நண்பர் `பனை காட்சன்` சென்ற வருடம் சாம் ஹிக்கின்பாதம் எழுதிய ‘’The Gospel and the Plow’’ என்னும் நூலைப் பரிந்துரைத்திருந்தார், அதை மொழியாக்கம் செய்யலாமென்னும் யோசனையையும் சொல்லியிருந்தார். இரண்டு நாட்களில் அதை வாங்கினேன். இப்போதுதான் படித்துமுடித்தேன்.
எனக்கு அதுநாள் வரை இந்தியாவுக்கு வந்த பிரிட்டிஷ் கப்பலில் பயணச்சீட்டு வாங்காமல் ஒளிந்திருந்து பயணித்து, கப்பல் கேப்டனால் கண்டுபிடிக்கபட்டு மெட்ராஸ் துறைமுகத்தில் கப்பல் நிற்கையில் கட்டாயமாக கப்பலிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆபெல் ஜோஷுவா ஹிக்கின்பாதமை மட்டும் தான் தெரியும், அவர்தான் பிரபல ஹிக்கின்பாதம் புத்தகக் கடையைத் தோற்றுவித்தவர்.
காட்சன் பரிந்துரைத்த இந்த புத்தகத்திலிருந்துதான் அற்புதமான அருட்பணியாளரான சாம் ஹிக்கின்பாதம் என்பவரையும் ஆங்கிலத்தில் plow, plough என்ற இரண்டு சொற்களும் கலப்பையைக் குறிக்கிறது என்பதையும் அறிந்துகொண்டேன்,
நற்செய்தியும் கலப்பையும் என்னும் இந்த நூலைத் தமிழில் கொண்டு வரலாம் என்றிருக்கிறேன். இந்தியவிவசாயத்தில் மிக முக்கியமான மாற்றங்களை உண்டாக்கியவர் சாம் ஹிக்கின்பாதம் என்பதை இந்நூலிலிருந்துதான் அறிந்துகொண்டேன். 200-க்கும் குறைவான பக்கங்களைக்கொண்ட சிறிய நூல், ஆனால் வாசித்து முடித்ததும் கலப்பையில் இறையைக்கண்ட அவரைக் குறித்த பெரும் பிரமிப்பையும் அவரது பங்களிப்பைக் குறித்து ஏதுமறியாமல் இருந்ததன் குற்றவுணர்வும் உண்டானது.

அமெரிக்க அருட்ப்பணியாளரான சாம் இந்திய நவீன விவசாயத்தின் முன்னோடியாக இருந்தவர். ஏழ்மையிலிருந்த இந்திய விவசாயிகளின் பசியைப் போக்குவதே இறைப்பணி என்று நம்பி தன்னை முழுமையாக அதில் ஈடுபடுத்திக்கொண்ட சாம் ஹிக்கின்பாதமின் தத்துவமென்பது ’’நற்செய்தியும் கலப்பையும்’’ என்பதுதான்.
பொதுவாக கிறிஸ்தவ அருட்ப்பணியாளர்கள் என்றாலே கையில் பைபிளுடன் வெள்ளைக்கோட் போட்டுக்கொண்டிருக்கும் ஒருவரின் சித்திரம் தான் மனதில் தோன்றும் ஆனால் அவர்களுடன் ஒரு தோல்பையில் ஏராளமான விதைகளும், கிழங்குகளும், மரப்பட்டைகளும் எப்போதும் இருந்தன. உலகெங்கும் அருட்ப்பணியோடு பல நூறு தாவரங்களையும் கொண்டு வந்து அறிமுகப்படுத்திய அருட்பணியாளர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். அவர்களைக் குறித்தும் அவர்களால் உலகெங்கும் பரவிய தாவரங்களைக் குறித்தும் நான் வாசித்துக்கொண்டே இருக்கிறேன். ஒரு நல்ல நூலைத் தமிழில் எழுதும் உத்தேசமும் இருக்கிறது.
