பொள்ளாச்சியில் இட்லி மாவை அரைத்தும் சந்தகையை பிழிந்தும் விற்பது சாதாரணமாகவும் மிக அதிகமாகவும் நடக்கும் ஒரு குடிசைத்தொழில். விருந்தினர்கள் வருகையின்போது அங்கு சென்று பிழிந்த சந்தகையை சூடாக வாங்கிக்கொள்வேன்.
மிகச்சுத்தமாகவும் சோடா உப்பு சேர்க்காமலும் தயாரிப்பார்கள் என்பதால் வழக்கமாகவே அங்கு நல்ல கூட்டம் நெரியும். சமீபத்தில் அந்தக் கடைக்காரரின் மகளுக்கு 100 சவரன் நகை கொடுத்துத் திருமணம் செய்துகொடுத்தார்கள். அத்தனை ஓட்டம் கடையில்.
அறக்கல்வி வகுப்புகளுக்காக ஈரோடு மற்றும் திருப்பூருக்குச்சென்று விட்டுக் களைத்துப்போய் திரும்பிய அன்று இட்லி மாவு வாங்கச்சென்றபோது கூட்டத்தில் காத்திருக்கும்படியானது. கொஞ்சம் தள்ளி ஒருவர் கையில் கார்ச்சாவியுடன் நின்றிருந்தார். வெள்ளைக் குட்டிக்காரொன்றும் சாலையோரம் நின்றது. அவரின் கீழுதட்டில் கொஞ்சமாக வைத்திருந்த ஆட்டுத்தாடி அல்லது பிரெஞ்சுத்தாடி எப்போதும் ஏன் எனக்குக் கடும் ஒவ்வாமையை உருவாக்குகிறது என்பது ஆய்வுக்குரியது.
இப்போதுமட்டுமல்ல எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அந்த ஒவ்வாமை இருக்கிறது என் கல்லூரித்தோழி ஷர்லி சொல்லுவாள்
’’ டீ நான் ஒரு கிறுக்கனை, முடவனை, குருடனை ஏன் ஒரு தொழுநோயாளியைக்கூட கல்யாணம் பண்ணிக்குவேன் ஆனா சுருட்டைமுடிக்காரனைமட்டும் பண்ணிக்கவே மாட்டேன்’’ என்று. எனக்கும் அப்படித்தான் இந்தக் குறுந்தாடிக்கரர்களைக் குறித்த அபிப்பிராயமிருந்தது. (அச்சச்சோ எழுத வந்ததை விட்டுவிட்டு எங்கெங்கோ மனக்குதிரை பாய்கிறதே.)
இதோ வருகிறேன்.
அவர் மனைவியிடம் அலைபேசியில் அழைத்துப்பேசிக்கொண்டிருந்தார் . பேசிக்கொண்டிருந்தது மனைவியிடம் தான் என்பது ’பைத்தியக்காரி’ என்னும் அவரது விளியில் இருந்து தெரிந்துகொண்டது.
சந்தகை வாங்கட்டுமா என்று கேட்டிருக்கிறார். பதிலுக்கு மனைவி இரவில் வழக்கம் போல அவர் சாப்பிடும் சாதமும் வேண்டுமா என்று கேட்டதற்குத்தான் அந்தப்பேச்சு. அத்தனை கடுமையாக அத்தனை உரக்க அத்தனை கோபமாக.
’’பைத்தியக்காரி மாதிரி உளறக்கூடாது சந்தகை வேணுமான்னு கேட்டா ஆமா இல்லைன்னு மட்டும்தான் சொல்லனும் நைட் சாப்பாடு வேணுமான்னெல்லாம் தேவையில்லாம பேசக்கூடாது’’ என்று கத்திக்கொண்டிருந்தார். காரெல்லாம் வைத்திருக்கிற, (குறுந்தாடிகூட) அவர் வெறும் 40 ரூபா சந்தகைக்காகப் பொது இடத்தில் எப்படி அத்தனை தரம் தாழ்ந்து நடந்துகொள்ளமுடிகிறது?
இதுவே அவருக்கு கல்யாணம் நிச்சயமான போதோ அல்லது கல்யாணமாகி கொஞ்ச நாளிலோ நடந்திருக்காது. சில வருடங்களானபின்னர் என்ன செய்தாலும் எத்தனை அநீதி இழைத்தாலும் எப்படி தாழ்வாக நடத்தினாலும் மனைவி வீட்டையோ மணவுறவையோ விட்டுவிட்டு போக வாய்ப்பே இல்லை அவள் உணவுக்கும் உடைக்கும் மற்ற எல்லவற்றிற்கும் முழுக்க முழுக்க தன்னைத்தான் சார்ந்திருக்கிறாள் அவளை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்பதை தெள்ளத்தெளிவாகப் புரிந்துகொண்ட பின்னரே இதுவெல்லாம் தொடங்குகிறது.
இப்படித்தான் இங்கு லட்சக்கணக்கான குடும்பங்கள் ஒரே கூரையின் கீழ் வாழ்கிறார்கள். பரஸ்பர புரிதலும் மரியாதையும் அன்பும் காதலும் கத்தரிக்காயுமெல்லாம் இங்கு இல்லவே இல்லை. இதைப்பார்த்து வளரும் ஆண் பிள்ளைகள் அப்பாவைப்போலவே அம்மாவை நடத்தலாம் என்பதை கற்றுக்கொள்கிறார்கள் அவர்களின் மனைவியரையும் அப்படியேதான் நடத்த வேண்டும் என்பது அவ்ர்களின் ஆழ்மனதிலும் பதிந்து விடுகிறது.
பெண்பிள்ளைகளும் இதே கீழ்மை அவர்களுக்கும் பின்னர் நடக்கையில் அது எதிர்க்கப்படவேண்டிய கண்டிக்கப்படவேண்டியதொன்று என்பதைக் கூட அறியாமல் வழி வழியாக அதை இயல்பாக ஏற்றுக்கொண்டு அதே வாழ்க்கையிலுழன்று மாய்கிறார்கள். ஏனென்றால் அவர்களின் அம்மாவும் அத்தையும் அப்பத்தாவும் அக்காவும் அப்படியே வாழ்ந்ததை அவர்கள் பார்த்து வளர்ந்திருந்திருந்திருப்பார்கள்.
அந்த தாடிக்காகவும் அந்த நடத்தைக்காவும் பளாரென ஒரு அறையை மானசீகமாகக்கொடுத்துவிட்டு வந்தேன்.வேடிக்கை என்னவென்றால் மும்முரமாக மனைவியின் மீதான தன் ஆணவத்தைக்காட்டிக் கொண்டிருந்தவர் சந்தகை அப்போதுதான் அடுப்பில் இருந்தது அது தயாராக இன்னும் 1மணி நேரமாகும் என்று சொல்லபட்டதை காதிலேயே கேட்டுக்கொள்ளவில்லை.
Leave a Reply