லோகமாதேவியின் பதிவுகள்

சரண் 26!

சரணுக்கு இன்று 26-ஆவது பிறந்தநாள். நாட்கள் ஒன்றும் அத்தனை வேகமாகச் சென்றுவிடவில்லை; மிக மெதுவாகத்தான் நகர்ந்திருக்கிறது காலம். ஒன்பது மாதங்கள் முடிந்து, வான்வழிப் பயணத்திற்கான சட்டபூர்வ நாட்களும் கடந்த பின்னால், பொய்ச்சான்றிதழ் வாங்கித்தான் நிறைமாதக் கர்ப்பிணியாக அபுதாபியிலிருந்து கோவை விமான நிலையம் வந்தேன். கர்ப்பகாலம் முழுவதுமே கொந்தளிப்பான கால மாகத்தான் இருந்தது. வயிற்றில் இருப்பது பெண் என்று எப்படியோ நான் நம்பினேன்; ‘துர்கா’ எனப் பெயரும் இட்டிருந்தேன்.

ஏப்ரல் 4, 2000 அன்று சரண் ஆனைமலை அம்பராம்பாளையம் வசந்த் மருத்துவமனையில் பிறந்தான். கர்ப்பகாலத்தில் நான் நல்ல உணவைச் சாப்பிட்டிருக்கவில்லை என்கிற குற்றவுணர்வு, சரணுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும்போதெல்லாம் என்னைக் கஷ்டப்படுத்தும். புதிய தேசம், புரியாத பாஷை, மிகச் சிக்கலான தாம்பத்தியம், பொருளாதார ரீதியான சார்பு நிலை, கர்ப்பகாலச் சிக்கல்கள் என அனைத்திற்கும் மேலாக, வயிற்றில் இருக்கும் குழந்தையை யாரேனும் ஏதேனும் செய்துவிடுவார்களோ என்னும் அச்சம் என்னை நிரந்தரமாகப் பீடித்திருந்தது. ஊரிலிருந்து கொடுத்து அனுப்பப்பட்ட ஒரு பெரிய கண்ணாடி பாட்டில் நிறைய இருந்த குலோப் ஜாமூனை, அவ்வப்போது எடுத்து வாஷ் பேசினில் கரைத்துக் கரைத்துத் தீர்த்தேன். அதில் வயிற்றுக் குழந்தைக்கு ஆபத்தான ஏதோ இருக்குமென அஞ்சினேன்.

கடுமையான  வீட்டு வேலைகள்அப்போது இருந்தன; ஓய்வென்பதே ஒரு நிமிடம் கூட உடலுக்கு இல்லாத காலம். வீட்டில் ஒரே அறையில் குடித்தனம்; மற்றொரு படுக்கையறையும் சமையலறையும் உள்வாடகைக்கு விடப்பட்டிருந்தன. எனக்கென உறங்கும் நேரமோ, தனிமையோ, ஓய்வோ எதுவுமே இல்லாத, பெரும்பாலும் பசியுடன் இருந்த மாதங்கள் அவை. பிரசவத்திற்கு ஊருக்கு வருவதிலும் எனக்குப் பெரிய ஆர்வம் இருக்கவில்லை. ‘வாணலிக்குத் தப்பி அடுப்புக்கு வரும் கதை’தான் அதுவும் என்றாலும் வந்தேன்; எங்கும் போக இடமில்லாத நிலை அது.

வழக்கம்போல வீட்டிலும் அப்பா என்பவரின் வன்முறை. ஆனால், திருமணத்துக்குப்பிறகு  உடல்ரீதியான துன்புறுத்தல்  இல்லை; இருப்பினும் மனோரீதியான வன்முறை கட்டுக்கடங்காமல் இருந்தது. திருமணத்திற்கு முன்பிருந்தே வேலைக்குப் போய்ச் சம்பாதித்துக் கொண்டிருந்ததால், அப்போது கைகளில்  சுத்தமாகப் பணமில்லாமல் இருந்தது பெரும் சுமையாக இருந்தது. இரண்டு பக்கமும் மனித உணர்வு, உறவு, மனிதாபிமானம் ஆகிய எல்லாவற்றையும் விடப் பணத்திற்கே முக்கியத்துவம் கொடுத்த ஆட்களே இருந்தார்கள்.