குறிப்பாக உலகெங்கும் மதமாற்றப் பணிகளுக்கெனப் பயணித்த அருட்பணியாளர்கள், தேவாலயங்களில் அளிக்கப் படவேண்டிய வைனுக்காக பைபிள் மற்றும் சிலுவையுடன் கட்டாயமாகக் கொண்டு சென்ற திராட்சைக் கொடியின் நறுக்கப்பட்ட தண்டுகளைக் குறித்தும், misson grapes வழியே திராட்சைப்பயிர் கிருஸ்தவத்தோடு இணைந்து உலகெங்கும் பரவியதைக் குறித்தும் எழுத விரும்புகிறேன்.
எனினும் சாம் அப்படிக் குறிப்பிட தாவரங்களைப் புதிய நிலப்பரப்புக்கு அறிமுகம் செய்த அருட்பணியாளரல்ல.இங்கிலாந்தில் பிறந்து மிக இளமையிலேயே அமெரிக்காவுக்கு குடியேறியது அவரது குடும்பம். ஏழ்மையில் இருந்த அவர் தனது பள்ளிப்படிப்பையும், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் 1903- ல் பட்டப்படிப்பையும் முடிக்க வீடு வீடாக பால் ஊற்றுவது வாடகைக்கார் ஓட்டுவது உள்ளிட்ட பல வேலைகளையும் செய்தார்.
பட்டம் வாங்கிய கையோடு வடஇந்தியாவில் இறைப்பணியாற்றும் குழுவினரோடு அவர் அலகாபாத் வந்து சேர்ந்தார். அலகாபாத் கிறிஸ்துவக் கல்லூரியில் சிலகாலம் பொருளாதாரம் பயிற்றுவித்த சாம் அந்தப் பகுதி விவசாயிகளின் சிகிச்சையளிக்கப் படாதிருந்த நோய்களையும், கடும் வறுமையையும் கண்டு கலங்கினார். தனது மனைவியுடன் இணைந்து தொழுநோய் சிகிச்சைக்கென நாய்னி தொழுநோய் சிகிச்சை மையத்தை உத்திரபிரதேசத்தில் உருவாக்கினார்.(Naini Leper Asylum,) அங்கு சாமின் மனைவி தொழுநோய் உள்ள குழந்தைகளைத் தனிமைப்படுத்தும் இல்லங்களை உருவாக்கிப் பராமரித்தார்.
இந்திய விவசாயிகளின் விவசாய முறைகளில் மாற்றம் உண்டாக்கினால் மட்டுமே அவர்களால் வறுமையிலிருந்து வெளியேறமுடியுமென்று நம்பிய சாம், அமெரிக்கா சென்று ஓஹியோ பல்கலைக்கழகத்தில் அறிவியல் விவசாயம், விவசாயப்பொருளாதாரம் மற்றும் அப்போதுதான் அமெரிக்காவில் உருவாகி இருந்த rural sociology என்னும் துறையைக்குறித்தும் முறையாகக் கற்றுக்கொண்டு மீண்டும் இந்தியா திரும்பினார்.

1910ல் அலகாபாத் விவசாய நிறுவனத்தை துவங்கினார். இந்தியாவில் விவசாயத்துக்கான முதல் கல்வி நிறுவனம் அது. (இப்போது Sam Higginbottom University of Agriculture, Technology and Sciences -SHUATS).அந்த நிறுவனத்தில் விவசாயப்பொறியாளராகப் பணியாற்றிய மேசன் வா-Mason Vaugh என்பவர்தான் இந்தியாவில் காலம் காலமாகப் பயன்பாட்டிலிருந்த ஆழமாக உழ முடியாத, மரத்தால் மட்டுமேயான கலப்பைகளை மாற்றி இரும்பு நுனி பொருத்தப்பட்ட மற்றும் முற்றிலும் இரும்பாலான, ஆழமாக உழுது மண்ணின் வளத்தை மேம்படுத்தும் புதிய கலப்பைகளை உருவாக்கி பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தவர். மேஸன் வா இந்திய நவீன விவசாயத்தின் தந்தை என்றறியப்படுகிறார்.
