லோகமாதேவியின் பதிவுகள்

மாதொருபாகன் மிளகாய்!

சமீபகாலங்களில் இணையச் செய்திகள் பரவும் வேகம் மிக மிக அதிகமாக இருக்கிறது. இணைய ஊடகங்களுக்கு அடிமையாவதும் மிக விரைவாக நடக்கிறது. எல்லோரும் எல்லாத் துறைகளிலும் கருத்துச் சொல்லி, அது பரவி ஆயிரக்கணக்கிலான அந்தச் செய்தியின் நம்பகத்தன்மை குறித்து எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லாமல் அது நம்பவும், கடைபிடிக்கப்படவும் செய்கிறது. தாவரவியல் பிழைகளில் மட்டும் நான் ஒருசில சமயங்களில் தாங்க முடியாமல் இடைபடுகிறேன்.

காந்தள் மலர்ச் செடியின் (Gloriosa superba) ஆங்கில V வடிவக் கிழங்குகளின் நச்சுத்தன்மையைக் குறித்து எதுவுமறியாத யாரோ ஒருவர், அதன் கிழங்குகளைச் சமைத்துச் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என வாட்ஸ்அப்பில் சொல்ல, அதை நம்பிய ஓர் ஆம்பூர் இளைஞர் போன வருடம் அப்படியே செய்து உயிரிழந்தார்.

நான் இளங்கலை தாவரவியல் படிக்கையில் என்னுடன் இருந்த சில நண்பர்கள் ஒரு புலனக்குழுமம் (whats app Group) தொடங்கி அதில் என்னையும் இணைத்திருந்தார்கள். ஒரு சமயம் ஒரு நண்பர் அதில் சைகஸ் (Cycas) ஆண் கூம்பின் படத்தைப் பகிர்ந்து, இது மேருமலையில் 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மலரும் “சிவலிங்க மலர்”, அனைவரும் வழிபட்டு தொழுது முடிந்த வரை பலருக்கும் பகிரவும் என்னும் செய்தியைப் படத்தோடு (அவருக்கு எங்கிருந்தோ வந்ததை) பகிர்ந்திருந்தார்.

நான் சும்மா இருக்க முடியாமல், “அது நாமெல்லோருமே படித்த ஜிம்னோஸ்பெர்ம் (Gymnosperm) வகையைச் சார்ந்த, ஒரு கூம்புத் தாவரமான சைகஸின் மேல் கூம்பு (Male cone). நம் லேபில் கூட ஃபார்மலினில் ஊறிக்கொண்டு அது இன்னும் இருக்கிறது” என்று சொல்லி, அப்படிச் சிவலிங்கப் பூ என்று ஒன்றுமில்லை என்றும், உலகில் 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் பூக்களும் எங்குமில்லை என்றும் விளக்கினேன். தாவரங்கள் Annual, Biennial, Perennial, Monocarpous வகைகள்தாம் என்று விளக்கிய பின், குழுவில் மரண அமைதி.

பிற்பாடு அவர்கள் என்னிடம் பேசுவதை மெல்ல மெல்ல நிறுத்திவிட்டார்கள். நான் துறைத் தலைவரானதற்கு சம்பிரதாயமாக ஒரு விருந்து கேட்டார்கள். நான் மகிழ்ந்து அளிப்பதாகச் சொன்ன பின்னரும், அவர்கள் என்ன காரணத்தாலோ அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏதேதோ சாக்குபோக்கு சொல்லி அதை தவிர்த்தார்கள் நானும் விட்டுவிட்டேன்.அறிதலுக்கான வாயில்கள் அனைத்தையும் மூடிப் பூட்டி, சாவியை எங்கோ வீசி எறிபவர்களிடம் நான் என்னதான் சொல்வது?

இப்போது இன்ஸ்டாவில் யார் யாரோ தவறான தாவரவியல் தகவல்கள், அற்புதங்கள், மருந்துகள், சடங்குகளைச் சும்மா போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறார்கள்.

ஒரு தாத்தா பயங்கர ‘டாக்ஸிக்’ (Toxic). எருக்கின் பயன்களை எல்லாம் சொல்லிவிட்டு, அதன் காயை அரைத்துக் குடிக்கலாம் என்று ஒருநாள் சொன்னார். கமெண்ட்டில் “தாத்தா, ஏன் கொலைப்பழிக்கு ஆளாகிறீர்கள்? எருக்கை உள்மருந்தாக அப்படிப் பயன்படுத்தவே கூடாது” என்று பதிவிட்டேன். யாரும் கவனித்தார்களா என்று தெரியவில்லை.

ஜகஜ்ஜோதியாக ஒரு அம்மா பட்டுப்புடவை, பெரிய மூக்குத்தி, நகைகளுடன் வருவார்கள். வீட்டுக்கு முன்னால் எந்தச் செடியெல்லாம் வைக்கக்கூடாது, எது ‘நெகட்டிவ்’ ஆற்றல் அளித்து வாழ்வை நாசமாக்கும் என்று சொல்லுவார்கள். நான் பார்த்த அன்று வெற்றிலைக்கொடி வைத்தால் வீடு பாழாய்ப்போகும் என்றார்கள். என்னென்னவெல்லாம் சொல்கிறார்கள் பாருங்கள்! கம்பிகட்டும் கதையெல்லாம் .

