகள் நிறைந்திருந்ததால் கருப்பு நகரம் என்றழைக்கப்பட்ட செர்னிவ்சி நகரம் அப்போதுதான் ரஷ்ய நிலப்பரப்புடன் இணைக்கப்பட்டிருந்தது. 

நிகோலாய் சோவியத் ரஷ்யாவின்  புகழ்பெற்ற வேளாண் மற்றும் தாவர மரபியல் விஞ்ஞானி. அவருடன் புகழ்பெற்ற ரஷ்யத் தாவரவியலாளர்,  வகைப்பாட்டியலாளர் மற்றும் உருளைக்கிழங்குப்பயிர் வல்லுனரான  செர்கே (sergéi yuzepchuk), சாகுபடி செய்யப்படும் உணவுப்பயிர்களில் ஏராளமான  ஆய்வுகளைச் செய்துகொண்டிருந்த  ரஷ்யத் தாவரவியலாளர் பெக்த்ரிவ் (F.Kh. Bakhteev) மற்றும்  பயிர்ப்பெருக்க விஞ்ஞானியான கமிரெஸ் (A.Y.Kameraz) ஆகியோரும் தானியவிதைச் சேகரிப்பிலும் அங்கே விளைந்திருந்த உணவுப்பயிர்களை ஆவணப்படுத்துவதிலும் ஈடுபட்டிருந்தார்கள்.

பின்மதிய நேரத்தில் அவர்கள் அனைவரும் தானிய வயலின் நடுவில் இருக்கையில் தூரத்தில் ரஷ்ய ரகசியக் காவல்துறையினரின் “Black Maria”  என்னும் பெரிய காவல் ரோந்து வண்டி வருவதைப் பார்த்தார்கள். அந்த வண்டி ஏன் அங்கே வருகிறது என்று அவர்கள் அதிர்ந்து பார்த்துக் கொண்டிருக்கையிலேயே நேராக கோதுமைப்பயிர்களை நசுக்கி அழித்தபடி அந்த வண்டி அவர்களருகிலேயே வந்து நின்றது. 

ரஷ்யா முழுக்கவே NKVD  எனப்பட்ட ரஷ்ய ரகசிய காவல்துறையினரின் அடக்குமுறைக்குட்பட்டிருந்த ஸ்டாலின் ஆட்சிக்காலமது. அந்த  “Black Maria” வண்டி எந்த வீட்டின் முன்பு நின்றாலும் அந்த வீட்டினர் காணாமல் போவார்கள் அல்லது மற்றவர்கள் கண்முன்பாகவே சுட்டுக்கொல்லப்படுவார்கள் என்பதை அனைவருமே அறிந்திருந்தார்கள்.

வண்டியிலிருந்து சீருடை அணிந்திருக்காத நான்கு காவலர்கள் இறங்கி நிகோலாயின் அருகில் வந்து மிக அவசரமாக  விவசாய ஆராய்ச்சி குறித்த சந்திப்பொன்றிற்காக அவர் மாஸ்கோவிற்கு அழைக்கப்பட்டிருக்கிறார் எனவே உடனே புறப்பட வேண்டும் என்றார்கள்.

அவர்களிடம் ரஷ்ய வரலாற்றில், ஏன் உலக வரலாற்றிலேயே மிகக் கொடூரமான ராணுவ விசாரணைகளுக்குப் பெயர் பெற்றிருந்த NKVD  யின் துணைத்தலைவரான லெவ் ஷ்வார்ட்ஸ்மன்  (Lev Shvartzman) கொடுத்தனுப்பிய எண்-529 எனக் குறிப்பிடப்பட்ட  கைது ஆணை இருந்ததை அறியாத நிகோலாய், திகைத்து நின்றிருந்த நண்பர்களிடம்  விதைகள் சேகரித்து வைத்திருந்த பைகளைக் கொடுத்துவிட்டு சிறிது நாட்களில் திரும்பி வருவதாகக்கூறி திரும்பவே திரும்பாத பயணத்துக்காகக்  காரில் ஏறிச்சென்றார்.  

உக்ரைனிலிருந்து ஏறக்குறைய 1200 கி மீ  தொலைவை காரிலேயே கடந்த வாவிலோவ் நேராக மாஸ்கோவின்  லுபையாங்கா எனப்படும் (Lubyanka) அரசியல் கைதிகளுக்கான  கொடுஞ்சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு  அவரது பெல்ட், ஷூ லேஸ் உள்பட அனைத்தும் உருவப்பட்டு  நிர்வாணமாக்கப்பட்டு புகைப்படமெடுத்து கைதி உடை அளிக்கப்பட்டது.  

அரசுக்கெதிராக சதித்திட்டம் தீட்டியதற்காக அவரை கைது செய்திருப்பதாக அவரிடம் அப்போது தெரிவித்தார்கள். அங்கிருந்து ரஷ்யாவின் மிகக்கொடூரமான தண்டனைகள் அளிக்கப்படும்,  1771-லிருந்தே வன்முறைகளுக்குப்பெயர் போன சிறையான புடிர்க்கா (Butyrka) சிறைக்கு நிகோலாய் கொண்டு செல்லப்பட்டு  ஷ்வார்ட்ஸ்மேனால் 11 மாதங்கள் கடும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். சுமார் 400 கடுமையான விசாரணைகள் அவரிடம் நடத்தப்பட்டன. ஒவ்வொரு விசாரணையும் இரவில் தொடங்கி மறுநாள் பகல் வரை 13 மணிநேரம் நீண்டது விசாரிக்கும் காவலர்கள் இடைவெளியின்றி முறை வைத்துக்கொண்டு ஓய்வின்றி கொடுமை செய்து விசாரிக்கும் மாரத்தான் முறை அங்கு வழக்கமாகப் பின்பற்றப்பட்டது. 