எப்போதாவது மாலை காற்றாட நடைக்கையில் அப்பா என்பவரும் உடன் வருவார். முனிசிபல் ஆபீஸ் முனையில் இருக்கும் இளநீர்க்கடையில், அந்த அம்மாவிடம் இளநீர் வாங்கி குடித்துவிட்டு நான் பணம் கொடுப்பதை அப்பா உணர்ச்சியின்றிப் பார்த்துக்கொண்டிருப்பார்.  சரண் ஐரோப்பா செல்லும் முன்பு அந்த இளநீர்க்கார அம்மாவிடன் அவனை அழைத்துச்சென்று அவன் வயிற்றில் இருக்கையில் அவர்வெட்டித்தந்த இளநீரை அவன் குடித்திருக்கிறான் என்று சொன்னேன். அவரது கால்தொட்டு வணங்கிவிட்டுத்தான் புறப்பட்டான். அந்த அம்மா அவனுக்கு கண் நிறைந்து ஒரு இளநீர் வெட்டித்தந்தார்கள்.

கர்ப்ப காலத்தில் அம்மா என்னை எப்படி நடத்தினார் என்று சொல்ல இன்னும் மனது வரவில்லை. அன்னைமை குறித்த ஒரு மாயை உலகில்  இருக்கிறதல்லவா, அது அப்படியே இருக்கட்டும். 

நல்ல பசியில் ஒருவாய் அதிகமாகச் சாப்பிட்டால், உடனே அம்மா, ‘அதிகமா சாப்பிட்டா குழந்தை ஊறிப் பெரிசாகும், அப்புறம் சுகப்பிரசவம் ஆகாது; சிசேரியனுக்கெல்லாம் இங்கே பணமில்லை…’ என்பார்கள். இதை மட்டுமே என்னால் வெளியே சொல்ல முடியும். 

இளமையில் நல்ல புடவை உடுத்திக்கொண்டோ, தலைக்குக் குளித்து நீளமான அடர்த்தியான கூந்தலை ஆயிரங்கால் ஜடை பின்னிக்கொண்டோ, ஜிமிக்கி போட்டுக்கொண்டோ, தலை நிறையப் பூச் சூடிக்கொண்டோ கல்லூரிக்கோ பல்கலைக்கழகத்திற்கோ செல்கையில், அம்மாவின் கண்ணில் ஒரு கனல்புள்ளி தெரியும். கட்டாயமாக ஏதோ ஒன்று சுருக்கென்று சொல்வார்கள்; ஏதோ ஒரு குறை சொல்லியோ அல்லது அப்பா என்பவர் என்னை கடுமையாக பேசும்படியாக ஒரு சூழலை வேண்டுமென்றே  உண்டாக்கியோ என் முகம் வாடிப்போன பின்னரே நான் அங்கிருந்து இறங்கிச் செல்வதை பார்த்துக்கொண்டிருப்பார்கள்.. ‘காடு’ நாவலில் கிரியின் சம்பளத்தைக் கேட்டதும்  அவன் அப்பாவின் உணர்வுகளை ஜெ சொல்லியிருப்பார்; அப்போது நான் அம்மாவைத்தான் நினைத்துக்கொள்வேன். உண்மையிலேயே நான் வேறெங்கோ வேறு யாருக்கோதான் பிறந்திருக்கவேண்டும் எப்படியோ அந்த வீட்டுக்கு நான் கொண்டு வரப்பட்டிருக்கவேண்டும் என்று ஆழமாக இப்போதும் நம்புகிறேன்.

இன்றைக்கும் நான் எப்போதும் மிக விரிவாக, தேவைக்கும் அதிகமாகவே சமைப்பதற்கும், யார் வந்தாலும் திருப்தியாகச் சமைத்துப் போடுவதற்கும் அப்போதைய என் பசிதான் காரணம். பிரசவத்திற்குப் பிறகும் பத்திய உணவோ, வயிறு சுருங்கப் பிரத்யேக உணவோ, ஏன் பாலூட்டுவதற்கான உணவோ கூட எனக்கு அளிக்கப்படவில்லை. சரணுக்கு 21 நாட்களானபோது, நான் அவனைச் சரியாகப் பிடிக்கக்கூடத் தெரியாமல் ஷார்ஜா விமான நிலையத்தில் இறங்கியிருந்தேன். எனக்கு ஓய்வு வேண்டும், அறுவை சிகிச்சைக் காயங்கள் ஆற வேண்டும் என்றெல்லாம் என் தரப்பில் யோசிக்கக்கூட  யாரும் இல்லை.

என் வாழ்வைத் திரும்பிப் பார்க்கையில் எனக்கு மிக ஆச்சரியமாக இருப்பதெல்லாம், நான் இன்னும் உயிருடன் இருப்பதுதான். சரண் பிறந்தபோது, ‘ஆண் குழந்தை’ என்னும் டாக்டர் வசந்தின் குரல் என் காதில் விழுந்த பின்னரே நான் நினைவிழந்தேன். அன்றிலிருந்து இந்த நிமிடம் வரை அவனும் சின்னவனும் உடனிருக்கிறார்கள் என்னும் ஒன்றே என் பிடிப்பாக இருக்கிறது.