இப்போது இன்ஸ்டாவில் அதிகமாக வருவது குடைமிளகாயின் ஆண்-பெண் வித்தியாசம் என்னும் ஒரு புளுகு. நான்கு மடிப்புகள் இருக்கும் மிளகாய் பெண்ணாம், அது இனிக்குமாம், அதைச் சாலட்களில் அப்படியே சாப்பிடலாமாம்; மூன்று மடிப்புகள் இருப்பது ஆணாம், அதைச் சமைத்துச் சாப்பிட வேண்டுமாம்.

குடைமிளகாய் என்னும் கனி, இருபால் மலரொன்று கருவுற்று உருவாவது. மலரில்தான் பாலினமெல்லாம் கனிகளில் அப்படி எதுவும் இல்லவே இல்லை. மேலும் கனியில் அதில் எத்தனை மடிப்புகள் இருந்தாலும் சுவையோ சத்தோ வேறுபடாது. நான்கு மடிப்புகள் இருக்கும் மிளகாய்களில் அதிக இடமிருப்பதால் அதிக விதைகள் இருக்கும், அவ்வளவுதான் வித்தியாசம். எப்படி இப்படியெல்லாம் யோசித்துப் புளுகுகிறார்கள்?

தாவரவியல் ரீதியாக, குடைமிளகாயின் இந்த மடிப்புகளின் (Lobes) எண்ணிக்கை மிளகாய்க்கு மிளகாய் மாறுபடுவதற்குப் பாலினம் காரணம் அல்ல; மலரின் சூலக இலைகளின் எண்ணிக்கைதான் (Carpels) காரணம்.

குடைமிளகாயைக் குறுக்காக வெட்டிப் பார்த்தால், உள்ளே விதைகள் ஒட்டியிருக்கும் அறைகளைக் (Chambers) பார்க்கலாம். பூவின் பெண் பாகமான சூலகத்தில் உள்ள “சூலக இலைகள்” (Carpels) எனப்படும் பகுதிகளே இந்த அறைகளாக மாறுகின்றன. ஒரு பூ உருவாகும்போதே அதன் சூலகத்தில் எத்தனை இலைகள் இணைகின்றனவோ, அத்தனை மடிப்புகள் கனியில் உருவாகும். பூவில் 3 Carpels இருந்தால் 3 மடிப்புகளும், 4 Carpels இருந்தால் 4 மடிப்புகளும் உருவாகும்.

மேலும், மடிப்புகளின் எண்ணிக்கை பெரும்பாலும் அந்த குறிப்பிட்ட மிளகாய் விதையின் வகையைப் பொறுத்தது. அமெரிக்கா போன்ற நாடுகளில் 4 மடிப்புகள் கொண்ட பெரிய, சதுர வடிவிலான குடைமிளகாய்களுக்கே அதிக வரவேற்பு உள்ளது. எனவே, பெரும்பாலான விவசாயிகள் 4 மடிப்புகள் தரும்படி மரபணு ரீதியாக உருவாக்கப்பட்ட (Bred) விதைகளையே அதிகம் பயிரிடுகின்றனர். சிறிய குடைமிளகாய் வகைகளில் இயற்கையிலேயே 2 அல்லது 3 மடிப்புகள் மட்டுமே இருக்கும்.

ஒரே செடியிலேயே 3 மடிப்புகள் கொண்ட மிளகாயும் காய்க்கலாம், 4 மடிப்புகள் கொண்ட மிளகாயும் காய்க்கலாம்! (இந்தச் செடிக்கு நம் புளுகு மூட்டைகள் ‘மாதொருபாகன் மிளகாய்’ என்று பெயர் வைத்தாலும் வைக்கக்கூடும்).

இதெல்லாம் தப்புத்தப்பாக நன்றாகச்செய்வார்கள் ஆனால் பப்பாளியின் ஆண் மரத்தை மலட்டுமரமென்று வெட்டிவீசுவார்கள் ஒரு பெண் அந்த மலட்டு? மலர்களை முட்டைப்பொரியல் போல் செய்து சாப்பிடும் ரெசிபியை இன்ஸ்டாவில் சொல்லிக்கொடுக்கிறார். அநியாயத்துக்கு அளவேயில்லை,

அப்பாடா! ஒரு இன்ஸ்டா புளுகுக்கே ஒரு பதிவு போட வேண்டும் என்றால், தினம் எத்தனை போடுவது? முடியலை!

1 Comment

  1. Rajeshwari Raj

    மிகச் சரியாக சொன்னீர்கள் Mam. எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக் கொண்டே இருந்தால் வேறு வேலையை செய்ய முடியாது.
    வழக்கம்போல் அருமையான தகவல்கள்.

Leave a Reply to Rajeshwari Raj Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