இரவு முழுக்க உறக்கமில்லாமல் சித்திரவதை அனுபவித்து பகலில் 25 பேர் மட்டுமே இருக்க முடியும் இடத்தில் 100 கைதிகள் இருக்கும் அறைக்கு கொண்டு வரப்படும் அவர் எந்தக்காரணம் கொண்டும் உறங்காமலிருக்க மிகப்பிரகாசமான வெளிச்சம் அறையில் எப்போதும் பாய்ச்சப்பட்டது. அப்படியும் கண் அயர்ந்தால் சிறைக்கதவின் கம்பிகளில் கடும் ஓசை எழுப்பப்படும்.

மிக மிகக் குறைவான உணவு, கடும் சித்திரவதை, உறக்கமின்மை மற்றும் மன உளைச்சலை உண்டாக்கி செய்யாதவற்றை செய்ததாக ஒப்புக்கொள்ளச் செய்யப்படும் அந்த தண்டனைகளில் பெரும்பாலானோர் தாங்கள் சதித்திட்டம் தீட்டியதாக ஒத்துக்கொள்வார்கள். ஆனல் நிகோலாய் அப்படி ஒத்துக்கொள்ளவில்லை எனவே மேலும் மேலும் சித்திரவதைக்கு உள்ளானார். 

பிரிடிஷ் உளவாளியாக இருந்தாகவும் சோவியத் ஒன்றியத்தின் வேளாண்மையை அழிக்க சதித்திட்டம் தீட்டியதாகவும் ஒத்துக்கொள்வதாக அவரை பலவந்தப்படுத்திக் கையெழுத்து வாங்கப்பட்டது. பின்னர் அவரை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதாகச்சொல்லி புடிர்க்கா கட்டிடத்தின் உள்ளேயே இருந்த ஒரு சிறிய அறையில்   ஜூலை 9, 1941 அன்று அவரது குற்றங்கள் பட்டியலிடப்பட்டு நிகோலாய்க்கு சுட்டுக்கொல்லப்பட்டு உயிரிழக்க வேண்டும் என  மரணதண்டனை விதிக்கப்பட்டது. 

நிகோலாய் மரணதண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் நிலவறைக்கு மாற்றப்பட்டார். அங்கே கற்பாறைகளாலான சுவர்களில் ஈரம் கசிந்து, கடும் குளிர் நிலவும். படுக்கவும் போர்த்திக்கொள்ளவும் எந்த வசதியும் இருக்காது. இரவில் ஒவ்வொரு கைதியாக சுட்டுக் கொல்லப்படுவதற்காக அழைத்துச்செல்லப்படுகையில் நிகோலாயும் அடுத்து தன்னையும் அழைக்கப் போகிறார்கள்  என்று ஒவ்வொரு இரவிலும் காத்திருந்தார். 

1941, அக்டோபரில் நாஜி ஜெர்மன் படைகள் மாஸ்கோவை நெருங்கியபோது சோவியத் ஒன்றிய அரசு திகிலடைந்து நிகோலாய் உள்ளிட்ட  மிக முக்கியமான அரசியல் குற்றவாளிகளை அங்கிருந்து வால்கா நதிக்கு கிழக்கில் வெகுதூரத்தில் இருந்த சரடோவ் சிறைக்கு மாற்றியது. சரடோவ் சிறையில் நிகோலாய் 1-ம் எண் அறையில் அடைக்கப்பட்டார். அங்கு  ஜூன் 1942 வரை மரணதண்டனைக் கைதிகளுக்கான அறையில் இருந்தார். 

அங்கு 18 மாதங்கள் அவருக்கு மிகக்கொடூரமான தண்டனைகள் அளிக்கப்பட்டன. மிகுந்த நெரிசலான அறையில் ஒருக்களித்துப் படுக்க மட்டும் இடம் இருந்த, எப்போதும் பிரகாசமான வெளிச்சம் நிறைந்திருந்த அறையில் இருந்தார் நிகோலாய். அறைவாசிகள் அனைவருக்கும் மலம் கழிக்க சில வாளிகளே இருந்ததால்  ஜன்னல்கள் இல்லாத அறையில் கடும் துர்நாற்றமும், டைபஸ் தொற்றும் நிமோனியாவும் பரவியது.  

அனைவருக்குமே மிகமிகக்குறைவான உணவு கொடுக்கப்பட்டது சரடொவ் சிறையின் கொலை ஆயுதம் பட்டினிதான். எனவே  கைதிகள் பலநாட்கள் பட்டினியில் இருந்தார்கள். நிகோலாய்க்கு உறைந்த முட்டைக்கோஸ் சீவல்கள் சில, வேகவைக்காத உலர் மாவு மற்றும் நீர்த்துப்போன, அழுகிய தக்காளியில் தயாரிக்கபட்ட சூப் ஆகியவை எப்போதாவது கொடுக்கப்பட்டது 

அந்த அறையிலும் தனது மூளை மரத்துப்போகாமல் இருக்க சககைதிகளுக்கு சுவற்றில் கைக்கு கிடைத்தவற்றைக் கொண்டு எழுதி வேளாண்மை மற்றும் தாவரவியலை நிகோலாய் கற்றுக்கொடுத்தார்.

பின்னர் வெளியில் இருந்து அவரது தம்பியினால் கொடுக்கப்பட்ட பெரும் அழுத்தத்தினால் நிகோலாயின் மரணதண்டனை 20 வருட கடுங்காவல் தண்டனையாக குறைக்கப்பட்டு, உடலும் மனமும் மிகத்தளர்ந்து, ஸ்கர்வி உள்ளிட்ட பல நோய்களுடன் அவதிப்பட்டுக்கொண்டிருந்த  எலும்புகூடாகியிருந்த நிகோலாய் லேபர் கேம்ப் சிறைக்கு மாற்றப்பட்டார்.  