அபுதாபியில் அவனுடன் பேசிக்கொண்டே இருப்பேன். அவனுக்கு நான் பேசுவது புரியாத மிகச்சிறு வயதிலிருந்தே என் கண்ணீரையும் குரலையும் அவன் கேட்டுத்தான் வளர்ந்தான். அவனுக்காகத்தான் இந்த கிராமத்து வீட்டைக் கட்டி இங்கு வசிக்க வந்தேன். அவனால்தான் இன்று நான் இருக்கிறேன்.

மிகச் சிக்கலான ஒரு காலகட்டத்தில், சரண் ஸ்கூல் வேனிலிருந்து கீழே இறங்கும்போது, தெருவின் எதிர்ப்பக்கத்தில் இருந்த எனக்கு அவனது பெரிய ஷூ அணிந்த கால்கள் தெரிந்தது அத்தனை நம்பிக்கையூட்டுவதாக இருந்தது. சரணுக்கும் தருணுக்கும் தெரியாது; அவர்கள் இருவரும் என் வாழ்வை எப்படியெல்லாம் நேராக்கி, நான் இன்று உயிருடன் இருக்க உதவியிருக்கிறார்கள் என்று.

 கண்பட்டதுபோல, தவிர்க்கவே முடியாமல் வேறு ஒரு தரப்பிலிருந்து உண்டான காரணத்தினால்  சரணுக்கு இப்போதிருக்கும் ஒரு சிறு துயர் மறைந்து, அவன் அதை மறந்து, குடும்பமும் குழந்தைகளுமாக என் கண்முன்னே வாழவேண்டும் அவன் ஒரு தொடக்கம்தான் பின்னாலேயே தருணும் சாம்பவியும் அவனைப்போலவே நலமாக இருப்பார்கள் . அது மட்டுமே இப்போது என் ஒரே ஒரே ஒரே ஆசை. தெய்வங்களே காத்துக்கொள்க! 

பிறந்தநாள் வாழ்த்துகள் சரண் குட்டி.

7 Comments

  1. prakash kumar

    சன்னன்னாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்……. நான் லோகமா தேவியல்ல சரண் என்ற பதிவையும் மும்பை சென்று வந்த பதிவுகளையும் உடன் இணைத்து படித்து விடுங்கள்; சரண் அவர்களின் உருவம் நம் மனதில் வந்துவிடும்……

    • Sathishkumar

      இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சரண் ✨💐💐🎁🎁🎁🎂🎂🎂🎂🎂

  2. Rajeshwari Raj

    சரண் தம்பிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். மனமொத்த மனைவி அமைந்து சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துக்கள்.

  3. சரண்யா

    அன்பு சரணுக்கு
    எங்கள் ஆசிரியரின் உருவம் நீ என்றே என் மனதில் உள்ளது.
    எங்கள் அனைவரின் ஆசியும் அன்பும் எப்போதும் உனக்கும் தருணுக்கும் உண்டு..
    இறை அருளட்டும்…

  4. மு. ஜோதிமணி

    சரண் தங்கத்திற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐சரண், தருண் இருவரின் எதிர்காலம் மகிழ்ச்சி நிறைந்ததாகவே அமையும். அவர்களுக்கும் சேர்த்தே அனைத்துத் துயரங்களையும் நீங்கள் கடந்து கரை சேர்ந்துள்ளீர்கள். இனி உங்கள் வாழ்க்கை முழுவதும் இன்பமே. காரணம், இரு தங்கங்கள் உங்களின் இருபுரமும் உயிர்க் கவசமாக. அத்துடன் உங்களின் முன்புரம் சாம்பவி எனும் தேவதை. மன வலிமையுடன் இருங்கள்: சுற்றமாக நாங்களும் இருக்கிறோம்.

  5. Ayyapparaj

    இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். எல்லாம் நிறைவாகட்டும்

  6. Ella Lewis

    I’ve been using this method for years and it’s been a game changer.‌‍‌‍‌‌‌‌‌‍‍‍‌‌‍‌‌‍‍‌‍‌‌‍‌‍‍‍‌‍‍‌‌‍‍‌‌‍‌‍‌‍‍‍‌‍‌‌‌‍‍‍‌‍‌‌‌‍‍‍‌‌‍‌‌‍‍‌‌‌‌‍‌‍‍‌‌‍‌‌‌‌‍‍‌‌‌‌‌‍‍‌‌‌‍‌‌‌‍‍‌‍‍‌‌‌‍‍‌‍‌‍‌‌‍‍‌‍‌‌‌‍‍‌‌‍‌‍‌‌‍‍‌‍‌‌‌‍‍‌‌‌‍‍‌‌‍‍‌‍‌‍‌‍‍‌‌‌‍‍‌‌‍‍‌‍‌‌‌‌‍‍‌‍‍‌

Leave a Reply to Ayyapparaj Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