அந்தப் புதிய கலப்பை கோதுமை வயல்களில் ஆழ உழுகையில் அதைப்பார்த்த விவசாயிகள் ’’வாஹ் வாஹ்’’ என்று பாராட்டியதால் அந்த கலப்பைக்கே ‘’வாஹ் வாஹ் கலைப்பை’’ “Wah-Wah” plow என்று பெயர் வந்தது. சாம் அந்தக் கலப்பையை இந்தியாவெங்கும் அறிமுகப்படுத்தினார். அதோடு பால் உற்பத்தி. கால்நடை வளர்ப்பு. பயிர் மேம்பாடு ஆகியவற்றிலும் பல ஆராய்சிகளைத் தொடர்ந்து செய்து அவற்றை இந்திய விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தினார். மகாத்மா காந்தியின் கிராமப்புற சேவைகளில் பெரும் அபிமானம் கொண்டிருந்த சாம் காந்தியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தார்
இந்திய நவீன விவசாயத்தில் தான் மேற்கொண்ட ஆய்வுகளை, அதனால் இந்திய விவசாயத்தில் உண்டான மாற்றங்களை விளக்கி ’’நற்செய்தியும் கலப்பையும்’’ என்னும் நூலை 1921-லும், ’’சாம் ஹிக்கின்பாதம் என்னுமோர் விவசாயி’’ என்னும் சுயசரிதையை 1949-லிலும் வெளியிட்டார் சாம்.
The Gospel and the Plow (1921):
Sam Higginbottom, Farmer (1949): His autobiography
நற்செய்தியும் கலப்பையும் நூலில் சாம் அருட்பணியாளரென்பவர் நற்செய்திகள் பரப்புபவராக மட்டுமல்லாது மக்களின் வறுமையைப் போக்கும் சேவகராகவும் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். சாமின் இறையியல் அல்லாத பிற சேவைகளைக் குறித்து வாசிக்கையிலெல்லாம் பனை காட்சனுக்கும் அவரது பணிகளுக்குமிருந்த ஒற்றுமையை எண்ணிக்கொண்டே இருந்தேன்.
இந்த நூலில் இந்திய விவசாயிகளின் மரபான கிராமப்புற விவசாயக்கருவிகளுக்கு மாற்றாக சாம் முன்வைத்த தொழிற்சாலைகளில் வடிவமைக்கப்பட்ட நவீன விவசாய கருவிகளைக்குறித்து மகாத்மாகாந்திக்கு ஆட்சேபணை இருந்தது. பல விவசாயிகள் ஒன்றாக இணைந்து ஈடுபடும் விவசாயம் என்னும் காந்தியின் கருத்தும், பலரின் வேலையைச் செய்யும் ஒரே இரு இயந்திரம் என்னும் சாமின் கருத்தும் முரண்பட்டன எனினும் சாமின் சேவைகளில் பெருமதிப்புக்கொண்டிருந்த காந்தி அந்நூலை வெகுவாகப் பாராட்டியதோடு பல நாட்கள் சாம் ஹிக்கின்பாதமிடம் இந்நூலைக்குறித்து நீண்ட உரையாடல்களிலும் ஈடுபட்டிருந்தார். சேற்றிலிறங்கி கடும் உடலுழைப்பை செய்துகொண்டிருந்த இந்திய விவசாயிகளின் மீதான சாமின் கரிசனத்தை அவர் பெரிதும் மதித்தார்,

இந்த நூலில் சாம் இந்தியாவை அங்குலம் அங்குலமாக விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் கவனித்திருப்பது ஆச்சர்யமளிக்கிறது உதாரணமாக அப்போதைய இந்தியவீடுகளின் கைகளால் செய்யப்பட்ட ஓடுகள் உள்ளங்கை அகலத்தில் இருந்ததையும் அவற்றில் மழைநீர் வழிந்து விழ வரிகள் இருந்ததையும் குறிப்பிட்டிருப்பதைச்சொல்லலாம்.