இது எதுவுமே அறியாத லண்டன் ராயல் சொஸைட்டி நிகோலாய்க்கு அயல்நாட்டு உறுப்பினர் என்னும் மிக உயரிய விருதை அளித்துபோதுதான் வெளி உலகிற்கு அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருப்பது தெரிய வந்தது. நிகோலாயின் கைதை எதிர்த்து,உலகெங்கிலும் இருந்து பல விஞ்ஞானிகள் சோவியத் ஒன்றிய அரசுக்கு கண்டனக்கடிதங்களை தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருந்தார்கள்

என்ன செய்தார் நிகோலாய் அத்தனை சித்திரவதைகளுக்கும் மரணதண்டனை அளிக்கப்படுவதற்கும்?

நிகோலாய் ரஷ்ய மக்களின் பட்டினியைப்போக்கவும் பசியில்லா உலகமொன்றை உருவாக்கவும்  முனைந்தார். அரும்பாடுபட்டு ஐந்து கண்டங்களுக்கும் பயணம் செய்து உணவுப்பயிர்களின் விதைகளைச் சேமித்து விதை வங்கியை உருவாக்கினார். பஞ்சத்தையும் பசியையும் போக்க உழைத்த தாவரவியலாளரான அவருக்குத்தான் மரணதண்டனை விதிக்கப்பட்டது.

சோவியத் யூனியனில் நிகோலாய் தாவரமரபியலாளராக பயிர்ப் பெருக்கவியலாளராக ஏராளமான முன்னெடுப்புக்களை மேற்கொண்டார். தாவரவியல் வரலாற்றில் இவரே பலவகையான உணவுப்பயிர்களைப் பாதுகாப்பதிலும் விதை சேகரிப்பிலும் பெரும் பங்காற்றியவர். தாவரவியல் துறை என்பதின் பொருளை உணவுத்தாவரங்களின் பயன்பாட்டின் அடிப்படையில்  விரிவாக்கியவரும் இவரே. தீராப்பயணியான இவர் ஐந்து கண்டங்களுக்கும் பயணித்து 64 நாடுகளில் உணவுத்தாவரங்களை ஆவணப்படுத்தி விதைகளைச் சேகரித்து விவசாயிகளை நேரில்  சந்தித்து உரையாடினார். உலகின் மிக முக்கியமான மரபணு   வங்கியையும் (Gene Bank) இவரே முதன் முதலில் உருவாக்கினார்.

உணவுத் தாவரங்களில் தான் மேற்கொண்ட விரிவான ஆய்வுகளின் அடிப்படையில் நிகோலாய் வாவிலோவ்  முதன் முதலாக ஒரு குறிப்பிட பயிர் எங்கே தோன்றியது அலல்து எங்கே சாகுபடி செய்யப்பட்டது என்று எட்டு உலகளாவிய  பயிர் உற்பத்தி மையங்களை வகைப்படுத்தினார்.(Centers of Crop Origin).

அவை: 

  •  தெற்கு ஆசிய மையம்: இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளை உள்ளடக்கியது. இங்கு நெல், கரும்பு, மாம்பழம், எள், கத்தரிக்காய் மற்றும் எலுமிச்சை வகைகள் தோன்றின.
  • சீன மையம்: இது மிகப்பெரிய மற்றும் பழமையான மையமாகும். சோயா பீன்ஸ், முள்ளங்கி, பேரிக்காய் மற்றும் பிளம்ஸ் போன்றவை இங்கிருந்து பரவின.
  • மத்திய ஆசிய மையம்: வடமேற்கு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகள் இதில் அடங்கும். கோதுமை, வெங்காயம், பூண்டு, பட்டாணி மற்றும் பாதாம் ஆகியவற்றின் பிறப்பிடம் இது.
  • அண்மை கிழக்கு மையம்: ஆசியா மைனர் மற்றும் ஈரான் பகுதிகள். பார்லி, ஓட்ஸ், திராட்சை, ஆப்பிள் மற்றும் பல பருப்பு வகைகள் இங்கு உருவாயின.
  • மத்திய தரைக்கடல் மையம்: ஐரோப்பாவின் தெற்குப் பகுதி. கடுகு, பீட்ரூட், முட்டைக்கோஸ், அஸ்பாரகஸ் மற்றும் ஆலிவ் போன்றவை இங்கிருந்து வந்தவை.
  • அபிசீனிய மையம்: தற்போதைய எத்தியோப்பியா மற்றும் எரித்திரியா பகுதிகள். காபி, சோளம், பார்லி மற்றும் ஆமணக்கு ஆகியவற்றின் தோற்ற மையமாகும்.
  • மத்திய அமெரிக்க மையம்: மெக்ஸிகோ மற்றும் கரீபியன் தீவுகள். மக்காச்சோளம், பருத்தி, கோகோ மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவை இங்கு முதன்முதலில் பயிரிடப்பட்டன.
  • தென் அமெரிக்க மையம்: பெரு மற்றும் பிரேசில் பகுதிகள். உருளைக்கிழங்கு, தக்காளி, புகையிலை, அன்னாசி மற்றும் ரப்பர் மரங்கள் இங்கிருந்து உலகம் முழுவதும் பரவின.

இதன் அடிப்படையில் ஒரு பயிர் எங்கு தோன்றியதோ, அங்குதான் அந்தப் பயிரின் காட்டு  மூதாதைகளும் (Wild varieties) அதிக மரபணு மாற்றங்களும் காணப்படும் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. பூச்சிகள் மற்றும் நோய்களைத் தாங்கும் திறன் கொண்ட புதிய ரகங்களை உருவாக்க இந்த மையங்களில் உள்ள காட்டு மூதாதை ரகங்கள்தான் இன்று வரை பயன்படுகின்றன. இந்த மையங்களினால் தான் அழிந்து வரும் பாரம்பரியப் பயிர் வகைகளும் அடையாளம் கண்டு பாதுகாக்கப்படுகின்றன.

நிகோலாய் காட்டு மூதாதைகளுடன், சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை கலப்பினம் செய்து புதிய, அதிக நோய் எதிர்ப்பு திறன் கொண்ட, அதிக விளைச்சல் கொடுக்கும்   பயிர் வகைகளை உருவாக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார்.

நிகோலாய் இவானோவிச் வாவிலோவ் 1887-ல் நவம்பர் 25 அன்று மாஸ்கோவின் புகழ்பெற்ற ஜவுளி வணிக குடும்பத்தில் பிறந்தார். குடும்பத்தின் 7 குழந்தைகளில் ஒருவரான இவருக்கு செர்ஜி ,என்னும் இளைய சகோதரர் இருந்தார். புகழ் பெற்ற இயற்பியலாளரான இவர் ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் சோவியத் ஒன்றியத்தின் அறிவியல் அகாதமியின் தலைவராக இருந்தார். பிற்பாடு நிகோலாயின் மரணதண்டனையை கடுங்காவல் தண்டனையாக குறைக்கும் அளவுக்கு செல்வாக்கான பதவியில் இருந்தார்.

மிக இளம் வயதிலிருந்தே தாவரங்கள்  மீது ஈடுபாடு கொண்டிருந்த நிகோலாய். பல உலர் தாவரங்களைப் பாதுகாத்து வைத்திருந்தார். மாஸ்கோ விவசாயக் கல்வி நிறுவனத்தில் இளங்கலை படிப்பில் தாவர நோயியலும், இயங்கியலும் கற்றார். நத்தைகளால் உண்டாகும் தாவர நோய்களில் பல ஆய்வுகளைச் செய்தார்

முதுகலைப் படிப்பை பிரபல மண் விஞ்ஞானியான டிமிட்ரியிடம் (Dmitri Prianishnikov)  சேர்ந்து பயின்றார். 1911-லிருந்தே  நோயெதிர்ப்புக் கொண்டிருக்கும் விதைகளை சிறிய அளவில் சேகரிப்பதை வழக்கமாகக் கொண்ட நிகோலாய் இங்கிலாந்தில் 2 வருட படிப்பில் இருக்கையில்தான் ஜெனிடிக்ஸ் என்னும் சொல்லை உருவாக்கிய வில்லியம் பேட்சனுடன் (William Bateson) இணைந்து தாவர மரபியலில் பணியாற்றினார். தாவர மரபியல் துறையை தோற்றுவித்தவரான மெண்டலின் கோட்பாடுகளை பெரிதும் மதித்து பின்பற்றியவர்  பேட்சன்.

ரஷ்யப் புரட்சி நடந்த 1917-களில் நிகோலாய் ரஷ்யாவில் தாவர மரபணு வளங்களைச் சேகரித்து ஆராய்ச்சி செய்வதற்காக நிறுவப்பட்ட மிக முக்கியமான அமைப்பான பயன்பாட்டுத் தாவரவியல் பணியகத்தின் (Bureau for Applied Botany) துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.  அவரது தலைமையின் கீழ்  அந்நிறுவனம் உலகப்புகழ் பெற்றது. (தற்போது  N.I. Vavilov Institute of Plant Genetic Resources (VIR))

புரட்சி அமைப்பின் தலைவரான லெனின் கட்டளையால் சோவியத் ஒன்றியம் தாவர மரபியலில் உலகின் முன்னணியில்  இருக்க வேண்டும் என்பதற்காக நிகோலாய்க்கு கூடுதல் பொறுப்புகள் அளிக்கப்பட்டு அவர் ஏராளமான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார். 1924-ல் லெனினின் மறைவுக்குப் பிறகு  ஏறக்குறைய 20000 பணியாளர்களுடன் நாடெங்கிலும் நூற்றுக்கணக்கில் தாவர ஆய்வு மையங்களை  நிறுவி அவை  வெற்றிகரமாக  செயல்படுவதை நிகோலாய் உறுதிசெய்தார். 

நிகோலாயின் புகழ்பெற்ற விதைத் தேடல் பயணம் 1916-ல் வடக்கு ஈரனில் தொடங்கியது. அங்கிருந்து அவர் தாயகம் திரும்பியபோது அதுவரை ரஷ்யா அறிந்தே இருக்காத பல புதிய வகை கோதுமை மற்றும் புல்லரிசி விதைகளைக் கொண்டு வந்தார். பின்னர் அவர் தொடர்ந்து 1933 வரை அமெரிக்கா, சீனா, லத்தீன் அமெரிக்கா, மத்தியதரைக் கடல்நாடுகள் மற்றும் எதியோப்பியாவுக்கு விதைத் தேடல் பயணங்களை மேற்கொண்டார். 

நிகோலாய் அவரது தலைமையின் கீழ் அந்த நிறுவனம் இருக்கையில்   உலகின் முக்கிய உணவுப் பயிர்களின்  250,000  விதை மாதிரிகளைச் சேகரித்துச் சேமித்து வைத்து உலகையே வியப்பில் ஆழ்த்தினார். அந்தச் சேமிப்புக் கிடங்கில்தான் இரண்டாம் உலகப்போரின்போது 900 நாட்கள் கடும் போராட்டம்  நடந்து அவ்விதைகளைக் காப்பாற்ற பல தாவரவியலாளர்கள் பட்டினியில் உயிரிழந்தார்கள்.(https://logamadevi.in/3914)

1920-களின் இறுதி மற்றும் 1930-களின் தொடக்கத்தில் தனிநபர்களிடமிருந்த நிலங்களைப் பறித்து, அவற்றை அரசுக்குச் சொந்தமான பெரிய கூட்டுப்பண்ணைகளாக மாற்றும் கட்டாயக் கூட்டுப்பண்ணை என்னும்  தீவிரமான விவசாயக் கொள்கையை(Forced Collectivization)    ஸ்டாலின்  நடைமுறைப் படுத்தி , “ஐந்து கதிர்கள் சட்டம்” (Law of Five Ears of Grain)  என்பதைக் கொண்டு வந்தார். இதன்படி, ஒரு விவசாயி தனது சொந்தப் பண்ணையில் உதிர்ந்து கிடக்கும் ஐந்து தானியக் கதிர்களை எடுத்தால் கூட அவருக்கு மரண தண்டனை அல்லது 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இதை வசதியான விவசாயிகள் எதிர்த்தனர். ஆனால் அவர்கள் அதற்கு ஒத்துழைக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்ட போது   தானியங்களை அரசிடம் கொடுக்க விரும்பாமல் அவர்களே பயிர்களை அழித்து கால்நடைகளைக் கொன்றனர். 