அப்போது இந்தியாவில் இருந்த வெறும் கிளர்க்குகளை உருவாக்கும் பிரிடிஷ் கல்விமுறையை மாற்றி விவசாயத்தொழில் வல்லுநர்களை உருவாகும் கல்வி தேவை, இந்திய சாதிப்பிரிவினைகளே அவர்களின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருந்தது ஆகியவற்றை நூலில் குறிப்பிட்டிருப்பதோடு, இந்திய மரபுவழி விவசாயத்தின் குறைகளைச் சுட்டிக்காட்டி நவீன விவசாயக்கருவிகளுடன் இணைந்த புதிய விவசாயமுறைகளின் அவசியத்தையும் இந்த நூலில் வலியுறுத்தி இருக்கிறார் சாம்.
இந்த நூல் முழுக்கத் தெளிவாகத் தெரியும், கிருஸ்தவ நற்செய்தியையும் கலப்பையினால் உண்டாகவிருக்கும் முன்னேற்றங்களையும் வேறு வேறு எனப் பிரிக்கவே முடியாது என்னும் அவரது நம்பிக்கை பெரும் ஆச்சரியமளித்தது.
இந்திய சாதிப்பிரிவினைகள் பற்றிச்சொல்லும் பல பக்கங்களில் சாம் “தீண்டத்தகாதவர்கள் சுத்தமற்றவர்கள் என்று ஒரு பிரிவினரைத் தனித்து அடையாளப்படுத்தி அவர்கள் மட்டும் நிலத்திலிறங்கி வேலைசெய்யும் இந்திய சாதிப்பிரிவினையை நீக்கினாலே விவசாயிகளின் வறுமை நீங்கும் இதற்கு ஒரே தீர்வு மானுடர் அனைவரும் சமம் என்னும் கிருஸ்துவின் நற்செய்தி மட்டும்தான் என்றும் அழுத்தமாக குறிப்பிட்டிருக்கீறார்,”the only cure for caste is Christ,”
பிரிடிஷ் ஆட்சியில் இந்தியர்களைச் சுரண்டாதவர்களை, இந்தியாவின் வறுமையைப்பற்றிக் கவலைப்பட்டவர்களை, இந்தியர்களின் நோய் தீரவும் அவர்களின் வாழ்வு மேம்படவும் சிந்தித்தவர்களை, அதன்பொருட்டே உழைத்தவர்களை மிகக் குறைவாகவே அறிந்திருக்கிறேன்.
எந்தப்பயனுமற்ற கால்நடைகள் மிக அதிக எண்ணிக்கையிலிருந்தது, இந்திய விவசாயம் அபாயகரமாக பருவகால மழையை மட்டுமே நம்பி இருப்பது, அறிவியல் அடைப்படையிலான நீர்ப்பாசனம் இல்லாமலிருப்பது மற்றும் நிலவளத்தைக் காப்பாற்ற தேவைப்பட்ட பயிர்சுழற்சிமுறை ஆகியவற்றை எல்லாம் சாம் இந்த நூலில் விவரித்திருக்கிறார்.
நற்செய்திகளைப் பெற்றுகொண்ட மனிதர்கள் எப்படி கிறுஸ்துவை அறிந்துகொண்டு ஆன்மவளம் பெறுகிறார்களோ அப்படி நவீன விவசாயத்தை அறிந்து கொண்டு தரிசு நிலங்களை வளமாக்கமுடியும் என்கிறார் சாம். இந்திய விவசாயிகளை நவீன விவசாயத்துக்கு மாற்றி அவர்களை வறுமையிலிருந்து விடுவிக்கும் போராட்டத்தில் இணைந்துகொள்ளும்படி பிற விவசாயிகள், பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்களையும் அழைத்திருக்கிறார்.
இந்நூலின் சாராம்சமாக “It appeared to me… the poverty of India was removable, not by the doling out of charity, but by education which would teach the Indian farmer how to get more out of his soil.” என்று சாம் குறிப்பிட்டிருப்பதை சொல்லலாம்.