இதனால் 1932-33 களில் கடும் பஞ்சம் ஏற்பட்டு, சுமார் 50 லிருந்து 80 லட்சம் மக்கள் உயிரிழந்தனர். உக்ரைனில் இதனால் ஏற்பட்ட பஞ்சம் ஒரு இனப்படுகொலையாகவே கருதப்படுகிறது. அங்கு மட்டும் சுமார் 39 லட்சம்  மக்கள்  பட்டினியால் இறந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 

ரஷ்யா வேளாண் அறிவியலில் மாற்றங்களைச் செய்து விளைச்சலை அதிகரித்து பஞ்சத்தைப்போக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த அந்தச்சமயத்தில் தான் ஸ்டாலின் ட்ரோஃபிம் லைசென்கோ (Trofim Lysenko) என்னும் வேளாண் விஞ்ஞானியின் போலி அறிவியல் கருத்துகளை நம்பி பல தவறுகளைச் செய்தார். 

ட்ரோஃபிம் நிகோலாயின் மீதிருந்த துறைசார்ந்த காழ்ப்பினால் மரபியல் பண்புகள் வழிவழியாக கடத்தப்படுகின்றன என்று மெண்டல், நிகோலாய் மற்றும் அனைத்து உலக மரபியலளர்களும் சொல்வது முழுக்கப் பொய் என்று ஸ்டாலினிடம் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருந்தார். அதை ஸ்டாலினும் நம்பினார். பல மொழிகளை  நிக்கோலாய் அறிந்திருந்ததால் அவர் உளவாளியாக இருக்கலாம் என்னும் சந்தேக விதையையும் ஸ்டாலின் மனதில் ட்ரோஃபிம் விதைத்தார்,

இந்தப் பஞ்சத்தின் போது, பயிர்களின் மகசூலை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்று ஸ்டாலின் விஞ்ஞானிகளை வற்புறுத்தினார். நிகோலாய்”புதிய ரகங்களை உருவாக்க பல ஆண்டுகள் முறையான ஆராய்ச்சி தேவை” என்று அறிவியல் பூர்வமாக கூறி, பஞ்சத்தை போக்க முழுவீச்சில் முனைந்தார்.

ஆனால் லிசென்கோ பயிர்கள் நாம் சொல்வதைக் கேட்கும், விளைச்சலை அதிகரிக்கும்படி அவைகளிடம் சொல்லி  “சில வாரங்களில் மாற்றத்தைக் கொண்டு வரலாம்” என்று ஸ்டாலினுக்குப் பொய் வாக்குறுதி அளித்தார்.

“விதைகளுக்குப் பயிற்சி அளித்தல்” என்பதுதான் லிசென்கோவின் மிகப்பெரிய பொய். குளிர்காலக் கோதுமை விதைகளை ஐஸ்கட்டிகள் மிதக்கும் தண்ணீரில் நனைத்து வைப்பதன் மூலம், அவற்றை வசந்த காலத்தில் விளையச் செய்ய முடியும் என்று  லிசென்கோ கூறினார். பயிர்களின் பண்புகளைச் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றினால், அந்தப் பண்புகள் அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படும் என்றார் லிசென்கோ.

இது மரபியல் விதிகளுக்கு எதிரானது. இதனால் கோடிக்கணக்கான விதைகள் அழுகிப்போய் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

அத்தோடில்லாமல் லிசென்கோ “செடிகள் தங்களுக்குள் சண்டையிடாது” என்னும் ஒரு விசித்திரமான தத்துவத்தை முன்வைத்தார். ஒரே வகைச் செடிகளை மிக நெருக்கமாக நட்டால், அவை இடத்திற்காகவோ உணவிற்காகவோ சண்டையிடாது, மாறாக ஒன்றுக்கொன்று ஒத்துழைக்கும் என்று கூறினார். இதன் விளைவால் மிகவும் நெருக்கமாக நடப்பட்டு, சத்துப் பற்றாக்குறை ஏற்பட்டு பயிர்கள் அனைத்தும் கருகின.

நிகோலாய் போன்ற விஞ்ஞானிகள் ஒரு புதிய பயிர் ரகத்தை உருவாக்க 10 முதல் 12 ஆண்டுகள் ஆகும் என்று கூறினர். ஆனால் லிசென்கோ “தன்னால் வெறும் 2 அல்லது 3 ஆண்டுகளில் புரட்சிகரமான விளைச்சலைத் தர முடியும்” என்று ஸ்டாலினிடம் உறுதி அளித்தார்.

மேலும் மரபணுக்கள் (Genes) என்ற ஒன்று கிடையாது என்றும், குரோமோசோம்கள் பற்றிய ஆய்வுகள் தேவையற்றவை என்றும் வாதிட்டார்.”சரியான சூழ்நிலையை வழங்கினால், ஒரு கோதுமைச் செடியை பார்லியாக மாற்ற முடியும்” என்று கூட நம்ப முடியாத பொய்களைக் கூறினார்.

இந்தக் காலகட்டத்தில்தான் நிக்கோலாய் வாபிலோவ் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டார். விவசாய உற்பத்தி குறைந்ததற்கு வாவிலோவின் அறிவியல் முறைகள்தான் காரணம் என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

“மரபணுக்கள் என்று கண்ணுக்குத் தெரியாத ஒன்று இருக்க முடியாது; அது ஒரு கற்பனை” என்று லிசென்கோ வாதிட்டார். எனவே மெண்டலின் விதிகளைப் போதித்த பேராசிரியர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். மரபியல் தொடர்பான நூல்கள் நூலகங்களில் இருந்து நீக்கப்பட்டு, பல இடங்களில் எரிக்கப்பட்டன. மரபியல் ஆய்வு செய்த விஞ்ஞானிகள் “மெண்டலிஸ்ட்-வாவிலோவிஸ்ட்” என்று அழைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சார்லஸ் டார்வினின் “இயற்கைத் தேர்வு”  கொள்கையையும் லிசென்கோ ஏற்கவில்லை. டார்வின் சொன்னது போல உயிரினங்களுக்கு இடையே போட்டி இருக்கும் என்பதை லிசென்கோ மறுத்தார். “ஒரே இனத்தைச் சேர்ந்த செடிகள் தங்களுக்குள் போட்டியிடாது, அவை கம்யூனிசக் கொள்கைப்படி ஒத்துழைக்கும்” என்று ஒரு விசித்திரமான வாதத்தை ஸ்டாலினுக்கு பிடிக்கும்படி முன்வைத்தார்.

எனவே மெண்டல் மற்றும் மார்கன் (T.H. Morgan) போன்ற உலகப் புகழ்பெற்ற மரபியல் அறிஞர்களின் புத்தகங்கள் சோவியத் பல்கலைக்கழகங்களில் தடை செய்யப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. வாவிலோவ் உட்பட சுமார் 3,000-க்கும் மேற்பட்ட உயிரியல் விஞ்ஞானிகள் சிறையிலிடப்பட்டனர், நாடு கடத்தப்பட்டனர் அல்லது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஸ்டாலினுக்கு கம்யூனிச சித்தாந்தத்தின் மீது இருந்த அதீத பிடிவாதமும்”இயற்கையை மனிதன் நினைத்தபடி மாற்ற முடியும்” என்ற அவரது எண்ணத்திற்கும் லிசென்கோவின் பொய்கள் சாதகமாக இருந்தன.  லிசென்கோ சொன்ன எந்த ஒரு முறையும் நிலத்தில் பலன் தரவில்லை. சோவியத் யூனியனின் தானிய உற்பத்தி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. 

லிசென்கோவின் பொய்களை நம்பி ரஷ்யா தனது பாரம்பரிய விதை வங்கிகளை இழந்தது. 1960-களின் பிற்பகுதி வரை ரஷ்யாவின் விவசாயம் மீள முடியாத பாதிப்பைச் சந்தித்தது. இச்சமயத்தில்தான் உக்ரைனில் இருந்த நிகோலாய் பிரிடிஷ் உளவாளி என கருதப்பட்டு கைது செய்யப்பட்டார்.

ஸ்டாலினின் பார்வையில், லிசென்கோ ஒரு “பாட்டாளி வர்க்க விஞ்ஞானி”. ஆனால் வாவிலோவ்  ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தவர் மற்றும் வெளிநாடுகளில் கல்வி கற்றவர். இதனைப் பயன்படுத்திய லிசென்கோ, வாவிலோவை “மேற்கத்திய நாடுகளின் உளவாளி” என்று ஸ்டாலினிடம் போட்டுக் கொடுத்தார்.1930-களின் இறுதியில் நடந்த அறிவியல் மாநாடுகளில், வாவிலோவ் லிசென்கோவின் கருத்துக்களை ஆதாரங்களுடன் மறுத்தார். “நாங்கள் சிதை நெருப்பில் வேண்டுமானால் இறங்குவோம், ஆனால் எங்கள் அறிவியல் உண்மைகளை மாற்றிக்கொள்ள மாட்டோம்” என்று  துணிச்சலாகக் கூறினார்.

அவர் மீது பிரிட்டிஷ் உளவு நிறுவனத்திற்குத் தகவல் கொடுத்ததாகவும், சோவியத் விவசாயத்தைச் சீரழித்ததாகவும் பொய்க் குற்றச்சாட்டுகளை  லிசன்கோ சுமத்தினார். இறுதியில், 1943-ல் சரடோவ் சிறையில் பட்டினியால் வாவிலோ  உயிரிழந்தார்.

வாவிலோவின் குடும்பமும் பல ஆண்டுகள் இருட்டில் வைக்கப்பட்டிருந்தது. 1943-ல் வாவிலோவ்  இறந்த செய்திகூட அவர்களுக்குச்   சொல்லப்படவில்லை. அவர்கள் வாவிலோவ்  ஒரு “சிறப்பு முகாமில்” கடிதத் தொடர்பு இல்லாமல் அடைக்கப்பட்டிருப்பதாகவே நம்ப வைக்கப்பட்டனர். 1950-களுக்குப் பிறகுதான், அவர் பட்டினியால் இறந்தார் என்ற கொடூரமான உண்மை அவர்களுக்குத் தெரிய வந்தது.  

சகோதரனின் மரணத்தை அறியாத செர்ஜி 1945-ல் சோவியத் அறிவியல் அகாடமியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அதை ஏற்றுக்கொண்டார். அந்தப் பதவியை அவர் ஏற்றுக்கொண்டதற்குக் காரணமே, அதன் மூலம் கிடைக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி அண்ணனைத் தேடலாம் அல்லது காப்பாற்றலாம் என்ற நம்பிக்கையில்தான்.