சாம் ஹிக்கின்பாதம் பல இறையியல் நிறுவனங்களில் ஆற்றிய உரைகளின் தொகுப்பும் இந்நூலில் இருக்கிறது இதன் முன்னுரையில் ’’நான் இந்தியாவில் செய்யவிருப்பட்டவற்றில் மிகக்குறைவாகவே செய்திருக்கிறேன் அவற்றை இதில் எழுதி இருக்கீறேன்’’ என்கிறார் சாம்
மொத்தம் 10 அத்தியாயங்களாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த நூலின் முதலிரண்டு அத்தியாயங்களில் அருட்பணிக்கென அனுப்பப்பட்ட தான் எதிர்பாராமல் பொருளாதாரம் பயிற்றுவிக்கப் பணிக்கப்பட்டதையும் அதில் சற்றே ஏமாற்றமடைந்திருந்தாலும், பிற்பாடு இந்திய விவசாயத்தில் மாற்றமுண்டாக்கும் அரும்பணியில் மனமகிழ்ந்து ஈடுபட்டதையும் விவரிக்கிறார்.
மூன்றாவது அத்தியாயத்தில் இந்தியர்களின் கல்வியறிவின்மையையும், கடும் வறுமையையும் பேசுகிறார். இந்தியர்களின் இந்த நிலைமைக்குக் காரணம் சமூககட்டமைப்புக்கள்தான் கடவுளின் மீது விசுவாசம் கொள்ளாததால் அல்ல என்று சாம் என்னும் அருட்பணியாளர் விவரிக்கும் இந்த அத்தியாயம் நேரடியாக அவர் இதயத்திலிருந்து எழுதப்பட்டிருக்கிறது. இந்தப்பகுதியின் ஒவ்வொரு சொல்லும் இந்தியர்கள் மீதான வாஞ்சையுடன் எழுதப்பட்டிருக்கிறது.
இதே அத்தியாயத்தில் மொத்த நிலப்பரப்பில் 80% விவசாய நிலங்களைக்கொண்டிருக்கும் இந்தியாவின் கல்விமுறையில் நிலவளம் விவசாயம் குறித்த கல்வி முற்றிலும் இல்லாமலிருப்பதன் முரணையும் அவர் வியப்புடன் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
நான்காவது அத்தியாயத்தில் விவசாயத்துக்கு தேவையான கருவிகளை மேம்படுத்துவதையும் நிலவளத்தை அதிகரிக்க உரங்கள் உள்ளிட்ட பலவகையான இடுபொருட்கள் சேர்க்கப்பட வேண்டியதை விவரித்திருக்கிறார்.அடுத்த ஐந்தாவது அத்தியாயத்தில் அலகாபாத் விவசாய நிறுவனம் உருவானதை விவரிக்கிறார். தரிசு நிலங்களில் பயிர் செய்து வளம் பெருக்குவதையும் இந்த அத்தியாயம் பேசுகிறது.
6 மற்றும் 7-ம் அத்தியாயங்களில் ஒரு கிராமத்தில் பசித்த வயிற்றுடன் இருக்கும் அத்தனை பேராலும் செய்யமுடியாத, உண்டாக்க முடியாத மாற்றத்தை ஒரு இரும்புக்கலப்பை எளிதாக செய்து விடும் என்பதையும், இறைச்சியோ பாலோ உடலுழைப்போ அளிக்காத,புனிதம் என்ற பெயரால் பாதுகாக்கப்படும் ஆயிரக்கணக்கான கால்நடைகளைப் பராமரிப்பதால் உண்டாகும் விவசாய வறுமையைப் பேசுகிறார். இதை மாற்ற “Breed selection” (இனத் தேர்வு) அவசியம் என்றார்.