ஸ்டாலினின் அரசாங்கத்திடம் தனது அண்ணன் ஒரு தேசத்துரோகி அல்ல என்பதை விளக்கப் பல கடிதங்களை எழுதினார்.ஆனால் லிசன்கோ நிகோலாயின் மரணம் வெளியே தெரியாமல் தடுத்து அவர் தூரமான ஒரு இடத்தில் தனிமைச்சிறையில் இருப்பதாக பொய்களைப் பரப்பிக்கொண்டிருந்தார். நிகோலாயின் முதல் மனைவி, மகன், இரண்டாம் மனைவி, மகன் , மற்றும்  சகோதரனின் குடும்பம் முழுவீச்சில் அவரைக்குறித்து தகவல்களை தேடிக்கொண்டே இருந்தார்கள். சகோதரர் நிகோலாய் பட்டினியால் இறந்துவிட்டார் என்ற  உண்மையை கடைசிவரை அறியாமலேயே  செர்ஜி 1951-ல் இறந்துபோனார்.

நிகோலாயின் முதல் மனைவி எகடெரினா ஒரு விவசாயப் பொருளாதார நிபுணர். இவர்கள் 1912-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். ஆனால் நிகோலாய்  தனது ஆராய்ச்சிப் பணிகளுக்காகவும்,விதை சேகரிப்புப்  பயணங்களுக்காகவும் எப்போதும் வீட்டை விட்டு வெளியே இருந்ததால், இவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு 1926-ல் விவாகரத்து செய்துகொண்டனர்.

நிகோலாய் கைது செய்யப்பட்டபோது, எகடெரினாவும் பெரும் சிரமத்திற்குள்ளானார். பிரிந்து வாழ்ந்தாலும், நிகோலாயின் அறிவியல் முயற்சிகளின் மீதும் அவரது நேர்மையின் மீது அவர் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். நிகோலாயின் மறைவுக்குப் பிறகு, அவரது கௌரவத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளில் எகடெரினாவும் உறுதுணையாக இருந்தார். நிகோலாய் மற்றும் எகடெரினாவிற்கு 1918-ல் பிறந்தவர் ஒலெக். இவர் ஒரு மிகச்சிறந்த இயற்பியல் அறிஞர்.

தனது தந்தை கைது செய்யப்பட்டபோது ஒலெக் இளைஞராக இருந்தார். தந்தையின் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்பதை அவர் உறுதியாக நம்பினார். தந்தையைக்குறித்த தகவல்களைத்  தீவிரமாகத் தேடிக்கொண்டிருந்த  ஒலெக் 1946-ல் காகசஸ் மலைப்பகுதியில்  மலையேற்றத்தின் போது மர்மமாக உயிரிழந்தார். தனது தந்தையின் மரணம் குறித்த உண்மைகளை அவர் தோண்டத் தொடங்கியதாலும், ஸ்டாலினின் ரகசிய போலீசாருக்கு எதிராகக் கேள்விகள் கேட்டதாலும், அவர் திட்டமிட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று பல வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

இரண்டாம் மனைவி எலினா ஒரு திறமையான தாவரவியலாளர் மற்றும் வாபிலோவின் நீண்டகால ஆராய்ச்சி உதவியாளர். வாபிலோவ் கைது செய்யப்பட்டவுடன், எலினா  “மக்கள் எதிரியின் மனைவி” எனக் கருதப்பட்டு வேலையையும், சமூக அந்தஸ்தையும் இழந்தார். அரசாங்கம் நிகோலாயின் சொத்துக்களை முடக்கியதால், எலினா தனது மகனை வளர்க்க மிகவும் சிரமப்பட்டார்.   

நிகோலாய் கைது செய்யப்படும்போது அவரது மகன்  யூரி நிக்கோலாய் விச் வாவிலோவ் 12 வயதுச் சிறுவன். தனது தந்தை ஏன் அழைத்துச் செல்லப்பட்டார் என்று கூடத் தெரியாத நிலையில் அவர் வளர்ந்தார். ஆனாலும் யூரி தனது சித்தப்பா செர்ஜியின்  வழிகாட்டுதலில் ஒரு சிறந்த இயற்பியலாளராக வளர்ந்தார்.  

யூரி வாழ்நாள் முழுவதையும் தந்தையின் பெருமையை உலகிற்குச் சொல்லவும், தனது தந்தை ஒரு தேசத்துரோகி அல்ல என்பதை நிரூபிக்கவும், அவரது அறிவியல் சாதனைகளை ஆவணப்படுத்தவும் செலவழித்தார்.  ஸ்டாலின் மறைவுக்குப் பிறகு, யூரி ராணுவ ஆவணக் காப்பகங்களிலிருந்து தனது தந்தை தொடர்பான ரகசியக் கோப்புகளைத் தேடி எடுத்தார்.  அந்த ஆவணங்களில் இருந்தும் நிகோலாயுடன் சிறையில் இருந்தவர்களிடமிருந்தும்தான் உடலுறுப்புக்கள் பட்டினியால் செயலிழந்து நிமோனியா தொற்று உருவாகி  இதயம் நின்று மரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்த அவரது மரணச்சான்றிதழ் உள்ளிட்ட பல உண்மைகள் தெரிய வந்தன.  தனது தந்தையின் வாழ்க்கை வரலாறு, அவர் சந்தித்த சித்திரவதைகள் மற்றும் சிறையில் அவர் பட்டினியால் மறைந்தது குறித்த உண்மைகளை யூரி உலகிற்குச் சொன்னார்.

2018-ல் அவர் காலமாகும் வரை, வாபிலோவின் தியாகத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சென்றார். யூரி வாபிலோவ் 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது 90-வது வயதில் காலமாகும் வரை, தனது தந்தை உருவாக்கிய லெனின்கிராட் விதை வங்கியின் முக்கியத்துவத்தைப் பற்றியும், அறிவியலில் அரசியல் தலையீடு எவ்வளவு ஆபத்தானது என்பது பற்றியும் உலகெங்கும் விரிவுரையாற்றினார்.