இறுதி அத்தியாயங்களில் இந்தப்பணிகளின் போது தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களையும் சந்தித்த சவால்களையும் யேசுவின் 36 அற்புதங்களையும் பேசுகிறார் சாம். இதில் ’’இன்றைய ரொட்டியை எமக்குத்தாரும் பிதாவே’’ என்பதுதான் இறைவனால் கேட்கப்பட்டு முழுமையாக நிறைவேற்றப்பட்ட பிரார்த்தனை என்கிறார்
இந்திய ஏழைகளுக்குத் தேவையாக இருந்த, ஆனால் கிடைத்திருக்காத நல்ல உணவை பால்பொடியைக் கொடுத்து கிருஸ்தவ மதத்துக்கு (Rice christians) இந்தியர்களை மாற்ற பெரும்பாலான அருட்பணியாளர்கள் ஈடுபட்டிருக்கையில் நவீன விவசாயமுறைகளை அறிமுகம் செய்து கிருஸ்துவின் நற்செய்தி என்பது உண்மையில் பசித்தவயிற்றுக்கு அவர்களே உணவை உருவாக்கிக்கொள்ளும், நிலவளத்தினால் வாழ்வை வளமாக்கும் வழிகளைச் சொல்லிய ஒரு அருட்பணியாளர் எழுதிய நூல் இது
அப்போதைய பெரும்பாலான காலனிய எழுத்தாளர்கள் செய்ததுபோல கீழ்நிலைப் பணியாளர்களை களப்பணிக்கனுப்பி அவர்கள் அளித்த தகவல்களைக்கொண்டு நூல் எழுதாமல், சாம் ஹிக்கின்பாதம் சேற்றிலும் புழுதியிலும் விவசாயிகளோடு பல ஆண்டுகள் இணைந்து பணியாற்றி அசலான தரவுகளும் அறிவியல் அடிப்படையிலான புள்ளிவிவரங்களும் கொடுத்து நூலை உருவாக்கி இருக்கிறார்.
மத போதகராக இருக்கும் ஒருவரை விட அதிக கோதுமையை விளைவிப்பவனே கர்த்தருக்கு நெருக்கமானவன் என்று சொல்லும் இந்த நூல் அந்தக் காலகட்டத்தில் அரிதினும் அரிதானது.
இந்த நூல் வெளியான பொது கிறிஸ்தவ மிஷனரிகளிலும் இந்தியாவிலும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அப்போது கிருஸ்துவத்தை பரப்புவதில் போதகர்களும் மருத்துவர்களும்தான் ஈடுபட்டிருந்தார்கள். ஆனால் சாம் ஹிக்கின்பாதம் பசித்தவயிற்றோடு இருப்பவனுக்கு கடவுளின் நற்செய்தியை கூறுவது பயனற்றது என்று சொல்லி விவசாய மாற்றங்களுக்கு பாடுபடுபவர்களும் போதகர்கள்தான் என்னும் புதிய சித்திரத்தையும் உருவாக்கினார்.
வெறும் போதகர்களாக மட்டுமல்லாது நற்செய்தியை ஏற்றுக்கொண்டவர் தன் சொந்தக்காலில் நின்று தன் குடும்பத்தையும் நாட்டையும் உயர்த்தவேண்டும் என்பது அப்போது மிகப்புதிதான ஒன்றாக இருந்தது. விவசாயத்தை ஒரு பட்டப்படிப்பாக அறிமுகப்படுத்திய இவரை காந்தி “டாக்டர் ஆஃப் ஃபாமிஷ்” என்று அழைத்துப் பாராட்டினார்.
அருட்பணியாளர்கள் விவசாய மாற்றத்துக்கு உதவவேண்டுமென்னும் இவரது ஜெபமும் சேறும் என்னும் கொள்கை இந்தியாவுக்கும் கிருஸ்துவ மிஷனரிகளுக்கும் மிகமிகப் புதிதாக இருந்தது.
ஆங்கிலேயர்களைப் பார்த்து முள்கரண்டிகளிலும் ஸ்பூன்களிலும் சாப்பிடுவது உயர்வு என இந்தியர்கள் கற்றுக்கொண்ட காலத்தில் சாம் “கைகளால் வேலை செய்வதில் இழிவு எதுவுமில்லை” என்பதை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்று இந்த நூலில் வலியுறுத்துகிறார்.