ஸ்டாலினின் மரணத்திற்குப் பிறகுதான் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. 1953-ல் ஸ்டாலின் இறந்த பிறகு, சோவியத் யூனியனில் “டி-ஸ்டாலினேஷன்”  என்ற கொள்கை மாற்றத்தைக் கொண்டுவந்தார் நிகிதா குருக்ஷேவ், 1955-ல்  வாவிலோவ்  மீதான குற்றச்சாட்டுகளை ராணுவ நீதிமன்றம் மீண்டும் ஆய்வு செய்து, அவர் மீது சுமத்தப்பட்ட “உளவு பார்த்தல்” மற்றும் “சதி” போன்ற அனைத்துக் குற்றச்சாட்டுகளும் பொய்யாக உருவாக்கப்பட்டவை என்று  கூறியது.

1955-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நிக்கோலாய் வாவிலோ முழுமையாகக் குற்றமற்றவர் என்று அறிவிக்கப்பட்டு, அவரது கௌரவம் மீட்டெடுக்கப்பட்டது. அவர் நிறுவிய விதை சேகரிப்பு நிறுவனத்திற்கு ‘வாபிலோவ்  நிறுவனம்’ (Vavilov Institute) என்று பெயர் சூட்டப்பட்டது.   

ட்ரோஃபிம் லிசென்கோவினால் உருவாக்கப்பட்ட போலி அறிவியல் கொள்கை லிசென்கோயிசம் (Lysenkoism) எனப்படுகிறது. இது தாவர/வேளாண் அறிவியல் வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயமாகவே இன்று வரை குறிப்பிடபப்டுகிறது.  

லிசென்கோவின் முறைகளைப் பின்பற்றி பயிரிடப்பட்ட கோடிக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாழாயின. இது சோவியத் யூனியனில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்திற்கு காரணமாக அமைந்தது.

சுமார் 3,000-க்கும் மேற்பட்ட உண்மையான மரபியல் விஞ்ஞானிகள் சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர். நிக்கோலாய் வாவிலோவ்  இவர்களில் முக்கியமானவர்.

மெண்டல் மற்றும் டார்வினின் புத்தகங்கள் எரிக்கப்பட்டன. சோவியத் யூனியன் உயிரியல் துறையில் சுமார் 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றது. 

ஸ்டாலினுக்குப் பிறகு லிசென்கோவின் செல்வாக்கு குறையத் தொடங்கியது. 1964-ல் சோவியத் அறிவியல் அகாதெமி அவரது கொள்கைகளை அதிகாரப்பூர்வமாக நிராகரித்தது. இன்று, “லிசென்கோயிசம்” என்ற சொல் “அரசியல் காரணங்களுக்காக அறிவியலைத் தவறாகப் பயன்படுத்துவதைக்” குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

மற்ற உலக நாடுகளில் டி.என்.ஏ (DNA) கண்டுபிடிப்பிற்குப்பிறகு நவீன மரபியல் துறை அசுர வேகத்தில் வளர்ந்தது. சோவியத் விஞ்ஞானிகள் உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது தாங்கள் எவ்வளவு பின்தங்கியிருக்கிறோம் என்பதை உணர்ந்தனர்.  ஸ்டாலினுக்குப் பின் வந்த குருக்ஷேவ் தொடக்கத்தில் லிசென்கோவை ஆதரித்தாலும், இறுதியில் அவரது திட்டங்கள் தோல்வியடைந்ததால் அவரை ஓரங்கட்டினார். 1964-ல் லிசென்கோ தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

லிசென்கோ 1976-ல் இறக்கும் போது, ஒரு காலத்தில் அவர் கேலி செய்த “மரபியல்” (Genetics) சோவியத் யூனியனில் மீண்டும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. 

எங்கு புதைக்கப்பட்டார் என்று தெரிந்தால் அவரது கல்லறைக்கு மரியாதை செய்யப்படும் என்பதால் திட்டமிட்டு   கூட்டத்தோடு கூட்டமாய் புதைக்கப்பட்ட  நிகோலாய் வாவிலோவ் இன்று  ஒரு உலகளாவிய நாயகனாகக் கொண்டாடப்படுகிறார்; லிசென்கோ “அறிவியலுக்கு எதிரான அரசியலின்” அடையாளமாகப் பார்க்கப்படுகிறார்.

வாவிலோவ் பாதுகாத்த அந்த லெனின்கிராட் விதை வங்கி இன்று ரஷ்யாவில் ஒரு பொக்கிஷமாகப் பாதுகாக்கப்படுகிறது

உண்மையான அறிவியல் அறிஞரான நிகோலாய், உணவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு, இறுதியில் பசியால் சிறையில் இறந்தார்.போலி அறிவியலைப் பரப்பி லட்சக்கணக்கான மக்களின் பசிக்கும் இறப்பிற்கும் காரணமாக இருந்த லிசென்கோ தனது முதுமைக் காலம் வரை வசதியாக ஒரு மாதிரிப்பண்ணையில் அவர் நம்பிய போலிஅறிவியல் ஆய்வுகளைச்செய்துகொண்டு  இயற்கையாக இறந்தார்.

வேதகாமத்தில் “மண்ணில் விழுந்த கோதுமை மணி” என்னும் வரிகள் இருக்கிறது(. யோவான் 12-ம் அதிகாரம், 24-ம் வசனம்.)

“மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைத் தரும்.”

மண்ணில் விழுந்த கோதுமை மணி உவமைக்கு நிக்கோலாய் வாவிலோவை விடச் சிறந்த உதாரணம் அறிவியல் வரலாற்றில் வேறெங்கும் இருக்க முடியாது.  விதை சேகரிப்பில் ஈடுபட்டு பட்டினியில் மடிந்த, மண்ணில் விழுந்த ‘கோதுமை மணி’ யான நிகோலாய் இன்று உலகெங்கும் விளையும் ஒவ்வொரு கதிரிலும் வாழ்கிறார்!