அந்தக்காலத்திலேயே அலகாபாத் விவசாய நிறுவனத்தின் பாடத்திட்டம் செயல்முறை சார்ந்ததாக, நடைமுறையில் பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்பதில் சாம் மிகக் கவனமாக இருந்தார். இந்த நூலின் தாக்கத்தினால்தான் உலகெங்கிலும் மிஷனரிகள் தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொண்டதோடு “Agricultural Missions” என்னும் புதுத்துறையும் உருவானது.
காந்தியும் சாம் ஹிக்கின்பாதமும் ஒருசில கொள்கைகளில் முரண்பட்டாலும் ஏழை இந்தியர்களின் வாழ்வை மேம்படுத்துவது என்னும் புள்ளியில் இருவருமே இணைந்திருந்தார்கள். அலகாபாத் விவசாய நிறுவனத்துக்கு காந்தி அடிக்கடி சென்றார் ,அங்கு தயாரிக்கப்பட்ட தொழு உரத்தைக் குறித்து கவனமாக அறிந்துகொண்டார். தனது ஆசிரமப்பயிர்களின் வளர்ச்சிக்கான ஆலோசனையை சாம் ஹிக்கின்பாதமிடமிருந்து காந்தி அறிந்துகொண்டார்.
தனது யங் இந்தியா இதழில் சாம் ஹிக்கின்பாதம் என்னும் வெளிநாட்டவர் இந்தியவிவசாயிகளின் மீது கொண்டிருந்த கரிசனத்தையும் அவர் மேற்கொண்டிருந்த விவசாய மேம்பாட்டுப்பணிகளையும் குறித்து காந்தி வெகுவாக பாராட்டி எழுதி இருந்தார்.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு இரண்டு வருடங்கள் முன்பாக பணி ஓய்வு பெற்று ஃப்ளோரிடாவில் தனது மகளின் வீட்டில் இருந்த சாம் தனது 83-வது வயதில் 1958 ஜீன் 11-ம் தேதி மறைந்தார் இறுதிவரை அங்கிருந்துகொண்டே இந்தியாவின் விவசாயம் நவீன மயமாகிக்கொண்டு வந்ததை கவனித்துக்கொண்டிருந்தார்.
பனையில் சிலுவையைக் காணும், பனையேறிகளின் வாழ்வுக்காகப் போராடும் காட்சனும் சாம் ஹிக்கின்பாதமைப்போல், நற்செய்தி என்பது வெறும் பிரசங்கம் அல்ல களத்தில் நின்று சேவை செய்வதுதான் என்று சொல்லும் மற்றொரு அருட்பணியாளர். இருவரையும் அறிந்துகொண்டிருப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நற்செய்தியும் கலப்பையும் நூலின் இறுத்திப்பத்தியில் சாம் கவித்துவமாக ’’ ஏசுவின் முன்பு முள் கொண்டிருந்த, இப்போதைய ஜொலிக்கும் கிரீடத்தில், நவீனக் கதிரடிக்கும் இயந்திரங்கள், கலப்பை மற்றும் புதிய விவசாய இயந்திரங்களால் மேன்மை அடைந்த வளமான இந்தியா ஒரு பிரகாசமான அருமணியாக இருக்கட்டும் ’’என்கிறார்.
இந்த நூல் முழுமையாக இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது
கிண்டில் பதிப்பாகவும் அச்சு இதழாகவும் கிடைக்கிறது.
சிலுவையின் பெயரால் நூலில் //மெய்மையைத்தேடும் ஒருவன் தன் ஆன்மாவின் இயல்பாலேயே மீட்பின் கிறிஸ்துவைக் கண்டு அவரை தனித்து எடுத்துவிட முடியும்// என்று ஜெ சொல்லி இருப்பார். சாம் ஹிக்கின்பாதம் அப்படி மீட்பின் கிறுஸ்துவை சேவையில் நிறைவடையும் அவரின் இயல்பால் கண்டறிந்தவர்.
இந்த நல்ல நூலைப் பரிந்துரைத்த பனை காட்சனுக்கு என் அன்பும் நன்றியும்!
Leave a Reply